வைகை நதி நாகரிகம் ! (தமிழர்களின் பெருமை மிகு வரலாறு )
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! - 1சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன்
ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்... ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, காதுகளில் பளிங்கால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன (Carnelian) மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்றதாக இருக்கிறது. இருவரும் விளை யாடிக்கொண்டிருக்கும்போது தாகம் எடுக்கிறது. உள்ளே இருக்கும் சிறுமியிடம் நீர் கொண்டுவரச் சொல்கிறார்கள்.
வீட்டுக்குள் இருக்கும் சிறுமி, ஓடோடி வந்து ரோமானியக் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாள். கொடுப்பவளின் கையில் சித்திரம் வரையப்பட்ட சங்கு வளையல் சரசரக்கிறது. அவர்கள் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டுகிறார்கள். அவர்களின் உள்ளங்கையில் இருந்து உருளும் தாயக்கட்டைகள் தந்தத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.
சுமார் 2,500 வருடங்களுக்கு முன்னர் மதுரையில் அரங்கேறியது இது என்றால், நம்புவீர்களா? ஆனால், இந்தப் பொருட்கள் அத்தனையும் மதுரையில் இப்போது நடக்கும் அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. ஒரு சங்க காலக் குடியிருப்புக்குள் நம் கற்பனைக்கு எட்டாத ஒரு வாழ்வை 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள் மதுரை மாந்தர்கள். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஏற்படுத்தும் ஆச்சர்யத்தைவிட, கூடுதல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று உண்டு. அதுதான் அகழாய்வு நடக்கும் இடம்.
தென்னந்தோப்புக்குள் நடக்கும் அகழாய்வாக இந்த இடம் இருந்தால், நமது வியப்பு ஒரு கட்டுக்குள் அடங்கும். ஆனால், நமது வியப்பு கட்டுக்குள் அடங்காதபடி மேலெழக் காரணம், பாண்டியர்களின் பழைய தலைநகர் எனச் சொல்லப்படும் மணலூரின் கண்மாய்க்கரை மேட்டில்தான் இந்தத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது என்பது.
காலத்தின் கரங்களால் இறுகப் பூட்டப்பட்ட மதுரை என்ற ஓர் ஆதி ரகசியத்தின் கதவை, தென்னந்தோப்பின் காற்று மெள்ள அசைத்துப் பார்க்கிறது.
நாமும் அந்தக் காற்றின் வழி பயணிப்போம்!
மதுரை என்றாலே சவால்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் இன்று... நேற்று அல்ல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவன் உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களைப் பார்த்து ஒரு சவால்விட்டான்.
'ஒரு துலாக்கோளைக் கொண்டுவாருங்கள். அதன் ஒரு தட்டில், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’ என்றான்.
'என்ன இது... உலக நகரங்களை எல்லாம் சேர்த்தாலும் மதுரையின் புகழுக்கு ஈடு ஆகாதா?!’ எனக் கோபம்கொள்ளத் தேவை இல்லை. மதுரை என்பது, ஈடு-இணையற்ற ஒரு நகரம் என்பதற்கான அறிவிப்பை, கம்பீரத்தோடு அவன் வெளியிட்டிருக்கிறான். இந்த நகரத்தை அவன் எவ்வளவு நேசித்திருந்தால், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பான் என யோசித்துப்பாருங்கள். இந்த அறிவிப்பைத் தாங்கிய கவிதையை, இத்தனை ஆயிரம் வருடங்களாக, தமிழ்ச் சமூகம் பாதுகாத்து வருகிறது என்றால், இந்தச் சமூகத்துக்கு மதுரையின் மீது இருக்கும் மதிப்பை எண்ணிப்பாருங்கள்.
பரிபாடலில் ஆறாவதாக இடம்பெற்றுள்ள இந்தப் பாடல், மதுரையைப் பற்றிய கவிதை அல்ல; கனவு. இவ்வளவு பெரிய கனவை உருவாக்கி, அதைக் காத்துவரும் திறன் மதுரைக்கு உண்டு. ஏனென்றால், மதுரை என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டும் அல்ல; தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் முகம். அது நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டும் அல்லாமல், தமிழர்களின் நினைவைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாக, பழையோனாகப் பாண்டியனே இருந்தான். இதன் காரணமாகவே மற்ற இருவரும் பாண்டியர்கள் மீது பொறாமைகொள்ளவும் பகை வளர்க்கவும் செய்தனர். பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருக்க, பாண்டிய மன்னனுக்கு உரியது வேப்பம் பூ மாலை என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. இன்றளவும் மதுரையின் அரசி மீனாட்சிக்கு, திருநாளில் வேப்பம் பூ மாலைதான் சூடப்படுகிறது. காலத்தின் மிக நீண்ட ஓட்டத்தில், தனது அடையாளங்களையும் மரபுகளையும் உதிர்த்துவிடாமல் மதுரை காத்துவருகிறது.
ஆன்மிக மரபில், மீனாட்சிதான் மதுரையின் அரசி என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், மீனாட்சியின் கணவன் சொக்கநாதன் மதுரையின் அரசன் அல்ல; மீனாட்சியின் கணவன் மட்டுமே என்பது பலருக்குத் தெரியாது. இந்த வியப்பூட்டும் செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், உலகெங்கும் ஆதி சமூகத்தின் தலைமை பெண்களிடம்தான் இருந்தது. பின்னர்தான் ஆணிடம் வந்தது. அந்த ஆதி காலம்தொட்டு இந்த நகர் தனது ஞாபக எச்சங்களை இழக்காமல் இன்றுவரை காத்துவருகிறது.
இவ்வளவு நீண்ட காலபரப்பில் இந்த நகரைப் பற்றி எவ்வளவோ இலக்கியங்கள் தொடர்ந்து பேசிவருகின்றன. விந்தியமலைக்கு தெற்கே புகழ்பெற்ற நகராக மதுரை இருந்ததைப் பற்றி வால்மீகி வர்ணிக்கிறார். திரௌபதியின் சுயம்வரத்தில் பாண்டிய அரசன் கலந்துகொண்டதாக வியாசன் எழுதுகிறார். வாத்ஸாயனரும், கௌடில்யரும், காளிதாசனும் இந்த நகரை வியந்து பாடுகின்றனர். கடல் கடந்த தேசங்களில் இருந்து பயணிகள், காலம்தோறும் இந்த நகருக்குள் வந்தவண்ணமே இருந்துள்ளனர்.
சங்க இலக்கியங்களில் பாடல் எழுதிய பலரும், இந்த நகரைச் சார்ந்தவர்களே. இதை அதன் கோட்டைச்சுவர்களை, காவல் வீரர்களின் கைகளில் ஒளிரும் ஆயுதங்களை, நாள் அங்காடிகளில் நடக்கும் வணிகத்தை, நகரத்தின் மீது கவியும் இரவை, வைகையின் படித்துறையில் சலசலக்கும் நீர் ஓசையை... என ஒன்றுவிடாமல் நவீனக் கருவிகொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவுபோல பரிபாடலும் மதுரைக் காஞ்சியும் பதிவுசெய்துள்ளன. இதன் பிரமாண்டத்தை, சிலப்பதிகாரம் விரித்துக்காட்டியுள்ளது.
தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்கள் பலரும் இந்த நகரைப் பாடியுள்ளனர். 'திருவிளையாடற்புராணம்’ இந்த நகரை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுகிறது. அது இந்த நகரத்தின் மண்ணை சிவன் சுமந்தான் எனக் கூறுகிறது. இந்த நாடு முழுவதும் சைவ மதம் இருந்தாலும், சைவ மதத்தின் மூலக்கடவுளான சிவன், மதுரையின் மண்ணைச் சுமந்தான் என, சைவ இலக்கியங்களே பெருமைகொள்கின்றன.
மதுரையின் பெருமைக்கும் பாரம்பர்யத்துக்கும் இலக்கிய ஆதாரங்களைப்போலவே எண்ணி
லடங்காத வரலாறுகளும் மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன. இந்தியாவில் இதுவரை கண்டறியபட்ட கல்வெட்டுகளில் காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள பிராந்தியங்களில் இருந்துதான். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிமான் கோம்பை நடுகல் தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கும் முன்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
அதாவது இந்தியாவிலேயே எழுத்தும், எழுத்து சார்ந்த அடையாளங்களையும் மிக அதிக அளவில் கொண்டுள்ள நகரம் மதுரை. இங்குதான் சமணப் பள்ளியும் பௌத்தப் பள்ளியும் வேதப் பள்ளியும் இருந்தன என இலக்கியங்கள் சொல்கின்றன. பள்ளிகள் நிறைந்து இருந்த இந்த நகரில்தான் பல சங்கங்கள் நடத்தப்பட்டன. அந்த இலக்கியச் சங்கத்தினரால் தொகுக்கப்பட்டு, ஏற்றுக்
கொள்ளப்பட்ட பாடல் தொகுப்புகள்தான் இன்று உலகின் மிகப் பழமையான பாடல்கள் எனக் கருதப்படும் நமது சங்க இலக்கியங்கள்.
சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி வருகிறது. மதுரையின் தெருக்களை வியந்து பார்த்தபடி கோவலன் நடந்து சென்றுகொண்டிருப்பான். அப்போது எதிரில் வரும் பெண் ஒருத்தி, கையில் வடமொழியில் எழுதப்பட்ட ஓர் ஏடு வைத்திருப்பாள். அதில் உள்ள வாசகத்தைக் காட்டி கோவலனிடம் விளக்கம் கேட்க, வேடிக்கை பார்த்தபடி சென்றுகொண்டிருந்த கோவலன், சற்றே நின்று அவளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுச் செல்கிறான். இது வீதியில் நடந்துபோகிற ஒரு பெண்ணின் கல்வி அறிவுக்குச் சான்று மட்டும் அல்ல, ஒரு நகரத்தின் எழுத்தறிவுக்கும் சான்று.
மதுரையின் சிறப்புகளில் முக்கியமானது இந்த நகரின் தெருக்கள். இங்கு எந்தத் தெருவுக்குள் நீங்கள் போனாலும் அந்தத் தெரு சுமார் ஈராயிரம் ஆண்டுகள் நீளம்கொண்ட தெருவாகத்தான் இருக்கும். உங்களால் காலத்தைக் கடந்து பார்க்க முடியும் என்றால், அதே தெருவில் உங்களைக் கடந்து, பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருப்பவன்தான் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கும் பொற்கொல்லன் என்பதை உணர்வீர்கள். அந்தத் தெருமுக்கில், எந்தவிதப் பதற்றமும் இன்றி உட்கார்ந்து இட்லி அவித்துக்கொண்டிருப்பவள் தான், வைராக்கியம் ஏறிய வந்தியக்கிழவி என்பதையும் அறிவீர்கள்.
மதுரை என்பது, ஒரு வகையில் மாயநகரமும் கூட. 'இன்று நாம் பார்க்கும் மதுரைதான் நேற்றைய இலக்கியங்களில் சொல்லப்பட்ட மதுரையா?’ எனக் கேட்டால், சட்டென 'ஆம்’ எனப் பதில் சொல்லிவிட முடியாது. 'மதுரை’ என்பது இன்றைய மாநகராட்சியால் குறிக்கப்பட்ட இடத்தின் பெயர் அல்ல. அது ஒரு ரகசிய நிலத்தின் பெயர் என வாதிடுவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இறையனார் அகப்பொருள் உரை எனும் நூல், முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல் கொண்டுபோக, மூன்றாவதாக இப்போது இருக்கும் மதுரை உருவானதாகக் கூறுகிறது. கண்ணகி எரித்த மதுரையைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. திருவிளையாடற்புராணமோ, வைகையின் ஓரத்தில் இருந்த கடம்பவனத்தில் இரவில் தங்கிய வணிகன், தான் கண்ட அதிசயக் காட்சியை பக்கத்தில் உள்ள மணலூரைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்த குலசேகரப் பாண்டியனிடம் சொல்ல, அவன் வந்து பார்த்து, அந்தக் கடம்பவனத்தை அழித்து இப்போது உள்ள மதுரையை நிர்மாணித்தான் எனச் சொல்கிறது. பெரும்பற்ற புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள், பாடலின் அடிக்குறிப்பில் பாண்டியர்களின் பழைய ராஜதானி (தலைநகர்) மணலூர் எனக் குறிப்பிடுகிறார்.
இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர, மக்கள் மத்தியில் மதுரையைச் சுற்றி உள்ள இடங்களான அவனியாபுரம், பாண்டி கோயில் பகுதிகளில் பழைய மதுரை இருந்ததாக வாய்மொழிக்
கதைகள் உள்ளன. கதைகளை எல்லாம் வரலாறுகளாக அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எந்த ஒரு கதையும் சின்னஞ்சிறு அளவிலேனும் ஓர் உண்மையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதும் உண்மைதானே!
இந்த வரலாற்று, சரித்திரக் கதைகள் எல்லாம் இப்படி இருக்க, இப்போது மதுரையைப் பற்றி புதிய கதை ஒன்று தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, மதுரையில் இருந்து தென்கிழக்காக சுமார் 12 கிலோமீட்டர் தள்ளி பள்ளிச்சந்தைத் திடல் என்ற இடத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்குள், கடந்த ஐந்து மாதங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்திவருகிறது. மிக விரிவாக நடத்தப்படும் இந்த ஆய்வில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களும் அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சுமார் 2,200-ம் ஆண்டில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்த குடியிருப்புப் பகுதியாக இது இருக்கிறது. வரிசை, வரிசையாக வீடுகள், மிக அகலமான செங்கற்கள், தரைத்தளமாக, கனமான தட்டோடுகள், மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள், வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள், தண்ணீர் வழிந்தோட வடிகால்கள், வட்டவடிவ உரையிடப்பட்ட கிணறு... என நிலத்துக்குள் ஒரு நகரமே துயில்கொண்டிருக்கிறது. அதைத் துயில் எழுப்பும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வுத் துறை ஈடுபட்டிருக்கிறது. நீருக்குள் மூழ்கும் நகரங்களை, ஹாலிவுட் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பார்க்கலாம். ஆனால், மண்ணுக்குள் இருந்து மேலே எழும் நகரங்களை தமிழ்நாடு போன்ற மனித நாகரிகத்தின் பாரம்பர்யத் தொட்டில்களில்தான் பார்க்க முடியும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் கைக்கொள்ள முடியாத இப்படியான பெருமைகளை, நம் நாட்டு கிராம ஊராட்சிகள் தன்னகத்தே கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் முழுமையான குடியிருப்புப் பகுதி கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள் தொல்லியலாளர்கள். இங்கு கிடைத்திருக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. மற்றும் நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்தக்கூடியது.
இப்போது சொல்லுங்கள்... பரிபாடலில் புலவன் எழுதியது வெறும் வாய்ச்சவடால் அல்ல, வாழ்வின் செருக்கில் இருந்து மேலெழுந்த சவால் என்பது உண்மை அல்லவா?!
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன், நந்த குமார் ஓவியங்கள்: ஸ்யாம்
மனித குலத்தின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில்தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவநதிக் கரையில்தான் பெரு நகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை.
ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்றுதான் வைகை. தமிழ் நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது.
மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி முழுமையான களஆய்வை நடத்த முடிவுசெய்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வைகையின் தொடக்க இடமான வெள்ளிமலையில் இருந்து, அது வங்கக் கடலில் கலக்கும் அழகன் குளம்- ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல் கள ஆய்வை நடத்தியது.
சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒருவகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது 80 சதவிகிதக் கிராமங்கள், வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களே மிகச் சிறந்த ஒரு கண்டுபிடிப்புதான். 256 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நதியில், சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் காலத்தின் மங்காத சுவடுகளை, தனது தோளில் சுமந்தபடி நிற்கிறது. வைகை வறண்ட நதி அல்ல... வரலாற்று நதி எனபதை நிரூபிக்கும் புள்ளிவிவரங்களே இவை.
எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்குத் தகுதியான ரகசியங்களை மறைத்துவைத்திருக்கும் மந்திரக்கிண்ணங்களாக வைகைக் கரைக் கிராமங்கள் இருக்கின்றன. அந்த மந்திரக் கிண்ணங்களைத் திறந்துபார்க்கும் சக்தியும் சாமர்த்தியமும்தான் இன்றைய தேவை.
அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு கள ஆய்வைத் தொடங்குவதற்கு முன்னர், கடந்த 30-40 ஆண்டுகளில் தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனிநபர்கள் அவ்வப்போது நடத்திய ஆய்வில், பல முக்கியக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றையாவது நினைவூட்டுவது அவசியம்.
மணலூர் கண்மாய்க்கரையின் கதையை அறிந்துகொள்ளும் முன்னர், தேனூர் கருவேலமரத்தடியின் கதையை அறிந்துகொள்வோம்.
மதுரைக்கு மிக அருகில் வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கிராமம், தேனூர். முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும்
சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும் ஆய்வுநடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.
தேனூரில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்துவர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார் முக்கால் கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்.
புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல், பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்.
ஏழு தங்கக்கட்டிகளிலும் தமிழ் பிராமியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிழும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது.
இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி, இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.
2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள்கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல. மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால் அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான். அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோகூட தங்கத்தில் எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை, அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது, ஒரு மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால், இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது.
தமிழகத்தின் முதல் தங்கமகள் மட்டும் அல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான். மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில் உயிர்த்தெழுதலும்கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.
2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறிய பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலனாக மாற்ற என்னென்ன வடிவத்தைக் கையாண்டார்கள். கலைநுட்பமும் ரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின் ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில் வெளியூரில் இருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்துவைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம் இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது சிறுநகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கம் புழங்குகிற அளவுக்கு பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின் வளமை எப்படி இருந்திருக்கும்?
முதலில் ஞாபகம் வருவது அழகர்கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சமணப் பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன், தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000 பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான் பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.
ஒருமுறை பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனியத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தூத்துக்குடி கிறிசி மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில், முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின் குலக்கதையைச் சொல்லும்போது, 'மதுரையில் பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் கொலைசெய்யப் பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாகக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள் செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினம் அல்ல.
ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று ஆதாரம்... என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத் தங்கக்கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில் இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள் எவ்வளவோ?
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, 'பாடலிபுரத்தில் எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக செல்வத்தைக்கொண்டது என நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறானோ?’ எனக் கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.
சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள் பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின் வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.
வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும் அதுதான் வளர்த்தது!
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! சு.வெங்கடெசன்படங்கள்: ஆ.நந்தகுமார், ஓவியம்: ஸ்யாம்
ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டை இலக்கியம், வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளின் ஆய்வுகளுக்கு இடையிலான ஊடாட்டத்தின் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இடத்தில் மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான தடயங்கள் கிடைப்பதே அரிது. அங்கு அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை யூகிப்பதற்கான சான்றுகள் கிடைப்பது அதைவிட அரிது.
எந்தத் தடயத்தைக்கொண்டு, எப்படி அவற்றைக் கண்டறிவது என்பதற்கு, நமக்கு இருக்கும் வழிமுறைகள் மிகச் சொற்பமானவை. ஏனென்றால், இந்தச் சவால்களை நம் முன் உருவாக்கி வைத்திருப்பது காலம். காலத்தின் சிறு துகளின் மீது நின்றுகொண்டு, அதைக் கணிக்கும் முயற்சி இது.
ஒரு நாகரிகத்தை மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் கட்டடங்களின் வழியே அனுமானிப்பது ஒருவழி என்றால், மனித மனங்களின் ஆழத்தில் பதிந்துள்ள அறச் சிந்தனைகளின் வழியே அளவிடுவது இன்னொரு வழி. தொல்லியலும் இலக்கியமும் மிஞ்சியிருக்கும் கலை வடிவங்களும்தான் கடந்த காலத்துக்குள் செல்லும் வாசல். வெவ்வேறு வடிவங்களைக்கொண்ட இந்த வாசல்களின் வழியே நுழைந்து வைகைக் கரை வந்தடைவோம்.
தேனூரில் கருவேலமரத்தைப் பெயர்த்தெடுத்த மழைக்காலம் போல, அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பான ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.
எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.
மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.
அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.
நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.
சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.
இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.
வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.
என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.
20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.
நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.
அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).
நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.
அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.
சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.
கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.
அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.
தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?
அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஓவியம்: ஸ்யாம்
முன்னோர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் சாலையின் ஓரத்தில் இருப்பதைப் பார்த்தபடி, எத்தனையோ முறை கடந்துபோயிருப்போம். நின்று பார்க்கவோ அல்லது அதன் கதையைப் பொருட்படுத்திக் கேட்கவோ, நமக்கு நேரம் இருப்பது இல்லை. இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு நம்மில் யாரேனும் அதைக் கேட்க நினைத்தாலும், சொல்லும் நபர் யாரும் இருக்கப்போவது இல்லை. சிந்துசமவெளி நாகரிகத்தின் படிக்கப்படாத எழுத்துக்களைப்போல, கேட்கப்படாத கதைகளாக இவை கல்லுக்குள் மறையப்போகின்றன.
மழை நீர் ஓடி குளத்தில் சேர்வதைப்போல, மனித அனுபவம் கடந்தகாலம் எனும் தொட்டியில் இயல்பாகச் சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்தகாலத்தை எல்லாம் இறந்தகாலம் என வகைப்படுத்தி, 'இறந்ததை அழிப்பது அவசியம்தானே!’ என வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், இவற்றுக்கு நேர்மாறாகச் சிந்தித்தவர்கள் நமது முன்னோர்கள். இறந்துபோன ஒருவன், எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்பதற்கான எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார்கள். அவர்களது விடாப்பிடியான முயற்சியின் அடையாளங்களே நடுகற்கள்.
தமிழர்கள், போரை ஏழு வகைகளாகப் பிரித்தார்கள். ஏழு வகைப் போர்களிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவனின் நினைவாக நடுகல் அல்லது வீரக்கல்லை அமைத்தனர். ஒரு நடுகல் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறான் தொல்காப்பியன். 'ஒரு வீரனின் புகழை என்றென்றும் சுமந்து நிற்கப்போவதால் வலிமை மிகுந்த கல்லைத்தான் நடுகல்லாக நடவேண்டும். ஊருக்குப் பக்கத்தில் கிடக்கிறது என்பதால், எந்தக் கல்லையும் தூக்கி நட்டுவிடக் கூடாது’ என்கிறான்.
நெற்கதிரில் விளைந்த கதிர், விளையாத கதிர் என இருப்பதுபோல, கல்லிலும் விளைந்த கல், விளையாத கல் இருக்கின்றன. விளையாத கல்லைக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக, இமயமலைக் கல்லை வைத்து அம்மி-குழவி செய்தால், அம்மியில் வைத்து
ஆள்காட்டி விரலை மடித்து, மண்பானையைத் தட்டிப்பார்த்து வாங்கும் பாட்டியைப்போல, பாறையின் மேலே ஓடும் ரேகையைத் தட்டிப்பார்த்து, அதன் விளைச்சலையும் பக்குவத்தையும் சொல்லும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மண்ணியலோ, அது சார்ந்த அறிவியலோ படித்தவர்கள் அல்ல; மரபு வழியான அறிவைப் பெற்றவர்கள். அந்த அறிவின் ஆதிமரபுக்குச் சொந்தக்காரனை அழைக்கிறான் தொல்காப்பியன்.
அப்படிப்பட்டவனை அழைத்துப்போய், தகுதியான கல்லைக் கண்டறிந்து, பின்னர் நல்ல நேரத்தில் அந்தக் கல்லை நீராட்ட வேண்டும். அதன் பின் அந்தக் கல்லைப் பொருத்தமான இடத்தில் நிறுவவேண்டும். அதைத்தான் 'கால்கோள்’ என்கிறான். இன்றைக்கும் மாநாடுகளுக்கும் அரசு விழாக்களுக்கும் 'கால்கோள்’ நடும் அழைப்பிதழ்களை நாம் பார்க்கிறோம். இந்தக் கால்கோள் எனும் சொல்லை நட்டவன் தொல்காப்பியன். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக கல் சிதைந்தாலும் சொல் சிதையாததே தமிழின் பெருமை.
இந்தக் கால்கோள் நட்ட பின்னர் கொண்டாட்டங்களும் விருந்துகளும் தொடங்கும். அந்த வீரனைப் பற்றி வாழ்த்துப்பாக்கள் பாடப்படும். அவனின் கதை தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். வீரம்தான் புகழை அடையும் வழி என்பதை வழியில் நிற்கும் அந்தக் கல், வரும் சந்ததிக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். இறப்பு என்பது வாழ்வு முடியும் இடம் அல்ல என்பதன் சாட்சியாக மாறுகிறான் அந்த வீரன்.
நடுகற்கள் அமைக்கும் பழக்கம் சங்க காலத்தில் மிக அதிகமாக இருந்ததை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. ஏழு வகையான போர்கள், அவற்றில் எண்ணற்ற வகையான மரணங்கள். எல்லா மரணங்களும் சமூகத்தால் நினைக்கப்படுவது இல்லை. அவற்றில் தனித்துவமாக வீரத்தை வெளிப்படுத்தியவனின் செயல்தான் போற்றப்படுகிறது. அந்த வீரனே கல்லிலும் கவியிலும் வாழ்பவன் ஆகிறான்.
வேளாண்மை சார்ந்த அன்றைய சமூகத்தின் பெரும் செல்வமாக இருந்தது கால்நடைகளே.எனவே, இவற்றைக் கவர்ந்துசெல்வதும் மீட்பதும் மிக முக்கிய செயல்பாடுகளாக இருந்தன.
மகாபாரதத்தில் விராட பர்வத்தில், கௌரவர்கள் விராட தேசத்தின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வார்கள். அப்போது உதயகுமாரனைத் தேரில் ஏற்றிக்கொண்டு அர்ஜுனன் போர்புரிவான். துரியோதனனின் படையைத் தோற்கடித்து கால்நடைகளை மீட்டு வருவான். கால்நடைகளைக் கவர்வதும் மீட்பதும்தான் எல்லா காவிய நாயகர்களும் அன்று செய்துகொண்டிருந்த வேலை.
கால்நடைகளைக் கவர்ந்து வரும்போது நடக்கும் போரை 'வெட்சி’ என்றும், மீட்கும்போது நடக்கும் போரை 'கரந்தை’ என்றும் தமிழர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள். இந்த இரண்டு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகைப் போர்களிலும் சிறந்த வீரத்தை வெளிப்படுத்திய அனைவரும் நடுகற்களாக மாறினர்.
நடுகல் அமைத்து வீரனைப் போற்றுவது அன்றைய சமூகத்தின் பெருவழக்கம். ஆனால், சங்க காலத்தில் நடப்பட்ட நடுகல் ஒன்றுகூட, இன்றைய தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிராக நீடித்தது.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வாளர்களால், வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான்
கோம்பை என்பது பயன்பாட்டுப் பெயர்) கிராமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மண்ணுக்குள் புதையுண்டுகிடந்த ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் வரலாற்றாளர்களுக்குப் பெரும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.
பசுக்களைக் கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு இறந்துபோன வீரன் 'அந்துவன்’ நினைவாக நடப்பட்ட வீரக்கல். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இந்தக் கல் தூய தமிழ்ச் சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 2,400 ஆண்டுகள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்திய அளவில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களில் மிகப் பழமையானது இது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பரந்த பாரத தேசத்தில் கல்லிலே பொறிக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள முதல் பெரும் வீரனின் பெயர் அந்துவன். வரலாற்றில் நாம் இதுவரை படித்த அனைத்து வீரர்களும் அந்துவனுக்குப் பிந்தியவர்களே. புலிமான்கோம்பைக்கு அடுத்து இருக்கும் தாதபட்டியிலும் காலத்தால் பழைமையான நடுகற்கள் கிடைத்துள்ளன. அதுவும் போர் வீரர்களின் புகழ் பேசுகிறது.
இந்திய நிலப்பரப்பின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த பேரரசன் அசோகன், தனது அரசு ஆணைகளை கல்லிலே பொறித்து, பெரும் ஸ்தூபிகளை உருவாக்கினான். சாஞ்சி ஸ்தூபி, பிப்ரவாஸ் ஸ்தூபி, பாரூத் ஸ்தூபி, நாகார்ஜுனா ஸ்தூபி என எண்ணற்ற ஸ்தூபிகள் அசோகனின் ஆணைகளைப் பறைசாற்றின. இதில் ஒரு ஸ்தூபிக்குப் பக்கத்தில் எழுப்பப்பட்ட கல்தூணில்தான், நான்கு சிங்கங்கள் முதுகை ஒன்றோடு ஒன்று இணைத்துக்கொண்டிருக்கும் சிற்பம் இருக்கிறது. இதுவே சுதந்திரத்துக்குப் பின்னர், இந்திய அரசின் சின்னமாக ஆக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் தன்னிகரற்ற இடத்தைப் பெற்ற இந்த ஸ்தூபிகளை, பேரரசன் அசோகன் அமைப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால், அவன் பயன்படுத்திய அதே எழுத்துமுறைகொண்டு, தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி, வைகைக் கரையில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் ஒரு வீரனின் புகழை அந்தக் கிராமத்து மக்கள் எழுதியிருக்கின்றனர்.
பேரரசும் பெரும் அதிகாரமும் இல்லாமல் சாமானிய மக்களால் எழுதப்படும் சரித்திரமாக இது இருக்கிறது. இந்தச் செய்தி இதுவரை எழுதப்பட்ட வரலாற்றைக் கலைத்துப்போடுகிறது. தமிழ்நாட்டின் கல்வி பற்றி, நாகரிகம் பற்றி இதுவரை சொல்லப்பட்டவை போதுமானவை அல்ல என்பதை இது உரக்கச் சொல்கிறது. சில அடி உயரம் உள்ள ஒரு கல் எழும்போது, சில நூறு வருடங்களாக இங்கு சொல்லப்பட்டுவரும் வரலாறுகள் சரியத் தொடங்குகின்றன. தோண்டி எடுக்கப்பட்ட அந்தக் கல் அந்துவனின் வீரத்தை மட்டும் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை... தமிழின் பெருமையையும் வளமையையும் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
காவியத்தில் அர்ஜுனனையும், வரலாற்றில் அசோகனையும் நன்கு அறிவோம். ஆனால், கால்நடைகளுக்கான 'விராட பர்வத்து’ போரிலே இறந்ததற்காக, அசோகன் காலத்துக்கு முன்னாலே நடுகல் அமைத்துப் போற்றப்பட்ட அந்துவனை இனிமேலேனும் அறிந்துகொள்வோம்.
அன்றைய பெரும் செல்வமான பசுக்களுக்காக உயிர்விட்ட அந்துவன், இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள பெரும் செல்வமாக மாறியிருக்கிறான். நடுகல் என்பது, வீரம், மொழி, வரலாறு, பண்பாடு எல்லாம் சம்பந்தப்பட்டது. நதியை படகால் கடந்து செல்வதைப்போல, காலத்தை, கல்லால் கடக்கும் முயற்சி.
இந்தக் கல்லின் பழைமையே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால், இந்தக் கல்லை எங்கு தேர்வுசெய்து, எப்படி நடவேண்டும் எனத் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கிய ஒருவன், அதற்கும் முன்னால் போய் நிற்கிறான். காலத்தை எட்டிப்பார்க்க முயலும் நம்முடைய கற்பனைத் திறனைக் கலங்கடிக்கிறான் தொல்காப்பியன்.
சிந்துவெளி நாகரிகத்தில்கூட தங்கத்தால் ஆன அணிகலன்கள்தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தங்கத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் இல்லை. அது தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது. அசோகர் காலத்துக்கு முன்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகல், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை; தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இந்த வரலாற்றுப் பெருமையைக் கையில் ஏந்தியபடி வடகரையில் கோதையும் தென்கரையில் அந்துவனும் நிற்கிறார்கள். இரண்டு கரைகளுக்கு இடையில் இருப்பது, நீரோடும் நதி அல்ல; நிலைகொண்ட நாகரிகம் என்பதை உலகுக்குச் சொல்லும் சாட்சியே இவர்கள்.
நடுகற்களை உருவாக்கும் முன் மனிதன் செய்த செயல் ஒன்று இருக்கிறது. அது மனிதனால் செய்யப்பட்டதுதானா என்பதில் தொடங்கி, அதை மனிதர்கள் ஏன் செய்தார்கள் என்பது வரை, பல கேள்விகளுக்கு இன்று வரை எவராலும் பதில் கண்டறிய முடியவில்லை.
பதில் கண்டறிய முடியாத கேள்விகளோடுதான் வைகையின் பயணம் தொடங்குகிறது!
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம் !சு.வெங்கடேசன் படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஓவியம்: ஸ்யாம்
வைகை நதி, மலை இறங்கித் தரை தொடும் பகுதியில் இருக்கும் கிராமங்களில் ஒன்று, வெம்பூர். இது ஒரு பள்ளத்தாக்கைப் போன்ற பகுதி. வெம்பூரின் தோட்டந்துரவுக்குள் பெரும் பெரும் பாறைகள் நடப்பட்டு வரிசைவரிசையாக நிற்கின்றன. இவை நடப்பட்டு சுமார் 3,000 ஆண்டுகள் இருக்கும். இதுபோன்ற பாறைகளை, 'குத்துக்கற்கள் வரிசைகள்’ (Menhirs) என்கிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் இத்தகைய குத்துக்கற்கள் வரிசைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் கண்டறியப்பட்டபோது, 'இவ்வளவு பெரிய பாறைகளை மனிதர்கள் எப்படித் தூக்கி நிறுத்த முடியும்? இது மனிதர்கள் செய்தது அல்ல, ஏலியன்கள் நட்டுச்சென்ற கற்கள்’ எனக் கதை சொல்லப்பட்டது. இன்று வரை அந்தக் கதையை நம்புபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான குத்துக்கற்கள் வெம்பூரில் நீள்வரிசையில் நிற்கின்றன. மனிதர்கள் இதை ஏன் நட்டார்கள்? அறுவடை முடிந்தவுடனோ அல்லது துக்க காரியத்துக்காகவோ நடப்பட்டிருக்கலாம். அப்படி எனில், நீள்வரிசையில் மட்டும் ஏன் நடப்பட்டன? அதற்கான காரணங்கள் என்ன? சரிந்து நீளும் நிழல்களை வைத்து மனிதன் கண்டறிய நினைத்தது என்ன? - விடை தெரியாத கேள்விகள்!
நட்சத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு வானியலைக் கணிக்கும் முயற்சியாக இது இருக்கலாம். அதனால்தான் ஒரே திசை நோக்கி இவை இருக்கின்றன என சிலர் கூறுகின்றனர். இறந்த வீரர்களின் நினைவாக இவை நடப்பட்டன என்பது பொது உண்மை. இது நடுகல்லுக்கு முந்தைய வடிவம். மனிதன் இறந்தவுடன், அவனைப் புதைத்த இடத்தில் பெரும் பாறைகளைக் கொண்டுவந்து நட்டுவைத்தான். அதன் பின்னர் எழுத்துக்கள் கண்டறியப்பட்டவுடன், சிறிய கற்களைக் கொண்டுவந்து நட்டு அதில் இறந்தவனைப் பற்றி எழுதத் தொடங்கினான். இறந்தவனின் அடையாளமாக பெரிய பாறை இருப்பதைவிட, சிறிய எழுத்துக்கள் இருப்பதே சிறப்பு என அவன் கண்டறிந்ததே, நாகரிகத்தின் அடுத்த கட்டம். ஆக, எழுத்துக்கள் பிறக்கும்போதே பெரும் பாறைகளை உருட்டிவிட்டுத்தான் பிறந்திருக்கின்றன. எழுத்தின் வலிமை, அது தொடங்கிய இடத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி இன்றைய மக்கள் ஆட்சிக்காலம் வரை எழுத்துக்களை சவால் நிறைந்த ஒன்றாகப் பார்ப்பதற்குக் காரணம், அவற்றால் எவ்வளவு வலிமையான ஒன்றையும் சாய்த்துவிட முடியும் என்பதுதான். வெம்பூர் குத்துக்கற்கள் கைவிடப்பட்ட ஒரு பழக்கத்தின் கடைசி எச்சமாக இன்றும் இருக்கின்றன. யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராக உறைந்து நிற்கின்றன.
மனிதன் எடுத்தவுடன் எழுத்துக்களைக் கண்டறிந்துவிடவில்லை. குழந்தை முதலில் பென்சிலால் கிறுக்கி, குறுக்கும்நெடுக்குமாகக் கோடுகளைப் போட்டு, பின்னர் எழுதப் பழகுவதைப்போலத்தான் மனிதகுலமும். மனிதன் முதலில் ஓவியத்தைத்தான் வரைந்தான். அவனது கோடுகள், பழக்கத்துக்கு ஏற்ப கட்டுப்பட்டு, வளைந்து, நெளிந்து ஒரு வடிவத்தை அடைந்தபோது அவை எழுத்துக்கள் ஆகின. ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவம்தான் எழுத்துக்கள். ஓவியமும் எழுத்தும் தாயும் சேயும்போல. ஓவியத்துக்கு வயது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் என்றால், எழுத்தின் வயது சுமார் 3,000 ஆண்டுகள்தான். கோடுகளின் கடைக்குட்டிதான் எழுத்து.
ஆதிமனிதனின் முதல் கலைவெளிப்பாடாக உலகம் எங்கும் பாறை ஓவியங்களே இருக்கின்றன. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பாறை ஓவியங்கள் மிக முக்கிய சாட்சியம். எழுதப்பட்ட வரலாறுகளால் எட்டித் தொட முடியாத எல்லையை ஆதிமனிதனின் முதல் கிறுக்கல்கள்தான் ஆவணப்படுத்தியுள்ளன. வைகைக் கரையில் வளர்ந்த நாகரிகமும் தனது பழைமையான சாட்சியங்களை பாறை ஓவியங்களில்தான் பாதுகாத்துவைத்துள்ளது.
மனிதன் வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் அவனுக்குப் பெரும் ஓய்வு நேரம் கிடைத்தது. அந்த நேரங்களில், தான் இருந்த குகைகளில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தான். அப்படி வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்று ஆண்டிபட்டி - உசிலம்பட்டி கணவாய் பகுதியில், உள்ள சித்திரக்கல் பொடவில் உள்ளது. கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், முனைவர் செல்வக்குமார் இருவரும் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தனர். இந்த ஓவியத்தில் ஒரு யானையை ஆயுதங்களோடு சூழ்ந்து நின்று மனிதர்கள் வேட்டையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இன்றுபோல் யானைகளைத் தந்தங்களுக்காக வேட்டையாட வேண்டிய தேவை எதுவும் அன்றைய நாளில் உருவாகவில்லை. அப்படி எனில், இந்த ஓவியம் எதை உணர்த்துகிறது? மனிதன் யானைகளை ஏன் சுற்றிவளைக்கத் தொடங்கினான்?
யானைகளைப் பற்றி சங்க இலக்கியங்களில் எண்ணிலடங்கா குறிப்புகள் உள்ளன. காலத்தால் மிகப் பழமையான இலக்கியத் தொகுதிகளில் யானைகளைப் பற்றிய குறிப்புகள் இவ்வளவு அதிகம் இடம்பெற்றிருக்கும் மொழியாக தமிழ் மொழியே இருக்கக்கூடும். மலைகளே இல்லாத சோழர்களிடமே 60,000 யானைகள் இருந்தது என்றால், பெரும் மலைத்தொடர்களைக்கொண்ட சேரர்களிடமும் பாண்டியர்களிடமும் அதைவிட அதிக எண்ணிக்கையில் யானைகள் இருந்திருக்க வேண்டும். யானைகளைப் பற்றி நீண்ட நெடுங்கால அனுபவ அறிவு, நமது முன்னோர்களுக்கு உண்டு. அந்த அறிவின் பயனாகத்தான் யானையைப் பற்றி 'கரிநூல்’ என்ற நூலை உருவாக்கியுள்ளனர்.
ஆனால், இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. மறைந்துபோன அறிவுச்சொத்தில் இதுவும் ஒன்று. தமிழ்த்தாத்தா உ.வே.சா., யானைப் பாகர்கள் பலரிடம் யானை நூலைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். யானைகளின் குணநலன்கள், அவற்றுக்கு வரக்கூடிய வியாதிகள், அதைத் தீர்க்கும் முறை முதலியவை அந்தச் சுவடியில் இருந்ததாகக் கூறுகிறார். சாஸ்திர நூல் ஒன்று சொல்கிறது, 'குற்றம் செய்த பாகன், யானைக்கு முன் ஓடிப் பிழைத்தால் அவன் குற்றமற்றவன் ஆவான். யானையால் கொல்லப்பட்டு விட்டால் பாவமற்றவன் ஆவான்’ என்கிறது. கரிநூலும் யானைகளின் பலநூறு ரகசியங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு காலத்துக்கு முன் ஓடித் தப்பித்துவிட்டது. யானைகள் தாங்கள் குற்றமற்றவை என்பதை மனிதன் எழுதிய விதியை வைத்தே மனிதனுக்குச் சொல்லிச் சென்றுவிட்டன. கரிநூல் கிடைக்காவிட்டாலும், தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட சான்றுகளில் இருந்தும், வடமொழியில் எழுதப்பட்ட நூல்களில் இருந்தும் நாம் பல தகவல்களை அறிந்துகொள்கிறோம். யானைகளை எப்போது பிடிக்க வேண்டும், எப்போது பிடிக்கக் கூடாது, எந்த வகை யானைகளைப் பிடிக்கலாம், எந்த வகை யானைகளைப் பிடிக்கக் கூடாது, பிடிப்பதற்கு எந்த வழிகளைக் கையாள்வது போன்ற வழிமுறைகளை அறிய முடிகிறது.
உதாரணமாக, முதுவேனில் பருவத்தில் வெப்ப மிகுதியால் யானையின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்தக் காலம் யானைகளைப் பிடிக்க ஏற்ற காலம். அதேபோல இளங்கன்றுகளைப் பிடிக்கக் கூடாது, கருக்கொண்ட யானைகளையும், பாலூட்டும் யானைகளையும் பிடிக்கவே கூடாது என்கிறது பழங்குறிப்புகள்.
'பயப்பு’ என்றால் யானை பிடிக்க வெட்டப்படும் குழி என அர்த்தம். பெண் யானை இந்தக் குழியில் விழுந்துவிட்டதைக் கண்டு ஆண் யானை பேரொலி எழுப்புவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று சொல்கிறது. யானையின் பிளிறலில் இருந்து பீறிடும் காதலின் தவிப்பைப் பதிவுசெய்கிறது அந்தப் பாடல். மலையில் பெய்த பெருவெள்ளம் மரம், செடி கொடிகளை இழுத்துக்கொண்டு வைகை நதியை வந்தடைந்தது. அவ்வாறு வரும்போது யானையைப் பிடிக்கத் தோண்டப்பட்டிருந்த குழியை அது மேவிவிட்டது என்கிறது பரிபாடல். குழிவெட்டி யானைகளைப் பிடிப்பதைப் பற்றியும், பயிற்றுவிக்கப்பட்ட பெண் யானைகள் மூலம் ஆண் யானைகளைக் குறிப்பிட்ட பகுதிக்கு வரவைத்துப் பிடிப்பதைப் பற்றியும் பல சான்றுகள் பதிவாகியுள்ளன.
ஆனால், இதற்கு எல்லாம் முன் மனிதர்கள் வேல், வில் போன்ற எளிய ஆயுதங்களைக் கொண்டு யானையைப் பிடிக்க முயன்றுள்ளனர். எவ்வளவு பெரிய ஒரு வேலையும் முதல் அடியில்தான் தொடங்குகிறது என்பதைப்போல யானையைப் பிடிக்கும் மனித முயற்சியின் ஆரம்பகட்டமாக இதுவே இருந்துள்ளது. இந்த தொடக்கநிலையை எடுத்துச்சொல்லும் வரலாற்றுச் சான்றாக, சித்திரக்கல் பொடவில் உள்ள ஓவியம் இருக்கிறது. யானைகளைப் பிடிக்க தொடர்ந்து சண்டையிட்டு, பல உயிர்களை இழந்த மக்கள், ஒருநாள் யானையை வீழ்த்திய சந்தோஷத்தில் வரைந்த ஓவியமாக இது இருக்கலாம். மனதுக்குள் இருந்த ஆவேசத்தின் வெளிப்பாடாகவோ அல்லது சந்தோஷத்தின் பிரதிபலிப்பாகவோ இந்த ஓவியத்தைக் கருதலாம்.
இந்த ஓவியம் முக்கியமான செய்திகளை நமக்குச் சொல்கிறது. காட்டுக்குள் வேட்டை சமூகமாக மக்கள் இருந்த நிலையில், மதுரையில் அரசு ஒன்று உருவாகிவிட்டது. அந்த அரசின் தேவைக்காக யானைகளைப் பிடிக்கும் பொறுப்பு, காடுகளில் இருந்த பழங்குடி மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் யானையை வெல்லத் தொடங்கிவிட்டான். அதே நேரம் அரசுக்குக் கட்டுப்படவும் தொடங்கிவிட்டான். 'வீழ்ந்தது, சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த யானை மட்டுமா... அல்லது மனிதனுமா?’ என்ற விடை தெரியாத கேள்வியும் தோன்றிவிட்டது.
பாறையில் வரையப்பட்ட ஓவியம் சொல்லும் வரலாறு இது என்றால், பானை ஓட்டில் வரையப்பட்ட ஓர் ஓவியமோ கடல் கடந்த கதையைச் சொல்கிறது!
மதுரை மண்ணுக்குள்.. ரகசியங்களின் ஆதிநிலம் !சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்
வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கும் இடம், அழகன்குளம். இது ஒரு துறைமுக நகரம். தூரதேசங்களில் இருந்து கப்பல்கள் சதா வந்து போய்க்கொண்டிருக்கும் இடம்.
பனை அடர்ந்த அதன் கடற்கரையில், ஒரு நண்பகல் நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடற்கரை மணலில் கால் வைக்க முடியவில்லை. வீட்டில் சமையல் செய்ய பானை ஒன்றை வாங்கிவந்த ஒருவன், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கரையில் இருக்கும் பனைமர நிழலில் உட்கார்ந்தான். கண்கள் மூடி சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், கண்களைத் திறந்து பார்த்தான். கடலில் அசைந்தாடியபடி கப்பல் ஒன்று கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து போவது ஒன்றும் புதிது அல்ல. அவன் தன் வாழ்நாளில் எத்தனையோ கப்பல்களைப் பார்த்தவன்தான். ஆனால், நீல நிறக் கடலில் எழும் அலைகளினூடே ஏறி இறங்கியபடி வரும் அந்தக் கப்பல் தனித்துவமான அழகோடு இருப்பதை அவன் கூர்ந்து கவனித்தான். அதன் அழகு அவனை சும்மா இருக்கவிடவில்லை. தரையில் கிடந்த உலோகக் குச்சி ஒன்றை எடுத்தவன், அந்தக் கப்பலைப் பார்த்தபடியே கையில் வைத்திருக்கும் பானை ஓட்டின் மேல் கீற ஆரம்பித்தான். அவனது கீறல்களின் மூலம் கொஞ்ச கொஞ்சமாக அந்தக் கப்பல் கோட்டோவியமாகப் பதிவானது.
சிறிது நேரத்தில் கப்பல் துறைமுகம் வந்தடைந்தது. அவன் வெயில் தாழ்ந்தவுடன் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டான். ஆனால் துடுப்புகள் இழுக்கப்பட்டு, அலைகளுக்கு இடையே முன்னேறும் அந்த ரோமானியக் கப்பலின் ஓவியம் மண்பானையில் நிலைகொண்டுவிட்டது. இது ஒரு தற்செயலான பதிவுதான்; ஆனால், தத்ரூபமான பதிவு.
பானை ஓட்டில் பதிவான இந்த ஓவியம், ஓர் அபூர்வ ஆவணமாக மாறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கரையில் அலை விடாமல் மோதுவதுபோல காலம் வந்து அடித்து, அடித்து அந்தத் துறைமுகத்தையே மண்மூடச் செய்தது. காட்சிகள் மாறின; நூற்றாண்டுகள் உருண்டோடின; அந்த இடத்தில் ஒரு துறைமுகம் இருந்ததை இலக்கியத்தில்கூட யாரும் பதிவுசெய்யாமல் போயினர். தமிழர்களின் நினைவில் இருந்தே அழகன்குளம் அழிந்துபோனது. சுமார் 2,000 ஆண்டுகள் கழிந்த பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறையினர் 'கோட்டைமேடு’ என மக்களால் இன்று அழைக்கப்படும் அந்த மண் மேவிய பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினர்.
அப்போது மண்ணுக்குள் நொறுங்கிய நிலையில் சிதையுண்டு கிடந்த பானை ஓடுகள் கிடைத்தன. அதில் கையளவு அகலம் கொண்ட ஒரு பானை ஓட்டில் கீறி வரையப்பட்ட கப்பலின் கோட்டோவியம் ஒன்று இருந்தது. இதை ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள், இதில் வரையப்பட்டுள்ளது அன்றைய ரோமானியக் கப்பல் என்றும், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் உறுதிப்படுத்தினர். நெடுங்காலமாக கப்பல்கள் கடலில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்த ஒரு பழைய துறைமுகத்தில், முதன்முறையாக மண்ணுக்குள் இருந்து ஒரு கப்பல் மேலெழுந்து கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
பானை ஓட்டில் அந்தக் கப்பலின் கோட்டோவியம் வரையப்பட்டது என்னவோ ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் தற்செயல்கள்தான், பல நேரங்களில் வரலாற்றை வழிநடத்துகின்றன. பல்லாயிரம் மைல் தொலைவு நடந்த வணிகத்துக்கு 16 சென்டிமீட்டர் அகலம்கொண்ட ஒரு பானை ஓடுதான் சாட்சியம். மண் பானையின் மகத்துவம் சமையலில் மட்டும் அல்ல... சரித்திரத்திலும் இருக்கிறது.
கிரேக்கர்களும் ரோம் நாட்டினரும் அந்தக் காலத்தில் 'யவனர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் தமிழகத்தோடு நடத்திய கடல் வணிகம் குறித்து பல்வேறு சான்றுகள் உள்ளன.
புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம்... உள்ளிட்ட பல சங்க இலக்கிய நூல்களில் தமிழ்ப் புலவர்களும், கிரேக்கத்தைச் சேர்ந்த பெரிபுளஸ், ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரும் இந்த வர்த்தகத்தை விரிவாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த நெடிய கடல் போக்குவரத்து பற்றி, எழுத்தில் எழுதப்பட்ட எண்ணற்ற ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்கள் உண்டா என்ற கேள்விக்கு, சமீப காலமாக பல இடங்களில் இருந்து பதில்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அழகன்குளத்தில் கண்டறியப்பட்ட பானை ஓட்டு ஓவியம். அவர்கள் அங்கு இருந்து வந்து வணிகம் செய்தனர். சரி, தமிழர்கள் அங்கே போய் வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உண்டா என்றால், நம்மை ஆச்சர்யப்படவைக்கும் தகவல்கள் நிறையவே உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் அமைந்துள்ள பண்டைய துறைமுகங்களான க்வெசிர் அல்காதிம், பெரெனிகே ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் 'க(ண்)ணன்’ 'சா(த்)தன்’ 'கொ(ற்)ற(ப்) பூமான்’ என்ற தமிழ்ப் பெயர்கள் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தில் ரோமானியக் கப்பல் ஒன்று பானை ஓட்டில் பதிவான அதே காலத்தில், எகிப்து நாட்டின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ரோம நாட்டுத் துறைமுகத்துக்கு தமிழ்ப் பெயர்கள் பதிவான மண் பானைகள் போய்ச் சேர்ந்தன. பாறையில் எழுதுவதைவிட பானையில் எழுதுவதே காலம்கடந்தும் நிலைத்திருக்கிறது. அதிசயம் என்ற சொல் இல்லாவிட்டால், இவற்றை எல்லாம் நாம் எப்படி வகைப்படுத்த முடியும் எனத் தெரியவில்லை.
இவையாவது வெறும் பெயர்கள் மட்டும்தான். ஆனால், பெயர் இல்லாத ஓர் அரிய கையெழுத்துச் சுவடி, ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ளது. ரோமானிய நாட்டு வணிகனுக்கும், தமிழகத்து வணிகனுக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் அது. பாப்பிரஸ் தாளில் எழுதப்பட்டது. இந்திய வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரைச் சென்று சேருவது சம்பந்தமான ஒப்பந்தம் அது. அங்கு இருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ரோம் நாட்டை அடைவதற்கு, வேறு ஓர் ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால், அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு, கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்தனர் என்பதை நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. பெருங்கதையின் நாயகன் உதயணனும், அவனது மனைவிகளில் ஒருத்தியான மான்னீகையும் யவன மொழியை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகின்றனர்.
நம் நூலகங்களில் இருக்கும் பெருங்கதை சொல்லும் உண்மையைத்தான், ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த ஒப்பந்தமும் சொல்கிறது. சரி, ஆஸ்திரியா எங்கே இருக்கிறது... அழகன்குளம் எங்கே இருக்கிறது. இவ்வளவு நெடுந்தொலைவு கடல் பயணம் எல்லாம் சங்கக் காலத்தில் எப்படிச் சாத்தியமானது எனக் கேட்டால், அரபிக் கடலில் அடிக்கும் பருவக்காற்றைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர். கடலில் வீசிய 16 வகையான காற்றையும், எண்ணற்ற கடல் நீரோட்டங்களைப் பற்றிய ஞானமுமே இந்தப் பயணத்துக்கு பாதை அமைத்திருக்கிறது. இயற்கையைப் பற்றிய அபரிமிதமான அறிவே, கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.
கி.பி முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியால் கிரேக்கத்தில் இருந்து அரபிக் கடலினூடே பயணம்செய்து, தமிழகத்துக்கு வந்து சேரும் ரகசியத்தைக் கண்டுபிடித்தான். அதற்கு முன்பு வரை கிரேக்கக் கப்பல்கள் கரை ஓரமாகவே நெடுந்தொலைவு சுற்றி, தமிழகத்துக்கு வந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குப் பின், மிக விரைவாக தமிழகத்துக்கு வந்துசேர்ந்தன. கிரேக்கர்கள் அந்தப் பருவக்காற்றை, அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ்ஸின் பெயரிலேயே, 'ஹிப்பலஸ் பருவக்காற்று’ என அழைத்தனர்.
முசிறியில் இருந்து கப்பல்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செங்கடல் துறைமுகத்தை 40 நாட்களில் சென்று அடைந்திருக்கின்றன. அரபிக்கடலில் வீசும் பருவக்காற்றைப் பயன்படுத்தி நிகழ்ந்த பயணமாக இது இருந்துள்ளது.
பருவக்காற்றை நம்பிய இந்தக் கடல் பயணம், பெரும் செல்வத்தைத் தந்ததைப் போலவே பெருந்துயரத்தையும் தந்திருக்கிறது. பருவக்காற்றின் திசையைக் கணிக்க முடிந்த மனிதனால் அதன் வேகத்தையும் விபரீதத்தையும் கணிக்க முடியவில்லை. கப்பல் ஏறிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும், மீண்டும் கரை வந்து சேருவது என்பது சாதாரணமாக நடந்துவிடவில்லை. ஒவ்வொரு கடல் பயணமும் வாழ்வின் கடைசிப் பயணமாக அமையும் வாய்ப்பையே அதிகம் கொண்டிருந்தது.
சாதுவன் என்கிற வணிகன் பூம்புகாரில் இருந்து சாவக் தீவுக்கு வணிகம் செய்யப்போகிறான். அவன் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கிவிட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். ஆனால், சாதுவன் மட்டும் கையில் கிடைத்த மரக்கட்டையின் உதவியால் நீந்தி நாகர் மலைத் தீவில் கரையேறி, பின்னர் நீண்ட காலம்கழித்து மீண்டும் ஊர் திரும்பும் கதையை மணிமேகலை கூறுகிறது.
கடல் பயணத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்டவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வந்தபோது, நிலைமை எப்படி இருந்திருக்கும்? 'அய்யோ... வந்திருப்பது பேயோ, பிசாசோ..!’ என ஊரே அலறியடித்து ஓடியிருக்கும். ஓடும் கூட்டத்துக்குள் தனது மகளும் மகனும் இருப்பதைப் பார்த்தவன் என்னவாக ஆகியிருப்பான்? எந்த உயிர்களையும் உறவுகளையும் பார்ப்பதற்காக அவன் மரணத்தோடு போராடி மீண்டு வந்தானோ, அந்த உறவுகள் மரணத்தைவிட வலி நிறைந்த வாழ்வைப் பரிசாக வழங்கியிருக்கும்.
இந்தக் கதை, அன்று கப்பல் ஏறிய ஒவ்வொரு மனிதனையும் பின்தொடர்ந்த கதைதான். காற்றையும் கடலையும் எதிர்கொள்ளும் நெடுந்தொலைவுப் பயணம், கணக்கு இல்லா கண்ணீரை தனது குடும்பத்தினர் சிந்துவதன் மூலம்தான் நிறைவேறியிருக்கும். வணிகத்தின் கொடுக்கல் வாங்கல் என்பது நாகரிகம், பண்பாடு, தொழில்நுட்பம் அனைத்தையும் ஓர் எல்லையில் இருந்து இன்னோர் எல்லைக்குக் கைமாற்றுகிறது. ஆனால் மாற்ற முடியாததாக இருந்தது, கடலில் போனவனுக்காக கரையில் இருந்தவர்கள் சிந்திய கண்ணீர்.
வரலாறு மற்றும் தொல்லியல் சான்றுகள் வணிகத்தால் ஏற்பட்ட வளமையைப் பேசின. ஆனால், அந்த வணிகக் குடும்பத்தினரின் தவிப்பையும் இழப்பையும், இலக்கியங்களும் பண்பாடும்தான் பதிவுசெய்தன.
எகிப்து நாட்டின் துறைமுகத்தில் கிடைத்த பானை ஓடும், ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வணிக ஒப்பந்தமும், அழகன்குளத்துப் பானை ஓட்டு ஓவியமும் இந்த வணிகம் சிறப்பாக நடந்ததற்கான விஞ்ஞானபூர்வமான சான்றை உலகுக்குத் தந்துள்ளன. அந்தச் சான்றை மேலும் உறுதிப்படுத்த இலக்கியம் கடல் அளவு கண்ணீரைத் தனக்குள் தேக்கிவைத்திருக்கிறது.
அந்தக் கண்ணீர் அழகன்குளத்துப் பானை ஓட்டில் வரையப்பட்ட கோட்டோவியத்துக்கு வேறு ஒரு கதையைச் சொல்கிறது!
தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக இசைக்கப்படும்போது, அந்த கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.
வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.
அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடந்தன.
வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும் வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.
வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப் படிக்கவில்லை.
வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும் அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.
ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில் காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக் கதை சொல்லியிருந்தால், தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?
வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப் போராட்டத்தைச் சொல்லவில்லை. திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச் சொல்லவில்லை. அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர். அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது