இக்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.
என் அன்பிற்குரிய சகோதரி ஹேமா சௌந்தரராஜன்அவர்கள் நெல்லை வானொலி நிலையத்தில் பணிபுரிபவர். அவர் அந்நிலையத்தில் ‘தமிழமுது’ நிகழ்ச்சிக்காக நான் பேச வேண்டுமென கேட்டார். அதையே காரணமாகக் கொண்டு இக்கட்டுரையை எழுதினேன். நெல்லை வானொலியில் இது 12-08-09 முதல் 7 நாட்களுக்கு ஒலிபரப்பாகிறது.
அப்பரடிகள் தேவாரத்தையும் திருக்குறளையும் ஒப்பிடுவதற்கு இது ஒரு முன்னோட்டம்தான். இன்னும் விரிவாக இப்பொருளில் எழுத இயலும். ஆயினும் ‘வேலை நித்திரை யாத்திரை’ யிலேயே போது போவதால் இப்போதைக்கு இது மட்டுமே என்னால் இயலுவதாயிற்று. இக்கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பிய என் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியது.இனி கட்டுரை......
அப்பரடிகள், தமிழகம் சமண்சமய இருள்மூடித் தடுமாறியபோது அவ்விருள் நீக்கும் ஞானசூரியனாய் அவதரித்தவர். இதனைச் சேக்கிழாரடிகள்,
அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
மலரும்மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்
உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
மலரும்மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்
எனப் போற்றுகின்றார்.
சமயாசாரியர் மற்றவரின் வாழ்வினை நோக்கும்போது அப்பரடிகளின் வாழ்க்கை கடும் சோதனைகளே நிறைந்த வாழ்க்கையாக இருந்ததை நாம் காண்கின்றோம்.
இளமையில் ஒருவருக்கு நேரக் கூடாத துன்பங்கள் யாவும் அப்பரடிகளுக்கு நேர்ந்தன. அத்துன்பங்களே அவர் மனத்தை ‘சுடச் சுடச் ஒளிரும் பொன் போன்று’ தூய்மையும் துணிவும் நிறைந்ததாக்கின.
‘மறுஒழித்த இளம்பிறைபோல்’ வளர்கின்ற மருள்நீக்கியார் கல்வி பயிலத் தொடங்குகின்றார். எப்படி? ‘புலன்கொளுவ மனம்முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத்’ தொடங்கினார் என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.
அஃதாவது, இதழ்கள் மூடிக்கிடக்கும் மலர் அவ்விதழ்கள் பிரிந்து மலர்வது போல ஆண்டஅரசும், புலன்கள் வழியாகப் பெறுகின்ற அறிவினால் மனம் மலர்வதாகிய-விரிவதாகிய கல்வியைப் பயிலத் தொடங்குகின்றார்.
ஆளுடைய அரசின் தகப்பனார் புகழனார் இவ்வுலகை விட்டு நீங்குகின்றார். அவரைப் பிரிந்த துயரத்தினாலே மனைவியார் மாதினியாரும் இவ்வுலகைத் துறக்கின்றார். அப்பரடிகளின் ஒரே தமக்கையான திலகவதியாருக்கு குணம்பேசிக் குலம்பேசி மணமுடிப்பதற்கு நிச்சயம் செய்துவைத்த கலிப்பகையாரும் போரிலே உயிர்துறந்த செய்தி வருகின்றது.
அடுத்தடுத்துப் பேரிடிகள் வருமாயின் யாரால்தான் தாங்க இயலும்? திலகவதியாரும் மருள்நீக்கியாரும் பெருந்துயரில் அழுந்துகின்றனர். திலகவதியார் தம்முயிர் நீப்பதற்குத் துணிகின்றார். இச்செயலறிந்து மருள்நீக்கியார் தமக்கை காலில் விழுந்து
“அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும்நான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னைஇனித் தனிக்கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம்உயிர் நீப்பன்” என மொழிந்தார்.
பின்னையும்நான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னைஇனித் தனிக்கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம்உயிர் நீப்பன்” என மொழிந்தார்.
‘தம்பியார் உளராக வேண்டும்’ என வைத்த கருணையினால் திகலவதியார் ‘அம்பொன் மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி’ தவம்புரிந்து திருவதிகையில் வாழ்ந்து வந்தார்.
நிலையாமையைத் தம்வாழ்வின் ஆரம்பத்திலேயே கண்டுணர்ந்த அப்பரடிகள் ‘காசினிமேல் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும் தண்ணீர்ப்பந்தரும்’அமைக்கின்றார்.
சோலைகள் வளர்க்கின்றார், குளங்கள் உண்டாக்குகின்றார். தமது கடமையே வேண்டியவர்க்கு வேண்டியவை அளித்தல் தாம் என்பது போல இவர் அவர் என்று பாராது ஈகை புரிகின்றார். இதனை ‘யாவர்க்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்’ என்கிறது பெரியபுராணம்.
கல்வியிலே தலைநின்ற அப்பரடிகள் இந்த உலகத்தின் நிலையாமையைக் கண்டு நிலைத்த வாழ்வுதனைத் தேடி ஆராய்கின்றார். இவ்வுலகத்தினரின் இன்பதுன்பங்களை நடுநின்று நோக்கி சிந்தை செய்கின்றார்.
அவர் வாழ்ந்த காலத்தில் துறவின் மேன்மையை மட்டுமே வலியுறுத்திய சமணசமயம் நம் தமிழகத்தில் செல்வாக்குடைய சமயமாகத் திகழ்ந்தது.
ஏற்கனவே நிலையாமையை அனுபவித்து மேலும் அதன் தன்மையை ஆராய்ந்த அப்பரடிகளுக்குச் சமணத்தின் கொள்கைகள் பிடித்துப்போயிற்று. மருள்நீக்கியார் சமணத்தில் சேர்ந்தார்.
சமணசமயத்தின் சாத்திரங்களை எல்லாம் பயின்றார். அச்சமய ஒழுக்கத்தில் தலைநின்றார். சமணசமயத்தவர்க்குத் தலைவரானார். ‘தருமசேனர்’ எனும் பட்டத்தை அவர்க்கு அச்சமயத்தார் அளித்தனர்.
பின்பு சிவபிரான் அருளினால் அவர்க்குச் சூலைநோய் வந்ததையும் அதனால் அவர் தம் தமக்கையாரைச் சரணடைந்து சைவரானதையும், கோயில் கோயிலாகப் போய் இறைவன் புகழ் பாடியதையும் ‘திருநாவுக்கரசர்’, ‘அப்பர்’ எனப் பெயர்கள் பெற்றதையும் பெரியபுராணம் மிக விரிவாகக் கூறுகின்றது.
அப்பரடிகள் எண்பத்தொரு வயதுவரையிலும் வாழ்ந்தார் என்பர் ஆன்றோர். அதில் அவர்தம் பெரும்பான்மையான வாழ்வினை அதாவது 60 லிருந்து 70 ஆண்டுகள் சமணசமயத்திலேயே கழித்திருக்கக் கூடும் என்பர் வரலாற்று ஆய்வாளர்.
அப்பரடிகள் தம் வாழ்வு பற்றிய செய்திகளைத் தாம் பாடிய தேவாரப் பாக்களில் ஆங்காங்கே குறிக்கின்றார். அவர் கற்றறிந்த பெரியோர்; தம் வாழ்வின் பெரும்பகுதியில் ஏற்பட்ட அனுபவங்களைக் கண்டுணர்ந்த சான்றோர்; அதன் பயனாய் தாம் சிந்தித்தறிந்த பல்வேறு நற்கருத்துக்களை உலக மக்களுக்கு வழங்கி அவர்கள் நன்னிலை பெற்று உய்யவேண்டும் என்னும் கருணைத் திருவுள்ளம் உடைய உண்மை நாயனார்;
அப்பரடிகள், சிவபிரான் அருளினாலே சைவசமயம் திரும்பி நாடெங்கும் திருத்தல யாத்திரை செய்தார். அங்ஙனம் தாம் செல்லும் திருத்தலங்களிளெல்லாம் உழவாரத் திருப்பணி எனும் கைத்திருத்தொண்டு செய்து வந்தார்.
இதனால்தான் சேக்கிழாரடிகள், ஆளுடைய அரசு திருவவதாரம் செய்தருளிய நாட்டின் பெருமையைக் குறிக்க வந்த இடத்தில் ஆளுடைய அரசினை, ‘அறந்தரு நாவுக்கரசு’ என்று குறித்தார்.
இங்ஙனம் அறமே வடிவமான திருநாவுக்கரசருக்கு இறைவன் அங்கங்கே காட்சியளித்து அருள்புரிந்தான். பொய்வாய்மை பெருக்கிய புன்சமயமாகிய சமணசமயத்தில் தாம் நெடுநாள் கிடந்தமையையும், தன்னையும் ஆட்கொண்டருளிய இறைவனின் கருணையையும் நினைந்து நினைந்து உருகி உருகி உள்ளங்குழைந்து அமுதப் பாக்களினால் துதிக்கலாயினர்.
திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் போன்ற புதுமையான செய்யுள் வகைகளை தமிழுக்கு அளித்தருளினர் ஆளுடைய அரசு. அதனால்தான் தெய்வச் சேக்கிழாரும் இவரை, ‘நாவின்மொழிக்கு இறை’, எனவும் ‘இன்தமிழ் ஈசர்’ எனவும், ‘தாண்டக வேந்தர்’ எனவும் ‘தாண்டகச் சதுரர்’ எனவும் பலவாறு போற்றி மகிழ்கின்றார்.
இங்ஙனம் இறைவன் தமக்கு எளிவந்தருளிய திறத்தை நினைந்து உருகிப் பாடிய தேவாரப் பாக்கள் சிலவும் திருக்குறள் கருத்தும் ஒத்திருக்கின்றன. பலகலைகளையும் கற்றுத்துறைபோய அவர்தம் திருவாக்கும் திருக்குறளும் எவ்வகையில் ஒத்துச் சிறந்து விளங்குகின்றன என்பதையே நாம் இனி காணப் போகின்றோம். அதற்கு அவரது வாழ்வே ஆதாரமாதலால் அதை இங்கே விரிவாக எடுத்துக் கூறினோம்.
பொதுவாகச் சான்றோரின் கருத்துக்களை எடுத்து ஆள்வதோடு அவர்களின் வார்த்தைகளையும்- மொழிகளையும் அப்படியே எடுத்தாளுதல் நம் தமிழிலக்கிய மரபாகும்.
பொதுவாகச் சான்றோரின் கருத்துக்களை எடுத்து ஆள்வதோடு அவர்களின் வார்த்தைகளையும்- மொழிகளையும் அப்படியே எடுத்தாளுதல் நம் தமிழிலக்கிய மரபாகும்.
அவ்வகையில் அப்பரடிகள் திருக்குறளின் சில சொற்றொடர்களை அப்படியே தமது தேவாரப் பாக்களில் எடுத்தாண்டிருக்கின்றார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
யாண்டும் இடும்பை இல.
என்பது வள்ளுவர் வாய்மொழி.
இதனை அப்படியே திருவாவடுதுறையில் ‘நம்பனை நால்வேதம் கரைகண்டானை’ எனும் திருத்தாண்டகத்தில், 9 ஆவது பாடலில்
‘வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை’
என்றருளிச் செய்கின்றார் அப்பரடிகள்.
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’
எனும் அருமைத் திருக்குறளை பழமொழித் திருப்பதிகத்தில் முதல் திருப்பாடலிலேயே,
‘ஆரூரரைக், கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே’ என வைத்து தம் நிலையை எடுத்துக் கூறுகின்றார்.