New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவமும் வைணவமும்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
வள்ளுவமும் வைணவமும்
Permalink  
 


வள்ளுவமும் வைணவமும்

January 3, 2011  - ஆர்.சௌந்தர்

[1950களில் ஒரு பள்ளியில் மாணவனின் அனுபவம்]

th_thiruvalluvarவேனிற்கால ஆண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. குத்தாலம் போர்டு ஹைஸ்கூலும் வழக்கம்போல் திறந்தாகிவிட்டது. ஆழ்வார் திருநகரியில் இருந்து விடுமுறை நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பவே மனம் வராமல் வேறு வழியின்றித் திரும்பிவந்தேன். அடுத்த வகுப்புதான் என்றாலும் தமிழ் ஆசிரியர் மட்டும எங்களுக்கு மாறவேயில்லை. திரு. ஞானசம்பந்தம் அவர்களே ஐந்தாம் பாரத்திலும் தமிழ் ஆசிரியராக வந்தார்.

தமிழ்ப் புத்தகத்தை ஆவலாகப் பிரித்த எனக்கு என்னவோ ஏமாற்றம்தான். ஒரு சிலம்பை வைத்துக்கொண்டு வாதாடும் பாடல்கள். எனக்குப் புளித்துப்போய்விட்டது. முதல் பாரத்திலிருந்து தொடர்ந்து இதே கதைதான் வந்துகொண்டிருக்கிறது. ‘வாயிலோயே! வாயிலோயே!’ எத்தனை தரம் கதவைத் தட்டினாலும், எங்கள் நிர்க்கதியைக் கேட்க யாருமில்லை!

திருக்குறளும் அப்படித்தான். வள்ளுவர் உலகிற்கு என்ன செய்தி சொல்கிறார் என்பதைவிட, குறட்களை மனப்பாடம் செய்து எழுதுவதே திறமையென நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் அது. ‘பிற’ என்று முடியும் குறளை எழுதுக, அல்லது ‘உலகு’ என்று முடியும் குறளை எழுதுக என்று எல்லா வினாத்தாள்களிலும் ஒரே மாதிரியான கேள்விகளே கேட்கப்படும். மிகவும் அலுத்துப்போய்விட்டது. ஒருவழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆசிரியரிடம் போய்க் கேட்டுவிட்டேன்.

“ஐயா, திருக்குறளை வேறு விதமாக அணுகிப் பயில முடியாதா? ஏன் எப்போதும் ஈற்றுச் சொல்லை வைத்தே மனனம் செய்து கொண்டிருக்கவேண்டும்?” புதிதாக ஒரு ஜந்துவைப் பார்த்ததுபோல் என் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். சரியாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தேன்; நல்லவேஎளை ஆசிரியரின் கைகள் பிரம்பினைத் தேடவில்லை. ‘யார்? நீந்தான் அந்த மாவடுப் பையனா? ராஜகோபாலையங்கார் ஆத்துப் பையன்தானே நீ? ஐந்தாம் பாரம் படிக்கும் உனக்கு இது போதாதா? இது என்ன வேறு அணுகுமுறை? ஒருவேளை நீ பசுபதியாரின் கவிதை இயற்றிக் கலக்கு என்கிற விஷயமெல்லாம் படிக்கிறயா?” நான் போட்டிருந்த நாமத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே, ” சரி, ஒண்ணு பண்ணு. வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்” என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்னை நானே நொந்துகொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.

திருவள்ளுவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒருவேளை அதற்கு உரை எழுதியவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் பரிமேலழகர் பெயர்தான் நினைவுக்கு வந்தது. இந்தப்பெயரை நினைத்தவுடன் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை வேண்டிக்கொண்டேன். நீங்கள்தான் காப்பாத்தணும் என்று.

திருக்குறள் ஒருபொது நூல். இது எந்த சமயத்தையும் சார்ந்தது இல்லை. மாலுடன் சம்பந்தப் படுத்தவேண்டுமென்றால், மாலைத்தான் கேட்கவேண்டும், சரி,அது என்ன மாலை? அதுதான் திருவள்ளுவமாலை.

மாலும் குறளாய் வந்தான். இரண்டடியால் உலகை அளந்தான். எனவே மாலும் வள்ளுவமும் ஒன்றாய் இருக்குமோ? இந்த சந்தேகம் முன்னர் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கும் வந்ததாம். அதை அவர்அப்படியே ஒரு வெண்பாவாகப் பாடிவைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து

இதே கருத்தைப் பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

என்று பாடியுள்ளார். சரி, இந்த இரண்டு பாடல்களையும் வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றால், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். சொந்த சரக்கு என்ன என்று கேட்பார்! நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். முதலில் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல பெயர் வேண்டும். வள்ளுவர் என்பது அவரது இயற்பெயரா? புத்தகத்தைத் தேடினேன்; நாயனார், தேவர், நான்முகனார் என்பன பல. இவையாவும் எனது கட்டுரைக்கு ஏற்றதல்லவே! என் செய்வது?

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், என் தம்பி முகுந்தமாலையை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.” ஸ்ரீ வல்லபேதி,வரதேதி, தயாபரேதி . . ” அட. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே! ஸ்ரீவல்லபா (லட்சுமிக்குப் பிரியமானவனே) என்பதைத் தமிழ்ப்படுத்தினால் திருவல்லபா அல்லது திருவள்ளுவா என்று திரிபுடன் சொல்லிவிடலாமே என்று தோன்றியது. முதல் கட்டம் வெற்றி! திருவள்ளுவரைத் திருமாலுடன் இணைத்தாகி விட்டது. இனி அடுத்த கட்டம்.

முதல் குறளிலேயே வெற்றி. அகர முதல எழுத்தெல்லாம்- ஆஹா இது அப்படியே கீதா வாக்கியம் – அக்ஷராணாம் அகாரோஸ்மி. எழுத்துக்களில் நான் அகாரமாய் இருக்கிறேன்.
எனவே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால்தான்.

அடுத்த குறளிலே வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’ அல்லதுமுற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’ என்று குறிப்பிடுமிடத்தே, ஐம்புலன்களை வென்றவன் அதாவது ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும்திருமாலின் ஒரு திவ்யநாமம். ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே தனக்கு உவமை இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்; ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9)); ஒப்பார் மிக்காரை இலையாய மாமாயன் (திருவாய்மொழி 2-3-2); வடமொழியில் அதுல: என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு உரை சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன். இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

ஆமாம். இப்படியே எல்லா காட்டுகளும் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரத்திலிருந்து எடுத்துச் சொன்னால், தமிழ் ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா? நிச்சயம் இல்லை. சோம்பல் பார்க்காமல் எல்லா அதிகாரங்களையும் படிக்க வேண்டும், சோம்பலை வெறுக்கும் அதிகாரம் மடியின்மை. இங்கே போய் தேடினால், குறள்எண்610 பளிச்சென்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை நேராகவே குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். திருவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்யநாமம்,

ஆஹா! நல்ல மேற்கோள்கள் கிடைத்தனவே. எனக்கு நிலை கொள்ளவில்லை. பட்டென்று ஒரு சிந்தனை. உடனே நிலையாமை என்கிற அதிகாரத்தைப் புரட்டினேன்.

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் எண்: 339)

இறப்பு துக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
. . நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
. . அன்யானி ஸன்யாதி நவானி தேஹி (2-22)

கடைசியாக,, குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத் தழுவிக்கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார். தாமரைக்கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

இந்த எடுத்துக் காட்டுகளை வரிசைப் படுத்தி அதற்கு விளக்கமும் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்தேன். திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை என்று அறுதியிட்டு முடித்திருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு, ‘கருத்தும் நடையும் மிக நன்று. அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர் என்பாருண்டு’. நீ என்ன சொல்கிறாய்? என்றார். ‘ஐயா!, நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்றுதானே சுட்டுகிறார். எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

‘ஆங்! அப்படியா? இலக்குமியைப் பற்றிப் பல இடங்களிலே சொல்கிறாரே, ஏன் எழுதவில்லை?; போய் நாளைக்கு எழுதிண்டு வா!’ என்றார்.

****************

எங்கள் தமிழ் ஆசிரியர் பணித்திருந்த வண்ணம் திருக்குறளில் இலக்குமியைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுக்கமுயன்றேன். ஸ்ரீ, பூ, நீளா தேவி ஸமேத விஷ்ணுவான படியாலே, தேடுதல் இம்மூவரையும் பற்றியதாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

பூமாதேவியின் முக்கிய குணம் பொறுமை அல்லவா? முதலில் இந்தக்குணம் தேவை. க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல், பொறையுடைமை அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார். பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை நாட்டுகிறார். இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா தொடர்ந்து வருவது நியாயந்தானே! அதற்கும் விடை தருகிறார் ஸ்ரீ வல்லபர்.

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் அவர் தகுதியை அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு

முயற்சி திருவினை ஆக்குமே! மேலும் தேடிப்பார்க்கலாம் என்று புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடிகொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

அடுத்து நீளாதேவியைப் பற்றி எங்கே குறிப்பிடுகிறார்? “குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார். நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) இணைந்து, இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது. இதனால்தானோ நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவமாலையில் கிடைக்கிறது?

நீளாதேவியைப் பற்றி வள்ளுவத்தில் ஏதானும் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கையில், திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைத்தது. இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்; பசுவில் சிறந்தது காமதேனு; ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார். திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார் கொப்பூழ் எழுகமலத்தே அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும், நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா மரைமேல் அயன்



-- Edited by Admin on Thursday 6th of July 2017 03:40:56 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

மஹாசயா,

புஷ்பேஷு ஜாதி
புருஷேஷு விஷ்ணு
நாரீஷு ரம்பா
நகரேஷு காஞ்சி

என்றும் வசனமுண்டு.

\\\\\\\\\இந்தக் கட்டுரையைப் படித்த ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி. மேல்முகட்டைப் பார்த்தவாறு, மோவாயைத் தடவி விட்டுக்கொண்டார். எனக்கு ஒரே உதறல். இன்னும் என்னவெல்லாம் எழுதச் சொல்வாரோ?\\\\\\\

ஆசார்யேஷு ஸ்ரீஞானசம்பந்தம்
சிஷ்யேஷு சௌந்தரம்

என்று சேர்க்கலாம் போல இருக்கிறது. இப்படியெல்லாம் கூட உன்னதமாக தமிழ் கற்பித்து இருக்கிறார்களே என்று உகப்பாக இருக்கிறது.

வள்ளுவம் வைணவ நூல் என்று மொழிந்தால் ஒன்றும் குடிமூழ்கி விடாது. 19ம்
நூற்றாண்டிலேயே திருக்குறள் “அத்புத வாமணன்” என்கிற பெயரில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மத் காடந்தே த்தி ஆண்டவன் ஸ்ரீனிவாச ராமானுஜ மகாதேசிகன் என்கிற மகானால் எழுதப்பெற்று வடமொழி மட்டும் அறிந்தோரும் குறளின் பெருமையை அறிந்தனர்.குறளோவியம் தீட்டியவர் குறள் வழி நடக்கிறாரா என்ன? அதையே பலர் படித்து தொலைக்கும்போது வள்ளுவமும் வைணவமும் என்பதை தாராளமாகப் படிக்கலாம்.

அத்விகா on August 20, 2012 at 5:14 am

திருக்குறள் ஒரு மதநூல் அல்ல. இது உண்மையான கூற்றே. ஏனெனில் வள்ளுவரின் காலத்தில் ஜைனம், புத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தங்கள் முன்னோரின் நம்பிக்கைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றி வந்தனர். அந்த நம்பிக்கைகள் மதம் என்ற ஒரு தொகுப்பாக ஆக்கப்படவில்லை.

நம் பாரத திருநாட்டில் உள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவே திருக்குறள் விளங்குகிறது. திருக்குறளில் தென்புலத்தார் வணக்கம் ( நீத்தார் கடன் – இறந்த மூதாதையருக்கு செய்யும் பித்ரு கர்மா) பற்றி குறிப்பிடப்படுகிறது.

கண்டாசார்யா சைவ சித்தாந்தம், மத்வம், வைஷ்ணவம் ஆகிய உள்பிரிவுகள் தோன்றி, இந்து சனாதன தர்மம் புதுபெயர்கள் சூட்டிக்கொண்டது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான். நமது புனித நூல்களில் ” சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணுர் – விஷ்ணுவாஸ்ச ஹிருதயம் சிவா -” என்று வருகிறது.

( சுவாமி சிவானந்தரின் ” சிவபெருமானும், சிவ வழிபாட்டு தத்துவங்களும்- ( divine life society, sivanandha ashramam, Rasipuram- pages 254-256).

எங்கும் நீக்கமற நிறைந்த உயர் இறையின் எண்ணிக்கை கடந்த வடிவங்களில் இரண்டே இரண்டு தான் சிவனும், விஷ்ணுவும். எனவே, திருக்குறள் பிரிவு படாத இந்துமத கொள்கைகளை தெளிவாக விளக்கும் இந்து நூலே ஆகும். பல வழிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் , சாக்தம், சௌரம் உட்பட அனைத்து பிரிவுகளின் ஒட்டு மொத்த நூலே ஆகும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard