ஆரிய-திராவிட வாதத்துக்கு மேலும் இரண்டு அடி!!
கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1254; தேதி:— 27-8-2014
புனித திசையான வடக்கு நோக்கி உண்ணவிரதம் இருக்கும் ‘’பிராயோபவேசம்’’ என்னும் வழக்கமும், ஆண் குழந்தை பெற்று திதி முதலிய நீர்க்கடன் பெற்று சொர்க்கம் போகும் வழக்கமும் 2000 ஆண்டுப் பழமையான புறநானூற்றில் இருப்பதை விளக்கும் இக்கட்டுரை ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு இரண்டு செமை அடி கொடுக்கிறது.
சங்க இலக்கியத்தை வரி வரியாகப் படித்தால் ஆரிய திராவிடக் கொள்கை, ஒரு உளுத்துப்போன, கறையான் அரித்த கட்டை என்பது விளங்கும். இதை சரியாகப் படிக்கததால் திராவிடங்களும் ஐராவதங்களும் வேதாசலங்களும் கக்கிய விஷப் புகை தமிழ் தெய்வத்தை மூடி மறைத்துள்ளன என்ற உண்மை பட்டெனப் பளிச்சிடும். பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் என்பதை கோப்பெரும் சோழனும் முது குடுமிப் பெருவழுதியும் சொன்ன பின்னர் இனி எதிர்ப்புக் குரல் கொடுப்பார் யாருளர்? இதற்குப் பின்னரும் அப்படி எதிர்ப்புக்குரல் கொடுத்தால், அவர்களை அம்மா, அப்பாவையே சந்தேகித்து டி.என்.ஏ. டெஸ்டுக்குப் போகும் அனாமதேய வகையறாவில் நாம் சேர்ப்போமாக!!!
ஆண்டவன் அவர்களை ரக்ஷிக்கட்டும்!!!
எல்லோருக்கும் எச்சரிக்கை !
முதுகுடுமியே! நீ போர் செய்யும் போது எச்சரிக்கை விடுத்துப் பின்னர் அறப் போர் (தர்ம யுத்தம்) செய்வாய்! பசுமாடுகள், பசுமாடு போன்ற சாந்த குணம் உடைய பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் முதலிய நீர்க்கடன் செய்ய இன்னும் தங்கம் போன்ற ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பன இடங்களுக்குச் செல்லுங்கள் என்று அறிவித்துவிட்டுப் போர் செய்கிறாயே! —–
என நெட்டிமையார் என்னும் புலவர் பாண்டிய நாடு முழுதும் யாக யக்ஞங்களைச் செய்து கொண்டாட்டக் கம்பங்களை ( யூப நெடுந்தூண்) நட்டுவைத்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டுவார். அந்த மன்னன் பஃறுளி ஆற்று மணல் துகள்களை விட நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறார்.
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறா அ தீரும்
எம் அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின்’ என,
………………………………………….
நெட்டிமையார் பாடல், புறம்.9, பாடப்பட்டோன்:- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பொத்தியார் வருத்தம்!
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா’ என
என் இவண் ஒழித்த அன்பிலாள !
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று, இசைவெய்யோயே?
பாடியவர்:– பொத்தியார்
பாடப்பட்டோன்:– கோப்பெருஞ்சோழன் (புறம்.222)
பொத்தியார் சொல்கிறார்: சோழனே! உனக்குக் கொஞ்சம் கூட அன்பே இல்லையே! என்னைச் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலில் உட்காரக்கூடாது. பிள்ளை பிறந்த பின் வா என்று அன்று அனுப்பி வைத்தாயே! புகழ்மிக்க பெருந்தகையே! எனக்கு ஒதுக்கிய இடம் எங்கே?
இந்தப் பாடலைப் பொத்தியார் பாடுவதற்குள் சோழ மன்னன் இறந்துவிட்டான். பொத்தியார் ((மனைவி)) குழந்தை பெற்ற பின்னர் அவர் தாமதமாக வந்ததே இதற்குக் காரணம்!
வடக்கிருத்தல்: இந்துக்கள் வட திசையை புனித திசை என்று போற்றுவர். காரணம்? இமயமலையும், அதில் சிவனுறை கயிலாயமும், புனித கங்கையும் இருக்கும் திசை வடதிசை. இதனால்தான் செங்குட்டுவனும் அவனுடைய அம்மாவுக்காக கல் எடுக்க ஒரு முறையும் கண்ணகிக்காக கல் எடுத்துக் கங்கையில் அக்கல்லைக் குளிப்பாட்ட ஒருமுறையும் ஆக மொத்தம் இரண்டு முறை இமய மலைக்குச் சென்றான்.
பாண்டவர்கள் ஒரு நாயை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக இறந்து விழுந்த கதை மஹாபாரதத்தின் 18ஆவது பர்வத்தில் உள்ளது. பரீக்ஷித் மன்னன் பாகவத புராணம் கேட்டுக்கொண்டே உண்ணவிரதம் இருந்தது பாகவத புராணத்தில் இருக்கிறது. இந்த பிராயோபவேசம் என்னும் வழக்கத்தை ராமாயண, மஹாபாரத இதிஹாசங்கள் குறிக்கின்றன. சமணர்களும் இப்படிச் செய்வர். குமரி முதல்—இமயம் வரை உள்ள இவ்வழக்கத்தைப் புற நானூறும் குறிப்பது ஆரிய—திராவிடக் கொள்கையை வெடிவைத்துத் தகர்க்கும்.
ஆண்குழந்தைகள் பெற்றால் அவர்கள் கொடுக்கும் நீர்க்கடனானது, இறந்து போனவர்களைக் கரை ஏற்றும் என்னும் கொள்கையும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததை புறநானூறு உள்ளங்கை நெல்லிக் கனி என விளக்கும். இன்றும்கூட எல்லா ஜாதி மக்களும் ஆண்கள் மூலமே இறுதிக் கடன்களை முடிப்பது வெள்ளீடை மலை என விளங்கும். இந்துமத சட்டப் புத்தகங்களான ஸ்மிருதிக்களும், இறுதிச் சடங்கு பற்றிப் பேசும் எல்லா பகுதிகளிலும் ஆண் மகன்கள் பற்றியே பேசுகின்றன.
தசரதன் இறந்தவுடன், பரதனை ஆப்கனிஸ்தான் — ஈரான் நாட்டு எல்லையில் இருந்த கேகய நாட்டில் இருந்து பயங்கரமான வேகத்தில் செல்லும் குதிரை பூட்டிய ரதத்தில் உத்தரப் பிரதேசத்துக்கு அழைத்து வந்ததை வால்மீகி ராமயாணம் ‘’ரூட் மேப்’’ போட்டு விளக்குகிறது.
(( கேகயம்= கைகேயி, காண்டஹார்=காந்தாரம்=காந்தாரி. இப்பொழுதும் ஆப்கனிஸ்தானில் உள்ள காண்டஹார் நகரில் குண்டு வெடித்து பலர் சாவதை வாரம்தோறும் பத்திரிக்கையில் படிக்கிறோம். மஹாபாரத காந்தாரி, ராமாயண கைகேயி எல்லோரும் தொலைதூரத்தில் இருந்து வந்ததற்குக் காரணம் பாரதம்— அகண்ட பாரதம் ஆகக் காட்சியளித்த காலம் அது!!! ))
கோப்பெருஞ்சோழனுக்குப் புதல்வர்களுடன் கொஞ்சம் மனஸ்தாபம். உடனே உண்ணவிரத்தில் இறங்கிவிட்டார். வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தவர்கள், இனி வாழ வேண்டாம் என்று தீயில் குதிப்பர் அல்லது ஆற்றில் குதிப்பர் அல்லது உண்ணாவிரதம் இருப்பர். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று பல்லோராலும் போற்றப்பட்ட பிராமண கபிலன் தீயில் புகுந்ததையும், சபரி என்னும் வேடுவச்சி தீயில் புகுந்ததையும், குமாரில பட்டர் என்னும் மாபெரும் அறிஞன் உமியில் தீயேற்றி அணு அணுவாக உடலைக் கருக்கியதையும் என்னுடைய மற்ற 1200 கட்டுரைகளில் காண்க.
இராம பிரான் சரயூ நதியில் ஜல சமாதியில் இறந்த அன்று அவருடன் ஆயிரக் கணக்காணோர் நதியில் குதித்தனர். காரணம் பெரியோர்கள் இறக்கும் போது நாமும் இறந்தால் அவர்களுடன் நேரடியாக சொர்க்கத்துக்கு டிக்கெட் இல்லாமல் போகலாம். இதன் காரணமாக பொத்தியார், பிசிராந்தையார் என்று ஏரளமான புலவர்கள் போட்டி போட்டுக் கொண்டு — கோப்பெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த —– பந்தலுக்கு ஓடோடி வந்தனர்.
மறுமைப் பயன் எய்த ஆண் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்றூ அகநானூற்றில் இரண்டு பெண்கள் கூடப் பேசிக்கொள்வர்!
இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி
மறுமைப் பயனும் மறுவின் றெய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்ந்தனம் தோழி – அகம் 66
((கௌசிக கோத்ரத்து)) கோசிகன் செல்லூர் கண்ணனார்))
வள்ளுவரும் சொல்லுவார்!!
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – திருக்குறள் 43
இறந்துபோய் தென் திசையில் உறையும் முன்னோர், தெய்வம், புதிதாக வந்த விருந்தினர், சுற்றத்தார், தான் (தனக்கு) என்ற ஐந்து பேரையும் ஆதரிப்பது கிரஹஸ்தனின் / இல்லறத்தானின் கடமை.
இதற்கு உரை எழுதிய ‘’பரி மேல் அழகர்’’ (குதிரை வாஹன அழகன்) கூறுவதாவது: பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்றிசையாகலின் தென்புலத்தாரென்றார்.
மக்கட்பேறு என்னும் அதிகாரத்துக்கு உரை எழுதிய பரிமேலழகர், அந்த அதிகாரத்துக்குப் ‘’புதல்வரைப் பெறுதல்’’ என்று பெயர் சூட்டி, தென்புலத்தார் கடன் — புதல்வரைப் பெறுதலால் தீரும் என்று விளக்கம் தந்துள்ளார்.
சங்க இலக்கியத்தைப் படியுங்கள்! வரிக்கு வரி இந்து மதம் கொப்புளித்துப் பொங்கித் ததும்பும். தமிழர் பண்பாடு என்று எதுவுமே இல்லை, ஒரே பாரதப் பண்பாடுதான் என்ற உண்மை புலப்படும். இனியும் முழுப் பூசணீக்காயையும் சோற்றில் மறைக்க முயலும் முட்டாள்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கலாம், எள்ளி நகையாடலாம்!!
–சுபம்–