New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ரங்கநாயகம்மாவின் கோணல் மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்.


Guru

Status: Offline
Posts: 24636
Date:
ரங்கநாயகம்மாவின் கோணல் மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்.
Permalink  
 


ரங்கநாயகம்மாவின் கோணல் மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர். 

'சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது; அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் அவசியத் தேவை' என்ற ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கர் மீது புழுதி வாரி இறைக்கும் வேலையை செய்துள்ளது. அம்பேத்கர் மீதான தனிப்பட்ட ஒவ்வாமையை மறைக்க மார்க்சியத்தை வாசனை திரவியமாக நூலில் தெளித்துள்ளார். நூலின் தலைப்புக்கும் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளுக்கும் எந்த பொருத்தப்பாடும் இல்லை. இந்த குழப்பம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 'புத்தரும், அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் தேவை' என்பது ஒருவர் மற்றவரை முழுமைபெற செய்வது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

முதலிருவரும் வேண்டும். அதே நேரத்தில், போதாமைக்குரிய இடங்களை இட்டு நிரப்ப அல்லது மார்க்சியத்தை முதன்மையாக பயன்படுத்திக் கொள்வதை விவாதிக்க ரங்கநாயகம்மா விரும்புவது போன்ற பாவனையை நூலின் தலைப்பில் ஏற்படுத்துகிறார். ஆனால், நூலின் விவரங்களில் எந்த இடத்திலும் அம்பேத்கரிடம் ஆக்கப்பூர்வமாக கொள்ளத்தகும் புள்ளிகளை நூலாசிரியர் சுட்டிக்காட்டவில்லை. அம்பேத்கர் தன்முனைப்பு மற்றும் தற்பெருமை கொண்டவர், மார்க்சிய விரோதி, அம்பேத்கரும் கம்யூனிஸ்ட்களும் காலாகாலமும் ஒன்றுபட இயலாதவர்கள் என்பதை நிறுவுவதற்கு தான் ரன்ங்கநாயகம்மா நூலில் முயன்றிருக்கிறார் என்பது பெருத்த ஏமாற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இணையத்திலிருந்து சுட்டு காப்பி-பேஸ்ட் செய்து கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் ஒப்புவிப்புகளை போன்றது ரங்கநாயகம்மாவின் முஸ்தீபு. அம்பேத்கர் எழுத்துக்களை மிக விரிவாக எடுத்தாண்டு பின்னர் அரட்டை தன்மையில் தனது 'விமர்சனத்தை' முன்வைத்துள்ளார். இது நமக்கு கூடுதல் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த நூல் சில பதிப்புகளை குறுகிய காலத்தில் கண்டிருப்பதாக மொழிபெயர்ப்பாளர்கள் தங்களை மெச்சிக் கொள்கிறார்கள். மார்க்சியத்தையும், அம்பேத்கரியத்தையும் ஒருங்கிணைத்த பாங்கை அறிந்து கொள்ளும் ஆவலிலே பலரும் வாங்கியிருக்கக்கூடும். இந்த நூலை வாங்க உத்தேசித்த போது எனக்கும் அந்த உணர்வே இருந்தது. நூலை வாங்குவதற்குள் எதுக்கு வீண் செலவு என்று எனக்கு படிக்க வழங்கியவர் நண்பர் Karthi Govarthan. அவருக்கு நன்றி.

அடுத்தடுத்த பகுதிகளில் ரங்கநாயகம்மாவின் வறட்டு முழக்கம் பற்றிய எனது பார்வையை பகிர விழைகிறேன். படிக்கும் நண்பர்களின் கருத்துக்களை அறியவும் ஆவல்.

அம்பேத்கர் தனது ஆய்வின் மூலம் இந்து மதம் மற்றும் இந்து சமூகத்தை புரிந்து கொள்ள முயன்றதை குறை கூறுகிறார், ரங்கநாயகம்மா. சாதிப்பிளவை சாதகமாக்கி சுரண்டலை தொடர பயன்பட்ட இந்து மதக்கொள்கைகள் ஆளுவர்க்கத்தின் சித்தாந்த தேவையை பூர்த்தி செய்பவை. இந்து மதக் கொள்கைகளையும், அதன் பிரதிகளையும் ஆராய்வதற்கு செலவிடப்பட்ட அம்பேத்கரின் உழைப்பு ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் சித்தாந்தத்தை நமக்கு மிகத்தெளிவாக அறிய தருகிறது. 
பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக உயர்த்துவது தான் கம்யூனிஸ்ட்களின் பிரயத்தனம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருவது உடனடி கடமை என்று அவசரப்படுத்துகிறார், மாமேதை மார்க்ஸ். அப்படி இருக்கும் போது நிலவுகின்ற சமூக அமைப்பில் பாட்டாளிகளை சுரண்டுகின்ற தத்துவத்தின் அனைத்து இழைகளையும் பிரித்தாய்ந்த அண்ணல் அம்பேத்கரின் உழைப்பு எப்படி சிறுமையானதாகும்?

சாதியால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சிறிய தீமையாக ரங்கநாயகம்மா கருதுகிறார். தம்மை பேச அழைத்த ஜத்-பட்-தோடக் மண்டல் அமைப்பின் உறுப்பினர்களின் முற்போக்கு அம்சத்தை அம்பேத்கர் பாராட்ட மனமில்லாமல் வசைபாடுவதாக ரங்கநாயகம்மா விசனப்படுகிறார். உண்மையில், அம்பேத்கர் அவர்களை பரிவுணர்ச்சியுடன் தொடர்ந்து அவதானிக்கப் போவதாக தான் சொல்கிறார். ஒரு பக்கம் சாதியை சிறிய தீமையாக கருதும் ரங்கநாயகம்மா, சாதியை துறப்பதை பெரும் தியாகமாகவும் கருதுகிறார். போலியான அறச்சீற்றத்துடன் அம்பேத்கரை தாக்குகிறார்.

கணவன் இறந்து விட்டால் குறிப்பிட்ட சாதியில் ஏற்படும் 'கூடுதல் பெண்' என்ற பிரச்சினையை எதிர்கொள்ளவே உடன்கட்டை ஏறும் பழக்கம் உருவானது என்பது அம்பேத்கரின் துணிபு. மனைவி இறந்து விட்டால் ஏற்படுகின்ற கூடுதல் ஆண் பிரச்சினையை இத்தனை இறுக்கத்துடன் சாதி இந்து சமூகம் எதிர்கொள்ள துணியவில்லை. ஆணுக்கு துறவு நிலையை மேற்கொள்வது அல்லது சிறுமி திருமண முறையை மேற்கொள்வது என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சலுகை வழங்கியதை அம்பேத்கர் விளக்குகிறார். அம்பேத்கரை இந்த இடத்தில் விமர்சிக்கும் ரங்கநாயகம்மா 'கூடுதல் ஆண்' மணக்க அனுமதிக்கப்படும் சிறுமி இன்னொரு ஆணுக்குரியவள் அல்லவா? எனவே இன்னொரு 'கூடுதல் ஆண்' கடைசியில் எப்படியும் மிகத் தானே செய்வான். அம்பேத்கருக்கு இது தெரியவில்லையா? அம்பேத்கரின் 'வாதம் உடைந்து தொங்குவதாக' (பக்.29) ரங்கநாயகம்மா குதூகலிக்கிறார்.

உண்மையில் இப்படி ஒரு கேடுகெட்ட தீர்வை வழங்கியது சாதி அமைப்பு முறை தானே தவிர, அம்பேத்கர் அல்ல. சாதி பகுத்தறிவுக்கு புறம்பானது என்பதை தான் அம்பேத்கர் சாதி ஒழிப்பு நூலில் அம்பலப்படுத்தி இருக்கிறார். எனவே இகழப்பட வேண்டியது சாதி அமைப்பு முறையா அல்லது அம்பேத்கரா? அகமணமுறையை கைக்கொண்டால் மட்டுமே சாதி நீடிக்கும். எனவே சாதியவாதிகளிடம் எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கும். அம்பேத்கர் ஒரு ஆய்வாளருக்குரிய மேன்மையுடன் சாதியவாதிகளின் பதற்றத்தை நகைக்கிறார். ஒரு சாதி இந்து முடிந்த வரை சாதியை கடைப்பிடிப்பதும், அப்படி கடைப்பிடிக்க இயலாத போது சாதிக் கட்டுப்பாட்டை மீறுவதும் வேடிக்கையானது என்று சாதி ஒழிப்பு நூலில் கூறுகிறார்.

சாதி அமைப்பின் பகுத்தறிவுக்கு புறம்பான ஒரு நடவடிக்கையை சுட்டிக்காட்டியதற்காக சுட்டிக்காட்டியவரை கூண்டிலேற்றுகிறார், ரங்கா. இதை அறியாமை என்பதா? வறட்டுவாதம் என்பதா? அற்பவாதம் என்பதா? அல்லது மூன்றும் கலந்த மயக்க நிலை என்பதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: ரங்கநாயகம்மாவின் கோணல் மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்.
Permalink  
 


அம்பேத்கர் வர்ணத்தை வசதிக்கேற்றார் போல் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்கிறார் என்பது ரங்கநாயகம்மாவின் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று. அம்பேத்கரின் கருத்துக்களை ரங்கநாயகம்மா சரியாக உள்வாங்காததையே இது காட்டுகிறது. வருணப் பாகுபாடு ப்ளேட்டோவின் குடியரசு கொள்கையை போன்று மனிதர்களை பிரிக்கிறது. அறிவாளிகள், வீரர்கள் மற்றும் உழைப்பாளிகள் என்ற வகைப்பாடு ப்ளேட்டோவின் குடியரசு கொள்கை. வர்ணம் மனிதர்களை நான்காக பிரிக்கிறது. அதில் சற்று நெகிழ்வு தன்மை இருந்தது. சாதியின் இறுக்கமில்லை. எனினும் ப்ளேட்டோவின் குடியரசு கொள்கையை போன்று வர்ணமும் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. வர்ணத்தின் அடிப்படை தொழில் பிரிவினை என்பதும் சாதியின் அடிப்படை அகமணமுறை என்பதும் அம்பேத்கரின் முடிவு.

சாதியை ஒப்புநோக்கி வருணத்தை சற்று தகைமையானது என்கிறார், அம்பேத்கர். நிலப்பிரபுத்துவத்தை விடவும் முதலாளித்துவம் சிறந்தது என்றொருவர் சொன்னால் உடனே அவரை முதலாளித்துவ தாசர் என்போமா? அல்லது சோசலிசம் குறித்தும் அவர் என்ன கருத்து வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முயல்வோமா? முதலாளித்துவத்தை விடவும் சோசலிசம் சிறந்தது என்று பின்னர் சொல்லி விட்டால் அவரது முடிவை குழப்பவாதம் என்று வரையறுப்போமா? ரங்கநாயகம்மாவின் விமர்சனங்கள் சிறுபிள்ளைத்தனமானது. அம்பேத்கர் வருணத்தை ஆதரிக்கவோ, சாதிக்கு மாற்றாகவோ வருணத்தை முன்மொழியவோ இல்லை. வருணத்தை பரிந்துரைக்கும் காந்தி மற்றும் ஆரிய சமாஜிகளுக்கு எதிராக அம்பேத்கர் பெரும் சண்டமாருதம் புரிகிறார். வருணத்துக்கு உயிரூட்ட முயல்வது ஆபத்தானது என்கிறார். ஆனால் இவை ரங்காவுக்கு புரியவில்லை. அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்.

அடிமைத்தனத்தை ஒரு புறம் ஆதரித்துக் கொண்டு தீண்டாமையை எதிர்க்கிறார் அம்பேத்கர் என்பதும் ரங்காவின் அபாண்டங்களில் ஒன்று. அம்பேத்கர் ஓர் ஆய்வாளருக்குரிய நிதானத்துடன் ரோம் மற்றும் அமெரிக்காவில் நிலவிய அடிமைத்தனத்துடன் இந்தியாவில் நிலவும் சாதித் தீண்டாமையை ஒப்பீடு செய்கிறார். அதில் அடிமைத்தனத்தின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் பட்டியலிடுகிறார். ஒரு அடிமை இறந்தால் எஜமானன் அதற்கு பொறுப்பாகாததை பதிவு செய்கிறார். அதே நேரத்தில், அடிமைகள் தங்களது திறன்கள் மூலம் உரிமையாளருக்கு பயன்படுவதை நிரூபித்து ஒரு பாதுகாப்பான வாழ்க்கைக்கு முன்னேறுவதையும் அவதானம் கொள்கிறார்.

சாதித் தீண்டாமை அதன் இயல்பு காரணமாக தனித்திறன்கள் எதுவும் வளர அனுமதிக்காததை கவனப்படுத்துகிறார். தீண்டத்தகாதாருக்கு செய்ய வேண்டியதாக -- உணவு, உடை மற்றும் வீடு -- என்று எந்த கடப்பாட்டையும் சாதியச் சமூகம் கொண்டிருக்கவில்லை. ஆகவே அடிமைத்தனத்தை விடவும் தீண்டாமை மோசமானதாக மட்டுமில்லை; கொடூரமானதாகவும் இருக்கிறது அம்பேத்கர் வரையறுக்கிறார். ரங்கா வழக்கம் போல் அம்பேத்கர் அடிமைத்தனத்தை தலித் மக்களுக்கு பரிந்துரைப்பதாக திரிக்கிறார். அம்பேத்கர் பேச்சை வைத்து ''ஒரு தீண்டப்படாதவர் அடிமையாக மாற விரும்புவாரா?" (பக்.108) என்று கேட்டு நம்மை திணறடிக்கிறார்.

ரோமானிய அடிமைத்தனத்தை எதிர்த்து ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் கிளர்ந்தது போல் ஏன் தீண்டாமைக்கு எதிராக பெருங்கிளர்ச்சிகள் எழவில்லை? என்று சொந்தமாக கேள்வி எழுப்பிப் பார்க்கும் துணிச்சலையும் ரங்கநாயகம்மா பெறவில்லை. ஆங்கிலேய அரசாங்கம் தான் இந்து சமூகத்தில் தீண்டாமையுடன் ஒட்டியிருந்த அடிமைத்தனத்தை ஒழிக்க 1843-ல் சட்டம் இயற்றியது என்று அம்பேத்கர் மேலும் குறிப்பிடுகிறார். சாதியச் சமூகம் தீண்டாமை ஒழிவதற்குரிய எந்த ஆக்கக் கூறையும் தன்னளவில் கொண்டிருக்கவில்லை. ஆனால், அடிமைத்தனத்தில் சமூகம் அடுத்தகட்ட பாய்ச்சல் கொள்வதற்குரிய அம்சங்கள் சில இருந்தன. ஒரு மார்க்சிய அறிஞரால் இதனை மேலும் சிறப்பாக விளக்கியிருக்க முடியும். ஆனால், ரங்கநாயகம்மா பரிதாபமாக தோல்வியுறுகிறார். ஏனெனில் அவரிடம் மார்க்சிய ஆய்வுக் கண்ணோட்டம் எள்ளளவும் இல்லை. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொன்னால் அவர் ஒரு அற்பவாதி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard