New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரும்புக்காலமும் சங்க இலக்கியமும் -கி.இரா.சங்கரன்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
இரும்புக்காலமும் சங்க இலக்கியமும் -கி.இரா.சங்கரன்
Permalink  
 


இரும்புக்காலமும் சங்க இலக்கியமும்-கி.இரா.சங்கரன்

கி.மு.500 தொடக்கம் கி.பி.300 வரைக்குமான 800 ஆண்டுகாலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய ஆர்வலர்களும் கணக் கிட்டுள்ளனர். இக்காலகட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகளை அறிய வேண்டும். அவை: (1) தொல்லியல் பொருள்கள் (2) செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் (3) பழந்தமிழ்க் கல் வெட்டுகள். இவற்றோடு பானையோட்டு எழுத்துப் பொறிப்புகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். இவ்வேறுவேறு வகைச் சான்றுகளை உருவாக்குவதற்கு இரும்புக்கருவிகள் பெரிதும் பயன்பட்டிருக்கும்.

பானையோட்டுக் கீறல்களை இரும்புக்கருவியைக் கொண்டே அக்காலத்து மக்கள் செய்திருப்பர். அதே போன்று செம்மொழியிலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் இரும்பினாலான எழுத்தாணியைக் கொண்டே எழுதியிருப்பர். இவற்றைப் படிப்பறிவுள்ள ஒரு கூட்டத்தினரே செய்திருப்பர். இது ஒருவகையான தொழில்நுட்பமே. வரலாற்றில் ஒரு தொழில்நுட்பம் தொழிற்படுகையில் ஒரு கருத்தியலும் தொழிற் படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையன. என்றும், ஒரு புது வகையான தொழில்நுட்பம் மக்கள் கூட்டத்தினை இரண்டாக உடைக்கும்; அங்கு அதிகாரம் செயற்படும். அதிகாரம் கொண்ட படித்த வர்க்கமே புதிய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வரலாற்றில் நிலையான சான்றுகளை இட்டுச்செல்லும். அதுபோன்ற கூட்டமே மேற்சொன்னது போன்ற மூன்று வெவ்வேறு வகையான சான்றுகளைத் தமிழக வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளது.

மேற்சொன்ன சான்றுகளிடையே ஓர் உள்ளுறவும், தொடர்ச்சியும் இருப்பதனை அறியமுடிகிறது. காட்டாக, செம்மொழியிலக்கியத்தில் பதியப் பட்டுள்ள பல சொற்கள், பெயர்கள் கல்வெட்டு களில் பதியப்பட்டுள்ளன.1 குறிப்பாக, மதுரையினைச் சுற்றியுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளிலுள்ள சொற்களும் செம்மொழியிலக்கியத்தின் சொற் களும் ஒரு மேட்டுக்குடி சமூகத்தினை நினைவூட்டு கின்றன. மேட்டுக்குடி சமூகம் என்பது அதிகார முள்ள, எழுதப்படிக்கத் தெரிந்த புலமைத்துவமும், தொழில்நுட்பமும் கைக்கொண்ட ஒரு கூட்ட மாகும். இவர்களை ஒரு கருத்தியல் ஒருங்கிணைக்கும். அது இங்கு சமயமாகத் தொழில்பட்டுள்ளது. இச் சமயக்கூறுகள் யாவும் வடபுலத்திலிருந்து வந்தன. எனவே, இவ்வரலாற்றுக் காலகட்டத்தினை இந்திய மயமாதல் என்ற பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்.2 சமயங்களுடன், இன்னபிற கருத்துகளும் இடம்பெயர்ந்திருக்கும். இவற்றை உள்வாங்கிக் கொண்டே தமிழகத்தின் இரும்புக்காலம் நிலை பெற்றது. இப்படி வடக்கிலிருந்து வந்த வைதீக, அவைதீகச் சமயக்கூறுகள் மேற்சொன்ன சான்றுகளில் பதிவாகியுள்ளன. இச்சமயங்கள் தமிழக மக்களின் இயங்குநிலைக்கு ஓர் உந்துசக்தியாக இருந்துள்ளன. இவை அனைத்துமே புலவர்களுக்கும், அரசர்களுக்கும், வணிகர்களுக்கும் சார்பாக இயங்கியுள்ளன அல்லது சமயங்களும் மேட்டுக்குடி சமூகமும் இணைந்து இயங்கியுள்ளன எனலாம்.

செம்மொழிப் புலவர்கள்

ஆத்ரேயன், கவுணியன், கௌசிகன் என்ற கோத்திரப்பெயர்களில் சில செம்மொழிப் புலவர்கள் சுட்டப்பட்டிருப்பது அவர்கள் வைதீகச் சமயத்தினைச் சார்ந்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தும். கௌதமன், இளம்போதி என்ற பெயரில் அமைந்த புலவர்கள் அவைதீகச் சமயத்தினர் என்று துணியலாம். சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்து. வான்மீகி, மார்கண்டேயர் என்ற பெயர்களில் புலவர்கள் இருந்துள்ளது புராணக்கருத்துகள் தமிழகத்திற்கு வந்ததனை நினைவூட்டும். பாரதம்பாடிய பெருந் தேவனார் என்றொரு புலவர் இருந்துள்ளார். நல் வெள்ளையார் என்பவர் ஆசீவகர் என்று கருதப் பட்டாலும் அவரும் மதச்சார்புடையவரே. இப்படி, நான்கு வெவ்வேறு சமயங்களின் தாக்கத்தினைச் செம்மொழிப்புலவர்களின் பெயர்கள் வெளிப்படுத்து கின்றன.

செம்மொழிப்பாக்களை இயற்றிய பல புலவர்கள்- குறிப்பாக, மதுரையினை மய்யமாகக்கொண்டு இயங்கியவர்கள் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும், உலோகத் தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வட்டாரத்திலேயே அதிக அளவில் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் வெவ்வேறு வணிகரைப் பற்றிய குறிப்பு உண்டு.3 இவையெல்லாம் மேட்டுக் குடியின் கூறுகளாகும். குறிப்பிடத்தக்க அளவில் வணிகர்களே புலவராகவும் இயங்கியுள்ளமை இக் காலகட்டத்தில் கல்வியும், வணிகமும் சமூக இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தமையைப் புலப்படுத்தும். மதுரை எழுத்தாளன் கொற்றன் என்றொரு புலவர் இருந் துள்ளார். இவருக்கும் பாக்களை ஓலைச்சுவடியில் படியெடுப்பதற்கும், கல்வெட்டுகளைப் பாறை களில் பொறிப்பதற்கும் தொடர்பு உண்டு என்று கருத இடமுண்டு. கணக்கிற்கும், தொழில்நுட்பத் திற்கும், வணிகத்திற்கும் தொடர்புண்டு. கணக்கு அளவை, பிரதானமாகக் கொல்லர்களுக்கும், பொற் கொல்லர்களுக்கும், தச்சருக்கும், துணிவணிகருக்கும் தேவையான ஒன்று. மதுரை கணக்காயன், மதுரை கணக்காயன்மகன் நக்கீரன் என்ற பெயர்களில் புலவர்கள் இருந்துள்ளனர்.

செம்மொழிப்பாக்களின் புலவர்கள் மேட்டுக்குடி சமூகத்தின் கூறுகளாக அமைந்துள்ளன என்று முன்னர் கண்டோம். வளமையும், வனப்பும், வணிகமும், வண்ணமும், அதிகாரமும், தொழில்வளமையும் குவிந்த நகரங்களாக விளங்கிய மதுரை, உறையூர், காவிரிபுகும்பட்டினம், கச்சிப்பேடு போன்ற ஊர் களிலிருந்து பெருமளவில் புலவர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர். இவற்றுள் மதுரையிலிருந்து அதிக எண்ணிக்கையில் 48 புலவர்களும், உறையூரி லிருந்து 10 புலவர்களும், கச்சிப்பேட்டியிலிருந்து 4 புலவர்களும் எனப் பாடல் இயற்றியுள்ளனர். மதுரையிலிருந்து தமிழ்க்கூத்தன் என்ற பெயரில் மூவரும், பாலாசிரியன் என்ற பெயரில் நால்வரும், தமிழாசிரியர் என்ற பெயரில் ஒருவருமாகப் பாடல் இயற்றியுள்ளனர்.

ஆசான், ஆசிரியன், பாலாசிரியன், கல்வியார், மேதாவியார் போன்ற பெயர்கள் மேட்டுக்குடிக் கல்வியின் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றன. குலபதி, காவிதி, கணியன், கணிமேதாவி போன்ற புலவரின் பெயர்கள் காலக் கணிதவியலில் இவ்வகைச் சமூகம் பெற்றிருந்த மேன்மை யினைக் காட்டும்.4 ஆசிரியர் என்ற பெயரில் பல புலவர்கள் மதுரை நகரிலிருந்து பாடல் இயற்றி யுள்ளனர். மதுரைப் புலவர்களின் மொழிநடை யினையும் அவ்வட்டாரத்திலுள்ள கல்வெட்டுகளின் மொழிநடையினையும், பிற வட்டாரத்துக் கல்வெட்டு களின் மொழி நடையினையும் பொருத்திப் பார்த்துத் தமிழை ஆய்தல் வேண்டும். அவ்வட்டாரத்திலுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் மொழியமைப்பினை அவதானிக்க வேண்டும். இவ்வட்டாரத்தின் கல் வெட்டுச் சொற்களைப் பிறவட்டாரக் கல்வெட்டு களுடன் பொருத்திப்பார்த்து மதுரையின் மேட்டுக் குடித் தமிழைக் கணக்கிட வேண்டும்.

பதினைந்திற்கும் மேற்பட்ட புலவர்கள் கிழார் பட்டம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் தத்தம் ஊர்களின் பெயர்களால் அறியப்பட்டுள்ளனர். இக்கூறு நிலவுடைமைச் சமூகத்தின் வெளிப்பாடாகும். நிலவுடைமையாளர்கள் புலவர்களாகவும் இருந் துள்ளனர் என்பதனை அறியலாம். கிழார் என்ற சொல்லிற்கு நேர் எதிர்ச்சொல்லான உழைப்போரைச் சுட்டும் ஓரேருழவர் என்ற பெயரில் ஒரு புலவர் அறியப்பட்டுள்ளார். இவர் இரும்பினாலான கலப்பையைக் கொண்டே உழுதிருக்க வேண்டும். பல புலவர்கள் தத்தம் தந்தை பெயர்களில் அறியப் பட்டுள்ளனர். குன்றூர்க்கிழார் மகன், காட்டூர்க் கிழார் மகன் போன்ற பெயர்கள் மூலம் காடு களை வேளாண்மைக்குத் திருப்பிக் கிழார்கள் உரு வாயினர் எனலாம். இரும்பின் பயன்பாடு இன்றி இப்போக்கு நிகழ்ந்திருக்காது. இதுதான் நில வுடைமைச் சமூகம் அரும்பும் தொடக்கம்.

பூட்கொல்லன், பொற்கொல்லன், முடக் கொல்லன், கொல்லன்புல்லன், கொல்லன் வெண்ணாகன், பெருங்கொல்லன் என்ற பெயர் களிலும், இளந்தச்சன், பெருந்தச்சன் என்ற பெயர் களிலும் புலவர்கள் இருந்துள்ளனர். இக்கொல்லரும், தச்சரும் இன்றித் தமிழகத்தின் இரும்புக்காலம் வளம் பெற்றிருக்காது. இதனைக் கொங்குப் பகுதியில் கிடைத்த வழவழப்பான கற்கருவிகளும், தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதியில் கிடைத்த கற்கருவி களும், இரும்பிலான ஈட்டி முனைகளும், வாள் களும் உறுதிப்படுத்துகின்றன. பெருங்கொல்லன், பெருந்தச்சன் போன்ற பெயர்கள் இவர்கள் இத் தொழில் முனைப்பில் குழுக்களாக அல்லது குடி களாக இயங்கினர் என்பதைக் காட்டும். கைவினை ஞர்கள் தங்களுக்கான அமைப்பினை (பரடைன) உருவாக்கியுள்ளனர் என்பதனைக்காட்டுகிறது.5

வண்ணக்கன் தாமோதிரன், வண்ணக்கன் சாத்தன், வண்ணக்கன் தத்தன் போன்ற பெயர்கள் துணிகளுக்கு வண்ணம் தோய்க்கும் கைவினைஞர் களை நினைவூட்டுகின்றன. இது கைத்தொழில் புரிவோரின் புலமைத்துவத்தினையும் காட்டும். இப்பெயரினை உடையவர் நாணயப்பரிசோதகராக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.6 நாணயக் காரராக இருந்தால், இவரை மேட்டுக்குடியினைச் சேர்ந்தவராகவே கருத வேண்டும்.

இளமையும் முதுமையும்

செம்மொழிப் புலவர்களின் பெயர்களிலும், பழந்தமிழ்க் கல்வெட்டுகளிலும் இளமையினையும் மூப்பினையும் குறிக்கின்ற சொற்கள் பயிலப்பட்டு உள்ளன. இச்சொற்கள் வயதிற்கான இடைவெளி யினைச் சுட்டும் என்பதனைவிடவும் ஓர் இனக் குழுச் சமூகத்தில் தலைமுறை இடைவெளியினைச் சுட்டுவதாகக் கருதலாம். இளம்போத்தன், இளங் கௌசிகன், இளங்கண்ணிகௌசிகன், இளந்தத்தன், இளந்தேவன், இளம்பூதன், இளம்போதி, இளம் பெருவழுதி, இளங்கீரன், இளங்கீரந்தை போன்ற சொற்கள் பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள இளங்காயபன், இளையர் போன்ற சொற்களோடு ஒப்பிடப்பட வேண்டும். சித்தன்னவாசலில் உள்ள இளையர் என்ற கல்வெட்டுச் சொல் நுணுகி ஆராயப்பட வேண்டும்.7

தந்தையும் மகனும்

செம்மொழிப்பாக்களின் சில புலவர்கள் தந்தையின் பெயரோடு இணைத்துச் சுட்டப்பட்டு உள்ளனர். கல்வெட்டுகளிலும் இதுபோல் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. இதனை நிலவுடைமைச் சமூகத்தின் கூறாகக் கருத வேண்டும். கல்வெட்டில் ஒரு சில இடங் களில் தந்தை மகள் பெயர்கள் பதியப்பட்டுள்ளன.8 இம்முறை இலக்கியத்தினின்றும் வேறுபடுகிறது.

மட்கலப் பொறிப்பு

தமிழகத்தில் பானையோடு எழுத்துப்பொறிப்பு களில் பெயர்கள் பெரும்பாலும் தனியாரைச் சுட்டு கின்றன. தமிழ்ச்சொற்களில் பிராகிருத மொழியின் தாக்கம் இருப்பதும் தனியாரின் பெயர்கள் இருப் பதும் சமயத்தாக்கத்தினை வெளிப்படுத்தவில்லை. கல்வெட்டுகளிலுள்ள சில சொற்களான கணன், கண்ணன், அதன், அந்துவன், சாத்தான், சாத்தந்தை போன்றவை பானையோடுகளிலும் பதியப்பட்டு உள்ளன. இதனடிப்படையில் இங்குக் குறிப்பிடப் பட்ட மூன்று வகையான சான்றுகளையும் ஒரே காலத்தினைச் சார்ந்தவை எனலாம்.9

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: இரும்புக்காலமும் சங்க இலக்கியமும் -கி.இரா.சங்கரன்
Permalink  
 


சமயமும் சங்ககாலமும்

சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள்: இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலவுதல். போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாகக் கருத்தியல் உரு வாக்கப்பட்டு இறந்தோருக்குக் கல் நட்டனர். இவ் வழக்கம் தொன்றுதொட்டு தமிழகத்தில் பின்பற்றப் பட்டு வந்த சமயநம்பிக்கையாக இருந்தது. இந்த நடுகல் வழிபாடு தொல்லியல் தளங்களில் காணப் படும் நெடுங்கல் என்பதன் தொடர்ச்சியே. கல்லறைச் சவக்குழிகள், எழுத்துடன் கூடிய நடுகல் வழிபாடு-அதாவது, இரும்பினைக்கொண்டு கல்லினை உடைத்தல் போன்றவை ஒரு கருத்தியலோடும், ஒரு தொழில்நுட்பத்தோடும் தொடர்புடையன.10 கருத் தியல் என்பது சமயம்; தொழில்நுட்பம் என்பது இரும்புப் பயன்பாடு. வரலாறு நெடுக ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் சமய வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிறுவன மயமான சமயக்கருத்தியல்கள் இந்திய மயமாதலின் பின்னணியில் வடபுலத்திலிருந்தே வந்துள்ளன என்று முன்னர் காணப்பட்டது. நிறுவனமயமாகாத வழி பாட்டுமுறையினை மட்டும் பின்பற்றி வந்த தமிழக மக்கள் ஒரு மாறுதலான காலகட்டத்திற்கு இரும்புப் பண்பாட்டுடன் நுழைந்தனர்.11 இதில் தொழில் முனைப்புடன் கூடிய அவைதீகச் சமயங்களும், வணிகமும், இலக்கிய உருவாக்கமும் ஒன்றிணைந்தன. இரும்புப்பண்பாடு இன்றி அவற்றைப் பேசும் பழந் தமிழ்க் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கமாட்டா. இப்பண்பாடு இன்றி வேளாண்மையும் வளர்ந் திருக்காது; வளமையான பகுதிகளைக் கைப்பற்று தற்குப் போரும் நடத்திருக்காது. பிறிதொரு நிலையில் வைதீகச் சமயம் இலக்கியப் படைப்பில் முனைந்து ஈடுபட்டுள்ளது. இங்கும் எழுத்தாணி இன்றி ஓலைச் சுவடிகளில் பாக்கள் எழுதப்பட்டிருக்கமாட்டா. சமயச் சடங்குகளாக, வேள்வி, அவியுணவு போன்றவை வைதீகச் சமயத்தினைப் பின்பற்றி உள்வாங்கப்பட்ட தாகக் கருத வேண்டும்.

சமய வழிபாட்டில் ஓர் அங்கமாக இலக்கியங் களைப் பாராயணம் செய்தல் ஒரு மரபாக இருந் துள்ளது. சமய/சடங்கு நூலான வேதம் வெவ்வேறு வகையில் சங்க இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ளது. அது வாயால் ஓதப்பட்டு வந்துள்ளது என்பதனை மாயா வாய்மொழி என்று இலக்கியம் சுட்டுவதால் அறியலாம். காலத்தால் முந்திய குறுந்தொகையில் இந்நூல் எழுதாக்கற்பு என்று சுட்டப்பட, பரி பாடல் இதனை மாயா வாய்மொழி என்று சுட்டு கிறது. பரிபாடலில் வேதம் திருமாலிடம் தோன்றி யதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதம் சமூகத் தினைப் பிரிக்கும் என்பதற்கும், அதனை ஓதுதற்கு அந்தணர் என்ற வகுப்பார் நியமிக்கப்பட்டனர் என்பதற்கும் சான்றுகள் உண்டு. வேதம் ஓதியவர் நான்மறையந்தணர், நான்மறையாளர், நான் மறைமுனிவர், நான்மறையோர் என்று சுட்டப் பட்டுள்ளனர். சிலர் வேதம் ஓதினர்; சிலர் காதால் கேட்டனர். வேதம் ஓதுதலைக் காதால் கேட்டோர் கேள்வியுயர்ந்தோர் என்று அழைக்கப்பட்டனர். வேதம் ஓதுதலில் புலமை மிக்கவர் வாய்மொழிப் புலவீர் எனப்பட்டனர். அந்தணர் மட்டுமே வேதம் ஓதி வந்தனர் என்பதனை அந்தணர்முதுமொழி, அந்தணர் அருமறை என்ற சொற்கள் விளக்கும்.

காலத்தால் பிந்திய குறள் இதனை நூல் என்று சுட்டுவதால் தொடக்கத்தில் வாய்மொழியாக ஓதப் பட்டு குறளின் காலத்தில் இது நூல்வடிவம் பெற்றது என்று கருதலாம். இக்கருத்து வேதநூலின் காலக் கணிப்பிற்கு உதவும். நிறுவனமின்றி இந்நூலினை வாய்வழியே ஓதிவந்த அந்தணர் நெடும்பாடலாகிய மதுரைக்காஞ்சியின் காலத்தில் அந்தணர்பள்ளி யினை நிறுவி வேதம் வளர்த்தனர் என்று அறிய முடிகிறது. இப்படி, வேதபாராயணமும், நூலும் சமூகத்தினை ஓதுவோர் என்றும், கேட்போர் என்றும் பிரிக்கிறது. இதே காலத்தில்தான் வடக்கில் வேதம் வாய்மொழியிலிருந்து நூல்வடிவிற்கு வந்திருக்க வேண்டும்.12 இரும்புப் பண்பாட்டின் விளைவாகத் தோன்றிய வேளாண்பெருக்கமும், உபரி உற்பத்தியும் அரசர்க்குத் துதிபாடும் ஒரு புலவர் கூட்டத்தினை உருவாக்கின. அரசனுடன் அமர்ந்து தாயம் உருட்டும் அளவிற்கு இவர்கள் செல்வாக்கு இருந்தது. பாணர்கள் அரசர்களால் புறந்தள்ளப்பட்டு வறுமையில் வாட, இவர்கள் கோவின் இல்லங்களில் இடம்பிடித்தனர்.13 இப்படி எழுந்த அந்தணப் புலவர்கள்தான் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியுள்ளனர். நெடும்பாடல்கள் பலவற்றைப் பாடியவர்களும் இவர்களே. இவ்வந்தணப்புலவர்கள் மேற்சொன்ன வேதபாராயணம் என்ற மரபின்வழி வந்திருக்க வேண்டும்.

சமயச்சடங்கின் ஓர் அங்கமாக வேள்வி செய்தல் முக்கியமாகப் பின்பற்றப்பட்டுள்ளது. வேள்வி செய்தல் இலக்கியத்தில் பரவலாகச் சுட்டப்பட்டு உள்ளது. வேள்வி, முத்தீ என்று பதியப்பட்டுள்ளது. நல்லூர்வேள்வியார் என்று ஒரு சங்கப்புலவர் உண்டு. மறையோதல் மட்டுமன்றி, வேள்விசெய் அந்தணரும் இருந்துள்ளனர். அவர்கள் வேள்வி யந்தணர் எனப்பட்டனர். அச்சத்தின் அடிப்படை யிலும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் நம்பிக் கைகள் மனதில் எழுகின்றன. பொருளியல் பெருக்கமும், வர்க்க அடுக்குகளும் சடங்குகளை நிர்ணயிக்கின்றன. தொழில்நுட்பவளர்ச்சி, கடவுள் உருவங்களை உரு வாக்கவும் நம்பிக்கைகளை நிறுவனமயமாக்கவும் பயன்படுகிறது. கல்வெட்டு பொறிக்கவும், நடுகல் நாட்டவும் இரும்பின் தேவை அவசியமானது. இங்கு தான் இரும்புக்காலம் முற்றாகத் தொழிற்படுகிறது. வரலாற்றுப்போக்கில் முத்தீ வளர்க்கும் சமயச் சடங்கு தான் பின்நாட்களில் தீ வளர்த்து திருமணம் செய்யும் சமூகச் சடங்காக மாறுகிறது.

தீ வளர்த்து வேள்வி செய்யும் சமூகச்சடங்கு உயர்ந்தோர் சமூகத்தின் நிறுவனமாக, அரசகுலத் தினருக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. வேள்வி செய்தால் போரில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. இதில் மூவேந்தர்களும் ஈடுபட்டு உள்ளனர்; சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள் இதில் பங்குபற்றவில்லை. கரிகாலன் கற்புடைய மகளிருடன் வேள்விச்சாலையில் இருந்தான் என்று குறிப்பு உள்ளது. இதனை அரசகுலத்து சமயச் சடங்கு எனக் கருதவேண்டும். பெருநற்கிள்ளி ராஜ சூயம் செய்தான் என்றும், நலங்கிள்ளி பல வேள்விகளைச் செய்தான் என்றும் குறிப்புகள் உள்ளன. செல்வக் கடுங்கோ வாழியாதான் வேள்விசெய்தான். முது குடுமிப்பெருவழுதி பலயாகங்களைச் செய்தான்.14 அரசகுலத்தினரின் நம்பிக்கை இவ்வாறிருக்க, மக்களின் சமயநம்பிக்கை வேறானது. தீ மூட்டி வேள்வி செய்யும் சடங்கு அத்தீயினில் போருக்கான இரும்புத் தளவாடங் களை உருக்கி ஆயுதம் வார்க்கும் தொழில் வளர்ச்சி யின் தொடக்கம் என்று கருதலாம். மூவேந்தர்கள் வேள்விக்கு முக்கியத்துவம் தந்தனர் என்பதைவிட, வேள்வியின் தொடக்கம் போருக்கான முயற்சி என்றும் அதனை அதற்கான சடங்கு என்றும் கருதலாம்.

சமணமும் பவுத்தமும்

பழந்தமிழகத்தில் சமணமும் பவுத்தமும் சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டதாக அமைந்துள்ளது. பவுத்தத் தளங்கள் பெரும்பாலும் கடற்கரையோரங் களில் அமைந்திருக்க, சமணத்தளங்கள் பெரும்பாலும் உள்நிலப்பகுதிகளில் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. பவுத்தத் தளங்களில் ஒப்பீட்டளவில் பெரும்பாலும் இரும்புச்சான்றுகள் கிடைக்கவில்லை. அங்குச் செங்கல் அமைப்புகளைக் காணமுடிகிறது. கடற்புறமான காவிரிபுகும் பட்டினம் இதற்கு நல்ல தோர் காட்டாகும். மாறாக, சமணத்தளங்களினருகே யுள்ள தொல்லியல் தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் கற்கட்டட அமைப்புகளும், இரும்புச்சாதனங்களும் கிடைத்துள்ளன. இதற்கு சித்தன்னவாசலும், தர்மபுரி, வடார்க்காடு வட்டாரமும் நல்ல காட்டுகளாகும்.

உப்பும், நெல்லும், இரும்பும் மதிப்புமிக்க பொருளாக இருந்துள்ளதனைச் செம்மொழி இலக் கியங்கள் பதிவுசெய்துள்ளன; அவற்றை விற்கும் வணிகர்களை அதே காலத்தையொட்டின சமண சமயம் சார்ந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பதித் துள்ளன.15 ஆனால், கப்பலேறிய மணப்பொருள் களைப் பற்றிப் பேசவில்லை. எனவே, கடல் தாண்டின வணிகத்திற்கும் சமணசமயத்திற்கும் தொடர்பில்லை எனலாம். சமணம் இந்தியாவின் மேற்குநிலப்பகுதியின் வழியேயும், பவுத்தம் கிழக்குக் கடற்கரையோர மாகவும் தமிழகத்திற்கு வந்திருக்கவேண்டும். இவ்விரு சமயங்களும் உள்நிலை, அயல்நிலை வணிகத்தில் திளைத்திருக்க-வைதீகச் சமயமோ வேந்தர்களோடு இணைந்து ஒரு அரசுருவாக்கத்திற்கு முனைப்புடன் செயல்பட்டது. இம்மூன்று சமயங்களுமே தங்கள் தங்களுக்கான நிறுவனங்களை உருவாக்கிக்கொள்ளத் தலைப்பட்டன. இதற்கு இரும்புத்தொழில்நுட்பம் பெரிதும் துணை நின்றது. இதனை அந்தந்தச் சமயம் சார்ந்த சிற்பத்தொகுதிகளில் காணலாம்.

குறிப்புகள்

1.            அதன் என்ற சொல் அகநானூற்றில் 11 முறையும், புறத்தில் 18 முறையும் கலித்தொகையில் 10 முறையும் பரிபாடலில் இரு முறையும் குறுந்தொகையில் 9 முறையும் நற்றிணையில் 14 முறையும் பதியப்பட்டு உள்ளது. இச்சொல் கொங்கர்புளியங்குளம் கல் வெட்டில் ...செற் அதன் என்றும், மேட்டுப்பட்டி கல்வெட்டில் அந்தை செந்தன் என்றும், செய் அதன் என்றும், குவிரந்தை வேள் என்றும், அழகர் மலைக் கல்வெட்டில் மதிரை பொன்கொல்லன் அதன் என்றும், கணக அதன் மகன் என்றும் பதியப் பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் மதுரை வட்டாரத்தில் அமைந்துள்ளன. இதனடிப் படையில் செம்மொழியிலக்கியங்களில் இச்சொல் இடம்பெற்ற பாடல்கள் இவ்வட்டாரத்தினைச் சேர்ந்த புலவர்களால் எழுதப்பட்டன என்று ஊகிக்க லாம். திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டில் பதியப் பட்டுள்ள அந்துவன் என்ற சொல் அகநானூற்றில் (59-12) ஒரே ஒரு முறை மட்டும் பதிவு பெற்றுள்ளது. கொடுமணலின் பானையோட்டுப் பொறிப்பில் கண்ணனன் அதன் என்ற பெயர்ச்சொல் உள்ளது. இச்சொல் எட்டுத்தொகையில் 3 முறை பதிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பானையோட்டில் அந்துவன் அதன் என்ற சொல் உள்ளது. விக்கரமங்கலத்தில் உள்ள குவிரன் என்ற சொல்லும் கொடுமணல் பானைப்பொறிப்பில் உள்ளது. காவிதி என்று மதுரைக்காஞ்சியில் (499) இடம்பெற்ற சிவகங்கையின் திருமலைக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.. மாங்குளம் கல்வெட்டிலும் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் மதுரைக்காஞ்சியின் காலத்தினை நிர்ணயிக்கலாம். மதுரையின் மேட்டுப்பட்டியில் கிடைக்கும் அமணன் என்ற சொல் ஒருமுறைகூட இலக்கியத்தில் பதிவாகவில்லை. இருமுறை மட்டுமே இலக்கியத்தில் பதியப்பட்ட சேந்தன் என்ற சொல் (நற்: 190-3; குறு: 258-4) கி.மு இரண்டாம் நூற்றாண்டின் மேட்டுப்பட்டி கல்வெட்டில் பதிவானது. இவ் வொப்பீட்டுப்பார்வை இச்சான்றுகளின் காலத்தினை வரையறுக்கப் பயன்படும்.

2.            சமயம் ஒரு நிறுவனமாகப் பண்டைத்தமிழகத்தில் தொழிற்படவில்லை. வழிபாட்டுமுறைகள் இருந் தாலும் வெவ்வேறு வசிப்பிடங்களில் ஒரேமாதிரி

யான கடவுள் வழிபாடு வழக்கில் இருந்தாலும் அவ் வழிபாட்டினை நடத்துபவர்களிடையே ஓர் ஒருங் கிணைவு இருந்ததாகக் கருதமுடியாது. ஒரு பொது வான சமயத்தலைவர் இல்லை. ஆனால், அவைதீகச் சமயமான சமணம் சமயத்தலைவர்களால் ஒருங் கிணைக்கப்பட்டதனை மாங்குளம் கல்வெட்டி லுள்ள கணி என்ற சொல் உறுதி செய்கிறது. இவர்கள் போஷிக்க வெள்ளறையில் உள்ள வணிகர்குழு ஒன்று குகைத்தளம் அமைத்துத் தந்துள்ளது. வடபுலத்தின் சமய நிறுவனத்தினைத் தென்னகத்தின் வணிகர் கூட்டம் போஷித்தது ஒரு வகையான இந்தியமய மாதலாகும்; மேட்டுக்குடித்தன்மையுமாகும்.

3.            அழகர்மலைக் கல்வெட்டில் மதுரை பொன் கொல்லன், மதுரை பொன்கொல்லன் அதன் அதன், மதுரை உப்பு வணிகன், பாணித வணிகன் நெடுமலன், கொழுவணிகன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அறுவை வணிகன் என்ற கல்வெட்டுப்பொறிப்பும் உள்ளது. இக்வெட்டுகள் கி.பி.முதல் நூற்றாண்டினைச் சார்ந்தவையாகக் கருதப் படுகின்றன. மதுரை கொல்லன் புல்லன் என்றொரு புலவர் இருந்துள்ளார். மதுரை கொல்லன் வெண்ணாகன் என்றொரு புலவர் பொன்செய் காசெனப் பாடியதாகக் குறிப்பு உள்ளது. மதுரை பெருங்கொல்லன் என்றொரு புலவர் இருந் துள்ளார். செம்மொழி இலக்கியத்தில் கொல்லன் என்ற சொல் 13 முறை பதியப்பட்டுள்ளது.

4.            கணக்கீடு ஓர் அறிவியல் என்ற நிலையில் ஒரு சமூகத்தினைப் பொருளியல் நிலைக்கு இட்டுச் செல்லும். இத்துறை அறிவு பருவகாலங்களைக் கணக்கிடவும், அதனடிப்படையில் வேளாண் சமூகத்திற்குப் பயனுள்ள காலத்தினைக் கணக்கிடவும் பயன்படும். கடலோரத்து மீன்பிடி சமூகத்திற்கு நேரக் கணக்கீடும், பருவக்கணக்கீடும் மிகத்தேவை. இக் கருத்துப்பின்னணியில் கணியன், கணிமேதாவி யார், கணிச்சி, கணிச்சியோன் போன்ற சொற்களின் பொருளறிய வேண்டும். செம்மொழி இலக்கியத்தில் கணிச்சி என்ற சொல் 12 முறையும், கணிச்சியோன் மூன்றுமுறையும், கணி என்ற சொல் ஒருமுறையும் பதியப்பட்டுள்ளன. கணக்கு என்ற சொல் ஒரு முறைதான் பதியப்பட்டுள்ளது.

5.            கரூர் பொன்வணிகன் என்ற கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் கல்வெட்டுச் சொல்லினை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். தமிழகத்தொல்லியல் ஆய்வில் இதுவரையில் கரூர்பகுதியில்தான் வெவ்வேறு வகையான வடிவில் பொன்னாலான பொருள்கள் கிடைத்துள்ளன. கிடைத்த ரோமன் பொற்காசுகளும் அவற்றின் காலத்தினை விளக்கியுள்ளன. கலைப் பாங்குடன் பொன்னால் செய்யப்பட்ட இப்பொருட் களை அவ்வூர்ப் பொற்கொல்லரே உருவாக்கி யிருப்பர். இவ்வட்டாரத்தில் கிடைத்த சமயச் சிற்பங்களும் கலைப்பாங்குடன் அமைந்துள்ளன. இங்குக் கிடைத்த பொன்மோதிரத்தில் பொறிக்கப் பட்டுள்ள வெளி சம்பன் என்ற பெயரில் பின் னொட்டு கொடுமணல் பானையோட்டிலும் கிடைத் துள்ளது. கொடுமணல் ஒரு தொழில் சார்ந்த ஊர் இருக்கை. இவ்வூருக்கும் கரூருக்கும் அதிகத் தொலை வில்லை.

6.            சு. பாலசாரனதன் (ப.ர்) சங்ககாலப் புலவர்கள், உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 1986. ப.386.

7.            செம்மொழி இலக்கியத்தில் இளையர் என்ற சொல் 56 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இளையவர் என்ற சொல் 4 முறையும், இளையோர் என்ற சொல் 9 முறையும் இளையோன் 7 முறையும், இளைய ஒருமுறையும் சுட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பத்துப்பாட்டில் இருமுறை மட்டுமே இளையர் பதியப்பட்டுள்ளது. இச்சொல் வயது அடிப்படை யிலான இளமையினைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் இளந்தலைமுறையினரைக் குறிப்ப தாகக் கருதலாம். இச்சொல் சித்தன்னவாசல் கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதால் அதிமுக்கியத் துவம் பெறுகிறது. சித்தன்னவாசல் அருகே அன்ன வாசல் என்றொரு ஊரும் உள்ளது. இதனை வரலாற்றுக்காலத்தில் அன்னவாசல் என்ற ஊரின் மக்கள் கூட்டம் இரண்டாக உடைந்து சித்தன்ன வாசல் உருவானதாகக் கருதலாம். இளையர் ஒரு சமூகத்தின் வீரர் குழுவினரைச் சுட்டும் என்றாலும் அவர்களும் இளையராகத்தானே இருக்கமுடியும். கல்வெட்டுகளிலுள்ள இளமகன், எளமகன் என்ற சொற்களை இளையமகன்களைச் சுட்டுகிறது என்று கருதுவதனை விடவும் இளந்தலைமுறையினைச் சுட்டுவதாகக் கருதுவது பொருத்தமாக இருக்கும். இளையர் என்ற இலக்கியச்சொல்லையும் கல்வெட்டுச் சொல்லையும் இளமகன் என்ற ஒரு சாதிப்பிரிவின ரோடு இணைத்துப்பார்க்கலாம். சென்ற நூற்றாண்டில் இவர்களைப்பற்றி ஆய்வு செய்த எட்கர்ட்ஸ் தர்ஸ்டன், இவர்கள் கலப்புச் சாதியினர் என்றும், வேட்டைத்தொழிலிலிருந்து வேளாண்தொழிலுக்குத் திரும்பியோர் என்றும் கூறியுள்ளார் (க. இரத்தினம், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி, 2, ப. 477-478. இன்றைக்கும் இவ்வட்டாரத்தில் போர்க் குலத்தவரே வசிக்கின்றனர். பிராமி, வட்டெழுத்தாக உருமாறிவரும் காலகட்டத்தில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு ஒரு சமூகமாற்றத்தின் வெளிப்பாடு என்று கருதப்பட வேண்டும்.

8.            பொன்வணிகனார் மகனார் நப்பூதனார், மருதங் கிழார் மகனார் இளம்போத்தன், மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார், காட்டுர் கிழார் கண்ணத்தனார், குன்றூர் கிழார் மகனார் போன்ற புலவர் பெயர்கள் குறிப்பிடத்தக்கன. அரிட்டாப் பட்டி கல்வெட்டு அதன் மகன் மெயவன் என்றும் விக்ரமங்கலம் கல்வெட்டு அந்தைய் பிகன் மகன் என்றும், அழகர்மலை கல்வெட்டு கணக அதன் மகன் என்றும் புகளூர் கல்வெட்டு பெருங்கடுங் கோ மகன் இளங்கடுங்கோ என்றும், ஆறுநாட்டார் மலையிலுள்ள கல்வெட்டு நாகன் மகன் என்றும், அம்மன்கோயில்பட்டி கல்வெட்டு பரம்பன் கோகூர் மகன் வியக்கன் என்றும், மன்னார்கோயில் கல் வெட்டு கடிகைகோவின் மகன் பெருங்கூற்றன் என்றும் தந்தையினையும் மகனையும் சுட்டுகின்றன. இக்கல்வெட்டுகளின் காலம் பெரும்பாலும் கி.பி. 100 முதல் கி.பி.300 வரையிலானவை என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இதனை ஒரு சமுதாயமாற்றக் கால கட்டமாகவே கருதவேண்டும். ஒரு புதிய இளஞ் சமூகம் அதிகாரத்திற்காக எழுந்ததாகக் கருத வேண்டும்.

9.            எ. சுப்பரய்யலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம், 19.2008. பேராசிரியர் இவ்வாய்வில் தமிழகத்தின் பானையோட்டுப் பொறிப்புகளில் உள்ள பெயர்ச்சொற்களின் அடிப் படையில் அப்பெயர்கள் ஒரு மேட்டுக்குடியினைக் காட்டுகின்றன என்றும், அவை தமிழகத்தின் படிப்பறிவு பரவலாக இருந்ததாக வெளிப்படுத்தவில்லை என்றும் முடிவு காண்கிறார்.

10. தொடக்கத்தில் கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் இயற்கையினையும், இயல்பு வாழ்க்கையினையும், பாக்களில் பதிவு செய்தனர். தம் கல்வியினையும், எழுத்துமுறையினையும் சமணத்துறவியருக்கு ஒருசாரரும், பாரதம் பாடுவோருக்கு மறுசாரரும் பயன்படுத்தினர். வடமொழிச் சடங்கு உச்சாடனை களை ஏற்ற இறக்கத்துடன் பாராயணம் செய்வதும் பாடுவதும் ஒரு தொழில் நுட்பந்தான். இரும்பினைக் கொண்டு கற்களை உடைத்துக் கருவிகள் செய்யவும், கல்லறைகள் செய்யவுமான தொழில்நுட்பத்தினை சமயவழிபாட்டிற்கான கற்சிலைகள் செய்யவும் பயன்படுத்தினர். ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் தங்கள் வழிபாட்டுருவங்களை இவ்வாறு செதுக்கிக் கொண்டனர். இம்மையில் நன்மை செய்தால் அதன் பயனை சொர்க்கத்தில் அனுபவிக்கலாம் என்று புறப்பாடல் 134 பரிந்துரைக்கிறது. நன்மை செய்வோர் உயர்ந்தோர் என்று புறப்பாடல் 174 பரிந்துரைக்கிறது. இங்கு மறு உலகம் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தியாக உணர்வினை அகப்பாடல் 54 பரிந்துரைக்கிறது. போரில் இறந்த வீரர் சுவர்க்கம் எய்தினர் என்று புறப்பாடல் 93 உறுதிசெய்கிறது. அவர்களே மறவர் எனப்பட்டனர். இந்நம்பிக்கையே நடுகல் வழி பாட்டிற்கு வழிவிட்டது. காலத்தால் சற்றுப் பிந்திய குறள் (25) பூமியில் இடும் அவியுணவே தேவர்க்கு இடும் அமிழ்தம் என்று வரையறுக்கிறது.

11.          நிறுவனமயமாகாத உள்ளூர்த் தெய்வங்களை வழிபட்டுவந்த மக்கள் வேட்டைத் தொழிலைவிட்டு போர்த்தொழிலுக்கும், வேளாண்தொழிலுக்கும் திரும்பியிருப்பர். இங்கு தான் வேலை ஏந்திய வேட்டுவக் கடவுள் சேயோன் முருகக்கடவுளாகத் திருமுருகாற்றுப் படையில் பரிணமித்தார். முருகன் தெய்வானையுடன் இந்தியப் பெருங்கதையாடலுக்குள் நுழைகிறான். தன் கருப்புக் காதலியுடன் சிவப்பு மனைவியினையும் சேர்த்துக்கொள்கிறான்.

12.          சோழ இளவரசன் பிராமணன் ஒருவனோடு தாயம் விளையாடுகையில் தாயக்கட்டையினால் அவனை அடித்துவிடுகிறான். அந்தணர்கள் அரசர்களின் இல்லங்களில் இடம்பிடித்து அவர்களுக்கு இணை யாகப் புழங்கியுள்ளனர் என்பதனை இச்சம்பவம் உறுதிசெய்கிறது.

13.          மதுரைக்காஞ்சியின் காலத்தினை கி.பி.மூன்று, நான்காம் நூற்றாண்டு எனக் கொண்டால் இக்கால கட்டத்தில்தான் வடபுலத்தில் பாராயணவேதம் நூல்வடிவம் பெற்றது எனலாம்.

14.          புறப்பாடல் 22-இல் உள்ள கரிகால் பெருவளத்தான் வேள்விச்சாலையில் தன் மனைவியரோடு இருந்தான் என்ற குறிப்பு அது வேத்தியில் சடங்கு என்பதனைச் சுட்டுகிறது. வேள்விச்சாலையில் அரச குடும்பத்தினரும், அந்தணரும் மட்டுமே புழங்க இயலும் என்பதே இதன் கருத்து. இது ஒரு மேட்டுக்குடி சமய நடவடிக் கையே. புறம் 363 பெருநற்கிள்ளி ராஜசூயம் செய்தான் என்றும், புறம் 400 நலங்கிள்ளி பலவேள்விகள் செய்தான் என்றும் விளக்கும். தொடக்கத்தில் சோழ அரசர்களே இதில் மிகவும் ஈடுபட்டுள்ளனர். இதனை ஒரு தீ அரசியல் எனலாம். தொடர்ந்து சோழ மண்டலத்தில் தீயினை முன்வைத்து அரசியல் நடந்துள்ளது. நந்தனார் தீயில் இடப்பட்டார்; தப்பிக்கமுடியவில்லை. ஆனால் நாயக்கர் காலத்திய அபிராமி பட்டரை ஆதிபராசக்தி காப்பாற்றி விட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராம லிங்கரை அம்மையும் காக்கவில்லை, அப்பனும் காக்கவில்லை. வைதீகச் சார்பினை விளக்கிப்பேசும் பதிற்றுப்பத்தின் (60,70) பாடல்கள் செல்வக் கடுங் கோவாழியாதன் வேள்விசெய்ததனை விளக்குகின்றன. முதுகுடுமிப்பெருவழுதி பல யாகங்களைச் செய்தான் என்று மதுரைக்காஞ்சி (759-863) உரைக்கிறது. கலித் தொகை (69) திருமணச்சடங்கில் கணவன் மனைவி தீயினை வலம் வந்தனர் என்பதனைப் பதிவாக்கி யுள்ளது.

15.          புறம் 186 நெல்லினையும் அதனை விளைவிக்கும் நீரினையும் மிக முக்கியமானவையாகப் பதிவு செய்கிறது. நெல்லின் நேரே வெண்கல் உப்பு என்று இவ்விரு உணவுப் பொருட்களையும் அகப்பாடல் (140) உரைக் கிறது. நெல்லும் உப்பும் நேர்மதிப்பு கொண்டன என்று மற்றொரு பாடல் (390) உரைக்கிறது.

 *            இக்கட்டுரைக்கான கல்வெட்டுப்பாடங்களைப் பற்றிய குறிப்புகளும் அவற்றின் காலக்கணிப்பும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006 இல் வெளியிட்ட நூலில் இருந்து எடுத்தாளப்பட்டன. இவற்றின் சொற்களைச் செம்மொழியிலக்கியத்தோடு பொருத்திப்பார்ப்பதற்கு சமஸ்க்ருத பேராசிரியர் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி அவர்களின் நூலும் தமிழறிஞர் பெ. மாதையன் அவர்களின் நூலும் பெரிதும் பயன்பட்டன. தமிழகத் தொல்லியல் சான்றுகளைப் பற்றிய பார்வைக்கு கா.ராஜன் குழுவினர் வெளியிட்ட இரட்டைத் தொகுதி நூல் பெரிதும் பயன்பட்டது.

(உங்கள் நூலகம் நவ‌ம்பர் 2012 இதழில் வெளியானது)

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard