New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோழர்- இடப்புறம்- மருதன்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
தோழர்- இடப்புறம்- மருதன்
Permalink  
 


 

தோழர்

புதிய தொடர் – அத்தியாயம் 1

 

பிரடரிக் எங்கெல்ஸ்

 

இயந்திரங்களுக்கு வியர்ப்பதில்லை. அவை ஓயாமல் பணியாற்றுகின்றன.  இயந்திரங்களுக்கு ஊதியம் கொடுக்கவேண்டியதில்லை. இயந்திரங்கள் மனிதர்களின் விரோதிகள்.  இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைப் பறித்து, அவர்களைப் பசியில் தள்ளி, கொல்கின்றன. நூற்றுக் கணக்கானவர்கள் பணியாற்றிய இந்தத் தொழிற்சாலையில் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களும் விரைவில் துரத்தப்பட்டுவிடலாம்.  நம் கண் முன்னால் நண்பர்களை, அவர்கள் குடும்பங்களை இயந்திரங்கள் சாகடித்திருக்கின்றன.  என்ன செய்யலாம்?

இயந்திரங்கள் தொடுத்திருக்கும் இந்தப் போரை நிராயுதபாணியாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. எனவே, அழித்துவிடலாம்.  தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.  தாக்குதலுக்கு எதிர் தாக்குதலே தீர்வு.  அழிவுக்கு அழிவே பதில்.  1811-ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர், யார்க்‌ஷயர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் துணி ஆலைகளில் ஒன்று கூடினர்.  ஆவேசத்துடன் இயந்திரங்களைத் தாக்க ஆரம்பித்தனர்.  வியர்க்காத, உழைக்காத, ஊதியம் கேட்காத இயந்திரங்களுக்குத் திருப்பித் தாக்கவும் தற்காத்துக்கொள்ளவும் தெரியவில்லை. உடைந்து நொறுங்கின. இனி விடியல் என்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

இவர்கள் லுட்டைட்டுகள் (Luddities) என்று அழைக்கப்பட்டனர். நெட் லுட் (Ned Lud) என்பவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் இந்தப் பெயர்.  கேப்டன் லுட், ஜெனரல் லுட் அல்லது கிங் லுட் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த நெட் லுட், அடிப்படையில் ஒரு நெசவாளி.  நெட் லுட் பணியாற்றி வந்த ஆலையின் முதலாளி, ஒரு சமயம் அவரை சாட்டை கொண்டு அடித்துவிட்டார். லுட் வேலை செய்யாமல் சும்மா இருந்ததால் இந்தத் தண்டனை.  வெறுப்பும் கோபமும் கொண்ட லுட், ஸ்டாக்கிங் ஃபிரேம் என்று அழைக்கப்பட்ட நெசவாலை இயந்திரத்தை உடைத்துச் சேதப்படுத்தினார்.

1779 வாக்கில் இந்தச் சம்பவம், ஒரு சாதாரண நெசவாளியாக இருந்த நெட் லுட்டை, தொழிலாளர்களின் கதாநாயனாக உயர்த்தியது.  முதலாளியின் தண்டனைக்குப் பயந்து பணிந்துபோகாமல், துணிச்சலும் சுயமரியாதையும் கொண்டு நெட் லுட் தொடுத்த பதில் தாக்குதல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இன்னொரு பாடத்தையும் அவர்கள் இந்தச் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்டனர்.  முதலாளிகளுக்குப் பலம் கொடுக்கும் சக்தி எது?  நெட் லுட்டை எந்தத் தைரியத்தில் அவர் சாட்டையால் அடித்தார்? இயந்திரங்கள் கொடுத்த துணிச்சல்தானே?  எனவேதான், லுட் இயந்திரங்களைத் தாக்கினார்.  இந்த உண்மை புரிந்தபோது, நெட் லுட் ஆதர்சத் தலைவராக உருவெடுத்தார்.

இங்கிலாந்தில் உள்ள லெஸ்டர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நெட் லுட் இருக்கிறார் என்று அப்போது சொல்லி வந்தார்கள்.  நெட் லுட்டைப் பார்த்தவர்கள் யாருமில்லை.   ஆனால், அவரைப் பற்றிய செய்திகள் உலாவிக்கொண்டிருந்தன.  அவரது சாகசங்கள் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டன.  அவரைப் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றப்பட்டன. நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.   உண்மையில், நெட் லுட் என்று யாருமில்லை.  அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.  ஆனால், நெட் லுட்டைத் தங்கள் தலைவராக ஏற்று அவர் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் உயிர்த்திருக்கும் ஒரு போராளி.

 

நெட் லுட்

 

1811-ம் ஆண்டு நெசவாலை இயந்திரங்களை உடைத்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் லுட்டின் வழி வந்தவர்கள்.  லுட் போலவே இவர்கள் இயந்திரங்களை நொறுக்குவதன் மூலம், முதலாளிகளை எதிர்த்தவர்கள்.  லுட்டின் அணுகுமுறை, தொழிலாளர்கள் மத்தியில் சிறிது காலம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது. பிரிட்டனில் பல தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.  நாளடைவில், இந்த இயக்கம் அடக்கப்பட்டது. லுட்டைட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பலர், தூக்கில் இடப்பட்டனர். உடைபட்ட இயந்திரங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டன.  உணவு இடைவேளையின்போது மட்டும் நெட் லுட் அவர்களிடம் தோன்றினார்.  நம்பிக்கையூட்டினார்.  தைரியம் அளித்தார்.  தொழிற்சாலை மணி அடித்ததும் அவர் விடைபெற்றுக்கொண்டார்.  இயந்திரங்கள் தொழிலாளர்களை இயக்க ஆரம்பித்தன.

1780-ம் ஆண்டு தொடங்கி பிரிட்டன் தனித்துவமாக மின்னத் தொடங்கியதற்குக் காரணம், இயந்திரமயமாக்கல். பிரிட்டிஷ் வர்த்தகர்கள் இயந்திர உற்பத்தியில் அதிக முதலீடு செய்தனர். வெப்பத்தாலும் நீராலும் இயங்கக்கூடிய பெரும் இயந்திரங்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டன. விவசாயம், உற்பத்தி, சுரங்கம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று அனைத்துத் துறைகளிலும் இயந்திரங்கள் நுழைந்தன. சமூக, அரசியல் வாழ்வில் இயந்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பிரிட்டனில், பஞ்சு உற்பத்தி 1785-ம் ஆண்டுக்கும் 1850-ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது. இரும்பு, எஃகு ஆலைகள் பெருகின. புதிய கண்டுபிடிப்புகளும் வர்த்தக முறைகளும் உருவாயின. தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியும் அதன் மூலம் லாபமும் பெருகியது. இயந்திரமயமாக்கல் ஒரு புதிய அரசியல், சமூக மற்றும் வர்த்தக சித்தாந்தத்தை முன்மொழிந்தது. வர்த்தகம் செய்ய முன்வருபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு விதிக்கக்கூடாது. எந்தவிதமான குறுக்கீடும் கூடாது. முதலாளிகளை சுதந்தரமாக இருக்கவிட்டால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பார்கள். தொழில்மயமாக்கலைத் துரிதப்படுத்துவார்கள். லாபத்தைப் பெருக்குவார்கள். நாட்டின் வருவாயை உயர்த்துவார்கள். இந்தப் புதிய சித்தாந்தத்தை பிரிட்டனும் பிரிட்டனைத் தொடர்ந்து பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் அபரிமிதமான ஏழைமையும் உருவாகிக்கொண்டிருந்தது. உற்பத்திக் கருவிகளைச் சொந்தமாக வைத்திருந்த முதலாளிகள் செழிப்படைந்து கொண்டிருந்த அதே சமயம், இந்த ஆலைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த கடைநிலை ஊழியர்கள் வறுமையில் சிக்கித் தவித்தனர். தொழிலாளர்கள் அதிக நேரம் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் பணிச்சூழல் அசுத்தமானதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே உணவு சமைக்கலாம். அதற்குத் தேவைப்படும் கூலி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொழில்துறை நகரமாகத் திகழ்ந்த வடக்கு பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரம், தொழிலாளர்களின் நரகமாகவும் திகழ்ந்தது.

நிலக்கரிச் சுரங்கங்களில் குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டனர். கரி நிரப்பப்பட்ட வண்டிகளை இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு விலங்குகளைப் போல் இழுத்துச்சென்றனர். பணிக்கு இடையில் அவர்கள் காயமுற்றாலோ இறந்துபோனாலோ ஆலை முதலாளிகள் வருந்துவதில்லை. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழந்தைகளைத் தருவித்துக்கொண்டனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக, காலை முதல் இரவு வரை பணியாற்றினால்கூட அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம் கிடைக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் அமைத்துக்கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரள்வதும் விவாதித்துக்கொள்வதும் கண்டிக்கப்பட்டது. இயந்திரங்களை எப்படி வெற்றிகொள்வது? தொழிலாளர்கள் திகைத்து நின்றனர். உடல் உழைப்பு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. சமூக வாழ்வின் சவால்கள் அவர்களை மிரட்சிகொள்ள வைத்தது. எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து தூக்கியெறியப்படலாம், கிடைத்துவரும் கூலியும் நின்றுபோகலாம் என்னும் யதார்த்தம் அவர்களை அச்சுறுத்தியது.

மாற்று தேடி பலர் மதத்திடம் தஞ்சம் புகுந்தனர். மார்க்சிய சிந்தனையாளரான ஜார்ஜ் தாம்சன் தொழிலாளர்களின் இந்தக் கையறு நிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: ‘நாகரிக மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தின் வெளிப்பாடு மதம் ஆகும். இயற்கையைப் புரிந்துகொள்ளவும் வெல்லவும் முடியாத ஆதிகால மனிதன் மாய வித்தையின் ஆதரவை நாடியதுபோல், வர்க்க சமுதாயத்தைப் புரிந்துகொள்ளமுடியாத நாகரிக மனிதன், சமயத்தின் துணையை நாடுகிறான்.’

மதம் அவர்களை அமைதிப்படுத்தியது. இந்த உலகில் இல்லாவிட்டாலும் மேலுலகில் நிச்சயம் பொற்காலம் உண்டு என்று அவர்கள் காத்திருந்தனர்.

மதம் என்னும் அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிலாளர்களின் விரக்தியையும் மன உளைச்சலையும் ஏக்கத்தையும், மிக முக்கியமாக, கோபத்தையும் மதம் நீர்த்துபோகச்செய்தது. மதம் ஒரு பக்கம் சேவையாற்றிக்கொண்டிருந்த அதே சமயம், முதலாளிகள் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் சட்டங்களை 1800-களில் பல ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன. (அமெரிக்கா, இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நியூ யார்க்கில் பதினாறு மணி நேரங்கள் குழந்தைகள் கடும் வேலை செய்துவந்தனர்.)

இயந்திரமயமாக்கலையும் முதலாளித்துவத்தின் அடக்குமுறையையும் எதிர்கொள்ள சோஷலிசமே சரியான பாதை என்றார் ராபர்ட் ஓவன்.  பிரிட்டன் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சோஷலிச சிந்தனையாளராக ராபர்ட் ஓவன் அறியப்பட்டிருந்தார். ஒரு துணி ஆலையில் உதவியாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ராபர்ட் ஓவன், பருத்தி ஆலை ஒன்றின் உரிமையாளராக உயர்ந்தார். இதுநாள் வரை முதலாளிகள் நடத்தி வந்ததைப்போன்று இல்லாமல், ஒரு புதிய தொழிற்சாலையை இவர் நிர்மாணிக்க விரும்பினார். இதுநாள்வரை உலகம் கண்டிராத, தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியாத, அவர்களை அடிமைப்படுத்தாத ஓர் ஆலையை இவர் வடிவமைக்க விரும்பினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள நியூ லானார்க் என்னும் இடத்தில், ஓவன் ஓர் இயந்திரக் குடியிருப்பை வடிவமைத்தார். இங்கே இரண்டாயிரம் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். சுத்தமான, சுகாதாரமான வாழ்விடமாக அது இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.

இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்யவேண்டிய அவசியம் தொழிலாளர்களுக்கு இங்கே இல்லை. ஆலைக்கும் குடியிருப்புக்கும் அருகே இசை அரங்கமும் நாடக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன. 1825-ம் ஆண்டு, இன்னமும் மேம்படுத்தப்பட்ட ஒரு சமுதாயக்கூடத்தை இண்டியானாவில் உள்ள நியூ ஹார்மனியில் உருவாக்கினார் ஓவன். எதிர்காலத்தில் அமையவிருக்கும் சமத்துவ சமுதாயத்துக்கு இது முன்மாதிரியாகத் திகழும் என்று ஓவன் நம்பினார்.

ராபர்ட் ஓவனைப் போலவே பிரான்சில் உள்ள சார்லஸ் ஃபூரியயேவும் பல சமத்துவக்கூடங்களை நிறுவினார். தொழிற்சாலையோடு சேர்த்து தொழிலாளர்கள் வசிப்பதற்கான வாழ்விடங்களையும் இவை கொண்டிருந்தன. அரசாங்கங்கள் போதுமான நிலத்தையும் சுதந்தரத்தையும் அளித்திருந்ததால், இப்படிப்பட்ட சமத்துவக் கூடங்களை அமைப்பது எளிதாகவே இருந்தது. ஓவன், ஃபூரியே போன்றவர்களின் சோஷலிச முயற்சிகள் தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தன. ஆனால், இந்த முயற்சிகளைப் பிற முதலாளிகள் கண்டுகொள்ளவில்லை. ஓவன் எதிர்பார்த்ததைப்போல் முதலாளிகள் இவற்றை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. முதலாளிகள் மனம் மாறி தொழிலாளர்களுக்கு நல்ல பணிச்சூழலையும் நல்ல கூலியையும் வழங்குவார்கள் என்னும் ஓவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. நம் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாது என்று நொந்துகொண்டார்கள் தொழிலாளர்கள்.

பிரிட்டனின் தொழில் வளர்ச்சியைக் கண்டு ஐரோப்பிய நாடுகள் இயந்திரமயமாக்கலை தங்கள் நாடுகளிலும் அமல்படுத்த ஆரம்பித்தன.  பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, (விரைவில்) பிரிட்டனுக்கே போட்டி போடும் அளவுக்கு தொழில் வளம் கொண்ட சாம்ராஜ்ஜியமாக பிரஷ்யா (ஜெர்மனி என்ற நாடு பின்னர் உதயமாகும்போது அதில் பிரஷ்யாவையும் உள்ளடக்கும்…) உயர்ந்தது.  ஜெர்மனியின் வளர்ச்சி முதலில் தென்பட்டது  ரைன் மாகாணத்தில்.  மே 5, 1818 அன்று கார்ல் மார்க்ஸ் இங்கே பிறந்தார்.

இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 28, 1820 அன்று பிரெட்ரிக் எங்கெல்ஸ் இங்கே பிறந்தார்.  மார்க்ஸின் தோழர்.  மார்க்சியத்தின் தோழர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர் 2

பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்தது ரைன் மாகாணத்தில் உள்ள பார்மென் (Barmen) என்னும் நகரில்.  நெசவாலைகளுக்குப் புகழ்பெற்ற பிரதேசம் இது. ஊப்பர் பள்ளத்தாக்கின் (Wuper valley) ஒரு பகுதி.  செல்வமும் செழிப்பும் மிக்க பல நெசவாலை முதலாளிகள் இங்கே வசித்து வந்தனர். பிரெட்ரிக் எங்கெல்ஸின் தந்தை, (ஹெர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் அல்லது மூத்த பிரெட்ரிக்) வசதி வாய்ப்புகள் மிக்க ஒரு தொழிலதிபர்.  துடிப்பானவராகவும் உறுதியானவராகவும் அப்பகுதியில் அவர் அறியப்பட்டிருந்தார். தொழில்துறையையும் தாண்டி பார்மெனில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பிரெட்ரிக், லூதரன் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்.  தீவிர மதப் பற்றாளர்.

எங்கெல்ஸ், தன் அம்மாவுடன் (Elizabeth nee van Haar) ஒட்டிக்கொண்டார்.  எலிஸபெத்தின் சுபாவமும் அணுகுமுறையும் அவர் கணவரிடம் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது.  கலை, வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் மீது அவருக்குத் தீராத ஆர்வம் இருந்தது.  புத்தகங்கள் வாசிப்பதற்கும் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதற்கும் அவர் அதிக நேரம் ஒதுக்கினார்.  தந்தையிடம் (Gerhard Bernhard van Haar) இருந்து எலிஸபெத் பெற்றுக்கொண்ட ஆர்வம் இது.

தன் மகளுக்கு மட்டுமல்ல, பேரன் எங்கெல்ஸுக்கும் புத்தக ஆர்வத்தை ஏற்படுத்தினார் ஜெர்ஹாரட்.  ஹாம் ஜிம்னேசியத்தின் காப்பாளராகப் பணிபுரிந்தவர்.  மொழியியில் பிரிவில்  நிபுணத்துவம் பெற்றவர்.  பண்டைய சாம்ராஜ்ஜியங்களின் வரலாறு, தொன்மம், இலக்கியம் ஆகிய துறைகளில் இவருக்கு அக்கறையும் நாட்டமும் இருந்தது. ஆர்வமூட்டும் பல கதைகளை இவர் எங்கெல்ஸுக்குத் தொடர்ச்சியாக சொல்லிவந்தார்.

தாத்தா விவரித்த பண்டைய கிரேக்க இதிகாசக் கதைகளையும் ஜெர்மானிய நாட்டுப்புற கதைகளையும் எங்கெல்ஸ் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்.  நூறு கண்களைக் கொண்ட ஆர்கஸ் என்னும் அரக்கனின் அச்சுறுத்தும் பலம்.  எருமையின் தலையும் மனித உடலும் கொண்ட மினோடாரின் நம்பமுடியாத போர் குணம்.  மினோடாரை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட தீஸியஸ்.  பிறகு, எங்கெல்ஸின் விருப்பத்துக்குரிய கதாநாயகன், சீக்ஃபிரைட்டின் (Siegfried) வீர தீர சாகசங்கள். சீக்ஃபிரைட் ஒரு  ஜெர்மானிய கதாநாயகன்.  சக்தி வாய்ந்த டிராகன்களோடு போரிட்டு, பல்வேறு இன்னல்களைக் கடந்து புதையலை மீட்டெடுத்த வீரன்.   பெரும்பாலும், எல்லா ஜெர்மானியக் குழந்தைகளுக்கும் இவனது சாகசங்கள் தெரிந்திருக்கும்.

எங்கெல்ஸுடன் பிறந்தவர்கள்  மொத்தம் எட்டு பேர். அவர்களுள் எங்கெல்ஸ் நெருக்கமாக இருந்தது, தன் சகோதரி மேரியுடன்.  தந்தை பிரெட்ரிக் தன் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துகொண்டார்.  அவருக்கு எதிலும் ஒழுங்கு வேண்டும். பேச்சுக்குக் கீழ்படியவேண்டும். கொடுக்கும் வேலையில் சுணக்கம் காட்டக்கூடாது. எதிர்த்து கேள்விகள் கேட்கக்கூடாது.  எங்கெல்ஸின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இதில் பிரச்னை எதுவும் இருக்கவில்லை.  ஆனால், எங்கெல்ஸ் திணறினார். தடுமாறினார்.  தவித்தார்.

ஆரம்பம் தொட்டே எங்கெல்ஸால் தன் தந்தையுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிப்போக முடியவில்லை.  அம்மாவின் பரிவும் அன்பும் ஒரு காரணம்.  அல்லது, தாத்தா சொல்லி வந்த கதைகளும், அவை போதித்த பாடங்களும் அவரை மாற்றியிருக்கலாம். எத்தனை முயன்றும் அவரால் தன் தந்தைக்குக் கீழ்படியமுடியவில்லை.  பிரெட்ரிக் தன் மகனை அழைத்து அறிவுரைகள் சொன்னார். திட்டினார்.  கண்டித்துப் பார்த்தார்.  தண்டனைகளும் அளித்தார்.  எதுவொன்றும் எங்கெல்ஸை மாற்றவில்லை.  தந்தை வெளியேறியதும், தாத்தாவிடம்தான் ஓடினார். தாத்தா, நேற்று சொன்ன கதையை இன்னொருமுறை சொல்வாயா?  சீக்ஃபிரைட் எப்படி இறந்துபோனான்? யார் அவனைக் கொன்றது?  ஏன் தோற்றான் அவன்?

பார்மெனில் உள்ள நகரப் பள்ளியில் எங்கெல்ஸைச் சேர்த்துவிட்டார்கள்.  கீழ்படியும் குணத்தைப் பள்ளி கற்றுக்கொடுக்கும் என்று பிரெட்ரிக் நம்பினார்.  தன் மகனிடம் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று கவனித்தார்.  எதுவும் காணவில்லை.  சரி அடுத்த ஆண்டு வரை பார்க்கலாம் என்று காத்திருந்தார்.  அடுத்த ஆண்டும் எங்கெல்ஸ் மாறவில்லை.  சிறு விஷயங்களுக்குக்கூட மீண்டும் மீண்டும் கண்டிக்க வேண்டியிருந்தது.

போரிடும் தீஸியஸ்

எங்கெல்ஸுக்கு பள்ளிச்சூழல் ஒத்துவரவில்லை.  தந்தைக்கும் அங்குள்ள ஆசிரியர்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்று நினைத்துக்கொண்டார்.  அதே கண்டிப்பு.  அதே தண்டனைகள்.  அதே அறிவுரைகள்.  அனைத்துக்கும் மேலாக ஒழக்கம் அவசியம்.  பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும்.  சொல்பேச்சு கேட்கவேண்டும். கீழ்படியவேண்டும்.  மூத்தவர்களை எதிர்க்கக்கூடாது.  மீண்டும், தன் தந்தையைப் போலவே அத்தனை ஆசிரியர்களும் தீவிர இறை நம்பிக்கை கொண்டிருந்ததை எங்கெல்ஸ் கவனித்தார்.  கண்டிப்பும், அறிவுறுத்தல்களும், மதிப்பீடுகளும் கண்காணிப்புகளும் இருக்கும் இடத்தில் மதம் நிச்சயம் இருக்கும் என்பதையும் எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.

ஆசிரியர்கள் மட்டுமல்ல, அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் மதப் பற்றாளர்களாகவே இருந்தனர்.  தங்கள் அலைவரிசையோடு பொருந்தி போகும் ஆசிரியர்களை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.  கல்வி என்றால் மதக் கல்வி என்று புரிந்து வைத்திருந்த பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றாகவே அது இருந்தது. தாத்தா சொன்னதைப் போன்ற கதைகளை ஏன் யாரும் இங்கே சொல்வதில்லை?  இவர்கள் போதிக்கும் மதப் பாடங்கள் ஏன் சுவாரஸ்யமாக இல்லை? உடன் படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் இதே போன்ற மாறுபட்ட எண்ணங்கள் இருப்பதை எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.  கட்டாயத்தில் பெயரில் மட்டுமே அவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டாயம்தான் எங்கெல்ஸுக்குப் பிரச்னையாக இருந்தது.

ஒரு முறை, பாடத்துக்கு நடுவில், மாணவன் ஒருவர் ஆசிரியரிடம் சந்தேகம் ஒன்றை எழுப்பினான்.  ‘கதே என்பவர் யார்?’ எங்கெல்ஸுக்கு கதேவைத் (Goethe) தெரியும்.  கவிதை, நாடகம், அறிவியல், தத்துவம், மதம் என்று பல துறைகளில் கதே பங்களிப்பு செய்திருப்பதை அவர் அறிவார்.  கதே பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதும் அவருக்குத் தெரியும்.  ஆசிரியர் அளிக்கப்போகும் பதிலுக்காக அவர் காத்திருந்தார்.  கேள்வி கேட்ட அந்த மாணவனை ஆசிரியர் தீர்க்கமாகப் பார்த்தார்.   ‘ஏன் அவரைப் பற்றி கேட்கிறாய்?’ அந்த மாணவன் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டான். ‘சாதாரணமாகத்தான் கேட்டேன். காரணம் எதுவும் இல்லை.’  ‘சரி கேட்டுக்கொள். அவர் கடவுளை நம்பாதவர். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. புரிகிறதா?’  இந்த பதில் எங்கெல்ஸுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.  வியப்பையும்.

இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் எங்கெல்ஸ் ஆர்வம் செலுத்தினார். பாடங்கள் எடுக்கப்படும்போது, இடைமறித்து பல கேள்விகள் கேட்டார்.  மொழிப் பயிற்சியில் தன் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார்.  பதினான்கு வயது முடியும் வரை அங்கே படிப்பு தொடர்ந்தது.

அக்டோபர் 1834ல், எல்பெர்ஃபெல்ட் (பார்மென், எல்பெர்ஃபெல்ட், ஊப்பர் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி மூன்றையும் இணைத்து ஊப்பர்டால் என்று

எங்கல்ஸ் பிறந்த இடம்

அழைத்தார்கள்) என்னும் பகுதியில் இருந்த ஜிம்னேசியத்தில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.  பிரஷ்யாவின் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் ஒன்று இது.  இந்தப் பள்ளி, புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்டு வந்தது.  பார்மென் பள்ளிக்கும் ஜிம்னேசியத்துக்கும் உள்ள வித்தியாசங்களை எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.  முதல் வித்தியாசம், புத்தகங்கள்.  மத சம்பந்தமான நூல்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட புத்தகங்களை இங்குள்ள ஆசிரியர்கள் பராமரித்து வந்தனர்.  எங்கெல்ஸ் உற்சாகத்துடன் இந்தப் புத்தங்கள் குறித்து விசாரித்தார். உங்களிடம்  கிரேக்க, லத்தீன் மொழி நூல்கள் இருக்கின்றனவா? கணிதம் கற்றுத்தருவீர்களா? எங்கெல்ஸின் நம்பிக்கை வீண்போனது. அவர் விரும்பிய பாடங்கள் அங்கே கற்றுக்கொடுக்கப்படவில்லை. மீண்டும்  மதம்.  மீண்டும் புனிதம்.  மீண்டும் ஒழுக்க விதிகள். விரிவான, விளக்கமான, வீணான அறிவுரைகள்.

என்றால், பார்மெனுக்கும் ஜிம்னேசியத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  பள்ளிகள் வெவ்வேறாக இருந்தாலும், புத்தகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், வகுப்பு நிலை மேலானதாக இருந்தாலும், அடிப்படை ஒன்றே.  போதிப்பதை ஏற்றுக்கொள். அடிபணிய கற்றுக்கொள்.  கேள்விகள் கேட்காதே.

அந்த ஜிம்னேசியத்தின் தலைமை நிர்வாகி, பார்மெனில் உள்ள  ஒரு லூத்தர் சபையின் அறங்காவலாகவும் இருந்தார். பள்ளியில் விதிமுறைகளோடு எங்கெல்ஸ் பொருந்தி போகவில்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.   பிரெட்ரிக்கைத் தொடர்பு கொண்டு உரையாடினார்.  உங்கள் மகனை எப்படி வளர்க்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அவன் எதிர்காலம் எப்படி அமையவேண்டும்?

எங்கெல்ஸ் குறித்து பிரெட்ரிக் விரிவான கனவுகள் கொண்டிருந்தார்.  மூத்த மகன் என்பதால், தனக்குப் பிறகு தன் நெசவாலையை எங்கெல்ஸ் தலைமை ஏற்று சீராக நடத்தவேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால், எலிஸபெத் தன் மகனை ஒரு அறிவாளியாக மாற்றவேண்டும் என்று துடித்துக்கொண்டிருப்பதை அவர் அறிவார்.  எலிஸபெத்துடன் இது விஷயமாக அவர் கோபத்துடன் பல முறை சண்டையும் போட்டிருக்கிறார்.  கலையையும் இலக்கியத்தையும் கிரேக்கத்தையும் வைத்துக்கொண்டு ஒரு மனிதன் என்ன செய்துவிடமுடியும்?  ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துவதற்கு எவ்வளவு அறிவு வேண்டுமோ அதை மட்டும் எங்கெல்ஸ் பெற்றிருந்தால் போதும்.  தேவையற்ற குப்பைகள் வேண்டாம்.

பிரெட்ரிக் தன் எண்ணங்களைத் தலைமை நிர்வாகியிடம் பகிர்ந்து கொண்டார்.   ‘உங்கள் ஜிம்னேசியத்தில் போதிக்கப்படும் வணிகமும் கணிதமும் எங்கெல்ஸை ஒரு திறமையான தொழிலதிபராக வளர்த்தெடுக்கும் என்று நம்புகிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்.’  தலைமை நிர்வாகி பிரெட்ரிக்கிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். ‘உங்கள் மகனை, மற்ற மாணவர்களைப் போல் எங்கள் பள்ளியின் விடுதியில் தங்க வைக்க உங்கள் ஒப்புதல் வேண்டும்.  விடுதி மாணவர்களுக்கு நாங்கள் ஒழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகளை சிறந்த முறையில் போதிக்கிறோம்.  கண்டிப்புக்குக் குறை இருக்காது. உங்கள் கனவு நிறைவேறும். என் பொறுப்பு.  நீங்கள் கவலைப்படவேண்டாம்.’

பிரெட்ரிக்குக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.  ஒப்புக்கொண்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 3

அன்றைய ப்ரமன்

வகுப்பறையில் அல்ல, சிறைச்சாலையில் கல்வி பயின்றேன் என்று பின்னர் நினைவுகூர்ந்தார் எங்கெல்ஸ்.  பதினான்காம் வயது வரை பார்மென் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு.  அக்டோபர் 1834 முதல் ஜிம்னேசியத்தில் ஒன்பதாம் வகுப்பு. விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பதன் மூலம், எங்கெல்ஸை நன்னெறிப்படுத்த முடியும் என்பது ஜிம்னேசியத்தின் தலைமை  நிர்வாகியின் நம்பிக்கை. தந்தை பிரெட்ரிக்கின் கனவும் அதுதான்.  கணிதமும் வணிகமும் பயின்று தனக்கு உதவியாக எங்கெல்ஸ் வளர்ச்சி பெறுவார் என்று அவர் நம்பினார். ஆனால், எங்கெல்ஸ் முதல் காரியமாக கணிதத்தையும் வணிகத்தையும் ஒதுக்கிவைத்தார்.

வரலாற்றை ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தார். ரோம், ஜெருசலம், எகிப்து, பாபிலோனியா என்று வண்ணப்படங்களுடன்கூடிய புத்தகங்களை நாடிச் சென்று வாசித்தார்.  லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் மீது ஆர்வம் படர்ந்தது. தன் வரலாற்று ஆசிரியர், ஹெர் ஜொஹான் க்ளாஸன் மீது அவருக்கு நல்ல ஈடுபாடு இருந்தது.  (மிகுந்த மரியாதையுடன் இந்தப் பேராசிரியரின் பங்களிப்பை அவர் பின்னர் பதிவு செய்தார்) அடுத்தது, இலக்கியம். ஹோமர், விர்ஜில், ஹொரேஸ், சீஸரோ என்று அவர் வாசிப்புத் தளம் விரிந்தது. கவிதை மீது அடங்கா ஆர்வம் பிறந்தது. கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் நீடித்த ஆர்வம் இது.  பண்டைய ஜெர்மானிய இலக்கியங்களையும் கிரேக்க, லத்தீன் இலக்கியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்தார்.  வாசிக்கும் ஆர்வம் ஒரு கட்டத்தில் எழுதவும் தூண்டியது.  தனக்குப் பிடித்த கவிதைகளை  கிரேக்கத்தில் இருந்து ஜெர்மனுக்கு மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.  கிரேக்க மொழியில் ஒரு கவிதையும் எழுதினார்.

தலைமை நிர்வாகிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவனாக இருந்தால், கூப்பிட்டு வைத்து கண்டிக்கலாம்.  அப்பா கேட்டுக்கொண்ட வணிகம், கணிதம் தவிர மற்ற துறைகள் மீது அசாத்திய ஈடுபாட்டுடன் இருக்கும் எங்கெல்ஸை என்ன செய்வது?  ஆசிரியர்களிடம் விசாரித்துப் பார்த்தார். வரலாறு மற்றும் இலக்கியத் துறை ஆசிரியர்களுக்கு எங்கெல்ஸ் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது.  பாடப்புத்தகங்களிலேயே திணறிவிடும் மாணவர்களுக்கு மத்தியில், நூலகத்தில் இருந்து மேற்கொண்டு நூல்கள் எடுத்து வாசிக்கும் எங்கெல்ஸைப் பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்தனர். தலைமை நிர்வாகி ஒரு முடிவுக்கு வந்தார்.  எங்கெல்ஸின் ஆர்வத்தை கணிதம் நோக்கி திருப்புவது பயனற்றது. அது சரியானதும் அல்ல.  ஜிம்னேசியத்தில் நடைபெற்ற ஒரு பள்ளி நிகழ்ச்சியில் எங்கெல்ஸை அழைத்து அவர் கவிதையை மேடையில் வாசிக்க வைத்தார்.

ஜிம்னேசியத்தின் சான்றிதழ் எங்கெல்ஸை இப்படி செய்திருந்தது.  ‘ஜெர்மானிய இலக்கிய வரலாற்றிலும் செவ்விலக்கியங்களிலும் ஆர்வம் அதிகம்.  கணிதம், இயற்பியல் ஆகிய துறைகளில் ஓரளவுக்கு நல்ல ஈடுபாடு இருந்தது.  அமைதியான மாணவன்.  நட்புணர்வுடன் பிறருடன் பழகுகிறான்.  திறந்த மனத்துடன் உரையாடுகிறான்.’

கவிதை மீது ஆர்வம் கொண்ட மாணவர்களின் குழு ஒன்று அங்கே இருந்தது.  எங்கெல்ஸ் இந்தக் குழுவினரோடு நெருக்கமாக இருந்தார்.  இன்னும் சில கவிதைகள் எழுதினார். (இவற்றில் சில இன்னமும் காணக்கிடைக்கின்றன.)  இலக்கிய வட்டத்தில் இருந்த மாணவர்களுக்கு நல்ல இசையறிவும் இருந்தது.  தாங்கள் எழுதும் பாடல்களுக்கு அவர்களே இசையமைத்து பாடிக்கொண்டிருந்தனர்.  இவர்களுடைய இசை ஆர்வம் எங்கெல்ஸையும் பற்றிக்கொண்டது.

ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய மதப் பற்றைத் தவிர  அனைத்து அம்சங்களிலும், ஜிம்னேசியம் உயர்வான ஓரிடமாக இடமாக எங்கெல்ஸுக்கு இருந்தது. மத விஷயத்தில், மட்டும் அது ஒரு சிறைச்சாலை என்று வருணித்தார் எங்கெல்ஸ்.  தன் சூழலோடு ஒத்துப்போக முயன்று எங்கெல்ஸ் ஆரம்பத்தில் கடவுளைப் பற்றி யோசித்தார். மாணவர்களே, கடவுளோடு நாம் நெருக்கமாக உரையாடலாம் என்று ஆசிரியர்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தார்.  அது சாத்தியமா?  கண்ணுக்குத் தெரியாத பரம்பொருள் என்று அழைக்கப்படும் கடவுளோடு நாம் எப்படி உறவாடுவது? ஆனால், எங்கெல்ஸால் தொடர்ந்து இதில் கவனம் செலுத்த முடியவில்லை.  விட்டுவிட்டார்.

அடுத்து என்ன படிக்கவேண்டும் என்பதை எங்கெல்ஸ் முடிவு செய்திருந்தார். பொருளாதாரம், சட்டம். கிட்டத்தட்ட படித்தது போதும் என்று சொல்லிவிட்டார் பிரெட்ரிக்.  எதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவைப்படாதோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து படிப்பவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?  மூத்த மகன் என்னும் வகையில், எங்கெல்ஸை இனியும் அலைகழிக்க விடுவதில் அவருக்கு விருப்பமில்லை.  பள்ளி படிப்பு முடிவடையும் வரை கூட அவரால் பொறுமை காக்க முடியவில்லை.  படிப்பு முடிவடைவதற்கு முன்பே எங்கெல்ஸை வீட்டுக்கு அழைத்து வந்தார்.  ஜிம்னேசியம் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அது 1837ம் ஆண்டு.  எங்கெல்ஸை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார் பிரெட்ரிக்.  அலுவலகத்துக்குத் தினமும் எங்கெல்ஸ் தன் தந்தையுடன் சென்று வரவேண்டும் என்று உத்தரவானது.  அலுவலகத்தில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பதை எங்கெல்ஸ் கண்டு படித்துக்கொள்ளவேண்டும். தந்தை சொல் கேட்டு நடக்கவேண்டும்.  தொழிற்சாலையின் இயக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.  தொழிலாளர்களை மேற்பார்வையிட்டு, வேலை வாங்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மேற்கூறிய எந்தவொரு அம்சமும் எங்கெல்ஸைக் கவரவில்லை என்றாலும் அவர் தந்தையுடன் அலுவலகம் செல்ல ஆரம்பித்தார்.  அலுவலகம், அவருக்கு நிறைய ஓய்வு நேரத்தை வழங்கியது.  பள்ளிப் படிப்பு நின்றுபோனதில் வருத்தம் ஏதுமில்லை எங்கெல்ஸுக்கு.   கிடைக்கும் நேரத்தை முழுக்க முழுக்க வாசிப்பதில் செலவிட்டார்.  வரலாறு, தத்துவம், இலக்கியம், மொழியியல் என்று விருப்பமான அத்தனை துறைகளுக்கும் அவரால் நேரம் ஒதுக்கமுடிந்தது. அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வரைக்கும் எது செய்தாலும் பரவாயில்லை என்று பிரெட்ரிக்கும் சொல்லிவிட்டார்.  தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும் முதல் முறையாக ஒன்றிணைந்த அபூர்வ தருணம் அது.

பெர்டினான்ட் (முழுப்பெயர், Ferdinand Freiligrath) என்பவரை தன் ஆதர்சமாகக் கொண்டார் எங்கெல்ஸ். எங்கெல்ஸ் வசித்த அதே பார்மென் பகுதியைச் சேர்ந்தவர் பெர்டினான்ட்.  அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட பிரபல கவிஞராக அவர் இருந்தார்.  அதே சமயம் அவர் ஒரு தொழிலாளரும்கூட.  பெர்டினான்டைப் போல் நானும் மாறலாமே என்று எண்ணிக்கொண்டார் எங்கெல்ஸ்.  வேலைக்கு வந்துவிட்ட ஒரே காரணத்துக்காக, படிப்பு ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.  பெர்டினான்டைப் போல் என்னாலும் இரு துறைகளிலும் ஒரே சமயத்தில் கவனம் செலுத்த முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டார்.

பள்ளியில் என்ன கற்றுக்கொடுப்பார்களோ அதைக்காட்டிலும் கூடுதலாகப் படிக்க ஆரம்பித்தார் எங்கெல்ஸ்.  கிரேக்கம், லத்தீன், ஜெர்மன் போக ஸ்பானிஷ், போர்த்துகீஸ், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.  இந்த ஆர்வத்தின் பின்னால் ஒரு நோக்கமும் இருந்தது.  ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொண்டால் அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களையும் தத்துவ சிந்தனைகளையும் வரலாறையும் வாசிக்கமுடியும்.  மேலும், ஜெர்மானிய செவ்விலக்கியங்களோடு பிற நாட்டு இலக்கியங்களையும் ஒப்பிட முடியும்.  முதலில், தன் எழுத்து முயற்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு தான் படித்த இலக்கியப் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.  குறிப்பாக, ஜிம்னேசியத்தில் எழுதிய கவிதைகளை எடுத்து பார்த்தபோது, எங்கெல்ஸுக்கு சிரிப்பு வந்தது.  பல்வேறு சமயங்களில் எழுதி வைத்திருந்த கட்டுரைகளையும் குறிப்புகளையும் மீண்டும் வாசித்துப் பார்த்தார்.  கறாராக சுயவிமரிசனம் செய்தபோது, பெரும்பாலானவற்றை ஒதுக்கவேண்டியிருந்தது.

ஜூலை 1838ல், எங்கெல்ஸ் பிரமெனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  ஹென்ரிச் லெபோல்ட் (Heinrich Leupold) என்பவரின் அலுவலகத்தில் பயிற்சி பெறுவதற்காக பிரெட்ரிக் செய்திருந்த ஏற்பாடு இது.  ஹென்ரிச், பிரமெனில் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்.  பிரெட்ரிக்கின் நண்பர்.  இவர் நிர்வகித்து வந்த தொழிற்சாலை, அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஆடை ஏற்றுமதி செய்துவந்தது.  எங்கெல்ஸை பிரமெனுக்கு அனுப்பி வைக்க பிரெட்ரிக் முடிவு செய்ததற்கு இன்னொரு காரணம், அப்பகுதி அயல் நாடுகளுடன் கொண்டிருந்த  தொடர்பு.  பிரதான துறைமுக நகரமாக பிரமென் திகழ்ந்தது. முன்னணி நாடுகள் பலவற்றுடன் அந்நகரம் வர்த்தகத் தொடர்புகள் கொண்டிருந்தது. இந்த நகரம் எங்கெல்ஸின் பார்வையை விசாலமாக்கும்.  அவனது கனவுலக மாயைகளைத் தகர்த்து யதார்த்தத்தைப் புரியவைக்கும்.

பதினெட்டு வயது எங்கெல்ஸை பிரமென் கவர்ந்தது.  ஹென்ரிச்சின் அலுவலகத்துக்குச் சென்றுவந்த நேரம் போக, மற்ற நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார். வெளிநாட்டில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் பல இங்கே சுலபமாக கிடைத்தன.  அயல்நாட்டு நாவல்கள் வாசித்தார்.  மொழியியல் ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டார்.  பார்மெனில் உள்ள தன் சகோதரி மேரிக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதங்கள் அவர் ஆர்வத்தை முழுமையாக வெளிப்படுத்தின.  முதல் வரி, ஜெர்மானிய மொழியில் ஆரம்பிக்கும். இரண்டாவது வரி, கிரேக்கம்.  அடுத்த பத்தி, லத்தீனில் தொடங்கும்.  அதற்கு அடுத்த பத்தியில், இத்தாலியும் ஸ்பானிஷும் கலந்திருக்கும்.  முடிக்கும்போது, போர்த்துகீஸ்.  இடையிடையே, பிரெஞ்சு. தன் ஜிம்னேசிய நண்பர்களுக்கும் எங்கெல்ஸ் இப்படிப்பட்ட கடிதங்களையே அனுப்பினார்.

இசை ஆர்வம் அதிகரித்திருந்தது.  பீத்தோவனின் சிம்பொனியை இப்போது அவரால் ரசிக்க மட்டுமல்ல, புரிந்துகொள்ளவும் முடிந்தது.  கோட்பாடு ரீதியில் இசையை எப்படி அணுகுவது என்பது பற்றி தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார்.  மார்ச் 1841ல் மேரிக்கு எழுதிய கடிதத்தில், பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியை மாய்ந்து மாய்ந்து சிலாகித்திருந்தார் எங்கெல்ஸ்.  பீத்தோவன் ஜெர்மானிய இசையின் அடையாளம் என்று புகழ்ந்தார்.  காதலர்களின் துயரமும், தனிமையின் சோகமும், இளமையின் கொண்டாட்டமும், சுதந்தரத்தின் மகிழ்ச்சியும் பீத்தோவனின் இசைக் கோர்வையில் தென்படுவதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். .  ‘இந்த மகத்தான இசையை நீ கேட்கவேண்டும்.  முந்தைய இரவு நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.  இதை மட்டும் நீ கேட்டால், நீ இதுவரை கேட்டது எதுவும் இசையே இல்லை என்று அடித்துச் சொல்வாய்.’

குதிரையேற்றம், நீச்சல், வாள் சண்டை, பனிச்சறுக்கு என்று பார்மென் பல ருசிகரமான அனுபவங்களை அவருக்கு வழங்கியது.  ஆனால், புத்தகங்கள் அளித்த இன்பத்தை வேறு எதுவும் அவருக்கு அளிக்கவில்லை.  கதைகளும் கவிதைகளும் ஒரு புதிய இன்ப உலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றன.  இசையிலும் இலக்கியத்திலும் ஊறித் திளைத்தார்.  இதைவிட அற்புதமான வாழ்க்கை வேறு யாருக்காவது அமையுமா?

பிறகு, சில தொழிலாளர்களை எங்கெல்ஸ் சந்திக்கவேண்டியிருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 4

எங்கெல்ஸால் நம்ப முடியவில்லை. எப்படி வாழ்கிறார்கள் இவர்கள்? சுவாசித்துக்கொண்டும், நடமாடிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்களை உயிருள்ளவர்கள் என்று அழைக்கமுடியுமா? எங்கெல்ஸ் அவர்களை ஊன்றி கவனித்தார். இடுங்கிய கண்கள். மெலிந்த தேகம். உரையாடும்போது, ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் இருமல் சத்தம். நிமிர்ந்து நேராக நிற்க முடியவில்லை. நடுங்கினார்கள். தடுமாறினார்கள். சராசரியாக, ஒரு நாளைக்குக் பதினான்கு மணி நேரம் அவர்கள் வேலை செய்தார்கள். பல சமயங்களில், பதினெட்டு மணி நேரம் ஆகிவிடுவது இயல்பானதே. நன்றாக இருட்ட ஆரம்பிக்கும்போது  சோர்ந்து களைத்து, வீட்டுக்குச் செல்வார்கள். அதிகாலை இருள் விலகும் முன்பே ஆலை மணி அடித்துவிடும். உறக்கத்தை விட்டொழித்துவிட்டு, விரைந்து வந்துவிடவேண்டும்.

நாளடைவில், இயந்திரத்தின் ஓர் அங்கமாகவும், மற்றொரு இயந்திரமாகவும் அவர்கள் மாறிவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை எங்கெல்ஸ் கண்கூடாகக் கண்டு அதிர்ந்து போனார்.  தன் தந்தையின் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தபோதே, தொழிலார்களின் பரிச்சயமும் ஏற்பட்டுவிட்டது. தன் மகன் தொழிற்சாலையில் நேரம் செலவிடுவது, தொழில் கற்றுக்கொள்வதற்காக என்று பிரெட்ரிக் நினைத்திருந்தார். எங்கெல்ஸ் படித்துக்கொண்டிருந்தது தொழிலாளர்களின் வாழ்நிலையை.

தன் தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்  புத்திமதிகளை யோசித்துப் பார்த்தபோது எங்கெல்ஸுக்குக் கோபமும் சிரிப்பும் ஒரு சேர வந்தது.  கடவுளை வணங்கு. எப்போதும் கடவுளின் நினைவாக இரு. நீ செய்யும் பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பு கேள். இதைவிட பெரிய முரண்பாடு வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்று யோசித்துப் பார்த்தார் எங்கெல்ஸ். பொழுது முழுக்கக் கடவுளையே நினைத்துக்கொண்டிருந்ததால்தான், மனிதர்களைப் பற்றி நினைக்க முடியவில்லையா தந்தையால்? தன் தொழிற்சாலையில் கிடந்து அவதியுறும் தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, கடவுளை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்வதன் மூலம், அவருக்குப் புண்ணியம் கைகூடிவிடுமா?

எல்லையில்லா அன்பை போதித்தது கிறிஸ்தவம். ஆனால், தொழிலாளர்கள் விலங்குகளைப் போலவே நடத்தப்பட்டு வந்தனர். எங்கெல்ஸ் அவர்கள் குடியிருப்புகளுக்குச் சென்றார். குடும்பத்தினரைக் கண்டார். குழந்தைகள் பலர் தொழுநோயால் பீடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போனார். அசுத்தமான அந்தக் குடியிருப்புப் பகுதிகளில், சுவாசிப்பதற்கு நல்ல காற்றுகூட கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையைத்தான் அவர்கள் சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். பசியைப் போலவே நோய்களையும் அவர்கள் அசட்டை செய்ய கற்றுக்கொண்டிருந்தனர். எந்த வியாதியும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.  அதே சமயம், பிராந்தியிடம் தஞ்சம் புகுந்திருந்த தொழிலாளர்களையும் எங்கெல்ஸ் கண்டார். வலி மிகுந்த உழைப்பின் முடிவில் கிடைத்த கூலியை அவர்கள் வலியை மறக்கடிக்கும் மதுவில் செலவிட்டு வந்தனர்.

பார்மெனில் எங்கெல்ஸ் சந்தித்த தொழிலாளர்களின் நிலை இன்னமும்கூட மோசமாக இருந்தது. செல்வச் செழிப்பான ஒரு துறைமுக நகரத்திலும்கூட இவர்கள் மோசமான வாழ்வைதான் நடத்தவேண்டுமா? செல்வமும் ஏழைமையும் அருகருகில் இருக்கும் விசித்திரம்தான் என்ன? புத்தகங்களில் விடை தேடினார் எங்கெல்ஸ். இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று விரிந்த அவர் தேடலில் பல வெளிச்சங்கள் கிடைத்தன. தொழிலாளர்களின் வாழ்நிலை ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு அவர்கள் வாழ்வையோ அல்லது அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலையின் அணுகுமுறையையோ ஆரய்ந்தால் போதாது. இது ஒரு சமூகப் பிரச்னை. அரசியல் பிரச்னை. மிக முக்கியமாக, பொருளாதாரப் பிரச்னை.  இந்தப் புரிதல் எங்கெல்ஸின் பார்வையை விசாலப்படுத்தியது. கிட்டத்தட்ட அதே சமயம், ஜெர்மனின் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருந்தது.

1840களில், ஜெர்மனி அரசியல் ரீதியில் பிளவுண்டிருந்தது. ஒரு நாடாக அல்ல, முப்பத்தொன்பது தனி சுதந்தர மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே ஜெர்மனி நீடித்து வந்தது. நூற்றாண்டுகளாக இதுதான் நிலைமை. ஜெர்மனியின் எல்லைகள் கிழக்கில் விஸ்டுலா நதியில் இருந்து மேற்கே ரைன் நதி வரை: தெற்கே டான்யூப் நதியிலிருந்து வடக்கே பால்டிக் கடல் வரை பரவி படர்ந்திருந்தது.  பெரிய நிலப்பரப்புதான்.  ஆனாலும், வளம் போதாத காரணத்தால் மக்கள் தெற்கு, மேற்கு என்று குடிபெயர்ந்து அங்கேயே வாழவும் ஆரம்பித்தனர்.  தெற்கில் குடியேறியவர்கள் ரோமானியர்களுடன் பழகி, அவர்கள் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டனர்.  ரோம சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டம் அது.  ஜெர்மனியும் நாளடைவில் ரோமானியர்களின் ஆட்சிக்கு உட்பட வேண்டியிருந்தது.

பிரடரிக் உருவம் பொறித்த நாணயம்

பொதுவான மொழிதான் என்றாலும் ஜெர்மானியர்கள் பல நூற்றாண்டுகளாகத் தனித்தனியே சிதறிக்கிடந்தனர்.  17ம் நூற்றாண்டு ஜெர்மனியில் மட்டும் சுமார் 300 அரசாங்கங்கள் உதிரியாக இயங்கி வந்தன.  இவற்றுக்கு இடையே தொடர்ந்து விரோதமும் போட்டியும் மூண்டு கொண்டிருந்தன.  சிறியதும் பெரியதுமாக சிதறிக்கிடந்த ஜெர்மன் அரசாங்கங்களுள், பிரஷ்யா முன்னணியில் இருந்தது.  பிறகு, ஆஸ்திரியா.  ஜெர்மனியை யார் ஆள்வது என்பது குறித்து இந்த இரண்டுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நிலவியது.

பிரஷ்யாவின் பலமும் அதிகாரமும் பிற ஜெர்மானிய அரசாங்கங்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது. மூன்றாம் பிரெட்ரிக் வில்லியம் என்னும் அரசர், பிற ஜெர்மானிய நாடுகளைத் திரட்டி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.  ரைன்லாந்து ஐக்கியம் என்று அது அழைக்கப்பட்டது. பிரஷ்யாவுக்கு மாற்று சக்தியாக இந்த  ஐக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18ம் நூற்றாண்டின் இறுதியில், நெப்போலியன் போனபர்ட் (1769-1821) தலைமையில் பிரான்ஸ் ஒரு வலிமையான ஐரோப்பிய சக்தியாக எழுந்து நின்றபோது, பிரஷ்யா நெப்போலியனை எதிர்க்க ஆரம்பித்தது. பிரிட்டன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்  நெப்போலியனின் எழுச்சி பீதியூட்டிய காரணத்தால் அவை பிரஷ்யாவுக்கு உதவ முன்வந்தன.  பிரஷ்யாவோடு சேர்ந்து பிற ஜெர்மானிய அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நெப்போலியனுக்கு எதிராகப் போரிட்டன.  1815ம் ஆண்டு, வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியன் வீழ்த்தப்பட்டார்.

நெப்போலியன் ஜெர்மனியின் சிந்தனைப் போக்கை வெகுவாகப் பாதித்தார்.  சுதந்தரம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.  நாடு, தேசம், தேசபக்தி போன்ற கருத்தாக்கங்கள் உருபெற்றன. பிளவுபட்டிருந்த சிறிய அரசாங்கங்கள் சில அடிப்படைகளை உணர்ந்துகொண்டன.  நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தால், நெப்போலியன் போன்றவர்கள் முறியடித்துவிடுவார்கள் என்பது புரிந்தது.  வேறு எதற்காக இல்லாவிட்டாலும், தற்காப்புக்காகவாவது அரசாங்கங்கள் ஒன்றுபட்டு திகழவேண்டும் என்பதையும் புரிந்துகெண்டார்கள்.  1789ம் ஆண்டு 300 நாடுகளுடன் பிளவுப்பட்டிருந்த ஜெர்மனி 1815ல் 39 நாடுகளாக சுருங்கிப்போனது.

இவற்றையும் ஒன்று சேர்த்து, ஒன்றுபட்ட ஜெர்மனியை கட்டமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை வெற்றிபெறவில்லை.  பிரஷ்யாவும், ஆஸ்திரியாவும் வழக்கம் போல் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது.  மற்ற சிறு நகரங்களால் இந்த இரு பெரும் சக்திகளை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. ஆஸ்திரியா, க்ளெமென்ஸ் மெட்டர்னிச் (Klemens Wenzel von Metternich) என்பவரால் ஆளப்பட்டு வந்தது. பிரஷ்யா, நான்காம் பிரெட்ரிக் வில்லியமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1840ல் ஆட்சிக்கு வந்த பிரெட்ரிக், அளவற்ற அதிகாரத்தை விரும்புபவராக இருந்தார். மக்கள் என்றென்றும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்று விரும்பிய பிரெட்ரிக், கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டு வந்தார்.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அப்போது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், ஜெர்மனியைப் போல் அங்கே முழுமையான அடக்குமுறை சாத்தியப்படவில்லை. அந்நாட்டு முதலாளிகளும் செல்வந்தர்களும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் தலையீடு அதிகரிப்பது முதலாளிகளுக்கு உகந்ததல்ல என்பது ஒரு காரணம். தொழில் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால் தொழிலதிபர்கள் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆட்சியாளர்கள் தொழில் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தபோது அல்லது, அதற்கு தடையாக இருந்தபோது, முதலாளிகள் அரசை வெளிப்படையாக எதிர்த்தனர்.  பிரிட்டனிலும் பிரான்ஸிலும் தொழிற்சாலைகள் அதிகம் பெருகியதற்கும், அந்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்ந்ததற்கும் காரணம், முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருந்த நல்லுறவு.

பிரிட்டன், பிரான்ஸைத் தொடர்ந்து, மெதுவாக ஜெர்மனியிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. குறிப்பாக,  சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த பிரஷ்ய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ரைன்லாந்து மாகாணத்தில். பிரஷ்யாவும் ஏன் பிரிட்டனையும் பிரான்ஸையும் போல்முதலாளிகளுக்கு அனுகூலமாக இருக்கக்கூடாது? எதற்காக ஜெர்மனி ஐரோப்பாவைச் சார்ந்திருக்கவேண்டும்? நம்மிடம் உள்ள திறமையை முழு அளவில் பயன்படுத்தினால், நம்மால் இங்கே பல தொழிற்சாலைகளை உருவாக்கமுடியாதா? உற்பத்தியைப் பெருக்கமுடியாதா? செல்வம் சேர்க்கமுடியாதா?

ஜெர்மானிய பூர்ஷ்வா குழுவினரின் நோக்கங்கள் தெளிவானவை. முடியாட்சியைக் கவிழ்க்கவேண்டும். தொழில் வளர்ச்சிக்குச் சாதகமான அணுகுமுறையை அமல்படுத்தவேண்டும். அரசு தலையீடு இல்லாத சாதகமான தளம் உருவாகவேண்டும். எனவே, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். நமக்குத் தேவையான அரசாங்கத்தை நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தேவைப்படும் கொள்கைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும்.

எங்கெல்ஸ் வாசித்த செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் இந்த எதிர்ப்புணர்வே பிரதானமாகவும் தீவிரமாகவும் தலைகாட்டியது. அரசியல் சுதந்தரம் மறுக்கப்பட்டு வந்த காரணத்தால், போராட்டக்காரர்கள் எழுத்தையே தங்கள் ஆயுதமாக வரித்துக்கொண்டிருந்தனர். கடிதங்கள் வாயிலாக அவர்கள் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டனர். போராட்டங்களைத் திட்டமிட்டனர். கதைகளிலும் கவிதைகளிலும் முடியாட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினர்.  சுதந்தரத்தை நேசிக்கும், ஜனநாயகத்தை நேசிக்கும் குழுவினரும் இந்தப் போராட்டத்தில் தங்களைப் படிப்படியாக இணைத்துக்கொண்டனர்.  முடியாட்சிக்கு எதிரான கலகக்குரல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்தது.

தொழிலாளர்களின் இழிநிலைக்கும் இப்போது எழுந்துள்ள கலகக்குரலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முயன்றார் எங்கெல்ஸ். முடியாட்சி தூக்கியெறியப்பட்டால், அது தொழிலாளர்களுக்குச் சாதகமாக சூழலை உருவாக்குமா? அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா? கலகக்காரர்களின் வழியில், எங்கெல்ஸும் எழுத்தைத் தன் ஆயுதமாக வரித்துக்கொண்டார். விரைவில், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

டெலிகிராஃப் - அன்று

அத்தியாயம் 5

ஜூலை 1830ல் பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சி, முடியாட்சிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ஜெர்மனிக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. செப்டெம்பர் 1824ல் பத்தாம் சார்லஸ் பிரான்ஸின் மன்னராகப் பொறுப்பேற்றார். பதினெட்டாம் லூயியின் இளம் சகோதரர் அவர். நெப்போலியன் போனபார்ட் முறியடிக்கப்பட்ட பிறகு ஆட்சியில் அமர்த்தப்பட்டவர். பிரான்ஸ் நம் குடும்பத்தின் சொத்து என்றுதான் லூயி, சார்லஸ் இருவருமே கருதிவந்தனர். பிரான்ஸை யார் ஆளவேண்டும் என்னும் கேள்விக்கே அவர்கள் இடம் அளிக்கவில்லை.

1814ல் நெப்போலியன் விலகிய பிறகு, பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பாவும்கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போனது. ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வியன்னா காங்கிரஸ் கூட்டப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் இதில் கலந்துகொண்டன. தலைமை சக்திகளாக, பிரிட்டன், ஆஸ்திரியா, பிரஷ்யா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் இருந்தன. இந்த மாநாட்டில், ஐரோப்பாவின் வரைபடம் திருத்தியமைக்கப்பட்டு, எல்லைகளை வறையறுக்கப்பட்டன. இனி ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பிரச்னை எதுவும் இருக்கக்கூடாது என்பது நோக்கம். நெப்போலியன் போன்ற இன்னொரு ராணுவ சக்தி உருவாகக்கூடாது என்பதும். வியன்னா மாநாடு மூலமாக, பிரான்ஸ் வசம் இருந்த ரைன்லாந்து பகுதிகள் பெரும்பாலானவற்றை பிரஷ்யா திரும்பப்பெற்றுக்கொண்டது. பிரான்ஸின் தாக்கம் பிரஷ்யாவில் ஆழமாக உணரப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையில், பத்தாம் சார்லஸ்,  வெகு விரைவில் தன் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டார். கத்தோலிக்க தேவாலயங்களின் பிடியில் சிக்கி, அவர்கள் விருப்பங்களுக்கு அடிபணிந்தார். பிற மதங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களின் உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.  தனக்கு முன்னால், பதினெட்டாம் லூயி (பெயரளவுக்கேனும்) அறிமுகப்படுத்தியிருந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளை சார்லஸ் மீறினார். பத்திரிகைகளின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முயன்றும் சட்டத்தை சார்லஸ் முன்மொழிந்தபோது, பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அரசர் வரும்போது, தொப்பியைக் கழற்றி மரியாதை அளிப்பது வழக்கம். சார்லஸ் இந்த மரியாதையையும் அவையில் இழந்தார்.

வெறுப்பும் எதிர்ப்புணர்வும் போராட்டமாக உருவெடுத்தது. ஜூலை மாதம் 1830ம் ஆண்டு. மூன்று தினங்கள் (ஜூலை 27 தொடங்கி 29 வரை) நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் முடிவில், மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது. சார்லஸ் தன் அதிகாரத்தை இழந்தார். இந்தப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர்கள் பிரான்ஸின் உயர் நடுத்தர வர்க்க மக்கள். சார்லஸ் பதவி விலகியதையடுத்து, ஆகஸ்ட் மாதம், லூயி பிலிப் புதிய அரசராகப் பொறுப்பேற்றார்.

ஜூலைப் புரட்சி

ஜூலை புரட்சியின் வெற்றி ஜெர்மானியர்களை உற்சாகப்படுத்தியது. ஜெர்மனி மட்டுமின்றி, போலந்து, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் ஜூலை 1830 புரட்சியின் தாக்கம் பரவியது. மக்கள் ஒன்று திரண்டுவிட்டால், எத்தனை பெரிய எதிர்ப்பும் அடங்கித்தான் போகும் என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டனர். பிரான்ஸ் மக்களின் வழியில் போராடினால், பிரஷ்யாவின் கொடுங்கோல் மன்னன் மூன்றாம் பிரெட்ரிக் வில்லியமையும் அகற்றிவிட முடியும் என்னும் நம்பிக்கை ஜெர்மானியர்களுக்கு உண்டானது. அதே சமயம், வீதியில் இறங்கி அரசின் ராணுவத்தை எதிர்த்துப் போராடுவது உடனடி சாத்தியமல்ல என்பதும் புரிந்தது. பிரான்ஸ் புரட்சியின் தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டு, வேறு வடிவில் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துச்சென்றனர்.

போராட்ட அலையில் எங்கெல்ஸும் அடித்துச்செல்லப்பட்டார். பத்தாம் சார்லஸுக்கும் மூன்றாம் பிரெட்ரிக்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பொது மக்களை ஏமாற்றுதலை கொள்கையாகக் கொண்டு ஆட்சி செய்யும் அராஜகவாதிகள். அடக்குமுறையை ஏவி மக்களை அடிமைப்படுத்துபவர்கள். சர்வாதிகாரிகள். மக்களின் ஆதரவு தேவைப்பட்டால் வாக்குறுதிகளை அள்ளி வீசவதும், காரியம் முடிந்ததும் கழுத்தை அறுப்பதும்தானே இவர்களுடைய ஆட்சிமுறை?  தன் எண்ணங்களை நண்பர்களுக்கு கடிதம் வாயிலாக அவ்வப்போது பகிர்ந்துகொண்டார் எங்கெல்ஸ்.  குறிப்பாக இரு நண்பர்கள், வில்ஹெம் மற்றும் பிரெட்ரிக் கிரேபர். இருவரும் சகோதரர்கள். பிப்ரவரி 1, 1840ம் ஆண்டு பிரெட்ரிக்குக்கு எழுதிய கடிதம் ஒன்றில் எங்கெல்ஸின் கோபம் முழுவதுமாக வெளிப்பட்டது.

‘1815ம் ஆண்டு இதே பிரெட்ரிக் தன் மக்களுக்கு வாக்குறுதி ஒன்று கொடுத்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளிப்பேன் என்றார். இன்று என்ன சொல்கிறார்? இந்த அழுக்கு பிடித்த, அழுகிப்போன, அயோக்கிய மன்னன் இன்று என்ன சொல்கிறான்? என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்கிறான். நான் இவனை வெறுக்கிறேன். இந்த அயோக்கியனை வெறுக்காவிட்டால் என் இதயம் நொறுங்கிவிடும். 1816 தொடங்கி 1830 வரை ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கவேண்டும்.’

கடுமையான விமரிசனம். ஆனால், இதுவும்கூட போதுமானதாக இருக்கவில்லை எங்கெல்ஸுக்கு. தன்னைவிடவும் காட்டமாகவும் தீவிரமாகவும் பலர் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து எழுதியிருப்பதை அறிந்து, அந்தப் புத்தகங்களைத் தேடினார். பெரும்பாலானவை தடை செய்யப்பட்டிருந்தன. ரகசிமாக தருவித்து வாசிக்க வேண்டியிருந்தது. அவ்வாறு வாசித்ததில், ஜேக்கப் வெனேடே (Jakob Venedey) என்பவரின் எழுத்துகள் அவரைக் கவர்ந்தன. பிரஷ்யாவி கொள்கைகளை மூன்று அம்சங்களில் அவர் அடக்கியிருந்தார். பொது மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் பார்த்துக்கொள்வது. பெரும்பான்மை மக்களை அறியாமையில் வைத்திருப்பது. மதத்தைப் பயன்படுத்தி மக்களை அடிமைப்படுத்துவது.

எங்கெல்ஸுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக எளிமையாக அதே சமயம் மிகத் துல்லியமாக பிரஷ்யாவின் அரசியல் நிலவரத்தை இந்த ஆசிரியர் அலசியிருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் பெற்ற அனுபவத்தின் வெளிச்சத்தில் தற்காக அரசியலை அவர் அணுகியிருந்தது தெரிந்தது. வாசிப்புத் தளத்தை எங்கெல்ஸ் விரிவாக்கிக்கொண்டார். தடை செய்யப்பட்ட நூல்களை ஒவ்வொன்றாக சேகரிக்கத் தொடங்கினார். பல நூல்கள் சுவிட்ஸர்லாந்திலும் பிரான்ஸிலும் அச்சிடப்பட்டிருந்தன.

படித்ததோடு நில்லாமல், புத்தகங்களில் இருந்து மேற்கோள்ககைளயும், புத்தகம் குறித்த தன் கருத்தையும் தன் நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தினார். சில நூல்களைத் தன் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார். எங்கெல்ஸின் வாசிப்பு ஆர்வத்தை அனைவரும் பகிர்ந்துகொண்டனர் என்று சொல்லமுடியாது. எங்கெல்ஸ் ஆச்சரியத்துடன் விவரிக்கும் பல விஷயங்கள் அவர்களுக்குச் சலிப்பூட்டின. ஆனாலும், எங்கெல்ஸ் சளைக்கவில்லை. ‘தடை செய்யப்பட்ட நூல்களை இறக்குமதி செய்பவராக நான் மாறிவிட்டேன்!’ என்று மகிழ்ந்தார். Heinrich Heine, Ludwig Borne இருவரது படைப்புகளும் எங்கெல்ஸைக் கவர்ந்தன.

பார்மெனில் இயங்கி வந்த இளம் ஜெர்மானியர்கள் இலக்கிய வட்டத்தில் இணைந்துகொண்டார். மார்ச் 1839ல், கார்ல் குட்ஸ்கோ (Karl Gutzkow) அறிமுகமானார்.  ஹாம்பர்க் டெலிகிராஃப் (முழுப்பெயர், Telegraph fur Deutschland) என்னும் பத்திரிகையின் ஆசிரியர் அவர்.  எங்கெல்ஸின் தார்மீக கோபமும் எழுத்தார்வமும் அவரைக் கவர்ந்தன. பிரெட்ரிக் ஓஸ்வால்ட் என்னும் பெயரில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.

இளம் ஜெர்மானியர்கள் முன்வைத்த முழக்கங்கள் அவரை ஈர்த்தன. ஜெர்மனியில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படவேண்டுமானால், நவீன சிந்தனைகள் மக்கள் மத்தியில் பரவவேண்டும். பிற்போக்குத்தனமும் அடிமைமுறையும் ஒழிய வேண்டும். மக்கள் அரசியல் சுதந்தரத்தின் அவசியத்தை உணர வேண்டும். மத பீடங்கள் சமூகத்தின் மீது செலுத்தி வரும் ஆதிக்கம் தகர்க்கப்படவேண்டும். மத சர்வாதிகாரம் நீடிக்கும் இடத்தில் சுதந்தரமும் சமத்துவமும் தழைக்காது. இன்னொன்றும் அவருக்குப் புரிந்தது. தொழிலாளர் பிரச்னை என்பது தனித்து அணுகப்படவேண்டிய ஒரு பிரச்னை அல்ல. மேலும், அது பிரச்னையின் ஒரு பகுதி மட்டும்தான். ‘இதைப் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால், என்னால் இரவில் உறங்கக்கூட முடியவில்லை!’

மன்னராட்சியை நினைவுபடுத்தும் எந்தவொரு அடையாளமும் எங்கெல்ஸை எரிச்சல் கொள்ள வைத்தது. இந்த அடையாளங்களை ஜெர்மனி முழுவதுமாகத் துறக்கப்போகும் நாளை அவர் எதிர்நோக்கினார். ‘ஒவ்வொருமுறை செய்தித்தாள் வாசிக்கும்போதும், சுதந்தரப் பாதையில நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதையே ஆர்வத்துடன் பார்க்கிறேன்.’ முடியாட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்கு எழுத்து ஒரு நல்ல கருவியாக அமையும் என்று எங்கெல்ஸ் நம்பினார்.

இளம் ஜெர்மானியர்களின் முழக்கமும் இதுவேதான். இலக்கியம் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. வாழ்க்கையை மாற்ற, எதிர்ப்பிலக்கியத்தை உருவாக்கலாம். எங்கெல்ஸ் எழுதி அச்சில் வெளியான முதல் கவிதை (The Bedouin) , சுதந்தர தாகம் குறித்து பேசுகிறது.  கவிதை வெளியானதில் எங்கெல்ஸுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், சில வருத்தங்களும் இருந்தன. நண்பர் வில்ஹெம் கிரேபருக்கு எழுதிய கடிதத்தில் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தினார். ‘முதலில் எனக்குப் புன்னகையே ஏற்பட்டது. மகிழ்ச்சியுடன் சிரித்தேன். பிறகு, பார்த்தபோது, தவறுகள் பல கண்ணில் பட்டன. கோபம் வந்தது. என்னுடைய சில பதங்களை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கடைசி வரியையும் மாற்றிவிட்டார்கள்.’

அதே சமயம், கவிதை எழுதுவதில் இருந்தும் எங்கெல்ஸ் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தார். ‘கதேவின் கவிதைகளைப் படித்த பிறகு என் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது.  என்னால் ஒரு கவிஞன் ஆக முடியுமா என்னும் சந்தேகம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. மற்றவர்களைப் போல் நானும் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதலாம். பத்திரிகைகளில் அவை வெளிவரலாம். மற்றபடி, என் கவிதைகள் ஜெர்மன் இலக்கியத்தை எந்த வகையிலும் தாழ்த்தாது, உயர்த்தாது.’ நன்றாக எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசிக்கும்போது, எங்கெல்ஸுக்கு ஆனந்தமும் கோபமும் ஒரு சேர பொங்கும்.  உன்னால் ஏன் இப்படி எழுத முடியவில்லை என்று தன்னைத் தானே கடிந்துகொள்வார்.

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் கற்பனாவாத கவிதைகள் எங்கெல்ஸை மயக்கின. இயற்கையை வியந்து வருணிக்கும் சொல்லாடல்களில், கவித்துவத்தில் தன் மனத்தைப் பறிக்கொடுத்தார். ஷெல்லியை முன்மாதிரியாகக் கொண்டு எழுதி பழகினார். அவரது கவிதைகளை ஜெர்மானிய மொழிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். கனவுகளையும், லட்சியங்களையும், அழகிய வார்த்தை கோர்வைகளையும் ரசித்த அதே சமயம், பழமையைப் போற்றுவோம் என்னும் பெயரில் பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டாடிக்கொண்டிருந்த கவிஞர்களை அவர் நிராகரித்தார்.

தடை செய்யப்பட்ட அரசியல் நூல்கள் ஒரு பக்கம். பழங்கதைகள், நாட்டுப்புற கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் மற்றொரு பக்கம். இரண்டிலும் அவர் தேடியது ஒன்றைதான். முடியாட்சிக்கு எதிரான விடுதலை உணர்வு.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 6

பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் நடந்து வந்த மாற்றங்களால் உந்தப்பட்ட  பதினெட்டு வயது எங்கெல்ஸ் சில தீர்மானமான முடிவுகளுக்கு வந்து சேர்ந்திருந்தார். மார்ச்-ஏப்ரல் 1839 டெலிகிராஃப் இதழில், எங்கெல்ஸின் Letters from Wuppertal என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகள் வெளிவந்தன.  உப்பெர்தல் என்பது பார்மென் பகுதியில் உள்ள நகரம். தொழிலாளர்களின் பரிதாக நிலையை எங்கெல்ஸ் முதல் முறையாக நேரடியாக தரிசித்தது இங்கேதான். பார்மெனில் கண்ட அதே நிலைமைதான் பிரமெனிலும். தந்தையின் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கும் தந்தையின் நண்பரின் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கும் வித்தியாசமில்லை. பிரஷ்யா முழுவதும், ஏன் பிரான்ஸிலும்கூட தொழிலாளர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். இயந்திரமயமாக்கல் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பரிதாபமான வாழ்வைத்தான் வாழ்கிறார்கள். சம மனிதர்கள் தீரா ஏழைமையில் சிக்கித் தவிக்கும்போது, அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர நாம் போராட வேண்டாமா?

தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கும் நிர்வகிப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை எங்கெல்ஸ் தன் கட்டுரையில் குறிப்பிட்டார். தொழிற்சாலையும் உற்பத்திக் கருவிகளும் யார் வசம் இருக்கிறதோ அவர்கள் செல்வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. உடலுழைப்பு செலுத்துவதில்லை. ஆனால், கடுமையாக உழைப்பவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். எனில், மனித குல முன்னேற்றத்தில் உழைப்பின் பங்கு மகத்தானது என்னும் நிலையில், உழைப்பவர்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

‘அடித்தள மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, உப்பெர்தல் பகுதியில். நுரையீரல் மற்றும் பால்வினை நோய்களால் இப்பகுதி வாழ் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். எல்பர்ஃபெல்ட் என்னும் பகுதியில் மட்டும், பள்ளி செல்லும் வயதடைந்த 2500 குழந்தைகளில், 1200 பேருக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொழிற்சாலைகளில் அடைந்துகிடக்கிறார்கள்.’

‘தொழிலாளர்கள் பிராண வாயுவுக்குப் பதிலாக, கரிப்புகையையே சுவாசிக்கிறார்கள்.  பலர் ஆறு வயது முதல் இந்தப் புகையைத்தான் சுவாசித்து வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதில்லை. இவர்கள் பலமற்றபவர்களாக இருக்கிறார்கள். துணி தைப்பவர்கள், காலை முதல் இரவு வரை, முதுகை வளைத்து பணியில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்… தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் சில ஆரோக்கியமான மனிதர்களை நான் சந்தித்தேன். ஆனால், மூன்றாண்டு காலம் அவர்கள் அங்கே பணியாற்றினால், அவர்களுடைய ஆரோக்கியம் விடை பெற்றுவிடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் பாதிப்படைவார்கள். ஐந்தில் மூன்று பேர் மரணடைவார்கள்.’

ஆனால், தொழிற்சாலை முதலாளிகளுக்கு இது பற்றி அக்கறையில்லை. அவர்கள் விரும்பி தலை வணங்கி பணிவன்புடன் ஏற்று வணங்கும் கடவுளுக்கும் இது முரண்பாடாகத் தோன்றவில்லை போலும். இப்படிப்பட்ட பக்தர்களின் முகமூடியை எங்கெல்ஸ் இந்தக் கட்டுரைகளில் கிழித்து அவர்களுடைய நிஜ முகத்தை அம்பலப்படுத்தினார். புனிதம், மதம், இறை அச்சம், நரகம், புண்ணியம், பாவம் எதுவும் அவர்களுடைய இயல்புகளை மாற்றிவிடுவதில்லை என்று எங்கெல்ஸ் வாதிட்டார். பார்மென் தொழிலதிபர்களும் வணிகர்களும் உற்பத்தியாளர்களும், பொருளாதாரப் பலன்கள் தவிர்த்து வேறு எதற்கும் செவி சாய்ப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

‘செல்வம் படைத்த உற்பத்தியாளர்களின் மனச்சாட்சி, நெகிழ்வுதன்மை கொண்டதாக இருக்கிறது. (பணிபுரியும்) ஒரு குழந்தை கூடுதலாகவோ குறைவாகவோ இறந்துவிட்டால், உடனே அவர்கள் பதறிவிடுவதில்லை. நரகம் குறித்த பயம் அவர்களை உலுக்குவதில்லை. ஞாயிறு தோறும் இரு முறை தேவாலயம் செல்வதே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. பக்தியில் ஊறித் திளைப்பவர்கள் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை மிக மோசமான முறையில் நடத்துகிறார்கள்.’

தொழிலாளர்களின் பலவீனத்தை முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை எங்கெல்ஸ் உதாரணத்துடன் விளக்கினார். உழைப்புக்குத் தகுந்த கூலியை முதலாளிகள் கொடுப்பதில்லை என்பது மட்டுமல்ல. ஒப்புக்கொண்ட அடி மாட்டு தொகையையும்கூட அவர்கள் முழுவதுமாகத் தருவதில்லை. கேட்டால், அவர்கள் அளிக்கும பதில் இது. எப்படியும் குடித்து வீணாக்கத்தான் போகிறார்கள், எதற்கு அதிகம் கொடுக்கவேண்டும்? ஆனால், தலைமை பாதிரியைத் தேர்வு செய்ய நடைபெறும் தேர்தல் சமயத்தில், இதே முதலாளிகள் தொழிலாளர்களுக்குக் கூடுதல் பணம் அளிக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட பாதிரியைப் பதவியில் அமர்த்துவதற்காக இந்த ஏற்பாடு.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, செல்வந்தர்களின் குழந்தைகளுக்கும்கூட நல்ல கல்வி அளிக்கப்படுவதில்லை என்பதை எங்கெல்ஸ் மற்றோரிடத்தில் சுட்டிக்கட்டினார். தேவாலயப் பள்ளிகளில் போதிக்கப்படும் கல்விமுறையை வெளிப்படையான மதப் பிரசாரம் என்று அவர் அழைத்தார்.  எழுத, படிக்க, கணக்குப் போட கற்றுக்கொடுப்பதைத் தாண்டி பெரிதாக இந்தப் பள்ளிகள் எதையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை. காரணம், இவை, கிறிஸ்தவ அறங்காவலர்களின் பிடியில் சிக்கியிருந்தன. உப்பெர்தலில் உள்ள பள்ளிகளின் நிலைமையை, போதிக்கும்  ஆசிரியர்களின் திறமைகளை, போதிக்கப்படும் பாடங்களின் தரத்தை எங்கெல்ஸ் தனித்தனியே விமரிசித்தார்.

இந்த உண்மைகளை வெகு சிலரே எழுத்தில் பதிவு செய்திருப்பதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். ‘கவிதை எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், உரைநடை எழுத்துகள் பெரும்பாலும் மதம் தொடர்பானவையாக இருக்கின்றன. பார்மென், எல்பர்ஃபெல்ட் பற்றிய வரலாற்றுப் புத்தகங்களும்கூட மேலோட்டமாகவே உள்ளன.’

டேவிட் ஸ்ட்ராஸ்

உப்பெர்தல் கடிதங்கள் பார்மென், எல்பர்ஃபெல்ட் பகுதிகளில் மிகுந்த சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மதம் குறித்த எங்கெல்ஸின் கூர்மையான விமரிசனங்கள், மத நம்பிக்கையாளர்களைஅதிர்ச்சியடைய வைத்தன. தொழிற்சாலை உரிமையாளர்கள் எரிச்சலடைந்தனர் என்பதை தனியே குறிப்பிடவேண்டியதில்லை. ஆனால், டெலிகிராஃப் பத்திரிகை வழக்கத்தைவிடவும் அதிக அளவில் விற்பனை கண்டது.

இந்தக் கட்டுரைகளை எங்கெல்ஸ் தன் பெயரில் எழுதவில்லை. பெயரிடப்படாமல்தான் உப்பெர்தல் கடிதங்கள் அடுத்தடுத்து வெளியாயின. என்பதால், கோபத்தை யார் மீது குவிப்பது என்று தெரியாமல் பலர் தடுமாறினர். இத்தனை வன்மையுடன் மதத்தையும் அதிகாரத்தையும் எதிர்க்க யாருக்குத் திடீரென்று துணிச்சல் பிறந்திருக்கும் என்று மாய்ந்து மாய்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை. எங்கெல்ஸின் கட்டுரைகளுக்கு ஒரு முதலாளித்துவ பத்திரிகை (Elberfelder Zeitung) மறுப்பு எழுதியது. எங்கெல்ஸின் வாதங்கள் தவறானவை என்றும், மதமும் முதலாளித்துவமும் நன்மை அளிக்கக்கூடிய நிறுவனங்கள் என்றும் அது வாதாடியது.

மத சம்பந்தமான ஏடுகள் தவிர வேறு எதையும் வாசித்திராத பெருந்திரளான மக்கள் உப்பெர்தல் கடிதங்களால் ஆச்சரியமடைந்தனர். மதத்தை அவர்கள் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. துன்பம் நேர்கையில் அவர்கள் பாதிரிகளின் தத்துவங்களையே அசைபோட்டனர். துன்பத்தைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள அவர்கள் பழகியிருந்தனர். இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் இறப்புக்குப் பிறகாவது பொன்னுலகம் கைகூடவேண்டும் என்பதற்காக அவர்கள் அமைதி காத்து வந்தனர். பசியையும் பிணியையும் அவர்கள் வாழ்வின் இரு பெரும் நிதர்சனங்களாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், உப்பெர்தல் கடிதங்கள், பாதிரிகள் அளித்திருந்த ஊன்றுகோலை மக்களிடம் இருந்து அகற்றியது. அது ஊன்றுகோல் அல்ல, அடிமைச் சங்கிலி என்பதை புரியவைத்தது.

எதிர்பார்த்தபடி, சலசலப்பை ஏற்படுத்திவிட்டதில் எங்கெல்ஸுக்குத் திருப்தி. David Strauss எழுதிய Life of Jesus என்னும் புத்தகத்தை அவர் இந்தச் சமயத்தில் கண்டெடுத்தார்.  1835-36ல் வெளியான இந்தப் புத்தகத்தில் டேவிட் ஸ்ட்ராஸ் மதத்தின் முரண்பாடுகளை தர்க்க ரீதியில் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தார். கிறிஸ்தவப் புனித நூல்களுக்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை முற்கால கிறிஸ்தவ சமூகம் உண்டாக்கிய புராணக் கதைகள். அற்புதங்கள் பொய். கிறிஸ்தவம் பிற்போக்குத்தனத்தை போதிக்கிறது.

ஒரு வரலாற்றுப் பாத்திரமாக இயேசுவை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தார் ஸ்ட்ராஸ். இறை நூல்களை, அவற்றிலுள்ள புனித அம்சங்களை விலக்கிவிட்டு, ஓர் ஆவணமாக எடுத்து வைத்துக்கொண்டு வரலாற்று ரீதியில் ஆராய்ந்தார். இயேசுநாதரின் முதல் நூற்றாண்டு வரலாற்று, கலாசாரப் பின்னணியை ஆய்வுக்கு உட்படுத்தினார். தன் ஆய்வின் இறுதியில், இயேசுநாதரின் புனித பிம்பத்தை டேவிட் ஸ்ட்ராஸ் கலைத்துப்போட்டார். இயேசுவின் பெயரைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த மாய வளையங்களை அகற்றினார். ஆலய விதிகள், மதச் சடங்குகள், இறை நம்பிக்கைககள் அனைத்தையும் நிராகரித்தார். இயேசு பற்றிய செய்திகள் புனையப்பட்ட கதைகளே என்னும் தீர்மானமான முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.

மதத்தை தர்க்க ரீதியில் அணுகியிருந்த டேவிட் ஸ்ட்ராஸின் இந்தப் புத்தகம் எங்கெல்ஸை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி சென்றது. புத்தகம் நெடுகிலும் பரவியிருந்த உண்மையின் தகிப்பு அவரை ஆட்கொண்டது. மதத்தைத் தான் அணுகியதற்கும் டேவிட் ஸ்ட்ராஸ் அணுகியதற்குமான வித்தியாசம் புரிந்தது. வரலாற்று ரீதியான, தத்துவார்த்த பார்வையை ஒருவர் பெற்றிருக்கவேண்டியதன் அவசியம் புரிந்தது. தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தன் மகிழ்ச்சியை எங்கெல்ஸ் பகிர்ந்துகொண்டார். ‘ஏசுவின் வாழ்க்கை புத்தகத்தைப் படித்த பிறகு நான் டேவிட் ஸ்ட்ராஸின் தீவிர ஆதரவாளன் ஆகிவிட்டேன்.’

இந்தப் புத்தகம் எங்கெல்ஸுக்குள் ஒரு ரசவாதத்தை ஏற்படுத்தியது. குழந்தைத்தனமான இறை நம்பிக்கை வாதங்களில் இருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டார். நாத்திகம் குறித்த தெளிவான கருத்தாக்கத்தை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். ஹெகல் அவருக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 7

தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதல் அத்தியாவசிய தேவை, துணிவான, சுதந்தரமான அறிவு. கார்ல் மார்க்ஸின் வாசகம் இது. தத்துவஞானத்துக்கான தேவையை உணர்ந்து பலரும் பல்வேறு வழிகளில் அறிவுப் போர் நிகழ்த்திக்கொண்டிருந்த அதே 19ம் நூற்றாண்டில், தத்துவத்துக்கு எதிரான போரும் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. நீண்ட வாதங்களிலும், விவாதங்களிலும் தர்க்கங்களிலும் நேரத்தைச் செலவிடுதன் மூலம் யாருக்கு லாபம் கிடைக்கப்போகிறது? அதில் ஈடுபடுபவர்களுக்கே பலனில்லை என்னும்போது, அதைப் பற்றி அறிந்துகொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? எதற்கு இந்த வீண் வேலை?

தத்துவத்தின் தாக்கத்தை அவர்களால் கண்கூடாக உணரமுடியவில்லை என்பது ஒரு காரணம். பொறியியல் துறையின் சாதனைகள் வெளிப்படையானவை, காத்திரமானவை. பாலங்களையும் கால்வாய்களையும் சாலைகளையும் இந்தத் துறை உருவாக்கியிருக்கிறது. மருத்துவம், மனிதனின் நோய்களை நீக்குகிறது. தொழில்நுட்ப அறிவு இயந்திரங்களைப் படைக்கிறது. தொழிற்சாலைகளை உருவாக்குகிறது. உற்பத்தியைப் பெருக்குகிறது. வேளாண்மை துறை, உணவுப் பயிர்களைப் படைக்கிறது. இதுபோன்ற துறைகள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசியங்களை வழங்குகின்றன. எனவே, இப்படிப்பட்ட துறைகள் மீது மனிதன் கவனம் செலுத்துவது அவசியம். அந்தத் துறைகளுக்கு பங்களிப்பு செய்வதும் அவசியம். ஆனால், தத்துவத் துறையின் தேவை என்ன? நோக்கங்கள் என்னென்ன? எதற்காக மனிதன் அதை நாடவேண்டும்?

பிரான்ஸிஸ் பேகன் சில தெளிவான விளக்கங்களை அளித்தார். நம் புரிதலின் அடிப்படையில் எந்தவொரு விஷயத்தையும் புதிதாக ஆராய கற்றுக்கொடுக்கிறது தத்துவம். அனுபவம், அறிவைக் கொண்டு வருகிறது என்பதால் தத்துவ ஆராய்ச்சிக்கு அனுபவத்தின் தேவை இன்றியமையாதது. வரலாற்றுக்கு அடிப்படை மனித நினைவுகள். கவிதைக்கு, கற்பனை. தத்துவத்துக்கு, பகுத்தறிவு.  புலன் சார்ந்த உணர்வுகளின் அடிப்படையில் அறிவு கட்டமைக்கப்படுகிறது என்றார் பேகன். செய்முறைக்கொள்கையின் (Empiricism) தந்தையாக பேகன் கருதப்படுகிறார். முறைப்படி, அறிவியல் ரீதியில் எதையும் ஆராயச் சொல்லும் தத்துவம் இது. எந்தவித முன்முடிவும் இல்லாமல் உண்மையை ஆராயவேண்டும். ஆய்வின் அடிப்படையில் மட்டுமே எந்தவொரு முடிவுக்கும் வரவேண்டும் என்றார் பேகன்.

தத்துவ வழிமுறையின் தேவையை தாமஸ் ஹோப்ஸ் வலியுறுத்தினார். தத்துவத் துறையின் சாரத்தை ஹோப்ஸ் மூன்றாகப் பிரித்துக்கொண்டார். முதல் பிரிவு, இயற்பியல். இரண்டாவது, அறவியல். மூன்றாவது, குடியியல் எனப்படும் சிவில் தத்துவம்.  ஒரு பொருளின் இயக்கம், செயல் இரண்டையும் அறிவியல்பூர்வமாக ஆராய்வதால் இயற்பியல் ஒரு முக்கியப் பிரிவாக இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. அறவியல் என்று ஹோப்ஸ் குறிப்பிடுவது, தற்போதைய உளவியலை. மனித மனத்தின் விருப்பங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் அச்சங்களையும் கோபங்களையும் பொறாமைகளையும் இத்துறை ஆராய்கிறது. என்பதால், தத்துவத்தின் இன்றியமையாத ஓர் அங்கமாக உளவியல் மாறிவிடுகிறது.

குடியியல், தனி மனிதர்களை மட்டுமின்றி சமூகச் சூழலையும் சேர்த்து ஆராய்கிறது. தனிமனிதர்களின் மன விருப்பங்கள் பொதுவான மக்கள் நலனுக்கு விரோதமாக மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வது இத்துறையின் நோக்கம். அதற்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அமைதியை நிலைநாட்டவும் சிவில் ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த அதிகாரம் உதவுகிறது.  ஹோப்ஸைப் பொறுத்தவரை, தத்துவத்தை வாசிக்கிறோம் என்றால் இந்த மூன்று துறைகளையும் குறித்த அறிவை சேகரிக்கிறோம் என்று பொருள். அந்த வகையில், தத்துவம் என்பது நம் வாழ்வுக்கு  அந்நியமான ஒரு துறை அல்ல. நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பின்னிப் பிணைந்துள்ள ஓர் இழை.

தத்துவம் என்பது அறிவு (ஞானம், மதிநுட்பம், விவேகம்) சம்பந்தப்பட்ட துறை என்றார் பிரெஞ்சு தத்துவஞானி, டெகார்தே. தத்துவம் ஒரு மனிதனுக்கு என்னென்ன கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதை அவர் வரையுறுத்தினார். எப்படி வாழவேண்டும் என்று (அறம்). எப்படி நலம் பேணவேண்டும் என்று (மருத்துவம்). எப்படிக் கலைகளைக் கண்டறியவேண்டும் என்று (இயக்கவியல்). தத்துவத்தை மரத்தோடு ஒப்பிட்டார் டெகார்தே. அதன் வேர் பகுதி, உளவியல். அடிமரம் இயற்பியல். அறம், மருத்துவம், இயக்கவியல் ஆகியவை கிளைகள். ஒரு மரத்துக்கு முக்கியமானது அதன் வேர் பகுதி என்பதால் உளவியல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்றார் டெகார்தே.

டெகார்தேயின் உளவியலை, Metaphysics என்று அழைக்கலாம். அடிப்படையில், மூன்று முக்கிய அம்சங்களை இது கொண்டுள்ளது.

1.         எதையும் முழுமையாக, முறையாக சந்தேகப்படவேண்டும். குறிப்பாக, அனைத்து நம்பிக்கைகளையும் சந்தேகத்துக்கு உட்படுத்தவேண்டும். ஒத்துவராத ஒவ்வொன்றையும் புறந்தள்ள வேண்டும். (இது ஐயமுறை கொள்கை அல்லது Skepticism என்று அழைக்கப்படுகிறது).

2.         தீர்மானமான, தனித்துவமான, முரண்பாடுகளற்ற எண்ணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். (இது கணக்கியல் அல்லது Mathematicism என்று அழைக்கப்படுகிறது).

3.         அறிவை சுயபிரக்ஞையுடன் சோதித்துப் பார்க்கவேண்டும். சந்தேகத்துக்கு ஆட்படாத  உணர்வுகளை ஏற்கவேண்டும். அப்படிப்பட்ட ஓர் உள்ளுணர்வு, நான் என்பது மட்டுமே. நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன். (Subjectivism அல்லது அகஉணர்வியல்).

நான் சந்தேகிக்கிறேன். எனவே நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருக்கிறேன். டெகார்தேயின் இந்த வாசகம், மேற்கத்திய தத்துவஞானத்தின் அடித்தளமாக நீடிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு வாதமாக இது தோன்றினாலும், அப்போது நிலவி வந்த மிக முக்கியமான ஒரு சந்தேகத்தை தீர்த்து வைப்பதாக இந்தக் கண்டுபிடிப்பு இருந்தது. அதாவது, இந்த உலகில் உள்ள பொருள்கள் நிஜத்தில் புறவுலகில் இருக்கின்றவா அல்லது நம் கற்பனையில் உருவானவையா? என் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது என்று நான் நினைப்பதால், நம்புவதால் அந்தப் புத்தகம் இருக்கிறதா அல்லது, நிஜமாகவே அது தனியே புறவுலகில் நீடிக்கிறதா? புத்தகத்தை கீழே வைத்துவிட்டு என் அறையைவிட்டு நான் வெளியேறிவிட்டால், அந்தப் புத்தகம் இன்னமும் அங்கேயே இருக்குமா அல்லது மறைந்துவிடுமா?

டெகார்தே அளித்த விடை இதுதான். நான் என்னைப் பற்றி சிந்தித்தால், நான் இருக்கிறேனா, இல்லையா என்று சந்தேகித்தால், அதுவே நான் இருப்பதற்கான ஒரு சான்று.  நான் என்பது நிச்சயமானது என்பதை நிரூபித்த பிறகு, டெகார்தே கடவுளை நெருங்கினார். கடவுள் கச்சிதமானவர். அவர் இருப்பு, உறுதியானது. நாம் வாழும் இந்த உலகத்தை கடவுள் அளித்திருக்கிறார். கடவுள் கச்சிதமானவர் என்பதால், அவரால் பொய்களையும் ஏமாற்றங்களையும் அளிக்கமுடியாது. எனவே புறவுலகு  என்பது நிஜத்தில் இருக்கும் ஒன்று. அது கற்பனையல்ல. மாயமல்ல.  தோற்ற மயக்கம் அல்ல. இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களும், அனைத்து உயிரினங்களும் எனக்கு வெளியே, புறத்தில், அமைந்துள்ளன. சிந்திக்கும், சந்தேகிக்கும் நான் நிஜமானவன். என் கையில் உள்ள புத்தகம் நிஜமானது. நான் வாழும் இந்த உலகம் நிஜமானது.

மாயாவாதத்தை மறுத்து, விவேகமான சிந்தனை முறைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார் டெகார்தே. கடவுளின் இருப்பை மட்டுமல்ல, உலகின் இருப்பையும் மனிதர்களின் இருப்பையும்கூட அவர் தர்க்க ரீதியில் நியாயப்படுத்தினார். மனிதனின் இருப்பு அவன் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. டெகார்தேவைப் பொறுத்தவரை நம் புலன்களைவிட நம் புரிதலே மேலானது. எது உண்மை என்பதை, நம் புலன்கள் அல்ல, பகுத்தறிவே தீர்மானிக்கிறது.

டெகார்தேவின் தத்துவத்தை ஹாலந்தில் பெனிடிக்ட் ஸ்பினோசாவும் ஜெர்மனியில் வில்ஹெம் லீப்னிட்ஸும் முன்னெடுத்துச்சென்றனர். இவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். திறனாய்வுப் பகுத்தறிவுவாதம் (Critical Rationalisation) வளர்வதற்கு டெகார்தேவின் சிந்தனை முறை அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.

டெகார்தேவின் அறிவுவாதத்தை அனுபவவாதம் எதிர்கொண்டது. இந்த வாதத்தை முன்வைத்தவர்களில் பிரதானமானவர், ஜான் லாக். 1689ல் வெளியான அவரது முக்கிய கட்டுரை (An Essay Concerning Human Understanding) நவீன தத்துவத்துக்கான புதிய பாதயை அறிமுகப்படுத்தியது. ‘மனித அறிவின் தோற்றத்தை, நிச்சயத்தன்மையை, பரப்பை ஆராய்வதே என் கட்டுரையின் பணி’  என்று முன்னுரையில் குறிப்பிட்டார் லாக். மூன்று முக்கியப் பணிகளை இந்தக் கட்டுரை மேற்கொண்டது.

ஜான் லாக்கைப் பொறுத்தவரை ஒரு பொருளுக்கு இரு வகையான இயல்புகள் உள்ளன. ஒன்று, முதன்மை இயல்புகள். உருவம், கட்டுமானம், இயக்கம் ஆகியவை இந்த வகைக்குள் அடங்கும். ஒரு பொருளின் இரண்டாம்தர இயல்புகளாக அதன் நிறம், சுவை, வாசம் ஆகியவற்றை குறிப்பிடலாம். ஒரு பொருள் தட்டையாக இருக்கிறதா அல்லது உயரமாக இருக்கிறதா என்பதை அந்தப் பொருள் சார்ந்த இயல்புகள் தீர்மானிக்கின்றன. இந்த இயல்புகள் நிஜமானவை. குறிப்பிட்ட அந்தப் பொருளோடு தொடர்புடையவை. ஆனால், அதன் நிறம் என்ன, சுவை என்ன என்று ஆராயும்போது, மனித மனம் அங்கே முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. இந்த இயல்புகளை அந்தப் பொருள் அல்ல, மனித மனமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், புலணுணர்வே முதன்மையானது என்பதால் ஜான் லாக், பகுத்தறிவை நிராகரித்தார்.

ஜான் லாக்கின் தத்துவம், புலனறிவு வாதமாகவும் (Positivism) ஐயவாதமாகவும் (Scepticism) பின்னர் உருப்பெற்று வளர்ந்தது. டெகார்தேவின் ஐயமுறை வாதத்துக்கும் ஜான் லாக்கின் ஐயவாதத்துக்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. எதையும் சந்தேகத்துடன் பார் என்பதுதான் இரு வாதங்களுக்கும் அடிப்படை. இரண்டுமே சந்தேகம் என்னும் கருவியைக் கைகொண்டே தன் ஆய்வைத் தொடர்கின்றன. ஆனால், ஐயவாதம், முடிவின்றி அனைத்தையும் சந்தேகத்துடன் அணுகுகிறது. அது எந்த விடையையும் அளிப்பதில்லை. ஆனால், ஐயமுறைவாதம், தெளிவான ஒரு புரிதலுக்கு வந்து சேர்கிறது. நான் சிந்தேகிக்கிறேன் என்பதால் நான் இருக்கிறேன்.

ஹெகலின் தர்க்கவியலைப் புரிந்துகொள்ளாமல் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. டெகார்தேவையும் ஜான் லாக்கையும் அவர்களுடைய கொள்கைகளைச் செழுமைப்படுத்திய வேறு சில தத்துவ ஆசிரியர்களையும் பயிலாமல் ஹெகலைப் புரிந்துகொள்ளமுடியாது. ஹெகலை வாசிக்கத் தொடங்கிய எங்கெல்ஸ் தன் வாசிப்பை மேலும் விரிவாக்கினார். கம்யூனிசம் என்னும் இறுதி இலக்கை அடைவதற்கு இந்த வாசிப்பு அவரைத் தயார்படுத்தியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 8

கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்திருந்த சமயத்தில், ஹெகலைக் கண்டடைந்தார்  எங்கெல்ஸ். கடவுள் உண்டு என்றார் ஹெகல். இந்த உலகம் எப்படி வளர்ச்சியடைகிறது? வளர்ச்சிக்கு எது உந்து சக்தி? மனித சமுதாயம் தொடர்ச்சியான பல வளர்ச்சி நிலைகளை அடைவதற்கு யார் காரணம்? இயற்கையா? மனிதர்களா? இல்லை என்றார் ஹெகல். மனித குல வளர்ச்சிக்கான உந்து சக்தி உள்ளே இல்லை, வெளியில் இருக்கிறது. இந்த உலகைப் படைத்தவர் கடவுள். வளர்ச்சியின் உந்துசக்தி அவரே. நம் சிந்தனைகள் அல்ல, கடவுளின் சிந்தனைகளே, நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்கின்றன. கடவுளின் சிந்தனையே பரிபூரணமானது என்றார் ஹெகல். இந்தச் சிந்தனை உலக இயக்கத்தின் வேராக இருக்கிறது. இந்த சிந்தனை வளர்ந்து, இயற்கையோடு ஒன்றிணைகிறது. மனிதர்களின் பிரக்ஞையாகத் திகழ்கிறது. வரலாறாக உருவெடுக்கிறது.

எங்கெல்ஸ் ஹெகலால் கவரப்பட்டார். 1839 இறுதியில் அவர் ஹெகலின் படைப்புகளில் ஆழ்ந்துபோனார். கடவுளைப் பிரதானப்படுத்தும் ஹெலின் வாதம் அவரைக் கவரவில்லை என்றாலும், மனித குலம் குறித்தும் வரலாறும் குறித்தும் சிந்தனைப் போக்கு குறித்தும் ஹெகல் கொண்டிருந்த பார்வை எங்கெல்ஸை ஈர்த்தது. மனிதன் படிப்படியாகப் பல வளர்ச்சி கட்டங்களை அடைந்து, பக்குவமான சமூக வடிவங்களைப் பெறுகிறான் என்றார் ஹெகல். ஹெகலின் Philosophy of History எங்கெல்ஸை மிகவும் கவர்ந்தது. 1840-41 ஆண்டுகளில் எங்கெலஸ் எழுதிய கட்டுரைகளில் ஹெகலின் தாக்கத்தை உணரமுடியும்.

முதல் முறையாக வரலாறு குறித்த தெளிவான ஒரு பார்வையை எங்கெல்ஸ் இந்தக் கட்டுரைகளில் முன்வைத்தார். ‘வரலாறு தொடர்ச்சியாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. காலம் முன்னோக்கி நடைபோடும்போது, பழைய சிந்தனைகள் அதன் காலடியில் சிக்கி உடைபடுகின்றன.’ அறிவியல், வாழ்க்கை, தத்துவம், நவீனப் போக்கு அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து வினைபுரிகின்றன என்றார் எங்கெல்ஸ்.

ஜார்ஜ் வில்லியம் பிரெட்ரக் ஹெகல் (1770-1831) நவீன வரலாற்றிலும் தத்துவத்திலும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியவர். 1770ம் ஆணடு ஜெர்மானியில் உள்ள ஸ்டட்கர்டில் பிறந்த ஹெகலின் இளமைக் காலம், பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் கழிந்தது. அவர் காலத்து இளைஞர்களைப் போலவே ஹெகலும் புரட்சியின் தாக்கத்துக்கு உள்ளானார். மத இயல், தத்துவ இயல் இரண்டையும் பயின்றார். பேராசிரியராகவும், பின்னர் ஒரு செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிறாற்றினார்.

கிரேக்க தத்துவத்தில் ஹெகல் இளவயது முதலே ஆர்வம் காட்டி வந்தார். வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வம் நீடித்தது. பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஸ்பினோசா, இம்மானுவேல் காண்ட் ஆகியோரின் தத்துவங்கள் ஹெகலின் சிந்தனைப் போக்கை செழுமைப்படுத்த உதவின. மனித மனம் தான் (அதாவது எண்ணம்) உலகத்தைப் படைக்கிறது என்னும் வாதத்தை ஹெகல் காண்டிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மனிதர்களின் மனம், தனித்தனியானது. ஆனால், இந்த உலகம் முழுமைக்குமான பொது மனம் ஒன்று உள்ளது. அந்த உலக மனம், நம் மூலமாக உலகை ஆள்கிறது. ஆன்மிக வயப்படட இந்தக் கருத்துமுதல் வாத சிந்தனைக்கு நீண்ட வரலாறு உண்டு. கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார், அவர்தான் உலக இயக்கங்களை மேற்பார்வையிடுகிறார் என்னும் தத்துவம் மிகவும் பழைமையானது. ஹெகலின் தனிச்சிறப்பான பங்களிப்பு, இதுவல்ல.

எங்கெல்ஸை ஈர்த்த ஹெகலின் கண்டுபிடிப்பு, இயக்கவியல் வளர்ச்சி. ‘உலகம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உயர் வளர்ச்சியை நோக்கி அதை இட்டுச் செல்கிறது. இந்த இயக்க இயல் வளர்ச்சித் தத்துவமே ஹெகல் அளித்த சிறந்த அன்பளிப்பாகும்.’ (ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன்). ‘இயற்கையின் மூலமும் அனுபவ ஆராய்ச்சியின் மூலமும் உலகம் எப்படி உள்ளதோ, அப்படியே அதை அறிந்து கொள்வதுதான் தத்துவ இயலின் பணி’ என்றார் ஹெகல்.

இயற்கை என்பது புரியாத தத்துவத்தின் வெளிப்பாடு என்று காண்ட் உள்ளிட்டோர் சொல்லி வந்ததை ஹெகல் மறுத்தார். அனைத்துப் பொருள்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. உலக நிகழ்ச்சிகள் அறிவு பூர்வமானவை. உயிருக்கும் உடலுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அவ்வாறே சூரிய மண்டலத்துக்கும், கோள்களுக்கும், துணைக் கோள்களுக்கும்கூட ஒரு நோக்கம் இருக்கிறது. அவை திட்டவட்டமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன. இந்த விதிகள் பகுத்தறிவுக்கு உட்பட்டவை. தத்துவத்தின் பணி இயற்கையைக் கற்பது. அவ்வாறு செய்தால், இயற்கையோடு சேர்ந்து தத்துவமும் வளரும் என்றார் ஹெகல்.

உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக்கொண்டிருக்கிறது. கருத்து, பகுத்தறிவு, உண்மை, ஞானம், இயக்கம், நிகழ்ச்சி ஆகியவை வளர்ச்சியின் நிலைகளாகும். வளர்ச்சி என்பது கீழிருந்து மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்ச்சியானது. ஒரு பொருள் (உயிருள்ளதோ, உயிரில்லாததோ) முதலில் கீழ்த்தரமான நிலையில் காணப்படுகிறது. பிறகு, வெவ்வேறு உருவங்களை எடுக்கிறது. இந்த உருவஙக்ளும்கூட தொடக்கத்தில் வளர்ச்சியடையாத நிலையில் இருக்கின்றன. ஒன்றோடொன்று மாறுபட்டு இருக்கின்றன. எதிரிகளாகவும் ஆகிவிடுகின்றன. மாறுபட்ட குணங்களாலும், மாறுபட்ட செயல்களாலும் அவை தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றன. ஆனால், அவற்றை ஒன்றாகப் பார்க்கும்போது ஒரே உருவமாகக் காட்சியளிக்கின்றன.

அதாவது, ஒரு பொருளின் அந்தரங்க விருப்பத்தின் விளைவே மேல் நோக்கிய வளர்ச்சி. ஒன்று இன்னொன்றாக மாறுவதற்கும், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கும் இந்த அந்தரங்க விருப்பமே உந்து சக்தியாகச் செயல்படுகிறது. ஒரு பொருள் அல்லது உயிர் கீழ்நிலையில் இருப்பதற்கும், மேல் நிலையை அடைவதற்கும் இந்த உந்து சக்தியே ஆதாரமாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் அந்தப் பொருளில் சில தன்மைகளை நாம் காணமுடியும். அதன் பழைய நிலைகள். வரவிருக்கும் புதிய நிலைகள். அந்த வகையில், அது கடந்த காலமாகவும் எதிர்காலமாகவும் திகழ்கிறது. ஒரு பொருள் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு நகரும்போது, எதிர்மறையானதாக (Negated) மாறிவிடுகிறது. இதற்கு முன் இருந்த நிலையில் அது இல்லை. ஆனால், அதன் உயர்ந்த நிலையில், பழைய நிலை பத்திரப்படுத்தப்படுகிறது.

‘ஒரே இடத்தில் இருந்து இரண்டு பாதைகள் பிறக்கின்றன. ஆனால், பின்னர் அவற்றின் திசைகள் வெவ்வேறாகி விடுகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று முரண்படுகிறது.’  அதாவது, காற்றின் இயக்கம் நீரைப் பனிக்கட்டியாக மாற்றுகிறது. பனிக்கட்டியாக மாறியது அதன் வளர்ச்சிக் கட்டம். இவ்வாறு மாறிவிட்டால், அந்தப் பனிக்கட்டி எந்தவிதச் சலனத்துக்கும் ஆளாக வேண்டியிருக்காது. கடினமானதாகவும் நிலையானதாகவும் பனிக்கட்டி மாறிவிடுகிறது. பழைய நிலையில் இருந்து அதற்கு நேர் எதிரான ஒரு நிலைக்கு பனிக்கட்டி வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை, ஹெகல் இயக்கவியல் நிகழ்ச்சி (Dialectical method) என்று அழைத்தார்.

நீரில் இருந்து பனிக்கட்டி உருவானது போல் ஒவ்வொரு பொருளும் மாற்றங்களைச் சந்திக்கிறது. முரண்பாடும், எதிர்ப்புத்தன்யைம் எல்லாவிதமான வாழ்க்கைக்கும், இயக்கத்துக்கும் மூலமாகும் என்றார் ஹெகல். எங்கெல்ஸை மிகவும் கவர்ந்த தத்துவ முழக்கம் இது. வரலாறு மாற்றத்துக்கு உட்பட்டது என்பது உண்மையானால், சமூகத்தில் இப்போது காணக்கிடைக்கும் இழி தன்மையும்கூட மாறும் அல்லவா? தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் வருமல்லவா? உழைக்கும் மக்களின் எதிர்காலத்தில் மாற்றம் நிகழும் அல்லவா? சுரண்டி வாழும் முதலாளிகளின் ஆதிக்க மனோபாவமும், மதத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தும் சித்தாந்தங்களும்கூட வளர்ச்சி போக்கில் மாற்றம் கண்டுவிடும் அல்லவா?

இதைத்தானே ஹெகல் அழகாகச் சொல்கிறார்? ஒவ்வொரு பொருளும் மாறிக்கொண்டும், தனது பழைய நிலைக்கு எதிர் நிலையில் மாற விரும்பிக் கொண்டும் இருக்கிறது என்பது எவ்வளவு அற்புதமான ஒரு கண்டுபிடிப்பு! ஒவ்வொரு விதைக்குள்ளும் இந்த விருப்பம் இருக்கிறது. அது தன்னையே எதிர்க்கிறது. இந்த நிலை வேண்டாம் என்கிறது. இன்னொரு வடிவம் எடு என்கிறது. வளர்ச்சிப் பாதையில் முன்னே நகர்ந்து செல் என்று கட்டளையிடுகிறது. தன்னையே எதிர்த்துப் போராடுகிறது. போரிடுகிறது.

ஒவ்வொரு பொருளும் முரண்பாட்டை அல்லது எதிர்ப்புத் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்னும் ஹெகலின் வாதம் எங்கெல்ஸை புதிய முறையில் யோசிக்க வைத்தது.  இந்த முரண்பாடு மட்டு்ம் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்தார், மாற்றம் என்பதே இல்லாமல் போய்விடும். மாற்றம் இல்லாவிட்டால் வளர்ச்சி சாத்தியமில்லை. முரண்பாடு இல்லையென்றால், எதுவொன்றும் அடுத்த கட்டத்துக்குச் செல்லாது. உலக இயக்கம் நின்றுவிடும். உலகத்தில் உயிர்கள் இல்லாமல் போய்விடும். எல்லாப் பொருள்களும் உயிரற்றவையாக மாறிவிடும். ஜடமாக மாறிவிடும்.

‘ஒவ்வொரு உடலிலும் இந்த முரண்படும் சக்திகள் அல்லது எதிர்ப்புச் சக்திகள் பிரிக்கமுடியாத அங்கங்களாகத் திகழவேண்டியது அவசியம். இந்தச் சக்திகள் தங்களுக்குள் எதிர்த்துக்கொண்டாலும், உடலுக்கு அவை விரோதிகளல்ல. உடலை அவை எதிர்ப்பதில்லை. மாறாக, இந்தப் பரஸ்பர எதிரிகள் இணைந்து, ஒரு முழுமையான உடலை உண்டாக்குகின்றன.’ (ராகுல் சாங்கிருத்யாயன்).

ஹெகல், கடவுளை எண்ணம் என்றே அழைக்கிறார். உலகம் தொடர்ந்து கடவுளால் படைக்கப்பட்டு வருகிறது என்றார். ஆன்மா என்பது, உலக அறிவு அல்லது உலக எண்ணம். ஆன்மா தன்னை உடலுக்குள் மறைத்துக்கொள்கிறது. தனக்கான ஒரு உடலைத் தயார் செய்து கொள்கிறது. அதே சமயம், தனக்காக உருவாக்கிக்கொண்ட உயிரின் உடலாகவும் ஆன்மா மாறிவிடுகிறது. பிறகு, அது தன்னை உடலிலிருந்து வேறுபட்டதாக எண்ணத் தொடங்கிவிடுகிறது. உணர்ச்சி என்பது ஆன்மாவின் வளர்ச்சி பரிணாமம். உடல் என்பது அதன் வெளிப்பாடு. ஆன்மா தோற்றுவிக்கும் அல்லது உண்டாக்கும் விஷயங்களையே நாம் அறிகிறோம். அவற்றை மட்டுமே நம்மால் அறியமுடியும்.

ஹெகலின் கடவுள் வாதத்தை மறுத்த எங்கெல்ஸ், அவருடைய இயக்கவியல் தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். உலக வரலாற்றையும் சமூக முன்னேற்றத்தையும் இயக்கவியல் முறையில் ஆராய ஆரம்பித்தபோது, புதிய சாத்தியங்கள் கண்முன் விரிந்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 9

மார்ச் 1841 இறுதியில், பிரமென் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எங்கெல்ஸ் பார்மென் திரும்பினார். தந்தை எங்கெல்ஸிடம் ஆர்வத்துடன் கேட்டார். எப்படி இருந்தது பிரமென்? வர்த்தகம் இப்போது புரிகிறதா? நிறைய அனுபவங்கள் கிடைத்தா? ஆம் கிடைத்தது, என் சிந்தனையோட்டத்தை மாற்றும்படியான அனுபவங்கள் பிரமெனில் கிடைத்தது, நன்றி என்றார் எங்கெல்ஸ். தந்தை பிரெட்ரிக்குக்கு நம்பிக்கை திரும்பியது. எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தொழில்நுணுக்கங்களை எங்கெல்ஸ் கற்றுக்கொண்டுவிட்டான். சம்பாதிக்கும் ஆர்வம் இப்போது அவனுக்கு வந்திருக்கும். என்னைவிடத் திறமையுடன்  அவனால் ஆலைகளை நிர்வகிக்கமுடியும்.

எங்கெல்ஸ் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். பிரமென் வாழ்க்கை அவர் பார்வையை மிகவும் விசாலப்படுத்தியிருந்தது. பிரமெனில் வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள், பழகக் கிடைத்த நண்பர்கள், முட்டி மோதிய சிந்தனைகள் அனைத்தும் எங்கெல்ஸின் பாதையை முற்றிலும் வேறான ஒரு திசையில் நகர்த்தியிருந்தன. ஹெகலைத் தொடர்ந்து தன் வாசிப்பை மேலும் ஆழமாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எங்கெல்ஸ்.

பிரமெனோடு ஒப்பிடும்போது, பார்மென் ஒரு எலிப்பொந்தாகக் காட்சியளித்தது. தொழிலை விரிவுபடுத்தவும் லாபத்தைப் பெருக்கவும் போராடிக்கொண்டிருந்த தந்தை ஒருபுறம். சலிப்பேற்படுத்தும் பழைய நண்பர்கள் மறுபுறம்.  தன்னைக் காண வந்த நண்பர்கள் அனைவரும் பழங்கால சிந்தனையோட்டத்துடன் இருந்ததைக் கண்டு எங்கெல்ஸ் வருத்தமடைந்தார். பிரமெனில் இருந்தபடி எங்கெல்ஸ் எழுதிய கடிதங்களை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிந்தது. அவர்கள் மதத்தின் பிடியிலும், மூடநம்பிக்கைகளின் பிடியிலும் சிக்கியிருந்தனர். போதிக்கப்பட்ட பாடங்களைத் தாண்டி அவர்களால் வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லை.  அவர்களுடைய விளையாட்டுத்தனமான, நோக்கமற்ற வாழ்க்கை முறை எங்கெல்ஸை திணறவைத்தது.

இங்கே இவர்களுடன் இப்படித்தான் இருக்கமுடியும் என்னும் யதார்த்தமும் புரிந்தது. ஆலைக்குள் ஒளிந்துகொண்டு போலி வாழ்க்கை வாழ்வதுதான் இனி எனக்குள்ள ஒரே சாத்தியமா? முன்போல் இனி தேடல்கள் சாத்தியமில்லையா? கடவுள் குறித்தும் மனித சுதந்தரம் குறித்தும் ஹெகலின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் குறித்தும் இனி வாசிக்க முடியாதா? மேற்கொண்டு படிப்பதற்கு தந்தையிடன் அனுமதி கேட்பது ஒத்துவராது என்பதும் புரிந்தது. வாசிக்கவும் ஆய்வு செய்யவும் நேரம் வேண்டும். தொழிற்சாலை நிர்வாகப் பணியையும் மறுக்கவேண்டும். என்ன செய்யலாம்?

ஒரு யோசனை பிறந்தது. ராணுவத்தில் இணைந்தால் என்ன? தன்னார்வலராக ராணுவத்தில் இணைவது பல வழிகளில் நல்லது. முதல் அனுகூலம், பெர்லினுக்குப் போகும் வாய்ப்பு. வாசிப்புக்குப் புகழ்பெற்ற பெர்லின் பல்கலைக்கழகம் அருகில் இருப்பது பல வழிகளில் பலனளிக்கக்கூடியது. ராணுவப் பணியில் வாசிக்கும் நேரம் கிடைக்கும்.  தந்தையால் மறுக்கவும்முடியாது. கட்டாய ராணுவப் பணிச் சட்டம் அமலில் இருந்த காலகட்டம் அது. ஆனால், செல்வந்தர்கள் பொதுவாக தங்கள் மகன்களை அனுப்பமாட்டார்கள். அதற்கு ஈடாகப் பணம் செலுத்திவிடுவார்கள். எதிர்பார்த்தபடியே, எங்கெல்ஸின் கோரிக்கையை தந்தையால் மறுக்கமுடியவில்லை. அனுமதி அளித்துவிட்டார். ராணுவப் பணி முடிந்துவரும்வரை காத்திருக்க முடிவு செய்தார்.

எங்கெல்ஸ் முதலில் சுவிட்ஸர்லாந்து சென்றார். பிறகு, வடக்கு இத்தாலி. ஆல்ப்ஸ் மலை அவரைக் கிறங்கடித்தது. அதன் அழகில் மெய்மறந்து நின்றார். இந்தப் பயணம் நெடுகிலும், இயற்கையின் அழகை அவர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தார். செப்டம்பெர் 1841ல் பெர்லின் வந்து சேர்ந்தார்.  தன்னார்வலராகத் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டார். பீரங்கிப்படைப் பிரிவு ஒன்றில் அவரை இணைத்துக்கொண்டார்கள். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அருகில் (Kupfergraben) இடமும் கிடைத்தது.

ராணுவத் தளவாடங்கள் குறித்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ராணுவ வீரர்களின் செயல்பாடுகள், பண்புகள் ஆகியவற்றை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம், பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் எடுக்கும் பாடங்களில் கலந்துகொண்டார். வெளியில் இருந்து கல்வி கற்கும் மாணவனாகத் தன் பெயரைத் தத்துவத் துறையில் அவர் பதிவு செய்திருந்தார். மதத்தின் வரலாறு குறித்த பேராசிரியர்களின் உரைகளையும்  கவனத்துடன் கேட்டுக்கொண்டார். மதம், வரலாறு, தத்துவம். எங்கெல்ஸின் சிந்தையை ஆக்கிரமித்திருந்த மூன்று முக்கியத் துறைகள் இவை.

ஹெகலின் தத்துவம் பிரஷ்யாவின் தலைநகரமான பெர்லினைச் சுழற்றியடித்துக்கொண்டிருந்ததை எங்கெல்ஸால் உணர முடிந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள் என்று பலரும் ஹெகலின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தனர். ஹெகலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அவர்கள் வாதாடினர். சிலர் ஹெகலின் இயக்கவியல்  தன்மையை எடுத்துக்கொண்டனர். சிலர் அவருடைய இறை சிந்தனையைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டனர்.

இளம் ஹெகலியர் சந்திப்பு - ஓவியம்

வலதுசாரி சிந்தனையோட்டம் கொண்ட ஹெகலியர்கள் (Right Hegelians), ஹெகலின் தத்துவத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்து, புதிய விளக்கங்கள் அளித்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவம் ஒன்றே மனிதகுலத்தை உய்விக்கும் மார்க்கம் என்று அந்தக் குழு பிரசாரம் செய்துகொண்டிருந்தது. தற்போதைய அரசியல் நிலவரத்தை அவர்கள் ஆதரித்தனர். ஏற்றத்தாழ்வும் அடிமை முறையும் ஒரு சமூகத்தில் நீடிப்பது தவிர்க்கவியலாதது என்று அறிவித்தார்கள். ஹெகலின் இயக்கவியல் வாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது இவர்கள் கருத்து. அதிகபட்ச சுதந்தரம்  இப்போதே அனைவருக்கும் கிடைத்துவிட்டது என்றும் இதைவிட மேலான ஒரு சமூகம் சாத்தியமில்லை என்றும் இவர்கள் திட்டவட்டமாக முடிவு செய்தார்கள். பிரஷ்யாவில் நல்ல பல்கலைக்கழகங்களும், சிறப்பான ஆட்சி நிர்வாகமும், வர்த்தகமும் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இவர்களுக்கு நேர் எதிராக, இடதுசாரி சிந்தனையோட்டம் கொண்ட ஒரு குழு, ஹெகலின் தத்துவத்தைத் தங்களுக்குச் சாதகமானதாக மாற்றிக்கொண்டிருந்தது. இவர்கள் இளம் ஹெகலியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய விவாதங்கள் புரட்சிகரமாக இருந்தன. வலதுசாரி தத்துவத்தை இவர்கள் எதிர்கொண்டு தாக்கினர். தற்போதைய அரசியல் சூழல் மனிதர்களுக்குப் போதுமான சுதந்தரத்தை அளிக்கவில்லை என்று இவர்கள் வாதாடினர். மதத்தின்  ஆக்கிரமிப்பில் அரசியலும் ஆட்சி நிர்வாகமும் சிக்கிக்கிடந்ததை இவர்கள் அம்பலப்படுத்தினர்.

Life of Jesus நூலின் மூலம் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பிய டேவிட் ஸ்ட்ராஸ் இளம் ஹெகலியர்களின் குழுவில் இருந்தார். மத அதிகாரத்தை இவர் கேள்விக்கு உட்படுத்தினார். புனித நூல்களில் புனிதம் எதுவும் இல்லை என்றார். ஹெகலின் கடவுள் கோட்பாட்டை நிராகரித்தார். குழுவில் அங்கம் வகித்த மற்றொரு முக்கிய சிந்தனையாளர், புரூனோ பாயர் (Bruno Bauer). இயேசுநாதரிடம் தெய்வீக சக்திகள் எதுவும் இல்லை, அவர் சாமானியரே என்று டேவிட் ஸ்ட்ராஸ் அறிவித்தார். புரூனோ பாயர் ஒருபடி மேலே சென்று, இயேசு என்பதே ஒரு கற்பனைதான் என்றார். ரோமானிய சரித்திரக் குறிப்புகளிலும் ஆவணங்களிலும் இயேசு என்பவர் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லை என்று அறிவித்தார். எட்கர் பாயர், ஆர்னால்ட் ரூஜ், கார்ல் கொபேன், லுத்விக் புல், மாக்ஸ் ஸ்டிர்னர் போன்றோரும் இளம் ஹெகலியவாதிகள் குழுவில் இடம்பெற்று பங்களிப்பு செய்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அம்சம், கடவுள் மறுப்பு. ஹெகலின் தர்க்கவியலையும், இயக்கவியலையும் ஏற்றுக்கொண்ட அதே சமயம், கடவுளின் இருப்பை இவர்கள் மறுதலித்தனர். அதுவைரை ஜெர்மானியர்கள் போற்றி கொண்டாடி வந்த புனித பிம்பங்களை இவர்கள் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தி, புத்திசாலித்தனமான வாதங்களால் தகர்த்தெறிந்தனர். அதே சமயம், அவர்களுக்கு ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தையும் வழங்கினார்கள். புரட்சிகர மாற்றம் என்னும் தத்துவம். எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டது என்னும் ஹெகலின் வாதத்தை இளம் ஹெகலியர்கள் தங்கள் ஆதாரமாகக் கொண்டனர். தற்போதுள்ள அரசியல் சூழலும்கூட மாற்றத்துக்கு உள்ளாகும் என்று இவர்கள் நம்பினர். அதற்குப் புரட்சிகர தத்துவம் உதவவேண்டும் என்று விரும்பினர். மதத்தின் பிடியில் இருந்து மக்களை முதலில் விடுவிப்பதன் மூலம், அரசியல் விடுதலைக்கு அவர்களை இட்டுச் செல்லமுடியும் என்பது இவர்கள் நம்பிக்கை.

இளம் ஹெகலியர்கள் இயக்கம், ஜெர்மன் வரலாற்றில் ஒரு புதிய சிந்தனையோட்டத்தை ஒரு பகுதி மக்களிடையே பரவச் செய்தது. மதப்பீடங்களை மட்டுமல்ல, அரசியல் அதிகாரப் பீடத்தையும்கூட கேள்விக்கு உட்படுத்தலாம் என்னும் துணிச்சலை இந்த இயக்கத்தின் மூலம் அவர்கள் பெற்றனர். அதே சமயம், இந்த இயக்கம் சில குறைபாடுகளையும் கொண்டிருந்தது. மக்கள் துணிச்சலாகவும் சுதந்தரமாகவும் பொங்கி எழுந்து போராடவேண்டும் என்று இயக்கம் எதிர்பார்த்தது. மக்களின் வாழ்நிலை குறித்தும் அவர்களுடைய விருப்பு, வெறுப்புகள் குறித்தும், அவர்களுடைய சிந்தனைகள் குறித்தும் இயக்கம் அதிகம் தெரிந்துகொள்ளவில்லை. எனவே, யதார்த்த வாழ்வில் இருந்து இளம் ஹெகலியர்கள் விலகியிருந்தனர். கனவுலகத்தைக் கட்டமைப்பதில் அவர்கள் செலுத்திய அக்கறையும் ஆர்வமும், நடைமுறையைப் புரிந்துகொள்வதில் செலுத்தப்படவில்லை.

ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி பல இளைஞர்களை இளம் ஹெகலியர்களின் இயக்கம் ஈர்த்துக்கொண்டிருந்தது. எங்கெல்ஸும் கவரப்பட்டார். பெர்லினில் செயல்பட்டு வந்த இயக்கத்தின் ஒரு பிரிவில் இணைந்துகொண்டார். வாதப் போர்களிலும், தர்க்க யுத்தங்களிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில், பிரெட்ரிக் ஷெல்லிங் (Friedrich Schelling) என்பவரின் வகுப்புகளில் எங்கெல்ஸ்  ஆர்வத்துடன் கலந்துகொண்டார். ஷெல்லிங் புகழ்பெற்ற தத்துவ ஆசிரியர். ஹெகலுக்கு முன்கூட்டிய அறிமுகமான நண்பர். தான் எடுக்கும் பாடங்களில், ஷெல்லிங் ஹெகலின் தத்துவத்தை மறுத்தும் எதிர்த்தும் வந்தார். ஹெகலின் காலம் முடிந்துவிட்டது என்று முழங்கினார். எதிர்ப்பதும், புரட்சி செய்வதும், அதிகாரத்துக்கு மறுப்பதும் ஒழுங்கீனத்தின் குணநலன்கள் என்று மாணவர்களுக்குப் போதித்தார்.

அறிவியலுக்கும் தர்க்கவியலுக்கும் எதிராக ஷெல்லிங் சிந்திப்பதை, உபதேசிப்பதை எங்கெல்ஸ் கண்டுகொண்டார். ஷெல்லிங்கின் தத்துவம் மாணவர்களிடையே பரவுவது அவர்களுடைய சிந்தனைகளை மழுங்கடிக்கும் என்று கவலைகொண்டார்.  ஷெல்லிங்கின் பிடியில் இருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டும் என்று துடித்தார். ‘பிரஷ்யாவின் மன்னருக்குப் பணியாற்றும் சிந்தனைகள் அவை’  என்று எங்கெல்ஸ் விமரிசித்தார். தக்க முறையில் ஷெல்லிங்கின் வாதத்தை முறியடிக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைத்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 10

ஹெகலுக்கு எதிராக பிரெட்ரிக் ஷெல்லிங் முன்வைத்த குற்றச்சாட்டுகளை எங்கெல்ஸ் மறுத்தார். 1842 தொடக்கத்தில் பிரெட்ரிக் ஷெல்லிங்கை எதிர்த்து தொடர்ச்சியாக சில கட்டுரைகள் எழுதினார் எங்கெல்ஸ். ஷெல்லிங் உள்ளிட்டவர்கள் ஹெகலை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதையும் எங்கெல்ஸ் தன் கட்டுரையில் தெளிவுபடுத்தினார். அறிவால் உணரப்படும் விஷயங்கள் அனைத்தும் நிஜமானவை. நிஜமான இருப்பைக் கொண்டிருப்பவை அனைத்தும் அறிவுப்பூர்வமானவை. ஹெகலின் இந்த வாதத்தை நான் ஏற்கிறேன் என்றார் எங்கெல்ஸ். ‘இந்த உலகை அறிவு கொண்டு உணரமுடியும், புரிந்துகொள்ள முடியும். தத்துவம் அதற்கு உதவி செய்யும். இதுவரை பூத்த அத்தனை தத்துவங்களும் உலகை அறிவுபூர்வமாக விளங்கிக்கொள்ள முயற்சி செய்துள்ளன.’

ஹெகல் மீதும் அவரது இயக்கவியல் தத்துவத்தின் மீதும் எங்கெல்ஸ் கொண்டிருந்த உறுதியான ஈடுபாட்டை வெளிப்படுத்துபவையாக இந்தக் கட்டுரைகள் அமைந்தன. அதே சமயம், ஹெகலிடம் இருந்த முரண்பாடுகளையும் எங்கெல்ஸ் கவனிக்கத் தவறவில்லை. ஹெகல் கையாண்ட வழிமுறைகளும் அவருடைய வாதங்களும் சரியானவை, ஆனால் அவர் சென்றடையும் முடிவு சரியல்ல என்றார் எங்கெல்ஸ். மற்றொரு முக்கியமான விமரிசனத்தையும் எங்கெல்ஸ் முன்வைத்தார். ஹெகல், அவர் காலத்திய கருத்துகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தால். அதிலிருந்து விடுபட்டு சிந்தித்திருந்தால், வேறு முடிவுகளுக்கு அவர் வந்திருப்பார். ஹெகலின் தத்துவத்தின் தென்படும் அத்தனை குறைபாடுகளையும், அத்தனை போதாமைகளையும் நாம் இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். மதம் குறித்த அவர் பார்வை பழைமையானதாக இருப்பதற்குக் காரணமும் இதுவே.

ஹெகல் மட்டுமின்றி, லுத்விக் ஃபாயர்பாக்கின் சிந்தனைகளும் ஹெகலைக் கவர்ந்திருந்தன. இருவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று எங்கெல்ஸ் நினைத்தார். ஃபாயர்பாக்கின், The Essence of Christianity எங்கெல்ஸைக் கவர்ந்திருந்தது. பொருள்முதல்வாதம் குறித்த தொடக்கால சிந்தனைகளை எங்கெல்ஸ் ஃபாயர்பாக்கிடம் இருந்தே பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். கிறிஸ்தவத்தை ஃபாயர்பாக் பொருள்முதல்வாதம் கொண்டு விமரிசித்திருந்தார்.

ஷெல்லிங்குக்கு எதிராக எங்கெல்ஸ் தொடுத்த கருத்து யுத்தம் இளம் ஹெகலியவாதிகளிடையே அவரை நன்கு அறியச்செய்தது. நாத்திகத்தை முன்னிறுத்தும் ஒரு தீவிர ஹெகலியவாதியாக அவர் அப்போது பிரபலமடைந்திருந்தார். நாத்திகமும், மாற்றத்தின் மீதான நம்பிக்கையும் எங்கெல்ஸுக்குப் புது விதமான உற்சாகத்தை அளித்திருந்தது. வழக்கம் போல், மாற்றுப்பெயரில் கட்டுரை ஒன்றை எழுதினார். அந்தக் கட்டுரையை (Schelling and Revelation) இப்படி முடித்துக்கொண்டார் எங்கெல்ஸ். ‘ரத்தம் சிந்தி, போராடுவோம். அச்சமில்லாமல் எதிரியின் கண்களை உற்று நோக்குவோம். இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் நடைபோடுவோம். ஒரு மாபெரும் யுத்தம் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. வெற்றி நமக்குத்தான் கிடைக்கவேண்டும்.’

எங்கெல்ஸ் விடுத்த போர்ப் பிரகடனம், தத்துவார்த்தமானது. இந்த உலகை மாற்றியமைக்கமுடியும், மாற்றம் தவிர்க்கமுடியாதது என்னும் வாதத்தை எதிர்ப்பவர்கள், பழைமைவாதிகள். இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள். தற்போது நிலவிவரும் சூழலில் இருந்து ஆதாயம் பெறுபவர்கள். நிலவும் சூழலை மாற்றவேண்டுமானால், அந்தச் சூழலை ஆதரிப்பவர்களை எதிர்க்கவேண்டும். சமூகம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமானால், முன்னேற்றத்துக்குத் தடை விதிக்கும் சமூக விரோதிகள் எதிர்க்கப்படவேண்டும். எனவேதான், ஒரு நிலையை மறுத்து இன்னொரு நிலை உருவாகவேண்டும் என்று சொன்னார் ஹெகல். அந்த மாற்றத்தைக் கொண்டு வர ரத்தம் சிந்தி போராடவேண்டும் என்றார் எங்கெல்ஸ்.

வரலாறை முன்னெடுத்துச்செல்பவை இந்த மாற்றங்களே. ஆண்டான் அடிமைச் சமூகம் பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலை மாறவே மாறாது என்றுதான் அனைவரும் திடமாக நம்பியிருந்தனர். நம் காலத்தின் நிதர்சனம் இதுதான் போலும் என்றுதான் அடிமைகளும் நம்பிக்கொண்டிருந்தனர். இறைவனைத் தொழுதுகொண்டு காலத்தைக் கடத்தி வந்தனர். மாறவே மாறாது என்று நினைத்திருந்த சூழல் மாறியது. ஆண்டான் அடிமை சமூகம் மறைந்து, நிலப்பிரபுத்துவச் சமூகம் தோற்றம் பெற்றது.

அதே சமயம், முன்போலவே, இப்போதும் இரு பெரும் பிளவுகள் இருந்தன. நிலப்பிரபுக்களிடம் நிலமும், உற்பத்திக் கருவிகளும் குவிந்திருந்தன. அவர்களிடம் பண பலமும் அதிகார பலம் இருந்தது. இவர்களை நாடி, இவர்களுக்காக உழைத்து ஒரு சமூகம் வறுமையில் சிக்குண்டு வாழ்ந்து வந்தது. இதுதான் தலைவிதி, இந்த நிலை மாறாது என்றுதான் அவர்களும் நம்பி வந்தனர். மாற்றம் மீண்டும் நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மறைந்து, முதலாளித்துவம் தோன்றியது. இந்த நிலையும் மாறும் என்கிறார் ஹெகல். மாறாது என்கின்றனர் பிரெட்ரிக் ஷெல்லிங் போன்றவர்கள்.

எனவே, எங்கெல்ஸ் ஷெல்லிங்கை எதிர்த்தார். கோபாவேசம் கொண்டு எங்கெல்ஸ் எழுதிய இந்தக் கட்டுரை, இளம் ஹெகலியர்கள் மத்தியில் மட்டுமின்றி, வாசகர்களிடையேயும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பத்திரிகை ஆசிரியர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு எங்கெல்ஸுக்குக் கடிதமும் எழுதினார். ‘அனுப்புனர்: ஆர்னால்ட் ரூஜ். பெறுநர்: உயர்திரு. தத்துவத்துறை முனைவர். உங்கள் கட்டுரையை நீங்கள் ஏன் எங்கள் பத்திரிகைக்கு அளிக்கவில்லை? மிகப் பிரமாதமான, ஆழமான அலசல்கள் கொண்ட கட்டுரை அது.’ எங்கெல்ஸ் பதில் எழுதினார். ‘ஐயா, நான் ஒரு பிரஷ்ய வணிகன். ராயல் பிரஷ்யன் ஆர்மியில் பணியாற்றுபவன். நீங்கள் நினைப்பது போல், நான் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவன் அல்லன்.’ அந்தப் பத்திரிகையாசிரியர் திகைத்துவிட்டார். ராணுவத்திலும் வணிகத்திலும் ஈடுபடும் ஒருவனிடம் இருந்து இப்படிப்பட்ட சிந்தனை வீச்சா?

பிறகு, ரூஜுடன் நெருக்கமான பிறகு, தன் நிலைமையை விளக்கினார் எங்கெல்ஸ். ஏன் புனைப்பெயரில் எழுதுகிறீர்கள் என்னும் கேள்விக்கும் விடையளித்தார். ஐயா, எனக்கு விருப்பமிருந்தாலும், முறைப்படி தத்துவத்துறையில் பயின்று டாக்டர் பட்டம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. நான் அறிந்தது அனைத்துமே, நானே முட்டி, மோதி கற்றுக்கொண்டதுதான். ஒரு குறிப்பிட்ட திசையில் சிந்திப்பதற்குத் தேவைப்படும் விஷய ஞானத்தை மட்டுமே இதுவரை நான் பெற்றுள்ளேன். கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை முறைப்படி, முழுமையாகக் கற்றுத் தேர வேண்டும். அவ்வாறு செய்தால்தான் என்னால், என் சொந்தப் பெயரில் கட்டுரைகள் எழுதமுடியும். அதுவரை புனைப்பெயரில்தான் ஒளிந்துகொண்டு எழுதவேண்டியிருக்கும். எனக்கு என் மேல் நம்பிக்கை ஏற்படும்போது, நான் என் பெயரில் எழுதுவேன்.

ஜூலை 26, 1842 அன்று எழுதிய எங்கெல்ஸ், ரூஜுக்கு எழுதிய கடிதம் இது. இதன்படி, எங்கெல்ஸின் சுயமதிப்பீடு எளிமையானதாகவும் அடக்கமானதாகவும் இருந்ததை அறியமுடிகிறது. ஆனால், ரூஜ் போன்றவர்கள் எங்கெல்ஸை அவ்வாறு அணுகவில்லை. எங்கெல்ஸின் கட்டுரைகளில் இருந்து பல பாகங்களை பல கட்டுரையாசிரியர்கள் மேற்கோள் காட்டினார்கள். ருஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள். போலிஷ் மக்களுக்கும் எங்கெல்ஸின் கட்டுரைகள் கொண்டு செல்லப்பட்டன. ‘இந்தக் கட்டுரையாசிரியர் நம் காலத்தின் மாபெரும் சிந்தனையாளர், தத்துவ ஆசிரியர்’ என்று பலர் வெளிப்படையாகவே பாராட்டி எழுதினர்.

கிட்டத்தட்ட அதே சமயம், இளம் ஹெகலியர்கள் குழுவில் இருந்து எங்கெல்ஸ் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தார். முன்னர் தென்பட்ட துடிதுடிப்பும் அறச்சீற்றமும் இப்போது அவர்களிடம் இல்லை என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருந்தார். வரட்டு தத்துவ விவாதங்களில் மட்டுமே அவர்கள் நேரம் போக்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. உச்சகட்டமாக, அவர்கள் ஹெகலிடம் இருந்து விலகி, ஷெல்லிங்கைத் தாங்கிப்பிடிக்க ஆரம்பித்திருந்தனர். இது எங்கெல்ஸைத் திகைப்படைய வைத்தது. 1842ம் ஆண்டு எங்கெல்ஸ், இளம் ஹெகலியர்களுடனான தன் உறவை முற்றிலுமாக முறித்துக்கொண்டார்.

இளம் ஹெகலியர்களைப் போலவே செயல்பட்டு வந்த மற்றொ ரு குழுவிடம் இணைந்துகொண்டார் எங்கெல்ஸ். அந்தக் குழு புரூனோ பாயர், எட்கர் பாயர் சகோதரர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. பெர்லின் நண்பர்கள் சிலர் அதில் இடம் பெற்றிருந்தனர். தன்னைப் போலவே பாயர் சகோதரர்களும் இளம் ஹெகலியர்களை எதிர்த்தால், எங்கெல்ஸ் நிம்மதியடைந்தார்.

ஆனால், இங்கும் நீண்டகாலம் நிலைக்கமுடியவில்லை எங்கெல்ஸால். பழக ஆரம்பித்த உடனேயே சில முரண்பாடுகள் சட்டென்று முகத்தில் அடித்தாற்போல் தெளிவாயின. பாயர்களிடம் தத்துவார்த்த தெளிவு இருந்தது உண்மை. மதம் தொடர்பான பழைமைவாத கண்ணோட்டம் அவர்களிடம் இல்லை என்பதும் உண்மை. ஆனால், அவர்கள் நாத்திகத்துக்கு மட்டுமே முக்கியம் கொடுத்தனர். கடவுள் மறுப்பு ஒன்றே பிரதானமானது என்பதாக அவர்கள் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.

எங்கெல்ஸ் விரைவில் அதிருப்தியுற்றார். அவர் நாடியது ஒரு வலிமையான வழிகாட்டுதலை. செழுமையான, தெளிவான சமூக, அரசியல் தத்துவத்தை. ஜெர்மனியில் தற்போது நிலவிவரும் சூழலை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய அந்த தத்துவம் துணை போகவேண்டும் என்று விரும்பினார். மக்களின் அரசியல் உணர்வுகள் தூண்டப்படவேண்டும். ஹெகல் கோரிய மாற்றத்தின் தேவையை மக்கள் உணரவேண்டும். உணரச்செய்யவேண்டியது நம் கடமை அல்லவா? ஆனால்,நேர் மாறாக, பாயர் சகோதரர்களின் குழு, சிறிது சிறிதாக ஹெகலிடம் இருந்து விலகி, கருத்துமுதல்வாதம் நோக்கி நகர ஆரம்பித்தது. இனியும் பயனில்லை என்னும் நிலையில், எங்கெல்ஸ் அவர்களிடம் இருந்தும் விலகினார்.

1842ம் ஆண்டு, ரைன் ஜர்னல் (Rheinische Zeitung) என்னும் ஜெர்மானியப் பத்திரிகையின் தொடர்பு கிடைத்தது. எங்கெல்ஸ் அந்தப் பத்திரிகையில் வெளியான தலையங்கங்களையும், செய்தி கட்டுரைகளையும் முன்னரே வாசித்திருந்தார். அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி, ரைன் ஜர்னல் தொடங்கப்பட்டிருந்தது. துணிச்சலாகவும் தெளிவாகவும் ஒலித்தது அதன் குரல். பிரஷ்யாவில் நிலவிவந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தது ரைன் ஜர்னல். எதேச்சதிகாரத்துக்கு மாற்றாக, ஜனநாயகத்தை அது முன்வைத்தது. அதாவது, சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சி முறை. ஒடுக்குமுறை களையப்பட்ட ஜனநாயக முறை.

அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், கார்ல் மார்க்ஸ்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 11

இள வயது மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் பற்றி முதல் முதலாக எழுத்தில் செய்யப்பட்ட பதிவு இது. பதிவு செய்தவர் டிரியர் நகராட்சி அதிகாரி.

‘டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண் குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்கறிஞராகத் தொழில் செய்கின்ற, டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்சுக்கும் அவருடைய மனைவி ஹென்ரியேட்டா பிரெஸ்பார்குக்கும் மே மாதம் 5ம் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.’

தந்தை ஹென்ரிஹ் மார்க்ஸ் சிறந்த கல்வியறிவும், பிறருக்கு உதவும் குணம் கொண்டவராகவும் அப்பகுதியில் அறியப்பட்டிருந்தார். குற்றமற்றவர்களை தண்டணையில் இருந்து மீட்பதில் அவர் திறமையானவர். யூத மத குருக்களின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன் நம்பிக்கைகளை கைவிட்டு, லூதரன் சமயத்தைத் தழுவிக்கொண்டார்.

கல்வி கற்பதற்கும் வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் எங்கெல்ஸுக்கு வீட்டில் ஆதரவு இருந்ததில்லை. ஆனால், மார்க்ஸுக்கு அந்த நிலை இல்லை. மதம் தொடர்பான நூல்களோடு சேர்த்து, வால்டேர், ரூஸோ, இம்மானுவேல் காண்ட், ஸ்பினோசா ஆகியோரின் தத்துவ நூல்களும் வீட்டில் சேகரிக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய பண்பாட்டின் மீது தீராக் காதல் கொண்டிருந்த தந்தை தன் மகனிடம் அந்த ஆர்வத்தை இளவயது முதலே ஏற்படுத்த ஆரம்பித்தார்.

ஆனால், மார்க்ஸ் பயின்றி டிரியர் பள்ளி எங்கெல்ஸ் பயின்ற பள்ளியைப் போன்றே இருந்தது. புனித நூல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. மதமே பிரதானம் என்றும் மதம் விதிக்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகளுக்குக் கீழ்படிந்து நடப்பதே ஒரு மனிதனின் பிரதான கடமை என்றும் அறிவுறுத்தப்பட்டது. பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்கள் பலர் வெவ்வேறு திறமை பெற்றவர்களாக இருந்தும் அவர்களால் பள்ளியின் கட்டுப்பாட்டை மீறமுடியவில்லை. பாடப் புத்தகங்களைத் தாண்டி அவர்களால் செல்லமுடியவில்லை. மாணவர்களையும் அழைத்துச் செல்லமுடியவில்லை.

மதம், மதம் தொடர்பான வரலாறு மட்டுமல்ல, கணிதம் கூட வறட்டுத்தனத்துடன் போதிக்கப்பட்டது. புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருந்த சூத்திரங்களை மனனம் செய்வதைத் தாண்டி மேலதிகம் சிந்திக்க இடமில்லை. எங்கெல்ஸைப் போலவே மார்க்ஸும் இந்த வரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியும்கூட மாணவனின் ஆளுமையை வளர்ப்பதைக் காட்டிலும் அதை ஒடுக்கவே செய்தது. சுயமாகச் சிந்திக்கத் தெரியாத ஜடப்பொருள்களை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் பணியை மட்டுமே கல்வி நிலையங்கள் மேற்கொண்டன.

மார்க்ஸின் வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 27 வயது கொண்டவர்களாக இருந்தனர். நிச்சயம் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் வயது இதுவல்ல என்பதை வைத்தே கல்விக்கு அந்தச் சமூகம் கொடுத்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். இத்தனை வயது கடந்த பிறகும்கூட, அந்த மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தாமல், சுறுசுறுப்பு அற்று, ஒரே வகுப்பில் மேலும் பல ஆண்டுகள் அமர்ந்து படித்தனர். இவர்களில் பலர், குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள், படித்து முடித்து இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள விரும்பினார்கள்.

கார்ல் மார்க்ஸ் எந்த வகையிலும் மாணவர்கள் மத்தியில் தனித்து நிற்கவில்லை. அனைத்துப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களே பெற்றார். குறிப்பாக வரலாற்றுப் பாடத்தில், மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களே அவருக்குக் கிடைத்தன. மார்க்ஸின் வினாத்தாள்கள் ஆசிரியர்களை நகைக்க வைத்தன. என்ன எழுதவேண்டுமோ அதையன்றி, கூடுதலாக பல விஷயங்கள் அந்தத் தாள்களில் இடம்பெற்றிருந்தன. தேவையற்ற வருணணைனகள். நீட்டி, முழக்கி பல விளக்கங்கள். குழப்பமான எழுத்து நடை. கடினமான வார்த்தைகள் கொண்ட பத்திகள். ஆசிரியர்களின் பார்வையில், கார்ல் மார்க்ஸ், ‘மிகையான அலங்கார நடையில்’ எழுதினார். ‘அதிகமான பளுவை அவசியமில்லாமல் சுமந்தார்’. ‘சலிப்பூட்டும் சொற்குவியல்’ அவர் எழுத்தில் காணப்பட்டன. கையெழுத்து ‘கிறுக்கலாக’ இருந்தது.

பள்ளிப் பாடங்களுக்கும் புறவுலக யதார்த்தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லை என்பதை மார்க்ஸ் விரைவில் புரிந்துகொண்டார். எங்கெல்ஸைப் போலவே. கற்க வேண்டிய விஷயங்கள், பள்ளிகளில் கிடைக்காது. பள்ளிகளில் கிடைக்கும் பாடங்கள், உலகைப் புரிந்துகொள்ள உதவாது. எங்கெல்ஸின் தந்தை, தொழில்முனையில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருந்தார். ஆனால் மார்க்ஸின் தந்தை, ஹென்ரிஹ் மார்க்ஸ், தெளிவான அரசியல் கருத்துகளும் ஆழ்ந்த தத்துவப் புரிதலும் கொண்டவராக இருந்தது, மார்க்ஸுக்கு வசதியாக இருந்தது.

பிரஷ்ய அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் கூட்டத்தில், தந்தை மார்க்ஸும் அங்கம் வகித்தார். இந்த அறிவுஜீவிக் குழு, மிதவாதச் சிந்தனை கொண்டிருந்தது என்றாலும், பல்வேறு அடக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. 1834ம் ஆண்டு இந்த மிதவாதிகள் பல இடங்களில் கூட்டம் நடத்தினார்கள். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். ஹென்ரிஹ் மார்க்ஸ், ‘ஆபத்தான’ பல புரட்சிகரப் பாடல்களை பாடினார். பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தை இசை வழியாக அவர்கள் மக்களிடம் கொண்டு போனார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னாள்களில், மகிழ்ச்சி என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது, கார்ல் மார்க்ஸ் அளித்த பதில் இது. மகிழ்ச்சி என்பது போராட்டமே. இந்த மகிழ்ச்சியின் ருசியை மார்க்ஸ் தன் தந்தையிடம் இருந்தே பெற்றுக்கொண்டார். தந்தையின் அரசியல் போக்கும் சிந்தனைகளும் மார்க்ஸைப் பாதித்தன.  அவர் தன் தந்தையை உளப்பூர்வமாக நேசித்தார். வாழ்நாள் முழுவதும் தன் தந்தையின் புகைப்படத்தை தன்னுடனே வைத்திருந்தார் மார்க்ஸ்.

இந்த வேறுபாடுகளைத் தாண்டி, எங்கெல்ஸின் தந்தைக்கும் மார்க்ஸின் தந்தைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எங்கெல்ஸைப் பற்றி அவர் தந்தை எப்படிப்பட்ட கனவுகளை வளர்த்து வந்தாரோ அப்படிப்பட்ட கனவுகளையே மார்க்ஸ் குறித்து ஹென்ரிஹ் மார்க்ஸும் வளர்த்திருந்தார். தன் மகன் படித்து முடித்து, தன் அடிச்சுவட்டைப் பின்பற்றி தகுதியான ஓரிடத்தை அடைவான் என்று அவர் கனவு கண்டார். மேன்மையான வழக்கறிஞர் தொழிலை தன்னைப் போலவே தன் மகனும் நேசிப்பான் என்று அவர் எதிர்பார்த்தார்.

பதினேழு வயதில், கார்ல் மார்க்ஸ் தான் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரையின் வாயிலாகத் தன் தந்தையின் கனவைச் சிதறடித்தார். கட்டுரையின் தலைப்பு இது. வேலையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள். ‘நாம் செய்ய வேண்டியவை என்று நாம் நம்புகின்ற நிலைமையை நாம் எப்பொழுதுமே அடைய முடியாது. சமூகத்துடன் நம்முடைய உறவுகளை நாம் நிர்ணயிக்கக்கூடிய நிலைமையை அடைவதற்கு முன்னரே அவை ஏற்கெனவே நிறுவப்பட்டுவிடுகின்றன’ என்று எழுதினார் மார்க்ஸ்.

வர்த்தகம், ராணுவம், இறை ஊழியம் என்றிருந்த மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ் வேறுபட்டு நின்றார். பதவி ஆசை என்பது பேய் என்றார். வேலைகளின் போலியான பளபளப்பு பற்றியும் எதிர்கால வேலை பற்றிய கற்பனை பற்றியும் அவர் எழுதினார். ‘நம்முடைய திறமைகள் பற்றிய சுய ஏமாற்றுதல்கள்’  ஏன் ஏற்படுகின்றன என்று ஆராய்ந்தார். ஒரு பாதிரியாகவும் ராணுவ வீரனாகவும் வியாபாரியாகவும் ஏன் ஒருவன் மாற ஆசைப்படவேண்டும்? ஏன் கனவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்? அந்தக் கனவுகளின் அடித்தளம் என்ன? ‘போலிக் கருத்துகளின் அடிப்படையில் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்தால், சுய ஏமாற்றுதரே நிகழும்’ என்றார் மார்க்ஸ். மாறாக, உறுதியான கோட்பாடுகளை, வன்மையான, அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஒரு இளைஞன் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார். ‘ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச் சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராகத் திகழமுடியாது.’

ஒரு மனிதன், ‘தன்னுடைய சக மனிதர்களின் பரிபூரணத்துக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுவதன் மூலமாக மட்டுமே’ தன்னுடைய சுயபரிபூரண நிலையை அடைய முடியும் என்றார் மார்க்ஸ். ஒவ்வொரு மனிதனும் ஒரு சாதனம். நாம் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் மனிதகுலத்தின் நன்மை நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.

வரலாற்றில் பொது நலத்துக்காகப் பாடுபட்டுப் புகழ் ஈட்டிய மாபெரும் மனிதர்களின் உதாரணத்தை கார்ல் மார்க்ஸ் தன் கருத்துக்கு ஆதரவாக எடுத்துக்காட்டினார். ‘மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார் என்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.’ அற்பவாத வாழ்க்கையின் சுயநலத்தையும் பொதுநலத்தையும் மார்க்ஸ் ஒப்பிட்டார். சுயநலமான மகிழ்ச்சியையும், கோடிக்கணக்கான மக்களின் நன்மைக்காக உழைப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அருகருகே கொண்டு வந்து நிறுத்தினார்.

இந்தக் கட்டுரையின் வாயிலாக, தன்னுடைய பணியை மார்க்ஸ் பதினேழு வயதில் தேர்ந்தெடுத்துவிட்டார்.  ‘மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால், அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகிற தியாகம்.’

ஒரு பள்ளி மாணவனின் கட்டுரையில் வெளிப்பட்ட அறிவின் செழுமையும் புதுமையும் ஆசிரியர்களைக் கலவரப்படுத்தியதில் வியப்பேதுமில்லை. ‘பரம்பொருளைப் பற்றிய குறிப்புகளும்’, ‘பரம்பொருளின் அறைகூவல்கள்’ பற்றியும்கூட இந்தக் கட்டுரை விவாதிக்கிறது. அரசியல் ஆர்வம் அதிகம் இதில் கிளர்ந்தெழவில்லை. ஆனால், பிற்போக்குத்தனத்தையும், அற்பவாதத்தையும் சுயநலனையும் மார்க்ஸ் எந்த அளவுக்கு வெறுத்தார் என்பதை இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

பின்னாள்களில்தான், கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் நேரடியாகச் சந்தித்துக் கைகுலுக்கிக்கொண்டனர் என்றாலும் அவர்களுடைய சிந்தனை ஒன்றுபட்ட இடம் இது. தன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டபோது, மார்க்ஸ் எந்த முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தாரோ அதே முடிவுக்குத்தான் எங்கெல்ஸும் வந்தடைந்திருந்தார். இருவருமே பாடப்புத்தகங்களுக்கு வெளியில் இருந்து கற்க ஆரம்பித்தார்கள். மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய மதம், இலக்கியம், அரசியல், தத்துவம் ஆகிய துறைகளில் இருவரும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பிற்போக்குத்தனங்களை உதறித்தள்ளிவிட்டு, புதுமையான, புரட்சிகர வழிகளை நாட ஆரம்பித்தார்கள்.  மொத்தத்தில், இருவருமே அற்பவாதத்தை உதறித் தள்ளிவிட்டு, அறிவுசார் தேடலில் இறங்கினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 12

சாசன இயக்கம்

கார்ல் மார்க்ஸின் ஆர்வம் தத்துவத்திலும் இலக்கியத்திலும் இருந்தது. ஆனால், சட்டப் படிப்பு படிக்கவேண்டும் என்பது அவர் தந்தையின் விருப்பம்.  மார்க்ஸ் மறுப்பேதும் சொல்லவில்லை. காரணம் அவர் குறைவான மதிப்பெண்களையே பள்ளியில் பெற்றிருந்தார். அதே சமயம், பெர்லின் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் இடம் கிடைத்தது. இணைந்துகொண்டார் என்றாலும், தத்துவத்தின் மீதான ஆர்வம் மறையவில்லை. அதிகரிக்கவே செய்தது. கூடுதலாக, வரலாறும் வாசிக்க ஆரம்பித்தார்.

எங்கெல்ஸைப் போலவே கவிதைகளில் நாட்டம் அதிகரிக்க, எழுத ஆரம்பித்தார். மீண்டும் எங்கெல்ஸைப் போலவே, கடவுள் மறுப்புக்கும் கடவுள் வழிபாட்டுக்கும் இடையில் உள்ள பாதையில் மார்க்ஸ் அப்போது சிக்கியிருந்தார். இளம் ஹெகலியர்களின் தாக்கம் அவரிடம் இருந்தது. அதே சமயம், சமயம் தொடர்பாகவும் ஆன்மிகம் தொடர்பாகவும் அவர் முன்னதாக வாசித்திருந்த நூல்களின் தாக்கத்தில் இருந்தும் அவர் விடுபடவில்லை. கடவுள் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ அவரால் தீர்மானகரமாகச் சொல்லமுடியவில்லை. இந்த தடுமாற்றம் அவர் கவிதைகளில் நன்றாகவே பிரதிபலித்தது. சில இடங்களில் கடவுளின் இருப்பு குறித்தும் சில இடங்களில் கடவுளின் இருப்பைச் சந்தேகித்தும் மார்க்ஸ் எழுதினார். கவிதைகளோடு சேர்த்து கட்டுரைகளும் எழுதினார்.

1841ம் ஆண்டு, கார்ல் மார்க்ஸ் முனைவர் பட்டம் பெற்றார். அவர் எடுத்துக்கொண்ட ஆய்வின்  தலைப்பு, The Difference between the Democritean and Epicurean Philosophy of Nature. தனது ஆய்வறிக்கையை மார்க்ஸ் ஜேனா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். இம்மானுவேல் காண்ட், வால்டேர் ஆகியோரின் எழுத்துகளால் மார்க்ஸ் ஈர்க்கப்பட்டிருந்த சமயம் அது. இளம் ஹெகலியர்களின் குழுவில் இருந்த பலரிடம் மார்க்ஸுக்கு நட்பு மூண்டது. ஹெகலின் எழுத்துகள் அறிமுகமாயின. இளம் ஹெகலியர்களின் குழு ஹெகலின் படைப்புகளில் எவற்றை ஏற்கின்றன, எவற்றை நிராகரிக்கின்றன என்பதை மார்க்ஸ் கவனித்தார். ஃபாயர் பாக், ப்ரூனோ பாயர் இருவரும் இளம் ஹெகலியர்கள் மீது செலுத்தி வந்த தாக்கத்தையும் மார்க்ஸ் கண்கூடாகக் கண்டார்.

அதே சமயம், இந்த இருவரையும் மாக்ஸ் ஸ்டிர்னர் என்பவர் எதிர்த்து வந்ததையும் மார்க்ஸ் கவனித்தார். இவர்களுடைய கடவுள் மறுப்பு கோட்பாடு வரட்டுத்தனமானது என்பது ஸ்டிர்னரின் வாதம். ஃபாயர் பாக்கை முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்த மார்க்ஸ் ஸ்டிர்னரின் வாதத்தில் தொனித்த புத்திசாலித்தனத்தால், தன் முடிவை மாற்றிக்கொண்டார். வரட்டுத்தனமான கடவுள் மறுப்புக் கொள்கையால் பயன் எதுவும் ஏற்படாது என்பது தெரிந்தது. பின்னாளில், எங்கெல்ஸும் இதே முடிவுக்கு வந்து சேர்ந்ததை நாம் முன்னதாகப் பார்த்தோம்.

ஸ்டிர்னருக்கு அடுத்தபடியாக, கார்ல் மார்க்ஸ் மீது ஆதிக்கம் செலுத்திய மற்றொரு இளம் ஹெகலியவாதி, மோஸஸ் ஹெஸ்.  பின்னாள்களில் அவருடன் மார்க்ஸ் முரண்பட நேரிட்டது என்றாலும் மோஸஸ் ஹெஸ்ஸின் அணுகுமுறையை மார்க்ஸ் மிகவும் மதித்தார். ஒரு நாட்டுக்கும், சமூகத்துக்கும், மதத்துக்கும் இடையில் தீர்மானமான  உறவுமுறை நிலவுகிறது என்றார் மோஸஸ் ஹெஸ். மதத்தைத் தனியே பிரித்து ஆராய்வது, பொருளற்றது என்னும் ஹெஸ்ஸின் முடிவை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டார்.

ரைன் ஜர்னல் (Rheinische Zeitung) பற்றி கார்ல் மார்க்ஸ் அறிந்துகொண்டது அப்போதுதான். மார்ஸ் ஸ்டிர்னரின் கட்டுரை ஒன்று ரைன் ஜர்னலில் வெளியாகியிருந்தது. ஆர்வத்தால் உந்தப்பட்ட மார்க்ஸ், தானும் ஒரு கட்டுரை எழுதி ரைன் ஜர்னலுக்கு அனுப்பிவைத்தார். மே 5, 1842 அன்று மார்க்ஸின் கட்டுரை வெளியானது. பிரஷ்யாவில் அப்போது கடுமையாக நிலவிவந்த தணிக்கை முறையைப் பற்றிக் கட்டுரை விவாதித்தது. தணிக்கை முறைக்கு எதிரான துணிச்சலான விவாதங்களை மார்க்ஸ் முன்வைத்தார். ஒரு ரைன்லாந்துக்காரர் என்னும் பெயரில் வெளியான இந்தக் கட்டுரை, பலருடைய புருவங்களை உயர்த்தியது. யார் இந்தப் புதிய கோபாவேச இளைஞன் என்று கேட்கத் தூண்டியது.

அந்த மே மாதம் முழுவதும் மார்க்ஸின் பல கட்டுரைகள் ரைன் ஜர்னலில் வெளியாயின. ஊடகத்துறை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் செய்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆறு பாகங்களில் ஒரு நீண்ட கட்டுரையை ஒரு முறை மார்க்ஸ் எழுதினார். விரிவான இந்தக் கட்டுரை எதிர்பார்த்ததைக்காட்டிலும் கூடுதல் வரவற்பைப் பெற்றது. அதிகம் அறியப்படாமல் இருந்த ரைன் ஜர்னலுக்கு உடனடி வெளிச்சம் கிடைத்தது. மார்க்ஸின் கட்டுரையை ஆதரித்தும் மறுத்தும் பல கடிதங்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து குவிந்தன. பத்திரிகையின் விற்பனை மளமளவென்று அதிகரிக்க ஆரம்பித்தது.

அக்டோபர் 1842ல், கார்ல் மார்க்ஸ், ரைன் ஜர்னலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மார்க்ஸ் ஆசிரியராக இருந்த ரைன் ஜர்னலுக்கு பிரெட்ரிக் எங்கெல்ஸ் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இருவருடைய சிந்தனைகளும் ஒன்றுபோல இருந்தன. இருவரும் பிரஷ்யாவில் நிலவிந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் உயர்த்தினர். இருவருமே இளம் ஹெகலியவாதிகளிடம் இருந்து கற்று, பிறகு அவர்களிடம் இருந்து பிரிந்து வந்திருந்தனர். இருவருமே ஹெகலின் தத்துவங்களால் கவரப்பட்டிருந்தனர். மதம், தனியாக அணுகப்படவேண்டிய ஒரு துறை அல்ல என்னும் முடிவுக்கு இருவரும் வந்து சேர்ந்திருந்தனர். இருவரும் ஒரே இதழில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

மார்க்ஸ் முன்வைத்த சுதந்தர ஊடகக் கொள்கையை எங்கெல்ஸும் அழுத்தமாக முன்வைத்தார். இரண்டு முக்கியக் கோரிக்கைகளை எங்கெல்ஸ் அழுத்தமாக எழுப்பினார். அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதித்துவம் வேண்டும். ஊடகங்கள் சுதந்தரமாக இயங்கவேண்டும். முதல் பணி சாத்தியமாகவேண்டுமானால், இரண்டாவது சாத்தியப்படவேண்டும். இரண்டாவது சாத்தியமாகவேண்டுமானால், முதல் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். பிரஷ்ய மக்களின் எதிர்காலமே இந்த இரு அம்சங்களில்தான் அடங்கியுள்ளது என்றார் எங்கெல்ஸ்.

குறிப்பாக, பிரஷ்ய சட்டப் பிரிவு 151 மக்களுக்கு விரோதமானது என்று எழுதினார் எங்கெல்ஸ்.  சட்டங்களை மக்கள் விமரிசிக்கக்கூடாது, கிண்டல் செய்யக்கூடாது, அவமரியாதை செய்யக்கூடாது என்று கோரியது இந்தப் பிரிவு. அதே போல், அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை, அரசின் கட்டளைகளை, பொதுமக்கள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவற்றை மதித்து நடக்கவேண்டும் என்றும் இந்தப் பிரிவு கோரியது. ‘நேர்மையாக இதனை ஆராய்ந்து பார்த்தபிறகு சொல்கிறேன். சட்டப்பிரிவு 151ஐ நான் வெறுக்கிறேன்!’ என்று எழுதினார் எங்கெல்ஸ். மக்கள் பிரதிநிதித்துவம் பற்றிய எங்கெல்ஸின் பார்வை இது. ‘பிரஷ்யாவின் இன்றைய நிலை, முந்தைய பிரான்ஸின் நிலையை ஒத்திருக்கிறது. ஆனால், இப்போதைக்கு நான் எந்தவித அவசர முடிவுக்கும் வரப்போவதில்லை.’

0

எங்கெல்ஸ் முதல் முதலாக 1838ம் ஆண்டு லண்டன் சென்றார். சுருக்கமான ஒரு விடுமுறைப் பயணம்  அது. இரு ஆண்டுகள் கழித்து, மீண்டும் லண்டனுக்குச் சென்றார். அப்போது எங்கெல்ஸுக்கு வயது இருபது. ஓர் இளைஞனுக்கே உரிய சுறுசுறுப்புடன் அவர் லண்டனைச் சுற்றிவந்தார். லிவர்பூல், லண்டன் வீதிகளை உற்சாகத்துடன் வலம் வந்தார். ‘ரயிலில் சுற்றி வருவதற்கு என்றே உருவாக்கப்பட்ட அழகிய இடம், லண்டன்.’

மூன்றாவது முறையாக, 1842ம் ஆண்டு இறுதியில் எங்கெல்ஸ் லண்டன் சென்றார். இந்த முறை லண்டன் அவருக்கு வித்தியாசமாகக் காட்சியளித்ததில் வியப்பேதுமில்லை. இப்போது எங்கெல்ஸ் ஒரு சுற்றுலா பயணி அல்ல. அழகை அள்ளி ரசிக்க விரும்பும் ஒரு ரசனைக்கார சீமானும் அல்ல. அரசியலையும் வரலாறையும் தத்துவத்தையும் பயின்று வந்த, தன் எண்ணங்களை உக்கிரத்துடன் வெளிப்படுத்தி வந்த ஒரு எழுத்தாளன். இந்த முறை எங்கெல்ஸ், கொந்தளித்துக்கொண்டிருந்த ஒரு லண்டனைக் கண்டார். செல்வத்தையும் ஆடம்பரத்தையும் செழிப்பையும் அல்ல, மக்களின் போராட்டங்களையும் உரிமைக்கான முழக்கங்களையும் அவர் கண்டார்.

சாசன இயக்கம் உச்சத்தில் இருந்த சமயம் அது. 1838ம் ஆண்டு தொடங்கி 1850 நடைபெற்ற மக்கள் இயக்கம் அது. 1838ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் சாசனம் என்னும் ஆவணத்தில் இருந்து இந்தப் பெயர் உருவானது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு. 21 வயதைக் கடந்த, புத்தி சுவாதீனமுள்ள அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கவேண்டும். வாக்களிப்பவர்களைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு முறை. பாராளுமன்றத்தில் உறுப்பினராவதற்கு, குறிப்பிட்ட சொத்து இருக்கவேண்டும் என்னும் நிபந்தனை திரும்பப்பெறவேண்டும். பொதுமக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும். (உழைக்கும் மக்களும் இந்தப் பணிக்கு அனுமதிக்கப்படவேண்டும். பொதுப்பணிக்கு வந்துவிட்டதால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படக்கூடாது).

சாசன இயக்கத்தை உழைக்கும் மக்கள் அணிதிரண்டு கலந்துகொண்ட முதல் இயக்கம் என்று அழைக்கலாம். குறிப்பிட்ட சில செல்வந்தர்களும், பிரபுக்களும் மட்டுமே ஒரு நாட்டை ஆளவேண்டும் என்னும் அடிப்படை அரசியல் விதியை உடைத்து நொறுக்கும் நோக்கில் பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள் இந்தப் போராட்டத்தை அறிமுகம் செய்தனர். அரசியல், சமூகப் போராட்டமாக இந்த இயக்கம் உருவெடுத்தது.

தொடக்கத்திலும் சரி, பின்னாள்களிலும் சரி, சாசன இயக்கத்தால் பாராளுமன்றத்தை அசைக்க முடியவில்லை. விரிவாக, தெளிவான கோரிக்கைகளும், மிகப் பரவலான மக்கள் ஆதரவும் இருந்தபோதும், சாசன இயக்கத்தினரால் அரசியல் ரீதியில் வெற்றி பெறமுடியவில்லை. பிரிட்டனுக்கும்  பிரஷ்யாவுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எங்கெல்ஸ் நினைக்கவில்லை. உரிமைகள் எங்கு மறுக்கப்படுகிறதோ அங்கே அரசியல் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடிப்பது இயல்பு. இது மக்களின் போராட்டம். எனவே, இதனை ஆதரிக்கவேண்டும்.

லண்டனில் இருந்தபடியே லண்டனை எதிர்த்து எழுத ஆரம்பித்தார் எங்கெல்ஸ். சாசன இயக்கத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை நான் எதிர்க்கிறேன் என்று வெளிப்படையாக எங்கெல்ஸ் அறிவித்தார். ஆளும் வர்க்கமாக இருந்தாலும் சரி, மத்திய வர்க்கமாக இருந்தாலும் சரி. டோரியா, விக்கா என்பது முக்கியமல்ல.  நிபந்தனைகளற்ற வாக்கரிமைக்கு எதிராக யார் திரண்டாலும் அவர்களை நான் எதிர்க்கிறேன் என்றார் எங்கெல்ஸ். சாசன இயக்கம் ஒவ்வொரு நாளும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருவதாக எங்கெல்ஸ் அறிவித்தார். ‘மக்களின் போராட்டம் ஒரு கட்டத்தில் புரட்சியாக உருவெடுக்கும்.பிரிட்டனின் அரசியல் கட்சிகள், இந்த மாற்றத்தால் நிலைதடுமாறிப்போகும்.’



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 13

எங்கெல்ஸ் வர்த்தகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அவர் தந்தை அவரை லண்டனுக்கு அனுப்பிவைத்தார். மான்செஸ்டரில் உள்ள  எர்மென் அண்ட் எங்கெல்ஸ் என்னும் நிறுவனத்தில் இணைந்து, நெசவுத் தொழிலின் சூட்சங்களை எங்கெல்ஸ்  கற்றுக்கொள்ளவேண்டும் என்பது பிரெட்ரிக்கின் விருப்பம். ஏற்கெனவே பலமுறை முயன்று பார்த்தவர்தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை முயன்று பார்க்கத் துணிந்தார் பிரெட்ரிக்.

வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. எங்கெல்ஸின் நடவடிக்கைகள் அச்சமூட்டுவதாக இருந்தன. தத்துவமும் உக்கிரமான அரசியலும் பேசி வந்தவர்களிடம் எங்கெல்ஸ் நெருங்கி பழகிவந்ததைக் கண்டு பிரெட்ரிக் பயந்து போனார். இப்படிப்பட்ட சிநேகம், தன் மகனுக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே பல இக்கட்டுகளை ஏற்படுத்தும் என்பது அவர் அச்சம். வணிகத்தில் எங்கெல்ஸ் கவனம் செலுத்தாதன் காரணம் இதுபோன்ற சிநேகிதர்கள் தானோ?

அரசியல் எவ்வளவு ஆபத்தான களம் என்பதை அவர் அறிவார். ஜெர்மனியில் இருக்கும்வரை எங்கெல்ஸின் அரசியல் ஆர்வம் குறையப்போவதில்லை. படிப்பது, உரையாடுவது, எழுதுவது எதுவும் குறையப்போவதில்லை. ஜெர்மனியைவிட்டு எவ்வளவு தொலைவு அனுப்பமுடியுமோ அவ்வளவு தொலைவு அனுப்பினால்தான் எங்கெல்ஸ் அரசியலை மறப்பான். எனவே, லண்டனைத் தேர்வு செய்தார் பிரெட்ரிக். ஆனால், இந்த முறையும் எங்கெல்ஸ் தன் தந்தையின் கனவைப் பொய்யாக்கினார். சாசன இயக்கத்திலும் மக்கள் போராட்டத்திலும் காட்டிய அக்கறையை அவர் வர்த்தகத்தில் காட்டவில்லை. பிரெட்ரிக்கின் எதிர்பார்ப்பை முற்றிலும் பொய்யாக்கும்படி, லண்டன் எங்கெல்ஸின் அரசியல் ஆர்வத்தை அதிகரிக்கவே செய்தது.

இந்த லண்டன் பயணம் பல வழிகளிலும் எங்கெல்ஸின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. லண்டன் செல்லும் வழியில்தான் 1842ல் முதல் முறையாக கார்ல் மார்க்ஸைச் சந்தித்தார் எங்கெல்ஸ். கொலோனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரைன் ஜர்னலின் ஆசிரியர் என்னும் முறையில் மார்க்ஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார் எங்கெல்ஸ். இயல்பான, இன்னும் சொல்லப்போனால் மிக சாதாரணமான ஒரு நிகழ்வு அது.  பின்னர் இந்த நிகழ்வை நினைவுகூறும்போது, ‘இறுக்கமான ஒரு சந்திப்பு’ என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

உரையாடல் ரைன் ஜர்னல் பற்றியே இருந்தது. ரைன் ஜர்னலின் நோக்கம் என்ன என்பதை மார்க்ஸ் விவரித்தார். ‘மதம் தொடர்பான கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும். நாத்திகவாதத்தைப் பிரசாரம் செய்யும் ஒரு வாகனமாக ரைன் ஜர்னல் இருக்கவேண்டும்’ என்றார் மார்க்ஸ்.  ‘அரசியல் விவாதங்களையும், செயல்பாடுகளையும்’ விவாதித்தால் நன்றாக இருக்குமே என்றார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அரசியல் செயல்பாடுகளைக் காட்டிலும் மதம் முக்கியமான ஒரு துறை என்பது அவர் அபிப்பிராயம். ஆனால், எங்கெல்ஸ் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அபிப்பிராய பேதத்துடன் இந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

ரைன் ஜர்னலுடனான உறவு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இங்கிருந்தபடியே பல கட்டுரைகளை எழுதி மார்க்ஸுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்து வந்த பிறகே எங்கெல்ஸ் ஒரு சோஷலிஸ்டாக பரிமாண வளர்ச்சி அடைந்தார் என்று குறிப்பிட்டார் லெனின். இரண்டு ஆண்டுகள் எங்கெல்ஸ் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். இந்த இரு ஆண்டுகளும் அவர் வாழ்வில் முக்கியமானவை. இங்கிலாந்து மக்களின் வாழ்நிலையை ஆராய்வதற்கும், தான் கற்ற விஷயங்களை இங்கிலாந்தோடு பொருத்திப் பார்க்கவும் எங்கெல்ஸுக்கு இங்கே வாய்ப்பு கிடைத்தது.

ஐரோப்பிய ஆதிக்கத்தின் வரலாறில் தொழில் புரட்சி ஒரு முக்கியமான அத்தியாயம்.  இதன் பலன்கள் முதலில் தென்பட்டது இங்கிலாந்தில்.  இங்கிலாந்தின் செழிப்புக்குக் காரணம் அதன் காலனிகளும் தொழில்புரட்சியின் விளைவால் ஏற்பட்ட தொழில் முன்னேற்றங்களும். குறிப்பாக நான்கு தொழில் பிரிவுகளில் இங்கிலாந்து வெற்றிகரகமாக இருந்தது.  பஞ்சு, கரி, இரும்பு மற்றும் கப்பல் கட்டுமானம்.  (பஞ்சு உற்பத்தி 1785ம் ஆண்டுக்கும் 1850ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது.) இந்த நான்கைச் சுற்றி பெரும் தொழிற்சாலைகளும், வங்கிகளும் நிர்மாணிக்கப்பட்டன.  பிற ஐரோப்பிய நாடுகளும்கூட தொழில் முன்னேற்றத்தில் இங்கிலாந்தை எட்டிப்பிடிக்க முயன்றன என்றாலும் அவர்களிடம் இங்கிலாந்தடம் இருந்ததைப் போன்ற கப்பல் பலம் இல்லாததால், சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடமுடியவில்லை.  இங்கிலாந்தின் கப்பல்களையே அவர்களும் நம்பியிருக்கவேண்டியிருந்தது.  இங்கிலாந்தின் கப்பல்கள் உலகம் முழுவதும் மிதந்து சென்றன.

செழிப்பும் பலமும் கூடிக்கொண்டே போனது. இங்கிலாந்தின் உயர் வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் பெருகி வளர்ந்தன.  இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் பெரும் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன.  பணம் படைத்தவர்கள் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்தனர்.  முழுமையான தொழில் நகரமாக இங்கிலாந்து மாறியபிறகு, புதிய தொழில் முயற்சிகளுக்குப் புதிய இடங்களைத் தேடத் தொடங்கினார்கள்.  இங்கிலாந்தின் காலனி நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று அவர்கள் கவனமும் களமும் விரிந்தது.  அமெரிக்கா, இங்கிலாந்து முதலாளிகளை வரவேற்றது.  ரயில் பாதைகளும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன.  தென் அமெரிக்காவில், குறிப்பாக அர்ஜெண்டினாவில் பெரும் தோட்டங்களை இங்கிலாந்து வாங்கியது.  கனடாவும் ஆஸ்திரேலியாவும்  இங்கிலாந்தால் வளர்ச்சிபெற்றன.  இந்தியாவை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது.

உலகின் வர்த்தக மையமாக லண்டன் திகழ்ந்தது.  உலகுக்குக் கடன் கொடுக்கும் நாடாக இங்கிலாந்து இருந்தது.  உலகம் முழுவதும் ரயில்வே, தொழிற்சாலைகள் போன்ற துறைகளில் பெரும் முதலீடுகளை இங்கிலாந்து செய்தது.  இங்கிலாந்தின் தயாரிப்புகள் இங்கே பயன்படுத்தப்பட்டன.  உதாரணத்துக்கு, ஒரு நாட்டில் ரயில் பாதை அமைக்கப்பட்டால், அதற்குத் தேவையான இரும்பை இங்கிலாந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்.  தொழில் முயற்சியை ஆரம்பித்தது இங்கிலாந்து.  அதற்காக முதலீடு செய்தது இங்கிலாந்து.  அதனால் லாபம் அடைந்ததும் இங்கிலாந்துதான்.  இங்கிலாந்தை வரவேற்ற நாடுகளுக்கு ஆதிக்கத்துடன் இணைந்த முன்னேற்றங்கள் கிடைத்தன.  தேயிலை தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்த செல்வந்தர்கள் பெரும் லாபம் ஈட்டினர்.

பிற நாடுகளுக்கு அளித்த கடனுதவிகளை இங்கிலாந்து வட்டியுடன் திரும்பப்பெற்றுக்கொண்டது.  பணமாக அல்ல, பொருளாக.  தம்மிடம் இல்லாத பொருள்களாகப் பார்த்து இங்கிலாந்து  பெற்றுக்கொண்டது.  கோதுமை, தேயிலை, காபி, இறைச்சி, பழங்கள், வைன், பருத்தி என்று அந்தப் பட்டில் நீளும்.  19ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் செழிப்புக்கும் இந்த இறக்குமதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.  முதலீடுகளைக் காட்டிலும் அதிக லாபத்தை இங்கிலாந்து இவ்வாறு சம்பாதித்துக்கொண்டது.  மற்றொரு பக்கம், காலனி நாடுகளில் இங்கிலாந்து செய்த முதலீடுகள் லாபம் அளிக்க ஆரம்பித்தன.  அந்த லாபத்தை மீண்டும் அங்கேயே மறுமுதலீடு செய்தது இங்கிலாந்து.  மீண்டும் லாபம்.  இந்தியாவில் ரயில்வே போன்ற துறைகளில் இங்கிலாந்து செய்த முதலீடுகள் இந்த வகையைச் சேர்ந்தது.

எனவே, வளம் கொழிக்கும் தொழில் நகரமாக இங்கிலாந்து பரவலாக அறியப்பட்டிருந்தது. பலர், அதனை சொர்க்கமாகவும் கருதி வந்தனர். இங்கிலாந்து எந்தப் பிரச்னையும் அற்ற ஒரு செழிப்பான நிலம் என்று அவர்கள் நம்பினர். சுற்றுலா பயணிகள் லண்டன் நகரில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். முன்பொருமுறை எங்கெல்ஸும் ஒரு சுற்றுலாப் பயணியாகவே லண்டன் வந்திருந்தார். லண்டனின் பளபளப்பும் அழகும்  மட்டுமே அவர் கண்களில் பட்டது.

ஆனால், இந்த முறை அவர் கண்டது வித்தியாசமான லண்டனை. இந்தக் காலகட்டத்தில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை இவை.  The English View of the Internal Crisis, The Internal Crisis, The Position of the Political Parties, The Condition of the Working Class in England, The Corn Laws. இங்கிலாந்து பற்றி பொதுப்புத்தியில் உரைந்திருந்த பல கருத்தாக்கங்களை எங்கெல்ஸ் இந்தக் கட்டுரைகள் வாயிலாகச் சிதறடித்தார்.

இங்கிலாந்தில் காணப்படும் முரண்பாடுகளை எங்கெல்ஸ் வெளிச்சம் போட்டு காட்டினார். லண்டனின் செழிப்பை அவர் கேள்விக்கு உட்படுத்தினார். இங்கிலாந்து பணக்காரர்களின் தேசம் என்னும் பிம்பத்தை எங்கெல்ஸ் துணிவுடன் கலைத்தார்.  வெளிப்பார்வைக்கு அகப்படாமல் இருந்த சாமானியர்களை எங்கெல்ஸ் தன் கட்டுரைகளில் வெளிக்கொணர்ந்தார். எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களது சமூக உறவுமுறைகளை எங்கெல்ஸ் அருகிலிருந்து கண்டார். பிரஷ்யாவுக்கும் லண்டனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை உணர்ந்தார். அடித்தட்டு மக்கள் எங்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். அவர்கள் நிழல் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதிகம் அறியப்படாதவர்களாக, பெரும்பாலானோரால் உதாசீனம் செய்யப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், இங்கிலாந்தின் செழிப்பான மக்கள் கூட்டம். லண்டன் நகரின் சீமான்கள், சீமாட்டிகள். அவர்கள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உணவு குறித்தும் உறைவிடம் குறித்தும் அவர்கள் சிந்திக்கவேண்டியதில்லை. ஏவல் புரிய அவர்களிடம் வேலைக்காரர்கள் இருந்தார்கள். எண்ணி மாளாத அளவுக்கு செல்வம் அவர்கள் இல்லங்களில் குவிந்திருந்தது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அமையும் அரசு அவர்களுக்குச் சாதகமாக செயல்பட்டது.  சாசன இயக்கத்தை எதிர்ப்பவர்களாகவும் சமத்துவத்தை விரும்பாதவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

இங்கிலாந்தை கவனமாகவும் சலனமற்றும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படத் தொடங்கும் என்றார் எங்கெல்ஸ்.  இங்கிலாந்தின் அடித்தளம் உண்மையில் பலவீனமானது. அதன் பகட்டும் செழுமையும் போலியானது, சமமற்றது. ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் தக்கையான ஓர் அடித்தளத்தில்தான் இங்கிலாந்து என்னும் பிரமாண்டமான கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இங்குள்ள அரசியல்வாதிகள் மக்களிடம் போலியான பிரசங்கங்களையே அளித்துக்கொண்டிருக்கிறார்கள். வளமான ஒரு எதிர்காலம் அனைவருக்கும் அமையும் என்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குறைபாடுகளை, குருட்டுத்தனத்தை, இயலாமையை, பாவங்களைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. மக்களும் வேறு மாற்று தெரியாததால் இவர்கள் பேச்சுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை மாறும் என்று காத்திருக்கிறார்கள்.

சாசன இயக்கத்தை இந்த அரசியல்வாதிகள் உதாசீனம் செய்வதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். அதற்கான காரணத்தையும் அவர் முன்வைத்தார். டோரிகளும் விக்குகளும் தொடர்ந்து தாங்கே ஆளுங்கட்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். சாமானியர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க அவர்களுக்கு விருப்பமில்லை. சாமானியர்களின் கையில் ஆட்சி இருப்பது தங்கள் நலனுக்கு விரோதமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.  அரசியல் இவர்களுக்கு வாணிபம் போன்றது. போட்டி இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அதற்காக கவலைப்படவேண்டாம் என்றார் எங்கெல்ஸ். ‘நிலைமை மாறும். விக்குகளும் டோரிகளும் நிச்சயம் தோல்வியடைவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 14

மான்செஸ்டர் ஆலைகள்

பிரிட்டன் சமூகம் மூன்று பெரும் மக்கள் பிரிவுகளால் கட்டமைக்கப்பட்டிருந்ததை எங்கெல்ஸ் கண்டறிந்தார். முதல் பிரிவில் இருந்தவர்கள் அரசு குலப் பிரபுக்கள். இரண்டாவது, தொழிற்சாலைகளின் உரிமையாளர்களான பெரும் முதலாளிகள்.  மூன்றாவது, உழைக்கும் பிரிவினரான பாட்டாளிகள். பாட்டாளிகள் நித்தம் நித்தம் முதலாளிகளுடன் முரண்பட்டனர். இந்த இரு பிரிவினருக்கு இடையில் ஓயாமல் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. சொத்தில்லாத, பரம ஏழைகளான பாட்டாளிகள் முதலாளிகளால் சுரண்டப்பட்டு வந்தனர். சுரண்டல் என்பது தொழிலின் ஒரு பகுதி என்றுதான் முதலாளிகள் கருதி வந்தனர். பாட்டாளி வர்க்கத்துக்கு சொத்து என்பது கிடைப்போவதே இல்லை என்பதால் சொத்துள்ளவர்களுடனான அவர்களுடைய போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை என்றார் எங்கெல்ஸ்.

இங்கிலாந்தில் அப்போது மூன்று அரசியல் கட்சிகள் செல்வாக்குடன் இருந்தன. விக் கட்சி, டோரி கட்சி மற்றும் சார்டிஸ்ட்ஸ் என்று அழைக்கப்படும் சாசனர் கட்சி. இந்த மூன்றும் மூன்று பிரிவு மக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்றன என்றார் எங்கெல்ஸ். விக் கட்சி தொழிற்சாலை முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. பூர்ஷ்வா வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே இந்தக் கட்சியின் தலைமையில் அங்கம் வகித்தனர். விக் கட்சி முடியாட்சியை விரும்பியது.

டோரி கட்சி நிலவுடைமையாளர்களை ஆதரித்தது. நிலப்பிரபுக்களும் பின்னர் தொழிற்சாலை முதலாளிகளும் இந்தக் கட்சியில் அங்கம் வகித்தனர். எனவே இந்தக் கட்சி பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. செல்வந்தர்களின், நிலம் படைத்தவர்களின், பிரபு குலத்தின் பிரதிநிதியாக, அவர்களுடைய நலன்கள் மீது அக்கறை கொண்டதாக டோரி கட்சி திகழ்ந்தது. விக், டோரி இரண்டுமே செல்வந்தர்களின் கட்சிகள் என்றாலும் இரண்டும் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. அதிகாரத்தை யார் கைப்பற்றவேண்டும் என்பதில் இந்த இரு கட்சிக்கும் போட்டி இருந்து வந்தது.

மூன்றாவது, சாசனர் கட்சி. இவர்கள் அடிப்படை அரசியல் மாற்றத்தை விரும்புபவர்களாக இருந்தனர். முடியாட்சியை எதிர்த்து, ஜனநாயகத்தை வரவேற்றனர். அரசியல் அதிகாரம் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமேயானதல்ல என்று இவர்கள் வாதிட்டனர். சாசனர் கட்சிக்குத் தொழிலாளர்கள் ஆதரவு பெருமளவில் இருந்தது. இந்த மூன்று கட்சிக்கும் மூன்று வெவ்வேறு பிரிவினர் ஆதரவு அளித்து வந்தனர்.

இந்த மூன்று பிரிவினரின் நலன்களும் வேறுபட்டிருந்ததால், முரண்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டன. இந்த முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் சமூகப் புரட்சியாக உருவெடுக்கும் என்று கணித்தார் எங்கெல்ஸ். இந்தப் புரட்சியை அடிமட்டத்தில் இருக்கும் பிரிட்டனின் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பினார் எங்கெல்ஸ்.

முதல் முதலாக பிரிட்டனில்தான், உழைக்கும் வர்க்கத்தின் மேம்பட்ட போராட்ட வடிவத்தை எங்கெல்ஸ் கண்டுகொண்டார். சமூக முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் பொறுத்தவரை, பிரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை என்றாலும் பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வடிவம் பிரஷ்யாவில் இருந்ததைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.  குறிப்பாக, வாக்குரிமை கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுத்துச் சென்ற சாசன இயக்கம் வியப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக இருந்தது. கொடிகளையும் பதாகைகளையும் ஏந்திக்கொண்டு, முஷ்டியை மடக்கி, முழக்கங்கள் செய்துகொண்டே முன்னேறிச் சென்ற தொழிலாளர்களின் திரளைக் கண்டு திகைத்து நின்றார் எங்கெல்ஸ். இத்தனை பெரிய போராட்டத்தை அதற்கு முன்னால் எங்கெல்ஸ் கண்டதில்லை. ‘அரசியல் ரீதியில் மிகப் பெரிய அளவில் பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து நடத்திய முதல் பெரும் புரட்சிகர இயக்கம்’ என்று சாசன இயக்கத்தை பின்னர் வருணித்தார் லெனின்.

போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் விரிவாக உரையாடினார் எங்கெல்ஸ். ரைன் ஜர்னலில் கட்டுரைகள் எழுதினார்.  தொழிலாளர்களின் பலத்தையும் போராட்ட வியூகத்தையும் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் குறைபாடுகளையும் கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒன்றிணைந்த தலைமை இல்லை. இறுதி இலக்கு என்ன என்பதில் தெளிவில்லை. தயாரிப்புகளில் குழப்பங்கள் நீடிக்கின்றன. சாசன இயக்கம் பிரிட்டன் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், இந்தக் குறைகள் களையப்படாததால் வெற்றி பெற முடியவில்லை என்று எழுதினார் எங்கெல்ஸ்.

மற்றொரு வாதத்தையும் எங்கெல்ஸ் முன்வைத்தார். சாசனர்களின் கோரிக்கையை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள மறுத்தது எதிர்பார்த்ததுதான். டோரிக்குகளும் விக்குகளும் தொழிலாளர்களை அரவணைத்துக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசியல் அதிகாரத்தை எப்படி அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள்? ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்துவிட்டது? அதிகாரம் கையில் இருக்கும்வரைதானே அவர்களால் பொருளீட்ட முடியும், சேகரித்த செல்வத்தைப் பாதுகாக்கமுடியும்?

பெரும் முதலாளிகளின் ஆதிக்கத்தை உடைக்கவேண்டும் என்று பாட்டாளி வர்க்கம் நினைத்ததில் தவறில்லை. அதற்கு அரசியல் ஆதிக்கத்தை முதலில் தகர்க்கவேண்டும் என்று விரும்பியதிலும் பிழையில்லை. தாங்கள் விரும்பிய அரசாங்கம் அமையவேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு சரியானதே. சாசன இயக்கத்தின் கோரிக்கைகளில் குறைபாடுகள் எதுவும் இல்லை. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரமாதமான முறையில் போராட்டத்தை ஆரம்பித்ததிலும் பிழையில்லை.

ஆனால், அறவழியைத் தேர்ந்தெடுத்ததுதான் பொருத்தமற்றது. அமைதி ஊர்வலம், பேரணி, பிரசாரம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று தொழிலாளர்கள் நினைத்தது தவறு. ‘சட்டத்திட்டத்தின்படி நடைபெறும் போராட்டம்’ எதையும் மாற்றியமைக்கமுடியாது. ‘சட்டப்படி புரட்சி நடத்தமுடியாது.’

புரையோடியிருக்கும் புண்ணை, மென்மையான முறையில் அகற்றுவது சாத்தியமில்லை. கீறத்தான் வேண்டும். அழுத்தம் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு அறவழி உதவாது. சட்டம் உதவாது. அமைதி உதவாது.  பொறுத்தமற்ற, அநியாயமான சட்டத்தை நியாயமான போராட்டத்தினால் வீழ்த்தமுடியாது. இந்த உண்மையை உணராததால், 1842 சாசன இயக்கம் வெற்றி பெறவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுதிரண்ட பின்பும், பிரிட்டன் முழுவதிலும் இருந்து ஓரளவுக்கு நல்ல ஆதரவு திரண்டுவந்த போதும், சாசன இயக்கத்தினரால் தங்கள் எதிரியை வெற்றிகொள்ளமுடியாததற்கு இதுவே காரணம்.

‘தற்போது நிலவும் அசாதாரணமான சூழலை வலுக்கட்டாயமான முறையில் மட்டுமே மாற்றியமைக்கமுடியும்’ என்று அறிவித்தார் எங்கெல்ஸ். ‘பிரபுத்துவத்தையும் தொழில் சார்ந்த ஆதிக்கத்தையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே பாட்டாளி மக்கள் தங்கள் வாழ்நிலையை மாற்றிக்கொள்ளமுடியும்.’

பிரிட்டனில் இருந்து எங்கெல்ஸ் ரைன் ஜர்னலுக்கு ஐந்து கட்டுரைகள் எழுதினார். அதற்கு மேல் எழுத முடியவில்லை. ரைனின் கதை முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. 1842 முடிவில் ரைன் ஜர்னலை அதிகாரிகள் கடுமையான தணிக்கை விதிகளுக்கு உட்படுத்தினர். அரசுக்கு எதிராகவும் மதத்துக்கு எதிராகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த கட்டுரைகள் பலரை கடுப்புக்குள்ளாக்கியிருந்தது. இரு அடுக்குகளில் ரைனை தணிக்கை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். பிறகு, மூன்று அடுக்கு தணிக்கை. அதற்கு மேல் ரைன் ஜர்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதுவும் கூட போதாது என்று அதிகாரிகள் நினைத்தனர். ஏப்ரல் 1, 1843 அன்று பிரஷ்ய அரசு, ரைன் ஜர்னலை முழுவதுமாகத் தடை செய்தது. எங்கெல்ஸ் வாசிப்பில் மூழ்கிப்போனார். பிரிட்டனின் அரசியல் சூழலையும் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலையையும் உன்னிப்பாகக் கவனித்தார்.

நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட மான்செஸ்டர் பிரிட்டன் நெசவுத் தொழிற்சாலையின் தலைமைச் செயலகமாக இருந்தது. மான்செஸ்டர் வீதிகளில் எங்கெல்ஸ் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வகையான குடியிருப்புகள் அமைந்திருந்தன.  குறுகலான, பழைய நகரத்து வீதிகளில் உழைப்பாளிகளின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இந்தப் பகுதி சுகாதாரக் குறைவுடன் காணப்பட்டது. சாலைகள் வளைந்து, நெளிந்து இருந்தன. குப்பை, கூளங்கள் அதிகம். நெருக்கமான அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் காற்றோட்டம் குறைவாக இருந்தது.

இதற்கு மிக அருகில், அகலமாக வீதிகள் அமைந்திருந்தன. இங்கே மத்திய வர்க்க மக்கள் வசித்து வந்தனர். அவர்களது குடியிருப்புகள் சுத்தமாகவும், அவர்களுடைய சாலைகள் நேராகவும் காட்சியளித்தன. பிரபுக்களும் பெரும் முதலாளிகளும் இன்னும் மேம்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். மிகப் பெரிய பண்ணை வீடுகளும் மாளிகைகளும் இங்கே அமைந்திருந்தன.

எங்கெல்ஸ் பணியாற்றிய நிறுவனம் சவுத்கேட் சாலையில் அமைந்திருந்தது. அலுவலக நேரம் முடிவடையும்வரை எங்கெல்ஸ் இங்கே அடைந்திருப்பார். வேலை நேரம் முடிந்ததும், வீதிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். சாலைகள் அமைந்திருக்கும் விதமும் குடியிருப்புகளின் கட்டமைப்பும் அவருக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. மான்செஸ்டர் மாநகரமே மூன்று  பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதை அவர் கண்டார்.

பஞ்சு பதப்படுத்தும் மையமாக மான்செஸ்டர் திகழ்ந்தது. தெற்கு லங்காஷயர், வடக்கு செஷயர் ஆகிய பகுதிகள் பஞ்சு நூற்பதில் சிறப்புற்று விளங்கின. பருத்தி ஆடை கொள்முதலில் உலகின் மையமாக மான்செஸ்டர் மாறிப்போனது. விக்டோரியன் காலத்தில், காட்டன்போலிஸ் என்றும் கிடங்கு நகரம் என்றும் மான்செஸ்டர் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டது. தொழில் புரட்சி இந்நகரத்துக்கு புதிய பொலிவை கொண்டு வந்தது.  1835 வாக்கில், உலகின் தலைசிறந்த முதல் தொழில்நகரமாக மான்செஸ்டர் அறியப்பட்டது. பருத்தியாடை தயாரிப்பை இலகுவாக்கும் இயந்திரங்கள் பெரிய அளவில் இந்நகரில் தயாரிக்கப்பட்டன. அதையடுத்து, பல தொழிற்சாலைகள் இந்நகரில் அமைக்கப்பட்டன. சாயம் உள்ளிட்ட ரசாயனத்தைத் தயாரிக்கும் ஆலைகள் போட்டிப்போட்டுக்கொண்டு தொடங்கப்பட்டன. தொடர்ந்து, இந்த ஆலைகளுக்கு நிதியுதவி செய்யும் நிதி நிறுவனங்கள் வளர்ந்தன. பிறகு, வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் பெருகின. போக்குவரத்து வசதிகள் வளர்ந்தன.

மாலை நேரங்களிலும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் எங்கெல்ஸ் தொழிலாளர்களைச் சென்று பார்த்தார். அவர்களுடன் மணிக்கணக்கில் உரையாடினார். எங்கே பணியாற்றுகிறீர்கள்? எப்படி தொழிற்சாலை செல்கிறீர்கள்? எத்தனை மணி நேரம் வேலை? எப்படிப்பட்ட இயந்திரங்கள்? கூலி எவ்வளவு? ஓய்வு தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கிறதா? உங்கள் பொழுதுபோக்குகள் என்ன? வாசிக்கும் வழக்கம் உண்டா? உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறீர்களா?

மேரி பர்ன்ஸ் எங்கெல்ஸுக்கு அறிமுகமானது அப்போதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 15

ஜார்ஜ் வீரத்

மான்செஸ்டரில் அயர்லாந்து மக்கள் பரவலாகக் குடியேறியிருந்தனர். பிழைப்புக்காக தங்கள் நாட்டைவிட்டு இவர்கள் வெளியேறி பிரிட்டனை வந்தடைந்திருந்தனர். பெரும்பாலானோர் தொழிலாளர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பெரும் தொழில் நகரமாக அறியப்பட்டிருந்த மான்செஸ்டரை நோக்கி எறும்பு வரிசை போல் சாரைச் சாரையாக வந்து குவிந்துகொண்டிருந்தனர். இவர்கள் பிரிட்டனைக் கடவுளாகப் பார்த்தனர். கடுமையான பணி, மோசமான குடியிருப்பு, இரண்டாம்தர  வாழ்விடம் எதுவும் இவர்களை அசைக்கவில்லை. மேரி பர்ன்ஸ் அவர்களில் ஒருவர்.

எங்கெல்ஸ் குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்த அதே தொழிற்சாலையில்தான், மேரி பர்ன்ஸும் வேலை செய்து செய்து வந்தார். சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர். மான்செஸ்டர் நகருக்கு அருகிலுள்ள சால்ஃபோர்ட் என்னும் பகுதியில் இவர் வசித்து வந்தார். எங்கெல்ஸ், தொழிலாளர்கள் மீது வெளிப்படுத்திய பரிவும், அன்பும் அவரைத் திகைக்கவைத்தது.  தொழிற்சாலையில் மட்டுமல்ல, வெளியிலும்கூட எங்கெல்ஸ் அவர்கள் பற்றியே சிந்தித்து வந்தார் என்பதை அறிந்தபோது மேரி பர்ன்ஸ் மகிழ்ச்சியடைந்தார்.

மேரியிடம் தென்பட்ட ஒளிக்கீற்று எங்கெல்ஸைக் கவர்ந்தது. உதவும் குணம் கொண்டவராகவும், எந்த விஷயத்தையும் கறாராக விமரிசிப்பவராகவும் தொழிலாளர்கள் மத்தியில் மேரி அறியப்பட்டிருந்தனர். பணி நேரம் முடிந்ததும், தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த எங்கெல்ஸ், மேரி பர்ன்ஸை அப்படிப்பட்ட ஒரு பயணத்தின் போது 1843ம் ஆண்டு சந்தித்தார். ஐரிஷ் தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து பல விஷயங்களை எங்கெல்ஸிடம் பகிர்ந்து கொண்டார் மேரி.

எங்கெல்ஸைக் காட்டிலும் மேரி பிரிட்டனை நன்கு அறிந்திருந்தார். குறிப்பாக, மான்செஸ்டரின்  தொழிலாளர் வீதிகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். உங்களுக்கு என்னால் உதவ முடியும் என்று மேரி உற்சாகத்துடன் முன்வந்தபோது, எங்கெல்ஸ் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அது முதல், மேரி எங்கெல்ஸுடன் இணைந்துகொண்டார். விடுமுறை தினங்களில், மான்செஸ்டரை இருவரும் சுற்றி வருவார்கள். எங்கெல்ஸ் அதற்கு முன் பார்த்திராத பல குடியிருப்புகளுக்கு மேரி அவரை அழைத்துச்சென்றார்.

மான்செஸ்டரில் ஐரிஷ் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அந்நகரமே லிட்டில் அயர்லாந்து என்றும் ஐரிஷ்டவுன் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இடிபாடுகளுக்கு இடையே வசித்து வந்த ஐரிஷ் தொழிலாளர் வர்க்கத்தை அருகில் சென்று பார்த்து, புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எங்கெல்ஸின் ஆய்வுக்கு இந்தப் பயணங்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. குறிப்பாக, மேரி வசித்து வந்த சால்ஃபோர்ட் அவரைத் திடுக்கிட வைத்தது.

டிசம்பர் 1983ல் ஜார்ஜ் வீர்த் (Georg Weerth) என்னும் ஜெர்மானிய கவிஞரை எங்கெல்ஸ் சந்தித்தார். பிரிட்டனின் வடக்குப் பகுதியில் உள்ள பிராட்ஃபோர்ட் என்னும் பகுதியில் ஜார்ஜ் வசித்து வந்தார். ஒரு ஜெர்மானிய நிறுவனத்தின் ஏஜெண்டாக இவர் பணியாற்றி வந்தார்.

எங்கெல்ஸைப் போலபே ஜார்ஜும், தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்டவர். இயற்கை, காதல், கடவுள் என்றில்லாமல், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து இவர் கவிதைகள் எழுதி வந்தார். எங்கெல்ஸைப் போலவே, இவரையும் மான்செஸ்டர் ஆழமாகப் பாதித்தது. தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் இவரை உத்வேகம் கொள்ள வைத்தது. தொழிலாளர்கள் ஒன்றுபட்டால், ஒரு வர்க்கமாக அவர்கள் திரண்டால், முதலாளித்துவத்தின் கோரப் பிடியைத் தகர்க்கமுடியும் என்று அவர் நம்பினார். தன் நம்பிக்கையை கவிதைகளில் பதிவு செய்து வந்தார்.

கவிதைகளில் இருந்து கட்டுரைகளுக்கு ஜார்ஜ் திரும்பியதற்குக் காரணம் ரைன் ஜர்னல். கார்ல் மார்க்ஸ் ஆசிரியராக இருந்தபோது, ஜார்ஜ் வீர்த், தன் படைப்புகள் அவரிடம் அனுப்பி வைத்தார். அவற்றில் சில மார்க்ஸால் பதிப்பிக்கப்பட்டன. தொடர்ந்து பல கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகளை ஜார்ஜ் திருத்தியும் கொடுத்தார்.

அதே இதழ்களில் வெளிவந்த எங்கெல்ஸின் கட்டுரைகளை வாசித்து பெரிதும் கவரப்பட்டார் ஜார்ஜ். ஓர் உண்மை புரிந்தது. தொழிலாளர்களைக் கனவுகளுடனும் கவித்துவத்துடனும் அணுகுவதில் பயனில்லை. கனவு தெளிந்து, நிஜம் புரிந்து அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் தனி நபர்கள் அல்லர். ஒரு வர்க்கமாகத் திரளவேண்டியவர்கள். பிரஷ்யா, பிரிட்டன் எங்கு சென்றாலும் அவர்கள் சந்திக்கநேரும் பிரச்னைகள் ஒன்றுதான். முதலாளித்துவம்.

சாசன இயக்கத்தின் பலம், பலவீனம் பற்றிய எங்கெல்ஸின் ஆய்வு ஜார்ஜை பெரிதும் கவர்ந்தது. மான்செஸ்டரில் தங்கியிருந்த எங்கெல்ஸை ஆர்வத்துடன் வந்து சந்தித்தார் ஜார்ஜ். அவருடன் கைகுலுக்கிக்கொண்டார். மான்செஸ்டர் நகரில் எங்கெல்ஸ் மேற்கொண்டு வரும் பயணங்களைப் பற்றி விலாவரியாகக் கேட்டறிந்துகொண்டார். எங்கெல்ஸின் ஆய்வையும் அவரது அணுகுமுறையையும் பற்றி விவாதித்தார். நானும் உங்களுடன் வரலாமா என்று கேட்டு, தன்னையும் எங்கெல்ஸின் குழுவில் ஒருவராக இணைத்துக்கொண்டார். எங்கெல்ஸ், மேரி, ஜார்ஜ் மூவரும் ஒரு புள்ளியில் ஒன்று குவிந்தனர்.

1845ம் ஆண்டு, எங்கெல்ஸைப் பற்றி ஜார்ஜ் ரைன் ஜர்னலில் எழுதிய குறிப்பு இது.

‘பிரிட்டனின் தொழிலாளர் வர்க்கம் பற்றி எங்கெல்ஸ் புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஜெர்மனியின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவர் எங்கெல்ஸ். அந்த வகையில், இந்தப் புத்தகம் பெரும் மதிப்பு வாய்ந்தது, முக்கியத்துவம் பெற்றது. பிரச்னையின் தீவிரத்தை என்னைவிட  தெளிவாகவும், சீராகவும் எங்கெல்ஸ் முன்வைப்பார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் தொட்டிலாகத் திகழும் மான்செஸ்டரில் நீண்ட காலமாக அவர் மேற்கொண்டு வரும் பயணங்கள் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.’

மான்செஸ்டரில் இரண்டாண்டு காலம் மேற்கொண்ட ஆய்வுகள் சில உண்மைகளை எங்கெல்ஸுக்கு உணர்த்தின. உழைக்கும் மக்கள் கடும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை மோசமாக இருக்கிறது. முதலாளிகளால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதே சமயம், உழைப்பாளி வர்க்கம் துன்புறும் ஒரு வர்க்கம் மட்டுமல்ல. அந்தத் துன்பத்தை எதிர்த்து போராடக்கூடிய போர்க்குணம் கொண்ட ஒரு வர்க்கமும்கூட. தொழிலாளர்கள். எதிர்காலத்தை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்தும் பலகீனமானவர்கள் அல்லர். எதிர்காலத்தை  மாற்றியமைப்பதற்கான பலத்தையும் உத்வேகத்தையும் பெற்றவர்கள். ஆம், அவர்கள் போராளிகள்.

முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த கருத்துகளுக்கு முரணானதாக இருந்தது எங்கெல்ஸின் முழக்கம். தொழிலாளர் நலன் சார்ந்த சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது. எங்கெல்ஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர்களுக்கு முதலாளிகளின் பரிதாப உணர்வோ, மன்னிக்கும் குணமோ, கருணையோ தேவையில்லை என்றார் எங்கெல்ஸ்.

எனில், அவர்களுடைய தேவைதான் என்ன? எங்கெல்ஸ் தீர்மானமாக பதிலளித்தார். தங்களுக்குத் தேவையானதை அவர்களே போராடிப் பெற்றுக்கொள்வார்கள்! அவர்களை யாராலும் தடுக்க முடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 16

ஜெர்மன் புத்தகத்தின் அட்டை

மேரி பர்ன்ஸ், ஜார்ஜ் வீரத் இருவரையும் தொடர்ந்து ஜேம்ஸ் லீச் என்பவரும் எங்கெல்ஸின் ஆய்வுக்கு உதவிகரமாக இருந்தார். ஜேம்ஸ் லீச் சாசன இயக்கத்தில் இணைந்திருந்தார். ஒரு விவசாயத் தொழிலாளராக வாழ்வைத் தொடங்கி நாளடைவில் தொழிற்சாலைப் பணியாளராக மாறியவர். தொழிலாளர் வர்க்கத்தின் மீது பரிவு கொண்டவர். எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எங்கெல்ஸ் லீச்சிடம் ஆர்வத்துடன் உரையாடினார். சாசன இயக்கம் குறித்தும் மான்செஸ்டர் தொழிலாளர் வர்க்கம் குறித்தும் இவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். மான்செஸ்டர் ஆலைத் தொழிலாளர்கள் குறித்து லீச் எழுதிய ஒரு பிரசுரத்தை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் வாசித்தார். தனது ஆய்வு அறிக்கையிலும் இந்தப் பிரசுரத்தைப் பலமுறை மேற்கோள் காட்டினார்.

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை (The Condition of the Working Class in England) என்னும் தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய நூல் 1845ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதலில் வெளிவந்தது. இந்தப் புத்தகம் எப்படி எழுதப்பட்டது என்பதை லெனின் விவரிக்கிறார். ‘தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களுடைய வறுமையையும், துன்ப துயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்று விடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றித் தமக்கு முன்பே வெளியாகியிருந்த விஷயங்களையெல்லாம் அவர் படித்தார். கைக்கு அகப்பட்ட அதிகாரபூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தறிந்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845ஆம் ஆண்டு வெளியான ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூல் ஆகும்’.

எங்கெல்ஸுக்கு முன்பே பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வருணித்து பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு உதவி புரியவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏழைமையை அகற்றுவது குறித்து பல கோட்பாடுகளையும் பலர் முன்வைத்துள்ளனர். பல திட்டங்களையும் வகுத்துள்ளனர். ஆனால்,  எங்கெல்ஸின் அணுகுமுறை அவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டது. எப்படி என்பதை லெனின் விவரிக்கிறார்.

ஆங்கில மொழிபெயர்ப்பில்

‘பாட்டாளி வர்க்கம் துன்ப  துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல. அந்த வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை, தடுக்க முடியாதபடி முன்னோக்கிச் செல்கிறது. தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னார்.’ உழைக்கும் மக்களை வாட்டி வதக்கும் அதே பொருளாதார நிலைமை, அவர்களுக்குப் போராடும் உத்வேகத்தையும் வழங்குகிறது என்பதை எங்கெல்ஸ் முதல் முறைõயக அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். அந்த வகையில், இந்தப் புத்தகம் புரட்சிகரமானது.

முதலாளித்துவத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில், எப்படிப்பட்ட ஆயுதம் பயன்படுத்தப்படும்? லெனின் தொடர்கிறார். ‘போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்கு உவியாகக் கொள்ளும்.’ மேலும், ‘தங்களது விடுதலை சோசலிசத்தில் மட்டுமே உள்ளது’ என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துகொள்வார்கள். அவர்களுடைய அரசியல் இயக்கம் இந்த எண்ணத்தை வலுப்படுத்துவதாக இருக்கும் என்றார் லெனின்.

‘அரசியல், தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் லட்சியமாக ஆகும்போதுதான், சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாக இருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன.’

லெனின் தொடர்கிறார். ‘இந்த நூல் முதலாளித்துவத்தின் மீதும் முதலாளி வர்க்கத்தினர் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் பசுமரத்தாணி போல் அது பதிந்தது. எங்கெல்ஸின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது. பலரும் இதிலிருந்து மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையில் பார்த்தால், 1845ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.’

அடிப்படை பிரச்னை பொருளாதாரத்தில் அடங்கியிருக்கிறது என்பதால் தனிச்சொத்து பற்றி எங்கெல்ஸ் விவாதித்ததை லெனின் சுட்டிக்காட்டினார். ‘மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய பொருள்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் சகல தோற்றங்களுக்கும், மனித விருப்பங்களுக்கும், கருத்துகளுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச் சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கின்றது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.

‘சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியதெல்லாம் சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் இடத்தின் காரணமாக, சோஷலிஷத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்றுப்பூர்வமான கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம். அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார்.’

இங்கிலாந்து, எங்கெல்ஸை ஒரு சோஷலிஸ்டாக மாற்றியமைத்தது. அதன் அடையாளமே எங்கெல்ஸ் எழுதிய மேற்கூறிய புத்தகம். ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’, ஜெர்மன் மொழியில் வெளிவந்து நாற்பது ஆண்டுகள் கழித்து, 1887ம் ஆண்டு, நியூ யார்க்கில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இங்கிலாந்தில் 1891ம் ஆண்டு வெளிவந்தது. அதன் முன்னுரையில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘இந்தப் புத்தகத்தின் நூலாசிரியர் அப்போது இருபத்து நான்கு வயது இளைஞராக இருந்தார். அவரது படைப்பில் இந்த இளமையின் நல்ல மற்றும் கெட்ட சாயல் படிந்திருப்பதைக் காணலாம்… அன்றைய இங்கிலாந்தை மட்டுமல்ல இன்றைய இங்கிலாந்தையும் இந்தப் புத்தகம் பிரதிபலிக்கிறது.’ மான்செஸ்டர் குறித்து எங்கெல்ஸ் பதிவு செய்திருந்த சில விஷயங்கள், புத்தகம் வெளியானபிறகு சிறிதளவு மாற்றம் கண்டது உண்மைதான் என்றாலும் பெரும்பாலும் நிலைமை அப்படியேதான் நீடித்தது. இதனை எங்கெல்ஸும் சுட்டிக்காட்டினார்.

காலரா, அம்மை உள்ளிட்ட தொற்று நோய்கள் பல இடங்களில் மலிந்து வருவதைப் பற்றி எங்கெல்ஸ் தன் நூலில் எழுதியிருந்தார். கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தொற்றுநோய் மிக அதிகம் பரவியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். மான்செஸ்டர், லிவர்பூல் ஆகிய பெரும் தொழில் நகரங்களில் கடுமையான காய்ச்சல், காலரா, இடைவிடாத இருமல் ஆகிய நோய்களால் தொழிலாளர்கள் அவதிப்படுவது ஏன்? நோய்களால் இறப்பவர்களின் சதவீதம் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் நான்கு மடங்கு அதிகம் இருப்பது ஏன்?

தொழில் புரட்சிதான் காரணம் என்றார் எங்கெல்ஸ். கார்லிஸ்லே என்னும் தொழில் நகரத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டார். ஆலைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு, 10,000 குழந்தைகளில் 4,408 குழந்தைகள் ஐந்து வயதைத் தொடும் முன்னர் இறந்துபோயினர். 1779 முதல் 1787 வரையிலான கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட எண்ணிக்கை இது. ஆலைகள் அமைக்கப்பட்டபிறகு இந்த எண்ணிக்கை 4,738 ஆக உயர்ந்தது. வயதானவர்களில், 10,000 பேரில் 1,006 பேர் 39 வயதைத் தொடும் முன்னர் இறந்துபோயினர். ஆலைகள் அமைக்கப்பட்ட பிறகு, இறப்பு எண்ணிக்கை 1,261 ஆக உயர்ந்தது.

ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்குள் இங்கிலாந்தின் நிலைமை சற்றே மாறிப்போனது உண்மை. தொழிலாளர் மத்தியில் தொற்றுக்கிருமிகள்  பரவுவது தங்களுக்கும் ஆபத்தானதே என்பதை உணர்ந்த இங்கிலாந்து பூர்ஷ்வாக்கள், சுகாதாரம் குறித்த பிரசாரத்தைத் தொடங்கினர். குப்பைக்கூளங்களாலும் சாக்கடைகளாலும் நிரம்பியிருந்த தொழிலாளர் குடியிருப்புகள், தூய்மையின் அவசியத்தைப் பின்னர் உணர்ந்துகொண்டன.

ஆரம்பகட்ட முதலாளித்துவச் சுரண்டலில் இருந்து வளர்ந்து இன்னொரு கட்டத்தை இங்கிலாந்து அடைந்துவிட்டது. ஆனால், அந்த இடத்துக்கு ஜெர்மனியும் பிரான்ஸும் அமெரிக்காவும் போட்டியிடுகின்றன என்றார் எங்கெல்ஸ். இங்கிலாந்தின் யதேச்சதிகாரத்தை இந்நாடுகள் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் நிலவிவந்த சமூகச் சூழல் தற்போது இந்த நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் நிலவிவருவதைக் காணலாம். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி முன்னர் இங்கிலாந்தில் தொழிலாளர்கள் போராடியதைப் போலவே அமெரிக்காவில் இப்போது தொழிலாளர்கள் போராடிவருகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார் எங்கெல்ஸ்.

மான்செஸ்டர் நகரின் முரண்பாடுகளைப் படம் பிடிக்கும் அற்புதமான ஆவணமாக எங்கெல்ஸின் புத்தகம் பல்வேறு பிரிவினராலும் கொண்டாடப்பட்டது. ஒரு நகரையும் அதில் வசிக்கும் இரு முரண்பட்ட மக்கள் வர்க்கத்தையும் எங்கெல்ஸ் ஆதாரப்பூர்வமாகத் தன் நூலில் கண்முன்  நிறுத்தினார். நோயும் நொடியும் செழிப்பும் செல்வமும் அருகருகே வாழ முடியும் என்று அவர் அறிவித்தார். மான்செஸ்டரை வேறு பல விக்டோரிய நகரங்களுடன் ஒப்பிட்டு அலசியதன் மூலம், இங்கிலாந்து சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எங்கெல்ஸால் அளிக்கமுடிந்தது. அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழிலாளர்கள் பற்றிய அலசல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

ஒரு வர்க்கம் இன்னொன்றை எப்படி அடக்கியாள்கிறது என்பதையும், பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் உழைக்கும் மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதையும் எங்கெல்ஸின் இப்புத்தகம் திட்டவட்டமாக விவரித்தது. தொழிலாளர்களின் கையடக்க அரசியல் வழிகாட்டியாகவும் இந்நூல் விரைவில் மாறிப்போனது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 17

 

போராடும் பிரிட்டிஷ் மக்கள்

எங்கெல்ஸுக்கு இப்போது பிரிட்டனில் பல நண்பர்கள் உருவாகியிருந்தனர். சாகன இயக்கத்துடனும் நல்ல தொடர்பு ஏற்பட்டிருந்தது. இயக்கத்தில் உள்ள பலரிடம் எங்கெல்ஸ் நெருங்கிப் பழகி, தன் கரூத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தார். இயக்கத்தின் பத்திரிகைக்கு எங்கெல்ஸ் கட்டுரைகள் எழுதித் தந்தார்.  சாசன இயக்கத்தில் அவர் ஓர் உறுப்பினர் கிடையாது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

ராபர்ட் ஓவனின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்லும் சோஷலிச அமைப்பு ஒன்று பிரிட்டனில் செயல்பட்டு வந்தது. (ஓவனின் சோஷலிசத்தை கற்பனாவாத சோஷலிசம் என்று அழைக்கலாம். எதிர்கால சமூகம் குறித்து ஓவன் உருவாக்கிய கருத்தாக்கம், நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்ததால் இந்தப் பெயர் கிடைத்தது). எங்கெல்ஸ் இவர்களையும் சென்று சந்தித்தார். சாசன இயக்கம் முன்வைத்த புரட்சிகர கருத்துகளும் ஓவனின் சோஷலிச சிந்தனைகள்   மான்செஸ்டரில் பல பகுதிகளில் பரவியிருந்ததை எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.

தன் அனுபவங்களை ஒரு ஜூரிச் இதழக்கு மே தொடங்கி ஜூன் 1843 வரை தொடர்ச்சியாக எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ். ‘இங்கிலாந்தில் இருந்து கடிதங்கள்’ என்னும் தலைப்பில் அவை வெளிவந்தன. உழைக்கும் மக்களிடம் இருந்தும் அவர்களுடைய போராட்டத்தில் இருந்தும் என் கட்டுரைகள் பலம் பெறுகின்றன என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். சோஷலிஸ்டுகளையும் சாசன இயக்கத்தினரையும் எங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ரூஸோ, வால்டேர் ஆகிய 18ம் நூற்றாண்டு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே என்றார்.

அதே சமயம், இந்த இரு இயக்கத்தின் குறைபாடுகளையும் எங்கெல்ஸ் கண்டறிந்து வெளிப்படுத்தினார். சாசன இயக்கமும் சோஷலிச இயக்கமும் பிரிட்டனைச் சுற்றியே இயங்கி வருகின்றன. பிரிட்டனில் நடைபெறும் போராட்டங்களையும், பிரிட்டிஷ் தொழிலாளர்களின் பிரச்னைகளையும் அவை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் போராட்டக் களம் மிகப் பெரியது. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இயக்கம் பரவிக்கொண்டிருக்கிறது. அதை நாம் கண்காணிக்கவேண்டும். கற்றுக்கொள்ளவேண்டும். நம் பார்வையை விரிவாக்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் சோஷலிச சிந்தனைகளை பிரிட்டனின் சாசன இயக்கத்தினரும் சோஷலிச இயக்கத்தினரும் கிரகித்துக்கொள்ளவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார். வெவ்வேறு நிலப்பரப்புகளில் பரவியிருக்கும் ஒத்த கருத்தாக்கம் கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைந்து விவாதிக்கும்போது அறிவுப்பரப்பு மேலும் விரிவாகும் என்று எங்கெல்ஸ் நம்பினார்.

நவம்பர் 1843ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய ஒரு கட்டுரை கம்யூனிசம் குறித்த அவருடைய தொடக்ககால சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. பிரிட்டிஷ் சோஷலிச இயக்கத்தின் ஆங்கில ஏடான The New Moral World-ல் வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு, Progress of Social Reform on the Continent. பிரிட்டன் சோஷலிஸ்டுகள் மத்தியில் இந்தக் கட்டுரைக்கு உவப்பான வரவேற்பு கிடைத்தது. அதே ஆண்டு, தி நார்தர்ன் ஸ்டார் என்னும் பத்திரிகை இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.

ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகளை மேற்கூறிய கட்டுரையில் எங்கெல்ஸ் ஆராய்ந்தார். ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ். இந்த மூன்று நாடுகளும் தொழில்மயமாக்கலில் ஆர்வம் செலுத்துகின்றன. கனரக தொழிற்சாலைகள் பலவற்றை இந்த நாடுகள் உருவாக்கி வருகின்றன. பெரும் செல்வந்தர்களும் அரசுக் குடும்பத்தினரும் இந்நாடுகளில் பகட்டாக வசிக்கின்றனர். மற்றொரு பக்கம், உணவுக்கு வழியின்றி ஏழைகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சமனற்ற நிலை. கொடூரமான சுரண்டல். விளைவாக, உழைப்பாளிகளுக்கும் ஆலை அதிபர்களுக்கும் இடையில் போராட்டங்கள் வெடிக்கின்றன. பொருளாதார மாற்றம் வேண்டியும் அரசியல் மாற்றம் வேண்டியும் போராட்டங்கள் வலுக்கின்றன. நிலவிவரும் சமூக நிலை மாறவேண்டும் என்று இந்த மூன்று நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர். புரட்சி மட்டும்தான் அதை சாத்தியமாக்கும் என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

எங்கெல்ஸை ஆச்சரியப்படுத்திய விஷயம் புரட்சி குறித்து அவர்கள் எடுத்த முடிவு. ஒரே சமயத்தில், பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனியும் இந்த முடிவை எடுத்திருக்கிறது வியப்பல்லவா? எப்படிச் சாத்தியமானது? இத்தனைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த மூன்று நாடுகளுக்கு இடையில் எந்தத் தொடர்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனில், இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? கம்யூனிசம் என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். தவிர்க்கமுடியாத விளைவு. கம்யூனிசம் குறிப்பிட்ட நாட்டுக்குத்தான் ஒத்துவரும் என்பது போன்ற கருத்துகள் தவறானவை. சமூகச் சூழல்தான் கருத்தாக்கங்களை உருவாக்குகிறது.

நடைபெற்றுக்கொண்டிருப்பது பொருளாதார சமநிலைக்கான போராட்டம். சமூகப் போராட்டம். உரிமைகளுக்கான போராட்டம். அந்த வகையில், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் ஒன்றிணையவேண்டும். விவாதிக்கவேண்டும். அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். மூன்று நாடுகளையும் ஒன்றிணைக்கும் விஷயங்கள் என்னென்ன, பிரிக்கும் விஷயங்கள் என்னென்ன போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

எங்கெல்ஸ் தொடங்கிவைத்தார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலும் பரவியிருக்கும் வெவ்வேறு விதமான கற்பனாவாத சோஷலிச, கம்யூனிச சிந்தனைகளைத் திரட்டி சேகரித்து வாசித்தார். ஒவ்வொன்றிலும் உள்ள நிறை, குறைகளை சீர்தூக்கிப் பார்த்தார். பிரான்ஸில், செயிண்ட் சைமன், சார்லஸ் ஃபூரியர் இருவருடைய சிந்தனைகளையும் எங்கெல்ஸ் ஆர்வத்துடன் வாசித்தார். சைமனின் எழுத்துகளில் படர்ந்திருக்கும்  உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள் அவர் சிந்தனைகளை பலவீனமாக்கியுள்ளன என்றார் எங்கெல்ஸ். பொருளாதாரச் சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ஃபூரியரின் சமூகத் தத்துவத்தால் எங்கெல்ஸ் கவரப்பட்டார். அதே சமயம், சொத்துடைமை குறித்து அவர் வந்தடைந்த முடிவுகள் தவறானவை என்றார். இருவருக்கும் பொதுவான ஒரு குறைபாட்டை எங்கெல்ஸ் கண்டறிந்தார். செயிண்ட் சைமன், ஃபூரியர் இருவரும் அரசியல் துறையை நிராகரித்துவிட்டனர். எனவே, அவர்களுடைய வழிமுறைகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவையாக அமைந்துவிட்டன.

மற்றொரு முக்கியச் சிந்தனையாளரான, பிரௌதனின் சிந்தனைகளால் எங்கெல்ஸ் ஈர்க்கப்பட்டார். தனிச்சொத்துடைமை குறித்தும் போட்டி மனப்பான்மை குறித்தும் ஏழைமை குறித்தும் பிரௌதன் கொண்டிருந்த கருத்துகள் புரட்சிகரமானவை என்று அவர் நம்பினார். விரைவில் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூகத்தை புரோதன் விமரிசனம் செய்திருந்தாலும், தொழிலாளர்களுக்காக அவர் முன்வைத்த தீர்வு யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. அந்த வகையில், பிரௌதனின் தத்துவமும் கற்பனாவாதத் தன்மை கொண்டிருந்தது.

ஜெர்மானிய சிந்தனையாளரான, வில்ஹெம் வீட்லிங் (Wilhelm Weitling) செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கற்பனாவாத சோஷலிசத்தையே அவரும் முன்வைத்தார் என்றாலும், ஜெர்மானிய கம்யூனிச சிந்தனையின் தொடக்கப்புள்ளி அவரே என்று பாராட்டினார் எங்கெல்ஸ். மற்றபடி, ஜெர்மனியின் இளம் ஹெகலியவாதிகளின் கருத்துகள் எங்கெல்ஸுக்கு முன்னரே பரிச்சயமாகியிருந்தன. இவர்கள் போக, ஜெர்மனியின் முக்கியச் சிந்தனையாளர்கள் என்று எங்கெல்ஸ் சிலரை ஏற்றுக்கொண்டார். ஹெஸ், ரூஜ், ஹெர்வே,‘மார்க்ஸ் மற்றும் நான்.’

League of the Just என்னும் ரகசிய அமைப்பின் தலைவர்களை 1843ம் ஆண்டு மே மாதம் எங்கெல்ஸ் சந்தித்தார். பல ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்களில் மூவரை எங்கெல்ஸ் சந்தித்து உரையாடினார். ஒருவர் அச்சு கோக்கும் பணியில் இருந்தவர். இரண்டாமவர், செருப்பு தைப்பவர். மூன்றாமவர், கடிகாரம் செய்பவர். ‘நான் முதல் முதலில் சந்தித்த மூன்று  புரட்சிகர தொழிலாளர்கள் இவர்களே. அவர்களுடைய கருத்துகளை என்னால் ஏற்கமுடியாமல் போனாலும், மூவரும் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களை என்னால் மறக்கவே முடியாது.’  எங்கெல்ஸ் அவர்களுடைய பெயர்களை நன்றியுடன் குறித்து வைத்தார். Karl Schapper, Heinrich Bauer, Joseph Moll. எங்களுடன் சேர்ந்துவிடுங்கள் என்று இந்த ரகசிய இயக்கத்தினர் கேட்டுக்கொண்டபோது எங்கெல்ஸ் மறுத்துவிட்டார். மன்னிக்கவும், நாம் வெவ்வேறு பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.

கற்பனாவாதத்தை எங்கெல்ஸ் முற்றாக இன்னமும் நிராகரிக்கவில்லை. கம்யூனிசத்தின் மீது அவருக்கு நாட்டம் இருந்தாலும், மயக்கம் அளிக்கும் கற்பனாவாத சோஷலிச உலகத்தின் மாயையில் இருந்தும் அவர் மீளவில்லை. ஓவனின் சோஷலிசம், சாசன இயக்கம், நாத்திகவாதம், பொருள்முதல்வாதம் என்று பல சிந்தனைகளின் தாக்கத்துக்கு ஆளாகியிருந்த எங்கெல்ஸ், கம்யூனிசம் குறித்து ஒரு தெளிவான பாதையை அமைத்துக்கொண்டார். பிரிட்டன் அளித்த அபூர்வமான அனுபவங்கள் அதைச் சாத்தியமாக்கின.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 18

 

தாமஸ் மால்தஸ்

தீவிர வாசிப்புக்கும் ஆய்வுக்கும் பிறகே முதலாளித்துவத்தை வெறுக்க ஆரம்பித்தார் எங்கெல்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் தனிச்சொத்துடைமை. இதை வைத்தே முதலாளித்துவம் தன் தத்துவத்தை உருவாக்கிக்கொள்கிறது. இதை வைத்தே சாம்ராஜ்ஜியங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை வைத்தே, உற்பத்தி முறை உருவாக்கப்படுகிறது. ஒரு பிரிவினருக்கான முன்னேற்றம், வளம், செல்வம் ஆகியவை தனிச்சொத்தில் இருந்தே உருவாகின்றன.

முதலாளித்துவம் விரும்பும் தத்துவத்தை பூர்ஷ்வாக்கள் உருவாக்கித் தருகிறார்கள்.  முதலாளித்துவ உற்பத்தி முறையும் தனிச்சொத்துரிமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பூர்ஷ்வாக்களின் அரசியல் பொருளாதாரம், தனிச்சொத்துடைமையை அங்கீகரிக்கிறது. தனிச்சொத்து தீமையானது, வெறுக்கப்படவேண்டியது என்று பிரௌதன் போன்ற சிலர் கருதினாலும், அவர்கள் முதலாளிகளின் மனமாற்றத்தை எதிர்நோக்குபவர்களாக இருந்தனர். முதலாளிகள் தாமாகவே திருந்தவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

எங்கெல்ஸ், முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் தீமைகளைப் பட்டியலிட்டதோடு நின்றுவிடாமல், அதை ஒழிப்பதற்கான சமூகப் போராட்டங்கள் குறித்தும் சிந்தித்தார். அந்த வகையில் அவர் மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டார். தத்துவ முழக்கங்களை அல்ல, செயல்பாடுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். வார்த்தை எதிர்ப்புகளுக்கு அல்ல, வீதியில் திரண்டு எதிர்ப்பதற்கான தத்துவ அடித்தளத்தை உருவாக்குவதில் அவர் அக்கறை கொண்டார்.

உதாரணத்துக்கு, முதலாளித்துவம் நேர்மையான வழியில் பொருள் சேர்க்காது என்றும், அவ்வாறு சேர்த்திருந்தால் அது திருட்டே என்றும் முழங்கினார் பிரௌதன். வசீகரமான ஒரு வாதம்தான். ஆனால், இந்தத் திருட்டை எப்படி கட்டுப்படுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. திருடப்பட்டதை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்தும் அவர் யோசிக்கவில்லை. எங்கெல்ஸ், சமூகப் புரட்சியை முன்மொழிந்தார். களவாடப்பட்டதை வலுக்கட்டாயமாக கவரவேண்டும் என்றார். அது வரலாற்று தேவை என்று நிரூபித்தார்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உள்ள முரண்பாடுகளை எங்கெல்ஸ் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். தன் வாதத்துக்கு வலுவூட்ட, பெரிய அளவிலான உற்பத்தி முறைக்கும் சிறிய அளவிலான உற்பத்தி முறைக்கும் இடையில் நடைபெறும் போராட்டங்களை எங்கெல்ஸ் விவரித்தார். பிரிட்டன் உள்பட பல நாடுகளில், பெரும் முதலாளிகளுக்கும் சிறு முதலாளிகளுக்கும் இடையில் நடைபெறும் தொழில் ரீதியான மோதல்களை அவர் கவனித்தார்.

சந்தையில் போட்டிகள் இயல்பானது என்னும் முதலாளித்துவ வாதம் இங்கே பரிதாபகரமான நிலையில் அடிபட்டுப் போவதை எங்கெல்ஸ் கண்டார். சிறிய அளவில் நடத்தப்படும் உற்பத்தி ஆலைகள், பெருமுதலாளிகளால் வாங்கப்படுவது (அதாவது, விழுங்கப்படுவது) இயல்பாக இருந்தது. விவசாயத்தை எடுத்துக்கொண்டால், சிறிய ஆலைகள் பெரிய ஆலைகளோடு இணைந்துகொண்டன. தொழில்துறையிலும் அவ்வாறே.  குறிப்பிட்ட துறை என்றில்லாமல் அனைத்து துறைகளிலும் இது ஒரு பொது வழக்கமாகவே இருந்தது.

ஆண்டாண்டுகாலமாக இயங்கிவந்த சிறிய ஆலைகளின் கதி ஏன் இவ்வாறு ஆகவேண்டும்? பெரும் முதலாளிகள் போட்டியிட்டா சிறு முதலாளிகளை வென்றனர்? இதுதான் முதலாளித்துவம் முன்வைக்கும் ஆரோக்கியமான போட்டி முறையா? பழம்பெறும் அமைப்புகள் காலாவதியாவது இந்தப் போட்டிகளின் அடிப்படையில்தானா? போட்டி, பெரும் முதலாளிகளுக்கும் சிறு முதலாளிகளுக்கும் இடையில் அல்ல, பெரும் முதலாளிகளும் உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையில் மட்டுமே நிலவுகின்றனது. அதுவும், முதலாளித்துவ அமைப்பு குறிப்பிடும் வகையில் அல்ல என்றார் எங்கெல்ஸ்.

அனைத்து முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தப் போட்டிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாளிகளுக்கு இடையிலான போட்டிமுறை தீங்கானது என்பது இவர்கள் வாதம். அதற்கு மாற்றாக அவர்கள் ஏகபோகத்தை முன்னிறுத்தினர். ஒரு சில பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமை கொண்டிருப்பது போதுமானது. அநாவசியமாக, பெரும் முதலாளிகள், சிறு முதலாளிகள் உருவாகி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை இது தடுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

இந்த எதிரெதிர் வாதங்களை ஆராய்ந்த எங்கெல்ஸ், ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தார். முதலாளித்துவ போட்டிமுறைக்கும் ஏகபோகத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு இல்லை. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளது. ஒன்றையொன்று நம்பியும் சார்ந்தும் உள்ளது. மேலும், முதலாளிகளுக்கு இடையிலான போட்டிமுறை என்பது காட்டுத்தனமானது. வலிமையான மிருகம், வலு குன்றியதை வீழ்த்தி உண்பது போல், செல்வந்தர்கள் சிறு பணக்காரர்களைத் தாக்கியழிக்கிறார்கள். இங்கு வலிமையானதே ஒவ்வொருமுறையும் வெல்லும்.

மக்கள் தொகைப் பெருக்கம்

அனைத்துக்கும் அடிப்படை, பணம். அதாவது, தனிச்சொத்து. முதலாளித்துவ பாணியிலான சொத்துரிமை நீடிக்கும்வரை, ஏகபோகம் நீடிக்கும் என்றார் எங்கெல்ஸ்.சிறிய உற்பத்தியாளர்களுக்கும் பெரும் உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான போட்டிகளும் நீடிக்கும். மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு இடையிலும் போட்டி நிலவும். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும், தொழிலாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும்கூட போட்டி நிலவும். இந்தப் போட்டியில் பலமிழந்தவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

முதலாளித்துவமும் தனிச்சொத்துடைமையும் ஒன்றுசேர்வதால், செல்வம் மையப்படுத்தப்படும். விளைவாக, ஏழைமை பெருகும். பூர்ஷ்வாக்களின் சமூகத்தில் நிலவும் இந்த முரண்பாடுகள் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சமூகம் பிளவுபடும். மக்கள் சிதறுவார்கள்.  மொத்தத்தில், முதலாளித்துவம் ஆரோக்கியமற்ற போட்டியை மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. இந்தப் போட்டிகள் மறையவேண்டுமானால், தனிச்சொத்துடைமை மறையவேண்டும் என்றார் எங்கெல்ஸ்.

ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய பொருளாதாரச் சிந்தனையாளர்களின் படைப்புகளை வாசித்தபோது அவருக்கு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. அதிர்ச்சியளித்தவர், தாமஸ் மால்தஸ். மக்கள்தொகை குறித்து அவர் வழங்கிய மிகப் புகழ்பெற்ற தத்துவம் எங்கெல்ஸின் சிந்தனையைக் கலைத்துப்போட்டது. ஏழை மக்கள் ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள்? மால்தஸ் அளித்த விடை மிகவும் எளிமையாக இருந்தது. ‘ஏழைகள்.’

தன் வாதத்தை அவர் கணிதம் கொண்டும் பொருளாதாரம் கொண்டு நிறுவியிருந்தார் மால்தஸ். மக்கள் தொகை பெருக்கத்தை அவர் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நாளும் மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்கிறது. இந்த அதிகரிப்பை geometrical progession என்று அவர் அழைத்தார். அதாவது, 2, 4, 8, 16, 32, 64, 128 என்னும் விகிதத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே இருக்கிறது. இரண்டோடு இரண்டைப் பெருக்கினால் நான்கு. நான்கோடு இரண்டைப் பெருக்கினால், எட்டு. இந்த ரீதியில் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது.

மக்கள் தொகையைப் போலவே மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை சக்திகளின் உற்பத்தியும்கூட அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாட்டிலும். இந்த அதிகரிப்பை, arithmetical progession என்று மால்தஸ் அழைத்தார். அதாவது, 2, 4, 6, 8, 10, 12, 14 என்னும் விகிதத்தில் உற்பத்தி சக்தி பெருகிக்கொண்டிருக்கிறது. இரண்டோடு இரண்டை, அத்தோடு இரண்டை, மேலும் இரண்டை என்னும் ரீதியில் இந்த எண்ணிக்கை உணர்ந்துகொண்டிருக்கிறது.

இரண்டையும் ஒப்பிடும்போது, வித்தியாசம் புரியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கும், அந்த மக்களின் அடிப்படை வாழ்வாதார உற்பத்தி பெருக்கத்துக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கிறது. ஈடுசெய்யவே முடியாத அளவுக்கு இந்த இடைவெளி அதிகரித்திருக்கிறது. மோசம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் இந்த இடைவெளி சீராக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னை, அதிகபட்ச மக்கள் தொகை பெருக்கம் என்றார் மால்தஸ். எவ்வளவுதான் தொழில்நுட்பம் முன்னேறினாலும், தொழிற்சாலைகள் பெருகினாலும், தொழிலாளர்கள் பெருகினாலும், மக்கள் தொகை பெருக்கத்தை பொருளுற்பத்தி தொட்டுவிடமுடியாது. அதே போல், மக்கள் தொகை பெருக்கத்தையும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்தமுடியாது.

இயற்கை சில வழிகளைக் கையாள்கிறது. நோய்கள், தொற்று வியாதிகள் போன்றவை பரவும்போது, கொத்துக்கொத்தாக மனிதர்கள் இறந்துபோகிறார்கள். இயற்கை மரணத்தைக் காட்டிலும் இதுபோன்ற மரணங்கள் அதிகபட்ச இழப்பைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற இயற்கை தாக்குதல்கள் பெருகும்போது, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுகிறது. மனிதர்களேகூட இதை செய்யமுடியும். போர்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உதவும் என்றார் மால்தஸ்.

சமூகத் தளத்தில், ஒரு பக்கம் பணக்காரர்களும் இன்னொரு பக்கம் ஏழைகளும் உருவாவதற்குக் காரணம் இயற்கையாகவே அமைந்திருக்கும் இடைவெளிதான்.  இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் தென்படும் அதே இடைவெளி. ஏழைமை பெருகிப்போவதற்கும் பசி பெருகிப்போவதற்கும் இயற்கையே காரணம். இயற்கை நிகழ்வு என்பது இயல்பானது. மாற்றமுடியாதது. இந்த இயற்கை விதியை தற்போதைய சூழலுக்கும் பொருத்திப் பார்த்தார் மால்தஸ். தொழிலாளர்கள் மோசமான சூழலில் வேலை செய்ய நேரிட்டதற்கும் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டு சிரமப்படுவதற்கும் காரணம், மக்கள் தொகை பெருக்கம். குறைவான இயற்கை வளத்தை வைத்துக்கொண்டு, குறைபாடுள்ள தயாரிப்பை வைத்துக்கொண்டு அனைவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடுவது எப்படிச் சாத்தியமாகும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 19

 

ஏழைமை தவிர்க்க இயலாதது

மக்கள் தொகை பெருக்கம் பற்றிய தாமஸ் மால்தஸின் தத்துவத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொதுப்புத்தியைச் சமாதானப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது அவரது வாதம். முதலாளிகளையும் இது திருப்திபடுத்தியது. நாம் என்ன செய்யமுடியும், மக்கள் தொகை பெருகுவதால்தானே ஏழைமை பெருகிறது என்று அவர்கள் பிரச்னையில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்கள். 1798 முதல் 1826 வரை, மால்தஸின் An Essay on the Principle of Population ஆறு பதிப்புகள் கண்டது.

தத்துவார்த்த ரீதியில், ஐரோப்பாவில் அப்போது நிலவிவந்த பெரும்பான்மையினரின் கருத்துகளோடு மால்தஸ் முரண்பட்டார்.  ஐரோப்பா தங்குதடையற்ற வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்னும் கருத்து அப்போது ஆதிக்கத்தில் இருந்தது.  சமூகத்தை மேன்மைப்படுத்துவதற்கு அளவற்ற வழிகள் உள்ளன, மனித குலம் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்றார் வில்லியம் காட்வின் என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் (தத்துவ ஆசிரியர், பத்திரிகையாளர்). சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவேண்டுமானால், மேட்டுக்குடியினரிடம் உள்ள சொத்துக்களைப் பறித்து, பொதுவில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்றார் காட்வின்.

பிரெஞ்சு தத்துவவியலாளர் ரூஸோவின் கருத்தும் கூட இதுவே. மனிதர்கள் தங்களைப் பிணைத்துள்ள சங்கிலிகளில் இருந்து விடுபடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் ரூஸோ. அதே சமயம், மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று இவர் நம்பினார். சமூக ஒப்பந்தம் மூலம் மனிதர்களைப் பிணைத்துவிடமுடியும் என்பது ரூஸோவின் கருத்து.  மொத்தத்தில், சில பல பிரச்னைகளைக் களைந்துவிட்டால் சமூகம் சரியாகிவிடும் என்று ஐரோப்பியா நம்பியது.

பிரச்னைகள் தீராது, பெருகவே செய்யும் என்றார் மால்தஸ். காட்வினின் வாதத்தை மால்தஸ் நிராகரித்தார். செல்வந்தர்களின் உடைமைகளைப் பறிப்பதன் மூலம் பிரச்னை தீராது. உங்களால் எவ்வளவு செல்வத்தைப் பகிர்ந்தளிக்கமுடியும்? ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும் என்று ஆகிவிட்டால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுமா? நீங்கள் குறிப்பிடும் அந்தக் கனவுலகம் சாத்தியம் தானா? அது நம் காலத்தில் ஏற்பட்டுவிடுமா? அப்படியே ஏற்பட்டாலும் அந்தக் கனவுலகில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் போடும் எந்தவொரு திட்டமும் செயல்படாது. எந்தவொரு புரட்சிகர நடவடிக்கைக்கும் இடமில்லை.

’ஏழைகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது’

நோய், யுத்தங்கள் ஆகியவை பெருகினால் ஒழிய மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்றார் மால்தஸ். இறை நம்பிக்கை மிகுந்த மால்தஸ், இந்தப் பிரசன்னைக்குக் காரணம் கடவுளே என்றார். மக்கள் தொகை பெருக்கத்தைக் கடவுள் நம் மீது திணித்திருக்கிறார். நமக்குப் பாடம் புகட்டுவதற்காக இந்த ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏழைகள் இருந்திருக்கிறார்கள். இருக்கவே செய்கிறார்கள். இதைத் தவிர்க்கமுடியாது.

மக்களின் இனப் பெருக்கத்தைத் தடுப்பது மட்டும் நம் கையில் உள்ள ஒரே வழி. போரும் வியாதிகளும் இறப்பு விகிதத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கும்போது, நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும். குழந்தை பிறப்பைத் தடுக்கும் முறைகளை நாம் கடைபிடிக்கவேண்டும். கருக்கலைப்பு அதிகரிக்கப்படவேண்டும். இச்சைகளை அடக்கவியலாத பட்சத்தில், பாலியல் சார்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  திருமணத்தையும் இயன்ற அளவுக்குத் தள்ளிப்போடவேண்டும். சிறந்தது, பிரமச்சரியத்தைக் கடைபிடிப்பது.

சரி கடவுள் எதற்காக ஏழைமையை உருவாக்கவேண்டும்?  எதற்காக உணவற்றவர்களை உருவாக்கவேண்டும்? எதற்காகப் பசியையும் பிணியையும் பரவச் செய்யவேண்டும்? நம்மை நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்றார் மால்தஸ். நீ ஒழுக்கமாக வாழ மறுத்தால் இதுதான் உன் கதி என்று காட்டி மிரட்டுவதற்காக இந்தச் சபிக்கப்பட்டவர்களை அவர் உருவாக்கினார். கடினமாக வேலை செய்யாவிட்டால் உனக்கு உணவு கிடைக்காது என்னும் உண்மையை போதிப்பதற்காக உணவற்றவர்களை அவர் சிருஷ்டித்திருக்கிறார்.

எதற்காக தீமையை உருவாக்கினார்? நன்மையின் அவசியத்தை உணர. நன்மையை நாடிச் செல்லவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க. அந்த வரிசையில், உணவுத் தட்டுப்பாடு இருப்பதும் அவசியமே. மக்கள் தொகை பெருகுவதற்கு ஏற்ப உற்பத்தியும் உணவும் பெருகினால் என்ன ஆகும்? மனிதன் காட்டுமிராண்டியாகவே வாழவேண்டியிருக்கும். வேறு எதிலும் அவனுக்கு நாட்டம் போகாது. எதையும் புதிதாக முயன்று பார்க்கமாட்டான். போராடும் எண்ணம் இருக்காது. நாளடைவில் அவன் துருப்பிடித்துவிடுவான். இந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் கடவுள் சில இடைவெளிகளை உருவாக்கினார். மனிதன் எட்டிப்பிடிக்கமுடியாத அளவுக்கு உணவுப் பொருள்கள் சுருங்கின. மற்றொரு பக்கம், மனித உற்பத்தி பெருகிக்கொண்டே சென்றது.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அதிலுள்ள சூசகமான உட்கருத்தை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. குறைந்த கூலி பெற்று வரும் தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி வழங்கினால் என்ன ஆகும்? அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும், சரி. பசியும் பட்டினியும் மறையும், சரி. அடுத்து? குழந்தை பிறப்பு அதிகரிக்கும் அல்லவா? கூடுதலாகக் குழந்தைகள் பெற்றெடுத்தாலும் அவர்களுக்கு உணவளிக்கமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை பெற்றுவிடுவார்கள் அல்லவா? அது மட்டுமா? பிறப்பு விகிதம் பெருகுவது போல் இறப்பு விகிதமும் குறைய ஆரம்பிக்கும். இது ஏன் ஒருவருக்கும் புரியவில்லை?

எங்கெல்ஸுக்குப் புரிந்தது. மால்தஸின் வாதம் எந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.  எனவே, மால்தஸின் ‘கண்டுபிடிப்புகள்’ ‘இகழ்ச்சியானவை’ என்றார். மனித குலத்தையும் இயற்கையையும் மால்தஸால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ‘எனவே, அவருடைய தத்துவம் அர்த்தமற்றதாக இருக்கிறது.’

மால்தஸின் சித்தாந்தம் பிரிட்டிஷ் உயர் வர்க்கத்தினரின் வரவேற்பைப் பெற்றிருந்ததை எங்கெல்ஸ் உணர்ந்திருந்தார். ஏழைகளுக்கு இருப்பதைப் போன்ற நெருக்கடிகள் இவர்களுக்கு இல்லை. எத்தனை பெரிய குடும்பத்தையும் இவர்களால் நிர்வகிக்கமுடியும். ஒரு ஏழை, பெருகிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரின் வயிற்றை நிரப்ப தொடர்ச்சியற்ற போராட்டங்களை நடத்துகிறான் என்னும் மால்தஸின் வாதம் இவர்களிடம் எடுபடாது. திருமணத்துக்குப் பிறகும் இவர்களுடைய சல்லாப வாழ்க்கை தொடர்கிறது. ஆசைக் காதலிகள், ரகசிய குடும்பங்கள் என்று உல்லாசமாக இருக்கிறார்கள். ஒரு ஏழைக்கு எழக்கூடிய அறம் சார்ந்த கேள்விகள் இவர்களுக்கு முளைக்காது. காரணம், இவர்களிடம் பணம் இருக்கிறது. ஏழைகள் வர்க்கம் பெருகினால் அது ஏழைகளைப் பாதிக்கும். பணக்காரர்கள் பெருகினால் பாதிப்பு இல்லை.

மால்தஸின் கருத்தை அரசும் செல்வந்தர்களும் தங்களுக்குச் சாதகதமாக, சாமர்த்தியமாகப்  பயன்படுத்திக்கொண்டதை எங்கெல்ஸ் கண்டார். ஏழைகள் சட்டம், 1834 என்றொரு சட்டம் பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஆதரவற்ற ஏழைகள் அரசாங்கத்தை அணுகவேண்டும். அரசாங்கம் அவர்களுக்கு சிறப்பு பணிமுகாம்களை  அமைத்துக்கொடுக்கும். பணிமுகாமின் மற்றொரு பெயர், சிறைச்சாலை. கடுமையான சூழலில் இவர்கள் வேலை செய்யவேண்டியிருக்கும். பெயருக்கு, சொற்ப கூலியை அரசு அளிக்கும். இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு இரட்டிப்பு நன்மை கிடைத்தது. ஒன்று, சுலப ஊதியத்தில் அதிகப் பணி. இரண்டு, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்னும் நல்ல பெயர்.

மால்தஸின் சிந்தனையே இந்தச் சட்டத்தின் அடித்தளமாக இருந்ததை எங்கெல்ஸ் கண்டார். எவ்வளவு முயற்சி செய்தாலும், எவ்வளவு பணம் செலவிட்டாலும், ஏழைமை ஒழியப்போவதில்லை என்றாகிவிட்டது. ஏழைமை மேலும் ஏழைமையைக் கொண்டு வரும். ஏழைகள் ஏழைகளை உற்பத்தி செய்வார்கள். அப்படியிருக்க, எதற்காக அரசு அநாவசியமாக ஏழைகளுக்கு உதவ வேண்டும்? எதற்காக அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கவேண்டும்? எதற்காக அவர்கள் பொருட்டு தேவையற்று சிந்திக்கவேண்டும்?

மால்தஸின் மக்கள் தொகை சித்தாந்தம்,‘பாட்டாளி வர்க்கத்தின் மீது பூர்ஷ்வா வர்க்கம் தொடுக்கும் போர்’ என்றார் எங்கெல்ஸ். மால்தஸின் வாதத்தை இவர் வலுவுடன் எதிர்த்தார். ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் உருவாவதற்குக் காரணம், மக்கள் தொகை பெருக்கமல்ல, முதலாளித்துவம். சமமற்ற பொருளாதார நிலைக்கு இன்னும், இன்னும் என்று துடிதுடிக்கும் முதலாளிகளின் மனப்பான்மையைத்தான் குற்றம் சொல்லவேண்டும். தனிச்சொத்துடைமையைக் குற்றம் சொல்லவேண்டும். முதலாளித்துவத்தின் நோக்கங்களை, லாப வெறியைக் குற்றம் சொல்லவேண்டும். மனித குலம் வாழ்வதற்கான செல்வம் இயற்கையில் இருக்கிறது. ஆனால், அது பரவலாக அனைவரிடமும் இல்லாமல், சில இடங்களில் மட்டும் குவிந்திருக்கிறது என்றார் எங்கெல்ஸ்.

பெருகும் மக்கள் தொகையை ஈடுகட்டும் வகையில் மனிதர்களால் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு, உணவுத் தேவையை ஈடுகட்ட வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டு நமக்குத் தேவையானதை உற்பத்தி செய்துகொள்ளமுடியும். பிரச்னை அதுவல்ல. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களும், விநியோகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் சரியாகப் பங்கிடப்படுகிறதா? பண்டங்களை உருவாக்கும் உழைப்பாளிகளுக்குக் குறைவான கூலியும், உற்பத்திக் கருவிகளைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் ஆலை முதலாளிகள் முழுமையான லாபத்தையும் பெற்றுக்கொள்வது எந்த வகையில் சரியானது?

இந்த ஏற்றத்தாழ்வை, சமமின்மையை யார் உருவாக்கியது? இயற்கையா? கடவுளா? சமூகமா? முதலாளிகள் தானே? உண்மை இவ்வாறிருக்க, ஏன் ஏழைகள் மீது பழி போடவேண்டும்? ஏன் அவர்களை மேலும் வதைக்கவேண்டும்? இயற்கை நியதி என்றும் கடவுளின் சாபம் என்றும் ஏன் அவர்களைக் குழப்பவேண்டும்?

சீற்றத்துடன் எங்கெல்ஸ் முன்வைத்த வாதத்தை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவர் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறதே!



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 20

 

ஆகஸ்ட் 1844ல் எங்கெல்ஸின் பிரிட்டன் வாசம் முடிவுக்கு வந்தது. மான்செஸ்டரில் இருந்து விடைபெற்றார் எங்கெல்ஸ். ஜெர்மனி திரும்புவதற்கு முன்னால் பாரிஸ் சென்று மார்க்ஸைச் சந்திக்க விரும்பினார் எங்கெல்ஸ்.

கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் கிட்டத்தட்ட ஒரே முடிவுக்கு வந்து சேர்ந்ததிருந்த சமயம் அது. மார்க்ஸ் பாரிஸிலும் எங்கெல்ஸ் பிரிட்டனிலும் இருந்தபடி தங்கள் சித்தாந்தங்களை உருவாகிக்கொண்டனர்.  உழைக்கும் மக்களின் எதிர்காலம் குறித்தே இருவரும் சிந்தித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது குறித்தே இருவரும் கனவு கண்டனர். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பரவிக்கொண்டிருக்கும் தொழிலாளர் எதிர்ப்பலைகளைக் கண்டு இருவரும் நம்பிக்கை வளர்த்தனர். உலக நாடுகளின் அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்யும் பேரார்வமும் இவர்களிடம் இருந்தது.

ஆகஸ்ட் மாத இறுதியில் பாரிஸ் வந்து சேர்ந்தார் எங்கெல்ஸ். மார்க்ஸின் இல்லத்துக்குச் (38, Rue Vanneau, Saint Germain)  சென்று சந்தித்தார். கைகுலுக்கிக்கொண்டார்கள். ஒற்றுமைகள் மட்டுமல்ல இருவருக்குமிடையே வேறுபாடுகளும் இருந்தன. எங்கெல்ஸ் நல்ல உயரம். மெலிதான, அழுத்தமாக வாரப்பட்ட தலைமுடி. கட்டுக்கோப்பான உடல்வாகு. நடப்பதில், பேசுவதில், அமர்வதில், பேசுவதில், குரலையும் கையையும் உயர்த்தி ஒரு கருத்தை முன்வைப்பதில் அவரிடம் ஒரு ராணுவ ஒழுங்கு காணப்பட்டது. திட்டமிடப்பட்ட அசைவுகள். திட்டமிடப்பட்ட வார்த்தை பிரயோகங்கள். மேலும் அவரிடம் பிரிட்டிஷாரின் சாயல் தெரிந்தது.

கரியைப் போன்ற கருப்பு நிற முடியும், கூர்ந்து நோக்கும் கண்களும் கொண்டிருந்தார் கார்ல் மார்க்ஸ். சிங்கத்தின் பிடரி போன்ற கேசம் என்று சில ரஷ்யர்கள் வருணித்தனர்.

கட்டுக்கோப்பான உடல் வாகு அல்ல. குள்ளமான உருவம். சுறுசுறுப்புடன் விரைந்து செல்பவராக இருந்தார். உரையாடுவதிலும் பழகுவதிலும் எளிமை இருந்தது. இதற்கு முன் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் இருவரும் சந்தித்திருந்தனர். பத்திரிகைப் பணி தொடர்பாக சில கடிதப் போக்குவரத்துகள் இருந்தன. மற்றபடி தனிப்பட்ட முறையிலான பழக்கம் இல்லை. என்றாலும், இந்தச் சந்திப்பின்போது இருவரும் ஒன்று கலந்து உறவாடினர்.

இருவருமே இப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்தனர் என்பது ஒரு காரணம். மேலும், இருவருமே புரட்சிகரமான சிந்தனையாளர்கள். புரட்சிகர நடவடிக்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றுருதியும் கொண்டவர்கள். நடைமுறையை மாற்றியமைக்கும் துடிதுடிப்பு மிக்கவர்கள். மார்க்ஸுடன் பத்து தினங்கள் தங்கியிருந்தார் எங்கெல்ஸ். உறங்கும் நேரம் தவிர்த்து இருவரும் ஒருநொடியும் பிரிந்திருக்கவில்லை. நூல்கள் குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் ஓயாமல் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.  இருவருடைய சித்தாந்தத் தளமும் ஒன்றாக இருந்தது. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை அவர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள்.

மான்செஸ்டர் குடியிருப்பு அனுபவங்களை எங்கெல்ஸ் மார்க்ஸிடம் விரிவாக பகிர்ந்துகொண்டார். தனது புதிய நூலையும் (The Condition of the Working Class in England in 1844) அவருக்கு அளித்தார். எங்கெல்ஸ் விவரித்த செய்திகள் மார்க்ஸின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தன. உழைக்கும் வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படவேண்டிய அவசியத்தையும் அவருக்கு உணர்த்தின. வரலாற்றில் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களாக உழைப்பாளிகளே இருப்பார்கள் என்னும் நம்பிக்கையை அந்தப் புத்தகம் அவருக்கு ஏற்படுத்தியது. தனது கருத்துகள் எங்கெல்ஸின் கருத்துகளோடு பொருந்திப்போவதையும் அவர் குறித்துக்கொண்டார்.

Vorwarts என்னும் ஜெர்மானிய மொழி பேசும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினரை எங்கெல்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மார்க்ஸ். ஜனவரி 1844ம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்திரிகை அது. ஒரு ஜெர்மானிய ஆலை முதலாளி அதன் உரிமையாளராக இருந்தார். கார்ல் மார்க்ஸ் இந்தப் பத்திரிகையைத் தன் பக்கம் திருப்பிக்கொள்ள விரும்பினார். சில கட்டுரைகளை எழுதி அனுப்பினார். அவை வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதும, மேலும் பல எழுதினார். தொடர்ந்து புரட்சிகரமான எண்ணங்கள் உடையவர்களின் கட்டுரைகள் இதில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. நாளடைவில், வோர்வார்ட்ஸ் இதழின் தன்மை மார்க்ஸ் விரும்பியபடி முற்றிலுமாக மாறியது. உழைக்கும் மக்களின் ஆயுதமாக அது பயன்படுத்தப்பட்டது. முதலாளிகளின் கருவியாக ஆகியிருக்கவேண்டிய ஒரு பத்திரிகை முதலாளி விரோத கருவியாக மாறிப்போனது.

வோர்வார்ட்ஸ் இதழுக்கு எங்கெல்ஸும் எழுதவேண்டும் என்று மார்க்ஸ் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்து அனுபவங்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய இரு கட்டுரைகள் அதில் வெளியாயின. 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அரசியல், சமூக தன்மைகளை எங்கெல்ஸ் இந்தக் கட்டுரைகளில் ஆராய்ந்தார். தொழில் புரட்சி இங்கிலாந்தில் வகித்த பாத்திரத்தையும் அதன் விளைவாக எழுச்சி பெற்ற தொழிலாளர் வர்க்கம் குறித்தும் எங்கெல்ஸ் எழுதினார்.

‘இங்கிலாந்தை எது ஆண்டுக்கொண்டிருக்கிறது தெரியுமா?’ எங்கெல்ஸ் எழுப்பிய கேள்வி இது. ‘சொத்து. சொத்தும் மத்தியதர வர்க்கமும் பிரிட்டனை ஆண்டுகொண்டிருக்கிறது. அங்கே ஏழைகளுக்கு உரிமைகளில்லை. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்பு அவர்களைக் கைகழுவிட்டுவிட்டது. சட்டம் அவர்களை இழிவுபடுத்துகிறது.’

பிரான்ஸில் இயங்கிவந்த ஜனநாயக, சோஷலிச அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள விரும்பினார் எங்கெல்ஸ். மார்க்ஸின் வழிகாட்டுதலின்படி இந்த அமைப்புகள் பற்றி தெரிந்துகொண்டார். அவர்களோடு ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்தார் மார்க்ஸ். பாரிஸில் உள்ள ஒரு கபேயில் (Café de la Régence) இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி விவாதிப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் எங்கெல்ஸை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார் மார்க்ஸ்.

பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அயல் நாடுகளில் இருந்தும் பலர் இந்த கபேயில் ஒன்றுகூடுவது வழக்கம். வோர்வார்ட்ஸ் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற கார்ல் லுத்விக் பெர்னாய்ஸ் என்பவரை எங்கெல்ஸ் இங்கே சந்தித்தார். பிறகு, பாயர்பேக்கின் மொழிபெயர்ப்பாளரையும் சந்தித்தார்.  ரஷ்ய சிந்தனையாளரான மைக்கேல் பகுனின் மார்க்ஸால் கவரப்பட்டு பாரிஸ் வந்திருந்தார். அவரும் அந்த கபேயில் கலந்துரையாடலுக்காக வந்திருந்தார். தொடக்கத்தில் பிரெஞ்சு சிந்தனைகளால் கவரப்பட்ட பகுனின், நாளடைவில் ஹெகலின் தத்துவத்தால் கவரப்பட்டார். ஹெகலிடம் இருந்து மார்க்ஸை வந்தடைந்திருந்தார். மொத்தத்தில், புதிய அனுபவங்களும், புதிய கருத்துகளும், புதிய நாடுகளின் அரசியல் நிலவரங்களும், உழைக்கும் வர்க்கம் அனுபவிக்கும் நெருக்கடிகளும் இந்தக் கலந்துரையாடலின் மூலம் வெளிப்பட்டன.

மார்க்ஸின் வாழ்வில் 1844ம் ஆண்டு பல வழிகளில் முக்கியமானது. பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் (Economic and Philosophical Manuscripts) என்னும் நூலை மார்க்ஸ் இந்த ஆண்டில் எழுதினார். மார்க்ஸின் காலகட்டத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை. அப்படியொரு நூலை அவர் எழுதியிருந்ததையும்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. 1927ம் ஆண்டு, சோவியத் யூனியன் ஆய்வாளர்கள் இதைக் கண்டறிந்து வெளியில் கொண்டு வந்தனர். அதுவரை மார்க்ஸ் எழுதிவந்த கட்டுரைகள், மார்க்சியத்தை நோக்கிய அவருடைய பாதையைக் குறிப்பதாக அமைந்தன. 1844க்குப் பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள், அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சியத்தின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் அமைந்திருந்தன. மேலும், 1844 என்பது விஞ்ஞான உலகக் கண்ணோட்டம் பிறந்த ஆண்டாகவும் கருதப்படுகிறது.

மேற்சொன்ன நூலில், ஹெகல் குறித்து மார்க்ஸ் தன் விமரிசனங்களையும் கண்ணோட்டத்தையும் பதிவு செய்திருந்தார். பொருளாதாரத் துறை தொடர்பான தன் எண்ணங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் மார்க்ஸ், பிற்கால மார்க்ஸ் என்னும் பிரிவுகளால் மார்க்ஸை ஒரு சாரார் மதிப்பிடுவதற்குக் காரணமாக அமைந்தது அந்தப் புத்தகம்.

அதே 1844ம் ஆண்டு கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தனர். தற்போதைய சூழலை மாற்றியமைப்பதற்கான ஒரு புதிய புரட்சிகர தத்துவத்தை நாம் கண்டடைந்தாகவேண்டும். அதற்காகச் சலிப்புறாது உழைப்பதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். போராடும் தத்துவமின்றி அவதியுறும், அலைகழிக்கப்படும் ஜெர்மானிய அறிவுஜீவிகளுக்கு நமது புதிய தத்துவத்தை வழங்கவேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் ஆயுதமாக, அவர்களது தளைகளை உடைத்தெறியக்கூடிய ஆயுதமாக நம் தத்துவத்தை உருவாக்கவேண்டும்.

நாம் ஒரு தத்துவத்தை உருவாக்கவேண்டும்!’ கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் ஒன்றிணைந்த இடம் அது. அதுகாறும் பிரிந்திருந்து பணியாற்றிக்கொண்டிருந்த இருவரும் கைகுலுக்கிக்கொண்ட இடமும்கூட. ‘நாங்கள் ஒன்றாகப் பணியாற்ற ஆரம்பித்த தருணம் அது’ என்று நினைவுகூர்ந்தார் எங்கெல்ஸ். மார்க்ஸுடனான அந்தப் பத்து தினங்கள் தன் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்கள் என்று பரவசமடைந்தார் எங்கெல்ஸ். ‘அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அதற்குப் பிறகு மீண்டும் அனுபவிக்கவேயில்லை.’



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 21

 

புரட்சிகரமான ஜனநாயகத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மார்க்ஸின் பாதை திட்டவட்டமாகத் திரும்பியிருந்த சமயம் அது. தன் கருத்துகளை அவர் கட்டுரைகளில் அழுத்தமாகப் பதிவு செய்து வந்தார். ‘ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொறுக்காமல் உண்மையான மனிதகுல விடுதலை என்பது சாத்தியமில்லை’. ‘சமூகத்தின் எல்லாத் துறைகளையும் விடுதலை செய்யாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்ள முடியாது’. ‘மனித குல விடுதலையின் தலை தத்துவஞானம் என்றால் அதன் இதயம் பாட்டாளி வர்க்கம்’.

அப்போதைய மார்க்ஸ் பற்றி அர்னால்ட் ரூகே என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘அவர் ஏராளமாகப் படிக்கிறார். அசாதாரணமான தீவிரத்துடன் பாடுகிறார். அவரிடம் விமரிசனத் திறமை இருக்கிறது. ஆனால்… அவர் எதையும் முடிப்பதில்லை. ஒன்றைவிட்டு இன்னொன்றுக்குத் தாவி விடுகிறார். மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிவிடுகிறார்.’

மார்க்ஸ் தனது ‘பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள்’  நூலை எழுதியது இந்தப் பின்னணியில்தான். இந்தப் புத்தகத்தில் முதல் முறையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக- அரசியல் ணு அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. ஆராய்ச்சியின் மையமாக மனிதன் இருந்தான். இயற்கை, சமூகம் இரண்டோடும் அவன் கொண்டிருந்த சிக்கலான உறவுகளை மார்க்ஸ் இதில் ஆராய்ந்திருந்தார். முதலாளித்துவ சமூகத்திலுள்ள மனிதத்தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை தத்ரூபமாக மார்க்ஸ் இந்நூலில் அலசியிருந்தார்.

மார்க்ஸ் தன் புத்தகத்தை இப்படி ஆரம்பிக்கிறார். ‘மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் (Material relations) தேடவேண்டும்’. மனிதனின் உற்பத்தி வாழ்க்கையும் அவனுடைய உழைப்பும் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசையாக செயல்படுகின்றன. மனித உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. இறுதியில், ‘இரண்டு வர்க்கங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம்.’ ஒரு தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவு என்பது உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் உள்ள உறவாகும் என்றார் மார்க்ஸ்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. எதையும் யாரிடம் இருந்தும் வாங்கிவிடமுடியும். அந்த அளவுக்குப் பணம் தலையான சக்தி கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த உலகத்தில், தொழிலாளியும் ஒரு பண்டமாகத்தான் மாறியிருக்கிறான். அனைத்து செல்வத்தையும் உற்பத்தி செய்யும் உழைப்பு ஒரு பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

தொழிலாளி அனைத்தையும் படைக்கிறான். ஆனால், அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்றபோது, அவனால் படைக்கப்படும் செல்வங்களின் உலகமும் அதிகரிக்கின்றது. அதே சமயம், இந்த செல்வம் தொழிலாளியை ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது. செல்வம் அதிகமாக அதிகமாக தொழிலாளி மீதான அதன் ஆதிக்கமும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அந்த செல்வத்தை உற்பத்தி செய்த தொழிலாளி பலமிழந்தவனாகிறான். அந்த செல்வத்தின் உடைமையாளராக இருக்கும் முதலாளி பலம் கூடியவனாக மாறிப்போகிறான். தொழிலாளியின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முதலாளியின் உரிமைகள் கூடிவிடுகின்றன.

தொழிலாளி, தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாக மாறிப்போகிறான். அவனுடைய உழைப்பு, முதலாளியின் மூலதனமாக உருமாறுகிறது. அதே மூலதனம் அந்தத் தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறது. கூலி கொடுக்கிறது. தேவையில்லை என்றால் பணி நீக்கம் செய்கிறது. உயிர் வாழ்வதற்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே தொழிலாளிக்கு அந்த மூலதனம் கூலி தருகிறது. மற்றபடி, அவன் உழைப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது.

தொழிலாளி தன் உழைப்பு மூலமாக அற்புதமான பல பொருள்களை உருவாக்குகிறான். ஆனால், அது வறுமையையே அவனுக்குப் பரிசாக அளிக்கிறது. தொழிலாளி அரண்மனைகளையும் மாளிகைகளையும் உருவாக்குகிறான். அவனுக்குச்  சேரிகளும் ஒதுக்குப்புறங்களுமே கிடைக்கின்றன. உழைப்பு வண்ணமயமான, அழகிய ஆடைகளை உருவாக்குகிறது. உழைப்பாளி கந்தல்களில் தன் மானத்தை மறைத்துக்கொள்கிறான். உழைப்பு அழகைப் படைக்கிறது. ஆனால், உழைப்பாளி அவலட்சணமாக மாற்றப்படுகிறான்.

மனிதனின் உழைப்புக்கு மாற்றாக இயந்திரம் கண்டுபிடிக்கப்படுகிறது. தொழிலாளி இன்னொரு இயந்திரமாக மாற்றப்படுகிறான். செலுத்தும் உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் மூளை அழிகிறது. தலைகீழான உலகம் இது. முதலாளித்துவம் இப்படிப்பட்ட சமமற்ற, ஒழுங்கற்ற, தலைகீழ் உலகங்களை மட்டுமே படைக்கும் என்பது தெளிவாகிறது. பொருள்களை படைத்தவனை அந்தப் பொருள்கள் அடிமையாக்குகின்றன. அந்த வகையில், தான் உற்பத்தி செய்த சல்வத்திடம் இருந்தும் பொருள்களிடம் இருந்தும் தொழிலாளி அந்நியமாகிறான்.

ஒரு தொழிலாளியிடம் இருந்து அவன் உழைப்பின் பலன்கள் அந்நியமாக்கப்படுகின்றன. ‘பிரச்னையின் ஒரு அம்சம் இது. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.’ (மார்க்ஸ் பிறந்தார், ஹென்ரி வோல்கவ்).

‘ஒரு தொழிலாளி தன்னுடைய சுதந்தரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை. அவன் உழைப்பு சுயநடவடிக்கை அல்ல. அது பலந்தப்படுத்தப்படும் கட்டாய உழைப்பு. அந்த நிகழ்வுப் போக்கின்போது, தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான். இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்தரமாக வளர்க்கவில்லை. அவன் உடல் ஓடாகத் தேய்கிறது. அவன் தன் உடாலைக் கொடுத்து அறிவை அழித்துக்கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஓர் உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனால் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது’.

உழைப்பு அந்நியமாகியிருப்பதை எப்படி உணர்வது? தொழிலாளி அருவருப்புடன் அதனை செய்கிறான். பிளேக் நோயைக் கண்டு ஓடுவது போல் உழைப்பைக் கண்டு ஓடுகிறான். தப்பியோட முயல்கிறான். உழைப்பது ஒரு சாபக்கேடு என்பதாக நினைத்து தன்னைத் தானே வருத்திக்கொள்கிறான். பொருளையும் செல்வத்தையும் உற்பத்தி செய்யும் உழைப்பு, அந்த உழைப்பாளியிடம் இருந்து அந்நியப்பட்டுப்போனதால், உழைப்பாளி உழைப்பிடம் இருந்தும் அந்நியப்பட்டுப்போகிறான்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால், அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. ஒரு பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக இயங்குகிறான். உழைப்புக்கு வெளியில்தான் அவனுக்குச் சுதந்தரம் கிடைக்கிறது. சாதாரணமான, இயல்பான ஒரு வாழ்க்கை உழைப்புக்கு வெளியேதான் அல்லது உழைப்புக்குப் பிறகுதான் அவனுக்குக் கிடைக்கிறது. உணவருந்தும்போதும், மது அருந்தும்போதும், உறங்கும்போதும் அவன் சுதந்தரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.  ‘உழைப்பின் நிகழ்வுப் போக்கில், தொழிலாளியின் தொழிலாளியின் சுயஅந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடம் இருந்து அந்நியமாதல்.’

மார்க்ஸின் அந்நியமாதல் கோட்பாட்டை மான்செஸ்டர் நகர வீதிகளோடு பொருதிப் பார்த்துக்கொண்டார் எங்கெல்ஸ்.  அந்நியமாதல், மார்க்சியத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக மாறிப்போனது. மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தபோது, இந்த அந்நியமாதல் கோட்பாடு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சிபெற்றது. உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றியும் ஒரு கம்யூனிஸ்ட் சமூகம் எப்படி இயங்கவேண்டும் என்பது பற்றியும் இருவரும் ஆழமாகச் சிந்திப்பதற்கு இந்தக் கோட்பாடு உதவியது.

உழைப்பு எப்படி இருக்கவேண்டும்? தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல் சுய உறுதிப்படுத்துதலாக இருக்கவேண்டும். அது வாழ்க்கையை நடத்தும் சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக இருக்கவேண்டும். மனிதன் தன் திறமைகளை முழுமையாக வளர்த்துக்கொள்ளக்கூடிய நிகழ்வுப் போக்காக இருக்கவேண்டும். வெளியில் இருந்து வரும் நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடாது. படைக்கவேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பே உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கவேண்டும்.

பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்னும் நூலில் மார்க்ஸ் இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறார். ‘என்னுடைய உழைப்பு, வாழ்க்கையின் சுதந்தரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கின்றேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.’

அந்நியமாதல் குறித்த தெளிவான பார்வையோடு மார்க்ஸ் தன் அடுத்தப் பணியைத் தொடங்கினார். தனது அடுத்த நூலை எங்கெல்ஸுடன் இணைந்து எழுத அவர் முடிவு செய்தார். எங்கெல்ஸின் விருப்பமும் அதுவேதான். ஒத்த சிந்தனையோட்டம் கொண்ட இரு தோழர்களும் தங்கள் முதல் புத்தகம் குறித்து உரையாட ஆரம்பித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 22

 

மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதத் தொடங்கிய சமயத்தில், அறிவுஜீவிகள் மத்தியிலும் கற்றறிந்தவர்கள் மத்தியிலும் இளம் ஹெகலியவாதிகள் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தனர். புரூனோ பாயர் தலைமையில் இளம் ஹெகலியவாதிகள் தத்துவம் மற்றும் அரசியல் தளங்களில் பல்வேறு விவாதங்களை முன்னெடுத்துச்சென்றனர். ஒரு வலுவான மாற்றுச் சிந்தனையாளராகவும் ஹெகலியவாதியாகவும் புரூனோ பாயரை அவர் மாணவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

எனவே, இணைந்து பணியாற்றவேண்டும் என்று முடிவு செய்ததும் மார்க்ஸும் எங்கெல்ஸும் முதலில் புரூனோ பாயர் மீதே தங்கள் கவனத்தைக் குவித்தனர். அவர்களுக்கு பாயர் மீது பல வருத்தங்கள் இருந்தன. ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போலன்றி பாயர் நிறையவே மாறியிருந்தார். புரட்சிகரமான செயல்திட்டத்தையும் சிந்தனைமுறையையும் அவர் இப்போது கைவிட்டிருந்தார்.  எழுதுவது ஒன்றாகவும் நடைமுறை வேறொன்றாகவும் இருந்தது. மேலும் அவர் முன்வைத்த கம்யூனிசத்தில் கற்பனாவாதமே மிதமிஞ்சி இருந்தது. பாயர் மற்றும் இளம் ஹெகலியவாதிகளின் கற்பனாவாதத்தை அறிவுஜீவிகள் பலர் ஆர்வத்துடன் வரவேற்றதை கண்டு மார்க்ஸ் வருந்தினார்.  தன்னுடைய சித்தாந்தத்தை அளிப்பதற்கு முன்னால் தற்போது வேறூன்றியிருக்கும் இந்தப் பொய்மையை அகற்றுவது முக்கியம் என்று அவர் நம்பினார். எங்கெல்ஸின் கருத்தும் இதுவேதான். இளம் ஹெகலியர்களின் குழுவில் ஒரு காலத்தில் அங்கம் வகித்து பின்னர் விலகிக்கொண்ட கசப்புணர்வு அவரிடம் எஞ்சியிருந்தது.

மற்றொரு பக்கம், சுதந்தர மக்கள் என்னும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிதீவிர புரட்சிகரக் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் பெர்லின் நகரத்து இளம் ஹெகலியர்கள். உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டுதான் மறுவேலை என்று ஆர்ப்பாட்டமாக இவர்கள் அறிவிப்பு கொடுத்தார்கள். எழுச்சியூட்டும் வார்த்தைகளையும் கோபாவேசமான மொழி நடையும் கிளர்ச்சியூட்டும் நம்பிக்கைகளையும் இவர்கள் கட்டுரைகளாக வழங்கினர். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான இந்தக் கட்டுரைகள் எதிர்பார்த்தபடியே ஒரு பிரிவு மக்களிடையே புதுவித பரவசத்தை ஏற்படுத்தின. உண்மையிலேயே புரட்சிகரமான மாற்றங்கள் வந்துவிடப்போகின்றன என்று அவர்கள் நம்ப ஆரம்பித்தனர். முன்பு கடவுளையும் மதத்தையும் நம்பியது போலவே.

புரூனோ பாயரும் அவருடைய நண்பர்களும் சுதந்தர மக்கள் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். மிதவாதப் பத்திரிகையாளர்களும் கவிஞர்களும் அறிவுஜீவிகளும் ராணுவ அதிகாரிகளும் மாணவர்களும் நிறைந்திருந்தனர். பெண்களும்கூட கணிசமான அளவில் உறுப்பினர்களாக இருந்தனர். பொதுவாக இவர்கள் மதுக்கடைகளில் கூடுவது வழக்கம். அதிகம் சத்தம் போட்டு உற்சாகமாகப் பேசுவார்கள். வேடிக்கையும் கிண்டலும் பொங்கி வழியும். பிறகு ஒருவரையொருவர் கடும் சொற்களாலும் பிறகு ஆபாசமாகவும் தாக்கிக்கொள்வார்கள். கோமாளித்தனமான களியாட்டங்களாகவே அவர்கள் கூட்டம் நடைபெறும்.

இவர்கள் நடவடிக்கை இன்னமும்கூட எல்லைத்தாண்டி போகும். போவோர் வருவோரை நிறுத்தி பணம் கேட்பார்கள். ஊர்வலம் நடத்துகிறோம் என்று சொல்லி பணம் பெற்று மீண்டும் மதுக்கடைகளில் திரள்வார்கள். அல்லது, நடன அரங்குக்கோ பாலியல் தொழில் நடைபெறும் விடுதிகளுக்கோ சென்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் புரூனோ பாயர் அறிவார். ஆனாலும் எதுவும் நடைபெறாதது போல் இருந்துவிடுவார். இளம் ஹெகலியவாதிகள் நிச்சயம் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூசாமல் சவடால் அடிப்பார். மிதவாத சிந்தனை போக்கு நமக்கு உதவாது, அதிரடிதான் மாற்று என்று முழங்குவார். அரசு, சொத்துடைமை, குடும்பம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று ஆவேசமாக எழுதுவார்.

புரூனோ பாயரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை மார்க்ஸும் எங்கெல்ஸும் வெறுத்தனர். எக்கேடாவது கெட்டுப்போகட்டும் நாம் நம் பணிகளை தொடர்வோம் என்று இருக்கமுடியவில்லை அவர்களால். காரணம், சமூகத்தின் மீது பாயர் செலுத்திய செல்வாக்கு. மாபெரும் சிந்தனாவாதி என்னும் பதவியை பல பத்திரிகையாளர்கள் பாயருக்கு வழங்கியிருந்தனர். எனவே பாயரின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினால்தான் எது உண்மையில் புரட்சிகரமான மாற்றம் என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லமுடியும்.

பாயரின் கட்டுரைகளையும் இளம் ஹெகலியவாதிகளின் படைப்புகளையும் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஆராய்ந்தனர். அயர்ச்சியளிக்கக்கூடிய பணியாக அது இருந்தது. முடிவில்,‘சொற்களின் நீர்வீழ்ச்சி’ என்பதைத் தாண்டி இந்தக் கட்டுரைகளில் வேறெதுவும் இல்லை என்று அறிவித்தார் மார்க்ஸ். வெற்று முழக்கங்களை அகற்றவிட்டால், சிந்தனை என்று சொல்லும்படியான சங்கதி எதுவும் இந்தக் கட்டுரைகளில் எஞ்சியிருக்கவில்லை என்றார் மார்க்ஸ்.  சுதந்தர மக்கள் கழகத்துக்கு வெளிப்படையாக சில கோரிக்கைகளை முன்வைத்தார் மார்க்ஸ். ‘உங்கள் தெளிவில்லா வாதத்தை, ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களை, சுயபோற்றுதலைக் குறைத்துக் கொள்ளுங்கள்.உண்மையில் இருக்கின்ற நிலைமயைப் பற்றி அதிகமான கவனம் செலுத்துங்கள். நிபுணத்துவத்துடன் பேசுங்கள்.’  உங்கள் அறிவுரையும் அக்கறையும் தேவையில்லை என்று மார்க்ஸை நிராகரித்தார்கள் இளம் ஹெகலியவாதிகள். மார்க்ஸ் உண்மையில் ஒரு துரோகி என்றும்  பழமைவாதத்தில் மூழ்கிப்போனவர் என்றும் பதிலுக்கு விமரிசனம் செய்தனர்.

பாயருக்கும் அவரது இளம் ஹெகலிய நண்பர்களுக்கும் விடையளிக்க மார்க்ஸும் எங்கெல்ஸும் முடிவுசெய்தனர். அறிக்கை ஒன்றை எழுத இருவரும் முடிவு செய்தனர்.  ‘ஜெர்மானிய தத்துவ ஆசிரியர்கள் மீது பாயர் தொடுத்துள்ள போருக்குப் பதில் அளிக்கவேண்டியது அவசியம்’  என்றார் எங்கெல்ஸ். அந்த அறிக்கை எத்தனை பக்கங்கள் கொண்டிருக்கவேண்டும், எப்படி அமையவேண்டும் என்பதை இருவரும் முடிவு செய்தனர். நையாண்டி நடையில் கட்டுரை அமையவேண்டும். மூன்று முதல் ஐந்து பக்கங்களுக்குள் முடியவேண்டும்.

மார்க்ஸுடன் பாரீசில் தங்கியிருந்தபோதே எங்கெல்ஸ் பணியை ஆரம்பித்துவிட்டார். தன்னுடைய பங்களிப்பாக ஒன்றரை பக்கங்கள் எழுதினார் எங்கெல்ஸ். அதை மார்க்ஸிடம் அளித்துவிட்டு பிரஷ்யாவுக்கு விடைபெற்றார். மிச்சமுள்ள ஒன்றரை பக்கங்களை மார்க்ஸ் எழுதி முடிக்கவேண்டும் என்பது திட்டம்.

எழுத ஆரம்பிக்கும்போது, ஒன்றரை பக்க எல்லை பற்றிய நினைவு மார்க்ஸிடம் இருந்து பிரிந்து சென்றது. புரூனோ பாயர் மட்டுமே கண்முன்னால் இருந்தார். மார்க்ஸ் தன்னை மறந்தார். வீட்டை மறந்தார். உலகத்தையும். எழுதுவதை நிறுத்தவேயில்லை. பக்க எல்லைகள் தகர்த்தெறியப்பட்டன. கட்டுரை, மறுப்பு, நையாண்டி என்னும் வகையராக்களைத் தாண்டி ஒரு தனிப்புத்தகமாக அது உருப்பெற்றது. எங்கெல்ஸின் ஒன்றரை பக்கம், அந்தப் படைப்பில் ஒன்று கலந்தது.

Critique of Critical Criticism: Against Bruno Bauer and Co. என்றுதான் முதலில் தன் நூலுக்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் பெயரிட்டனர். பிறகு, தலைப்பு மாற்றப்பட்டது. The Holy Family, or Critique of Critical Criticism.  சுருக்கமாக, புனிதக் குடும்பம். இந்தத் தலைப்பை மார்க்ஸ் தேர்வு செய்தார் என்கிறார்கள் சிலர். புத்தகப் பதிப்பாளர்தான் இந்தப் பெயரை முன்மொழிந்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும், தலைப்பு புத்தகத்தின் கண்ணோட்டத்தோடு துல்லியமாகப் பொருந்திபோனது. புனிதக் குடும்பம் என்பது விவிலியப் பிரயோகம். புரூனோ பாயரும் அவர்தம் சீடர்களும் எவ்வாறு புனிதர்களாகவும் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வளர்ந்தார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் தலைப்பு அமைந்துபோனது.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய முதல் படைப்பு இது. இந்தப் புத்தகத்தில் புரூனோ பாயரும் அவருடைய சீடர்களும் கடுமையாக விமரிசிக்கப்பட்டனர் என்றாலும் இது ஒரு தாக்குதல் நூல் அல்ல. ஹெகலிய தத்துவத்தை நேர்மையான முறையில் மக்களிடம் கொண்டு சென்ற ஓர் அறிமுக தத்துவக் கையேடுகூட. கற்பனாவாதமும் கருத்துமுதல்வாதமும் நடைமுறையில் இருந்தும் உண்மையில் இருந்தும் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதை இந்நூல் வெளிப்படுத்தியது.

நவம்பர் 1844ல் மார்க்ஸ் புனிதக் குடும்பத்தை எழுதி முடித்தார். பிப்ரவரி 1845ல் புத்தகம் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் உடனடியாக இந்தப் புத்தகத்தின் மீது கவனம் திருப்பி செய்திகளையும் விமரிசனங்களையும் வெளியிட்டது. பத்திரிகைகள் பொதுவாகப் பழமைவாத கண்ணோட்டத்துடன்தான் இயங்கிகொண்டிருந்தன. புரட்சிகரமான, முற்போக்கான சிந்தனை என்றால் புரூனோ பாயர்தான். ஆர்ப்பாட்டமான வாசகங்கள் தேவை என்று கருதினால் அவர்கள் பாயரிடம்தான் செல்வார்கள். புனிதக் குடும்பம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. புரட்சிகரமான சிந்தனை என்றால் என்ன என்பதை முதல் முதலில் சொல்லிக்கொடுத்த புத்தகமாக அது இருந்தது ஒரு காரணம்.

ஒரு பத்திரிகை இவ்வாறு எழுதியது.‘புனிதக் குடும்பத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வாக்கியமும் புரட்சியின் அர்த்ததைச் சொல்லிக்கொடுப்பதாக இருக்கிறது. அரசுக்கு எதிராக, தேவாலயத்துக்கு எதிராக, சட்டத்துக்கு எதிராக, மதத்துக்கு எதிராக, சொத்துடைமைக்கு எதிராக இந்தப் புத்தகம் போர்ப் பிரகடனம் செய்கிறது.’

புனிதக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை லெனின் இவ்வாறு பகிர்ந்துகொண்டார். ‘எல்லா வகையான யதார்த்தத்துக்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமரிசனத்தை இந்தக் கனவான்கள் (புரூனோ பாயர் மற்றும் குழுவினர்) பிரசாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும்  நிராகரித்தார்கள்; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும் பற்றிய அவர்கள் விமரிசனம் வெறுமே ‘விமரிசன ரீதியாகச்’ சிந்தனை செய்வதோடு நின்று விட்டது. பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்றது என்றும்  இழிவுபடுத்தினார்கள்.

‘சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும், எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள். ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளிக்காக… மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும், எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள்.

‘நவீன காலப் பொருளாதார அமைப்புமுறையின் பிரதானமான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து எங்கெல்ஸ் முன்னர் பரிசீலித்திருக்கிறார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கி விட்டார்.’

புரட்சிகரமான சோஷலிசத் துத்துவத்தை அறிவியல் ரீதியாக முதல் முறையாக மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்நூலில் வழங்கினார்கள் என்று பரவசமடைந்தார் லெனின்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 23

 

சோஷலிச சமூகம்

செப்டம்பர் 1844ல் எங்கெல்ஸ் பார்மென் திரும்பினார். கூடிய விரைவில் திரும்புவேன் நண்பரே என்று மார்க்ஸிடம் உறுதிமொழி அளித்தபிறகே அவர் பாரிஸில் இருந்து வெளியேறினார். பிரஷ்யா இப்போது எப்படி இருக்கும்? சாசன இயக்கம் குறித்தும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் ஏனைய தொழிலாளர் இயக்கங்கள் குறித்தும் இங்குள்ள தொழிலாளர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா? அல்லது வழக்கம் போல் விதியின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தை இறக்கிவைத்துவிட்டு விரக்தியுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்களா?  சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் பற்றிய அறிமுகம் இவர்களுக்குக் கிடைத்திருக்குமா? கார்ல் மார்க்ஸும் நானும் எழுதி வெளியிட்ட கட்டுரைகள் இங்கே வந்தடைந்திருக்குமா?

கேள்விகளுக்கு விடை தேடி கொலோன், டசல்டார்ஃப், எல்பர்ஃபெல்ட், பார்மென் என்று சுற்றி வந்தார் எங்கெல்ஸ். நண்பர்களைச் சந்தித்தார். அரசியல் போக்குகள் குறித்து கேட்டறிந்தார். திகைப்பும் மகிழ்ச்சியும் காத்திருந்தது. மார்க்ஸுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘கொலோனில் மூன்று தினங்கள் தங்கியிருந்தேன். நமது பிரசாரம் அங்கே பரவியிருந்ததைக் கண்டு நான் திகைத்துவிட்டேன்.’ மேலும் பரவலாகப் பலர் கம்யூனிச சித்தாந்தத்தை அறிந்து வைத்திருந்ததையும் அதன்பால் ஈர்க்கப்பட்டிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் எங்கெல்ஸ்.  இத்தனைக்கும் அவர்களுக்கு அறிமுகமாயிருந்தது கற்பனாவாத சோஷலிசமும் கற்பனாவாத கம்யூனிசமும்தான். ஆனாலும் இது ஒரு வரவேற்கத்தக்க மாறுதல் இல்லையா?

மாணவர்கள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆண்கள், பெண்கள் என்று பலரும் அரசியல் மாற்றம் வேண்டுவோராக இருந்ததை எங்கெல்ஸ் கண்டுகொண்டார். பிற ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகள் ஜெர்மானிய இதழ்களில் விரிவாகவே வெளிவந்தன. சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் அறிமுகம் செய்து வைக்கும் சிறு நூல்களும்கூட வெளிவந்திருந்தன.

எங்கெல்ஸ் தன் பங்குக்குப் பிரஷ்ய செய்தித்தாள்களிலும் சோஷலிச இதழ்களிலும் எழுத ஆரம்பித்தார். சோஷலிச சிந்தனையாளர்களின் படைப்புகள் ஜெர்மன் மொழியில் வெளிவரவேண்டும் என்னும் விருப்பத்தை மார்க்ஸிடம் பகிர்ந்துகொண்டார் எங்கெல்ஸ். அரசியலில் ஆர்வம் செலுத்தும் வாசர்கள் சோஷலிச வரலாறு பற்றிய சரியான புரிதலைப் பெறுவதற்கு இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் உதவும் என்று அவர் நம்பினார்.

இரு வேறு போக்குகள் அன்றைய ஜெர்மனியில் புலப்பட்டன. ஒரு பக்கம் அரசியல் ஆர்வம் கொண்ட தொழிலாளர் பிரிவினர் அடக்குமுறையை சிறிய அளவில் எதிர்க்க ஆரம்பித்தனர். சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் சுரண்டலுக்கு ஆதரவு தரும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் வெளிப்படையாக முணுமுணுத்தனர். இன்னொரு பக்கம் முதலாளி வர்க்கத்தில் இருந்தே ஒரு பிரிவினர் தங்கள் வர்க்கத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கியிருந்தனர். அவர்களது கோரிக்கை, சீர்திருத்தம். பணிச்சூழல் மேம்படுத்தப்படவேண்டும், தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர். தொழிலாளர்கள் தன்னிச்சையாகப் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இந்தப் பிரிவினர் சீர்திருத்தங்களை முன்மொழிந்தனர்.

முணுமுணுப்பதன் மூலமாகவோ சீர்திருத்தங்கள் மூலமாகவே அடிப்படை நிலைமை மாறப்போவதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான உறுதியான புரட்சிகர நடவடிக்கை மட்டுமே தொழிலாளர்களை விடுவிக்கும். ஆனால், அதற்கு அரசியல் ரீதியில் அவர்களைத் திரட்டவேண்டியிருந்தது. அதற்கு தோதான சிந்தனைகளை அவர்கள் மனத்தில் விதைக்கவேண்டியிருந்தது.

 

பிப்ரவரி 1845ல் எல்பர்ஃபெல்டில் எங்கெல்ஸ் உரையாற்றினார். முதல் சந்திப்பில் 40 பேர் திரண்டனர். இரண்டாவது சந்திப்பில் 130 பேர். மூன்றாவதில் 200க்கும் அதிகமானோர். எண்ணிக்கை அதிகரித்தாலும் ஒரு வருத்தம் இருந்தது எங்கெல்ஸுக்கு. மார்க்ஸுக்கும் அதைத் தெரியப்படுத்தினார். ‘மேட்டுக்குடியினரும் பூர்ஷ்வாக்களுமே அதிகம் வருகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த யாரும் சந்திப்பில் பங்குபெறவில்லை.’

இந்த உரையாடல்களில் எங்கெல்ஸ் முதலாளித்துவத்தைக் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார். முதலில், முதலாளித்துவம் குறித்து கற்பனாவாத சோஷலிஸ்டுகள் முன்வைத்துள்ள குறிப்பிடத்தக்க கருத்துகளை கோர்வையாகத் தொகுத்து அளித்தார். ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து அவர்கள் பதிவு செய்திருந்த சித்திரங்களை அழுத்தமாக விவரித்தார். கூடவே பிரிட்டனில் தான் கண்ட காட்சிகளை அவ்வப்போது சுட்டிக்  காட்டினார். இங்கே, அங்கே என்றில்லாமல் பொதுவாக அனைத்து நாடுகளிலும், அனைத்து சுழல்களிலும் முதலாளித்துவத்தின் தன்மைகள் ஒன்று போலவே இருப்பதை எங்கெல்ஸ் தெளிவாக உணர்த்தினார்.

அடுத்து, பூர்ஷ்வா சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகளை விவரித்தார். எத்தனை மோசமான ஒரு நிலைமையை பூர்ஷ்வா வர்க்கம் பாட்டாளிகள் மீது சுமத்தியிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் புரியவைத்தார். பிறகு, இந்த விஷயங்களை தற்கால ஜெர்மனியோடு பொருத்திக் காட்டி விளக்கினார்.

ஏற்றத்தாழ்வை நிராகரிப்பவர்களின் வாதத்தை அவையில் எடுத்து வைத்தார். யார் சொன்னது ஏற்றத்தாழ்வு நீடிக்கிறது என்று? அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. எல்லோராலும் கல்வி கற்க முடியும். எல்லோராலும் உயர் பதவி வகிக்கமுடியும். செல்வம் சேர்ப்பதற்கான விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. நிலைமை இப்படி இருக்க, சிலர் பின்தங்கிப்போவதற்கும் சிலர் முன்னேறி செல்வதற்கும் காரணம் அவர்கள்தானே தவிர சமூகச் சூழல் அல்ல. எதற்கெடுத்தாலும் சூழலைக் குறை சொல்லும் போக்கைக் கைவிடவேண்டும்.

இந்த வாதத்தை எங்கெல்ஸ் உடைத்தார். சுதந்தரப் போட்டி, அனைத்தும் அனைவருக்கும் போன்ற ஆடம்பர முழக்கங்கள் போலியானவை, அநீதியானவை. பொருளாதாரம் சீர்குலைந்து இருப்பதை நம் கண்ணால் நேரடியாகவே பார்க்கமுடிகிறது. ஒழுங்கற்ற முறையில் செல்வம் பிரிந்தும் குவிந்தும் கிடக்கிறது. இதை உணர நமக்கு எந்தப் பெரிய சித்தாந்தமும் தேவையில்லை. இந்தச் செல்வம் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினர் ஒடுக்கி, சுரண்டுவதன் மூலம் திரட்டப்பட்டது.

ஏழைகளும் செல்வந்தர்களும் இருவேறாகப் பிரிந்து கிடக்கின்றனர். இவர்களுக்குள் ஓயாமல் போர் நடந்துகொண்டிருக்கிறது. ஒன்று சுரண்டலுக்கான போர். வசதிகளையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கான போர். மற்றொன்று, உரிமைக்கான போர். உயிர் மீட்புக்கான போர். சமத்துவத்துக்கான, சுரண்டலற்ற சமூகத்துக்கான போர்.

பிறகு, கம்யூனிச உலகத்தைக் கண் முன் விரித்தார் எங்கெல்ஸ். இங்கே மனிதர்களின் தனிப்பட்ட விருப்பமும் சமூகத்தின் விருப்பமும் வெவ்வேறானதாக இருக்காது. தற்போதைய சூழலைப் போல் இரண்டுக்கும் வேறுபாடும் விரோதமும் இருக்காது. ஒரு சமூகம் கீழும் இன்னொரு சமூகம் மேலும் இருக்கும் நிலை இருக்காது. யாரும் யாராலும் சுரண்டப்பட மாட்டார்கள். உற்பத்தியிலும் விநியோகத்திலும் தனியார் நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவைக்கு ஏற்ப பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இப்போது என்ன நடக்கிறது? சமூகம் என்பது செல்வந்தர்களின், பிரபுக்களின் சமூகமாகவே மாறிக்கிடக்கிறது. சமூகத்தின் நோக்கம் ஒன்றாககவும், அந்தச் சமூகத்தின் நுகத்தடியில் சிக்கிக்கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கம்வேறானதாகவும் இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது. கம்யூனிச சமூகத்தில் இந்த நிலை நீடிக்காது. தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான பகைமையும் வேறுபாடும் அழியும். இதன் மூலம் இரு வர்க்கத்துக்கு இடையில் நடக்கும் சமூகப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும். சமூக அமைதி சாத்தியமாகும்.

இப்படிப்பட்ட சமூகத்தில் நிர்வாகத்துக்கும் சட்ட ரீதியான குறுக்கீடுக்கும் அவசியமில்லாமல் போய்விடும். வளங்களும் வாய்ப்புகளும் அறிவார்ந்த முறையில் பொது நன்மைக்காகப் பயன்படுத்தப்படும். முதலாளித்துவம் வீழ்த்தப்பட்டுவிடும் என்பதால், அபகரிப்பு இருக்காது. தனிச்சொத்து இருக்காது. ஆலைகள் ஒரு சிலருக்குச் சொந்தமானவையாக இருக்காது.

மொத்தத்தில், அது மக்களின் நாடாக இருக்கும். மக்கள் விரும்பும் உலகமாக அது இருக்கும். அங்கே அவர்கள் அமைதியாக வாழ்வார்கள். நிலையான ராணுவத்துக்கான தேவை இருக்காது. ராணுவத்தைப் பராமரிப்பதற்கான பெரும் பொருள் செலவு இருக்காது. போர் இருக்காது என்பதால் மனித இழப்புகளும் அநாவசியச் செலவுகளும் இருக்காது. பகைவர்களால் ஆபத்து சூழும் சமயங்களில் மக்கள் தங்கள் தந்தையர் நாட்டைப் பாதுகாக்க தாமாகவே ஆயுதம் தரித்து போர் புரிவார்கள். காரணம் அது அவர்கள் நாடு.

‘ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக்திகளைக் கொண்டு ஒன்றிணைக்கப்பட்ட சமூகச் சக்தி உருவாக்கப்படவேண்டும்.’ கம்யூனிச சமூகத்தின் மேல் தனக்கிருந்த பிடிப்பையும் நம்பிக்கையையும் எங்கெல்ஸ் உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சோஷலிச சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் கற்பனாவாதிகளின் கனவையும், தன்னுடைய புரிதல்களையும் ஒன்று கலந்து ஒரு புதிய லட்சிய சமூகத்தை உருவாக்கினார் எங்கெல்ஸ். ‘ராபர்ட் ஓவன் குறிப்பிட்டது போல் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும்.’

எனில், இந்த லட்சிய சமூகமான கம்யூனிசத்திலும் கற்பனாவாதத் தன்மைகள் இருக்கின்றனவா? ‘யதார்த்தத்தை ஒதுக்கி வைத்த, கற்பனையில் ஊறிக் கிடக்கும் ஒரு சித்தாந்தம் என்று இதனை அழைக்கமுடியாது.’ காரணம், கம்யூனிசம் என்பது சமூகத் தேவை. வரலாறு நெடுகிலும் இந்தத் தேவையை நம்மால் உணரமுடியும். பொருளாதார ரீதியிலும்கூட கம்யூனிச சமூகத்துக்கான தேவை இருப்பதை நம்மால் மறுக்கமுடியாது.

என்றாலும், எங்கெல்ஸ் முன்வைத்த கம்யூனிச உலகில் கற்பனாவாதத்தின் தன்மைகள் நீடிக்கவே செய்தன. யுடோபிய, கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சாயல் எங்கெல்ஸின் பேச்சில் தென்பட்டது. பாயர்பேக்கின் தத்துவத்தின் சாயலும்கூட அதில் இருந்தது. எங்கெல்ஸின் இந்த உரைகள் எல்பர்ஃபெல்ட் உரைகள் என்று அழைக்கப்படுகின்றன. நீதியின் மீதும் சமூகத்தின் மீதும் கம்யூனிசத்தின் மீதும் சமத்துவத்தின் மீதும் சுதந்தரத்தின் மீதும் விடுதலையின் மீதும் எங்கெல்ஸ் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பற்றுறுதியையும் பறைசாற்றும் ஆவணமாக இந்த உரைகள் திகழ்கின்றன. தன் கோட்பாட்டை திறன்பட முன்வைக்கும் ஒரு தேர்ந்த பிரசாரகராக எங்கெல்ஸ் அவர் பார்வையாளர்களுக்குத் தோன்றினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 24

 

அரசியல் பொருளாதாரத் துறையில் எங்கெல்ஸ் ஆர்வம் செலுத்தியதற்கு பிரிட்டனில் அவர் கண்ட சமூகச் சூழலும் தொழில் புரட்சியின் விளைவுகளும் காரணமாக அமைந்தன. இத்துறையின் தத்துவார்த்த அடிப்படைகளை ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ, ஜேம்ஸ் மில் ஆகியோர் உருவாக்கியிருந்தனர். பொருளாதாரத்தில் எங்கெல்ஸின் தொடக்கப் புள்ளி இவர்களே. நேர் எதிராக, கார்ல் மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்துக்கான தனது அடித்தளத்தை ஹெகலிடம் இருந்து பெற்றிருந்தார். ஹெகலின் Philosophy of Right என்னும் நூல் அரசு மற்றும் தனிச் சொத்து பற்றி விரிவாக ஆராய்ந்தது. மார்க்ஸ் இதனை வாசித்திருந்ததோடு மட்டுமல்லாமல், ஹெகலின் வாதங்களை மறுக்கவும் துணிந்தார்.

ஆடம் ஸ்மித் முதலாளித்துவத்தின் தந்தையாகவும் பொருளியல் துறையின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். செல்வாக்கு மிகுந்தவர். இவரது முதல் நூல், Theory of Moral Sentiments. பொருளாதாரத் துறைக்கு ஆடம் ஸ்மித்தின் முக்கியப் பங்களிப்பாக இன்றளவும் கருதப்படுவது, 1776ல் வெளிவந்த An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations. அல்லது சுருக்கமாக, வெல்த் ஆஃப் நேஷன்ஸ்.

செல்வம் என்பது என்ன? பணம் என்றுதான் ஆடம் ஸ்மித்துக்கு முன்பு வரை பலர் சொல்லி வந்தனர். ஒரு நாட்டை ஆள்வதற்குச் செல்வம்தான் அடிப்படை என்பதால் நாட்டை நிர்வகிப்பவர் பெருமளவிலான தங்கத்தை எப்போதும் சேமித்து வைத்திருக்கவேண்டும் என்னும் கருத்து நிலவிவந்தது. தங்கம் அல்ல, நிலமே நிலையான செல்வம் என்றும் சிலர் சொல்லி வந்தனர். ஆடம் ஸ்மித் தங்கத்தையும் நிலத்தையும் நிராகரித்துவிட்டு உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உழைப்பு பகிர்வின் மூலம் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்றார்.

அந்த வகையில், அரசாங்கத்தைப் போலவே தொழில்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களும் முக்கியானவர்களே என்றார். செல்வத்தைக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் உற்பத்தியாளர்கள் என்பதால் அவர்களுக்கு சுதந்தரமும் சலுகைககளும் அளிக்கப்படவேண்டும் என்றார் ஸ்மித். என்õறல், உற்பத்தியாளர்களின் வழியில் அரசு குறுக்கிடக்கூடாது. அவர்களை எந்தச் சூழலிலும் கட்டுப்படுத்தக்கூடாது. கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, ஸ்மித்தைப் பொறுத்தவரை பிற்போக்குத்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது.

இன்றைக்குக் கடைபிடிக்கப்படும் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் அடித்தளத்தை நிறுவியவர் ஆடம் ஸ்மித். சுதந்தரச் சந்தை என்று அழைக்கப்படும் Free Market வர்த்தக முறையை ஸ்மித் வழிமொழிந்து ஆதரித்தார். தடையற்ற வணிகம். கட்டுப்பாடற்ற வணிகம். சுதந்தரமான வணிகம். சமுதாயம் மேன்மையடையவேண்டுமானால் சுதந்தரச் சந்தை தழைக்கவேண்டும்.

உற்பத்தியாளர்கள் செழிப்புடன் வாழும் ஒரு சமூகத்தில்தான் அரசும் செழிப்புடன் இருக்கும். மக்களும் செழிப்புடன் வாழ்வார்கள். இதற்கு ஆடம் ஸ்மித் முன்வைக்கும் உதாரணம், புகழ்பெற்றது. சந்தையில் ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது என்ன ஆகும்? அதன் விலை உயரும். குறிப்பிட்ட அந்தப் பொருளின் உற்பத்தியாளருக்கு அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த இடத்தில்தான் சுதந்தரச் சந்தையின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. குறிப்பிட்ட ஓர் உற்பத்தியாளருக்கு மட்டும் வருவாய் குவிவதைக் கண்டு பிற உற்பத்தியாளர்களுமே அதே பொருளைத் தயாரித்து சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். ஆரோக்கியமான ஒரு போட்டிச் சூழல் உருவாகிறது. விளைவாக, குறிப்பிட்ட பொருளின் விலை குறைகிறது.

மாயக்கரம் (Invisible Hand) என்னும் கோட்பாட்டை ஆடம் ஸ்மித் இந்த இடத்தில் புகுத்தினார். அதாவது, சமூகத்தில் நிகழும் பற்றாக்குறையைப் போக்கவேண்டும் என்னும் எண்ணம் போட்டியிடும் உற்பத்தியாளர்களுக்கு இல்லை. அவர்கள் தங்கள் சுயலாபத்துக்காகவே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஒரு பொருளுக்குத் தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதற்கேற்ப அதிகரிக்கிறது. இருந்தாலும், மாயக்கரம் ஒன்றின் வழிகாட்டுதலின்படி ஓர் உற்பத்தியாளர் தம்மை அறியாமலேயே பொது நலனுக்கு ஏற்றபடி இயங்குகிறான். அதாவது, இயக்கப்படுகிறான். ஓர் உற்பத்தியாளரின் சுயநலன் சார்ந்த உற்பத்தி பொது நலன் சார்ந்ததாக மாறுவதற்குக் (அதாவது, பற்றாக்குறை அகல்வது) காரணம் சுதந்தரச் சந்தையும் மாயக்கரமும்தான்.

ஒருவேளை உற்பத்தியாளர்களுக்குச் சுதந்தரம் மறுக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? போட்டி இருந்திருக்காது. உற்பத்தி பெருகியிருக்காது. பற்றாக்குறை அப்படியே நீடித்திருக்கும். பண்டங்களின் விலை அதிகரிப்பு கட்டுப்படுத்த இயலாதபடி நீடிக்கும். அரசும் அரசு விதிக்கும் கெடுபிடிகளும் பற்றாக்குறை சூழலைத்தான் உருவாக்கும் என்றார் ஆடம் ஸ்மித். சுதந்தரச் சந்தை கொள்கை அல்லது அரசு தலையிடாக் கொள்கை (Laissez Faire) ஆடம் ஸ்மித்தின் முக்கியப் பங்களிப்பு. கட்டற்ற சுதந்தர வணிகமே ஒரு நாட்டுக்குச் செல்வத்தைக் கொண்டு வரும் என்றார் ஆடம் ஸ்மித்.

ஆடம் ஸ்மித்தின் சுதந்தர வணிகத்தை டேவிட் ரிகார்டோ ஆதரித்தார். ஒரு வணிகராகவும், அரசு மந்திரியாகவும், நிதியாளராகவும் இருந்தவர். உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலும்கூட சுதந்தர வர்த்தகம் லாபகரமானதே என்றார் ரிகார்டோ. ஒரே பண்டத்தை இரு நாடுகள் உற்பத்தி செய்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எந்த நாடு குறைவான முதலீட்டில் சிறப்பாக அதனை உற்பத்தி செய்கிறதோ அந்த நாட்டிடம் இருந்து மற்ற நாடு அப்பொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம். இது இரு நாடுகளுக்கும் லாபமளிக்கக்கூடியது. சில நாடுகள் ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும். சில நாடுகளுக்கு உணவு உற்பத்தி பிரதானமானதாக இருக்கும். யாருக்கு எது சரியாக வருகிறதோ, யாருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதை அவர்கள் செய்யவேண்டும். உணவு உற்பத்தியில் பின்தங்கியுள்ள ஒரு நாடு, ஆடைகளை ஏற்றுமதி செய்து உணவை இறக்குமதி செய்துகொள்ளலாம். இது இரு தரப்பினருக்கும் லாபகரமானதாக இருக்கும். ரிகார்டோவின் பார்வை இது.

ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ இருவருடனும் இணைத்துப் பேசப்படுபவர் ஜான் ஸ்டூவர்ட் மில். சமூகம், தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. ரிகார்டோவைப் போலவே ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகளால் கவரப்பட்டவர் மில். இவர் அரசாங்கத்தின் குறுக்கீடுகளை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்றாலும் சுதந்தரச் சந்தையின் அவசியத்தை உணர்ந்திருந்தார். 1848ல் மில் வெளியிட்ட Principles of Political Economy பொருளாதாரத் துறையின் மைல் கல்லாகக் கருதப்படுகிறது. பொருளாதார ஜனநாயகம் என்னும் கோட்பாட்டை மில் முன்வைத்தார். இதன்படி, தொழிலாளர்கள் ஒன்றுகூடி தங்கள் தலைமையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க இந்த வழிமுறை உதவும் என்று மில் நம்பினார். முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு உட்பட்ட சுதந்தரத்தைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தருவதே இவரது நோக்கமாக இருந்தது.

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளை வகுத்தவர்கள் ஸ்மித், ரிகார்டோ மற்றும் மில். மூவரும் சுதந்தரச் சந்தையை ஆதரித்தனர். தனிச்சொத்துடைமையை ஆதரித்தனர். அதற்கான உரிமையை ஆதரித்தனர். அரசின் குறுக்கீடுகளைப் பெரும்பாலும் எதிர்த்தனர். முதலாளித்துவத்தை ஆதரித்தனர். சந்தைப் போட்டியை ஆதரித்தனர்.

எங்கெல்ஸ் மேற்கண்ட கோட்பாடுகளை நிராகரித்தார். தனிச்சொத்துடைமை, முதலாளித்துவம், சந்தைப் போட்டி, குறுக்கீடற்ற உற்பத்தி சூழல், முதலாளித்துவ உற்பத்தி மாதிரி ஆகிய அனைத்தையும் அவர் நிராகரித்தார்.  அரசியல் பொருளாதாரம் என்பது வாணிப  விரிவாக்கத்தின் விளைவாக தோன்றிய ஒரு புதிய துறை. சுதந்தரச் சந்தையின் மூலம் பலன் பெருபவர்கள் உற்பத்தியாளர்களே தவிர மக்கள் அல்ல. மேலும், சந்தைப் போட்டி என்பது உற்பத்தியாளர்களுக்கு இடையில் மட்டுமே நிகழ்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. அதனால்தான் அரசின் குறுக்கீடுகளை அகற்றவேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். கட்டுப்பாடற்ற முறையில் இயங்கினால்தான் ஒரு நாட்டில் தொழில் வளம் பெருகும் என்று பிரசாரம் செய்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தை அரசிடம் இருந்து கைப்பற்றிக் கொள்கிறது. வர்த்தகம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் மட்டுமல்ல நாடுகளுக்கு இடையிலும் நட்பை மலரச் செய்யும் என்று வாதிடுவது பாசாங்கானது என்றார் எங்கெல்ஸ்.

தனிச்சொத்துடைமையின் விளைவு, வர்த்தகம். ஒரு பொருளை வாங்குவோர், விற்பவர் இருவருடைய இலக்கும் வெவ்வேறானவை, எதிரும் புதிருமானவை. வாங்குபவர் குறைவான விலை கொடுக்க விரும்புவார். விற்பவர் அதிக விலைக்கு விற்க விரும்புவார். ஒவ்வொரு முறை விற்பனை நிகழும்போதும் இந்த எதிரெதிர் விருப்பங்கள் மோதிக்கொள்கின்றன. ஒருவருடைய நோக்கம் என்ன என்பது இன்னொருவருக்குத் தெரியும். எனவே இருவருக்கும் இடையில் அடிப்படையில் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. பரிவர்த்தனை நிகழும்வரை அது நீடிக்கிறது. எனவே வர்த்தகத்தின் முதல் விதி, ரகசியம் காப்பது. விற்பனை செய்பவர் தன் பண்டத்தின் மதிப்பை மறைத்துக் காட்டுகிறார். பண்டத்தின் மதிப்பைக் குறைக்கும் அனைத்து தகவல்களையும் அவர் மூடி மறைக்கிறார். ஆக, எதிராளியின் தகவல் போதாமையே விற்பனையாளரின் பலமாக மாறிப்போகிறது. அறியாமையை அடிப்படையாக வைத்து ஒரு பொருள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தகம் இந்த இயல்பை அங்கீகரிக்கிறது.  ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், ‘வர்த்தகம் என்பது ஏமாற்றுவேலை!’  என்றார் எங்கெல்ஸ்.

சுதந்தரச் சந்தை தற்காலச் சூழலை எப்படியெல்லாம் மாற்றியமைத்திருக்கிறது என்பதை எங்கெல்ஸ் அறிந்திருந்தார். சொத்துடைமை சமூகத்தில் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு சந்தைப் பொருளாக, வணிகத்துக்கான பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறான். மேற்படி பொருளியில் ஆய்வாளர்கள் முன்வைத்த சந்தைப் போட்டி அனைத்து மனிதர்களின் வாழ்வையும் ஊடுருவிச் சென்று அவர்களை அலைகழித்துக்கொண்டிருக்கிறது. பலமற்றவர்கள் இந்தப் போட்டியில் தூக்கியடிக்கப்படுகிறார்கள். பலம் பெற்றவர்கள் மேலும் பலம் பெற்றவர்களாக மாறுகிறார்கள். எனவே, ‘மனிதகுலத்தைச் சீர்குலைக்கும் சொத்துரிமையையும் போட்டியையும் எதிரெதிரான நலன்களையும் ஒழிக்கவேண்டும்.’

அரசியல் பொருளாதாரத்தில் எங்கெல்ஸ் செலுத்த ஆரம்பித்த ஆர்வம் அவர் சித்தாந்த வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து தன் ஆய்வைத் தொடர்ந்தார் எங்கெல்ஸ்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 25

 

பாரிஸில் இருந்தபோது கார்ல் மார்க்ஸ் எழுதி வந்த Vorwarts பத்திரிகை 1845ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஹெகல், பாயர்பாக் ஆகியோரின் கருத்துகளை விவாதப்பொருளாக்கி மார்க்ஸ் தொடர் கட்டுரைகள் எழுதிவந்தார். சோஷலிசம் குறித்தும் பொருள்முதல்வாதம் குறித்தும் ஐரோப்பாவில் செய்படும் போலி சோஷலிஸ்டுகள் குறித்தும்கூட மார்க்ஸ் எழுதினார். இந்தப் பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் என்று பிரான்ஸைத் தொடர்பு கொண்டு வேண்டிக்கொண்டது பிரஷ்யா. பிரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் ஙணிணூதீச்ணூtண் பத்திரிகைக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. இது மட்டும் போதாது என்று நினைத்த பிரஷ்ய உள்துறை அமைச்சர் ஒருவர் ((François Guizot) கார்ல் மார்க்ஸை பாரிஸில் இருந்து நாடுகடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே ஆண்டு மார்க்ஸ் பாரிஸில் இருந்து வெளியேறினார்.

ஜெர்மனிக்குத் திரும்பமுடியாது, பாரிஸும் இல்லை என்றாகிவிட்ட நிலையில், மார்க்ஸ் பெல்ஜியத்துக்குக் குடிபெயர முடிவு செய்தார். பிரஸ்ஸல்ஸ் மார்க்ஸின் வருகையை அங்கீகரித்தது என்றாலும் கறாரான ஒரு முன்நிபந்தனையை விதித்தது. சமகால அரசியல் குறித்து எந்தவிதமான கட்டுரைகளையும் மார்க்ஸ் எழுதக்கூடாது, பதிப்பிக்கக்கூடாது. இதற்கு உடன்பட்டு நடந்துகொண்டால்தான் வருகை சாத்தியம். மார்க்ஸ் ஒப்புக்கொண்டு பிரஸ்ஸல்ஸுக்குக் குடிபெயர்ந்தார். எழுதுவதற்குத்தானே தடை, வாசிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் தடையில்லையே! பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற பிறகு, தன்னைப் போல் ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தமோசஸ் ஹெஸ் (Moses Hess), கார்ல் ஹீன்ஸென் (Karl Heinzen), ஜோசப் வேடிமர் (Joseph Weydemeyer) போன்ற சோஷலிஸ்டுகளை மார்க்ஸ் சந்தித்து நட்பு கொண்டார்.

 

எங்கெல்ஸ் அமைதியின்றி தவித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தனக்கும் வந்து சேரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். மற்றொரு பக்கம், வீட்டிலும் அவருக்கு எந்தவித ஆதரவும் புரிதலும் கிடைக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தினருடன் வாக்குவாதங்களும் உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பூமியே பிளந்தாலும் தொழிலைக் கைவிடக்கூடாது என்னும் தந்தையின் பிடிவாதம் எங்கெல்ஸை அதிருப்தி கொள்ளச்செய்தது. அவர் மனம் வேலையில் ஒட்டவில்லை.  இப்போதைக்கு அவர் முன் இருந்த ஒரே மாற்று பாதை, பிரஸ்ஸல்ஸ். ஒரே எதிர்காலம் தோழர் கார்ல் மார்க்ஸ்!

ஆனாலும் உடனடியாக அவரால் வெளியேற முடியவில்லை. பார்மெனில் மேலும் சில காலம் தங்கியிருந்தார். முணுமுணுத்துக்கொண்டிருந்தாலும், தந்தையின் ஆலையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டார். மார்ச் 1845 தொடக்கத்தில் போன், கொலோன் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து நண்பர்களைச் சந்தித்தார்.

எங்கெல்ஸ் எதிர்பார்த்ததைப் போலவே, பிரஷ்ய காவல்படை புரட்சிகர எழுத்தாளர்கள் மீதும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்புவர்கள் மீதும் கண்காணிப்பைத் தொடங்கியது. தவிர்க்கவியலாதபடி, எங்கெல்ஸின் பெயரும் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கம்யூனிச சிந்தனைகளையும் அரசு எதிர்ப்பு சிந்தனைகளையும் மக்களிடையே பரப்புவதில் எங்கெல்ஸ் வகித்த பாத்திரம் எத்தகையது என்பதை காவல்படை ரகசிய விசாரணைகள் நடத்தி தெரிந்துகொண்டது. எங்கெல்ஸ் பற்றி ஒரு பெரிய கோப்பு உருவாக ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட அதே சமயம், எங்கெல்ஸ் பார்மெனில் இருந்து வெளியேறினார். ஏப்ரல் 1845ல் பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்தார். ஒரு ஹோட்டலில் (26/27, Ste-Gudule) அறை எடுத்துக்கொண்டார். பிரஸ்ஸல்ஸ் வந்த புதிதில் இதே இடத்தில் மார்க்ஸ் சிறிது காலம் தங்கியிருந்தார். 5, Rue de l’Alliance என்னும் முகவரிக்கு மே 1845ல் மார்க்ஸ் குடிபெயர்ந்தார். மார்க்ஸைத் தொடர்ந்து எங்கெல்ஸும் இதே பகுதிக்குக் குடிபெயர்ந்தார். மார்க்ஸின் வீட்டுக்கு நெருக்கமான வீடு. எண், 7. கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ் இருவரும் எங்கெல்ஸை அன்புடன் வரவேற்றனர்.

பிரஸ்ஸல்ஸ் வருவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 19, 1843ல் மார்க்ஸ் ஜென்னியைத் (முழுப்பெயர், Jenny von Westphalen) திருமணம் செய்துகொண்டார். பிரஷ்ய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தரின் மகள் ஜென்னி. மார்க்ஸைவிட மூன்று வயது மூத்தவர். ஒன்றாகக் கல்வி பயின்ற காலத்தில் காதலிக்கத் தொடங்கி, எதிர்ப்புகளையும் மாற்று திருமண ஏற்பாடுகளையும் முறியடித்து இருவரும் ஒன்றிணைந்தனர். மார்க்ஸுக்கும் ஜென்னியின் தந்தை பாரனுக்கும் நல்ல நட்பு இருந்ததால் திருமணம் சாத்தியமானது.

‘நாங்கள் (எங்கெல்ஸும் மார்க்ஸும்) பிரஸ்ஸல்ஸில் சந்தித்துக்கொண்டபோது மார்க்ஸ் தனது வரலாற்றுப் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை முழுவதுமாக வளர்த்தெடுத்திருந்தார்!’ என்று நினைவுகூர்ந்தார் எங்கெல்ஸ். பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இரண்டையும் பற்றி எங்கெல்ஸிடம் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் மார்க்ஸ். இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் விவாதித்தனர். ஹெகலுக்குப் பிறகான தத்துவம் குறித்து ஒரு நூல் எழுத முடிவு செய்தார்கள்.

பிற்காலத்தில் வெளியான பாயர்பாக் பற்றிய ஓர் ஆய்வு (Theses on Feuerbach) என்னும் நூலின் பகுதிகளை மார்க்ஸ் அப்போதே எழுத ஆரம்பித்திருந்தார். அதுபற்றி எங்கெல்ஸிடம் அவர் விவாதித்தார். ஆனால், அவரது கையெழுத்துப் பிரதியை எங்கெல்ஸ் படித்துப் பார்த்தாரா என்பது தெரியவில்லை. மார்க்ஸின் மரணத்துக்குப் பிறகே இந்தப் புத்தகம் எங்கெல்ஸால் வெளியிடப்பட்டது.

இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு நூலை எழுதுவதற்கு முன்னால் ஏற்கெனவே தொடங்கியிருந்த ஒரு பணியை முடித்துவிட விரும்பினார் மார்க்ஸ்.  அரசியல் மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய விரிவான விமரிசனங்கள்  (Critics of Politics and Political Economy) அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதும் பணியை ஏற்றிருந்தார் மார்க்ஸ். இரண்டு பாகங்களில் இந்தப் புத்தகத்தை எழுதித் தருவதாக ஒரு பதிப்பாசிரியரிடம் அவர் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஹெகலுக்குப் பிந்தைய தத்துவ உலகம் பற்றிய நூலை எங்கெல்ஸுடன் இணைந்து எழுதுவதற்கு முன்னால் ஒப்பந்தப் புத்தகத்தை முடிக்கவேண்டியிருந்தது.

அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மார்க்ஸ் ஆரம்பித்திருந்தார் என்றாலும் அவரால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. தொழில்துறையின் தலைநகரமாக விளங்கிய இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் அறிந்துகொள்ளாமல் இந்தப் புத்தகத்தை எழுத முடியாது. எனவே இங்கிலாந்து பயணம் அவசியம் என்று கருதினார் மார்க்ஸ். மார்க்ஸ் தன் பிரச்னையை பகிர்ந்துகொண்டபோது எங்கெல்ஸ் பரவசமடைந்தார். காரணம் அவருக்கும் இங்கிலாந்து செல்லவேண்டியிருந்தது. இங்கிலாந்தின் சமூக வரலாற்றை எழுத அவர் திட்டமிட்டிருந்தார். அதற்காக இங்கிலாந்து செல்வது குறித்தும் அவர் யோசித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸுக்கும் அதே நோக்கம் இருப்பதைக் கண்டதும் எங்கெல்ஸ் அவருடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்போது கார்ல் மார்க்ஸுக்குப் போதிய அளவு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து செல்வதை அவர் ஒத்திப்போட்டதற்கு அவரது இந்தத் தயக்கமும் ஒரு காரணம். ஆனால் எங்கெல்ஸ் வருவதாகச் சொன்னதும் மார்க்ஸ் உடனே ஒப்புக்கொண்டார். எங்கெல்ஸின் இங்கிலாந்து உழைக்கும் வர்க்கம் பற்றிய புத்தகம் மார்க்ஸை ஏற்கெனவே கவர்ந்திருந்தது. மட்டுமல்லாமல், எங்கெல்ஸுடன் இங்கிலாந்து சமூக வாழ்க்கை குறித்தும் ஆலைகள் குறித்தும் சாசன இயக்கம் குறித்தும் மார்க்ஸ் விரிவாக விவாதித்திருக்கிறார். இங்கிலாந்தை நன்கு அறிந்திருந்த எங்கெல்ஸுடன் இணைந்து செல்வதுதான் சரியாக இருக்கும் என்று மார்க்ஸ் நினைத்தார்.

பயணம் தொடங்கியது. ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 211, 1845 வரை இருவரும் இங்கிலாந்தில் தங்கியிருந்தனர். பெரும்பாலான நேரத்தை அவர்கள் மான்செஸ்டரில் செலவிட்டனர். எங்கெல்ஸ் தனது நண்பர்களை மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மான்செஸ்டர் குடியிருப்புகளுக்கு மார்க்ஸை அழைத்துச் சென்று காண்பித்தார். ஆலைத் தொழிலாளர்களின் இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்றார். மான்செஸ்டரில் உள்ள செத்தாம் நூலகம் (Chetham’s Library) மார்க்ஸை மிகவும் கவர்ந்தது. இங்கிலாந்தின் பழைமையான நூலகங்களுள் ஒன்று இது.

காலை நூலகத்தில் நுழைந்தவுடன் அடுக்குகளில் இருந்து புத்தகங்களை வாரி அணைத்துக் கொண்டு வந்து வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் தொடங்குவார்கள். எங்கெல்ஸ் தன் குறிப்புகளை அவ்வப்போது மார்க்ஸிடம் காண்பித்து அவர் அறிவுரைக்குச் செவிகொடுப்பார். மார்க்ஸ் சில குறிப்புகளை எழுதி எங்கெல்ஸுக்குக் கொடுப்பார். மேற்கொண்டு தேடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் அந்தக் குறிப்புகள் எங்கெல்ஸுக்குப் பயன்படும். மார்க்ஸ் எழுதத் தொடங்கிய பிரதியில் எங்கெல்ஸின் நூல் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது இடம்பெற்றன. இருவரும் தனித்தனி புத்தகங்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர் என்றாலும் ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதரவாக இருந்தனர்.

நூலகத்தில் எங்கெல்ஸ் வாசித்த சில முக்கிய நூல்கள் இவை. ஜார்ஜ் போர்ட்டரின் The Progress of the Nation, தாமஸ் டூகேயின் A History of Prices, பிரெட்ரிக் ஈடனின் The State of the Poor, வில்லியம் காட்வினின் History of the Commonwealth of England, ஜேம்ஸ் கில்பார்ட்டின் The History and Principles of Banking. இந்தப் புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுக்க எங்கெல்ஸுக்கு மூன்று குறிப்பேடுகள் தேவைப்பட்டன. அத்தியாவசியமான புத்தகங்களை அப்படியே சுருக்கி எழுதிக்கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எந்தவித பரபரப்புமின்றி அமைதியாக ஒரு நூலகத்தில் நேரம் செலவிட்டதை நினைத்து மகிழ்ந்தார் எங்கெல்ஸ். மார்க்ஸின் அருகாமை அவர் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. மார்க்ஸின் கூர்மையான அறிவுத் திறனும் நுணுக்கமான முறையில் அவர் எழுப்பும் கேள்விகளும் எங்கெல்ஸை வியப்பிலாழ்த்தின. தான் இணைந்து பணியாற்றுவது ஒரு மேதையுடன் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்திருந்தார். சிறிய ஜன்னலுக்கு அருகே இருவரும் அமர்ந்திருந்தனர். அந்த ஜன்னல்களில் தீட்டப்பட்ட வண்ணங்கள் காரணமாக சூரிய வெளிச்சமும் வண்ணமயமாக இருந்தது. வெள்ளைத் தாள்களில் படரும் வண்ணங்களை எங்கெல்ஸ் ரசித்தார்.  மார்க்ஸின் கவனம் புத்தகத்தைத் தாண்டி வேறு எங்கும் படரவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 26

 

கையெழுத்துப் பிரதி

லண்டனில் உள்ள சாசன இயக்கத்தினரையும் இடதுசாரிகளையும் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார் எங்கெல்ஸ். ராபர்ட் ஓவனின் சோஷலிசத்தைப் பின்பற்றுவோரிடம் அழைத்துச் சென்று உரையாட வைத்தார். அவர்களுடன் விரிவாக உரையாடவும் விவாதிக்கவும் முடிந்தது. மார்க்ஸுக்கு அது புது அனுபவம். இங்கிலாந்தில் நிலவும் புரட்சிகர போக்கை நேரடியாக அவரால் இப்போது கண்டுணர  முடிந்தது. ஓவனை ஆதரிக்கும் சோஷலிஸ்டுகளால் புரட்சிகர வழிமுறைகளையோ சாசன இயக்கத்தின் வழிமுறைகளையோ ஆதரிக்க முடியாததையும் மார்க்ஸ் கண்டுகொண்டார். அவர்கள் தனித்திருந்தனர். இடதுசாரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் வேறொரு பக்கம் தனித்திருந்தனர். சாசன இயக்கத்தினர் ஒரு பக்கம். சோஷலிஸ்டுகள் மற்றொரு பக்கம்.

ஆகஸ்ட் 1845 இறுதியில் லண்டன் சுற்றுப் பயணம் முடிந்து இருவரும் பிரஸ்ஸல்ஸ் திரும்பியபோது அவர்கள் மனத்தில் லண்டன் முழுமையாகப் படர்ந்திருந்தது. ஒரு புரட்சிகர சித்தாந்தத்தின் தேவை அவர்களை அழுத்திக்கொண்டிருந்தது. எங்கெல்ஸ் தன்னுடன் மேரி பர்ன்ஸையும் பிரஸ்ஸல்ஸுக்கு அழைத்து வந்திருந்தார். சென்ற முறை கண்டதற்கும் இந்த முறைக்கும் அவர்களிடையே நட்புறவு பலப்பட்டிருந்தது. மான்செஸ்டர் வீதிகளின் அசல் முகத்தை எங்கெல்ஸுக்கு வெளிப்படுத்தியவர் மேரி பர்ன்ஸ். வெளிப்பட்ட அந்த முகத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை அறியவைத்தவர் எங்கெல்ஸ். இருவரும் ஒருவரையொருவர் உளப்பூர்வமாக நேசித்தனர். அப்போது தொடங்கி எங்கெல்ஸின் நிழலாகவே மாறிப்போனார் மேரி பர்ன்ஸ்.

இப்போது பிரஸ்ஸல்ஸில் மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரபலமாகியிருந்தனர். இருவரும் உரையாடல்களையும் கருத்து பரிமாற்றங்களையும் வரவேற்பவர்கள் என்பதால்

அரசியல், தத்துவ விவாதங்கள், சந்தேகங்கள் என்றால் அவர்களிடம் சென்றுவிடலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். இருவருடைய இல்லங்களிலும் எப்போதும் ஒரு சிறு கூட்டம் நிரம்பியிருந்தது.  வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கே குழுமியிருந்தனர் என்பதால் ஒப்பீட்டளவில் அரசியல் குறித்தும் மக்கள் போராட்டங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

ஜார்ஜ் வீர்த் என்னும் ஜெர்மானிய கவிஞர் எங்கெல்ஸ் பற்றிய தன் பார்வையை தன் தாயாரிடம் ஒரு கடிதத்தில் இப்படிப் பகிர்ந்துகொண்டார். ‘சொத்து வைத்திருக்கும் பெரியவர்கள் நன்றாக இருக்கட்டும்! எங்கள் அணியில் மக்கள் படை இருக்கிறது. உலகிலுள்ள சான்றோர்கள், சிந்தனையாளர்கள் பலர் எங்கள் பக்கம் திரும்பிக்கொண்டிருகிறார்கள். உதாரணத்துக்கு, பார்மெனில் இருந்து நண்பர் பிரெட்க் எங்கெல்ஸ் வந்திருக்கிறார். இங்கிலாந்து தொழிலாளர்களைப் பற்றி அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உற்பத்தியாளர்களைச் சாடி தொழிலாளர்களை அவர் ஆதரிக்கிறார். அவருடைய சொந்த தந்தையே ஜெர்மனியிலும் பிரிட்டனிலும் ஆலைகள் வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் இப்போது தன் குடும்பத்தினருடன் அவ்வளவாக ஒன்று கலக்கவில்லை. அவருக்கு இறை நம்பிக்கை இல்லை… ஆனால் அவர் மிக நல்லவர், கருணையுள்ளம் கொண்டவர். அசாதாரணமான புத்திக்கூர்மையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் நோக்கும் கொண்டவர். உழைக்கும் மக்களுக்காக அவர் பகலும் இரவும் உழைத்துக்கொண்டிருக்கிறார்.’

லண்டனில் விநியோகமாகும் தி நார்தர்ன் ஸ்டார் என்னும் பத்திரிகைக்கு எங்கெல்ஸ் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். சாசன இயக்கத்துக்கு ஆதரவாகவும் உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாகவும் செயல்படும் இதழ் அது. அதனை நடத்தி வந்த ஜூலியன் ஹார்னே என்பரை லண்டனில் இருந்தபோது எங்கெல்ஸ் சந்தித்தார். மார்க்ஸையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஜெர்மனியில் நடைபெறும் அரசியல் மாற்றங்களை புரட்சிகர கண்ணோட்டத்துடன் அணுகி, விமரிசனம் செய்து எழுதி வந்தார் எங்கெல்ஸ். ஜெர்மனியில் நிலவும் ஒடுக்குமுறையும் அதற்கு எதிராக அம்மக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் இங்கிலாந்து உழைக்கும் வர்க்கம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது எங்கெல்ஸின் நோக்கம்.

உதாரணத்துக்கு, The Late Burchery at Leipzig என்னும் கட்டுரை ஜெர்மானில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் பற்றியது.  ‘தொழிலாளர் இயக்கம் தன்னிறைவு பெற்றிருக்கிறது’ என்பதால் அது நிச்சயம் வெற்றிபெறும் என்று எங்கெல்ஸ் அறிவித்தார். பூர்ஷ்வாக்களுக்கு எதிராக எங்கே எதிர்ப்புகள் தோன்றினாலும் எங்கெல்ஸ் அந்த எதிர்ப்பு அரசியலையும் சமூகத் தன்மைகளையும் கூர்மையாக ஆராய்ந்தார். தன் ஆதரவையும் உடனுக்குடன் வெளிப்படுத்தினார். ஜெர்மனியின் அரசியல் நிலவரம் நிச்சயம் தொழிலாளர்களுக்குச் சாதகமாக மாறும் என்று அவர் நம்பினார். இந்தப் போராட்டங்கள், தவிர்க்கவியலாதபடி ‘புரட்சியைக் கொண்டுவரும்’ என்று பிரகடனம் செய்தார்.

The State of Germany என்னும் தலைப்பில் தொடர்ச்சியாக ஜெர்மனி குறித்து எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள், அந்நாட்டின் ஐம்பதாண்டு கால அரசியல், சமூக வரலாற்றை விவரித்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற புரட்சி (பூர்ஷ்வாக்களின் புரட்சி என்று வருணித்தார் எங்கெல்ஸ்) தொடங்கி அன்று வரையிலான ஜெர்மனியை ஆராய்வதே எங்கெல்ஸின் நோக்கமாக இருந்தது. இந்த ஆய்வு பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்திருந்தது. ஜெர்மனியில் பூர்ஷ்வாக்கள் முன்வைத்துள்ள கட்டுப்பாடற்ற தாரளமயமாக்கலின் நோக்கங்களை எங்கெல்ஸ் பட்டியலிட்டார்.

ஜெர்மானிய பத்திரிகைகளிலும் எழுதினார். சோஷலிசத்தை ஜெர்மானியர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சோஷலிசத்தை பெரும்பான்மை ஜெர்மானியர்கள் அணுகிய முறை சரியானதல்ல என்று விமரிசித்தார் எங்கெல்ஸ். கொஞ்சம் ஹெகல், கொஞ்சம் பாயர்பேக் என்று கலந்து என்னவோ படித்துக்கொண்டிருக்கிறார்கள். தத்துவ விசாரணை என்னும் பெயரில் ஏதேதோ சித்தாந்தக் குழப்பங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நடைமுறையைக் கவனிக்க தவறுகிறார்கள். அல்லது மறுக்கிறார்கள். ஃபூரியர், செயிண்ட் சைமன் போன்ற முன்னோர்களையும் அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள். இதுதான் எங்கள் வாசிப்பு எல்லை, இதுதான் எங்கள் சிந்தனை எல்லை என்பதாக குறுகிப்போய்விடுகிறார்கள். இப்படி இருந்தால் ‘அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளமுடியாது’ என்றார் எங்கெல்ஸ். அறம் என்றால் என்ன, நீதி என்றால் என்ன போன்ற விசாரணைகளில் ஈடுபடுவதைவிட புரட்சிகர மாற்றம் வேண்டி தொழிலாளர்களை அணிதிரட்டுவதும், வர்க்கப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதும் அவசியமானது என்று சுட்டிக் காட்டினார் எங்கெல்ஸ். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த, ஹெகலுக்குப் பிந்தைய உலகம் பற்றிய புத்தகம் எவ்வளவு அவசியமானது என்பது எங்கெல்ஸுக்கு நன்றாகப் புரிந்தது. தத்துவார்த்த, சித்தாந்த குழப்பங்களில் இருந்து இவர்கள் முதலில் விடுபட்டால்தான் இன்றைய உலகை இவர்களால் புரிந்துகொள்ளமுடியும்.

ஜெர்மானியத் தத்துவம் (The German Ideology) என்று அந்தப் புத்தகம் தலைப்பிடப்பட்டது. நவம்பர் மாதம் புத்தகப் பணி ஆரம்பமானது. புனிதக் குடும்பம் புத்தகம் போலன்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தொடக்கம் முதல் இறுதிவரை ஒன்றிணைந்து இதில் உழைத்தனர். புனிதக் குடும்பத்தில், யாருக்கு எந்தப் பகுதி என்று பிரித்துக்கொண்டு பிரத்தியேகமாக இருவரும் எழுதி, பின்னர் தொகுத்தனர். ஜெர்மானியத் தத்துவம் முழுக்க முழுக்க கூட்டுழைப்பைக் கோரும் தத்துவ நூலாக இருந்தது. இருவருடைய தொடர்ச்சியான விவாதங்களால் இந்த நூல் கட்டமைக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு சொல்லிலும் இருவரும் நிறைந்திருந்தனர்.

முதல் பாகத்தில் மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றன. முதல் அத்தியாயம் பாயர்பேக்கின் சித்தாந்தம் பற்றியது. கருத்துமுதல்வாதம் பற்றிய ஆதார ஆய்வு அடங்கிய பாகம் இது என்பதால் பலவகைகளில் இது முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயங்கள் இளம் ஹெகலியர்கள் பற்றியது. அவர்களுடைய சித்தாந்தம் எப்படிப்பட்டது என்பதையும் அதை ஏன் விமரிசிக்கவேண்டும் என்பதும் விரிவாக இந்த அத்தியாயங்களில் விவாதிக்கப்படுகிறது. புத்தகத்தின் இரண்டாவது பாகம், சோஷலிசத்தை முன்வைக்கும் வேறு சில ஆளுமைகள் பற்றியது.

‘ஜெர்மன் தத்துவத்தின் சித்தாந்தப் பார்வைக்கு எதிராக எங்கள் கருத்தை’ முன்வைப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம் ஆகும் என்றார் மார்க்ஸ். வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து இந்தப் புத்தகத்தில் வரையறை செய்திருந்தனர். ‘சுருக்கமாகச் சொல்வதானால், எங்களுடைய முந்தைய தத்துவஞானத்தின் மனச்சாட்சியுடன் கணக்குத் தீர்க்கத் தொடங்கினோம்’ என்றார் மார்க்ஸ்.

இந்தப் புத்தகம் எத்தகைய சூழலில், யாருக்காக எழுதப்பட்டது என்பதை எங்கெல்ஸ் பதிவு செய்திருக்கிறார்.  அதே சமயம், இந்தப் புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட பிறகு சந்தித்த பிரச்னைகள் பற்றியும் அவர் விவரித்தார். ‘ஹெகலுக்குப் பிந்தைய தத்துவஞானத்தை விமரிசிக்கும் வடிவத்தில், எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டோம். அரைக்கால் தாள் அளவில் இரண்டு பெரிய நூல் தொகுதிகளாக அமைந்த கையெழுத்துப் பிரதி வெஸ்ட்ஃபாலியாவிலுள்ள பதிப்பகத்துக்கு நெடுநாளைக்கு முன்பே கொடுக்கப்பட்டிருந்தது. என்றாலும், நிலைமைகள் மாறிவிட்டதால் அதை அச்சேற்றுவது சாத்தியமே இல்லை என்னும் செய்தி எங்களுக்குக் கிடைத்தது.’

ஆனால், எங்கெல்ஸும் மார்க்ஸும் அதற்காக வருத்தம் கொள்ளவில்லை.  ‘சுயவிளக்கம் பெறுவதே எங்கள் முதன்மையான நோக்கம். அதை நாங்கள் சாதித்துக்கொண்டதால் அதிகமாகக் கவலைப்படவில்லை.’ எனில், இறுதியில் அந்தக் கையெழுத்துப் பிரதி என்ன ஆனது? கிண்டலும் சுயஎள்ளலும் கலந்த தொனியில் எங்கெல்ஸ் விவரிக்கிறார். ‘கையெழுத்துப் பிரதியை எலி கடித்து விமரிசிக்கட்டும் என்று விட்டு விட்டோம்.’  (பிரெட்ரிக் எங்கெல்ஸ், பிப்ரவரி 21, 1888).



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 27

 

‘தத்துவ ஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப் படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்’ என்று 1845ம் ஆண்டு வசந்த காலத்தில் மார்க்ஸ் எழுதினார். எங்கெல்ஸுடன் இணைந்து மார்க்ஸ் எழுதிய ஜெர்மானியத் தத்துவம் அந்தப் பணியைத்தான் தொடங்கி வைத்தது. புரட்சிகர தத்துவத்தின் அடிப்படைகள் முதல் முறையாக இந்தப் புத்தகத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டன. கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை நிராகரித்து, பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் பற்றிய அடிப்படைகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் இதில் வழங்கினார்கள்.

இயற்கை வழங்கிய காய் கனிகளையும் கிழங்குகளையும் உணவாக்கவும் இருப்பிடத்தை உருவாக்கவும் உடைகள் உருவாக்கவும் மனிதனுக்கு உழைப்பு தேவைப்பட்டது. உழைப்பை அடைய அவன் தன் கரத்தையும் மூளையையும் பயன்படுத்தவேண்டியிருந்தது. எனவே, உழைப்பு என்பது ‘மனிதனின் உணர்வுபூர்வமான நடவடிக்கை.’

ஆக, மனித குலத்தின் வளர்ச்சி என்பது மனிதனின் உழைப்பில்தான் அடங்கியுள்ளது. தனிமனிதனின் செயல்பாடு என்பதைக் காட்டிலும் சமூகத்தின் செயல்பாடே உழைப்பு என்று அழைக்கப்படுகிறது. சமகால மனிதர்களிடம் இருந்தும் முந்தைய தலைமுறை மனிதர்களிடம் இருந்தும் உழைப்பின் நுட்பங்களை தனிமனிதன் அறிந்து கொள்கிறான். உழைப்புக் கருவிகளையும் பெற்றுக்கொள்கிறான். இந்த அடிப்படையில் உழைப்பின் நுட்பங்களும் உழைப்புக் கருவிகளும் காலந்தோறும் மாறுதலுக்கு உட்பட்டன.

‘உற்பத்தியில் ஈடுபடும்போது மனிதர்கள் இயற்கை மீது மட்டும் செயலாற்றுவதில்லை. கூடவே தங்களில் ஒருவர் மீது ஒருவரும் செயல்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முறையில் ஒத்துழைப்பதன் மூலமும் தமது செயல்பாடுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதன் மூலமுமே உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தியில் ஈடுபடும் பொருட்டு அவர்கள் ஒருவருடன் ஒருவர் திட்டவட்டமான தொடர்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்த சமூகத் தொடர்புகள், உறவுகள் ஆகியவற்றுக்கு உள்ளேதான் இயற்கை மீதான அவர்களது இயக்கம், அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.’

விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கும் அம்சம் எது என்னும் கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் அளிக்கிறது ஜெர்மானியத் தத்துவம். ‘உணர்வு மூலமோ, சமயம் மூலமோ அல்லது வேறு எதைக் கொண்டோ (விலங்கையும் மனிதனையும் நாம்) வேறுபடுத்திப் பார்க்கக்கூடும். (ஆனால் உண்மையில்) மனிதர்கள் தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிய உடனே தம்மைத் தாமாகவே விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். இந்த நடவடிக்கை அவர்களது வாழ்க்கை அமைப்பால் நெறிப்படுத்தப்படுகிறது. தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் மனிதர்கள் மறைமுகமாகத் தமது மெய்யான பொருளாயத வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.’

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது ‘அவர் என்ன உற்பத்தி செய்கிறார்’ என்பதையும் ‘எப்படி உற்பத்தி செய்கிறார்’ என்பதையும் பொருத்தே முடிவு செய்யப்படுகிறது. ‘தனிநபர்களின் இயல்பு அவர்களது பொருள் உற்பத்தியை நிர்ணயிக்கும் பொருள்வகை நிலைமைகளைச் சார்ந்திருக்கிறது.’ ஆக, உற்பத்தி என்பது ‘தனிநபர்களின் வாழ்க்கையை வெளிக்காட்டும் ஒரு திட்டவட்டமான வடிவம்.’ (மார்க்ஸ் எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், தொகுதி 1.)

உழைக்கும் மனிதனுக்குத் துணையாக இருக்கும் கருவிகளே உற்பத்திக் கருவிகள்.  கருவிகளின் வளர்ச்சியும் மனித குலத்தின் வளர்ச்சியும் இணைந்தே உள்ளன. மனித சமூகத்தில் பல்வேறு சமூக வடிவங்களை கருவிகள்தான் உருவாக்கியுள்ளன. எனவே ஒரு சமுதாயத்தில் எதனை உற்பத்தி செய்தார்கள் என்று ஆராய்வதோடு நின்றுவிடாமல் அப்பொருளை உற்பத்தி செய்ய அவர்கள் பயன்படுத்திய கருவி எது என்பதையும் ஆராயவேண்டும்.

உழைப்போடு சேர்த்து வேலைப்பிரிவினையும் ஏற்பட்டது என்றது ஜெர்மானியத் தத்துவம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி என்னும் நூலில் ஆ. சிவசுப்பிரமணியன் இதனை கீழ்கண்டவாறு விளக்குகிறார். ‘வேட்டையின் போது கொல்லப்பட்ட மிருகங்களின் குட்டிகளை வளர்த்ததன் அடிப்படையிலும், காட்டு விலங்குகளின் இயக்கமானது ஒரு குறுகிய பகுதிக்குள் நிகழுமாறு பார்த்துக் கொண்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது வேட்டையாடிய போது, அவற்றின் இனப்பெருக்கத்தை கண்டறிந்ததன் வாயிலாகவும், ஆடு மாடு ஆகியனவற்றை வளர்க்கத் தொடங்கினர்.

‘இதன் அடிப்படையில் எருமை, பசு ஆகியவற்றை வளர்த்து, அவற்றை இனப் பெருக்கம் செய்து வாழும் மேய்ச்சல் நில வாழ்க்கை உருவானது. வேட்டையாடுதலை மையமாகக் கொண்டிருந்த சமூகக் குழுவில் இருந்து ஒரு பிரிவினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினர். இது மனித சமூக அமைப்பில் ஏற்பட்ட முதல் வேலைப் பிரிவினைவாதம்.’ பிறகு தொழில்துறை மற்றும் வணிகத்துறை உழைப்பு விவசாயத்துறை உழைப்பில் இருந்து தனியே பிரித்தெடுக்கப்பட்டது. ‘இதிலிருந்து நகரம் என்றும் நாட்டுப்புறம் என்றும் இரு பிரிவுகள்’ தோன்றின என்பது மார்க்ஸ்-எங்கெல்ஸின் பார்வை.

இந்த உழைப்புப் பிரிவினை பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்தது. உற்பத்திக் கருவிகளையும் அதனால் உண்டான பலன்களையும் யார் அனுபவித்தனர் என்பதைப் பொறுத்து இந்த வளர்ச்சிக் கட்டங்கள் தீர்மானிக்கப்பட்டன. முதல் வடிவம், பூர்வகுடி உடைமை. ‘இந்தக் கட்டத்தில் மக்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மூலமும், விலங்குகளை வளர்த்தல் அல்லது… விவசாயம் மூலமும் வாழ்ந்து வந்தனர்… இந்தக் கட்டத்தில் உழைப்புப் பிரிவினை மிக ஆரம்ப நிலையில் இருக்கிறது. குடும்பத்தில் நிலவும் இயற்கையான உழைப்புப் பிரிவினையை மேலும் விரிவுபடுத்துவதோடு நின்றுவிடுகிறது.’

இரண்டாவது வடிவம், பண்டைய சமுதாயம் மற்றும் அரசு உடைமையாகும். இந்த வளர்ச்சிக் கட்டத்தில், ரோமாபுரியில் உள்ளது போல் அரசிடம் சொத்துகள் குவிந்து கிடந்தன. நகரத்தார் கிராமத்தாரை அடிமைப்படுத்தினார்கள். அரசு அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. மூன்றாவது கட்டம், நிலப்பிரபுத்துவம். இங்கே சிறு விவசாயிகள் பண்ணையடிமைகளாக மாற்றப்பட்டனர்.

உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும், புதிய வேலைப்பிரிவினைகள் உருவாயின. சொத்துடைமையின் புதிய வடிவங்கள் உருவாயின. சொத்துடைமையின் வடிவங்கள் மாற மாற, சமூக, அரசியல் நிலவரமும் மாற்றம் பெற்றது. பிற்காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தக் கருத்தாக்கம் வளர்ச்சி பெற்றது. அதே போல் வர்க்கம் பற்றி ஜெர்மானியத் தத்துவம் வழங்கிய பார்வை புரட்சிகரமானது. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியினரின் உழைப்பைக் கவர்ந்துகொள்ளும்போது வர்க்கம் உருவானது. பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்கள் உருபெற்றன.

வரலாறு பற்றி அது நாள் வரை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கருத்தாக்கங்களை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் உடைத்தெறிந்தனர். வீரம் செறிந்த, புகழ்பெற்ற தனிமனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்றே பலரும் கருதி வந்தனர். பிரெஞ்சுப் புரட்சி ஏன் ஏற்பட்டது என்று கேட்டால் இப்படியொரு கதையை விவரிப்பார்கள். அதாவது லூயி மன்னனின் பித்தப்பையில் கற்கள் இருந்தன. அந்தக் கற்கள் அவன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்தன. வலியால் அந்த மன்னன் முன்கோபம் கொண்டவனாக மாறிப்போனான். பலருடைய விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டான். அதுவே அவனை அழிக்கவும் செய்தது. அதன் மூலமே பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இந்தக் கதை வழங்கும் நீதி இதுதான். ஒருவேளை மன்னனின் வயிற்றில் பித்தப்பைகள் உருவாகாமல் இருந்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காது.  இதே கதையை வரலாற்றின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நீட்டித்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, கிளியோபாட்ராவின் மூக்கு வேறு மாதிரி இருந்திருந்தால் எகிப்திய, ரோமாபுரி வரலாறு வேறு மாதிரி மாறியிருக்கும்.

தனி நபர்களை முன்நிறுத்தி எழுதப்படும், விவாதிக்கப்படும் இதுபோன்ற வரலாற்றுப் போக்குகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் கடுமையாக எதிர்த்தனர். வரலாறு என்பது நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடுக்கிக் காட்டுவது அல்ல. மன்னர்களின், அவர்கள் வாரிசுகளின், வாரிசுகளின் வாரிசுகளின் பெயர்களையும் அவர்கள் ஆண்ட காலகட்டத்தையும் நினைவில் தேக்கி வைத்துக்கொள்வது அல்ல. வரலாறு என்பது மாளிகைகளில் உருவாவதல்ல. வரலாறு பிரபுக்களால் எழுதப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருளியல் வளர்ச்சிதான் அந்தச் சமூகத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்கிறது.

வரலாறு பற்றியும் மனித குல வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம் பற்றியும் வேலைப் பிரிவினை பற்றியும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் பற்றியும் ஜெர்மானியத் தத்துவம் விரிவான கோட்பாடுகளை வழங்கியது. சொத்துடைமையின் ஆணிவேரை அம்பலப்படுத்தியது. சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாட்டாளி வர்க்கம் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தது.

மேலும் ஆளும் வர்க்கத்தை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் ஜெர்மானியத் தத்துவம் கற்றுக்கொடுத்தது. வர்க்கங்கள் திடீரென்று தோன்றிவிடவில்லை என்றும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்த பிறகே தற்போதைய நிலையை அடைந்துள்ளன என்றும் தெளிவாக்கியது.  ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளே ஒவ்வொரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனைகள் எப்போதும் ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை பாட்டாளி வர்க்கம் எதிர்க்கும்போது புரட்சிகரமான சிந்தனைகள் உருபெறுகின்றன.

ஆரம்பத்தில் பார்த்தபடி, வெறும் வியாக்கியானங்களோடு ஜெர்மானியத் தத்துவம் தன் பணியை முடித்துக்கொண்டுவிடவில்லை. இந்த நிலைமையை எப்படி மாற்றவேண்டும் என்பதைப் பற்றியும் விவாதித்தது. பூர்ஷ்வா வர்க்கத்தை பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர்க்கவேண்டும்? எப்படி வெற்றி பெறவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் அளித்த தீர்வை வரலாறு அதுவரை கேள்விப்பட்டிருக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 28

 

பாட்டாளி வர்க்கக் கம்யூனிசப் புரட்சி. இது மட்டும்தான் சுரண்டலை ஒழிக்கும். இது மட்டும்தான் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களைத் தூக்கியெறிந்துவிட்டு அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தவர்களை மீட்டெடுக்கும். ‘சமுதாயத்தின் எந்தவித பலன்களையும் அனுபவிக்காமல் ஆனால் அத்தனை சுமைகளையும் சுமந்துகொண்டிருக்கும்’ வர்க்கத்தைப் புரட்சி மட்டுமே விடுவிக்கும். இதுவரை நடைபெற்ற போர்களும் புரட்சிகளும் வர்க்கங்களையும் வர்க்க மேலான்மையையும் ஒழிக்கவில்லை. கம்யூனிசப் புரட்சி மட்டுமே இதனை சாதிக்கும். ‘வர்க்கத்தின் சட்ட திட்டங்களையும் வர்க்கத்தையும் கம்யூனிசப் புரட்சி ஒழிக்கும்.’ புரட்சி நடைபெறும்போது, உழைக்கும் பிரிவினர் தங்களை பழைய சமூகத்தில் இருந்து, பழைய ஆதிக்க சித்தாந்தங்களில் இருந்து, பழைய வழிமுறைகளில் இருந்தும் துண்டித்துக்கொள்வர். ஒரு புதிய சமூகத்தை அவர்கள் படைப்பார்கள்.

புதிதாக அவர்கள் படைப்பது கம்யூனிச சமூகமாக இருக்கும். அதற்கு அவர்களுக்கு முதல் தேவை, அரசியல் அதிகாரம். இப்போது ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கையில் இருக்கும் அதிகாரம் உழைக்கும் மக்களின் கையில் இருக்கவேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களின் சமூகம் வலுவானதாக உருபெறும். உழைக்கும் வர்க்கத்தின் கரத்தை வலுவாக்க அரசியல் அதிகாரம் தேவை. பரிபூரண சர்வ அதிகாரம். பாட்டாளி மக்களின் அதிகாரம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். ‘எங்களைப் பொறுத்தவரை கம்யூனிசம் என்பது அமல்படுத்தப்படவேண்டிய ஒரு போக்கு அல்ல. அது ஒரு லட்சியம். அந்த லட்சியத்துக்கு ஏற்றவாறு நடைமுறையை மாற்றவேண்டும்.’

ஜெர்மானியத் தத்துவத்தை எழுதி முடித்த மார்க்ஸும் எங்கெல்ஸும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் இறங்கினர். கிட்டத்தட்ட அதே சமயம், பிரஸ்ஸல்ஸில் காவல்துறை கண்காணிப்பு அதிகரித்திருந்தது. அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான கருத்துகள் தடை செய்யப்பட்டன.  பத்திரிகைகளில் புரட்சியின் வாசம் படியாதவாறு பார்த்துக்கொண்டார்கள். உழைக்கும் மக்களுக்குச் சாதகமான எழுத்துகள் அச்சில் ஏறவில்லை. அதிகாரத்தின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது.

கண்காணிப்பையும் அடக்குமுறையையும் மீறி மக்களோடு தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, மார்க்ஸும் எங்கெல்ஸும் ஒரு முடிவுக்கு வந்தனர். பொது ஊடகங்களை இனி நம்ப முடியாது. ஆனால் அதற்காக எழுதாமல் இருக்கவும் முடியாது. உழைக்கும் மக்களை அணிசேர்ப்பதன் அவசியம் குறித்து பரவலான முறையில் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவேண்டியது முக்கியம். அதற்கு லண்டனிலும் பிரஸ்ஸல்ஸிலும் ஜெர்மனியிலும் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு ஆதரவான இயக்கங்களை ஒன்றிணைக்கவேண்டும். அதற்கு ஒரே வழி, ரகசிய முறையில் கடிதங்கள் மூலம் கருத்துகள் பரிமாறிக்கொள்வது.

ஜனவரி 1846ல் பிரஸ்ஸல்ஸில் ஒரு கமிட்டியை மார்க்ஸும் எங்கெல்ஸும் உருவாக்கினார்கள். ஜெர்மனியில் இருந்தும் பிரான்ஸில் இருந்தும் போலந்தில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் ரகசியமாகக் குடியேறியிருந்த பல அரசியல் ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் நன்கு அறியப்பட்ட சோஷலிஸ்டுகளைத்தான் முதலில் இருவரும் தொடர்பு கொண்டனர். உதாரணத்துக்கு, புரோதன் போன்றவர்கள். மற்றும் சில பிரெஞ்சு சோஷலிஸ்டுகள். தற்போதைய அரசியல், சமூக நிலைமைகள் மாறவேண்டும் என்னும் பேரார்வம் கொண்டவர்கள். ஆனால், கமிட்டியில் சேரும்படியும் வழிகாட்டும்படியும் கேட்டபோது, புரோதன் போன்றவர்கள் மறுத்துவிட்டனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் வடிவமைத்திருந்த புரட்சிகரமான தத்துவமும் செயல்திட்டமும்தான் அதற்குக் காரணம். இவர்களுடைய ஒத்துழையாமை மேலும் சில பாடங்களை இருவருக்கும் கற்றுக்கொடுத்தது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைப் பெறுவதில் யாருக்கெல்லாம் முனைப்பு இருக்கிறதோ அவர்கள் அல்லவா மெய்யான புரட்சியாளர்கள்? அவர்களிடம் தானே கம்யூனிசத்தைக் கொண்டு போகமுடியும்? இந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள மறுப்பவர்களும், புரிந்துகொண்டும் ஒத்துழைக்க மறுப்பவர்களும் உண்மையில், பூர்ஷ்வாக்களை ஆதரிப்பவர்களாகத்தானே கருதப்பட வேண்டும்? நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைப் புரிந்துகொண்டால்தானே லட்சியத்தை நோக்கி நடைபோடமுடியும்?

சாசன இயக்கத்தினர் சிலர் கமிட்டியில் இணைந்தனர். கமிட்டி தன் பணியைத் தொடங்கியது. பிரஸ்ஸல்ஸில் இருந்த ஜெர்மானிய தொழிலாளர்களிடம் முதலில் பிரசாரத்தைத் தொடங்கினார்கள். புரட்சிகர அரசியல் என்றால் என்ன? கம்யூனிசம் என்றால் என்ன? நிலவும் தொழிலாளர் விரோத சூழலை எப்படி மாற்றியமைப்பது? பாட்டாளி வர்க்கமாக நீங்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டியது ஏன்? அதற்கு எப்படிப்பட்ட உழைப்பைச் செலுத்தவேண்டும்? அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எப்படி? கம்யூனிச சமூகம் எப்படி இருக்கும்?

பணியாற்ற தொடங்கியவுடன் கமிட்டி எதிர்கொண்ட முதல் பெரும் பிரச்னை, மக்களிடையே பரவிக்கிடந்த அடையாள குழப்பம். கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்று எங்கெல்ஸும் மார்க்ஸும் உரையாடும்போது, தொழிலாளர்களில் பலர் விழித்தனர். நீங்களா கம்யூனிஸ்டுகள் அப்படியானால், ‘மெய்யான சோஷலிஸ்டுகள்’ என்னும் பெயரில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்கள் யார்?

இதென்ன குழப்பம் என்று விசாரித்தபோது, ஹெர்மன் க்ரீக் (Hermann Kriege) என்பவர் தலைமையில் மெய்யான சோஷலிஸ்டுகள் என்னும் குழு உழைக்கும் மக்களிடையே பிரசாரம் செய்து வருவதைக் கண்டுகொண்டனர். இவர்கள் யார்? இவர்களுடைய நோக்கம் என்ன? ஆராய ஆரம்பித்தபோது, விசித்திரமான விடைகளே கிடைத்தன. லீக் ஆஃப் தி ஜஸ்ட் என்னும் இயக்கத்தைச் சேர்ந்தவர் இவர் க்ரீக். நியூ யார்க்கில் இருந்தபடி இவர் செயல்பட்டு வந்தார். வேறு சில தலைவர்களுடன் இணைந்து ரகசியமாக இளம் அமெரிக்க இயக்கம் ஒன்றை இவர்கள் நடத்தி வந்தனர்.

நாங்கள்தான் மெய்யான சோஷலிஸ்டுகள் என்று இவர்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இவர்கள் முன்வைத்தது சீர்திருத்தத்தை. சில சமூக, சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உழைக்கும் பிரிவினரின் துயர் நீங்கிவிடும் என்பதே இவர்கள் கொள்கை. இவர்களுக்கென்று தனியே பத்திரிகை இருந்தது. பிரசார இயந்திரம் இருந்தது. கவர்ச்சிகரமான தலைவர்களும் ஆதரவாளர்களும் இருந்தனர். மக்களைக் கவர்ந்திழுப்பதற்காக இவர்கள் கம்யூனிசத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டனர். கூட்டம் கூடி பேசுவது, கட்டுரைகள் எழுதுவது, துண்டு அறிக்கைகள் வெளியிடுவது ஆகியவை மூலம் இவர்கள் ஆள்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர்.

இத்தோடு நிறுத்திக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. நியூ யார்க் நகர செல்வந்தர்களுக்கு இவர்கள் பல வேண்டுகோள்களைத் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டிருந்தனர். தொழிலாளர்களின் அவல நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மனத்தை உருக்கும் வகையில் அவர்கள் விவரித்திருந்தனர். தங்களால் இயன்ற பண உதவியை அளித்தால் அவர்கள் வாழ்வில் சிறு வெளிச்சமாவது ஏற்படும் என்று வேண்டி உருகி கடிதங்கள் எழுதினார்கள். எதிர்பார்த்த அளவுக்கு நிதி திரளாமல் போனால் கடிதத்தின் தொனி இந்த ரீதியில் மாறிப்போகும். செல்வந்தர்களே, நீங்கள் பணம் அளிக்கத் தவறினால் பிறகு கம்யூனிச சமூகம் அமைத்து அதன் மூலம் உங்களைப் பதவியில் இருந்து தூக்கிவிட நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கெஞ்சலோ மிரட்டலோ, நோக்கம் ஒன்றுதான். பணக்காரர்களின் இதயத்தை உருக்கி, மனத்தை மாற்றி அவர்களிடம் இருந்து பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்வது. ஒத்துழைக்காவிட்டால் மிரட்டி சம்பாதிப்பது. ஆக மொத்தம் சம்பாதிப்பது. எங்கெல்ஸுக்கு இந்தக் கடிதங்கள் கோபத்தையும் நகைப்பையும் ஒருங்கே ஏற்படுத்தின. இவர்கள் எப்படித் தங்களை மெய்யான சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள்? இதுவா சோஷலிசம்? இவர்களா கம்யூனிச சமூகத்தை அமைக்கப்போகிறார்கள்? இவர்களை நம்பியா உழைக்கும் வர்க்கம் திரண்டு கொண்டிருக்கிறது?

பூர்ஷ்வாக்களுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் மட்டுமல்ல, இப்படிப்பட்ட போலியான புரட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துகொண்டார் எங்கெல்ஸ். கற்பனாவாதிகள், சோஷலிஸ்டுகள் என்னும் பெயரில் பூர்ஷ்வாக்களுடன் சமசரம் செய்துகொள்ளத் துடிப்பவர்கள், மதம் மூலம் சமூக ஒற்றுமையைப் போதிப்பவர்கள் என்று பலரும் பல்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிகர சித்தாந்தத்தைச் சிதைப்பதே இவர்கள் நோக்கமாக இருக்கிறது. யாரையும் பகைத்துக்கொள்ளாமல், எல்லோருடைய ஆதரவையும் பெற்று செயல்படுவதே இவர்கள் நோக்கமாக இருந்தது. யாரை எதிர்க்கவேண்டுமோ அவர்களுடன் கைகோர்த்துக்கொள்ள இவர்கள் தயாராக இருந்தனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் பதம் இவர்களுக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது.

இவர்களை எதிர்கொண்டு வீழ்த்தவேண்டியது அவசியம். எது உண்மையான கம்யூனிசம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவாவது இதை செய்தாகவேண்டும். நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்றால் அவர்கள் யார் என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். யாரை நம்ப வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தியாகவேண்டும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜெர்மானியத் தத்துவத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதினார். இப்போது இதே நோக்கத்துக்காக நடவடிக்கை ரீதியில் செயல்படவும் அவர்கள் முடிவுசெய்தனர். மக்களை முதலில் அரசியல் ரீதியில் தயார் படுத்தவேண்டும்.

க்ரீகைப் போலவே கார்ல் க்ரூன் என்பவர் பிரான்ஸில் இருந்தபடி ‘மெய்யான சோஷலிசத்தைப்’ பிரசாரம் செய்துகொண்டிருந்ததை கமிட்டி உணர்ந்துகொண்டது. இவருடைய செல்வாக்கு அச்சுறுத்தும் வகையில் பெருகிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நச்சுப் பிரசாரத்தை முறியடிக்க, பாரிஸுக்கு எங்கெல்ஸை அனுப்பிவைக்க கமிட்டி முடிவு செய்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 29

ஆகஸ்ட் 15, 1846 அன்று எங்கெல்ஸ் பாரிஸ் வந்து சேர்ந்தார். மிகப் பொறுமையாக நகரைச் சுற்றி வந்தார். லண்டன் கற்றுக்கொண்ட உத்தி அது. ஒரு நகரைச் சுற்றிவரும்போது, அதன் மக்கள், இருப்பிடங்கள், அரசு அமைப்புகள், தொழிற்சாலைகள், கடைத் தெருக்கள், வெளிப்புற, ஒதுக்குப்புற பகுதிகள், ஆடம்பர மாளிகைகள் என்று அனைத்தையும் பார்வையிடவேண்டும். எங்கே யார், எப்படி வசிக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். தொழிலாளர் நல அமைப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும். பாரிஸில் பரவியிருக்கும் ஜெர்மானியத் தொழிலாளர்களிடம் மெல்ல மெல்ல உரையாடலைத் தொடங்கவேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். பிறகு, கற்றுக்கொடுக்கவேண்டும்.

பிரான்ஸின் அரசியல் சூழல் குறித்து முதலில் அறிந்துகொண்டார் எங்கெல்ஸ். போலி சோஷலிஸ்டுகளாக க்ரீக், க்ரூன் ஆகியோர் ஜெர்மானியத் தொழிலாளர்கள் மீதும் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் மீதும் செலுத்தி வந்த அசாத்தியமான ஆதிக்கத்தை நேரடியாக உணர்ந்தார். சோஷலிசம் என்றால் இவர்கள் சொல்வது மட்டும்தான் என்பதாக அங்குள்ளவர்கள் சர்வ நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தனர். போலிகளிடம் இருந்து இவர்களை மீட்டாகவேண்டிய அவசியம் உடனடியாகப் புரிந்தது.

குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தார். தி நார்தர்ன் ஸ்டார் என்னும் பத்திரிகைக்கு பாரிஸில் இருந்தபடி கட்டுரைகள் எழுதினார். மார்க்ஸுடன் கடிதப் போக்குவரத்து தொடர்ந்துகொண்டிருந்தது. தான் கற்ற ஒவ்வொரு விஷயத்தையும், தான் எடுத்த ஒவ்வொரு முடிவையும், தன்னுடைய ஒவ்வொரு யோசனையையும் அவர் மார்க்ஸுக்கு அனுப்பிவைத்தார்.

அவர் சந்தித்த ஜெர்மானியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தையல்காரர்களாகவும், சாயப்பட்டறை ஊழியர்களாகவும், பொற்கொல்லர்களாகவும் இருந்தனர். அவர்களைத் திரட்டுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை. நான் உங்களுடன் உரையாடலாமா, விவாதிக்கலாமா என்று எங்கெல்ஸ் கேட்டுக்கொண்டபோது அவர்கள் மறுக்காமல் ஏற்றனர். ஆனால், எங்கெல்ஸுக்குத் தெரியும். இவர்களில் பலர் க்ரூன் ஆதரவாளர்கள். ஏற்கெனவே கம்யூனிசம் குறித்தும் சோஷலிசம் குறித்தும் புரட்சி குறித்தும் வேறு மாதிரியான சித்திரத்தை உள்வாங்கியிருப்பவர்கள். இவர்களை அசைப்பது கடினம். ஆனாலும், முயற்சியைக் கைவிடக்கூடாது.

தொழிலாளர்களே நீங்கள் இதுவரை கற்றவை அனைத்தும் போலியானவை, நான் சொல்லப்போவதுதான் உண்மை என்று பிரசாரத்தைத் தொடங்க முடியாது. முதலில் பின்னணியை விவரிக்கவேண்டும். நீங்கள் கற்ற சோஷலிசம், இதோ இப்போது நான் பிரகடனம் செய்யப்போகும் சோஷலிசம் இரண்டையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள் என்று அவர்களை உள்ளே இழுக்கவேண்டும். யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தில், தன் உரையை ஆரம்பித்தார் எங்கெல்ஸ். தத்துவம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், வரலாறு பயிலும் கலை என்று அடிப்படைகளில் இருந்து தொடங்கினார்.

தத்துவம் என்றால் என்ன? எவற்றை எல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புகிறோமோ, அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் ஞானம்தான் தத்துவம். தத்துவம் இல்லாமலும்கூட ஒருவன் இயங்கமுடியும் என்றாலும் அது வளர்ச்சியற்றது. காரணம், ஒன்றையே அவன் திரும்பத் திரும்ப செய்துகொண்டிருப்பான். அதே போல், தத்துவம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்களாலும் பலனில்லை. கேட்போரை மயக்கும் வண்ணம் பேசினால் மட்டும் போதாது. மிகப் பெரிய ஆதரவு அலையைக் கூட்டினால் மட்டும் போதாது. எத்தனைப் புரட்சிகரமான தத்துவமாக இருந்தாலும், அது நடைமுறையைச் சார்ந்தே இருக்கவேண்டும். ஆக, தத்துவமும் நடைமுறையும் கட்டாயம் இணைந்திருக்கவேண்டும்.

ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயன்று தோல்வியடைந்தான். காரணம், அப்போது விஞ்ஞானம் வளர்ந்திருக்கவில்லை. எதையும் முறைப்படி ஆராயும் குணம் ஆதி மனிதனுக்கு இல்லை. இந்தப் பின்னணியில் அவன் உருவாக்கிக்கொண்ட சில அபிப்பிராயங்கள் பிற்போக்குத்தனமாக இருந்தன. அப்போதைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

ஆக, ஆதி மனிதனின் அறியாமையே அவன் முயற்சிக்குத் தடையாக இருந்தது. இதே அறியாமையின் அடிப்படையில்தான் மதங்கள் கிளர்ந்தெழுந்தன. இன்று காலம் மாறிவிட்டது. அறிவியலும் தொழில்நுட்பமும் எங்கோ சென்று விட்டன. இந்தச் சூழலுக்கு ஏற்ப நாம் நம் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அறியாமை தொடரவே செய்யும். இன்னமும் மதங்களை நம்பிக்கொண்டு, அற்புதங்களை நம்பிக்கொண்டு காலத்தைக் கடத்தவேண்டியிருக்கும். ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட கதி நமக்கு ஏற்படவேண்டிய அவசியமில்லையே! பொருள்முதல்வாதம் என்பது என்ன? விஞ்ஞானத்தின் துணை கொண்டு பிரபஞ்சத்தை விளக்கும் முறை. அவ்வளவுதான்.

எங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்தியாவில், பொருள்முதல்வாதம் லோகாயதவாதம் என்று அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் பொலிட்ஸர் எழுதிய மார்க்சிய மெய்ஞானம் நூலைத் தமிழாக்கிய ஆர்.கே. கண்ணன் லோகாயதவாதம் பற்றி மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் அறிந்துகொள்ளாமல் இருந்தது வேதனையானது என்கிறார்.

‘லோகாயதவாதம் என்னும் பதத்தை நாம் பயன்படுத்துவதற்குக் காரணம் அது நம் பரம்பரையை, மரபையொட்டியது. நமது மெய்ஞ்ஞானச் செல்வத்தின் தொன்மையை ஒட்டியது இரண்டாவது காரணம். லோகாயதவாதம் என்பது ஏதோ ஒரு மேல்நாட்டுச் சரக்கு அல்ல. அசல் உள்நாட்டுச் சரக்குதான். லோகாயதவாதத்தைப் போதித்தவர்கள் பண்டைக்கால கிரேக்க மெய்ஞ்ஞானிகள் மட்டும் அல்ல. பண்டைக்கால இந்திய மெய்ஞ்ஞானிகளும் லோகாயதவாதத்தைச் சிருஷ்டித்திருக்கிறார்கள்.

‘சுமார் கிமு 1000 முதல் 700ம் நூற்றாண்டுகளுக்கு இடையே, அதாவது 2500 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் லோகாயதவாத மெய்ஞ்ஞானம் தோன்றிப் பரவி இருந்தது எப்து வரலாறு. பிரகஸ்பதி, சார்வாகர், ஜாபர்லி முதலனோர் இதன் முன்னோடிகள், பிரச்சாரகர்கள்.’

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை ஆ. சிவசுப்பிரமணியன் இப்படி விளக்குகிறார். ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது வரலாறு என்ற அறிவுத் துறையில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. வரலாறு என்பது காலவரிசை அடிப்படையில் நாடுகளின் வரலாற்றையும் அவற்றில் வாழும் மக்களையும், அங்கு நடந்த முக்கிய நிகழ்வுகளையும் குறித்த அறிவுத் துறையாகும். ஆனால் வரலாற்றுப் பொருள்முதல்வாதமோ பொதுவான கோட்பாடுகளையும் முறைகளையும் கூறும் ஓர் அறிவுத் துறையாகும். ஒரு குறிப்பிட்ட மக்களையோ நாட்டையோ தன் ஆய்வுப் பொருளாக அது கொள்ளவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் அதன் வளர்ச்சிக்கான உந்து சக்தியையும் கண்டறிகிறது.’

எங்கெல்ஸின் பிரசாரத்துக்கு உடனடியாக ஆதரவு திரளவில்லை. ஆனால், எங்கெல்ஸ் ஒவ்வொரு படியாக முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார். இந்தக் கட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் அடுத்து வரும் விஷயம் அவர்களை ஈர்க்கலாம். நீங்கள் ஏன் ஒரு கமிட்டி ஆரம்பிக்கக்கூடாது என்றும் தொழிலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். அதற்கான ஆயத்தங்களையும் செய்துகொண்டார்.

கம்யூனிஸ்டுகளின் அடிப்படை நோக்கங்களை அவர் பட்டியலிட்டார்.

1. பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, பாட்டாளி வர்க்கத்தில் நலன்களைக் காக்கவேண்டும்.  இதனை செய்யும்போது எந்தவித சமசரத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது.

2. தனிச்சொத்துரிமையை ஒழிக்கவேண்டும். பதிலுக்கு, பொதுவுடைமையை வளர்க்கவேண்டும், ஆதரிக்கவேண்டும்.

3. இதனை எப்படிச் சாதிப்பது? ஜனநாயகப்பூர்வமான புரட்சியின் மூலமும் ஆயுதப் போராட்டத்தின் மூலமும்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 30

 

எங்கெல்ஸ் ஒரு பக்கம் பொறுமையாக கம்யூனிசத்தை விளக்கினார். இன்னொரு பக்கம், கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். போலியான கம்யூனிச வழிகளைப் பின்பற்றுவோரை அவர் அம்பலப்படுத்தி சாடினார். ‘அந்த வேதாளத்துக்குத் தெரியும். நான் எத்தனை கடுமையாக இவர்களை எதிர்த்தேன் என்று. அவர்களது மோசமான நம்பிக்கைகளை நான் தயவுதாட்சண்யமின்றி தாக்கினேன். நீங்கள் பாட்டாளிகளே இல்லை என்று அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சொன்னேன்.’ (மார்க்ஸுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் இருந்து).

புரோதன், க்ருன் போன்றோரின் வழிமுறைகள் தவறானவை என்பதை எங்கெல்ஸ் புரியவைத்தார். கார்ல் மார்க்சின் தத்துவப் பார்வை எப்படி அவர்களிடம் இருந்து வேறுபடுகிறது என்பதைப் புரியவைத்தார். கமிட்டியில் இருந்தவர்கள் தொடக்கத்தில் எங்கெல்ஸைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் போகப் போக அவர் பேச்சில் இருந்த நியாயத்தால், அசலான தார்மிகக் கோபத்தால் ஈர்க்கப்பட்டு அவர் பக்கம் சென்றனர். எங்கெல்ஸைப் பொருத்தவரை இது ஒரு வெற்றி. நம்பிக்கையூட்டும் வெற்றி. கடினமாக முயன்றால் கல்லையும் உருக்கிவிடலாம்.

எங்கெல்ஸின் ‘புரட்சிகர கம்யூனிசக் கொள்கைகள்’ பற்றி நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் பேச்சு பரவியது. பிரெஞ்சு காவல்துறை எங்கெல்ஸைக் கண்காணிக்க ஆரம்பித்தது. அரசுக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டும் அந்த ஜெர்மானியனை ஆபத்தானவனாக காவல்துறை கருதியதில் வியப்பேதுமில்லை. பிரெஞ்சு காவல்துறை தன்னைக் கண்காணிப்பதை எங்கெல்ஸ் உணர்ந்துகொண்டார். தன் நடவடிக்கைகளை ரகசியமானதாக மாற்றிக்கொண்டார். நிலைமை சீராகும்வரை எழுத்துப்பணியைத் தொடர்வது என்று முடிவு செய்து க்ரூன் உள்ளிட்ட போலி சோஷலிஸ்டுகளை அம்பலப்படுத்தி கட்டுரைகள் எழுதி பதிப்பித்தார். ஜெர்மனியின் அரசியல், பொருளாதா நிலவரம் குறித்தும் கட்டுரைகள் எழுதினார். இதற்கிடையில், ஜெர்மானியத் தத்துவம் கையெழுத்துப் பிரதியைப் பதிப்பிக்கும் முயற்சிகளை எங்கெல்ஸ் பாரிஸில் மேற்கொண்டார். ஆனால், முயற்சி வெற்றிபெறவில்லை.

எதிர்பாராவிதமாக, லீக் ஆஃப் ஜஸ்ட் குழுவில் உள்ள சில தலைவர்கள் எங்கெல்ஸின் பிரசாரத்தால் கவரப்பட்டனர். இதை எங்கெல்ஸே எதிர்பார்க்கவில்லை. லீக் ஆஃப் ஜஸ்ட் பிற்போக்குதனத்திலும் போலித்தனத்திலும் கனவுலகத்திலும் குடிகொண்டிருந்த ஓர் அமைப்பு. புரோதன், க்ருன் உள்ளிட்டோரின் சிந்தனைகள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன.

ஆனால், எங்கெல்ஸ் பாரிஸ் சென்ற சமயம், லீக் ஆஃப் ஜஸ்ட் அமைப்பின் தலைமையில் விரிசல்கள் விழுந்தன. ஒருவேளை இதுவே மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டதோ? எங்கேல்ஸ் யூகித்தது சரியாகவே இருந்தது. தகுந்த வழிகாட்டுதல் இன்றி அமைப்பு திணறிக்கொண்டிருந்தது. தலைமையிடம் இருந்து நேரடியாகவே எங்கெல்ஸுக்கு அழைப்பு வந்தது. எங்களுடன் இணைந்துகொள்ள உங்களுக்குச் சம்மதமா? நாங்கள் அமைப்பை மறுசீரமைப்பு செய்துகொண்டிருக்கிறோம். அதில் உங்கள் பங்களிப்பும் தேவைப்படும் என்று நம்புகிறோம். காரல் மார்க்ஸுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

லீகில் சேரச் சொல்லி முன்னரே மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் அழைப்புகள் வந்திருக்கின்றன. ஒவ்வொருமுறையும் அவர்கள் அந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை முடியவில்லை. எங்கெல்ஸ் தன் தவிப்பை மார்க்ஸுக்குத் தெரியப்படுத்தினார். ‘நாம் எந்தெந்த காரணங்களுக்காக அமைப்பை நிராகரித்தோமோ அந்தக் காரணங்களை அவர்கள் விலக்கிக்கொண்டுவிட்டார்கள். என்னால் இப்போது மறுக்கமுடியவில்லை.’

சாசன இயக்கத்தின் ஆதரவையும் லீக் அப்போது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தையை தலைமையில் லீக் சாசனர்களை ஒதுக்கியே வைத்திருந்தது. அந்த வகையில், தலைமை மாற்றம் பல அடிப்படை மாற்றங்களை லீகுக்குக் கொண்டு வந்திருந்தது. விடாப்பிடியாக முன்னர் பேணிவந்த பல கட்டுப்பாடுகளை லீக் தளர்த்திக்கொண்டது. இந்த மாற்றங்களை ஆராய்ந்த எங்கெல்ஸ், மார்க்ஸ் இருவரும் லீகில் இணைந்தனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் கொள்கைகளையும் லீக் பெருமளவில் உள்வாங்கிக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

ஜூன் 2, 1847 அன்று லண்டனில் லீகின் முதல் மாநாடு நடைபெற்றது. தொடக்க மாநாடும் அதுவே. எங்கெல்ஸ் முன்னின்று வழிநடத்தினார். இந்த மாநாட்டில் மார்க்ஸால் கலந்துகொள்ளமுடியவில்லை. பணக்கஷ்டம். ஆனால், மாநாட்டில் கடைபிடிக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்து முன்னரே அவர் எங்கெல்ஸுடன் விவாதித்திருந்தார்.

மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் எங்கெல்ஸின் வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்டனர். இது ரகசிய கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்றாலும் ஜனநாயகபூர்வமாக அதன் செயல்பாடுகள் அமையவேண்டும் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டபோது அவர்கள் திகைத்துபோனார்கள். மத்திய கமிட்டி அமைப்பது குறித்து எங்கெல்ஸ் தலைவர்களுடன் விவாதித்தார். யார் யார் தலைமை பொறுப்பில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்வதிலும் எங்கெல்ஸின் தலையீட்டைத் தலைமை கோரிப் பெற்றது.

லீகின் முதல் மாநாடு சில சட்டத்திட்டங்களை இயற்றி நிறைவேற்றியது. உலகளளில் ஒரு ரகசிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநாடு இத்தனை சீராக நடைபெற்றது இதுவே முதல் முறை என்று பலர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டனர். லீகின் நோக்கம், கொள்கை, செயல்திட்டம் உள்ளிட்டவற்றில் எங்கெல்ஸின் முடிவே இறுதியானதாக இருந்தது. எங்கெல்ஸுடன் முரண்படவோ அவரை எதிர்த்து மாற்று கருத்துகளை முன்வைக்கவோ அங்கே யாரும் துணியவில்லை. அவர்கள் எதிர்பார்த்திருந்தது ஒரு நல்ல தலைமையை. பொறுப்பான, அழுத்தமான, கட்டுறுதி மிக்க, கண்டிப்பான ஒரு தலைமை.

மாநாட்டில் தீர்மானமான விஷயங்களை தனியே குறிப்பெடுத்துக்கொண்டார்கள். இந்தத் தீர்மானங்கள் மாநாட்டில் பங்கேற்காத லீகின் பிற பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் அவற்றை வாசித்து, அதன் முடிவுகளை ஏற்கவேண்டும். ஏற்றபின் அவை தீர்மானங்களாக மாறும். அமைப்பை வழிநடத்திச் செல்லும் ஒரு ப்ளூ பிரிண்ட் உருவாகும்.

எங்கெல்ஸ் தனிப்பட்ட முறையில் தனது வெற்றியாக கருதியது தீர்மானத்தில் அவர் இணைத்த ஒரு ஷரத்தை. லீக் ஆஃப் ஜஸ்ட் என்னும் பெயரை நீக்கிவிட்டு கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது எங்கெல்ஸின் கோரிக்கை. மார்க்ஸுடன் இணைந்து அவர் எடுத்த முடிவு இது. மெய்யான கம்யூனிஸ்ட் இயக்கம் என்றால் என்னவென்று அறிந்திராத மக்களை லீக் நெருங்கி சென்று ஈர்க்கும். ஈர்க்கவேண்டும். தொடக்கத்தில் இருந்து ஓர் அமைப்பை உருவாக்கி, வளர்த்தெடுப்பதற்குப் பதில் ஏற்கெனவே அறிமுகமான ஓர் அமைப்பை உள்வாங்கிக்கொண்டு மாற்றியமைப்பது சுலபமான காரியம் என்று எங்கெல்ஸ் நம்பினார். மார்க்ஸின் ஒப்புதலும் ஆதரவும் கிடைத்தது.

லீகின் புகழ்பெற்ற முழக்கத்தையும் எங்கெல்ஸ் திருத்தினார். ‘அனைவரும் சகோதரர்களே!’ இதுதான் லீகின் கவர்ச்சிகரமான முழக்கம். மக்களை தன் அணியில் திரட்ட லீக் தலைவர்கள் இந்த முழக்கத்தையே ஆரம்பம் முதல் பயன்படுத்தி வந்தனர். எங்கெல்ஸ் இதனை நிராகரித்தார். அனைவரும் சகோதரர்கள் என்பதெல்லாம் கேட்பதற்கு மிக நன்றாக இருந்தாலும், யதார்த்தத்தில் ஒரு பயனையும் தராது. கற்பனையில் கால் பதித்திருக்கும் எந்தவொரு கொள்கையும் சொற்றொடரும் முழக்கமும் நமக்குத் தேவையில்லை. நாம் நிகழ்காலத்தில் கால் ஊன்றி நிற்போம். நிகழ்கால போராட்டத்தில் பங்கெடுப்போம். நிகழ்கால நிலைமைகளைத் திருத்துவோம். எங்கெல்ஸ் முன்வைத்த முழக்கம், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!’ மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து இந்த முழக்கத்தை உருவாக்கியிருந்தனர்.

மாநாட்டுப் பத்திரத்தை (Communist Confession of Faith) எங்கெல்ஸ் தன் மொழியில் உருவாக்கினார். கம்யூனிசத் தத்துவத்தின் அடிப்படையில் இந்தப் பத்திரம் அமைக்கப்பெற்றது. வரலாற்று ரீதியில் தொழிலாளர்களின் பாத்திரத்தை இது வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும் அனைவரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் முறையில் கேள்வி பதில் பாணியில் இது வடிவமைக்கப்பட்டது. பாட்டாளிகள் தனியொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பாட்டாளிகள் பூர்ஷ்வாக்களுக்கு எதிர்வினையாக உருவானவர்கள். அவர்கள் அடிமைகளிடம் இருந்தும் பண்ணையடிமைகளிடம் இருந்தும் வேறுபட்டவர்கள். பூர்ஷ்வாக்களிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதன் மூலம் அவர்கள் தங்கள் தளைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.

பாட்டாளிகளின் வரலாற்றுப் பின்னணி, வர்க்கப் போராட்டம், தனிச்சொத்துடைமை பொதுவுடைமையாக மாற்றப்படுவதற்கான வழிமுறைகள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான செயல்திட்டம், அதிகாரம் கைப்பற்றப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறை போன்ற பல விஷயங்களை எங்கெல்ஸ் இந்தப் பத்திரத்தில் விவரித்திருந்தார். மதம் குறித்தும் குடும்ப அமைப்பு குறித்தும்கூட தெளிவான ஒரு கண்ணோட்டத்தை எங்கெல்ஸ் முன்வைத்திருந்தார். லண்டனில் ஒரு பத்திரிகையைத் தொடங்கலாம் என்றும் மாநாடு முடிவுசெய்தது.

கம்யூனிஸ்ட் லீகின் முதல் மாநாடு முடிவடைந்ததும் எங்கெல்ஸ் பாரிஸ் திரும்பினார். ஜூலை 1847ல் பிரஸ்ஸல்ஸ் திரும்பிய எங்கெல்ஸ் மார்க்ஸுடன் இணைந்துகொண்டார். முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதையும் மாநாட்டு அனுபவங்களையும் கடைபிடித்த தீர்மானங்களையும் ஆர்வம் பொங்க விவரித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மார்க்ஸும் எங்கெல்ஸும் உறுதி பூண்டனர். ஆகஸ்ட் 5ம் தேதி, கம்யூனிஸ்ட் லீகின் மாவட்ட கிளையை பிரஸ்ஸல்ஸில் தொடங்கி வைத்தனர். அந்த மாத இறுதியில், அமைப்பின் ஆதரவோடு ஜெர்மானியத் தொழிலாளர்கள் சங்கம் என்னும் பெயரில் ஓர் இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 31

 

கம்யூனிசத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஓர் அமைப்பை (கம்யூனிஸ்ட் லீக்) உருவாக்கிய திருப்தியில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். பிரஸ்ஸல்ஸில் தொடங்கப்பட்ட ஜெர்மானியத் தொழிலாளர் சங்கத்தில் நடப்பு அரசியல் குறித்தும் கம்யூனிசம் குறித்தும் தொடர்ச்சியாக பல சொற்பொழிகள் நடத்தப்பட்டன. விவாதங்களில் மக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கம்யூனிசத்தை எப்படி நாம் கடைபிடிக்கமுடியும்? என் சொத்துகளைத் துறந்தால்தான் நான் உங்கள் இயக்கத்தில் சேர முடியுமா? அரசாங்கத்தை விவசாயிகளாகிய நாங்கள் நடத்தமுடியும் என்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா? நீங்கள் சொல்வதெல்லாம் மெய்யாகவே நடந்துவிடுமா? எங்கள் அடிமைத்தளைகளை உங்கள் கொள்கை தகர்த்து எறிந்துவிடுமா?

அக்டோபர் 1847ல் சங்கத்தில் நூறு உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். அரசியல் பிரசாரத்தில் எங்கெல்ஸ் பல புதுமைகளைப் புகுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தார். சொற்பொழிகளை அனைவரும் முழுமையாக உள்வாங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் கல்விப் பின்புலமும் கற்றல் திறனும் நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. சிலருக்கு மட்டும் புரியும்படி பிரசாரம் சுருங்கிவிடக்கூடாது. எனவே, எங்கெல்ஸ் நாடகங்களை அறிமுகப்படுத்தினார். இசை நிகழ்ச்சிகளும் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன. தொழிலாளர்களின் நிலையை சித்தரிக்கும் வகையிலும், அவர்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டன. எங்கெல்ஸ் இந்த ஏற்பாடுகளில் முன்னிலையில் இருந்து செயல்பட்டார். புதிய வடிவிலான இந்தப் பிரசார உத்தி எதிர்பார்த்த பலனை அளித்தது.

பிறகு, ஒரு பெல்ஜியத் தொழிலாளர் அமைப்புடன் சங்கம் உறவு வளர்த்துக்கொண்டது. அந்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் பிரஸ்ஸல்ஸுக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டது. சோஷலிஸ்டுகளும் அறிஞர்கள் பலரும் பிரஸ்ஸல்ஸ் சங்கத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். போலந்து மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த நாடுகடத்தப்பட்ட அறிஞர்களையும் சங்கம் வரவேற்றது. சங்கத்தின் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்த உதவும் எந்தவொரு சந்தர்ப்பமும் தவறவிடப்படவில்லை.

அப்போதுதான் அந்த அறிவிப்பு வெளிவந்தது. செப்டம்பர் 16 முதல் 18 வரை பிரஸ்ஸல்ஸில் சர்வதேச சுதந்தர வர்த்தக மாநாடு நடைபெறுவதாக இருந்தது. மார்க்ஸும் எங்கெல்ஸும் புன்னகை செய்துகொண்டனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பல்வேறு முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களும் அரசியல் அறிவுஜீவிகளும் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் உரையாற்றுவார்கள். பெரும் திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப்போகிறார்கள். நோக்கம், முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவமான சுதந்தரச் சந்தையை அனைவருக்கும் கொண்டு சென்று சேர்ப்பது. ஏழைமையை ஒழிக்க சுதந்தர வர்த்தகமே ஒரே தீர்வு என்று மக்களை நம்ப வைப்பது. அரசாங்கத்தோடு அனுசரித்து, அரசாங்கக் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் மதித்து ஏற்று நடக்கும்படி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்துவது. கம்யூனிசத்தை அறிமுகப்படுத்த இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்குமா?

உரையாற்றுபவர்கள் பட்டியலில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் நண்பரும் ஜெர்மானியக் கவிஞருமான ஜார்ஜ் வீர்த் இருவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். மாநாடு தொடங்கியது. வழக்கம் போல், ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், முதலாளித்துவத்தின் சாதனைகள் குறித்தும், புதிய சந்தைகளைக் கண்டறியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறித்தும், சந்தை வாய்ப்புகள் எப்படி ஏழைமையைப் போக்கும் என்பது பற்றியும் பலர் கவர்ச்சிகரமாக உரையாற்றினர். சுதந்தரச் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக ஒரு நாட்டின் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் புரொடக்ஷனிஸம் கொள்கையைச் சிலர் முன்னிறுத்தினார்கள். இந்தக் கொள்கை நாடுகளுக்கு இடையிலான சுதந்தர வர்த்தகத்தை எதிர்த்தது. காரணம் அந்நாட்டின் தொழிலாளர்கள் அயல்நாட்டு வர்த்தகத்தால் பாதிப்படைவார்கள் என்பது அல்ல. ஒரு நாட்டின் முதலாளிகள் இன்னொரு நாட்டின் பெரு முதலாளிகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதே காரணம்.

பிறகு, ஜார்ஜ் வீர்த் அழைக்கப்பட்டார். அழைக்கப்பட்டபோதும்கூட அவரைப் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு கவிஞர் என்று நினைத்திருக்கவேண்டும். வீர்த் தன் உரையைத் தொடங்கினார். அறிவியல் கம்யூனிசம் என்றால் என்ன? அதை நாம் கற்றுணரவேண்டியது ஏன் அவசியமாகிறது? நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசம் முதலாளித்துவத்துக்கு எதிரானதா? பிரகாசமான, வளம் கொஞ்சும் ஐரோப்பிய நாடுகளாக முன்னிறுத்தப்படும் பிரிட்டனிலும் பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் உண்மையில் யார் பிரகாசமாகவும் வளம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்? ஒட்டுமொத்த மக்களுமா அல்லது பூர்ஷ்வா வர்க்கத்தினர் மட்டுமா? எனில் தொழிலாளர்களின் நிலை என்ன? முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் முன்னேற்றத்தின் நிழலைக் கூட காணாமல் இருப்பது ஏன்?

அப்படியானால் முதலாளித்துவம் யாருக்கு நன்மை பயக்கிறது? இந்த நன்மை யாரைச் சுரண்டுவதால் கிடைக்கப்பெறுகிறது? இதில் சுதந்தர வர்த்தகத்துக்கும் பாதுகாப்பு வர்த்தகத்துக்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப்போகிறது? இந்த இரு முதலாளித்துவப் பொருளாதாரத்தையும் எதிரெதிர் நிறுத்தி விளையாட்டு காட்டுவது யாரை ஏமாற்றுவதற்காக?

அடுத்து கார்ல் மார்க்ஸின் பெயர் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வீர்த்தின் உரை வீச்சில் இருந்து இன்னமும் மீளாமல் அதிர்ச்சியடைந்திருந்தனர். மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் அழைக்கப்படவேயில்லை. விவாதம் முற்றுபெற்றுவிட்டது, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி முடித்துக்கொண்டுவிட்டார்கள்.

மார்க்ஸ் தான் தயாரித்து வைத்திருந்த உரையை பெல்ஜியத் தொழிலாளர்கள் பத்திரிகையில் வெளிவந்தது. பாட்டாளி வர்க்கம் சுதந்தரச் சந்தையை எப்படி அணுகுவது, எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றியது அந்த உரை. பின்னர் எங்கெல்ஸ் இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி மேலும் இரு கட்டுரைகளை எழுதினார்.

அத்தோடு விட்டுவிடவில்லை. சங்கத்தில் இருப்பவர்களுக்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உண்மை நிலை தெரியவேண்டும் என்பதற்காக ஒரு சொற்பொழிவை ஏற்பாடு செய்தார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் மார்க்ஸ் பேச ஆரம்பித்தார். சுதந்தரச் சந்தைப் பொருளாதாரமே சிறந்தது என்னும் தலைப்பில் அவர் உரை அமைந்திருந்தது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கெல்ஸ் இருக்கையில் இருந்து எழுந்து எதிர்க்குரல் எழுப்பினார். மார்க்ஸ், உங்கள் வாதத்தை ஏற்க முடியாது, சுதந்தர வர்த்தகத்தைக் காட்டிலும் பாதுகாப்பான பொருளாதாரமே சிறந்தது என்று பேச ஆரம்பித்தார்.

மார்க்ஸ் காட்டமான முறையில் எங்கெல்ஸை மறுக்க ஆரம்பித்தார். எங்கெல்ஸ் அதைவிட காட்டமாக மார்க்ஸின் வாதத்தை முறியடிக்க ஆரம்பித்தார். ஒருவர் மாற்றி ஒருவர் கோபமான குரலில் விவாதத்தைத் தொடர ஆரம்பித்தார்கள். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இதென்ன இவர்கள் ஏன் இப்படி ஒருவரையொருவர் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மேலும், சுதந்தர வர்த்தகத்தை ஏன் மார்க்ஸ் ஆதரிக்கிறார்? பாதுகாப்பான வர்த்தகத்தை ஏன் எங்கெல்ஸ் உயர்த்தி பிடிக்கிறார்? இரண்டுமே ஒரே முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் வடிவங்கள் என்றல்லவா இவர்கள் முன்னர் சொன்னதாக நினைவு?

விவாதம் பார்வையாளர்களிடமும் பரவியது. அதற்குள் கூட்டத்தினரின் எண்ணிக்கையும் பெருகியிருந்தது. ஏன் இந்தப் புது குழப்பம்? முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவம் இவர்களை வெற்றிக்கொண்டுவிட்டதா? கம்யூனிசம் முதலாளித்துவத்திடம் தோற்றுவிட்டதா? மாநாட்டில் மார்க்ஸ் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டாரா? அதனால்தான் அவர் அன்று உரையாற்றவில்லையா? எங்கெல்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளாததற்கும் இதுதான் காரணமா?

குழப்பம் விரைவிலேயே தீர்க்கப்பட்டது. மார்க்ஸும் எங்கெல்ஸும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொண்டே பார்வையாளர்களிடம் திரும்பினார்கள். தோழர்களே, இதுவரை நாங்கள் வேடிக்கைக்காக இப்படியொரு உரையாடலை நிகழ்த்தினோம். முதலளித்துவ அறிஞர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாதங்களை கவர்ச்சிகரமாக அடுக்குகிறார்கள் என்பதை புரியவைக்கவே இந்த முயற்சி.

பிறகு இருவரும் விளக்கினார்கள். ஒரு முதலாளித்துவ நாடு முதலில் பாதுகாப்பான பொருளாதார மாதிரியை கடைபிடிக்கிறது. அந்நாட்டிலுள்ள முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டி வளம் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் ஓரளவுக்குச் பெரும் செல்வந்தர்களாக மாறும் வரை பாதுகாப்பான பொருளாதார முறை தொடர்கிறது. அந்நிய நாட்டு முதலாளிகளின் ஊடுருவல் தடுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில், புதிய சந்தைகளுக்கான தேவை ஏற்படும்போது, அயல்நாட்டு வர்த்தகம் அத்தியாவசியமாகிவிடுகிறது. மேலும், குறைவான விலையில் மூலப்பொருள்களைப் பெறுவதற்கும் அயல் வர்த்தகம் உதவிகரமாக இருக்கிறது. செல்வந்தர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆவதற்கும் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவதற்கும் சுதந்தர வர்த்தகத்தை நோக்கி நகர்கிறார்கள். எனவே, இரு கொள்கைகளும் அடிப்படையில் ஒன்றே.

எந்தப் பொருளாதாரத் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது என்பதல்ல இங்கே கேள்வி. யார் வளம் பெறப்போகிறார்கள்? பூர்ஷ்வா வர்க்கமா, பாட்டாளி வர்க்கமா? ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் இன்னொருவருக்கு தீமையை அளிக்கிறது. அந்த வகையில், முதலாளித்துவப் பொருளாதாரம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது. சங்கத்தினர் இந்த உண்மையை அழுத்தமாகப் புரிந்துகொண்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாம் 32

அக்டோபர் 1847 மத்தியில் எங்கெல்ஸ் மீண்டும் பாரிசுக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் லீகின் கிளைக்கு அவர் உதவியும் மேற்பார்வையும் தேவைப்பட்டது. எங்கெல்ஸ் வந்து சேர்ந்த சமயம் சங்கத்தில் மாவட்ட கமிட்டி தேர்தல் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸின் பெயர் முன்மொழியப்பட், கமிட்டி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடனடி பணியாக, சங்கத்தின் செயல்திட்டத்தை வடிவமைக்கவேண்டியிருந்தது. கமிட்டியில் இருந்தவர்கள் எங்கெல்ஸின் பங்களிப்பைக் கோரினர். எங்கெல்ஸ் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். முந்தைய செயல்திட்டமும் கமிட்டியில் வேறு சிலர் இணைந்து உருவாக்கியிருந்த புதிய திட்டமும் பிற்போக்குத் தன்மைகளைப் பிரதிபலித்தன. சங்கத்தின் எதிர்காலத்தையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கப்போகும் ஒரு வழிகாட்டு ஆவணம் புரட்சிகரமாக இருக்கவேண்டியது அவசியம் என்பது எங்கெல்ஸின் வாதம். கம்யூனிஸ்ட் லீகின் கொள்கையைப் பிரகடனம் செய்வதோடு, அதன் கடமைகளையும் பணிகளையும் செயல்திட்டத்தில் பதிவு செய்ய அவர் விரும்பினார்.

மார்க்ஸின் கையெழுத்துப் பிரதி

ஒரு தோராயமான வரைவுத் திட்டத்தை உருவாக்கிய எங்கெல்ஸ், மார்க்ஸிடம் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘தற்போது உள்ள நகல் லாயக்கற்றது. நான் எழுதிய நகலை உங்களிடம் கொண்டு வருகிறேன். அவசரத்தில் உருவான நகல் இது. கம்யூனிசம் என்றால் என்ன என்பதில் இருந்து தொடங்கியிருக்கிறேன். உடனே பாட்டாளி வர்க்கப் பிரச்னைக்கு வந்து விடுகிறேன். பாட்டாளி வர்க்கம் தோன்றிய வரலாறு, ஏற்கெனவே இருந்த உழைப்பாளர்களுக்கும் இந்த வர்க்கத்தினருக்கும் இடையில் உள்ள வேறுபாடு, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள முரண்பாடு வளர்ந்து வரும் நிலை, நெருக்கடிகள், முடிவுகள் என்று தொடர்கிறேன். இடையில் பல்வேறு விதமான இரண்டாம் பட்ச விஷயங்கள் வருகின்றன. கம்யூனிஸ்டுகளின் கட்சிக் கொள்கை பற்றி வெளிப்படையாகப் பேசக்கூடிய அளவுக்கு அதனையும் இறுதியில் சேர்த்திருக்கிறேன்.’ (மார்க்ஸுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதம், நவம்பர் 24, 1847). இந்தச் செயல்திட்டம் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்று அழைக்கப்படவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார்.

சோஷலிசப் புரட்சி தனியாக ஒரு நாட்டில் வெற்றி பெற முடியுமா? எங்கெல்ஸ் இந்தக் கேள்வியைப் பிரதானமாக எழுப்பினார். அது சாத்தியமாகாது என்னும் முடிவுக்கும் அவர் வந்து சேர்ந்தார். முன்னேறிய அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் புரட்சி தோன்றவேண்டும் என்றும் அப்படி நடந்தால்தான் புரட்சி வெற்றிபெறும் என்றும் எங்கெல்ஸ் கணித்தார்.

எங்கெல்ஸ் எழுப்பிய கேள்விக்கு லெனின் பின்னாள்களில் மாறுபட்ட பதிலை அளித்தார். லெனின் காலத்தில், ஏகபோக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் உருவாகியிருந்தது. எனவே, அப்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு எங்கெல்ஸின் கேள்வியை எதிர்கொண்டார் லெனின். ‘முதலாளித்துவம் ஒரே சீராக வளர்வதில்லை. நான்கு கால் பாய்ச்சலில் அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அனைத்து நாடுகளிலும் ஒரே சமயத்தில் புரட்சி ஏற்படுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு நாடாக முதலாளித்துவத்தில் இருந்து வெளியேறுவதுதான் சரியாக இருக்கும்.’

கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது மாநாடு 1847 நவம்பர் 29ம் தேதி லண்டனில் நடைபெற்றது. பாரிஸ் கிளையின் பிரதிநிதியாக எங்கெல்ஸும், பிரஸ்ஸல்ஸ் பிரதிநிதியாக மார்க்ஸும் கலந்துகொண்டனர். கம்யூனிஸ்ட் லீகின் இறுதியான செயல்திட்ட வடிவத்தை யார் தயாரிக்கவேண்டும் என்பதை இந்த மாநாடு முடிவு செய்வதாக இருந்தது.

மார்க்ஸும் எங்கெல்ஸும் தாங்கள் தயாரிக்கவிருக்கும் செயல்திட்டத்தின் சுருக்கத்தை அளித்தனர். மாநாடு சில திருத்தங்களுடன் அதனை ஏற்றுக்கொண்டது. முதல் திருத்தம், அறிக்கையின் முதல் பத்தியை அகற்றியது. கம்யூனிஸ்ட் லீகின் செயல்திட்டத்தைச் சுருக்கமாக விவரிக்கும் பத்தி அது. அகற்றப்பட்ட அந்தப் பகுதி இது. ‘முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவது, பாட்டாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, வர்க்கப் பகைமை என்னும் அடித்தளத்தில் நிற்கும் பழைய முதலாளித்துவ சமூகத்தை அழித்தொழிப்பது, வர்க்கங்கள் அற்ற, தனியார் சொத்துரிமை அற்ற புதிய சமுதாயம் ஒன்றை நிர்மாணிப்பது ஆகியவையே சங்கத்தின் நோக்கம்.’

இதனைத் தொடர்ந்து மேலும் சில பத்திகளையும் அகற்றவேண்டும் என்று மாநாட்டுத் தலைவர்கள் அபிப்பிராயப்பட்டனர். மார்க்ஸும் எங்கெல்ஸும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வாதாடிக்கொண்டிருந்தனர். புதிய செயல்திட்டத்தை எப்படியாவது மீட்டெடுத்துவிடவேண்டும் என்று அவர்கள் துடித்தனர். மார்க்ஸின் முக்கியக் கோரிக்கைளுள் ஒன்று, கம்யூனிஸ்ட் சங்கத்தின் ரகசியத்தன்மையை உடைத்தெறிவது. அதுநாள் வரை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ரகசியமாகவே இயங்கிவந்தன. சந்திப்புகள் ரகசியமாக நடைபெறும். தீர்மானங்கள் ரகசியமாக நிறைவேற்றப்படும். செயல்பாடுகளும்கூட ரகசியம்தான். அதாவது, அப்படியொரு சங்கம் இருப்பதும் செயல்படுவதும் சங்கத்தில் உள்ளவர்களைத் தாண்டி வெளியில் யாருக்கும் தெரியாது. அப்படியொரு சங்கம் செயல்பட்டு என்ன பிரயோஜனம் என்று கேள்வி மார்க்ஸும் எங்கெல்ஸும் கேள்வி எழுப்பினார்கள்.

இதை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது மாநாடு. அதெப்படி நாம் பகிரங்கமாக இயங்கமுடியும், அரசை எதிர்க்கமுடியும் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட் லீக் இயங்கவேண்டுமானால் திரைமறைவில் மட்டுமே இயங்கமுடியும் என்று எதிர்குரல் கொடுத்தார்கள். இறுதியில் இந்த வாதம் முறியடிக்கப்பட்டது.

கட்சி அறிக்கை இந்த முரண்பாட்டைச் சரிசெய்தது. நோக்கத்தையும் பகிரங்கப்படுத்தியது. ‘தொழிலாளர்களின் சர்வதேச நிறுவனமாகிய கம்யூனிஸ்ட் கழகம் அக்கால நிலைமைகளில் ரகசியமாகவே செயல்படவேண்டியிருந்தது. 1847, நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம் கட்சியின் விவரமான தத்துவார்த்த நடைமுறை செயல்திட்டத்தை வகுக்குமாறு கீழே கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை.’

அதே போல், சங்கத்தில் யாரெல்லாம் இணையலாம் என்பதை விவரிக்கும் வழிகாட்டி ஆவணம் தெளிவற்றதாகவும் குழப்பம் அளிப்பதாகவும் இருப்பதை மார்க்ஸும் எங்கெல்ஸும் சுட்டிக் காட்டினர். சங்கத்தின் பலம் பெருகவேண்டுமானல், உறுப்பினர்களின் பலம் பெருகவேண்டும். துடிப்பாக செயல்படும் ஓர் இயக்கமாக நாம் வளரவேண்டும். நம் கொள்கைகளைச் சத்தம் போட்டு முழங்கி, நம் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கி, உறுப்பினர்களை ஈர்க்கவேண்டும். ஆதரவு திரட்டவேண்டும்.

இது சரி செய்யப்பட்டது. உறுப்பினர்களுக்கான நிபந்தனைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் மாற்றியமைக்கப்பட்டது. கம்யூனிசத்தை ஏற்கவேண்டும். கம்யூனிச வாழ்முறையை ஏற்கவேண்டும். இயக்கம் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். புரட்சிகரப் பிரசாரத்தில் பங்கேற்கவேண்டும். கம்யூனிச இயக்கம் அல்லாத அல்லது அதற்கு எதிரான வேறு இயக்கங்களில் பங்கேற்காமல் இருக்கவேண்டும்.

கடுமையான நீண்ட விவாதத்துக்குப் பிறகு, மாநாடு இருவருடைய கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டது. செயல்திட்ட வடிவத்தை உருவாக்கும் பொறுப்பையும் அவர்களுக்கே வழங்கியது. அறிக்கையின் பல்வேறு வடிவங்களையும் மாதிரி நகல்களையும் இருவருக்கும் மாநாடு வழங்கியது. இந்தப் பிரதிகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நபர்களால் தயாரிக்கப்பட்டவை. மேலும், மாநாட்டில் கலந்துகொண்ட மற்ற நபர்களின் திட்டநகல்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. மார்க்ஸும் எங்கெல்ஸும் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர். அவற்றில் பெரும்பாலானவற்றை நிராகரிக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இது ஒரு முக்கிய வெற்றி. லண்டன் பயணத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். பழைய நண்பர்களையும் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகளையும் சந்தித்து உரையாடினர். 1830ம் ஆண்டு நடைபெற்ற போலந்து எழுச்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர். தேசியப் பிரச்னை குறித்து மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர். பாட்டாளி வர்க்கம் தேசியப் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்னும் கேள்வியை எழுப்பி சில அடிப்படை கொள்கைகளைச் சுட்டிக் காட்டினர்.‘மற்ற தேசங்களைத் தொடர்ந்து அடக்கி ஒடுக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு தேசமும் சுதந்தரமானதாக மாறிவிட முடியாது.’

கட்சி அறிக்கை தயாரிக்கும்போது இந்தப் பிரச்னையை மீண்டும் மார்க்ஸும் எங்கெல்ஸும் எடுத்துகொண்டனர். பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாடு உருவானது. ‘அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் நிலைமை ஒரே மாதிரியாக இருப்பதால், இவர்களின் நலன்கள் ஒரே மாதிரியானவை என்பதால், இவர்களுடைய எதிரிகளின் கூட்டம் ஒன்றே என்பதால், இவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றுபட்டுப் போராடவேண்டும். அனைத்து தேச முதலாளிகளின் சகோதரக் கூட்டுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும்உள்ள தொழிலாளர்களின் சகோதரக் கூட்டை இவர்கள் முன் வைக்கவேண்டும்.’

1847 டிசம்பரில் மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தனர். இதுவரை திரட்டிய அனுபவங்களையும், வாசித்தறிந்த உண்மைகளையும் விவாதித்து, குறிப்புகள் எடுத்து, அறிக்கையை உருவாக்கவும் செப்பனிடவும் ஆரம்பித்தார்கள். இடையில் எங்கெல்ஸ் மீண்டும் பாரிஸுக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது மார்க்ஸ் அறிக்கை தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டார். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து உருவாக்கிய அந்த ஆவணம், தொழிலாளர்களின் புரட்சிகர ஆயுதமாக உருவெடுக்க ஆரம்பித்தது. உலகை மாற்றியமைக்கப்போகும் ஆவணமாகவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 33

 

உலகை மாற்றியமைத்த முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் வெளியானது. நவீன வரலாற்றைத் தத்துவார்த்த முறையில் விவரிக்கும் இந்தப் பிரசுரம், மனிதகுல வரறாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நான்கு பகுதிகளையும் 29 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம், மனித முன்னேற்றத்தில் உழைப்பின் பாத்திரம், முதலாளித்துவத்தின் பங்கு, தொழிலாளர்களின் நிலை, அவர்களுடைய எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிக்கை விவரிக்கிறது.

அறிக்கையின் முக்கியத்துவத்தை லெனின் இவ்வாறு விவரிக்கிறார். ‘மாமேதைக்குரிய தெளிவுடனும் அறிவுத் திறனுடனும் இந்த நூல் புத்துலகக் கருத்தை, சமுதாய வாழ்க்கையை முற்றும் தழுவிய பொருள்முதல்வாதத்தை, விரிவான ஆழ்ந்த வளர்ச்சிக் கருதுகோளான இயங்கியலை, புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை எடுத்துக்கூறுகிறது… சிறு நூல்தான் என்றாலும், பல பெரிய நூல்களுக்கு ஒப்பானது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இன்றுவரையில், அதன் கருத்துகள் நாகரிக உலகில் ஒன்று திரண்டு போராடும் தொழிலாளி வர்க்கத்துக்கு உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது.’ ‘இதுவரை இருந்து வந்துள்ள எல்லாத் தத்துவங்களையும் பிய்த்தெறிந்து சின்னாபின்னப்படுத்திப் பொய்ப்பித்துச் செயலிழக்கச் செய்த பெருமை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு உண்டு!’ என்கிறார் ரஜனிபாமிதத்.

‘கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர போர்த் தந்திரத்தையும் அணுகுமுறையையும் அறிக்கை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இடைவிடாத, நிலை குலையாத வர்க்கப் போராட்டத்தின் மூலமே தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொண்டு சமுதாயத்தையும் விடுவிக்கமுடியும், சுரண்டலமைப்பினைத் தகர்த்தெறியும் பாணியில் எல்லா ஜனநாயக விடுதலைச் சக்திகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை அறிக்கை காட்டுகிறது. உலகப் பாட்டாளிகளே ஒன்று திரளுங்கள் என்ற தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தையும் பிரகடனம் செய்கிறது.’ போரிஸ் போனேமார்யோவ் என்பவரின் பார்வை இது.

முதலாளித்துவத்தின் வேரை முழுமுற்றாகக் கம்யூனிசம் புரிந்துகொண்டததைப் போல், முதலாளித்துவவாதிகளால் கம்யூனிசத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதே சமயம், அது ஓர் ஆபத்தான சித்தாந்தம் என்பதை மட்டும் வெறுப்புடன் தெரிந்தவைத்திருந்தனர். தொழிலாளர்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு தப்பான கருத்தாக்கம். பாட்டாளிகளுக்குச் சக்தி அளிக்கும் தீங்கான கருவி. அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கும் ஒரு முறைகேடான ஆயுதம். எப்பாடுப்பட்டாவது இதனை ஒழிக்கவேண்டும். மொத்தத்தில், கம்யூனிசம் என்பது நம்மை ஆட்கொண்டுள்ள, நம்மை உலுக்கியெடுக்கும் ஒரு பேய் என்பதாக அவர்கள் புரிந்துவைத்திருந்தனர். ஐரோப்பாவில் கம்யூனிச வெறுப்பு ஒரு பெரும் அலையாகப் பரவிக்கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் அறிக்கை வெளிவந்தது. தொழிலாளர்களை தட்டியெழுப்பும் எழுச்சிமிக்க தத்துவத்தின் பிறப்பிடம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்க வாசகம் முதலாளித்துவ அச்சத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. கம்யூனிசத்தை அப்போதைய சமூகம் எப்படி அர்த்தப்படுத்திக்கொண்டது என்பதையும் ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு அறியப்படுகிறான் என்பதையும் அறிக்கை தெளிவாக உணர்த்தியது. ‘ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம்… பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன. ஆட்சியில் உள்ள தனது எதிராளிகளால் கம்யூனிஸ்ட் என்று ஏசப்படாத எதிர்க்கட்சி எங்கேனும் உண்டா? கம்யூனிசம் என்று இடித்துரைத்துத் தன்னிலும் முன்னேறிய எதிர்த்தரப்பினருக்கும் பிற்போக்கான தனது எதிராளிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க்கட்சிதான் உண்டா?’

இந்தக் கேள்விகளை எழுப்பிய அறிக்கை, இரண்டு முடிவுகளை முன்வைக்கிறது.

1. கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகிவிட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டன.

2. பகிரங்கமாக அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாகக் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதம் என்னும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

முதல் அத்தியாயம் அந்தப் புகழ்பெற்ற வாசகத்துடன் தொடங்குகிறது. ‘இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.’

அறிக்கை வெளிவந்தபோது மார்க்ஸின் வயது 30, எங்கெல்ஸ் 28. டார்வினின் பங்களிப்பு எந்த அளவுக்கு உயிரியலுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ். இந்த அறிக்கையில் மார்க்ஸின் பங்களிப்பைப் பிரதமானமானது என்று அறிவித்தார் எங்கெல்ஸ். ‘அறிக்கை எங்கள் கூட்டுப்படைப்பானதால், அதன் கருவுருவாக அமைந்திருக்கும் அடிப்படைக் கருத்துரை மார்க்ஸுடையது என்பதைக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். அந்தக் கருத்துரை இதுதான். ஒவ்வொரு வரலாற்றுச் சகாப்தத்திலும், வளர்ந்து நடைமுறையில் இருக்கும் பொருள் உற்பத்தி, பரிவர்த்தனை முறையும் அதிலிருந்து இன்றியமையாது தொடரும் சமூக அமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவு வரலாற்றுக்கு அடித்தளமாக அமைகின்றன, இதிலிருந்து மட்டுமே இந்த வரலாற்றுக்கு விளக்கம் தரமுடியும். இதன் விளைவாக மனிதகுலத்தின் முழு வரலாறும் (நிலத்தைப் பொது உடைமையாகப் பெற்றிருந்த புராதன இனக்குழுச் சமுதாயம் கரைந்துருகி மறைந்ததால்) வர்க்கப் போராட்டங்கள், சுரண்டுவோர், சுரண்டப்படுவோர், ஆளுவோர், ஒடுக்கப்படுவோர் இடையில் எழும் போட்டிகளின் வரலாறே.

‘இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறு பரிணாமங்களின் தொடர்களாகி, இன்று சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் – (தொழிலாளி வர்க்கம்) ஒரே சமயத்தில், என்றைக்கும் நிரந்தரமாக, சுரண்டல் ஒடுக்குமுறை வர்க்கப்பேதங்கள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சமுதாயம் முழுவதையும் விடுவித்தாலன்றி சுரண்டும், ஆளும் பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதிக்கத்தில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தை அடைந்துள்ளது.’

பூர்ஷ்வா என்பது ஜெர்மன் சொல். உற்பத்திச் சாதனங்களை உடைமையாகப் பெற்றிருக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் (முதலாளித்துவ வர்க்கம்) என்பது பொருள். தொழிலாளர் என்பதைக் குறிக்கும் புரோலிடேரியேட் என்பதும் ஜெர்மானியச் சொல்லே. கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பதங்களை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பதங்களாக மாற்றியது.

முதலாளித்துவத்தின் பங்களிப்பையும், அதன் சாதக, பாதகங்களையும் துல்லியமாக எடைபோடுகிறது அறிக்கை. ‘வரலாற்று அரங்கில் முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியிருக்கிறது.’ ‘மனித செயல்பாடு என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை முதன்முதலாகத் தெரியப்படுத்தியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்திய பிரமிடுகளையும் ரோமானியக் கட்டுக்கால்வாய்களையும் கோதிக் தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதிசயங்களை அது சாதித்திருக்கிறது.’

ஒரு சிலராலும் பின்னர் சிறு குழுக்களாலும் தொடங்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கம், போராடி போராடி மேலெழுந்து, முன்னுக்கு வந்துள்ளது. பொருளாதாரத் துறையிலும் பின்னர் அரசியலிலும் சமுதாயத்திலும் புரட்சிகரமாக பங்கேற்று, இறுதியில் நவீனகால அரசியலின் செயலாட்சித் துறையையே தன் விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு எந்திரமாக, அமைப்பாக மாற்றிக்கொண்டது. இது முதலாளித்துவத்தின் வெற்றி.

‘எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமந்திரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.’ நிலப்பிரபுத்துவத்தை பூர்ஷ்வா வர்க்கம் வீழ்த்தியது. ஆனால், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவிய வர்க்கப் பேதங்கள் வேறு வடிவில் அப்படியே நீடித்தன. ‘புதிய வர்க்கங்களை, புதிய ஒடுக்குமுறைகளை, புதிய போராட்ட வடிவங்களை பழைய வடிவங்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தியுள்ளது… சமுதாயம் முழுவதுமே இரு பெரும் பகைமைப் பாசறைகளாக, எதிரும் புதிருமான இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிரிந்து வருகிறது.’ அதாவது, ஆதிகாலச் சமுதாய அமைப்பு அழிந்துபோன பின் நிகழ்ந்த மனித வரலாறு அனைத்தும் சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையே, ஆதிக்கம் புரியும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்கும் இடையே நிகழ்ந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்.

பணி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் முதலாளித்துவம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன? ‘பணிவுக்கும் பக்திக்கும் உரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது.’ ‘குடும்பத்திடம் இருந்து முதலாளித்துவ வர்க்கம் அன்பெனும் திரையைக் கிழித்தெழிந்து, குடும்ப உறவை வெறும் காசுபண உறவாகச் சிறுமைப்படுத்திவிட்டது.’ மேலும், முதலாளித்துவத்துவ சமுதாயத்தில் அரசாட்சி என்பது ‘முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை காரியங்களையும் நிர்வகித்து வரும் ஒரு கமிட்டி.’

சமூகத்தின் முரண்களை விவரிப்பதோடு நின்றுவிடாமல் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர்

அத்தியாயம் 34

முதலாளித்துவம் செய்த மிகப் பெரிய நன்மை, தொழிலாளி வர்க்கத்தைத் தோற்றுவித்ததுதான் என்கிறது அறிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் தோற்றத்தையும் தற்போதைய நிலையையும் அதற்கான காரணங்களையும் அறிக்கை நுணுக்கமாக ஆராய்கிறது.‘பூர்ஷ்வா வர்க்கம், தனக்கு மரணம் நேர்விக்கும் படைக்கலன்களை வார்த்தெடுத்ததோடு மட்டுமின்றி, அந்தப் படைக்கலன்களைக் கையாளும் ஆள்களையும் உதித்தெழச் செய்துள்ளது. அதாவது, நவீனத் தொழிலாளி வர்க்கம்.’ மூலதனம் வளர்ச்சி அடைந்த அதே அளவுக்கு பாட்டாளி வர்க்கமும் அளவில் வளர்ந்துள்ளது. வேலை கிடைக்கும்வரை இவர்கள் வாழ்கிறார்கள். உழைப்பால் மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. ‘இவர்களும் ஒரு பண்டமே. இதன் விளைவாக, போட்டியின் நிலைமாற்றங்களால், சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டங்களால் இவர்கள் துன்பப்படுகிறார்கள்.’

தொழிலாளி என்பவன் உண்மையில் ஒரு பண்டமே என்னும் வாக்கியம் அதிர்ச்சியூட்டுவதாகவும் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. இயந்திரங்கள் ஆளும் காலகட்டத்தில் தொழிலாளி இயந்திரத்தின் துணை உறுப்பாக மாறிவிடுகிறான். அவனுக்கும் இயந்திரத்துக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ‘அவனிடம் இருந்து தேவைப்படுவதெல்லாம் மிக எளிய, மிகச் சலிப்பூட்டும் மிகச் சுலபத்தில் கிட்டும் தனிப் பயிற்சி திறமை மட்டுமே.’

அறிக்கை தொடர்கிறது. ‘தொழிலாளர்கள், பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் பூர்ஷ்வா அரசுக்கும் அடிமையாவது மட்டுமல்லாமல், நாள்தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேற்பார்வையாளராலும் இவற்றுக்கும் மேலாக, பூர்ஷ்வா உற்பத்தியாளராலும்கூட அடிமைப்படுத்தப்படுகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு வெளிப்படையாக, ஆதாயமே தன் முடிவாகவும் இலக்காகவும் இக்கொடுங்கோன்மை அறிவித்துவிடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது அற்பத்தனமானமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் பகைமை உண்டு பண்ணுவதாகவும் அமைந்துவிடுகிறது.’ உழைப்பு உறிஞ்சப்பட்டு, அதற்கான சொற்ப கூலி வழங்கப்பட்ட பிறகு அவன் நிம்மதி கொள்கிறானா? இல்லை. ‘பூர்ஷ்வா வர்க்கத்தின் இதர பகுதியனராலும் வீட்டுச் சொந்தக்காரராலும் கடைக்காரனாலும் அடகுக்கார்களாலும் இறுக்கப்படுகிறான்.’

தொழிலாளி வர்க்கம் தொடக்காலம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்து வந்துள்ளது. பூர்ஷ்வா வர்க்கத்தை ஆரம்பம் முதலே தொழிலாளி வர்க்கம் எதிர்த்து வந்துள்ளது. ஒரு தொழிலாளி தனியாகவும், பிறகு குழுவாகவும் பிறகு ஒரிடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரையும் கொண்டு திரளாகவும் வளர்ச்சி பெற்று தன்னைத் துன்புறுத்தும் வர்க்கத்தை எதிர்க்கிறான்.

வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவே சமுதாயத்தை அசைக்கவும் மாற்றவும் முன்னேற்றவும் முடியும். இந்தப் போராட்டங்கள் மூலமே ஆளும் வர்க்கத்தை உடைத்து புதிய தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கமுடியும். முதலாளித்து வர்க்கம் அமைத்துள்ள படைக்கலன்களான, கல்வி, அறிவொளி ஆகியவற்றைத் தொழிலாளி வர்க்கம் தனக்குச் சாதகமான முறையில் சாதுரியமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்தப் படைக்கலன்களை வைத்தே முதலாளித்துவத்தை எதிர்க்கவும் வீழ்த்தவும் வேண்டும்.

தொழிலாளி வர்க்கம் சர்வதேசத் தன்மை பெற்றது. முதலாளித்துவத் தீங்குகளை அது நன்கு உணர்ந்துள்ளது. இன்றைய உற்பத்தி முறைகளை உடைத்தெறிவதன் மூலமே பழைய உற்பத்தி முறைகளுக்கும் முடிவுகாண இயலும். முதலாளித்துவ சமுதாயத்துக்கு முந்தைய சமுதாயங்களில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்கள் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே. ஆனால், முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கம் தன் விடுதலைக்காக மட்டுமல்லாமல் சமுதாயத்தின் முழு விடுதலைக்காக, பெரும்பாலான உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறது. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வெற்றிப் பயணம், ஆர்.பி.எஸ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை அறிக்கை விவரிக்கிறது. ‘பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும். உற்பத்தி சக்திகளின் ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்.’

பாட்டாளி வர்க்கத்தைத் தயார் செய்யும் பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது. எனவே, சமுதாயத்தின் முன்னணிப் படையான தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகக் கம்யூனிஸ்டுகள் இயங்கவேண்டும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிற தொழிலாளர் இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அறிக்கை வெளிப்படுத்துகிறது. ‘ஒன்று. பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் நடத்தும் தேசியப் போராட்டங்களில் அவர்கள் எல்லாத் தேசிய இனங்களையும் கடந்து முழுத் தொழிலாளி வர்க்கத்தின் மொத்தப் பொது நலன்களைச் சுட்டிக் காட்டி அவற்றை முன் கொணர்கின்றனர். இரண்டு. பூர்ஷ்வாவை எதிர்த்துத் தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் கடந்து செல்லும் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் அவர்கள் எப்பொழுதும் எங்கும் இயக்கத்தின் முழு நலன்களைப் பிரநிதித்துவப் படுத்துகின்றார்கள்.’

‘கம்யூனிஸ்டுகளின் உடனடி நோக்கமும் பிற தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கமும் ஒன்றே. தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக உருவாக்கவேண்டும். பூர்ஷ்வா உயரதிகாரத்தை வீழ்த்தவேண்டும். தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவேண்டும்.’

கம்யூனிஸ்டுகள் அறிமுகப்படுத்தும் புரட்சிகர மாற்றம் எப்படிப்பட்டாக இருக்கும்?

1. நிலத்தில் சொத்துடைமை ஒழிக்கப்படும். நில வாடகைகள் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
2. பரம்பரை வாரிசு சொத்துடைமை பெறும் உரிமை ஒழிக்கப்படும்.
3. நாட்டைவிட்டு வெளியேறுவோர், கலகக்காரர்கள் ஆகியோரின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.
4. செய்தித் தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்கள் அரசின் கைகளில் மையப்படுத்தப்படும்.
5. ஆலைகளும் உற்பத்திக் கருவிகளும் விரிவாக்கப்படும். தரிசு நிலங்கள் சாகுபடிக்குக் கொண்டுவரப்படும். மண் வளம் உயர்த்தப்படும்.
6. உழைப்பு அனைவருக்கும் உரியதாக சரிசமமாக மாற்றப்படும். விவசாயத் துறைக்காகத் தொழில்பட்டாளங்கள் நிறுவப்படும்.
7. விவசாயம் தொழில்துறையுடன் இணைக்கப்படும். தேச மக்கள் சீரான முறையில் நாடெங்கும் பரவியமையச் செய்வதன் மூலம் கிராமப்புறத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான பாகுபாடு படிப்படியாக அகற்றப்படும்.
8. எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி. ஆலைகளில் குழந்தைகள் பணியாற்றுவது தடை செய்யப்படும்.

முதலாளித்துவம் உழைப்பாளி மக்களின் தலையில் கொண்டு வந்து கொட்டும் கணக்கற்ற தொல்லைகளையும் துன்பங்களையும் அடியோடு களைந்தெறிவதற்கான ஒரே வழி சோஷலிசப் புரட்சியும், அரசியல் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதுமே. முதலாளித்துவ, பூர்ஷ்வா ஆதிக்கத்தை முறியடித்து பாட்டாளி மக்களின் ஆதிக்கம் நிறுவப்படவேண்டும். இதுவொன்றே தொழிலாளர்களை அடிமைத்தளைகளில் இருந்து விடுவிக்கும். பாட்டாளி வர்க்க ஆதிக்கம் தேசிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாடு பிடிப்பதும் கொள்ளையடிப்பதுமான போர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும். ‘ஒரு மனிதனை இன்னொருவன் சுரண்டுவது எந்த அளவுக்கு ஒழித்துக் கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுவதும் ஒழித்துக் கட்டப்படும்… ஒரு தேசத்துக்கு உள்ளேயிருக்கும் வர்க்கங்களின் பகைமை அழிந்தொழியும்போது தேசங்களுக்கு இடையே நிலவும் விரோதமும் மறைந்தொழியும்.’

பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பெருமைமிக்க, பகிரங்க அறைகூவலுடன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முடிவடைகிறது. ‘தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடி மறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் இழிவாகக் கருதுகிறார்கள். இப்போது நிலவும் சக நிலைமைகள் அனைத்தையும் வன்முறையாகத் தூக்கி எறிவதன் வாயிலாக மட்டுமே தங்களுடைய லட்சியங்களை ஈடேற்ற முடியும் என்று அவர்கள் பகிரங்கமாகப் பிரகடனம் செய்கிõறர்கள். கம்யூனிஸ்ட் புரட்சி வருகிறதென்று அஞ்சி நடுங்கட்டும் ஆளம் வர்க்கங்கள். பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். இவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’

மிகக் குறுகிய காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பு, The Communist Manifesto என்று அழைக்கப்பட்டது. மார்க்சியம் என்றும் லெனினியம் என்றும் மாவோயிசம் என்றும் இன்று அறியப்படும் புரட்சிகர சிந்தாந்தங்களின் பிறப்பிடம் இந்த அறிக்கை.

சமூகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தபோதும், 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் சிந்தனைகளைத் தாண்டி வேறு எதுவும் மக்களிடையே ஆழமாகப் பரவியிருக்கவில்லை. மேலும், பிரெஞ்சுப் புரட்சி தோல்வியடைந்திருந்தது. புரட்சிகர சிந்தனைகளை வீழ்த்தி மீண்டும் வெற்றிகரமாக முடியாட்சியை கொண்டுவந்திருந்தார் நெப்போலியன். அதற்குப் பிறகு பிரான்ஸில் பிற்போக்கு, முடியாட்சி சக்திகளே ஆதிக்கம் செலுத்திவந்தன. 1830 ஜூலை வாக்கில் மக்கள் வீதிப் போராட்டங்களில் இறங்கிவிட்டனர். மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வலிமை மிக்க வேறு ஒரு புரட்சிகர சிந்தாந்தம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் தேவையும்கூட இதுவே. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 35

 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நேரத்தில் ஐரோப்பாவில் அதிகார மையங்களுக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சிகளும் எதிர்ப்புகளும் தோன்றிக்கொண்டிருந்தன. 1848 பிப்ரவரியில் பிரான்ஸில் லூயி ஃபிலிப்பின் ராணுவத்தை குட்டி முதலாளிகளின் துணை கொண்டு தொழிலாளர்கள் முறியடித்து பிரெஞ்சுக் குடியரசாக தங்கள் நாட்டை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சிசிலியில் 1848 ஜனவரி மாதம் பெரும் எழுச்சி ஒன்று உருவானது. தெற்கு, மேற்கு ஜெர்மனிக்கும் புரட்சி தீ பரவியது. ஆஸ்திரியாவிலும் ஹங்கேரியிலும் விடுதலை உணர்வு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இங்கிலாந்தில் சாசன இயக்கம் ஒரு புதிய உத்வேகத்துடன் போராட்டத்தைத் தொடர்ந்தது.

ஐரோப்பாவில் பரவிக்கொண்டிரூந்த புரட்சிகர போராட்டங்களின் நோக்கம் எதேச்சதிகார அதிகார மையத்தைத் தூக்கியெறிவது. நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது. அன்னிய அதிகாரத்தையும் அதிகார ஊடுருவலையும் தடுப்பது. இறுதி இலக்கு ஜனநாயக அரசை அமைப்பது. ஐரோப்பிய புரட்சிகர மாற்றங்களை மார்க்ஸும் எங்கெல்ஸும் முழு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கினர்.

இந்தப் போராட்டங்கள் முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்தால் நடத்தப்படுபவை அல்ல என்பதை மார்க்ஸும் எங்கெல்ஸும் உணர்ந்திருந்தனர். குட்டி முதலாளிகள் இவற்றை முன்னின்று நடத்துகிறார்கள். தொழிலாளர்களின் நலன்களுக்காக மட்டுமல்ல குட்டி முதலாளிகளின் நலன்களுக்காகவும் சேர்ந்தே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. ஜனநாயகமே இறுதியான, முடிவான ஓர் இலக்கு என்று முதலாளித்துவ வர்க்கம் பிரசாரம் செய்து வந்தது. ஜனநாயகம் அனைவரையும் அவரவர் தளைகளில் இருந்து மீட்டெடுக்கும் என்றும் அவர்கள் உறுதி கூறினர்.

ஜனநாயகம் இறுதி இலக்கல்ல என்பதை உணர்ந்திருந்தாலும் எங்கெல்ஸ் இந்தப் போராட்டங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிரெஞ்சுத் தொழிலாளர்களிடையே அவர் தொடர்ந்து உரையாடினார். வர்க்க உணர்வூட்டினார். தொழிலாளர்களின் எழுச்சியைக் கண்காணித்து வந்த பாரிஸ் அரசு எங்கெல்ஸை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

எங்கெல்ஸ் பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தார். அங்கும் போராட்ட அலை வீசிக்கொண்டிருந்தது. போராட்டத்துக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையும் பலமாக இருந்தது. அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு மார்ச் 3ம் தேதி மார்க்ஸுக்கு அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தது. மறுநாள் மார்க்ஸும் அவர் மனைவியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இனியும் பிரஸ்ஸல்ஸில் தங்கியிருப்பது சரியல்ல என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் முடிவு செய்தனர். புரட்சி உச்சத்தில் இருக்கும் பாரிஸுக்குச் செல்வதுதான் உகந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். முதலில் மார்க்ஸ் வெளியேறினார். எங்கெல்ஸ் இரு வார காலம் தங்கியிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். பிறகு, மார்க்ஸைப் பின்தொடர்ந்து பாரிஸ் வந்தடைந்தார்.

பாரிஸில் கணிசமான அளவில் ஜெர்மானியர்கள் வசித்து வந்தனர். பிழைப்புக்காக ஜெர்மனியில் இருந்து வெளியேறி பாரிஸில் தொழிலாளர்களாக வாழ்க்கை நடத்திவந்தார்கள். வந்த இடத்தில் எதிர்ப்புகளும் எழுச்சிகளும் நடைபெறுவதைக் கண்டு அவர்கள் திகைத்து நின்றனர். மேற்கொண்டு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பாரிஸ் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து போராடுவதா அல்லது அமைதி காப்பதா? இதற்கிடையில் ஜெர்மன் பெருஞ்சேனை என்னும் இயக்கம் இந்தத் தொழிலாளர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தது. ‘ஜெர்மானியத் தொழிலாளர்களே, நீங்கள் உடனடியாக ஜெர்மனிக்குத் திரும்ப வேண்டும். ஆயுதம் தாங்கிய புரட்சி ஒன்றுக்கு நீங்கள் தயாராகவேண்டும். ஐரோப்பாவில் நிலவிவரும் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி ஆயுதந்தாங்கிய எழுச்சி ஒன்றை நீங்கள் ஜெர்மனியில் நடத்தவேண்டும். அரசைத் தூக்கியெறியவேண்டும்!’

மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்த விளையாட்டுப் புரட்சியை எதிர்த்தனர். அதே சமயம், ஜெர்மானியர்கள் உடனடியாகத் தாய்நாடு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தினர். முன்னதாக பாரிஸை வந்தடைந்த மார்க்ஸ், கம்யூனிஸ்ட் சங்கத்துக்கு ஒரு புதிய மத்திய கமிட்டியை உருவாக்கினார். லண்டன் மத்திய கமிட்டி தனக்கு அளித்திருந்த அதிகாரத்தின் அடிப்படையில் புதிய கமிட்டியை அவர் உருவாக்கினார். புதிய கமிட்டியின் துணை கொண்டு மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மானியத் தொழிலாளர்களை அணிதிரட்டினர். ஏப்ரல் 1848 தொடங்கி 400 ஜெர்மானியத் தொழிலாளர்களை ஒவ்வொருவராக ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்பினர்.

அடுத்த திட்டம் ஜெர்மானியப் புரட்சியில் அவர்களைப் பங்கேற்க வைப்பது. ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் அந்தத் தொழிலாளர்களை உடனடியாக ஈடுபடுத்துவதில் மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் விருப்பமில்லை. மாறிவரும் சூழலை அவர்கள் கவனத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தினர். பிரான்ஸில் நடைபெற்றதைப் போலவே ஜெர்மனியிலும் முதலாளிகளின் ஆதரவுடன் புரட்சிகர மாற்றங்கள் முன்மொழியப்பட்டு வந்தன. ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே அந்த முதலாளிகளின் பெரும் விருப்பமாக இருந்தது. இந்த விருப்பத்துக்கு உந்துசக்தியாக இருப்பது அவர்கள் சுயநலமே. முடியாட்சியின் அளவற்ற அதிகாரம் என்றுமே ஆபத்தானதுதான்.ஜனநாயகம் என்பது முதலாளிகளுக்கு அனுகூலமாக ஓர் அரசியல் ஏற்பாடு. ஒரு ஜனநாயக நாட்டில்தான் தொழில் வளம் பெருகும். ஒரு ஜனநாயக நாட்டில்தான் முதலாளித்துவம் செழிக்கும். ஆனாலும் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மானியப் புரட்சியை ஆதரித்தனர். அதற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் என்னும் ஆவணத்தை இருவரும் இணைந்து உருவாக்கினர். ஜெர்மன் புரட்சியில் தொழிலாளர்கள் ஆற்றவேண்டிய பணிகள் என்னென்ன என்பதை விளக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம். பாட்டாளி வர்க்கத்தின் செயல்திட்டமாக இது உருவானது. முதன்மையான கோரிக்கை, ஜெர்மன் குடியரசை நிறுவுவது. அதாவது, முதலாளித்துவப் புரட்சிக்குப் பின்னர் அமையப்போகும் புதிய அரசு, பிளவுபடாத ஒன்றுபட்ட ஜெர்மன் குடியரசை நிறுவவேண்டும் என்று இந்த ஆவணம் கோரியது.

ஜெர்மன் குடியரசு அமைவதால் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பலன்? ஜனநாயத்தை நிறுவுவதன் மூலம் அவர்கள் அடையப்போவது என்ன? முதலாளித்துவத்தை

ஆதரிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எப்படி அடையமுடியும்? மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தக் கேள்விகளை வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டனர். முதலாளிகளின் நோக்கம் முடியாட்சியை வீழ்த்துவது. கம்யூனிஸ்டுகளின் நோக்கமும் தற்போதைக்கு அதுதான். பாட்டாளி வர்க்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் முதல் படி முடியாட்சியை வீழ்த்துவது. அந்தப் பணியில் குட்டி முதலாளிகள் முன்னரே ஈடுபடும்போது அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை. மேலும், முதலாளித்துவப் புரட்சிக்குப் பிறகு ஒன்றுபட்ட ஜெர்மனி உருவாகிவிட்டால், அந்த ஒன்றுபட்ட ஜெர்மனி ஒரு ஜனநாயக நாடாக மாற்றப்பட்டால், பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் எளிதாகிவிடும்.

அதற்குப் பிறகு அடுத்த கட்ட போராட்டங்களை நடத்தலாம். பொது மக்களை ஆயுதபாணியாக்கலாம். விவசாயிகளை நசுக்கி வந்த கடன் சுமைகளை அகற்றலாம். நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கலாம். நிலங்களைப் பறிமுதல் செய்யலாம். வங்கி, போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட தனியார் அமைப்புகளை அரசுடைமையாக்கலாம். லாப வெறியை ஒழித்து சேவை மனப்பான்மையைக் கொண்டு வரலாம். அரசுக்கும் மதத்துக்கும் இடையிலான வலுமையான பிணைப்பை உடைக்கலாம். அபரிமிதமான வருமானத்துக்கு ஏற்றவாறு வரிவிதிப்பைத் தீவிரப்படுத்தலாம். பாட்டாளிகளின் நலன் சார்ந்த அரசை நிறுவலாம். மொத்தத்தில், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் கருதினர்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இரண்டும் அச்சிடப்பட்டு பாரிஸில் இருந்து வெறியேறிய ஜெர்மானியத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒரு அரசியல் வழிகாட்டியாக இந்தப் பிரசுரங்கள் அமையும் என்று இருவரும் நம்பினர். ஜெர்மனி திரும்பியதும் அங்குள்ள மக்களிடையே அரசியல் பிரசாரம் செய்யுமாறும் தொழிலாளர் அமைப்புகளை நிறுவுமாறும் அவர்களிடம் வேண்டிகொண்டனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மனிக்குத் திரும்பினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் கண்ட ஜெர்மனி போராட்டத்தின் மையத்தில் இருந்தது. முதலாளிகளும் தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டு நின்று எதேச்சதிகாரத்தையும் முடியாட்சியையும் நிலப்பிபுத்துவத்தையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். இந்த அணியின் கை மேலோங்கியிருந்ததால், அரசு வேறு வழியின்றி பணிந்து போனது. இவர்கள் கேட்ட பல சலுகைகளை அளிக்கவும் முன்வந்தது. அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்காத சுயநலப் பீடமாக அரசு இருந்த சமயம் அது.

சலுகைகள் பல கிடைத்தன என்றாலும் அவை முதலாளிகளுக்கு மட்டுமே அனுகூலமாக இருந்தன. போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்பது உறுதியானவுடன் முதலாளிகள் தடாலென்று தங்கள் அணுகுமுறையையும் செயல்திட்டத்தையும் மாற்றிக்கொண்டனர். இப்போது அவர்களுக்கு நிலப்பிரபுக்களும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரோதிகளாகத் தெரியவில்லை. அவர்களுடன் ஒத்துழைத்துப் போக ஆரம்பித்தார்கள். தங்களது உண்மையான பகைவர்கள் நிலப்பிரபுக்கள் அல்ல, தொழிலாளர்களே என்றும் அவர்கள் முடிவுசெய்தனர். பிரான்ஸில் நடைபெற்று வந்த தொழிலாளர் போராட்டங்கள் சில உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தின. என்றைக்கு இருந்தாலும் தொழிலாளர் வர்க்கம் ஆபத்தானதுதான். இப்போது அரசுக்கு எதிராகப் போராடுவது போல் நாளை நமக்கு எதிராகவும் போராடுவார்கள். இவர்களோடு சரிசமானமாக உறவு வைத்துக்கொள்வது ஆபத்தானது. நிலப்பிரபுக்களை நம்பினாலும் நம்பலாம், இவர்களை நம்பக்கூடாது. முடிவில், முதலாளிகள் நிலப்பிரபுக்களுடனும் பிரபுக்களுடனும் சமரசம் செய்துகொண்டனர்.

முதலாளி வர்க்கம் தொழிலாளர்களின் முதுகில் குத்தியபோது, மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 36

 

ஜெர்மன் தொழிலாளர்களின் நிலைமை சிக்கலானதாக இருந்தது. இவர்களைப் புரட்சிகர அரசியலை நோக்கி வென்றெடுப்பது சவாலான காரியமாக இருக்கும் என்பது மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் தெரிந்தது. அமைப்பு ரீதியில் தொழிலாளர்களைத் திரட்டி புரட்சிகர அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும். குட்டி முதலாளிகள் முன்வைக்கும் ஜனநாயகத்தின் நிஜ முகத்தை அவர்களுக்கு அம்பலப்படுத்தவேண்டும். அதே சமயம், ஜனநாயகத்தை நம்புபவர்களாகவும், ஜனநாயகத்தை ஏற்பவர்களாகவும் பெரும்பாலான ஜெர்மானியத் தொழிலாளர்கள் இருப்பதையும் அவர்கள் கண்டுகொண்டனர். அவர்களது இந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் சட்டென்று ஜனநாயகப் பிம்பத்தை உதறித்தள்ளுவதும் சரியாக வராது. அது மக்களிடம் இருந்து இயக்கத்தை தனிமைப்படுத்திவிடும். மக்களைவிட்டு வெகு தொலைவில் தனியே கம்யூனிஸ்ட் கட்சி நடைபோட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். இது தவிர்க்கப்படவேண்டும்.

ஜெர்மனியில் பரவிக்கொண்டிருந்த ஜனநாயக இயக்கத்துடனும் ஜனநாயக ஆதரவு அலையுடனுத் ஒத்திசைந்து செல்வது என்று இருவரும் முடிவு செய்தனர். இந்த இயக்கத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட பலர் கலந்திருந்தது நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. திட்டமிட்டபடி, கொலோன் ஜனநாயகக் கழகத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்தனர். ஜூன் 1, 1848 அன்று புதிய ரைன் பத்திரிகையை இருவரும் தொடங்கினர். இந்தப் பத்திரிகையின் முதல் இதழ், ஜனநாயக் பத்திரிகை என்னும் அடையாளத்துடன் வெளிவந்தது. பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அவர்களை இயக்கத்தின் பால் ஈர்க்கவும் எடுக்கப்பட்ட முயற்சி இது. கம்யூனிச புரட்சிகரப் பத்திரிகை என்னும் அடையாளத்துடன் இதே பத்திரிகை வெளிவந்திருந்தால் அதைப் பாட்டாளி மக்கள் ஒதுக்கிவைத்திருக்கக்கூடும். பெயரளவில் ஜனநாயக முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும் உள்ளடக்கம் முற்போக்கானதாகவும் புரட்சிகரமானதாகவும் அமைந்திருந்தது.

மார்க்ஸ் இந்தப் பத்திரிகையின் ‘சர்வாதிகார ஆசிரியராக’ இருந்தார் என்று நினைவுகூர்ந்தார் எங்கெல்ஸ். ஆனால் அந்த சர்வாதிகாரம்‘தடையற்றதாக’ இருந்தது. ‘நாங்கள் இதனை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டோம். அவருடைய ஊடுருவிப் பார்க்கும் தன்மையும், திட்டவட்டமான வழியும்தான் அத்நப் புரட்சிக் காலத்தில் ஜெர்மன் பத்திரிகைகளிலேயே மிகப் புகழ் வாய்ந்ததாக இப்பத்திரிகை விளங்குவதற்கு முதன்மையான காரணமாகும்.’ என்றார் எங்கெல்ஸ்.

புதிய ரைன் பத்திரிகையில் மார்க்ஸைவிட எங்கெல்ஸே அதிகம் எழுதினார். கூர்மையான, ஆழமான சிந்தனைகள் மூலம் அவர் வாசகர்களை எளிதில் சென்றடைந்தார். தனது கட்டுரையை உயிரற்ற சொற்குவியலாக எங்கெல்ஸ் கருதவில்லை. ஒவ்வொன்றும் அவருக்கு ஒரு கையெறி குண்டு. ஒவ்வொரு வார்த்தையும் குண்டுக்கு வலு சேர்க்கும் சக்தி. யாரை எப்படித் தாக்கவேண்டுமோ அப்படித் தாக்கி, யாரைப் பாதுகாக்கவேண்டுமோ அவர்களைப் பாதுகாக்கும் பணியை அந்தக் கையெறிகுண்டுகள் மேற்கொண்டன.

நயவஞ்சகமாக விவசாயிகளின் முதுகில் குத்திய முதலாளிகளின் யோக்கியதையை எங்கெல்ஸ் அம்பலப்படுத்தினார். ஜனநாயகத்தைக் கொண்டு வருகிறோம் என்று விவசாயிகளை நம்ப வைத்து அவர்களை தம் பின்னால் அணிதிரட்டி, பிறகு அணி மாறி நிலப்பிரபுக்களுடன் கைகுலுக்கிக்கொண்ட முதலாளிகளை எங்கெல்ஸ் தாக்கினார். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்கவே முதலாளித்துவம் விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தினார். நிலப்பிரபுக்களின், முதலாளிகளின் சர்வாதிகாரம் மறையவேண்டுமானால் தொழிலாளர்களின் சர்வாதிகாரம் மலரவேண்டும் என்று புரியவைத்தார்.

ஜெர்மனியின் அரசியல் நிலைமைகளை மட்டுமின்றி, சர்வதேச நிலைமைகளையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார் எங்கெல்ஸ். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். இந்த விடுதலைப் போராட்டம் தவிர்க்கவியலாதபடி நிலப்பிரபுத்துவத்தை முறியடிக்கும் என்றார். ‘எந்த அளவுக்கு அண்டை நாட்டு மக்களுக்கு ஜெர்மனி சுதந்தரம் வழங்குகிறதோ, அந்த அளவுக்குத்தான் ஜெர்மனியும் சுதந்தர நாடாக மலரும்.’

ஒப்பீட்டளவில் பெரும் முதலாளிகளை எதிர்த்த அளவுக்குக் குட்டி முதலாளிகளை எங்கெல்ஸ் எதிர்க்கவில்லை. பொது மக்களைக் கவர்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து எடுத்த முடிவுதான் இது. ஜனநாயகவாதிகளை அரவணைத்துக்கொண்டதைப் போலவே குட்டி முதலாளிகளையும் எங்கெல்ஸ் அரவணைத்துக்கொண்டார். அதே சமயம் அவர்களது தவறுகளையும் வெற்று கனவுகளையும் கண்டித்து வந்தார். மார்க்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஆசிரியர் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்கவேண்டிவந்தது.

எங்கெல்ஸின் திறன்களைக் கண்டு திகைத்து நின்றார் மார்க்ஸ். எங்கெல்ஸின் எழுத்துத் திறனையும் ஒரு பத்திரிகையாசிரியராக அவர் ஆற்றிய கடமைகளையும் எண்ணி பெருமிதம் கொண்டு பாராட்டினார் மார்க்ஸ். ‘எங்கெல்ஸ் ஒரு அறிவுக்களஞ்சியம். இரவு, பகல் பாராமல் அவரால் எப்போதும் சிந்திக்கமுடியும், செயல்படமுடியும். சிந்திப்பதிலும் எழுதுவதிலும் அவர் ஒரு பிசாசு.’

இதற்கிடையில் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்த கும்பலையும் எங்கெல்ஸ் சமாளிக்கவேண்டியிருந்தது. இப்போதே தாக்குங்கள், அரசைக் கைப்பற்றுங்கள் என்று ஒரு கும்பல் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது. பாட்டாளிகளும் உத்வேகம் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்க யத்தனித்தனர். எங்கெல்ஸ் பெரும்பாடுபட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினார். காலம் கனியாத சூழலில் எடுக்கப்படும் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகள் அரசின் ராணுவ நடவடிக்கையை வலுப்படுத்தும் என்று புரியவைக்க முயன்றார்.

நடந்ததும் அதுவேதான். மக்களுக்கு ஆத்திரமூட்டி அவர்களைக் கிளர்ந்தெழுச் செய்யவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. அவ்வாறு அவர்கள் கிளர்ந்தெழுந்து வரும்போது ராணுவத்தை ஏவிவிட்டு அடக்கியாள்வது திட்டம். ஆனால், அது நிறைவேறவில்லை. அதற்கு எங்கெல்ஸ் ஒரு காரணம். புதிய ரைன் பத்திரிகை ஒரு முக்கியக் காரணம். பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா? செப்டம்பர் 26ம் தேதி கொலேன் நகரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் கூடுவதற்கும் விவாதிப்பதற்கும் தடை. பத்திரிகைகள் இயங்கத் தடை. அரசியல் பிரசாரத்துக்கும் கூட்டங்களுக்கும் தடை.

புதிய ரைன் பத்திரிகை ஓராண்டு மட்டுமே உயிர் வாழ்ந்தது. இந்த ஓராண்டில் எங்கெல்ஸ் நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதி பதிப்பித்தார். ‘பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இதழாக’ புதிய ரைன் செயல்பட்டது என்று லெனின் பின்னர் குறிப்பிட்டார்.

பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து எங்கெல்ஸைக் கைது செய்யுமாறு ஜெர்மன் அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து எங்கெல்ஸும் ஆசிரியர் குழுவில் இருந்த பிறரும் தலைமறைவாயினர். ஐரோப்பா கொதித்துக்கொண்டிருக்கும் போது பிரஷ்ய சிறையில் சிக்கி செயலற்று கிடப்பது வீண் என்பதையறிந்த எங்கெல்ஸும் பிற ஆசிரியர்களும் பார்மெனில் பதுங்கிக்கொண்டனர். பார்மென்! எங்கெல்ஸின் பெற்றோர் வசிக்கும் இடம். எங்கெல்ஸ் படித்த, வளர்ந்த இடம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு அவர்களைக் காணாமல் இருக்கமுடியுமா? ஆனால், எங்கெல்ஸின் பெற்றோர் அவர் மீது சினம் கொண்டனர். கொழிக்கும் தொழிலைக் கைவிட்டு உபயோகமற்ற, ஆபத்தான புரட்சிகரப் பணிகளிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த எங்கெல்ஸை அவர் தந்தை கடிந்துகொண்டார்.

அங்கிருந்து வெளியேறிய எங்கெல்ஸ், பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தபோது, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். மீண்டும் பாரிஸ் பயணம். அங்கிருந்து தெற்கு பிரான்ஸ் வழியாக சுவிட்ஸர்லாந்து. பிறகு ஜெனிவா வந்து, மார்க்ஸ் அனுப்பிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, சுவிட்ஸர்லாந்தில் உள்ள பெர்ன் நோக்கி பயணமானார் எங்கெல்ஸ். தாற்காலிகமாக இங்கே குடியேறினார். அங்குள்ள தொழிலாளர்களின் சங்கத்தில் இணைந்துகொண்டார். இதற்கிடையில் மார்க்ஸ், புதிய ரைன் பத்திரிகையை மீண்டும் தொடங்கியிருந்தார். எங்கெல்ஸ் சுவிட்ஸர்லாந்தில் இருந்தபடியே அந்நாட்டு நிலைமைகளை ஆராய்ந்தபடி கட்டுரைகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார். 1849 ஜனவரி மாதம் எங்கெல்ஸ் ஜெர்மனி திரும்பினார்.

மாறிக்கொண்டிருந்த சூழலுக்கு ஏற்ப இப்போது குட்டி முதலாளிகளுடனான உறவுகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் முறித்துக்கொண்டிருந்தனர். கூலியுழைப்பும் மூலதனமும் என்னும் தலைப்பில் புதிய ரைன் பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருந்தனர். புரட்சிகர கட்சி ஒன்றை பாட்டாளி வர்க்கம் உருவாக்குவதற்கு கையேடாக இது அமையும் என்பது அவர்கள் நம்பிக்கை. தொழிலாளர் சங்கத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பரவலாக விவாதிக்கப்பட்டது.

புதிய ரைன் பத்திரிகையின் ஜனநாயக முத்திரை இப்போது முழுவதுமாக விலகியிருந்தது. புரட்சிகர ராணுவ அரசியலில் எங்கெல்ஸ் மையம் கொண்டார். உண்மையான பாட்டாளி வர்க்க தோழராக எங்கெல்ஸ் இப்போது மாறியிருந்தார். பகிரங்கமான எதிர்ப்பு நடவடிக்கைக்கு அவர் இப்போது தொழிலாளர்களைத் திரட்டிக்கொண்டிருந்தார். இறுதித் தாக்குதலக்குத் தயாராகுங்கள் என்னும் வாசகம் பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

 

தோழர்

அத்தியாயம் 37

 

மே 1849 வாக்கில் மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் எழுச்சி அதிகரித்தது. தொழிலாளர்கள் பெருமளவில் இந்த எழுச்சியில் பங்கேற்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இந்த எழுச்சியை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள துடித்தனர். தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வு ஊட்டவும் அவர்களை அணி திரட்டவும் எங்கெல்ஸ் முன் வரிசையில் இருந்தார். மக்கள் எழுச்சி என்பது ஒரு கலை. புரட்சிகர கம்யூனிசம் இந்தக் கலையைத்தான் மக்களிடம் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது. முஷ்டியை உயர்த்தியபடியும், ஆயுதம் ஏந்தியபடியும், உரக்கக் குரல் எழுப்பியபடியும் விதவிதமான தொழிலாளர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வீதியில் ஒன்று திரளும்போது காண கண்கள் இரண்டு போதுமா? ஆம், மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளை பாட்டாளி வர்க்கமே உருவாக்குகிறது. வீதிகளில்தான் இந்தப் படைப்புகள் உயிர் பெற்று எழுகின்றன.

ஆயுதம் தாங்கிய ஒரு எழுச்சிக்கு செயல்திட்டம் வகுத்து கொடுக்கும் பணியை முதல் முறையாக எங்கெல்ஸ் மேற்கொள்ளும்போது அவர் உள்ளம் பெருமிதத்தில் பூரித்தது. ‘பொதுமக்களின் புரட்சிகர ஆற்றலை மிக உயர்ந்த அளவுக்குப் பிரயோகிப்பது, எழுச்சியின் மையப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை, துணிச்சல், துரிதமான நடவடிக்கை – இவைதான் ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கான எங்கெல்ஸின் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.’ (பிரெடரிக் எங்கெல்ஸ், எவ்கேனியா ஸ்தெபானவா).

மே 10ம் தேதி ரைன் மாநிலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை பகுதியில் (மார்க்கோ-பேர்கிஸ்க்) ஆயுதப் போராட்டம் வெடித்தது. தொழிலாளர்கள் ஆலை முதலாளிகளுக்கு எதிராகவும் உள்ளூர் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே சமயம், எல்பர்ஃபெல்ட், காகென், இசெர்லோன் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் பரவியது. ஒவ்வொரு பகுதியாகப் போராட்டம் பரவிக்கொண்டிருப்பதை எங்கெல்ஸ் கண்காணித்து வந்தார். ஒவ்வொரு பகுதிக்கும் உதவி தேவை. ஆலோசனை தேவை. மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ற நுணுக்கமான ராணுவத் திட்டம் தேவை. எங்கெல்ஸ் ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிருப்பது இனியும் சாத்தியமில்லை.

எங்கெல்ஸின் பிறப்பிடமான உப்பெர்தல் பகுதியில் கலவரப் புயல் மையம் கொண்டபோது, எங்கெல்ஸ் அங்கே விரைந்தார். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பயணம் செய்து, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்த எங்கெல்ஸ் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார். மிகவும் குழப்பமான நிலைமையில் போராட்டக்காரர்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர். அவர்களால் ஆயுதங்களைச் சரியாகக் கையாள முடியவில்லை. எதிர்த்து நின்ற அரசு ராணுவப் படையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தொடர்ந்து போரிடவும் முடியவில்லை. துணிச்சல் மிக்க போராட்ட யுக்தியைத்தான் எங்கெல்ஸ் அவர்களுக்கு வழங்கியிருந்தார். முழுப் போராட்டத்தையும் அவரால் மட்டுமே வழிநடத்தமுடியாது என்பதால்தான் நண்பர்கள் சிலரிடமும் கட்சி அலுவலர்கள் சிலரிடமும் அவர் பொறுப்புகளைப் பிரித்து அளித்திருந்தார். ஆனால் நேரில் வந்து களத்தைப் பார்த்தபோது, திட்டத்தின் செயல்வடிவம் பிழையாகப் பிரயோகிக்கப்பட்டது புலனானது.

இப்போதும்கூட எங்கெல்ஸ் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. பயந்துகொண்டும் பின்வாங்கிக்கொண்டும் இருந்த தொழிலாளர்களிடம் அவர் பேசினார். தடையரண்களை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கினார். பன்மடங்கு பலம் வாய்ந்த ஆதிக்கப் பிரிவினரை ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வற்கு முன் வலுவான தடையரண்களை உருவாக்கவேண்டும் என்னும் அடிப்படை பாடம்கூட கோட்டைவிடப்பட்டிருந்தது. கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு முக்கிய இடங்களில் தடையரண்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

மற்றொரு பக்கம், ஆயுதந்தாங்கிய சில நூறு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டினார். அவர்களுக்குப் போதுமான ஆயுதங்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். கட்சியுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். உப்பெர்தல் பகுதியில் போராடுபவர்களுக்கு இடைவிடாமல் உதவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் கட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டன. தடையரண்கள் மீது வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். பீரங்கிகளும் நிறுத்தப்பட்டன. போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கான பணிகளில் அடுத்து இறங்கினார் எங்கெல்ஸ். மார்க்கோ-பேர்கிஸ்க் தொழிற்சாலைப் பகுதி உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களும் பலப்படுத்தப்படவேண்டும் என்பது அவர் திட்டம்.

புதிய ரைன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்து ஒருவர் ஜெர்மனிக்கு நேரில் வந்து புரட்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார் என்னும் தகவல் உப்பெர்தல் தாண்டி பிற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. முதலாளித்துவவாதிகள் கடும் கோபம் கொண்டனர். வெறுமனே தொழிலாளர் போராட்டமாக அது இருந்திருந்தால் உடனடியாக நசுக்கி அழித்திருப்பார்கள். ஆனால், இது ஓர் அரசியல் போராட்டமாக உருப்பெற்றிருந்ததை அவர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இந்த வகை போராட்டங்கள் ஆபத்தானவை. புதிய ரைன் பத்திரிகை போன்ற பத்திரிகைகளின் தூண்டுதலும் வழிகாட்டுதலும் இவற்றுக்கு அமைவது ஆபத்தானது. தவறான முன்னுதாரணங்களை இவை ஏற்படுத்திவிடும்.

எங்கெல்ஸ் உடனடியாக உப்பெர்தலைவிட்டு வெளியேறவேண்டும் என்று முதலாளித்துவ வர்க்கம் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தது. பின்னிருந்துகொண்டு கலவரத்தைத் தூண்டிவிடும் செயலை மேற்கொள்வதால் எங்கெல்ஸ் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஆவேசம் கொண்டனர். எங்கெல்ஸை வெளியேற்றுவது என்பது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒப்பானது. எனவே, உயிரே போனாலும் எங்கள் தலைவர் வெளியேற்றப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.

இது சிக்கலான சூழல் என்பதை எங்கெல்ஸ் புரிந்துகொண்டார். முதலாளிகளுக்கு பிரஷ்யப் படைகளின் முழுமையான ஆதரவு இருக்கிறது. ஏற்கெனவே தொழிலாளர்கள் துவண்டு கிடக்கிறார்கள். அவர்களால் பிரஷ்யப் படைகளையும் முதலாளித்துவ வர்க்கத்தின் சதிவேலைகளையும் முறியடிக்கமுடியாது. போராட்டம் பிசுபிசுத்துவிட்டது வெளிப்படையாகத் தெரிகிறது. இது நிச்சயமான தோல்வி. பார்த்துப் பார்த்து தயாரித்த திட்டம். மிகவும் தீவிரமாக, உலகச் சூழலை ஆராய்ந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டம். இருந்தாலும் வெற்றிபெறமுடியவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து உப்பெர்தலில் தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று முடிவு செய்தார் எங்கெல்ஸ். எங்கெல்ஸ் கொலோன் நகருக்குத் திரும்பி வந்தார். எல்பர்ஃபெல்ட் போராட்டம் பற்றியும், அதன் தோல்வி பற்றியும் ஒரு கட்டுரையை எழுதினார். ரைன் பத்திரிகையின் ஆசியர் குழுவின் பெயர் தாங்கி வெளியான அந்தக் கட்டுரை கீழ்கண்ட விஷயங்களைத் தெளிவுபடுத்தியது.

‘நமது பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் மீது மார்க்கோ-பேர்கிஸ்க் தொழிலாளர்கள் வியக்கத்தக்க வகையில் பாசத்தையும் நேசத்தையும் வெளிக்காட்டினார்கள். அவர்களுடைய ஜீவாதார நலன்களுக்காகவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனினும் ஆயிரம் மடங்கு கடுமையான ஒரு போராட்டம் வெடித்துக் கிளம்பப்போவது உறுதி. அதற்கான முன்னுரைதான் நடந்து முடிந்துள்ள போராட்டம். இதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும் ஒரு புரட்சி மலரும்போது, எங்கெல்ஸும் ஆசிரியர் குழுவில் உள்ள பிறரும் களத்தில் இறங்கிப் போராடுவார்கள். அப்போது, இப்பூவுலகின் எந்தச் சக்தியும் அவரை அப்பணியில் இருந்து வெளியேற்றமுடியாது என்பது உறுதி.’

உப்பெர்தலில் மட்டுமல்ல, ஜெர்மனியின் பிற பகுதிகளில் பரவிக்கொண்டிருந்த எழுச்சிகளும்கூட தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தன. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இந்த மாற்றங்களால் ஏமாற்றமடைந்தனர். என்றாலும் அவர்கள் துவண்டுவிடவில்லை. நடைபெற்றுக்கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான மாபெரும் போர். தொழிலாளி வர்க்கம் தம்மைக் காட்டிலும் பல நூறு மடங்கு சக்தி வாய்ந்த எதிரி வர்க்கத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. முதல் தாக்குதலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. போர்க்களத்தில் இப்படிப்பட்ட தோல்விகள் இருக்கத்தான் செய்யும். ஏமாற்றங்களும் சதிகளும் இருக்கத்தான் செய்யும். கசப்புணர்வும் அச்சவுணர்வும் விரக்தியுணர்வும் ஏற்படத்தான் செய்யும். மென்று, விழுங்கி, ஜீரணம் செய்து, பாடம் பயின்று நடைபோடுவதுதான் ஒரு நல்ல போர் வீரனுக்கு அழகு.

சட்ட ரீதியாக புதிய ரைன் பத்திரிகைக்கு மிரட்டல்கள் குவிந்தபோது மார்க்ஸும் எங்கெல்ஸும் இப்படித்தான் நினைத்துக்கொண்டனர். மே 19, 1849 அன்று பத்திரிகையின் இறுதி இதழ் வெளிவந்தது. கீழ்கண்ட வரிகள் அதில் அச்சிடப்பட்டிருந்தன.

‘எங்கள் ஆசிரியர்கள் பால் அனுதாபம் காட்டிய உங்களுக்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களிடம் இருந்து விடைபெறவேண்டிய தருணம் வந்துவிட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு விடுதலை! எங்களுடைய இறுதி முழக்கம் எப்போதும் இதுவாகத்தான் இருக்கும்.’ சிவப்பு மையில் இந்த வாசங்கள் அச்சிடப்பட்டிருநதன.

எங்கெல்ஸ் இந்தச் சம்பவத்தை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி குறிப்பிடுகிறார். ‘எங்கள் கோட்டையை விட்டுவிடவேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் ஆளானோம். ஆனால், துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தூக்கிக்கொண்டு, இசை தவழ, பத்திரிகையின் கடைசிச் சிவப்பு இதழை பதாகையாகப் பறக்கவிட்டபடி நாங்கள் பின்வாங்கினோம்.’



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 38

1848 அவர்களுக்கு மறக்கமுடியாத ஒர் ஆண்டாக அமைந்தது. மார்க்ஸ் பாரிஸிலும் எங்கெல்ஸ் சுவிட்ஸர்லாந்திலும் அடைக்கலம் புகுந்தனர். புரட்சியின் தோல்வியில் இருந்து அவர்கள் சில பாடங்கள் படித்துக்கொண்டனர். மார்க்ஸால் பாரிஸில் தொடர்ந்து தங்கியிருக்கமுடியவில்லை. எனவே நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார். எங்கெல்ஸையும் அங்கேயே வந்துவிடும்படி கடிதம் எழுதினார். ‘பிரஷ்ய அதிகாரிகள் உன்னை விடமாட்டார்கள். இங்கே வந்துவிடு. லண்டனில் நாம் செய்வதற்கு நிறைய இருக்கிறது.’

மார்க்ஸுடன் இருப்பதுதான் எங்கெல்ஸின் விருப்பமும் என்றாலும் லண்டன் சென்றடைவது எளிதல்ல. ஜெர்மன் எல்லையையும் பிரெஞ்சு எல்லையையும் கடப்பது இயலாத காரியம். ஐரோப்பா தொடர் கலகங்களைச் சந்தித்துக்கொண்டிருந்ததால், எல்லைகள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. மாற்றாக, இத்தாலி வழியாக (பிட்மோண்ட்) வெளியேறினார் எங்கெல்ஸ். அயல் நாடுகளில் இருந்து அரசியல் அகதிகள் நுழையாதபடி இத்தாலி அரசு தன் எல்லையில் பலத்த காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எங்கெல்ஸ் ரகசியமாக பிட்மோண்ட் எல்லையை ஊடுருவி அக்டோபர் 6, 1849 அன்று கப்பல் பயணத்தைத் தொடங்கினார். ஐந்து வாரம் நீடித்த பயணம் அது. தனது குறிப்பேட்டில் பயணம் பற்றிய குறிப்புகளை எங்கெல்ஸ் எழுதி வந்தார். காற்று வீசும் திசை, சூரியனின் மாற்றம், கடல் நிலை ஆகியவற்றைக் குறித்துக்கொண்டார். ஆங்காங்கே வரைபடங்களும் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் மாதம் எங்கெல்ஸ் லண்டன் வந்தடைந்தார். சோஹோ என்னும் நகரில் 6, மாக்கல்ஸ்ஃபீல்ட் தெரு என்னும் முகவரியில் தங்கினார். மார்க்ஸ் எங்கெல்ஸுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கம்யூனிஸ்ட் லீகின் மத்திய கமிட்டியில் எங்கெல்ஸ் உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட்டார். ஜெர்மானியத் தொழிலாளர்களின் கல்வி அமைப்பிலும் எங்கெல்ஸை வரவேற்று இணைத்துக்கொண்டார்கள். ஜெர்மனியில் இருந்து குடியேறியிருந்த பல தொழிலாளர்கள் வேலையின்றி ஏழைமையில் வாடிக்கொண்டிருந்ததைக் கண்ட எங்கெல்ஸ் அவர்களுக்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கினார்.

மிக முக்கியமான வேறு ஒரு பணியும் காத்திருந்தது. உடனடியாக ஒரு பத்திரிகை தேவை. 1848 மற்றும் 1849 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சி தோல்வியைச் சந்தித்ததையடுத்து தொழிலாளர் வர்க்கம் வருத்தத்திலும் விரக்தியிலும் மூழ்கிக்கிடந்தது. ஆயுதப் போராட்டம் இனி உதவாது, நம் விதி இனி அவ்வளவுதான் என்பதாக அவர்களில் பலர் சோர்ந்துபோயினர். பூர்ஷ்வா வர்க்கம் பழையபடி பாட்டாளிகள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழலில், பாட்டாளி வர்க்கத்துக்கு நம்பிக்கையளிக்கவேண்டியது அவசியம். கடந்த காலத்தின் தோல்விகளில் இருந்து அவர்கள் ஏராளம் கற்கவேண்டியுள்ளது. பத்திரிகை கையில் இல்லாவிட்டால் பிரசாரத்தைத் தொடரமுடியாது.

கம்யூனிஸ்ட் லீக் தோழர்கள் சிலரின் உதவியுடன் புதிய இதழ் (Nஞுதஞு கீடஞுடிணடிண்ஞிடஞு ஙூஞுடிtதணஞ்) தொடங்கப்பட்டது. பத்திரிகை நடத்துவதற்கான பணம் திரட்டுவது, முகவர்களை நியமிப்பது ஆகிய பணிகளை எங்கெல்ஸ் கவனித்துக்கொண்டார். 1950ம் ஆண்டு ஆறு இதழ்கள் வெளிவந்தன. இவற்றில் பெரும்பாலும் மார்க்ஸும் எங்கெல்ஸுமே கட்டுரைகள் எழுதினர். புரட்சிகரப் போராட்டங்கள் பற்றிய செய்திகளும் மதிப்பீடுகளும் அதிகம் இடம்பெற்றன. ஜெர்மானியத் தொழிலாளர்கள் பற்றியும், பிரான்ஸில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் வெளிவந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. நீண்ட கட்டுரைகள் தொடர்களாக வெளிவந்தன.

1848-49 ஜெர்மன் புரட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்களை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். போராளிகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதது. அவர்கள் பலவீனமடைந்திருந்தது. தொழிலாளர்களின் எழுச்சி பிராந்திய அளவில் சுருங்கிப்போனது. இந்தக் காரணங்களால், அதிகார வர்க்கம் எழுச்சியை ஒடுக்கி வெற்றி கண்டது. மேலும், ஜெர்மனியில் விவசாயிகளின் போர் என்னும் தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் துணைகொண்டு ஒரு போராட்டத்தை எப்படி அணுகுவது, எப்படி மதிப்பிடுவது என்பதை சிறப்பாக உணர்த்தியது.

அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் லீகை ஒழுங்கமைக்கும் பணியில் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஈடுபட்டனர். 1848 புரட்சி காரணமாக தலைவர்கள் உள்பட கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். அவர்களை ஒன்றிணைக்கவேண்டியிருந்தது. பிரான்ஸ், லண்டன், சுவிட்ஸர்லாந்து என்று பல நாடுகளில் அவர்கள் தலைமறைவாக இருந்தனர். இன்னும் சிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துகிடந்தனர். மீண்டும் லீக் பழையபடி இயங்குமா? போராட்டம் இனி தொடருமா? சட்டப்படி இனி நம்மால் இயங்கமுடியுமா அல்லது இப்படியே பதுங்கி வாழவேண்டியிருக்குமா?

குழப்பம் கொண்டிருந்தவர்களுக்குக் கடிதங்களும் உறுதிமொழிகளும் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களை நேரில் சந்தித்து நம்பிக்கையளிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியை மத்திய கமிட்டியைச் சேர்ந்த ஹென்ரிச் பாயர் என்பவர் மேற்கொண்டார். இவர் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கிருந்த கட்சியினரைச் சந்தித்து உரையாடினார். மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து உருவாக்கிய ‘கம்யூனிஸ்ட் லீகின் மத்திய கமிட்டிக்கான உரை’ அவருக்கு உதவியாக இருந்தது. புதிய சூழலில் லீக் எவ்வாறு இயங்கவேண்டும், இயக்கத்தினரின் எதிர்காலப் பணிகள் என்னென்ன என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாக விரித்துரைத்தது.

முதல் காரியமாக, ஜெர்மனியில் ஒரு தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும் என்றது அறிக்கை. ‘ரகசியமாகவும் சுதந்தரமாகவும் இயங்கும் பொதுமக்கள் இயக்கமாக அது அமையவேண்டும்… பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு உட்படாமல் பாட்டாளி வர்க்கத்தின் நலனை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படவேண்டும்.’ ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராடுபவர்களுடன் பாட்டாளி வர்க்கம் இணைந்து செயல்படலாமா? ‘பொது எதிரியை வெற்றி கொள்வதற்காக ஜனநாயகவாதிகளுடன் இணைந்து போரிடலாம். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் நலனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும்.’

ஜனநாயகவாதிகள் புரட்சியை அணுகும் முறைக்கும் கம்யூனிஸ்டுகள் அணுகும் முறைக்கும் உள்ள வேறுபாட்டை அறிக்கை சுட்டிக்காட்டியது. ‘ஜனநாயக பூர்ஷ்வாக்கள் புரட்சி உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் புரட்சி நிரந்தமாக இருக்கவேண்டும் என்பது நம் நிலைப்பாடு. பாட்டாளி வர்க்கம் ஆதிக்கத்தில் இருந்தும் பின்தங்கிய நிலையில் இருந்தும் முற்றிலுமாக விடுபடும்வரை புரட்சி தொடரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை புரட்சி தொடரப்படவேண்டும். ஆதிக்கம் செலுத்தும் அத்தனை நாடுகளிலும் உள்ள பாட்டாளி மக்கள் ஒன்றிணையும் வரை, அவர்களுக்கு இடையிலான போட்டிகள் மறைந்துபோகும் வரை, உற்பத்தி சக்திகள் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் திரண்டு வரும் வரை புரட்சி தொடரப்படவேண்டும்.’

கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் என்ன? கட்சியனர் எந்த லட்சியத்தை நோக்கி செயல்படவேண்டும்?‘எங்கள் நோக்கம் தனியார் சொத்துடைமையை மாற்றியமைப்பது அல்ல, முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது. வர்க்கங்களுக்கு இடையிலான பகையுணர்வை சீர்செய்வது அல்ல எங்கள் நோக்கம், வர்க்க பேதத்தை ஒழிக்கவேண்டும். தற்போதைய சமுதாயத்தை முன்னேற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம், புதிய சமுதாயத்தைப் படைப்பதையே.’

ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சியினரை இணைக்கும் பணி நடைபெறும்போதே, பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட புரட்சிகர உணர்வுமிக்கவர்களிடம் தொடர்பு கொள்ளும் பணியையும் கம்யூனிஸ்ட் லீக் மேற்கொள்ள வேண்டிவந்தது. இங்கிலாந்திலுள்ள சாசன இயக்கத்தினர், பிரெஞ்சு இடதுசாரிகள் உள்ளிட்டோரைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. மார்க்ஸால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியாததால், எங்கெல்ஸ் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.

லண்டனில் வசித்த அனுபவம் எங்கெல்ஸுக்குக் கைகொடுத்தது. சாசன இயக்கத்தினரிடமும் பிற இடதுசாரி இயக்கத்தினரிடமும் எங்கெல்ஸ் இயல்பாக உரையாடினார். புரட்சியாளர்கள் பலர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருந்ததையும் தங்களுக்குள் விரோதம் பாராட்டிக்கொண்டு வாக்குவாதம் செய்துகொண்டதையும் எங்கெல்ஸ் கவனித்தார். அவர்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைவதில் அக்கறை செலுத்தினார். பல இளைஞர்கள் புத்திக்கூர்மையுடன் இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ந்தார். கம்யூனிஸ்ட் லீகில் இப்படிப்பட்ட துடிப்பான செயல்வீரர்கள் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமே என்று கனவு கண்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 தோழர்

அத்தியாயம் 39

1848-49 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தது பிரிட்டனில் மட்டும்தான். மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் இது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. சாசன இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். ஹார்னே, ஜோன்ஸ் ஆகிய இருவரின் தலைமையில் சாசன இயக்கத்தின் ஒரு பகுதி தனியே இயங்கிக்கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் லீகின் உறுப்பினர்கள். மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தப் புதிய புரட்சிகர சாசன இயக்கத்தை ஆதரித்தனர். புதிய சாசன இயக்கத் தலைவர்களுடன் நட்பு உருவானது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரிட்டன் தொழிலாளர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்த சமயம் அது. சாசன இயக்கம் நடத்தி வந்த தி ரெட் ரிபப்ளிகன் என்னும் இதழில் அறிக்கை தொடராக வெளிவந்திருந்தது. இதில்தான் முதல் முறையாக அறிக்கையின் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர். அதற்கு முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கவில்லை.

சாசன இயக்கத்தின் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதில் நேரம் செலவிட்டார் எங்கெல்ஸ். எர்னஸ்ட் சார்லஸ் ஜோன்ஸ் என்பவர் புதிய இதழ் தொடங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை அறிந்த எங்கெல்ஸ் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். நோட்ஸ் டு தி பீப்பிள் என்னும் இதழ் வெளிவந்தது. ஜோன்ஸ் அதற்குப் பிறகு எங்கெல்ஸின் உதவியையும் வழிகாட்டுதலையும் அவ்வப்போது நாட ஆரம்பித்தார். எங்கெல்ஸின் கட்டுரைகளையும் உரிமையுடன் கேட்டு வாங்கி பிரசுரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சிந்தனைகள் அனைவருக்கும் பரவவேண்டும் என்பதில் ஜோன்ஸ் ஆர்வத்துடன் இருந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸின் கட்டுரைகளில் இருந்து சாசன இயக்கம் பல வெளிச்சங்களைக் கண்டுகொண்டது. அதே சமயம், முற்றிலுமாக அவர்களை ஏற்றுக்கொண்டது என்றும் சொல்லமுடியாது.

1850 இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் பொருளாதார பலம் கொண்ட நாடுகளாக வளர்ச்சியடைந்திருந்தன. மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்த மாற்றங்களைக் கவனத்துடன் கணக்கில் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக, ஜெர்மனி ஒரு தொழில்நகரமாக வளர்ச்சிபெற்றிருந்தது. ஒப்பீட்டளவில் இது துரிதமான முன்னேற்றம். முதலாளித்துவ நாடுகளின் வழியைக் கண்டு ஜெர்மனியும் அதனை வெற்றிகரமாக பின்பற்றியிருக்கிறது. மொத்தத்தில், முதலாளித்துவ நாடுகள் மினுமினுப்பில் இருக்கும் காலகட்டம் இது. இந்நாடுகளின் பண பலம், ஆயுத பலமாகவும் இப்போது உருவெடுத்திருந்தது. முன்பைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் பலத்துடன் அவர்களால் இப்போது திகழமுடியும்.

தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் எதிர்பார்த்தனர். சென்ற ஆண்டின் தவறுகள் இனி நடைபெறக்கூடாது. இப்போதைக்கு புரட்சிகரப் போராட்டங்களை நடத்துவது உசிதமல்ல. தற்போதைய சூழல் மாறும்வரை, அதாவது இந்நாடுகளின் பொருளாதார பலம் தேக்கமடையும்வரை காத்திருக்கவேண்டியது அவசியம்.

ஆனால், இந்த வாதத்தை கம்யூனிஸ்ட் லீக் நண்பர்களில் சிலர் ஏற்க மறுத்தனர். நிலைமை மாறும்வரை காத்திருப்பது வீண் செயல் என்று வாதிட்டனர். மார்க்ஸ் அவர்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயனுள்ள முறையில் கழிக்கவேண்டும். நாம் நிறைய கற்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக, புரட்சிகரச் சித்தாந்தம். நடைமுறையை எதிர்கொள்ளவும் நம்மைக் கூர்தீட்டிக்கொள்ளவும் இந்த வாசிப்பு நமக்குப் பயன்படும். மேலும், சென்ற ஆண்டின் தவறுகளை நாம் ஆய்வு செய்யவேண்டும். அவற்றில் இருந்து என்னென்ன பாடங்களைக் கிரகித்துக்கொள்ளமுடியும்என்று பார்க்கவேண்டும். பிறகு, சாசன இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டும். கூடுதல் பலம் பெற்றிருக்கும் முதலாளித்துவ நாடுகளைப் பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கலாம்.

மார்க்ஸின் ஆலோசனைகள் வில்லிச்-ஷாப்பர் என்பவர்கள் தலைமையேற்ற குழுவினரால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. இவர்கள் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் விரோதத்துடன் அணுகினர். லீகில் வளர்ந்துவரும் அவர்களுடைய செல்வாக்கைக் குறைக்கவும் தடுக்கவும் விரும்பினர். அதனால் வேண்டுமென்றே மார்க்ஸ் எங்கெல்ஸின் ஆலோசனைகளில் இருந்து விலகிச் சென்றர். கூடுமானவரை அவர்களுடைய திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தவிர்த்தார்கள்.

நேரடியாக மார்க்ஸையும் எங்கெல்ஸையும் தாக்க இவர்களுக்குத் தகுந்த வாய்ப்பு கிடைத்து. முதலாளித்துவ நாடு