ஒவ்வொரு இந்துப் பண்டிகைக் காலங்களிலும் இந்துக் கடவுளர்களைக் கேலி செய்வது தொடர்கிறது. புராணச் செய்திகளின் உட்கருத்தை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக நுனிப்புல் மேய்ந்துவிட்டுத் தங்கள் அரைகுறை அறிவுக்கு எட்டியபடி திரித்துப் பேசியும், வேண்டுமென்றே கொச்சை மொழிகளால் இழிவு படுத்தியும் சில தனி நபர்களும், சில இயக்கங்களும் தமிழ்நாட்டில் எழுதியும் பேசியும்வரும் செயல் இன்று நேற்றல்ல கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திலும் தமிழ்நாட்டின் வேறு சில இடங்களிலும் இராமபிரான் படத்தை இழிவு படுத்தி நடந்துகொண்ட கேவலத்தையும் பார்த்திருக்கிறோம். அப்படி அவர்கள் செய்து வந்ததால் தமிழ்நாட்டில் கோயிலுக்குச் செல்லும் மக்களைத் தடுக்கவோ, எண்ணிக்கையை குறைக்கவோ அவர்களால் முடிந்ததா என்றால் இல்லை.
மாறாக இன்று விசேஷ தினங்களில் மக்கட்கூட்டம் ஆலயங்களில் நிறைந்து வழிகிறது. நாமும் பார்க்கிறோம்; அவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும்கூட இப்படி இவர்கள் நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதை நாம் சற்று யோசித்துப் பார்ப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
இந்த மதத்தை இழிவு படுத்தி, நம் கடவுளர்களைக் கேவலமாகப் பேசி, இந்து மக்கள் மனதில் தாங்கள் ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்து வருகிறோமோ, நம் வழிபாட்டு முறைகள் குறை மலிந்தவைகளோ என்ற பிரமையை ஏற்படுத்தி, மக்கள் மனதை மாற்றி, மாற்று மதங்களுக்கு அனுப்பத் தூண்டில் இடுகிறார்களோ என்ற ஐயப்பாடும் ஏற்படுவது இயல்பு அல்லவா? அப்படியானால் இவர்கள் செய்யும் இந்தக் காரியத்தினால் இவர்களுக்கு என்ன பயன்? அதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
சிறுகதை மன்னன் திரு ஜெயகாந்தன் அவர்கள் கரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது.
அவர் சொன்னார், “ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது என்பது அங்கு சென்று கோயிலின் கோபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவது அல்ல. ஆலயத்தின் அமைப்பு மனித சரீரத்தை ஒத்தது. அதன் இதய ஸ்தானம் இறைவன் திருவுரு அமைந்துள்ள கருவறை. பலிபீடத்தில் நம் மும்மலங்களை பலியிட வேண்டும். கொடிமரம் இறைவனின் ராஜாங்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்த. அங்கு பல சுற்றுக்களைச் சுற்றியபின் மூலத்தானத்து இறை உருவைப் பார்த்து அதன் தத்துவங்களைப் புரிந்து கொண்டவனே தரிசனம் செய்தவனாவான். வெறுமனே கோயில் கோபுரத்து பொம்மைகளைப் பார்த்துவிட்டு இறைவனை தரிசித்தேன் என்பது கேலிக்குரியது” என்ற கருத்தில் பேசினார். அதுதான் உண்மை.
இன்று பலர் புராணங்களில் உள்ள சில கற்பனை உவமைகளையும், சுவைகூட்டுவதற்காக எழுதப்பட்ட சில கற்பனைகளையும், அப்படிக் கற்பனையாக எழுதும் விஷயங்களுக்குள் சில தத்துவங்கள் மறைபொருளாக விளக்கப்படுவதையும் புரிந்து கொள்ள சற்று ஆழ்ந்த அறிவும், ஞானமும், விருப்பு வெறுப்பற்ற ஈடுபாடும் தேவை. அது இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று தூக்கி எறிந்து பேசுவதும், கேலி, கிண்டல் செய்து பெருவாரியான மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதோ பண்பாடாகாது. ஆனால், அது அவர்களுக்குப் புரியவில்லை.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுப் பிறர் மனங்களைப் புண்படச் செய்தவர்களில் பலரும் அறியாமையில் வீழ்ந்து கிடந்தவர்கள். தாழ்வு மனப்பான்மையால் தங்களை மேம்படுத்திக் கொள்ளத் தெரியாமல் பிறரை தூற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் அப்படிப் பேசியதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இன்று படிக்கிறார்கள், பட்டங்களைப் பெறுகிறார்கள். என்றாலும் கூட அந்தக் கல்வி இவர்கள் அறிவினைத் தூண்டியிருக்கிறதா, கல்வி பயின்றவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை. இன்னமும் அந்த பழைய வாதங்களைப் பேசித் தங்கள் அறியாமையையும், கண்மூடித்தனமாக தங்கள் வெறுப்பையும் தங்களது தாழ்வுமனப்பான்மையினால் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பற்றிய புகார்கள் ஆங்காங்கே காவல் துறையிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அப்படி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. எல்லா ஆலயங்களிலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிகிறது. இவை ஒன்று போதும், இதுபோன்ற விமர்சனம் செய்வோரின் கருத்துக்கள் எடுபடவில்லை என்பதற்கு.
புராணங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், அல்லது ஜனரஞ்சகமாகச் சொல்லப்பட்ட உண்மைகள். அதைப் புரிந்து கொள்ள சராசரி அறிவு இருந்தால்கூட போதுமானது.
தமிழிலக்கியங்களில் சேக்கிழார் பெருமானின் “பெரிய புராணம்” முக்கியமானது. அது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டர் திருத்தொகை எனும் பாடலில் கண்ட சைவப் பெரியார்கள் பற்றிய விவரமான படைப்பு. சோழமன்னன் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டபடி மக்கள் வெற்று இன்பநூல்களைப் படித்து வீணாகின்றார்களே, அவர்களுக்கு கதை கேட்கும் மனவோட்டத்தில் இருப்பதால், சைவ நாயன்மார்கள் குறித்த வரலாற்றைக் கதைகளாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த நூல் பாடி அரங்கேற்றப் பட்டது. இதில் காணப்படும் நாயன்மார்கள் எல்லோருமே சிவனைப் பாடித் தொழுதவர்கள் அல்ல. அவர்களில் பலர் சிவன் மேல் இருந்த பக்தியினால், அன்பினால், சிவத்தொண்டு பல புரிந்து தங்களை வருத்திக் கொண்டவர்கள் என்பது முக்கியம். குங்கிலியம் வாங்கி இறைவனுக்குப் போட்டு இறைத் தொண்டு செய்தவர் முதல் தனக்கு உண்ண உணவு இல்லாத நிலையிலும், தன்னைத் தேடி பசியோடு வந்த விருந்தினரை உபசரிப்பதற்காக அன்று மாலை வயலில் விதைத்த நெல்லை கொட்டும் மழையிலும் போய் தேடி பொறுக்கி எடுத்து வந்து குத்தி அரிசியாக்கி உணவு படைத்த நாயனார் வரை பலர் வரலாறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்களில் “எறிபத்த நாயனார்” என்றொருவர். இவர் கருவூரில் வாழ்ந்தவர். அங்குக் கோயில் கொண்டிருக்கின்ற ஆநிலையப்பர் என்கிற கல்யாண பசுபதீஸ்வரருக்குத் தினமும் ஆம்பிராவதி நதியில் நீராடிவிட்டுத் தோட்டத்திலிருந்து மலர்களைக் கொய்ந்து பூக்குடலையில் வைத்து ஆலயத்துக்கு சிவபூசனைக்காகக் கொண்டு கொடுக்கும் கைங்கரியத்தை சிவகாமியாண்டார் எனும் முதியவர் செய்து வந்தார். அப்படி அவர் தினமும் செய்து வருகின்ற காலத்தில் அவ்வூரில் எறிபத்தர் எனும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். இந்த எறிபத்தருக்கு இறைவன் மீதிருந்த அளவுகடந்த பக்தியின் காரணமாக இறைவனுக்குத் தொண்டு புரியும் அன்பர்களுக்குப் பாதுகாவலராக விளங்கி வந்தார்.
ஒரு நாள் சிவகாமியாண்டார் ஆம்பிராவதி நதியில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்து குடலையில் இட்டு, தன் வாயை ஒரு துணியால் மூடிக்கொண்டு ஆலயம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டுவந்த புகழ்ச்சோழ மன்னன் கருவூருக்கு விஜயம் செய்து அரண்மனையில் தங்கி யிருந்தான். அவனும் ஓர் சிவபக்தன். அறுபத்து மூவரில் ஒருவன்.
சிவகாமியாண்டார் பூக்குடலையுடன் ஆநிலையப்பர் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்த சமயம், புகழ்ச்சோழனின் பட்டத்து யானையை நதியில் குளிப்பாட்டி அதற்குத் திருநீறு பூசி, அலங்காரங்கள் செய்து, வீதி வழியே அழைத்துக் கொண்டு ஐந்து பாகர்கள் வந்து கொண்டிருந்தனர். யானையின் மீது ஒருவன், இருபுறமும் இருவர் வீதம் நான்கு பேர். நீராடிய மகிழ்ச்சி, நல்ல உணவு தன்னை மறந்து மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்த யானைக்கு சிவ்காமியாண்டார் கொண்டு வந்த பூக்கூடை கண்ணில் பட, அதனைப் பறித்து வீசி, பூக்களைத் தெருவில் கொட்டி வீணடித்து விட்டது.
பதறிக்கொண்டு ‘சிவனே சிவனே’ என்று கையால் தரையில் அடித்துக்கொண்டு அலறினார் சிவகாமி யாண்டார். இதை அப்போது அந்த வழியாக வந்த எறிபத்தர் பார்த்து விட்டார். தலைக்கேறிய கோபத்தில் தன் கையில் வைத்திருந்த மழு எனும் ஆயுதத்தால் அந்த யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். யானை கீழே விழுந்து இறந்தது. இவரை எதிர்க்க வந்த பாகர்கள் ஐவரையும் கொன்று வீழ்த்தினார்.
‘பட்டவர்த்தனம்’ எனும் அந்த யானையையும் அதன் பாகர்கள் ஐவரையும் யாரோ கொன்று விட்டார்கள் என்ற செய்தி மன்னன் புகழ்ச்சோழனுக்கு வந்தது. உடனே அவன் யாரோ ஒரு எதிரி நாட்டு மன்னனின் படை வந்து விட்டது. அந்தப் படையினர்தான் தனது பட்டத்து யானையைக் கொன்று விட்டார்கள் என நினைத்து மன்னன் தனது புரவியின் மீது ஏறி வேகமாக கோயிலை நோக்கி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி, யானையும் பாகர்களும் கீழே வீழ்ந்து கிடக்க, இடையில் காவி உடை அணிந்து உடலெங்கும் வெண்ணீறு பூசி கையில் குருதி வழியும் மழுவுடன் நிற்கும் ஒரு சிவனடியாரையும் பார்த்துவிட்டு “யானையைக் கொன்றவர் யார்?” என்றான்.
இந்தக் காரியத்தைச் செய்தவர் இந்த சிவனடியார்தான் என்பது அவனுக்குச் சொல்லப்பட்டது. அடடா! இவர் சிவனடியார் ஆயிற்றே. அவரா தவறு செய்திருப்பார், இருக்காது. இந்த யானை ஏதோ தவறு செய்திருந்தால் அல்லவோ அடியார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பார், என்று எண்ணிக் கொண்டே குதிரையிலிருந்து கீழே இறங்கி, அந்த அடியாரைச் சென்று வணங்கி “தேவரீர் இந்தக் காரியம் செய்யும்படியாக எனது பட்டத்து யானை செய்த தவறு என்னவென்று சொல்லியருளுங்கள்” என்றான் பணிவோடு.
எறிபத்தர் சொன்னார், “மன்னா! ஆநிலையப்பருக்குச் சாத்துவதற்கு பூக்குடலையுடன் ஆலயம் நோக்கி வந்த சிவகாமியாண்டாரை இந்த யானை கீழே தள்ளிப் பூக்குடலையையும் சிந்தி மிதித்தது. அதனால் அதனை என் மழுவால் வெட்டினேன். கூட வந்த பாகர்கள் ஐவரும் அதன் மதத்தைத் தடுக்காததால் அவர்களையும் கொன்றேன்” என்றார்.
புகழ்ச்சோழர் அவரை வணங்கி “சிவனடியாருக்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும், பாகர்களையும், குத்துக்கோல்காரர்களையும் கொன்றது போதாது. அடியேனையும் கொல்லுங்கள், சிறியோனாகிய என்னை தாங்கள் திருக்கரத்தால் உங்கள் புனிதமான மழுவால் கொல்வது சரியல்ல, ஆகையால் இதோ எனது வாள், இதனால் என்னைக் கொல்லுங்கள்” என்று தன் உடைவாளை அவரிடம் கொடுத்தான்.
எறிபத்தர் மன்னனின் பணிவு, பக்தி, அன்பு கண்டு அவன் நீட்டிய வாளை வாங்காமல் சிறிது நிதானித்துவிட்டு, ஒருக்கால் இவன் இந்த வாளால் தன்னை மாய்த்துக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று அதனைத் தன் கரங்களால் வாங்கிக் கொண்டார். தன் யானையையும், பாகர்களையும் கொன்ற என்னைத் தண்டிக்காமல் தான் ஒரு சிவனடியார் என்பதனால் தன்னையும் தண்டிக்க வேண்டுமென்று கேட்கும் இந்த மன்னனின் பெருமையை உணர்ந்தார். இதற்கு ஒரே பரிகாரம் தாம் செய்த தவறுக்குத் தண்டனை தானே கொடுத்துக் கொள்ள வேண்டி அந்த வாளால் எறிபத்தர் தன் கழுத்தை வெட்டிக் கொள்ளப் போனார்.
அந்த நேரத்தில் ஆலயத்திலிருந்து ஒரு அசரீரி எழுந்தது. “அடியவர்களின் தொண்டு உலகத்தாருக்குத் தெரிவிக்கும் பொருட்டே இப்படியொரு திருவிளையாடல் நடந்தது.” என்று சொல்லி இறந்த யானையையும், பாகர்களையும் உயிர்ப்பித்து எழச் செய்தார் சிவபெருமான்.
“இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கடியேன்” என்று சுந்தரமூர்த்தி பாடும்படியாகப் பெருமை பெற்ற இந்த வரலாற்றின் உட்பொருள் என்ன என்பதுதான் இப்போது நாம் பார்க்க வேண்டியது. அப்படியில்லாமல், அரசனின் யானையை ஒரு பரதேசி கொன்றானாம். அவன் காலில் மன்னன் விழுந்து தன்னையும் கொல்லும்படி கேட்டுக் கொண்டானாம். இதெல்லாம் ஒரு சாரார் கிளப்பிவிட்ட புரளிகள். தமிழ் மன்னனைக் கேவலப்படுத்தும் செயல், சூழ்ச்சி என்றெல்லாம் கூடப் பேசுவார்கள். ஆனால் இந்த வரலாற்றில் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்ன? அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இங்கு சிவத்தொண்டு புரியும் சிவகாமியாண்டார் எறிபத்தர் புகழ்ச்சோழன் இவர்களின் பெருமையை இந்த வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இதில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும், இறைத் தொண்டுக்கு ஒரு இடையூறு நேரும்போது அதனைத் தட்டிக் கேட்கும் இடத்தில் ஒரு அடியார் இருந்ததும் கவனிக்கப் படவேண்டும்.
இங்கு யானை என்பது மனிதனின் மனதில் தோன்றும் ஆணவ மலம். அது இறை பூஜைக்கு இடையூறு செய்கிறது. அதனைத் தட்டிக் கேட்கவேண்டிய இடத்தில் இருக்கும் ஐந்து பாகர்களும் மனிதனது ஐம்பொறிகள். அவை மனிதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; மாறாக மனம் ஆணவம் காரணமாகச் செய்யும் செயல்களுக்குத் துணை போனதால் அந்த ஐம்பொறிகளும் தண்டிக்கப்பட வேண்டும், கட்டுக்குள் அடக்கி வைக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கதை கூறும் உண்மை.
இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளாமல் கதையை மேம்போக்காகப் படித்துவிட்டு வாய்க்கு வந்தபடி எழுதியும் பேசியும் வருவது அறியாமையின் வெளிப்பாடே தவிர ஆழ்ந்த புலமை அல்லது அறிவின் விளக்கமல்ல.
இதுபோன்றவர்களுக்கு இனியும் விளக்கமளித்துக் கொண்டிருக்கவோ, அவர்களின் செயலுக்கு விமர்சனம் செய்து கொண்டிருப்பதோ தேவையில்லை. மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு எது சரி எது தவறு என கல்வி, அனுபவம் இவற்றல் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற சலசலப்புகளைப் புறம் தள்ளிவிட்டு இந்து மக்கள் தங்கள் பண்பாட்டின்படியும், பாரம்பரிய நடைமுறைகள் படியும் தங்கள் பண்டிக்கைகளை, திருவிழாக்களை, இறைவழிபாடுகளைச் செய்து வருவார்கள், வரவேண்டும்.