New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - தமிழின் மறுமலர்ச்சி -பி. கே. சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - தமிழின் மறுமலர்ச்சி -பி. கே. சிவக்குமார்
Permalink  
 


தமிழின் மறுமலர்ச்சி - 1

 
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) 

முன் குறிப்பு: நூலின் ஆசிரியர் சொல்கிற கருத்துகளை சில இடங்களில் அப்படியேயும் சில இடங்களில் என் மொழியிலும் தந்திருக்கிறேன். ஆங்காங்கே என் கருத்துகளும் உண்டு. என் கருத்துகள் சொல்லப்படும் இடங்கள் எவை என்பது தெளிவாகப் புரியுமாறு அமைத்திருக்கிறேன். 

***** ***** ***** 

ஏறக்குறைய 443 பக்கங்கள் உடைய இந்த நூலின் கட்டுரைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, 

1. தமிழின் மறுமலர்ச்சி 
2. சொற்கலை விருந்து 
3. சொற்களின் சரிதம் 
4. நிகண்டுகள் 
5. அகராதி 

தமிழின் மறுமலர்ச்சியில் 17 கட்டுரைகளும், சொற்கலை விருந்தில் 16 கட்டுரைகளும், சொற்களின் சரிதத்தில் 10 கட்டுரைகளும், நிகண்டுகளில் 5 கட்டுரைகளும், அகராதியில் 5 கட்டுரைகளும் உள்ளன. 

***** ***** ***** 

தமிழின் மறுமலர்ச்சி: 

நூலின் தலைப்பைக் கொண்ட இக்கட்டுரையில் தாய்மொழி மீது இருக்கிற அன்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று சொல்கிற பேராசிரியர் தமிழில் காணப்படுகிற பல்வேறு வகையான மொழிசார்ந்த வாதங்களையும் (இஸங்களையும்), அவற்றின் நன்மை, தீமைகளையும் விளக்குகிறார். 

முழுமுதல்வாதம்: 

ஒருவர் தாய்மொழிமீது பேரன்பு கொண்டிருத்தல் இயற்கை. மொழிகள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் வருகிற இயல்புடையன. இவ்வளர்ச்சிக்கு மொழிமீதான அன்பு தடையாக இருந்தால் அது நெறிதவறிய அன்பாகும். தன் குழந்தையைக் கெடுக்கிற நோக்கமுள்ள தாய், குழந்தையின் முன்பாகவே குழந்தையைவிட மிஞ்சிய அழகும் அறிவுமுள்ள இன்னொரு குழந்தை கிடையாது என்று சொல்வது போன்றது தமிழுக்கு முழுமுதல்தன்மை கற்பித்து அதைவிடச் சிறந்த மொழி கிடையாது என்று சொல்வது. குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அதன் அழகைப் புகழ்ந்தால் மட்டும் குழந்தை வளர்ந்து விடாது. அப்படி, தமிழின் வளர்ச்சிக்கு உதவுவனவற்றைச் செய்யாது அதன் தொன்மையையும் பெருமையையும் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்துவிடாது என்கிறார் பேராசிரியர். 

உதாரணமாக, 

எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால் 
இல்லாத எப்பொருளும் இல்லையால் 

என்று திருக்குறளுக்கு ஒருவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தைக் காட்டுகிறார். இத்தகைய பாடல்கள் இக்காலத்தில் சிரிப்பை வரவழைக்கக் கூடியன. இது திருக்குறளின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகாது. இத்ககைய மனப்பாங்கு தமிழர்களுக்கு இருத்தலாகாது என்கிறார் பேராசிரியர். 

தமிழ் செம்மொழி, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்கிற மொழி அரசியல் இன்னும் நடந்து கொண்டிருக்கிற இச்சூழலில் பேராசிரியரின் இக்கருத்துகள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியவை. 

உதாரணமாக, இணையத்தை எடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் நான் பார்த்த அனைவருக்கும் அபரிதமான தமிழ்ப்பற்று இருக்கிறது. நல்ல விஷயம். ஆனால் அந்தப் பற்று பெரும்பாலும் உணர்வு சார்ந்த ஒன்றாக நின்றுபோய் ஒரு மட்டத்துக்கு மேல் தானும் வளராமல் மொழியையும் வளரவிடாமல் செய்துவிடுகிறது என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ் உயிருக்கு நேர், தமிழ் உலகைவிட மேல் என்கிற வெற்றுக் கோஷங்கள் எதற்கு உதவும்? தமிழின் மீது உண்மையான அக்கறை ஊறுகிற பலரும்கூட இத்தகைய கோஷங்களை முழங்குவதும், தமிழின் பெருயையைப் பறைசாற்றுவதும் மட்டுமே தமிழுக்கு ஆற்றுகிற தொண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை என்பது உண்மை. 

தூயதமிழ்வாதம்: 

முழுமுதல்தன்மை வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது தூயதமிழ்வாதம். பேச்சிலும் எழுத்திலும் தூய தமிழ்ச் சொற்களையே புழங்குதல் வேண்டும் என்பது இவ்வாதம். பேசும்போதும் எழுதும்போதும் சொல்லப்படும் கருத்துக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ற சொற்களைப் பயன்படுத்துவதே முறையாகும். இவை தமிழ்ச் சொற்களா, பிற மொழிச் சொற்களா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது எழுத்தாளரின் வேலை அல்ல. அது மொழிநூற் புலவரின் (Philologist) வேலை. தூய தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. பிறமொழிச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. தகுதியறிந்து சொற்களை ஆளுவதுதான் சிறந்த முறையாகும். 

தூயதமிழ்வாதம் பெரும்பாலும் வடமொழியை (சம்ஸ்கிருதம்) நோக்கி எழுந்தது. தூயதமிழ்வாதிகள் வடமொழிச் சொற்களைத் தவிர ஏனைய சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சி பயின்றவர்கள் அங்ஙனம் சொல்ல மாட்டார்கள். தமிழ் மக்கள் வடநாட்டாரோடு பிற நாட்டாரோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள். பிறநாட்டுச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன. 

உதாரணமாக, பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தைப் பாருங்கள். 

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் 
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை 

இதிலே 'ஓரை' என்பது கிரேக்கச் சொல். இப்படிப்பட்ட பல பிறநாட்டுச் சொற்கள் பண்டைத் தமிழில் இருத்தல் வேண்டும். அவற்றை இப்போது இனம்காணவோ, வரையறுக்கவோ இயலாது. ஆராய்ச்சிகள் அதிகமாக, அதிகமாக காலப்போக்கில் அவற்றை வரையறுக்க இயலக்கூடும். 

இத்தகைய பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கியபின் எஞ்சிய சொற்களைத்தான் தூயதமிழ்ச் சொற்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் பேராசிரியர். அத்தகைய தூய தமிழ்ச் சொற்கள் அளவில் குறைவானவையாகவே இருக்கும். அவற்றைக் கொண்டு எவ்வகையானக் கருத்துகளை வெளியிட முடியும் என்றும் கேட்கிறார் பேராசிரியர். தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது, நாகரிகம் அடைந்த ஒருவன் மிருகப் பிராயமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கு ஒப்பானது என்கிறார். 

தூயதமிழ்வாதிகள் சிலநேரங்களில் ஆவேசம் கொண்டு வடமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்கள் என்பர். இதற்கு உதாரணமாக, காப்பியம், நாடகம் ஆகிய சொற்களைப் பேராசிரியர் காட்டி விளக்குகிறார். 

கடைசியாக, தூயதமிழ்க் கட்சியோடும் போர் புரிந்து எப்பொழுதும் வளர்ச்சியே குறித்து நிற்கும் தமிழின் பெருநலத்தைப் பேணுமாறு தமிழ் மக்கள் முயலுதல் வேண்டும் என்றும் வேண்டுகிறார். 

மேற்கண்ட கருத்து மட்டுமல்லாமல், நூல் முழுக்கவே பேராசிரியரின் கருத்துகளின் தெளிவும் தர்க்கமும் சான்றுகளும் துணிவும் என்னை வியக்க வைக்கின்றன. 1947ல் மொழி சார்ந்த உணர்வுவாதங்களும் திராவிட வாதமும் வளரத் தொடங்கிய காலத்திலேயே பேராசிரியர் வைத்திருக்கிற் அறிவியல்பூர்வமான வாதங்களைத் தமிழர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்ட பழியே தமிழ் நாட்டில் மொழி சார்ந்த அரசியலை திராவிட இயக்கங்கள் வளர்க்கவும் அதன்மூலம் அரசாளும் வாய்ப்பு பெறவும் காரணமாயிற்று. தமிழும் தமிழ்நாடும் அதனால் நலிவுற்றன என்பது என் கருத்து. 

பழந்தமிழ்வாதம்: 

'தூயதமிழ் என்பது தேவையில்லை. ஆனால் பிற்காலத்தில் சேர்ந்துள்ள வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழின் அழகைக் கெடுத்துவிட்டன. தமிழும் அதனால் எளிமையாகிப் போனது. எனவே, பழந்தமிழ் நடையில் பழந்தமிழ் சொற்களைப் புழங்கி, தமிழின் பெருமை, செறிவு ஆகியவற்றைக் காட்டுதல் வேண்டும்' என்று சிலர் கூறுவர். இதைப் பழந்தமிழ்வாதம் என்று சொல்லலாம். 

இதை ஏற்றுக் கொள்வதென்றால், முதலில் பழந்தமிழ் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பழந்தமிழ் என்பது சங்க நூல்களும் அவற்றின் தமிழும் மட்டுமா? நாயன்மார்கள், ஆழ்வார்கள் அருளியது பழந்தமிழில் சேருமா? பின்னர்த் தோன்றிய காவியங்கள், பிரபந்தங்கள் ஆகியவையும் பழந்தமிழ் ஆகுமா? இப்படித் தோன்றுகிற பல கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். 

உதாரணமாக, தற்காலத்துக்கு உரிய பொருளை இறையனார் களவியல் உரையின் நடையில் எழுதுவது அருமையாய் இருக்கும். விநோதமாகவும் இருக்கும். சிறு குழந்தையாக இருக்கும்போது தைத்த உடை ஒன்றை வளர்ந்து பெரிய ஆளானபின் அணிந்தால் அது அளிக்கிற நகைச்சுவைக்கு ஒப்பது இது. 

(இணையத்தில் வெண்பா எழுதி மகிழ்கிற காட்சி இந்த இடத்தில் ஏனோ என் நினைவுக்கு வருகிறது. இந்த வரி யாரையும் தனிப்பட்டுக் குறிப்பிடாமல் நிலவுகிற ஒரு போக்கைச் சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. எந்த வாசிப்பிலும் வாசிப்பவர்க்கு அவர் அறிவு அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒத்த காட்சிகள் வாசிப்பினூடே தோன்றுவது இயற்கை. அத்தகைய ஒத்த காட்சிகள் சரியா தவறா என்ற விவாதம் எப்போதும் இருக்கும். என் வாசிப்பின்போது எனக்குத் தோன்றிய ஒரு காட்சியை இங்கே சொல்லியுள்ளேன். தனிப்பட்ட விமர்சனமென்று யாரேனும் தவறாக எடுத்துக் கொண்டால், என்னை மன்னிக்கவும்.) 

ஒரு மொழியின் சொற்கள் அம்மொழி பேசும் மக்களின் அனுபவத்துக்கு அறிகுறி. பழந்தமிழை மட்டுமே பயன்படுத்தி, அதன் பின்னர் நிகழ்ந்த அனுபவங்களை உணர்த்தும் சொற்களைப் புறக்கணித்துவிடுதல் கூடாது. பழந்தமிழ் கட்சியினரின் கொள்கை பரவுமானால், தமிழ் மொழியும் வடமொழி போல வழக்கொழிந்து போவதற்கு இடமுண்டு என்கிறார் பேராசிரியர். 

பழஞ் சொற்களில் வழக்கொழிந்து போனவற்றை நீக்கிவிட்டு, உயிருள்ள சொற்களோடு காலத்துக்கேற்ற புதுச் சொற்களும் கலந்து தமிழ் வளம் பெற வேண்டும் என்பது முன்னோர்களின் கருத்து. 'கடிசொல் இல்லை காலத்துப் படினே' என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதனையே சொல்கிறது. சொற்களைப் போன்று மொழி நடையும் காலத்துக்கு காலம் மாறுபடும். அதை அறிந்து தற்காலத்துக்கு உரிய நடையைக் கையாளுதலே சிறப்பு. ஆகவே, பழந்தமிழ்க் கட்சியோடு போர்புரிந்து தமிழ்மொழி என்றும் புதுநலத்தோடு விளங்குமாறூ தமிழ்மக்கள் பணிபுரிய வேண்டும் என்கிறார் பேராசிரியர். 

இலக்கணவாதம்: 

பழந்தமிழ் வாதத்துடன் சேர்ந்து ஒன்றாகக் கவனிக்கத்தக்கது இலக்கணவாதம். இவ்வாதிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த இலக்கண வரம்பை இன்றும் நாம் கைவிடக் கூடாது என்பர். 

உதாரணமாக, சொல்லின் புணர்ச்சி இலக்கணம். 

'கடல்தாவு படலம்' என்பது 'கடறாவு படலம்' என்று புணர்ந்து வரும். இதிலுள்ள சந்தி, இலக்கணத்துக்கும் பொருளுணர்ச்சிக்கும் அவசியம் என்று முற்காலத்தில் கருதப்பட்டது. அதேபோல, 'சொல்லுதல் தவறு' என்பது 'சொல்லுதறவறு' என்று சிலரால் எழுதப்படுகிறது. இது தேவை இல்லாத சந்தியாகும். ஆனால், இத்தகைய சந்திகளைக் கைவிடுவது தவறு என்று இலக்கணவாதம் கூறும். 

அதேபோல், ஒவ்வொரு வாக்கியமும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற வாக்கியத்தின் உறுப்புகள் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இலக்கண வாதம் சொல்லும். 

தொல்காப்பியரது பேரிலக்கணம் தோன்றி ஏறத்தாழ 1500 ஆண்டுகள் ஆகிவிட்டன. நன்னூல் தோன்றி ஏறத்தாழ 700 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு புகுந்த வழக்குகளில் பல நன்னூலில் இடம்பெறவில்லை. அப்படியே நன்னூலுக்குப் பின் வந்த வழக்குகளும் பலவாக இருக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து தெளிந்து எழுதிய இலக்கண நூலே இல்லை. நாம் நன்னூலைத்தான் இப்போதும் கற்று வருகிறோம். 'உரையிற் கோடல்', 'மிகை' ஆகிய வழக்குகளைக் கடந்து எத்தனையோ புதிய வழக்குகள் உள்ளன. 

இடத்துக்கு இடம் மாறுபடுகிற வழக்குகளும் உண்டு. யாழ்ப்பாண வழக்குகள் தமிழ் நாட்டவர்க்கு விளங்காமல் இருக்கும். தஞ்சாவூர் வழக்கு தென்தமிழ் நாட்டவர்க்கு விளங்காது. முன்னோர்கள் ஆண்ட வழக்குகள்தாம் வழக்குகள். பின்னர்த் தோன்றியன வழக்குகள் ஆகா என்று சொல்வது சரியில்லை. இங்கே ஊன்றி கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். அது, எவ்வளவு சிறந்த இலக்கண நூல் என்றாலும், பிற்காலம் முழுமைக்கும் பொருந்துமாறு அவ்விலக்கணம் அமைந்துள்ளது என்று சிறிதும் கூற இயலாது. இதைப் புரிந்து கொண்டால் இலக்கணவாதம் வலிமையற்றது என்று காணலாம். 

முற்கால இலக்கணப்படி எழுதுவது திருப்தியாக இருக்கும். ஆனால், எழுத்தில் உயிர்த் தத்துவம் தெரிய வேண்டுமென்றால், அது உலக வழக்கையும் பேச்சு வழக்கையும் ஒட்டி அமைவதாக இருக்க வேண்டும். இலக்கணத் தத்துவம் வேறு. உயிர்த் தத்துவம் வேறு. இலக்கணம் ஓர் எலும்புச் சட்டகம். உயிரிருந்தால் அன்றி அதற்கு இயக்கமில்லை. இவ்வாறு சொல்வதால், இலக்கண நியதியின்றி எழுதுவது சரி என்கிற அர்த்தமில்லை. இலக்கணமும் வேண்டும், உயிர்த் தத்துவமும் வேண்டும். இலக்கண நியதியின் எல்லை அக்கால வழக்கினைப் பொறுத்தது. ஆனால், வழக்குச் சொற்களும் பேச்சு நடையும் தமிழ் மொழிக்கு முக்கியமானது. தமிழ் ஓர் உயிருடைய மொழியாக நின்று நிலவுவது இவ்விரண்டினால்தான். இலக்கணக் கட்சியோடு போராடி, அதனையும் தனக்கு அனுகூலமக்க மாற்றிக் கொள்ள தமிழ் முயல வேண்டும். 

தமிழ்ப் பேராசிரியராக இருந்து இத்தகைய நவீன மனப்பான்மையை அந்தக் காலத்திலேயே வையாபுரிப் பிளளை கொண்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சூழலில் (ஏன் கணிசமான அளவுக்கு இன்றைய சூழலில் கூட) இது ஒரு புரட்சிகரமான மனப்பான்மையாகும். தமிழ் மரபின் செழுமைகளை முன்னெடுத்துச் செல்கிற அதே நேரத்தில் பழையன கழித்த நவீனத்தின் தேவையை பாரதிக்குப் பின் பாரதி அளவுக்கு உணர்ந்தவராக அவர் எனக்குத் தெரிகிறார். 

முழுமுதல்வாதம், தூயதமிழ்வாதம், பழந்தமிழ்வாதம், இலக்கணவாதம் ஆகியன தமிழைப் பற்றிக் கொண்டு தோன்றிய வாதங்கள் என்கிற பேராசிரியர், அடுத்ததாக பிறமொழிகளின் சார்புபற்றித் தோன்றிய வாதங்களையும் அலசுகிறார். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - தமிழின் மறுமலர்ச்சி
Permalink  
 


வடமொழிவாதம்: 

பிறமொழிகளின் சார்பு பற்றித் தோன்றியுள்ள வாதங்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது இவ்வாதம். தமிழர்கள் இருபிரிவாக உள்ளார்கள். ஒரு பிரிவு, வடமொழிச் சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் அல்லது மிகச் சுருங்கிய அளவில் வேறுவழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்கிறது. அடுத்த பிரிவு, வடமொழிச் சொற்களைப் புழங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் கூடாது என்கிறது. இரு பிரிவுகளும் தத்தம் சார்பாகக் கூறுவதை வடமொழிவாதம் எனலாம். 

இவ்வாதம் இரண்டு காரணங்களால் தோன்றியுள்ளது: 1. வகுப்புத் துவேஷம், 2. அரசியல்கட்சித் துவேஷம். 

ஆனால், துவேஷங்களை ஒதுக்கி, தமிழின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாதத்தை ஆராய வேண்டும். வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவது பிரிவும் உண்டு. அது, தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியது. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கௌரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது. 

ஆங்கில வாதம்: 

புராதன சரித்திரத்தின் விளைவு வடமொழிவாதம். நவீன சரித்திரத்தின் விளைவு ஆங்கிலவாதம். இவ்வாதம், தாய்மொழியைப் பேணாமல், ஆங்கிலத்தில் பயின்று அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்கிறது. ஆங்கில மோகம் ஒரு சாராரிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் இப்படியில்லை. பெரும்பாலோர் தாய்மொழியின் வளர்ச்சி அதன்மூலம் கல்வி கற்பதிலேயே நிகழும் என்று நம்புகிறவர்கள். ஆனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் உதாசீனமாக இருக்கக் கூடும். தாய்மொழியில் கற்பதில் தடைகள் இருக்கக் கூடும். இவ்வாதத்தை எதிர்க்க தமிழ் தற்கால அறிவியல் அறிவு அனைத்தையும் உட்கொள்ள வேண்டும். பழமையும் புதுமையும் தாங்கி வலிமையுற வேண்டும். 

ஹிந்தி வாதம்: 

ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு தேசாபிமானிகள் எழுப்பிய புதிய வாதம் ஹிந்திவாதம். அந்நிய தேச மொழியான ஆங்கிலத்தைவிட, இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாகப் பெரும்பாலோர் புழங்குகிற ஹிந்திக்குத் தகுதியும் உரிமையும் உள்ளதென்று இவர்கள் கூறுகிறார்கள். தமிழுக்கு இதனால் கெடுதி சிறிதும் வருமென்று தோன்றவில்லை. உண்மையிலேயே கெடுதி விளைவிக்குமானால், இவ்வாதத்தைத் தமிழ் எதிர்க்க வேண்டும். ஹிந்தியினாலும் தமிழ் உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அனுபவத்தைப் பெருக்கிக் கொண்டால், அவ்வனுபவம் மூலமாகத் தமிழும் சிறப்பெய்தும். கல்வித் திட்டம் சீரமைக்கப்படும்போது இவ்வாதம் தக்கவர்களால் நன்கு ஆராயப்படலாம். 

சமயவாதம்: 

சமயங்களும் புராணங்களும் பொய்கள் நிரம்பின, மக்களுக்குக் கேடு விளைவிப்பன. ஆகையால் இவற்றை ஒழிப்பது அவசியமென்று இவ்வாதிகள் கூறுவர். முதலாவதாகத் தமிழில் உள்ள இதிகாசங்களை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்கிறார்கள். சமயம் பற்றிய வாதத்தை இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புராணம் முதலிய இலக்கியங்களை நோக்குவோம். இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையைப் பொறுத்தன. அவற்றை ஒழிப்பதால் மொழிபற்றிய சரித்திரமும் மக்களின் சரித்திரமும் காணாமல் போய்விடும். இலக்கியங்களில் பழங்கதைகள், பழமைவாத கருத்துகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடக் கூடாது. கிரேக்க கதைகள் இருக்கின்றன. அவை கிரேக்க மொழியில் மட்டுமின்றி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்துள்ளன. இக்கதைகளின் பொருட்டு அவ்விலக்கியங்களை ஐரோப்பியர்கள் ஒதுக்கிவிடவில்லை. மூன்றாவதாக, இக்கதைகள் நம் கவிதைச் செல்வத்தை வளப்படுத்தி, அதன் நயத்தை வளர்த்துள்ளன. பெரும்பாலோர் காவிய நயம் கருதியே இராமாயணம் போன்றவற்றைக் கற்கின்றனர். இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற கட்சியோடு போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும். 

முடிவுரை: 

தமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாக இருப்பன சிலவற்றைப் பார்த்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. எனவே, தமிழுக்கும் தமிழைத் தாய்மொழியாகப் பயில்வோருக்குமுள்ள நெருங்கிய தொடர்பை உணர வேண்டும். தமிழின் குறைகள் நம் குறைகள். அதன் சிறப்பு நம் சிறப்பு. நம் தாய்மொழி மாறாத இளமையோடும் குறையாத வலிமையோடும் என்றும் நிலவுவதற்கு நாம் உழைக்க இறைவன் அருள் புரிக. 

(இத்துடன் தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரை நிறைவுறுகிறது.) 

விடுதலை வேண்டும்! 

இந்தத் தலைப்பிலான கட்டுரை - தமிழுக்கு விடுதலை வேண்டும் என்கிற கூக்குரலும் உழைப்பும் மிகவும் அவசியமாகும் என்கிறது. சிலர் இந்த அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கையாள்கிற முறைகள் சரியில்லை. இலக்கண விதிகளிலிருந்து தமிழ் விடுதலை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இலக்கணம் கற்றவர்கள் கடினமானத் தமிழ் எழுதுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், கடுமையான தமிழ் வேறு. வழக்கொழிந்த தமிழ் வேறு. இந்த இடத்தில் பேராசிரியர் கடுமையான தமிழுக்கும் வழக்கொழிந்த தமிழுக்கும் உதாரணங்கள் தருகிறார். வழக்கொழிந்த தமிழில் புழங்குவது தமிழைச் சிறையிலிடுவதாகும். இதிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இதைப் போலவே, சொற்களின் உண்மை வடிவம் தெரியாமல் மனம் தோன்றியபடி எழுதுவதும் தவறாகும். உதாரணம், ஒற்றுழையாமை என்ற சொல். இது போலி இலக்கணம். இதிலிருந்தும் தமிழுக்கு விடுதலை வேண்டும். 

இன்னும் சிலர், தமிழுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று நினைத்து எதுகை மோனைகளை மிகவும் பயன்படுத்தி, தமிழன்னையை சேற்றில் அழுந்தக் கிடத்தி விடுகிறார்கள். உதாரணம் - சீற்றத்தினால் ஊற்றமுற்றுக் கூற்றமுட்க ஏற்றெழுந்து ஆர்ப்பரித்தான். அருவருக்கத்தக்க இப்படுகுழிச் சேற்றிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். 

தமிழ்நாட்டில் எந்தக் கிளர்ச்சி தோன்றினாலும் அது தமிழ் மொழியில் வந்து பாய்ந்துவிடுகிறது. ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்தணரல்லாதவர்களும் பௌத்த ஜைன சமயத்தவரும் அம்மொழியை வளர்த்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அந்தணர்களுள் ஒருசிலர் அதற்கு இடம் கொடுக்கவும் செய்கிறார்கள். தமிழ் தங்கள் தாய்மொழியல்ல என்பதுபோல் ஒதுங்கி விடுகிறார்கள். தங்களை ஆரியரென்றும் மற்றவரைத் திராவிடரென்றும் சொல்கிறார்கள். ஆரிய திராவிட வாதம் அர்த்தமற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் தனிப்பட்ட தூய திராவிடரும் இல்லை என்பது வரலாற்று உண்மை. 

இவையல்லாமல் தூய தமிழ்வாதம், புராண இதிகாச இலக்கிய எதிர்ப்பு வாதம் என்கிற வாதங்களும் தலைதூக்கியுள்ளன. இப்படிப்பட்ட எல்லா வகுப்புவாதக் கொள்கைகளிலிருந்தும் தமிழ் விடுதலை பெற வேண்டும். அதற்கு வள்ளுவர், இளங்கோ, கம்பன், இராமலிங்க சுவாமி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். படித்து வந்தால் தமிழ் மொழிக்கு மாணவர்களே விடுதலை வாங்கித் தந்து விடுவார்கள். 

(இத்துடன் விடுதலை வேண்டும் என்கிற கட்டுரை நிறைவுறுகிறது.) 

தமிழும் சுதந்திரமும் 

திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டிலும் சமீப காலமாகத் தமிழ் இணையத்திலும் கட்டமைக்கப்படுகிற பிம்பம் - தமிழுக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை. சமயமும் மதமும் பிறர் நம்மீது திணித்தவை என்கிற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்கிறார்களே அல்லாமல், தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிற வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகளை முன்வைப்பதில்லை. கிரேக்க மற்றும் ரோம நாகரிகத்திலிருந்து எல்லா நாகரிகங்களிலும் மதமும் கடவுள் வழிபாடும் இருந்து வந்துள்ளன. இதைச் சொல்வதால் ஒருவர் மதவாதி ஆகிவிட மாட்டார். மதவாதத்தை எதிர்க்கிறவர்கள் கூட வரலாற்றை உள்ளது உள்ளபடிதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மதத்தை அரசியலாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு உதவாத வெறுப்பை வளர்க்கிற ஸ்தாபனமாகவும், அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொண்டிருப்பதை முழுமூச்சுடன் எதிர்க்கிற அதே நேரத்தில், மதத்தை இவர்களிடமிருந்து மீட்பதுடன் மதம் குறித்த செழுமையான மற்றும் முன்னெடுத்துச் செல்லத்தக்க விஷயங்களைச் சொல்வதும் ஒருவரின் கடமையாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் இடதுசாரிகள் மதம் பற்றிப் பேசுவதே பிற்போக்கு என்கிற முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளே மதவாதத்துக்கு எதிரான அயராத போராட்டத்தையும் நடத்தி வருபவர்கள் என்பதும் உண்மை. புராதன தமிழ்ச் சமூகத்தில் சமயத்துக்கும் வேதத்துக்கும் இருந்த இடம் பற்றி தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் சான்றுகள் தருகிறார் பேராசிரியர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தமிழும் சுதந்திரமும் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து... 

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பேராசிரியர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சுதந்தித்தால் அந்நியரின் தொடர்பு முற்றிலும் நீங்கவில்லை என்று காந்திஜி கருதுவதைச் சொல்கிற பேராசிரியர், பூரண சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கு ஒற்றுமை ஒன்றே வழி என்று சொல்கிறார். சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரம் பேராசிரியரைப் பாதித்திருக்கிறது. இந்தியா பூரண வெற்றியடைய இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதேபோல, தமிழ்நாட்டில் ஒருபிரிவினர் தனிப்பட்ட வாழ்க்கையை (பிரிவினையை) சுயநலத்தின் பொருட்டு ஊக்குவிப்பதையும் (அந்தக் காலத்தில் பிரிவினைவாதம் பேசிய திராவிட இயக்கத்தைப் பேராசிரியர் சொல்கிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.) பேராசிரியர் குறிப்பிடுகிறார். வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்று அப்பிரிவினைவாதிகள் சொல்லி வருகிறார்கள். அதிலே உண்மையில்லை. 

நமது சமயமும் தெய்வங்களும் வட இந்தியாவுக்கும் உரியவையே. உதாரணமாக, 

புறநானூற்றில் கடவுள் வணக்கச் செய்யுளில் சிவபெருமானது நீலகண்டம், 

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே 

என்று குறிக்கப்படுகிறது. 

நீல மணிமிடற்றொருவன் போல 

என்று பிற இடங்களிலும் வந்துள்ளது. 

நற்றிணையில், 

வேத முதல்வன் என்ப 
தீதற விளங்கிய திகிரியோனே 

என்று திருமால் வணக்கம் சொல்லப்படுகறட்து. இப்படியே இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களும் தமிழ்நாட்டுக்கும் உரியவை என்று தொல்காப்பியம் கூறுகிறது. உயிர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, பந்தம், வீடு, பேறு முதலிய நம் சமயக் கொள்கைகள் வடநாட்டினருக்கும் உரியவையாகும். பஞ்ச பூதங்கள், இவை தோன்றிய வரலாறு முதலிய பௌதிக சாஸ்திரக் கொள்கைகளும், கிரஹண வரலாறு முதலிய கொள்கைகளும், நால்வகை வருணம் எண்வகை மணம் முதலிய சமூகக் கொள்கைகளும், இந்திர விழா முதலிய உற்சவங்களும், இன்னும் கலைப் பண்பிற்குரிய பல அம்சங்களும் சங்க காலம்தொட்டே வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஒன்றாய் இருந்ததை சங்க இலக்கியங்களால் அறியலாம். அதுமட்டுமில்லாமல், பாரத தேசம் முழுமையும் ஒன்று என்ற கொள்கையும் பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. 

புறநானூற்றில் 'பொற்கோட்டி மயமும் பொதியமும் போன்றே' என்று நமது தேசத்தின் வடகோடியையும் தென்கோடியையும் இணைத்துக் கூறுகிறார் ஒரு புலவர். இரு பேரெல்லைகளுக்குள்ளும் அகப்பட்ட நிலம் முழுவதும் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர் ஒரு சிலர் உளரெனச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. 

குமரியடு வட இமயத்து 
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட 
சேரலாதற்கு... 

என்று வாழ்த்துக் காதையில் வருகின்றது. 

ஆகவே, வடநாட்டினரும் தென்னாட்டினரும் வெவ்வேறு மனித வர்க்கத்தினர் (different races) என்ற கொள்கை பிற்காலத்ததே என்று அறியப்படும். இலக்கியங்களாலும் சரித்திரங்களாலும் எட்ட முடியாத பழங்காலத்தில் இவ்விரு நாட்டினரும் வெவ்வேறு வர்க்கத்தினராக இருந்திருக்கலாம். ஆனால் இரண்டு வர்க்கங்களும் ஒன்றாய்க் கலந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. சிலர் தம்மை ஆரியரென்றும், சிலர் தம்மை திராவிடரென்றும் கூறிக் கொள்வது இப்போது பொருளற்றது. இப்படிக் கூறிக் கொண்டு தென்னாட்டவருக்குத் தனிப்பட்ட ஒரு ஸ்தானம் வேண்டுமென்று வாதிப்பது சரித்திர விரோதமும், மனித வர்க்க சாஸ்திர விரோதமுமாகும். ஆனால், மொழி பற்றிய மாகாணப் பிரிவினை அவசியமாகும். அது வேறு பிரச்னை. 

பேராசிரியர் இந்தக் கட்டுரையில் பிரிவினை மனப்பான்மையைப் பற்றி மேலும் விவரமாகப் பேசுகிறார். தேசப்பிரிவினைக்கு ஒவ்வாத சிலர் கூட வடமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதச் சொல்வது சரியில்லை. வடமொழிச் சொற்கள் நூல்களிலும், மேற்குடியிலும், படித்தவர்கள் இடையிலும் மட்டும் இருக்கிறது என்பதும் தவறு. நம் மக்களில் எல்லாப் பகுதியினரிடமும் வடமொழிச் சொற்கள் பல காலமாகத் தமிழ் சொற்களாகவே புழங்கி வருகின்றன. சில உதாரணங்கள், அச்சு, அதிகாரம், அதிட்டம், அன்னம், ஆதி, இட்டம், இயக்கி, இந்திரன், ஈயம், ஈனசாதி, உத்தரவு, உருவம், உட்டணம், ஊசி, எசமான், எமன், எந்திரம், ஏலம், ஒட்டகம், கலியாணம், காரியம், குடும்பம், சந்திரன், சனி, சாதி, சூரியன், தண்டம், தந்திரம், நகம், நாயன், பக்கம், பாவம், புதன், மந்திரம், மாசம், முகம், முக்கியம், முழுத்தம், யமன், ரத்தம், ராசா, லச்சை, லாபம், வசியம், வஞ்சனை. 

அதேபோல வடமொழி சாஸ்திரக் கலை போன்றவற்றை அந்தணர் மட்டுமே இயற்றினர் என்று கருதுவதும் தவறு. பிற சமயத்தினரும், அந்தணர் அல்லாதாரும், இந்திய தேசத்தில், தமிழ்நாட்டினர் உள்படப் பல நாட்டினரும் வடமொழி சாஸ்திரங்களையும் கலைகளையும் இயற்றியுள்ளார்கள். எனவே, அந்தணர் மீது கொண்டுள்ள வெறுப்பை வடமொழி மீது செலுத்துவது தவறாகும். இம்மொழி இந்தியப் பொதுமொழியாகும். இம்மொழியை இழப்பது தமிழர்கள் பூர்வார்ஜிதத்தை இழப்பது போலாகும். சமுதாய உலகத்தில் தமிழ் மக்களாகிய நாம் எப்படித் தனித்து வாழ்தல் இயலாதோ, அப்படியே மொழியுலகில் தமிழ் தனித்து வாழ்தல் இயலாது. வடமொழியை நன்றாகப் பயன்படுத்துவதற்குத் தமிழுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. இதைச் சொல்வதால் வடமொழிக்கு நாமும் தமிழும் அடிமையாக வேண்டுமென்ற அர்த்தமில்லை. தமிழ்தான் தென்னாட்டில் தலைமை வகிக்க வேண்டும். வடமொழி வழக்கொழிந்த மொழி. தமிழ் உயிர்த்தத்துவமுடைய மொழி. இவ்வாறு சொல்கிற ஆசிரியர் செழித்துக் கொண்டிருக்கிற தமிழின் சிறப்புகளை விவரித்து இன்னும் ஆறு காரணங்கள் சொல்கிறார். அக்காரணங்களால் தமிழ் தமிழ்நாட்டில் தலைமை பெற உரியதென்று விளக்குகிறார். 

இப்படித் தமிழ்மொழியை முதற்கடமையாகப் போற்ற வேண்டிய நாம், அடுத்து அன்பு பூண்டு பேண வேண்டியது வடமொழியாகும் என்கிறார் பேராசிரியர். இருமொழிகளுக்கும் இடையிலான உறவையும், வரலாற்றையும் அதற்குக் காரணமாகப் பேராசிரியர் சொல்கிறார். 

தமிழ்ப் பேரிலக்கியங்கள் பற்றி அடுத்துப் பேசுகிறார் பேராசிரியர். தமிழ்ப் பேரிலக்கியங்கள் நிலைத்த மதிப்புடையன. அவை தவிர்த்த பிறநூல்கள் பெரும்பாலும் வடமொழியைப் பின்பற்றியவை. விஞ்ஞான அறிவு பரவுவதற்கு இவை பயன்படா. அதனால்தான் சர்.சி.வி.ராமன் நமது தேசத்தின் நூல் நிலையங்களிலுள்ள நூல்களில் பெரும்பாலனவற்றை எரித்துவிட வேண்டுமென்று ஒருமுறை சொன்னார். அப்படிச் செய்வது பிழையாகும். ஆனால் சர்.சி.வி.ராமனின் உட்கருத்து போற்றத்தக்கது. விஞ்ஞான அறிவுதான் சிறந்த அறிவு. அதை வளர்ப்பதற்கும், மக்களிடம் பரப்புவதற்கும் உரிய வல்லயையைத் தமிழ் பெற வேண்டும். 

தமிழ் தெய்வத்தன்மை உடையது என்றும், ஆங்கிலத்தின் துணை விரும்பத்தக்கது இல்லை என்றும், தமிழில் எல்லா அறிவு நூல்களும் நிரம்பியுள்ளன என்றும், தமிழுக்கு இனி வளர்ச்சி வேண்டாமென்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள். இது கேடு விளைவிக்கக் கூடியது. என்று நமது மொழி பரிபூரணமடைகிறதோ அன்று அதனுடைய இறப்பு திண்ணம். ஆனால், பரிபூரண நிலையை அது என்றும் அடைய முடியாது. மனித அறிவு வளர்ச்சிக்கு எல்லையில்லை. அதைப் போன்றதுதான் மொழியின் வளர்ச்சியும். ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி போன்றது மொழி. அது பரிபூரணமடைந்துவிட்டது என்பது, நதியை அணைபோட்டுத் தடுப்பது போலாகும். 

தேசத்தின் சுதந்திரத்தை புறத்தே தெரியும் ஆட்சி முறைகளால் அறியலாம். மொழியின் சுதந்திரம் அப்படி எளிதில் அறியப்படுவதன்று. மொழியின் ஆற்றலைக் கொண்டே அதை ஊகித்துணர முடியும். ஆகவே, நமது மொழியும் சுதந்திர நெறியில் செல்லத் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவுறுகிறது. 

அடுத்த கட்டுரை, பாரதி யுகம் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. மஹாகவி பாரதி மீது பேராசிரியருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது. பல இடங்களில் பாரதியை மேற்கோள் காட்டுகிறார். பாரதியைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 



"பாரதி யுகம்" என்ற கட்டுரையிலிருந்து... 

தேசீய கவி: 

தமிழ்நாட்டில் தேசபக்தியை விதைத்து வளரச்செய்தவர்களில் பாரதியும் ஒருவர். நாட்டுப்பற்றைப் பல பெரியவர்கள் பலவிதமாக வளர்த்தார்கள். கற்றவர், கல்லாதவர், செல்வர், வறிஞர், முதியர், இளையர், ஆண், பெண் அனைவரையும் வசீகரிக்கச் செய்த தன் கவிதை மூலம் பாரதி தேசபக்தியை வளர்த்தார். எனவே, தேசிய கவியென்று அவரை அழைத்துவருவது பொருத்தமே. 

பாரதியின் கனவு பலிக்கும் காலம் வந்துவிட்டது. நாமே நம்மை ஆளத் தொடங்கிவிட்டோம். வறுமையைப் போக்க முயல்கிறோம். பொதுமக்கள் நன்மை ஒன்றையே அரசாங்கம் போற்ற வேண்டும் என்ற கொள்கை வேரூன்றி விட்டது. 

வையம் மன்னுயி 
...ராக அவ் வையகம் 
உய்யத் தாங்கும் 
...உடலன்ன மன்னவன் 

என்ற கம்பன் வாக்கு பலித்துவிட்டது. 

அரசியலில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் பாரதி கனவு நனவாகிறது. முன்னர் தெய்வம், அரசர், சிற்றரசர், பிரபுக்கள் மீது கவிதை புனையப்பட்டது. சொற்களும் பொருளற்று கவிதைகள் உயிரற்றுக் கிடந்தன. சன்மானம் பெறுவதே முதல் நோக்கமாக இருந்தது. கலையுணர்ச்சி, கவிதையுணர்ச்சி முதலியன இரண்டாம்பட்சமாக இருந்தன. இக்குறைகளை நீக்க பாரதி முயன்றார். வெற்றியும் பெற்றுவிட்டார். யாசகத்தின் பொருட்டுப் பாடும் கவிஞர்கள் இக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. 

கவிதைப் பொருள்: 

பாரதி கவிப்பொருளாகப் புது விஷயங்களைக் கண்டார். பழம்பொருள்களையும் புதிய முறையில், கலைநயம் தோன்ற கவித்துவத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் பாடியுள்ளார். உதாரணமாக, ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இதற்குப் பழம்பெருமை உண்டு.

சொல்லின் கிழத்தி 
.....மெல்லியல் இணையடி 
சிந்தை வைத்து இயம்புவல் 
.....செய்யுட்கு அணியே 

என்று தண்டியலங்காரம் தொடங்குகிறது. 

தவளத் தாமரை 
.....தாதார் கோயில் 
அவளைப் போற்றுதும் 
.....அருந்தமிழ் குறித்தே 

எனச் சேனாவரையர் தம் உரையைத் தொடங்குகின்றனர். கம்பராமாயணத் தனியன்களில் "பொத்தம் படிக மாலை" என்று தொடங்கும் செய்யுளொன்று உளது. கம்பர், ஸரஸ்வதய்யந்தாதி ஒன்று பாடினரென்றும் கட்டுரைப்பர். அதில், 

ஆய கலைகள் 
.....அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் 
.....என்னம்மை - தூய 
உருப் பளிங்கு போல்வாள் என் 
.....உள்ளத்தினுள்ளே 
இருப்பள் இங்கு 
.....வாராது இடர் 

என்பதும் உள்ளது. குமரகுருபர சுவாமிகளும் சகலகலாவல்லி மாலை ஒன்று பாடினார். ஸரஸ்வதி தேவியைக் குறித்துப் பலத் தனிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் ஒன்று. 

கடிமலர்கள் கொய்திட்டுக் கையிரண்டும் கூப்பி 
அடிபணிய வேண்டிற் றளிக்கும் - நொடிவரையின் 
வண்டார் கருங் கூந்தல் வஞ்சியிடைக் கிஞ்சுகவாய் 
வெண்டா மரைமேல் விளக்கு 

மேற்கண்ட பாடல்களில் உயிரும் ஆற்றலும் காண்பது அரிது. 

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் 
.....வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் 
கொள்ளை இன்பம் குலவு கவிதை 
.....கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் 
உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே 
.....ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் 
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும் 
.....கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் 

என்ற பாரதி பாடலின் இனிமையும், புதுமையும், கருத்து நயமும், உண்மை உணர்ச்சியும், கவித்துவப் பெருமையும், முற்காலத்து ஸரஸ்வதி ஸ்தோத்திரங்களில் சிறிதும் இல்லை. ஸரஸ்வதி தேவியின் மனம் பாரதி எழுதியது போன்ற கவிதைகளாலேயே கனியும். 

இவ்வகைப் பாடக்களைப் பாடிய பாரதி கவிதை உலகில் ஒரு நூதன யுகத்தைத் தொடங்கி வைத்தார். அதை, 'பாரதி யுகம்' என்று அழைக்கலாம். பாரதி கனவும், கவிதையும் கவிஞர்கள் உள்ளத்தில் தூண்டா விளக்காக நின்று ஒளிர்க. 

இத்துடன் 'பாரதி யுகம்' என்ற கட்டுரை நிறைவுற்றது. 

அடுத்த கட்டுரை 'பாரதியும் தமிழும்' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இதில் பாரதி தமிழுக்கு எவ்விதம் புத்துயிர் அளித்தார் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

'பாரதியும் தமிழும்' என்ற கட்டுரையிலிருந்து... 

மூன்று விடுதலைகளுக்காக பாரதி உழைத்து வந்திருக்கிறார். அவை, நாட்டு விடுதலை, பெண் விடுதலை, தமிழ் விடுதலை. முதல் இரண்டு விடுதலைகளுக்காகப் பாடியவர் மூன்றாவது விடுதலைக்குப் பாடவில்லை என்பது உண்மை. ஆனால், "தமிழுக்கு விடுதலை" என்பது பாரதியின் பாடல்களில் எளிதில் காணக் கிடைக்கிறது. 

பல நூற்றாண்டுகளாய் வளர்ந்து பெருகிய தமிழ் கம்பர் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. ஆரிய நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒன்றுகூடித் தென்னாட்டில் பரவிய கலப்பு நாகரிகத்தின் பேரெல்லையை அறிவுறுத்துவதாக, நமது தமிழும் செழிப்புற்றோங்கியது. ஆனால், கம்பருக்குப் பின் தமிழ்ப் பேராறு பல கால்வாய்களாகப் பிரிந்துவிட்டது. காதற் பிரபந்தங்களும், புராணங்களும், பலவகைப் பிரபந்தங்களும் தமிழில் நிரம்பலாயின. இவற்றால் தமிழின் வன்மையும் வேகமும் சிறிது சிறிதாகக் குறைவுபடலாயின. தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியும் அனுபவ வளர்ச்சியும் தடையுற்று நின்றன. இந்நிலையைத்தான் 'மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்' என்று ஒரு 'பேதை' கூறியதாகப் பாரதியார் பாடினார். 

இப்படிக் கட்டுக்கிடையாகக் கிடந்த தமிழை விடுதலை செய்து அதற்குரிய இயற்கை வலிமையோடு மீண்டும் ஜீவநதியாகப் பெருகிப் பாயும்படிச் செய்தவர் பாரதி. இச் செயற்கரிய காரியத்தைப் பாரதி எவ்வாறு செய்து முடித்தார். இதற்கான விடையை தமிழ்ச் சொற்கள், தமிழ் நடை, நூற்பொருள் என்ற மூவகையிலும் தமிழ் இருந்த நிலையை நோக்கினால் எளிதில் அறியலாம். 

வழக்கொழிந்த சொற்கள்: 

புலவர்கள் தங்கள் நூல்களில் பயன்படுத்திய சொற்களில் பாதி வழக்கொழிந்தவையாக இருந்தன. புலவர்கள் வழக்கற்ற, கரடுமுரடான, அருஞ்சொற்களைக் கையாளுவதில் மிகவும் கவனம் காட்டி வந்தனர். ஒரு உதாரணம், 

"ஆயிடைச் செல்வோர், உடுத்தன வெள்ளுடையாய், உருநிறம் வெண்ணிறமாய்த் திகழ்தலின், பானிறக் கலிங்கம் உடுத்து மாலை காலத்திற் கூலத்தில் உலாவரும் வெண்ணிற மக்களை நிகர்த்தனர். அம்மறுகையடுத்துக் கொடிகள் துயல்வரப் பன்னிறக் கண்ணாடிச் சாளரம் அமைத்து நாற்றிசையுங் காண்வர ஏற்றிய விளக்கொடு நின்ற மாடங்கள், கலங்கரை விளக்கமென இலங்குற்றன." 

கையில் அகராதியை வைத்துக் கொண்டுதான் இத்தகைய வழக்கொழிந்த மாண்டுவிட்ட சொற்கள் நிரம்பிய நூலுக்குப் பொருள் காண முடியும். 

ஆடம்பரச் சொற்கள்: 

ஆடம்பரச் சொற்களைப் பயன்படுத்துவோர் உயிரற்ற பிணத்தை அலங்கரிப்பதுபோல், பொருளற்ற தம் வாக்கியத்தைப் பகட்டு மொழிகளால் நிரப்பி விடுகின்றனர். தமிழ்ப் பகட்டு மொழிகளோடு வடமொழிப் பகட்டு மொழிகளை வழங்குவதிலும் தமிழர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள். 

"மஹாராஜாவே, நின்னுடைய ஆஜ்ஞாலங்கள் பயத்தால் அவர்களைக் கொண்டு வனம்புக்கு, கிரிதுர்க்கா த்வாரத்துள் உறையும் முநீவரன் என நிர்ப்பய விவிக்த விஹாரியாகி நிர்மலமாகிய லேச்யை யுடையதொரு மஹாபல கேஸரி ஸந்நிஹித மாயினவாறே அதன்முன் அவரை உய்த்தேன்." 

இனி, 

இப்புலவர்கள் கையாண்ட தமிழ் நடையை நோக்குவோம். 

நாம் கற்ற பண்டை நூல்களிலிருந்து பல தொடர்களையும், செய்யுட்களையும் வசனமாக அமைத்து விடுதலே 'உயரிய' செந்தமிழ் நடை எனப்பட்டது. 

"கல்வியுடையவரே கண்ணுடையவர். கல்லாதார் முகத்திரண்டு புண்ணுடையவரே. கல்லாதார் மக்கள் உடம்பிற் பிறந்திருந்தும் விலங்கினை ஒப்பாவார். அன்றியும் மக்கட் பதடியுமாவார். கேடில் விழுச்செல்வமாகிய கல்வியைப் பெற்றவர் நீரால், நெருப்பால், கள்வரால், தாயத்தாரால், பிறரால் அழிவுறும் ஏனைச் செல்வத்தைச் செல்வமென மனங்கொள்ளார்... கற்றவர் குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகையும் மதித்திடார்" 

இதுபோன்ற தமிழ் நடையால், ஆசிரியரது கல்விப் பெருக்கமும், ஞாபக சக்தியும் நமக்குப் புலனாகின்றன. இவற்றை நாம் வியக்கலாம். ஆனால் இந்நடையை வியக்க முடியாது. பழஞ் சுண்டற் கறியை ஆசிரியர் வாசகர்களுக்கு விருந்து செய்ய முயன்றிருக்கிறார். தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய நடை பெரியதொரு தடை. 

சோலையை நாண்மலர்ச் சோலை என்றும், சந்திரனை பன்மீன் நடுவட் பான்மதி என்றும், உலகத்தை கடல்புடை சூழ்ந்த மலர்த் தலையுலகம் என்றும் எழுதுகிற போக்கும் இத்தகையதே. இத்தொடர்களைக் கிளிப்பிள்ளை போல திருப்பித் திருப்பிச் சொல்வதால் இவை பொருளற்றுப் போய்விட்டன. 

ஒரு சிலர் எதுகை நயங்களையும் மோனை நயங்களையும் எதுகை-மோனை நயங்களையும் வசன நடையில் அமைத்துத் தன்னுள்ளே மகிழ்ந்து வாசகர்களுக்கு நகைப்பு ஊட்டி வந்தனர். 

"இடியலி கேட்ட பாம்பெனத் துடிதுடித்து அடியற்ற மரமெனப் படிமிசைத் திடீரென விழுந்து... 

ஆராயாமற் காரியஞ்செய்து அரும்பழி பூண்டமைக்கு நெஞ்சு அயர்ந்து, அரியணை மீது வீழ்ந்து அன்றே உயிர் அகற்றினான்." 

இங்ஙனம் எழுதுபவர்களும் தங்கள் அறிவுச் சூன்யத்தைச் செய்யுட்குரிய இந்த நயங்களால் மறைக்க முயல்கிறார்கள். 

இன்னும் சிலர் அற்பக் கருத்துகளை வெளியிடப் படாடோபமான பெரிய சொற்களைப் பயன்படுத்தினர். 

"இழிதகவ! இஞ்ஞான்று ஈதென்னை? வறுமைக் காலத்தில் முதுமைத் துறவி உறழ..." என்று தொடர்கின்ற வாக்கியங்களைக் கேட்டதும் சிரிக்காமல் இருக்க முடியுமா? 

பழைய நூல்களில் விளங்காத பகுதியை தம் வசனத்தில் பயன்படுத்துவதும், இத்தகையதே. உதாரணமாக, பூமி சாஸ்திரம் தொடர்பான வடமொழி கட்டுக்கிடைச் சரக்குகளைத் தமிழில் அப்படியே எழுதுதல். வடமொழி கூட்டுறவால் தமிழ் எத்தனையோ நன்மை பெற்றுள்ளது. அக்கூட்டுறவைத் தக்கபடி பயன்படுத்தாததால் தீங்குகளும் தமிழில் புகுந்துள்ளன. 

அணியிலக்கணம்: 

அணியிலக்கணம் என்ற பெயரால் தமிழிற்கு விளைந்த துன்பங்களைச் சொல்லி முடியாது. இவ்விலக்கணம்தான் தமிழ் நடையை இயல்பிற்கு மாறாக விலங்கிட்டுத் தடை செய்து, முற்றும் கெடுத்து விட்டது. வடமொழி ஆசிரியர்களைப் பின்பற்றி வசனமும், செய்யுளும் எழுதத் தொடங்கி, தாம் கையாளுவது தமிழ்தானோ என்று ஐயுறும்படியாகச் செய்துவிட்டது. மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றில் வரும் உதாரணச் செய்யுட்களை நோக்கினால் மேற்கூறியதன் உண்மை புலப்படும். 

கற்பகப் பாவடி வாரணம் பாற்கடந் தோன் செந்தமிழ்க் 
கற்பகப் பாவடி வாரணங் கண்டவர் கோனருள்வி 
கற்பகப் பாவடி வாரணங் கார்மலர்க் காமொய்தில்லைக் 
காற்பகப் பாவடி வாரணம் யான்பெறக் காட்டிடுமே 

வாயாயா நீகாவா யாதாமா தாமாதா 
யாகாவா நீயய்யா வா 

என்பன போன்ற செய்யுட்கள் தமிழணங்கு குற்றுயிராகக் கிடக்கிறாள் என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன. 

புலவர் தம் காவியங்களில் நகர் வருணனை, மலை வருணனை வேண்டுமென்று அலங்கார நூல்கள் வற்புறுத்தின. அவ்வாறே செய்ய அப்புலவர்களும் முற்பட்டனர். ஆனால் பாவனாசக்தி வாய்ந்திருந்தால்தானே இவ்வருணனைகள் செய்ய இயலும்? சிறிது முயன்று சில வருணனைச் செய்யுட்களை இயற்றுவார்கள். இதற்குள் இவர்களது பாவனா சக்தி வறண்டு மாய்ந்து விடுகிறது. உடனே, திரிபு, இரண்டடிப் பாடகமடக்கு, ஏகபாதம், ஓரெழுத்து விகற்பத்தான் வந்த மடக்கு, திரிபங்கி, கோமூத்திரி, முரசபந்தம், அஷ்டநாகபந்தம் முதலியவற்றில் இறங்கிப் பொருளற்ற கிருத்திரிம அலங்காரங்களில் தங்கள் அறிவாற்றலைப் பாழாக்குவர். இவ்வாறு வதையுண்ட தமிழுக்கு என்றேனும் விடுதலை ஏற்படுமா என்றூ யாவரும் கவலையுறுதல் இயல்புதானே? 

தமிழ் நூல்களில் நூற்பொருள்: 

நூற்பொருள்கள் பெரும்பாலும் தெய்வங்களைக் குறித்த தோத்திரங்களாகவும், பிரபந்தங்களக்கவும் புராணங்களாகவும் இருந்தன. தோத்திரங்களெல்லாம் பெரும்பாலும் ஒரே தன்மையன. தாமோ, பிறரோ, சொல்லியவற்றையே திரும்பத் திரும்ப சொல்லுவதில் சுவை ஏதேனும் காண முடியுமா? முடியாது. இவற்றிலே ஆழ்ந்த தத்துவங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், இவ்விஷயத்திலும்கூட நாம் ஏமாற வேண்டியதுதான். நமது தத்துவ நூல்களிலுள்ள சங்கேதபதங்களைக் காணலாம். ஆனால் கருத்து வளர்ச்சி, உண்மையறிவு, கவிதை உணர்ச்சி ஆகியவற்றைக் காண முடியாது. 

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப 
.....நிர்விஷய கைவல்யமா 
நிஷ்கள வசங்கசஞ் சலரகித நிர்வசன 
.....நிர்த்தொங்க நித்தமுக்த 
தற்பர விச்வாதீத வ்யோமபரி பூரண 
.....சதானந்த ஞானபகவ 
சம்புசிவ சங்கர சர்வேச வென்றுநான் 
.....சர்வகாலமும் நினைவனோ 
அற்புத வகோசர நிவிர்த்திபெறு மன்பருக் 
.....கானந்த பூர்த்தியான 
அத்துவித நிச்சய சொரூபசா க்ஷ¡த்கார 
.....அனுபூதி யனுசூதமுங் 
கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற் 
.....கண்ணூடிருந்த குருவே 
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு 
.....கருணாகரக் கடவுளே 

இத்தாயுமானவர் பாடலில் வாய் நிரம்பிய சொற்கள் உள்ளன. தத்துவ-எலும்புச் சட்டகம் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்த தத்துவ உணர்ச்சியை எழுப்புவதற்கு இது வன்மையுடையதல்ல. கவிதை உணர்ச்சியோ, இப்பாட்டினுள் தங்கி நிற்க மறுத்துப் பறந்தோடி விட்டது. இதிலே வடமொழி என்னும் நாகபாசத்தால் கட்டுண்டு தமிழ்மொழி உயிர் குறைந்து மரணாவஸ்தை எய்தியுள்ளது. 

பிரபந்த வகைகள்: 

தெய்வம் பற்றித் தோன்றியுள்ள பிரபந்த வகைகளும் ஒரே மாதிரி உள்ளன. உதாரணம், கோவை, உலா ஆகிய பிரபந்தங்கள். இதிலே உலாப் பிரபந்த வகையிலாவது சில வேற்றுமைகள் உண்டு. கோவையில் அதுவும் இல்லை. கோவையில் காட்சி முதல் கார்ப்பருவம் கண்டு இரங்கல் வரையுள்ள பல துறைகளும் அழகு இல்லாமல், கவித்துவமில்லாமல் பாடப்பட்டுள்ளன. ஸ்தலம் பற்றிய சரித்திரக் குறிப்புகள்கூட இவற்றில் கிடைத்தல் அரிது. எனவே, இவற்றில் ஒரு சில தவிர, ஏனைய எல்லாம் ஒருவகைப் பயனும் தரத்தக்கன அல்ல. இவற்றில் காணும் தமிழும் ஒரே மாதிரியாகவும் சிறந்த நயமின்றியும் உள்ளது. ஏதேனும் ஒரு ஸ்தலத்தையோ மூர்த்தியையோ எடுத்துக் கொண்டு எல்லா வகையான பிரபந்தங்களையும் பாடி முடிக்க வேண்டும் என்ற வழக்கமாகி விட்டது. தமிழ்க் கவிதைப் பயிரை வேரோடு அழித்துவிட்ட விஷப்பூண்டுகள் என்று இவற்றைச் சொல்லலாம். 

புராணங்கள்: 

புராணங்களால் தமிழும் தமிழ்நாட்டு மக்களும் சீர்கெட்டுப் போயுள்ளனர். வடமொழியில் உள்ள பதினெட்டுப் புராணங்களின் மொழி பெயர்ப்புகள் சில தமிழில் உள்ளன. இவை போதாது என்று தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் புராணம் எழுதத் தொடங்கி விட்டனர். இப்புராணங்களைக் காவிய லட்சணமுள்ளன போல எழுதி இவற்றில் பலவகையான பொய் வரலாறுகளையும் புனைந்து புகுத்தி வந்தனர். சூரியன், சந்திரன், இந்திரன், மஹரிஷிகள், பிரம விஷ்ணு சூத்ரர்கள், உமா தேவியார், அரசர்கள் முதலானவர்களுக்கெல்லாம் ஒரே கடமை ஏற்பட்டு விட்டது. அவர்கள் தினந்தோறும் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பூஜித்து தங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள சாபத்தினின்றும் விமோசனம் பெறுதலே அவர்கள் வேலை. 

இவர்கள் சில இடங்களிலுள்ள கட்டுக்கிடை நீரைத் தீர்த்தமெனக் கொண்டு, மோக்ஷதாயினி, பாபநாசினி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்து, தங்களுடைய பக்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இக்கட்டுக்கிடை நீர் நாற்றம் எடுப்பது போலுள்ளது. அதுவே, இப்புலவர்களது தமிழும் உண்மையான தெய்வப் பற்றும், உண்மையான நாட்டுப் பற்றும், உண்மையான தமிழ்ப் பற்றும் நமக்கு உண்டாகாதவாறு செய்துவிட்டது. நேர்மாறாக, இவர்கள் செய்துள்ள கட்டுக்கதைகளின்மீது அருவருப்பும், இவர்கள் எழுதியுள்ள தமிழின்மீது அருவருப்பும், உண்டாகும்படி செய்துவிட்டார்கள். 

இனி, மக்களைக் குறித்து சிலர் எழுதியுள்ள பாடல்களைப் பார்க்கலாம். மக்களைப் பற்றிப் பாடுவதில் புராணங்களுக்கு இடமில்லை. ஆகவே, தோத்திரப் பாடல்களும், பிரபந்தங்களுமே மக்களைப் பற்றியுள்ளன. பொய்யின் பேரெல்லையை இந்நூல்களில் நாம் காணலாம். உண்மை என்பது மருந்துக்கும் இல்லாமல், உயர்வு நவிற்சியையே எப்போதும் பயன்படுத்தி உண்மையின் இயல்பை இப்புலவர்கள் மறந்துவிட்டார்கள். சொல்வதை ஆத்ம சுத்தியோடு சொல்ல வேண்டும் என்ற நினைப்பும் இவர்களுக்கு இல்லை. 'மனம் வேறு, சொல் வேறு, மன்னு தொழில் வேறு' என்ற கூற்றிற்கேற்ப, இவர்களின் இயற்கை அமைந்துவிட்டது. 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன் 
.....காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன் 
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன் 
.....போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன் 
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை 
.....வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன் 
இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான் 
.....யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே 

என்று ஒரு புலவர் தாம் செய்த பாபத்திற்காக இரங்குகிறார். தமிழ்ப் புலவர்களுள் இவர் ஒருவர்தான் தாம் செய்தது பாபம் என்று இரங்கிப் பாடியவர். 

இப்படிப்பட்ட புலவர்களின் பாடல்களால் தமிழுக்கே உண்மையை உணர்த்தும் ஆற்றல் இல்லையோ என்று சிலர் சந்தேகம் கொள்ளும்படி ஆகிவிட்டது. இவ்வாறு, சொல், நடை, கருத்துப் பொருள், நூற்பொருள் முதலிய பல விஷயங்களிலும் தமிழ் மிகவும் சீர்கெட்டு இருந்தது. இதை நன்னிலைக்கு மீண்டும் கொண்டு வருவது ஒரு பெருங்கவிஞனாலும் கடினம் என்ற நிலை இருந்தது. அப்படி முயல்கிற பெருங்கவிஞன் அறிவும் ஆற்றலும் கல்வியும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். புத்துணர்ச்சிகள் பல கொண்டு, பிறநாட்டு இலக்கியங்களை உணர்ந்தவனாய், தன் நாடு மேம்பட வேண்டும் என்ற நிலைத்த நோக்கம் உடையவனாய், உண்மை உரைப்பதிலே பெருநாட்டம் உடையவனாய், அஞ்சாமையே தனக்கு அரணாய் உடையவனாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் உண்டாயிற்று. 

இவ்வியல்புகளுக்கெல்லாம் லட்சியமாகத் தோன்றியவர் தேசீயகவி பாரதி. பொய்யாக மக்களைப் பாடும் பொய்வாழ்வின் பெரும்பகைவர் இவர். அடிமை வாழ்வு அழிய இரவும் பகலும் சிந்தித்து முயன்றவர். அதற்குரிய ஆத்ம சக்தி தம் மக்களுக்கு வேண்டுமென்று பராசக்தியை வணங்கிப் போற்றியவர். நாட்டில் ஒற்றுமை மனப்பான்மை ஓங்க சங்கநாதம் செய்தவர். சாதி வேற்றுமை அறவே ஒழியவும், தீண்டாமைப் பேய் ஓடவும் முழங்கியவர். நாட்டுப் பற்று இவர் இதயத்தில் சுரந்து பொங்கி வழிந்தது. உண்மை ஒளியானது இவர் வாக்கினிலே சுடர்விட்டு இலங்கியது. 

உள்ளத்தில் உண்மையளி உண்டாயின் 
.....வாக்கினிலே ஒளியுண் டாகும் 

என்று அருமையாகப் பாடியவர் இவரே. 

விடுதலை பெற்ற தமிழில்: 

பாரதி விடுதலை பெற்ற தமிழில் தமது அரிய பாடல்களை இயற்றினார். இவர் தமிழ் கட்டுக்கிடை அன்று. தினந்தோறும் வழங்கிவரும் மொழி. பேச்சு வழக்கிற்கு ஒத்த நடை. வருணனைகள், அலங்காரங்கள் நீக்கி, தனக்கு இயல்பாகவுள்ள பேரழகோடு விளங்குவது. இயல்பாக உள்ள ஆற்றலோடும் சிறப்போடும் செல்லுவது. இவரது தமிழ் இவருடைய கருத்துகளை வெளிப்படாமல் மறைப்பதற்கு இட்ட திரையல்ல. இவர் பாடல்களைப் படித்த உடனேயே, பொருள் உணர்த்த வேண்டும் என்ற அவசியம் இன்றி, கருத்துகள் நம் மனத்தில் நேரே பாய்கின்றன. பாட்டினுடைய பொருள்கள் நம் அறிவை முற்றும் கவர்ந்து விடுகின்றன. பாட்டினுடைய வடிவும் அழகும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. இவ்வாறாக, தமிழை விடுதலை செய்த இப்பெருங்கவிஞரைத் தமிழ்நாடு என்றும் மறவாது. 

இத்துடன் "பாரதியும் தமிழும்" என்ற கட்டுரை நிறைவுறுகிறது. 

பாரதி தமிழுக்குப் புத்துணர்வு தந்தவர் என்று பலரும் எழுதப் படித்திருக்கிறேன். ஆனால், நான் படித்த வரையில் யாரும் அதற்கு முன் தமிழ் எப்படியிருந்தது, பாரதி அதை எப்படி மாற்றினார் என்று விவரமாகவும் ஆதாரபூர்வமாகவும் சொன்னதில்லை. யாரேனும் சொல்லி நான் படிக்காமல் இருந்திருக்கலாம். வையாபுரிப் பிள்ளையின் பாரதி யுகம், பாரதியும் தமிழும் ஆகிய கட்டுரைகள் ஆதாரபூர்வமாக தமிழ் அன்றிருந்த நிலையைச் சொல்லிப் பின் பாரதி அதற்கு மறுவாழ்வு தந்ததை விளக்குகிறது. 1940களிலேயே - பாரதியின் பெருமை பாருக்கு முழுதும் பரவாத நாள்களிலேயே - பாரதியை இப்படிச் சரியாகப் புரிந்து கொண்ட, பாரதியின் இடத்தைத் தமிழில் ஆதாரபூர்வமாக நிறுவிய பேராசிரியரின் பங்களிப்பு போற்றத்தக்கது. பழந்தமிழிலும் பழைய இலக்கியங்களிலும் மொழியாராய்ச்சியிலும் தமிழின் வரலாற்றிலும் தேர்ந்த தமிழ்ப் பேராசிரியரான வையாபுரிப் பிள்ளையின் பாரதி பற்றிய இக்கட்டுரைகள் பாரதிக்கு திறமான புலமை பெற்ற ஒருவரால் சூட்டப்பட்ட மணிமகுடங்கள். பாரதிதாசன் வையாபுரிப் பிள்ளையைத் திட்டியபோது, பாரதி பற்றிய பேராசிரியரின் இக்கருத்துகளை அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை. பாரதி அன்பர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டியவை பேராசிரியரின் பாரதி பற்றிய இக்கட்டுரைகள். 

அடுத்த கட்டுரை "தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும்" என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்பொருளில் ஏற்கனவே பேராசிரியர் சொன்ன கருத்துகளை இன்னும் விவரித்து இதிலே அவர் பேசுகிறார். பழைய பொருளொன்றையே திரும்பப் பேச நேர்கிற தருணங்களில்கூட ஒவ்வொரு முறையும் பேராசிரியர் புதிய புதிய உதாரணங்களைக் காட்டி விளக்குவது அவர் அறிவின் ஆழத்தையும், தெளிவையும் காட்டுகிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

"தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும்" என்ற கட்டுரையிலிருந்து... 

நாட்டில் மொழிப் பிரச்னைகள் நாளுக்கு நாள் வலுவடைந்தும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு ஆதாரக் காரணம் தாய்மொழிப் பற்று. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இம்மொழிப்பற்று வெளியாகி வந்துள்ளது. இது புலப்படுத்தும் நெறிகளும் பல வகையானவை. 

ஒவ்வொருவரும் தனது தாய்மொழியே உலகிற் சிறந்தது என்று நினைக்கிறார். வடமொழி பேசுகிற ஒருவர் அதைத் "தேவபாஷை" என்று அழைக்கிறார். அதுமட்டுமின்றி, அம்மொழியின் இயல்போடு தொடர்பற்ற "தமிழைப் பேசுபவர்களும் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்கிறார். தமிழரும் தன் மொழி வடமொழியோடு ஒத்த பெருமையுடையதாக இறைவனால் படைக்கப்பட்டதென நம்புகிறார். 

விடை யுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் 
வட மொழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் 
திட முறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் 

என்பது திருவிளையாடற் புராணம். வடமொழியோடு ஒப்பிடுதல் தற்காலத்தில் விரும்பப்படுவதில்லை. எனவே, இறைவனைப் போல எக்காலமும் அழிவில்லாதது கன்னித் தமிழ் என்ற கருத்துப் பிறந்தது. 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் 
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் 
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் 
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் 
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் 
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 

என்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. சிலர் தமிழ்தான் இயற்கை மொழி என்பர். கருத்தளவில் இருந்த இந்நிலை மாறி தற்போது காரிய அளவிற்கு வந்துவிட்டது. "தமிழனாய்ப் பிறந்தவனுக்குத் தமிழ்தான் மூச்சு; அவன் உயிர்ப்பது தமிழ்; அவன் நினைப்பது தமிழில்; எழுதுவது தமிழில்; தமிழ் பேசும் இனத்தவரிடையேதான் எளிதாக மூச்சு விட்டு வாழமுடியும்" என்று இவ்வாறான உணர்ச்சியோடு செயலில் இறங்கவும் தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். 

பிறமொழி வெறுப்பு: 

இச்செயல் பெரும்பாலும் பிறமொழி மீதும் பிறமொழி பேசுவோர் மீதும் வெறுப்பாக முற்றிவிட்டது. தமிழ் இலக்கண வரம்புடையது. பிற மொழிகளில் சில இலக்கண வரம்பற்றதென திருவிளையாடற் புராண ஆசிரியர் கூறினர். ஆரியர்கள் பிறமொழி பேசும் மக்களை 'மிலேச்சர்' என்று இகழ்ந்தனர். இந்தச் சொல்லுக்குத் 'திருந்தாத மொழியைப் பேசுபவர்' என்று பொருள். வடமொழி திருந்துவதற்கு முன்னிருந்த மூலமொழிக்குப் 'பிராகிருதம்' என்று பெயரிட்டனர். இதற்கு அநாகரிக மொழி என்று பொருள். ஒரு பிராகிருத மொழியைப் பைபாச மொழி என்ற பெயரால் வழங்கினர். தமிழையும் சிறிது இகழ்ச்சியோடு வழங்கியும் குறிப்பிட்டும் வந்தனர் என்று கருத இடம் உண்டு. தமிழ் மக்களும் பின்வாங்கவில்லை. ஆரியர் என்ற சொல்லுக்கே மிலேச்சர் என்று தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன. (ஆரியரை அவ்வாறு கூறுதல் தகாதென்று கருதி, சூடாமணி நிகண்டினைப் பிரதி செய்தோர் ஆரியர் என்றதனை அநாரியர் என்று திருத்தி விட்டனர். திவாகர நிகண்டைப் பதிப்பித்தவர் இச்சூத்திரத்தையே ஒழித்து விட்டார். மிகப் பழைய ஏட்டுச் சுவடிகளில் இது காணப்படுகிறது. நகைச்சுவைக்கு உதாரணமாக 'ஆரியர் கூறும்' தமிழ்ப் பேச்சை செயிற்றியனார் என்ற ஆசிரியர் தந்துள்ளார்). 

தெலுங்கர் தமது மொழியைத் 'தெளிந்த தேன்' (தேட) என்றும், தமிழ்மொழியை அரவம் (பொருள் அற்ற மொழி) என்றதோடு நில்லாமல், நீர்ப்பசையற்ற பாலைநிலம் (அத்வாநமு) என்றும் குறிப்பிட்டனர். வடுகர் முதலியோரை நெருங்குதல் கூடாதென்று ஒரு பழைய செய்யுள் கூறுகிறது: 

வடுக ரருவாளர் வான்கரு நாடர் 
சுடுகாடு பேயருமை என்றிவை யாறும் 
குறுகார் அறிவுடையார் 

பிற நாடுகளிலும் இத்தகைய சுயமொழிப் பற்றும் அந்நிய மொழி வெறுப்பும் காணப்படுகின்றன. கிரேக்கர்கள் பிறமொழி பேசும் மக்களை "பார்பெராய்" (Barbaroi - உளறுபவர்) என்றனர். சீன மக்கள் தென் சீனத்தில் வாழ்ந்த சிலவகையினரை 'தென் மிலேச்சர்கள், 'அப்பாவிகள்' என்று பொருள்படும் சொற்களால் அழைத்தனர். 

மேலே கூறிய விருப்பு வெறுப்புகளின் காரணமாக மொழி பற்றிய ஜாதீயமும் தேசீயமும் விளைகின்றன. ஆனால், இது குறித்து நாம் அதிகமாக வெட்கப்படவேண்டிய அவசியமில்லை. உலகில் தேசீய இனத்தவர் எல்லாரிடத்திலும் இது காணப்படுவதே. 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்றார் பாரதி. ஒவ்வொருவரும் அவரவர் மொழிதான் உலகிலேயே சிறந்தது என்று எண்ணுவது இயல்பே. பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் அழகிய பிரெஞ்சே உலகில் கற்கத் தகுந்தது என்கிறார்கள். உலகில் இனிய மொழி தமிழ் ஒன்றே என்பர் தமிழர்கள். தமிழ் என்ற சொல்லுக்கே அவர்கள் இனிமை என்று பொருள் கண்டனர். ஸங்கீதத்துக்கு ஏற்ற மொழி தெலுங்கு ஒன்றே என்பர் தெலுங்கர். இத்தாலியரும் தம் மொழி குறித்து இவ்வாறே சொல்வர். 

மொழி பற்றிய ஜாதீய உணர்ச்சி பலவகையாக வெளிப்படுகிறது. தூயமொழிக் கிளர்ச்சி இவ்வகைகளுள் ஒன்று. இது பெரும்பாலும் மொழிநூற் பயிற்சி இல்லாதவரால் தொடங்கப்படுகிறது ஆனால், அடிக்கடி மொழி மாற்றத்திற்குக் காரணமாகிறது. தமிழில் வடசொல் முதலிய பிறமொழிச் சொற்கள் கலத்தல் கூடாதென நம்மில் சிலர் விலக்கி வருகின்றனர். ஐரேனியர் தமது பாரசீக மொழியிலிருந்து துருக்கி, அராபியச் சொற்களை விலக்க முற்பட்டு வருகின்றனர். ஜெர்மானியர் அந்நிய மொழிப் பதங்களைக் கடன் கொள்ளாது அவற்றை மொழிபெயர்த்து வழங்குதலை விரும்புகின்றனர். நெருப்பின் பெயராகிய "ஆஸ்ரயாஸ" என்றதனை 'சேர்ந்தாரைக் கொல்லி' என வள்ளுவர் வழங்கியது இங்கே ஒப்பிடற்குரியது. ஒரு சில தமிழ் அறிஞர்கள் தமது பெயர்களில்கூட வடசொல் இருத்தல் கூடாது என்று எண்ணி, அவற்றையும் மொழிபெயர்த்து வருகின்றனர். உதாரணங்கள்: மணவழகு (கல்யாணசுந்தரம்), மதியழகன் (சோமசுந்தரம்). 

ஒரு தேசீய மொழியே ஒரு நாடு முழுவதிலும் பரந்து வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தினர் முயற்சி செய்வதும் இவ்வகையைச் சார்ந்ததே. ஒருநாட்டில் அங்கங்கே வழங்கும் பிராதேசிக மொழிகளையும் (Dialects) சிறுபான்மை மொழிகளையும் (minority languages) ஒழித்துவிட வேண்டுமென்று இவர்கள் முயல்கின்றனர். நமது நாட்டில் இப்போது அரசாங்கத்தினர் ஹிந்தியைத் தேசீய மொழியாக்க அரும்பாடு படுகின்றனர். இதுபோன்ற முயற்சிகள் பல தேசங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றின் வரலாறுகள் ஓரளவு பயன்படலாம். 

முசோலினி தமது நாட்டில் அங்கங்கேயுள்ள பிராதேசிக சபைகளை ஒழிய வைத்தார். மொழி விளக்க - ஐரோப்பா படமொன்று (Linguistic map of Europe) வரைய ஆணையிட்டு, அதில் மற்ற தேசங்களிலுள்ள பிராதேசிக மொழிப்பகுதிகளை விடாமல் குறிப்பிட்டு, இத்தாலி தேசத்தில் மட்டும் மொழிப் பிரிவினை எதுவும் இல்லாததுபோல் ஒரே மொழி வழங்கும் நாடாகக் காட்டச் செய்தார். 

பிரான்ஸ் பொதுவாக விரிந்த மனப்பான்மையுடையது. ஆனாலும், அதன் உட்பகுதியான பிரிட்டானியிலுள்ள கலாசாலைகளில் பிரெட்டன் (Breton) மொழியைக் கற்பிக்கக் கூடாதென ஆணை பிறப்பித்தது. பிரெட்டன் மொழியில் விலாசம் எழுதிய கடிதங்களைக் கூடப் 'பிரெட்டன் மொழியில் விலாசம் எழுதப்பட்டுள்ளது' என்ற முத்திரை குத்தி, பிரெஞ்சு தபால் இலாகாவினர் திருப்பிவிடுவார்களாம். மொழி அடக்குமுறை ஐரோப்பாவில் வெகுகாலமாக நிகழ்ந்து வருகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னால் 1790ல் அதன் அரசாங்க ஆணை அந்நாட்டிலுள்ள எல்லா பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அம்மொழிகள் அபிவிருத்தி அடைவதற்கு அனுகூலங்களும் செய்யப்பட்டன. ஆனால், சிறிது காலம் கழித்து 'விடுதலை தந்த மொழி பிரெஞ்சுதான்; அதனால் அம்மொழியே உலகமொழி ஆதற்குரியது. அப்படி ஆவதற்கு முன் பிரான்ஸ் தேச முழுமைக்கும், அது தேசீய மொழியாகுக" என்ற மறுதலைக் கருத்துத் தோன்றிவிட்டது. 

நூறாண்டு யுத்தத்துக்குப் பிறகு, அதன் விளைவால் எழுந்த தேசீயவுணர்ச்சியால் இங்கிலாந்தில் பார்லிமெண்டு நடவடிக்கைகள் முதலியன ஆங்கில மொழியில் எழுதப்பட்டன. அதற்கு முன்வரை அவைகள் நார்மன்-பிரெஞ்சில் எழுதப்பட்டு வந்தன. 

ருஷ்யா தேசத்தில் ட்ஸார்கள் காலத்தில் போலிஷ், லேட்டிஷ், லிதுவேனியன் முதலிய சிறுபான்மை மொழிகள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. சோவியத் ஆட்சியில் இதற்கு எதிரான முறை கையாளப்பட்டது. ஸ்டாலின் சோவியத் எல்லைக்கு அப்பாலும் வழங்கிய சிறுபான்மை மொழிகளை ஆதரித்து வந்தார். அவர் கொள்கை பிற இடங்களிலும் பரவுவதற்கு இது அனுகூலமாயிருந்தது. ஆனால், இச்சிறுபான்மை மொழிகளில் ஏதேனும் ஒன்று தேசீய மொழியாக முற்றிவிடும் நிலைமை நேர்ந்தால் அல்லது அது வழங்கிவரும் பிரதேசங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுத் தனிப்பட்ட தேசமாவதற்கு முயலும் நிலை ஏற்பட்டால், உடனே அடக்குமுறையைக் கையாண்டு அம்மொழி ஒதுக்கப்பட்டது. மலையாள தேசத்தில் தமிழ் படும்பாடு இத்தகையதுதான். 

ஒரு ஜாதிய மொழி, இன்னொரு ஜாதிய மொழியோடு போட்டியிடும்போது, அவ்விரண்டு ஜாதியினருக்கும் மொழி பற்றிய தற்பெருமை உண்டாகிறது. 'ஹிந்தி ஒழிக', 'தமிழ் வாழ்க' முதலிய கூக்குரல்கள் இத்தற்பெருமையின் விளைவே. இது வளர்ந்து முதிருமாயின் பெருங்கேடு உண்டாகக் கூடும். அரசாங்கம் இதில் தலையிடுவதில் மிக்க விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கம் தலையிட்டால், இயற்கையாகவே விரைவில் மாய்ந்துவிடக் கூடிய சில்லறை மொழிகள் பெரிதும் வலுவடைந்து ஜாதீய உணர்ச்சியை மிதமிஞ்சி வளரவிட்டுத் தேசீய ஒற்றுமையைக் கெடுத்து விடும். பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலில் ஸ்பானிய மொழியும் பிற்பாடு ஆங்கில மொழியும் பரவியிருந்தன. அது விடுதலை அடைந்தவுடன், இவ்விரு மொழிகளையும் நீக்கிவிட்டு, அந்நாட்டுக்குரிய பூர்வ மொழிகளில் ஒன்றைத் தேசீய மொழியாய்க் கொள்ளத் தீர்மானித்தது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியைத் தேசீய மொழியாக்குவதற்கு நமது நாட்டினர் எடுக்கும் முயற்சிகளோடு இது ஒப்பிடத்தக்கது. 

அந்நிய மொழி வெறுப்பிலிருந்து அந்நிய தேசீய வெறுப்பு எளிதில் உண்டாகி விடுகிறது. இத்தேசீய வெறுப்பினால், தேசீய சொல்லுக்குப் புதுப்பொருள் ஏற்பட்டு விடுகிறது. உதாரணங்கள்: dutch courage (இயற்கைத் தைரியமின்றி, சாராயம் குடித்து, அதனால் வெறி கொண்டு போரிடுவது), கேரளா சாரம் (ஆசாரமின்மை அல்லது மிருகவொழுக்கம்) ஆகிய சொற்கள். 

வர்க்க வேற்றுமை காட்டுதல் (Racial discrimination) சமீபகாலத்திலே தோன்றியுள்ளது. இது ஒரு போலி விஞ்ஞான சாஸ்திரக் கொள்கையின் அடிப்படையிலானது. நோர்டிக் அல்லது ஆரிய வர்க்கத்தினர் (பழுப்பு கலந்த பொன்னிறத் தலை, வெண்ணிற மேனி, நெட்டை உருவமுடையோர்) பால்டிக் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களாம். அங்கிருந்து கீழே வந்து ஆல்பைன் அல்லது மத்திய தரைக்கடல் வர்க்கத்தினரை வென்று அவர்களோடு கலந்துவிட்டார்களாம். மத்திய தரைக்கடல் வர்க்கத்தினர் கறுப்பு நிறத்தவர், குட்டை மேனியர், அகன்ற தலையோடு இருப்பவர். இக்கொள்கை சென்ற நூற்றாண்டில் கோபிநோ (Gobineau) என்ற பிரெஞ்சுக்காரரால் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் மாடிஸன் கிராண்ட் (Madison Grant) என்ற அமெரிக்கரால் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இக்கொள்கைப்படி, தெற்கு ஐரோப்பாவின் அனைத்துப் பெருமைகளுக்கும் இவ்வர்க்கக் கலப்பே காரணமாம். கிரேக்கர், ரோமர், எபிரேயர், இடைக்கால பிரெஞ்சுக்காரர், ஸ்பேனியர், மறுமலர்ச்சி இத்தாலியர் இவர்கள் யாவரும் செய்த நாகரிக வளர்ச்சிக்கு இந்த நோர்டிக் வர்க்கக் கலப்பே விளைநிலமாயிருந்ததாம். 

இந்த நோர்டிக் வர்க்கத்தினரை இந்தோ - ஐரோப்பிய மொழிகளைப் பேசும் வகுப்பினரோடு இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தோ - ஐரோப்பிய மொழி, அதன் ஆதி நிலையில் நோர்டிக் வர்க்கத்தினரின் ஆதி மக்களுக்குரியதாக இருந்ததாம். இவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் வெற்றி கிடைத்ததால், தங்கள் மொழியைத் தோல்வியுற்றவர் மீது சுமத்தி விட்டார்களாம். தோல்வியுற்றவர்களில் அங்கங்கே சில வகுப்பினர் இம்மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்ஙனம் ஏற்றுக் கொள்ளாதவர்கள், முற்காலத்தில் பெரிதும் வழக்கில் இருந்த ஐபீரியன் அல்லது திராவிட மொழிகளைப் பேசிவந்த மக்களாம். 

ஆரிய வர்க்கம், மூல இந்தோ-ஐரோப்பிய மொழி என்ற இரண்டு கொள்கைகளையும் கலந்து, தமது அதிகார வரம்பு பரந்து நீடிக்க வேண்டும் என்ற கருத்துடன், தாமே உலகில் உயர்ந்தவர்களென்றும், பிறரெல்லாம் கீழானவர்கள் என்றும் ஜெர்மன் மக்கள் கருதி வந்தனர். எனவே, உலக மக்கள் ஆளுதற்குரியோர், ஆளப்படுதலுக்குரியோர் என இரண்டு பகுதியினராயினர். ஆனால், மேற்கூறிய இரண்டு கொள்கைகளும் பொய்க்கால்களேயாகும். இவற்றின் மீது நின்று யாரும் நடனமாட முடியாது. மொழிக்கும் வர்க்கத்துக்கும் இன்றியமையாத தொடர்பு எதுவுமில்லை. ஏதேனும் ஒரு தேசீய மக்கள் மேலோரென்றும், பிறர் கீழோர் என்றும் கொள்வது சரித்திரத்திற்கு ஒவ்வாதது. 

சமய வகுப்பு வேற்றுமை: 

இதைப்போலவே, சமய வேற்றுமையினாலும் வகுப்பு வேற்றுமையினாலும் விளைந்த மொழி மாற்றங்களும் மிகப் பல. ஆனால், இவையெல்லாம் ஒரே முடிவையே தெரிவிக்கின்றன. போர்தான் இவற்றின் விளைவு. இப்போர்களும் பலவகைப்படும். சில, தேசீயப் போர்கள். உதாரணம், நெப்போலியன் போர்கள். சில, வகுப்புப் போர்கள். உதாரணம், ஹிட்லர் போர்கள். சில சமயப் போராக இருக்கலாம். உதாரணம், முஸ்லீம்களுடைய ஜிகாத், கிறிஸ்துவர்களுடைய க்ருஸேட். சில வர்க்கப் போராயிருக்கலாம். உதாரணம், ருஷ்யப் புரட்சிப் போர்கள். 

இப்போர்களில் மொழி அதிகம் உதவுகிறது. அந்நிய மொழிப் படிப்பு அவசியம் என்பதையும் அவை காட்டுகின்றன. போர்களினால் மொழிகளில் சொற்களும் பெருகுகின்றன. ஆகவே, மொழி நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுகிறது என்று அறியலாம். இது, மொழியின் குறையன்று. எந்தக் கருவியையும் தீமை விளைவிக்கவும் பயன்படுத்த முடியும் அல்லவா. ஆதலால், அதனைப் பயன்படுத்தும் மனிதனே தீமைக்குப் பொறுப்பாளி. 

எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 

இத்துடன் "தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும்" என்ற இக்கட்டுரை நிறைவுறுகிறது. 

மொழி, மொழி அடிப்படையிலான தேசீயம், அவற்றின் வரலாறு, மொழிவாரியான தேசீயத்தை எவ்வாறு அணுகுதல் வேண்டும் என்று பல விவமானக் கருத்துகளை இக்கட்டுரையில் சான்றுகளுடன் பேராசிரியர் தந்துள்ளார். தமிழை ஆதரித்து, ஹிந்தியை எதிர்த்த திராவிட இயக்கத்தினர் இங்கே இவர் அளவுக்கு மொழிப் பிரச்னையை விஞ்ஞான மற்றும் சரித்திர பூர்வமாக அலசினார்களா என்று தெரியவில்லை. பேராசிரியரை திராவிட இயக்த்தினர் தமிழின் எதிரி என்று நிந்தாஸ்துதி பாடினர். ஆனால், இங்கே அவர் ஹிந்தி மொழி தேசீய மொழியாக முன்னிறுத்தப்படுவதில் எழக்கூடிய பிரச்னைகளை ஆய்வுபூர்வமாக அலசியுள்ள அளவுக்கு, திராவிட இயக்கத்தினர் எவரும் செய்திருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. மொழிவாரியான தேசீய உணர்வு இயல்பானதே என்றும் பேராசிரியர் புரிந்து கொண்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அத்தகைய தேசீய உணர்வு பிற மொழிகளின் மீதான வெறுப்புக்கும், பிறமொழி பேசுகிறவர்களின் மீதான வெறுப்புக்கும் துணைபோகலாகாது என்று பிரச்னையை மனிதநேயத்துடனும் நல்லிணக்கத்துடனும் பேராசிரியர் அணுகுகிறார். இதுவே பேராசிரியரை, - ஹிந்தி ஒழிக என்று கோஷமிட்டுப் பிறமொழிகள் மீதும் பிறமொழிகள் பேசும் மக்கள் மீதும் வெறுப்பை வளர்த்தவர்களிடமிருந்து - பிரித்துக் காட்டுகிறது. 

அடுத்த கட்டுரை, "தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி" என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் புதிய துறையான மொழியியல் பற்றியது. எனவே, இக்கட்டுரை எனக்கு அடிப்படையான பல விஷயங்களைச் சொல்லித் தந்தது. ஒலி இலக்கணம், ஒலிகள் பிறக்கும் வரலாறு, அசோகரின் லிபி அடிப்படை, தமிழின் சிறப்பெழுத்துகள், மாத்திரை கற்பிக்கும் வழக்கு என்று பல விஷயங்கள் இக்கட்டுரையில் உள்ளன. கல்வியாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரிய பொருள், கட்டுரை இது என்பதுபோல மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றினாலும், சாமான்யனான என்னாலும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருப்பதே பேராசிரியர் கட்டுரைகளின் சிறப்பு. மொழியியல் குறித்த அடிப்படை அறிவு அனைவருக்கும் வேண்டும் என்று நான் நம்புகிறேன். மொழியை வைத்து செய்யப்படுகிற அரசியலைப் புரிந்து கொள்ளவும், மொழியை உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகாமல் இருக்கவும் அந்த அறிவு உதவும் என்று நான் நம்புகிறேன். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

"தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி" என்ற கட்டுரையிலிருந்து... 

பகுப்பு நெறி, தொகுப்பு நெறி: 

செங்கற்களை அடுக்கி, சுவர்களை எழுப்பி வீடு கட்டுகிறோம். இதுபோலவே, எழுத்துக்களை அடுக்கிச் சொற்களை முறைப்படி நிறுத்தி வாக்கியங்கள் அமைக்கிறோம். வீட்டிற்கு செங்கல் மாதிரி, வாக்கியத்துக்கு எழுத்துக்கள். ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. சுவர்களை இடித்துச் செங்கற்களை முதல்முதலில் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால், வாக்கியங்களைத் துண்டித்து, சொற்களாக அடையாளம் கண்டு, பின் ஒலிகளை நிர்ணயித்து, பின் எழுத்துகளை முதன்முதலில் அமைத்திருக்கிறோம். இதுவே வரலாற்று முறை. 

பகுப்பு நெறி (analysis), தொகுப்பு நெறி (synthesis) என்று நெறிகள் இரண்டு. பகுப்பு நெறியால் வந்தது எழுத்து; பின் தொகுப்பு நெறிக்குப் பயன்பட்டது. பகுப்பு நெறியேயின்றி, தொகுப்பு நெறிக்குப் பயன்படுவது செங்கல். 

'எழுத்துக்களால் ஆகியது சொல். சொற்களால் ஆகியது வாக்கியம்' என முறையை மாற்றி நீண்டகாலமாக நாம் மனப்பயிற்சி செய்து வந்திருப்பதால், உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்வதுகூட நமக்கு அருமையாய்ப் போய்விட்டது. 

ஒலி இலக்கணம்: 

இதைப்போலவே, இன்னோர் உண்மையும் நம் மனத்தைவிட்டு நழுவிவிட்டது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலியின் பிரதிநிதி என்பதுதான் இவ்வுண்மை. இதனை மறந்துவிட்டதனால், பிற மொழிகளைப் போலத் தமிழ் மொழியையும் முற்றும் ஆட்சி கொள்ளும் ஒலியிலக்கணத்தை உணராது, தமிழின் ஜீவிய சரித்திரத்தையும், அதன் வளர்ச்சி நெறியையும், அதன் ரூபாந்தரங்களையும், அதன் கிளைமொழிகள் தோன்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். ஒலியானது ஆளுக்கு ஆள், இனத்திற்கு இனம், இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறிவிடுவது. மாறிக்கொண்டே செல்வதுதான் அதன் வாழ்க்கை நெறி. நிரந்தரமாக ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதிக்கு ஒப்பானது அது. 

எழுத்து அப்படியில்லை. ஒலியை நோக்கும்போது எழுத்து நிலையாயுள்ளது. அதனாலேயே, அதற்கு அக்ஷரம் (அழிவில்லாதது) என்ற பெயர் வந்தது. எழுத்து எளிதில் பரவிச் செல்லத் தகுவது. இதனால் ஓரளவில் கால தேச நியதியின்றிப் பரந்து வழங்கும் தன்மை பெற்றுள்ளது. கண்ணால் பார்க்கத் தகுவது. இதனால் பேசுவோர் இன்றியும் கருத்துகளை உணர்த்தும் தன்மையுடையது. நமது அறிவு வளர்ச்சிக்கு எழுத்தே காரணமாயுள்ளது. "எழுத்தறித்தவன் இறைவன் ஆகும்" என்பது மிக ஆழ்ந்த உண்மை. 

தமிழிலுள்ள எழுத்துகள் அதிலுள்ள ஒலிகள் அனைத்தையும் முற்ற உணர்த்துவன அல்ல. மக்களது கண்டத்தினின்றும் தோன்றக் கூடிய தனியொலிகள் கணக்கிட்டு முடியா. வீணை முதலிய வாத்தியங்கள் எதனாலும், அத்தனை ஒலிகளையும் உண்டுபண்ண முடியாது. இத்தனியொலிகளில் சிலவே மொழிக்கு உரியனவாகும். இவ்வொலிகளின் எண் மொழிதோறும் வேறுபடும். அதிகமாகப் போனால், அறுபது தனியொலிகளுக்கு மேல் ஒரு மொழியிலும் இல்லை. பெரும்பாலும் இதற்கு மிகக்குறைவு பட்டே மொழியொலிகள் காணப்படுகின்றன. இம்மொழி ஒலிகளைக் கூடத் தனித்தனி உணர்த்துவதற்கு எழுத்துக்கள் அமைதல் இல்லை. 

ஆகவே, ஒவ்வொரு மொழியிலும், அதிலுள்ள எழுத்துக்களைக் காட்டிலும், அதன் ஒலிகள் மிகுதியாகவே காணப்படும். தமிழ் மொழியிலும் இவ்வாறே. உதாரணமாக, 'ஏன்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதன் முதலாவதாகிய ஏகார ஒலியை 'man' என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள உயிரொலியைப் போன்று நம்மிற் சிலர் உச்சரிக்கிறார்கள். இவ்வொலியை உணர்த்துவதற்குத் தமிழில் எழுத்தே இல்லை. மகன் என்ற சொல்லை 'மஹன்' என்றே பலரும் சொல்லுகிறார்கள். இடையிலுள்ள மெய் ஒலிக்குத் தமிழில் எழுத்தே இல்லை. இங்ஙனம் பல. 

இக்குறைபாடுகளை நீக்குவதற்கு மூன்று வழிகள் கையாளப்பட்டன. 

முதலாவது, நெருங்கிய தொடர்புடைய பிற ஒலிகளின் எழுத்துக்களைக் கொண்டு, இடத்தின் ஆற்றலால் சில ஒலிகள் உணர்த்தப்பட்டன. உதாரணமாக, பங்கு, பஞ்சு, பண்டு, பந்து, பண்பு என்பனவற்றைக் காட்டலாம். இச்சொற்களிலுள்ள பகரத்தைக் காட்டிலும், இவற்றிலுள்ள கு, சு, டு, து, பு என்பன மெலிந்து உச்சரிக்கப்படுவதைக் காண்கிறோம். தமிழறிஞர் வகுத்துள்ள மெல்லினங்களை நோக்க, இந்தக் கு, சு, டு, து, பு ஆகியன வல்லின வகையைச் சேர்ந்தவை. இதனால், 'King' என்ற ஆங்கிலச் சொல்லிலும் காவ்யம் என்ற வடசொல்லிலும் காணப்படும் ககர ஒலியே முற்காலத்தில் இருந்ததெனல் தவறாகும். 'go' என்ற ஆங்கிலச் சொல்லிலும், 'குரு' என்ற வடசொல்லிலும் உள்ள மிருதுவான ககர ஒலியும் முற்காலத்தில் இருந்தது. இதுபோன்ற பிற வல்லின எழுத்துக்களுக்கும் மிருதுவான ஒலிகள் உண்டு. 

இரண்டாவதாக, வடமொழியிலுள்ள சில ஒலிகள், அவற்றிற்கு இனமான தமிழொலிகளாக மாற்றி உணர்த்தப்பட்டன. உதாரணமாக, வேஷம், வேடம் என்பதைக் காண்க. 

மூன்றாவதாக, வடமொழி ஒலிகள் அம்மொழிக்கு உரிய எழுத்துக்களையே கையாண்டு உணர்த்தப்பட்டன. உதாரணமாக, 'வேஷம்' என்ற வடசொல்லை, 'வேஷம்' என்று தமிழில் ஷகரமிட்டு எழுதுவதைக் காணலாம். இம்முறைதான் இப்போது பெருவழக்கமாக உள்ளது. எனினும் மணிப்பிரவாள நடை தோன்றிய 9-ஆம் நூற்றாண்டு முதலே, இம்முறையும் கொள்ளப்பட்டதெனக் கூறலாம். 

இக்குறைகள் அல்லாமல், சில ஒலிகளைக் குறிப்பதற்கு இரண்டு குறியீடுகள் வழங்கவும் இடம் இருக்கிறது. உதாரணமாக, ஐகாரத்தை அகரமும் யகரமும் இட்டு எழுதலாம். 

ஒவ்வொரு மொழியைப் பேசிவரும் ஒவ்வோர் இனத்தவரும் தனிபட்ட இயல்புடைய ஒலிக்கணத்தையே வழங்குவர். ஆரிய மக்கள் ஒலிக்கணம் வேறு; தமிழ் மக்கள் ஒலிக்கணம் வேறு; ஜெர்மானியர் ஒலிக்கணம் வேறு; இப்படி இன்னும் சொல்லலாம். இக்கணத்தின் இயல்பு சொற்களில் ஒலி தொடர்ந்து வரும் முறையில் நன்கு புலப்படும். ஹார்ஸ் (horse) என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிக்கணம் தமிழில் வருதலில்லை. இங்ஙனமே, 'குதிரை' என்று பொருள் படும் ப்வெர்ட் (pfred) என்ற ஜெர்மானியச் சொல்லின் ஒலிக்கணம் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளிற்கூட வருதலில்லை. ஒலிக்கணத்தின் இயல்பு இவ் உதாரணங்களால் தெளிவாய் விளங்கும். தமிழிலுள்ள ஒலிக்கணத்தின் இயல்பு நமது மூதாதையரின் பேச்சு வழக்கத்தைப் (speech habit) பொருத்துள்ளது. இங்ஙனமே, பிறமொழிகளின் ஒலிக்கணங்களின் இயல்பு, அவ்வம்மொழிக்கு உரியாரின் பேச்சு வழக்கங்களைப் பொருத்ததாம். 

இவ்வழக்கங்களை நுட்பமாய் ஆராய்ந்து, இன்ன இன்ன ஒலிகள் சொற்களைத் தொடங்குவன, இன்ன ஒலிகள் இறுதியில் வருவன, இன்ன ஒலிக்குப் பின் இன்ன ஒலிதான் வரும் என்ற நியதியை அறிந்து இலக்கணம் வகுத்த பெருமை முற்காலத்து ஆசிரியர்களுள் தொல்காப்பியனார் ஒருவருக்கே உரியது. மொழி மரபு முதலிய விஷயங்களில் இவ்விஷயம் கூறப்படுகிறது. இலக்கண உலகில் சக்கரவர்த்தி என்று கூறத்தகும் பாணினியாசிரியர் கூட இங்ஙனம் ஆராய்ந்தாரில்லை. 

இக்கட்டுரை இன்னும் வளரும். 

எழுத்து, ஒலி இலக்கணம், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி நான் அறியாத பல கருத்துகளை இக்கட்டுரை கூறுவதால், அக்கருத்துகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைப்பதால், இக்கட்டுரையைப் பெரிதும் சுருக்காமல் முடிந்தவரை அப்படியே தந்து வருகிறேன். கட்டுரையின் அடுத்த உபதலைப்பான ஒலிகள் பிறக்கும் வரலாறில் பேராசிரியர் தொல்காப்பியர் ஒலிகளின் பிறப்பைப் பற்றிச் சொல்லியுள்ளதை விளக்குகிறார். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

 

எஸ். வையாபுரிப் பிள்ளை - ஓர் அறிமுகம்

 
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை என்ற பெயர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடையே எழுப்புகிற மனச்சித்திரங்கள் பலவாறாக இருக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிழ்கிற ஒரு சாராருக்கு அந்தப் பெயர்மீது இருக்கிற விமர்சனங்கள் வரலாறு அறிந்ததே. "எழுக கவி" என்று மஹாகவி பாரதியாரால் வாழ்த்து பெற்ற பாரதிதாசன் கூட திரிந்துபோய் "பாதக்குறடெடுத்து உன்னை பன்னூறு முறை அடிப்பேன்" என்று வையாபுரிப் பிள்ளையை வைதது வரலாறு. ஆனால், காய்தல் உவத்தல் அற்ற பார்வை உடையவர்களுக்கும், அறிவியல் ரீதியாக தமிழாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், தமிழின் தொன்மையும், வரலாறும், மாற்றங்களைத் தமிழ் அரவணைத்து ஏற்றுக் கொண்ட பரிணாமமும் அறிந்தவர்களுக்கும் வையாபுரிப் பிள்ளை ஒரு லட்சினை. இப்படி அவரைப் பற்றிய இருவேறு எதிரெதிரான கருத்துகள் நிலவுகிற போதிலும், "தமிழாய்வில் ஒரு புதுயுகத்தினை தோற்றுவித்தவர்" (தமிழின் மறுமலர்ச்சி முகவுரையிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்) அவர் என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு அவர் சாதனைகளும் நூல்களும் நிற்கின்றன. 

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியாக 1926லிருந்து 1936வரை சிறப்பாகப் பணியாற்றி, அந்தப் பேரகராதியை வெற்றிகரமாக வெளிக் கொணர்ந்தவர் வையாபுரிப் பிள்ளை. இன்றைக்கும் கூட இணையத்திலும் பிற இடங்களில் இந்த அகராதியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது அதன் பெருமைக்கும் உள்ளடக்கத்துக்கும் சான்று. 1936லிருந்து 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர், திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் என்று பல மொழிகள் அறிந்தவர். மனோன்மணீயம், புறத்திரட்டு, நாமதீப நிகண்டு முதலிய நிகண்டுகள், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். நவீன மற்றும் புதிய இலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் உடையவர். 

1947 செப்டம்பரில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகி, பாரதிதாசன் போன்றோரிடமிருந்து வசைகளை பதிலாகப் பெற்றுத் தந்த, அவரின் "தமிழின் மறுமலர்ச்சி" என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் கிடைக்காமல் அதன் ஜெராக்ஸ் காப்பி மட்டுமே கிடைத்தது. பேராசிரியரின் நூல்களைப் பதிப்பிப்பதற்கென்றே 1987ல் உருவாக்கப்பட்ட வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம் இந்நூலை 1989ல் மறுமதிப்பு செய்திருக்கிறது. ஆனால் புத்தகங்கள் தீர்ந்துபோய் விட்டன என்று தோன்றுகிறது. 

வெறும் உணர்வுகளின் குவியலாகிப் போகிற கண்மூடித்தனமான தமிழ்க் காதல், திராவிட கோட்பாடுகள், அவை தமிழ்ச்சூழலில் கட்டமைத்திருக்கிற பிம்பங்கள் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு, வையாபுரிப் பிள்ளை இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறார். ஒரு விஷயத்தின் எல்லாத் தரப்பையும் அறிய வேண்டும் என்று விரும்புபவர்களும், அறிவியல்ரீதியான, ஆராய்ச்சிபூர்வமான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நிரூபணங்களை விரும்புபவர்களும் வையாபுரிப் பிள்ளையை விரும்பிப் படிப்பார்கள். ஆராய்ச்சிகளில் கால வரையறைகள் செய்யும்போது, "மறு ஆராய்ச்சி வரும்வரை இம்முடிபுகளை ஏற்றுக் கொள்ளலாம்" என்று வையாபுரிப் பிள்ளை எழுதுவாராம். அது அவரின் அறிவியல் மற்றும் திறந்த அணுகுமுறைக்கு உதாரணம். தான் சேர்த்து வைத்திருந்த 6000க்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தன் காலத்துக்குப் பின் அவர் நூலகத்துக்கு அளித்து விட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். திண்ணை களஞ்சியத்தில் வையாபுரிப்பிள்ளை பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய/ஆற்றிய கட்டுரை/உரையைப் படித்த ஞாபகம். இதை எழுதுகிற இந்த நேரத்தில் திண்ணை களஞ்சியத்தில் பழைய படைப்புகளைத் தேட இயலவில்லை. பின்னர் இணைப்புகள் தருகிறேன். 

பேராசிரியரின் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூலில் இருக்கிற கட்டுரைகளின் உள்ளடக்கத்தையும், அவை குறித்தான என் வாசகப் பார்வையையும் வரும் தினங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பகிர்ந்து கொள்ள உத்தேசம். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

மொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை

பி. கே. சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர் கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர் முயலவுமில்லை. வேளாளச்சாதியினராக இருந்தும் அச்சாதியின் குரலை புறக்கணித்தமையால் ஒதுக்கப்பட்டார். அன்றைய தமிழ் அரசியல்சூழல் உருவாக்கிய மரபு சார்ந்தப் போலிப் பெருமிதங்களை ஆய்வடிப்படையில் ஏற்க மறுத்தமையால் நிராகரிக்கப்பட்டு வசைபாடப்பட்டவர் அவர். அவரை இன்று நினைவுகூர்கையில் சிலவிஷயங்களை வகுத்துச் சொல்லலாம் என்று படுகிறது

1] கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு தமிழின் தொன்மையை கொண்டுசென்றவர்களை மறுத்து தொல்பொருள் மற்றும் ஒப்பிலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழிலக்கியங்களின் காலக்கணக்கை வகுக்க முயன்றார். ஒருவேளை அவரது கணிப்புகள் பிறரால் இன்றும் இனிமேலும் நிராகரிக்கப்படலாம். ஆனால் அவரது முறைமை மிகவும் மதிக்கத் தக்கது. ஆங்கில மொழியறிவும் ஐரோப்பிய ஆய்வுமுறைமையும் தேவை என்பதே அவரது கருத்து. அப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த முறைமை பிற தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் பலரிடம் இல்லை என்பது இன்று தெளிவாகிப்போன விஷயம். ஆனால் இன்றும் ஆய்வாளர்கள் தனிப்பேச்சில் வையாபுரிப்பிள்ளையின் முறைமையை சிலாகிப்பார்களேயொழிய எழுத்தில் சங்கடகரமான மெளனத்தையே சாதிப்பார்கள்

2] தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருதமரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப்பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்துகொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக்கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழிமீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது

3] வையாபுரிப்பிள்ளை தனித்தமிழ்வாதம் செயற்கையான உரைநடையையும் பழமைநோக்கையும் உருவாக்கி தமிழில் வளர்ச்சியை தடைசெய்கிறதோ என்று ஐயுற்றார். திசைச்சொற்களை ஏற்க தமிழில் இலக்கண அனுமதி உள்ளபோது அடிப்படைவாத நோக்கை கடைப்பிடிப்பது மூடத்தனம் என்றார். நவீன இலக்கியத்தை பண்டிதர்கள் முற்றாகப்புறக்கணிப்பதை கண்டித்தார். அவர்மட்டுமே புதுமைப்பித்தனை அங்கீகரித்த சமகால பெரும்புலவர். நாவல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.[ராஜம்]

இந்நோக்குகளுக்காக அவர் மீது அன்று எழுந்த வசைகளை பலரால் கற்பனையே செய்ய முடியாது. சமீபத்தில் அன்றைய சில தனித்தமிழ் மற்றும் திராவிட இயக்க இதழ்களை நோக்கியபோது அவ்வசைகளின் ‘கனம்’ கண்டு அரண்டே போனேன். அவரை ‘பொய்யாபுரியார்’ என்று சொல்லி எழுதிய அறிஞர்களே அதிகம். பேராசிரியர் சி.ஜேசுதாசன் மட்டுமே அவரை அங்கீகரித்து அவருக்காகப் பேசிய முக்கியத் தமிழறிஞர்.

இந்த அழுக்காறு காரணமாக வையாபுரிப்பிள்ளையின் சாதனைகள்கூட தமிழில் புறக்கணிக்கப்பட்டன. வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து சென்னைப் பல்கலையால் 1924 முதல் 1936 வரை வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி [1982ல் இது மறு அச்சாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது.] தமிழ் மொழிவளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும். முதன்முதலில் ஒரு பேரகராதியை தொகுப்பதில் உள்ள சிக்கல்களும் தேவைப்படும் உழைப்பும் என்ன என்று இப்போது ஊகிக்க முடியும். [துணை ஆசிரியர்கள் வி நாராயண அய்யர், மு ராகவையங்கார், வி எம் கோபாலகிருஷ்ண ஆச்சாரியார், சோமசுந்தர தேசிகர், மீனாட்சிசுந்தர முதலியார்] அதன் பிறகு வந்த அத்தனை அகராதிகளும் இந்நூலில் இருந்து முளைத்தவையே. இந்நூலின் முக்கியக் குறைபாடுகள் இந்த முக்கால்நூற்றாண்டில் களையப்படவும் இல்லை. சமீபத்தில் காலச்சுவடு இதழில் செம்மொழியாதல் குறித்த விவாதத்தில் திராவிடச் சார்புள்ள தமிழறிஞரும் ஆய்வாளருமான முனைவர் ஆ இரா வேங்கடாசலபதி தமிழ்ப்பேரகராதியின் சாதனை இன்னும் விஞ்சப்படவில்லை என்று சொல்கிறார்.

ஆனால் இந்நூல் வெளிவந்தகாலத்தில் தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் தொடங்கி அன்றைய திராவிட இயக்க தமிழறிஞர்கள் என்ன எழுதினார்கள் என்பது இன்னும் அக்கால இதழ்களில் உள்ளது. தமிழுக்கு வையாபுரிப்பிள்ளை பெரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தமிழை அழிக்கும் ஆரியச்சதியின் ஒருபகுதியாக்வே இந்த பேரகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதித்தள்ளினார்கள். தமிழர் ஆட்சி வரும்போது இவ்வகராதி வங்கக் கடலில் வீசப்பட்டு சரியான அகராதி தொகுக்கப்படும் என்றனர். வையாபுரிப்பிள்ளை அதிகமான வசை கேட்டது இந்த அகராதிக்காகத்தான்.

இரண்டு அடிப்படைகளில் வசைகள் இருந்தன. சம்ஸ்கிருதம் என்று திராவிட இயக்கத்தினர் கருதிய பல சொற்களை[ அவை அன்றும் இன்றும் மக்கள் வழக்கில் உள்ளவை] அகராதியில் சேர்த்தமையால். [ பிற்பாடு அச்சொற்களை பகுப்பாய்வு செய்து அவை தமிழ்ச் சொற்களே என்று அதே தேவநேயப்பாவாணர் தன் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எழுதினார்] இரண்டு சாதி குறித்த சில சொற்களுக்காக. உதாரணமாக முதலி என்ற சொல்லை சேர்த்தமைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. முதலியார் என்று மட்டுமே சேர்க்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது சேன்னையிலேயே பல முதலி தெருக்கள் இருந்தன. பெயர்கள் முதலி என்றே சொல்லப்பட்டன. வையாபுரிப்பிள்ளை முதலி என்ற சொல்லை சேர்த்து பார்க்க முதலியார் என்று கொடுத்திருந்தார். இது சாதிவெறி என்று முத்திரைகுத்தப்பட்டது.

தன் அகராதி நினைவுகளை வையாபுரிப்பிள்ளை தொகுத்து எழுதியுள்ளார். அவரை அறிய அது முக்கியமான நூலாகும். டாக்டர் அ கா பெருமாள் வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பு குறித்து எழுதிய நூலும் முக்கியமானது. எனினும் அவரது நடையழகை அறிய ‘தமிழ்ச் சுடர்மணிகள் ‘ நூலே முக்கியமானது. அதில் கம்பராமாயண அரங்கேற்றத்தை அவர் விவரித்துள்ள பகுதி தமிழிலக்கியத்தின் சிறந்த உரைநடைச் சித்திரங்களுள் ஒன்று

உண்மையை தன் ஆயுதமாகக் கொண்ட ஆய்வாளன் அழிவதில்லை, அவனை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் அடையாளம் காணும் என்று காட்டும் ஆதாரங்களுள் ஒன்று சிவக்குமார் தன்னிச்சையான ரசனை மூலம் வையாபுரிப்பிள்ைளையைக் கண்டடைந்தமை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard