கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்தி ராமஜன்ம பூமி வரலாறு குறித்தும், இந்துத்துவ இயக்கங்கள் குறித்தும் காத்திரமான நூல்களை எழுதியிருக்கிறார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த கீழைத்தேச ஆய்வாளர்கள் (Orientalists)இந்தியாவிற்கு வெளியில்தான் பௌத்தத்தை முதலில் கண்டறிந்தனர். அதனால், பௌத்தம் புழக்கத்தில் உள்ளதற்கான அடையாளமே இல்லாதிருந்த இந்தியாவுடன் அதற்கு எந்த வெளிப்படையான தொடர்பும் இல்லை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்று அவர்கள் கருதினர். ஆரம்பத்தில்,புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையில் பௌத்தம் பல நூற்றாண்டுகள் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு வெளியே வளர்ந்து வந்தது உண்மை. எனவே, இந்துமதத்துடன் அதற்கு உள்ள உறவு எடுத்துச் சொல்லப்படும் வரை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்ற கருத்து அவர்களிடையே நிலவியது புரிந்துகொள்ளக் கூடியதே.