தனி மனித நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பழக்கம் இந்தியாவில் அதிகமில்லை. சரித்திரச் சான்றுகளையும், ஆவணங்களையும் பாதுகாக்கும் பழக்கம் இந்தியர்களுக்குச் சிறிதுகூட கிடையாது. இதனால், வளமையான, பழைமையான சரித்திரங்கள் மண்ணோடு மண்ணாகி விட்டன.
இதற்கு ஒரு சிறு மாற்று தமிழ்நாட்டுக் கோயில் சுவர்களில் மன்னர்கள் செதுக்கிய கல்வெட்டுகள். இவையும் இல்லாதிருந்தால், இந்தியாவின் வரலாறு சான்றில்லாத ஆதரவற்ற பிள்ளையாய் இருக்கும்.
இந்திய வரலாற்றுச் சான்றுகள் சீன, வெளிநாட்டு யாத்ரீகர்களின் பயணக் கட்டுரைகள் மூலம் நமக்கு கிடைத்தன. இதில் ஓர் ஆறுதல்தான், ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. புதுச்சேரியில் பிறந்த, ஆட்சியாளர்களின் துபாஷி ஆக (மொழி பெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை தனது சமகால நிகழ்வுகளை அந்தக் காலத்து அழகு தமிழில் பதிவு செய்தது ஆச்சரியம் மட்டுமல்ல, ஒரு வரலாற்றுப் பெட்டகம்.
உலக அளவில் புகழ்பெற்ற டைரி, அப்போது அதிகம் அறிமுகமில்லாத ஜெர்மன் நாட்டு பிராங்பர்ட்டில் பிறந்த யூதப் பெண் ஆனேபிராங் பதிவுகளாகும். ஹிட்லரின் படையால் கைது செய்யப்பட்டு அவரது குடும்பம் வெர்ஜன் வெல்சன் சித்திரவதைக் கூடத்தில் (concentration camp) கொடுமைக்குள்ளாயினர். யூதர்களுக்கு அங்கே இழைக்கப்பட்ட கொடுமைகளை சிறுமியான ஆனேயால் மனதை நெகிழ வைக்கும் விதமாகப் பதிவு செய்யப்பட்டு சகோதரியுடன் அவர் அங்கேயே மரணமடைந்தார்.
டைரியுடன் தப்பிச் சென்ற அவரது தந்தை, ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து மகளின் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சித்திரவதைக் கூடத்தின் கொடுமைகளை உலகறியச் செய்தார்.
இந்த வரிசையில் ஒரு வித்தியாசமான டைரி யேலின் டைரி ஆகும். யார் இந்த யேல்? யேலின் முழுப் பெயர் எலிஹு யேல் ஆகும். 5.4.1649இல் வேல்ஸில் பிறந்து தன்னுடைய 72-ஆவது வயதில் அமெரிக்காவில் 8.7.1721இல் மரணமடைந்த யேலை விதி சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் 2-ஆவது ஆளுநராக கொண்டு வந்தது. அப்போது அந்தப் பதவியின் பெயர் பிரசிடென்ட் என்று அழைக்கப்பட்டது.
இவரது மூதாதையர்கள் பிழைப்புக்காக வேல்ஸிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். உள்ளூர் சர்ச் பிரச்னையில் குடும்பம் மீண்டும் வேல்ஸ் நகரத்துக்குத் திரும்பியது. வேல்ஸ் திரும்பிய குடும்பம் தொட்டதெல்லாம் துலங்கியது. வியாபாரியான யேல் பொருள் திரட்ட சென்னை வந்து இறங்கினார். கபடங்களே அவரது திறமையாக இருந்ததால் பெரும் செல்வம் ஈட்டி புனித ஜார்ஜ் கோட்டையின் 2-ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
கோட்டையிலுள்ள சர்ச்சில் 1680-இல் இவரது திருமணம்தான் முதல் திருமணமாகப் பதிவு செய்யப்பட்டது. 26.7.1687இல் இவர் கைக்கு சென்னை கோட்டையின் பொறுப்பு வந்தது. இவரது ஆட்சிக் காலத்தில்தான் 29.9.1688இல் சென்னை கார்ப்பரேஷன் ஒரு மேயர், 12 ஆல்டர்மேன்களுடன் துவக்கப்பட்டது. இதுதான் நவீன சென்னையின் பிறந்தநாள் என்றுகூட சொல்லலாம்.
அரசியல் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முதலில் பணம் சேர்த்த அதிகாரி என்ற பெருமை யேலுக்கு உண்டு. கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைப் பகுதியின் தலைவர் என்ற முறையில் கம்பெனிக்காக வாங்கிய, விற்ற அனைத்துப் பொருளிலும் உள்கை ஊழல் புரிந்து பணம் பார்த்து அன்றைய நிலையில் ஆயிரமாயிரமாக சம்பாதித்தார். கருப்புப் பணம், பெட்டியில் உறங்கிய வரை பிரச்னையில்லை. ஆசை யாரை விட்டது?
கடலூர் கோட்டை என இன்று அழைக்கப்படும் தேவனப்பட்டண கோட்டையை வாங்கியது மூலமாக வம்பை விலைக்கு வாங்கினார். தகவல் மேலிடம் லண்டனுக்கு தட்டி விடப்பட்டது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததால், சென்னை ராஜதானியில் முதல் சொத்துக் குவிப்பு வழக்கு யேல் மீது பாய்ந்தது. 1692-இல் யேல் பதவியை இழந்தார். தன் பணத்துடன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
புது பணக்காரராக வந்து இறங்கிய யேலுக்கு அமெரிக்காவில் ஏக வரவேற்பு. அவர் பூர்வீக நகரில் இருந்த பல்கலைக்கழகம் பணமில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. பணத்துக்காக யேலிடம் பல்கலைக்கழகம் கையேந்தி நின்றது. கல்விச் சாலைக்குப் பணமும், புத்தகமும் தர பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட யேலின் சார்பாக கலாசாலைக்கு யேல் யுனிவர்சிட்டி என்று பெயரிட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது.
ஒரு வியாபாரி ஆட்சியாளராகி, ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அளவில்லா பொருள் ஈட்டி, ஆட்சியாளர் கல்வித் தந்தையான முதல் கதை யேலுடையதுதான்.
யேலிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அவர் சென்னையை விட்டு ஓடும்போது அவரது டைரியை சென்னை கோட்டையில் தவறவிட்டார். அந்த டைரி சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் அடைக்கலமானது. அந்த டைரியில் யேல் என்ன எழுதியிருந்தார் என்ற ஆவணப் பதிப்புகள் எதுவும் நம்மிடமில்லை. யாரிடம், எதற்கு, எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என பதிவு செய்து இருந்தாரா என்பது தெரியவில்லை.
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையின் வாழ்க்கை முறையும் அரசியலும், ஆட்சியும் எப்படி இருந்தது என அவர் பதிவு செய்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், அந்த டைரியை கைப்பற்ற யேல் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது.
இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட மயிலாசனம், கோஹினூர் வைரம் உள்ளிட்ட அரிய விலை மதிப்பில்லாதப் பொருள்கள் எல்லாம் லண்டன் காட்சியகத்திலும் பிற தனியார் காட்சியகங்களிலும் காட்சிப் பொருள்களாக உள்ளன. இவற்றைத் திரும்பப் பெறும் உரிமை இந்தியாவுக்கு உண்டு.
இவற்றை இந்தியா கேட்டு, பிரிட்டிஷ் அரசு அரைகுறை மனதுடன் திருப்பித் தருவதாக சொல்லி, மறைமுகமாக பாகிஸ்தானை தூண்டிவிட்டு, அதைத் தங்களுக்குத் தர வேண்டுமென பாகிஸ்தானை கோரிக்கை எழுப்ப வைக்கும்.
அந்தப் பொருள்களைத் தங்களுக்குத் தர வேண்டுமென பாகிஸ்தான் கூப்பாடு போடும். உடனே பிரிட்டன் குரங்குப் பஞ்சாயத்து செய்து இந்தியப் பொருள்களைத் தன்னிடமே வைத்துக் கொண்டு விடும். இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் அரசு யேலின் டைரியை பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க மறுத்து வந்தது.
1967-இல் காட்சி மாறியது. தமிழகத்தின் ஆட்சி மாறியது. அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியது.
அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்த அண்ணாதுரைக்கு "சப் ஃபெலோஷிப்' (chubb fellowship) என்ற மரியாதையை வழங்குவதாக யேல் பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இது அமெரிக்காவின் தங்கத் தாரகை பட்டத்துக்கு முன்னோடி. தி.மு.க. சார்பு பத்திரிகைகள் எல்லாம் அண்ணாவின் புகழ் அமெரிக்கா வரை விரிந்துள்ளது என ஆனந்தப்பட்டன.
1936-இல் ஹிண்டன் சப் என்பவர் யேல் பல்கலைக்கழகத்தில் அரசு, பொது விஷயங்களில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த இதை ஏற்படுத்தினார்.
1949-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய டிமோட்டி டிவிலைட் கல்லூரியினுடைய மாஸ்டர் என்பவரும், "ஹிண்டன் சப்'பும் இணைந்து இந்த நோக்கத்துக்காக விசிட்டிங் ஃபெலோஷிப் திட்டத்தை உருவாக்கினார்கள். இதை தமிழ்நாட்டில் பலரும் கெüரவ டாக்டர் பட்டம் என்று தவறாகப் புரிந்து கொண்டனர்.
1967 -1968இல் இதற்கு சி.என். அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அழைப்பைப் பெற்ற மற்றோர் இந்தியர் நடிகர் ஷாருக் கான். "விசிட்டிங் ஃபெலோ'வாக சென்ற அண்ணாவிடம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் கேட்பாரும், படிப்பாரும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் தங்கள் பல்கலைக்கழக காவலர் யேலின் டைரியை தங்களிடம் தர வேண்டுமென பல்கலைக்கழகம் பணிவாகக் கேட்டது. மகிழ்ச்சியில் இருந்த அண்ணாதுரையால் மறுக்க முடியவில்லை.
அதிகாரிகளின் ஆட்சேபங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுக்கு யேலின் டைரி சென்று 47 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
யேலின் டைரி இந்தியா வருவதற்கு இதைவிட சரியான தருணம் இருக்க முடியாது. ஆட்சியாளர்கள் மீது ஊழல் வழக்குகள் பாயும் இந்தக் காலத்தில் சென்னை ராஜதானியின் முதல் ஊழல்வாதியான யேலின் டைரி எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல், வெள்ளையர்களின் துப்பாக்கியையும், பீரங்கியையும் தன் மன, வாள் வலிமையால் எதிர்த்து நின்றவர் வேலுத்தம்பி. அவரது வாள் கேரளத்துக்கு வந்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு கேரள மக்கள் சார்பாக அன்போடு திருவிதாங்கூர் அரச குடும்பம் வழங்கியது.
ராஜேந்திர பிரசாத் அதை தேசிய அருங்காட்சியகத்தில் சமர்ப்பித்தார். கேரள அரசின் வேண்டுகோளின்படி, வேலுத்தம்பியின் வாளை ஐந்தாண்டுகள் வைத்துக் கொள்ளுங்கள் என்ற நிபந்தனையின் பேரில் கேரளத்துக்கு தேசிய அருங்காட்சியகம் 2010-இல் வழங்கியது. காலக்கெடு முடிந்துவிட்டது. வாளை திருப்பித் தாருங்கள் என தேசிய அருங்காட்சியகம் கேரள அரசுக்கு அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளது.
திப்பு சுல்தானின் வாளும், காந்தியடிகளின் தனி பயன்பாட்டுப் பொருள்களும் லண்டனில் ஏலம் வந்தபோது தனியாராலும், அரசாலும் ஏலம் எடுக்கப்பட்டு, நமது அருங்காட்சியகங்களில் சேர்க்கப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் களவு போன ஐம்பொன் சிலைகள் எல்லாம் வழக்கு முடிந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
வழக்கு இல்லாமலே நல்லெண்ண அடிப்படையில், இந்தியாவில் திருடப்பட்ட ஒரு நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா அண்மையில் திருப்பித் தந்தது. இப்படியிருக்க, யேல் டைரி மட்டும் நாடு திரும்பாத மர்மம் என்ன? ஒரு பல்கலைக்கழக அழைப்புக்கு அது பண்டமாற்று செய்யப்பட்டுவிட்டது என்று பொருள் கொள்வது, அந்த முதல்வரின் புகழுக்கு இழுக்கல்லவா?
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்;