தாம்சன் (1903-1987) பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஈடுஇணையற்ற கிரேக்க மொழிப்புலமையாளர்; பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்த ஆய்வாளர்; மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்த்தெடுத்தவர். அவர் அயர்லாந்தின் மேற்குத் திசையில் உள்ள பிளாஸ்கெட் தீவுக்குச் சென்று அங்குள்ள பழங்குடி மக்களுடன் நேரில் பழகி, அவர்களின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆய்வு செய்தவர். அத்துடன் அய்ரிஷ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். இப்புலமைப்பாட்டைக் கிரேக்கத் தொல்சீர் இலக்கிய ஆய்வுக்குப் படைப்பாக்கத்துடன் கையளித்தார்.
மார்க்சிய மெய்யியலால் ஈர்க்கப்பட்ட தாம்சன் பிரித்தானியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ‘சோசலிசத்திற்கான பிரித்தானியப் பாதை’ என்னும் திருத்தல்வாதத் திட்டத்தை எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் எழுதிய ‘மார்க்ஸ் முதல் மா-சே-துங் வரை’, ‘முதலாளியமும் அதன் பிறகும்’, ‘மனித சாரம்’ ஆகிய மூன்று நூல்களும் அவரது மார்க்ஸியப் பார்வையை வெளிப்படுத்தும். இந்நூல்கள் மார்க்சிய அடிப்படைக் கல்விக்கான நூல்களாகவும், மார்க்சிய முறையியலைக் கற்பிக்கும் நூல்களாகவும் விளங்குகின்றன. தமிழாய்வுலகில் பெருஞ்சாதனைகள் புரிந்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரின் கலாநிதி பட்ட நெறியாளராக விளங்கியவர் ஜார்ஜ் தாம்சன்.
இங்கிலாந்தில் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தேசியத் தொல்சீர் இலக்கியக் கழகத்தின் கௌரவத் தலைவராகப் பணியாற்றியவருமான ரிச்சர்ட் ஸீஃபோர்டு Reciprocity and Ritual : Homer and Tragedy is Developing City - state, Money and the early Greek Mind : Homer, Tragedy and Philosophy உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் சுமார் 70 பெருங்கட்டுரைகளையும் எழுதியவர். இவர் ஜார்ஜ் டெர்வென்ட் தாம்சன் 1987-இல் மறைந்ததையொட்டி, 1989 - இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாம்சனின் வாழ்வும் பணியும் என்ற கருத்தரங்கில் Thomson and Ancient Greece என்ற தலைப்பில் வாசித்தளித்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இக்கட்டுரை.
தாம்சன் எழுதிய ‘Pre-Historic Athens’, ’Aeschylas and Athens’, ‘First Philosophers’ ஆகிய நூல்களில் அவர் நாடகம் ஆகியவற்றின் தோற்றம், சமூக உருவாக்கம், கிரேக்கப் பண்பாட்டு உருவாக்கம் ஆகியவற்றை எப்படி ஆய்வு செய்துள்ளார் என்று ரிச்சர்ட் ஸீஃபோர்டு இக்கட்டுரையில் நோக்கியுள்ளார்.
நாடகம் எவ்வாறு தோன்றியது? அருவமான சிந்திப்பு எவ்வாறு தொடங்கியது? இந்த இரண்டு கேள்விகளின் மூலம் பல வினவுப் பெருள்கள் பற்றி ஜார்ஜ் தாம்சன் மிகப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார். இவை மிகவும் சுவையானவை; நம்மை நாமே புரிந்துகொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த இரண்டு வினாக்களுக்கும் விடையளிப்பதற்கு, பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய ஆய்வு மிக மிக இன்றியமையாதது. இன்று வரை இத்தகைய பிற அடிப் படைக் கேள்விகளை எழுப்ப விரும்பாத தொழில்முறை கிரேக்க மொழிப் புலமையாளர்கள் இவற்றுக்கான பதில்கள் பெரும்பாலும் வெறும் ஊகங்களாகவே இருக்கும் என்று விடையளிக்கின்றனர்.
அந்த ஊக விடை தவறானதாகவே இருக்கும். ஆனால், சில கேள்விகள் கேட்கப்படாததற்கு உண்மை யான காரணம் ஊகம் மட்டுமே செய்வதுதான். பழம் இலக்கிய ஆய்வுகளில் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஊகம் செய்யப்படுகிறது என்பது தொல்சீர் இலக்கியப் புலமை வாய்ந்த யாவரும் அறிந்ததே! தொல்சீர் இலக்கியப் புலமையில் ஊகம் என்பது போதுமான அளவுக்கு மதிப்பார்ந்ததுதான். ஆனால், அவ்வூகம் வரம்புக்குட்பட்ட சூழல் சார்ந்ததாகவும், அனுபவம் சார்ந்ததாகவும் இருந்தால் மட்டுமே மதிப்புடையதாகும். இப்படிப்பட்ட கேள்விகள் ஏன் கேட்கப்படுவதில்லை என்பதற்கான உண்மையான காரணங்களில் முதலாவது அவை மிகவும் சிக்கலானவை. அத்துடன் சுருக்கமாகக் சொன்னால் அக் கேள்விகளைக் கேட்பதற்கு தாம்சனிடம் இருந்ததைப் போன்று பல்துறைசார் புலமை இணைவும், மிகவும் அதிஉயர் புலமைப் பயிற்சியும் தேவைப்படுகிறது. இரண்டாவது, அருவமான சிந்திப்பையும் நாடகத்தையும் உருவாக்கிய சமூக - வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய தேடலைத் தவிர, வேறு எந்த வகையாலும் இந்த வினாக்களுக்குப் பதில் அளிக்க முடியாது. கிரேக்க மொழிப் புலமையாளர்கள் பண்டைய கிரேக்கத்திலும் தங்கள் சொந்த சமூகத்திலும் நடக்கும் உள்ளார்ந்த போராட்டத்திற்கும், அப்போராட்டத்தின் பண்பாட்டு விளைவுகளுக்கும் இடையேயான உறவைப் புரிந்து கொண்டால் மட்டுமே வரலாற்று வளர்ச்சி பற்றிய தேடலை மேற்கொள்ள முடியும்.
இவ்வேளையில் நான் தெரிந்தெடுக்கிற இரண்டு சிக்கல்களும் வெறுமனே வரலாற்றுக்குரியவை அல்ல. கிரேக்க மெய்யியலும் கிரேக்க நாடகவியலும் முதன் முதலாகத் தோன்றி வெகுவிரைவிலேயே வியக்கத்தக்க அளவுக்கு உயர்ந்த இடத்தைப் பிடித்தன. அவற்றுக்கு நாம் சிறப்புக் கவனம் செலுத்தத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்தக்கூடிய குறிப்பிட்ட பண்புக் கூறுகள் (உதாரண மாக, சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலில் முரண் கூறுகளின் போராட்டம் அல்லது துன்பவியலில் வதை படுதலின் மையநிலை) உண்டு. தாம்சன் மெய்யியலும் நாடகமும் எப்படித் தோன்றின என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால், பண்டைய மெய்யியல், நாடகம் ஆகியவற்றின் தனித் தன்மைகளை அறிந்துகொள்ள முடியாமல் போவது எப்படி என்பதை எடுத்துரைத்தார். இந்த இரண்டு காரணிகளும் குறிப்பிட்ட வழிமுறையில் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவால் தொன்மம், சடங்கு ஆகியவற்றிலிருந்து தோன்றியவை.
இங்கே சில வேளைகளில், இந்தத் தோற்றுவாய்கள் மறுதலிக்கப்படுவதற்குக் காரணம் இவை அறியப் படாதவை என்பதாலல்ல; அத்தோற்றுவாய்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள் பொருத்தமில்லாதவை என்பதால்தான். இறுதியில் சடங்கிலிருந்து தொன்மம் அல்லது நாடகம் வழியே மெய்யியல் தருவிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்ட முடிந்தாலும்கூட, மெய்யியல் என்பது தொன்மம் அன்று; நாடகம் என்பது சடங்கும் அன்று. இந்த மறுப்பு என்பது இயங்கியல் அடிப் படையிலான உறுதியான மறுதலிப்பு. இக்கூற்று குறுகிய பார்வையில் விசித்திரமான, தான்தோன்றித்தனமான செருக்காகத் தோன்றலாம். உறுதியாகத் துன்பியலானது சடங்கு அன்று; துன்பியல் வேறொன்றாக நிலை மாற்றப் படும் சடங்கு. இதேபோல சாக்ரட்டீசுக்கு முந்தைய மெய்யியல் தொன்மச் சிந்திப்பு அன்று; வேறொன்றாக நிலைமாற்றப்படும் தொன்மச் சிந்திப்பு. தாம்சன் வறட்டுத் தனமான கொள்கைநோக்குக் கொண்டவர் இல்லை. ஆனால் ஒன்று எதிலிருந்து உருமாற்றம் பெற்றதோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று இல்லை; அதன் தோற்றுவாயை அறியாமல், அதன் சிறப்புப் பண்பைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்துகிறவர்.
இந்தச் சுருக்கமான இடையீட்டுக்குப் பிறகு தாம்சனின் படைப்பில் வலுவான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். துன்பியலின் தோற்றுவாய்களைப் பற்றி அல்ல. (இங்கே தொகுத்துக் கூறுவதற்கு முடியாத அளவுக்கு இதுவொன்றும் சிக்கலான ஒரு பிரச்சினை இல்லையென்றாலும், ஏஸ்கைலஸ் எழுதிய ஒரேஸ்டியா நாடகத்தில் வரும் கடவுள் கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரேஸ்டீயா நாடகத்தின் கதை: அகமெம்னானின் மனைவி க்ளைடெய்ம்னெஸ்ட்ரா தனது கள்ளக்காதலன் அய்ஜிஸ்தோஸுடன் சேர்ந்து கணவன் அகமெம்னானைக் கொலை செய்கிறாள்; அதனை அறிந்த அகமெம்னானின் மகன் ஒரேஸ்டெஸ் தன் தாய் க்ளை டெய்ம்னெஸ்ட்ராவையும், அய்ஜிஸ்தோஸையும் பழிக்குப் பழியாகக் கொலை செய்கிறான். இந்தத் தாய்க் கொலைக்காக ஒரேஸ்டெஸைப் பழிதீர்க்கும் அணங்குகள் பழி தீர்க்கத் துடிக்கின்றன.
அவன் தனது காப்பாளரான அபல்லோ தெய்வத்தின் புனிதத் தலத்துக்குச் சென்று, அத்தெய்வத்தின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துவிட்டான். அதன் விளைவாக, அவன் ஏதென்சுக்குச் செல்கிறான். அங்கே ஒரேஸ்டஸுக்கும் பழிதீர்க்கும் அணங்குகளுக்கும் இடையே உள்ள வழக்கைத் தீர்ப்பதற்கான நீதிமன்றத்தை அப்பல்லோ நிர்மாணிக்கிறார். வழக்கை விசாரித்த ஏரியோபாகஸ் கடவுள்களின் மன்றம் ஒரேஸ்டெஸை விடுதலை செய்கிறது. இந்தத் தீர்ப்பினால் கோபமுற்ற பழிதீர்க்கும் அணங்குகள் ஏதென்ஸுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழலை உருவாக்கு கிறது. ஆனால், அவர்களுக்கு நகரில் ஒரு முக்கிய பகுதி வழங்கப்படுகிறது. பழிதீர்க்கும் அணங்குகள் ஏதென்ஸை வாழ்த்திப் பாடுகின்றனர்; பானதீனையா என்னும் கிரேக்கத் திருவிழாவை நினைவூட்டுத் தீப்பந்த ஊர்வலம் நிகழ்கிறது. இப்படியாக நாடகம் நிறைவுறுகிறது.
இந்த வழக்கு நிகழ்வுக்கும், முடிவுக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன? பேராசிரியர் பேஜ் கூற்றுப்படி, “விசாரணைக் காட்சியே பார்வையாளர்களுக்கு வலுக்குறைந்ததாகக் தோற்றமளிக்கிறது. ஆனால் அதிலுள்ள தவறுகள் அதன் தூய தொல்பழமை நோக்கத்துக்கு உட்பட்டதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப் படலாம்”. இந்தக் கருத்துரையில் வரலாற்றுணர்வு கொஞ்சம்கூட இல்லை. பேஜ்-ஆல் நாடகத்தைச் சரியாக மதிப்பிட இயலவில்லை. காரணம், அவரால் நாடகத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. நாடகத்தின் வழக்குக் காட்சியில் தோன்றும் சிக்கல்களின் சமூக முக்கியத் துவத்தைப் பற்றிய தாம்சனின் விளக்கத்தை இங்கே குறிப்பிடுவதற்கு நேரமில்லை.
நம் பார்வையெல்லாம் அந்தப் பழிதீர்க்கும் அணங்குகளின் மீதுதான்! அவற்றின் நிலைப்பாடு என்ன? நீதிமன்றத்தில் அதுவரை சொல்லப் படாது முதன்முதலாகச் சொல்லப்பட்ட அந்த முதல் தீர்ப்புக்குக் காரணமான வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஒப்புதல் அளித்ததன் முக்கியத்துவம் என்ன? அவர்கள் அடைந்த தோல்விக்கும், தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இசைந்து போனதற்கு உள்ள முக்கியத்துவம் என்ன? மூலநூலின் வரையறைகளுக்குள்ளிருந்து தருவிக்கப் படும் இப்படிப்பட்ட வினாக்கள் தாம்சனை நூலுக்குப் புறத்தேயும், பின்னோக்கியும் இட்டுச் சென்றன.
ஏதென்ஸ் நகர் கிரேக்கத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்த மனிதக் கொலை செய்யும் குற்றங்களையெல்லாம் வன்முறையால் ஒடுக்காது, நீதிமன்றங்களில் சட்ட பூர்வமாகத் தீர்த்து வைத்து அப்பகுதிகளைச் சீர்திருத்தியது என்றும், அத்துடன் பொதுவாக சமய சக்திகளால்தான் மனிதர்கள் நகரங்களை உருவாக்கினார்கள், சட்ட விதி களை நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் ஏதெனியர்கள் நம்பினார்கள். இதையே சற்று மாறுபட்ட நிலையில் நோக்கினால் நீதித்துறை நிறுவனத்தின் வளர்ச்சி, அரசு வளர்ச்சியின் திறவுகோலாக இருப்பதைப் பார்க்க முடியும். கொலை வழக்கு மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது என்ற காரணத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அரசு வலுவில்லாது இருக்கிற இடத்தில் அல்லது அரசே இல்லாத இடத்தில் குருதிக்காகப் பழி வாங்கும் மரபு, சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தல், (குறிப்பாக, கொலையாளி அதே இனக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால்) பரிகாரம் போன்ற வேறு வகையான நடை முறைகள் இருக்கும் என்று இனவரைவியல் மூலம் நாம் அறிகிறோம்.
பழிதீர்க்கும் அணங்குகள் தாய்வழி சமூகத்தின் குருதி உறவுமுறையின் ஆக்கம் என்று தாம்சன் அறிந்துகொள்வதற்கு இனவரைவியல் உதவி புரிந்தது. அவர்கள் ஏன் இறந்தவர்களின் உருவகமாகத் தோற்ற மளித்துப் பாம்புகளைத் தங்கள் கூந்தலில் அணிந்து கொள்கின்றனர் என்று அவர் அறிவதற்கும் உதவியது இனவரைவியல். மேலும் அவர்களுக்கு (பழிதீர்க்கும் அணங்குகளுக்கு) ஊழணங்குகள் (fates), மொய்ரே (Moirae) என்னும் கடவுள் மற்றும் பலருடன் உள்ள நெருங்கிய உறவை தாம்சன் அறிய இனவரைவியல்தான் உதவியது. உண்மையில், வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களை ஆய்வு செய்வதன் மூலம் எப்படி கிரேக்க மதம், பண்பாட்டை எடுத்துரைக்க முடியும் என்பதற்கான ஓர் உதாரணமாகவே இந்தப் பழிதீர்க்கும் அணங்குகள் புலப்படுகின்றன. அத்துடன் தாமஸ் ப்ளாஸ்கெட் தீவின் பண்பாடு, தொல்குடிப் பண்பாட்டை ஒத்திருந்ததையொட்டி, அரசுருவாக்கத்துக்கு முந்தைய பண்பாடு பற்றிய புலனறிவு பெற்றவராக தாம்சன் விளங்குகிறார் (தாம்சன் அயர்லாந்திலுள்ள மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்ட ப்ளாங்கெட் தீவு மக்களின் மொழி, பண்பாடு பற்றி நீண்ட காலம் களஆய்வு மேற்கொண்டவர் என்பதைக் கட்டுரையாளர் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார்).
தொன்மையான தொல்சீர் கிரேக்க வரலாறு, இரத்த உறவுகளின் அழிவில் தோன்றிய நகர அரசு, அரசு உருவாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியாய் இருப்பதை நாம் பார்க்கிறோம். அத்துடன், வரலாற்றின் நிலை மாற்றம், அதாவது புழக்கத்திலிருக்கும் குருதிக்காகப் பழி வாங்கும் மரபு, பரிகாரம், தூய்மைப்படுத்தல், சமூகத்திலிருந்து விலக்கிவைத்தல் போன்ற முறைகளால் தீர்க்கப்பட முடியாத ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான மைய நீதி நிறுவனத்தின் தோற்றத்தை மிகச் சுருக்கமான வடிவில் ஒரேஸ்டியா நாடகத்தில் நாம் பார்க்கிறோம்.
இந்த நிலைமாற்றம் இரண்டு வகைப்பாடுகளில் தோற்றம்பெறுகிறது. முதலாவதாகப் பழைய நிலையி லிருந்து இயற்கையாக நீதிமன்றம் எழுகிறது. அதீனாவின் வழக்கு விசாரணையை இரண்டு தரப்பினர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இரண்டாவது, பழிதீர்க்கும் அணங்கு களால் எடுத்துரைக்கப்படும் பழைய நடைமுறை தர்க்க முறையால் புதிய நடைமுறையாக மாற்றப்படுகிறது. பழி தீர்க்கும் அணங்குகளுக்கு மரியாதையான இடம் வழங்கப் படுகிறது. அதன் மூலம் அவர்கள் தங்கள் கோபத்தை நல்லெண்ணமாக மாற்றிக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் படுகிறார்கள். இச்செயல் பழிதீர்க்கும் அணங்குகளின் பழைய நடைமுறை மீதுள்ள அச்சத்தையும், அதே வேளை அவர்களின் பழைய நடைமுறை வலுவிழந்து வருகிறது என்பதையும் புலப்படுத்துகிறது. பொதுவாக, நகர அரசினுடைய ஒலிம்பியன் மதத் தோற்ற வடிவில் சமூக அமைப்பில் தொடர்ந்து நீடித்து வரும் பழங்கால நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றின் தொடர்ச்சியை நாம் காணநேரிடுகிறது.
இந்த உதாரணம் மூன்று கூறுகளை விளக்குகிறது.
1. தாம்சன் பண்டைய சான்றாதாரங்களுக்கு வெளியே ஆய்வு செய்து தனது கொள்கைசார் புரிதலைப் பெற்றுக்கொண்டார். அவரது தொடக்கம் கொள்கைசார் உருவரையாக இருக்கவில்லை. சான்றாதாரங்களால் தோற்றுவிக்கப்பட்ட குறிப்பிட்ட சில சிக்கல்களுக்கு மரபுவழி ஆய்வுக்குரிய வரம்புகளுக்குள் விடை காண முடியவில்லை. மரபுவழி ஆய்வுமுறையின் வரம்புகளைக் களைந்தெறிந்தார்.
2. மூலப்பிரதியில் காணப்படும் முரணிலைகளை முழுதளவிய வரலாற்று நோக்கினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
3. பழிதீர்க்கும் அணங்குகளின் பண்டைச் செயல் பாடு எளிதாக மறுக்கப்படவில்லை; மாறாக, அவர் களுக்கும், ஒரேஸ்டெஸுக்கும் இடையேயான முரணி லைக்குத் தீர்வு, புதிய ஒன்றாக உருப்பெறுகிறது. அந்தப் படிநிலையை நாடகாசிரியர் ஏஸ்கைலஸும், ஐயத்துக்கு இடமின்றி ஏதெனியர்களும் கூட உணர்ந்தறிகின்றனர். தாம்சன் ஏஸ்கைலஸின் திறன்மிக்க உரையாளர். எவ்வாறெனெனில் அவர் தனது நோக்குடன் இயங்கியல் அடிப்படைகளைச் சிறப்பான முறையில் இணைத்துக் கொண்டுள்ளார்.
பண்டைய கிரேக்கத்தைப்பற்றிய ஆய்வில் மானிடவியலைப் பயன்படுத்துகிற முதல் நபர் அல்லர் தாம்சன். இதனால், அவருக்கும் அவரது முன்னோடி களுக்கும் இடையேயான உறவைப் பற்றிய வினா என் மனத்துள் எழுகிறது. பல்வேறு வகைப்பாடுகளில் தாம்சன் கேம்பிரிட்ஜ் கிரேக்க மொழிப் புலமைப் பள்ளி என்றழைக்கப்படுகிறவர்களின் வழியில் வந்தவர். அவர்களுள் முக்கியமானவர்கள் ஜேன் ஹாரிசன், எஃப்.எம்.கார்ன்ஃபார்ட். கிரேக்க மதத்தைப் பற்றி ஜேன் ஹாரிசனின் படைப்பு, சமகாலத்தைப் பற்றிய ஆய்வின் மூலம் தர்கைம் எடுத்துரைத்த மதத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவு பற்றிய கோட்பாடு, அண்மைக்கால மானிடவியல், தொல்பொருளியல் வளர்ச்சி வழங்கிய புதிய சான்றுப் பொருட்களின் மூலம் அடையப்பட்ட புரிதல் முன்னேற்றம் ஆகியவற்றின் கூட்டிணைப்பு ஆகும். அவர் தாம் எழுதிய தீமிஸ் என்னும் நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மதம் என்ற கலைச் சொல்லுக்கான பொருள் விளக்கத்தோடு நாம் நமது பணியைத் துவங்குவது இல்லை.
மாறாக மதம் என்று நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்ம்மைகள் அனைத் தையும் சேகரிப்போம். அவற்றில் வெளிப்படும் மனிதச் செயல்பாடுகளிலிருந்தே மதத்தை நோக்குவோம்”. இந்நூல், கூட்டுச் செயல்பாட்டிலிருந்தும் உணர்ச்சி நிலையிலிருந்தும் தோன்றும் மதம்சார் மறுகையளிப்பு என்ற தர்கைமியக் கோட்பாட்டுடன் இணைந்து, கிரேக்க மதத்துக்கும், பழங்குடி சமுதாயங்களின் மதத்துக்கும் இடையேயான ஒத்த தன்மைகளைப் பற்றிய ஆய்வில் அடிப்படையான வளர்ச்சியாக இருந்தது. தற்போது மதத்தின் தோற்றுவாய் என்ற முறையில் சடங்குக்கு முக்கிய இடம் கொடுப்பது இன்னொரு முக்கிய நிகழ்வாகியது. சடங்கு என்பது சமுதாயம் சார்ந்த, கூட்டுச் செயல்பாடு. அதே வேளையில் சடங்கு, கலை, இலக்கியம், ஏன் மெய்யியலில்கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளது.
கிரேக்க இலக்கியம், தொன்மம், மதக் கோட்பாடு ஆகியவற்றின் பெரும்பாலான கூறுகளுக்குச் சமூகத்தின் சமுதாய பொருட்சார் தேவை களிலிருந்து தோன்றும் சடங்கே தோற்றுவாயாக அமை கின்றது. கிரேக்க மதம் முதல் பழைய கிரேக்க மெய்யியல் வரையிலான இந்த ஆய்வு முறையின் விரிவாக்கம், எஃப்.எம்.கான்ஃபார்டின் சாதனைகளுள் ஒன்று. குறிப்பாக அவர் பண்டைக்கால கிரேக்க அண்டக் கோட்பாட்டி லிருந்து ஹெலியாடின் ‘தியாகனி’யில் காணப்படும் அண்டத்தின் தோற்றத்தைப் பற்றிய ஒரு தொன்மத்தி லிருந்து தோன்றும் அடிப்படைகளையும், கிரேக்கச் சடங்கு முறையல்லாத, கிழக்கத்திய சடங்கான பாபி லோனிய புத்தாண்டு சடங்கிலிருக்கும் அடிப்படை களையும் எடுத்துரைக்கிறார்.
இப்போது இந்த நோக்குநிலையில்தான் கிரேக்கப் பண்பாட்டிற்கும், ‘மிக முற்பட்ட காலத்தியவை’ எனப் படும் பண்பாடுகளுக்கும் இடையேயான உறவுச்சிக்கல் மிகவும் முனைப்பாகத் தெரிகிறது. கேம்ப்ரிட்ஜ் பள்ளியின் போக்கு சடங்கு நிறைவேற்றுவதில் உள்ள கிரேக்கப் பண்பாட்டின் மூலப் பண்புகளையும், மிக முற்பட்ட காலத்திய பண்பாட்டிலுள்ள மூலப் பண்புகளையும் வெளிப்படுத்தி, அதன் மூலம் கிரேக்கர்களின் வியக்கத்தக்க தோற்றுவாயைப் பொய்த் தோற்றமென்று ஒதுக்கித் தள்ள முனைந்தது. ஆனால், கிரேக்கர்கள் பல முக்கிய விஷயங் களில் ஒற்றுமைப் பண்புகளுடன்தான் இருக்கின்றனர். உதாரணமாக, மெய்யியல் எனப்படும் அருவச் சிந்திப்பின் வளர்ச்சிநிலையில் அல்லது துன்பவியல் உருவாக்கத்தில் உள்ள தன்மையைக் குறிப்பிடலாம். இத்தகைய முக்கிய மான வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்வதற்கு இன வரைவியல் மிகவும் அவசியம். ஆனால், அது போது மானது அன்று.
கேம்ப்ரிட்ஜ் பள்ளியால் அடிப்படை மாற்றத்தை விளக்கமாக எடுத்துரைக்க முடியவில்லை. ராபர்ட் ப்ரௌனிங், ‘ஜேன் ஹாரிசன் வரலாற்று வாய்மையற்றவர்’ என்று விமர்சித்துள்ளார். மீண்டும் தாம்சனிடம் வரு வோம். சம்பந்தப்பட்ட ஆய்வுப் பொருளின் வரையறைக் குள்ளேயே தீர்வு காணப்பட முடியாத அடிப்படைப் பிரச்சினை அல்ல என்றாலும், அதன் பரப்பெல்லையை மேலும் விரிவாக்கினால் மட்டுமே விடை காண்பது சாத்தியம் என்று அவர் கண்டறிந்ததால், தாம்சன் ஆய்வுப் பொருளுக்குள் ஆழ்ந்து செல்கிறார். இன்னொன்றையும் பார்ப்போம். சான்றாதாரங்களுடன் சமப்படுத்திப் பார்க்கிற அளவுக்கு மார்க்சியம் இங்கே கொண்டுவரப் படவில்லை. அதைக் காட்டிலும் தாம்சன்தான் அந்தச் சான்றாதாரங்கள் மீது அடிப்படைக் கேள்விகளைத் தொடுக்கும் தனது ஆற்றல் மூலம் சிக்கல்களை மார்க்ஸியத்துக்கு கொண்டு செல்லுகிறார். இது ஒரு சிக்கலான நிலைதான். இருந்தாலும் இதைச் சுருக்கமாக விளக்க முயல்கிறேன். உலகத் தோற்றத்தைப் பற்றிய தொன்மங்களிலிருந்து வளர்ந்ததுதான் கிரேக்க
மெய்யியல். அது மனிதப் பண்பிலிருந்து புறநிலைப் படுத்தல் சார்ந்த படிநிலையின் மூலம் வளர்ச்சி நிலையை அடைந்தது. பூமி, ஆகாயம், கடல் போன்றவை தெய்வங் களாகக் கருதப்பட்டமை முடிவுற்றது. நிலம், காற்று, நீர் போன்ற மூலக்கூறுகளாயின. உலகில் இவற்றின் தன்மை மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இல்லை. அனைத்தும் அதனதன் பருப்பொருள் தன்மையிலேயே புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பிறகு, மெய்யியலாளர் அனாக்ஸிமெனிஸ்-ன் பார்வையில் நோக்கும் பொழுது, பருப்பொருளளவிலான எல்லாக் கூறுகளும் ஒற்றைக் கூறான காற்றின் வடிவங்களே. காற்றின் நிறைந்த அல்லது குறைந்த விசையின் மூலம் பருப்பொருட்கள் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது; அதன் அடர்த்தி குறைந்த வடிவில் அது நெருப்பு; அதன் அடர்த்தி மிகுந்த வடிவில் அது பூமி. அதாவது, அனாக்ஸி மெனிஸ் காற்றின் அளவு வேறுபாட்டின் அடிப்படையில் பண்பு வேறுபாட்டை விளக்கினார். பூமிக்கும், காற்றுக்கும் இடையேயுள்ள வெளிப்படையான பண்பு வேறுபாடு என்பது உள்ளபடியே வெளியில் உள்ள காற்றின் வேறுபட்ட அளவிலான ஒரு கூறு என்பதுதான். பண்பு வேறுபாட்டை அளவு வேறுபாட்டு அளவுக்கு குறைப் பதற்கான போக்கு ‘முழுமுதலை’ நோக்கியதாக இருந்தது. பின்னர் கிரேக்க மெய்யியல் உலகம் கணிதத்தால் ஆனது என்று கூறிய பிதாகோரஸ் மூலமும், அனைத்து இயக்கத் தையும் கட்டுப்படுத்தும் அருவக் கோட்பாடான கடவுள் வாக்குடன் அடையாளங் காட்டப்படும் நெருப்பிலிருந்து உருமாறும் விளைபொருள்களே அடிப்படை மூலக் கூறுகள் என்று கூறிய ஹெராக்லீடோஸ் மூலமும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பண்பு வேறுபாட்டை அளவு வேறுபாட்டுக்கு குறைத்தல் மட்டுமல்ல, பருப்பொருளிலிருந்து சிறப்பு அருவநிலையை (எண்கணிதம்) பிரித்துக் காட்டும் நெறியிலும், பிதாகோரஸ், ஹெராக்லீடோஸ் இருவரும் தனித்தனியே அவரவர் வழியில் கருத்துரைக்கின்றனர்; இந்தப் போக்கினை மேலும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அறியக்கூடிய எல்லாப் பண்புகளையும் எதிலிருந்து விலக்கிப் பார்க்க முயல்கிறாரோ, அந்த முழுமையின், அதாவது ‘ஏகம்’ என்று அவரால் அழைக்கப்படும் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் எந்த இருப்பும் இல்லை என்று மறுதலிக்கிறவரானார் பார் மெனைடஸ். அடுத்து, மெய்யான இருப்பு, இருப்பின் மெய்யான கருத்து ஆகியன குறைந்த நம்பகத் தன்மையைக் கொண்ட பிளாட்டோவின் உருவக் கோட்பாட்டுக்கு வழி கோலுகிறது. அதன் மூலம் நாம் அறியக்கூடிய உலகிலிருந்து தனி விலக்கு பெற்ற அருவக் கோட்பாட்டின், தனித்த வளர்ச்சியுடன் இணைந்து, உலகைத் தீர்மானிக்கும் பண்பு வேறுபடுத்தலிலிருந்து படிநிலை விலக்கலைப் பெறுகிறோம்.
மேற்கூறிய வகையில் தாம்சன் கிரேக்க மெய்யியலின் வளர்ச்சியை வெறுமனே அறியச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் அதை விளக்கவும் செய்தார். இந்த அறிவுத் துறை வளர்ச்சியின் காலம் என்பது சரக்கு உற்பத்தி மற்றும் பணம் சார்ந்ததொரு பொருளாதாரம் முதன் முதலாக வளர்ச்சி பெற்ற காலமும்கூட. சந்தைக்குக் கொண்டு வருகிற சரக்குப் பொருள் இன்னொரு பொருளிலிருந்து வேறுபட்டது அல்ல. எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பரிவர்த்தனை மதிப்பு இருக்கும் வரை, அவை அருவமான எண்ணியல் சார்ந்த விலைமுறைத் திட்டத்துக்கு உட்படுத்தப்படும். அவற்றின் மதிப்பு உலக அளவில் சமநிலையிலுள்ள விலைமுறைத் திட்டத்தில் - அதாவது பணத்தின் மூலம் தெரிவிக்கப்படும். ஆதலால், சந்தைக்கான உற்பத்திப் போக்கு மனிதர்களின் மனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் பயன் மதிப்பை விலக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பணம் முன்னுரிமை பெற்று, ஆதிக்கம் செலுத்தக்கூடிய அருவமாகிறது; வெளிப்படையாக எந்த வகை உற்பத்திப் பொருளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தக் கூடிய தனித்துவம் வாய்ந்தது. கிரேக்க மெய்யியலின் சமகால வளர்ச்சியுடனான இந்தச் செல்நெறிகள்தான் கருத்துகளையும் உருப்படுத்துகின்றன.
தாம்சன் ஒத்திசைவான செல்நெறிகளைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை; ஒத்திசைவுகள் எதார்த்தமாக நிகழக்கூடியவை அல்ல என்றும், உலகின் மாறிக்கொண்டிருக்கும் எண்ணக்கரு பொருளாதார, சமூக மாற்றங்களினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டி, மெய்யியலாளர்களுக்கும், அவர்களின் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவைத் தேடி ஆய்ந்து, ஒத்திசைவுகளை விரிவாக எடுத்துரைக்கிறார். மேலும் அவர் பண்டைய இஸ்ரேலிலும், பண்டைய சீனாவிலும் உள்ள ஒப்பிடத்தக்க அம்சங் களையும் ஒப்பிட்டுப் பகுந்தாய்ந்தார்.
ஆனால் பொருளாதார வளர்ச்சிதான் இறுதியாகத் தீர்மானிக்கும் ஒரே காரணி என்று அவர் மதிப்பிட்டார். உதாரணத்துக்குச் சடங்கை, மறைஞானத்தைத் தோற்று வாயாகக் கொண்ட ஹெராக்லீடாஸின் புகழ்பெற்ற முரணிலைப் பாணியை (தொல்பொருள் ஆய்வின் புதிய கண்டுபிடிப்பின் மூலம்) தாம்சன் விளக்குவதை நாம் கவனத்தில் கொள்ளலாம். ஹெராக்லீடாஸின் தத்துவத்தின் பெரும்பகுதி - குறிப்பாக, வெவ்வேறு மூலக்கூறுகளின் இடைவிடாத மாற்றங்களை அனுபவித்து, கொதித்துக் கொண்டிருக்கிற ஆன்மாவைப் பற்றிய கருத்து, மறை ஞானத்திலிருந்து, ஆன்மிகச் சார்பான கோட்பாட்டி லிருந்து தருவிக்கப்பட்டதே ஆகும். இதுபோன்ற கண்டு பிடிப்புகளெல்லாம் இன்னும்கூட கான்ஃபார்டின் நோக்கு களில் காணப்படுகின்றன. ஆனால், ஹெராக்லீடாஸின் மெய்யியல் வெறுமனே ஆன்மிகச் சார்பான கோட்பாடு அல்ல; பணப் பொருளாதாரம் மற்றும் பொருள்களின் சரக்குப் பரிவர்த்தனையிலிருந்து தருவிக்கப் படும் முற்புனைவுகளால் உருமாற்றம் பெற்ற, மிகவும் அருவமான வேறொன்றுக்கு நிலைத்திரிவுற்ற ஆன்மிகச் சார்பான கோட்பாடு. ஹெராக்லீடாஸ் கூற்றுப்படி பொருட்கள் தங்கத்துக்கும் தங்கம் பொருளுக்கும் என்று பரிவர்த்தனை செய்யப்படுவதைப் போல நெருப்புக்கு எல்லாப் பொருட்களும் பரிவர்த்தனை செய்யப்படு கின்றது.
அதே வழிமுறையில், கேம்பிரிட்ஜ் பள்ளியின் இன்னொரு புலமையாளரான கில்பெர்ட் மர்ரே, சடங்கு முறையில் துன்ப நிகழ்ச்சியின் மூலகாரணங்களை, விவாதித்திருந்ததுதான் தாம்சன் தமது விவாதத்தை மேலும் இறுக்குவதற்கும் வளர்ச்சி என்பது பண்டைய நகரக் குடியரசு அரசமைப்பின் உருவாக்கமே என்று விளக்கமாக எடுத்துரைப்பதற்கும் மூல காரணமாக அமைந்தது. கேம்பிரிட்ஜ் பள்ளி தொல்பொருளியல், இனவரைவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சி நிலைகளுடனான மரபுவழிப் புலமையின் மீது ஆர்வம் நிரம்பிய இணைப்பாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தாம்சன் அதன் வாய்ப்பெல்லையை மேலும் விரிவுபடுத்தி இந்த இணைப்பாக்கத்தை உருமாற்றினர்; அவரது ஆய்வு கேம்பிரிட்ஜ் பள்ளியின் உச்சகட்டச் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது. ஆனால் இன்று புதிய முயற்சிகளுக்கான ஆர்வத்துக்கு இடம்கொடுக்காமல், பொதுமக்களின் நீடித்த ஆர்வத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இந்தப் பேசுபொருள்கள் பற்றிய தெளிவிப்பில் மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. செறிவூட்டப்பட்ட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மதிப்பூட்டக்கூடிய தொடர்ச்சி மட்டும் இங்கே இடம் பெறவில்லை. இந்த மரபுத் தொடர்ச்சியின் தேவைகூட அவ்வப்போது புறக்கணிக்கப்படுகிறது; மறுதலிக்கிறது. இது மிகவும் மோசமானது.
தாம்சன் இந்த நாட்டில் சிறந்த கிரேக்க ஆய்வு மரபின் உச்ச கட்ட வளர்ச்சி நிலையைச் சுட்டி நிற்கும்போது, நமது பல்கலைக்கழகங்களில் உள்ள இன்றைக்குச் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தொல்சீர் இலக்கிய ஆய்வுப்பாங்கு தாம்சனின் ஆய்வு பற்றிய மறுதலிப்பை எடுத்துரைக்காமலிருப்பதும் அல்லது மேலும் எல்லாவித கொள்கைசார் முன்னேற்றமும் விக்டோரிய அரசியின் ஆட்சிக்காலத்திலேயே இருக்கிறது என்று நடிக்கும் மனப்போக்கு தொடர்ந்து நீடித்திருப்பதும் நமக்குப் புதிராகத் தோன்றலாம். மொத்தத்தில் இன்றைய தொல்சீர் இலக்கியப் புலமைப்பாடு தாம்சனின் ஆய்வை உறுதிப் படுத்தவோ அல்லது மறுக்கவோ திறனற்றது. மற்றத் துறைகளில் தாம் செய்துள்ள பங்களிப்புகளுக்கு அப்பால், தமது தலைமுறையின் மிகப் பெரிய கிரேக்க மொழிப் புலமையாளராக இருந்த நபர் பிரிட்டிஷ் அகாடமியின் உறுப்பினராகக்கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பது இந்த நாட்டில் உள்ள தொல்சீர் இலக்கியப் புலமைப் பாட்டின் விசித்திரமான கிட்டப் பார்வை.
பண்டைய கிரேக்க ஆய்வுகளுக்கு தாம்சனின் பங்களிப்பைப்பற்றிச் சிறிதளவு மட்டும் இங்கே குறிப்பிட்டேன். முதலாவது, கிரேக்கப் பண்பாட்டின் இயங்கியல் வளர்ச்சியைப் பற்றிய விளக்கம். இரண்டாவது, கிரேக்கர்களின் புலனுணர்வில் பருப்பொருளுலகின் இயங்கியல் ரீதியான பிரதிபலிப்பு; மூன்றாவது, கிரேக்க ஆய்வுகளின் மரபுடன் தாம்சன் கொண்டுள்ள இயங்கியல் ரீதியான உறவு.
உண்மையில், கிரேக்க ஆய்வுகளுக்குள்ளே கூட அவரது பரப்பெல்லை மிகவும் அசாதாரணமானது; யாப்பியல், மொழிபெயர்ப்பு, மொழியியல், தொன்மவியல், ஹோமர் குருதியுறவுமுறை, மூலபாட விமர்சனம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சிறப்புப் பண்பு களுக்குள் ஒன்றைப் பற்றி மட்டும் ஒரு வார்த்தை சொல்லி அத்துடன் முடித்துக் கொள்கிறேன். அவரது மூலபாட விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது, பழங்கால நூலாசிரியர் எழுதிய நூல் ஓர் எழுத்துப் பிரதி யிலிருந்து மற்றோர் எழுத்துப் பிரதியாக உருவெடுக்கும் போது, நூற்றாண்டு காலமாக அந்த இலக்கியத்தின் தூய்மைப் பண்பைப் பாதிக்கும் இடைச் செருகல்களைக் களைந்து நூலாசிரியர் என்ன சொன்னாரோ, அதை மீளுருவாக்கம் செய்யும் கலைப் பணியே மூலபாட விமர்சனம் ஆகும். நான் மூலபாட விமர்சனத்தைக் குறிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக கேம்பிரிட்ஜ் பள்ளியின் சமகால அறிஞரான வால்டர் ஹெட்லாம் விரித்துரைத்த ஆய்வு மரபின் சிறப்பான வளர்ச்சியின் அடிப்படையில் தாம்சன் வெற்றி பெறு வதற்கான அடிப்படையை நிறுவிக்கொண்டார்.
இரண்டாவது, கிரேக்க மூலப்பாட விமர்சனம் என்பது பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய அறிவு, நூலாசிரியரின் பாணி, நூலாசிரியரின் இதர நூல்களுக்கு இடையேயான உறவு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் தேவைப்படாத நிலையில் உள்ள, மிகக் குறுகிய பரப்பெல்லை மட்டுமே போதுமென்ற நிலையில் உள்ள நீண்ட கால மரபுள்ள ஒரு துறை. இன்றும் கூட, பல முன்னணி விமர்சகர்கள் இந்தக் குறுகிய வழிமுறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், ஏஸ்கைலஸ் எத்தகைய சமூக மற்றும் அறிவுசார் சூழமைவில் நாடகத்தை எழுதினாரோ, அந்தச் சூழமைவை மீளுருவாக்குதல், மிகப் பிந்தைய நூலாசிரியர்களின் இலக்கியங்களில் மறுபடி இடம்பிடிக்கக்கூடிய மரபுவழிக் கருத்துகளுக்கு ஏஸ்கைலஸ் வழங்கும் மறைகுறிப்புகளைக் கண்டறிதல், எழுத்துப் பிரதி மாற்றப்பட்ட காலம் முழுவதும் நிலவி வந்த வரலாற்றுச் சூழல், அதன் மூலம் இலக்கியங்களைப் பிரதியெடுப்பதில் நேரக்கூடிய தவறு களைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் இன்றியமையா அவசியத்தை ஹெட்லாம், தாம்சன் இருவரும் வலியுறுத்தத் தவறவில்லை. அதோடு, சிக்கல்களும்கூட மரபுவழி ஆய்வு நெறிகளுக்கு அப்பால் செயல்படும்படி நம்மை வலிவுடன் ஊக்குவிக்கின்றன.
தாம்சனின் பதிப்பை ஃப்ரான்கெல் பதிப்புடனும், பேஜ் பதிப்புடனும் ஒப்பிடும் பொழுது - நான் ஒரு மாணவராக இருந்து படித்ததைத்தான் சொல்கிறேன் - தாம்சன் சரியாகப் புரிந்துகொண்டிருக் கிறார்; அவர்கள் இருவரும் தவறாகவே புரிந்து கொண்டு உள்ளனர். தாம்சனிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளத் தவறியது மூலபாட விமர்சகர்களாக மட்டும் இருந்தால் மூலபாட விமர்சனத்தில் திறன் பெற்றவராக உருவாகிவிட முடியாது என்பதைத்தான்! இன்னொன்று கிரேக்க மொழிப் புலமையாளராக மட்டுமே இருப்பதால் ஒரு மாபெரும் கிரேக்க மொழிப் புலமையாளராகிவிட முடியாது.