By Mayura Akilan | Updated: Tuesday, April 14, 2015, 18:10 [IST]
சென்னை: பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா?
இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.
தாலி அகற்றும் போராட்டம் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுடன் போலீஸ் பாதுகாப்போடு தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது இன்று காலை 7 மணிக்கு பெரியாரி திடலில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
10 மணிக்குள்ளாகவே தாலிகளை அகற்றி போராட்டத்தை நடத்தி முடித்தனர். தாலியை அகற்றி அக்னி சாட்சியாக உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர் மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று கழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி வரவேற்பு கொடுத்தனர். மாட்டுக்கறி பிரியாணி தாலி அகற்றும் போராட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வந்திருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி போடப்பட்டது. தாலியை அகற்றிய பெண்களும்... அதை கையில் வாங்கியவர்களும் மாட்டுக்கறி பிரியாணி விருந்துண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
போராட்டம் வெற்றியாம் இத்தனை களேபரங்களும் நடந்து முடிந்த பின்னர் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு பெரியார் திடலுக்கு வரும் முன்னர் போராட்டம் முடிந்து போயிருந்தது.
தாலி அகற்று விழா- கி. வீரமணி அறிவிப்பு! வரிந்து கட்டி எதிர்க்கும் தமிழ்த் தேசிய வலைவாசிகள்!! By Mathi | Updated: Friday, March 20, 2015, 17:02 [IST] சென்னை: தமிழகத்தில் இப்போது அரசியல் விவாதங்களை விட பிரதானமாக ஓடிக் கொண்டிருப்பது 'தாலி' பற்றியதுதான்.. அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ஏப்ரல் 14-ந் தேதியன்று 'தாலி அகற்றும் விழா'வை நடத்துவோம் என்று அறிவிக்கப் போக தமிழ்த் தேசிய வலைவாசிகளோ அதெப்படி இப்படி அறிவிக்கலாம் என வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெண்களுக்கு தாலி பெருமையா? சிறுமையா? என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. அதை ஒளிபரப்பப் போவதாக முன்னோட்டங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த முன்னோட்ட விளம்பரங்களில் சில பெண்கள் தாலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஒரு சில இந்து அமைப்புகள் புதிய தலைமுறைக்கு எதிராக போராடத் தொடங்கின. இதனால் அந்நிகழ்ச்சியையே ஒளிபரப்புவதை புதிய தலைமுறை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் திடீரென புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது அணுகுண்டு பட்டாசுகள் அடங்கிய டிபன் பாக்ஸை ஒரு கும்பல் வீசிவிட்டு செல்ல பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்துசேனா என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கி. வீரமணி, ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தந்தைபெரியார் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காயமாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்குகிறோம் என்று சொல்லி மேடைகளிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றனவே. கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலே எங்கள் சகோதரிகளை எல்லாம் நீங்கள் அவமானப்படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின்றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? தாலி புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவதற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது. இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா? என்றார் வீரமணி. வீரமணியின் இந்த அறிவிப்பையடுத்து தமிழ்த் தேசியம் பேசுவோர் உள்பட பலரும் 'தாலி புனிதமானது.. தமிழர் பண்பாட்டுக்குரியது' என்று.. அதை எப்படி அறுக்கலாம் என சொல்வீர்கள் என கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அதேநேரத்தில் தாலி அகற்றும் நிகழ்வு என்பது 80 ஆண்டு கால திராவிடர் இயக்க மேடைகளில் நடத்தப்படுவதுதான்.. இன எதிரிகள் எதிர்ப்பதற்கு பதில் அவர்களது அடிமைகள் எதிர்த்து நல்ல விளம்பரம் தேடித் தருகிறார்கள் என்றும் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் கி. வீரமணி ஆதரவாளர்கள்.. இன்னும் ஒரு மாதத்துக்கு 'தாலி அகற்றுதல்'தான் ஹை டாபிக் போல!!
சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!
பெண்ணுரிமை அடிப்படையில் தானாக முன்வந்து
தாலியை அகற்றிக் கொள்வது சட்டப்படியானதே!
வழக்கு வரும்போது நீதிமன்றத்தில் முறைப்படி சந்திப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 காலை) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கும் தாலி அகற்றும் நிகழ்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியார் திடலில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியின் சட்டப்படி யான கொள்கைப்படியான நிலையை எடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி
திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிரான புகார்மீது வழக்குப் பதிவு,
வேப்பேரி போலீசுக்கு, அய்க்கோர்ட் உத்தரவு, என்று தலைப்புகளிட்ட ஒரு செய்தி தினத்தந்தி (11.4.2015) நாளேட்டில் வெளி வந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
அதில் ஒரு நபர் அகில இந்திய இந்து மகாசபையின் மாநிலத் துணைத் தலைவராம்; இன்னும் ஒரு வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளித்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் வீரமணிக்கு எதிராக நான் புகார் மனுவை அளித்துள்ளேன்.
அதில் (செய்தியில் உள்ளபடி)
திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி வருகிற 14ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு தாலி அகற்றம் என்ற நிகழ்ச்சியை நடத்திட திட்டமிட்டு அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு மன வேதனை அளிக்கும் அவரது செயல்பாட்டை, தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. எனவே என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த மனுக்களையெல்லாம் தன்னுடைய சேம்பரில் வைத்து நேற்று விசாரித்தார்!
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் புகாரை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம் தான் இந்த புகாரைக் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், வேப்பேரி - போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையருக்கு இதற்கு முன்பே கழகத்தின் சார்பில் தகவல்
நாம் இதற்கு முன்னாலேயே சென்னை போலீஸ் கமிஷனருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வரும் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அண்ணல் அம்பேத் கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்புடன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்றும் அதில் பெண்ணுரிமை, உண்ணுரிமை, கருத்து ரிமைகள் வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என்றும் அது பெரியார் திடலில் நடைபெறும் என்றும் முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். (30.3.2015).
ஏனிந்த அறிவிப்பு?
ஒரு தொலைக்காட்சி தாலி பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டது; இந்துத்துவ மதவெறியர்கள் உள்ளே புகுந்து பணியாளர்களை அடித்தனர். காமிராவை உடைத்தனர்.
பிறகு அவ்வலு வலகத்தை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசி அச்சுறுத்தி, தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் மிரட்டி, கருத்துரிமையைத் தடுத்ததை எதிர்த்து, சென்னையில் நடந்த பல கட்சியினர் தலைவர்கள் கூட்டத்தில் பலத்த கண்டனம் எழுந்தது. அதில் கலந்து கொண்ட தாய்மார்களும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும், தாலிகளைப் பொறுத்த வரை ஒரு அடிமைச் சின்னம், அதை அகற்றிக் கொள்வ தாகவும், அதன் மூலம் எங்களது கருத்துரிமையைப் பாதுகாக்க விழைகிறோம் என்றும் என்னை சந்தித்துக் கூறிய நிலையில், அம்பேத்கர் விழாவையொட்டி அதில் தாங்களே விருப்பப்பட்டு முன்வரும் பெண்கள் - தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் திட்டமிட்டே சிலர் தாலி அறுப்புப் போராட் டம் என்று விஷமத்தனமாகத் தலைப்பிட்டு, தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு, சில நாள்களுக்கு முன்பு கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிய நிலையில் (1.4.2015) அவர்கள் அறுப்பு என்பதை மாற்றிக் கொண்டனர்.
சில விஷமிகளும், மதவெறியர்களும்,இதை வைத்து விளம்பரம் தேடிட முனையும் சில வெட்டி ஆசாமிகளும், இன்னமும் அறுப்பு அறுப்பு என்றும், போராட்டம் என்றும் எழுதி வருகின்றனர்.
இது தாலி அறுப்பும் அல்ல. (மதச் சடங்கு செய்வோர் தான் பெண்களை விதவையாக்கச் செய்யும் செயல் அது) போராட்டமும் அல்ல!
இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்று சிலர் பேசுவது, எழுதுவது, புகாரில் கூறுவது ஒன்று அறியாமை அல்லது விஷமத்தனமே!
காரணம், தாலி கட்டாது திருமணம் செய்ய இந்து திருமணச் சட்டத் திருத்தமாகத்தான் (Act No.21 of 1967 - Hindu Marriage Act 1955 - - இது போலவே புதுச்சேரி அரசும் சட்டத் திருத்தம் செய்துள்ளது - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டுள்ளது) அறிஞர் அண்ணா முதலமைச்சரான நிலையில், ஏகமனதாக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண சட்டம் நிறைவேறியதோடு, பின்னோக்கி, முன்பு நடந்த சுயமரியாதைத் திருமணங் களும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது. புரட்டானது - பொருளற்றது.
காரணம் ஹிந்து மதத்தில் - வேத மதத்தில் இப்படி ஒரு சடங்கே இல்லை.
இது போராட்டமும் அல்ல. பெண்ணுரிமைப் பெம் மானான டாக்டர்அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா அன்று.
பெண்கள் தாங்களே - எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ, இன்றி, தெளிவான துணிவான உணர்வுடன் முன் வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர்.
இது அவர்களது தனி மனித சுதந்திரம்! இதைப்பறிக்க - தடுக்க எவருக்கும் சட்டப்படியும், நியாயப்படியும் உரிமை இல்லை.
எங்களது வற்புறுத்துதலோ, அல்லது தவறான ஈர்ப்போ (Lure) கூட கிடையாது.
சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயமல்ல!
அறிஞர் அண்ணா ஆட்சியில் தந்தை பெரியார் விருப்பப்படி நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண செல்லுபடிச் சட்டத்தில் தாலி அணிந்து கொள்ளாத திருமணமும் சட்டப்படி செல்லும் என்று கூறப்பட்டுள்ளதே!
சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாது
இதுதான் நமது விளக்கம்; எந்தவித ஆர்ப்பாட்டம், அமளி இன்றி, அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா பெரியார் திடலில் நடைபெறும்; எங்களால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, அமைதியின்மையோ ஏற்படாது என்பது உறுதி!
ஆனால், இதற்கிடையில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராம. கோபாலன் நாங்கள் அன்றைக்கு (14 அன்று) என்ன செய்வோம் என்று இப்போது சொல்ல மாட்டேன் ஒன்று நடக்கும் இப்போது சொன்னால் போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் கூறியுள்ளார். இத்தகவல் மூலம் கலவரம் - வன்முறையை அவர்கள் நம்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
வழக்கம்போல் திராவிடர் கழகத் தொண்டர்கள் தோழர்கள் எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டாலும் கட்டுப்பாடு காத்து நடந்து கொள்ளுவார்கள்.
இந்து மதம் என்பதில் பார்ப்பனப் பெண்கள் உட்பட பலர் அணிவதில்லை என்பதும் மறுக்க முடியாது.
கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கம் இது! சட்டப்படி நமக்குள்ள உரிமையை எவரும் பறிக்க முயன்றால் அவர்கள் தோல்வியை அடைவர். அதனை உரிய முறையிலும் சந்திப்போம். இது உறுதி!
திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தடை விதிப்பதற்கு முன்பாக, தாலி அகற்றும் விழா நடத்தி முடிக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICEImage captionநீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக 21 பெண்கள் தங்கள் தாலிகளை அகற்றினர்.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஏப்ரல் 14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முன் அனுமதிபெறவில்லையென்று கூறி சென்னை நகரக் காவல்துறை தடைவிதித்தது. இதையடுத்து, இந்தத் தடையை நீக்கக் கோரி, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை திங்கட்கிழமை மாலையில் விசாரித்த நீதிபதி ஹரி பரந்தாமன், நிகழ்ச்சியை அமைதியாக நடத்துமாறும் அதற்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கூறினார்.
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று அதிகாலையிலேயே இந்த மனு விசாரிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பெரியார் திடல் முன்பாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
21 பெண்கள் தாலி அகற்றினர்
விழாவை காலை 10 மணிக்குத் துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தாலி அகற்றும் விழா ஏழு மணிக்கே துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த விழாவில் பங்கேற்று 21 பெண்கள் தங்கள் தாலிகளை அகற்றினர்.
இதற்கிடையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு காலை 10 மணியளவில் வந்து சேர்ந்ததும், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின் பிற நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டன. அதற்குப் பிறகும், தாலியை அகற்றுவதற்காக வந்த தம்பதிகளை திராவிடர் கழக நிர்வாகிகள், நீதிமன்ற உத்தரவை சொல்லி, திருப்பி அனுப்பிவைத்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்ததுத்துவ சக்திகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும் நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தாலி குறித்த விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில், சில இந்து அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக, அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. அதற்குப் பின் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது டிபன் பாக்ஸ் குண்டும் வீசப்பட்டது.
இதையடுத்து, நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் சார்பில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதற்குப் பல இந்து அமைப்புகள் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தன.
இன்றைய தினம் பழைமையின் கல்யாண முறைகள் மாற்றப்பட்டு புதிய முறையில் வாழ்க்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியதற்குக் காரணமே பெண் அடிமையினை ஒழிக்கவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவுமேயாகும்.
பழைய முறையில் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை உடைய பெண்கள் சமுதாயம் ஆணுக்கு அடிமையாக இருக்க வழி வகைகளை செய்யக் கூடியதாகவே இருந்தது.
பழைய முறைகளுக்கு நூல்களோ, சாத்திரங்களோ பெண்களை ஒரு உயிருள்ள ஜீவன் என்றுகூட கருதி நடத்தவில்லை.
இத்தகைய முறைகள் மூலம் பெண் அடிமை நீக்கப்படுகின்றது. பெண்கள் ஆணுக்கு அடிமை அல்ல, இருவரும் சமமான அந்தஸ்து உடையவர்களே என்பது நிலைநாட்டப்படுகின்றது.
அடுத்து முட்டாள்தனங்கள்; அர்த்தமற்ற சடங்குகள் ஒழிக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமான சங்கதிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதன் திருமணம் ஆன பிறகு தமது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு மட்டும்தான் தமது தொண்டு உழைப்பு என்று கருதுகிறார்களே ஒழிய மனிதனாகப் பிறந்தவன் மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை விட்டு விடுகின்றார்கள்.
எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்வதை, தவறு சட்டப்படி குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதுபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்.
நாங்கள் கூறுவது பலருக்கும் பிடிக்காது. கடவுள், மதம் பற்றி நாங்கள் கண்டிப்பது கண்டு ஆத்திரமும், வேதனையும் படுகின்றார்களே- அதுபோலத்தான் இதுவும்!
----------------------------15.4.1973 அன்று வேலூரில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 2.5.1973)
திருமணம் என்கின்ற நிகழ்ச்சி ஒரு தேவை இல்லாத நிகழ்ச்சியாகும். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியானது முன்பு பார்ப்பனர்களுக்குத்தான் தேவைப்பட்டது, நமக்கல்ல. பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது பெண்களைக் கூட்டிக் கொண்டு வரவில்லை. அவர்கள் தங்களுக்கு இந்த நாட்டுப் பெண்களையே மனைவியாக்கிக் கொள்ள முற்பட்டார்கள். நம் நாட்டுப் பெண்கள் அவர்கள் இஷ்டப்படி அடங்கி நடக்கவில்லை. அதன் காரணமாக நம் பெண்களை அடக்கி ஆள அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறைதான் விவாகம், பாணிக் கிரகணம், கல்யாணம் முதலியனவாகும்.
எதைக் கொண்டு சொல்லுகின்றேன் என்றால், தமிழர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றதும், மிகவும் பழைமையானதும் ஆன தொல்காப்பியத்தைப் பார்த்தே கூறுகின்றேன்.
பார்ப்பனர்கள் நம் பெண்களைத் தங்கள் இஷ்டப்படி அடக்கியாளவே காரணங்களை ஏற்படுத்தினர். பொய்யும், கழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று நாட்டில் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு நடப்பதற்காக காரணங்களை ஏற்படுத்தினார்கள் என்பது.
நம் புலவர்கள் அய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காது. அறிவால் மேற்பட்ட பெரியோர்கள் என்று முட்டாள்தனமாக வியாக்கியானம் பண்ணுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கும் கூறுவேன், தொல்காப்பியர் அவர்கள் அடுத்த சூத்திரத்திலேயே கூறுகின்றார்.
திருமண முறை என்பது மேல் ஜாதிக்காரராகிய பார்ப்பன, சத்திரிய, வைசியர்களாகிய மூன்று பிரிவினர்களுக்கும்தான் இருந்தது. பிறகு பிற்காலத்தில் கீழ் ஜாதிக்காரர்களுக்கும் அது புகுத்தப்பட்டது என்று.
எனவே, பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தில்தான் திருமண முறை பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது.
நம் முன்னோர்களோ, புராணிகர்களோ, புலவர்களோ எவருமே பெண்களை ஒரு மனித ஜீவன் என்று கருதி கருத்தினை வெளியிடவே இல்லை.
அனைவராலும் பாராட்டப்படுகின்ற வள்ளுவன்கூட பெண்களைப்பற்றி மிகக் கொடுமையாகத்தானே பாடி இருக்கின்றான்.
பெண்களுக்குச் சுதந்திர வாழ்வு வேண்டும், ஆண்களுக்கு அடிமை என் கின்ற நிலை மாறவேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்படுவதுதான் இப்படிப் பட்ட மாறுதல் திருமணமாகும்.
பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். அவசரப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்துவிடக் கூடாது. படித்து முடித்து ஒரு தொழிலுக்குச் சென்ற பிறகே திருமணம் பற்றிப் பேச வேண்டும். அதுவும் திருமணச் சங்கதியைப் பெண்ணின் இஷ்டத்திற்கு விட்டுவிட வேண்டும். அவர்களாக தங்களுக்கு ஏற்றவரைத் தெரிந்து எடுத்துக் கொள்வார்கள்.
------------------------------
28.4.1973 அன்று திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (`விடுதலை, 9.5.1973).
இல்லறமல்லது நல்லறமில்லை மனித இனம் தற்போது நாகரிகம் பெற்று சிறந்து விளங்குவதற்குக் காரணம் திருமணம். அவர்தம் வாழ்க்கை முழுமையான பயனைப் பெறுவது திருமண வாழ்விற்குப் பிறகுதான். அத்திருமண முறைகள் நாட்டுக்கு நாடு, சமயத்திற்குச் சமயம், சாதி, மொழி போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. தலைவனும் தலைவியும் மனம் ஒன்றுபட்டு திருமண வாழ்வில் ஈடுபடும்போது அவ்வாழ்வு சிறக்கின்னறது. அறத்தோடு கூடிய இல்லற வாழ்வு இன்னும் ஒரு படி உயர்ந்து விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய இல்லற வாழ்விற்கு வழி வகுக்கும் திருமண முறைகள் எவ்வாறு இருந்தன என்பதை ஆராய்வதே இங்கு நோக்கமாகிறது. காதல் நெறி இயற்கை நெறியில் தலைவனும் தலைவியும் தனித்து வாழ்தல் என்பது இயலாது. மக்களினப் பெருக்கம் ஆடவரும் பெண்டிரும், கணவனும் மனைவியும் இணைந்து வாழ்தலைச் சார்ந்தது. தனித்து வாழ்ந்தால் வாழ்வின் பயன் முற்றுப் பெறாது. ஆணும் பெண்ணும் கலந்து வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது காதல். திருமணங்கள் பலவகையில் நிகழும் காதல் திருமணமே அனைத்திலும் சிறந்தது. உயர்ந்தது. காதல் திருமணத்தில்தான் சாதி, மத, மொழி, நிறம் போன்ற வேறுபாடுகள் இருக்காது. காதல் திருமணம் நிகழும் நிலையைக் கொண்டுள்ள மக்களினம் நாகரிகத்தில் உயர்ந்தது. பண்பாட்டில் சிறந்ததாகும். எந்தவித பந்தமும் இல்லாமல் உறவு கொண்டு காதல் வயப்பட்டு உள்ளங்கலந்ததை, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந் 40) என்ற குறுந்தொகை பாடல் நமக்கு அழகாக விளக்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் காதல் திருமணமே வழக்கில் இருந்துள்ளது. பருவம் அடைந்த தலைவனும் தலைவியும் தம்முள் கலந்து பழகி நட்பு கொண்டு ஒழுகும் ஒழுகலாற்றைக் களவு என்று அழைத்தனர். தம் சுற்றமோ, தம்மைச் சார்ந்தவர்களோ அறியா வண்ணம் பழகுவதால் அதனைக் களவு என்றே சுட்டுகிறார் தொல்காப்பியர். இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் காமக் கூட்டம் காணுங்காலை மறை ஓர் தேயத்து மன்றல் எட்டனுற் துறையமை நல்லியாழ்த் துணைமையார் இயல்பே (தொல்.கள.89) என்ற நூற்பாவில் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் போன்ற எட்டுவகை மணங்கள் இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழர்க்கும் வடமொழியாளரை மறையோர் என்று குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். தேவருலகத்திலுள்ள கந்தருவ குமாரரும் அவர் கன்னியரும் தம்முள் எதிர்பட்டுக் கண்டு மணங்கொள்வது போலத் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடுவது காந்தருவம். இக்காந்தருவ முறையே தமிழரின் காதல் முறைக்கு ஒத்துள்ளது. ஒரே நிலத்தைச் சார்ந்த தலைவனும் தலைவியுமோ வெவ்வேறு நிலத்தைச் சார்ந்த தலைவனும் தலைவியுமோ ஊழின் துணையால் சந்திப்பது உண்டு. ஆனால் சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் நிலைத்திருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் காதல் திருமணத்தால் அவை அழிந்துவிடுமோ என்று அஞ்சியே காதல் திருமணத்தை வெறுக்கின்றனர். சாதி, மத, நிற, வேறுபாடுகளைக் கொள்ளாத தொல்காப்பியர் காலத் தமிழினம் காதல் மணத்தைப் போற்றியது. இலக்கியத்திலும் காதல் தமிழினம் காதல் மணத்தைப் போற்றியது. இலக்கியத்திலும் காதல் மணமே காணப் பெறுதல் வேண்டும் என்று கருதினார் தொல்காப்பியர். காதல் திருமணமே நாகரிகத்தின் உச்ச நிலையாகும். கற்பெனப்பட்டது திருமணமே களவு வெளிப்பட்டுவிட்டால் கற்பு நிலையை எய்துதல் வேண்டும். அதாவது இருவருக்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும் காந்தருவம் கற்பின்றி அமையும். களவு கற்பின்றி அமையாது என்பார் நச்சினார்க்கினியர். கற்பு என்பது பெண்களுக்குரிய தனிமைப் பண்பு என்று கருதப்படுகிறது. தான் மணந்து கொண்ட ஆடவன் ஒருவனையன்றி வேறு ஒருவனை உள்ளத்தாலும் விரும்பாத இயல்புதான் கற்பாகும் என்பர். திருமணத்திற்கு வரைதல் என்ற பெயருமுண்டு. வரைதல் என்றால் வரையறுத்துக் கொள்ளுதல் என்று பொருள்படும். பலர்க்கும் உரியவளாம் தகுதி வாய்ந்த ஒருத்தியைத் தனக்கே உரிமையாக்கிப் பிறர் உரிமையினின்றும் நீக்கிக் கொள்ளுதல் தான் திருமணம். மணமற்ற வாழ்வு பிண வாழ்வு என்று கருதிய நாடுகளும் உண்டு. மணவாழ்வினையே தொல்காப்பியர் கற்பு என்கிறார். இதனை, கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்ற நூற்பாவியன் வழி அறியலாம். தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் காரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும். காதலிக்கும் ஒருவன் காதல் மகளை மணந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுமேல் தமரின்றியும் மணந்து கொள்வான். இதனை, கொடுப்போரின்றியும் கரணமுண்டே புணர்த்துடன் போகிய காலை யானே (தொல்-கற்.141) என்பதன் மூலம் உணரலாம். திருமண முறையில் சாதி வேறுபாடு என்பது இல்லாதிருந்தது. வருண வேறுபாடு புகுந்த பின்னர் சாதிகள் நிலைத்த பின்னர் வருணத்துக்கு ஒரு முறையும் சாதிக்கு ஒரு பழக்க வழக்கமும் ஏற்பட்டு விட்டன. இவை ஏற்பட்ட பின்னர், மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர் காகிய காலமும் உண்டே என்ற நூற்பா இடைச் செருகலாகப் புகுத்தப்பட்டுள்ளது. கரணம் தோன்றக் காரணம் கரணம் என்பதனை வதுவைச் சடங்கு என்று கட்டுகிறார் இளம்பூரணர். கரணம் என்பது ஊர்க்கணக்கு எழுதுவோரைக் குறிப்பதும் உண்டு. பழங்கால முறைப்படி திருமணம் கொள்வோர் திருமணத்துக்கு முன்னால் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் மனமகள் வீட்டில் கூடி எழுதி உறுதிப்படுத்திக்கொள்வதைக் காணலாம். இந்நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும் வெற்றிலைப்பாக்கு மாற்றுதல் என்றும் அழைப்பர். தொல்காப்பியர் கால வழக்கமே இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது என்றால் குற்றம் ஏதேனும் உண்டோ? கணவனும் மனைவியும் காதலால் கூடுதல் வேண்டும். காதலால் கூடிய ஆடவரும் மகளிரும் கணவன் மனைவியாக இணைந்து என்றென்றும் வாழ வேண்டும். மறைவாகக் காதல் பூண்டு ஒழுகி மகளிர் நலம் துய்த்து விட்டப் பின்னர் மகளிரைக் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர். பல பூக்களை நாடும் வண்டினைப் போல பிற பெண்களை ஆசை வார்த்தைக் கூறி அடிப்படுத்தும் ஆடவர்கட்கெல்லாம் பொய்யும் வழுவும் நிகழாமல் தடுத்தபொருட்டும் காதலிப்போர், பலரும் அறியக் கடிமணம் புரிய வேண்டும் என்ற விதியினைப் பழங்கால முன்னோர் விதித்தனர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்-கற்-143) என்னும் தொல்காப்பிய நூற்பா மணவினைச் சடங்கு உருவான காரணத்தைக் குறிக்கிறது. கரணம் என்பதற்கு வேள்விச் சடங்கு என்பது நெருப்புக் கடவுள் சான்றாகப் புரோகிதர் முன் நின்று நடத்தும் முறையைக் குறிப்பிடுகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற்குப் பொருந்தாததாகும். இருப்பினும் கரணத்திற்குச் சான்றாக அகநானூற்றுப்பாடல் ஒன்று இருப்பதைக் காணலாம். உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை பெருஞ் சோற் றமலை நிற்ப நிரைகால் (அகம்-86) இதில் திருமண முறையாக, திங்களும் உரோகிணியும் கூடிய நல்ல நாளில் திருமணம் நிகழ்ந்தது. வைகறைப் பொழுதில் மணவினை நடந்தது. பந்தலமைத்துப் புது மணல் பரப்பினர். விளக்குகளை ஏற்றினர். மாலைகளைத் தொங்கவிட்டு இல்லத்தை அழகுபடுத்தினர். உழுந்து பெய்த கொழுந்துவை அடிசில் கொடுக்கப்பட்டது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி (அகம்.136) என்ற அகநூற்றுப் பாடலில் மணவினைச் சடங்கின்போது வெண்ணூலில் வாகை இலையையும், அறுகம் புல்லையும் சேர்த்துக் கட்டி காப்பாகப் பெண்ணுக்கு அணிவித்ததையும் தூய உடை உடுத்தியதையும் போன்ற செய்திகளைத் தருகின்றது. மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் மணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்ததும், மணமக்கள் தீவலம் வந்ததையும் அறியலாம். நாச்சியார் திருமொழியில் தன் மணம் குறித்துக் கண்ட கனவினை எடுத்துரைக்கையில் மணச் சடங்குகள் பல குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் தாம் அறிந்த வடநாட்டு முறைகளுடன் தமிழ்நாட்டு மணமுறையை ஒப்பிட்டார். வடநாட்டு முறைகளுடன் தமிழ்நாட்டில் அன்று இடம் பெறவுமில்லை. அவற்றைத் தழுவி வேண்டுமென்று அவர் கூறவுமில்லை. தமிழ் நாட்டிலுள்ள காதல் முறையைக் குறிப்பிட்டு அம்முறைதான் இலக்கியத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று விதித்துள்ளார். வாழ்வில் எப்படி இருந்தாலும் இலக்கியத்தில் வடநாட்டு மணமுறைகளைத் தழுவினால் என்ன என்றுவினவலாம். வாழ்க்கை தான் இலக்கியத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும் என்று கருதிய தொல்காப்பியர் தமிழகக் காதல் முறையையே விரித்துச் சொல்லி இலக்கிய யாப்புக்கு வழி காட்டியுள்ளார். எனவே, தொல்காப்பியர் திருமண முறைகள் என்று தனித்தனியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்காலத்தோடு நெருங்கிய காலகட்டத்திலும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றில் குறிப்பிடும் திருமண முறைகள் இன்றைக்கும் நடைபெறும் திருமண முறைகளோடு ஒத்துப் போவதை அறியலாம். சடங்கு என்பது காலந்தோறும் மாறுபட்டாலும் ஒத்த தலைவியும் தலைவனும் சேர்ந்து வாழ்வதற்குக் கரணம் என்ற சடங்கு தேவை என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்தியுள்ளார்.