முந்தைய பகுதிகள் – பகுதி 1
சென்ற பகுதியில் எடுக்கப்பட்ட நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,
"வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே"
என்பன கடைசி இரண்டு வரிகள். இவை முகில்வண்ணனை வேத முதற் பொருளாக அறிவித்து, அவனைச் சக்கரப்படை ஏந்தியவனாக அடையாளம் காட்டும் வரிகளாம். "வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும், புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும். இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே, இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு தகுந்த இடத்தில் சமஸ்கிருத நூல்களிலும் மூலத்தைக் காணலாம்.
(1) “வேதம் கூறும் முழுமுதற்பொருள்”:
பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரைநூலில் "வேத முதல்வன்" என்ற இடத்திற்கு, "வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு" என்னும் விளக்கம் காணப்படுகிறது.
இக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் திருமால் பிரபஞ்சத்தின் காரணப் பொருளாக அறிவிக்கப்பட்டார். பின்பு வேதத்தில் கூறப்பட்ட பரப்பிரம்மம் என்று அறிவிக்கப்பட்டார். பிரம்ம சூத்திரமும் இங்ஙனமே பரம்பொருளை அறிவிக்கின்றது. முதல் சூத்திரத்தில், "இனி பரம்பொருளை அறிவோம்" ("அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ:") என்று அறிவித்து இரண்டாம் சூத்திரத்தில், "எதனிடமிருந்து பிரபஞ்சத்தின் தோற்றம் முதலானவை ஏற்படுகின்றனவோ" ("ஜன்மாதி3 அஸ்ய யத:") என்றும், மூன்றாவது சூத்திரத்தில், "மறை மூலம் அறியப்படுகிறது" ("சா'ஸ்த்ர யோனித்வாத்") என்றும் இலக்கணம் கூறிற்று.
நான்மறைகளின் முடிவாகத் திருமால் அறியப்படுவதால் "வேதாந்த வேத்யன்" என்று அவனை அழைப்பதுண்டு (வேத்3ய: = அறியப்படுபவன்). இப்படி அவனை "மறைவழியாக அறியப்படுபவன்" என்று அறிவிக்கக் காரணமென்? "இதிகாச-புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் அறியப்படுபவன்" என்று கூறலாமெனின், அந்நூற்கள் பொய்யா மறையாகிய வேதத்தை, அதாவது "சுருதிகளைச்" சார்ந்தே நிற்பவையேயன்றி, தனித்து நிற்பவையாகா. சுருதியாகிய வேதம் ஒன்றே எதையும் சாராமல் தனித்து நிற்கும் பிரமாணமாகும்.
அத்துடன், வேதமென்பது பரமனுடைய வாய்மொழியே என்று வேதமே அறைகிறது. அயல் நாட்டவர் ஒருவர் நம் தாய்மொழியிலேயே நமக்கு வணக்கம் கூறினால் மகிழ்கின்றோமே, அது போல வேதத்தின் வழி அவனை அறிவதால் பரமனுக்கு உகப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு தாய் தன்னுடைய குழந்தை "அம்மா”" என்று தான் பேசும் மொழியிலேயே என்று அழைப்பதைக் கேட்பதால் எவ்வளவு ஆனந்தப்படுகிறாள்? அதுபோலவே,
“புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;”
[– பரிபாடல், 13]
“‘அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;”
[– கம்பராமாயணம், IV, வருணனை வழிவேண்டு படலம், 72]
“தாய் தன்னை அறியாத
கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின்
தாயாகின், ஐய!”
[—- கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 54]
என்று அனைவரும் இசைந்தபடி, பிரபஞ்சம் அனைத்துக்கும் தாயாகக் கூறப்படும் பரமனுடைய குழந்தைகள் அவன் சொந்த மொழியாகிய வேதத்தின் வழியிலேயே அறிந்து வணங்குவதில் அவனுக்குப் பேரானந்தம். ஆகையால், "வேத முதல்வன்" என்று கூறுதலின் சிறப்பு விளங்கிற்று. இதைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோரும் நன்கறிந்தனர் என்பதை,
"மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து"
"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ"
"முன்னை மரபின் முதுமொழி முதல்வ"
[– பரிபாடல், 3]
என்று பாடியதிலிருந்து காணலாம். இதிலிருந்து, நற்றிணைப் பாயிரப்பாடலானது சங்க காலத்திற்குச் சற்று பின்பே எட்டுத்தொகை நூற்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் தான் சேர்க்கப்பட்டது எனினும், பழந்தமிழர் மரபைக் காட்டும் சங்கநூல் கூறும் செய்தியையே எதிரொலிக்கின்றது என்னும் கருத்துடன் இசைவதற்கு இடமுள்ளது. கீதாச்சாரியனாகிய கண்ணனும், "வேதைச்' ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்3ய:" [அனைத்து வேதங்களாலும் அறிவிக்கப்படுபவன் யானே — பகவத் கீதை 15.15] என்று கூறுகிறான். “அனைத்து வேதங்களும் இவனையே கூறுகின்றன என்று எப்படி சொல்ல முடியும்? இந்திரனும், அக்னியும், வருணனும், வாயுவும் கூட தான் வேதத்தில் படிக்கப்படுகின்றனரே?” என்ற கேள்வியை எழுப்ப, வங்கதேசத்து அத்வைத தத்துவ ஞானியும், பரம பக்தருமாகிய மதுசூதன சரஸ்வதியின் உரையில் பதில் கிடைக்கிறது:
"(கண்ணன் கூறுகிறான்) வேதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் படிக்கப்படுகின்றனராயினும், உண்மையில் மறையானது அவர்களுக்கு உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கும் என்னையே கூறுகின்றது. ஏனெனில், ‘இந்த்3ரம் மித்ரம் வருணம் அக்3நிம் ஆஹுரதோ2 தி3வ்ய: ஸ ஸுபர்ணோ க3ருத்மாந். ஏகம் ஸத் விப்ரா ப3ஹுதா4 வத3ந்தி அக்3நிம் யமம் மாதரிச்’வாநமாஹு:’ என்று மந்திரமும், ’ஏஷ உஹ்யேவ ஸர்வே தே3வா:’ என்று உபநிடதமும் கூறுகிறது" [– கூடார்த்த தீபிகை, கீதை 15.15-க்கு உரை].
திருமாலின் ஆயிரம் பெயர்களுக்குச் சங்கரர் உரையில், "ச'ப்3தச':" (#912), "கதி2த:" (#848), "மந்த்ர:" (#280) என்ற நாமங்களுக்கான விளக்கங்களும் இக்கருத்தையே கூறுகின்றன. இவையனைத்தும் பரம்பொருளுக்கு மறை கூறும் இலக்கணமாகும். சங்கரருடைய கீதையுரைக்கு ‘டீகை’ இட்ட ஆனந்தகிரியும் மேலெடுக்கப்பட்ட 15.15-ஆம் சுலோகத்தின்கீழ் "வேதத்தால் அறியப்படும் பரம்பொருள் பகவான் அன்றி வேறா என்ற சந்தேகம் தீரும்படி கண்ணன் உரைக்கின்றான்" என்று விளக்கியுள்ளார். மறைமுடிவாகிய உபநிடதம் பரமனையே சொல்ல வருகின்றது என்ற செய்தியைக் கம்பரும்,
"சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு நின் அலாது இல்லை;" [– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 98]
"‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன்பெருந் தன்மை தான் தெரி மறைகளின் தலைகள், "மன்பெரும் பரமார்த்தம்" என்று உரைக்கின்ற மாற்றம், அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. " [– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 100] |
என்று பல இடங்களில் பாடியுள்ளார். இவ்விளக்கம் தொடர்பாகவே, பரமனுடைய "கோவிந்தன்" (#539) என்ற நாமத்திற்குச் சங்கரர் சஹஸ்ரநாம உரையில் “‘கோ3’ என்பதை ‘மொழி/பதம்’ என்ற பொருளுடையதாய் எடுக்கலாம். ஆகையால, ‘கோவிந்தன்’ என்பதற்கு ‘பதங்களால் அறியப்படுபவன்’, அதாவது வேதாந்த வார்த்தைகளால் அறியப்படுபவன் என்று பொருள் கொள்ளலாம்.” என்று விளக்கம் கூறியுள்ளார். இக்கருத்தையே "அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம்" என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வாரும், அதைப் பின்பற்றி வருவதைப் போல,
"அன்னவூர்தியை முதலாம்
அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
நின் அலால் இல்லாமை
நெறி நின்றார் நினையாரோ."
[– கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 55]
என்று கம்பரும் பாடியுள்ளதைக் காண்க (அந்தணர் மாடு = அந்தணர்களுடைய ஒரே செல்வமாகிய வேதம், அந்தணர் மாட்டு அந்தி = வேதாந்தம்).