தமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். பெரியாரை படிக்காமலோ, படித்ததும் புரிந்துக் கொள்ளமலோ, புரிந்தாலும் புரியாதது போல் நடித்தாலோ மிகச் சிறப்பு. அதைச் செய்யத் தவறினாலும் தவறக் கூடாதது ‘இன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் பார்ப்பணீயமும் மனு தர்மமும்’ என்று நரம்பு புடைக்கக் கூவுவது. அறிவு ஜீவியாவதோடு கொஞ்சம் வைரலாகவும் வேண்டும் என்றால் அம்பேத்கரியம், தலித்தியம் என்று சில ஈயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற் சொன்ன எதிலும் வரலாறோ, உண்மைகளோ, நுட்பங்களோ கொஞ்சமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நீங்கள் பேரறிஞர்.
Pa. Ranjith (Image Courtesy Pa-Ranjith-380.jpg) |
திருச்சி BHEL (பெல்) நிறுவனத்திற்கு நான் அடிக்கடி வேலைச் சம்பந்தமாகச் சென்றதுண்டு 1995-98-இல். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. ஓர் உயர் அதிகாரி (Sr. DGM), பிராமணர், தன் அறையில் இருந்து வெளியே வந்து நடக்கும் போது இரு பக்கத்திலும் இருக்கும் அலுவலர்கள் உட்கார்ந்திருப்பதற்கும் நிற்பதற்குமான இடை நிலையில் ஒரு கோமாளித்தனமான போஸை பாவித்து ‘குட் மார்னிங்’ என்பார்கள். உயரதிகாரியோ ஒரு மனுஷ ஜீவன் தன்னருகே வணக்கம் தெரிவிப்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஏதோ ஏகாந்தத்தை அனுஷ்டித்தப்படி வான் நோக்கியப் பார்வையோடு கடந்து செல்வார். ‘ஆஹா பார்ப்பணீயம் பாரீர்’ என்று குதூகலிப்பதற்கு முன் மேலும் படியுங்கள். இந்த வணக்கம் போடுவதில் இருவர் பிராமணரல்லாதோர் அதில் ஒருவர் இன்னொருவரின் கீழ் பணி புரிபவர். அந்த இருவரில் மேலதிகாரியானவர் இன்னொருவரை மனிதராகக் கூட மதித்து நான் பார்த்ததில்லை.
நான் வேலைப் பார்த்த சென்னை கம்பெனியின் மேலாளர் (MD) பிராமணர். வேலையில் சேர்ந்த முதல் நாள் அவர் என்னைக் கடந்து சென்ற போது எழுந்து நின்று “Good Morning Sir” என்றேன். என் தோளில் சிநேகமாய்க் கை வைத்து நான் எப்போதும் அப்படிச் செய்யத் தேவையில்லை என்றார். அங்கு வேலைப் பார்க்கும் கடை நிலை ஊழியரிடம், பிராமணரல்ல, அந்த மேலாளர், கம்பெனி பார்ட்டிகளின் போது, மிகத் தோழமையோடு சகஜமாக உரையாடுவார். அவருடைய தனிப்பட்ட பண்பும் அந்தக் கம்பெனி ஒரு ஆங்கிலேய கம்பெனியின் அங்கம் என்பதாலும் அந்த வழக்கங்கள் கைக்கொள்ளப்பட்டன. பிரிட்டன் என்றில்லை மேலை நாட்டுக் கம்பெனிகளில் மேலாளரும் அவர் கீழ் வேலைச் செய்பவர்களும் சக மனிதர்களாகப் பழகுவதைக் காணலாம். அதற்காக அதிகாரப் படி நிலைகளே இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கூழைக் கும்பிடு போட்டு ‘எஜமான்’ என்று மறுகுவதும் இல்லை. நான் அமெரிக்கா வந்த பிறகும் அந்த மேலாளருக்குத் தொடர்பிலிருந்தேன். அவரை ‘Sir’என்றும் அவர் மனைவியை ‘madam’ என்றும் ஈமெயிலில் குறிப்பிட்டேன். உடனே பதில் வந்தது ‘நீ இன்றிருக்கும் இடத்தில் இத்தகைய பழக்கங்கள் இல்லை நீ என்னையும் என் மனைவியையும் பெயரிட்டே அழைக்கலாம்’ என்றார். என்னை விட 15-20 வயது மூத்தவர். என்னை விடப் படித்தவர், ஒரு கம்பெனியை நிர்வகித்தவர். 20 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் நண்பர்களே.
நான் படித்த கல்லூரி பிராமணர்களால் நடத்தப்பட்ட ஷன்முகா பொறியியல் கல்லூரி (இன்று சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக் கழகம்). காருண்யாவில் முதலில் தெரியாமல் சேர்ந்துவிட்டு வீட்டுச் சாப்பாட்டிற்காகவும் அங்கிருந்த சூழலும் பிடிக்காமல் தஞ்சைக் கல்லூரியில் சேர வந்தேன். தாளாளர் அறைக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். இருவரும் ஒவ்வொரு சேரில் அமர்ந்தோம். தாளாளர், வயதானவர், கொதித்து விட்டார். “குருவுக்கு முன் மாணவன் உட்காரலாமா” என்று சினந்தார். பின்னர்த் தெரியவந்தது அவர் மிகக் கண்டிப்பான, காந்தியவாதியும் எளிமையானவரும் மிக நேர்மையானவரும் என்று. அக்கல்லூரியில் ஓர் ஆங்கிலப் பேச்சுக் கலை கிளப் ஒன்றை ஆங்கிலப் பேராசிரியர் அந்த வருடம் தான் ஆரம்பித்திருந்தார். அதன் முதல் கூட்டத்தில் என் பேச்சு மிகக் கவனம் ஈர்த்தது. அது முதல் அந்தக் கிளப்பின் அடையாளம் ஆனேன். கல்லூரிக்கு மாநில அளவில் பல பரிசுகளை வென்றேன். கடைசி வருடம், கடைசிக் கூட்டத்தில் பேசி விட்டு சபையோரை நோக்கி அது என் கடைசி உரையென்றும் ஒரு நிமிடம் எல்லோரும் ஆசைத் தீரப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லி விடைப்பெற்று இறங்க எத்தனித்த போது அங்க்கிருந்த தாளாளர் என்னை மேடையிலேயே நிற்கச் சொன்னார். அடுத்ததாகக் கூடியிருந்த சபையோரை, பல பேராசிரியகளும் இருந்தனர், எழுந்து நின்று எனக்குக் கரவொலி எழுப்பச் செய்தார். நான்கு வருடம் முன் தனக்கு முன் ஒரு மாணவன் உட்காரக் கூடாது என்று சொன்னவர் இன்று கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் இருக்கும் அரங்கில் எனக்கு “standing ovation” கொடுத்தார். அவருக்கு என் குலம் கோத்திரம் தெரியாது ஆனால் நான் பிராமணனில்லை என்பது நிச்சயமாகத் தெரியும். இன்று அந்தக் கல்லூரி இந்துத்துவக் கூடாரமாகியிருப்பது வருத்தம். அந்த மேலாளர் இறந்துப் பல வருடங்கள் ஆகின்றது.
+2-வில் நான் டியூஷன் படித்த ஆசிரியர்களில் இயற்பியல்-வேதியியல் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணத் தம்பதியர், கணிதம் கற்பித்தவர் பிராமணரல்லாதவர் (கள்ளர்?). மூவரிடமும் நிறைய மாணவர்கள் பயின்றனர். அதில் பலர் பிராமணரல்லாதவர்கள். மூவரும் கடின உழைப்பாளிகள் தங்களிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் 95%, 100% வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள். என்னையும், அப்பாவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் கூட. நான் அப்போதும் மிக வெளிப்படையாகப் பேசுபவனே. இயற்பியல் ஆசிரியை முதலில் எனக்குத் தலைக் கணம் உள்ளதென்றார் பின்னர் “அப்படி நினைத்தது தவறு. ஒன்று நீ வெளிப்படையானவன். இரண்டு உன் போல் பாடத்தைக் கவனமாகக் கேட்பவர்கள் குறைவு”.
பிராமணர்களில் மோசமானவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். நிச்சயமாக. நான் படித்த மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியை விட மிகக் கேவலமாகவும் அருவருப்பாகவும் பேசுவார். இன்னொரு வாத்தியார் பச்சை ரவுடி. மெல்லிய இனவாதத்தை அவ்வப்போது காட்டுபவர்களும் உண்டு. ஆனால் இதெல்லாம் இல்லாத இனங்களை எனக்குக் காட்டுங்கள்!! பிராமணரல்லாதவர்களில் மகத்தான அறிவு ஜீவிகளைப் பார்த்து இருக்கிறேன், பிராமணர்களிடையே சராசரிகளும், மூடர்களையும் பார்த்து இருக்கிறேன்.
டைரக்டர் முன்பு அசிஸ்டண்ட் டைரக்டர் உட்கார்ந்துவிட்டால் துணுக்குறுவது பார்ப்பணீயம், அப்படிச் செய்பவர்கள் பார்ப்பணர்களாக இல்லாத போதும், என்பது பச்சையான இனவாதம். அப்படிப்பட்ட மனோநிலையைச் சித்தரிக்கப் பிரபுத்துவ மனோ நிலை (feudal mindset), எதேச்சாதிகாரம், மேட்டிமைத் தனம், அகங்காரம் என்று எத்தனையோ சொற்கள் இருக்க அதைக் குறிப்பாக ‘பார்ப்பணீயம்’ என்று அழைத்துவிட்டு அது ஒரு இனத்தைக் குறிப்பதல்ல மாறாக ஒரு ஆதிக்க மனோபாவத்தை மரபாகக் கொண்டிருந்தவர்களால் அப்படிப்பட்ட மனோபாவத்தைக் குறிப்பது மட்டுமே என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இன்று வன்னியர்கள் முதல் பட்டியல் இனத்தவர் வரை எல்லோரும் ஏதோ ஒரு ஆண்டப் பரம்பரை கதையைச் சொல்கிறார்கள் அதில் சிலர் தங்கள் ஜாதிப் பெயரோடு ‘ஷத்திரிய’ என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். எந்த ஷத்திரியன் அடக்க ஒடுக்கமாக இருந்தான்? அவர்கள் அடக்கமாக இல்லாத அதிகார மரபினர் என்பதற்காகவே அப்படிப்பட்ட ‘ஆண்ட பரம்பரை’ கதைகளும் உருவாக்கப் படுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ரஞ்சித்துக்குக் கொஞ்சமாவது இலக்கியம் அல்லது சமூகவியலில் உள்ள ஆராய்ச்சிகளின் பரிச்சயமாவது இருந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டார்.
ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘மிருகப்பண்ணை’ கதை அதிகாரம் எப்படிச் சுபாவங்களை மாற்றி அதிகாரத்தை அடந்தவர்கள், முன்பு படி நிலையில் கீழிருந்தவர்கள், எதேச்சாதிகார மனோ நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பதை மிகச் சுவாரசியமாகப் படிமங்களின் வாயிலாகச் சொன்னதற்காக இன்றும் வாசிக்கப்படும் புதினம்.
ஸ்டான்பர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒன்று மிகப் பிரசித்தமானது. சிறையில் கைதிகாளகவும் ஜெயலர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்கள் நடிக்க வைக்கப்பட்டனர். ஆறே நாளில் கைவிடப்பட்ட ஆராய்ச்சியின் போது ஆரம்பத்தில் நடிக்கிறோம் என்ற நினஒவோடு செயல்பட்டவர்கள் மிக விரைவில் கொடுங்கோல் ஜெயலர்களாகவும், அதிகாரத்துக்குக் கீழ் படிகிற கைதிகளாகவும், ஜெயலர்களால் ஏவப்பட்ட சக கைதியை வதைப்பவர்களாகவும் மாணவர்கள் மாறினர்.