New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாடார்,நாயர்,மிஷனரிகள்…


Guru

Status: Offline
Posts: 24636
Date:
நாடார்,நாயர்,மிஷனரிகள்…
Permalink  
 



 

நாடார்,நாயர்,மிஷனரிகள்…

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் மௌனமான ஆராதகனாக நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறேன். தினமும் உங்கள் இணையதளத்தை வாசிப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. வரலாற்றையும் இயற்கையையும் வாழ்க்கையையும் மிக விரிந்த தளத்தில் நுட்பங்களுடன் நோக்கும் உங்கள் திறன் குறித்து ஆச்சரியம் கொண்டிருக்கிறேன்.  அவ்வளவு எழுத்தையும் இணையம் மூலம் இலவசமாக கிடைக்கச்செய்வதற்கு நன்றி

 

உங்களுக்கு எழுதவேண்டுமென நெடுநாட்களாக எண்ணியபோதிலும்கூட உங்களுக்கு எழுதும் முதல்கடிதம் எதிர்ம்றையாக ஆகிவிட்டமைக்காக வருந்துகிறேன். திருவாளர் ராமச்சந்திரன் மற்றும் கணேசன் செர்ந்து எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள இணைப்பைப்பற்றியது இக்கடிதம்

 

கிறித்தவ மதப்பரப்புநர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப இந்திய சமூகத்தின் பிளவுகளையும் மோதல்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றால் அதையே திரு ராமச்சந்திரன் மற்றும் கணேசனின் கட்டுரையைப்பற்றியும் சொல்லலாமே. அவர்கள் முதலில் ஒருதகவலைச் சொல்கிறார்கள் அதனடிப்படையில் ஒரு ஊகத்தை நிகழ்த்துகிறார்கள் அந்த ஊகத்தை மேலும் மேலும் எடுத்துச்சென்றபின் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து அம்முடிவை அந்த முதல் தகவல் நிரூபிக்கிறது என நினைக்கிறார்கள்.

 

உதாரணமாக தோவாளைப்பகுதியில் ஈழவர்கள் சிலகாலம் வரிவசூல் செய்தார்கள் என்று முதலில் சொல்கிறார்கள். அதன்பின்னர் நம்மாழ்வாரின் அம்மா ஒரு ஈழவர் என்ற ஊகத்துக்கு வருகிறார்கள்.  அதன்பின் அவர் அப்பா ஒரு நாடார் என்று சொல்கிறார்கள். அதன்பின் இந்த இரு ஊகங்களையும்  முதல் தகவலுடன் இணைத்து நம்மாழ்வாரைப்பற்றிய தகவலை நிரூபிக்கப்பட்ட உண்மையாக சொல்கிறார்கள்!

ஒருவர் வரலாற்றில் தன் சாதியின் இடத்தைப்பற்றி உரிமைகளைச் சொல்வதில் எந்த பிழையும் இல்லை. ஆனால்  பிற சாதிகளைப்பற்றி அரை உண்மைகளையும் பொய்களையும் சொல்லும் இடத்தில்தான் பிரச்சினை எழுகிறது. நீங்கள் உங்கள் இயல்பான நல்லெண்ணத்தால்  அக்கட்டுரையை அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால் அது பிற சாதிகளைப்பற்றிய ஏராளமான தவறான தகவல்களையும் கீழிறக்குதலையும் செய்கிறது. உங்கள் இணையதளம் வழியாக அந்தக் கட்டுரையை வாசிக்கும் வாசகன் அந்த அரை உண்மைகளை நீங்கள்தான் சொல்கிறீர்கள் என்ற எண்ணத்துக்கே வருவான்

உதாரணமாக கீழ்க்கண்டவை:

 

 

1. நாயர்-வேளாளர் கூட்டுக்கும் நாடாருக்கும் இடையேயான மோதல்கள் என்பவை முன்னால் ஆட்சியாளர்களுக்கும் இந்நாள் ஆட்சியாளர்களுக்கும் நடுவே உள்ள மோதல்களே

இதைப்போன்ற பொய் வேறில்லை. எட்டுவீட்டுப்பிள்ளைமார் [நாயர்களும் வேளாளார்களும்] பப்புத்தம்பி ராமன் தம்பியின் பெரிய ஆதரவாளர்கள். மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்குவந்ததனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களே. வேணாட்டின் பல இளவரசர்கள் எட்டுவீட்டுப்பிள்ளைமார் குடும்பங்களில் மணம் முடித்தவர்கள்

2. நாயர்கள் நம்பூதிரி பிராமணர்களின் வழிவந்தவர்கள். 18 -19 ஆம் நூற்றாண்டில் அதிகாரத்துக்கு வந்தவர்கள்

 

இதுவும் பிழை. மன்னர் ராமவர்ம குலசேகரன் (1020-1102) காலகட்டத்தில்தான் முதன்முதலாக நாயர்கள் சாவேறு என்னும் தற்கொலைப்படையாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பெரும்பாலான பெருமாள்குல மன்னர்கள் நாயர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பெருமாள்கள் 13-14 ஆம் நூற்றாண்டில் பதவிக்கு வந்த வம்சம் என அறிவீர்கள் . நாயர் குடும்பங்களில் நம்பூதிரிகள் சம்பந்தம் என்னும் தற்காலிக மண உறவை மேற்கொண்டது உண்மை. ஆனால் அது மிஷனரிகளாலும் சில வரலாற்றாசிரியர்களாலும் மிகைப்படுத்தப்பட்டது. அவர்களால் உள்ளூர் சமூகவியலைச் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை

 

இதேபோல ஏராளமான தகவல்பிழைகள் இக்கட்டுரையில் உள்ளன. அவற்றை விரிவாக பேசுவதற்கான இடமில்லை இது. அவர்கள் தங்கள் சாதிக்கு ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக முனைவதில் பிழையில்லை. ஆனால் அது பிறசாதிகளை கீழிறக்கிச் செய்யவேண்டிய ஒன்றல்ல.

 

உதாரணமாக திருநெல்வேலியைச் 1453 ஐச்சேர்ந்த ஒரு கல்வெட்டு வேளாளச்சாதியினர் வெள்ளைநாடார் என்பவரின் குலத்துக்கு எதிராக ஒரு பஞ்சாயத்துத் தீர்ப்பை வழங்கியதைச் சொல்கிறது. உடனடியாக மூவரை கொல்லவும் இருபத்துமூவரை கண்ட இடத்தில் கொலை செய்யவும் அந்த தீர்ப்பு ஆணையிடுகிறது. தமிழ் நிலத்தில் எங்குமே அக்குலத்தார் நுழையலாகாது என்று அந்த தீர்ப்பு கண்டிப்பாகச் சொல்கிறது

 

நான் பழைய கால புண்களை கிளறவில்லை. ஆனால் இந்த உதாரணம் வேளாளர் திருவிதாங்கூருக்கு வெளியேயும் பிற சாதியினர் மீது தீர்பப்ளிக்கும் அதிகாரத்துடன் இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. பிறநாடார்குலங்களும் இந்தபஞ்சாயத்து தீர்ப்பை ஆதரித்திருக்கிறார்கள்.

 

தமிழ்ச்சமூகம் இன்று பலராலும் சொல்லப்படுவதுபோல வர்ணாசிரம தர்மத்தைப்போல கறாராக பிரிக்கப்பட்ட ஒன்றா¡க எப்போதும் இருந்ததில்லை.நீங்கள் சொன்னதைப்போல பரதவர் குறவர் உட்பட எல்லா சாதிகளுக்கும் அவரவர் குலங்களில் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  அந்த அதிகாரம் ஒரு குலத்துக்குள்ளோ நிலத்துக்குள்ளோ அல்லது ஒரு காலகட்ட எல்லைக்குள்ளோ நிற்கக்கூடியதாக இருந்திருக்கும் .

 

அதே சமயம் அந்த குலத்தின் அல்லது சாதியின் வேறுசில பகுதிகள் ஏழைகளாகவும் பிறரால் ஆளப்படுபவர்களாவும் வேறு இடங்களில் இருந்திருக்க முடியும் .உதாரணமாக கேரளத்தில் உள்ள பந்தளம், பூஞ்ஞார் மன்னர்கள் தங்களை பாண்டிய வழித்தோன்றல்களாகவே சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் கேரள மன்னர்களுக்குப் பணிந்து அங்குள்ள அரசகுலங்களுடன் மண முறவு கொண்டு கலந்தார்கள்.

 

நாடார்களுக்குள்ளேயே உயர்குடியினர் தங்களை விட தாழ்ந்தவர்களை கீழாகவே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாயர் வேளாள ஆட்சியாளர்களிடமும் இந்த மனப்பான்மையே நிலவியது. அதை கட்டுரையாசிரியர்களே சொல்கிறார்கள்.

 

என்னுடைய பணிவான விண்ணப்பம் என்னவென்றால் நீங்கள் மொத்தக் கட்டுரையையும் முழுக்க வாசித்தபின் சிபாரிசுகளைச் செய்யவேண்டும் என்பதே. என்னைப்போன்றவர்களைவிட இம்மாதிரி விஷயங்களை ஒட்டுமொத்தமாகப்பார்க்க உங்களால் முடியும் என்றும் நம்புகிறேன்

 

அன்புடன்,

 

சதுரகிரிவேல்

 

அன்புள்ள சதுரகிரிவேல் அவர்களுக்கு,

 

நான் வரலாற்றாசிரியன் அல்ல. வரலாற்றை வாசிப்பவன் மட்டுமே. இந்த எல்லைக்குட்பட்டு நின்றே நான் கட்டுரைகளை பற்றி கருத்து சொல்கிறேன். எனக்கு திரு.ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுகள் மேல் பொதுவான மரியாதை உண்டு.

 

அக்கட்டுரையை நான் முழுக்கவே வாசித்தேன். பல விஷயங்கள் எனக்கு ஏற்பிலாதவையாகவே இருந்தன. ஆனால் அது ஒரு நூலின் முன்னுரை. அவர்கள் அந்நூலில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று எண்ணினேன். ஆனால் பரவலாக எழுதப்படும் வரலாற்றுக்குப் பதிலாக நாட்டார் மரபுகள், வாய்மொழி தொன்மங்கள் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு எழுதப்படும் நுண்வரலாறு என்ற வகையில் இத்தகைய வரலாற்றாய்வுகளுக்கு முக்கியத்துவம் உண்டு என்பதனால்தான் இணைப்பு அளித்தேன்.

 

நம்முடைய சமூகத்தின் நுண்வரலாற்றை சாதிகளின் பரிணாமம், உறவு  ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இனிமேல் பேசமுடியாது. அப்படிப்பேசவேண்டும் என்றால் அது சாதிசார்ந்த சண்டையாக கீழிறங்காமல் ஒரு அறிவார்ந்த தளத்தில் நிற்கும் விவாதமாக இருந்தாக வேண்டும். இல்லையேல் வழக்கம்போல அரசியல்சரிகளில் சிக்கி விவாதமே இல்லாமல் ஆராய்ச்சிகள் நடக்கும் நிலைக்கே செல்வோம். உண்மையில் இப்போது நிகழும் பல ஆராய்ச்சிகள அந்த நிலையிலேயே உள்ளன.

 

என்ன சொல்கிறேன் என்றால் நாயர் சாதியை குறைத்து ஒருவர் எழுதினாரென வைத்துக்கொள்வோம், நாயர் சாதியினனாகிய நான் உடனே அதற்கு எதிர்நிலை எடுக்கவேண்டியதில்லை. அவ்வாய்வின் ஆதாரங்களையும் தர்க்கங்களையும் மட்டுமே நான் பார்க்க வேண்டும். அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம் அதை நான் சொல்லும்போது என்னை சாதிப்பற்றாளன் என முத்திரை குத்திவிடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வரக்கூடாது. அத்தகைய சூழலே இவ்வகை வரலாற்றாய்வுக்கு உகந்த சூழல்.

 

அது இன்று கேரளத்தில் உள்ளது, தமிழ்நாட்டில் இல்லை. எந்த ஒருசாதியினரும் தங்கள் சாதியைப்பற்றிய எதிர்மறைக் கருத்தை கேட்பதற்குச் சற்றும்  தயாராக இல்லை. சாதகமான கருத்து எத்தனை பொய்யானதாக இருந்தாலும் அதையே விரும்புகிறார்கள். மிக சிக்கலான ஒரு சூழல் கல்வித்துறையில் நிலவுகிறது.

 

நான் அக்கட்டுரையை சிபாரிசு செய்தது அத்தகைய ஆய்வுகள் முன்வைக்கப்படட்டுமே, தரவுகளும் தர்க்கங்களும் இருந்தால் பரிசீலிப்போமே என்றுதான். அந்நூலில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் சொல்வேன். அப்போது என் சாதி சார்ந்து முத்திரை குத்தப்பட்டால் தயங்கவும் மாட்டேன். எங்காவது ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கலாமே.

 

நாயர் குறித்த முதல் குறிப்பு சோழர்காலத்தில் கிபி ஒன்பதாம்நூற்றாண்டின் சுசீந்திரம் கல்வெட்டில் வருகிறது என்று கெ.கெ.பிள்ளை சொல்கிறார். கேரளத்தில் வாழ்ந்த நாகவழிபாடுசெய்யும் பழங்குடிகளே நாயர்கள் ஆனார்கள் என்று ஒரு கருத்து உண்டு. இன அடிபப்டையில் சித்தியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.

 

நாயர் என்பது காலப்போக்கில் உருவான ஒரு தொகுப்புப்பெயர். மிகக்கீழ்நிலையில் வெறும் காவலர்களாக வாழ்ந்த நாயர்கள் உண்டு. குறுநில மன்னர்களும் நாயர்களே. சோழர்களின் ஆட்சி விலகிய பின்னர் நாயர்கள் ஆங்காங்கே நிலங்களைக் கைப்பற்றி குட்டிக்குட்டி நாடுகளாக கேரளத்தை ஆட்சிசெய்ய ஆரம்பித்தார்கள். அன்றைய கேரளம் என்பது பெரும்பாலும் காடுகளும் சதுப்புகளும் கொண்ட வளமில்லாத மண்தான்.

 

குமரிபகுதியில் இருந்த திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற நாயர் குடும்பமே தங்களை சேர உதிரத்தின் வாரிசுகள் என்றும் சேரமான் பெருமாளால் மணிமுடி அளிக்கப்பட்டவர்கள் என்றும் உரிமை பாராட்டிக்கொண்டு திருவிதாங்கூர் அரச வம்சமாக ஆனார்கள்.சோழர்களின் ஆட்சிக்குக் கப்பம்கட்டும் நிலக்கிழார்களாகவோ [மாடம்பிகள்] குறுநில அரசுகளாகவோ [ ஸ்வரூபம்] இவர்கள் இருந்திருக்கலாம்.

 

அத்தகைய வேறுபல குறுநிலக்கிழார்கள் இருந்திருக்கலாம் என்று படுகிறது. திருவனந்தபுரம் அருகே புலையனார்கோட்டை என்று ஒன்று இருந்தது என்றும் அதை புலையர்கள் ஆண்டார்கள் என்றும் பத்மநாபசாமிகோயில் இருக்கும் இடமே புலைய ஆட்சியாளர்களுக்குரியது என்றும் தொன்மம் உண்டு. ஆய் வம்சத்து வாரிசுகளான கிருஷ்ணன்வகை சமூகத்துக்கும் குறுநிலக்கிழார்கள் இருந்திருக்கலாம். நாடார்களிலும் இருந்திருக்கலாம்.

 

திருவிதாங்கூரின் வரலாறென்பது நாயர்கள் மெல்லமெல்ல முற்றதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு பரிணாமம் தான். முதலில் நாயர் மாடம்பிகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக ஆகிறார்கள். அவர்களின் தலைவரே மன்னர் பதவி வகித்தார். இவ்வாறுதான் திருவிதாங்கூர் மன்னர் மீது எட்டுவீட்டுப்பிள்ளைமார் என்ற நாயர் பிரபுக்களுக்கு அத்தனைசெல்வாக்கு வந்தது. முந்நூறு வருடம் அவர்கள் திருவிதாங்கூர் அரசகுலத்தை பொம்மைகள் போல ஆட்டிப் படைத்தார்கள். அது ஒரு பெரிய வரலாறு.

 

இந்தக் காலகட்டத்தில்தான் நாயர்களிடம் பிராமணசம்பந்தம் என்ற வழக்கம் உருவாகியது. இதற்கான பின்னணியை பல விதங்களில் ஊகித்திருக்கிறார்கள். சோழர் காலகட்டத்தில் கோயில்களுக்கு பெரும் சொத்துக்கள் உருவாக்கபப்ட்டு நிர்வாகம்செய்ய பிராமணார்சபைகள் உருவாக்கப்பட்டன. சோழர்களுக்குப் பின்னர் அவை கிட்டத்தட்ட தனி அரசாங்கங்கள் போலவே செயல்பட்டன. அவற்றின் அதிகாரம் என்பது மக்களுக்கு பிராமணர்பால் இருந்த பக்தியை அடிப்படையாகக் கொண்டது.

 

இந்த பிராமணர்களுடன் இணைந்துகொண்டதுதான் பல நாயர் குடும்பங்களுக்கு பிறநாயர் குடும்பங்களை விட மேலதிக அதிகாரத்தை அளித்தது. அதன்பொருட்டே பிராமண சம்பந்தம் என்ற கருதுகோள் உருவானது. பல கோயில்களில் நிர்வாக அதிகாரம் கொண்டிருந்த நாயர்கள் பிராமண உதவியுடன் மன்னர்களாக ஆனார்கள். இவர்கள் கோயில்கல்தம்புரான் என்று சொல்லப்பட்டார்கள்

 

ஏழரை யோகம், எட்டரை யோகம் என்றெல்லாம் சொல்லப்பட்ட இந்த கோயில்பிராமணார்குழுக்கள் திருவிதாங்கூர் மன்னர் மீது பெரும் அதிகாரம் கொண்டு விளங்கினார்கள். ஏன், திருவிதாங்கூர் மன்னருக்கு இவர்களே முடிசூட்டி வைத்தார்கள். மார்த்தாண்டவர்மா வடுகர் உதவியுடன் நாயர் பிரபுக்களை ஒழித்துக்கட்டி ஏகாதிபதியான மன்னர் ஆனார்.  எல்லா கோயில் யோகங்களையும் கலைத்து நம்பூதிரிகளை நாடுகடத்தினார். அதன்மூலம் உருவான மக்கள் வெறுப்பை வெல்ல நாட்டை பத்மநாப சாமிக்கு காணிக்கை வைத்து தன்னை பத்மநாபதாசனாக அறிவித்து ஆட்சி செய்தார்

 

எல்லா நாயர் பிரபுக்களும் தங்களை குலசேகரப்பெருமாளின் வாரிசுகள் என்றும் அவரால் கேரள மண்ணுக்கு உரிமை அளிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள். சில நாடார்களுக்கும் அப்பட்டம் இருந்தது. மார்த்தாண்டவர்மாவுக்குப் பின் நாயர் ஆதிக்கம் எல்லைக்குள் வந்தது. நாடார்கள் முற்றாக ஒடுக்கப்பட்டார்கள்.

 

 

சோழர் ஆட்சிக்குப் பின் என்ன நடந்தது யார் கேரள நிலத்தை ஆண்டார்கள் என்பது ஒரு கலங்கிய நீர்.ராமச்சந்திரன் சொல்வதுபோல  நாடார்கள் ஒட்டுமொத்தமாக இந்நிலத்தை ஆண்டார்கள் என்பதற்கோ அவர்களிடம் இருந்து நாயர்கள் நாட்டைப்பிடித்தார்கள் என்பதற்கோ இன்றுவரை ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் சிலபகுதிகளில் நாடார் ஆட்சியாளர்களும் இருந்திருக்கலாம் என்று நம்ப முகாந்திரம் உள்ளது.

 

வரலாறு என்பது ஒரு பெரிய விவாதமாகவே எப்போதும் இருக்கும். முற்றாக நிரூபிக்கப்பட்ட வரலாறு எங்கும் இல்லை.முற்றாக ஏற்கப்பட்ட வரலாறும் இருக்க முடியாது. மேலும்மேலும் தரவுகளுடன் அதன் வரைபடம் பெரிதாக்கப்பட்டபடியே செல்லும். வரலாறு பல கோணங்களில் பேசப்படட்டுமே. ராமச்சந்திரனும் கணேசனும் முன்வைப்பது ஒரு கோணம், அவ்வளவே.

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ,

 

நீங்கள் ஏற்கனவே கேரளத்தின் பண்பாட்டு வளர்ச்சியைப்பற்றி சொல்லும்போதெல்லாம் மிஷனரிகளின் பங்களிப்பில் இருந்தே தொடங்குகிறீர்கள். குமரிமாவட்டத்தைப் பற்றிப் பேசும்போதும் அப்படித்தான் சொல்கிறீர்கள். இப்போது மிஷனரிவரலாறுகள் திரிபுகள் என்கிறீர்கள். இந்த முரண்பாடு எனக்கு புரியவில்லை

 

சாமிநாதன்

 

 

 

அன்புள்ள சாமிநாதன்,

 

இதில் என்ன முரண்பாடு உள்ளது? வரலாற்றை பொறுத்தவரை ‘வைச்சால் குடுமி  சிரைத்தால் மொட்டை’ என்ற நோக்குக்கு மாற்றாக உள்ள வழியே என்னுடையது.

 

ஐரோப்பிய மிஷனரிகள் கேரள – குமரிமாவட்ட கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். அனைவருக்கும் சமசீரான கல்வி என்பது ஓர் ஐரோப்பியக் கோட்பாடு. கேரளத்திலும் அதன்பகுதியாக இருந்த குமரிமாவட்டத்திலும் அது மிஷனரிகள் மூலம் முன்னரே அறிமுகம் ஆகியது. அதன் விளைவுகள் அச்சமூகத்தை பண்பாட்டுத்தளத்தில் விரைவாகவே முன்னெடுத்தன.

 

இரண்டாவதாக சாதி, இன ஆசாரங்களாலும் ஒதுக்குமுறைகளாலும் இறுகி கெட்டிதட்டிப்போயிருந்த கேரளச் சூழலில் ஓர் ஆழமான உடைவையும் நிலைகுலைவையும் உருவாக்க மிஷனரிகளால் முடிந்தது. அதுவே அச்சமூகத்தை மறுபரிசீலனைகளுக்கும் மாறுதலுக்கும் இட்டுச்சென்றது. பெரும்பாலும் ஒரு சமூகத்தின் கட்டுமானம் மறுபரிசீலனைக்குள்ளாவது அன்னியர்களின் ஊடுவல்மூலமே.

 

ஒரு வழக்கம் நெடுங்காலமாக இருக்கும்போது அது நீதிபோதத்தை தீண்டாமலாகிறது. ஒரு அன்னியர் கண்ணில் அது ஆழமான அதிர்ச்சியை உருவாக்கும். கேரளத்தில் இருந்த தீண்டாமை முதலியவற்றுக்கு எதிரான நவீன நீதியுணர்ச்சியை கிறித்தவர்களில் மட்டுமல்ல இந்துக்களின் கண்களிலும் மிஷனரிகளே உருவாக்கினர்.

 

கல்வியைதவிர்த்தால் மிஷனரிகளின் முக்கியமான பங்களிப்பு தொழில்கள் சார்ந்து உருவாகியிருந்த மரபுகளைத் தகர்த்து பொருளியல்தளத்தில் ஒரு செயலூக்கத்தை உருவாக்கியது. இன்ன தொழில் இன்ன சாதிக்கு என வகுத்து வேறு தொழில் சாத்தியமில்லாமல் செய்திருந்த சமூகம் அன்றையது. மிஷனரிகள் தையல், கூடைமுடைதல் உட்பட பலவகையான தொழில்களை மதம் மாறிய மக்களுக்குக் கொடுத்து அவற்றுக்கு வணிக வாய்ப்பையும் உருவாக்கி அவர்களின் பொருளியல்நிலையை மேம்படுத்தினார்கள்.

 

இதுவே பின்னர் நாராயணகுருவின் இயக்கம் வழியாக மேலும் விரிவாக்கம் பெற்றது. ஈழவர்கள் முதலியோர் குலத்தொழில் அல்லாத அனைத்து பிற தொழில்களிலும் இறங்கி வெற்றிபெற இது முன்னுதாரணமாக அமைந்தது.  பலவகையிலும் ஒடுக்கபப்ட்டு கைவிடப்பட்டிருந்த மக்களுக்கு மிஷனரிகள் மிகப்பெரிய வரலாற்று வாய்ப்பை வழங்கினார்கள் என்பதில் ஐயமில்லை.

 

மிஷனரிகளின் எதிர்மறைப் பங்களிப்பு என்றால் அவர்களின் வரலாற்று உருவகமே. அவர்களுக்கு இந்திய சமூகம் குறித்த எந்த நுண் அறிதலும் இருக்கவில்லை. தங்கள் ஐரோப்பிய மைய நோக்கு உருவாக்கிய முன்முடிவுகளை அப்படியே இந்திய சமூகம் மேல் போட்டார்கள். இந்திய சமூகம் ஒருவகையான காட்டுமிராண்டிச் சமூகம் என்றும் கிறித்தவ நற்செய்தி மூலம் அதை தாங்கள் மேம்படுத்தி காப்பதாகவும் எண்ணினார்கள். அந்த ஆழமான நம்பிக்கையே அவர்கள் இங்கே அர்ப்பண உணர்வுடன் சேவைசெய்யவும் காரணம்

 

அதற்கு அவர்களை குறை சொல்வதில் பொருள் இல்லை. நான் இங்கே சந்தித்த ஒரு வயதான மிஷனரி என்னிடம் சொன்னார். அவர் 60களில் வந்தபோது மாட்டுவண்டியில் தென்னைஓலை கொண்டுவந்து போட்ட ஒருவர் இடுப்பில் அழுக்குத்துண்டு மட்டும் கட்டியிருந்தார். அவரை ஒரு அடிமை என்றே துரை நினைத்தார். பிறகு தெரிந்தது அவர் ஒரு பெரும் நிலக்கிழார். மட்டுமல்ல அவர் ஒரு பெரிய தமிழறிஞரும் சோதிடரும் மருத்துவரும்கூட.

 

செல்வமும் கல்வியும் நிறைந்த ஒரு பிரபு அவர். அவரது உடை என்பது இந்த ஊரில் அன்றிருந்த வழக்கம். சட்டைபோடாதவரை அடிமை என எண்ணிய துரைமார் என்ன வரலாற்றுச் சித்திரத்தை அளிக்க முடியும்? அந்த வரலாற்றை மூலமாகக் கொண்டு இன்று எழுதப்படும் வரலாற்றுக்கு என்ன பொருள்?

 

நான் சொல்வது இதைத்தான். இன்று மதப்பரப்பு நோக்கத்துடன், மிஷனரிகளின் பங்களிப்பை மிகைப்படுத்தும் நோக்குடன், இந்திய சமூகம் அன்று ஒரு அரைப்பழங்குடிச் சமூகமாக இருந்தது என்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. இது வரலாற்றுத்திரிபு. மதம் மாற்றபப்ட்ட மக்களின் முந்தைய வரலாறு அழிக்கப்படுகிறது. இது ஒரு பெரும் தீமை

இந்த இரு விஷயங்களும் முரண்படவில்லை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மட்டுமே

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

மிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மிஷனரி வரலாறு என்ற ஒரு புதுச் சொல்லாட்சியை அளிக்கிறீர்கள். மிஷனரிகள் சொன்னவை எல்லாமே உள்நோக்கம் கொண்டவை என்று சொல்கிறீர்களா? அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க உங்களால் முடியுமா என்ன?

ஜான் செல்வா

அன்புள்ள செல்வா,

நான் மிஷனரி வரலாறு என்று சொல்வது அந்த வரலாறு குறித்த ஓர் எச்சரிக்கை தேவை என்பதனாலேயே. அந்த வரலாற்றெழுத்தில் உள்ள மிஷனரி பார்வையை கணக்கில் கொண்டே நாம் அந்த வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்பதனாலேயே

மிஷனரி வரலாற்றின் அடிபப்டைகள் இவை

1. உலகை கிறித்தவ மீட்பு கொண்ட பகுதி கொள்ளாத பகுதி என பிரிக்கும் இரட்டை நோக்கு.

2. கிறித்தவ மீட்பு கொள்ளாத பகுதி என்பது இருளடைந்ததாக ஞானமும் நாகரீகமும் அற்றதாக மட்டுமே இருக்க முடியும் என்ற நோக்கு

3. ஐரோப்பியமையவாதம். ஐரோப்பிய சமூக இழிவுகளை தீங்குகளை காணாமல் இருப்பது. பிற சமூகங்களில் உள்ள சமூக தீங்குகளைக் கண்டு நீதியுணர்ச்சி எழப்பெறுவது

4 தங்கள் அறிதலின் வட்டத்துக்குள், பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் வழியாக, வந்த அறிதல்களையே முழுமையான தகவல்களாக எண்ணி முன்வைப்பது

இந்த குறைகளை கருத்தில் கொன்டபின் அவர்கள் சொல்லும் தகவல்களைப் பரிசீலிப்பதில் பிழை ஏதும் இல்லை

மேலும் இன்னொரு விஷயம். மிஷனரிகள் இரு நூற்றாண்டு முன்பிருந்த மனநிலையை வெளிக்காட்டியவர்கள். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் எல்லாம் மிஷனரிகளின் நோக்கைப்பற்றிய விமரிசனங்களை அதிகாரபூர்வமாகவே ஏற்றுக்கொன்டார்கள். ஆனால் இந்தியாவில் இப்போதும் ஒரு மதவெறி குழுவினரால் மிஷனரி வரலாறு மூர்க்கமாக முன்வைக்கப்படுகிறது. அனைத்துவகையான ஊடக சாதனங்கள் மூலமும் பரப்ப படுகிறது

அறிவியல்நியதிகளுக்கும் அறநெறிக்கும் ஒத்துவராத இந்தப்போக்கை எந்த ஓர் அறிவுஜீவியும் நிராகரித்தே ஆகவேண்டும். நியாயத்தில் மனம் ஊன்றிய கிறித்தவ அறிவுஜீவிக்கு மேலதிக கடமை உண்டு. நான் ஒரு கிறித்தவ அறிவுஜீவியின் நேர்மையை அவர் இந்த விஷயத்தில் என்ன நிலைபாடு எடுக்கிறார் என்பதை வைத்தே மதிப்பிடுவேன்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமொகன்
மெல் கிப்சனின் “அபகொலிப்டோ” படம் பார்த்திருக்கிறீர்களா? ஐரோப்பிய மிஷினரிகளின் வருகைக்கு முன்பான அமெரிக்க மாயன்  பண்பாட்டை பற்றிய படம். மிகுந்த நுடபத்துடனும் சினிமா அழகியலுடனும் எடுக்கப்பட்ட ஒரு படம். ஆனால் படம் முடியும் போது அதனுள் இருக்கிற அரசியல் பிடிபடும்.
மாயன் பண்பாடு முழுக்க முழுக்க காட்டுமிராண்டிப் பண்பாடு என்கிற ஒரு சித்திரம் தான் அதில் உள்ளது. மிஷினரிகளின் வருகை அவர்களை மாற்றியிருக்கும் என்கிற ஊகத்துடன் படம் முடியும். இதே சித்திரத்தை தான் இந்திய பூகோளத்திற்கும் மிஷினரிகள் உருவாக்க முனைந்தார்களோ?
 
நாம் இன்று அறிகிற தகவல்கள் கட்டிட கலை மற்றும் இயற்கை சார்ந்த நுண்ணறிவில் மாயன் பண்பாடு மிக ஆழமானது என்பது.
 
சந்தோஷ்
அன்புள்ள சந்தோஷ் 

 

அபாகலிப்டா மிக ஆபத்தான படம். உண்மையான ‘காட்டுமிராண்டிகளை’ நவீன
மனிதர்களாகச் சித்தரிக்கும் கிறித்தவர்களின் வழக்கமான
வெறுப்புப்பிரச்சாரம் அது. பக்கம் பக்கமாக மேலைநாட்டினரே அதைப்பற்றி
எழுதித்தள்ளிவிட்டார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
 
ஓவியர் எம்.எஃப். ஹுசைன் பற்றிய உங்கள் பார்வை என்ன? அவருக்கு எதிராக மிகப்பெரிய காம்பைன் பண்ணிக்கொண்டிருக்கிற அமைப்பின் சுட்டியை கீழே தருகிறேன்.
 
அன்புடன்
சந்தோஷ்
 



http://ensanthosh.wordpress.com/

 

சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்.
ஜெ


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard