New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்து!


Guru

Status: Offline
Posts: 23907
Date:
வெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்து!
Permalink  
 


 வெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்து!

By கவிஞர் வைரமுத்து | Published on : 20th April 2017 10:29 AM |
 
 
1823. மருதூர் இராமையாபிள்ளையின் ஆறாம் தாரத்தின் ஐந்தாம் மகனாக இராமலிங்கர் பிறந்தபோது தெய்வமகன் பிறந்திருப்பதாய் தேவதைகள் பேசிக்கொண்டதாகவோ, மும்மாரியே பொய்த்துப் போன தேசத்தில் பூமாரி பொழிந்ததாகவோ தகவல் இல்லை. அது மற்றுமொரு பிறப்பு; இந்திய மக்கள் தொகையில் இன்னுமோர் எண்ணிக்கை. அவ்வளவுதான்.
 
ஆனால், இந்துமதத்தின் தூங்காத ஞானிகளுக்கு மட்டும் தூர தரிசனம் வாய்த்திருந்தால் வைதீகத்தின் ஆணி வேரையே அசைக்கப் போகும் பூகம்பப் பிறப்பு அது என்று புரிந்து கொண்டிருக்க முடியும். அளவில் அது 5.1 ரிக்டர் என்றும் பதிவிட்டிருக்க முடியும்.
 
இராமலிங்கரும் முன்னோடிகளின் கண்ணீரைக் கடன்வாங்கி பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அறுசீர் விருத்தத்தில் அழுதுபோயிருந்தாலோ, கட்டளைக் கலித்துறையில் கதறிப் போயிருந்தாலோ நெடுஞ்சரித்திரத்தில் அவர் தடம் பதித்திருக்க முடியாது.
 
ஓர் எளிய குடும்பத்து இராமலிங்கம் 'அருட் பிரகாசர்' என்றானதற்கும் 'வள்ளலார்' என்று வளர்ந்ததற்கும் அவர்தம் ஐந்து திருமுறைகளில் அடங்கியுள்ள பக்திப் பாடல்கள் காரணமல்ல. ஆறாம் திருமுறையின் புரட்சிக் கருத்தே அவரது வாழ்வுக்கே வடிவம் கொடுத்தது; வரலாறு சமைத்தது.
 
இதை நமது கூற்றாக முன்மொழிவதைவிட தென்னார்க்காடு மாவட்டத்தின் அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.எச்.கார்டின்ஸ் எழுதியதை வழிமொழிவதே தக்கது.
 
'இராமலிங்கப் பரதேசி கோயில்களில் பாடிய முற்காலப் பாடல்கள் தெய்வங்களின் புகழ்பாடவே அமைந்தன. பின்னாளில் பாடிய பாடல்களே அவர் ஆத்ம வழிகாட்டியாகவும் போதகராகவும் கொண்டாடப்படுவதற்குக் காரணமாயின' உண்மைதான். பிற்காலப் பாடல்கள் என்று அவர் குறிப்பிடுவது ஆறாம் திருமுறையைத்தான் என்பதைக் காலவரிசையின் கணக்கே காட்டுகிறது. தான் வாழ்ந்த 51 ஆண்டுகளின் கடைசிப் பத்தாண்டுகளில்தான் அவர் ஆறாம் திருமுறை எழுதினார். இந்து சமயத்தையும் இந்த சமூகத்தையும் திருத்தியும் எழுதினார்.
 
 
இந்து மதத்தின் காவியைச் சலவை செய்து வெள்ளாடை உடுத்துக் கொண்டவர் என்பதனாலும் மனிதகுலத்தின் மீது கொண்ட கருணையைத் தாவர வர்க்கம் முதலிய உயித்தொகுதிவரை நீட்டித்த சன்மார்க்கக் கொள்கையாலும்தான் அந்த ஒளியாளர் இன்னும் உணரப்படுகிறார். இந்தக் கொள்கைக்குத் தடையாக உள்ள எதையும் தள்ளிவிடு என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனால்தான் 'கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக' என்ற சாட்டையடி சமூகம் தாண்டி சமயத்தின் மீதும் விழுகிறது.
 
வள்ளலாரின் வாழ்வும் செயலும் அவர் வாழ்ந்த காலத்தைத் தாக்குறுத்தின என்று சொல்லவியலாது. அவர் கருத்துகளால் ஊட்டம் பெற்ற அடுத்த தலைமுறையின் ஆளுமைகளால் அவர் அடுத்த நூற்றாண்டில் வெற்றி பெற்றார் என்றே கணிக்க முடிகிறது.
 
வள்ளலார் மறைந்த ஐந்தாம் ஆண்டில் பெரியார் பிறக்கிறார். எட்டாம் ஆண்டில் பாரதியார் பிறக்கிறார். இருவருக்கும் வயதில் மூன்று ஆண்டுகள் வித்தியாசம். ஆனால் இராமலிங்கரால் பாதிக்கப்பட்டதில் அந்த இருவர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
 
பெரியார் உயர்த்திப் பிடித்த தீப்பந்தத்திற்கான தீயும் பாரதியார் உயர்த்திப் பிடித்த கவிதா தீபத்திற்கான நெருப்பும் இராமலிங்க வள்ளலாரின் அருட்பெருஞ்சோதியில் பற்றவைக்கப்பட்டவை என்று கருத இடமுண்டு. வள்ளலாரின் பாட்டமைதியில் நெஞ்சு பறிகொடுத்தும் சமூக சமயச் சீர்த்ருத்தங்களில் தனக்கு உகந்ததை ஏற்றுக்கொண்டும் பாரதியார் தமிழ்செய்தார். வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தம் என்ற வெளியை மட்டும் பெரியார் உருவிக் கொண்டு விரிவு செய்தார்.
 
1935-இல் ஆறாம் திருமுறையிலிருந்து வள்ளலார் பாடல்கள் நூறு மட்டும் திரட்டப்பட்டுக் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக வெளியிடப்பட்டது என்பதே என் கருத்துக்கு ஓரளவு சாட்சி சொல்லும்.
 
'வேதாக மங்கள்என்று வீண்வாதம்
ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?'
 
என்று வள்ளலார் எழுதிய வெண்பாவின் விளக்கமும் துலக்கமும் விரிவும் செறிவும்தான் பெரியாரின் மொத்த வாழ்க்கையின் முழுத் திரட்டாகும்.
 
'நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலை அத்தனையும் பிள்ளை விளையாட்டே'
 
- என்ற வள்ளலாரின் பொன்வரிகளை வாங்கித்தான்
 
'மேலவர் கீழவர் என்றே - வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்'
 
- என்று பாரதி புடம் போடுகிறான்.
 
வள்ளலார் மறைந்து மரித்தாரா - மரித்து மறைந்தாரா என்ற கேள்வி இன்னும் நிலை கொண்டிருக்கிறது. 'மரணமிலாப் பெருவாழ்வு' என்ற அவரது கருதுகோள் உளவியல் வெளி சார்ந்ததேயன்றி உடலியல் வெளி சார்ந்ததன்று. பௌதிகச் சேர்மானமுள்ள எவ்வுடலும் இந்நாள்வரை மரித்தலில்தான் முடிந்திருக்கிறது. ஆனால் தனக்குப் பிறகும் அவர் தம் கருத்தால் இரண்டு உடல்களில் இயங்கியிருக்கிறார். ஓருடல் பெரியார். இன்னோருடல் பாரதியார். ஆகவே வள்ளலாரின் வாழ்வு வெற்றியா தோல்வியா என்ற வினாவெழுந்தால் இருந்தபோது தோல்வி-மறைந்த பிறகு வெற்றி என்று காலம் எழுதக்கூடும். வள்ளலாரின் காலவெளி மீது பறந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலன்றி அவரை விளங்கிக் கொள்ள இயலாது. இந்துமதம் இருக்க அவர் சன்மார்க்க சங்கம் கண்டதும், ஓராயிரம் கடவுளர் இருக்க அவர் உருவ வழிபாட்டை வெறுத்து ஒளி வழிபாடு கண்டதும் வெறும் அடையாளத்திற்கு மட்டும் ஆசைப்பட்டு அன்று.


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
RE: வெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்து!
Permalink  
 


 

இந்தியாவின் வரலாறு என்பதென்ன என்ற கேள்வியை எழுப்பி 'இந்தியர் அல்லாதாரின் அரசுகள் எழுந்ததும் விழுந்ததும்தான் இந்தியாவின் வரலாறு' என்ற கடும் விடையையும் முன் வைக்கிறார் காரல் மார்க்ஸ்.
பதினோராம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை இந்தப் பரந்த நாடு இஸ்லாமியர்களின் இறுகிய பிடிக்குள் கிடந்தது. இன-மொழி கலாசாரக் காப்புக்கும் மீட்புக்குமான போரில் இந்த நாடே 750 ஆண்டுகள் ரத்தத்தில் நனைந்து கிடந்தது.

சிவந்தும் சிதறியும் கிடந்த தேசம் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தது. 1757 முதல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழிருந்த இந்தியா சரியாக 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1858-இல் விக்டோரியா மகாராணியின் நேரடி ஆளுகைக்கு இடம் மாறியது. வள்ளலார் வாழ்ந்த காலத்தையும் உள்ளடக்கிய காலமது.

கிழக்கிந்தியக் கம்பெனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் இராமலிங்கரின் மனமாற்றத்திற்கும் உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது.

மதமாற்றம் இந்த மண்ணில் எந்த வழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்? வருணங்களென்றும் குலங்களென்றும் சாதிகளென்றும் பிளந்துவைத்த இந்து மதத்தின் சந்துவழி புகுந்தனர். அந்நியரை ஓட்ட வேண்டும் - அதற்கு முன்னால் அந்நியர் வருவதற்கு வழிவகுத்த மதச் சண்டைகளின் பிற்போக்குத்தனத்தைப் பிடரிபிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சித்துறவி வள்ளலார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று திருவள்ளுவரும், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று திருமூலரும், 'பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா இறைச்சித் தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ' என்று சித்தர்களும் தமிழ்ப்பரப்பில் நீண்டநாள் ஒலித்த குரல்களைத்தான் வள்ளலாரும் வாங்கி ஓங்கி ஒலித்தார். ஆனால் தன்னையே அடையாளப்படுத்தித் தன் கருத்துக்களையும் நிறுவனப்படுத்தியதுதான் வள்ளலாரின் வரலாற்றுச் செயல் என்று கருதலாம்.

இந்து மதத்தை எதிர்க்கவோ தகர்க்கவோ அவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் காணவில்லை. ஆன்மநேய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கவே அவர் தனித்தியங்கத் தலைப்பட்டார். இந்து மதத்திற்கு எதிர்த்திசையிலும் இயங்கினார். இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது; வள்ளலாரோ வெள்ளை என்றார். இந்து மதம் உருவ வழிபாடு என்றது; வள்ளலாரோ ஒளிவழிபாடு என்றார். இந்து மதம் மக்கள்தொகைபோல் கடவுள் தொகை சொன்னது; வள்ளலாரோ ஒரே கடவுள் 'அருட்பெருஞ் சோதி' என்றார். இந்துமதமோ நால்வருணப்பிரிவைக் கட்டிக்காத்தது; சன்மார்க்க சங்கமோ சாதிமத வேறுபாட்டை வெட்டிச் சாய்த்தது. இந்துமதத்தில் மூடப்பழக்கங்கள் மண்டிக் கிடந்தன சன்மார்க்க சங்கமோ கண்மூடி வழக்கங்களைக் கண்டித்தது. இந்துமதம் மொழிபுரியாத சுலோகங்களைச் சொன்னது; சன்மார்க்க சங்கமோ மக்கள் மொழியே கடவுள் மொழி என்றது. இந்து மதமோ கீதைபோதித்தது; வள்ளலாரோ திருக்குறள் வகுப்பெடுத்தார். இந்துமதமோ பரத்தின் சுகங்களுக்காக இகத்தின் துன்பங்களை ஏற்றுக்கொள் என்றது; சன்மார்க்க சங்கமோ பரத்தின் சுகங்கள் என்று கற்பிக்கப்பட்டவைகளையெல்லாம் இகத்திலேயே எய்துவோம் என்றது. இந்துமதமோ எரித்தலை வற்புறுத்தியது; சன்மார்க்க சங்கமோ புதைத்தலைப் போற்றிச் சொன்னது.

இப்படிப் புரட்டிப்போட்ட வள்ளலாரை எப்படி ஏற்றுக்கொள்ளும் வழிவழி வந்த வைதீகம்?

ஒரு தத்துவம் - ஓர் உண்மை - ஒரு கட்சி - ஒரு கண்டடைவு - ஒரு மாற்றம் முதலிய எந்தக் கருத்தாக்கமும் ஒரே வீச்சில் ஒப்புக் கொள்ளப்பட்டதில்லை. அப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட எதுவும் நின்று நிலைத்ததுமில்லை. எதிர்ப்பைச் சந்திக்காத எதையும் வரலாறு வரவுவைத்துக்கொள்வதில்லை. எதிர்ப்பு என்பது அமிலச் சோதனை; உயிர்நீட்சிக்கான ஒத்திகை.

தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரிந்தால் நீ நெருப்பு. புதைக்கப்பட்ட பிறகும் பூமியை எட்டி உதைத்து முட்டி முளைத்தால் நீ விதை. அக்கினிக் குளியலுக்குப் பிறகும் சாம்பலாகாமல் மீந்திருந்தால் நீ சத்தியம். வள்ளலார் எதிர்ப்புகளால் மெய்ப்பிக்கப்பட்ட சத்தியம்.

வள்ளலார் புகழுறுவதையும் அவர் கருத்துக்கள் கவனம் பெறுவதையும் கோயில் உற்சவங்களில் திருவாசகத்துக்கு மாற்றாய் அருட்பா ஓதப்படுவதையும் கண்டு கண்சிவந்த சில சைவ மடங்கள் வள்ளலாருக்கெதிராய்க் கள்ளக்களம் கண்டன; அருட்பாவை மருட்பா என்று பரப்புரை செய்தன. பேராற்றலும் பெரும்புலமையுமிக்க இலங்கை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை வள்ளலாருக்கெதிராகக் கொம்பு சீவிவிட்டன; நாவலர் ஆறுமுகத்துக்கு ஏழாம் முகமாய் எதிர்ப்பு முகம் ஒன்றையும் ஒட்டவைத்தன. 'பரசமய கோளரி' என்று பாராட்டப் பெற்றவர் 'அகச்சமயக் கோடரி'யாக ஆட்பட்டது ஆச்சரியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் ஆறுமுகநாவலர் தொடுத்த வழக்கு அருட்பாவை மருட்பா என்று மெய்ப்பித்தலுக்கு என்று பலராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆவணம் சொல்வது அதுவன்று. தம்மை இழித்துப் பேசியதாக வள்ளலார் மீது ஆறுமுக நாவலர் தொடுத்த அவதூறு வழக்கே அது. அந்த அவதூறு யாது என்பதே ஒரு நாகரிக நகைச்சுவையாகும். சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் தம்மை அடுத்திருந்தாரிடம் 'நாவலர்' என்ற சொல்லுக்கு வள்ளலார் எள்ளல் மொழியில் பொருளுரைத்தாராம். 'நா அல்லாதவர் - நாவினால் அலர் தூற்றுபவர் - நாவினால் துன்புறுகிறவர்' என்பதே வள்ளலார் செய்த வார்த்தை விளையாட்டாம். இதுவே அவதூறு வழக்கிற்கு அடிகோலியதாம். தாம் அவ்வண்ணம் மொழியவில்லையென்று வள்ளலார் மறுக்க, அதை மெய்ப்பிக்கவொண்ணாமல் நாவலர் திகைக்க, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உரைக்க நீதிமன்றத்தைவிட்டு அந்த வெள்ளை வெளிச்சம் வெளியேறியதாம்.

பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த ஆறுமுகநாவலருக்கு 'அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்; ஆனால் பொறாமை எலும்புருக்கி' என்ற விவிலியம் விளங்காதது வியப்பே.

வள்ளலாரின் மேன்மைக்குக் காரணம் சொல் மட்டுமன்று; செயல். முற்போக்குக் கருத்துக்களை முன்மொழிந்த முன்னோரெல்லாம் தம்மை நிறுவனப்படுத்தினாரல்லர். ஒரு நிறுவனத்தின் முதுகில் ஏறிக்கொள்ளாத அல்லது ஏற்றப்படாத எதுவும் நீண்டபயணம் காண்பதில்லை. 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்றும் 'சத்திய தருமச் சாலை' என்றும் 'சித்திவளாகம்' என்றும் தம் கொள்கைகளைச் செயல்படுத்தத் தாமே தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டவர் இராமலிங்க வள்ளலார்.

கருத்துக்களை உள்வாங்குவதற்கு மனிதர்களுக்குக் காது கேட்க வேண்டும். அது பசியால் அடைபட்டிருந்தால் கடவுளே வந்து அருள்வாக்கு அருளினாலும் அது காது கடக்காது. காதுக்குக் கருத்து என்பதற்கு முன்னால் வயிற்றுக்குச் சோறு என்பதுதான் மனிதர்களின் தேவை.

 __________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 1800-களில் இந்தியப் பெரும்பரப்பில் பூகம்பத்தால் செத்தவர்களைவிடப் பசியால் செத்தவர்களே அதிகம்.

'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியாஇதழில் பிரிட்டிஷ் அரசு அதிகார பூர்வமாய் அறிவித்த பிணக்கணக்கு ஐம்பத்தைந்து இலட்சம். ஆனால் 'பிராஸ்பரஸ் பிரிட்டிஷ் இந்தியாஎன்ற நூலில் 'வில்லியம் டிக் பிதெரிவித்திருக்கும் மெய்க்கணக்கு ஒரு கோடியே மூன்று இலட்சம்.
தக்காண பீடபூமிக்கு மேலிருந்த மேகத்தை நாடு கடத்திவிட்டு வானம் தொலைந்துபோயிருந்தது. கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை அளவில்கூட மழைத்துளிகள் இல்லை. பஞ்சம்பெரும் பஞ்சம். பசிகள் கூடி மனிதனை உண்ணும் பஞ்சம். இயற்கையும் மனிதனும் விநியோகத்தில் செய்யும் தவறுகளுக்குத் தானே பஞ்சம் என்று பெயர்!

மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டனர். ஆடுமாடு பண்ட பாத்திரங்களைத் தொடர்ந்து தானியத்துக்காக வீட்டுக் கதவுகளையும் விற்றனர். நாயைத் துரத்தி அது கவ்விச் செல்லும் எலும்புத் துண்டைக் கைப்பற்றியவர்கள் அது யாருக்கு என்ற அடிதடியில் ஈடுபட்டு எலும்பு நொறுங்கினர். எறும்புப் புற்றுகளின் சேமிப்புக் கிடங்குகளைத் தோண்டிச் சுரண்டி உண்டோர் பலபேர் உண்டு என்று திருநெல்வேலி கலெக்டர் 'மெக் குகேபதிவிட்டிருக்கிறார்.
தாதுவருடப் பஞ்சத்திற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே 1866-இல் ஒரு பஞ்சம் தென்னகத்தை உயிரோடு உருக்கிச் சாப்பிட்டது.

வள்ளலாரின் பாடல் கண்ணீர் ஈரம் காயாத காலத்தின் பதிவாக வெளிவந்தது.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர்உறக் கண்டுளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்'

-என்று பெருமூச்சு விட்டதோடு நின்றாரில்லை. அந்தப் பெருமூச்சின் வெப்பத்தையே நெருப்பாக்கி 1867-இல் சத்தியதருமச் சாலையில் அணையாத அடுப்பைப் பற்றவைத்தார். அது சாதிமதபேதமற்ற சமபந்தி என்று சட்டஞ் செய்தார். 'சொல் பித்தளைசெயல்தான் தங்கம்என்று சொல்லிச் செல்லும் ஒரு துருக்கியப் பழமொழி. வள்ளலார் தங்கமானார்.

பிறப்பு - வளர்ப்பு - உணவு - உடை - உறைவிடம் - கல்வி - பொருளாதாரம் என்று தொடங்கி இறப்பு வரையில் பேணப்படும் பேதங்களைக் கட்டிக்காக்கத்தான் இந்துமதத்தின் உருவ வழிபாடுகளும் அடையாளங்களும் துணைபோகின்றன என்று கண்டறிந்த வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தார். வழிபாட்டில்கூட ஒன்றுபட முடியாத சமுதாயம் வாழ்க்கையில் எப்படி ஒன்றுபட முடியும் என்று வருந்தி அழுதார். மக்களை ஒன்றுபடுத்த உருவொன்று வேண்டும்அது உருவமில்லாத உருவாகத் திகழவேண்டும். உண்டென்றும் சொல்லலாம் இல்லையென்றும் சொல்லலாம்அதுதான் ஒளியின் வடிவம். சோதி வழிபாடு என்ற அவரது சிந்தனையை உலகப் பெருங் கருத்தாகவே கொள்ளலாம்.
வேத சங்கிதைகளின் விளக்கமாக வந்த சுவேதாஸ்வதர உபநிடதம்கூட -

'பிரம்மமே அக்கினிஅதுவே சூரியன்
அதுவே பிரஜாபதி'

என்பதோடு நின்றுகொள்கிறதே தவிர அது உருவ வழிபாட்டுக்கு மாற்று வழிபாடாகக் கொள்ளத்தக்கது என்று சொல்லிச் செல்லவில்லை.

இந்த பூமியே உறைந்த நெருப்புதான்ஒளிக்கோளம் துப்பிய துண்டுதான். உயிர்களின் பிறப்புக்கு ஒளியே மூலம். ஐம்பொறிகளை ஆக்கியது இந்த ஒளி. உயிராற்றலை இயக்குவதே உள்மூச்சால் எரியும் நெருப்புதான். வள்ளலாரின் ஒளி வழிபாடு விஞ்ஞானமயமானது. கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பு அது. இந்த ஒளிவழிபாட்டின் வெற்றி வள்ளலாருக்குதோல்வி மனிதகுலத்துக்கு.

வள்ளலாருக்கு மற்றுமோர் அநீதியும் நேர்ந்திருக்கிறது. நாட்டிய மங்கையின் அழகில் ஐக்கியப்பட்டு அபிநயத்தை மறந்துவிடுவதைப் போல இராமலிங்கரின் அருட்பாவில் திளைத்துப்போன பலர் அவரது உரைநடையோரம் ஒதுங்கவில்லை.

தன் மகன் வீதிவிடங்கன் தேரேற்றிக் கன்று கொன்றான் என்று கண்டுகொண்ட மனுநீதிச் சோழன் தன் நீதி வளைந்தது கண்டு நெஞ்சு வளைந்து புலம்புவதில் இராமலிங்கரின் தெள்ளுதமிழ் துள்ளித் துள்ளி வினைப்படுகிறது.

'என் செங்கோலை அளவுகோலென்பேனோ! எழுதுகோலென்பேனோஏற்றக்கோலென்பேனோ! கத்தரிக்கோலென்பேனோ கன்னக் கோலென்பேனோ! குருடன்கோலென்பேனோ! துலாக்கோலென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோலென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்?'

இராமலிங்கரின் அருட்பாவை உள்வாங்கிபிறமொழி பெரிதும் கலவாத கவிதைநடை கைவரப்பெற்ற பாரதியார்கூட இராமலிங்கரின் உரைநடையை ஓங்கிக் கற்றிருந்தால் கவிதைபோலவே அவரது உரைநடையும் பூத்துப் பொலிந்திருக்கும். அந்த நற்பேறு நமக்கு வாய்க்கப் பெற்றிலோம்.
மணிப்பிரவாளம் கலவாத தனித்தமிழுக்கு மறைமலையடிகளுக்கு முன்னோடி என்று கொள்ளலாம் வள்ளலாரை.

சமரச சுத்த சன்மார்க்கமென்பது இந்து மதத்திற்கு எதிரான இன்னொரு சமயமன்று. அது இன்னொரு வாழ்க்கைமுறைதன்னுயிர்போல் மன்னுயிர்களை உணரும் கலை. ஆனால் சமயத்திற்கே எதிரியாக அவர் சித்தரிக்கப்பட்டது வரலாற்றில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வாகும்.
இந்து சமயப் பெரியோர்களில் யார்தான் மதத்தை விமர்சிக்கவில்லை?

'ஒரு சூத்திரன் வேதம் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்று. ஒரு வரி நினைவிருந்தாலும் நாவினை வெட்டிவிடு - இம்மாதிரி வாசகங்கள் சில ஏடுகளில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பிசாசுகள் முற்காலத்திலும் தோன்றியிருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்' - இப்படி ஒரு கருத்தை வெகுண்டு சொன்னவர் பெரியாரல்லர் - விவேகானந்தர்.
'
மனுஸ்மிருதியின் சில பகுதிகள் மீது எனக்கு நம்பிக்கை விழவில்லை. அவற்றைப் படித்ததன் பயனாக எனக்கு நாத்திக உணர்வுகூட அரும்பிற்று' - என்று சொன்னவர் நாராயண குரு அல்லர் - உத்தமர் காந்தி அடிகள்.
இப்படி எதிர்மறைச் சிந்தனைகளை முன்வைத்தாலும் இந்து மதத்தின் கிழிசல்களைத் தைத்து உடுத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

'இயலவே இயலாதுஅது கந்தலாய்க் கிடக்கிறது. தைத்தாலும் கிழியும்துவைத்தாலும் கிழியும். அழுக்குறாத - கிழியாத - சலவை செய்யத் தேவையில்லாத ஒளியாடை நெய்து உடுத்துவோம் என்று ஊரை அழைத்தார் வள்ளலார்உடுத்தியும் காட்டினார். சிலர் உடுத்துக்கொண்டார்கள். பலரோ கந்தலாடையில் அடித்த பழைய மரபுவாசனையில் மயங்கிக் கிடந்தார்கள்கிடக்கிறார்கள். அதனால் வள்ளலார் தோல்வி கண்டார் என்று தூர எறிந்துவிட முடியாது.

இலட்சியவாதிகளின் வாழ்க்கை ஒருநாள் பந்தயமல்ல - வெற்றி தோல்விகளை மாலைக்குள் அறிவதற்கு. அது யுகங்களின் மீது எட்டுவைத்து நடக்கும் பயணம்.

சில விதைகள் முளைக்கவில்லையே என்று விதைத்தவன் வருத்தப்படக்கூடாது. என்றோ எங்கிருந்தோ பறந்து வரும் ஒரு பறவை அதை விழுங்கி எட்டாத மலைமீது எச்சம் இட்டுக் காடு வளர்க்கும்.

அந்தப் பறவையின் வரவுக்காக வள்ளலாரியம் இன்னும் ஒரு நூற்றாண்டோ ஒரு யுகமோ காத்திருக்கலாம்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 

Satha 
5 points
9 months ago
 

ஒளி வடிவமான சூரியனை பொங்கல் இட்டு இந்துக்கள்(தமிழர்கள்) வழி படுகிறார்கள் என்பதை இவர் மறந்து விட்டார் போலும் . கண்ணை மூடி கொண்டு இருட்டை மட்டும் காணும் இவருக்கு காவி பக்தியையும் வெள்ளை அகத்தே தூய்மையும் வெளிப்படுத்துகிறது என்பது தெரியாமல் போய் விட்டது.இதில் பெரியார் பற்றி வேறு . அவர் இதை படித்து இருந்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்.

 

Baranidharan Baranidharan
120 points
9 months ago
 

 

வள்ளலாருக்கு வந்த சோதனை

 

 

பிழைப்பு ஞானம் பேசிடுவார் . . . . . 
உள்ளும் புறமும் 
இருளைக் கொண்டோர் 
ஒளியை அளக்க புறப்பட்டார். 
சினிமா வெளிச்சம் 
சிறிதே கிடைத்தால் 
இருளும் ஒளியாய் மாறிடுமா ? 
ஞானம் சிறிதே இல்லாமல் 
பிழைப்பு ஞானம் பேசிடுவார் ... 
வைரம் முத்து என்றாலும் 
தன்னொளி கொண்டே விளங்கிடுமா ? 
வைரம் தோற்றம் கரிதானே 
முத்தின் தோற்றம் உமிழ்நீரே ... 
ஆதிநிலையில் மாறாமல் 
பெயரால் மாற்றம் கொண்டவரே ... 
இருளே கொண்ட சினிமாவில் 
பொருளை தேடி அலைகின்றீர் ... 
அருளை தேட அறியாமல் 
அருளாளர்களின் நிலை அறியாமல் 
வாயால் வடைகள் சுடுகின்றீர் ... 
சுட்ட பாடல்கள் ஏராளம் 
பிறர்கருத்தை சுட்டும் பாடுகிறீர் 
இருளை அகற்ற வழி சொன்ன 
அருளாளர்களின் வழி அறியாமல் 
வாய்க்கு வந்ததை உளருகிறீர் ... 
அறியாத பொருள் பற்றி இனியும் 
தெரியாமல் உளறுவதை நிறுத்துங்கள் ... 
வி.தி. ஆறுமுக அரசு__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

Saravanan TS
25 points
நக்கினம் சிவம்
9 months ago
 

ஐயா தங்கள் கூற்றும் வாக்கும் சத்தியம், அது வைரமுத்து போன்ற படித்த முட்டாளுக்கு புரியாது. ஐயோ பாவம்.

 

 

வள்ளலாரை பற்றிய அரைகுறை புரிதல் உள்ளவராக கவிஞர் வைரமுத்து இருப்பதையே அவரது பேச்சு தெளிவுடுத்துகிறது. இந்து மதத்தின் சடங்குகளால் மனிதர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த வள்ளலார் கடவுளர் உருவங்கள் எதை நோக்கி நகர்கனிற்ன என்பதை உணர்ந்தார். அதுவே அகப்பயணம். அதன் முடிவே ஜோதி தரிசனம். அதன் பயனாய் விளைந்ததுவே மரணமில்லா பெருவாழ்வு. வெறும் வரட்டு நாத்திகவாதத்தினால் இதை உணர முடியாது. மற்ற மத நுல்களை படித்து விட்டு சுலபமாக பேசக்கூடியவர்களும் வள்ளலார் கருத்துக்களை அவரது பாடல்களை புரிந்து கொள்ளாமல் படித்து பேச வந்தால் வைரமுத்து போலதான் தனது புரிதலில் வள்ளலார் என்றே பேச வேண்டியதிருக்கும். கடைசியாக மற்ற மதங்களைப்பற்றி வள்ளலார் கூறும்போது அவை அநன்மே அன்றி அன்னியம் அல்ல என்று கூறியது மதங்களில் உள்ள அதன் உட்பொருள் அறியப்படாமையால் அவை உண்மையை உரைக்க தவறி விட்டன என்றும் அந்த உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடியவர்கள் மதங்களில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுமாறு மக்களுக்கு சோதி வழிபாட்டை எடுத்துரைத்தார். காரணம் அனைத்து மதங்களின் முடிந்த முடிபானது இறைவன் ஒளி வடிவமானவன் என்பதே.

 __________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

Ilango 
10785 points
நக்கினம் சிவம்
9 months ago
 

வைரமுத்து வறட்டு நாத்திகவாதம் பேசவில்லை;நாத்திக வாதம் பேசுவதாயிருந்தால் ஒளி வழிபாடு நடத்திய வள்ளலாரை பற்றி அவர் கட்டுரை எழுதியிருக்கமாட்டார்;இப்படி ஒளித்து ,ஒளித்து வைத்து ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுபவர்களை எள்ளி நகையாடியதால்தான்,பொது மக்களுக்கு ஞானிகளின் உண்மை முகங்கள் தெரியாமல் போனது

 

Sankaraseshan 
4520 points
நக்கினம் சிவம்
9 months ago
 

 

வைரமுத்துவுக்குநெத்தியடிவைரமுத்துசொல்லிவள்ளலாரைபற்றிதெரிந்துகொள்ளஅவசியமில்லை 
அவரின்கொள்கைகள் 
இந்து 
மதத்துக்குஎதிராகவும்நாட்டில்பிற 
மாதங்களுக்குஆதரவாகவும்இருப்பதில்ஆச்சர்யமில்லைமெத்த 
படித்தஇவருக்குபுத்தமதசந்நியாசிகளும்காவிஉடைஅணிவதுதெரியவில்லைகாவிதியாகத்தின்,துறவின்அடையாளம்முன்புஒருபதிவில்துறவறத்தைகொச்சை 
படுத்திஎழுதியவர். 

Saravanan TS
25 points
நக்கினம் சிவம்
9 months ago
 

 

வைரமுத்துவினால் வள்ளலாரை புரிந்துகொள்ள முடியாத காரணம் குரு சிஷ்ய பரம்பரை மூலம் மட்டுமே ஆத்ம ஞானம் பெற இயலும் அது வைரமுத்துக்கு எட்ட கனி. பாவம் எதோ பிதற்றுகிறார்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard