காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள உறையூரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கான வரலாற்றுச் சுவடுகள் பல கிடைத்தபடி உள்ளன. சங்க இலக்கியச் சான்றுகள், அகழாய்வு முடிவுகள் முதலானவைஇவ்வூரின் தொன்மையையும், மக்களின் வாழ்நிலையையும் எடுத்துக் காட்டுகின்றன. உறந்தை என்ற பெயரிலேயே சங்கஇலக்கியங்கள் உறையூரினைக் குறிப்பிடுகின்றன. சோழர்களின் ஆட்சியில் இருந்த உறையூர் அவர்களின் தலைநகராகவும் விளங்கியது. கரிகாலன், தித்தன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி என பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த சோழ மன்னர்கள் பலர் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர். உறையூருக்கு ‘கோழியூர்’ என்ற பெயரும் இருந்தது என்பதை பழந்தொன்மக் கதையின் வழி அறிய முடிகின்றது. ஒரு யானைக்கும் கோழிக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் கோழியானது யானையினை விரட்டி அடித்ததால் உறையூரினை ‘கோழியூர்’ என அழைத்ததாக சொல்லப்படுகிறது.
சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் இக்கோழிக் கதையினை தம் உரையில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ‘உறந்தை அன்ன பொன்னுடை நெடுநகர்’ (அகம். 385), ‘உறந்தை அன்ன நிதியுடை நன்னகர்’ (அகம் 369) என்ற வரிகள் உறையூரின் செல்வவளத்தைச் சுட்டுவதாகும். காவிரியாற்றின் அருகில் சோலைகள் சூழ்ந்தப் பகுதியில் உறையூர்அமைந்திருந்தது என அகம். 385 பாடல் குறிப்பிடுகின்றது. இனி உறையூர் குறித்து சங்கப்பாடல்கள் தரும் பதிவுகளைத் தொகுப்பாகப் பார்ப்போம். - சோழரது நிலைத்த புகழினை உடைய உறையூரில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். - தினைச்சோறு மட்டுமல்லாமல் செந்நெல் அவலில் கரும்பினது பாகினை ஊற்றி அதனை பாணர் முதலானோருக்கு பகுத்தளிக்கும் மக்கள் பலர் இவ்வூரில் வாழ்ந்தனர். - காவிரியாற்றின் நீர் மோதுகின்ற மதகுப் பகுதியினை உடையது உறையூர்.- உறையூரில் அமைந்திருந்த காவிரியாற்றில் ஓடங்கள் செலுத்தப்பட்டன.- வள்ளல் தித்தனின் ஆட்சிக் காலத்தில் உறையூரில் நெல் மிகுதியாக விளைந்து குவியல் குவியலாக இருந்தன. - உறையூரில் அமைந்திருந்த ‘அவைக்களம்’ அறத்தினை நின்று நிலைநாட்டும் படி செயல்பட்டது. - காவிரியாற்றின் வெள்ளம் உறந்தைக் கரையின் நகரங்களில் உள்ள மரங்களை வீழ்த்தியபடி ஓடும். - உறையூரில் உள்ள தேர்ச் சாலைப்பகுதியில் குடிப்பவர்களின் கையில் இருந்த கள் சிந்தியதால் சேறாகி உள்ள அவ்விடத்தில் யானைகள் ஆடியபடி இருக்கும். -வறண்ட நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உறையூர் மக்கள் மீன், ஆமை, தேன், செங்கழுநீர் மலருடன் விருந்தாகக் கொடுப்பர்.- உறையூர் மக்கள் ஸ்ரீரங்கம் பகுதிக்குச் சென்று பங்குனி உத்திரத் திருவிழாவினைக் கொண்டாடினர்.
தாலமி உறையூரினை ‘உர்தூரா’ என்று குறிப்பிடுகின்றது. சிறுபாணாற்றுப்படை இல்லாமை காரணமாக வேறிடம் பெயர்ந்து செல்லாமல் எல்லாம் கொண்ட தலைநகராக விளங்கிய உறையூர்கண் குடிமக்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடுகின்றது. (சிறு. 82-83) உறையூர் ஒரு வாணிப நகரமாக மாற்றம் பெறுவதற்கு சங்ககால சோழ அரசர்களின் காவிரிப்பூம்பட்டினத்து வர்த்தகமே காரணமாய் இருந்தது. மேலும் உறையூரின் அமைவிடமானது வர்த்தகப் போக்குவரத்து உள்ள பெருவழிப்பாதையில் அமைந்துள்ளதால் அதுஅவ்வூரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.ரோமானியர்களின் ஜாடிகள் இப்பகுதியில் கிடைக்கப் பெற்றதைப் பார்க்கும்போது, இப்பகுதியில் நடைபெற்ற கடல் கடந்த வர்த்தகத்தினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சிலப்பதிகார காலத்திலும் உறையூர் குறித்த பதிவுகள் சிறப்பாகவே இடம் பெற்றுள்ளன. எனினும் காலப்போக்கில் ஏற்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தின் வீழ்ச்சி உறையூரின் வளத்தினையும் சிதைத்தது. இன்று உறையூர் திருச்சிப் பகுதியில் ஒரு சிறிய ஊராக காட்சியளிப்பதை நிலவரைபடத்தில் பார்க்கலாம். உறையூர் பகுதியில் நடைபெற்ற (1964-65) அகழாய்வில் (1) கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டு, ( 2 ) கி.பி.2-8, (3) கி.பி.8-14 வரை என மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த கறுப்பு- சிவப்பு நிற மட்பாண்டங்கள், வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட செம்பழுப்பு நிற மட்பாண்டங்கள், ரௌலட், அரிட்ரைன் மட்பாண்டங்கள், கறுப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியன கி.பி. 1, 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையா.
இதில் சிலவற்றில் குறியீடுகளும், தமிழ் எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு தலை சூலம், இருதலை சூலம், விண்மீன், அம்பு, வில், தராசு இவ்வாறு பல குறியீடுகள்உறையூரில் கிடைக்கப்பெற்ற பானையோடுகளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு மேல் உள்ள மண் அடுக்கில் தமிழி (பிராமி) எழுத்துப் பொறிப்பு உள்ள பானையோடுகள் கிடைப்பதைக் கொண்டு பார்க்கும்போது, எழுத்துக்கள் புழக்கத்தில் இல்லாத அக்காலகட்டத்தில் மக்கள் குறியீடுகள் வழியே தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்பதை உணர முடிகின்றது. உறையூரில் கிடைத்த மட்பாண்டங்களில் 1. ‘கெநாகன அன்’, 2. ‘பூனாகன்’, 3. ‘அரைச்சாளன் குவி’என தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இவற்றின் காலம் கி.மு. 1 ஆம் நூற்றாண்டாகும். உறையூர் பகுதியின் கட்டிடக் கலைக்குச் சான்றாக அகழாய்வில் கிடைக்கப்பெற்ற செங்கல் கட்டிடத்தின் பகுதிகள் உள்ளன. இங்கு திட்டமிடப்பட்ட ஊர் அமைப்பு இருந்ததும் அதில் செங்கற்களால் நன்னீர், கழிவுநீர்க் கால்வாய்கள் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இவையனைத்தும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய அப்பகுதியில் வாழ்ந்தமனிதர்களின் நாகரிகத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. சங்க நூலான பட்டினப்பாலையானது உறையூரில் தொலைவில் உள்ளவர்களும் காணும்படி உயர்ந்து நிற்கின்ற பல மாளிகைகள் இருந்தன என்ற குறிப்பைத் தருகின்றது. (பட்.283-288) இதனை நாம் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற செங்கல் கட்டிடப் பகுதிகளுடன் பொருத்திப் பார்க்கலாம். உறையூரில் நடைபெற்ற அகழாய்வில் துணிகளுக்குப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாயத் தொட்டிகள் மற்றும் நெசவுத் தொழிலுக்குப் பயன்படும் நூல் நூற்கும்‘தக்கிளி’, நூலினைச் சுற்றிவைக்கும் இருமுனை தடித்தக் கம்பி முதலானவை கிடைக்கப் பெற்றுள்ளதைப் பார்க்கும் பொழுது இப்பகுதியில் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றிருந்ததை அறியமுடிகின்றது.
அகழாய்வு செய்ய தோண்டப்பட்ட குழிகளில் அங்கு ஏற்கனவே இருந்த சில ‘நில நடுகுழிகள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இதில் சில எலும்புத் துண்டுகளும் காணப்பட்டன. இதன் மூலம் அப்பகுதியில் ஏதோ சமயச் சடங்கு (உயிர் பலி கொடுத்தல்) நடைபெற்று இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.சதுரங்கக் காய்கள், சுடுமண்ணாலான காதணிகள், புகைபிடிக்கப் பயன்படும் குழல்கள், சுடுமண்ணாலான வளையல்கள், சுடுமண் பொம்மைகள் முதலானவையும் இங்கு கிடைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது இப்பகுதியில் இருந்து கைவினைப் பண்பாட்டு மரபை அறியலாம்.உறையூர் பகுதியில் மக்கள் ஓர் இடத்தில் நிலையாக வாழாமல் தங்கள் வாழ்விடத்தை அடிக்கடி மாற்றி புதிய குடியிருப்புகளை பிற இடங்களில் உருவாக்கிக் கொண்டது அகழாய்வு முடிவுகளின் வழி தெரிய வந்துள்ளது. குறிப்பாக கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் இப்படியொரு குடியிருப்புப் பகுதி மாற்றம் நடைபெற்றுள்ளதை அகழாய்வில் பார்க்க முடிகின்றது. இதற்கு அடிப்படைக் காரணமாகக் காவிரியாற்று வெள்ளம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அகழாய்வுக் குழிகளில் வெள்ளம் ஏற்பட்டு பழங்கால குடியிருப்புகள் அழிந்தமைக்கானச் சான்றுகள் உள்ளன என ஆய்வாளர்கள் சு. இராசவேலு கோ. திருமூர்த்தி ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இங்கு ஒரு கருத்து ஒப்பு நோக்கத் தக்கது. அதாவது, கரிகாலன் உறையூரில் இருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தன் இருப்பிடத்தை மாற்றினான் என பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. காவிரிப்பூம்பட்டினப் பகுதியில் ஏற்கனவே இருந்த கோயில்களைப் புதுப்பித்தும், புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தியும் அதில் புதிய குடிகளை வாழும்படி செய்தும், மதில்களில் பெரிய வாயில்களையும் சிறிய வாயில்களையும் ஏற்படுத்தி அவ்விடத்தில் கரிகாலன் வாழச் சென்றான் என பட்டினப்பாலை, 283-298 ஆம் பாடல் வரிகள் சுட்டுகின்றன.
காரிகாலன் உறையூரைவிட்டு நீங்கி காவிரிப்பூம்பட்டினம் சென்றமைக்கு அடிப்படைக் காரணமாக காவிரியாற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கே இருந்திருக்க வேண்டும். இவ்வாறான நம் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அகம். 137 ஆம் பாடல் காவிரியாற்று வெள்ளமானது உறையூரில் அமைந்திருந்த கரைகளை இடிந்து விழ வைத்தது எனக் குறிப்பிடுவதைப் பொருத்திப் பார்ப்பது இங்கு சிந்திக்கத் தக்கது. உறையூரில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தது. பாலி மொழியில் உறையூர் ‘உரகபுரம்’ எனக் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வூரில் இருந்த போது ‘ஆசாரிய புத்த தத்த தேரர்’, அபிதம்மாவதாரம்’ என்னும் நூலினை இயற்றினார் என ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். காவிரி ஆற்றுப்படுகை நாகரிகத்தின் அடையாளமாக உறையூரின் வரலாறானது மிகச் செழுமையாகவே வளர்ந்து வந்துள்ளது. அது பெருங்கற்கால பண்பாட்டுப் பின்னணியோடு வளர்ச்சி பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ள சங்ககால மக்கள் வாழ்ந்தமைக்கான வாழ்நிலைத் தொடர்ச்சியைப் பெற்று வந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன.