முனைவர் மு.பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பு, அறிவு போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளங்கள் பொதிந்து கிடக்கின்றன. தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர் நாகரீகமும் கலந்துப் படைக்கப் பெற்ற இலக்கியங்களாகக் கடைச்சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’ என்ற தொல்காப்பிய நூற்பா ஆரிய, திராவிட கலப்பிற்கான சூழல் தொல்காப்பிய காலத்திலேயே நிலவியிருந்தது என்பதை மெய்ப்பிக்கும்.
‘தமிழ்மொழி ஆரியர் வருகைக்கு முன்னரே நல்ல வளம் பெற்றிருந்தது… வடபுல ஆரியர், சங்ககால இறுதியினின்று ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தமிழகம் வந்தனர்போல் தெரிகிறது’ என்ற கருத்தும் ஆரிய திராவிடக் கலப்பின் காலச்சூழலை உணர்த்துவதாக உள்ளது. சங்க இலக்கியங்களில் ஆரியர் தாக்கம் காரணமாக வேத சார்பும், தமிழர் தாக்கம் காரணமாக தமிழ் மரபு சார்ந்த செய்திகளும் இடம்பெற்றிருந்தன.
வேதம், புராணம் சார்பான அறிவுக்கு ஒவ்வாத செய்திகளை விலக்கிய சங்க இலக்கியப் பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காணமுடிகின்றது. குறிப்பாக சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு கடவுள் வாழ்த்து பாடிய முறைமை ஆரியச்சார்பு உடைய செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பிற்காலத்தில் பாடப்பெற்றன, தொகுக்கப்படும் காலத்தில் பாடப்பெற்றன என்பதை எண்ணுகையில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்படும் காலத்தினில் ஆரியச்சார்பு தலைதூக்கி நின்றது என்பதை உணரஇயலும்.
பகுத்தறிவுச் சிந்தனைகள் என்பது தமிழகத்தில் தந்தைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி காலத்தில் இருந்துத் தொடங்கியது என்றாலும் சங்ககால அளவிலேயே உலகாய்தம் என்ற கொள்கையாக அது நிலவிவந்தது. அவ்வுலகாய்தக் கொள்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வடிவமே பெரியாரின் பகுத்தறிவுவாதம் ஆகும். பகுத்தறிவுவாதத்துடன் பொருள்முதல்வாத சிந்தனைகளும் ஒன்றுகூட அது மிகப்பெரிய ஆளுமையாக பகுத்தறிவு வாத இயக்கமாக உருப்பெற்றது.
பகுத்தறிவுவாதம் –அறிமுகம்
தந்தைப் பெரியார் தோற்றுவித்தது பகுத்தறிவுவாதம் ஆகும். பகுத்தறிவு என்பதற்குப் ‘பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான்பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்’ என்று பகுத்தறிவிற்கு விளக்கம் தருகின்றார் பெரியார்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
என்ற தொல்காப்பிய மரபியல் நூற்பா பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படை உணர்த்துவதாகும். தொடு உணர்வு, நாக்கு, மூக்கு, கண், செவி, மனம் என்ற ஆறினால் அறியப்படும் அறிவே பகுத்தறிவு என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இவ்வறிவுகளைச் சரியாகப் பயன்படுத்த பகுத்தறிவுவாதம் தூண்டுகோலாக அமைகின்றது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கான காரணத்தைப் பின்வருமாறு பெரியார் குடியரசு இதழில் எழுதியுள்ளார். ‘சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின்பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலில்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன்மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடிய இயக்கமாகும். இதன் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைபட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம் ‘ இவ்வாறு தமிழருக்கு தன்மானத்தை உண்டாக்கும் இயக்கமாக பெரியாரால் தோற்றுவிக்கப் பெற்ற இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும். இதன்பின் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பெரியார் 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். எவ்வமைப்பு ஏற்படுத்தினாலும் தமிழர் அறிவை முன்னிறுத்தும் போக்கிற்குப் பெரியார் முன்னுரிமை அளித்தார். இத்திராவிடர் கழக அமைப்பே திராவிடச் சிந்தனைகள், திராவிடக் கட்சிகள் வேரூன்றக் காணரமாகியது.
சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தபோது அங்குப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இவையே மூடநம்பிக்கையில் கட்டுண்டு கிடந்த தமிழ்ச்சமுதாயத்தைப் புரட்டிப்போடும் நோக்கத்தை நிறைவேற்றின.
.1. மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.
2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெருவு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.
5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது,
6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது,
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும், மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின் றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ள லாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.
12.“தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதவர்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது; தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந் தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்
இப்பதினைந்து முன்மொழிவுகள் தமிழ்ச்சமுதாயத்தின் போக்கை, இலக்கியச் செல்நெறியை அறிவு நெறிக்குக் கொண்டு சென்றன என்பது தற்காலத்தில் நிகழ்ந்த மிகச் சிறந்த மாற்றம் ஆகும்.