New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் யவனர் - லண்டன் சுவாமிநாதன்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்க இலக்கியத்தில் யவனர் - லண்டன் சுவாமிநாதன்
Permalink  
 


சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

roman_lamp2
Roman Lamp (Yavana Vilaaku/ Pavai Vilakku in Tamil)
 
 
ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:--1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014.
 
சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும் யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன என்று இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை!
 
1.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப் பிடித்து, பின்புறமாக கைகளைக் கட்டி தலையில் நெய்யை ஊற்றினாராம். இந்து சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்து தரும் தகவல்.
 
 
2.அவருடைய மகன் செங்குட்டுவன் யவனர்களை வென்று அவர் நாட்டை ஆண்டாராம்.இவை இரண்டு பற்றியும் வேறு எங்கும் தகவல் இல்லாததால் மர்மம் நீடிக்கிறது.
 
 
3. யவனர்களை வன்சொல் யவனர் என்று இளங்கோவும் பதிற்றுப்பத்து பாடிய பிராமணப் புலவர் குமட்டூர் கண்ணனாரும் கூறுவர்.
 
4. சோழர்களின் முன்னோனான முசுகுந்தன் , கறுப்பு யவனர்களுடன் சண்டை போட்டு வென்றான்.யார் இந்த கறுப்பு யவனன்?
 
5.வேதகால இலக்கியத்தில் (சதபத பிராமணம்) மிலேச்சர்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறதோ அதையே தமில் இலக்கியமும் மிலேச்சர் களான யவனர்களைப் பற்றிச் சொல்கின்றன.
 
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யவனர்களை மிலேச்சர்கள் என்றும், துருக்கியர்கள் என்றும் சொல்கிறார்.
cheran senguttuvan
Seran Senguttuvan coming back from the Himalayas with Kannaki Statue
 
தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் யவனர்கள் பெயர் அடிபடுகிறது.
அக.149-9; நெடு.101; புற.56-18; முல்லை. 61 + பதிற்றுப் பத்து பதிகம்.
 
 
சேர மன்னர்களுடன் மோதிய யவனர் யாவர்? அராபியர்களா, ரோமானியர்களா, கிரேக்கர்களா என்று தெரியவில்லை. இப்போது சோமாலியா கடற்கரையில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்வது போலவே கிருஷ்ணர், துவாரகையை ஆண்ட காலத்திலும். சேரர்கள் மேலைக் கரையை ஆண்ட காலத்திலும், திருச்செந்தூர் அருகில் சூரபத்மனும் அட்டூழியம் செய்து வந்தனர். இவர்களை எல்லாம், முருகன், கிருஷ்ணன், செங்குட்டுவன் ஆகியோர் தோற்கடித்து தீர்த்துக்கட்டினர். இது பற்றி இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள் என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறேன்.
 
yavana in bharhut
Yavana with a Greek cap at the Barhut site, 2nd Century BCE
 
யவனர்கள் யார்?
 
இமய வரம்பன் வென்ற யவனர்கள் பற்றியோ செங்குட்டுவன் யவனர் நாட்டை வெற்றி கொண்டது பற்றியோ வேறு எங்கும் தகவல் இல்லை. குமட்டூர் கண்ணனார் என்ற பிராமணரும், மாடலன் என்ற பிராமணரும் சொல்வதாக தமிழ் இலக்கியம் பகரும்.
 
மேற்கே இருந்து வந்த வெளி நாட்டினர் எல்லோரையும் இந்துக்கள் ‘யவனர்’ என்றனர். இந்தியப் பெரு நிலப் பரப்புக்கு வெளியே ஆண்டவர் அனைவரையும் ‘’மிலேச்சர்கள்’’ என்றனர்.
 
 
யவனர்களை மிலேச்சர்கள் என்று மஹாபாரதம், சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ஆகியோர் கூறுகின்றனர்.
 
இரண்டு சேர மன்னர் காலத்திலும் இதாலி நாட்டு ரோமானியரோடு நாம் வணிகம் செய்தோம். ஏராளமான ரோமானிய தங்க வெள்ளி நாணயங்கள் தமிழகம், கேரளம் எங்கும் கிடைத்திருக்கின்றன. கரு மிளகை கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு தங்கக் கட்டிகள் கொடுத்துச் சென்றதை தமிழ் இலக்கியமும், பிளினி என்ற யாத்ரீகரும் எழுதியுள்ளனர். அந்த யவனர்கள் ரோமானியர்கள் என்பது தெளிவாகிறது.
 
 
கிருஷ்ணர் மற்றும் சோழர்களின் முன்னோனான முசுகுந்தன் ஆகியோர் மோதிய கறுப்பு யவனன் (கால யவனா) அராபியர் அல்லது சுமேரியர்களாக இருக்கலாம். அளிகி, விளிகி, தியாமத் (தேவமாத) என்ற அதர்வண வேதச் சொற்கள் சுமேரியாவில் உள்ளன.
 
யவனர்களை கிரேக்கர் என்றும் ரோமானியர் என்றும் ஆங்கிலத்தில் சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்தோர் எழுதினர். உரைகாரர்களோ மிலேச்சர் என்றும் துருக்கர் என்றும் எழுதினர்.
 
FR: Paintings
 
எனது ஆய்வு உரை:
 
1.யவனர் என்பது பாரத எல்லைக்கு மேற்கே இருந்த அனைவரையும் குறித்தது. எகிப்தியர், யூதர், அராபியர், ரோமானியர், கிரேக்கர் என்பவர் அவர்கள்.
 
2.யவனர் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் ‘ஐயோனியன்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. தமிழில் ய, ச என்ற எழுத்துகளோடு எந்த சொல்லும் துவங்கக் கூடாது என்பது தொல்காப்பிய விதி.
 
3. சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று சொல்கின்றன!! யார் அந்த சகரர் கால யவனர்கள்?
 
 
4.வன் சொல் யவனர்களை தமிழர்கள், மெய்க் காப்பாளர்களாகவும், விளக்கு ஏந்தும் காவற் பெண்களாகவும் பயன்படுத்தினர்.
 
5.இதாலிய யவனர் (ரோம் சாம்ராஜ்யம்) கொணர்ந்த தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு தமிழர்கள்  மிளகு மூட்டைகளை ஏற்றுமதி செய்தனர்.
 
 
6. கிருஷ்ணன், முசுகுந்தன் ஆகியோர் மோதிய கறுப்பு யவனர் யூதர்கள், எகிப்தியர்களாக இருக்கலாம்.
 
 
7. ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.
 
தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ --- என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.
 
 
8.அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னர் காலத்தில் தொடர்பு கொண்ட யவனர்கள் எல்லோரும்,  கிரேக்கர்கள்தான்  என்பதில் ஐயப்பாடு இல்லை. வடமேற்கு இந்தியாவில் இருந்தவர்களை யவனத் தச்சர் என்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர்கள் என்றும் தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்கள் புகழும்.
paavaivilakku
 
9. பிராமணர்கள் யாகம் செய்யும்போது எழுப்பிய யூபம் என்னும் நெடுந்தூணில் ரத்னக் கல்லுடன் ஒரு வண்ணப் பறவை அமர்ந்தது யவனர் கப்பலில் உள்ள விளக்கு போல இருந்தது என்று சங்க இலக்கியம் புகழும். தீவிபத்து நிகழ்த்தக் கூடிய அகல் விளக்குகளுக்குப் பதிலாக மூடிய கிரேக்க பாணி விளக்குகளை தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கிய பின் யவன விளக்கு புகழ் பெற்றது என்று நான் கருதுகிறேன்.
 
 
10. யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ ---- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.
 
 
குதிரை விற்கும் அராபியர்களை சோனகர், யவனர் என்று பிற்கால இலக்கியங்கள் அழைத்தன.
 
11.பிற்காலப் புராணங்கள் வேத கால துர்வாசு என்ற மன்னனுடன் யவனர்களைத் தொடர்பு படுத்துகின்றன. யயாதியின் ஐந்து புதல்வர்களில் யதுவும் துர்வாசுவும் தேவயானிக்குப் பிறந்தவர்கள். மற்ற மூவரான புரு, த்ருஹ்யூ,அனு என்பவர் சர்மிஷ்டாவுக்குப் பிறந்தவர்கள். துர்வாசுவும், யாதவ குல மூலத்தோன்றலான யதுவும் தொலை தூர நாடுகளை ஆண்டதாக வேத சூக்தங்கள் தெளிவாகப் பகர்கின்றன.
 
 
காஞ்சிப் பெரியவர் சொன்னபடி, உலகம் முழுதும் இந்துமதமே இருந்தது என்பதும், யவனர்களும் நம்முடன் பிறந்த ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகின்றன (காண்க-- தெய்வத்தின் குரல்). மஹா பெரியவரே இன்னொரு இடத்தில் சௌராஷ்டிரர் என்பவர் குஜராத்தின் சௌரஷ்டிரப் பகுதியில் இருந்து ஈரான் தேசத்துக்குப் போய் ‘’ஜொராஸ்தர்’’ ஆன கதையையும் கூறி இருக்கிறார் (காண்க-- தெய்வத்தின் குரல்).
 
 
12. மனுவும் தனது மனு ஸ்மிருதியில் திராவிடர்கள், யவனர்கள் எல்லோரும் வேத ஒழுக்கங்களில் இருந்து பிறண்ட க்ஷத்ரியர்கள் என்றே கூறுகிறார் (காண்க:-- மனு ஸ்மிருதி ஸ்லோகம் 10—44)
 
13. தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:
 
அ)அரேபியா நாட்டு மிலேச்சர்
 
ஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்
 
இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு  உள்ளன.
greekantgrk
Greek Lamp
 
யவனர் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:
 
1.இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற்கொளீஇ
(பதிற்றுப் பத்து பதிகம், இரண்டாம் பத்து, குமட்டூர்க் கண்ணனார்)
 
2.வன்சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்
(நடுநற்காதையில் மாடலன் சொன்னது, சிலப்பதிகாரம்)
 
3.கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
(அகநானூறு, 149: எருக்காட்டுத் தாயங்கண்ணனார்)
 
 
4.யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
(யவனர் கொணர்ந்த மதுபானம் பற்றி மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; புற நானூறு பாடல் 56)
 
5.கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறுமீனின் பையத் தோன்றும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும் பாணாற்றுப் படை, வரி 316—319)
 
 greek-lamp-a132411
Greek Lamps
 
6.மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புணை மான் நல் இல்
திருமணி விளக்கம் காட்டி
(நப்பூதனார் பாடிய முல்லைப் பாட்டு, வரி 61-64)
 
 
Please read my earlier articles:
 
MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)
AYAS and ASVA : Most Misunderstood Words (Posted on 3 September,2012)
 
“மிலேச்ச” என்றால் என்ன? (Posted on 6 September,2012)
பொன் (அயஸ்) என்றால் என்ன? (Posted on 6 September,2012)
 
---சுபம்---


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard