தமிழ் குறித்தும் தமிழர்களின் தொன்மை குறித்தும் பல்வேறுஇலக்கிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்திலும் ஒரு நகர நாகரிகம் இருந்துள்ளது. மக்கள் வாழ்ந்துள் ளார்கள் என்பது அகழாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது கீழடி. இங்கு பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறையினர் கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்து அகழாய்வு நடத்திவருகின்றனர். இங்குள்ள கட்டடங்களும், கிடைக்கப் பெற்றுள்ள பழங்காலப் பொருட்களும்கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன என்று வரையறுக்கப்பட்டுள்ளது
. 1963-ஆம் ஆண்டு முதல் 1973-ஆம்ஆண்டு வரை காவிரி பூம்பட்டினம் மற்றும் 2005-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறை அகழாய்வு நடத்தியுள்ளது
. ஆனால், கீழடியில் நடத்தி வரும்ஆய்வில் இங்கு மனிதர்கள் வாழ்ந்துள் ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன
. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள் தான் கிடைத்தன.
கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டடங்கள் இருப்பதும் குறிப்பாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டடங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ஹரப்பாவில்தான் இதுபோன்ற குழாய்களுடன் கூடிய நகர நாகரிகம் இருந்தது என தெரியவந்த நிலையில், தமிழகத்திலும் அதேபோன்று நாகரிகம் இருந்துள்ளது அகழாய்வில்ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவித் தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், இவர்களுடன் சென்னை பல்கலைக்கழக தொல்லியல்துறை ஆராய்ச்சி மாணவர்கள் வசந்தகுமார், பரத்குமார், ஹரிகோபாலகிருஷ்ணன், காளீஸ்வரன் மற்றும் கிருஷ்ணகிரி கலைக் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், மஞ்சுநாத் ஆகியோரும் இணைந்து இங்கு பணியாற்றி வருகின்றனர்.
ஆய்விற்கான மூலம்
நதிக்கரைகளில் மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்காக, 2013-ஆம் ஆண்டு வைகை நதி தொடங்கும் வருஷநாட்டை அடுத்துள்ள வெள்ளிமலையிலிருந்து வைகை நதி கடலில் கலக்கும் பகுதியான இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஆற்றங்கரை வரை சுமார்300 முதல் 400 கிராமங்கள் வரை (வைகை நதியின் இடது, வலதுபுறங் களில் எட்டு கி.மீ அளவிற்கு) முதற் கட்ட ஆய்வு நடைபெற்றுள்ளது.
இதில்மொத்தம் 293 தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இறுதியில் பத்து கிராமங்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்த 10 கிராமங்களில் கீழடியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆய்விற்கான மொத்தப் பரப்பு 4.5 கி.மீ., அதாவது 110 ஏக்கர். இதில் 50 சென்ட் இடத்தில்தான் இதுவரை ஆய்வு நடைபெற்றுள்ளது.
ஆய்வு இன்னும் பத்து வருடங்களுக்கு தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கும்.
வரலாற்றைப் பாதுகாத்த விவசாயம்
கீழடியில் உள்ள வரலாற்றுப் புராதனச் சின்னங்களைப் பாதுகாத்தது விவசாயம் தான். இப்போதும் அகழாராய்ச்சி நடைபெறும் பகுதியில் தென்னை மரங்கள் ஏராளம் உள்ளன. தென்னை மரங்களுக்கு பாதிப்பின்றி இந்த ஆய்வு நடைபெற்றுவருகிறது
கடந்தாண்டு 43 குழிகள், இந்தாண்டு 59 குழிகள் என மொத்தம் 102 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை ஐந்து உறைக் கிணறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
. இதில் ஒரு கிணற்றில் மண்ணால் செய்யப்பட்ட 15 உறைகள் உள்ளன. இந்த மேட்டில், 4.5 மீ. ஆழத்திற் குள், மூன்று விதமண் அடுக்குகள் காணப்படுகின்றன. முதல் 3 மீ. ஆழத்தில் மேம்பட்ட நாகரிக காலப்பொருட்களும்; 3 மீ. முதல், 4.5 மீ. ஆழத்தில் இரும்பு காலப் பொருட்களும்; 4.5 மீ. முதல், 6 மீ. ஆழத்தில் கன்னி மண்ணும்; 6 மீ. ஆழத்திற்குப் பின் 12 மீ., வரை, ஆற்று மணலும் இருக்கின்றன.
அதனால், அந்தப் பகுதியில், வைகை ஆறுபாய்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
செங்கல் கட்டடங்கள்
இங்குள்ள கட்டடங்களில், 36 : 22 : 6, 34 : 21 : 5, 35 : 22 : 6, 32 : 21 : 5 செ.மீ.,அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு துளையிடப் பட்ட சுடுமண் ஓடுகள், ஆணிகள் மூலம்வேயப்பட்டுள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப் பட்டுள்ளன.
ஒரு கட்டடத்தில் துணிகளை துவைப்பதற்கான கருங்கல் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஆய்விற்குரிய விஷயம்.
சுடுமண்ணால் செய்யப்பட்ட வடிகால்கள் மூடப்பட்ட நிலையிலும், செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால் கள் திறந்த நிலையிலும் உள்ளன.
சில கட்டடங்களில் உலைக் கலன்கள் உள்ளன. உலைக் கலன்கள் இருந் ததை வைத்துப் பார்க்கும்போது இங்கு தொழிற்கூடங்கள் இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சி மாணவர்கள். கீழடியில் மேட்டுகுடிமக்களும், கல்வியறிவு பெற்றவர் களும் வாழ்ந்திருக்கலாம் என்ற கூடுதல் தகவலையும் அவர்கள் கூறினர்
.கருப்பு-சிவப்பு நிறத்திலான மண்பானைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன. இவைதண்ணீர் சேகரித்து வைப்பதற்கோ,உணவுப் பொருட்களை சேமிப்பதற்கோ பயன்பட்டிருக்கலாம்.
வர்த்தகத் தொடர்பு
மண்பானைகள், தண்ணீர் குடிக்கப்பயன்படுத்தப்பட்ட குவளைகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன
. இதன் மூலம் இலங் கைக்கும் கீழடி பகுதிக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது.சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் ஆகியவற்றில் குவிரன், குலவன், உலசன், வேந்தன், முயன், இரவாதன், சேந்தனவதி அல்லது சந்தனவதி என்ற எழுத்துக்கள் பிராமி வடிவில் எழுதப்பட் டுள்ளன.
இந்த எழுத்துக்களை வைத்து மதிப்பீடு செய்தால் பலதரப்பட்ட மக்கள் இங்கு வசித்துள்ளார்கள் அல்லதுவந்து சென்றுள்ளார்கள் என அறியமுடியும்
என்றாலும் இது குறித்துஇன்னும் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது.
முத்திரைக் கட்டையும் தந்தச் சீப்பும்
அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (தற்போதுவணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்பு போன்றது), தந்தத்தினால் ஆன காதணிகள், தந்தத்தினால் ஆன தாயக்கட்டைகள், செம்பினால் செய்யப்பட்ட வளையல்கள், பாசிகள்,மோதிரங்கள், இரும்பினால் ஆன ஆணி, கோடாரி, இடுக்கி, ஈட்டி முனைகள், கழுத்தில் அணியும் டாலர், விலங்கின் கொம்பு அல்லது எலும்பினால் ஆன அம்பு முனைகள், பெண்கள்விளையாடிய சில்லாக்கு, எடைக்கற் கள், கண்ணாடி மணிகள் என 2015-ஆம் ஆண்டில் 1,800 பொருட்கள், 2016-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 550 பொருட்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 350 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
.இங்கு சேகரிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை விஞ்ஞானப்பூர்வ (பீட்டா அனாலிசிஸ்) ஆய்விற்கு உட்படுத்தவேண்டியுள்ளது. இந்தஆய்வு அமெரிக்காவில் உள்ள புளாரிடோ மாகாணத்தில் நடைபெறுகிறது. ஒரு மாதிரியை ஆய்வு செய்வதற்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும். இதுவரை இரண்டு மாதிரிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இன்னும்15 மாதிரிகளை அனுப்பவேண்டியுள்ளது
.இந்தாண்டிற்கான ஆய்வுகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில் 15.9.2016 அன்று தந்தத்தினால் ஆன சீப்பு ஒன்று கிடைத்துள்ளது
.பீர்முஹம்மது, கிருஷ்ணன், இஸ்மாயில், சிலார்மைதீன், சோனை, கஜேந்திரன் ஆகியோர் ஆய்வு நடைபெற்றுவரும் இடத்திற்கான சொந்தக்காரர்கள்.
இவர்களையும் சேர்த்து 80 தொழிலாளர்கள் வரை பணியாற்றியுள்ளனர். தற்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள் ளது. ஆண்களுக்கு தினக்கூலியாக ரூ.271, பெண்களுக்கு தினக்கூலியாக ரூ.235-ம் வழங்கப்படுகிறது.
தற்போது இங்கு சேகரிக்கப்படும் பொருட்களை மைசூரில் உள்ளஅருங்காட்சியகத்திற்கு அனுப்பிவருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் கீழடியில்நடைபெற்று வரும் அகழாராய்ச்சியில் சேகரிக்கப்பட்ட பொருட்களை இங்கேயே பாதுகாத்து வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அருங்காட்சியகம் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் இடம் தேவை. அதற்கான இடத்தை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள் மற்றும் கலை- இலக்கியஆர்வலர்கள்.
தமிழர்களின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உள்ளது. அந்தப்பொறுப்பை விரைந்து நிறைவேற் றுமா தமிழக அரசு.
-சௌமி /தீக்கதிர்
-- Edited by Admin on Wednesday 28th of September 2016 05:12:03 AM