New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவனின் உடுக்கையும் பைபிளின் பேபலும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிவனின் உடுக்கையும் பைபிளின் பேபலும்
Permalink  
 


சிவனின் உடுக்கையும் பைபிளின் பேபலும்

First Published : 08 November 2015 10:00 AM IST

 

ஏன் பல்வேறு மொழிகள்?

மனிதர்களிடையே ஏன் பல்வேறு மொழிகள் இருக்கின்றன? ஒவ்வொரு பண்பாடும் அதற்காக ஒரு தொன்ம கதையை கூறுகிறது. கிரேக்க புராணக் கதைகளில், ஸியூஸ் (Zeus) எனும் பெரும் தெய்வம் உலகத்தை ஆண்டார்; அந்த ஆட்சியின்போது உலக மக்கள் ஒரே மொழியைப் பேசினார்கள்; ஆனால், அவரது மகனான ஹெர்மெஸ் (Hermes), மக்களிடையே பல மொழிகளை உருவாக்கினார்; இதனால் மக்களிடையே பிளவுகள் ஏற்பட்டன; இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால், மனிதர்களை ஆளும் பொறுப்பை ஸியூஸ் ஏற்றுக்கொண்டார்.

 

 

 

 

யூதர்களின் புராண-வரலாற்றுக் கதம்பமான யூத-விவிலியம் ஒரு கதையைக் கூறுகிறது. யஹீவா என்கிற பெரும் தெய்வம், உலகத்தை வெள்ள ஊழியால் அழித்தார். ஊழிக்குப் பின்னர் பெருகிய மக்கள், உலகமெங்கும் ஒரே மொழியைப் பேசி வந்தார்களாம். அவர்கள் சேர்ந்து ஒரு பெரிய கோபுரத்தை எழுப்பினார்களாம்.

‘கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். கர்த்தர், ‘இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக்கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத் திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பிவிடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்’ என்று சொன்னார். அவ்வாறே கர்த்தர், ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப்போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. (1)

 

 

 

 

கிறிஸ்தவம் பரவிய இடங்களிலெல்லாம், இந்தப் புராணக் கதையே மொழிப் பன்மை ஏற்பட்டது குறித்த நம்பிக்கையாக உள்ளது.

கிரேக்க – ஹீப்ரூ புராணக் கதைகள் இரண்டிலுமே, மானுட-இறை வேற்றுமையும், உலகம் முழுமைக்குமான ஆதி மொழி ஒன்று இருந்ததும் பேசப்படுகிறது.

இந்தியப் பார்வை

இதைப் போன்ற ஒரு கதை இந்தியாவிலும் உள்ளது. மொழி என்பது ஒரு விருட்சமாக வளர்ந்ததாம். அது மிக உயரமாக வளர்ந்ததும், அதை பிரம்ம தேவன் வெட்டினாராம். வெட்டப்பட்ட துண்டுகள் விழுந்த இடங்களில் எல்லாம் அவை மீண்டும் மரங்களாக வளர்ந்தனவாம். அப்படியே மொழிப் பன்மை ஏற்பட்டதாம். ஆனால், இந்தக் கதை இந்திய மரபில் பிரதான இடத்தைப் பிடிக்கவில்லை.

இந்தக் கதை மட்டுமல்லாது, இந்தியாவில் மொழிகள் குறித்து மேலும் பல்வேறு புராணங்கள் நிலவுகின்றன. அவை வெவ்வேறு தரிசனங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இவற்றுள் மிக முக்கியமானது, மொழியை வாக்தேவதையாகக் காண்பது. ‘வாக்’ என்பது வாக்தேவியாக ரிக் வேத காலம் முதலே உருவகிக்கப்படுகிறாள். அவளே மொழிகளின் ரகசியங்களைத் தன்னில் கொண்டிருக்கிறாள். அவள் மக்களுக்கு உணவளிப்பவள். அவள் ஒரு விண்ணகப் பசுவாகவும் உருவகிக்கப்படுகிறாள். அவள் மூலமாகவே மக்களிடம் நட்பு ஏற்படுகிறது. பிரஜாபதியின் மனத்தில் வாக்தேவதை முதலில் உருவானாள். பின்னர் அவள் தன்னை வெளிப்படுத்த நினைத்தாள். தன்னைப் பெருக்கிக்கொள்ள நினைத்தாள். அதன்மூலமே படைப்பு ஏற்பட்டது.

 

 

 

 

மேலும், இந்திய மொழிகளின் தொடக்கம் குறித்து மற்றொரு புராணக் கதையும் வழங்குகிறது. சிவபெருமானின் டமருவின் இரு பக்கங்களிலிருந்தும் மொழி பிறந்ததாகவும், அவற்றை பாணினியும் அகஸ்தியரும் பெற்று, அவற்றிலிருந்து இந்தியாவின் இரு பெரும் மொழிக் குடும்பங்கள் உண்டானதாகவும் கூறப்படுகிறது.சம்புரகஸ்யம் என்கிற சம்ஸ்கிருத இலக்கியத்தில், சிவபெருமான் தானே தமிழை அகஸ்தியருக்கு அளித்ததாகக் கூறுவதாகச் சொல்லப்படுகிறது.

காலனியப் பார்வை

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் இந்தியாவில் ஏற்பட்டபோது, அவர்கள் சம்ஸ்கிருதத்துக்கும் கிரேக்க லத்தீன் மொழிகளுக்கும் ஒரு ஆழமான ஒற்றுமையைக் கண்டனர். இதை அவர்கள் பைபிள் நம்பிக்கைகளின்படி விளக்க முற்பட்டனர். அதாவது, யஹீவா என்கிற தெய்வத்தால் பிரளயம் உருவாக்கப்பட்டது. அதில் காப்பாற்றப்பட்ட நோவா என்பவனின் மூன்று பிள்ளைகளான சேம், காம், யாப்பேது ஆகியோர், உலக மக்கள் குழுக்களுக்குப் பிதாமகன்களாயினர். இவர்களில் காம் என்பவன் நோவாவால் சபிக்கப்பட்டான். அவன் சந்ததிகள் பிற இரு மகன்களின் சந்ததிகளுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது சாபம். எனவே, ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் ஏற்பட்ட ஆப்பிரிக்க ஆசிய சமுதாயங்களையெல்லாம் ‘காமின் வழி வந்தவர்கள்’ (Hamitic) எனப் பகுப்பது, ஐரோப்பியக் காலனிய சமுதாயப் பார்வையாக இருந்தது. இந்தியாவில், காமின் சந்ததிகளே பெரும்பாலும் இருந்தார்கள். பின்னர் சம்ஸ்கிருதம் பேசும் யாப்பேதின் சந்ததிக் கிளை ஒன்று உள்ளே நுழைந்தது என்றோ, இல்லையென்றால் முதலில் ஒரு ஹாமிட்டிக் மொழிக் குழுவும் பின்னர் சம்ஸ்கிருதம் பேசும் மற்றொரு ஹாமிட்டிக் மொழிக் குழுவும் உள்ளே நுழைந்தது என்றோ, காலனிய மிஷினரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதினர்.

 

 

 

 

சங்கரய்யா என்று அழைக்கப்படுகிற பொமகொண்டி சங்கர சாஸ்திரி என்கிற ஆத்ரேய கோத்திரத்தைச் சார்ந்த ஸ்மார்த்த தெலுங்கு பிராமணர் மெட்ராஸ் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். அப்போது மெட்ராஸில் எல்லீஸ் இருந்தார். சங்கரய்யா, தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவுடையவர். ஆங்கில அறிவும் உடையவர். இவர் சென்னையில் ஜார்ஜ் கோட்டையில் இருந்த கல்லூரியில் தர்க்கம், வியாகரணம், தர்ம சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்பித்து வந்தார். முக்கியமாகத் தாதுமாலா என்கிற நூலை எழுதினார். தெலுங்கு மொழியின் வேர்ச்சொற்களைத் தொகுத்தளிக்கும் ஒரு அகராதி. திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டடைவதில் முக்கியப் பங்கு வகித்தவர் சங்கர சாஸ்திரிகளே. தெலுங்கு மொழியின் வார்த்தைகளின் வேர்ச்சொற்களில் தனித்தமிழ்க் கூறுகளையும் வடமொழிக் கூறுகளையும் கண்டறிந்தவர் அவர். (2)

சங்கரய்யா, எல்லிஸுடன் இணைந்து பணியாற்றினார். பாரதப் பண்பாட்டில் எல்லிஸுக்குப் பெரும் காதல் இருந்தது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனும், சமூக வரலாற்றாசிரியர் கணேசன் அவர்களும் இதனை சுட்டிக்காட்டுகிறார்கள் -

பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவுக்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப்பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோககரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (3)

பின்னாட்களில், கால்டுவெல் போன்றவர்கள், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்ச்சியே கிடையாது எனக் கூறினார்கள். தொடர்ந்து காலனியவாதிகளால் கூறப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம்தான் அது. ஆனால், கால்டுவெலுக்கு முன்பே எல்லிஸ் இதை மறுத்திருக்கிறார். தென்னிந்திய ஹிந்து ராஜ்ஜியங்களின் வரலாற்றை எழுத முனைந்து, தரவுகள் தேடி சேகரித்தவர், அப்படி வரலாற்று உணர்வே இல்லாதவர்கள் என இந்தியர்களைச் சொல்லிவிட முடியாது என்கிறார். கால்டுவெல், இந்த மொழிக் கருதுகோளை ஒரு இனவாதக் கோட்பாடு ஆக்கினார். ஏற்கெனவே காம்-யாப்பேது என்கிற விவிலிய புராணம், ஆரிய-படையெடுப்புக் கோட்பாடாக ‘வரலாறாக’ மாற்றி நம் மீது சுமத்தப்பட்டது. இதன் விளைவாக, இது ஒரு இனவாத அரசியலுக்கு வழி வகுத்த அளவு, ஒரு அறிவார்ந்த இந்திய மொழியியல் வரலாற்றுக்கு வழி வகுக்கவில்லை.

பின்னர், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என அடையாளப்படுத்தப்பட்டு அவை இனரீதியிலாக அடையாளங்கள் பெற்றுவிட்டன.

மரபணு ஆராய்ச்சிகள்

ஆனால், இதில் பிரச்னைகள் இருக்கின்றன. இந்திய மக்களின் மரபணு குறித்த ஆராய்ச்சிகள், எவ்வித ஆரியப் படையெடுப்பையும் காட்டவில்லை. இந்தியாவின் மிகப் பழமையான பண்டைய வட இந்திய மரபணுக் குழுக்களும் (Ancient North Indian, ANI), தென்னிந்திய மரபணுக் குழுவும் (Ancient South Indian, ASI) இந்தியாவில் 40,000 ஆண்டுகள் முன்னரே இருந்திருக்கின்றன. இந்தப் குழுக்களை ஆரிய-திராவிட இனத்தவரென்றோ அல்லது இந்தோ-ஐரோப்பிய திராவிட மொழிக் குழுவினரென்றோ பிரித்துவிட முடியாது. (4)

 

 

 

 

ஸ்டீபன் ஓபன்ஹைமர், ஒரு மருத்துவர். அத்துடன், மரபணு ஆராய்ச்சியாளர். வழக்கமான பாதையை விட்டுக் கொஞ்சம் விலகிச் சிந்திப்பவர். இவர் ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறார். ஆப்பிரிக்காவில் உதயமான மானுடம், கடற்கரையை ஒட்டிப் பிரயாணித்து, பிலிப்பைன்ஸை தாண்டிச் சென்று, பசிபிக் கடல் தீவுகள் வரையாக வியாபித்தது. இது இன்றைக்கு 85,000 முதல் 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அதன்பிறகு, கொடுமையானதோர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டது. தோபா எனும் பெரும் எரிமலை சுமத்ராவில் வெடித்தது. மானுடம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு இது. கிழக்கு ஆசியாவின் ஒட்டுமொத்த மானுடம் 10,000 பேர் கொண்ட குழுவாக ஒடுங்கியது. ஆயிரமாண்டுகள் உலக அளவில் பனியுகம் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகள் சூரிய ஒளி குறைந்து – அணுக்கரு ஆயுதப் பெருவெடிப்பால் வருவது போன்ற – தொடர் குளிர்காலம் (nuclear winter) ஏற்பட்டது.

 

 

 

 

தெளிவான வரையறை கொண்ட மொழிக் குடும்பங்கள் அப்போது உருவாகி இருக்கவில்லை. தொன்மங்களின் ஆதி வடிவங்கள், ஆதி வடிவிலான ஷமானிய சடங்குகள், இத்யாதி கொண்ட மானுடச் சமுதாயம், அப்போது சூழலியல் அகதிகளாக மீண்டும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் குடியேறியது. ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த மானுடத்தின் ஆகப் பெரும்பான்மையான மானுடக் குழுக்களுக்கு, இந்தியா ஒருவித இன்குபேட்டராக (incubator) இருந்தது. இன்றைய ஐரோப்பிய மானுடம், இவ்விதமாக இந்தியாவிலிருந்து வெளியேறியது. இன்றைய பாகிஸ்தானிலிருந்தும் இந்திய வடமேற்குப் பகுதிகளிலிருந்தும் இன்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னால், மானுடம் மத்திய ஆசியாவுக்குப் பரவியது. இந்தியாவிலிருந்து, மக்கள் கூட்டம் மத்திய ஆசியா வழியாக ஐரோப்பாவுக்குள் வந்தமைக்கு மரபணு ஆதாரங்கள் இருப்பதாக ஓபன்ஹைமர் கருதுகிறார். (5)

ஓபன்ஹைமரின் கோட்பாடு, இன்னும் மையமான ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடவில்லை. ஆனாலும் முன்னோடிகளுக்கே உரிய சில அதீதங்களைத் தவிர்த்து நோக்கும்போது, தீராத முரண்களை இது தீர்க்கும் சாத்தியம் கொண்டதாக உள்ளது.

விடையறியாத கேள்விகள்

மொழியியல் ரீதியாக, இந்தோ-ஐரோப்பிய மொழி என ஒரு பெரிய மொழி விருட்சம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பங்கள் வேறு எனக் கூறப்படுகிறது. இன்றைக்கு, மொழியியலாளர்கள் தொல்-திராவிட மொழிப் பெரும் குடும்பத்திலிருந்து தொல்-இந்தோ ஐரோப்பிய மொழி கிளைத்ததாகக் கூறுகிறார்கள். இந்தத் தொல்-இந்தோ ஐரோப்பிய மொழியும், தொல் திராவிட மொழியும், மத்திய ஆசியாவில் பரிணமித்து இந்தியாவுக்கு வந்ததாகக் கருதுகிறார்கள். இந்தத் தொல் திராவிட மூதாதை மொழியிலிருந்து, இன்றைக்கு திராவிட மொழிகளின் பொது மூதாதை மொழி கணிசமாகக் காலத்தால் பிற்பட்டது என்றும் மொழியியலாளர்கள் கருதுகிறார்கள். (6)

 

 

 

 

ஆனால், நிச்சயமாக மத்திய ஆசியாவில்தான் உருவாகினவா தொல்-திராவிடமும் தொல்-இந்தோ ஐரோப்பியமும்?

திராவிடத்தையும் இந்தோ-ஐரோப்பியத்தையும் இணைக்கும் சில வேர்ச்சொற்கள், சர்வ நிச்சயமாக இந்தியாவிலிருந்து மேற்கே நகர்ந்திருக்கின்றன. உதாரணமாக ‘Reason’ என்கிற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த வார்த்தையின் தொல்-இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் ‘*ar-’ என அறியப்படுகிறது. இதனுடைய கருத்தாக்கம் அல்லது ‘abstraction’, பாரதத்தின் மிகத் தொடக்கங்களில் இருந்தே ‘ரிதம்’ எனப்பட்டது. (7) அதனையே சத்தியம் என அழைக்கின்றனர்.

‘வெல்வது சத்தியமே; ரிதமின்மை அல்ல’ (சத்யமேவஜயதேந அன்ரிதம்) என்பது உபநிடதக் குரல். ரிதத்தின் வெளிப்பாடே தர்மம். தர்மத்துக்கான தனித் தமிழ்ச்சொல் அறம். அறம், அறிவு, ரிதம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தொன்மையான இழையாக ‘*ar-’ எனும் வேர்ச்சொல்லைக் காணலாமா? ’ஆம்’ எனக் கொண்டால் தமிழின் தொல் வடிவமும் தொல் இந்தோ ஐரோப்பியம் என மொழியியலாளர்களால் அழைக்கப்படுவதும் ஒரே மூலத்திலிருந்து கிளை பிரிந்தவையாக இருக்கலாம். ‘அர/றம்’ என்பது பழமையான பாரசீக மொழியிலும், ‘சரியான பாதை’ எனும் பொருளில் கிடைக்கிறது. ‘அர/ற மதி’ என்பது பாரசீக மொழியில் சரியான சிந்தனை எனப்படுகிறது. (8 )தொல் திராவிடமும், தொல் இந்தோ-ஐரோப்பியமும் இந்திய மண்ணில் உருவாகி, தொல்-இந்தோ ஐரோப்பியம் இந்தியாவிலிருந்து வெளியே படர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. படையெடுப்புகளாக அல்ல; குழுப் பரிமாற்றங்களாகவும் மானுடப் புலப்பெயர்வுகள் மூலமும் இது நிகழ்ந்திருக்கலாம்.

 

 

 

 

சிவனின் உடுக்கையின் இரு பக்கங்களிலிருந்து தமிழும் சம்ஸ்கிருதமும் எழுந்ததாகச் சொல்லப்படும் தொன்ம படிமத்தில் ஒரு ஆதி மொழியியல் உண்மை பொதிந்திருக்கலாம்.

இரு பெரும் பழமையான மொழிக் குடும்பங்களும் அவற்றிலிருந்து உருவான மொழிகளும், மொழிப் பன்மை நிறைந்த ஒரு பண்பாட்டுக் கோளமாக இந்தியாவை ஆக்கியிருக்கின்றன. இந்த இடத்தை நாம் எளிதாக வந்தடையவில்லை.

சுய-மொழிப் பெருமைகளும் மேட்டிமை மொழிப் பெருமைகளும் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சம்ஸ்கிருதம் உயர்வு என்றும், தமிழ் உயர்வு என்றும் பிற மொழிகள் தமிழைவிட அல்லது சம்ஸ்கிருதத்தைவிட அல்லது தம் தாய்மொழியைவிட தாழ்ந்தவை அல்லது அவற்றின் திரிந்த நிலைகள் கீழான நிலை மொழிகள் என்றும் சொல்லும் போக்குகள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றை மீறி மொழிப் பன்மையைப் பேணி வளர்க்கும் போக்கே இந்தியாவின் ஆன்மாவாக இருந்திருக்கிறது.

இந்தப் போக்கினை சாலிவாகன மன்னன் குறித்த ஐதீகக் கதையில் நாம் காண்கிறோம்.

மொழிப் பன்மையும் சாலிவாகனனின் கரமும்

சாலிவாகனன், எளிய குயவர் குடும்பத்தில் வளர்ந்து, பேரரசன் ஆனவன். அவன் நாக குல இளவரசியான நாகன்னிகாவை ஒரு முனிவரின் ஆசிரமத்தில் பார்த்து காதலித்துத் திருமணம் செய்தான். அவள் சம்ஸ்கிருதத்தில் நல்ல ஞானம் உள்ளவள்.

 

 

 

 

ஒருநாள், அவளோடு ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்தபோது, சாலிவாகனன் அவள் மீது நீரைத் தெளித்து விளையாடினான். நீரைத் தெளித்தது போதும் என்பதை ‘மோதக’ என ஒலிக்கும்படியாகச் சொன்னாள் நாகன்னிகா. சமஸ்கிருதம் அறியாத சாலிவாகனன், அவள் மோதகம் கேட்பதாகக் கருதி, அதைக் கொண்டுவர ஏற்பாடு செய்தான். அதைக்கண்டு அவள் நகைத்துவிட்டாள். இதனால் மனம் புண்பட்ட சாலிவாகனன், மிக வேகமாக சம்ஸ்கிருதப் புலமை அடைய வேண்டும் என விரும்பினான். அவன் அவையிலிருந்த இருபெரும் அறிஞர்களான சர்வவர்மரிடமும் குணத்யரிடமும் சென்று சம்ஸ்கிருதப் புலமை பெற எத்தனை காலம் ஆகும் என வினவினான். குணத்யர் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறினார். ஆனால் சர்வவர்மரோ, ஆறு மாதங்களில் அரசனை சம்ஸ்கிருதத்தில்  பாண்டித்யம் பெற வைத்துவிட முடியும் எனக் கூறினார். கோபமடைந்த குணத்யர், அப்படி அரசன் ஆறு மாதங்களில் சம்ஸ்கிருதப் புலமை பெற்றால் தான் சம்ஸ்கிருதத்தில் பேசுவதில்லை என்று கூறினார். ஆறு மாதங்களில் அரசன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றான். குணத்யர், ஏதும் பேசாமல் அரசவையை விட்டு வெளியேறினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில வேடர்கள், தம் குரு வனவாசிகளின் பைசாசிக மொழியில் ‘ப்ருஹத்கதாமஞ்சரி’ (பெரும்கதைமாலை) எனும் நூலை எழுதியிருப்பதாகவும், அதை அரசவையில் பாடிக் காட்டவும் அனுமதி கேட்டனர். ஆனால் சாலிவாகனனோ, பைசாசிகம் போன்ற இழி மொழிகளில் நல்ல இலக்கியம் எதுவும் இருக்க முடியாது எனக் கூறி அதை மறுத்துவிட்டான். இதற்கு பின்னர் அரசன் நோய்வாய்ப்பட்டான். அதற்குக் காரணம், அவன் உண்ட மாமிசம் தரக்குறைவாக இருந்ததுதான். அது ஏன் என விசாரித்தபோது, அவனுக்கு வேட்டையாடி மாமிசம் கொண்டுவரும் வனவாசிகள், தம் வனத்தில் ஒரு முனிவர் தினமும் இனிய பாடல்களைப் பாடுவதாகவும், அதை அனைத்து விலங்குகளும் கேட்டு ஊன் உறக்கம் மறந்து இருப்பதால், அவை மெலிந்துவிட்டதாகவும், எனவேதான் மாமிசம் சுவை குன்றி இருப்பதாகவும் கூறினர். இதைக்கேட்டு அதிசயப்பட்ட சாலிவாகனன், அவரைக் கண்டுவரப் புறப்பட்டான். காட்டில் ஒரு முனிவர் இனிய குரலில் பாடல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து பாடி, பின்னர் அவற்றை நெருப்பில் இடுவதைக் கண்டான். விலங்குகளும் மெய்மறந்திருக்கும் அற்புதமான பாடல். அந்த முனிவர் வேறெவரும் அல்ல, குணத்யர்தாம். சம்ஸ்கிருதத்தை விட்டு பைசாசிச மொழியைக் கற்று அதில் அவர்தான் ப்ருஹத்கதாமஞ்சரியை இயற்றியிருந்தார். இதை உணர்ந்த சாலிவாகனன், அவர் இலக்கியத்தின் மதிப்பை உணர்ந்து, அவற்றை அவர் நெருப்புக்கு இரையாக்குவதைத் தடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

கர்ண பரம்பரைக் கதைதான். இதன் வரலாற்று உண்மை கேள்விக்கிடமானதுதான். ஆனால் இது மற்றொரு ஆழமான உண்மையைக் கூறுகிறது. மொழிகள் அனைத்தின் மூலமாகவும் இயங்குகிற அடிப்படையான ஆதார-மொழி குறித்த அறிவும், அதனை அனைத்துக்கும் அடிப்படையாக விளங்குகிற சத்தியத்துடன் இணைத்துப் பார்க்கும் ஒரு தரிசனமும் இங்கு பரிணமித்து உள்ளது. நம் மொழிகள் அனைத்துமே தன்னுணர்வாக நிற்கும் இறை வெளிப்பாடுகள். லலிதா சஹஸ்ரநாமம், ‘பாஷா ரூபா’ என அவளைக் கூறுகிறது. ‘வானவன் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்' என்பது திருநாவுக்கரசர் திருமொழி. மொழிகளினூடேயான சாராம்ச ஒருமையைக் காணும் பார்வையே பாரதப் பண்பாட்டில் மொழியியல் பன்மையினைப் பேணிக்காத்துள்ளது.

இந்தியக் பண்பாடு, இந்த ஆதார மொழி-வெளிப்பாட்டை எப்படிப் பார்க்கிறது? இந்தியப் பண்பாடே மொழியின் இருத்தலையும் இயக்கத்தையும் குறித்த ஆராய்ச்சியாக இருந்திருக்கிறதோ என நினைக்கவைக்கும் அளவுக்கு, இதுகுறித்து இந்திய மரபு தொடர்ந்து ஆராய்ந்திருக்கிறது. அதை அடுத்த வாரம் காணலாம்.

மேலதிக விவரங்களுக்கு -

  1. யூத விவிலியம்: ஆதி:11: 5-8

  2. Thomas R. Trautmann, Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Yoda Press, 2006, pp.104-6

  3. அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன், தமிழ்ப்பற்றும் திராவிடப் பம்மாத்தும், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,http://www.sishri.org/caldwel.html

  4. Tamang et al, Complex genetic origin of Indian populations and its implications, Journal of Bioscience. 37(5), November 2012, pp.911–919

  5. Stephen Oppenheimer, Out of Eden: The Peopling of the World, Constable, London, 2003, p.152

  6. Pagel et al, Ultra conserved words point to deep language ancestry across Eurasia, vol. 110 no. 21 PNAS

  7. William K Mahony, The Artful Universe: An Introduction to the Vedic Religious Imagination, SUNY Press, 1998, p.235

  8. Douglas Q. Adams, Encyclopedia of Indo-European Culture, Taylor & Francis, 1997, p.213

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard