New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழைப் பழித்தான்- வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தமிழைப் பழித்தான்- வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்
Permalink  
 


 தமிழைப் பழித்தான்- வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்

ஆண்டாளுக்கு வைரமுத்துவால் நேர்ந்த களங்கம் வெளுத்து வாங்குகிறார் வேங்கடகிருஷ்ணன்!

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிப் பேசியது அவதூறானது என்று சொல்லும் வைணவ அறிஞர் எம்.ஏ. வேங்டகிருஷ்ணன் இங்கே விகடகவி வாசகர்களுக்காக அளித்த பிரத்யேக கட்டுரை!

 

பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் -முன்னாள் பேராசிரியர், துறைத்தலைவர், -வைணவத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருத்தி ஆவாள். இவள் ஒருத்தி மட்டுமே பெண் ஆவாள். பூமிதேவியே ஆண்டாளாக வந்து பிறந்ததாக வைணவத்தில் கொள்ளப்பெறுகிறது. இவள் அருளிய திருப்பாவை எனும் திவ்வியப்பிரபந்தம் தமிழ் வேதம் என்றும், 'வேதம் அனைத்துக்கும் வித்தாகும்’ என்றும் போற்றப்பெறுகின்றது. அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும் நாள்தோறும் காலை வேளைகளில் திருப்பாவை ஓதப் பெறுகின்றது. திருப்பாவை என்பது மார்கழி மாதத்தில் ஆண்டாள் நோற்ற நோன்பைக் குறிக்கின்றபடியால், ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் திருப்பாவைக்கென்றே தனுர்மாத பூஜைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையின் விளக்கவுரைச் சொற்பெரழிவுகள் நடைபெறுகின்றன. போகிப் பண்டிகை அன்று வைணவத் திருக்கோயில்களில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறுகின்றது. ஆண்டாள் அணிந்து கொண்ட மாலையையே தான் அணிந்து கொள்ள விரும்புவதாகப் பெருமாளே தெரிவித்தபடியால் ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆண்டாளின் பெருமைகளை, அதுவும் ஒரு பெண்ணாகப் பிறந்தவளுக்கு ஏற்பட்டுள்ள சிறப்பை சகிக்க முடியாத ஆணாதிக்கம் கொண்ட சிந்தனையாளர்கள் சிலர் அவ்வப்போது அவளுடைய பெருமைக்கு மாசு கற்பிக்கும் வகையில் பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்பதுதான் வருத்தத்தை அளிக்கின்றது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டு ஒரு கற்பனை (?) கதையை எழுதினார் ஓர் எழுத்தாளர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இக்கதையும் இடம்பெற்றிருந்தது. உயர்ந்த பக்தையான ஆண்டாளை இப்படிக் கொச்சைப் படுத்தியதைக் கண்டு ஆன்மிக உலகமே கொதித்தெழுந்தது. லக்ஷக்கணக்கானோரின் எதிர்ப்புக் காரணமாக அக்கதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப் பெற்றது. இவை அனைத்தும் செய்தித் தாள்களில் அப்போதே பரபரப்பாக வந்த செய்திகளாகும்.

இத்தனையெல்லாம் நடைபெற்று முடிந்திருந்த பிறகும் அதே கற்பனையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் பிரபல சினிமாக் கவிஞரான வைரமுத்து அவர்கள். சமீபத்தில் 'தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று தினமணி நாளிதழில் 8-1-2018 அன்று வெளிவந்துள்ளது. அக் கட்டுரையில் ஆண்டாளின் பாசுரங்களைப் பற்றிப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ள வைரமுத்து ''ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன; அவள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப் பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?’’ என்றெல்லாம் எழுதியுள்ளார். அது மட்டுமல்ல. ''அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ்சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டIndian movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது.Andal was herself a devadasi who lived and died in Srirangam Temple.பக்தர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

பக்தர்கள் அனைவரும் தெய்வமாகப் போற்றும் ஆண்டாளைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக வைரமுத்து அவர்கள் எழுதியதற்கு மிக மிக வன்மையான கண்டனங்கள் எழுந்தன. உடனே திரு வைரமுத்து அவர்கள், அக்கட்டுரையில் இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒருவரியைத்தான் தாம் மேற்கோளாகக் காட்டியிருந்ததாகவும், அது தமது கருத்தன்று, ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து என்றும், எவரையும் புண்படுத்துவது தமது நேரக்கம் அல்ல என்றும், புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் கூறியிருக்கிறார். மேற்கோளாக மட்டும் இவர் அக்கருத்தை எழுதவில்லை. ''ஆண்டாளின் பெற்றோர் யார்? அவள் எக்குலம் சார்ந்தவள்? என்று இவரே கேள்வி எழுப்பிவிட்டு, தொடர்ந்து ஆய்வாளரின் வரிகளை மேற்கோள் காட்டி, ''ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்’’ என்று எழுதியதற்கு என்ன பொருள்? தெய்வமாகப் போற்றப்படும் ஒரு பெண்பாற் புலவரான ஆண்டாளை தேவதாசி என்று ஒருவர் எழுதியதை ''ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள் எண்ணிப்பார்ப்பார்கள்’’ என்று வைரமுத்து எழுதியுள்ளதற்கு என்ன பொருள் என்பதை அவரேதான் வந்து விளக்க வேண்டும். ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள் பெண்ணைப் பெருமைப்படுத்தத்தான் நினைப்பார்களே தவிர, இப்படி சிறுமைப்படுத்த நினைக்க மாட்டார்கள்.

''சமயமறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்’’ என்று எழுதியுள்ள வைரமுத்துவே சமய மறுப்பாளர்தானே? அதனால்தானே இந்த மேற்கோளைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதுவும், நான்காண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதோர் கருத்தைக் கற்பனைக் கதை போல வேறோர் எழுத்தாளர் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில்) எழுதியதனால் மனம் புண்பட்ட பலர் வெகுண்டெழுந்து தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தும், மீண்டும் அதே கருத்தை ஆய்வாளரின் கருத்து என்ற போர்வையில் வைரமுத்து வெளியிட்டதன் உள்நோக்கம் என்ன?

கடந்த நாற்பதாண்டுகளாக நான் தொடர்ந்து நடத்திவரும் கீதாசார்யன் (ஆன்மிக மாத இதழ்) டிசம்பர் 1979 இதழில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ''ஆண்டாள் தமிழை ஆண்டாள்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. (கவிஞரின் நூல் தொகுப்புகளில் இந்தக் கட்டுரை உள்ளது.) அதே தலைப்பில்தான் இப்போது வைரமுத்துவும் எழுதியுள்ளார். ஆனால் எவ்வளவு வேறுபாடு! கண்ணதாசன் அவர்கள் இதுபோல் தரக்குறைவாக எதுவும் எழுதவில்லை. காரணம் அவர் இறைநம்பிக்கை உள்ளவர் என்பதுதான். அவர் உண்மையிலேயே ஆண்டாளின் பெருமைகளைப் பகர்வதற்காகக் கட்டுரை எழுதினார். ஆனால் வைரமுத்துவோ ஆண்டாள் பெருமைகளைப் பகர்வது என்ற போர்வையில் விஷத்தைக் கக்கியுள்ளார். (இதுதான் வஞ்சப்புகழ்ச்சியோ?)

இதுபற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்ட சிலர், 'ஆண்டாளைப் பற்றிக் கூறும்போது ஆய்வாளரின் கருத்தையும் வைரமுத்து கூறியதில் தவறு என்ன?’ என்று கேட்கிறார்கள். ஒரு தலைவரின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்கும்போது, ''நம் தலைவரை எதிர்க்கட்சிக்காரர் கடைந்தெடுத்த ஊழல் பேர்வழி என்று சொல்லியிருக்கிறார். இது என்னுடைய கருத்து அல்ல. ஆனாலும் நான் மற்றொருவருடைய கருத்தைத்தான் மேற்கோள் காட்டுகிறேன்’’ என்று சொல்வாரா? அப்படிச் சொன்னால் அதன் உட்கருத்து என்ன என்று கேட்கமாட்டார்களா? 'தாசி என்று சொன்னால் அதில் தவறு என்ன இருக்கிறது? தாசி என்றால் அடியவள் என்பதுதானே பொருள் என்றும் வாதம் செய்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் தாசிமகன் என்று சொன்னால் அப்போது மட்டும் ஏன் கொதித்தெழுகிறார்கள். அது தாழ்வான சொல் என்பதனால்தானே?

ஆண்டாள் என்றொருத்தி இருந்தாள் என்பதோ, அவள் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டாள், இறைவனையே கணவனாக அடையவேண்டும் என்று ஆசைப்பட்டு அப்படியே அவனோடு கலந்தாள் என்பதோ இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? வைணவ குருபரம்பரை நூல்களைக் கொண்டுதானே ஆண்டாளைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அதே குருபரம்பரையில் அவளை பூமிதேவியின் அவதாரமாகக் குறிப்பிட்டிருப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளாமல், தங்களுடைய மனத்தில் தோன்றிய அவதூறுகளைப் பரப்புவது என்ன நியாயம்? மற்ற மதங்களிலும் இதேபோல் உள்ள சமய வரலாறுகளைத் திரித்து, ஆராய்ச்சி என்ற பெயரில் கண்டபடி பேசுவதற்கு இவர்களுக்கு தைரியம் உண்டா?

''பாகவதத்தில் உள்ள காத்யாயனி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது காத்யாயனி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு’’ என்று திரு வைரமுத்து எழுதியிருப்பதிலிருந்தே திருப்பாவையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் என்பது மட்டுமல்ல அந்த முப்பது பாடல்களைப் படித்துக்கூடப் பாராதவர் என்பது வெளிப்பட்டு விடுகிறது. மழை பெய்ய வேண்டும் என்பதற்காக ஆய்ப்பெண்கள் நோற்ற நோன்பினைத் தானும் நோற்கின்ற (அநுகரிக்கின்ற) ஆண்டாள், ''நாராயணனே நமக்கே பறை தருவான்’’ என்று தொடங்கி, ''ஆழிமழைக்கண்ணா - வாழ உலகினில் பெய்திடாய்’’ என்று கூறி, கண்ணனிடம் சென்று `'உனக்கே நாம் ஆட்செய்வோம்’’ என்று அவனுக்குச் செய்யும் தொண்டையே பேறாக வேண்டுகிறாள் என்பதனை, சாதரணத் தமிழ் தெரிந்தவர்கள் கூட, திருப்பாவையைப் படித்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் கவிப்பேரரசு என்று விருது சுமக்கும் ஒருவர், ''நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு’’ என்று எழுதியிருப்பதிலிருந்தே, இவர் ஆண்டாளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தவோ அல்லது ஆய்வுக் கட்டுரை (!!) எழுதவோ சிறிதும் தகுதி இல்லாதவர் என்பது புலனாகிவிடுகிறது. இந்த லக்ஷணத்தில் கட்டுரை முழுவதும் உலகியல் காமத்தை (அதாவது உடல் சுகத்தையே) ஆண்டாள் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளாள் என்று வேறு விளக்கம் தந்து விட்டு, ''ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்கள் எல்லாம் ஆண்டாளின் பெருமையையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்’’ என்று இவர் எழுதியுள்ளதைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இந்து மதத்தில் உள்ளவர்களைப் பற்றிக் கண்டபடி பேசிவிட்டு, எதிர்ப்பு எழுந்ததும் ஏதோ ஒப்புக்கு வருத்தம் தெரிவித்துவிடுவது சடங்காகிவிட்டது. இப்போதும் வருத்தம்தான் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மன்னிப்பு கோரப்படவில்லை என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அடாத செயலுக்குத் துணைபோய்விட்டு இப்போது கடும் கண்டனங்கள் எழுந்த பிறகு தினமணி நாளிதழ் வருத்தம் தெரிவிக்கிறது. அதாவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! இத்தோடு நின்று விடாமல்இ வைரமுத்து எழு்தியவற்றிற்கு மறுப்பாக எழுதுபவர்கள் கருத்துக்களையும் அதே தினமணியிலேயே வெளியிடுவதுதான் பாரம்பரியம் மிக்க அப்பத்திரிகையின் நேர்மையைக் கொஞ்சமாவது நிரூபிக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard