New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடு அல்லது கொள்கை


Guru

Status: Offline
Posts: 24636
Date:
நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடு அல்லது கொள்கை
Permalink  
 


நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடு அல்லது கொள்கை

http://nadeivasundaram.blogspot.in/2016/03/blog-post_25.html

 

ந.தெய்வ சுந்தரம் 
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (1) .....
நேற்று நோம் சாம்ஸ்கியின் பேட்டி ஒன்றை முகநூலில் இட்டிருந்தேன். நண்பர்கள் படித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஒரு மிக முக்கியமான பிரச்சினைபற்றிப் பேசியுள்ளார். மொழி என்பது ஒரு பேச்சுநடத்தையே ( verbal behaviour) என்ற ஒரு கோட்பாட்டை பி. எஃப் . ஸ்கின்னர் முன்வைத்தார். குழந்தை பிறந்தபிறகுஅதைச் சுற்றியுள்ளவர்கள் பேசுவதை அல்லது கற்றுக்கொடுப்பதைக்கொண்டுதான் குழந்தை மொழியைக்கற்றுக்கொள்கிறது என்பதே அவரது வாதம். குழந்தை பிறக்கும்போதுஅதன் மனிதமூளையில் மொழிபற்றிய எந்த ஒரு அறிவும் கிடையாது என்பது அவரது வாதம். அவரது கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டுதான் 50-களில் உலகெங்கும் மொழிகற்பித்தல் முறை பின்பற்றப்பட்டது. இரண்டாம் மொழிக்கும் அவரது கோட்பாடே பின்பற்றப்பட்டது. ஒரு இலக்கணக்கூறைக் கற்றுக்கொடுப்பதற்கு வழிமுறைஅதை நேரடியாகக் கற்றுக்கொடுக்காமல்அக்கூறு பயன்படுத்தப்படுகிற ஏராளமான தொடர்களைக் கற்பவர் கேட்டாலேஅந்த இலக்கணக்கூறை அவர் கற்றுக்கொள்வார் என்பதே அடிப்படை. தூண்டல் - துலங்கல் ... எதிர்வினையாற்றல் ( stimulus - response ) அடிப்படையே மொழி கற்பதிலும் செயல்படுகிறது.
இதை மறுத்துநோம் சாம்ஸ்கி தனது கோட்பாட்டை முன்வைத்தார். மொழி என்பது மூளையின் ஒரு உள்ளார்ந்த உறுப்பு ( mental organ) . அது பேச்சுநடத்தை இல்லை என்று வாதிட்டார். குழந்தை பிறக்கும்போதே மூளைக்குள் அனைத்து இயற்கைமொழிகளுக்குமான பொது இலக்கணம் ( Universal Grammar - UG) ஒன்று உள்ளது. குழந்தை மூளைக்கு உள்ள இந்த மொழியறிவு மனித இனத்திற்கே உரிய ஒன்று ( species-specific) . மனித இனத்தின் உயிரணுவால் அளிக்கப்படுகிற ஒன்று. genetically given - biological endowment. இந்தப் பொது இலக்கணத்தைப பயன்படுத்திதனது சூழலில் பேசப்படுகிற மொழியின் தரவுகளையும் கொண்டுகுழந்தை தனது தாய்மொழிக்குரிய இலக்கணத்தையும் அகராதியையும் உருவாக்கிக்கொள்கிறது. எனவேதான் மூன்று வயதுக்குள் ,தனக்குக்கிடைக்கிற குறைந்த அளவிலான மொழியனுபவத்தைக்கொண்டு (poverty of stimulus) , குழந்தை தன் தாய்மொழியில் திறமையைப் பெறுகிறது. அவ்வாறு இல்லையென்றால்ஸ்கின்னர் கூறுவது உண்மையாக இருந்தால்,குழந்தை தனது மொழியை இவ்வளவு விரைவாகப் பெற்றுக்கொள்ளமுடியாது. குழந்தைக்குப் பிறக்கும்போது இருக்கிற (Initial state of Language domain) அந்தப் பொது இலக்கணம் எப்படி இருக்கிறதுஅது எவ்வாறு மூன்று வயதுக்குள் ஒரு குறிப்பிட்ட மொழிக்கான அறிவாக - இலக்கணமாக ( steady state of Language domain) - வளர்ச்சியடைகிறது என்பதே சாம்ஸ்கியின் ஆய்வு. இதைக் கண்டறிவதற்கான முயற்சியில் சாம்ஸ்கியும் அவரது கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிற ஆய்வாளர்களும் கடந்த 60 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார்கள். ஏறக்குறைய மொழியியலாளர்கள் அனைவரும் தற்போது இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். சாம்ஸ்கியின் ஒரு முக்கியமான கோட்பாடு - மனிதனின் இயற்கைமொழித்திறன் மனித இனத்திற்கே உரிய ஒன்று. வேறு எந்த ஒரு உயிரினத்திற்கும் இந்தத் திறன் மூளையில் கிடையாது. மேலும் மொழி என்பதைக் குழந்தை கற்றுக்கொள்ளவில்லை. பெற்றுக்கொள்கிறது. அல்லது மற்ற திறன்களைப்போல ( தவழுதல்,நடத்தல் ... ) குழந்தையிடம் வளர்கிறது - Language grows inside the human brain - Language Growth.
அப்படியென்றால் .... கணினிக்கு - மின்னணு சிப்புக்கு - மனிதனின் இந்த மொழித்திறமையை இன்றில்லாவிட்டாலும்என்றாவது முழுமையாகக் கொடுக்கமுடியுமா மனித மூளைக்குள்ள அறிவுத்திறனை ... அறிவுக்கூர்மையை ( Intelligence) - மொழித்திறனை ( natural language competence / capacity) .. கணினிக்கு விதிகள் ( linguistic rules) வாயிலாகவோ அல்லது புள்ளியியல் ( probabilistic statistics)வாயிலாகவோ .... அல்லது இயந்திரம் கற்றல் ( machine learning)வாயிலாகவோ அளிக்கமுடியுமாஇதுவே சாம்ஸ்கியின் பேட்டியின் அடிப்படையான கருத்து. ஆர்வமுள்ள நண்பர்கள் பேட்டியை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.
 
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (2) .....
நோம் சாம்ஸ்கியின் முதன்மையான நோக்கம்மனித மூளை/ மனத்தின் ( Human Brain/ Mind) பண்புகளை அறிவதேயாகும். மனித மனமானது பல அங்கங்களை ( mind is a modular one - it has many modules ) உடையதாகும். மனிதமொழியானது மனித மனத்தின் ஒரு அங்கமேயாகும் ( a module of Mind) என்பது சாம்ஸ்கியின் கருத்து.
மொழிகளின் உள்ளார்ந்த பண்புகளைப்பற்றிய ஆய்வானது மனத்தின் பண்புகளை - இயல்புகளை - அறிய உதவும் என்கிறார். மொழியியல் என்பதே மொழியின் உளவியல் ( Psychology of Language).. இந்த உள்ளார்ந்த மொழியின் பண்புகள் என்னென்னஎவ்வாறு மூளைக்குள் அவை இடம்பெற்றுள்ளன என்பதை அறிவதையே அவர் தனது 60 ஆண்டுகால ஆய்வின் அடிப்படையாகக் கொண்டுள்ளார்.
உள்ளார்ந்த மொழியை I-Language (Internalized language ) என்றும் வெளியில் வெளிப்படுகிற மொழியை E-language ( Externalized Language)என்றும் அவர் குறிப்பிடுகிறார். மூளைக்குள் இருக்கிற மொழியின் பண்புகளை வெளிப்படுத்தும் முறைசார் வடிவத்தைக் ( linguistic formalism) கண்டறிய முயன்றுவருகிறார். ஆய்வின் புதிய புதிய கண்டுபிடிப்புகளையொட்டிஅவர் முன்வைக்கிற முறைசார் வடிவங்களும் தொடர்ந்து மாறிவருகின்றன.
தற்போது Minimalism என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு முறைசார் வடிவத்தை முன்வைத்துள்ளார். சாம்ஸ்கியின் ஆய்வு நேர்மையே இதில்தான் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆய்வுநிலையில் அவர் வைக்கிற முறைசார் வடிவத்தையேஅடுத்த உயர்நிலை ஆய்வில் கிடைத்த புதிய தரவுகளின் அடிப்படையில் அவரே எவ்விதத் தயக்கமும் இன்றிகைவிட்டுவிட்டுபுதிய முறைசார் வடிவத்தை முன்வைக்கிறார். தற்போது அவர் முன்வைத்துள்ள Minimalism அவரது 6-ஆவது முறைசார் வடிவமாகும்.
இதுபற்றித் தொடர்ந்து எழுத முயல்கிறேன் - முகநூல் நண்பர்கள் விரும்பினால்!
 
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (3)
நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடுகள் அறிமுகமாவதற்குமுன்னர்மொழியியலில் நாம் பேசுகிற அல்லது எழுதுகிற தொடர்களின் அமைப்பை அமைப்பியல்நோக்கில் விளக்குவதே ( Structural Linguistics) மொழியியலின் பணியாக இருந்தது. இந்த அமைப்புமொழியியல் முறையினால் தொடர்களில் ஏற்படுகிற பொருள் மயக்கங்களைத் ( meaning ambiguity)தீர்க்கமுடியவில்லை. ஒரே தொடரமைப்பு ( sentence phrase/ syntactic structure) , ன்றுக்குமேற்பட்ட பொருள்களைத் தரலாம்.
old ladies hostel என்பது ladies old -ஆ அல்லது hostel old -ஆ என்ற குழப்பத்திற்கு இடம் கொடுக்கிறது. chicken is ready to eat என்ற தொடரில் chicken தான் உணவு சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கிறதா அல்லது நாம் சாப்பிடுவதற்கு chicken தயாராக இருக்கிறதா என்ற குழப்பம் ஏற்படலாம். தமிழில் புலிகொல் யானைஎன்ற தடுமாறு தொழிற்பெயர்த்தொடரும் இந்த வகையைச் சார்ந்ததுதான். புலி கொன்ற யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா ?
அதாவது தொடரின் புற அமைப்பானது ( surface / external structure)ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருகிறது. அதற்குக் காரணம்,ஒரே புற அமைப்பானதுஇரண்டு புதை அமைப்புகளிலிருந்து ( Deep / underlying structure) உருவாகியுள்ளது. ஒரு புதை அமைப்பு இருந்தால் ஒரு பொருள். இரண்டு புதை அமைப்புகள் இருந்தால்இரண்டு பொருள்கள். எத்தனை புதை அமைப்புகளிலிருந்து ஒரு தொடரின் புற அமைப்பு உருவாகிறதோஅத்தனை பொருள்களுக்கும் அது இடம் தரும்.
எனவேஅமைப்பு மொழியியல் ஒரு தொடரின் பொருள்களை அல்லது பொருள் மயக்கங்களை விளக்குவதற்குப் பயன்படாது. அதாவது அமைப்புமொழியியல் போதாது என்று சாம்ஸ்கி முடிவுக்கு வந்தார். தொடர்களின் அமைப்பு ஆய்வானது அதன் பொருள்களை விளக்கப் ( meaning / semantic interpretation) பயன்படவில்லையென்றால் என்ன பயன் என்ற வினாவை அவர் முன்வைத்தார்.
அறிவியலின் அடிப்படையே ஏன் என்ற வினாவை எழுப்பிஅதற்கு விடை தேடுவதுதான். தொடர்களின் பொருள்கள் அல்லது பொருள் மயக்கங்களுக்கு விடை காண்கிற முயற்சியில்தான் சாம்ஸ்கி தனது மாற்றிலக்கணக் கோட்பாட்டை ( Transformational Generative - TG Grammar)முன்வைத்தார். இதுபற்றித் தொடர்ந்து எழுதுகிறேன்.
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (4) .....
சாம்ஸ்கி 1956-57 முன்வைத்த 'தொடரியல் அமைப்பு' " Syntactic Structure" என்ற நூலே மாற்றிலக்கணத்திற்கான ( Generative Grammar)முதல் நூலாகும். இந்த நூலில் சாம்ஸ்கி மனித இயற்கைமொழிகளின் அமைப்பை Finite State Automata போன்ற முறைசார் இலக்கணங்களைக் ( Finite State Grammars) கொண்டு ஆய்வு செய்ய இயலாது என்பதை வெளிப்படுத்தினார். Formal Languages / Regular Languages என்றழைக்கப்படும் செயற்கைமொழிகளுக்கே அவை பொருந்தும் என்று கூறினார். இயற்கைமொழிகள் படைப்புத்திறன் கொண்டவையாகும் ( creative ) என்று அவர் கூறினார் .
மேலும் அப்போது அமைப்புமொழியியலில் ( Structural Linguistics)வாக்கியங்களை ஆய்வுசெய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொடரமைப்பு இலக்கணம் ( Phrase Structure Grammar)வாக்கியங்களுக்கு இடையே உள்ள பொருண்மை உறவுகளை வெளிப்படுத்தப் பயன்படாது என்று கூறினார். ஆசிரியர் பாடம் நடத்தினார்என்ற செய்வினை வாக்கியமும் ( Active voice sentences) 'பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டதுஎன்ற செயப்பாட்டு வாக்கியமும் ( Passive Voice sentences) பொருள் தொடர்பு உடைய - உறவு உடைய - வாக்கியங்கள் ( semantically related ) என்பதை வெளிப்படுத்தப் பயன்படாது.
சாம்ஸ்கி முன்வைத்த அன்றைய மாற்றிலக்கணம் (1957)இயற்கைமொழிகளின் தொடர்களை அடிப்படை வாக்கியங்கள்( Kernal Sentences) , அடிப்படை வாக்கியங்களிலிருந்து சில மாற்றுவிதிகள்மூலம் ( Transformational rules) உருவாக்கப்படுகிற அடிப்படையல்லாத வாக்கியங்கள் ( non-kernal sentences) என்று பிரித்து ஆய்வுசெய்தது. எடுத்துக்காட்டாக, ' நான் புத்தகம் படித்தேன்என்ற செய்வினை வாக்கியமானது ( active voice sentences) அடிப்படை வாக்கியமாகும். புத்தகம் என்னால் படிக்கப்பட்டதுஎன்ற செயப்பாட்டு வினை வாக்கியமானது ( Passive voice sentences)செய்வினை வாக்கியத்திலிருந்து உருவாக்கப்பட்ட வாக்கியமேயாகும். எனவே இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் பொருண்மை உறவு உள்ளது அவர் இங்கு வந்தார் என்ற செய்திவாக்கியம் ( statement sentences) அடிப்படை வாக்கியமாகும். இதிலிருந்து அவர் இங்கு வந்தாரா? ' என்ற வினா வாக்கியம் (Interrogative sentences) உருவாக்கப்படுகிறது. இரண்டுக்கும் இடையில் உறவு இருக்கின்றன. இரண்டும் தொடர்புடைய வாக்கியங்களே!
அடிப்படை வாக்கியங்களை உருவாக்கதொடரமைப்பு விதிகளைச் (Phrase Structure Rules) சாம்ஸ்கி பயன்படுத்தினார். இந்த இரண்டு விதிகளோடு ( தொடரமைப்பு விதிகள்மாற்றிலக்கண விதிகள்) வாக்கியத்தில் சொற்கள் அமையும்போது நடைபெறுகிற மாற்றொலியன் மாற்றவிதிகளையும் - 'சந்திவிதிகளையும் - (Morphophonemic rules) தனது மாற்றிலக்கணத்தில் இணைத்துக்கொண்டார். இந்த மூன்று விதிகளையும் உள்ளடக்கியதுதான் சாம்ஸ்கியின் முதல் மாற்றிலக்கணக் கோட்பாடாகும். ஆனால் இந்த இலக்கணத்தில் வாக்கியங்களின் பொருண்மையை தருவிக்கத் தேவையான பொருண்மை விதிகள் / உறுப்பு ( semantic component) இல்லை என்பது ஒரு பெரிய குறைபாடு. இதுபற்றிப் பின்னர் பார்ப்போம்.
இதன் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகத்தில் பேரா. ஹவுஸ்கோல்டர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்மொழியை ஆய்வுசெய்து தனது இரண்டாவது முனைவர் பட்டத்தைப் (1963) பெற்றார்.
1957 முதல் 1965 வரை சாம்ஸ்கி தனது மாற்றிலக்கணக் கோட்பாட்டைக் காட்ஸ் ( Katz), ஃபோடார் ( Fodor), போஸ்டல் ( Postal)போன்ற பிற மொழியியல்தத்துவப் பேராசிரியர்களோடு இணைந்து வளர்த்தெடுத்தார். 1960 - இல் ராபர்ட் லீஸ் என்பவர் " The Grammar of English Nominalizations " என்ற நூலில் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டை மேலும் நிறுவினார்.
மேற்கூறிய ஆய்வு வளர்ச்சிகளைத் தொடர்ந்து, ,மாற்றிலக்கணத்தின் ஒரு முழுமையான கோட்பாட்டை சாம்ஸ்கி1965-இல் முன்வைத்தார். இந்நூலின் பெயர் " Aspects of the Theory of Syntax" . இதைத்தான் ' Standard Theory" என்று மாற்றிலக்கணத்தார் அழைப்பார்கள். இதுபற்றி அடுத்து எழுதுகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் - 1959-இல் பி எப். ஸ்கின்னரின் கோட்பாட்டைப்பற்றி ஒரு விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். இது மொழியியல் கோட்பாடு மொழிக்கல்வி ஆகியவற்றில் ஒரு பெரிய திருப்புமுனையை உருவாக்கியது.
 தொடர்களுக்கிடையிலான பொருண்மை உறவுகளை ( semantic relations) விளக்குவதற்கு Finite State Automata பயன்படாது என்றாலும்,சொற்களின் புற அமைப்பை ( surface structure of individual words)ஆய்வுசெய்வதற்கு - குறிப்பாகக் கணினி உருபனியல் ஆய்வுக்கு (Computational Morphology) - அது பயன்படுகிறது என்பது உண்மை. அதற்குக் காரணம்சொற்களின் அமைப்பு ( Word structure) . அவற்றில் அடங்கியுள்ள உருபன்கள் ( வேர்ச்சொல் " root morphemes" , இலக்கண விகுதிகள் " Grammatical morphemes" ) , அவற்றின் அமைவு (morphotactics) போன்றவை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டவையே (Finite) . ஒரு சொல்லின் அமைப்பை கணினிமொழியியலில் Regular Expression கொண்டு விளக்கலாம். அவ்வாறு விளக்கமுடிவதால்,அதை Finite State Automata அல்லது Finite State Transducer என்ற கணினிக்கு ஏற்ற கணித வடிவில் கணினியில் ஏற்றலாம். அதனடிப்படையில் சொற்களைக் கணினிவழி ஆய்வுசெய்யலாம். ஆனால் தொடரமைப்பை FSA / FST மூலம் ஆய்வு செய்வது கடினம்.
 
1)   'தப்பியோடிய ராமனின் மனைவியைப் பார்த்தேன்'
- 'தப்பியோடியது ராமனா அல்லது ராமன் மனைவியாஎன்ற பொருள் மயக்கம்

2) ' ஜான் மலையில் டெலஸ்கோப்புடன் மேரியைப் பார்த்தான்'

ஜான் தனது கைகளில் டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு மேரியைப் பார்த்தானா அல்லது டெலஸ்கோப்பைத் தனது கைகளில் வைத்திருந்த மேரியை ஜான் பார்த்தானாஎன்ற பொருள் மயக்கம்.

3) ' காவலர்கள் இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்'
காவலர்கள் தாங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டுமா அல்லது மற்றவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டுமாஎன்ற பொருள் மயக்கம்.

இவைபோன்று பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம். தொடர்ந்து நான் எழுதும் முகநூல் பக்கங்களில் இன்னும் தெளிவான எடுத்துக்காட்டுகளைத் தர முயலுகிறேன். பெயரெச்சத்தொடர்களில் நிறைய மயக்கங்கள் உண்டு. பின்னர் எழுதுகிறேன்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடு அல்லது கொள்கை
Permalink  
 


சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (5) .....
சாம்ஸ்கியின் மாற்றிலக்கண வரலாற்றில் 1957 'தொடரியல்'நூலானது மொழியியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அதற்குப்பின்னர் சாம்ஸ்கியும் அவருடன் பிற ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகளின் பயனாக 1965-இல் ' தொடரியல் கோட்பாட்டின் கூறுகள் ' " Aspects of the Theory of Syntax" சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக்கோட்பாட்டின் அடிப்படைகளை மிகத் தெளிவாக முன்வைத்தது. அதையொட்டித் தொடரப்பட்ட மேற்கொண்டு ஆய்வுகள் அக்கோட்பாட்டை மேலும் வளர்த்தெடுத்தது. இந்த வளர்ச்சியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப்பார்க்கலாம். 1965 - 1979வரையிலான ஒரு கட்டம், 1979 முதல் இன்றுவரை உள்ள கட்டம் எனப் பிரிக்கலாம். முதல்கட்டத்தின் முக்கியமான வளர்ச்சியை முதலில் பார்க்கலாம்.
தத்துவ அணுகுமுறை ( Philosophical approach) , ஆய்வு அணுகுமுறை (Research methodology) இரண்டிலும் சில தெளிவான கருத்துகள் சாம்ஸ்கியால் முன்வைக்கப்பட்டன. ஐன்ஸ்டீன்பற்றி ஒரு செய்தி உண்டு. அவரது ஆய்வின் தொடக்கத்தில் அவரிடம் பிரபல அறிவியலாளரான எர்னஸ்ட் மாக் ( Ernest Mach) என்பவரின் தத்துவக்கோட்பாட்டின் பிடிப்பு இருந்தது. மாக் அணுவின் பகுதிகளை நேரடியாகப் பார்க்க இயலாத ஒரு சூழலில் அணுவின் அமைப்புபற்றிய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருந்த Positivism / Empricism என்ற தத்துவ அணுகுமுறையே. Observation -க்கு உட்படாத எதையும் இத்தத்துவம் ஏற்றுக்கொள்ளாது. மாக் அவர்களின் கோட்பாடு அறிவியலுக்குப் பொருந்தாது என்பதைப் பொதுவுடமைத் தத்துவயியலாளரான சோவியத் தலைவர் லெனின் Materialism and Empriocriticism என்ற ஒரு பிரபலமான நூலில் தெளிவுபடுத்தினார். அறிவியல் ஆய்வில் ஈடுபடும் அனைவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான நூல் இது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐன்ஸ்டீன் மேற்குறிப்பிட்ட Positivism/ empricism தத்துவத்திலிருந்து வெளிவந்து Rationalism என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னரே அவரது Theory of Relativity கோட்பாடுகள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு, ஆய்வுலகில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நோம் சாம்ஸ்கி தொடக்கத்திலிருந்தே Rationalism தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர். எனவே மொழியியலிலும் அதைப் பின்பற்றினார். அவருக்குமுன்னர் நீடித்த அமைப்பு மொழியியலாளர்களின் ( Structural Linguists) ஆய்வுகளானது கள ஆய்வில் திரட்டப்பட்ட மொழித்தொடர்களை ( collected utterances in the field work) அமைப்பியல் அடிப்படையில் ஆய்வு செய்துவந்தனர். இந்த அணுகுமுறை மேற்குறிப்பிட்ட அனுபவவாதம் " Empricism " என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானதாகும். ஆனால் சாம்ஸ்கி இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தார். வானத்தில் எறியப்பட்ட கல் பூமியின் தரையை நோக்கி விழும் என்பதும் மரத்திலிருந்து பழங்கள் தரையில் கீழே விழும் என்பதும் நியூட்டனுக்கு முன்பே மனித வரலாற்றில் மக்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அடிப்படையான இயற்கைவிதி - புவியீர்ப்புவிதி (Gravitational law) - பற்றி அவர்கள் தெரிந்திருக்கவில்லை. . நியூட்டன் போன்ற அறிவியலாளர்களின் அறிவியல் ஆய்வுகளில்தான் அந்த விதி கண்டறியப்பட்டது. அதுபோன்று, ஒருவர் தனது வாழ்வில் பல லட்சம் தொடர்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருப்பார். ஆனால் அந்த லட்சக்கணக்கான தொடர்களையும் ( infinite utterances) )உருவாக்க அவருக்குப் பயன்படுவது அவர் மூளையில் உள்ள எண்ணிலடங்கும் (finite rules) குறிப்பிட்ட இலக்கணவிதிகளே. எனவே லட்சக்கணக்கான தொடர்களைச் சேகரித்து, அவற்றின் புற அமைப்பை விளக்குவது மொழியியலின் நோக்கமாக இருக்கக்கூடாது. மாறாக, அத்தனை எண்ணற்ற தொடர்களையும் உருவாக்க ஒருவருக்கு அவரது மூளைக்குள் இருக்கிற மொழியறிவே மொழியியல் ஆய்வின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று சாம்ஸ்கி கருதுகிறார்.
எனவே சாம்ஸ்கியின் மொழியியில் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள விரும்புவர்கள் அவர் ஏற்றுக்கொண்ட "Rationalism" 'பகுத்தறிவாதம்' என்ற தத்துவத்தின் பின்னணியை முதலில் புரிந்துகொள்வது அவசியம். நாளை சாம்ஸ்கியின் மொழியியல் ஆய்வின் நோக்கம், அணுகுமுறைபற்றிப் பார்க்கலாம்.
 
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (6) .....
சாம்ஸ்கியின் அடிப்படை நோக்கமே, மனித மனம்பற்றிய ஆய்வுதான் என்பதை முன்னர் கூறியுள்ளேன். மனித மனத்தின் ஒரு அங்கமாக ( module) - பாகமாக (mental organ) - இயற்கைமொழி அறிவு உள்ளது. எனவே சாம்ஸ்கி அந்த இயற்கைமொழி அறிவை - மனித மூளைக்குள் / மனத்திற்குள் - இருக்கிற அந்த அறிவின் பண்புகளை,அதன் அமைப்புமுறையைக் கண்டறிவதே தனது நோக்கமாகக் கொண்டுள்ளார். இதைச் சாம்ஸ்கி மொழியறிவுத்திறன் ( Linguisitc Competence) என்றும் அந்தத் திறனின் அடிப்படையில் ஒருவர் வெளிப்படுத்துகிற வாக்கியங்களை மொழிச்செயல்பாடு ( linguistic Performance) என்றும் கூறுவார்.
எனவே சாம்ஸ்கியின் நோக்கம் மேற்குறிப்பிட்ட மொழியறிவுத்திறனைக் கண்டறிவதேயாகும். சாம்ஸ்கிக்கு முன்னர் அமைப்பு மொழியியலாளர் நாம் வெளிப்படுத்துகிற புற வாக்கியங்கள், தொடர்கள் ஆகியவற்றைப் பற்றிய ( Performance)ஆய்வையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். சாம்ஸ்கியின் அணுகுமுறையை cognitive approach என்றும் அமைப்பு மொழியியலாளர் மேற்கொள்கிற முறையை taxonomic approachஎன்றும் அழைப்பார்கள்.
அமைப்புமொழியியலாளர்களின் ஆய்வானது உண்மையில் அறிவியல் ஆய்வு இல்லை என்று சாம்ஸ்கி கருதுகிறார். எடுத்துக்காட்டாக, ஒருவர் பல இடங்களுக்குச் சென்று பல வகையான கற்களைச் சேகரிக்கிறார் என்று கொள்வோம். அளவில் வேறுபாடுடைய பெரிய கல், சிறிய கல், நிறத்தில் வேறுபடுகிற சிவப்புக்கல், பச்சைக்கல் என்று ஏராளமான கற்களைச் சேகரித்து,இவையெல்லாம் பெரிய கல், இவையெல்லாம் சிறிய கல்,இவையெல்லாம் சிவப்புக்கல், இவையெல்லாம் பச்சைக்கல் என்று வகைப்படுத்துகிறார் என்று கொள்வோம். இந்த ஆய்வு ஒருவகையான கற்களைப்பற்றிய வகைப்பாடுதான். சேகரித்த கற்கள் எல்லாம் facts என்று கொண்டால், இந்த ஆய்வின் முடிவு வெறும்reduction of facts. அவ்வளவுதான். உண்மையான அறிவியல் ஆய்வின் நோக்கமானது கற்களின் வடிவம் அல்லது உருவம், நிறம் ஆகியவற்றிற்கு அடிப்படைஎன்ன, அந்தக் கற்களின் வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன , அந்தக் கற்கள் எவ்வாறு உருவாகின என்பதைக் கண்டறிவதாக இருக்கவேண்டும்.
அதுபோன்று, ஒருவர் கள ஆய்வுக்குச் சென்று, ஒரு மொழியில் பயன்படுத்தப்பட்ட பல லட்சம் வாக்கியங்களைத் தரவுகளாகச் சேகரித்து, பின்னர் அந்த வாக்கியங்களை, எளிய வாக்கியம்,கூட்டுவாக்கியம், கலவை வாக்கியம், செய்வினை வாக்கியம்,செயப்பாட்டுவாக்கியம், வினா வாக்கியம் என்று பல வகைகளாக வகைப்படுத்தி ஆய்வு செய்கிறார் என்று கொள்வோம். இந்த வகை ஆய்வு, மேற்கூறப்பட்ட ஒருவகையான reduction of factsஆய்வாகத்தான் அமையும். இந்தக் கணக்கிலடங்கா ( infinite)லட்சக்கணக்கான பலவகை வாக்கியங்களையும் மனித மூளை எவ்வாறு உருவாக்குகிறது, அதற்கான உள்ளார்ந்த மொழிவிதிகள் எவை போன்ற வினாக்களுக்கு விடை காண்பதே மொழியியல் என்ற அறிவியலின் அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும்.
மேலும் கள ஆய்வாளர் (field linguist) ஒரு மொழியின் ஆயிரக்கணக்கான வாக்கியங்களைத் தரவாகச் ( Corpus) சேகரித்து இருந்தாலும், அத்தரவில் இல்லாதவேறு ஒரு வாக்கியத்தை அம்மொழி பேசும் ஒருவர் உருவாக்கலாம். ஆனால் எந்த ஒரு வாக்கியமாக இருந்தாலும், அதை உருவாக்குவதற்கு மனித மூளையில் உள்ள குறிப்பிட்ட மொழியின் உள்ளார்ந்த விதிகள்,கணக்கில் அடங்கும் விதிகளேயாகும் ( finite rules) .
இவ்வாறு கூறுவதால்,அமைப்புமொழியியல் ஆய்வையே தவறு ,தேவையில்லை என்று கூறுவதாக நினைக்கவேண்டாம். அதற்கு வேறு சில பயன்பாடுகள் இருக்கலாம். ஆனால் மொழியியல் ஆய்வானது ஒரு வளர்ச்சியடைந்த அறிவியல் ஆய்வாக அமையவேண்டுமென்றால், மனித மூளைக்குள் அமைந்துள்ள குறிப்பிட்ட மொழியின் அறிவை ஆய்வுசெய்யவேண்டும் என்பதே சாம்ஸ்கியின் கருத்தாகும்.
அறிவியல் ஆய்வில் நாம் பார்க்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் ( fact observed) அதற்குப் பின்னால் இருக்கிற காரணத்தைக் கண்டறிவதே அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும். ' ஏன்' என்ற வினாவுக்கு விடை தேடுவதே நோக்கமாக இருக்கவேண்டும். பறவை பறக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தப் பறத்தலுக்கு அடிப்படையான ஏரோடேனமிக்ஸ் விதிகள் என்ன என்பதே அறிவியல் ஆய்வாகும். மரத்திலிருந்து பழம் தரையைநோக்கி விழுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்குக் காரணம் புவிஈர்ப்பு விதிகளே என்பதை மனிதகுல வரலாற்றில் சமீபத்திய நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டது. இந்த அறிவியல் ஆய்வுகளின் வெற்றியால்தான், இன்று நம்மால் விமானங்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கமுடிந்துள்ளது. சாம்ஸ்கியின் மொழியியல் ஆய்வும் இந்த அறிவியல் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (7) .....
தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஒருவர் ' நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவேண்டும்' என்ற ஒரு தொடரைக் கேட்டவுடன் ,அத்தொடர் தவறானது, பிழையானது என்று கூறிவிடுவார். இத்தொடரானது ' நான் இந்தப் புத்தகத்தை படித்து இருக்கிறேன்'அல்லது ' நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் ' என்று அமைந்திருக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறிவிடுவார்.
அதுபோன்று ஆங்கிலத்தில் " She loves me more than you" என்ற வாக்கியத்தில் பொருள் மயக்கம் உண்டு. இதன் தமிழாக்கத் தொடரான 'அவள் உன்னைவிட என்னை அதிகமாக நேசிக்கிறாள்'என்ற தொடரானது பொருள் மயக்கம் ( ambigous) உடையது என்பதைப் புரிந்துகொள்வார். (1) அவள் உன்னை நேசிப்பதைவிட என்னை அதிகமாக நேசிக்கிறாள் (2) உன்னைவிட அவள் என்னை அதிகமாக நேசிக்கிறாள். இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடம்தரும் என்பது ஒரு தமிழருக்குத் தெரியும்.
மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் சரியான முடிவை எடுப்பதற்குத் தேவையான மொழியறிவானது,( linguisitc knowledge)தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு ( native speaker of Tamil ) , அவருடைய மூளையில் - உள்மனதில் ( sub-conscious) -அமைந்துள்ளது. அந்த மொழியறிவு வெளிப்படையாகத் தெரிவதைவிட ( explicit) மறைமுகமாக ( tacit) மனதில் நீடிக்கிறது. இதைத்தான் சாம்ஸ்கி மொழியறிவுத்திறன் ( competence) என்று 1960-களில் அழைத்தார். இதுவே ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவருக்குப் ' பேசுவதற்கு- பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான மொழியறிவுத்திறன் ( the speaker-hearer's knowledge of his/her language)' என்று சாம்ஸ்கி கூறுகிறார்.
இந்த மொழியறிவுத்திறனைக்கொண்டு ஒருவர் வெளியே வாக்கியங்களை உருவாக்கும்போது, நாக்குப் பிறழ்வு, நினைவுமறதி,மதுவின் பாதிப்பு போன்ற புறக் காரணங்களால் ( external reasons) சில தவறுகள், பிழைகள் வாக்கியங்களில் வெளிப்படலாம். இவையெல்லாம் புற மொழிச்செயல்பாட்டுப் பிழைகளே ( performance errors) தவிர, அவரது மனதிற்குள் சரியான வாக்கியங்களுக்கான மொழியறிவுத்திறன் உள்ளது என்பதை மறுக்கவியலாது.
மேற்குறிப்பிட்ட புற மொழிச்செயல்பாட்டுப் பிழைகள் எல்லாம் உளவியல், நரம்புமொழியியல், சமூகமொழியியல் ஆகியவற்றிற்கான தரவுகளாக அமையும். இது மறுப்பதற்கில்லை. ஆனால் அவரது மனதிற்குள அமைந்திருக்கிற மொழியறிவுத்திறனே ( linguistic competence) சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டிற்கான ஆய்வுப் பொருளாகும். இந்த மொழியறிவே அந்த மொழியின் இலக்கணமாகும்( the particular grammar of a particular language) . புற மொழிச்செயல்பாடுகள் அந்த மொழியின் இலக்கணமாகாது.
ஒரு குறிப்பிட்டமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரின் மூளைக்குள் - உள்மனதில் - அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட மொழியறிவுத்திறனை - இலக்கணத்தை - அறிந்துகொள்வதே சாம்ஸ்கியின் நோக்கமாகும். அந்த மொழியறிவுத்திறனின் பண்புகள்,கூறுகள் ... அவற்றின் அமைப்பு ... அத்திறன் ... அந்த இலக்கணம் ... எவ்வாறு குழந்தையின் மனதிற்குள் உருவாகி, வளர்கிறது ... இவையே சாம்ஸ்கியின் மாற்றிலக்கணத்தின் ஆய்வு நோக்காகும்.
கண்ணால் நேரில் பார்க்க இயலாத, அல்லது எக்ஸ்ரே,ஸ்கேன்மூலம் படிம்பிடிக்க இயலாத .. இந்த உள்மனதில் அமைந்துள்ள ஒருவரின் தாய்மொழியின் இலக்கணத்தின் உருவாக்கத்தின் அடிப்படையையும், அதன் பண்புகளையும் அறிந்துகொள்வதே சாம்ஸ்கியின் மாற்றிலக்கணத்தின் நோக்கமாகும். நமது இயற்கையில் நாம் பார்க்கிற பல்வேறு புறநிகழ்வுகளுக்குப் பின்னர் அமைந்துள்ள இயற்கையின் விதிகளைப் ( பழம் மரத்திலிருந்து தரையை நோக்கிக் கீழே விழுவதற்கு அடிப்படையான புவியீர்ப்பு விதிகளைப்போன்று) பிற அறிவியல் துறைகள் ஆய்ந்து கண்டறிவதுபோல, நாம் பேசுகிற, கேட்டு உணர்கிற தாய்மொழியின் வாக்கியங்களுக்குப் பின்னர் அமைந்துள்ள உள்ளார்ந்த விதிகளைக் கண்டறியவே சாம்ஸ்கி முயல்கிறார். 1956 -இல் தொடங்கிய சாம்ஸ்கியின் இந்த ஆய்வு கடந்த 60 ஆண்டுகளாக மாற்றமடைந்தும் வளர்ச்சியடைந்தும் வருகிறது. 


சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (8) .....
அமைப்புமொழியியலாளர்கள் ( Structural linguists) மொழியாய்வில் பின்பற்றுகிற வகைப்படுத்தல் அணுகுமுறையிலிருந்து ( Taxonomic Approach) சாம்ஸ்கியும் பிற மாற்றிலக்கணத்தாரும் ( Generative linguisits)மாறுபடுகிறார்கள். சாம்ஸ்கி மொழியாய்வில் சிந்தனைத்திறன் அணுகுமுறையைப் ( Cognitive Approach) பின்பற்றுகிறார்.
இவரைப் பொறுத்தவரையில் மொழியியலாளர்களின் நோக்கமானது,ஒரு மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர் அம்மொழியைச் சரிவரப் பேசு ... எழுத ... புரிந்துகொள்ள .. தனது மூளைக்குள் .. மனதிற்குள் என்ன அறிவைக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டறிவதாகவே இருக்கவேண்டும். எவ்வாறு ஒரு கருத்தை வெளிப்படுத்த தொடர்களை உருவாக்கவேண்டும் என்ற அறிவு ... பொருள் மயக்கம் உடைய தொடர்களில் பொருள் மயக்கம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவு ... இவற்றை ஒருவர் தனது மூளைக்குள் மொழிப்புலத்தில் ( Language Faculty)பெற்றிருக்கிறார்.
ஆனால் அந்த அறிவு அவருடைய மனதிற்குள் புதைந்துள்ளது (Internalized - tacit .. not explicit) .வெளிப்படையாக அவருக்கு அந்த அறிவைப்பற்றி விளக்கத் தெரியாது. ஆனால் ஒரு தொடர் சரியா,தவறா, பொருள் மயக்கம் உள்ளதா என்பதற்கு விடை அளிக்கமுடியும். இதையே சாம்ஸ்கி 1960-களில் மொழியறிவுத்திறன் ( Linguisitc Competence) என்று கூறியிருந்தார். பின்னர் அத்திறனை உள்மொழி ( Internalized Language : I-Language) என்றும் வெளியே நாம் பேசுகிற , எழுதுகிற , கேட்கிற தொடர்களை புறமொழி ( Externalized Language : E-Language) என்றும் வரையறுத்தார்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரின் மனதிற்குள் இருக்கிற தமிழ்சார்ந்த உள்மொழியே தமிழின் இலக்கணம் ( Tamil Grammar) என்று அவர் கூறுகிறார். இந்த உள்மொழிபற்றிய கோட்பாடே அம்மொழியின் இலக்கணம் ( theory of I-Language of Tamil)என்பது சாம்ஸ்கியின் கொள்கை. இந்த உள்மொழியானது அம்மொழியைப் பேசும் ஒருவரின் மூளைக்குள் - மனதிற்குள் - இருக்கிற மொழிப்புலத்தின் ஒரு குறிப்பிட்ட மனநிலையே ( a particular mental state) என்பது அவர் கொள்கை.
ஒவ்வொரு மொழிக்கும் உரிய இந்த உள்மொழிகளை உருவாக்க,மனித மூளைக்குள் ஒரு பொதுமை இலக்கணம் ( Universal Grammar - UG) உள்ளது. இதுவே ஒவ்வொருவரும் தனது தாய்மொழிக்கான குறிப்பிட்ட உள்மொழியை உருவாக்க உதவுகிறது. இந்தப் பொதுமை இலக்கணமானது வேறுபட்ட பல்வேறு குறிப்பிட்ட மொழிகளின் பண்புகளைத் தீர்மானிக்கிறது. எனவே இந்த பொதுமை இலக்கணத்தைப்பற்றிய கோட்பாடானது ( theory of UG) குறிப்பிட்ட மொழிகளின் உள்மொழிகளின் பண்புகள் என்னவாக இருக்கவேண்டும் ... இருக்கமுடியும் என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்தப் பொதுமை இலக்கணமானது மனித மூளைக்கே உரிய ஒரு அறிவாகும் ( human species specific) . பிற விலங்கினங்களுக்கு இது கிடையாது. குழந்தை பிறக்கும்போதே தனது மூளையில் இந்த பொதுமை இலக்கணத்தோடுதான் பிறக்கிறது. இந்த பொதுமை இலக்கணம் குழந்தை தான் பிறந்தபிறகு கற்றுக்கொள்கிற ... பெற்றுக்கொள்கிற ஒன்று இல்லை. இது மனித உயிருக்கே உரிய உயிரியல் அடிப்படையிலானது ( biological endowment) . மனித மரபணுக்களே இதைத் தீர்மானிக்கிறது ( genetically determined one) .
இந்தப் பொதுமை இலக்கணத்தின் உதவியோடு, குழந்தையைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகிற தொடர்களின் தரவுகளைக்கொண்டு (Primary linguistic data - PLD) குழந்தையின் மூளையானது அதனுடைய தாய்மொழிக்கே உரிய குறிப்பிட்ட உள்மொழியை உருவாக்கிக்கொள்கிறது. அதுவும் 30 மாதங்களுக்குள் உருவாக்கிக்கொள்கிறது. குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை( not learned) . பெற்றுக்கொள்கிறது ( comes to it) . குழந்தையின் மூளைக்குள் அதனுடைய தாய்மொழியின் உள்மொழியானது குழந்தையின் மூளையின் மொழிப்புலத்தில் வளர்கிறது. குழந்தைக்கு தவழுதல், நடை போன்ற திறன்கள் எவ்வாறு குறிப்பிட்ட காலகட்டங்களில் வளர்கிறதோ,தோன்றுகிறதோ, அதுபோன்றே தாய்மொழித்திறனும் வளர்கிறது (Language Growth) ... தோன்றுகிறது.

எனவேதான் குழந்தைக்கு தவழுதல் வந்துவிட்டதா என்று கேட்பதுபோல, பேச்சு ' வந்துவிட்டதா' என்று கேட்கிறோம். பேச்சைக் கற்றுக்கொண்டதா என்று நாம் கேட்பதில்லை. பல்வேறு குறிப்பிட்ட மொழிகளின் உள்மொழிகளை உருவாக்குகிற மனிதமூளையின் பொதுமை இலக்கணத்தைப்பற்றிய ஆய்வே சாம்ஸ்கியின் ... அவருடைய மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களின் ... மொழியாய்வின் நோக்கமாகும்.


 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (9) .....
சாம்ஸ்கியின் இறுதி நோக்கம்ஒரு பொதுமை இலக்கணத்தை (Universal Grammar - UG) உருவாக்குவதே ஆகும். இந்தப் பொதுமை இலக்கணத்தை உருவாக்கபல்வேறு மொழிகளின் உள்மொழிகளின் ( I-Languages) பண்புகளை - கூறுகளை- அறிவதும் பொதுமைப்படுத்துவதும் தேவைப்படுகிறது. அதன்மூலம் மனிதமொழிகளின் அனைத்துக்குமான பொதுமை இலக்கணத்தைக் கண்டறியவேண்டும். இந்தப் பொதுமை இலக்கணமானது அனைத்து மனிதமொழிகளின் உள்மொழிகளைப்பற்றிய ஒரு கோட்பாடாக - கொள்கையாக ( a theory of all human I-languages) அமையும்.
அவ்வாறு ஒரு பொதுமை இலக்கணம் அமையவேண்டும் என்றால் ... அது விடையளிக்கவேண்டிய ஒரு வினா உள்ளது. மனித உள்மொழிகளின் இலக்கணங்களின் தீர்மானமான - அடிப்படைப் பண்புகள் ( defining characteristics) என்னஒரு பொதுமை இலக்கணமானது ஒரு சில தகுதிகளைப் பெற்றிருந்தால்தான் அது பொதுமை இலக்கணமாக அமையமுடியும். குறிப்பாக நான்கு தகுதிகளைச் ( adequacies) சாம்ஸ்கி முன்வைக்கிறார்.
ஒன்று ... அனைத்து மனிதமொழிகளின் உள்மொழிகளையும் விவரிக்கக்கூடிய கருவிகளை ( descriptively adequacy) அது தரவேண்டும். ஒரு சில மொழிகளின் உள்மொழிகளைத்தான் அது விவரிக்கும். வேறுசில மொழிகளின் உள்மொழிகளை அது விவரிக்காது என்றால் அந்தப் பொதுமை இலக்கணத்தால் பயனில்லை. இவ்வாறு அனைத்துமொழிகளின் உள்மொழிகளையும் விவரிக்கும் பண்பே பொதுமைப் பண்பு ( Universality ) என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு ... அனைத்து மனிதமொழிகளின் உள்மொழிகளின் பண்புகளை - கூறுகளைப் பொதுமை இலக்கணம் வெறுமனே பட்டியலிட்டுக் கூறினால்மட்டும் போதாது. உள்மொழிகள் ஏன் அந்தப் பண்புகளை - கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை விளக்கவேண்டும். இதுவே விளக்கப்பண்புத்தகுதி ( explanatory adequacy) என்று அழைக்கப்படுகிறது.
மூன்று ... பொதுமை இலக்கணமானது மனிதமொழிகளின் உள்மொழிகள் எவ்வாறு பிற செயற்கைமொழிகளின் ( கணிதமொழிகள்கணினிமொழிகள் போன்றவை) பண்புகளிலிருந்தும்,பிற உயிரினங்களின் ( தேனீ போன்றவற்றின்) கருத்துப்புலப்பாட்டு முறைகளிலிருந்தும் வேறுபட்டவை என்பதை விளக்கவேண்டும். மனிதமொழி அல்லாத இந்தப் பிறமொழிகளின் பண்புகளையும் விளக்கும்வகையில் அதன் திறமை எல்லையற்று இருக்கக்கூடாது. மனிதமொழிகளின் உள்மொழிகளைமட்டுமே விளக்கக்கூடியதாக (constrained) அது இருக்கவேண்டும்.
நான்கு ... பொதுமை இலக்கணமானது மிக எளிமையாகவும் மிகக்குறுகியசிறியதாகவும் இருக்கவேண்டும். சாம்ஸ்கி 1956-இலிருந்து 1980-கள்வரை முன்வைத்த மாற்றிலக்கண வடிவங்களில் பல்வேறு விதிகள் "rules" ( தொடரமைப்புவிதிகள்,மாற்றிலக்கணவிதிகள் போன்றவை) அமைப்புகள் "structures" (புதைவடிவம்புறவடிவம் போன்றவை) இடம்பெற்றிருந்தன. ஆனால் சாம்ஸ்கி தனது தொடர்ந்த ஆய்வில் அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டுபொதுமை இலக்கணத்திற்கான ஒரு மிகச்சிறிய ,குறுகிய கோட்பாட்டை ( Minimalist Program for Linguisitc Theory - Minimalism) ) முன்வைத்தார். இந்த வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியின் உள்மொழியில் சொற்களஞ்சியம் ( Lexicon) இருக்கும். அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் சில குறிப்பிட்ட பண்புகளைக் ( linguisitc properties) கொண்டிருக்கும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்த முனையும்போதுஅதற்குத் தேவையான சொற்களை அவற்றின் பண்புகளோடு தேர்ந்தெடுப்பார். சொற்களின் அந்தப் பண்புகள் தொடரமைப்புகளாக ( through syntactic computations)உருவாகும். இந்தத் தொடரமைப்பானது மொழிப்புலத்தின் ( language faculty) வேறு இரண்டு உறுப்புகளான பொருண்மை உறுப்புக்கும் (Semantic component) பேச்சொலி உறுப்புக்கும் ( Phonetic component - PF)உள்ளீடாக ( input) அமையும்.
பொருண்மை உறுப்பானது உள்ளீடாகத் தான் எடுத்துக்கொண்ட குறிப்பிட்ட தொடரமைப்பை அதற்குரிய பொருண்மையை ( meaning)வெளிப்படுத்தும் ஒரு அமைப்புடன் ( semantic representation)இணைக்கும்( mapping). அதுபோன்று பேச்சொலி உறுப்பானது தான் எடுத்துக்கொண்ட தொடரமைப்பை அதற்குரிய பேச்சொலிகளை(pronunciation) உருவாக்குவதற்குரிய ஒரு அமைப்புடன் ( Phonetic Form representation) இணைக்கும்.
அதன்பிறகு பொருண்மை அமைப்பானது மூளையின் / மனதின் சிந்தனைப்புலத்திற்கு ( Thought Systems) அனுப்பப்படும். சிந்தனைப்புலமே குறிப்பிட்ட தொடரின் பொருண்மையை முழுமையாக வெளிப்படுத்தும். சிந்தனைப் புலத்திற்குப் புரிகிறவகையில் ( legible) அதற்கு அனுப்பப்படுகிற பொருண்மை அமைப்பு இருக்கவேண்டும் என்பது இங்கு முக்கியம்.
அதுபோன்று பேச்சொலி அமைப்பானது பேச்சு உருவாக்கப்புலத்திற்கு ( Speech Systems) அனுப்பப்படும். அப்புலமே குறிப்பிட்ட தொடரைப் பேச்சாக மாற்றி வெளிப்படுத்தும். பேச்சு உருவாக்கப்புலத்திற்கு புரிகிறவகையில் ( legible) அதற்கு அனுப்பப்படுகிற பேச்சொலி அமைப்பு இருக்கவேண்டும் என்பது இங்கு முக்கியம்.
மேற்கூறிய மொழியறிவுத்திறனுக்கு ( linguistic knowldge)அடிப்படையாக அமைந்துள்ள நரம்பு இயங்கியல் அமைப்பானது (neurophysiological mechanism) குழந்தைகள் வியக்கத்தக்க ஒரு மிகக்குறுகிய காலத்தில் ( a remarkable short period) தமது தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. எனவே ஒரு சரியான பொதுமை இலக்கணத்தால் உருவாக்கப்படுகிற ஒரு மொழியின் உள்மொழியானது குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இதையே எளிமையாகக் கற்றுக்கொள்ளும் உள்மொழியின் தகுதி ( learnability)என்று சாம்ஸ்கி அழைக்கிறார். இதுவே சாம்ஸ்கி தற்போது குறுகிய,எளிய பொதுமை இலக்கணம் ( Minimalism) என்ற ஒன்றை முன்வைப்பதற்குக் காரணமாகும்.

இதைப் படிக்கும் மொழியியல் ஆர்வலர்களேகண்ணுக்குத்தெரியாத,ஆனால் உண்மையில் மனதிற்குள் ... மூளைக்குள் இருந்துகொண்டு,நமது மொழிச்செயல்பாட்டை இயக்கிக்கொண்டிருக்கிற ஒரு மொழியறிவுத்திறனுக்கு ஒரு வடிவம் கொடுக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ள சாம்ஸ்கியின் கோட்பாட்டை முழுமையாகவும் நன்றாகவும் புரிந்துகொள்ளஇதுதொடர்பான நூல்களையும் மேலும் படிக்கவும். தொடர்ந்து நானும் எழுதுகிறேன்.


 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (10) .....
மொழிப்புலமும் ( Language Faculty) குழந்தையிடம் மொழி தோன்றுதல் அல்லது வளர்ச்சியடைதலும் ( Language Growth) ....
பொதுமை இலக்கணமானது ( UG) குழந்தை மிக எளிதாகத் தனது தாய்மொழியைப் பெற்றுக்கொள்ளுவதற்கு ஏற்ப மிகச் சிறியதாக அமைந்துள்ளது ( learnability) என்று முன்னர் கூறியுள்ளேன். பொதுமை இலக்கணத்தின் அந்தப் பண்பானது குழந்தை தனது தாய்மொழியை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்வதற்கான ஒரு கோட்பாட்டை ( a theory of language acquisition)உருவாக்க நமக்கு உதவுகிறது. ஆங்கிலமொழிக் குழந்தையின் ஆய்வின் அடிப்படையில் தமிழுக்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே அளிக்கப்படுகிறது. (தமிழ்க் குழந்தையின் மொழி வளர்ச்சி பற்றிய ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை.)
குழந்தை தனது 12 -ஆவது மாதத்தில் 'அம்மா' 'அப்பாதாத்தா' 'மாமா'போன்ற சில தனிச்சொற்களை உருவாக்கும் திறமைப் பெறுகிறது. அடுத்த மாதங்களில் குழந்தையிடம் அதனது தாய்மொழியின் இலக்கணம் வளர்வதில் வெளிப்படையான வளர்ச்சி எதுவும் தெரிவதில்லை. ஆனால் மாதம் ஒன்றுக்குக் குறைந்தது சொற்கள் என்ற அடிப்படையில் சொற்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கவகையில் ஏற்படுகிறது. தனது 18 -ஆவது மாதத்தில் ஏறத்தாழ 30 சொற்களை அது உருவாக்குகிறது.
18-ஆவது மாதத்தில் குழந்தையிடம் அதனது மொழியின் இலக்கணம் வளர்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். குழந்தைக்குக் குழந்தை இதில் சற்று வேறுபடலாம். பெயர்ச்சொற்களோடு வேற்றுமை விகுதிகளைச் சேர்ப்பது ('அம்மாவெ' ' 'அப்பா(வு)க்கு' , ' வீட்டுலெபோன்ற விகுதியேற்ற சொற்கள்)வினைச்சொற்களோடு காலவிகுதிகளைச் சேர்ப்பது ( 'வந்தே(ன்)' ' குடிச்சே(ன்)', ' போச்சுபோன்ற விகுதியேற்ற வினைச்சொற்கள்) ஆகிய வளர்ச்சி வெளிப்படும். மேலும் இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து சிறிய தொடர்களை ( 'அம்மா வந்தா(ள்)' ' எனக்கு அது வேணும்' ' நான் வீட்டுக்கு போணும்'போன்றவை) ) உருவாக்கும் திறமையையும் பெறும். இதைத் தொடர்ந்து குழந்தையிடம் இலக்கண வளர்ச்சி ( grammar development)மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்கிறது. ஏறத்தாழ 30 ஆவது மாதத்தில் பெரும்பான்மையான இலக்கணவிகுதிகளைப் பயன்படுத்தவும் மிகவும் அடிப்படையான இலக்கண அமைப்புகளைப் பயன்படுத்தவும் தேவையான மொழியறிவை குழந்தை பெற்றுக்கொள்கிறது.
இங்குக் குழந்தைக்குப் மொழி வருதல்பற்றிய கோட்பாடானது ஒரு முக்கியமான வினாவுக்கு விடையளிக்கவேண்டியுள்ளது. இலக்கண வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்ற 18 மாதங்கள் ஏன் குழந்தைக்குத் தேவைப்படுகிறதுதிடீரென்று 18 ஆவது மாதத்திலிருந்து இலக்கண வளர்ச்சி குறிப்பிடத்தக்கவகையில் ஏன் தெரிகிறதுஅடுத்த 12மாதங்களில் ( அதாவது குழந்தையின் 30 ஆவது மாதத்தில்) மிகவும் நாம் வியக்கத்தக்க வகையில் இலக்கண வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?இந்த ஒழுங்கும் ( uniformity) இலக்கண வளர்ச்சிக்கான அறிகுறி தோன்றியவுடன் அதில் தோன்றும் வேகமும் ( rapidity) ஏன் காணப்படுகின்றனஇதற்கெல்லாம் குழந்தையின் மொழி வளர்ச்சிக் கோட்பாடு ( theory of language acquisition) விளக்கமளிக்கவேண்டும்.
சாம்ஸ்கியின் மொழிக்கொள்கையின்படிஇலக்கண வளர்ச்சியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கும் ( uniformity) வேகமும் ( rapidity)இருப்பதற்குக் காரணம்இந்த மொழி .. இலக்கண வளர்ச்சியானது குழந்தைக்கு உயிரியல் அடிப்படையில் மூளைக்குள் / மனதிற்குள் அளிக்கப்பட்டுள்ள அல்லது நிலவுகிற மொழிப்புலமேயாகும் (biologically endowed innate Language Faculty ). கணினி நிரலாக்கத்தோடு (Computer program) ஒப்பிட்டுக் கூறினால்குழந்தையின் மூளைக்குள்/ மனதிற்குள் இயற்கையாக அளிக்கப்பட்டுள்ள மொழிவளர்ச்சிக்கான ஒரு நிரலேயாகும் ( language acquisition program).
இந்த மொழிவளர்ச்சிக்கான நிரலானது குழந்தைக்கு மரபணு அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள ( genetically given) ஒரு நிரலாக்க வழிமுறையாகும் (algorithm). இந்த வழிமுறையானது குழந்தையானது தனக்குக் கிடைக்கிற மொழி அனுபவத்திலிருந்து ( linguisitc experience)தனது மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ள (construction of grammar) உதவுகிறது. குழந்தையானது தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்துகிற மொழித் தொடர்களைக் கேட்டறிகிறது. இதுவே குழந்தைக்குக் கிடைக்கிற மொழி அனுபவமாகும். இந்த மொழி அனுபவமே குழந்தையின் மூளையில் அமைந்துள்ள மொழிப்புலத்திற்கு உள்ளீடாகக் கிடைக்கிறது. குழந்தையானது தனக்குக் கிடைத்த உள்ளீடுகளை ஆய்ந்துதனது மொழிக்கான ஒரு இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ள மூளையில் இயற்கையாக அமைந்துள்ள மொழிப்புலம் அதற்கு வழிமுறையை அளித்து உதவுகிறது.
எனவே குழந்தையின் மொழி அனுபவமானது மூளையில் உள்ள மொழிப்புலத்திற்கு உள்ளீடாகச் செல்கிறது. அதன்பிறகு மொழிப்புலத்தின் வெளியீடாகக் குழந்தையின் மொழிக்கான இலக்கணம் வெளிவருகிறது. குழந்தையின் மொழிவளர்ச்சியானது மூளைக்குள் உயிரியல் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள மொழிப்புலத்தால் தீர்மானிக்கப்படுகிறது ( biologically given language faculty) என்ற இந்தக் கோட்பாடே Innateness Hypothesis என்று அழைக்கப்படுகிறது.


மொழி அனுபவம் ---மொழிப்புலம் ---மொழி இலக்கணம்
Experience of L ----> Language Faculty ---> Grammar of L.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (11) .....
குழந்தைக்குத் தாய்மொழி கைவரப்பெறுவதற்கு ( Language Growth)அதன் மூளையில் / மனத்தில் உயிரியல் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள மொழிப்புலமே காரணம் ( a biological endowment)என்று சாம்ஸ்கி கூறுவதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அவரைப்பொறுத்தவரையில் இயற்கைமொழியைப் பேசவும் பெறவும் தேவையான திறனானது ( ability) மனித உயிரினத்திற்கே உரிய தனித்திறமையாகும் (Species-specific) . மனித மொழிகளின் தன்மையைத் தீர்மானிக்கும் மிகவும் ஆழமான அதேவேளையில் கட்டுப்பாட்டுக்குள் அமைந்த விதிகள் அல்லது கொள்கைகள் ( very eep and restrictive principles that determine the nature of human language) உள்ளன. அவை மனித மனத்திற்கே உரிய தனித்தன்மையில் ( unique to humans and the nature of human mind) வேரூன்றியுள்ளது.
இயற்கைமொழியைப் பெற்றுக்கொள்ளும் திறனானது எல்லா மனிதர்களுக்கும் உள்ள ஒரு பொதுத் திறனாகும். இத்திறன் ஒருவருடைய பொது அறிவைச் சார்ந்தது இல்லை ( independently of their human intelligence) . மிகக்குறைந்த அறிவுத்திறனுடையவர்கள்கூட ( சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் - at pathological levels) )மொழியைப் பெற்றிருப்பதில் திறனுடையவர்களாகயிருப்பார்கள். அவர்களைவிடச் சில குறிப்பிட்ட செயல்களில் அறிவுக்கூர்மையுடைய ஒரு குரங்குக்கு இந்த மொழித்திறன் கிடையாது என்று சாம்ஸ்கி கூறுகிறார்.
மேலும் ஒருமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட வெவ்வேறு நபர்களுக்கிடையே தாய்மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்வதில் ஒரே சீரமைப்பு ( apparent uniformity )காணப்படுகிறது அவர்களது மொழிச்சூழல் வேறுபட்டிருந்தாலும் பிரச்சினையில்லை.இதற்குக் காரணம்இந்த இலக்கணத்தை உருவாக்குவதற்கு அவர்களுக்கு மரபணு அடிப்படையிலான வழிகாட்டுதல் ( genetic guidance) உள்ளது.
அதுபோன்று அவர்கள் தாய்மொழியைப் பெற்றுக்கொள்கிற வேகமும்கூட இலக்கணத்தை உருவாக்கிக்கொள்வதில் மரபணு அடிப்படையிலான வழிகாட்டுதல் அவர்களுக்கு இருக்கிறது.
மேற்கூறிய மரபணு அடிப்படையிலான வழிகாட்டுதல் இல்லையென்றால் குழந்தையானது குறுகிய காலத்தில் ( a short period) , குறைந்த மொழியனுபவத்தில் ( a little linguisitc experience)தாய்மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது.
மேலும் குழந்தைக்குக் கிடைக்கிற மொழியனுபவம் பொதுவாகச் சரியான ஒன்றாகசீரான ஒன்றாக இருக்கமுடியாது. சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சில் பல தவறுகள் இருக்கலாம். தடுமாற்றம் இருக்கலாம். தவறான தொடக்கம்தொடர்ச்சிகள் பேச்சில் இருக்கலாம் ( degenerate ... imperfect) . இருந்தாலும் குழந்தையானது அவற்றிலிருந்து சரியான தொடர்களுக்கான இலக்கண அறிவை உருவாக்கிக்கொள்கிறது.
இதுபற்றிச் சாம்ஸ்கி கூறும்போது தத்துவவியலாளர் டெஸ்கார்ட் கூறுகிற ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். ஒருவர் தன் முன்னால் வரையப்படுகிற ஒரு ஒழுங்கற்ற உருவத்தைப் பார்க்கும்போதுஅதன்டைய சில பண்புகளின் அடிப்படையில் அது முக்கோணம் என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இது எப்படி அவருக்குச் சாத்தியம்டெஸ்கார்ட்டின் கருத்துப்படிஅந்தப் பார்வையாளருக்கு முன்னால் இருக்கிற அந்த வரையப்பட்ட தரவுக்கும்அதை அவர் மனம் பார்க்கிற கோணத்திற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. இருப்பினும் அவரது மனமானது அந்த வரையப்பட்ட வடிவத்தைப் பார்க்கும்போதுமனத்தில் முக்கோணம் என்ற வடிவத்தை உருவாக்கிக்கொண்டு பார்க்கிறது. இது மனித மனத்திற்கே உள்ள ஒரு பண்பாகும். வடிவங்களை ( அவை எவ்வளவு ஒழுங்கற்று காணப்பட்டாலும்) சில குறிப்பிட்ட ஜியாமெட்ரிக் பண்புகளோடு பார்ப்பதற்கு மனித மரபணுப் பண்பு வழிவகுக்கிறது. அதுபோன்றே ஒழுங்கற்ற மொழித்தொடர்களைக் கேட்டாலும் குழந்தையின் உள்ளார்ந்த மொழிப்புலமானது அவற்றில் சில இலக்கணக்கூறுகள் இருப்பதாகக்கொண்டு ஆய்வு செய்யும் மரபணுப் பண்பைப் ( genetic property) பெற்றிருக்கிறது.
மேலும் குழந்தையின் மொழிவளர்ச்சியானது முழுக்க முழுக்க உள்மனம் ( sub-conscious) தொடர்புடையது ... அனிச்சைச்செயலாக (involuntary activity) அது நடைபெறுகிறது. குழந்தையானது ஒரு குறிப்பிட்ட விளையாட்டை விளையாடவேண்டுமா வேண்டாமா என்பதைப்பற்றித் தானே முடிவெடுக்கலாம். ஆனால் தனது தாய்மொழியைப் பெற்றுக்கொளவதில் வேண்டுமா வேண்டாமா என்பதைச் சிந்தித்து முடிவெடுக்கமுடியாது. குழந்தையின் மொழி வளர்ச்சியில் நாம் தனிக்கவனம் எடுக்கவோ கற்றுக்கொடுக்கவோ தேவையில்லை. அதாவது குழந்தையானது தனது தாய்மொழியைப் பெற்றுக்கொள்ள எதையும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அது தனக்குக் கை அல்லது கால் வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றிக் கற்றுக்கொள்ளாததுபோலவே இதுவும் என்று சாம்ஸ்கி கூறுகிறார்.

 

குழந்தையின் மொழிவளர்ச்சிபற்றிய ஆய்வில் " critical period" என்ற ஒன்று காலகட்டம் மொழிவளர்ச்சியில் உள்ளது என்று கூறப்படுகிறது. குழந்தையானது தனது குழந்தைப்பருவத்தைத் தாண்டுவதற்குமுன்பு (before puberty) , மொழியைப் பெற்றுக்கொள்ளும்போதுஅதனுடைய மொழியில் இயற்கையான வளர்ச்சியைப் பார்க்கலாம். அவ்வாறு இல்லாமல், 9 அல்லது 10வயதிற்குப்பிறகு அது முதல்மொழி அல்லது இரண்டாம் மொழியைப் பெற முயற்சிக்கும்போதுஅந்த இயற்கையான மொழிவளர்ச்சி காணப்படாது. ஜெனிஇ ( Genie) என்ற ஒரு குழந்தை13 வயதுவரை பேச்சுச்சூழல் கிடைக்காமல் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு அது விடுவிக்கப்பட்டு,அதற்குத் தீவிரமான மொழிப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் அக்குழந்தையால் அதிகமான சொற்களைக் கற்றுக்கொள்ளமுடிந்ததேதவிரதொடரியல் இலக்கணத் திறன் வளரவில்லை. எனவே தொடரியல் அறிவைப் பெறும் திறனானது குழந்தையின் உள்ளார்ந்த மொழிவளர்ச்சிப்பொறி அல்லது ஒரு நிரலால் தீர்மானிக்கப்படுகிறது ( determined by an innate 'language acquisition programme' ). ஆனால் குழந்தை இயற்கையான மொழிவளர்ச்சிக்கான பருவத்தைத் தாண்டிவிட்டால்அந்தப் பொறியின் சுவிட்சு அணைக்கப்பட்டுவிடுகிறது என்பதையே இது காட்டுகிறது.


 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (12) ....
சாம்ஸ்கியின் கோட்பாட்டின்படி குழந்தையின் மூளையில் - மனத்தில் - மொழிப்புலன் ஒன்று உயிரியல் அடிப்படையில் பிறக்கும்போதே நிலவுகிறது என்ற பார்த்தோம். அப்படியென்றால்,அந்த மொழிப்புலத்தின் தன்மை என்னபண்பு என்னஇந்த நேரத்தில் ஒரு செய்தி மிக முக்கியமானது. பிறக்கின்ற ஒரு குழந்தைஇந்த மொழிப்புலத்தின் உதவியோடு எந்த ஒரு மனித இயற்கைமொழியையும் தனது தாய்மொழியாகக் பெற்றுக் கொள்ளமுடியும். தமிழகத்தில் பிறந்த ஒரு குழந்தையை அது பிறந்தவுடன் இங்கிலாந்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் தத்து எடுத்துலண்டனில் வளர்த்தார்கள் என்றால் அந்தக் குழந்தை ஆங்கிலத்தையே தாய்மொழியாகப் பெற்றுக்கொள்ளும்.
எனவே குழந்தையானது இந்த மொழிஅந்த மொழி என்றில்லாமல்,எந்த ஒரு மொழியையும் பெற்றுக்கொள்ள உதவும் ஒரு பொதுமை இலக்கணமானது அக்குழந்தையின் மொழிப்புலத்தில் ( Language Faculty) அமைந்துள்ளது. . குழந்தைக்குத் தேவை அந்தக் குறிப்பிட்ட மொழியின் முதன்மைத் தரவுகள் ( Primary Linguistic Data) -மொழியனுபவம். அதைக்கொண்டு குழந்தையானது ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளும் ( construction of grammar) . குழந்தையின் மொழிப்புலத்தில் உள்ள பொதுமை இலக்கணமானது அக்குறிப்பிட்ட மொழிக்குரிய இலக்கணத்தை உருவாக்கும் வழிமுறைகளை ( a procedure for developing a grammar of the Language) அந்தக் குழந்தைக்கு அளிக்கிறது.
இலக்கண மொழித்திறனானது ( grammatical competence) மரபணு அடிப்படையில் மனித மூளைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு மொழிப்புலத்தால் - அதில் உள்ள பொதுமை இலக்கணத்தால் - கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது வழிநடத்தப்படுகிறது ( controlled by a genetically endowed language faculty incorporating a theory of UG) என்பது உண்மையாகயிருந்தால் ... குழந்தையின் மொழித்திறனில் ஒரு சில பண்புகள் குழந்தை பிறந்தபிறகு பெறுகின்ற மொழியனுபவத்தைச் சாராமல் இருக்கவேண்டும். அந்த மொழிப்பண்புகள் அல்லது மொழியறிவானது பிறக்கும்போதே குழந்தை பெற்றிருக்கிற உயிரியல் அடிப்படையிலான மொழிபற்றிய மரபணு சார்ந்த அறிவின் ஒரு பகுதியாகவே ( genetic information about language)இருக்கவேண்டும். அந்த மொழிப்பண்புகள் - மொழியறிவு- குழந்தை தான் பிறந்தபிறகு கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று அல்ல. ஏனென்றால்அந்த அறிவானது குழந்தை மரபணுசார்ந்து பெற்றுக்கொள்கிற ( part of the child's genetic inheritance) ஒன்றாகும்.
மனிதமூளையிலுள்ள மொழிப்புலமானது மனிதர்கள் அனைவருக்கும் ஏறத்தாழ ஒன்றுபோல இருக்கிறது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால்அந்த மொழிப்புலத்தில் உள்ளார்ந்து இயற்கையாக நீடிக்கிற மொழியறிவு அல்லது மொழிப்பண்புகளும் உலகப் பொதுமையாகவே இருக்கமுடியும். எனவே மனித மூளையில் உள்ள மொழிப்புலத்தின் பண்புகளைக் கண்டறிய நாம் மேற்கொள்ளும் முயற்சியானது மனிதமொழிகளின் அடிப்படைப் பண்பையே தீர்மானிக்கிற பொதுமை இலக்கணத்தைக் கண்டறிவதாகவே அமையும்.
ஆங்கிலமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எடுத்துக்காட்டை (Radford , Andrews : Analysing English Sentences - A Minimalist Approach : 2009: 20-21" Cambridge) இங்குக் கொடுத்துஇதை விளக்க முயல்கிறேன்.
A: He had said someone would do something
B (1): He had said who would do what ? ( echo-question type)
B (2) : Who had he said would do what ? ( non-echo-question type)
இங்கே B(2) -இல் இரண்டு நகர்வுகள் ( இடப்பெயர்ச்சிகள்) நடைபெற்றுள்ளன. ஒன்று , B(1)- இல் "he" என்ற பிரதிப்பெயருக்கு அடுத்த இருந்த துணைவினையான "had" B(2)- இல் "he" -க்கு முன்னால் நகர்ந்துள்ளது ( auxilliary inversion) . அதுபோன்று "who" என்ற வினாப்பிரதிப்பெயர்வாக்கியத்தின் தொடக்கத்திற்கு நகர்ந்துள்ளது(Wh-movement) . இங்கு நாம் கவனாமகப் பார்க்கவேண்டிய ஒன்று, (B(1)வாக்கியத்தில் இரண்டு துணைவினைகள் உள்ளன. அதுபோன்று அதில் இரண்டு "wh-word" உள்ளன. ஆனால் முதல் துணைவினையான "had" முதல் 'wh-word" -ஆன "who" ஆகிய இரண்டு மட்டுமே வாக்கியத்தில் முன்னால் நகரும் பண்புடையன. "would "என்ற துணைவினையோ அல்லது " what" என்ற வினாப்பிரதிப்பெயரோ முன்னால் நகரமுடியாது. இடம் பெயரமுடியாது. ஏனென்றால் அவை வாக்கியத்தின் தொடக்கத்திற்கு ஒப்பீட்டளவில் தொலைவில் இருக்கின்றன.
" Who would he had said do what" அல்லது " What had he said who would do?"அல்லது " what had he said who would do?" அல்லது " What would he had said who do ? " என்ற வாக்கியங்கள் எல்லாம் தவறானவை.
மேற்கூறிய இரண்டிலும் செயல்படுகிற ஒரு பொதுமை இலக்கணவிதி என்னவென்றால்வாக்கியத்திற்கு மிக அண்மையில் உள்ள "wh-word" , "auxilliary " தான் வாக்கியத்தின் தொடக்கத்திற்கு நகரமுடியும். இரண்டுமே வெவ்வேறு சொற்களின் நகர்வாக இருந்தாலும்இரண்டுக்கும் ஒரே பொது விதி - " Grammatical operations are local" . இதை ஆங்கிலத்தில் " Locality Principle" என்று கூறுவார்கள். இந்த விதியானது பொதுமை இலக்கணத்தின் விதிகளில் ஒன்றாகும். இதுபோன்ற பொதுமை இலக்கணவிதிகளைக் குழந்தை தான் பிறந்தபிறகு கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. இதுபோன்ற விதிகள் எல்லாம் மரபணு அடிப்படையில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுமை இலக்கணவிதிகளாகும்.
இவ்வாறு பொதுவிதிகளால் ( Universal Principles) ஆகிய பொதுமை இலக்கணத்தைக்கொண்ட மொழிப்புலம் - உயிரியல் அடிப்படையில் ... மரபணு அடிப்படையில் .. குழந்தைக்கு அளிக்கப்பட்டிருப்பதால்தான்குழந்தையானது மிகக் குறுகிய காலத்தில் .... குறைந்த மொழியனுபவத்தில் .. . தனது தாய்மொழியைக் கற்றுக்கொள்ளமுடிகிறது. இதைத்தான் முன்னர் "Learnabilty" என்று பார்த்தோம். குழந்தைக்குத் தாய்மொழியைப் பெறுவதில் சுமை மிகக் குறைகிறது. தனது தாய்மொழிக்கான இலக்கணத்தை விரைவில் உருவாக்கிக்கொள்கிறது. அதாவது குழந்தை பிறக்கும்போதுஅதன் மூளையின் பொதுவிதிகளைக்கொண்ட மொழிப்புலம் இருக்கிறது அப்புலம் வெற்றிடமாக இல்லை. ஒன்றுமே எழுதப்படாத சிலேட்டாக ( tabula rasa) இல்லை.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (13) ....
குழந்தையின் மூளைக்குள் - மனத்திற்குள் - உள்ள மொழிப்புலத்தில் ( Langauge Faculty - LF) ஒரு பொதுமை இலக்கணம் (UG )இருக்கிறது ... அதன் உதவியுடன் குழந்தையானது குறிப்பிட்ட காலத்திற்குள் தனக்குக் கிடைக்கிற தாய் மொழியனுபவத்தைக்கொண்டுஅந்த மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்கிறது ( constructuion of particular grammar) என்று பார்த்தோம். ஆனால் உலகில் உள்ள எல்லா இயற்கைமொழிகளின் அனைத்துப் பண்புகளும் ( all grammatical aspects)பொதுமையானவை - ஒன்றானவை (simliar) என்று நினைத்துவிடக்கூடாது. அவ்வாறு இருந்தால்அனைத்து மொழிகளின் இலக்கணங்களும் ஒன்றாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் குழந்தையானது தனது தாய்மொழிக்கென்று இலக்கணத்தை உருவாக்கவோ அல்லது கற்கவோ தேவைப்படாது. வெறும் சொற்களை மட்டும் கற்றுக்கொண்டால்போதும். ஆனால் இது உண்மையல்ல.
இயற்கைமொழிகளின் பொதுயமைப்பைப் பொதுமையிலக்கணம் தீர்மானித்தாலும், , குறிப்பிட்ட மொழிக்கென்றே பல இலக்கணப்பண்புகள் - இலக்கணக்கூறுகள் உண்டு. பொதுமையிலக்கணத்தை உயிரியல் அடிப்படையில் பெற்றுள்ள குழந்தையானது தனது தாய்மொழித்திறனைப் பெற்றுக்கொள்ள,தனது மொழிக்கேயுரிய இலக்கண அறிவையும் பெற்றாகவேண்டும். எனவே குழந்தை தனது மொழிவளர்ச்சியில் தனது தாய்மொழியின் சொற்களைக் கற்றுக்கொள்வதோடுசில இலக்கணக்கூறுகளையும் கற்றுக்கொள்கிறது. இந்தக் குறிப்பிட்ட மொழிக்கென்றேயுள்ள இலக்கணம் கற்றல் என்றால் என்ன?
குழந்தையின் மனத்திற்குள் உயிரியல் அடிப்படையில் - மரபணு அடிப்படையில் - பெற்றுள்ள பொதுமை இலக்கணக்கூறுகளைக் கற்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அந்தப் பொதுமையிலக்கண விதிகளின் வெளிப்பாட்டில் எல்லைக்குட்பட்ட சில வேறுபாடுகளைக் ( parameters) கற்கவேண்டும். இந்த வேறுபாடுகள் மொழிக்கு மொழி வேறுபடும்.
எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் " I speak English" என்று கூறுவதைத் தமிழில் நான் ஆங்கிலம் பேசுகிறேன்என்றும் கூறலாம். அல்லது 'நான்என்ற பிரதிப்பெயரை விட்டுவிட்டு ஆங்கிலம் பேசுகிறேன்'என்றும் சொல்லலாம். அதற்குக் காரணம் தமிழில் வினைமுற்றில் எழுவாயின் திணைஎண்பால் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விகுதி ஏன்என்பது வெளிப்படுகிறது. ஆகவே அதிலிருந்தே எழுவாயை ( 'நான்') அறிந்துகொள்ளலாம். ஆனால் ஆங்கிலத்தில் வினைமுற்றில் எழுவாயின் திணை,எண்பால் பண்புகளை வெளிப்படுத்தும் விகுதி கிடையாது. எனவே " speak English" என்று கூறினால் எழுவாயானது 'நான்' 'நாங்கள்' 'நாம்நீ' 'நீங்கள்அவர்கள்' 'அவைஆகியவற்றில் ( பிரதிப்பெயர்கள்) எதுவாகவும் இருக்கலாம். எனவேதான் ஆங்கிலத்தில் எழுவாயை இவ்விடத்தில் விடமுடியாது. தமிழ் போன்ற மொழிகளை " null subject language" ( எழுவாய் தோன்றாதது) என்று கூறுவார்கள். ஆங்கிலம் போன்ற மொழிகளை "non-null-subject language" என்று கூறுவார்கள். உலகமொழிகள் அனைத்தையும் இந்த இலக்கணப் பண்பில் இரண்டாகப் பிரித்துவிடலாம். தோன்றும் எழுவாய் மொழிகள்தோன்றா எழுவாய்மொழிகள் என்று பிரித்துவிடலாம். ( தமிழில் சில வினைமுற்றுகள் எழுவாயில்லாமல் வர இயலாது. வரவேண்டும்', 'வரமுடியும்' 'வரலாம்போன்ற வினைமுற்றுகள் அவற்றிற்குரிய எழுவாயோடுதான் வரமுடியும். வரவேண்டும்என்று எழுவாயைவிட்டுவிட்டுக் கூறினால், 'யார்வரவேண்டும் என்ற பொருள்மயக்கம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் பொதுவாகத் தமிழ் வினைமுற்றுகள் தோன்றா எழுவாயோடு வரலாம்) . தோன்றா எழுவாய் இடத்தில் வருகிற பிரதிப்பெயரை " pro" "small pro" என்று அழைப்பார்கள். இதை ' null-subject parameter" என்று அழைப்பார்கள். ஒரு தொடருக்கு எழுவாய் இருக்கவேண்டும் என்பது பொதுமையிலக்கணத்தின் பொதுவிதி (universal principle) . ஆனால் அது தோன்று எழுவாயாக அமையவேண்டுமாஅல்லது தோன்றா எழுவாயாக அமையலாமா என்பது " parametric variation" . .
மற்றொரு வேறுபாடு ... தமிழில் ஒரு தொடரில் ( பெயர்த்தொடர்,வினைத்தொடர்வேற்றுமைத்தொடர் போன்றவை ) தலைமைச் சொல் ( Head word) தொடரின் இறுதியில் வரும். எ.கா. உயரமான பையன் என்ற பெயர்த்தொடரில் பையன்எனபதே தொடரின் தலைமைச்சொல். இது தொடரின் இறுதியில் வருகிறது. வேகமாக வந்தான் என்ற வினைத்தொடரில் வந்தான் என்ற தலைமைச்சொல் தொடரின் இறுதியில் வருகிறது. பையனுக்கு'என்ற வேற்றுமைத்தொடரில் ' -க்குஎன்ற வேற்றுமை விகுதியே வேற்றுமைத்தொடரின் தலைமையாகும். அது இறுதியில் வருகிறது. ஆங்கிலத்தில் தொடரின் தலைமைச்சொல் முதலில் வரும். " came slowly" -- இந்த வினைத்தொடரில் 'came" என்ற வினைச்சொல்லே தலைமைச்சொல். இது முதலில் வருகிறது. " the boy who came" என்ற தொடரில் " the boy" என்பதே தலைமைச் சொல். அது முதலில் வருகிறது. " to the school" என்பதில் " to" என்ற postpositionதலைமைச்சொல். அது முதலில் வருகிறது. எனவே தமிழ்போன்ற மொழிகள் தலைமை-இறுதி மொழி ( ( Head-last language) என்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் தலைமை-முதல் மொழி ( head-first language) என்றும் சாம்ஸ்கியின் இலக்கணக்கோட்பாட்டில் அழைக்கப்படும். உலகமொழிகளையெல்லாம் இந்த வேறுபாட்டில் இரண்டாக வகைப்படுத்திவிடலாம். இதை " Head-position parameter"என்று அழைப்பார்கள். மனிதமொழிகளில் ஒவ்வொரு தொடரிலும் தலைமைச்சொல் இருக்கவேண்டும் என்பது பொதுமையிலக்கணத்தின் பொதுவிதி. ஆனால் அது தொடரின் முதலில் அமையவேண்டுமா அல்லது இறுதியில் அமையவேண்டுமா என்பது Parametric variation.
இன்னொரு வேறுபாடு ... தமிழில் வினாச் சொற்கள் பொதுவாக வாக்கியத்தின் இறுதியில் வரும். எ.கா. அவர் பெயர் என்ன?' ' 'அந்தப் புத்தகம் எங்கே?' " அது எவ்வளவு?' ஆனால் ஆங்கிலத்தில் "What is his name?" " where is that book?" " How much is that?" " How did he come"போன்ற தொடர்களில் வினாச்சொற்களான " what", " where", "how much " " how" போன்றவை தொடரின் முதலில் வருகின்றன. இதை " Wh-parameter" எனு அழைப்பார்கள். உலகில் உள்ள மொழிகளை இதனடிப்படையில் இரண்டாக வகைப்படுத்திவிடலாம்.
மேற்கண்டவாறுபொதுமை இலக்கணத்தின் பொதுவிதிகளுக்கு ( (Universal Principles) ஒரு வரைமுறைக்குட்பட்ட வேறுபாடுகளின் (parameters) ஒரு குறிப்பிட்ட முக்கியமான பண்பானது ....'இது அல்லது அதுஎன்ற இரண்டு வகை ( binary) வேறுபாடுகள்தான். இந்த வேறுபாட்டுப்பண்பை உலகமொழிகளில் பார்க்கமுடிகிறது. இது தற்செயலாக மொழிகளில் தோன்றிய ஒரு பண்பாக இருக்கமுடியாது. மரபணு அடிப்படையில் ... உயிரியல் அடிப்படையில் ... மூளைக்குள் அமைந்துள்ள மொழிப்பலத்தின் பொதுமை இலக்கணக்கூறுகளாகத்தான் இருக்கமுடியும் என்று சாம்ஸ்கி கருதுகிறார். உலகமொழிகளுக்கிடையில் உள்ள இலக்கண வேறுபாடுகள் எல்லாம் பொதுவாக இந்த "parameters" -க்குக் குறிப்பிட்ட மதிப்பை ( value) பெறுவதில்தான் அமைந்துள்ளன. குழந்தைக்குக் கிடைக்கிற மொழியனுபவம் - சுற்றுப்புறத்தில் இருந்து கிடைக்கிற பேச்சுத் தரவு - இந்த "parameters" -க்கு அந்த மொழிக்குரிய மதிப்புகளைக் குழந்தை முடிவு செய்வதற்கு ( fix the particular values for particular parameters) உதவுகின்றன.
எனவே குழந்தையானது தனது மொழிவளர்ச்சியில் இரண்டு கற்றுக்கொள்கிறது. ஒன்றுசொற்களைக் கற்றல் ( lexical learning).மற்றொன்று பொதுவிதிகளுக்கு வேறுபாட்டுமதிப்பை உருவாக்குதல்(Parameter setting) எனவே மூளைக்குள் இருக்கிற பொதுமையிலக்கணத்தில் இரண்டு மொழியறிவுகள் அடங்கியுள்ளன. ஒன்றுஅனைத்து மொழிகளுக்குமான பொதுவிதிகள் . மற்றொன்று,அம்மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகளை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துகிற இலக்கணக்கட்டுப்பாடுகள் ( a set of grammatical parameters).

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

 
சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (14) ....
சாம்ஸ்கியின் தற்போதைய மொழிக்கோட்பாடான " Minimalist Programme" ( இதனைப் பேரா. கி. அரங்கன் அவர்கள் "குறுமை நிரல்" என்று அழைக்கிறார்) என்ற மொழிக்கொள்கைப்படி,
(1) 
மனித மூளைக்குள் .. மனத்திற்குள் - இருக்கிற பல்வேறு புலன்களில் மொழிப்புலன் ( Language Faculty - LF) என்ற ஒன்று உள்ளது. இப்புலன் மனித இனத்திற்கே உரிய ஒன்று. இப்புலத்தில் கருத்துப்புலம் ( cognitive system) என்று ஒன்று உள்ளது. இங்குத்தான் பொதுமை இலக்கணம் குழந்தை பிறக்கும்போதே இருக்கிறது. இதனை ஒரு குறிப்பிட்ட வகையான மொழிக்கான மனநிலை ( a mental state) என்று அழைக்கலாம். இது குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் அடைகிறது. வளர்ச்சி அடைகிறது. இந்த மனநிலையானது ,தனது தொடக்கநிலையிலிருந்து( initial state) , ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் ஒரு நிலையான வளர்ச்சியைப் ( a steady state)பெறுகிறது. இந்த வளர்ச்சியின் நிலைதான்ஒரு குழந்தை தனது தாய்மொழியில் மொழித்திறனைப் பெற்றுவிட்டது என்பதைக் காட்டுகிறது.
பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளுக்கும் மரபணுவால் தீர்மானிக்கப்பட்டு ( genetically determined) , மொழிப்புலத்தில் அமைந்துள்ள பொதுமை இலக்கணமானது ( Universal Grammar - UG) -மொழிக்கான மனநிலையின் தொடக்கநிலையானது ( initial state of the mental state) - ஒன்றுபோல் உள்ளது என்று முன்னர் பார்த்தோம். ஆனால் வளர்ச்சியின் இறுதியில் இந்த மனநிலை குறிப்பிட்ட மொழியின் மனநிலையாக ( a mental state of a particular language)மாறுகிறது. இந்த வளர்ச்சிநிலையில் தமிழ்க் குழந்தையின் இந்த மொழிக்கான வளர்ச்சியடைந்த மனநிலையானதுதெலுங்குக் குழந்தையின் வளர்ச்சியடைந்த மனநிலையிலிருந்து மாறுபட்டு இருக்கும். எனவேதான் தமிழ்க் குழந்தை தமிழைப் பேசுகிறது. தமிழைப் புரிந்துகொள்கிறது. தெலுங்குக் குழந்தையால் தமிழைப் பேசமுடியாது. தமிழைப் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் தெலுங்கைப் பேசமுடியும். தெலுங்கைப் புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறு குழந்தையின் மொழிப்புலத்தின் கருத்துப்புலமானதுதனது தொடக்கநிலையிலிருந்து ஒரு வளர்ச்சி நிலையை அடைவதைத்தான் குழந்தையானது தனது தாய்மொழியைப் பெற்றுவிட்டது அல்லது அதற்குத் தாய்மொழி நன்றாக வந்துவிட்டது என்று கூறுகிறோம். இந்த வளர்ச்சிக்கான நிகழ்வை,மொழியைக் குழந்தை கற்றுக்கொள்கிறது ( "language learning") என்று கூறுவது தவறு என்று சாம்ஸ்கி கருதுகிறார். ஏனென்றால் இது உயிரியல் அடிப்படையில் நடைபெறுகிற ஒரு நிகழ்வு ( a biological process ) என்று கூறுகிறார். குழந்தையானது அதற்குத் தேவையான தாய்மொழிச்சூழலில் வைக்கப்பட்டால்அதற்குத் தானாகவே மொழி வந்துவிடுகிறது - இதைச் சாம்ஸ்கி " acquisition of language is something that happens to the child". குழந்தை இதற்கென்று ஒன்றும் செய்யவேண்டியதில்லைகுழந்தைக்குத் தேவையான உணவு அளிக்கப்படும்போதுஅது வளர்வதைப்போல மொழியும் வளர்கிறது. எனவே குழந்தைக்குத் தாய்மொழி வருவதை ஒரு வளர்ச்சியாகப் பார்க்கவேண்டும் என்பது சாம்ஸ்கியின் கொள்கை. நமது பார்வை அமைப்பு ( visual system) தனக்குக் கிடைக்கிற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு நிலைகளை அடைவதுபோலத்தான் மொழி வளர்ச்சியும் என்று அவர் கருதுகிறார்.
அதேவேளையில் மொழிப்புலத்தின் - மொழிவளர்ச்சியின் இந்தப் பல்வேறு நிலைகளில் உள்ள வேறுபாடுகள் எல்லைக்கு உட்பட்டவைதான். ஏனென்றால் இந்த வளர்ச்சிநிலைகளைத் தீர்மானிப்பது குழந்தைக்கு மரபணு அடிப்படையில் - உயிரியல் அடிப்படையில் - அளிக்கப்பட்டுள்ள பொதுமை இலக்கணம்தான். குழந்தைக்குக் கிடைக்கிற மொழியனுபவம் மிகக் குறைவுதான். இதை மேலும் ஆய்வுசெய்தால்மொழியனுபவமானது இயற்கையாகக் கொடுக்கப்பட்டுள்ள மொழியின் பொதுமை வடிவத்தைக் குறிப்பிட்ட மொழிக்கேற்றவாறு வடிவமாற்றம் செய்கிறது ( "It is immediately obvious that it is much too limited and fragmentary to do anything more than shape an already existing common form in limited fashions")
குழந்தையின் பிற வளர்ச்சிகளில் ( உடலியல் உடலியங்கியல் கூறுகளின் வளர்ச்சிகளில்) இயற்கையான வளர்ச்சிப் போக்கை ஏற்றுக்கொள்கிற அதே வேளையில்மொழிப்புலத்தில்மட்டும் இதை ஏற்றுக்கொள்ளச் சிலர் தயங்குகிறார்கள். குழந்தை பெறுகிற மொழியனுபவமே மொழி வளர்ச்சிக்குக் காரணம் என நினைக்கிறார்கள். குழுந்தை தாயின் கருப்பையில் இருக்கும்போது,அதற்குக் கைகள் வளர்கிறது. ஏன் இறக்கைகள் வளரவில்லை என்று சாம்ஸ்கி கேட்கிறார். பிறந்தபிறகு ஒரு குறிப்பிட்ட வயதில் pubertyஅடைகிறது. இதற்குப் பிறர் கொடுக்கும் ஏதாவது அனுபவம் காரணமா என்று கேட்கிறார். அவ்வாறு கருதுவது எவ்வாறு சிரிப்புக்கு இடமானதோஅந்த அளவு குழந்தையின் மொழி வளர்ச்சியும் மொழியனுபவத்தால் எற்படுகிறது என்று கூறுவதாகும் என்று சாம்ஸ்கி கூறுகிறார்.
எனவே சாம்ஸ்கியின் மொழிக்கொள்கைப்படி,ஒரு மொழி என்பதே மொழிப்புலத்தின் ஒரு குறிப்பிட்ட நிலைதான் ( " We can take a language to be nothing other than a state of the language faculty") . எனவே தமிழோ அல்லது ஆங்கிலமோஒரு மொழி என்பது மொழிப்புலத்தின் ஒரு குறிப்பிட்ட நிலைதான். ஒருவர் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பெற்றிருக்கிறார் என்றால்அவருடைய மொழிப்புலம் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிநிலையை உயிரியல் அடிப்படையில் அடைந்துள்ளது என்றுதான் கொள்ளவேண்டும் என்பது சாம்ஸ்கியின் கருத்து.
இந்த மொழிப்புலத்தின் மொழிவளர்ச்சிநிலை எவ்வாறு நாம் ஒரு தொடரைப் பேசுவதற்கும்அதன் பொருளைப் புரிந்துகொள்வதற்கும் வழிவகுக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்

 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (15) ....
சாம்ஸ்கியின் மொழிக்கொள்கையின்படி , (1) குழந்தை பிறக்கும்போதுஅதனுடைய மூளைக்குள் ஒரு மொழிப்புலன் (FL- Faculty of Language) உள்ளது. இது மரபணு அடிப்படையில்உயிரியல் அடிப்படையில் மனித இனத்தின் மூளைக்குள் அமைந்துள்ளது. அதில் அனைத்து மொழிகளுக்குமுரிய பொதுமை இலக்கணம் (UG)ஒன்று உள்ளது. இதனை மனதிற்குள் உள்ள மொழிப்புலத்தின் தொடக்கநிலை ( initial state of FL) என்று கூறலாம். (2) குழந்தை பிறந்தபிறகு இந்த மொழிப்புலன் மாற்றமடைகிறது வளர்ச்சியடைகிறது. மொழி வளர்ச்சி என்பது இந்தப் பொதுமை இலக்கணத்தை உதவியாகக்கொண்டுகுழந்தையானது தன்னைச் சுற்றிப் பேசப்படுகிற பேச்சை - மொழியனுபவத்தைக்கொண்டு (Primary Linguistic Data - PLD) - தனது தாய்மொழிக்கான குறிப்பான இலக்கணத்தை ( particular grammar of a particular language)உருவாக்கிக்கொள்வதேயாகும். ஏறத்தாழ 30 மாதங்களில் வளர்ச்சியடைகிற மனத்தின் இந்த மொழிப்புலத்தின் நிலையை முதிர்வடைந்த நிலை ( steady state of FL) என்று கூறலாம்.
முதிர்வடைந்த மொழிப்புலமானது தான் உருவாக்குகிற மொழித்தொடர்களைமூளையின் மற்றும் இரண்டு அமைப்புகளான - பேச்சு அமைப்பு ( Speech System) , கருத்து அல்லது பொருண்மை அமைப்பு ( Thought System) ஆகிய இரண்டுக்கும் அனுப்பவேண்டும். அப்போதுதான் மொழிப்புலத்தில் உருவாக்கப்பட்ட மொழித்தொடர்கள் பேச்சாக வெளிவரும். அதே வேளையில் அந்த மொழித்தொடர்கள் கருத்து அல்லது பொருண்மை அமைப்புக்கு அனுப்பப்பட்டுநாம் என்ன பேசுகிறோம் என்பதை உணர்த்தும்.
மொழிப்புலத்தின் வேலையானதுதான் உருவாக்குகிற மொழித்தொடர்களை மேற்குறிப்பிட்ட பேச்சு அமைப்புக்கும் பொருண்மை அமைப்புக்கும் புரியும்படியாக (legible)அனுப்பிவைக்கவேண்டும். மொழி ஆராய்ச்சி என்பதே தொடக்க காலத்திலிருந்து எவ்வாறு பேச்சொலிகளும் பொருண்மையும் இணைக்கப்படுகின்றன ( how the speech sound is related with meaning)என்பதை ஆராய்வதேயாகும்.. சாம்ஸ்கியும் நோக்கமும் அதுதான்.
அப்படியென்றால் மொழிப்புலத்தில் என்ன என்ன உறுப்புகள் அமைந்துள்ளனஅவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்வதே மொழியியலின் அடிப்படை நோக்கமாகும். மேலும் இந்த மொழிப்புலத்தின் அமைப்பு மிக எளிதாக இருந்தால்தான் பிறந்த குழந்தைகுறைந்த மொழியனுபவத்தில் ( littele linguistic experience) மிகக் குறைந்த காலத்தில் நிறைந்த மொழியறிவைப் ( vast language knowledge) பெறமுடியும்.
மொழிப்புலத்தின் இந்த அமைப்பைப்பற்றிச் சாம்ஸ்கி 1957 விளக்க முயன்றுவருகிறார். ஒருவர் தனது வாழ்வில் கோடிக்கணக்கான தொடர்களை - வாக்கியங்களை - உருவாக்கினாலும் ,அவற்றையெல்லாம் உருவாக்குவது எண்ணிலடங்கும் குறிப்பிட்ட மொழிவிதிகளே என்ற அடிப்படையில்அந்த குறிப்பிட்ட விதிகளைக் கண்டறிவதில் சாம்ஸ்கி ஈடுபட்டார். வினா வாக்கியம்செய்வினை வாக்கியம்செயப்பாட்டு வாக்கியம் பெயரெச்சத்தொடர் என்று ஒவ்வொரு வாக்கிய அமைப்பையும் ( specific construction rules)உருவாக்க என்னென்ன விதிகள் பயன்படுகின்றன என்பதை விளக்கமுயன்றார். இதை விளக்குவதற்கு அவர் சில மொழியமைப்புநிலைகளை முன்வைத்தார். சொற்களஞ்சியம்(Lexicon), புதைநிலை (Deep strucuture), புறநிலை ( Surface Structure),தொடரமைப்புவிதிகள் ( Phrase Structure rules), மாற்றுவிதிகள் (Transformational rules) என்று பல அமைப்புகளையும் விதிகளையும் முன்வைத்தார். இந்த ஆய்வின் வளர்ச்சியில் அவர் 1979 ஆம் ஆண்டு முற்றிலும் மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொரு வாக்கிய அமைப்பையும் உருவாக்குகிற வேறுபட்ட மொழிவிதிகள் ( rules) அடிப்படை இல்லை. அந்த விதிகளை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிற சில பொதுவான மொழிக்கோட்பாடுகளே ( Principles with parameters) ) அடிப்படை என்று முடிவுக்கு வந்தார். விதிகளின் எண்ணிக்கையைவிட இந்த பொதுக்கோட்பாடுகளின் எண்ணிக்கை மிகச் சிறிய அளவே என்று கூறினார். இவைதான் குழந்தை பிறக்கும்போதுஅதன் மூளையின் மொழிப்புலனில் இருக்கிறது என்று அவர் கருதினார். ஏறத்தாழ எட்டே எட்டு மொழிக்கோட்பாடுகளே பலவகைப்பட்ட வாக்கிய அமைப்புகளையும் உருவாக்குகிற மொழிவிதிகளைக் கட்டுப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறு எண்ணற்ற வாக்கியங்களை உருவாக்குகிற மொழிவிதிகளை அடிப்படையாகக்கொள்ளாமல்அந்த விதிகளால் உருவாக்கப்படுகிற எந்த ஒரு வாக்கியமும் சரியா தவறா என்று குழந்தை கண்டறிவதற்கான எட்டு மொழிக்கோட்பாடுகளே அடிப்படை என்று அவர்கூறினார்.
இதன் படிநிலை வளர்ச்சிகளைப் பின்வருமாறு கூறலாம். வாக்கியங்கள் - வாக்கிய அமைப்புகள் - அவற்றிற்கான மொழிவிதிகள் - அந்த மொழிவிதிகளுக்கே அடிப்படையான அல்லது கட்டுப்படுத்துகிற எட்டு மொழிக்கோட்பாடுகள். மொழியியல் ஆராய்ச்சியானது மேற்குறிப்பிட வகையில்தான் வளர்ந்துவந்துள்ளது. மொழியின் பண்புகளைக் கண்டறிய இலட்சக்கணக்கான வாக்கியங்களைச் சேகரிப்பதைவிட ( Field data collection) , அவற்றின் புற அமைப்பைப் ( surface structure) பலவகையில் வகைப்படுத்துவதே (classification) மொழியாராய்ச்சி என்ற ஒருநிலை. பின்னர் அந்தப் பலவகைப் புறவாக்கிய அமைப்புகளைவிட அந்தப் புற வாக்கிய அமைப்புகளை அவற்றிற்குரிய புதை அமைப்புகளிலிருந்து ( deep strcuture) உருவாக்குகிற மொழி விதிகளைக் ( Phrase structure and Transformational rules) கண்டறிவதே மொழியாராய்ச்சி என்ற அடுத்த ஒரு வளர்ச்சி நிலை. பின்னர் அந்தக் குறிப்பிட்ட மொழிவிதிகளைவிட (rules) அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான அல்லது கட்டுப்படுத்துகிற விரல் விட்டு எண்ணக்கூடிய பொது மொழிக்கோட்பாடுகளைக் ( Principles)கண்டறிவதே மொழியாராய்ச்சி என்ற மிக உயர்ந்த ஒரு வளர்ச்சிநிலை.
இந்த மிக உயர்ந்த வளர்ச்சிநிலையில் சாம்ஸ்கி மனித மொழிப்புலனில் மொழியமைப்பு எவ்வாறு மேலும் எளிமையாக இருக்கிறது என்பதை விளக்க 1995-இலிருந்து முயன்றுவருகிறார். மொழிப்புலனின் வடிவம் - செயல்பாடு - மிக எளிமையாகவும் குறுமையாகவும்தான் இருக்கமுடியும் என்று கருதுகிறார். இதைத்தான் அவர் " Minimalist programme for Linguistic Theory" என்று அழைக்கிறார். இதை "Minimalism" என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

 

சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களின் கவனத்திற்கு மட்டும் (16) ....
சாம்ஸ்கி முன்வைக்கிற அடிப்படை வினா .... ஒரு குழந்தை ,குறுகிய காலத்தில்மிகக் குறைந்த மொழியனுபவத்தில்தனது தாய்மொழிக்கான நிறைவான இலக்கணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்கிறது ... அந்த நிறைவான இலக்கணத்தின் பண்புகள்,அமைப்பு என்ன... அந்த நிறைவான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளகுழந்தை பெற்றுள்ள இயற்கையான - உயிரியல் அடிப்படையிலான - மரபணு அடிப்படையில் பெற்றுள்ள - பிறக்கும்போதே குழந்தையின் மூளையில் அமைந்துள்ள - குறிப்பிட்ட எந்த மொழியையும் சாராத பொதுமை இலக்கணம் என்ன ?
ஆகவே சாம்ஸ்கியின் முன் நிற்கிற முக்கிய வினாக்கள் ..
(1) 
பொதுமை இலக்கணத்தின் பண்புகள் என்ன?
(2) 
குழந்தையின் மொழி முதிர்ச்சி நிலையில் அது பெறுகின்றன தனது தாய்மொழிக்கான முதிர் இலக்கணத்தின் பண்புகள் என்ன?
(3) 
பொதுமை இலக்கணத்திலிருந்து குழந்தையானது தனது தாய்மொழிக்கான குறிப்பான இலக்கணத்தை எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறது?
(4) 
இதில் குழந்தையின் சுற்றுப்புற மொழிச்சூழலின் பங்கு என்ன?
குழந்தையின் தாய்மொழிக்கான முதிர் இலக்கணமானது ஒரு கருத்தை வெளிப்படுத்தஎவ்வாறு பேச்சொலிகளையும் பொருண்மையையும் இணைக்கிறது?
ஒரு மொழிவாயிலாகநாம் ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது ,மூன்று அமைப்புகள் செயல்படுகின்றன.
(1) 
மொழி அல்லது இலக்கண அமைப்பு ( language System)
(2) 
பேச்சு அமைப்பு (speech system - AI - Articulatory / Phonetic system)
(3) 
சிந்தனை அமைப்பு ( Thought System - CI - conceptual/ Intentional system)
முதலாவதான மொழியமைப்பு ஒரு கருத்துக்கான தொடரை உருவாக்கிமேற்குறிப்பிட்ட இரண்டாவது (AI) , மூன்றாவது (CI)அமைப்புகளுக்கு அனுப்பவேண்டும். அப்போதுதான் இரண்டாவது அமைப்பு நாம் கேட்கிற குறிப்பிட்ட கருத்துக்கான பேச்சை உருவாக்கும். அதுபோன்று  அந்தத் தொடரின் கருத்தைச் சிந்தனை அமைப்பு புரிந்துகொள்ளும். அந்தத் தொடரை மொழியமைப்பானது மற்ற இரண்டு அமைப்புகளுக்கும் எவ்வாறு அனுப்புகிறது?மொழியமைப்புக்கும் மற்ற இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் அமைந்துள்ள இணைப்பு என்னஇதுபற்றிய ஆராய்ச்சியாகவே சாம்ஸ்கியின் மாற்றிலணக்கன அல்லது உருவாக்க இலக்கண ஆராய்ச்சி கடந்த 60 ஆண்டுகளாக அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இலக்கண அமைப்பு எவ்வாறு இருக்கும்எத்தனை நிலைகள் ( linguistic levels) இருக்கும்மொழியில் மிக அடிப்படையான ஒன்றுகுறிப்பிட்ட மொழிக்குரிய சொற்களஞ்சியம் ( Lexicon) . அச்சொற்களஞ்சியத்தில் ஒவ்வொரு சொல்லும் தனக்குரிய பண்புக்கூறுகளோடு அமைந்திருக்கும். சொற்களுக்குரிய பண்புகள் எவ்வாறு தொடர்களாக விரிவடைகிறது( lexicon - their properties - their computation ) ? சாம்ஸ்கி இதற்கான அமைப்பு நிலைகளாகச் சில இலக்கணநிலைகளை முன்வைத்தார். அவையே புதைவடிவம்,புறவடிவம்தொடரமைப்புவிதிகள்மாற்றுவிதிகள் என்று பார்த்தோம். அவற்றில் தொடர்ந்து அவர் சில மாற்றங்களை முன்வைத்தார். இறுதியாக, 1979 P & P theory ( GB Theory) -யில் D-S level, S-S level , PF level, LF level என்று நான்கு நிலைகளை முன்வைத்தார்.
சொற்களின் பண்புக்கூறுகளானது சில வழிமுறைகளில் D-S level ஆக அமைகிறது என்றும்அதுவே LF level ஆக மாற்றப்பட்டு,மேற்குறிப்பிட்ட சிந்தனை அமைப்புக்கு ( CI) -க்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்றார்.
அதுபோலவேறுசில வழிமுறைகளில் அந்த D-S level ஆனது S-S levelஆக மாறுகிறது என்றும் அதுவே PF level ஆக மாற்றப்பட்டுபேச்சு அமைப்புக்கு ( AP) உள்ளீடாக அனுப்பப்படுகிறது என்றும் கூறினார்.PF, LF இரண்டும் இடைமுக நிலைகள் ( Interface levels)
இவ்வாறு மொழி அமைப்பில் நான்கு நிலைகள் - D-S, S-S, PF, LFஎன்று உள்ளன என்று கூறினார். PF level -க்கு அனுப்பப்பட்ட மொழித்தொடர்க்கூறுகளானது குறிப்பிட்ட முறையில் AP என்ற பேச்சுப் புலத்திற்கு ஏற்றவகையில் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இதுPhonetic Interpretation என அழைக்கப்படுகிறது.
அதுபோன்று, LF level -க்கு அனுப்பப்பட்ட மொழித் தொடர்க்கூறுகளானது குறிப்பிட்ட முறையில் CI என்ற பொருளைப் புரிந்துகொள்ளும் புலத்திற்கு ஏற்றவகையில் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இது Semantic interpretation என்று அழைக்கப்படுகிறது.
மொழிப்புலத்திற்கு வெளியே AI ( பேச்சுப்புலம்) , CI ( சிந்தனைப்புலம்) என்ற இரண்டு புலங்கள் மூளையில் உள்ளன. 1995- வாக்கில் சாம்ஸ்கிமேற்குறிப்பிட்ட D-S, S-S என்ற இரண்டு நிலைகளும் உண்மையில் மொழிப்புலத்தில் கிடையாது. அவை இரண்டும் Theory-internal levels என்ற முடிவுக்கு வந்தார். மொழிப்புலத்தில் உள்ள சொற்கள்தங்களது பண்புக்கூறுகளை ( lexical features) முழுமையாக வெளிப்படுத்தும்போதே ( through Computation ) , அவை PF. LFஇரண்டுக்கும் ஏற்ற அமைப்பைத் தருகிறது என்கிறார்.
எனவே, PF, LF இரண்டும்தான் மொழிப்புலத்தில் அமைந்துள்ள Theory -external levels என்று முடிவுக்கு வந்தார். இதுவே தற்போது Minimalismஎன்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவமைப்பே (design) மூளையின் மொழிப்புலத்தில் உள்ள இயற்கை மொழிகளின் இலக்கணங்கள்,மூளை அல்லது மனத்தின் பிற இரண்டு புலங்களான பேச்சுப்புலம்,சிந்தனைப்புலம் இரண்டுக்கும் ஏற்ற அமைப்புகளை முழுமையாகத் தருவதற்கேற்ற அமைப்பு ( optimal design) என்று சாம்ஸ்கி கூறுகிறார்.

 


pic1.png


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard