New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் சமண நூல்.


Guru

Status: Offline
Posts: 24765
Date:
திருக்குறள் சமண நூல்.
Permalink  
 


திருக்குறள் சமண நூல். http://www.ahimsaiyatrai.com/p/blog-page_16.html

  
திருக்குறள்: ஒரு சமண நூல்.
  
தமிழின் தொன்மைச் சிறப்பையும், தமிழரின் பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டுகின்ற சிறந்த நீதி இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகின்றது.
  
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள். நெடிய தமிழ் இலக்கிய வர லாற்றில் இன்றுவரை நிகரற்ற நூலாக நிலவி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. திருக்குறளின் குறட்பாக்களுக்குக் காலந்தோறும் பற்பல அறிஞர்கள் புதிய புதிய கோணங்களிலும் குறள்களுக்குரிய உண்மைப் பொருளைக் கண்டு கூறும் வகையிலும் உரை வரைந்து தந்துள்ளனர். நூலொப்பவே உரைகளும், நூலாசிரியரொப்பவே உரையாசிரியரும் இலக்கிய உலகால் மதிக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
  
திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் உரை எழுதிய பதின்மரைப் பற்றிக் குறிப்பிடுகின்ற வெண்பா ஒன்று. உள்ளது.
 
 
'தருமர் மனக் குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்'
 
 
என்பதே அவ்வெண்பாவாகும். இப்பதின்மரின் உரையோடு, மேலும் பலரின் உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பெற்றுள்ளன. இக்காலத்திலும் தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை மு. வ. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கா. சு. பிள்ளை. வி. முனுசாமி முதலியோர் உரை எழுதியுள்ளனர்.
  
இவ்வாறு பல்கிப் பெருகியுள்ள உரைகளுக்கு இடையில் இங்குத் திருக்குறள் ஜைன உரை' பதிப் பிக்கப்படுகின்றது. இந் நூல் நமது சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள, ஒலைச் சுவடியிலிருந்து படி யெடுத்து வைக்கப் பெற்ற கையெழுத்துப் பிரதியில் (பிரதி எண். 1940) இடம் பெற்றுள்ளதாகும்.
  
இத்திருக்குறள் மூல - உரைப் பதிப்பு குறித்த விவரங்களையும், இவ்வுரையின் சிறப்புகளையும் இந் நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் திரு. கே. எம். வேங்கடராமையா அவர்கள் தம் முகவுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
  
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடு எண் 333
 
 
திருக்குறள் -  ஜைன உரை
 
 
 சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர் :
கே. எம். வேங்கடராமையா
முன்னாள் பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை.
தமிழ்ப் பல கலைக் கழகம், தஞ்சாவூர்.
இயக்குநர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நால் நிலையம், தஞ்சாவூர்.
 
 

கி. பி. 1991 ல் அவர்களால் வெளியிட்ட நூலிலிருந்து ஆராய்ச்சி முன்னுரையை மட்டும் கண்டால் உண்மை விளங்கும்.


ஆராய்ச்சி முன்னுரை
 
 
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
 
 
திருக்குறள் உலகப் பொது நூல்: தண்டமிழின் மேலாம் தரம் என்று சிறப்பிக்கப் பெறுவது. கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆங்கிலம், லத்தீன் முதலிய மேலை நாட்டு மொழிகளிலும்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், முதலிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட தனிச் சிறப்புடையது. திருக்குறளைப் போற்றாத புலவர் இலர்: திருக்குறட் கருத்துக்கள் காணப் பெறாத நூல் இல்லை.
 
 
ஒருவன் செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென-அறம் பாடிற்றே - என்ற புறநானூறு 34 ஆம் செய்யுளில் ஆலத்துார் கிழார் திருக்குறளை 'அறம்' என்றே குறித்தார்.
குறள் வெண்பாவான் ஆக்கப்பட்டமையின் 'குறள் என்றும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று மூன்று பால்கள் உடைமையின் முப்பால்' என்றும் இந்நூல் வழங்கப் பெறும்.
 
வெள்ளி வீதியார் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழி' என்பர் (திருவள்ளுவமாலை 23);
 
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் வள்ளுவர் வாயுறை வாழ்த்து என்பர் (35)
 
மணி மேகலை ஆசிரியர் ஆகிய சீத்தலைச் சாத்தனார் 'பொய்யில் புலவன் பொருளுரை' என்றார் (மணிமேகலை - சிறை - 59 - 64)
 
தேவர் குறளும்' என்ற ஒளவையின் பாடல், திருவள்ளுவரைத் ‘தேவர்' என்று குறிப்பிடும்;திருவள்ளுவமாலை 41 ஆம் செய்யுளும், தேவர் - திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார் - பொருவில் ஒழுக்கம் பூண்டார்' என்று திருவள்ளு வரைத் தேவர்' என்று கூறா நிற்கும்.
 
 
நச்சினார்க்கினியரும் "தேவர்' என்றே குறிப்பிடுவர் (சீவகசிந்தாமணி செ 1881, 1927)
வெண்பாமுதற்பாவெனப்படும். அப் பாவால் நூல் செய் தமையின் முதற்பாவலர் என்பர் திருவள்ளுவரை.முப்பால் மொழிந்த முதற்பாவலர் என்பது திருவள்ளுவமாலை 18 ஆம் செய்யுள்.
 
 
கவிகளாகிய தேனைச் சொரியும் செந்நாவினர் ஆகையால் செந்நாப் போதார் எனப் பெற்றார். 'மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார் புனற் கூடற் கச்சு' என்பர் நல்கூர் வேள்வியார் (செ. 21).
 
 
தொடித்தலை விழுத்தண்டினார் திருவள்ளுவமாலை (செ. 22 இல்) 'நாலும் மொழிந்த பெருநாவலரே நன்குணர்வார்' என்ற விடத்துத் திருவள்ளுவரைப் 'பெருநாவலர்’ என்றார்.
 
 
புலவர் திருவள்ளுவர் அன்றி என்ற திருவள்ளுவமாலை 34 ஆம் செய்யுள், திருவள்ளுவர் ஒருவரையே புலவர் எனல் வேண்டும் என்று குறிப்பிடும். "
 
 
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை
 
 
என் புழிச் சீத்தலைச் சாத்தனார் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன்’ என்றமை காணலாம்.
 
 
இங்ஙனம் புகழ்ந்தோதப்பெறும் திருவள்ளுவர் வாய் மொழியாகிய திருக்குறளைக் கற்றாலே போதும்; வேறு நூல்களைக் கற்றல் வேண்டா என்றனர் தமிழ்ப்புலவர்கள். புலவர் திருவள்ளுவரன்றிப் பூ மேல் சிலரைப் புலவர் எனச் செப்புதல் கூடாது எனக் கருதினர்; வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு என்று புகன்றனர்; 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என மதிப்பீடு செய்தனர்; ' வந்திக்க சென்னி,வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம் சிந்திக்க, கேட்க செவி' என்று வழுத்தினர்; "சிந்தைக்கு இனிய செவிக்கு இனிய வாய்க் கினிய வந்த  இருவினைக்கு மாமருந்து' என்று பாராட்டினர்: சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லார் ஆர் வள்ளுவர் அல்லால் என்று வியந்தனர்; உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு' என்று அனுபவித்து உரைத்தனர்: எல்லாப் பொருளும் இதன் பாலுள என்று துணிந்து கூறினர்: இந் நூலொன்றே வையத்துணை என்றனர்.
 
 
இங்ஙணம் பல்லாற்றானும் புகழப்பெற்ற திருக்குறளை உள்ளிருள் நீக்கும் விளக்கு என்றார் நப்பாலத்தனார். இத் திருக்குறளாகிய விளக்குக்கு அகல் - அறம்: திரி - பொருள்: நெய் - இபைம்; செஞ்சொல் - தி: தண்டு – குறட்பா;  பின் வருவது அப்பாடல்:
 
அறந்தகளி; ஆன்ற பொருள்திரி: இன்பு
சிறந்தநெய், செஞ்சொல் தி: தண்டு-குறும்பாவா;
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு.
 
 
இத்திருக்குறளை எல்லாச் சமயத்தினரும் தத்தம் சமயக் கோட்பாடுகளை உணர்த்தும் நூல் என்று கூறுவது எனினும் ஜைந சமயத்தவர் திருக்குறளை 'எம் ஒத்து' என்று கூறுதலினின்றும் திருவள்ளுவரைச்சைன சமயத்தவர் என்று ஒருசாரார் கூறுவர். ஜைன சமய சித்தாந்தத்தின்படி திருக்குறளையியற்றியவர் ஸ்ரீகுந்த குந்த ஆசாரியர் என்பவர் ஆவர்.
 
 
ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் கி.மு. 52 முதல் கி.பி. 44 வரை வாழ்ந்தவர். இவர் 95 ஆண்டுகள் 10 திங்கள் 15 நாட்கள் உயிர் வாழ்ந்தார். இவருக்குப் பத்ம நந்தி, வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்ற பெயர்களும் உண்டு; இவரைப் பற்றிய பாடல்கள் சிலாசாஸனமாகச் சிரவண பெல் கோலாவில் உள்ளன.  
 
 
இந் நாளில் திருப்பாதிரிப் புலியூர் எனப்பெறும் ஊர் அந்நாட்களில் பாடலிபுரம்' என்று அழைக்கப்பட்டது.  
 
------------------------------------
குந்த குந்தர் ஏலாசாரியர் என்னும் பெயர்களை யுடைய திருக்குறளாசிரியர் கி.பி: 108இல் குருபிடத்திற்கு வந்து கி.பி. 160 வரை இருந்திருக்கிறார், இவர் ஜனன காலம் கி.பி. 64. தி. ஆ. பக். அக.)
-------------------
 
இப்பாடலில் ஒரு ஜைன சங்கம் அந்நாளில் சிறந்து விளங்கியது. இவர் அந்த ஜைந சங்கத்துக்குத் தலைவராகத் திகழ்ந்தார். இவர் ஜைந சமயக் கோட்பாடுகளைக் கரைகண்டுணர்ந்தவர். பிராகிருத மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸ்மயலாரம் என்ற மூன்று நூல்கள் மிகச் சிறந்தவையாகும். இம்மூன்றும் பிரப்ருதத்திரயம் என்று குறிக்கப்படும். இவ்வாசார்ய குந்தகுந்தர் தமிழில் எழுதிய நூல் திருக்குறள் ஒன்றேயாகும் என்று ஜைந சமயத்தார் கருதுவர். இவருக்கு ஏலாசாரியர் என்ற பெயரும் உண்டு என்று மேலே கூறப் பட்டது.
 
 
'ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்குறள்' என்று திரு T.S. ஸ்ரீபால் நயினார் அவர்களிடம் இருந்து பெற்ற திருக்குறள் ஜைநருரை கொண்ட ஒலைச்சுவடியில் காணப்படுவதாகப் பேராசிரியர் அ. சக்ரவர்த்தி அவர்கள் திருக்குறள் - கவிராச பண்டிதர் உரை நூலின் முகவுரையில் கூறுவது இங்கு அறிதற் பாலதாகும். எனவே திருக்குறளை இயற்றியவர் 'ஏலாசாரியர்' என்றும், ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தருக்கு ஏலாசாரியர் என்று பெயர் இருந்தமையின் ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் தமிழில் இயற்றிய நூல் திருக்குறள் ஆகும் என்றும், திருக்குறள் ஜைந சமயக் கோட்பாடுகளைக் கூறுவது என்றும் அறியப் பெறும்.
 
இவர் பிராகிருத மொழியில் இயற்றிய நூல்கள் 52 ( கி.ஆ. பக் 92) இவற்றுள் 21 நூல்களைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் அருகன் தத்துவம் சுவடி 3, ஏடு 4,5, பக் 8-12 வரை தரப் பெற்றுள்ளன. (ஆண்டுக் காண்க).
 
 
ஏலாசாரியராகிய ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் அருளிய அற நூலாகிய திருக்குறளைக் கண்டு மகிழ்வெய்தி,ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தருடைய மாணாக்கர்களில் ஒருவரும் வானப்பிரஸ்தாஸ்ரமத்தை யுடையவரும் ஆகிய திருவுள்ளம் நயினார்
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'
என்று சிறப்பித்துப் பாடினார்*(** இதனைப் பாடியவர் இடைக்காடர் என்று திருவள்ளுவமாலையில் உள்ளது.).
ஸ்ரீ குந்த குந்தர் திருவுள்ளம் நயினாரின் நுண்ணிய அறிவையறிந்து, இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்யுமாறு பணித்தார். அங்ஙனமே திருவுள்ளம் நயினார் அரங்கேற்றுவித்தார்.
 
 
ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் தம் இறுதிக் காலத்தில் (வந்த வாசிக்கு அருகிலுள்ள) பொன்னூர் மலை (எனப் பெற்ற நீலகிரி) யில் தங்கியிருந்து மேற்படி மலையில் தேக வியோகமடைந்து சர்வார்த்த சித்தி யென்னும் பஞ்சநுத்தரத்தில் அகமிந்திரனாக அவதரித்தார்' இவர் பொன்னுார் மலையில் தேக வியோகம் அடைந்ததால் அவருடைய நினைவாக அங்கு இரண்டு திருவடிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
 
இது காறும் கூறிய வாற்றான் திருக்குறளை இயற்றியவர் ஏலாசாரியர் எனப் பெற்ற ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் என்பதும், அவருடைய மாணாக்கர்களில் ஒருவராகிய திருவுள்ளம் நயினார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியவர் என்பதும் நன்கு தெரிய வரும். திருவுள்ளம் நயினாரே திருவள்ளுவர் என்று அழைக்கப்பட்டார்.
 
 
 இத்திருக்குறளாகிய நூல், சைன சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்க வெழுந்ததாகும் என்பது சைனரின் கருத்தாகும். ஜைன சமயத்தில் கடவுள் வணக்க முறை நான்கு வகையாக அமையும். அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தர்ம சரணம் என்பன அவை. சீவகசிந்தாமணி 382 ஆம் செய்யுள்,நல்லறத் நிறைவனாகி நால்வகைச் சரணமெய்தி என்ற பகுதிக்கு உரை பகுத்த நச்சினார்க்கினியரும் மேற்கண்ட நால்வகைச் சரணங்களைக் குறிப்பிடுகிறார் இந் நான்கையும் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணலாம்.


-- Edited by Admin on Thursday 14th of September 2017 07:05:57 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ஏழுசெய்யுட்களில் அருக சரணமும், கோளில் பொறியில் ' என்ற குறளில் சித்த சரண மும்,பொறிவாயிலைந்தவித்தான்’’ என்ற குறளில் சாதுசரணமும், "அறவாழியந்தணன்' என்ற குறளில் தர்ம சரணமும் அமைந்துள்ளன என்பர். (தி. ஆ. பக். 135)  எனினும் கவிராஜ பண்டிதருரை (அச்சு நூல்) கடவுள் வாழ்த்து 10 ஆம் குறளுரை விளக்கவுரையில் இந்நூலைப் பதிப்பித்தவர்கள்.
 
'கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும் அடங்கியுள்ளன வென்றும்,நீத்தார் பெருமை யென்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன் வலி யுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தருமசரணமும் கூறப் படுள்ளன என்றும் ஜைன சமயப் பெரியோர் கூறுவர்' - என்று எழுதியமை ஈண்டுக் கவனிக்கத்தக்கதாகும்.
 
ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர், 'தசபக்தி' என்ற பிராகிருத நூலுள் நான்கு சரணங்களை (மங்கலகரமான பொருள்களைக்) கூறியிருக்கிறார். அவை சத்தாரி மங்களம் எனப் பெறும்.
சத்தாரி மங்களம் ஆவன
அரஹந்த மங்களம்:
சித்த மங்களம்:
சாது மங்களம், கேபலிபண்ணத்தோ
தம்மோ மங்களம் என்பனவாம்.
 
என் பாவம் நீங்க அருகனைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்கச் சித்தனைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்க முனிவர்களைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்க அறிவன் உரைத்த அறத்தைத் தொழுகிறேன்.*
 
என்பதும் அது(* பகவதி ஜயராமன் - திருக்குறள் வழங்கும் செய்தி பக்கம் 84)
 
அந்த நான்கு மங்களங்கள்: அருகன், சித்தன், முனிவர் (சாது); அறம் (தர்மம்) என்பனவாம். இந்நான்கும் உலகத்தில் உத்தம மானவை என்றும் கூறப்பெறும்.
 
அருகர் சித்தர் ஆகியோர் உயர்ந்தவர்கள். இவர்களைப் பரமேட்டி' என்பர். எவர் இல்லறம் துறந்து துறவறம் ஏற்றுத் தன் சாதனை மூலமாக நான்கு காதி வினைகளை நீக்கி, அநந்த சதுட்டயம் (அநந்த தரிசனம், அனந்த ஞானம், அனந்த சுகம், அனந்த வீரியம்) வடிவில் இருக்கிறாரோ அவரே அருகர்.
 
எவர் இல்லற நிலையைத் துறந்து, துறவற சாதனை மூலம் நான்கு காதி வினைகளை நீக்கியபின் அநந்த சதுட்டயங்களைத் தோற்று வித்துக் கொண்டு, அகாதி வினைகளையும் வென்று, பிற பொருள்களின் தொடர்பு முற்றிலும் நீங்கிய பிறகு முழுமுக்தி நிலையை யடைந்தாரோ அவர் சித்தர். அவருக்கு எட்டுக் குணங்கள் கூறப் படும்.* (*ஆத்ம ஞானமலர் சுவடி 3, பக்கம் 4-6 1 )
 
 
திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இருக்கும் பாடல்கள் மேலே கூறிய அருக பரமனையும், சித்த பரமனையும் நோக்கிப் பாடிய பாடல்களேயாகும். எனவே அப்பகுதி அருக சித்த வணக்கப்பகுதி என்று உரைக்கத்தக்கது என்பதில் தவறில்லை.(திருக்குறள் வழங்கும் செய்தி பக்கம் 83) அருகனை வணங்குதல் அவன் உலகத்துக்கு வழங்கும் அறம் என்னும் கருணையின் பொருட்டாகும். சித்தனை வணங்குதல் அவன் நிலையே வாழ்க்கையின் இறுதியாகிய முடிந்த நிலை என்பதன் பொருட்டாகும். இந்த உண்மைகள் அடங்கியதே திருக்குறளின் கடவுள் வாழ்த்து.
 
 
அருக - சித்த வணக்கங்களுக்கடுத்து மூன்றாவது அதிகார மாகிய நீத்தார் பெருமை கூறுமுகத்தான் சாது சரணமும் நான்காவது அதிகாரமாகிய அறன் வலியுறுத்தலில் தர்மசரணமும் கூறப்பட்டன. எனவே 'தன் வாழ்க்கையின் குறிக்கோளை யடைய வேண்டுபவன் இந்நான்கு மெய்ப் பொருள்களையும் சரணடைய வேண்டும்' என்பது பெறப்பட்டது.
 
 
தமிழில் சீவக சிந்தாமணியியற்றிய திருத்தக்க தேவரும் இந் நான்கு சரணங்களையும் கூறுகிறார். சீவக சிந்தாமணியின் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர், 'மூவாமுதலா' என்னும் செய்யுளுரையில் 'இது சித்த சரணம்' என்றும், செம்பொன் வரைமேல்' என்ற செய்யுளுரையில் இது 'அருக சரணம்' என்றும், 'பன்மாண்” என்றதனுரையில் 'இது தன்ம சரணமும் சாது சரணமும் கூறிற்று' என்றும் கூறியுள்ளார் என்றும், இவ்வாற்றான் பாயிரப் பகுதி சைன சமயக் கோட்பாட்டிற் கேற்ப அமைந்தது என்று கொள்ளப் பெறும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்துள்ளும் காணப்படும் தொடர்கள் ஜைந சமயச் சார்புடையனவாம்.
 
 
முதற்குறளில் காண்பது ஆதிபகவன்: விருஷப தீர்த்தங்கரருக்குப் பிறகு இருபத்துமூவர் அவதரித்தனர். இவ் விருபத்து மூவர்க்கும் விருஷப தீர்த்தங்கரர் முதல்வர் ஆகையால், விருஷப திர்த்தங்கரர் ஆதிபகவன் எனப்பட்டார். மேலும் இவர் கர்ம பூமியின் ஆதியில் மக்கள் உயிர்களுக்கு அக்ஷரம், கணிதம் (எழுத்தும் எண்ணும்) முதலானவற்றை உபதேசித்த ஆதி மூர்த்தி யாகையால் ஆதிபகவன் எனப்பட்டார்.
 
"விருப்புறு பொன் எயிற்குள்
விளங்கவெண் னெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி' - என்றும்,
சொல்லிய யெழுத்தெண் னெல்லாம்
தொல்லை நாள் எல்லையாக
நல்வகை யாக்கும் பிண்டி நாயகன் –
 
 
என்றும் மண்டல புருடர் தம் நிகண்டு நாலாவது தொகுதியிலும், 12 ஆவது தொகுதியிலும் தெய்வ வணக்கத்தில் கூறியுள்ளார்.
"கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்
 
 
என்ற கயாதர நிகண்டு 'ஆதிபகவன்' என்று அருகனைக் கூறும். சிலப்பதிகாரம் (நாடுகாண், கானல் வரி, 177)செறிவன் சிநேந்திரன் சித்தன் பகவன்' என்று கூறும். ஆதி பகவனை அருகணை என்பது திருக்கலம்பகம் (செ. 109)
எனவே ஆதி பகவன் என்பது அருக தேவனையே குறித்தலைக் காண்கிறோம்.
 
 
 இரண்டாவது குறளில் காண்பது வாலறிவன் என்பது ஆகும். 'பகவன் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் கேவல ஞானி என்று உரை வகுத்துள்ளார். கேவல ஞானம் என்றால் முற்றறிவு என்பது பொருள். எனவே முற்றறிவுடையவனை ‘வாலறிவன்' என்ற தொடர் குறிப்பிடா நிற்கும்; சிலப்பதி காரம் (நாடு காண் காதை வரி 176) 'அறிவன் அறவோன்' என்றும், மேருமந்தரபுராணம் 'அறிவினாலறியாத அறிவன் நீ" என்றும் கூறும் (செ. 630) 'அறம் பகர்ந்த அறிவன்' என்பது சீவசம் போதனை (அத்தியாயம் 1, செ. 29).
 
 
மூன்றாவது குறள் மலர் மிசை யேகினான் என்ற தொடரையுடையது. இது அருகக் கடவுள் மலர்மேல் நடந்த செய்தியைக் கூறுவது. அருகக்கடவுள் திருவடியின் கீழமைந்துள்ள தாமரை மலர் தவிரச் சமவசரணத்தின் மிசைச் செல்லும் போது முன்னேழு பின்னேழு தாமரை மலர்கள் தெய்வீக அதிசயத்தில் ஏற்படும்; அதன் மிசை அவர் நடப்பார். 'மலர் மிசை நடந்தோன்' (சிலப், நாடு, வரி 204); "விரி பூந்தாமரை மேற் சென்ற திருவாரடி" (சீவக 2814); ' கமல மீதுலவும் உனை’’ (மேரு மந்தர புராணம் செ. 66); தண் தாமரை மலரின் மேல் நடந்தாய்' (சூளாமணி, துறவு 71): *தாமரைப் பூவின் மேற் சென்றான் புகழ் அடி "அறநெறிச் சாரம் கடவுள் வாழ்த்து); 'தன் தாமரைமேல் நடந்தான் (நீலகேசி - 33) என்ற மேற்கோள்கள் இதனை வலியுறுத்தும். 'போதில் நடந்தோன்' என்பது கயாதரம்.
 
 
 நான்காவது குறள் வேண்டுதல் வேண்டாமையிலான் என்ற தொடரையுடையது. வேண்டுதல் வேண்டாமை - ராகத்து வேஷங்கள் - விறுப்பு வெறுப்புக்கள் இல்லாதவன் என்பது அருக பரமேஷ்டியைக் குறிக்கும்.‘'வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரன் (திருக்கலம்பகம் 58); "ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே' (திரு நூற்றந்தாதி செ. 20); 'உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீ இலை' (மேரு மந்தர புராணம் 178) ஆகியவற்றால் வேண்டுதல் வேண்டாமை யிலான் அருகன் என்பது விளங்கும்.
 
 
ஆறாவது குறளில் கண்ட (பொறி வாயிலைந்து அவித்தான்) என்பது அருகக் கடவுளையே குறிக்கும். இக்கருத்து ஐவரை வென்றோன்' (சிலப் 10-198) பொறிவாயில் ஐந்த வித்த புனிதன் நீயே' (சீவசம் போதனை 1-29); "பொறிவரம்பாகிய புண்ணிய முதல்வன்' (சீவக சிந்தாமணி 2563) என்பவற்றால் உறுதியெய்தும்.
 
 
ஏழாவது குறளில் கண்ட தனக்குவமையில்லாதான் என்ற தொடர் ஆச்சார்ய ஸ்ரீ குந்த குந்தர் தாம் பிராகிருத பாஷையில் இயற்றிய 'சமயசாரம்' என்னும் நூல் கடவுள் வணக்கம் கூறுங்கால் 'அனோ வமம்' (உவமையில்லாதவன்) என்ற தன் மொழி பெயர்ப்பாகவே கருதப்பெறும்.
 
 
எட்டாவது குறளில் கண்ட அறவாழியந்தணன் என்பது அருகனுக்கேயுரியது அறவாழியண்ணல் இவன் என்பார்' என்பது சீவக சிந்தாமணி செ. 1611 அருளோடெழும் அறவாழி யப்பா' என்பது திருநூற்றந்தாதி செ. 7. 'அறவாழி கொண்டே வென்ற அந்தணனே என்பதும் அந்நூல் செ. 27 கயாதரம், அறவாழியண்ணல்" என்பதை ஜிநேசவரருடைய பெயர்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றது.
 
 
ஒன்பதாவது குறளில் கண்ட எண் குணத்தான்' என்பது எட்டுக் குணங்களையுடைய சித்தபரமேஷ்டியைக் குறிக்கும். 'பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம் பொருள் '(சிலப்-நாடு 18 )’’ இரு நால்வினை கெருத்து எண் குணனுமெய்தி 'ஜீவசம்போதனை 1 இல்லை); 'இறைவனி ஈசனி எண்குணத் தலைவனி (மேருமந்த்தர புராணம் செ. 1000) ஆகிய மேற் கோள்களால் அருகன் எண்குணனாதல் உறுதியெய்தும்.
 
இதுகாறும் கண்ட மேற்கோள்களால் கடவுள் வாழ்த்தில் கண்ட கடவுளைப்பற்றிய தொடர்கள் யாவும் அருக சித்த பரமேட்டிகளையே - ஜிநரையே குறித்தலால், திருக்குறள் ஆசிரியர் ஜைநர் ஆதலே உறுதி யெய்தும். "நீத்தார் பெருமை - யென்ற மூன்றாவது அதிகாரத்தின் முதற்குறள்,
'ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணிவற் றுணிவு - என்பதாகும்.
 
 
"பரமாக மத்தின் துணிவு, நீத்தாருடைய பெருமை மேலான பத்துத் தரு மங்களை வேண்டும்' - என்பது இக்குறட்குக் கர்ண பரம்பரை யாக ஜைநர் கூறும் உரையாகும். விழுப்பத்து – உத்தமமாகிய பத்து – உத்தமக்ஷமை முதலாகிய பத்துத் தருமங்கள். அவை யாவன: 1. உத்தம க்ஷமை: 2. உத்தம மார்த்தவம், 3. உத்தம ஆர்ஜவம்; 4. உத்தம சத்தியம்: 5. உத்தம சவுசம், 6. உத்தம சம்யமம் 7. உத்தம தபசு 8. உத்தம ஆகிஞ்சண்யம், 9.உத்த துறவு(மதியாகம்); 10. உத்தம பிரமசரியம். இவை முறையே 1. பொறையுடைமை; 2. மென்மை; 3.செம்மை, 4. மெய்ம்மை; 5. நன்மை, 6. அடக்கம்; 7. தவம்: 8. ஒன்றின்மை, 9. துறத்தல் 10. திறம்பாமை என்பனவாம். (விளக்கம் அச்சு நூல் பக்கம் 16-17 காண்க) இந்தப்பத்தினையே திறக்குறளாசிரியர் கொண் டிருக்க வேண்டும் என்பது, ஜைநருடைய அழுத்தமான நம்பிக்கை யாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 இவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறள்,
'ஐந்தவித்தா னாற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்கரி' என்பதாகும். இக்குறள் முற்றுந் துறந்த மகாமுனிவர்கள் ஐம்புலன்களையு மடக்கித் தவஞ்செய்து காதிகர்மங்களைக் கெடுத்துக் கேவல ஞானத்தை யடைந்ததின் பெருமையை அவதி ஞானத்தாலறிந்த இந்திரன் அவர்க்குக் கந்தகுடி என்னும் ஜிநாலயத்தை நிர்மித்துக் கொடுத்ததைக் குறித்தது என்பதையும், ஆசிரியர் நீத்தார் பெருமையில் முனிவர் அடைந்த கேவல ஞானத்தின் உயர்வை உணர்த்தற்கு இந்திரன் சாகதியாவான் எனக் கூறினார் என்பதையும் விளக்கும்’ (தி.ஆ பக்-195)
 
பஞ்சேந்திரியங்களையும் ஜெயித்தவனைத் தேவேந்திரன் முதலிய தேவர்கள் பூமிக்கு வந்து ஸமவஸரண மண்டபம் அமைப்பித்து வணங்கி அவனுக்குச் சிறப்புச் செய்கிறார்கள் என்பது ஜைன சமயக் கொள்கை. இங்ஙனம் இந்திராதி தேவர்கள் கேவலபூசை செய்தற்கு வருதலை,
 
"ஆயிரங் கண்ணினானை யதிபதியாகச் சூழ்ந்து
மாயிரு விசும்பும் மண்ணும் மறைய வானவர்கள் வந்தார்’, எனவும்,
 
 
"பிண்டியும் குடையுஞ்சிய வளையுஞ்சா மரையு மற்றும்
அண்டவர்க் கிறையமைத்தான் அன்னவர்க்குரிய வாற்றான்'
 
 
எனவும் வரும் மேருமந்தர புராணம் 1386 மற்றும் 389 ஆம் செய்யுட் பகுதிகளால் அறியப் பெறும்.
 
 
இங்ஙனம் இந்திரனுக்குப் பெருமை தேடித் தருவதாக ஜைன சமயத்தில் கூறியிருக்கப் பரிமேலழகர்,சாபமெய்திய வாற்றை இந்திரனோடு தொடர்பு படுத்திக் கூறியது பொருந்தா தென்று கூறும் ஜைநர் கூற்றுச் சிறந்திருத்தல் கண்கூடு.
 
 
செயற்கரிய' என்ற குறளில் செயற்கரியவாவன தானம், தருமம், விரதம், தபசு என்பனவாம். இத்திறம் ஜைந சமயக் கோட்பாட்டுக்கே உரித்தாதல் உறுதி. மேலும்,
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்' 30 - என்ற குறள்
ஜைநசமயக் கோட்பாட்டுக்குரியதாகவேயுளது என்பது ஜைநர் கொள்கை. இதில் கூறப்பட்ட அந்தணர் என்பது வருணாசிரம தருமத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணரைக் குறிக்காது. ஜைநர்கட்குரிய ஸ்ரீபுராண நூலும் கூறப்பட்ட பிராமணர் அல்லது அந்தணர்களைக் குறிக்கும்; ஒருவன் பிறப்பினால் பிராமணன் ஆகான்;குணத்தாலே தான் ஆவன் என்பதை இக் குறள் கூறுகிறது. பரத சக்கரவர்த்தி ஆட்சி செய்யுங்கால் தாம் ஈட்டிய வொண்பொருளைத் தானம் செய்ய வெண்ணி ஷட்கர்மத் தொழில்களிலே ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துக் கொண்டு பெளர்ணமி நாளில் வருக என்று நரபதிகளுக்கு ஆணை பிறப்பித்தான்; அந்த நாளில் நன் மலர்களையும் மொட்டுக்களையும், தளிர்களையும் கனிகளையும் தன் அரண்மனை வெளியில் பரப்பினான்.
 
 
அரசர்கள் பரிவாரங்களுடன் அரண்மனையுட் புகுந்தனர். மகாஜனங்களை வெளியே நிறுத்தினர். பரத சக்கரவர்த்தி மகா ஜனங்களை உள்ளே வருமாறு பணித்தார், சிலர் உட்புகுந்தனர். சிலர் வரவில்லை. வராத சிலரை வேறுவழியால் அரசாணையின்படி அழைத்துச் சென்றனர். சக்கரவர்த்தி அவர்களைப்பார்த்து நீங்கள் முன்பக்கமாக வாராததேன் என்று வினவ, அன்னோர் அங்கே, வழிமுழுவதும் மலர்களாலும் தளிர்களாலும் பரப்பப்பட்டிருந்தது. அவை ஏகேந்திரிய ஜீவன்கள். நாங்கள் ஏதேந்திரிய ஜீவனையும் ஹிம்சை செய்யாதிருக்கும் ஒழுக்கம் உடையவர் அல்லோம் எனினும், இன்று பருவம் ஆகையாலும் உபவாசவிரதத்தையுடையராய் இருக்கின்றமையாலும் அவ்வழிவரின் ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை உண்டாகும் என்று கருதினோம்' என்றனர்.
 
 
பரதசக்கரவர்த்தி, இவர்கள் அணு விரததாரிகள் என்று கருதி, இவர்கட்கு ஒன்று முதலாகப் பதினொரு சூத்திரம் ஈறாக யக்ஞோபவிதம் இட்டுச் சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை உபதேசித்தான். (அணுவிரதமாவது பெரிய கொலை பொய் களவொடு காமம், பொருளை வரைதலோடைந்து' என்ற அருங்கலச் செப்பால் உணரலாம்). ஆரியவுட் கருமமாவது,
'ஒதலே ஒதுவித்தல் உடன் வேட்டல் வேட்பித்திட்டல்*  
ஈதலே யேற்றலாறு மேற்கும் அந்தணர் தொழிற்பேர்" எனச் சூடாமணி நிகண்டால் அறியலாகும்.
(வேட்டல் - ஒமம் செய்தல்; வேட்பித்தல் - ஒமம் செய்வித்தல்; வேட்டல்,
யாகம் செய்தலன்று.)
 
 
இங்கனம் சிராவண சுத்த பூரணையில் சிரவண நட்சத்திரம் கூடிய நாளில் பிராமணர்களை உண்டாக்கினார் என்பது போதரும். எனவே எல்லாச் சீவன்களிடத்திலேயும் அன்பும் அருளும் பூண்டு, கொல்லாமை முதலிய தர்மங்களைக் கடைப் பிடிக்கும் ஒழுக்க முடையவர்களே அந்தணர் என்பவர் ஆவர் என்பதும், இத்தகைய பண்புகள் படைத்தவர்களே ஜைந சமயக் கோட்பாட்டின் படி அந்தணர் என்று அழைக்கப்படுவர் என்பதும் அறியப்படும்.
 
 
பொருட்பால் - (55) செங்கோன்மை என்னும் அதிகாரம் மூன்றாவது குறள் (543) –
'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நி
ன்றது மன்னவன் கோல்’’
என்பதாகும். இதிற்காணும் :அந்தணர் நூல் என்பது ஜைன சம்பிரதாயத்தின்படி பகவான் அருளிய பரம ஆகமங்களை. அவற்றை வகைப்படுத்தி நான்கு அனுயோகங்கள் என்பர். அவை 1. பிரதமாநுயோகம்; 2.கரணாநு யோகம்: 3. சரணாநு யோகம்; 4. திரவியாநு யோகம் என்பனவாம். (விரிவிதி. ஆ. பக் 88-89 காண்க) இவற்றை நாடோறும் ஒதுதலை நியமமாகக் கொள்வர் ஜைநர்; இந்நாளில் இவற்றை ஒதுதல் அருகியது என்று தெரிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 



திருக்குறளைப் பன்னிரண்டடிகளில் வைத்து மேற்கோட் செய்திகளை முன்னிரண்டடிகளில் அமைத்துப் பாடிய முது மொழி வெண்பா நூல்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று ‘முதுமொழி மேல் வைப்பு’என்பது. இதன் ஆசிரியர் வெள்ளியம் பல வாண முனிவர் ஆவர்; இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபுர ஆதீன அடியார் கூட்டத்தில் திகழ்ந்த முனிபுங்கவர்களுள் ஒருவர். இவர்தம் நூல் 89 ஆம் பாடலில்,
 
 
அந்திவண்ணன் நூலால் அருகர்பிறர் கோள் சிதைய
வந்த திருவள்ளுவர்தம் வாய்மொழிகேள்-இந்த நிலத்து
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் என்பதாம். இதில் 'அந்தணர் நூற்கும்’ என்பது வடமொழி வேதங்களைக் குறிப்பதாகக் கொண்டு பாடினார். ஆனால் அந்தணர் என்போர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரையே குறிப்பதால், இங்கும் அந்தணர் நூல் என்று மேற்படி அந்தணர்கள் ஒதும் நான்கு அதுயோகங்களையே யென்று கொள்ளுதல் பொருந்தும்.
 
 
மேலும் முதுமொழி மேல் வைப்பில் (செ. 158),
ஒருவர் செயவேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால்-வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (1062)
 
 
என்ற பாடலில் ‘உலகம்' பற்றிய ஜைந சமயக் கருத்தை மறுத்துக் கூறுவதாகக் குறள் 1062 உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
 
ஜைநசமய வேதம்; ஜீவ புத் கல முதலான ஷட்திரவியங்கள் நிறைந்தது லோகமென்றும், லோகமானது ஒருவரால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல என்றும், அநாதியாகவுள்ளது என்றும் கூறும் (தி.ஆ.பக் 192).
 
 
ஆகவே உலகம் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட தன்று என்பது ஜைந சமயக் கொள்கையாகும் என அறியப் பெறும். எனினும், "உலகியற்றியான்' என்ற குறளிலிருப்பது, ஜைந சித்தாந்தத்துக்கு முரண் செய்வதன்று. உலகியற்றல் என்பது சைவத்துக்கும் ஜைநத்துக்கும் பொதுவாக நிற்பது. முறைப் பாட்டில் இரண்டிற்கும் வேறுபாடுண்டு. விருஷபதேவர் உயிர் கட்குத் தொழில் முதலியவறறை ஒழுங்குபட இயற்றினார் என்று ஜைநநூல்கள் கூறுகின்றன. உலகியற்றுதல் என்பது உலகில் பல தொழில்களை நியமித்தலாகும். அத்தொழில்களைச் செய்தால் இரத்தல் வேண்டாததொன்று. ஆகவே உலகியற்றியான் என்பது ஜைநசமயக் கோட்பாட்டின்படி அமைந்ததாதல் கண்டு கொள்ளலாம் என்பர் திரு. வி. க (தி. ஆ. முன்னுரை.)
 
 
உலகில் ஒருவன் உயிர்வாழ்தற்கு இரத்தலே வழி என்பதும் பொருந்தாது. மக்கள் தமக்கென விதிக்கப்பட்ட உழவு, வாணிபம் முதலிய ஷட் கர்மங்களைச் செய்து உயிர்வாழலாம். அங்ஙனம் செய்யாமல் இரத்தல் தமக்குத்தாமே உண்டாக்கிக் கொண்ட செயலாம். எனவே, ஏழ்மையும் அதனான் இரத்தலும் மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டதேயன்றி, வேறொருவர் உண்டாக்கியதன்று. ஆகவே உலகத்தில் இரத்தல் தொழிலை தன் சோம்பலால் கொண்டவன் (உலகின் கண் இயற்றியவன் - உண்டாக்கிக் கொண்டவன்) யான் - அவன் அழிக என்பதே இக்குறட் கருத்தாகும்.
 
 
'மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்' ( 134)
 
- எனும் குறள் வேதம் ஓதுதலும் பிறப் பொழுக்கமும் பற்றிக் கூறும். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்ற தொல்காப்பியத்தானும் வேதம் ஓதுதல் அந்தணர்க்குரிய ஒழுக்க மாதல் பெறப்படும். பரத சக்ரவர்த்தியும்,ஒரறிவுடைய ஜீவன்களையும் இம்சை செய்யக்கூடாது என்ற கொள்கையுடையாரை அந்தணர் என்று அழைத்தார் என்று மேலே கூறப்பட்டது. ஆகவே அன்னோர்க்கு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் "சிறப்பொழுக்கம் ஆயிற்று. அதுவே அவர்கட்கு எனப் பிறப்பிக்கப்பட்ட ஒழுக்கமுமாயிற்று. யார்யார் ஒரறிவுயிர்கட்கும் தீங்கு புரியாத ஒழுக்கம் உடையவர்களோ அவர்களெல்லாம் அந்தணரே யாவர். அவ்வந்தணர்களும் ஜைந வேதங்களை ஓதும் கடப்பாடுடையர். இங்குக் கண்ட பார்ப்பான் - அந்தணன் என்பவனுக்குரிய ஒழுக்கம் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகும். இங்ஙனம் செந்தண்மை பூண்டொழுகுதல் சமயச் சாரித்திரம் என்று ஜைந சமயக் கோட்பாடு குறிப்படும்.
'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்' (560)
எனும் குறளிலும் அறுதொழிலோர்' குறிக்கப்படுகின்றனர். இவ்வறு தொழிலோரும் அந்தணர் என்ற அறவோரையே குறிக்கும். நூல் என்பதும் ஜைந சமயிகட்குரிய பிரதமாநுயோகம் முதலிய நான்குமாம்.
 
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’’ (377)
எனும் குறளில், 'வகுத்தான் என்ற சொல் மயக்கம் தருவதாக உள்ளது. வகுத்தான்' என்பது ஊழ் என்ற அதிகாரத்தில் இருப்பதால் வகுத்தான் என்பது ஊழையே குறிக்கும். ஊழ் என்னும் ஆற்றலையே இங்கு ஒரு தெய்வமாக உருவகித்து வகுத்தான் என ஆண்பால் முடிவாகக் கூறினார் ஆதல் கூடும். வகுத்தான் -கருமங்களை வகுத்தருளியவனாகிய அருகக் கடவுள் என்றும் கூறுவர் (தி.ஆ.பக் கூஉ)
 
 
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு' (610)
எனும் குறளில், அடியளந்தான்' என்பது திருமாலைக் குறிக்கும் என்பர். அடியளந்தான் என்பது கேவலஞானியைக் குறிக்கும். கேவல ஞானி எல்லாவுலகங்களையும் நன்கறியும் ஆற்றல் பெற்றவன்.'அடியளந்தான் தாஅயது என்பது கேவலஞானியாலே அறியப்பட்ட உலகு என்று பொருள்படும். அது திருமாலைக் குறிக்காது என்பது ஜைநசமயக் கோட்பாடு. அடியளந்தான் என்பதற்குச் சகலலோகத்தையும் அறிந்த சுவாமி என்பது இந்நூலிற் கண்ட உரை.
 
 
தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில், *தாமரைக் கண்ணான்' என்று திருமாலும் அவனது உலகமாகிய சுவர்க்கமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. தாமரைக் கண்ணானுலகு என்பதை இந்திரன் உலகு என்று குறிப்பிடுவோருமுளர் என்று பரிமேலழகர் கூறித் தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறிக்காது’ என்பர். மணக்குடவரோ ‘இந்திரர் உலகு’ என்பர்.
 
 
இந்திரர் வாழும் உலகத்துள்ளவர்கள் ஆங்கு இன்பம் நுகர்ந்து பின் இவ்வுலகத்தில் மனிதனாகப்பிறந்து சம்சாரத்தில் இருந்து, தவம் செய்து மோட்சம் பெறலாம். இந்திரர் உலகத்தவர் அங்கிருந்தே மோட்சத்துக்குச் செல்லவியலாது.
 
 
'நீ சுவர்க்கம் பெறுவதற்குரிய முயற்சியைவிட்டு இங்ஙனம் காதல் வயப்பட்டு இருத்தல் உன் பெருமைக்குப் பொருந்தாதது' என்று கூறிய பாங்கனை நோக்கிக் "காதலியின் மென்தோளில் துயிலுதலைக் காட்டிலும் சுவர்க்க வின்பம் பெரிதாகுமோ என்று தலைவன் கூறியதாக இக்குறள் அமைந்துள்ளது. சுவர்க்க வின்பம் பெரியதன்று. அவ்வின்பம் நுகர்ந்தபிறகு மீண்டும் உலகத்துப் பிறந்து தவம் செய்தே மோட்சம் பெறவியலும். எனவே இங்குக் கூறிய தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறித்ததாகவே கொள்ளலாம்.
 
 
இந்திரனுக்கு ஆயிரங்கண் உண்டு என்பதும் ஜைநர் கொள்கை. பகவான் அடைந்த கேவல ஞானப் பேரொளியைக் கண்டு களிக்க இந்திரன் விழைந்தான்; அதற்கு இருகண்கள் போதா வென எண்ணினான்;ஆயிரங்கண்களால் காண வேண்டும் என விழைந்தான்; எண்ணியவாறு எய்தும் தனக்குரிய சரீரத்தின் ஆற்றலால் தன் உடலெங்கும் கண்களை யுண்டாக்கிக் கொண்டான். பகவானைக் கண்டு போற்றி மகிழ்ந்தான்; இக்காட்சியைக் கண்ட பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண் உடையான் என்று வாழ்த்தினர். (பக்கம் 12. திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதி பகவன்)


 
இதுகாறும் ஒரளவு ஐயப்பாட்டுக்குரிய குறட்பகுதிகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனான் திருக்குறளிற் கண்ட அவ்வப்பகுதிகள் ஜைந சமயக் கோட்பாடுகட்குரியவாய் அமைந்துள்ளன என்பது தெள்ளிதின் விளங்கும்.
 
 
'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை' (41)
 
எனும் குறளில் இயல்புடைய மூவர் ஆவார் - பிரமசாரி, வானப்பிரத்தன், தவசி என்று காகிதக் கையெழுத்துச் சுவடியில் உள்ளது; வானப்பிரத்தனைப் பெண் சாதி மாத்திரத்துடனே கூட வனத்தில் இருப்பவன் என்று கூறுவர். அச்சுநூலில்,  உச்சிஷ்ட பிண்ட விரதம் என்ற பதினோராம் நிலையில் கெளபீன மாத்திரத்துடனே கூடி ஜிநஸ்துதியிலே யிருக்கிற சுல்லகர் என்று உள்ளது.
 
 
வானப்பிரத்தம் பற்றிய ஜைநர்தம் கொள்கை ஈண்டு அறிதல் தகும். வேதமார்க்கத்தில் கண்ட வண்ணம் வானப்பிரத்தமாவது தன் மனைவி மக்களோடு காட்டிலிருந்து தவம் செய்வது. இல்லறத்தார் ஊர்களில் வசிப்பர். இவ்வானப்பிரத்தர் காட்டின்கண் உறைவர். உறைவிட வேறுபாடு தவிர வேறு எதுவும் இல்லை.
 
 
ஆனால் ஜைனர் கோட்பாட்டின்படி வானப்பிரத்தர் உத்யானத்திலும் காட்டுப் பகுதியிலும் இருந்து, முனி சங்கம் அமைத்து அச்சங்கத்துத் தலைவரும் அவரது மானாக்கர்களும் தங்கிச் சமயக் கோட்பாடுகளைக் கற்பித்தும் கற்றும் அதற்குத்தக நிற்பவரும் ஆவர். இந்நிலையினர் தாம் உயிர் வாழ்வதற்குரிய உண்டிக்கும்,நோய்க்கு மருந்திற்கும் இல்வாழ்க்கையுடைய சம்சாரியை எதிர்நோக்கியே இருக்க வேண்டியவர் ஆவர். இங்ஙனம் வாழும் முனிசங்கத்தவரே வானப்பிரத்தர் ஆவர். (பேரா. சக்கரவர்த்தி - குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு விசேடவுரை )
 
 
இதுபற்றி தி. ஆ. பக்கம் 20 இல் அடிக்குறிப்பாக எழுதப்பட்டதும் அறிதற்பாலதாகும் 'வானப்பிரஸ்தாஸ்ரமமென்பது, தர்மார்த்தங்களை அனுபவித்து இல்லறத்தினின்று விலகி வனத்தில் சென்று முற்றுந் துறந்த முனிவரிடம் அடைந்து அவருக்கு சிஸ்ருக்ஷை செய்து கொண்டு அவரிடம் தவத்திற்குரிய சில தத்துவங்களை யுணர்ந்து ஒழுகுவதாகும். இதில் இரண்டு விதமாம். முதலாவது, கெளபீனமும் கண்ட வஸ்திரமும் அணிந்து கமண்டலத்துடன் கூடியிருப்பதாம். இரண்டாவது கெளபீன மாத்திரம் உடைத்தாகிக் கமண்டலமும் பிஞ்சமும் கொண்டிருத்தலாம். (திருவுள்ளம் நயினார் கெளபின கமண்டல பிஞ்சதாரியாயிருந்து முற்றுந்துறந்தவர் ஆவர்)
 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்
றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை' , (43)
 
எனும் குறளில் 'தென்புலத்தார்’ என்பது பிதிரர்களைக்குறிக்கும் என்பர் பரிமேலழகர். காகிதக் கையெழுத்துச் சுவடியிலும் பிதிரர் என்றுள்ளது அச்சு நூலில் 'உயிர் துறக்கும் தறுவாயில் உள்ள முதியவர்கள்' என்று காணப்படுகிறது.
 
பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி என்பது பரிமேலழக ருரை. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது இங்குக்குறிக்கப்படுகிறது. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது ஜைநரிடத்து வழக்கில் இல்லை எனினும் பேராசிரியர் சக்கரவர்த்தி அவர்கள் தம் திருக்குறள் ஆங்கிலமொழிபெயர்ப்பில் பக்கம் 45 ல்  The pifru darpana is not altogether unknown in the South Indian Society of Jains தென்னிந்திய ஜைந சமூகத்தாரிடம் பித்ருதர்ப்பனம் முழுமையும் அறியாத தொன்றல்ல என்று கூறியுள்ளார். (ஜைந சார்பான உரை அச்சுநூலில் காண்க).
 
 
'வான்சிறப்பு’ என்ற அதிகாரம் பற்றியும் இங்குக் குறிப்பிடல் தகும். ஜைந சம்பிரதாயப்படி வான்சிறப்பு என்ற அதிகாரம் நான்காவதாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது. கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருகசரணம் சித்த சரணம் ஆகிய இரண்டும். நீத்தார் பெருமையுள் சாதுசரணமும், அறன் வலியுறுத்தலில் தரும சரணமும் கூறப்பட்டன என்றும் ஜைநசமயச் சான்றோர் கூறுவர். எனவே இம்மூன்றும் முறையே அமைந்த பிறகே வான்சிறப்பு’ என்ற அதிகாரம் அமைக்கப்பட்டி ருத்தல் வேண்டும். சிலப்பதிகாரத்திலும் 'மாமழை போற்றுதும்' என்று வான் சிறப்புக் கூறப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

இங்ஙனம் மழையின் சிறப்பைக் கூறியவர் உழவர்க்கு இன்றியமையாத மழையினது நன்மையைக் கூறியவர்- உழவு' என்ற அதிகாரத்தில் உழவனைப்பற்றிக் கூறியவர் - உழவுத் தொழிற்குரிய வேளாளர்களைஉழுவார் உலகத்தார்க்காணிஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று சிறப்பித்தமை யோடு உழந்தும் உழவே தலை’ என்று உழவுத் தொழிலையே சிறந்த தொழில் என்றார்.
 
 ஜைந ஆகமத்தின்படி முன்பு இப்பூமி போக பூமியாக இருந்தது. மக்கள் உழைப்பின்றித் தாம் வேண்டியவற்றை வேண்டியாங்கு கற்பதருமூலம் பெற்று வாழ்ந்தனர். துடுமெனக் கற்பதருக்கள் மறைந்தன. உணவுப் பொருட்கள் இல்லையாயின. ஆகவே விருஷப தேவர் மக்களுட் சிலரை உழுதுபயிரிடுமாறு பணித்தருளினார். இத்தொழில் செய்பவர் வேளாளர் எனப்பட்டனர். பயிரிட்டுப்பெற்ற உணவுப் பொருள்களைப் பலரும் பெறுதற் பொருட்டு வாணிபத் தொழில் நியமித்தார். இத் தொழிலைச் செய்பவர் வணிகர் எனப்பட்டனர். உலகு நன்கு நடைபெறச் சிலரை ஆட்சியாளர் ஆக நியமித்தார். இங்ஙனம் உலகம் கருமபூமி ஆயிற்று. எனவே செய் தொழிலால் மக்கள் மூன்று வகையாயினர். இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. வருணாசிரம தருமத்தின்படி உழுபவர் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர் நான்காவது வருணத்தினர் ஆயினர். பிற்காலத்தில் உழுது எண்பார் உழுவித் துண்பார் என்ற பாகுபாடுகளும் தோற்றம் பெற்றன. ஆனால் குறளின்படி நோக்கின் உழுபவர் உலகத்திற்கு அச்சாணி போன்று இன்றியமையாத பெருஞ்சிறப்புடையவர் ஆவர். ஜைநசமயக் கோட்பாட்டின்படி மக்கட் சமுதாயத்தில் உழுபவர் சிறந்த இடம் பெறுபவர் ஆவர். இச்சிறப்பு ஜைநசமயக் கோட் பாட்டிற்கேயுரியது.
 
 
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை' (குறள் 345) என்ற தத்துவமும் உன்னுதற்குரியது. அபரிகிரஹம் (பொருள் நீக்கம்) என்ற கோட்பாடு தவம் செய்வார்க்குரியது. பொருளுடைமை தவசிக்குரியதன்று. மனத்தாலும் பொருள் வேண்டும் என்று கருதுதல் தவசிக்கில்லை சம்சாரிக்கே 'பரிமித பரிக்கிரகம்’வேண்டிய அளவு பொருளுடைமையுண்டு. தவசிக்குப் பொருளே வேண்டியதில்லை. தவசிக்கு வேண்டிய யாவற்றையும் தந்து காத்தற்கே சம்சாரி இருக்கிறான் என்பதைத்
 
 '"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்
 மற்றையவர்கள் தவம்’ (263)
 
- எனும் குறள் கூறுகிறது. எனவே தவசிக்குரியது 'அபரிக்கிரகம்' என்றும், சம்சாரிக் குரியது 'பரிமித பரிக்கிரகம்' என்றும் கொள்ளல் வேண்டும். ' செய்க பொருளை' என்பது குறள் 759.
 
அறன் ஈனும் இன்பமும் ஈணும் திறனறிந்து
தீ தின்றி வந்த பொருள்' (754)
 
- என்பதும் அறிதற் பாலது, இங்ங்னம் பொது அறங்களோடு, சில விடங்களில் ஜைந சமயத்துக்கேயுரிய கோட்பாடுகளைக் கூறும் நூலாகவே திருக்குறள் காணப்படுகிறது. அக்கோட்பாடுகளுள் சிகரம் வைத்தாற் போன்றமைவது கொல்லாமை' என்னும் அறமாகும். அஹிம்ஸா பரமோதர்ம : என்பது முழுமையாக ஜைந சமயக் கோட்பாடு, வேதநெறியினருள், வேள்வி செய்பவர், வேள்வியில் கொலை செய்பவராகவே கருதப்படுவர்.
 
 
'அவிசொறிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணாமை நன்று' (259)
 
– என்பது குறள்: பெளத்த சமயத்தினரோ எனின், தாம் கொல்லார், எனினும் ஊனை விலைக்குப் பெற்றுண்பர். இதுவும் தவறு ஆகவே:
 
கொல்லான் புலாலை மறுத்தானைக் 
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' (260)
 
- என்று குறள் கூறுவதாயிற்று. பிறிதொரு கோட்பாடும் நம் சிந்தனைக் குரியது ஆகும்.
 
 
ஒருவன் முன்னே செய்த நல்வினை தீவினைகள் செய்தவனையே வந்து பொருந்தும் என்பது ஜைந சமயக் கோட்பாடு. அஃது எங்ஙனம் எனின், பசுக்கள் திரளாயிருக்கிற இடத்திலே ஒரு கன்றைத் தொலைவான இடத்தில் விட்டால் அந்தக்கன்று தன் தாயான பசுவையே வந்து சேரும். அது போலச் செய்த வினையும் செய்தவனையே வந்தடையும். இதனைப்,
 
பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழ வினையும் அன்ன தகைத்தே தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு"
 
என்ற நாலடியார் செய்யுள் 101 கூறும். வினை செய்தவனைத் தொடர்ந்து சென்று பயன் எய்துவிக்கும் என்ற கருத்துப் பின்வரும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.
 
 
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வியாது பின்சென்று அடும் (207).
 
வினையாகிய பகை உயிர் செல்லும் இடந்தோறும் உடன் சென்று தன் பயனைக் கொடுக்கும் என்பது கீழ்வரும் சீவக சிந்தாமணி (2876 ஆம்) செய்யுளாலும் நன்கு புலப்படும்.
 
 
அல்லித் தாளற்ற போதும் அறாதநூ லதனைப் போலத்
தொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்
றெல்லையில் துன்ப வெந்திச் சுட்டெரித்திடுங்கள் அன்றே.'
 
 
 
கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் தவம் மறைந்து அல்லவை செய்து ஒழுகுதல் - பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் பற்றிப் பேசப்படுகின்றது. அக்குறள்களுள் ஒன்று பின் வருவது: -
 
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்' (278)
என்று, நீராடும் துறவிகளின் வஞ்ச மனத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்பது இந்து, பெளத்தத் துறவிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் 'நீராடி மறைந்தொழுகு மாந்தர்' என்பது இந்து சமயத் துறவிகளையே குறிக்கும். நீரிற் பலகால் மூழ்கல் அவர்க்கே யுரியதாகையால் சமண சமயத் துறவிகளைக் குறிக்காது. இங்ஙனம் துறவிகளின் கூடாவொழுக்கத்தைச் சாடிய திறன் துாய்மையைக் கடைப்பிடித்தொழுகும் ஜைந சமயக் கோட்பாட்டுக்கு அச்சாணி போன்றமைகின்றது.
 
 
இல்லற நிலையில் உள்ளவர் எட்டு மூல குணங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவையாவன: கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, (ஐந்து அது விரதங்களாகிய கொல்லாமை. பொய்யாமை, கள்ளாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை (வெஃகாமை) என்பனவாம். மேற்கண்ட ஜைந நூல் துணிபுகள் அஃதாவது ஒழுக்கங்கள் எட்டில் தேன் உண்ணாமை தவிர்த்து மற்ற ஏழும் திருக்குறளில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன.
 
 
த்ரிகுப்தி' என்பது ஐைந சமயக் கோட்பாடுகளுள் ஒன்று. த்ரிகுப்தியாவது காயத்தின் அடக்கம்,வாக்கினடக்கம், மனோ வடக்கம் என மூன்றுமாம். அடக்கமுடைமை என்னும் 13 ஆம் அதிகாரம் இதனை நன்கு விளக்கும். 'செறிவறிந்து (123) என்பது காயத்தின் அடக்கம். "ஒன்றானும் தீச்சொல்' (142) என்பது வாக்கின் அடக்கம். கதங்காத்து (130) என்பது மனோவடக்கம். பஞ்சேந்திரிய விஷய ஜெயம் (தி. ஆ. பக் 146)என்பதும் ஜைநசமயக் கோட்பாடுகளில் சிறந்த தொன்று. இதனை உரனென்னும் என்ற 24 ஆம் குறள் கூறும்.'ஒருமையுள் ஆமைபோல்’’ என்ற 126 ஆம் குறளும், அடல்வேண்டும்’ என்ற 343 ஆம் குறளும் இதற்கு மேற்கோளாம்.
 
 
ஆதிபகவன் ஷட்கர்மத் தொழில்களைச் செய்யுமாறு பணித்தார் என்று மகாபுராணம் கூறும். அந்த ஆறு தொழில்களாவன, அஸி, (ஆயுதம் தாங்குகிற தொழில்): மஷி (எழுத் தெழுதும் தொழில்): கிருஷி (உழுதுபயிரிடுதல்); (வைத்தியம் முதலிய) வித்தை; வாணிஜ்யம் (வாணிகம்); சிற்பம் (பல தொழில்கள்) என்பனவாம். அஸியாவது அரசியல் ஆகும். மஷியாவது கல்வி: கல்விகல்லாமை ஆகிய அதிகாரங்களிற் காணலாம்; கிருஷி பற்றியதே உழவு என்ற அதிகாரம்: மருந்து முதலியன வித்தை; வாணிகம்-தனியதிகாரம் இன்றேனும்.
 
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின் (120)
- என்ற குறள் இதற்கு எடுத்துக்காட்டு. சில்பம் ஆவது ஆள்வினையுடைமை, தெரிந்து செயல் வகை,வினைசெயல் வகை முதலியவற்றான் அறியப்படும். (தி. ஆ. பக்கம் 48). சம்யத்தரிசனம் அடைந்த யதிகள் மோகம் அடைவார்கள் என்பதும், ஆன்றோர் சங்கை முதலிய 25 குற்றங்களும் நீங்கி நிச்சங்கை முதலிய எட்டு அங்கங்களை யுடையவர் என்பதும் ஜைன சமயக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இது மெய்யுணர்தல் என்ற 36 ஆவது அதிகாரத்தில் இரண்டாவது பாடல் நன்கு விளக்குவதாகக் கவிராஜ பண்டிதர் கருதுகிறார். இக்குறட் குரிய குறிப்புரையையும் காண்க) (குறள் 352).
 
 
தயா மூலதன்மம் - எவ்வுயிர்க்கும் அன்பா யிருத்தல் - ஜைனத்தின் மூலதர்மம் ஆகும். இதனை விளக்க - வற்புறுத்த எழுந்த அதிகாரங்கள் - அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, முதலியவையாம்.
 
 
கொல்லாமை யென்னும் அறம் - உயிர்கட்குச் செந்தண்மை பூண்டொழுகும் செம்மையறம் - உலகில் நிலவுதல் வேண்டும் என்று கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் வற்புறுத்தியமை திருவள்ளுவரின் ஜைநசமயக் கோட்பாட்டை வலியுறுத்தும்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

'தேவர் குறளும்' என்றதனுள் திருவள்ளுவர் தேவர் எனப்பட்டார். தேவர் என்பது சைன முனிவர்களைக் குறிக்கும் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்; சூளாமணி ஆசிரியர், தோலா மொழித்தேவர்;திருக்கலம்பக ஆசிரியர் - உதீசித்தேவர். எனவே திருக்குறள் ஆசிரியர் ஜைந முனிவராதல் தெளிவு.
 
நச்சினார்க்கினியர் திருக்குறள் ஆசிரியரைத் தேவரென்றே குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி 1891 ஆம் செய்யுள் உரையில் நன்னார், அழுதகண்ணிரும் அனைத்து என்றார் தேவரும்' என்றுள்ளது. மேலும் 1927-1928 ஆகிய செய்யுட்களின் உரையில், பகல் வெல்லும் கூகையைக் காக்கை என்றும், 'காலாழ்களரின் நரியடும்' என்றும் தேவரும் கூறினார் என்றமை காணப்படுகின்றது. இதனால் திருக்குறள் ஆசிரியரைத் தேவர்' என்றல் அந்நாள் மரபென்றும், தேவர் என்பது ஒரு ஜைந முனிவர் என்றும் கொள்ள இடம்தருகிறது.
 
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று நீலகேசி யென்பது. இதற்கு வாமன முனிவர் என்பார், ‘சமயதிவாகரம்' என்ற ஓருரை எழுதியுள்ளார். இவர் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ள இடங்களில் திருக்குறளை 'எம் ஒத்து'என்று கூறியுள்ளார்.
 
. . வெயினிலை முதலாயினவும் வநசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்ன
"உற்ற நோய், நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு' என்பது எம்மோத்தாகலின் (353)ஆம் செய்யுளுரை)
 
 
'ஒருத்தன் அவ்வாறு ரக்ஷிக்க வேண்டுமானால் எமக்குக்கை காட்டியும் நிலம் காட்டியும் வஞ்சனையாற் சொல்ல வேண்டுவதில்லை; என்னை,
 
 
'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்' (292)
என்பது எம்மோத்தாகலின், பிராணி பிடாநிவ்ருத்தி அர்த்தமாகப் பொய்யுரைத்தலும் ஆவதாதலினென்பது (326 ஆம் செய்யுளுரை).
 
 
வாமனமுனிவர் ஜைநர்; அவர் குறளைத் தம் ஒத்து வேதம் என்கிறார்; ஆகவே குறளை ஜைந நூலாகவே கொள்ளல் தகும்.
 
 
தமிழில் பிரமோத சந்திரோதயம் என்றொரு நாடக நூல் உள்ளது. இது சமஸ்கிருதத்தினின்று தழுவப்பட்ட நூலாகும். இதில் பல்வேறு சமய பாத்திரங்கள் நாடக அரங்கில் தோன்றித் தத்தம் சமயப் பெருமையைக் கூறுகின்றனர். சைனச் சார்பினன் அரங்கில் ஏறியதும், '
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செத் துண்ணாமை நன்று' (259)
என்ற குறளைக் கூறிக்கொண்டே வருகிறான். இந்நூலாசிரியர் ஜைநமதத்தவரல்லர். எனினும் இவர் திருக்குறளை ஜைந நூலாகவே கருதுகிறார் என்பது அறியப் பெறும் என்று பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். பிரபோத சந்திரோதயம் என்னும் நூல் தஞ்சை சரசுவதி மகால் வெளி யீடாக 1988 இல் அச்சிடப் பெற்றுள்ளது அந்நூல் 180 ஆவது சமணனாதியர் சருக்கம் (செ.ச) (செ. 680) பின்வருவது: -
 
 
'அவிசொரிந் தனலில் வேள்வி
ஆற்றுதும் என ஆன் உண்ணும்
புவிமிசை பசுவைக் கொன்று
புன்தொழில் இயற்றுந் தியோர்
 
 
எவரையும் இசைந்து காணில்
இருவிழி புதைத்துத் தீங்கு
நவில் மறை நுழைவு றாமல்
நாம செவி சேமம் செய்தும்.
 
--- இப்பாடலில் அவிசொரிந்தென்ற குறளின் ஒரு பகுதியிருத்தல் காணலாம்.
 
 
சென்னை-இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில், 1949 இல் பாரதீய ஞானபீடம்: தமிழ் வரிசை எண் 1 ஆக திருக்குறளுக்குக் கவிராஜபண்டிதர் உரை என்ற பெயரால் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி என்பார் ஒர் அரியவுரையை அரிதின் முயன்று அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அப்பேராசிரியர் பயன்படுத்திய ஏட்டுச் சுவடிகள் ஆறாகும். அவற்றுள் எதிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்படவில்லை. பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறித்தது போல் எல்லிஸ் அவர்கள் தம் ஆங்கிலப் பொழிப்பு-விளக்கங்களுடன் உள்ள நூலில் இரண்டிடங்களில் ஜைநச் சார்பான உரை எழுதியவர் கவிராச பண்டிதன் என்கிறார். எண் குணத் தானைப்பற்றிக் கூறுங்கால் பக்கம் 19 இல்
 
The attributes are similarly enumrated with the exception of the last in the following explanation of the couplets in the commentary on the Curals in use among the Jains attributed to Caviraja Panditer
(அழியா வியல்பு என்ற விடத்துக் கவிராச பண்டிதருரையில் சகல சம்யக்த்வம் என்று உள்ளதை நோக்கி மேற்கண்ட ஆங்கிலப் பகுதி எழுதப்பட்டது).
 
 
மேலும் 25ஆம் குறளாகிய 'ஐந்தவித்தானாற்றல்' பற்றி எழுதிய எல்லிஸ்,
 
 
The Jains however disputing the authority of mythological story give it a very different interpretation. Caviraja Pandither accordingly thus renders the couplet:) ஐம்பொறிகளையும் ஆசையின் வழியே அடக்கினவனுடைய வல்லமைக்கு'என்றமையாலும் ஜைநச் சார்பானவுரை எழுதியவர் கவிராச பண்டிதர் எனத் தெரிய வருகிறது.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Francis Whyte Ellis (பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ்) என்பவர் 1796 முதல் 1819 வரை சென்னையில் ஆங்கில அரசாங்கத்தில் வருவாய்த்துறையில் உயர் பதவியில் இருந்தவர். இவர் காலத்தில் ஜைநச் சார்பான உரையியற்றியவராகக் கவிராச பண்டிதர் கருதப்பெற்றார். இந்நாட்டில் வாழ்ந்த பிற அறிஞர்கட்கு எக் காரணத்தாலோ இந்த ஜைநச் சார்பான உரை தெரியாம லிருந்தது எப்படியோ இது 1949இல் அச்சேறலாயிற்று. ஜைநச் சார்பான உரையாகிய கவிராஜ பண்டிதருரை அச்சிடுவதற்குப் பயன்பட்ட ஒலைச்சுவடிகள் ஆறு என்று அவ்வச்சு நூல் முகவுரையில் சொல்லப்பட்டுள்ளது. அவையாவன:
 
 
1. மேலச் சித்தாமூர் மடத்துச் சுவடி மேலச் சித்தாமூரில் ஜிந காஞ்சிமடம் என்று ஒரு சிறந்த ஜைநத் திருமடம் உள்ளது. அந்த மடத்துத் தலைவர் அவர்களுக்குக் கவிராஜ பண்டிதர் உரை கொண்ட ஏட்டுச் சுவடியிருக்கிறதா என்றெழுதினேன். பதில் இல்லை.
 
 
2. பெருமண்டூர்ச் சுவடி : கவிராஜ பண்டிதர் பிறந்தவூராகக் கருதப்படுவது, பெருமண்டூர். இவ்வேட்டுச் சுவடிபற்றிக் கேட்ட பொழுது அவ்வூரிலிருந்த சுவடிகள் திருடு போய் விட்டன என்று கூறப்பட்டது.
 
 
3. வீடுரிலிருந்து: இரண்டு சுவடிகள் தமக்குப் பயன்பட்டன என்று பேரா. அ. சக்ரவர்த்தி அவர்கள் தம் முன்னுரையில் குறித்துள்ளார். அச்சுவடிகள் புராணசந்திர நயினாருடையவை. அவற்றுள் ஒரு சுவடி திருநறுங்குன்றத்திலிருந்த ஏட்டுச்சுவடி யைக் கண்டு செப்பனிடப்பட்டது என்றும் தெரிய வருகிறது. அச்சுவடிகளைப்பற்றித் தக்கவர்கட்கு எழுதியபொழுது அச்சுவடி இல்லை யென்று பதில் வந்தது.
 
 
4. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்துச்சுவடி. இது செப்பமான சுவடி. இது ருத்கோத்காரி வருஷம் அற்பிச மாதம் 10 ஆம் தேதி குருவார நாள் வீராசாமி என்பவரால் எழுதப்பட்டது என்ற குறிப்புடையது. இதில்70 அதிகாரங்கட்கு மட்டும் உரையுண்டு. எஞ்சிய பகுதி குறள் மூலம் மட்டும் உள்ளது. இது திருக்குறள்வகுத்துரை என்று சுவடிக்கட்டையின்மேல் மையால் எழுதப் பட்டுள்ளது.
 
 
5. திரு T.S. ஸ்ரீபால் நயினார் அவர்கள் செஞ்சியினின்று கொணர்ந்த குறைச்சுவடி இதில் 'ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்கறள்' என்று எழுதப்பட்டுள்ளதாகப் பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திரு T.S. ஸ்ரீபால் அவர்களுடைய நூல்கள் திருப்பணமூரில் சேகரித்து அண்மையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தொகுப்பில் ஜைநச் சார்பான வுரையுடைய திருக்குறள் ஏட்டுச்சுவடி இல்லை என்று தெரிய வருகிறது.
 
 
1949 இல் சிறந்தமுறையில் அச்சிடப்பெற்ற நூலில் (கவிராஜ பண்டித ருரை) அதன் பதிப்பாசிரியர் ஆகிய பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் சிறந்ததொரு முன்னுரை வரைந்துள்ளார்கள். திருவள்ளுவமாலையில் கண்ட பாடல்களுள் நக்கீரருடையதாகக் கருதப்படும் தானே முழுதுணர்ந்து’’ (செ7) மாமூலனாருடையதாகிய 'அறம் பொருள் (செ. 8), கல்லாட ருடைய ஒன்றே பொருள் (செ.9,) நல்கூர் வேள்வியார் பாடிய * உப்பக்கம் நோக்கி" (செ. 21) என்ற நான்கு பாடங்களை ஆய்வு செய்து திருக்குறளாசிரியருடைய ஜைனச் சார்பு பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்'
 
 
"தானே முழுதுணர்ந்து தண்டமிழிற் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழி னுரைத்தார்க்கும் ஒண்ணிர் முகிலுக்கும்
வாழி யுலகென்னாற்று மற்று' என்பது நக்கீரர் பாடல்.
 
 
இப்பாடலினின்று திருக்குறளாசிரியர் 'முழுதுணர்ந்தவர்' அதாவது எல்லாப் பொருள்களைப் பற்றியும் முழுதும் உணர்ந்த ஞானி என்று அறியப்பெறும். இவர் தமிழில் இந்நூல் செய்துள்ளார் என்பதும் குறிக்கொண்டு நோக்கத்தக்கது. மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் தமிழில் பாடினார்' என்று கூறியிருப்பதால், இந் நூலாசிரியர் அந்நான்கு பற்றியும் தம்முடைய கருத்துக்களைப் பிறமொழியிலும் கூறியுள்ளார் என்றும் அவற்றை அப்பிறமொழியில் கற்றுனரமாட்டாதவர்க்குத் தமிழில் எழுதினார் என்றும் கொள்ளக் கிடக்கிறது. இங்ஙனம் கொள்ளாக்கால் "தண்டமிழில்' உரைத்தார்- ஏனோர்க்கு உரைத்தார் என்று கூறுவது செறிவுடைய கருத்தாகாது. எனவே குறளாசிரியர் அறமுதலா அந்நான்கு பொருள்கள் பற்றித் தமிழல்லாத பிறமொழியிலும் எழுதினார் ஆதல் வேண்டும். எனவே ஜைநருடைய கொள்கைக்கு ஏற்பக்குறள் ஏலாசாரியரால் தமிழில் எழுதப்பட்டிருத்தல் கூடும் என்றும், அவ்வேலாசாரியராகிய ஸ்ரீ குந்த குந்தர் பிராகிருதத்தில் 'ப்ரப்ருத்ரயம்' எனப்படும் பஞ்சாஸ்திகாயம், ப்ரவசனஸாரம், ஸமயலாரம் என்றும் மூன்று நூல்கள் எழுதினார் என்பதும் கொள்ளப்படும். 'தானே முழுதுணர்ந்து' என்று கூறியமைக்கு ஏற்ப ஸ்ரீ குந்த குந்தரும் 'கலிகாலசர்வக்ஞர்'எனப்பெற்றார் என்பது அறியப்பெறும்.
 
 
 உப்பக்கம் நோக்கி உபகேசி தோன்மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானு பங்சி மனுவில் புலச் செந்நாய்
போதார் புனற்கூடற் கச்சு!
 
என்பது நல்கூர் வேள்வியார் பாடிய பாடலாகும்.
 
 
உபகேசியின் தோள் மனந்தவன் உத்தர மதுரையில் சிறந்தோன் ஆயினான். அங்ஙனமே இப்பக்கம் மாதாநுபங்கி எனப்படுகிற குற்றமற்ற அறிவுடைய செந்நாப்போதார் தென் மதுரைக்கு அச்சாணியாவார் என்பது இப்பாடலின் பொருள்.
 
 
'மாதாநுபங்கி என்ற தொடருக்குப் பேரா. அ. சக்கரவர்த்தி சிறந்த ஆய்வுரை தருகிறார். இத்தொடர் மாதா, அநு,பங்கி என்ற மூன்று சொற்களால் ஆயது. இதில் அது என்பது சைன சமயக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படும். ஒரு முன் ஒட்டு. ஜைநாகமங்கள் நான்கு அவை பிரதாமாநுயோகம், கரணாநு யோகம், சரணாநுயோகம்,திரவ்யாநுயோகம் என்பனவாம். அதுயோகம் என்பதில் அது என்ற முன் ஒட்டு ஜைநசம்பிரதாயத்துக்கு ஏற்ப உள்ளது. ஜைநசமயத்துக்கொள்கை அத்தி நாத்தி, சப்தபங்கி, அல்லது பங்கி என்ற பெயர்களால் குறிக்கப்படும். எனவே அநுபங்கி என்பது மேற்கூறிய அத்திநாத்தி அல்லது சப்தபங்கியைக் குறிக்கும். அங்ஙனம் ஆயின் மாதாநுபங்கி என்பது அநுபங்கி அல்லது சப்தபங்கிக்கு உரியவர் எனப்பொருள்படும். மாதாநுபங்கி என்பது எதுகை நோக்கி மாதாநுபங்கி என முதல் நீண்டதாகக் கொள்ளலாம். மேலும் வாதாதுபங்கி என்பதே ஏடெழுதுவோரால்  மாதாநுபங்கி என்று (வகாரத்துக்கு மகரம்) எழுதப்பட்டதாதலும் கூடும். அங்ஙனமாயின் குறள் ஆசிரியர் அநுபங்கி வாதத்தைச் சார்ந்தவர் என்று பொருள்படும். எனவே மாதாநுபங்கி என்பது வாதாநுபங்கி என்பதால் கூடும் என்றும், சப்தபங்கி அல்லது அத்தி நாத்தி வாதத்தைக் குறிக்கும் என்றும்,செந்நாப்போதார் சப்தபங்கி வாதத்துக்கு உரியவர் என்றும், இதனானே திருக்குறள் ஆசிரியர் ஜைந சமயத்தவர் ஆதல் கூடும் எனவும் அறியப்பெறும்.
 
 
கவிராஜ பண்டிதருரையுடன் கூடிய திருக்குறள் நன்கு அறிமுகப்படுத்தப் பெறவில்ல. 1949 இல் இது முதன் முதலில் அச்சிடப் பெற்றது; ஆகலின் தருமபுர ஆதீனத்தில் வெளியிடப் பெற்ற திருக்குறள் உரைவளத்தில் இடம் பெறவில்லை. திருக்குறள் உரைவளம் தயாரித்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தின் வாயிலாக வெளியிட்டுவரும் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் இவ்வுரை இடம் பெற்றுள்ளது.
 
 
 கவிராஜ பண்டிதருரை வெளியிட்ட பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் M. A ,I.E S ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துச் சிறந்த விளக்கவுரைகளுடன் 1953 இல் அச்சிட்டு வெளியிட்டார், இம்மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் திருக்குறளின் ஜைநச் சார்பைத் திறம்பட விளக்குவனவாய் மிளிர்கின்றன. இப் பேராசிரியர் அரிதில் விளக்கவுரைகளுடன் வெளியிட்ட கவிராஜ பண்டிதருரையும், இவரால் எழுதி வெளியிடப்பட்ட திருக்குறள் மொழி பெயர்ப்பும் இந்நாளில் கிடைத்தற்கரிதாயுள்ளன.
 
 
மேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு சிறந்த முகவுரை உண்டு, 'அம்முகவுரை சைன சமயத்தைக் குறித்தும். இந்து சமயத்தைக் குறித்தும், உலகத்தத்துவங்களைக் குறித்தும், தமிழ் வடமொழி இலக்கியங்களைக் குறித்தும் மிகுதிப்பட்ட அரிய கருத்துக்களைக் கூறுவதாக உள்ளது' அம்முகவுரையைத் "திருக்குறள் வழங்கும் செய்தி' என்ற தலைப்பில் 1959 இல் பகவதி ஜெயராமன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி யுள்ளார்கள். (இந்நூலும் இந்நாளில் கிடைத்தற்கரிதாயிற்று)
 
 
மேற்கண்ட நூல்கள் வெளிப்படுவதற்கு முன்னரே திருக்குறள் ஜைநச் சார்பான நூல் என்ற கருத்தைப் பல மேற்கோள்களுடன் எழுதி அச்சிட்டு வெளியிட்டவர் காஞ்சிபுரம் தி. அ அனந்தநாத நயினார் அவர்கள் ஆவர். இவர் 1932 இல் திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும் (முதற் பாகம்) என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இந்நூற்குத் தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களின் அரிய முன்னுரையும் உண்டு. இந்நூல், திருக்குறள் ஆசிரியர், ஜைந சமயத்தவரே என்ற கொள்கையை வலியுறுத்துவது; அதற்கு ஏற்பப் பலமேற்கோள்கள் கொண்டு விளங்குவது. இதனானே இந்நூற்குத் தகவுரை எழுதிய ஆர்முகஞ் சேர்வை அவர்கள் இந்நூலாசிரியரை மேற்கோண்மாரி பெரும்புயல்' என்று போற்றினார். இவர் திருக்குறள் கடவுள் வாழ்த்துக்குறள்கட்குத் தந்துள்ள விளக்கவுரைகளும், பிறவும் படித்துப் பயன் பெறுவதற்குரியனவாம்" இவர் இந்நூலை யெழுதுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிக்கு எல்லையில்லை எனலாம். இம்முயற்சி போற்றுதற்குரியது. இவர் ஜைநச் சார்பாகவே எழுதியுள்ள உரைப்பகுதி மட்டும் தொகுத்துப் பிற்சேர்க்கை 1 இல் கொடுத்துள்ளேன். ஆண்டுக் காண்க.
 
 
இவர் திருக்குறளுக்கு ஜைநச் சார்பாகவே, பரிமேலழகர் உரை யெழுதியது போன்று. உரையெழுதி அச்சிட்டிருந்தால் அது பொன்மலர் நாற்றமுடையது போலச் சிறக்கும் தமிழுக்கும். திருக்குறளுக்கும்,ஜைநத்துக்கும் செய்த பெருந்தொண்டாகவும் அமைந்திருக்கும்.
 
 
'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமேலழகர் - திருமலையர்
மல்லன் பரிப்பெருமான் காலிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்'
 
 
என்ற வெண்பாவால் திருக்குறட்குப் பதின்மர் உரை செய்தனர் என்பது போதரும். இவற்றுள் தருமர் என்பாருடைய உரை ஜைனச் சார்புடையது என்று பேரா. அ. சக்கரவர்த்தி கருதுகிறார். தம்மிடம் சிலர் தருமருரை என்ற பெயரில் சில ஏடுகளைத் தந்ததாகவும் அவை ஜைனச் சார்புடையன அல்ல எனவும் அவர் கூறுகிறார். தருமர் யார் என்று ஈண்டு உரைப்பது பொருத்தமாகும். தென்னார்க்காடு மாவட்டத்துச் சிற்றுார்களில் ஒன்று திருவாரூர். இவ்வூரில் வேளாண்குடியில் புகழனார், மாதினியார் எனும் இருவருக்கும் மருணீக்கியார் என்றொருவர் தோன்றினார்; இளமையிலேயே பெற்றோர்களை இழந்த இவர்,
 
 
காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.'
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - செ 36.)
 
 
மேலும் இவர் வாழ்க்கை நிலையாமையை நன்குணர்ந்தார்: சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு தெரிந்துணர விழைந்தார்: ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின் சாரப் பொய்யாமை நன்று' (323) என்ற குறள் நெறியை அறிந்தார்; கொல் லாமையைக் கடைப் பிடித்து ஒழுகும் சமண சங்கத்தார் வாழ்ந்த பாடலிக்குச் (திருப்பாதிரிப் புலியூர்க்கு) சென்றார். சைன சமய நூல்களைக் கற்றார். தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்றார்; அவர்களுள் மேலோராகித் தருமசேனர் என்று சிறந்து விளங்கினார். இவர் பாடலியில் வாழ்ந்த நாட்களில் திருக்குறட்க்கு உரையியற்றியிருத்தல் கூடும். அவ்வுரையே தருமருரையெனப் பெற்றது. இவ்வூகம் சரியானதெனில், அவ்வுரை கிடைக்குமெனில் - அதுவே ஜைன சமயச் சார்பான உரையாதல் உறுதி. அவ்வுரை கிடைக்காமை தமிழர் செய்த போகூழேயாகும், தவக் குறை யென்னலுமாம்.
 
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

திருவள்ளுவர் என்று ஒருவர் வாழ்ந்தாகவோ அவர் திருக்குறளை இயற்றியதாகவோ நான் கருதவில்லை ஒரு தொகைநூலாகவே (compendium, anthology) திருக்குறளை நான் காண்கிறேன், பல வடமொழி நூல்களின் சாரம் அவற்றில் உள்ளது இதை பன்மொழி அறிஞர் வையாபுரி பிள்ளை தெளிவாகவே எடுத்து கூறியிருக்கிறார். நான் நினைப்பது என்னவென்றால் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த வெண்பாக்கள் 5 ஆம் நூற்றாண்டில் களப்பரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கம் எடுப்பித்த வஜ்ரநந்தி தலைமையில் இருந்த சமணர்களால் தொகுக்கப்பட்டு அவர்களாலேயே கடவுள் வாழ்த்தும் இயற்றப்பட்டிருக்கலாம் அதனாலேயே அதை சமண நூல் என்று சில அரைவேக்காடுகள் கூவும்.

இதை உறுதி செய்யும் விதமாக பொயு 600 முதல் மதுரையில் ஒரு நிரந்தரமான சமண சங்கம் செயல்பட்டதாக பெர்க்லி பல்கலைக்கழக தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அறுதியிட்டு கூறுகிறார். திருக்குறள் போலவே இருக்கும் 400 பாடல்களை கொண்ட நாலடியார் கூட இந்த சங்கத்தை சேர்ந்தவர்களால் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அதுவும் ஒரு தொகைநூல் தான்..

புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை போன்ற சில அதிகாரங்கள் தவிர இதை சமண நூல் என்று சொல்ல ஒரு சான்றும் இல்லை அது கூட சுயகட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு வைணவன் எழுதியிருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, வேளாண்மையின் சிறப்பு போன்றவை ஒரு சமணன் எழுதியது போல தெரியவில்லை. சமணர்களுக்கு அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்களுக்கு வேளாண்மை மறுக்கப்பட்ட செயல் சரி அதை பிறகு பார்ப்போம் இப்போது இந்த குறள்களை பார்ப்போம்.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்" - குறள் 133

மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
கலைஞர் உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

கலைஞர்,சாலமன் பாப்பையா போன்றோர் உரைகளை சிறிது திரித்தே எழுதி இருக்கிறார்கள் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் உரைகள் படிப்பவர்களுக்கு சிறிது கடினமாக இருக்கலாம் அதனால் இதையே அளிக்கிறேன். திரித்து எழுதியவர்களால் கூட இழி பிறப்பையும் இழிவான குடியையும் மறுக்க முடியவில்லை.

இடுகாட்டில் ஈமக்கிரியைகளை செய்யும் ஊழியனை இழி பிறப்பினன் என்கிறது புறநானூறு அது அவன் பிணத்தை எரிக்கும் இழிவான தொழிலை செய்வதனால் இருக்கலாம் எப்படியாகிலும் பிறப்பினால் அமையும் உயர்வு தாழ்வு சங்ககாலம் தொட்டே தமிழரிடம் இருக்கிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்கிற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பாடலும் இதை உறுதி செய்கிறது, சரி இப்படி ஒழுக்கம் குன்றினால் என்ன ஆகும் அடுத்த குறள் இது.

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" - குறள் 134

மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

என்ன ஆகும் பார்ப்பானின் குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். அதாவது வேதத்தை மறந்தால் கூட திரும்ப கற்றுக்கொள்ளலாம் அது குடிப்பிறப்பை அழிக்காது வேதம் தெரியாத, சாஸ்திரங்களை மறந்த பார்ப்பானும் பார்ப்பானே ஆனால் அவன் அடிப்படை மானுட அறம் என்னும் பிறப்பினால் உண்டாகும் ஒழுக்கத்தை காக்க தவறினால் பார்ப்பனன் என்னும் குடியின் சிறப்பை கெடுத்தவன் ஆகிறான்.

பார்ப்பானை எடுத்துக்காட்டி குடிசிறப்பை கூறும் இவரை தான் நாஞ்சில் நாட்டு வள்ளுவர் என்கிறார்கள், புலால் மறுத்த தவநோன்பை மேற்கொண்ட சமணன் என்கிறார்கள். கலைஞரும் அன்றைய திராவிடர் கழகத்தவரும் எதற்கு திருக்குறளை பிடித்துக் கொண்டு தொங்கினார்கள் என்பது தான் எனக்கு இன்றும் புரியாத புதிர். ஒரு 50 குறளை குறிப்பிட்டு எடுத்து வைத்திருக்கிறேன் அவ்வப்போது இனி பதிவிடுகிறேன் தெளிவான குறிப்புகளுடன்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard