கிறிஸ்துவப் படையெடுப்புகளும் மதமாற்றமும்
மதமாற்றம் உலகளாவிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உலகெங்கிலும் பரப்புவதில் சர்ச்சுகள் தீவிரமாக இருந்து வருகின்றன. உலகின் பிற பகுதிகளில் அவற்றின் தந்திரம் பலித்து, முழு நாடுகளையே மதம் மாற்றி, அங்கிருந்த ஆதி கலை கலாசாரங்களை அழித்துவிட்ட நிலையில், இந்து மற்றும் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தீவிர மதமாற்ற முயற்சிகளை நிகழ்த்தி வருகின்றன. பாரத தேசத்தைப் பொறுத்தவரை போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயப் படையெடுப்புகளின் மூலம் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்தது. ஆகவே வந்தேறி மதம் என்று அழைக்கப்பட முழுத்தகுதி கொண்டது கிறிஸ்தவம். இஸ்லாமும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல என்றாலும் இப்போது நம் கிறிஸ்தவத்தின் வேடங்களை மட்டுமே களையப் போகிறோம்.
போர்ச்சுகீசியப் படையெடுப்பின் போதுதான் கோவாவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன; பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதம் மாற மறுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகளும் கொல்லப்பட்டனர். போர்ச்சுகீசியர் கோவாவில் மட்டுமல்லாமல், கேரளம் மற்றும் தமிழகத்திலும் நுழைந்து தங்கள் கிறிஸ்துவ மதத்தை ஓரளவு ஸ்தாபித்தனர். இதை நாம் சொல்லவில்லை. வரலாறு பேசுகிறது. அவர்கள் அவிழ்த்து விட்டதுதான் ‘புனித தாமஸ்’ என்கிற கற்பனைக் கதா பாத்திரமும் அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும்.
தாமஸ் கட்டுக்கதை
கோவாவில் செய்தது போலவே, வட தமிழகத்தின் (சென்னை) கடலோரத்தில் அற்புதமாக அமைந்திருந்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலையும் அழித்து அந்த இடத்தில் புனித தாமஸ் (Santhome Church) தேவாலயத்தை அமைத்தனர். மேலும் தற்போது ‘புனித தோமையர் மலை’ (St. Thomas Mount) என்று அழைக்கப்படும் பிருங்கி மலையில் (பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை – இதுவே பின்னர் பறங்கி மலையாக மருவியது) உள்ள கோவில்களையும் அழித்து, அங்கும் ஒரு தேவாலயத்தை அமைத்தனர். புனித தாமசை ஒரு மயிலை பிராம்மணர் ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும் அவரது உடல் அங்கே புதைக்கப் பட்டிருப்பதாகவும் கதை கட்டிவிட்டனர்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.
தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும் திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டது தான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை “புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்” என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆசிரியரும், தன்னுடைய “புனித தாமஸ் கட்டுக்கதை” என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர் சரண் தாஸ் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள். அதற்குக் கோன்ராட் யெல்ட்ஸ் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.
தெய்வநாயகத்தின் விஷவித்து
தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86 ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென ஸ்தாபிக்க முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991].
சரி, இந்த தெய்வநாயகத்தின் குறிக்கோள் தான் என்ன?
தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பது; தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று நிறுவுவது; ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் சமயம் என்றும் அதிலிருந்து வெளியானவே சைவமும் வைணவமும் என்றும் ஸ்தாபிப்பது; ஆதாமுக்கு கடவுள் கற்றுக் கொடுத்த முதல் மொழியே தமிழ் என்றும், ஆதாம் முதல் மெய்க்கண்டார் வரை வந்துள்ள ஆன்மீகச் சிந்தனையாளர்களின் கருத்துக்களின் தொகுப்பே ‘தமிழர் சமயம்’ என்று நிறுவுவது; என்பன போன்ற துளியும் ஆதாரமற்ற, தமிழருக்கு, தமிழ் நிலத்துக்கு எதிரான கோட்பாடுகளை உண்மையெனச் சாதிப்பதே அவரது குறிக்கோள்.
பித்தலாட்டத்தின் முன்னோடிகள்
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் திடீரென்று கிளம்பவில்லை. இவருக்கு முன்னோடியாக நம் தமிழகத்தில் சில வந்தேறிகள் முயற்சி செய்துள்ளனர். அதில் முதலாமவர் 17-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து வந்த ராபர்ட் தே நொபிலி (1577-1656) என்கிற கிறிஸ்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டு தன்னை “ரோமாபுரி பிராம்மணர்” என்றும் சொல்லிக்கொண்டார். காவி உடை அணிந்து உடம்பில் ஒரு பூணூலையும் அணிந்து கொண்டு, ஒரு ஆச்ரமத்தையும் அமைத்துக் கொண்டார். பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன வேதங்களில் ஒன்று என்று சாதித்தார். காவி, பூணூல் அணிந்து குடில் ஒன்றில் ஆச்ரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய “கலாசாரக் களவுக்கலவை” (inculturation) முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு சற்றும் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. [Refer: The Portuguese in India, Orient Longman, Hyderabad, 1990)]
ஜி யு போப் என்கிற போப்பையர் (1820-1907), கன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் (1680-1746) போன்றவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் நூல்களை மொழி பெயர்த்ததும், வேறு சில தமிழ் நூல்களை எழுதியதும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றினால் அல்ல. சீகன் பால்கு ஐயர் (ஜெர்மானியர்), இரேனியஸ் (ஜெர்மானியர்) மற்றும் எல்லிஸ் துரை (Francis Whyte Ellis) ஆகியோரும் தமிழ்த் தொண்டு புரியும் நோக்கில் மொழித் தொண்டிர்ன் போர்வையில் சமயப் பணி ஆற்றியவர்களே. இவர்களைப் போலவே கால்டுவெல் என்கிற பாதிரியாரும் முழுப் பொய்யும், புளுகும், புனைசுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக் கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப் புகுத்தி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி மதமாற்றம் செய்ய அதிக நாட்டம் காட்டினார்.
இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் “திராவிட இனவெறி” என்கிற நச்சு மரத்துக்கு வித்திட்டவர் இந்த பிஷப் கால்டுவெல்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கலாசாரக் களவு (Inculturation)
மேற்கண்ட மாதிரி அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகியஅபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்; தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன.
இந்துக்களைச் சீண்டுதல்
முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுதல் போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.
வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் – 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)
இந்துக்களைக் குழப்பும் சதி வேலை
தெய்வநாயகம் போன்ற போலி ஆராய்ச்சியாளர்கள் நம் மக்களின் மனதைக் குழப்புகின்ற நோக்கில், பல புத்தகங்களை அச்சடித்து வெளியிடுகின்றனர். அவர் சமீபத்தில் ‘திருநீறா சிலுவையா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில், “திருநீறு என்பது சாம்பல் புதன்கிழமை என்கிற ஆதி கிறிஸ்துவ விரதத்திலிருந்து வந்தது. இடம்-வலமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கம், ஆதி கிறிஸ்துவ சைவத்திலிருந்து, வைணவம் பிரிந்தபோது, மேல்-கீழாகத் திருமண் இட்டுக் கொள்ளும் பழக்கமாக மாறியது. சிவன் தன் இடது பாகத்தை சக்தியிடம் கொடுத்த பிறகு, அந்த சக்தியைப் “பெண்ணாக” வழிபட்டால் அவள் “பார்வதி” என்றும், “ஆணாக” வழிபட்டால் அவர் “விஷ்ணு” என்றும் போற்றப் படுகிறார்கள். திருஞான சம்பந்தரின் “திருநீற்றுப் பதிகம்” கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையே இயம்புகிறது. தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் என அனைத்து சைவ இலக்கியங்களும் ரிக்கு, யஜூர், சாமம் என்ற வேதங்களைப் பற்றிச் சொல்லாமல் கிறிஸ்துவ வேதமாகிய பைபிளின் தத்துவங்களையே சொல்கின்றன” என்றெல்லாம் அபத்தக் களஞ்சியங்களை அள்ளி வீசியிருக்கிறார். மிகவும் நல்லது ஐயா! அப்படியென்றால் பேசாமல் நீங்கள் எல்லோரும் திருநீறோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு எமது கோவில்களில் வந்து வழிபட வேண்டியதுதானே! எங்களுக்குப் புரியாதா உங்கள் திருகுதாளங்கள். பொய் சொல்வது தவறு என்று விவிலியத்தில் சொல்லப்படவே இல்லையா அன்பரே? இல்லை உங்களுக்குத்தான் நாவு கூசவில்லையா?
மேலும், “புனித தோமையர்” (St.Thomas) தமிழகத்தில் நிறுவிய ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதமாம். ‘இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களே ஆதி கிறிஸ்துவத்தைத் திரித்து சைவம், வைணவம் என்கிற கோட்பாடுகளை உண்டாக்கினராம். எனவே சைவம் வைணவம் ஆகியவை ஆதி கிறிஸ்துவத்தின் உப பிரிவுகளாகவே கொள்ளப்படவேண்டும். “பிதா-மகன்-பரிசுத்த ஆவி” என்கிற புனித மூவர் “சிவன்-முருகன்-சக்தி” என்றும் “பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்” என்றும் அழைக்கப் படுகின்றனர்” என்றெல்லாம் இந்துக்களின் மனமும் உணர்வும் புண்படும்படியாக பல அருவருக்கத்தக்க பிதற்றல்கள் ஏராளமாக எழுதப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது. விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.
மதம் மாற்றுவதை நாம் தவறென்று சொல்லவில்லை. அது புரிதலின், அங்கீகரித்தலின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். அப்படியல்லாமல் பணம், தாய்மதத்தைப் பற்றித் திரித்துக் கூறுதல், அரசியல் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், இல்லாத நேயத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுதல் என்று இவ்வாறு பலவகை புனைவுகளாலும் வேடங்களாலும் சற்றும் மனசாட்சியின்றிச் செய்யப்படுவதைத்தான் இங்கே விவரிக்கிறோம், கண்டிக்கிறோம். இதனை மதம் மாறிவிட்டவர்களும், மாறத் தயாராகிவிட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை.
இதன் அரசியல் பரிமாணங்களை, சூதுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.