New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டாள் தமிழை ஆண்டாள் !! (கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதியத


Guru

Status: Offline
Posts: 24636
Date:
ஆண்டாள் தமிழை ஆண்டாள் !! (கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதியத
Permalink  
 


ஆண்டாள் தமிழை ஆண்டாள் !!

(கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதியது. )

No automatic alt text available.

 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: ஆண்டாள் தமிழை ஆண்டாள் !! (கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதிய
Permalink  
 


Image may contain: text

 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: text

 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: text

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: text

Image may contain: one or more people and people standing



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
ஆண்டாள் தமிழை ஆண்டாள்
Permalink  
 


ஆண்டாள், தமிழை ஆண்டாள்

கவியரசு கண்ணதாசன்

ஆண்டாள்
(திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்)

தமிழிலே காதல் இலக்கியங்கள் ஏராளம். அவற்றில் மனிதனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் பல. அரசனைக்  காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் சில… அவையெல்லாம் ஆடவனை பெண் காதலிக்கும் இலக்கியங்கள். ஆனால்,  ஆண்மையில் பெண்மை கண்டு, அதை ‘நாயகி பாவ’மாகக் கொண்டு, இறைவனை நாயகனாக வரிக்கும் சமய  இலக்கியங்கள்தனிச் சுவை வாய்ந்தவை.

ஆணை பெண் காதலிக்கும்போது வருகின்ற உருக்கத்தைவிட ஆணே பெண்ணாகும் உருவகத்தில் உருக்கம் அதிகம்.  காதலுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் அந்த ஆணாகப் பிறந்த பெண் உருவங்கள் எப்படி எப்படி  கையாளுகின்றனர்! அப்படிக் கையாளும்போது நமது தமிழ் மொழிக்கு இந்து சமயம் வழங்கியுள்ள வார்த்தைகள்தான்  எத்தனை! அவற்றில் ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை’ புதிய தமிழ்ச் சொற்களின் அகராதி என்றே அழைக்கலாம்.

பெண்மையின் காதல் அவஸ்தையைச் சித் தரிக்கும் முத்தொள்ளாயிரப் பாடல்களோ, மற்ற சங்க காலத்து  அகநூல்களோ, ஏன் கம்பராமாயணமோ கூடக் காட்டாத வாண வேடிக்கைகளைப் பிரபந்தம் காட்டுகிறது. தூதும் மடலும்,  உலாவும் பிரபந்தமும் தமிழுக்குப் புதியவையல்ல. ஆனால், பக்திச் சுவையை இலக்கியச் சுவையாக்கித் தமிழ் நயமும்,  ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து படிப்பவர்களுக்குத் தெய்வீக உணர்ச்சியையும், லெளகீக உணர்ச்சியையும்  ஒன்றாக உண்டாக்குவது திவ்வியப் பிரபந்தம்.

இதை ‘தமிழுக்கு இந்து மதம் செய்த சேவை’ என்று சொல்வதிலே தவறென்ன? தமிழ் அகத்துறையில் அச்சம், நாணம்,  மடம், பயிர்ப்பு என்ற குணங்களும், விரக வேதனையால் அங்கங்களில் ஏற்படும் மாறுதல்களும் விரிவாகச்  சொல்லப்பட்டுள்ளன. தமிழ் படிக்கும் ஒருவன், எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் இந்த ஒரே ஒரு விஷயம் வேறு வேறு  விதமாகச் சொல்லப்படுவதை அறிவான்.

அகநூல் விதிப்படி, நாணிக் கண்புதைத்தல், நெஞ்சோடு கிளைத்தல் என்றெல்லாம் பகுத்துக் கொண்டு எழுதப்பட்ட  நூல்கள் உண்டு. தனித் தனிப் பாடல்களாக விரக வேதனைகளைப் பல்வேறு வகையில் காட்டும் பாடல்களும் உண்டு. அவற்றிலெல்லாம் காதல் என்பது கற்பியலிலும் முடியும்; இல்லை, களவியலிலும் முடியும். அந்த இலக்கியங்களுக்குக்  காதலை மிகைப் படச் சித்தரிப்பதைத் தவிர, வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், சமய இலக்கியத்தில் காதலுக்கும் பக்தியே மூலநோக்கமாகும். தேனிலே மருந்து குழைப்பதுபோல், காதலிலே  பக்தியைக் குழைத்தால், சராசரி மனிதனை அது வசப்படுத்துமென்றே  சமய இலக்கியங்கள் அவ்வாறு செய்தன. நாமும்  வெறும் நாமாவளிகளைவிட இந்தச் சுவையையே பெரிதும் விரும்புகிறோம். உலகத்தில் எல்லாமே இறைவனுடைய  இயக்கம்.

ஆண் – பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல. அந்தச் சுவை மிகைப்படப் போயினும் தவறில்லை. அது ஞானியை  இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது. அந்த வகையில் பிரபந்தம் காட்டும் திருமொழிகள்  அளவிட முடியாத உணர்ச்சிக் களஞ்சியங்கள். நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன.  ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் நமக்கே கற்பித்துக் கொண்ட பெண்மை  என்றும் சிலர் கூறுவர்.

ஆனால், வடக்கே ஒரு மீராபாயைப் பார்க்கும் தமிழனுக்குத் தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை  வரும். அது எப்படியாயினும், நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம். நானும் என்னைக் காதலியாக்கிக்  கொண்டு, கண்ணனை நினைத்து உருகியிருக்கிறேன். கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல கல்லும்  முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல… என்றும்,  கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத  நாளில்லையே – என்றும், இசைக்காக ஏதேதோ புலம்பியிருக்கிறேன்.

ஆனால், ‘இசை மங்கலம்’, ‘சொல் மங்கலம்’, ‘பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப்  போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே  வைத்தது. அந்தச் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரை கூர்வேல் கொடுந்தொழிலனிடம் – நந்தகோபாலன்  குமரனிடம் – ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கத்திடம், கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தானிடம்  அழைத்துச் செல்வது, தமிழில் அற்புதமான பாவைக் கூத்து.

‘‘நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம். மலரிட்டு நாம் முடியோம்’ – என்கிறார் நாச்சியார்.  ‘அவன் ஓங்கி உலகளந்த உத்தமன்’ ஆகா; எவ்வளவு அற்புதமான உருவகம்? அங்கு நீங்காத செல்வமாக நிற்பன  எவை தெரியுமா? வங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்களாம்! பசுவுக்கு ‘வள்ளல்’ என்ற பட்டத்தை,  பக்தியின்றி எது சூட்டும்! ஓர் உருவகத்தைக் கேளுங்கள். அதுவும் விஞ்ஞான உண்மை. மழைபெய்வதை நாச்சியார்  கூறுகிறார்:

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
   ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்துப்
   பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
   தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்!

கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில்  ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார்  நாச்சியார். அந்தக் கண்ணன் மாயன், வடமதுரை மைந்தன்!

‘‘வீங்கு நீர் இலங்கை’’ என்றானே கம்பன், இங்கே நாச்சியார் ‘‘தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்கிறார்.  ‘தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனே…’ எவ்வளவு புதிய சொல்லாட்சி! அதோ வருகிறான் கண்ணன். தூமணி  மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே, மணிக்கதவம் தாள்  திறவாய்; மாமீர்! ஏ, மாமியார்களே; அவளை எழுப்பீரோ!

நாற்றத் துழாய்முடி நாராயணன் வந்திருக்கிறான்! நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன் அவன். குற்றமொன்றில்லாத  கோவலர்தம் பொற்கொடியே! சிற்றாதே – நீ அசையாதே, பேசாதே, நீ செல்லப் பெண்டாட்டி! வார்த்தை வந்து விழுகிறதே  நாச்சியாருக்கு! புள்ளினம் புலம்புகிறது. நீ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் பள்ளிக்கிடத்தியோ! அடப்பாவி! உங்கள்  புழக்கடைத் தோட்டத்து வாளியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புதடி!

எல்லே! (இது பாண்டி நாட்டு வழக்கு) இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! ஐயோ, இதென்ன; கண்ணனும்  தூங்குகிறானோ?  அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! அம்மா  யசோதா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! உன் மகனுக்குக் கொஞ்சம் சொல்லம்மா.  ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனல்லவா! அவனை அருந்தித்து வந்திருக்கிறோம்.

ஏ, கண்ணா! ராசலீலை மறந்தாயா! குத்துவிளக்கெரியக் கோட்டிக்கால் கட்டிலின் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின்  மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்! அடியம்மா,  நப்பின்னை! நீ உன் மணவாளனை விட்டு எந்த நேரமும் எழுந்துவர மாட்டாயா? எந்த நேரமும் பிரிவு பொறுக்க  மாட்டாயா? நல்லது!

இது தத்துவமல்ல; தகவுடையதுதான்! ஏ, கப்பல் (நடுக்கம்) தவிர்க்கும் கலியே! வெப்பம் கொடுக்கும் விமலா! நாங்கள்  ஆற்றாது வந்துன் அடி பணிகின்றோம். எழுந்து வா! கிண்கிணியாய்! செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண்  சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ! அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை வென்றாயே!  கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றைக் குடையாக எடுத்தாயே! மாலே மணிவண்ணா!

கோல விளக்கே, கொடியே, விதானமே! ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா! கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!  எழுந்துவர மாட்டாயா? சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம்  அணிவோம். ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து  உண்போம். ஆகா! சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக  வழியுமாம்!

மேலும் சொல்கிறார் நாச்சியார்:

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!
அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே!
வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா!

நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல், நமக்கும் பெருக்கெடுக்கிறது.
அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார்.

வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்;  இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்;  மாயவன் மணமாலை சூட்டினாராம்! நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள்  பல்லாண்டு பாடினார்களாம்.

கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர் கொண்டார்களாம்; மத்தளம்  கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம். முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில்,  மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்! அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா!  அவன் நன்மையுடையவன் அல்லவா!

ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்! அவன் எப்படி? ஏ, வெண் சங்கே; நீ  சொல்! அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான்  தித்தித்திருக்குமோ? ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்சசன்னியமே! அவன் இதழ்ச் சுவையை எனக்குச்  சொல்லமாட்டாயா! ஏ, மேகங்காள்! விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்!

மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்! களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! கார்காலத் தெழுகின்ற  கார்முகில்காள்! மதயானை போலெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்! எனக்குப்  பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா! ஒரு பெண் கொடியை வதை செய்தால், இவ்வையகத்தார் மதிப்பாரா?  நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்! நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்! நாச்சியார் கெஞ்சுகிறார்;  நாமும் கெஞ்சு கிறோம்!  நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது!

 

நன்றி: அர்த்தமுள்ள இந்துமதம்.

(கவியரசு கண்ணதாசன் நினைவுதினம்: அக்.17, 1981).

https://kandeepam.wordpress.com/2017/07/23/4-13-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard