New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?
Permalink  
 


 

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?

May 20, 2010
ஜடாயு

இன்றைக்கு சாதியம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. இது ஒரு புதுமையான போக்கு. பண்டைய இந்தியாவில் சாதி இருந்தது, ஆனால் சாதியம் இல்லை. தற்போதைய வடிவில் நாம் காணும் சாதியம் காலனிய ஆட்சிக் காலகட்டத்தின் உருவாக்கமே. எதேச்சாதிகார ஆட்சிக் கொள்கைகளும், காலனிய அறிவுஜீவிகளும் விளைவித்த படைப்பு அது. பின்னர் நமது சொந்த “சீர்திருத்தவாதிகளும்” முரசறைந்து அதனை வலுப்படுத்தினர்.

krishna_familyபண்டைய நாட்களில் இந்து சாதி அமைப்பு ஒருங்கிணைக்கும் தத்துவமாக இருந்தது. பொருளாதார பாதுகாப்பை அளிப்பதாக இருந்தது. ஒருவன் பிறந்த உடனேயே அவனுக்கென்று ஒரு தொழில் இருந்தது. கொடும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அச்சுறுத்தப் படும் நிலையில் உள்ள மக்களுக்கு கனவில் கூட நினைக்கமுடியாத சாத்தியம் இது. இந்த அமைப்பு சமூகப் பாதுகாப்பும், சுதந்திரமும் இணைந்த ஒன்றாக இருந்தது. ஒரு பரந்த சமுதாய வெளியையும் அதே சமயம் நெருக்கமான சமூக அடையாளங்களையும் உருவாக்க வழிவகை செய்தது. இங்கு தனிமனிதன் ஒற்றைப் படுத்தப் பட்டு, வேரற்றவனாக ஆகி விடவில்லை. அதே சமயம் சமூக நகர்வுகளும் (social mobility) குறைவாக இருக்கவில்லை. ஒட்டுமொத்தமான மக்கள் குழுக்களே கூட சமுதாய அளவுகோலில் மேலேறுவதும், கீழிறங்குவதும் நிகழ்ந்தது. பண்டைய இந்திய சாதி அமைப்பு முற்றாக இறுகியிருந்தது என்று சொல்லப் படுவது கற்பனையே அன்றி வேறில்லை.

குறைந்தது மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் பரம்பரையான தொழில்களை விட்டு வேறு தொழில்களைச் செய்பவர்களாக இருந்தார்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்க காலத்தில் வாழ்ந்த சீசன்பால்க் எழுதுகிறார். ”அரசுப் பணிகளும், மற்ற அலுவல் பணிகளும், ஆசிரியர், நகரசபை உறுப்பினர், நிர்வாக அதிகாரி, பூசாரி, கவிஞர் ஆகிய பதவிகளும், ஏன் அரச பதவியே கூட ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் உரிமையானதாக இருக்கவில்லை, அனைவருக்கும் அதில் இடம் இருந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது தான் இப்போது உள்ளது போன்ற ஏராளமான சாதிகள் அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப் பட்டு அதுவே நடைமுறை வழக்கமாக ஆகியது; அதற்கு முன்பு அப்படி இருக்கவில்லை. கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் இந்து சமூகத்தின் ஏழு பாகுபாடுகளைப் பற்றித் தன் நூலில் குறிப்பிடுகிறார். சீன யாத்திரிகர் யுவான் சுவாங் (பொ.பி 650) நான்கு சாதிகளைக் குறிப்பிடுகிறார். அல்பருனி (ஆரம்ப இஸ்லாமிய ஆட்சிக் காலத்தவர்) நான்கு சாதிகளையும், சாதி அமைப்பின் கீழ் வராத ஒருசில குழுக்கள் இருந்ததையும் தன் நூலில் பதிவு செய்கிறார்.

எப்போதும் வசைக்கு உள்ளாகும் மனுவின் பட்டியல் கூட எல்லா கலப்பு சாதிகளையும் சேர்த்து மொத்தம் நாற்பது சாதிகளுக்கு மேல் குறிப்பிடவில்லை. அதிலும், இந்த எல்லா சாதிகளும் ஒன்றுக்கொன்று ரத்த உறவு கொண்டவை – உதாரணமாக, சண்டாளர்கள் என்ற சாதியினர் தந்தை வழியில் பிராமணர்களில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ரிஸ்லி (Risely) 2,378 முக்கிய சாதிகள் மற்றும் 43 இனங்களின் பட்டியலை அளிக்கிறார்! உப-சாதிகளின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது என்று எழுதிச் செல்கிறார். அதற்கு முன்பு, 1891ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நடத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி, சமார் (தோல் தொழிலாளர்கள்) என்ற சாதிக்குள்ளேயே 1156 உபசாதிகள் இருப்பதாக எண்ணிக்கை அளிக்கப் பட்டிருந்தது. ரிஸ்லியைப் பொருத்தவரை, அவர் ஒவ்வொரு சாதியும் தனக்கே உரிய தனி மொழியைப் பேசும் ஒரு தனி “இனம்” என்றே கருதினார்.

இந்தியா பற்றி எழுதிய ஆரம்பகால ஐரோப்பியர்கள் சாதி என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான ஒரு அமைப்பு என்று கருதவில்லை. தங்கள் நாடுகளில் இருந்த சாதி அமைப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்திய சாதி அமைப்பும் அப்படிப் பட்ட ஒன்று என்றே கருதினார்கள். தனது அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்ற நூலில் ஜே.எஸ்.மில், ”ஐரோப்பாவின் தொழில்சார்ந்த சமூகக் குழுக்கள் இந்தியாவில் பரம்பரையாக வரும் சாதிக் குழுக்களைப் போன்றவையே” என்று குறிப்பிடுகிறார்.

அவர்களுக்கு, சாதி (caste) என்ற சொல் இன்று உள்ளது போன்ற ஒரு பொருளைத் தருவதாகவும் இருக்கவில்லை. காலனிய வரலாற்று ஆய்வாளரும் மொழியியல் அறிஞருமான கீதா தரம்பால் ஃப்ரிக், இந்திய சமூகம் பற்றி எழுதிய ஆரம்பகால ஐரோப்பியர்கள் சாதியைக் குறிக்க ”பகுதி – பங்கு – பங்களிப்பு” என்ற பொருள் தரும் Meri என்ற கிரேக்கச் சொல்லையே பயன்படுத்தினார்கள் என்கிறார். பிறகு செபஸ்டியன் ஃப்ராங்க் (1534), ”சமூகக் குழு” அல்லது ”தொகுதி” என்ற பொருள் தரும் ஜெர்மன் மொழிச் சொல்லான Rott (rotte) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். சமூக, பொருளாதார ரீதியாக, அன்றைய ஐரோப்பாவின் பண்ணைகள் சார்ந்த அடுக்குமுறை சமூக அமைப்பு (ordo) போன்று இல்லாமல் சாதிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமானவையாக இருந்தன என்று அவர்கள் கருதியதையே இந்தச் சொற்கள் உணர்த்துகின்றன.

பிராமணர்களுக்கு சமூகத்தில் மரியாதை இருந்தது என்று பதிவுசெய்யும் இந்த ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பிராமண ஆளுகை/அதிகாரம் பற்றி எதுவும் கூறவில்லை. 1669ல் குஜராத்தின் சாதிகள் பற்றி ஆவணப் படுத்தியுள்ள ஆண்டர்சன் (Jurgen Anderson) போன்றவர்கள் அங்கு பிராமணர்கள் அல்ல, வைசியர்களே சமூகத்தில் மிக முக்கியமானவர்களும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருந்ததைக் கண்டார்கள்.

மேலும் “சம்ஸ்கிருதமயமாக்கல்” (Sanskritization) எதையும் அவர்கள் காணவில்லை. ஒரு சாதி இன்னொரு சாதி போன்று இருக்கவேண்டும் என்று முயலவில்லை. அது தன்னளவில் நிறைவுகொண்டதாக இருந்தது. சமூக அந்தஸ்துக்காக என்று பிராமணர்களையும், மற்ற உயர்சாதியினரையும் நகலெடுக்க மற்ற சாதிகள் முயலவில்லை. தங்களது வாழ்க்கையைப் பற்றிய பெருமிதம் ஒவ்வொரு சாதியிடமும் இருந்தது. ஏரின் சிறப்பைப் பற்றி கம்பனது பழைய தமிழ்ப் பாடல் ஒன்று உள்ளது. “ஏர்பிடித்து உழும் வாழ்க்கையை உடைய உழவனது குடியில் பிறப்பது, பிராமணனாகப் பிறப்பதை விடப் பெருமை வாய்ந்தது” என்கிறது அந்தப் பாடல்.

(குறிப்பு: சமூக அடுக்கில் கீழ் உள்ள சாதிகள், உயர்சாதிகளின் பழக்க வழக்கங்களை மெதுமெதுவாக நகலெடுக்கின்றன; இது சமூக அந்தஸ்து பெரும் முயற்சியில் ஒரு அங்கம் என்பதை ஒரு கோட்பாடாக சமூகவியல் அறிஞர் எம்.என்.ஸ்ரீனிவாஸ் முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டுக்கு “சம்ஸ்கிருதமயமாக்கல்” (Sanskritization) என்று பெயரிட்டார்).

castes_colonial_pictureசம்ஸ்கிருதமயமாக்கல் இருந்தது. ஆனால் அது வேறு வகையில் இருந்தது. எல்லா மக்களும் பிராமணர்களாக அல்ல, பிரம்மவாதிகளாக (Brahma-Vadin) ஆகவே முயன்றார்கள். எல்லா சாதிகளும், எல்லா மக்களும் தொழக்கூடிய மகான்களையும் பெரியோர்களையும் உருவாக்கின. காசியில் செத்த மாடுகளை அகற்றும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவராயினும், பெருமதிப்புக்குரிய பிராமணர்களும் தன்னைப் போற்றி வணங்குவதாக மாபெரும் சமயகுருவான மகான் ரவிதாஸ் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்து சமுதாயம் மாபெரும் அழுத்ததிற்கு ஆளாயிற்று. வாழ்வா சாவா என்ற பிரசினையை அது எதிர்கொள்ள நேர்ந்தது. இந்துக்களின் அரசு அதிகாரம் கைவிட்டுப் போனதும், சாதிகள் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தன. அவை கேடயங்களாக நின்று சில சமயம் தீவிரமாகவும், பல சமயங்கள் அமைதியாகவும் இஸ்லாமின் பரவலைத் தடுத்தன. ஆனால், இதனூடாக இந்த அமைப்பில் தீண்டாமை போன்ற அருவருக்கத் தக்க நடைமுறைகள் உருவாயின. கஜினி முகமதுவின் படையுடன் இந்தியாவுக்கு வந்த இஸ்லாமிய எழுத்தாளர் அல்பருனி நான்கு சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்; ஆனால் தீண்டாமை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ”இந்த சாதிகள் தங்களுக்குள் நிறைய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். வீடுகளிலும், குடியிருப்புகளிலும் கூடக் கலந்தே இருக்கிறார்கள்” என்று பதிவு செய்கிறார்.

இதனூடாகவே இன்னொரு நடைமுறையும் வழக்கத்திற்கு வந்தது. சாதிகள் தங்கள் நகர்வுத் தன்மையை இழந்து இறுக்கமாக ஆயின. பஞ்சாப் மாகாணத்தில் 1901 முதல் 1906 வரை “மக்கள் பரம்பரையியல் ஆணையர்” (Superintendent of Ethnography) ஆக இருந்தவர் ஹெச்.ஏ.ரோஸ். பஞ்சாபின் குலங்கள், சாதிகள் பட்டியல் (Glossary of Punjab Tribes and Castes) என்ற நூலில், முஸ்லிம் ஆட்சிக் காலத்தின் போது ஏராளமான ராஜபுத்திரர்கள் இழிவுபடுத்தப் பட்டு, ஷெட்யூல்டு சாதியினர், பழங்குடியினர் என்று அழைக்கப் பட்ட வகுப்பினராக ஆகி விட்டனர் என்பதை இவர் பதிவு செய்துள்ளார். அவர்களில் பெரும்பாலர் பரிஹர, பரிமர ஆகிய ராஜபுத்திர வமிசப் பெயர்களை இன்னும் தாங்கியுள்ளனர். அதே போன்று, “சமார்கள்” (The Chamars) என்ற நூலில் ஜி.டபிள்யூ.ப்ரிக்ஸ் ஏராளமான சமார்கள் பனௌதியா, உஜ்ஜயினியா, சந்தாரியா, சர்வாரியா, கனௌஜியா, சவுஹான், சந்தேல், சக்சேனா, சகரவார், பாரதரவியா, புந்தேலா போன்ற ராஜபுத்திர கோத்திரங்கள் மற்றும் வமிசங்களின் பெயர்களை இன்றும் சூடியுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். டாக்டர் கே.எஸ்.லால் ”மத்திய கால இந்தியாவில் ஷெட்யூல்டு சாதிகள், பழங்குடியினர் மக்கள்தொகை வளர்ச்சி” (Growth of Scheduled Tribes and Castes in Medieval India) என்ற நூலில் இது போன்று ஏராளமான சாதிகளில் நிகழ்ந்திருப்பதை விரிவாக ஆவணப் படுத்தியுள்ளார்.

மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப்பட்ட ”தோட்டிகள்” (Bhangi – ”பங்கி”) என்ற சாதியார் விஷயத்திலும் இதுவே தான் நிகழ்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தின் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்த வில்லியம் க்ரூக் கூறுகிறார் – “தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது”. பழைய இந்து நூல்களில் Bhangi (”பங்கி”) அல்லது வேறு எந்த சாதியினரும் இந்தப் பணி செய்பவர்களாக சுட்டப் படவில்லை. பழைய வட இந்திய இந்து சமூகங்களில் ”பங்கி” என்ற சாதியினர் தானியத்தை அளந்து தரும் பணி செய்பவர்களாகவும், தலையாரிகளாவும், கிராம எல்லைக் காவலர்களாகவுமே இருந்தனர். அவர்கள் தோட்டிப் பணியில் தள்ளப் பட்டது இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் உருவாகி, பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொடர்ந்து, அவர்களது எண்ணிக்கை அதிகமாகியது. 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் ஆட்சியின் மையங்களாக விளங்கிய பஞ்சாப், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் தான் ”பங்கி” சாதியினர் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

பின்னர் வந்த பிரிட்டிஷ்காரர்கள் எல்லா இந்துக்களையும் சமமாகவே – எல்லா இந்துக்களும் கீழான இனத்தினர் என்றபடி – நடத்தினார்கள். ஆனால் இந்துக்களுக்கிடையே இருந்த வேற்றுமைகளை ஊதிப் பெரிதாக்கினார்கள். (சாதி வேறுபாடுகளுக்காக) இந்துமதத்தைக் கண்டனம் செய்து தாக்குதல் நிகழ்த்தினார்கள்; ஆனால் சாதிக் கோட்பாடுகளைத் தாங்களே நீரூற்றி வளர்த்தார்கள். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்! எப்படியானாலும் இந்துமதம் தாக்கப் பட வேண்டும், அது தான் முக்கியம். இந்திய ஒற்றுமைக்கான ஆதார தத்துவத்தையும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும் அளிப்பது அது தான். மிக ஆழமான தளத்தில், இந்தியா என்பதற்கான இலக்கணமே அது தான். இத்தனை சாதிகளையும், இந்த தேசத்தையும் ஒன்றிணைத்து வைத்திருப்பது அது தான். அந்த இந்துமதத்தை அகற்றி விட்டால், தேசத்தை எளிதாக அடிமைப் படுத்திவிடலாம் – இதுவே அவர்களது வழிமுறையாக இருந்தது.

பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. பண்டைய சட்டவிதிகளின் படி, சாதிகள் தர்மத்தையும், அதன் அடிப்படையிலான தார்மீக கட்டுப் பாடுகளையும் கடைப்பிடித்தன; வரைமுறைகளை அவை அறிந்திருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தன்னளவில் ஒரு சட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கென்று சுய கட்டுப் பாடு  எதுவும் கிடையாது, தனது சுயலாப, சுய-அதிகார வளர்ச்சியில் முனைந்திருக்கும் இன்னொரு சாதி வந்து அதைக் கட்டுப் படுத்தும் வரை! புதிய சுய-பிரதாப சமூக நீதிப் பாதுகாவலர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், கட்சிகளுக்கும் சாதிகள் வேண்டும், ஆனால் தர்மம் வேண்டாம். குறுகிய காலத்தில் சிலருக்கும், சில குழுக்களுக்கும் இது இலாபகரமாக இருக்கலாம். ஆனால் தொலைநோக்கில் தற்கொலைக்கு ஒப்பானது.

பண்டைய நாட்களில் சாதிகளின் தலைவர்கள் அந்த சாதிகள் வாழும் மண்ணின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தார்கள். அதே மண்ணில் முளைப்பவர்களாகவும், தங்களது மக்களின் இயல்பான தலைவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் தற்போது வேறு விதமான தலைமைகள் முன்னுக்கு வருகின்றன; வேரற்ற, குழு துவேஷங்களை தூபம் போட்டு வளர்க்கிற, அதிகார ஆசை பிடித்த தலைமைகள். சுயலாப, சுய அதிகார வளர்ச்சிக்காக மட்டுமே சாதி கோஷங்களை இவை பயன்படுத்துகின்றன என்பதே உண்மை.

[* – 1996, செப்டம்பர்-13 இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த Logic Behind Perversion of Caste என்ற கட்டுரை].

ramswarupராம் ஸ்வரூப் (1920-1998) நவீன இந்தியாவின் சிறந்த சமூக, தத்துவ சிந்தனையாளர்களில் ஒருவர். தொடக்க காலத்தில் சுதந்தரப் போராட்ட வீரராக அருணா அசஃப் அலியுடன் இணைந்து பணியாற்றினார். 1944லேயே கம்யூனிசத்தின் உண்மை முகத்தையும், சோவியத் கொடூரங்களையும் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார். 1949ல் Society for the Defence of Freedom in Asia என்ற அமைப்பைத் தொடங்கினார். கம்யூனிசம் மற்றும் சோவியத் பற்றி இந்த அமைப்பு வெளிக்கொணர்ந்த நூல்கள் அமெரிக்க சிந்தனையாளர்களாலும், ஆட்சியாளர்களாலும் கூட ஆதாரமாகக் காண்பிக்கப் பட்டன. 1982ல் Voice of India என்ற இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். இந்து அறிவியக்கத்தை வளர்த்தெடுக்கும் மிக முக்கியமான நூல்களை இந்தப் பதிப்பகம் இன்று வரை பதிப்பித்து வருகிறது. சீதா ராம் கோயல், ஹர்ஷ் நாராயண், கே.எஸ்.லால், கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்ற இந்து சிந்தனையாளர்களின் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தது இந்தப் பதிப்பகத்தின் மிகப் பெரிய சாதனை.

தனது வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், பற்பல பத்திரிகைக் கட்டுரைகளையும் ராம் ஸ்வரூப் எழுதியுள்ளார். 1940 மற்றும் 50களில் அவர் கம்யூனிசம், காந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதிய நூல்கள் ஸ்ரீஅரவிந்தர், பெட்ரண்ட் ரஸல், ஆர்தர் கோய்ஸ்ட்லர் ஆகியோரால் பாராட்டப் பட்டன. Gandhism and Communism, Foundations of Maoism, Communism and Peasantry: Implications of Collectivist Agriculture for Asian Countries ஆகிய நூல்கள் முக்கியமானவை. பின்னர் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடுகளை ஆதாரபூர்வமாக, நவீன ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திர மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்துப் பார்வையில் விமர்சிக்கும் பின்வரும் நூல்களை எழுதினார் – Understanding Islam through Hadis (சிறிது காலம் தடைசெய்யப் பட்டிருந்தது), Hinduism vis-à-vis Christianity and Islam, Christianity – an Imperialist Ideology, Woman in Islam. இந்துமதம், பௌத்தம், யோகம் பற்றி போப் ஜான் பால் கூறிய முதிராத கருத்துக்களை விமர்சித்து அவர் எழுதிய விரிவான எதிர்வினை தனி நூலாகவே வெளிவந்துள்ளது. The Word as Revelation: Names of Gods, On Hinduism ஆகிய நூல்களில் இந்து தத்துவங்களின் செழுமையையும், இந்து ஆன்மிகத்தின் உலகளாவிய தன்மையினையும் முன்வைக்கிறார். இந்து மறுமலர்ச்சி, இந்திய தேசிய எழுச்சி, இந்திய சமுதாய ஒருங்கிணைப்பு. காந்திய சமூக, பொருளாதார சிந்தனைகள் ஆகியவற்றைத் தன் மையக் கொள்கைகளாகக் கொண்டிருந்த ராம் ஸ்வரூப் தன் வாழ்நாளின் இறுதிக் காலங்களில் ஆழ்ந்த தியான, யோக சாதனைகளில் முற்றாக ஈடுபட்டு ஒரு மகரிஷியாகவே வாழ்ந்தார்.

ராம் ஸ்வரூப் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட் எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

Voice of India பதிப்பகத்தின் சில நூல்களை ஆன்லைனில் இங்கே வாசிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

R.Sridharan on May 21, 2010 at 12:39 am

ஜாதியே எதோ மிகப் பெரிய தவறு என்பது போல் ஒரு பொய்யான பிரச்சாரம் நம் சமூகத்தைப் பற்றிப் புரியாத வெளி நாட்டினர் மற்றும்,கிறித்தவ மதம் பரப்பிகள் இவர்களால் தூபம் போட்டு வளர்க்கப்பட்டது .
அதை இங்கு உள்ள அயோக்கிய அரசியல் வாதிகள் தாங்கள் மக்களை பிரித்து குளிர் காய உபயோகப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர் .
அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று வக்கிரத்தின் எல்லைக்கே போய் விட்டது
ஆரம்பத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டவர்கள் இப்போது இன்னும் ஆயிரம் ஜாதிகள் இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டது

பாரத நாட்டில் வர்ணங்கள் இருந்ததே தவிர அதனால் இழிவு பாராட்ட வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை
அதனால்தான் பல தொழில்களைச் செய்பவர்களும் வணங்கத்தக்க நிலைக்கு உயர்ந்தனர்
வியாசர் -மீனவர் தொழில், வால்மீகி-வழிப்பறி செய்பவர், ராமர்-ஷத்திரியர் ,கிருஷ்ணர்-யாதவர் ,ரவிதாசர்,கனகதாசர் ,நந்தனார் -புலையர்
குங்கிலியக் கலய நாயனார்-குயவர்,கண்ணப்ப நாயனார்-வேடுவர் ,மெய்ப்பொருள் நாயனார்-மல்லர்,சுந்தரமுர்த்தி நாயனார் -வேளாளர்
திருப்பாண் ஆழ்வார்-பாணர், சேக்கிழார் -வேளாளர் .
மேற்கூறிய அனைவரும் எல்லோராலும் வணங்கத்தக்க நிலையை அடைந்தனர் .

ஆனால் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் ஏதோ ஜன்மப் பகை என்பது போல் ஒரு சித்திரம் தீட்டப் பட்டது
அது வரை இல்லாத ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, பட்டியல் எல்லாம் அவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது

முதலில் தங்களுக்கு தங்களுக்கு ஏவல் செய்ய ஏற்கெனவே பாரம்பரியமாக இந்து சமுதாயத்தில் கற்கும் மற்றும் கற்பிக்கும் தொழிலைச் செய்து வந்த பிராமணர்களை ஆங்கிலக் கல்வி படிக்கத் தூண்டினர்
அது ஆங்கிலேயர்களுக்கு ஆட்சி செய்வதில் துணையாக இருக்கும் என்பதற்காகவே அல்லாமல் பிராமணர்களுக்காக அல்ல.

பிராமணர்கள் அதில் ருசி கண்டதும் பெருமளவு ஆங்கிலக் கல்வி கற்கத் தொடங்கினர்
அதனால் நாளடைவில் வக்கீல்,ஜட்ஜ் ,ஐசீஎஸ் என்று எல்லாத எல்லாத் துறைகளிலும் நுழைந்தனர்

ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் அவர்களது ஆங்கிலக் கல்வியே ஆங்கிலேயர்களுக்கு எதிரி ஆனது
ஆங்கிலக் கல்வியின் மூலமாகக் கிடைத்த மேலை நாட்டு சிந்தனைகள் பல பிராமணர்களை ஆங்கிலேய எதிர்ப்பில் நாட்டம் கொள்ள வைத்தது .அதில் அவர்கள் முன்னிலை வகித்தனர்
திலகர், ரானடே ,அரவிந்தர்,மங்கள் பாண்டே ,சந்திர சேகர் ஆசாத்,வாஞ்சிநாதன், பாரதி,ராஜாஜி, நேரு , வவேசு ஐயர் ,சேலம் விஜயராகவாச்சாரியார் ,மண்டயம் திருமலாச்சாரியார் , சத்தியமுர்த்தி, வீர் சாவர்க்கர் ,சுப்ரமணிய சிவா ,மற்றும் பலர் இதில் அடங்குவர் .

அதனால் அவர்களைப் பழி தீர்க்க ஆங்கிலேயர் கடைப் பிடித்த தந்திரம் தான் பிரித்தாளும் சூழ்ச்சி
அதன் ஒரு அங்கமாக ‘பிராமணர்கள் மட்டும் படித்து விட்டார்கள் ‘என்று மற்ற பிரிவினரிடையே தூண்டி விட்டனர் .
பிராமணர்கள் கடைப் பிடித்து வந்த சில சாதீய வழக்கங்களும் , அதனால் பிராமணர்களுக்கு உடனடியாக அடுத்த ( கீழ்) மட்டத்தில் இருந்த சாதியினருக்கு அவர்கள் மேல் இருந்த வெறுப்பும் சேர்ந்து நன்றாகவே பிடித்துக் கொண்டது .
ஆங்கிலேயருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

பாரத நாட்டில் குழப்பம் விளைவிக்கலாம் ,அதே சமயம் சுதந்திரப் போராட்டத்தை வலு இழக்கச் செய்யலாம் .
ஆங்கிலேயர்களின் அடி வருடிகளான நீதிக் கட்சியினர் ‘பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் ‘ என்று பிரேரணை செய்ததை நாம் இத்தருணத்தில் நினைவு கூறலாம்
மேலும் பிரிட்டிஷாரின் ஐந்தாம் படையான மிஷனரிகளும் இதே தந்திரத்தைக் கடைப் பிடித்தனர்
அதன் பின் நடந்தது சரித்திரம்

விடுதலைக்குப் பின் வந்த காங்கிரஸ் வெள்ளைக் காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியை அப்படியே பின்பற்றியது
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியில் அதிக அளவில் உள்ள ஜாதிக்காரரை அந்தத் தொகுதியில் நிறுத்துவது என்பதெல்லாம் அவர்கள் உத்தியே .

திமுக போன்ற மற்ற கட்சிகள் இந்த தந்திரத்தை ஒரு அழகான அற்புதமான கலையாக்கி தப்பித் தவறிக் கூட மக்கள் ஜாதியை மறந்து விடக் கூடாது என்று எல்லாவற்றிலும் அதைப் புகுத்தி,ஆனால் அதே சமயம் தாங்கள் சாதிக்கு எதிரானவர்கள் என்பது போல் ஒரு ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன .

முகலாயப் படை எடுப்பின் போது ஜாதி ஒரு பெரிய அரணாக இருந்தது
இல்லை என்றால் முழு பாரதமுமே இஸ்லாமுக்கு மாறி இருக்கும்
ஏனென்றால் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த ஜாதி ஒரு பாதுகாப்பான உணர்வையும், அடையாளத்தையும் ,பெருமிதத்தையும் கொடுக்கிறது
ஆகவே அவர்கள் அதைப் பற்றிக் கொண்டு விட்டால் மத மாற்றம் செய்ய முடியாது

தீண்டாமை என்பதை ஒதுக்கிப் பார்த்தால் ஜாதியே அவ்வளவு பயங்கரமானது அல்ல என்பது புரியும்
ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை மட்டம் தட்டாமல் மரியாதையுடனும் சமமாகவும் நடத்தினால் பிரச்னையே இல்லை
அவரவர்களது சடங்குகள்,சம்பிரதாயங்கள் இவற்றை அவரவர்கள் செய்து ஜாதி வீட்டுக்குள் மட்டும் இருந்தால் தொல்லை இல்லை
வெளியில் வந்ததும் நாம் எல்லாரும் பாரதத்தாயின் மக்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்
ஹிந்து தர்மம் என்ற ஆல மரத்தின் விழுதுகள் தான் நாம் ஒவ்வொருவரும் என்று நினைவு கொள்ள வேண்டும்

ஒருவர் ஜாதியே வேண்டாம் என்றால் தாரளமாக விட்டு விடட்டும்
கலப்பு மணம் புரிந்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும்
ஒரு பிராமணர் அல்லாதார் மந்திரங்களும்,உச்சாடனங்களும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தாராளமாகக் கற்றுக் கொள்ளட்டும்
வேதம் ஓத இச்சை இருந்தால் ஓதட்டும் .ஆனால் அதற்குரிய அனுஷ்டானங்களுடன் .

ஆனால் அப்படிச் செய்து தான் ஆக வேண்டும் என்றோ இல்லை என்றால் அவர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றோ சொல்வது தவறு
அந்த வாதத்தால் தான் இவ்வளவு குழப்பம்

அப்பூதி அடிகள் அந்தணர் ஆன போதும் அப்பர் பாதங்களில் விழுந்தார். தில்லை அந்தணர்கள் திருநாளைப் போவார்
நந்தனாரின் கமல மலர் தொழுதனர் .
அந்த மனப் பாங்கு இன்று வந்து விட்டால் அப்புறம் குறை ஏது நமக்கு ?

மகாகவி பாரதியின் அமர வாக்கியத்தை நினைவு கூர்வோம்
‘ ஜாதி மதங்களைப் பாரோம் ,உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்துவராயின்
வேதியராயினும் ஒன்றே ,அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே’
இரா.ஸ்ரீதரன்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

thooyavan on May 21, 2010 at 7:01 am

முதலில் வர்ணம் என்பதும் சாதி என்பதும் வேறு என்பதை விவரிக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் வர்ணத்தை சாதி என்று மொழி பெயர்த்தார்கள். நான்கு ஜாதிகள் என்று எங்கும் பார்க்கலாம். ஜாதிகள் ஆயிரம். வர்ணம் நான்கே. வர்ணம் பிறப்பால் மட்டும் வந்ததல்ல. தொழில் குணம் ஒட்டியே வந்தது. கீதை 4‍ 13, வஜ்ரசூசிக உபநிஷத், மாஹாபாரதத்தில் யக்ஷ ப்ரஷ்னம் போன்றவை விளக்குகின்றன. குறிப்பாக பிறப்பால் மட்டுமே வர்ணம் என்பதையும் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே என்பதை கண்டிக்கிறது. ஒழுக்க நெறி கேள்வி கல்வி மிக முக்கியம். குணத்தை ஒட்டிய தொழில் வர்ணத்தை நிர்ணயிக்கும். ஜாதி பிறப்பால் வருவது. ஜாதியிலிருந்து சிறப்பு என்பது இழிவு.இப்போதும் நம் நாட்டினர் ஆங்கில நூல்கள் படித்தே நம் கலாச்சாரம் சமயம் முதலானவற்றை ஆராய்ச்சி செய்கிறார்கள். நம் மொழிகளில் தமிழ் சமஸ்கிருதம் நூல்களை பலர் படிப்பதில்லை. ஆங்கிலேய நூல்களில் வர்ணம் ஜாதி என்றே இருக்கிறது. இதனால் பெருத்த குழப்பம். ஆங்கிலேயனுக்கு ஆங்கிலம் வழியாக நாம் இன்னும் அடிமை! நம் நாட்டில் இருந்து அவனை விரட்டினோம். ஆனால் மனதில் குடிகொண்டது பேய்!

ஜாதிகள் மாநிலம், தொழில், பழ‌க்கங்கள், வழி முறைகள், மொழி இவற்றால் வேறுபட்டன. அவை நாளடைவில் மாறுபடலாம். அவை சமயத்தால் வர வில்லை. எந்த இந்து சாத்திரத்திலும் ஜாதி கூறவில்லை. இவர்தாம் இந்த தொழில் செய்ய வேண்டும் செய்யாக்கூடாது என்று உள்ளதா? யார் செட்டியார், யார் குரும்பர் யார் பார்ப்பனர் என்று பிறப்பால் வகுக்கிறதா? இல்லை

வர்ணம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. நம் குணத்தை மேன்மை செய்ய அறிவித்தது

நாம் இந்து சமய கோட்பாடுகளை விவரிக்காமல் விட்டோம். இது நம் தவறு.

எதிரிகள் இந்த தவற்றை பயன் படுத்துகிறார்கள்

இன்றும் நாடெங்கும் போலி பிரச்சாரம் நடக்கும்போது நாம் பதில் சொல்வதில்லை.
இது மாபெரும் தவறு.
நம் கொள்கைகளை விவரிக்கவேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

senthil on September 28, 2010 at 1:29 pm

சாதிகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது, எந்த வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருந்தது என்பதை நம் கதைகளிலும் இதிகாசங்களிலும் காணலாம்..

கொங்கு நாட்டில் இன்றளவும் பாடப்படும் ஒரு இதிகாசக் கதை “அண்ணமார் கதை” அல்லது “குன்றுடையான் கதை” .. இது உண்மையாக நடந்த கதை.. கலைஞர் கூட, “பொன்னர் சங்கர்” என்ற நாவலாக அந்த கதையை எழுதி உள்ளார்..

உங்களுக்கு (அதாவது இந்த கட்டுரை ஆசிரியருக்கு) நேரமிருந்தால், இந்த கதையை படிக்கவும்.. சோழ மன்னனில் இருந்து, சோழன் தண்டல், முதலியார், செட்டியார், பறையர், மாதாரி வரை எல்லா ஜாதிகளும் அந்த கதைகளில் வரும்.. ஜாதியை பற்றி புரிந்து கொள்வதற்கு இது ஒரு அருமையாண வரலாற்று ஆவணம்..

இன்றும் அண்ணமார் சுவாமி கோயில், பல சாதிகளுக்கு குலதெய்வமாக உள்ளது.. நான், கொங்கு வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவன்.. என்னுடைய குல தெய்வம் அண்ணமார் சுவாமி.. அண்ணமார் சுவாமி சிலைக்கு நேரெதிரே சாம்பவர் சிலை, கோளம் அடிக்கும் நிலையில் இருக்கும்… பின், கோயிலுக்கு வெளியே வாயிலில் கருப்பனார் சிலை இருக்கும்.. ஒவ்வொரு முறையும் பூஜை நடக்கும் பொழுது, எல்லா சிலைக்கும் படைத்து, காலில் விழுந்து கும்பிட்டு வருவோம்.. அண்ணமார் கதையில் சாம்பவர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்.. அண்ணமாரோடு சேர்ந்து போரில் உயிரை விட்டவர்.. ஆனால், யாரும் கோயிலில் அவரை பறையராக பார்ப்பதில்லை.. கடவுளாகத்தான் பார்க்கிறார்கள்..

சாதி பாகுபாடு கிரஹஸ்தர்களுக்கு மட்டும்தான்.. அது வாழ்க்கை முறை வேறுபாட்டால் வருவது.. ஆன்மிகத்தில் என்றுமே சாதி பாகுபாடு கிடையாது..

senthil on November 26, 2011 at 3:40 pm

திரு. ஜடாயு.. உங்கள் கட்டுரையில் ஒன்றை கவனித்தீர்களா? பழைய ஆவணங்களிலிருந்து மட்டுமே நீங்கள் எடுத்தாள்கிறீர்கள்.. அல்லது, யாராவது ஒருவர் புத்தகமாக எதையாவது எழுதியிருக்க வேண்டும்.. ஏன் இந்த குறுகிய வரையறைக்குள் வருகிறீர்கள்..

இன்றைக்கும் ஜாதிகள் அப்படியே தான் இருக்கிறது.. போன தலை முறை வரை, ஒவ்வொரு ஜாதியும் தன்னுடைய தொழிலைதான் செய்து கொண்டிருந்தது.. ஏன் அவர்களிடம் போய் அவர்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் கேட்க மறுக்கிறீர்கள்.. பழைய சாதிகள் வேறு இன்றைய சாதிகள் வேறு என்று எவ்வாறு நீங்கள் முடிவு செய்தீர்கள்? ஏதாவது ஆராய்ச்சி செய்தீர்களா?

நான் பார்த்த வரையில் ஒவ்வொரு ஹிந்த் சிந்தனையாளரும், புத்தகத்திலும், கற்பனையிலுமே குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை பொருத்தவரை, இந்திய பாரம்பரியம் செத்துவிட்டது.. இன்றைக்கு இருக்கிற மக்களுக்கும், ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்கிற மக்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..

தயவு செய்து இதை மாற்றிக் கொள்ளுங்கள்..

அடுத்து, சாதியத்துக்கு வருகிறேன்..

ஒவ்வொரு சாதியும் தன்னுடைய குலத்தொழிலை போன தலைமுறை வரை செய்து கொண்டேதான் இருந்தது.. ஹிந்துத்துவ அமைப்புகள் (குறிப்பாக R.S.S) ஆரம்பிக்கப்பட்டு 80 வருடங்கள் ஆகியிருக்கிறது.. யாராவது, இந்த ஜாதிகளின் குலத்தொழில்லுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்திருக்கிறார்களா? ஜாதிகள் உடைக்கப்படுவதையும், அரச்சங்கத்தால், பிர்த்தாளப்படுவதையும் வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தார்கள்.. ஊருக்கு (வெளினாட்டு மீடியாவுக்கும், சிந்தனையாளர் மத்தியிலும்) தான் நல்லவர்கள் என்று காட்டுவதற்காக, ஜாதியை விட்டு விலகியே இருந்துள்ளீர்கள்.. இன்னைக்கு வரைக்கும் அப்படியே இருக்குறீர்கள்..

அப்படியிருக்க, சாதிகள் வஞ்சிக்கப்பட்டு, அடக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு நிர்கதியில் நிற்கும்போது, நீங்கள் சாதியம் என்று கூப்பாடு போடுகிறீர்கள்.. இத்தனை நாளாக என்ன செய்தீர்கள் உங்கள் ஹிந்துதுவ அமைப்புகள்..

தயவு செய்து சாதியை பத்தி எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு ( அதாவது, ஹிந்துவவாதிகளுக்கு ) எந்த தகுதியும் இல்லை.. சாதிகளுக்கு உங்கள் ஹிந்து மதத்த்தில் இடமில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விடுங்கள்..



-- Edited by Admin on Monday 12th of June 2017 10:48:44 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard