1946 இல் சென்னையில் திப்புசுல்தான் நாளில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. குடி அரசு 16.11.1946) இங்கு இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்? மதம் மனிதனுடைய சொந்த ஆத்மார்த்தத்திற்கா? அல்லது மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்கா? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு "எப்படியாவது அவனுக்குப் பறப் பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்" என்போம்.
தோழர்களே, மதப்போராட்டம் என்பதில் ஏதாவது அறிவுடைமையோ மேன்மையோ இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மதப்போராட்டம் என்பது ஒருவிதமான வெறி அல்லது மக்களை மக்கள் ஏய்த்துப் பிழைக்கச் சுயநல வழி என்பதல்லாமல் வேறு அதில் என்ன இருக்கிறது?
பெண் ஏன் அடிமையானால் என்ற பெரியாரின் நூலிலிருந்து – எயுதப்பட்ட காலம் 1.1.1942
மற்றும் சில சமூகங்களில் பர்தா என்றும், கோஷா என்றும், திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்கவேண்டியவர்கள் என்றும், முகத்தை முடிக்கொண்டு வெளியில் போகவேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும், புருஷன் பல பெண்களை மணக்கலாம்; பெண்கள் ஏககாலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக்கொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும் நம் நாட்டில் ஒரு தடவை புருஷன் பெண்சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அந்தப் பெண்ணுக்கு சாகும்வரைக்கும் வேறு எந்தவித சுதந்திரமும் இல்லையென்றும், புருஷன் அப்பெண்ணின் முன்பாகவே பல பெண்களைக் கட்டிக்கொண்டு கூடி வாழலாம் என்றும், புருஷன் தன் மனைவியை தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு அவளுடன் ஒன்றித்து வாழாமலிருந்தும்கூட மனைவி புருஷனைச் சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமேயொழிய, இன்பத்திற்கோ, இச்சையைத் தீர்ப்பதற்கோ அவனைக் கட்டுப்படுத்த உரிமை இல்லை என்று கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலங்கவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே, பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கிறார்கள். பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும்.
(06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)
இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூமத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள். இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.