New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் I


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் I
Permalink  
 


1. வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளேசகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமைதொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல்அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல்ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடுஎல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும்நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால்தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்துஇன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும்கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்குஉங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

 

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

         இறுதியிலே கடலில் சென்று

    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

         பின்பற்றும் தன்மை யாலே

    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

         வளைவாயும் தோன்றி னாலும்

    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

    அடைகின்ற ஆறே யன்றோ!

 

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில்மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவைகீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும்நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

 

பிரிவினைவாதம்அளவுக்கு மீறிய மதப்பற்றுஇவற்றால் உண்டான மதவெறிஇவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்துநாகரீகத்தை அழித்துஎத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

 

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணிமத வெறிகளுக்கும்வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? - செப்டம்பர் 15, 1893


ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதாஇல்லையா என்று சொல்வதற்குநல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காகஅதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்புநம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.


ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலாஅது எவ்வளவு பெரியதுஎனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறிஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பாஇந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரிஎன் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாகஇதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன்இவனை வெளியே விரட்டுங்கள்!என்று கத்தியது கிணற்றுத் தவளை.


காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டுதன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டுஅது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய,அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில்உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் I
Permalink  
 


3. இந்து மதம் - செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.


யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.


இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.


அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.


தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.


இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

 

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.


இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.


சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.


அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?


ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?


வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.


பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.


இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.


இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.


சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?


இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.


ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?


இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழையாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்கள். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.'


'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.


இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன.


அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். 'அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.


மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது ஒரு பிரார்த்தனை.


ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.


ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.


கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.


இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.


இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, 'நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.


இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அதனை- அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.


இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்துச் சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது. எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்'.


நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.


எல்லையற்ற, பிரபஞ்சம்(பேரண்டம்) தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.


ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்(மத அறிவியல் முழுமையடைந்து விடும்).


அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல் முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.


தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில்(கோயில்களில்) வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்றுகேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!


பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.


மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?


என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.


எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.


அவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : 'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.'


இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க அடைகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக்ஜான்ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.

 


சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோநினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களேஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால்தேவைப் படாதவர்கள்அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.


ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்குபக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டுசில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிரஅடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள்இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோஅதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.


இந்துவிற்குஉலகின் எல்லா மதங்களும்பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.


ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால்எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறிஎன்று சொன்னார். அதன் பலன்(ஆற்றல்) என்னஇந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்என்கிறார் வியாசர்.

இன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்துஎப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும்நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?' பெளத்தர்களோசமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதேஅதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால்அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோஅந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன்தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள்கிறிஸ்து பக்தர்கள்ஞானிகள்பாவிகள்எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல்இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன்இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்துஇவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்துமனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரைஎல்லோருக்கும் இடமளித்துதன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும்,அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண்பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.


அத்தகைய மதத்தை அளியுங்கள்எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை(மன்றம்) பெளத்த மத சபையாக(மன்றமாக) இருந்தது. அக்பரது சபை(மன்றம்) இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே(மன்றமாகவே) இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.


இந்துக்களுக்கு பிரம்மாவாகவும்சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும்பெளத்தர்களுக்கு புத்தராகவும்யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும்,கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும்சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகி(தோன்றி)க் கொண்டிருக்கிறது.


சுதந்திரத்தின்(விடுதலையின்) தாயகமாகிய கொலம்பியாவேநீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல்அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்துநாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று - செப்டம்பர் 20, 1893


நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்குசமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லைகடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.


இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள்நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.


இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கிமுகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்துபிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.


5. 
புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு - செப்டம்பர் 26, 1893


நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவுயூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.


ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றிஅவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும்தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால்சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்றுநிறைவு செய்யவே வந்தார்அழிக்க வரவில்லை.


ஏசுநாதர் விஷயத்தில்பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில்அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்றுஇந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவுஅதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம்மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.


மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர்ஏன்மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.


எல்லாரிடமும்குறிப்பாகபாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும்ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில்சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர்அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன்மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும்,அவரது போதனைகளில் பெரும் பகுதிஅந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.


தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும்மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும்உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில்மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில்மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரைகடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.


தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரைபுத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண்பெண்அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன்பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயேபெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.


அதே வேளையில்பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம்எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல்பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றிஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ,கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லைஎன்று கூறுகிறார்.


புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும்தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும்புத்தரின் இதயம்உயர்ந்த உள்ளம்வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!


6. 
நிறைவு நாள் உரை - செப்டம்பர் 27, 1893


சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்றுஅவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.


இந்த அற்புதமான கனவைமுதலில் கண்டுபிறகு அதை நனவாக்கியபரந்த இதயமும்உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றிஎன் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும்சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால்இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.


சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும்மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால்அவரிடம் நான், 'சகோதரா! உனது நம்பிக்கை வீண்என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமாகடவுள் தடுப்பாராக! இல்லைஇந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனாகடவுள் தடுப்பாராக!


விதை தரையில் ஊன்றப்பட்டுமண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோகாற்றாகவோநீராகவோ ஆகிவிடுகிறதா?இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டுதனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றிஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்துபெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டுதன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டுதன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.

 


இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம்தூய்மைகருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும்மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்புதம் மதம் மட்டும் தான் தனித்து வாழும்மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன்இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், 'உதவி செய்சண்டை போடாதே', 'ஒன்றுபடுத்துஅழிக்காதே', 'சமரசமும் சாந்தமும் வேண்டும்வேறுபாடு வேண்டாம்என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard