New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் சமண நூலா ?


Guru

Status: Offline
Posts: 24736
Date:
திருக்குறள் சமண நூலா ?
Permalink  
 


 திருக்குறள் சமண நூலா ? (பகுதி 1)   R.DEVARAJAN   http://askdevraj.blogspot.in/2012/06/1.html

சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் சமணத்தின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் மாறாக இருப்பதாகவே தெரிகிறது.
  
சமணத்தின் மையமான கோட்பாடுகள் -

1) தீவிரமான இறை மறுப்பு,

2) தீவிரமான இன்னா செய்யாமை

3) தீவிரமான துறவு


Life is spirit, not physical matter.
Jainism is life affirming, but world denying.
Jains reject a materialistic lifestyle.

In general, Jainism is a study in extremes:

    extreme atheism
    extreme ahimsa
    extreme asceticism

இதற்கு முரணாக வள்ளுவம் இறையை ஒப்புக்கொள்கிறது.
ஒறுத்தலை வற்புறுத்துகிறது.
”நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்” என்பதிலுள்ள உவமை
சமணத்தின் தீவிரமான கொல்லாமை நெறிக்கு முரணானது.

சமணத்தின் அதீதமான உலகியல் மறுப்புக்கு மாறாக
வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலை வள்ளுவம் சொல்கிறது.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்தலை,
கொண்ட பெண்டிர் மக்கள் சுற்றத்தோடு
நல்ல பதத்தால் மனைவாழ்தலைச்
சொல்லும் சமயக் கருத்துகளுக்கு
அணுக்கமாகத் திருக்குறள் விளங்குகிறது.

பஶ்யேம ஶரத³​: ஶதம்
ஜீவேம ஶரத³​: ஶதம்
ஶ்ருʼணுயாம ஶரத³​: ஶதம்
ப்ரப்³ரவாம ஶரத³​: ஶதம்

புலன்கள் மேலானவற்றில் ஈடுபட்டிருக்கும் நீடித்த, தரமான,
வளமான உலக வாழ்க்கையைக் கோரும்
மறை மொழிகளையும் பார்க்கிறோம்.

நெடுமால், தாமரையாள், தவ்வை, இந்திரன்,
உலகியற்றிய நான்முகன், அவியுணவு, அதை ஏற்கும்
அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை ஆகிய அனைத்தையும்
சொல்லும் குறள் 63 சலாகா புருஷர்களில் ஒருவரைப் பற்றியும்
ஒரு இடத்திலும் பேசவில்லை.

சமணத்தின் தேவர்கள் புலன்களை வென்றதால்
மேலுலகத்தில் வாழும் தகுதி பெறுகின்றனர்;
சமணம் அவர்களைப் புலன்களை வென்றவர்களாகவும்,
முக்தி அடைந்தவர்களைப் போற்றி, தீர்த்தங்கரர்களுக்கான
ஸமவசரணத்தை அமைக்கும் பணி செய்வோராகவும்
காட்டுகிறது. அமரருலகில் முப்பது பகுப்புகள்;
அமரர்கள் நான்கு வகையினர் என்று சமணம் சொல்கிறது.

வேத சமயத்தில் அமரர்கள் புண்ணியச் செயல்களால்
தேவருலகை அடைந்தோராவர்.
அவர்களுக்கான பொறுப்புகள் வேறு;
அவர்கள் போகத்தில் ஆழ்ந்திருப்பவர்.
அமுதம் பருகி, அவியுணவை ஏற்றுப்
புண்ணிய பலன்களின் மிகுதியால் போகத்தில் ஆழ்ந்திருக்கும்
அவர்களுக்கு பிரமதேவர்  ஒருமுறை
அறிவுறுத்தியதாகவும் அறிகிறோம் [ப்ருஹதாரண்யக
உபநிஷத்]. வள்ளுவம் ஓர் இடத்தில் புலனடக்கம் இல்லாத
அமரர்களைச் சொல்கிறது.

மயிலையாரின் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர்,  வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

’மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்’ என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும், ‘ஏடாயாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், ‘போதகந்தோறும் புரிசடையானடி’ என்று திருமூலர் திருமந்திரத்தாலும்,‘மனைகமலமற மலர்மிசை யெழுதரும்’எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலாலும், இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து  ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகரைக் கூறினார் என்பது பொருந்துமா பார்க்க வேண்டும்.

"அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்.." என்று சூடாமணி நிகண்டும், "அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்" என்று பிங்கல நிகண்டும்  பேசும்.

அருகக் கடவுளுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி, அறவாழி அந்தணன் என்பது பெயரன்மையால் கடவுள் வாழ்த்து ஆதி தீர்த்தங்கர ஸ்வாமிக்கானது
என்பது பொருந்தாது.


சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வள்ளுவத்தையும்
ஒப்பு நோக்கினால் பல உண்மைகள் புலப்படும்.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இது அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பெரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் 
                                                                           (குறள் – 46)

துறந்தான் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்
                                                                           (குறள் – 159)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 
                                                                         (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம்.
இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை மட்டும் இரு அறத்தார்க்கும் பொதுவாகவும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், 
காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.



    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்
                                                 ( குறள் 1121)

சமணருக்குத் தேன் விலக்கப்பட்ட உணவு; வள்ளுவப் பெருந்தகை சாவக நோன்பினராயினும் (அணுவிரதியாயினும்), மாவிரதியாயினும் தேனைச் சுவைத்திருக்க வாய்ப்பில்லை; எப்படி அதை உதாரணம் கூறுகிறார் ? சமணரில் சாவக நோன்பினர் மருந்துக்கும் தேனைச் சேர்த்துக் கொள்வதில்லை.


சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் யதிதர்மம் என்றார்.  அவற்றை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல், பல் விளக்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர். வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.


திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல’ (1012) என்றும், ‘உடுக்கை இழந்தவன் கைபோலும்’(788) என்றும்  உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால்  வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் (298) என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். 

நின்றவாறே உணவேற்றல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ,  மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர்.  அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், 
பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார்.  ‘பணிமொழி வாலெயிறு ஊறியநீர்’ (1121) என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான  பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
                                               (குறள் 360)

ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்திய வள்ளுவர் சமணரின் முக்கியக் கோட்பாடான ரத்ந த்ரயத்தை விளக்கினார் அல்லர்; ரத்ந த்ரயம் என்பது நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவையாகும். சமணரின் முக்கியக் கோட்பாடான அநேகாந்த வாதமும் குறளில் எங்கணும் காணப்படவில்லை.

சமணர் இன்னா செய்யாமையை எல்லை கடந்து வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். 
மரங்களைச் செதுக்குவதால் மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலையும், பூமியைத் தோண்டுவதால் உயிர்கள் மடியும் என்பதால் சுரங்கத் தொழிலையும்  அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள  புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தொழிலுக்கும்  சமணத்தில் இரண்டாம் நிலை இடமே அளிக்கப்படுகிறது.  ஐம்பெரும் பூதங்களுக்கும் உயிர் உண்டு  என்பது சமண நெறியின் நம்பிக்கை. அவை அனைத்துக்கும் தொடு உணர்ச்சி உண்டு
என்பர் சமணர். 

‘பஹ்வந்நம் குர்வீத’ என்று அருமறை, வேளாண்மையைச்
சமூகக் கடமையாக்குகிறது, அதுவும் தூய  ஆன்மிகம் பேசும்
உபநிடதப் பகுதியில்.

வள்ளுவம் மறை கூறியதற்கிணங்க  உழு தொழிலை உயர்ந்ததாகப் போற்றுகிறது -

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

பரந்து கெடுக உலகியற்றியான்

 

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் 
பரந்து கெடுக உலகியற்றியான்

குறளில்  இயற்றுதல் என்பது செய்தல்
எனும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.
உலகியற்றியான் - உலகைப் படைத்தவன்.

இதற்கு வேறு வகையாகப் பொருளுரைப்பது
முற்றிலும் செயற்கையானது.

அகராதி தரும் பொருள் -

இயற்ற - v. n.

1. To do , make, effect, per form, execute, bring about, cause to take place, discharge a duty or obligation, exer cise or use an art, செய்ய. 

2. To transact, manage affairs, superintend, cause or excite one to do a thing, நடத்த. 

3. To destine, appoint, assign, விதிக்க. (p.)
இயற்றலுமீட்டலுங்காத்தலும். Devising means to increase the finances, collecting and keeping them.
எல்லாத்தவமுமியற்றி. Performing every spe cies of austerity.
ஐந்துவேள்ளியுமியற்றி. Offering the five daily oblations. இறந்தவர்கள்காமுறுமிருங்கடனியற்றி. Duly discharging the debt demanded by departed spirits.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&table=winslow 


உலகியற்றுதல் எனும் கருத்தியல் சமண சமயத்தில் உண்டா ?

கிடையாது என்பதே விடை.

உலகு முற்றிலும் சுதந்திரமானது, அதைப் படைப்பவரும், அழிப்பவரும், காப்பவரும் யாரும் கிடையாது என்பதே சமண நம்பிக்கை. இவ்வாறிருக்க உலகியற்றியான் என ஒருவரைத் திருவள்ளுவர், அவர் சமணராக இருக்கும் பக்ஷத்தில் கூற முடியுமா ?

உலகியற்றியவர் என்பதற்கு, உலகுக்குக் கல்வியையும், நற்கலைகளையும்
கற்பித்ததாகச் சமணர்கள் நம்பும் ஆதி தீர்த்தங்கர ஸ்வாமியான
ரிஷப தேவர் எனப் பொருள்கொண்டு பார்த்தால் பொருத்தமாக உள்ளதா ?

ஆதி தீர்த்தங்கரரை இவ்வாறு பழித்துப்பேசச் சமணம் அநுமதிக்கிறதா ?

அனைத்தையும் சேர்த்து ஆலோசிக்கும்போது அவர் ஒரு சமணராக 
இருக்க முடியாது என்றே தேருகிறது. 


’பரந்து கெடுக உலகியற்றியான்'  இது
ஒரு சங்கப்பாடலை நினைவுறுத்துகிறது :

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
                                                 (புறநானூறு -194)




விளக்கம் :

ஓர் இல் நெய்தல் கறங்க - ஒரு மனையின்கண்ணே சாக்காட்டுப் பறை யொலிப்ப; 
ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப - ஒரு மனையின்கண்ணே     மணத்திற்குக் கொட்டும் மிகக்  குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்ப; 
புணர்ந்தோர் பூ அணி அணிய - காதலரோடு கூடிய மகளிர் பூவணியை யணிய; 
பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - பிரிந்த மகளிரது
வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர் வார்ந்து துளிப்ப;
படைத்தோன் மன்ற - இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக; 
அப்பண்பிலாளன் - அப் பண்பில்லாதோனாகிய நான்முகன்; 
இன்னாது அம்ம இவ்வுலகம் - கொடிது இவ்வுலகினது இயற்கை; 
இதன்  இயல்பு உணர்ந்தோர் இனிய காண்க - ஆதலான் இவ்வுலகினது தன்மை யறிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்து கொள்க 


'படைத்தோன் மன்ற அப் பண்பில்லாளன்' எனும்
கருத்தை வள்ளுவர் அப்படியே அடியொற்றியிருக்கிறார்.
திருக்குறள் 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்று படைப்புக் கடவுளையே
குறிப்பதை இப்புறநானூற்றுப் பாடல் உறுதி செய்கிறது.
இக்குறளின் கருத்தைச் சங்கத்தின் நீட்சியாகக்
கருதுவது இலக்கியச் சுவையை மிகுவிப்பதோடு,
வள்ளுவர் ஒரு சமணர் எனும் கருத்தியலுக்கும் முடிவு கட்டுகிறது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே 
அந்த நான்முகனே' என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் 
நான்முகனை நொந்துகொள்வதும் நமக்கு நினைவுக்கு வருகிறதல்லவா ?


உலக நடையைக் கற்பித்த, பெரு  மதிப்புக்குரிய
ஆதி தீர்த்தங்கரரைப் பழிப்பதுபோல் பா அமைவது
ரசபங்கமாகும்; வள்ளுவர் சமண முனிவராயிருப்பின்
'கெடுக' எனும் நிந்தனையை நினைத்தும் பார்த்திருக்க
மாட்டார்.


பாகவதம் போற்றும் ரிஷப தேவர் மீதுள்ள பெருமதிப்பின்
காரணமாக இதைச் சொல்ல நேர்கிறது.


பிரபஞ்சத்துக்குப் படைப்போன் கிடையாது  என்று தெளிவாகச் சொல்கிறது
கீழ்க்கண்ட பதிவு -


God in Jainism

Jainism rejects the idea of a creator deity that could be responsible for the manifestation, creation, or maintenance of this universe. According to Jain doctrine, the universe and its constituents (soul, matter, space, time, and principles of motion) have always existed. All the constituents and actions are governed by universal natural laws and an immaterial entity like God cannot create a material entity like the universe.


http://en.wikipedia.org/wiki/God_in_Jainism


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

திருமந்திரமும் , குறளும்

 

திருமந்திரம் 1 கடவுள், 2. மழை, 3. நீத்தார், 4. அறம் 5. வேந்தர் 
என்ற ஐவகை வாழ்த்துக்களை உடையது. வள்ளுவமும் பாயிரப் 
பகுதியில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் 
வலியுறுத்தல் என அமைந்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது.
அரச வாழ்த்தைப் பொருட்பாலில் காணலாம். 

இதனால்தான்,  ஔவையார் தேவர் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் (நல்வழி 40) என்றனர். அஃதாவது, இருநூல்களும் 
ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் அறிவிக்க வந்தன என்பதாம். 

மண்ணைத் தோண்டுதல், சுரங்கப் பணி இவை சமண சமயத்தில் 
விலக்கப்பட்ட அபாதாந கர்மங்கள் [உயிர்களுக்குத் துன்பம் தரும்
எனும் நோக்கில்]. நீர்நிலைகளின்றி உழுதொழில் கிடையாது. 
திருவள்ளுவர் உழுதொழிலை மிகவும் சிறப்பித்துள்ளார்.

சாவகப் பிரிவினருக்கான குணவ்ரதம், சிக்ஷாவ்ரதம் இவற்றைப்
பகுத்துச் சொல்லும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’  7ம் அத்யாயம், 16ம்
ஸூத்ரத்தின் விளக்க உரையின் [உபாத்யாய கேவல முநி] 
ஆதாரத்தில் இது கூறப்படுகிறது.


‘தத்வார்த்த ஸூத்ரம்’ சமண சமயத்தின் பல்வேறு பிரிவினரும்
ஒருமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள சான்று நூல் என்பது குறிப்பிடத்
தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்”

 
ஆதியாய் நின்றது மன்னவன் கோல் -

இதில் 'நின்றது' என்பது இறந்த காலத்தைக் குறித்து நின்றது.
அக்குறிப்பை மணக்குடவர் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். 'ஆதியாய் நின்றது' எனும்போது
முதலாக அமைந்தது என்று பொருள்
கொள்ளவேண்டும். இங்கு மன்னவன் என்றது
பரத சக்ரவர்த்தியை; அவரே நீதியை வகுத்தவர்
என்று மணக்குடவர் உரையை ஒட்டிப் பொருள் கூறுவர்.

பரத மன்னனுக்கும் முன்னர் ரிஷப தேவரும்,
நாபியும் இருந்துள்ளனர், சமண வரலாற்றுப்படியே.
ஏனோ சமணம்  அவர்களை ஒதுக்கி விட்டது.
பாரத வர்ஷம் எனும் பெயர் ஏற்படுமுன்
அஜநாப வர்ஷம் என்று பெயர் இருந்துள்ளது.

இறந்த காலத்தில் நீதிநெறியைச் சொல்லும்
வழக்கம் இருந்துள்ளது. குறளில் மட்டும்
என்றில்லை.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
                            (முதுமொழிக் காஞ்சி)

சிறந்தன்று - உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று

குறளில் இறந்த காலத்தில் சொல்லப்பட்டதால், வரலாறு
சார்ந்த ஒரு மன்னனைக் குறிப்பாகச் சொன்னார் என்பது
பொருத்தமுடையதா என ஆராய வேண்டும்.

மேலும் பன்னிரு குறட்பாக்களில் 'மன்னவன்'
இடம் பெறுகிறான். மன்னவன் என்று வரும்
இடங்களில் எல்லாம் பரத சக்ரவர்த்தி
என்று பொருள் கொள்வதும் பொருந்தாது.

ஆதியாய் - காரணமாய் என்று பொருள்
கொள்வது  பொருத்தமுடையது.

* நின்றது மன்னவன் கோல்*

காலவழுவமைதி -

ஒரு செயல் எதிர்காலத்தில் நடைபெறப்போவது
இயற்கை என்னும் நிலையிலும்,
நூலறிவால் தெளியப்படும் நிலையிலும்
அச்செயலை இறந்தகாலச் சொல்லாலும்
நிகழ்காலச் சொல்லாலும் சொல்வதுண்டு.

எறும்புகள்  மேட்டுப்பகுதிக்கு ஊர்வதைப் பார்த்து ,
மழை வருமுன்பே ‘மழை வந்துவிட்டது’
என்று கூறுவதுண்டு.

நூற்பா :

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.
                               (தொல். சொல். வினை. 48)

பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய* பண்டரங்கன்
                                    - சம்பந்தர் தேவாரம்

(ஆடிய - ஆடுகின்ற :  காலவழுவமைதி )


ஆகவே  சமண சமயச் சார்பின்றி
எந்த ஒரு மன்னரின் பெயரையும்
தனிப்பட்ட முறையில் சொல்வதாகக்
கொள்ளாமல், பொதுப்படையான அரசியல்
நீதியைச் சொல்வதாகப் பொருள் கொள்வதே
இக்குறளுக்குப் பொருத்தமாக அமையும் 


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

தர்ம சாஸ்த்ரங்களும், குறளும்

 


மறைவழி எழுதப்பட்ட அற நூல்கள்
மன்னவன் கோல், அந்தணாளர்தம் அறம்,
வான் மழை இவற்றின் பிணைப்பைப் பலவாறாகக் 
கூறுகின்றன.

வள்ளுவமும்  பல குறட்பாக்களால்
அதையே வலியுறுத்துகிறது.

தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும்,
குறளுக்கும் உள்ள  நெருங்கிய ஒற்றுமையை
இங்கு காண்போம் -


யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதி⁴க³ச்ச²தி | 
ததா² கு³ருக³தாம் வித்³யாம் ஶுஶ்ரூஷுரதி⁴க³ச்ச²தி ||   
                                                                                      [2:218]

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு. 
                                                                          [396]





அரக்ஷிதா க்³ருʼஹே ருத்³தா⁴: புருஷேராப்தகாரிபி⁴: | 
ஆத்மாநமாத்மநா யாஸ்து  ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
                                                                                           [9:12]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 
                                                                    [57]


தூய்மை -

அத்³பி⁴ர்கா³த்ராணி ஶுத்⁴யந்தி மந​: ஸத்யேந ஶுத்⁴யதி | 
                                                                   [தர்ம சாஸ்த்ரம்]

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
                                            [அறத்துப்பால் :298]



மேலோர் ஒரே குரலில் பேசுவர்


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

A Tamil Identity by Name “Thirukkural” (in Tamil)

திருக்குறள் கருத்தரங்கம் – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
நிறைவுரை – 21.03.2015
திருக்குறள் எனும் தமிழ் அடையாளம்
திருக்குறளைப் பற்றி பல நோக்குகளில் தொடர்ந்து நாம் பேசிவந்துள்ளோம், இன்னும் பேச முடியும். திருக்குறள் மொழி பெயர்ப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாட்களாக நீங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திருக்குறளின் மெய்யியல் நிலைப்பாடுகள் என்ற தலைப்பினை நண்பர் பேராசிரியர் அறவேந்தன் எனக்கு வழங்கியுள்ளார். திருக்குறள் ஒரு சமண நூல், இல்லை, அது ஒரு பௌத்த நூல், இல்லை இல்லை, அதன் உட்கிடை சைவ சித்தாந்தமே என்று பலபடித்தாக அது குறித்து அறிஞர்கள் நீண்டகாலமாகவே பேசிவந்திருக்கிறார்கள். இவை ஒருபுறமிருக்க, நவீன காலத்திய, அதாவது கடந்த 200 ஆண்டுகால பண்பாட்டு அரசியல் விவாதங்களில் திருக்குறள் தமிழின் அடையாளமாக பல மதத்தவரும் மதச்சார்பில்லாதவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நின்று நிலைத்துவிட்டது என்பதையும் காணுகிறோம். காலனியக் காலத்திலிருந்து, ஐரோப்பிய அறிஞர்களும் தேசியவாத அறிவாளிகளும், வைதீக இந்து மதம் என்ற ஒன்றை இந்தியர்களின் பேரடையாளமாக உருவாக்க முனைந்த சூழல்களில், தமிழின் அடையாளம் மதச்சார்பற்ற அல்லது வைதீகச் சார்பற்ற திருக்குறள் என்ற குரலைத் தமிழர்களால் சொல்ல முடிந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒரு விடயமாகும். இது தமிழ் குறித்த ஒரு விடயமாக மட்டுமல்லாமல், இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மீயப் பண்பாட்டு எதார்த்தத்தைக் குறிப்பதாகும் என்பது டில்லியில் நாம் அதிகம் பேசவேண்டிய நிலைப்பாடாகும். காலனியச் சூழல்களில் கட்டமைக்கப்பட்ட இந்து மதம் (இலங்கையிலும் பிற தென்கிழக்கும் நாடுகளிலும் பௌத்தம்) என்பது சமீபகாலங்களில் பின்னைக் காலனியவாதிகளால் மிகத் தீவிரமாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இங்கு நினைவு கோருவோம். எனில் திருக்குறளின் மதச்சார்பற்ற அல்லது வைதீகச் சார்பற்ற தமிழ் அடையாளம் என்ற கருத்து, அதுவும் காலனியக் காலத்தில்தான் கட்டப்பட்டது எனினும், அது ஒரு மாற்று வாய்ப்பினைக் குறித்து நிற்கிறது என்று நாம் சுட்டிக்காட்ட முடிகிறது.
பின்னைக் காலனியமும் நவீனம் பற்றிய தேடல்களும்
இந்திய ஆய்வுகளில் காலனிய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்த பலவகையான நவீன மேற்கத்திய கோட்பாடுகளின் செல்வாக்கினை மறுபரிசீலனை செய்யுமாறு பின்னைக் காலனியம் நம்மைத் தூண்டிவருகிறது. நவீனம் என்பதே மேற்கு நாடுகளின் சொத்து அல்லது கருவி என்ற காலனியக் கருத்தைச் சமீபகாலங்களில் பின்னைக் காலனிய ஆய்வாளர்கள் மறுதலித்து வருகின்றனர். மேற்கத்திய செல்வாக்குகள் ஏற்படுவதற்கு வெகு முன்னதாகவே ‘நவீனப் பண்புகளைக் கொண்ட” சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகின் பல்வேறு கலாச்சாரங்களில் காணக் கிடைக்கின்றன என்று அறிஞர்கள் கூறிவருகின்றனர். மத்தியத்தரைக்கடலின் ஆசியப்பகுதியில் பரவியிருந்த இஸ்லாமியக் கலாச்சாரத்தின் தூண்டுதலாலேயே ஐரோப்பாவின் தென்பகுதியில் நவீன யுகத்தின் முதல் அலையான மறுமலர்ச்சி தோன்றியது என அறிஞர்கள் எடுத்துக்காட்டி வருகின்றனர். [இந்தியாவில் மொகலாயர் ஆட்சியும் இந்தியப் பழமையும்] திருக்குறளைப் பற்றிய ஆய்வுகளில் இது போன்ற கருத்துக்களைப் பொறுத்திப் பார்ப்பது முக்கியமான ஒரு விடயமாக எனக்குப் படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் “கீழை மேலை உலகுகளில் அறிவொளிச் சிந்தனை” (Enlightenment East and West) என்ற ஒரு நூலை நான் படித்தேன். அந்நூலின் ஆசிரியர் பாவ்லோஸ் கிரிகோரியஸ் என்பார் ஆவார். அவர் டெல்லியில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ சர்ச்சின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர். அறிவொளி இயக்கம் பிரெஞ்சுப் புரட்சியை ஒட்டி 18 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்ற கருத்தை அவர் அந்நூலில் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார். நவீன அறிவொளி இயக்கத்தோடு அதன் சிந்தனைகளோடு ஒத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க சிந்தனைகளும் இயக்கங்களும் கீழை நாடுகளின் வரலாற்றில் வெவ்வேறு காலக்கட்டங்களில் தோன்றியிருக்கின்றன என்று கிரிகோரியஸ் அந்நூலில் விரிவாக வாதிட்டிருந்தார். மிகப் பழமையான காலத்தில் தோன்றிய பௌத்தம் ஓர் இயக்கமாகவும் சிந்தனையாகவும் கீழை மரபில் நவீன அறிவொளிப் பண்பு கொண்டதாகத் தொழில்பட்டு வந்திருக்கிறது என்று அவர் எடுத்துக்காட்டியிருந்தார். பௌத்தம் இந்திய வரலாறு முழுவதிலும் மீண்டும் மீண்டும் தனது அறிவொளி ஆற்றல்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளது என்றும் அவர் அந்நூலில் குறிப்பிடுவார்.
இப்போது பின்னைக் காலனியவாதிகள் கூறிவரும் கருத்துக்கள் சில, பாவ்லோஸ் கிரிகோரியசின் கருத்துக்களை மீட்டுக் கொண்டு வருகின்றன. நவீனம், அறிவு, விஞ்ஞானம், மனிதநேயம், சனநாயகம் போன்றவை ஐரோப்பிய மையம் கொண்டவை, அவை 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய ஐரோப்பிய தொழில்யுகத்தோடு தொடர்பு கொண்டவை என்பது போன்ற கருத்துக்களை பின்னைக் காலனியம் தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறது. ஜோனார்தன் கனேரி என்ற ஓர் ஆய்வாளர் காலனிய ஆட்சிக்கு முந்திய காலங்களில், இடைக்காலம் என அழைக்கப்படும் வரலாற்றுக் காலத்தின் பிற்பகுதியில் இந்தியச் சூழல்களில் நவீனம், அறிவொளி, மனிதநேயம், சமய எல்லைகளைக் கடந்து செல்லுதல் போன்ற சாத்தியப்பாடுகள் தோன்றியிருந்தன என்ற கருத்தினை தனது நூல் ஒன்றில் சமீபத்தில் எழுதியுள்ளார். தமிழில் வெளிவந்துள்ள அகம் புறம் ஆய்விதழில் திரு ராமானுஜம் அவர்கள் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். திருக்குறள் பற்றிய நமது உரையாடல்களில் இதுபோன்ற விடயங்களை நாம் இணைத்துப் பேசமுடியும்.
திருக்குறளில் அறமே மெய்யியலாக
திருக்குறள் பொதுவாக ஓர் அற இலக்கியம் என்று நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆயின் வள்ளுவரைப் பொறுத்தமட்டில் அறமே மெய்யியலாக அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது என்பதை நாம் காணமுடிகிறது. அறமே மெய்யியலாவது என்பது மெய்யியலின் வாழ்வியல் பண்பை, அதன் நடைமுறைப் பண்பைக் குறிக்கும் ஒரு கருத்தாகும். மெய்யியல் என்பது வெறும் கோட்பாடு என்ற எல்லையை அது தாண்டிச் செல்லுகிறது. மெய்யியலில் சில வேளைகளில் இருப்பியல் (Ontology) ஆய்வுகள் அதிக இடத்தைப் பிடித்திருக்கும், இன்னும் சில வேளைகளில் அறிவுத் தோற்றவியல் (Epistemology) அதிக செல்வாக்கு கொண்டதாக அமைந்திருக்கும். பிற வேளைகளில் அறவியல் (Ethics) அதிக ஆற்றல் கொண்டதாக வெளிப்படும். மெய்யியலில் அறவியல் மிகும் போது, ஆங்கிலத்தில் அதனை Axiology என்று பெயரிடுவர். மனிதரின் வாழ்க்கை அறக் கருத்துக்களை, அற மதிப்புகளை அச்சாகக் கொண்டு சுழலுகிறது என்பதைக் குறிப்பதற்காக Axiology என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
அறவியலின் தோற்றம்
பண்டைத் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு வகைச் சூழல்களுக்கிடையில் அறவியலுக்கு முன்னுரிமை வழங்கும், அறமே மெய்யியலாக உருவாகும் நிலைமை எப்படி ஏற்பட்டது? என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். இரண்டு விதமாக இக்கேள்விக்கு நாம் பதில் கூறமுடியும். முதலாவதாக, பண்டைத் தமிழ்ச் சூழல்களில் ஏற்கனவே நிலவி வந்த உலகியல் சார்ந்த சிந்தனைகள் (திணை சார்ந்த, அகம் புறம் சார்ந்த சிந்தனைகள்), தமிழுக்குப் புதிதாக அறிமுகமாகிய சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற துறவு சார்ந்த சிந்தனைகளை எதிர்கொண்டபோது அவை இரண்டின் இயங்கியல் (Dialectics) தொழில்பாட்டின் விளைவாக அறம் என்ற என்ற மூன்றாவது தளத்தை உருவாக்கின என்று கூறலாம். அதாவது, துறவு என்ற உலகைக் கடந்த அப்பாலைச் சிந்தனை (உலக மறுப்புச் சிந்தனை), உலகியலை நோக்கி (நேர்முகச் சிந்தனை) உள்ளிழுக்கப்பட்டு அவை இணைவாக்கமாகி (Synthesis) அறவியல் என்ற வாழ்வியல் தளம் உருவெடுத்தது என்பது நமது முதல் பதில் ஆகும். ஒன்றையொன்றை மறுக்கும் துறவு, உலகியல் என்ற இரண்டு போக்குகள் தமக்குள் பொருதும்போது, அவை சமரசப்பட்டு அறவியல் தோன்றுகிறது எனலாம்.
இரண்டாவது பதிலாக, மற்றொன்றைக் கூறலாம். இங்கு பௌத்தம் குறித்த சில தகவல்களை நாம் உள்வாங்கிப் பேசவேண்டும். பௌத்தம் மத்திய மார்க்கம் (Middle Path) என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறது. பண்டைய இந்தியச் சூழல்களில் சார்வாகம், சாங்கியம், வைசேடிகம் போன்ற உலகியல் தத்துவங்கள், ஆசீவகம், சமணம் போன்ற உலக மறுப்புத் தத்துவங்கள் ஆகியவற்றுக்கு இடையில் மத்திய மார்க்கமாக பௌத்தம் உருவெடுத்தது. மேற்குறித்த இத்தத்துவங்களெல்லாம் மனித வாழ்வின், பிரபஞ்ச இருப்பின் அறுதிப் பொருட்களைக் (Ultimate Realities) கண்டறிய முயற்சி செய்தன. வெவ்வேறு அறுதிப் பொருட்களை அவை கண்டறிந்தன. இயற்கை, பஞ்சபூதங்கள், அணுக்கள் ஆகியவை ஒரு வகைப்பட்ட அறுதிப் பொருட்கள். இறைக்கருத்து என்பது இன்னொரு வகை அறுதிப் பொருள், முழுமுதற் காரணி. உயிர்கள் என்பவை மூன்றாவது வகை அறுதிப் பொருட்கள். இரண்டாவது, மூன்றாவது வகை அறுதிப் பொருட்கள் பரப்பிரம்மம், ஆன்மா, ஜீவன்கள் என்றும் பிற தத்துவங்களில் பரிணமித்ததுண்டு. பௌத்தம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகை அறுதிப் பொருட்களையும் மறுத்தது, அவை குறித்து பேசமறுத்தது, மௌனம் சாதித்தது. அறுதிப் பொருட்களின் இருப்பை மறுக்கும்போது, மேலும் கீழுமாக அமைந்துள்ள இந்த அறுதிப் பொருட்களுக்கு ஊடே உள்ள உலகியல், வாழ்வியல், நடப்பியல், இருத்தலியல் மற்றும் பயன்பாட்டியல் தளங்கள் திறந்து கொள்ளுகிறன. இதுவே அறவியலின் உலகு. இதுவே வள்ளுவர் கூறும் உலகு. அறவியலில் பரப்பு எல்லைகளைப் புரிந்துகொள்ள அறுதிப் பொருட்களைப் பற்றிய தகவல்கள் நமக்கு உதவுகின்றன. அறவியலுக்கு அருகில் புறமாக நின்று அறுதிப் பொருட்கள் நமக்கு உதவ முடியும்.
சமயச்சார்பற்ற அறவியலின் கோட்பாட்டு அடிப்படைகள்
திருக்குறளின் அறவியல் சமயச் சார்பற்றது எனக் குறிப்பிட்டோம். எந்த வகையான அனுபூதவியலையும் (Metaphysics) திருக்குறள் அதுவாக முன்வைக்கவில்லை. அது முழுக்க உலகியல் சார்ந்த ஓர் அறவியலையே முன்வைக்கிறது, இப்படிப்பட்ட அறவியல் தமிழில் முதன்முதலாக இத்தனை விரிந்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். “அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு?” (தி.கு. 31), “அறத்தான் வருவதே இன்பம்” (தி. கு. 39), அது “நோற்பாரின் நோன்மை உடைத்து” (தி.கு. 48), அன்பு என்பது ஓர் “அகத்துறுப்பு” (தி. கு. 79), “அன்பின் வழியது உயிர்நிலை” (தி. கு. 80), அடக்கம், “அதனின் ஊங்கில்லை உயிர்க்கு” (தி.கு. 122), “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” (தி. கு. 131), அவர்கள் “துறந்தாரின் தூய்மை உடையார்” (தி. கு. 159) போன்ற திருக்குறள் பாடல்வரிகளும் சொற்களும் வள்ளுவர் அறத்தையே முழு மெய்யியலாகக் கொள்ளுமாறு தூண்டுகிறார் என்பதை உணர்த்துகின்றன. இருப்பியல் தளத்திலுள்ள எதார்த்தப் பொருட்களை விட, உயிரை விட, தவம்-நோன்பு போன்றவற்றை விட அறம், அன்பு, அடக்கம், ஒழுக்கம் ஆகியவை அடிப்படையானவையாகவும் ஆக்கம் (விருத்தி) தருபவையாகவும் வள்ளுவரால் சொல்லப்படுகின்றன.
இறைவன், உயிர்கள், இயற்கை போன்ற அறுதிப் பொருட்களை ஒரு தத்துவம் மறுத்துவிடும் போது, அதன் விளைவுகளைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அறுதிப் பொருட்கள் இல்லாத ஒரு தத்துவத்தில் மையம் இல்லை என்று பொருளாகும். இதனைச் சரியாகச் சொல்லுவதானால், அறுதிப் பொருட்கள் அங்கீகரிக்கப்படாத ஒரு தத்துவத்தில் அனுபூத மையம் இல்லாமல் போய்விடுகிறது என்று பொருள். அனுபூத மையம் என்பது அதனைக் கொண்ட தத்துவத்திற்கு ஒரு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது. திருக்குறள் அறுதிப் பொருட்களைத் தேடவில்லை எனும் போது, அது அனுபூத மையமோ அதிகாரமோ கொண்டிருக்கவில்லை எனும்போது அது பன்முகத்தன்மை கொண்டதாகிறது, அது சனநாயகப் பண்பு கொண்டதாக மாறுகிறது. அது தன்னுள்ளேயே சுயவிமர்சனங்களை அனுமதிக்கிறது என்றும் பொருளாகிறது.
திருக்குறள் அனுபூதி மையங்களைத் தேடுவதை விடுத்து மிகவும் உணர்வுபூர்வமாக உலகியல் தளத்திலேயே, வாழ்வியல் தளத்திலேயே அறத்திற்கான ஆதாரங்களைத் தேடுகிறது. அறத்திற்கான மதம் சாராத சில அளவுகோல்களை, சில ஆதாரங்களை அது புதிதாகக் கட்டமைக்க முனைகிறது. புகழ்/பழி, இசை/வசை போன்ற கருத்தாக்கங்களை இங்கு குறிப்பிட வேண்டும். இசைபட வாழ்தல் (தி. கு. 239) என்ற இலக்கில் சமூக அங்கீகாரத்திற்கு முதன்மை வழங்கப்படுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் (தி.கு. 50), அவரவர் எச்சத்தால் காணப்படும், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் (தி. கு. 233), உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (தி. கு. 140) போன்ற வரிகளெல்லாம் அறத்துக்கான சமூகப் பாதுகாப்புகளைக் குறிக்கின்றன. “அறத்தான் வருவதே இன்பம்” என்று சொல்லும்போதும் உலகியரீதியான ஆதாரம் ஒன்று, நியாயம் ஒன்று முன்வைக்கப்படுகிறது.
அறம் தினசரி வாழ்வின் செயல்பாடுகளாக மாற்றப்படுதல்
திருக்குறளில் அறம் வெறும் கருத்துக்களாக அல்லது மதிப்புகளாக மட்டும் முன்வைக்கப்படாமல் தினசரி வாழ்வின் நடைமுறைக் கூறுகளாக மாற்றப்படுகிறது. விருந்தோம்பல், இனியவை கூறல், இன்னா செய்யாமை, அடக்கமுடமை, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், ஊருணி நிறைந்தற்றே, தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்பது போன்ற வரிகளும் சொற்களும் அன்றாட வாழ்வின் நடத்தைகளை ஊடுருவி நிற்கின்றன. திருக்குறள் முழுதுமே தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது போன்ற உணர்வு தோன்றுகிறது.
திருக்குறள் அறத்தின் சமூகவியல்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சமூகநிலைமைகளை யூகித்து திருக்குறளின் சமூகவியலை மீட்டெடுக்க முடியுமா? முயற்சிக்கலாம். புராதன இனக்குழுச் சமூகத்தில் தீவிர சமூக முரண்கள் தோன்றாதவரை உணர்வுபூர்மாக அறவியல் என்ற ஒன்றை உருவாக்கவேண்டுமென்று மனிதர்கள் கருதியிருக்கவில்லை. திருக்குறளின் காலத்தில் “இலர் பலராகி” (தி. கு. 270) விட்டனர். “அற்றார் அழிபசி” (226) அக்காலத்தின் எதார்த்தமாகி விட்டது. இவ்வாறாக, சமூக ஏற்றத்தாழ்வுகள் தோன்றியபோது, அவற்றுக்கான எதிர்க்குரலும் பழைய கூட்டுச் சமூக வாழ்வு குறித்த நினைவுகளை நினைவுக்குக் கொண்டுவரும் வழக்கமும் தோன்றி விடுகின்றன. பழைய வாழ்வை மீட்டுக் கொணர அக்கால வாழ்வின் தன்னுணர்வற்ற செயல்பாடுகளைக் கூட கோட்பாடாக வகுத்துச் சொல்லவேண்டி வந்தது. சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதற்கான சில உத்திகளை உருவாக்க வேண்டி வந்தது. இறுதியாக, நெருக்கடிகளைச் சகித்துக் கொண்டு அவை நேரடியாக ஒருவரைத் தாக்கி வீழ்த்தாமலிருக்க தகவமைப்பு முறைகளை உருவாக்க வேண்டியிருந்தது. இவ்வாறாக எதிர்க்குரல் என்பதிலிருந்து தகவமைப்பு வரையிலான ஒரு நெடிய வேலைத்திட்டத்தை அறவியல் குறிப்பிட்ட அக்காலத்தில் உருவாக்கியுள்ளது என்பதைத் திருக்குறளின் வழி உணர முடிகிறது.
திருக்குறள் அறவியலின் மெய்யியல்
மேற்குறித்த சமூகப் பின்புலத்தை மிகப் பழங்கால இந்திய தத்துவ தரிசனங்கள் தமது மெய்யியல் மொழியில் வெளிப்படுத்தின. பௌத்த சிந்தனையின் நான்கு அடிப்படை உண்மைகள் என்ற பகுதியை இங்கு நினைவுக்குக் கொண்டு வருவோம். 1. துக்கம் உள்ளது. 2. துக்கத்திற்குக் காரணம் உள்ளது. 3. அக்காரணத்தை நீக்க துக்கமும் நீங்கும். 4. துக்கத்தை நீக்க எட்டு வழிப்பாதையைப் பின்பற்ற வேண்டும்.
துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரணப் பாதை என்ற நான்கு விடயங்களைப் பற்றிப் பௌத்தம் பேசுகிறது. துக்கத்தை நீக்குவது என்ற பௌத்த இலக்கு உலகைக் கடந்த உண்மையைத் தேடுவதோ, அடைவதோ அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு மானுடவியல், இருத்தலியல், உலகியல், வாழ்வியல் மற்றும் பயன்பாட்டியல் பிரச்சினை.
வட இந்தியச் சூழல்களில் விளைந்த சமண பௌத்த தத்துவங்கள் துக்கத்தின் காரணங்களாகவும் துக்க நிவாரண வழிகளாகவும் முதல் கட்டத்தில் சில தீவிரமான கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் முன்வைக்கின்றன. ஆசை, பற்று, பந்தம், வினை, மலம், பாசம், ஆணவம், அகங்காரம் என்ற அடுத்தடுத்த கருத்தாக்கங்களை முன்வைத்து அவை துக்கத்தை விளக்க முனைகிறது. இவ்ற்றை அடியோடு அகற்ற அவை நிலையாமை, உலக மறுப்பு, இறுதியாகத் துறவு என்ற தீர்வுகளை முன்வைத்தன. திருக்குறளின் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களில் (34-37) உள்ள பாடல்கள் இந்நிலைப்பாட்டைத் தெள்ளிதின் உணர்த்துகின்றன. நீங்குதல், துறத்தல், விடல், அறுத்தல், அடக்கல், கெடல், வேண்டாமை, இன்மை, நீப்பு போன்ற சொற்களை வள்ளுவர் இவ் அதிகாரங்களில் சரளமாகப் பயன்படுத்துகிறார். இவ் அதிகாரங்களில் பெருமளவில் வள்ளுவர் துக்கத்தின் காரணங்களையும் நிவாரண வழிகளையும் தத்துவார்த்தக் கறார்த்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார். “தீரத் துறந்தாரின்” (348) சார்பாக நின்று இவ் அதிகாரங்களை வள்ளுவர் இயற்றியுள்ளார். ஆயின் இவையே திருக்குறளின் முழுச் செய்தியாக ஆகிவிடவில்லை.
வள்ளுவம் “தீரத் துறந்தாரின்” நிலைப்பாட்டிலிருந்து நகர்கிறது. திருக்குறள் ஓர் அறநூலாக, வள்ளுவத்தில் அறமே மெய்யியலாகப் பரிணமிப்பது இங்குதான். சமண பௌத்தத்தின் துறவு தமிழ் மரபில் விளைந்த உலகியலின் அழுத்தங்களுக்கு ஆட்படும் சந்தர்ப்பம் இதுவே. துறவின் கறாரான தத்துவார்த்த நிலைப்பாடுகளை நன்கு அறிந்திருந்த வள்ளுவர் துறவிலிருந்து உலகியலை நோக்கி நகருகிறார். குடும்பம், அரசு, குடிமைச் சமூகம் என்ற மூன்று அமைப்புகள் அவரது கவனத்தைக் கவருகின்றன. மொத்த திருக்குறளுமே இம்மூன்று சமூக நிறுவனங்களை நோக்கி நகருகின்றது. வினைக் கோட்பாட்டின் அடிப்படையான பாத்திரத்தை நன்கு அறிந்திருந்த வள்ளுவர், அதனை உணர்வுபூர்வமாகக் கடந்து செல்ல முனைகிறார். வினையை அடியோடு களையவேண்டும் என்பதைக் கோட்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ளும் திருக்குறள், பொருட்பாலில் தெரிந்து வினையாடல், தெரிந்து செயல்வகை, வினை உடமை, வினைத் திட்பம், வினை செயல்வகை என விரிவாக வினையைக் கையாள முனைகிறது. “பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல்” (675) என செயலை சமூகச் சூழல்களுக்குள் வரையறை செய்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

when writing on a much-debated topic like this one, they should at least show the intellectual sincerity to mention divergent points of view, and not try to create a false impression for the lay readerthat they have been conclusively addressed.  That is neither very honest nor commendable. 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்-குறள்167.

‘அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்’ என்று சொல்லிவிட்டு அடுத்து இன்னொரு வரியை இடுகிறார். ‘இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று’. நல்குரவு என்றால் வறுமை. இந்தக் குறள் செல்வத்திற்கு காரணமாக அழுக்காறின்மையையும் வறுமைக்குக் காரணமாக அழுக்காறுடைமையையும் கூறியதாக மணக்குடவர் விளக்கம் தருகிறார்.

திராவிடக் கலைஞர் கருணாநிதி தன் விளக்க உரையில், ‘செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்’ என்று சொல்கிறார்.

திருவள்ளுவர் சமணர் என்றால் இந்து மத தொன்மங்களை ஏன் குறளில் மேற்கோள் காட்டவேண்டும்.?

‘பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்’ போன்ற சொற்கள் சமணருக்கு மட்டும் சொந்தமானதல்ல.

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் – 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் – 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் – 554



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் அதற்க்கு இங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடையது.

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது வள்ளுவத்தின் சிறப்பு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

மெய் வருத்த கூலி என்னும் உழைப்பு என்பது இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் விதித்த விதியை இறை பிரார்த்தனை மூலம் வெல்லலாம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கொள்ளுதல்தான் சரியானது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே?

ஆக திருவள்ளுவர் ஓர் இறைவனை ஏற்றுக்கொண்ட உத்தமர்.அனைத்து இறைத்தூதர்களும் மக்களுக்கு போதித்த ஒரே இறைவனையே வள்ளுவரும் வணங்கச் சொல்கிறார்.ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! வள்ளுவர் வழி செல்வோம்! வான் புகழ் அடைவோம்!!



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

ஷாலி says:

//ஷாலி அவர்களே,
தாங்கள் திருவள்ளுவர் சமணர் அல்லர், இந்துமததுச் சேர்ந்தவர், அச்சமயக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர் என்பதைச்……. ஒரு அரிசோனன் says://

அய்யா! அரிசோனரே… இந்து மதம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
பிரம்மா, சிவன்,விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகந்தர்வர், சித்தவித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர், மாற்றுமுண்டான தேவரிஷிகளை கும்பிடுகின்ற மதம்.
முக்கோடி தேவர்கள் என்பதற்கு- தமிழ் எண்கள் வரிசைப்படி ஒன்று, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கற்பம், நிகர்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நிலம், அர்ட்டம், பரர்ட்டம், ஊரியம், முக்கோடி, மகாயுகம் என்று போகிறது. இதில் நமக்குத் தேவையான முக்கோடி, பத்தொன்பதாவது வரிசையில் வருகிறது.
இதை எப்படி எழுதுவது. அதாவது முக்கோடி, முப்பதுக்குப் பின்னால் 21 சுழியம் எழுத வேண்டும். இதைத்தான் முக்கோடி என்று சொல்வது. அல்லது கோடி கோடி கோடி என்றும் சொல்லலாம்.
இன்றைய இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி.
அப்படி என்றால்?
முப்பத்து முக்கோடியை, இந்துக்களின் எண்ணிக்கையான 90 கோடியில் வகுத்தால் வரும் விடையென்ன?
அதாவது
= 3.3 லட்சம் கோடி
ஆக, ஒரு இந்துவுக்கு, 3.3 லட்சம் கோடி கடவுள்கள்???
இவர்களெல்லாம் போதாது என்று நண்பர் அரிசோனர் திருவள்ளுவருக்கு பட்டையும் உத்திராட்ச கொட்டையும் அணிவித்து சைவச்சாரியார் ஆக்கி அழகு பார்க்க விரும்புகிறார்.

அரிசோனருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.திருச்சிற்றம்பலத்தில் பெரிய புராணத்திற்கு, சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” முதலடி எடுத்துக்கொடுக்க, தில்லை அம்பல அந்தணர்களை ஓரங்கட்டி, பாலகிருஷ்ண சிவாச்சாரியார் என்ற கற்பனை சைவரை உருவாக்கி சேக்கிழார் பெருமானையே ஓய்! என்று விளித்து உரையாட விட்டவர். திருவள்ளுவர் மாட்டினால் விடுவாரா?
http://www.tamilhindu.com/2014/06/35472/

திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சாரவில்லை.அன்று சமணம்,சைவ வழக்கில் இருந்த வார்த்தைகளை போட்டு ஓரிறைக் கொள்கை உள்ள குறளை எழுதினார்.வள்ளுவம் உரைப்பது ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!! இந்த உருவமில்லா ஓரிறைக் கொள்கையை சிவவாக்கிய சித்தர்கள்,வால்மீகி சித்தர்கள் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
“ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர் கண்டதையெல்லாம் சரிதை என்பார்
ஓமப்பா கல் செம்பைத் தெய்வமேன்றே
உருகுவார் பூசிப்பார் கிரியையென்பார்…
வால்மீகி சித்தர்.-சூத்திர ஞானம்.16.



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

திகம்பர சமணர்களில் இல்லறத்தார் பூணூல் அணிவர்; ஒரு ஆச்சாரமான இல்லற சமணன் (ஸ்ராவகன் என்று ஆண்களையும்; ஸ்ராவகி என்று பெண்களையும் அழைப்பர்)- பூணூல் அணியும் ஜைனன்- எவ்வாறு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று “ஸ்ராவாக சாரம்” (இல்லறத்தார் ஒழுக்கம்) என்ற நூல் விரிவாக விளக்கும். தற்போதய தமிழக திகம்பர இல்லறதோர் பூணூல் அணிந்தாலும், சந்தியாவந்தனம் செய்வது மற்ற மதங்களை போலவே குறைந்து வருகிறது. ஆனால் திகம்பர சாது பூணூல் அணிய மாட்டார்;தாடியும் ஜடா முடியும் தரிக்க மாட்டார். சிற்பத்தில் உள்ளது ஒன்று சமண இல்லறதாராய் இருத்தல் வேண்டும் அல்லது புனைவாக இருத்தல் வேண்டும்.

 



__________________


Newbie

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

 

 

 

 

உலகியற்றியான், செய்யாள், தவ்வை, தேவர், புத்தேள், புத்தேள்நாடு, வானோர், அகல் விசும்புளார், அவி உணவின் ஆன்றோர், இந்திரன், சந்திரன், தாமரைக்கண்ணான், தென்புலத்தார், அடியளந்த மாலவன், ’திங்களைப் பாம்பு கொண்ட' சந்திர க்ரஹணக் கதை, ததீசி முனிவர் முதுகெலும்பை அளித்த கதை எல்லாம் குறளில் இடம்பெறும் வைதிக சமயக் கருத்துகள். உவமைக்காக - கருத்து வலியுறுத்தலுக்காக இவை இடம் பெறுகின்றன.

 

அமரர் பற்றிய செய்திகள் மஹாவீரர் காலத்திலும், பழைய சமண நூல்களிலும் இல்லை என்கிறார் ஒரு சமண அறிஞர் -

If you study Jain history, you will find that all such Bhavatipati
devas were introduced in Jainism about 200 to three hundred years after Lord Mahavir's Nirvan.

The Agam sutras and ancient literature did not mention them.
To ask help by praying or reciting Mantras to Bhavanpati devas
violates the true Jain principles.

Pravin K. Shah
Jaina Education Committee
Raleigh NC 
USA

விழுமியம் - சமயம் சாராத தொன்மையான நூல் எதுவுமில்லை.

மூவா முதலா உலகு -
’உலகு தான்தோன்றி; அதற்கு முதலும் அழிவும் முடிவும் இல்லை; அதற்கு ஒரு படைப்பாளி கிடையாது. அது மாற்றமே இயல்வானது, இயக்குபவன் ஒருவன் இன்றித் தன்படியே இயங்கிக் கொண்டிருப்பது’ இதுவே சமணக் கோட்பாடு. முதற்குறட்பாவே சமணத்தோடு முரண்பட்டு நிற்கிறது.

கருமத்தளை நீங்கி, முத்தி நிலை பெற்றோர் அனைவரையுமே கடவுளராக ஏற்பது சமண வழக்கம். முத்தொழில் , ஐந்தொழில் புரியும் வல்லமை வாய்ந்த கடவுளைச் சமணம் ஏற்கவில்லை.

கழுவாய் தேடுதல், பரிஹாரம் தேடுதல், துன்பம் நீங்கக் கடவுளை வேண்டுதல், துறை படிந்து தீர்த்தமாடுதல் இவை சமண சமயத்தில் தடுக்கப்பட்டவை. தெய்வ மூடம், தீர்த்த மூடம் என்பர் சமணர். மனத்துயர் மிகவும் வாட்டிய நிலையிலும் சாவகநெறி சார்ந்து நின்ற கண்ணகி இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்கிறது சிலம்பு.

படைக்கலம் தாங்கிய கடவுளர், தேவியருடன் இருக்கும் கடவுளர் - இவர்களைத் தொழுவது சமணத்தில் தடுக்கப்பட்டுள்ளது; கொலையும், காமமும் விலக்கத்தக்கவை என்பதால்.

முக்தி அடைந்த தீர்த்தங்கரரைத் தொழுதால் அவர்கள் நாம் முக்திபெற ஒருகாலும் உதவமாட்டார்கள்; ஏனெனில் உயர்நிலை எய்திவிட்ட அவர்களுக்கு இவ்வுலகுடன் ஒருவிதத் தொடர்பும் கிடையாது. அவரவர் தம் வினை நீங்கத் துறவு பூண்டு, கடுமையான தவநெறிகளை மேற்கொள்ள வேண்டும், இறுதி நெருங்குங்கால் ‘சல்லேகனை’ எனும் உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறக்க வேண்டும் என்பதே சமண நெறி. ‘சல்லேகனை’ இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

’இறைவன் பொருள்சேர் புகழ்புரிதல்’ [ கடவுள் புகழ் பாடுதல்] எனும் வழக்கம் முற்றிலும் வேதநெறிச் சார்புடையது; எண்ணற்ற மறைப்பாக்களும், தோத்திரப் பாக்களும் இன்றளவும் சான்றுகூறி நிற்பன.

’பச்யேம சரத: சதம், ஜீவேம சரத: சதம்’ - என மண்ணுலகில் அல்வழக்கொழிந்த, அமைதி தோய்ந்த நிறை வாழ்வை நாட உபதேசிப்பது அருமறை. அதையொட்டி ’மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என மக்களுக்கு இனிமையாக அழைப்பு விடுத்தார் மறைவல்ல காழிப்பிள்ளையாரும். ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை’ உயர்வாகப் பேசுகிறது வள்ளுவம். வையத்து வாழ்வை ஒரு பொருட்டாகவே கருதாமல் , முற்றிலும் விலக்கி வாழ்தல் சமணத்தின் அடிப்படைக் கொள்கை. சமணம் அரசியல் செல்வாக்குப் பெறுங்கால் பல சமுதாயப் பணிகளைச் செய்தது வரலாற்று நிகழ்வு, மறுப்பில்லை. ஆனால் தனிமைத் தவ வாழ்வே சமணத்தின் அடிப்படை.

சமணத்தின் அடிப்படைக் கோட்பாட்டுப் புரிதலோடு குறளை அணுகுவோமானால் தெளிவு பிறக்கும்.

இல்லறம் - உழுதொழில் போற்றப்படுவதாலும், மாந்தர்தம் முக்கிய நிலைப்பாடுகளான ‘அறம், பொருள், இன்பம்’ எனும் திரிவருக்கப் பாகுபாட்டை வலியுறுத்துவதாலும், அறம் முரணா இன்ப நெறி துய்த்து வாழ்வாங்கு வாழச் சொல்வதாலும், முத்தர் வாழும் தாமரைக் கண்ணான் உலகைச் சொல்வதாலும், மற்றீண்டு வாரா நெறியை முன்வைப்பதாலும் செந்நாப்புலவர்தம் படைப்பு வேதசமயச் சார்புடைய நூலே.

திருவள்ளுவரைச் சமண முனிவராகக் காட்டும் ஓவியங்கள், நாணயம் உள்ளன. வள்ளுவர் ‘ஸ்ரீ வல்லபர்’ எனும் சமண முனிவர், புகழ்பெற்ற சமணத் துறவி குந்தகுந்த ஆசாரியர்தான் குறள் எழுதியவர் என்றும் சில ஆய்வு முடிவுகள்.

பெண்டிர்தம் அழுகை, சிரிப்பு, பாட்டு இவற்றைக் காண்பதையும், கேட்பதையும் கூடச் சமணம் தடை செய்கிறது; இந்நிலையில் 
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள
எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’சமணத்தோடு ஒட்டுகிறதா ?
நடுநிலையாளர் சற்றே எண்ணிப் பார்க்கவும்.

பிற சமயங்களோடு திருக்குறளை ஒட்டுவது உள்ளீடற்ற போலித்தனமான செயற்கை முயற்சி.

பல குறட்பாக்கள் தர்ம சாஸ்திர நூலை - மஹாபாரத சுலோகங்களை அடியொற்றி அமைவதால் குறள் ”மறை சார்ந்த நீதிநூல்” என்பதே

 

மறுக்கவொண்ணா உண்மை. திருவள்ளுவ மாலையின் பல பாக்களே சான்று.

 

 

 

தேவ்



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

வள்ளுவர் பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றும் போக்கு மிகவும் தவறானது, திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.  

 

கோவையைச் சேர்ந்த திரு நடேசன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்.

 

 

"அவிசொரிந்து ஆயிரம் வேடலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று" 
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

 

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க , 
சான்றோர் பழிக்கும் வினை" 

இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம். சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

 

"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின், 
நீரினும் நன்றதன் காப்பு" 

இந்தத் திருக்குறளில் உழவுத் தொழிலின் நான்கு நிலைகளைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

 

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது. 

 

https://www.facebook.com/natesan.muthukumaraswamy?pnref=story



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

http://www.vikatan.com/news/tamilnadu/71672-did-thiruvalluvar-write-thirukkural-issue-raises-again.html

திருக்குறள் தொடர்பாக முனைவர். துளசி ராமசாமி வெளியிடும் கருத்துகள் ஆய்வு நோக்கில் மிக முக்கியமானவை. அதிலும், '  நமது பண்பாடு குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் வெளிநாட்டவர்களிடையே ஏராளமான கோளாறுகள் இருக்கின்றன. நம்முடைய அணுகுமுறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன' என்கிறார் அவர். 

' சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்' என்ற புத்தகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் முனைவர்.துளசி ராமசாமி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல ஆண்டுகாலம் மூத்த ஆய்வாளராக பணியாற்றியவர். இதுவரையில், 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். தற்போது ‘களப்பிரர் காலம் இருண்ட காலமா? இருட்டடிப்புச் செய்த காலமா?’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வருகிறார். இந்நிலையில், பழந்தமிழர் குறித்த ஆய்வில் நிகழும் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். " ஆய்வுப் பணிகளில் ஈடுபடும்போது தரவுகள் சரியாக இருந்தால்தான், ஆய்வில் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் மிகச் சரியானதாக இருக்கும். நம்மைப் பற்றிய ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தேன். அவர்கள் சேகரிக்கும் தரவுகளில் கோளாறு இருக்கிறது. அதனால் அவர்கள் எந்த அளவில் நம்மைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டாலும், அது முழுமையாக வடிவத்துக்கு வருவதில்லை. ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக நாம் இருப்பதாலும் பண்பாட்டைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பதாலும் தரவுகளைச் சரியாகச் சொல்கிறோம். ஆனால், நம்முடைய அணுகுமுறையில் கோளாறு இருக்கிறது" என்கிறார் துளசி ராமசாமி. 

தொடர்ந்து, " நமக்குக் கிடைக்கும் தரவுகளைச் சரியாகச் செப்பனிட்டுக் கொடுத்தால் ஆய்வு முடிவுகள் சரியாக வரும். படிக்கும் காலத்தில் திருக்குறளைப் படித்திருக்கிறோம். அப்போது தேர்வுக்காக குறள்களை மனப்பாடம் செய்தோம். பிற்காலத்தில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அதே திருக்குறளை திரும்ப திரும்பப் படித்தேன். திரும்பத் திரும்ப ஒரே கருத்து சொல்லப்படுகிறதே என்ற எண்ணம் இதைப் படிப்பவர்களுக்கு ஏற்படும். ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஐந்தாறு பத்திகளைப் படித்தாலே, ஒரு கருதுகோளுக்கு வருவார்கள். அதன்படியே தரவுகளைச் சேகரிப்பார்கள். அவர்களது ஆய்வோடு தரவுகளும் பொருந்தி வந்தால், கருதுகோள் நிலை கொள்ளும். இல்லாவிட்டால், 'நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும்.  

அப்படித்தான், ' திருக்குறளை ஒரே நபர் எழுதவில்லை' என்ற கருதுகோளுக்குள் என்னால் வர முடிந்தது. 1330 குறளை எழுதியவருக்கு 133 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை வைத்துவிட்டோம். ' திருவள்ளுவர் இல்லை' என்று நான் சொல்லவில்லை. அதை எழுதிய பலர் யார் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. எனக்கு முன்னால் பல பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலரும் வழிவழியாக சொல்லி வந்த ஒரு கருத்து, ' இது சமண மதத்தைச் சார்ந்தது. அதன் கொள்கைகள் குறளில் இடம் பெறுகின்றன' என்பதுதான். என்னுடைய ஆய்வின் முடிவுகளை வெளியில் சொல்கிறேன். மற்றவர்கள் சொல்வதற்கு மறந்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை. திரு.வி.கவும், ' சமண தத்துவம் உள்ளது' என்கிறார். தரவுகளை வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறோம். என்னுடைய கூற்றை மறுக்க வேண்டும் என்றால், உரிய தரவுகளோடு விவாதம் நடத்த வேண்டும். ஒரு பேராசிரியர் என்னிடம், 'நீங்கள் சொல்வதை என்னால், ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கோபப்பட்டார். ' தரவுகள்தான் ஆய்வுகளைப் பேச வேண்டும். இது பட்டிமன்றம் கிடையாது. அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான் எழுதினேன்' என அவருக்கு பதில் அளித்தேன். 

திருக்குறளை எழுதியது சமணர்கள் என்றால் எப்படி? தமிழர்களும் சமண மதத்தைத் தழுவிருக்கிறார்கள். சமண மதத்தவர் கி.மு. 3-ம் நூற்றாண்டில் மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வந்தவர்கள். அவர்கள் தமிழை வளர்க்க வந்தவர்கள் அல்ல. ஆனால், தமிழில் இலக்கண நூல்களை எழுதியிருக்கிறார்கள். இவை அனைத்தும் தரவுகள் மூலம் கிடைத்தன. சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள். சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், ' சங்க இலக்கியத்தின் ஆசிரியர்கள் பெயரைச் சொல்ல முடிகிறதே...அதேபோல், திருக்குறளை எழுதிய பலர் யார் என்று சொல்லுங்கள்' என ஒருவர் கேட்டார். அந்த இடத்தில் மழுப்பலாகத்தான் பதில் சொன்னேன். எனக்குப் பதில் தெரியவில்லை. ' சமண முனிவர்கள் என்று சொல்கிறீர்களே, அங்கே அறத்துப்பால் வருகிறது. அவர்கள் எழுதியிருப்பார்களா?' எனவும் ஒருவர் கேட்டார். ' அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்று பார்ப்பதைவிடவும், அனைத்து குறள்களிலும் புத்திமதி சொல்வது போலவேதான் வருகிறது. வேறு எதுவும் இல்லை' என்று சொன்னேன். இன்னும் முழுமையான ஆய்வுகளுக்குள் நாம் செல்ல வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து முழுக்க சங்க இலக்கியங்களைப் படித்தேன். பின்னர், அது குறித்து முழுமையான ஆய்வில் ஈடுபட்டபோதுதான், ' அவை முழுக்க நாட்டுப்புறப் பாடல்களே' என்ற முடிவுக்கு வர முடிந்தது. 

களப்பிரர் காலம் தமிழ்நாட்டின் ஒளிர்ந்த காலம் என்றும் எழுதினேன். ' செழியன் என்பது பாண்டியன் வெளியிட்ட நாணயம் அல்ல. வணிகர்கள் வெளியிட்ட நாணயம்தான்' என்று எழுதினேன். என்னுடைய தரவுகளில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். நமது நாட்டில் ஆய்வுகள் வளர வேண்டும். விமர்சனக் கலை வளர வேண்டும். முன்னத்தி ஏர் பிடித்து இழுக்க வேண்டும். இயக்கம் சார்ந்தவர்களோ, பேராசிரியர்கள் சொன்னதற்காக சோரம் போய்விடக் கூடாது" என்கிறார் முனைவர்.துளசி ராமசாமி. 

திருக்குறள் சர்ச்சை குறித்து, காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ஹாஜாகனியிடம் பேசினோம். " திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் காலம்காலமாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ' அவர் மயிலாப்பூரில் பிறந்ததார்; வாசுகி அவருடைய மனைவி' என்பதற்கெல்லாம் எவ்வித ஆதாரமும் இல்லை. திருக்குறள் மட்டுமே உண்மையானது. 'புலால் மறுத்தல், அறத்தைப் பேசுதல் போன்றவற்றால் அவை சமண முனிவர்களால் எழுதப்பட்டது' என்கிறார்கள். முனைவர்.துளசி ராமசாமி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் என்று தெரியவில்லை. கண்ணதாசன்கூட, ' இடைச்செருகலாக சிலவற்றை குறளில் சேர்த்துள்ளனர்' என்கிறார். மனித குலத்திற்கு வழிகாட்டும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை குறித்து வள்ளுவம் பேசுகிறது. நிலைத்த புகழ்பெற்ற நூல்கள் மட்டுமே இந்த நான்கையும் பேசும். திருக்குறளை எழுதியது ஒருவரா? பலரா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உதாரணமாக, ஐங்குறுநூறு நூலை எடுத்துக் கொண்டால், பல புலவர்கள் சேர்ந்து பாடிய பாடல்களைக் காணலாம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான எழுத்து நடை இருக்கும். 

ஆனால், வள்ளுவத்தைப் பொறுத்தவரையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான ஆழம் இருக்கிறது. பலர் சேர்ந்து எழுதியிருந்தால், இப்படியொரு ஆழமான தொனி அமைந்திருக்காது. அதேபோல், திருக்குறளுக்கு உதாரணம் காட்டுவதற்கு, குறளைத் தவிர வேறு ஒரு நூல் இல்லை. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளும் குறளில் இல்லை. குறிப்பிட்ட மதம், இனத்திற்காக வள்ளுவம் எழுதப்படவில்லை. பல பேர் சேர்ந்து எழுதியிருந்தால் குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டிருக்கும். சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர். ஆனால், சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இல்லை. அதனாலேயே, குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது. குண்டலகேசியில் புத்த மதக் கருத்துக்கள் தூக்கலாக இருந்தாலும், சிலப்பதிகாரம் அளவுக்குப் பெயர் பெறவில்லை. திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம். சமண முனிவர்களால் எழுதப்பட்டிருந்தால், சமணர்களே திருக்குறளைப் போற்றி பாதுகாத்திருப்பார்களே?" என்கிறார் விரிவாக.



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1976:2014-02-18-03-17-35&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

E-mailPrintPDF

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்இருபதாம் நூற்றாண்டில்  திருக்குறள் பற்றிய ஆய்வில்   பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான  நூல்கள்  வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர்.  திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல்.  அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.  திருக்குறளின் முதல் பெயர்  முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குறளும்  இரண்டு அடிகள்,  ஏழு சீர் களைக்  கொண்டது. திருக்குறளில்  இடம்பெறாத இரு சொற்கள்     -     தமிழ், கடவுள். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்  -   மணக்குடவர்.  முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்   -    ஜி.யு. போப். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு.  திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை  பத்தாவது.  மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.

பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:

பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது. சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது.  அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.

ஆனால் திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் கால்கோள் இட்டதைத் தொடர்ந்து பரிமேலழகர் திருக்குறளைத் தமிழ்ப் பண்பாட்டு நூலாகக் கருதாமல், அதன்மீது ஆரியப் பண்பாட்டையும் மதச் சாயலையும் கருத்தியலையும் திணித்தார் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பரிமேலழகர் வைணவ சமய பிராமணர் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்த்தது.

முப்பால் என்னும் பெயர் கொண்ட திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் அது "வீடு" பற்றியும் பேசுகிறது என  பரிமேலழகர் வலிந்து உரை கண்டார். 

பரிமேலழகர் ஆரியப் பண்பாட்டுக்கு உரிய தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்கு புருடார்த்தங்களின் தமிழாக்கமே திருக்குறள் என்றும் வள்ளுவர் மனுநீதி சாத்திரத்தைத் தான் தமிழில் தருகிறார் என்ற விமரிசனம்  முன்வைக்கப்பட்டது.

காட்டாக பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரைப் பாயிரத்தில் 'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆகும்’ என்று சொல்கிறார். அது ஒழுக்கம், வழக்கு,  தண்டம் என்ற மூன்று என்று சொல்லும் பரிமேலழகர் "அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று சொல்கிறார். அத்துடன் தண்டம் என்பது ‘நால்வகை நிலத்ததாய் வருணந்தோறும் வேறுபாடு உடையது’ என்கிறார். அதாவது குறளின் நீதிக்குப் பதில்   ஒரு குலத்துக்கொரு  நீதி சொல்லும் மனு நீதியைக் கைக்கொள்கிறார். 

திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல.  வள்ளுவர் நால்வகை வர்ணங்களையோ, அந்தந்த வர்ணத்தாருக்கு உரிய சிறப்பு ஒழுக்கத்தையோ பற்றிப் பேசாமல்  நாடு, இனம், சமயம் கடந்து அனைத்து மாந்தருக்கும் பொதுவான அறநெறியை உரைக்கிறார்.  பிறப்பு ஒக்கும் என்கிறார். ஆனால் பரிமேலழகர் தமது உரையில் வள்ளுவர் வர்ணாசிரம முறையை ஆதரிப்பதாகக் காட்டுகிறார்.

பரிமேலழகர் பெண்கள் இயல்பு பற்றி குறளில் இல்லாத, தவறான, விளக்கம் தந்துள்ளார். குறள் 61 உரையில் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற தொடருக்கு ''அறிவறிந்த' என்றதனான் 'மக்கள்' என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது' என்று கூறி, 'இதனால் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது' என மேலும் ஒரு மனுநீதிக் கருத்தைத் திணிக்கிறார்.

குறள் 68 இல் 'கேட்ட தாய்' என்பதற்கு 'பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய்' என சிறப்பு  உரையில் கூறியுள்ளார். அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும் அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனப்  பரிமேலழகர் உரைக்கிறார்.  இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.

"திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடு உடைமையின்" எனவும் "அஃதாவது - தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையரால்" எனவும் ஆங்காங்கே குறட்பாக்களின் உரை விளக்கங்களில் வருணாசிரம கருத்துக்களை - வள்ளுவர் கருதாததை - வலிந்து நுழைத்து பரிமேலழகர்  வலிந்து உரை எழுதியிருக்கிறார்.

காமத்துப் பாலில் 'பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஒரு காரணம்' என்று வள்ளுவர் சொல்லாததைச் சொல்லி புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை அதிகாரங்களுக்கு துறை வகுக்கும்போது உரை காண்கிறார்.

பரிமேலழகர் கொண்ட சில பாடங்கள் மணக்குடவருடைய பாடங்களினும் வேறுபட்டுள்ளன. அவற்றுள் சில மணக்குடவரினும் சிறந்தவை. பிற பாடங்களில் பரிமேலழகர் உரை ஏற்கமுடியாதனவாக உள்ளன.

'பலவிடங்களில் பரிமேலழகர் இலக்கண அமைதிக்காக இலக்கியத்தை முறித்து இயற்கைக்கு மாறான பொருள் கொண்டுள்ளார்' என்று தமிழறிஞர்  ரா. பி.  சேதுப்பிள்ளை கருதுகிறார்.

எனவே, பரிமேலழகர் உரையில் அடங்கியிருக்கின்ற ஆரியக் கருத்தியலை மறுத்து, தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப திருக்குறளுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

ஒரு நூலுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் எழுதப்பட்டது ஏன்? அதற்கான  தேவை என்ன? திருக்குறளுக்கு பல உரைகள் எழுதப்பட்டதற்கு முக்கிய காரணம் சில குறள்களின் பொருளை திருவள்ளுவர் ஊகத்துக்கு விட்டுவிட்டார். காட்டாக,

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.  (குறள் 41)

கலைஞர் உரை:   பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

மு.வ உரை:  இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை:  மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

பரிமேலழகர் உரை: இல்லறத்தில் வாழ்பவன், பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் துணையாவான்.

மணக்குடவர் உரை:  இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்.

இன்னொரு குறள்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.                          (குறள் 377)

வகுத்தான் என்பதற்கு 'தெய்வம்' என பரிமேலழகரும் 'விதானம் பண்ணினவர்' என மணக்குடவரும் 'முன்னஞ் செய்தார்' எனக் காலிங்கரும் 'ஊழ்' என மு.வ. அவர்களும்   'வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறி' எனக் கலைஞரும்  'இறைவன் விதித்த விதி' என்று சாலமன் பாப்பையா அவர்களும் பொருள் தருகின்றனர்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.                                             (குறள் 340)

துச்சில் இருந்த  - குடியிருந்த (காலிங்கர்)   முத்தி ஸ்தானம் (மணக்குடவர்)  இருப்பிடம் (மு.வ), புகலிடம் (கலைஞர்) உடம்பினுள் குடியிருந்த உயிருக்கு வேறு   நிலைத்திருக்கும் வீடு இல்லை போலும்! (பரிமேலழகர்).    இப்படிக் புக்கில் என்பதற்கு வீடுபேறு என்று வலிந்து பொருள் கொண்டுள்ளார் பரிமேலழகர்.      

தனக்குவமை இல்லாதான்,  அறவாழி அந்தணன், "பிறவாழி" எண்குணத்தான், பார்ப்பான், புத்தேளிர், ஊழ், தெய்வம்,  மறுமை, புத்தேளுலகு,  எழுபிறப்பு, அறத்தாறு, வகுத்தான்  போன்ற குழப்பம் தரும்   சொற்கள் குறளில் காணப்படுன்றன. 

வள்ளுவர் எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில் எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல், நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். காட்டாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                                ( அறன் வலியுறுத்தல்  -   35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.                                     ( வான்சிறப்பு  -  19 )

குறளின் முதல் அதிகாரம் முதல் குறளில் வரும் 'ஆதிபகவன்' என்ற சொல் பற்றி ஒத்த கருத்து இல்லை. ஆதிபகவன் என்ற  தொடர் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. சங்க காலத்துக்குப் பின்னரும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் சமயங்களின்  முழுமுதற் கடவுளை குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளைத் தவிர வேறு எந்த பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் கையாளப்படவில்லை. இரட்டைக் காப்பியங்களில் பகவன் என்ற சொல் அருகனையும் (சமணம்) புத்தரையும் குறிப்பிடுகின்றது.

திருவாய்மொழியில் அறுவகைச் சமயத்தின் நெறியை ஏற்று உரைத்தவனாக "ஆதியம் பகவன்" குறிப்பிடப்படுகிறான். (திருவாய்மொழி 1_3_5) 

வைதீகக் கடவுள்களில் ஒருவரேனும் ஆதிபகவன் என்று அழைக்கப்படுவதில்லை. மேலும் எஞ்சிய 9 குறள்களில் காணப்படும்  (1), வாலறிவன் (2), மலர்மிசை ஏகினான் (3), வேண்டுதல் வேண்டாமை இலான் (4), இறைவன் (5, 10), பொறிவாயில் அய்ந்தவித்தான் (6),  தனக்குவமை இல்லாதான் (7), அறவாழி அந்தணன் (8), எண்குணத்தான் (9)  என்ற சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதில் முரண்பாடு காணப்படுகிறது.  இந்தச் சொற்கள் ஒரு முழுமுதற் கடவுளைக் குறிப்பிடவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் இந்தச் சொற்றொடர்கள் சமண, பவுத்த, வைதீக, கிறித்துவ மதத்தினர் தாங்கள் வழிபடும் கடவுளரைக் குறிப்பதாகப் பொருள் கொள்கின்றனர்.

இதனால் போலும் செக்கிழுத்த சிதம்பரனார் குறளின் முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என்கிறார்.

திருக்குறளின் மூலப் படி கிடைக்கவில்லை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்துக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டு கழித்து  திருக்குறளுக்கு உரை செய்த ஆசிரியர்களது படிகளே எமக்குக் கிடைத்துள்ளன.

மேலும் திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலும் மூலபாடம் திருத்தம் கண்டது. இவ்வாறான இடைச்செருகல்  குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.

பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. யாப்பு அமைதிக்காவும் எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும், பல்வேறு பாடத் தவறுகள் நடந்தன.

இதனால் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறு ஆய்வுக்கு உரியனவாக  கொள்ளப்பட்டுள்ளது.

பரிமேலழகரை உயர்த்தித் திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்தது. 

அதனால் அவரது உரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்குத் தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது. திராவிட - பகுத்தறிவு கோட்பாட்டாளர்கள் புதிய கண்ணோட்டத்தில் திருக்குறளுக்கு உரை எழுதினார்கள்.  

இருந்தும் ஒரு குறளுக்கு ஒரு உரைதான் இருக்க வேண்டும். திருக்குறளுக்கு திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை, அவர் வாழ்ந்த கால நம்பிக்கைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு  உரை எழுத தமிழ் அறிஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப் படவேண்டும். அந்தக் குழு காய்தல் உவத்தல் இன்றி  உரை எழுத வேண்டும். தற்காலத்துக்கு சில குறள்கள் பொருந்தி வராவிட்டால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.  மேலும் உரைகள் பெருகாதிருக்க இதுதான் ஒரே வழி.

athangav@sympatico.ca



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

 

ஆர். அம்பலவாணன்

imagesதிருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு.
திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“….. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு அப்புறம்தான் மணக்குடவரின் உரையின் காலம். இடைப்பட்ட காலத்தில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தும் பொதுவாக எல்ல்லாக் குறட்பாக்களையும் கவனிக்கும் போது அத்தனை இடைச்செருகல்கள் இருப்பதாக எண்ண இடமில்லை. என் நண்பர்கள் சிலர் திருக்குறள் ஒரே நபரால்தான் எழுதப்பட்டதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். என் கருத்தில் அந்த சந்தேகத்திற்கு இடமில்லை. குறளில் முழுமையான அமைப்பும் சில இலக்கணப் பிரயோகங்களும் ………..சொற் சிக்கனமும் வள்ளுவருக்கு என்று ஓர் அடையாளம், ஒரு ‘நடை’ இருப்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.”

சுஜாதாவின் கருத்து ஒருபுறமிருக்க, இடைச்செருகல்கள் சாதாரணர்களால் செய்யப்பட்டிருக்க சாத்தியமில்லை. நன்கு கற்றறிந்த புலவர்களே செய்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அவர்கள் வள்ளுவரின் சொற் சிக்கனம், நடை இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே ‘புதிய’ குற்ட்பாக்களை இயற்றி இணைத்திருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தைப் படிக்கலாம்.

முழு நூலாக எழுதப்பட்ட பல இலக்கியங்கள், முன்னுரை போல கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது மரபாக இருந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் முழு நூலாக உருவாக்கம் செய்யப்பட்ட திருக்குறளில் கடவுள் வாழ்த்து வள்ளுவரால் இயற்றப்பட்ட பாக்களா என்ற ஐயம் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. அது அவராலேயே இயற்றப்பட்டிருந்தாலும், அது கடவுள் வாழ்த்தாக இல்லாமல், வேறொரு கருத்தை சொல்ல வந்த பாக்களாக இருக்கலாம். அது பின்னால் வந்தவர்களாலோ, அல்லது தொகுப்பாளர்களாலோ, அல்லது மாணாக்கர்களாலோ அது கடவுள் வாழ்த்து அதிகாரம் உருவாக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம்.

“உலகெலாம் உணர்ந்து ……… மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானும், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ….. அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று ராமாயணத்தில் கம்பரும் கடவுளைத் தன்மையில் (in firstperson) வாழ்த்தித் தொடங்கியுள்ளதைக் காணலாம். இவ்வாறு ஒன்றிரண்டு செய்யுளில் எழுதப்பட வேண்டிய ஒன்றை திருக்குறளில் பத்து பாக்களாக உள்ளதை நோக்கவும். மேலும், இப்பாக்கள், மற்ற குறட்பாக்களைப்போலவே படர்க்கையில் (in third person) எழுதப்பட்டுள்ளன.

கடவுளைத்தொழுது தொடங்குவதன் நோக்கம் தான் மேற்கொள்ளும் (நூல் எழுதும்) செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்பதே. கடவுள் வாழ்த்தில் உள்ள பாக்களைப் பாருங்கள். மற்ற அதிகாரங்களைப்போலவே ஒரு வரையறை, சாதக பாதகங்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. “அகர முதல” என்ற முதல் குறள் ஒரு வரையறை(definition). “கற்றதனால்” என்ற இரண்டாவது குறளும், “கோளில்” என்ற ஒன்பதாவது குறளும் கடவுளை வணங்குதலே தலையாய கடமை என்ற அறிவிக்கைகள் (statements). மற்ற ஏழு குறட்பாக்களில், மனித குலத்தின் மூன்று முக்கிய வரையறுப்புகளான சோகம் அல்லது மனக்கவலை (4,7), காலம் அல்லது அநித்யம் (3,6,8,10), அறியாமை (5) ஆகியவற்றை நீக்கும் உபாயம் இறைவணக்கமே என்று கூறப்பட்டுள்ளது.

சொன்னதையே திரும்பச்சொல்லுதல் இலக்கியத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பர். நான்காவது, ஏழாவது பாக்கள் கவலையறுத்தல் என்ற ஒரே கருத்தையும், எட்டாவது, பத்தாவது பாக்கள் பிறவியறுத்தல் என்ற ஒரே கருத்தையும், மூன்றாவது, ஆறாவது பாக்கள் நெடிய வாழ்வு என்ற ஒரே கருத்தையும் சொல்வதைக் கவனிக்கவும்.

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி … எழுமைக்கும் ஏமாப்புடைத்து” (398) என்ற குறளையும் இரண்டாவது குறளையும் ஒப்பிட்டு நோக்கினால், இக்குறளும் பிறவியறுத்தல் என்ற கருத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம். வலியுறுத்தல் (tautology) என்று எடுத்துக்கொண்டாலும்கூட பத்து எண்ணிக்கை நிரப்பும் இடைச்செருகலாக இருக்கலாமோ என்ற எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஐந்தாவது அதிகாரமான இல்வாழ்க்கையில் “தென்புலத்தார் தெய்வம்…..ஓம்பல் தலை” (43) என்றும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் …….. தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என்று குறிப்பிட்டிருப்பதையும், ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத்துணை நலனில் “தெய்வம் தொழாஅள் …. பெய் எனப் பெய்யும் மழை” என்ற குறளையும், ஆள்வினை உடைமை(62) அதிகாரத்தில் “தெய்வத்தான் ஆகாது ….. கூலி தரும்” என்ற குறளையும் கவனித்தால் வள்ளுவரின் தெய்வம் (கடவுள்) பற்றிய சிந்தனை ஓரளவுக்குப் புலப்படும்.

தவம் (27) அதிகாரத்தில் “கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றம் தலைப்பட்டவர்க்கு (269) என்ற குறட்பாவில் நற்றவமே நீடு வாழ்தலின் காரணம் என்ற மாற்றுக்கருத்தொன்றை வைக்கிறார்.

இது போன்றே மெய்யுணர்தல் அதிகாரத்தில் “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” என்ற குறட்பாவிலும் மற்றும் இரண்டு பாக்களிலும் பிறவி மற்றும் துன்பத்திலிருந்து விடுபட மெய்யறிவு பெறுதலே வழி என நிறுவுகிறார். மெய்யுணர்வு பெற மெய்ஞானியர்களை நாடுவதே ஆன்மீக மரபு. மெய்யுணர்வு பெற்ற மனிதன் தெய்வீக நிலை எய்துகிறான் (50). தெய்வம் பற்றிய அவரது குறள்களின் மூலம் இதனையே வலியுறுத்துகிறார்.

இந்த பின்னணியில் பார்த்தால், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் என்னும் சொற்கள் கடவுளைக் குறிப்பதாகக் கருதுவதை விட முற்றும் துறந்த ஞானியர்களையே குறிப்பதாகக் கொள்ளலாம். துறவு (35) அதிகாரத்தில் “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (350) என்ற வழிகாட்டு நெறியையும், குறட்பாக்கள் 25,30 மற்றும் 348 இவைகளில் அமைந்த சொற்களையும் காண்க. எனவே, இச்சொற்கள் இடம் பெற்றுள்ள பாக்கள் நீத்தார் பெருமையின்பால் அமைவதே பொருத்தம் எனக்கருத இடமுண்டு. மேலும், தாள், அடி என்ற சொற்கள் உருவம் அற்ற இறைக்குச் சற்றும் பொருந்தாதவை. மெய்ஞானிகளான துறவியர்களின் தாள் அல்லது அடி சேர்தல் என்பதே பொருத்தமானதாகத் தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணிப்பார்த்தால், திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் இடைச்செருகல்கள் மூலமாக சீரமைக்கப்பட்டிருக்கலாம்(?) என்றே கருதத்தோன்றுகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard