Written by London swaminathan
Date: 10 FEBRUARY 2017
Time uploaded in London:- 20-56
Post No. 3624
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
திருவள்ளுவரின் பழைய வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது போலவே அவருடைய பெயர்களும், திருவள்ளுவ மாலையில் உள்ள 50-க்கும் மேலான செய்யுட்களும் மறைக்கப்பட்டு விட்டன; மறக்கப்பட்டும் விட்டன. இன்று அவருடைய 11 பெயர்களை மட்டும் ஆராய்வோம்.
அவருடைய 11 பெயர்கள்
திருவள்ளுவர்
தேவர்
முதற்பாவலர்
மாதாநுபங்கி
தெய்வப்புலவர்
செந்நாப்போதார்
பெருநாவலர்
நான்முகனார்
புலவர்
பொய்யில் புலவர்
நாயனார்
இனி இதன் விளக்கங்களைக் காண்போம்
1.திருவள்ளுவர்
வள்ளுவர் என்பது ஒரு ஜாதியின் பெயர் என்றும் அந்த ஜாதியினர் அரசனின் ஆணைகளை யானை மீது சென்று பறையறிவித்து பிரகடனம் செய்வர் என்றும் கூறுவர்.
மற்றொரு பொருள்:- திரு என்பது உயர்வைக் குறிக்கும்; வள்ளுவர் என்பது வண்மையுடையவர் எனப் பொருள்படும்.
வேத சாஸ்திரங்களில் இலை மறை காய்போல இருந்த அரிய பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்லி தமிழ் வேதம் எனப்படும் திருக்குறளை எழுதியதால் இப்பெயர் பெற்றார் என்பாரும் உளர்.
வள்ளுவர்- வண்மையென்னும் பண்பினடியாய்ப் பிறந்த பெயர்; உ-சாரியை
2.தேவர்
தெய்வத்தனமையை உடையவர். மனிதனுக்கும் மேலாக தேவர் என்னும் நிலையில் வைத்துக் கொண்டாடப்படுபவர்; முனிவர் போல ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தவர். திருவள்ளுவ மாலையில் உறையூர் முதுகூற்றனார், “தேவிற் சிறந்த திருவள்ளுவர்” என்று கூறுவது, இதை உறுதி செய்கிறது.
3.முதற்பாவலர்
முதன்மையுடைய பாவலர்; இதன் பொருள் கவிகளில் சிறந்தவர். காளிதாசனை “கவி குல குரு” என்பது போல.பாவலர்= பாடல் பாட வல்லவர். பலவகை வெண்பாக்களுள் குறள்பா முதன்மையானது; அதில் பாடியவர். மேலும் அந்தண ஜாதியிற் பிறந்ததால் முதல் பாவலர் என்பாரும் உளர்.
4.மாதாநுபங்கி
திருவள்ளுவ மாலையில் மாதாநுபங்கி என்ற பெயரையும் செந்நாப்போதார் என்ற பெயரையும் நல்கூர் வேள்வியார் பயன்படுத்தியுள்ளார்; தாய் போல சாலப் பரிந்து அன்பு செலுத்தியவர். தாயெனத்தக்கவர்.
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்
மாதாநுபங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கச்சு
5.தெய்வப் புலவர்
கிரேக்க மொழியின் முதல் கவிஞர் ஹோமரையும் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதிய பாணினியையும் Divine Homer டிவைன் ஹோமர், பகவான் பாணினி என்பர். அதுபோலத் தெய்வீகத் தன்மையுடைய திருக்குறளை எழுதியதால் தெய்வப் புலவர் என பெயர் பெற்றார். அதுமட்டுமல்ல, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இவரையும் வணிகர் மரபில் தோன்றிய ருத்திரசர்மர் என்பவரை யும் மட்டுமே சங்கப் பலகையில் அமர கடவுள் அனுமதித்தார். மற்றவர் எல்லோரையும் மீனாட்சி கோவில் பொற்றாமரைக் குளத்தில் விழவைத்தது என்பது செவிவழிச் செய்தி. அப்போது ஆகாயவாணி (அசரீரி) இவரது திருக்குறளை அங்கீகரித்ததால் இப்பெயர். அதுமட்டுமல்ல. சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் எழுதிய தொல்காப்பிய உரை முதலியவற்றில்தெய்வப்புலவன் திருவள்ளுவன் என்று போற்றியுள்ளானர்.
6.செந்நாப்போதார்
செவ்விய நாவாகிய மலரையுடையவர்; “என்றும் புலராது” என்ற இறையனார் பாசுரத்தில், திருவள்ளுவர் வாய்ச் சொற்குக் கற்பகத் திருமலர் உவமை கூறப்பட்டுள்ளது. போது=மலர். மலர்மேல் அமரும் சரஸ்வதி தேவி, அவரது நாவில் வசிக்கிறாள்; செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல், வவ்விய கவிகளாகிய தேனைச் சொரிகிற நாக்கை உடையவர்.
7.பெருநாவலர்
பெருமையுடைய புலவர்; நாவலருட் பெரியவர் என்க.
நாவலர்= கவந சக்தியும், பிரசங்க சக்தியும், போதனா சக்தியும் படைத்த நாவன்மை உடையவர். திருவள்ளூவ மாலையில் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
8.நான்முகனார்
பிரம்மதேவனின் அம்சத்துடன் பிறந்தவர்; திருவள்ளுவ மாலையில், உக்கிரப் பெருவழுதியும், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் கூறியதைக் காண்க:-
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன், தான் மறைந்து வள்ளுவானய்த் தந்துரைத்த நூன்முறையை…..”
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா, மெய்யாய வேதப்பொருள் விளங்கப் பொய்யாது, தந்தானுலகிற்குத்தான் வள்ளுவனாகி, அந்தாமரைமேலயன்
9.புலவர்
புலம் அல்லது புலமை உடையவர் (புலம்= தேர்ந்த அறிவு; புலமை=கல்வித் தேர்ச்சி) நூலறிவு; பாண்டித்தியம் உடைமை.
சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம்
வைணவர்களுக்கு கோவில் என்றால் திருவரங்கம்
அது போல தமிழில் புலவர் என்றால் வள்ளுவர்
திருவள்ளுவ மாலையில் புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேற்- சிலவர் புலவரெனச் செப்பல் – என்று மதுரை தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார் கூறியதால் அறிக.
10.பொய்யில் புலவர்
பொய்மையில்லாத புலவர்; பொருள்களை உள்ளபடி உணரவும், உணர்ந்தபடி உரைக்கவும் வல்ல அறிவை உடையவரென்றபடி. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலையில், பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் – என்றனர்.
11.நாயனார்
இப்பெயரை நச்சினார்க்கினியர், தன் உரையில் பயின்றுள்ளார்.