New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழரைத் தேடி -திராவிட மாயை அல்லது வேளாள மாயை


Guru

Status: Offline
Posts: 23958
Date:
தமிழரைத் தேடி -திராவிட மாயை அல்லது வேளாள மாயை
Permalink  
 


 

தமிழரைத் தேடி - 1

 

பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

1. முன்னுரை:

தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பல புதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விருப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுதுகிறேன்.

1.1. தமிழ்மொழி தோன்றியபொழுதே செம்மொழியான விந்தை:

கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமகாலத்தில் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

மனிதகுல வரலாற்றில் உலோகப் பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய நீர்ப்பாசன, விவசாய வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில பிரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழி பேசிய மக்களும் 'கூனிபார்ம்' எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாகக் கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளைத் தமதாகச் சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையினக் குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.

சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாகப் பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடித் தொடர்பில்லாத சீன மக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாகப் பரிணமித்தது.

இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்க காலத் தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாகத் தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோகப் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்காலப் பண்பாட்டு மட்டத்திலும், பிற பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்காலப் பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததைத் தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டுக் குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமானத் தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் எனத் துணிந்து கூறலாம்.

தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதைத் தொல்லியல் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோகப் பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாகப் பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும்விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழி வளர்ச்சியைப் படிப்படியாகத் தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள்கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.

மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க காலத் தமிழர் தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை, அறநெறி போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.

1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை

தமிழ் மொழி தோன்றியபொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் 'ஆரியமயமாதல்' என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை 'ஆரிய மாயை' எனவும் கூறுவர்.

கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களைக் கத்தியின்றி, இரத்தமின்றித் தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வட இந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

" வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் தெற்கிலுள்ள இராஜவம்சப் பட்டியல் இன்பமான பொழுதுபோக்கு. இக்ஷ்வாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப் பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்". (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் - 1989; பக் 349.)

சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்லியல் தடயங்களுக்குப் பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலைக் கேலிக்குள்ளாக்கிப் பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருத நில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கானத் தொல்லியல் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித்கூத்தாகும்.

"புராதன இந்திய சரித்திர அறிமுகம்" என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தைக் கோசாம்பி வெளியிட்டுள்ளார்.

"மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." - என மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்.

மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது. "மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன." (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் - 202)

"விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீகக் கற்பனை வடிவிலேயே உள்ளன." (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் - 164)

கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப் பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கருதுகோளாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தைத் தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரிய ரிஷி கோத்திரத்தினரும், புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.

புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்புப் பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருத நில விவசாய நாகரிகத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியைச் செம்மைப்படுத்திச்'செந்தமிழை'த் தோற்றுவித்தனர் என்று கூறினால்கூட ஏற்புடையதாக இருக்கும்.

அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்டத் தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகத்தில் குடியேறிவிடவில்லை. தமிழக வேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னகக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

"நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற் போரண்ணல்"
 (புறம் : 201)

இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது.

கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறைப் பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், "சங்க கால உற்பத்திக் கருவிகள்" என்ற கட்டுரையில், தமிழகப் பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறைப் பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர் குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்குப் பொருள் ஏதும் இல்லை எனக் கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.

"துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி".
 (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச்சினார்க்கினியர் உரை)

இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற்கிணங்க தென்திசை நோக்கிப் பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறிப் பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர் கத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தமிழகப் பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர்க் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர்க் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைத் தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கியக் குறிப்புகளும், தொல்லியல் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர்க் குடிகளுக்குக் குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்குத் தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரிய மாயையின் சாராம்சமாகும்.

டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராதப் புதியகற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் மொழி, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களைச் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், தூதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத் துறையிலும் தேவையான அளவிற்குத் தனித்தமிழ்ச் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருதச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

ஆரிய மாயை, பண்டைய உலக வரலாற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரித்துச் சித்திரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்டக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் எனப் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழிச் சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரிய இன மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப் பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றியிருந்த ஆண்வழிச் சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதைத் தொல்லியல் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.

மேற்காசியக் கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும் வரையிலும், ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்புக் கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்குக் கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித் தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.

கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படித் தந்தை யுரேனஸைக் கொன்றுக் கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea)- வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- வை மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.

கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸைக் கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. தந்தை சொந்த மகன்களைப் போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்றுப் பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.

மேலும், சகோதர-சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cousin Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்றுs சகோதர மண உறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும்கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக் கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே, குறிப்பாகத் தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் - இன் - லா, சிஸ்டர் - இன் - லா, சன்- இன் - லா, டாட்டர் - இன் - லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும்கூட இதற்கு வலு சேர்க்கின்றன.
__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
RE: தமிழரைத் தேடி -திராவிட மாயை அல்லது வேளாள மாயை
Permalink  
 


பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிக முக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் ஹமுராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காகக் கொடுமையான சட்டங்களைப் பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும்கூட கற்பு நெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதைத் தமிழகக் கிராமப்புறங்களில்கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில்கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இருந்ததில்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை பழங்குடி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தைத் தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் கருப்பின மக்களிடமிருந்து கைப்பற்றித் தமதாக்கிக் கொண்ட போதும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500க்கும் முன்பே, மிக நீண்ட காலமாகத் தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடைமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க காலத் தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சிறு பகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழிச் சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்துப் பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.

ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையைவிட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.

brahaspathy@sishri.org __________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

திராவிட மாயை அல்லது வேளாள மாயை

ஆரிய மாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் "கடல்கொண்ட தென்னாடு" என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள், அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழரின் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளைத் தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல்பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அ) திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், தங்களை ஆரியருடன் அடையாளங் காட்டிக்கொள்ளும் பிராமணர்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அந்நியர்.

ஆ) திராவிட மொழிகளைத் தாயாகக் கொண்டு உலக மொழிகள் பிறந்துள்ளன. திராவிட மொழிகளுள் தமிழ் உயர்தனிச் செம்மொழி.

இ) உலகின் சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே, இதனைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதியினரான வேளாளர்களாவர். பதினெண் குடி வேளிரும், மூவேந்தர்களும் வேளாளர்களேயாவர்.

இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனைத் திராவிட மாயை என்பர். வேளாளரின் பெருமையை நிலைநாட்டுவதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதனால் இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” 
(தொல், பொருள், கற்பியல் 142)

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.

“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.

“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...”

அடிகளார், தற்காலச் சமூக நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று "பார்ப்பானுக்கு முந்திய பறையோன்" எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் ‘வைத்யா' என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த "பஞ்ச கம்மாளர்" என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை "வேளாப் பார்ப்பார்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்திரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்புப் பற்றி வே. கனகசபைப் பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

“இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.”

இதிலிருந்து தெரிவதென்ன? கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் போன்ற பெருமக்கள், தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை இல்லை என நிறுவ முற்படுவது, வேளாளர் நாலாஞ் சாதியாகி விடக்கூடாது என்ற உயர்ந்த (கேவலமான) சாதி மறுப்புக் கொள்கையினால்தானேயன்றி வேறல்ல. தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை உண்டென்று ஏற்றுக்கொண்டால், தமிழர் அனைவரும் சூத்திரராகிவிடுவர், அதுவும் மேற்சூத்திரராகிய வேளாளரையும்விட இழிந்த கீழ்ச்சூத்திரராகிவிடுவர் என இக்கனவான்கள் கதைக்கின்றனர். உண்மையில் நான்கு வருணப் பகுப்பு முறை தமிழகத்தில் உண்டு என ஏற்றுக்கொண்டால், வேளாளர் தவிர்த்த பிற அனைத்துத் தமிழ்க் குடிகளும் மேல் மூன்று வருணத்தில் அடங்கிவிடுவர். உண்மையில் மேல் மூவராகிய பிற தமிழ்க் குடிகளின் ஆணைவழி நிற்றல் வேளாளருக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். புறப்பொருள் வெண்பாமாலை, வேளாண் வாகையில் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி யொழுகின்று 
(வாகைத் திணை 10 : 165)

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது.

வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்,
தெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.


கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, “மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்” என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட, "நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை” என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, “நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்”என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

வேளிரும் வேளாளரும்

வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாகவும் எழுதுதற்குச் சுகமாகவும் இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் உடன்படுவதில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். "வேளாண்மையாகிய உழவுத் தொழில்" செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:

“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத்தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)

துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை' எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.

வேளாண்மை - உபகாரம்

தொல்காப்பியத்தில்தான் ‘வேளாண்' என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105ஆம் சூத்திரத்தில் “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, "தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்" என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு ‘வேளாண்' என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி” என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், "வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க" என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலித்தொகை 101ஆம் பாடலில் “வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு "தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன" என்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மை' என்ற சொல்லிற்கு ‘விருந்தோம்பல்' என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் ‘வேளாண்மை' என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” 
(குறள் 81)

“விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதற்கு ‘விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்று பரிமேலழகர் உரை கூறுகின்றார். பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மை' என்ற சொல்லுக்கு "உபகாரமும் மெய்யுபசாரமும்" என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.

உழவுத் தொழிலும் வேளாளரும்

"வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” 
(தொல். பொருள். 628)

முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட வேளாண் மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்' என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.

அரசு உருவாகிய பின் சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்த போர் அடிமைகளாலேயே உழவுத் தொழில் உலகின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நிலமானிய முறை பற்றி தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட ஐரோப்பிய வரலாறு என்ற நூலில் டி.வி. சொக்கப்பா கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:

“நிலத்தை ஆண்டவனிடமிருந்து அரசர் பெற்றார். அரசர் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக மிஞ்சியவற்றை நிலமானியக் கட்டுப்பாட்டு முறையில் பகிர்ந்து, மானியங்களாய் மற்றவர்களுக்குக் கொடுத்தார்...... மானியதாரர்கள் நிலங்களின் பெரும்பகுதியை மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கினர். மானியதாரர்களிடம், நிலம் பெற்றவர்கள் கீழாள்களாவார்கள். மேலும், நிலத்தைக் கீழாள்கள் உட்குடிகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். நிலத்தில் உழைத்தவர்களை அடிமை ஊழியர்கள் (serf) என வழங்கினார்கள். அவர்கள் நிலத்தை விட்டு விலக முடியாது. நிலம் கை மாறினால் அவர்களும் அதனுடன் மாற வேண்டும்.”

ஐரோப்பிய நில மானிய முறையில் கூறப்படும் கீழாள்களை உழுவித்துண்ணும் வேளாளருக்கும் (காராளர்), அடிமை ஊழியர்களை உழுதுண்ணும் வேளாளருக்கும் ஒப்பிடலாம். ஐரோப்பிய நிலப் பிரபுக்கள் வேட்டைக்குச் செல்லும்போதும், வேறு அலுவல்கள் காரணமாகப் பயணம் செய்யும்போதும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்து, உண்ண உணவும் கொடுத்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது கீழாள்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். தமிழ் இலக்கண நூல்களும், நிகண்டுகளும், வேளாளருக்குரிய தொழில்களில் விருந்தோம்பலை முதன்மையாகக் கூறுவதுடன் இதனை ஒப்பிடலாம்.

பொதுவாகப் போர் அடிமைகளே அவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்மாந்தர் சொத்துரிமையும், மண வாழ்க்கையும் மறுக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அற்றவர்களாகவே நடத்தப்பட்டனர். ஜெர்மானியரிடையே, அரசு உருவாக்கத்தின்போது தோன்றிய கொலோன்கள் என்ற கீழ்நிலை உழுகுடிகளைப் பற்றி "குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றி" என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“இச்சிறு நிலத்துண்டுகள் கொலோன்கள் என்பவர்களிடம்தான் பிரதானமாக விநியோகிக்கப்பட்டன. அவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தார்கள். நிலங்களுடன் சேர்த்து அவர்களையும் விற்பனை செய்யமுடியும். அவர்கள் அடிமைகளல்ல. அதே சமயத்தில் சுதந்திர மனிதர்களும் அல்ல. அவர்கள் சுதந்திரமான குடிமக்களை மணக்க முடியாது. அவர்கள் தமக்குள்ளேயே மணந்து கொள்வதும் செல்லத்தக்க திருமணமாகக் கருதப்படவில்லை. அடிமை விஷயத்தில் இருந்ததைப் போலவே வெறும் காமக் கிழத்தி முறையாகவே கருதப்பட்டது.”

ஐரோப்பியக் கீழாள்கள் மற்றும் கொலோன்களைப் போன்றே வேளாளரும் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே பூமி புத்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் வேளாளர்கள் கூலிச் சேவகர்களாகவும், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமைகளாகவும் இருந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் உள்ள,

“அதலையூர் நாட்டு நாடாள்வான் கூலிச் சேவகன் திருவழுதி நாட்டு ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்”

என்கிற வாசகம் ஒரு வேளாளரைக் கூலிச் சேவகனாகக் காட்டுகிறது. மேலும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளடிமைகளில் சூடியார் எனக் குறிப்பிடுவதன் மூலம் வெள்ளாளரில் அடிமைகள் இருந்ததைத் தெளிவாக்குகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்

“பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழ
ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில்
ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்”


என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கொலோன்களைப் போன்றே வெள்ளாளரும் திருமணச் சடங்குகள் இன்றி வாழ்ந்த நிலையைத் தொல்காப்பியம் சித்திரித்துள்ளது.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” 
(தொல், பொருள், கற்பியல் 142)

இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு உரை கூறியுள்ளனர்:

நச்சினார்க்கினியர் உரை

“முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்த்தது என்பதூஉம் தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று...”

இளம்பூரணர் உரை

“மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.”

கீழோராகிய வேளாளர், மணவினைச் சடங்குகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. நுணுகி ஆராய்ந்தால் சங்க கால வாழ்வியலில் அகத்திணைக்கு உரியோராக ஏற்றுக் கொள்ளப்படாமல், புறத்திணைக்குரியோராக வாழ்ந்த அடியோரும், வினைவலருமே பிற்காலத்தில் வேளாளர் என அழைக்கப்பட்டனர் என்பதை அறிய முடியும். அடியோரை ஐரோப்பிய அடிமை ஊழியர்களுக்கும், வினைவலரைக் கீழாள்களுக்கும் ஒப்புமைக் காட்டலாம். ஆரம்பக் காலங்களில் போர் அடிமைகள் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்ட மக்களாக நடத்தப்பட்ட நிலையே அடியோராகும். ஏவல் தொழிலில் இருந்து காலப்போக்கில் பண்பட்ட பிரிவினர் வினைவலராக ஏற்றம் பெற்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வினைவலரில் ஒரு பிரிவினர் திருமணச் சடங்கு அனுமதிக்கப்பட்ட அகத்தினைக்குரியோராக ஏற்றம் பெற்று உயர்குடி வேளாளராகி விடுகின்றனர்.

நச்சினார்க்கினியர் உரையில், முதல் ஊழிக் காலத்தில் வேளாளருக்கும் மணவினைச் சடங்குகள் உண்டு எனக் கூறுகிறார். போர் அடிமையாகாமல், சுதந்திர குடிகளாக வாழ்ந்த நிலையில் வேளாளருக்கு கரணம் இருந்ததை இது சுட்டுவதாகலாம். மகற்கொடை மறுத்து வேந்தர்களின் மேலாண்மையை ஏற்க மறுத்த சீறூர் மன்னர் மரபினரும், முதுகுடி மன்னர் மரபினரும் போர் அடிமைகளாக்கப்பட்ட நிலையில் அடியோராயினர். பின்னர் அடியோர், வேந்தர்களுக்கு உண்மையான ஏவலராக நடந்து கொள்வதைக் கணக்கில் கொண்டு சிறுகுடியாக அங்கீகரித்து அவர்களுக்கு மணவினைச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன. இதனையே இரண்டாம் ஊழியில் வேளாளரும், கரணம் தவிர்க்கப்பட்டுப் பின்னர் முதனூலாசிரியர் கூறிய முறையில் கரணம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என நச்சினார்க்கினியர் கூறுகின்றார் எனலாம்.

நான்கு நிலத் தெய்வங்களையும் ஆண் தெய்வங்களாகக் கொண்டிருந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில், பெண் தலைமைக் குடிகள் அதிகம் வாழ்ந்திருக__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள்

பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியமாகும். அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கூறும் பண்பாடு எனும் முழுமைக்குள் மிகவும் ஏற்ற நிலையில் பொருத்தப்பட்டிருக்கிறது.” - பண்பாட்டு மானுடவியல், பக்.175.

மாலினோஸ்கி என்ற அறிஞர் பண்பாடு எனும் முழுமையை அவற்றுள் உள்ள கூறுகளின் செயல்பாடுகளின் மூலம் புரிந்து கொள்ளமுடியும் எனக் கூறுவார். சங்க கால தமிழ்ச் சமூகததின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டுக் கூறுகளை விவரிப்பதன் மூலம் அச்சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் பண்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழில் அறநெறிக் கோட்பாடுகள் (தர்ம சாத்திரங்கள்) எழுத்தில் இல்லாதது, சமயங்களும் அவை தொடர்பான தத்துவங்களும் புராணங்களும் இல்லாதது போன்றவை தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெருங் குறைகளாகக் கூறப்படுகின்றன. இதுபோன்ற இல்லாமைகளே தமிழ்ச் சமூகத்தின் சிறப்புத் தன்மைக்கான காரணியாக இருப்பதை நுணுகி ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழரின் சிறப்புத் தன்மைகள் விவரிக்கப்படுகின்றன.

பண்பாட்டு வளர்ச்சியையும் இயங்கியலையும் புரிந்து கொள்வதற்கு இதுவரையிலும் கூறப்பட்டுள்ள கொள்கைகளில் அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஹென்றி மார்கனும் (1818-1881), பிரிட்டிஷ் மானுடவியலறிஞர் பர்னெட் டைலரும் இணைந்து தோற்றுவித்த ஒருவழிப் பரிணாமக் கொள்கை ஏற்புடையதாக உள்ளது. இக்கொள்கையை அடியொற்றி மார்க்சிய சிந்தனையாளர்கள் முதலாளித்துவத்துக்கு முந்தைய பண்பாட்டுக் கட்டங்களை கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர்:

(1) ஆதி பொதுவுடைமைச் சமூகம், (2) ஆண்டான்-அடிமை சமூகம், (3) நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு.

இம்மூன்று பண்பாட்டுக் கட்டங்களும் ஐரோப்பியச் சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு பகுத்துக் கூறப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர் சைல்டு என்பவர் ஒருவழிப் பரிணாமக் கொள்கையை, பரவுதல் கோட்பாட்டுடன் இணைத்து அதனைப் புத்தாக்கம் செய்தார். அவரது கருத்தின்படி வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில், தென்மேற்கு ஆசியாவில் சமுதாய அமைப்பில் படிப்படியாக வளர்ச்சிகள் ஏற்பட்டு அவ்வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றிலுமுள்ள பண்பாட்டுக் கூறுகள் ஐரோப்பாவிற்குப் பரவியதைத் தொல் தடயங்கள் மூலம் நிறுவமுடியும்.

உண்மையில், மேற்காசியாவில் பூர்விகமாக வாழ்ந்து வந்த கருப்பின மக்கள் ஆதி பொதுவுடைமைச் சமுதயாத்திற்கும் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் பல பண்பாட்டுப் படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதை நமக்குக் கிடைத்துள்ள தொல் எச்சங்களைக் கொண்டு ஆராயும்போது அறியமுடிகிறது. மேற்காசியச் சூழலில் மனிதகுலம் கடந்து வந்த பண்பாட்டுக் கட்டங்களை தொல் தடயங்கள் மற்றும் புராணக் குறிப்புகளின் துணை கொண்டு இக்கட்டுரைத் தொடரில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம். இங்கு முன்வைக்கப்படும் கோட்பாட்டினை விளக்குவதற்கு, இப்பண்பாட்டுக் கட்டங்களின் பட்டியல் அவசியமாகிறபடியால், சுருக்கமான விளக்கத்துடன் அவை கீழே பட்டியலிப்பட்டுள்ளன.

(1) இரத்த உறவுக் குடும்ப அமைப்பு

சகோதர - சகோதரிகள், கணவன்-மனைவியர் உறவுகொண்டு வாழ்ந்த ஒரு கூட்டுக்குடும்பமே ஒரு கூட்டமாக வாழ்ந்த நிலையை இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்று கூறுவர். தற்காலத்தில் உலகில் வாழும் எந்த மனிதக் கூட்டமும் இப்பண்பாட்டு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பண்பாட்டு நிலையில் மனித குலம் வாழ்ந்ததற்கான எச்சங்களை ஐரோப்பிய சமூகத்தின் உறவுப் பெயர்களில் காணமுடிகிறது. சகோதர - சகோதரிகளிடையேயான மண உறவுகளை ஐரோப்பியர் தொடர்பான பல புராணங்களிலும் காணமுடிகிறது.

(2) இனக்குழுச் சமூகம்

இன்று உலகில் வாழும் பல பழங்குடிகள் இப்பண்பாட்டுக் கட்டத்திலேயே வாழ்கின்றன. மேற்காசியாவில் கி.மு.10000த்தில் தோன்றிய நடூஃபியன் பண்பாடு இக்கட்டத்தின் வளர்ந்த வடிவத்தை எட்டியது. பண்பாட்டுப் பரிணாமத்தின் இக்கட்டம் வரையிலும் இனக்குழு உறுப்பினர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கவில்லை. எனவே இவ்விரு கட்டங்களையும் சேர்த்து ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் என ஒரே கட்டமாகக் கூறலாம். எனினும் இவ்விரு கட்டங்களிலும் மாறுபட்ட அரசியல் அமைப்பு உள்ளதனால், நுண்ணிய வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற விதத்தில் இரண்டாகப் பிரித்துக் கூறப்படுகின்றது. இனக்குழுச் சமூக அமைப்பில் பல தாய்வழிக் கணங்கள் இணைந்து ஒரே இனக்குழுவாகப் பரிணமித்ததும் புதிய அரசியல் (சமூக) அமைப்பைத் தோற்றுவித்ததும் மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாகும்.

(3) சமுதாய ஒப்பந்தம் (நகர - கிராம சமூக அமைப்பு)

பண்டைய துருக்கியில் இருந்த சாட்டல் குயுக் நகர - கிராம சமூக அமைப்பு இப்பண்பாட்டுக் கட்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். பல கணங்கள் இணைந்து இனக்குழுவாகப் பரிணமித்த பொழுது மனித குலம் சமாதான சகவாழ்வு அடிப்படையில் அமைந்த அரசியல் அரிச்சுவடியைத் தோற்றுவித்தது. சமுதாய ஒப்பந்தக் காலத்தில் இருவேறு பண்பாட்டுப் படிநிலைகளில் வாழ்ந்த குடிகள் பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் சமாதான சகவாழ்வு வாழ்ந்த புதிய அரசியல் பண்பாட்டு வளர்ச்சி தோன்றி நிலைபெற்றது.

இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் நிலையில் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் கூறலாம். இந்நகரக் குடிகள் கிராமக் குடிகளை மேலாண்மை செய்வதற்குத் தேவையான போர்க் கருவிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. நன்கு வளர்ந்த பண்டமாற்று வணிகத்தைக் கொண்டிருந்த சிந்துவெளி நகர மாந்தருக்கும் கிராம சமுதாயத்தினருக்குமான இணக்கம், சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாகவே சாத்தியமாகி இருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம்.

(4) ரிஷி (அறிவர்) தலைமைக் குடிகளும், ரிஷி குலகுருக் குடிகளும்

மேற்காசியாவில் கி.மு.6000-கி.மு.5000 காலகட்டத்தில் தோன்றிய ஹசுனா, ஹலாஃபியன் மற்றும் சமாரன் பண்பாடுகளை, போர்த் தளபதி தலைமையில் அமைந்த ரிஷி குலககுருக் குடிகளாகக் கூறலாம். ரிக் வேத ஆரியர் இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தனர்.

யுகோஸ்லேவியாவில் லெபன்ஸ்-கி-வீர் இல் தோன்றிய புதிய கற்கால நகர சமூகம் ரிஷி தலைமைச் சமூகமாகும். மேற்காசியாவிலிருந்து சென்ற கருப்பின ரிஷிகள் (அறிவர்கள்) பண்படாத வெள்ளை இனக் குடிகளுக்குத் தலைமையேற்று அவர்களை மானாவாரி விவசாயம், கால் நடை வளர்த்தல் மற்றும் பண்டமாற்று வணிகத்திற்குப் பயிற்சி அளித்தனர். இவ்வாறு தலைமையேற்ற ரிஷிகளுக்குப் பிரபுத்துவம் கிடைக்காததால் இவ்வியக்கப்போக்கு அதிகரித்து, வெகுவிரைவிலேயே புதிய கற்கால மேய்ச்சல் வாழ்க்கை ஐரோப்பா முழுவதும் பரவிற்று. உலகம் முழுவதும் புதிய கற்காலப் பண்பாட்டைப் பரவச் செய்த ரிஷி தலைமைக் குடி என்ற அரசியல் நெறி மனித குல மேம்பாட்டிற்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

(5) உலோக கால நகரங்கள்

மேற்காசியாவில் கி.மு.5000 - கி.மு.4300 வரை நிலவிய உபெய்துப் பண்பாடு உலோக கால நகரப் பண்பாடாகும். கி.மு.6000 த்தில் தோன்றிய சமாரன் குடிகள் மருத நில வாழ்க்கையை மேற்கொண்டிருந்தன. இக்குடிகள் கி.மு.5500 லிருந்து உலோகக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக, விவசாய விரிவாக்கம் மெசபடோமியாவை நோக்கி நகர ஆரம்பித்தது. கூடவே, பொருளுற்பத்தி பன்முகத் தன்மையடைந்து பண்ட மாற்று வணிகம் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. பண்டமாற்று வணிகத்தின் மூலம் உபரி செல்வத்தை அதிகமாகப் பெற்ற மருத நிலக் குடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிலையான குடியிருப்புகளைத் தோற்றுவித்தனர். இத்தகைய நிலையான குடியிருப்புகளை நகரங்கள் என்றே தொல்லியல் அறிஞர் குறிப்பிடுகின்றனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற பழமொழிக்கேற்ப, சங்க காலத்திலிருந்தே ஊருக்கொரு கோயில் கட்டி வாழ்ந்த தமிழரின் மரபு அதன் தொடக்கத்தை உபெய்துப் பண்பாட்டில் கொண்டிருந்தது.

சாட்டல் குயுக் நகர அந்தணக் குடிகள், கிராமக் குடிகளை எழுதப்படாத ஒப்பந்தத்தின் மூலம் சுரண்டி வாழ்ந்தனர். பின்னர் நகரக்குடிகள் கலைந்து தனிநபர்கள் (ரிஷிகள்) கிராமக் குடிகளுக்குத் தலைமையேற்கத் தலைப்பட்டனர். பொருளுற்பத்தியில் ஈடுபட்டு பண்டமாற்று வணிகத்தை மேற்கொண்டு வந்த நகரக் குடிகள் ஒரு இனக்குழுவாகவும் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டு நகரக் குடிகளுடனான பண்டமாற்று வணிகத்தைச் சார்ந்து வாழ்ந்த கிராமக் குடிகள் வேறு இனக்குழுவாகவும் இருந்த நிலை, சாட்டல் குயுக் நகர - கிராம சமூக அமைப்பில் நிலவிற்று. உபெய்துப் பண்பாட்டில் ரிஷிகள் தலைமையிலான நகரக் குடிகள் பொருளுற்பத்தியிலும் விவசாயம் மற்றும் போர் நடவடிக்கைகளிலும் ஒருசேர ஈடுபட்ட நிலை தோன்றியது. இத்தகைய நகரக் குடிகளின் தோற்றமானது மனித சமூகத்தை வீரயுக அரசியல் அமைப்பை நோக்கி வளரச் செய்தது.

(6) வீரயுக அரசு

மேற்காசியாவில் கி.மு.4300 இல் தோன்றிய ஊருக் பண்பாடு உலகின் முதல் வீரயுக அரசுகளைத் தோற்றுவித்திருந்தது. கி.மு.800 லிருந்து நிலவிய ஆரியரின் கிரேக்க நகர அரசுகள் வீரயுக அரசியலைக் கொண்டிருந்தன. வடஇந்தியாவில் கி.மு.600 இல் நிலவிய ஜனபதங்களின் அரசியல் வீரயுகப் பண்பாட்டு மட்டத்தின் தொடக்க கட்டத்தில் இருந்தது.

பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் தோன்றிய சமாதான சகவாழ்வு அரசியல் உபெய்துப் பண்பாடு வரையிலும் நீடித்தது. ஊருக் காலத்தில் சுமேரியப் பகுதிக்குள் புதிதாகக் குடியேறிய கட்டுப்பாடற்ற ஐரோப்பியக் குடிகளை வாளின் வலிமையைக் கொண்டு ஏவல் மரபினராக மாற்றிய புதிய பண்பு தோன்றியது. இதன் விளைவாக இதுவரை இனக்குழுச் சமூகத் தன்மையிலிருந்த அரசமைப்பு விரிவடைந்து புதிய பரிணாமத்தைப் பெற்றது. இக்கட்டத்தில் பண்பட்ட கருப்பினக் குடிகள் பண்படாத வெள்ளை இனக் குடிகள் மீது பலாத்காரப் பிரயோகம் செய்து ஏவல் மரபினராக மாற்றியது, புதிய காட்டுக் குடிகளால் சமாதான சக வாழ்வுக்குப் பாதகம் ஏற்படாமல் தடுப்பதை அடிப்படையாக் கொண்டே தோன்றியது.

(7) ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு

கி.மு.3200 இல் ஏற்பட்ட சுமேரியப் பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் அங்கு ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு தோன்றியது. பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் கட்டுப்பாடற்ற செமிடிக் கூட்டங்கள் பேரளவில் சுமேரியாவை நோக்கிக் குடியேறின. இந்நெருக்கடிச் சூழலில் வலுவான நகர அரசுகளின் தலைமையை, பிற நகரங்கள் ஏற்றுச் செயல்பட்டன. கூடவே அரசர்களின் மூத்த மகன்கள் அரசுரிமைக்குரியவராகிய மரபும் தோன்றியது. கி.மு.2354 இல் சார்கோனின் அக்காடியன் அரசு தோன்றியதிலிருந்து நிலமானிய முறை தோன்றியது. முன்பு சுதந்திரமாக நகரைச் சார்ந்து வாழ்ந்த குறிஞ்சி, முல்லை மற்றும் நெய்தல் நில சார்புக் குடிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கின்ற நோக்கில் போர்த் தளபதிகளைப் பிரதிநிதிகளாக நியமிக்கின்ற வழக்கமும் தோன்றியது.

சங்க கால தமிழ் வேந்தர் குடியினரின் அரசமைப்பு, சுமேரியாவில் தோன்றிய ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமமும் தேங்கிய மற்றும் திரிந்த பண்பாடுகளும்

மேலே விவாதிக்கப்பட்ட பண்பாட்டுக் கட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, இயல்பான வளர்ச்சிப் போக்கில் பரிணமித்துள்ளன. இவையனைத்தும் நெருக்கடிச் சூழலில் சமாதான சகவாழ்வினை அடிப்படையாகக் கொண்டு மனித குலம் தோற்றுவித்துக் கொண்ட பண்பாட்டுக் கட்டங்களாகும். ஏவல் மரபினரைத் தோற்றுவித்தது மனித குலப் பொதுப்பண்பிற்கு மாறானது என்றாலும், கட்டுக்கடங்காத காட்டுக் கூட்டங்களால் பண்பட்ட, வளர்ந்த சமூகம் அழிந்துவிடக்கூடிய சூழல் ஏற்பட்ட பொழுது இதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையிலேயே கைக்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாகும். ஏவல் மரபினரின் கட்டுப்பாடற்ற தன்மையைக் கருத்தில்கொண்டே, அவர்கள் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் உடைமையாக வைத்துக் கொள்ளத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆரம்பத்தில் பலாத்காரப் பிரயோகத்தின் மூலம் அடியோராக்கப்பட்ட கூட்டங்களில், பண்பட்ட கூட்டங்களை வேளாண் வாயிலாகிய வினைவலராக மாற்றினர். வினைவலரிலும் பண்பட்ட குடிகளை நிலக் குடிகளாக (சங்க இலக்கியங்கள் கூறும் சிறுகுடிகளைப் போன்று) மாற்றி ஒப்பீட்டளவு சுதந்திரம் கொடுத்தனர். (மேற்காசியாவில் நிகழ்ந்த இவ்வியக்கப்போக்கு குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்.) இவ்வாறாக குறிப்பிட்ட ஒரு அரசியல் சூழலில் பண்படாத மக்கள் கூட்டங்களை அடியோராக மாற்றியச் செயல்பாடும் கூட ஒரு தற்காலிக ஏற்பாடாக அமைந்திருந்ததையே பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆனால், வெள்ளை இனத்தவரால் எகிப்திலும் சுமேரியாவிலும் தோற்றுவிக்கப்பட்ட அடிமை முறை, மனித குலப் பொதுப் பண்பிற்கு முற்றிலும் புறம்பானதாகும். வரலாற்றில் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்று.

திரிந்த பண்பாடுகள்

(1) எகிப்தின் பாரோ மன்னர்களின் அரசமைப்பு, திரிந்த பண்பாட்டிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். மேற்காசியாவில் தோன்றியிருந்த உலோக நாகரிகம் கி.மு.3000 த்துக்கு முன் எகிப்திற்கும் பரவியிருந்தது. சுமேரியாவின் ஊர் வம்சாவழி அரசுகளைப் போன்று எகிப்திலும் வம்சாவழி அரசர்களைக் கொண்ட பாரோ மன்னர்களின் அரசு தோன்றியிருந்தது. நன்கு வளர்ச்சியடைந்திருந்த அரசியல் அமைப்பையும் பொருளியல் வாழ்க்கையையும் கொண்டிருந்த பாரோ மன்னர்களிடையில் சகோதரர் சகோதரிகளை மணம் செய்யும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்கிற மிகவும் கீழ் நிலைப் பண்பாட்டுக் கூறு வழக்கில் இருந்தது.

பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகள் ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியம் என்றும் அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்றும் பண்பாட்டு மானுடவியலாளர் கூறுகின்றனர். சமூகம் கீழ் நிலையிலிருந்த மேல் நிலைக்கு முன்னேறுகின்றபோது குடும்ப அமைப்பும் கீழான வடிவத்திலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறுகிறது என மார்கன் கூறுகிறார். மிகச் சரியாகக் கூறப்பட்டுள்ள இந்த இலக்கணத்திற்கு முரணாக, வளர்ந்த அரசியல் அமைப்பைக் கொண்டிருந்த பாரோ மன்னர்களின் கீழான குடும்ப வடிவம் இருக்கின்றது.

எகிப்தில் பூர்விகமாக வாழ்ந்து வந்த, நன்கு வளர்ந்த பண்பாட்டினையும் அரசியல் அமைப்பையும் கொண்டிருந்த கருப்பின மக்களை, பண்பாட்டு வளர்ச்சியில் கீழ் நிலையிலிருந்த, புதிதாகக் குடியேறிய வெள்ளை இனத்தவர் ஆதிகம் பெற்று, கருப்பின மக்கள் வளர்த்திருந்த அரசியல் அமைப்பைக் கைப்பற்றிக் கொண்டபோது, அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்குத் தக்க அளவில் குடும்ப உறவுகள் மேம்படாத பாரோ மன்னர்களின் அரசு நிலைக்கொண்டது எனக்கொண்டால் மேற்கூறப்பட்ட முரண்பாடு நீங்கிவிடுகின்றது. வெற்றி பெற்ற பாரோ மன்னர்கள் தோல்வியுற்ற கருப்பினக் குடிகளை அடிமைகளாக்கி திரிந்த ஒரு அரசியல் பண்பாட்டைத் தோற்றுவித்து விட்டனர்.

(2) கீழ்நிலை பண்பாட்டுக் குடிகளாகிய செமைட்டுகள், ஆரம்பக் காலங்களில் பண்பட்ட சுமேரியரின் கீழ், அடியோராகவும், வினைவலராகவும், வினைஞராகவும், நிலமக்களாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் சார்கோன் என்ற வினைஞன் (அடைப்பக்காரன் -அகம்படி) தலைமையில் அக்காடியன் அரசைத் தோற்றுவித்து சுமேரியப் பண்பாட்டைத் தமதாக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அங்கேயும் பண்பாடு திரிந்து அடிமை முறை தோன்றிற்று.

மனித குலப் பொதுப்பண்பிற்குப் புறம்பான, அடிமை முறை ஐரோப்பியரால் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டதன் காரணிகள் ஆராயப்படவேண்டியனவாகும். கடைசி பனியுகத்தின் கடுமையான காலக் கட்டமாகிய கி.மு.20,000-கி.மு.10,000 வாக்கில் ஐரோப்பிய மக்கள் கூட்டங்கள் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டதால், உலகில் பிற மனிதக் கூட்டங்கள் இனக்குழுக்களாகப் பரிணமித்து, சமாதான சகவாழ்வுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொண்ட வேளையில் அவை காட்டுமிராண்டி நிலையின் இரத்த உறவுக் குடும்ப அமைப்பைக் கொண்ட கூட்டங்களாகவே தேங்கி விட்டன. இத்தகைய காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதக் கூட்டங்கள் பிற கூட்டத்தின் உறுப்பினர்களை தனது வாழ்க்கைப் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. இனக்குழு என்ற சமூக அமைப்பு தோன்றியதில் இருந்துதான் சமாதான சகவாழ்வு என்ற புதிய பண்பு மனிதரிடம் கருக்கொண்டது. இதன்பின் பண்டமாற்று வணிகம் தோன்றி இப்பண்பு மேலும் வலுப்பெற்றது.

இனக்குழு என்ற சமூக அமைப்பு பெண் தலைமைக் கணங்களுக்குள் நடைபெற்ற மிக நீண்ட நெடிய போர்களுக்குப் பின்னரே தோன்றியது. அதன்பின் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்ட குடிகளுக்கும் வேட்டுவக் குடிகளுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த சண்டைகளுக்குத் தீர்வாகப் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட நகர - கிராம சமூக அமைப்பு தோன்றியது. இவ்வாறு ஒவ்வொரு பண்பாட்டுக் கட்டத்திலும் மிக நெடிய போராட்டங்களைச் சந்தித்து அதன் தீர்வாக, புதிய அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து, நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு வரையிலும் கருப்பினத்தவர் முன்னேறியிருந்தனர்.

மனித குலத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்ததாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஐரோப்பிய செமிடிக்குகளும், ஆரியர்களும் கி.மு.5000 வரையிலும் காட்டுமிராண்டி நிலையிலேயே வாழ்ந்திருந்தனர். மனித குலத்தின் மிகக் கீழான குடும்ப அமைப்பான இரத்த உறவுக் குடும்ப அமைப்பே அவர்களிடம் நிலவியது. மேற்காசியக் கருப்பின ரிஷிகளின் மூலம் மேய்ச்சல் வாழ்க்கைக்கும் பண்டமாற்று வணிகத்திற்கும் இக்குடிகள் பழக்கப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களிடம் சமாதான சகவாழ்வுக்கான உளப்பாங்கு (அரசியல் பக்குவம்) தோன்றவில்லை.

மேலும் நீண்ட காலம் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்ட பொழுது சந்தித்த இடர்ப்பாடுகளின் விளைவாக இவ்வெள்ளையின மனிதக் கூட்டங்கள் ஒருவகையான குழு உளவியலினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தோன்றுகிறது. வெள்ளை இனத்தவரின் அரசியல் பக்குவமின்மையும் குழு உளவியல் பாதிக்கப்பட்டிருந்த தன்மையுமே அடிமை முறை தோன்றுவதற்கானக் காரணிகளாக அமைந்துவிட்டன.

தேங்கிய பண்பாடுகள்

ஒருவழிப் பரிணாமக் கொள்கையினர் விலங்குகளின் பரிணாமம் போன்றே பண்பாடுகளும் சிறிய, எளிய நிலையிலிருந்து பெரிய, சிக்கலான நிலைக்கு வளர்ச்சி பெற்றுள்ளன என்றும் ஒவ்வொரு வட்டாரப் பண்பாட்டிலும் பண்பாட்டின் நிறுவனங்கள் தனித்தனியே வளர்ந்துள்ளன என்றும் கூறுவர்.

விலங்குகள் இயற்கைச் சூழலில் ஏற்பட்ட நெருக்கடியைச் சந்தித்தபொழுது உடல் கூறுகளில் தேவையான மாறுதல்களுக்கு உட்பட்டன. ஆனால், இயற்கையின் நெருக்கடிகள் மனிதனின் பொருளியல் வாழ்வைப் பாதித்தனவேயன்றி, சமூக வாழ்வில் (குடும்ப உறவுகளிலும் அரசியல் நிர்வாகத்திலும்) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இருவேறு மனிதக் கூட்டங்கள் உறவுகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுதுதான் சமூக வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. வேற்று மனிதக் கூட்டங்களை உறவு கொள்ள அனுமதிக்காத சமூகங்களும், வேற்றுப் பண்பாட்டுக் குடிகளையே சந்திக்காமல் ஒதுங்கிவிட்ட சமூகங்களும், பண்பாட்டில் ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை. இவ்வாறு தனித்து வாழ்ந்த மனித சமூகங்களை தேங்கிய பண்பாட்டினர் எனக் கூறலாம். மனித குலம் கடந்து வந்த ஒவ்வொரு பண்பாட்டுப் படிநிலையிலும் தேங்கிய பண்பாடுகளை அடையாளம் காட்டமுடியும்.

(1) கடைசி பனியுகத்தில் பனிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட வெள்ளை இனத்தினர் கடுமையான இயற்கை மாற்றத்தைச் சந்தித்த பொழுதும் தனிமைப்பட்டு விட்டபடியினால் வேற்று இனத்தவரைச் சந்திக்கும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு முறையிலேயே நீடித்தனர்.

(2) கி.மு.40,000 த்தில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்த பழங்குடிகள் கி.மு.25,000 த்தில் இறந்தவர் உடலைப் புதைப்பது, பாறை ஓவியங்கள் வரைந்து மதச் சடங்குகள் செய்வது போன்ற பண்பாட்டு வளர்ச்சியை, சமகால உலகின் பிற சமூகங்களுக்கு இணையாகப் பெற்றிருந்தனர். எனினும் இப்பழங்குடிகள், வேறுபட்ட பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் தனித்து ஒதுங்கிய சமூகமாக வாழ்ந்து விட்டதனால், இன்றுவரையிலும் இனக்குழுச் சமூக அமைப்பின் ஆரம்ப வடிவத்தைத் தாண்டிய வளர்ச்சியைப் பெறாமல் உள்ளனர். (கி.மு.25,000 வாக்கில் இவர்களிடையே இனக்குழுச் சமூக அமைப்பு தோன்றியிருக்க வேண்டும்)

(3) ஜப்பானில் வாழ்ந்த குடிகள் கி.மு.9000 த்திலேயே மட்பாண்டங்கள் தயாரிக்கும் அளவிற்குப் பொருளுற்பத்தியில் முன்னேறியிருந்தன. இக் குடிகளும் உலோகப் பயன்பாட்டு மக்கள் குடியேறும் வரை வேற்று பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ நேரிட்டதால், மேற்காசியக் குடிகளைப் போல் பண்பாட்டில் வளர்ச்சி பெற இயலவில்லை.

(4) தென் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு.4000 த்திலிருந்தே சிறு கற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்து வந்தன. கி.மு.800 - கி.மு.500 வாக்கில் இரும்புப் பயன்பாட்டுப் பெருங்கற்கல்லறைப் பண்பாட்டு மக்கள் இப்பகுதிக்குள் குடியேறும் வரை இக்குடிகள் பண்பாட்டு வளர்ச்சியில் சிறிதும் முன்னேறியிருக்கவில்லை.

(5) கி.மு.7000 - கி.மு.6000 காலக்கட்டத்தில் உலகில் தோன்றிய புதிய கற்கால நகரங்களில் ஜெரிக்கோ நகரமும் ஒன்றாகும். சமகாலத்தில் சாட்டல் குயுக் போன்ற நகரக் குடிகள் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமாதான சக வாழ்வுக்கான அரசியல் அறநெறியைத் தோற்றுவித்திருந்தன. ஜெரிக்கோ நகரக் குடிகளோ, பழைய இனக் குழுக் காலத்தியப் பண்பிலிருந்து மாறவில்லை. சாட்டல் குயுக் குடிகள் தங்கள் பொருள்களைக் கொள்ளையிட்டுத் தொல்லை கொடுத்துவந்த வேட்டுவக் குடிகளைப் பண்டமாற்று வணிகத்திற்குப் பழக்கியதன் மூலம் புதிய அரசியல் அறநெறியைத் தோற்றுவித்ததுடன் வேட்டுவக் குடிகளின் திருட்டுத் தொல்லையிலிருந்தும் விடுபட்டனர். ஜெரிக்கோ குடிகளோ, வேட்டுவக் குடிகளிடமிருந்து தங்கள் உடமைகளைக் காத்துக் கொள்ளும் பொருட்டு கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய அரண் அமைத்து வாழ்ந்தனர். இவ்வாறு பிற குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ்ந்ததனால் கி.மு.1400 இல் யூதர்களால் இந்நகரம் எரியூட்டி அழிக்கப்படும் வரையிலும் ஜெரிக்கோ நகரக் குடிகள் நடூஃபியன் பண்பாட்டுக் கால சிறு கற்காலப் பண்பாட்டிலேயே தேங்கிவிட்டதை தொல் எச்சங்கள் காட்டுகின்றன. கி.மு.6500 இல் ஜெரிக்கோ குடியினருக்குச் சமமான பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்த மேற்காசியாவின் பிறகுடிகள், மாற்றுப் பண்பாட்டுக் குடிகளுடன் தொடர்ச்சியான மோதலையும் உறவையும் மேற்கொண்டதன் விளைவாக கி.மு.1400 இல் உலோகப் பயன்பாட்டுடன் கூடிய நிலப்பிரபுத்துவ அரசமைப்பு வரை வளர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(6) கி.மு.6500 இல் சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோன்றியிருந்த நகர -கிராமக் குடியிருப்புப் பண்பாடு பலுசிஸ்தானத்தின் மெ?ர்கர் வரை பரவியிருந்தது. இப்புதிய கற்காலப் பண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் சிந்து வெளி நாகரிகம் தோன்றியது. மேற்காசியாவில் தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் சிந்துவெளியில் ஏற்படாததனால், அந்நகர அரசியல் அமைப்பு கடைசி வரையிலும் சமுதாய ஒப்பந்தம் என்கிற நிலையிலேயே தேங்கிவிட்டது. அதாவது நகரக் குடிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு வலுவான குடிகள் இப்பகுதிக்குள் குடியேறவில்லை. சிந்து வெளி நகர அகழ்வாய்வுகளில் போர் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காததும், அந்நகரங்களைச் சார்ந்து சுற்றிலும் பல கிராம சமூகங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதையும் கொண்டு இந்நகரங்களின் அரசியல் அமைப்பு சாட்டல் குயுக் அரசியல் அமைப்பினை ஒத்துள்ளதை அறிகிறோம்.

இன்று உலகில் வாழும் பழங்குடிகள் அனைத்துமே தேங்கிய பண்பாட்டுச் சமூகங்களுக்கான உதாரணங்களே.

மனித குல வரலாற்றில் வாழ்ந்து மறைந்த பல்வேறு பண்பாட்டு மக்களையும் இன்றுவரை வாழ்ந்து வருகின்ற மக்களின் பண்பாடுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள ஆறு பண்பாட்டுக் கட்டங்களில் ஏதோ ஒன்றிலோ அல்லது அவற்றின் திரிந்த அல்லது தேங்கிய பண்பாட்டு நிலைகள் ஏதோ ஒன்றிலோ பொருத்திப் பார்க்கமுடியும். இந்துப் புராண மரபு திரிந்த பண்பாட்டினரை அசுரர் என்றும் தேங்கிய பண்பாட்டினரை இராட்சசர் என்றும் குறிப்பிடுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் சட்டங்கள் எழுதப்படாமை

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் மேலே விவாதிக்கப்பட்டவாறு தேங்கிய சமூகமாக, திரிந்த சமூகமா அல்லது நிலப்பிரபுத்துவம் வரையிலும் ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமத்தில் வளர்ச்சியடைந்த சமூகமாக என்பதற்கான விடையை தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையுள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உலகின் அனைத்து சமூகங்களுமே தங்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ற சட்டங்களை மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளன. ஒரு சமூகம், தானே தோற்றுவித்துக் கொண்ட மரபுகளை, சட்டங்களாக எழுதி வைத்துக் கடைப்பிடிக்கவேண்டிய தேவை ஒருபோதும் எழுவதில்லை. உதாரணமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட கணங்கள் (குலங்கள்) இணைந்து இனக்குழு என்கிற புதிய சமூக அமைப்பு தோன்றியபோது, கண உறுப்பினர்களுக்குள் நடைமுறையில் இருந்த அகமணமுறை தடை செய்யப்பட்டது. புதிதாகத் தோன்றிய இம்மரபு கடைப்பிடிக்கப்படா விட்டால் இனக்குழு என்கிற சமூக அமைப்பே தகர்ந்துபோய்விடும். எனவே நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் சமாதான சகவாழ்வை நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மரபு, அதனைத் தோற்றுவித்தவர்களாலேயே மீறப்படும் என்ற எண்ணத்திற்கே சிறிதும் இடமில்லை. ஒவ்வொரு புதிய சமூக அமைப்பும், ஒருவழிப் பாதையில் பரிணமித்த பொழுது தோற்றுவிக்கப்பட்ட மரபுகள் எத்தகைய சிக்கல் நிறைந்தவையாக இருப்பினும் அவற்றைத் தோற்றுவித்த சமூகங்களால் எளிதில் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவிடும். புதிய மரபுகளை எழுதிவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தேவை அச்சமூகங்களுக்கு ஏற்படுவதில்லை.

சிக்கல்கள் நிறைந்த மரபுகளையும் பிறழாமல் கடைப்பிடிக்கக்கூடிய தன்மை ஒருவழிப் பரிணாமத்தில் வளர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்நிலைப் பண்பாட்டினர், மேல்நிலைப் பண்பாட்டினர் மீது மேலாண்மை பெற நேரிட்டபொழுது சமூகம் திரிந்துவிடுகின்றது. திரிந்த சமூக அமைப்பில் கீழ்நிலைப் பண்பாட்டினர், வளர்ந்த பண்பாட்டின் கூறுகளைத் தமதாக்கிக்கொள்ள முயல்வர். பொதுவாக, இம்முயற்சியில் கீழ்நிலைப் பண்பாட்டினரால் வளர்ந்த பண்பாட்டுக்குரிய மரபுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க முடிவதில்லை. எனினும் புதிதாகச் சுவீகரித்துக் கொண்ட வளர்ந்த பண்பாட்டு நிலையில் அச்சமூகம் நீடிக்கவேண்டுமானால் குறைந்தபட்ச மரபுகளையேனும் கடைப்பிடிக்க வேண்டும். இப்பின்னணியில்தான் திரிந்த சமூகங்கள் தாங்கள் கடைப்பிடித்தாக வேண்டிய புதிய மரபுகளை எழுத்தில் பதிவு செய்து சட்டமாக்குகின்றன. சட்டங்கள் மீறப்படும் பொழுது கடுமையான தண்டனைகளும் இச்சமூகங்கள் வகுத்துக்கொண்டுள்ளன.

உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை, கீழ்நிலைப் பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளும் பொழுது, ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில்லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. அரேபியப் பெண்கள் உடலை முழுவதுமாக மூடிக்கொள்ளுதல், சில பண்டைய சமூகங்களில் அல்குல் பூட்டு பயன்படுத்தப்படுதல் போன்ற வழிமுறைகள் கற்புநெறியைக் கடைப்பிடிப்பதற்கென பின்பற்றப்பட்டன. கற்புநெறிக்கு இத்தகைய கடுமையான சட்டங்களையும், வழிமுறைகளும் கைக்கொண்ட பெரும்பாலான சமூகங்களில், மணவிலக்கிற்குப் பின்னரோ, கணவனின் மறைவுக்குப் பின்னரோ, பெண்ணின் மறுமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இத்தகைய எழுதப்பட்ட சட்டங்களைக் கொண்டிராத தமிழ்ச் சமூகத்தில் பெண்ணின் கற்பு நெறி மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதுடன், மறுமணமும் (மேலோர் மூவராகிய உயர்குலத்தில்) அனுமதிக்கப்படுவதில்லை. திரிந்த பண்பாட்டிலோ பெண்ணின் மறுமணத்தை அனுமதிக்காமல், சமூக ஒழுங்கினைக் காக்க முடியாது என்பதால் கற்பு நெறியில் சிறிது தளர்வு மேற்கொள்ளப்பட்டு மறுமணம் அனுமதிக்கப்பட்டது. கீழ்நிலைப் பண்பாட்டினர் புதிதாக மேல்நிலை பண்பாட்டை தமதாக்கிக் கொள்ளும் முன், அவர்களிடையே தாய் வழி சமூக அமைப்புக் கூறுகள் மேலோங்கியிருந்தால், மாறிய பண்பாட்டு சூழலில் மறுமணத்தை தடை செய்து வாழ்வதற்கு அச்சமூகத்தினரால் முடியாமல் போய்விட்டது என்பதே உண்மை.

திரிந்த பண்பாட்டின் அறிஞர்கள், அதிகம் பண்படாத தங்கள் சமூகம், அதிக பட்சமாக கடைப்பிடிக்க முடியும் என கருதிய பழைய மரபுகளையெல்லாம் சட்டமாக்கி விடுகின்றனர். எனினும், புதிய பண்பாட்டு மட்டத்தில் கடைப்பிடித்தே தீரவேண்டிய மரபுகளைத் தவிர பிறவற்றிற்கு இச்சமூகத்தினர் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே தான் பண்டைய சமூகங்களில் எழுத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கும், நடைமுறைப்படுத்தப்பட்டவற்றுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை காண முடிகின்றது.

வடஇந்தியாவில், மகாபாரதம் தொடர்பான புராண கால க்ஷத்திரியர் ஓரளவு பண்பட்ட சமூகத்தினராவர். பண்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மூல மரபுகளிலிருந்து அவர்கள் ஓரளவே திரிந்திருந்தனர். இவ்வரச வருணம், வட இந்திய அரசியல் அரங்கிலிருந்து மறையும் வரை அங்கு சட்டங்கள் எழுத்தில் கொண்டு வரப்படாமல் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டன. இவர்கள் கடைப்பிடித்த மரபுகளை மகாபாரதம், மற்றும் இராமாயணம் மூலம் அறிய முடிகின்றது. கி.மு. 600க்குப் பின் சூரிய சந்திர குலத்தவரான புராண கால அரச குடியினரின் பணி மக்கள் (செவிலித்தாய், தோழி, பார்ப்பார் போன்ற வாயில் மரபினர்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் வட இந்தியச் சமூகம் திரிந்து விடுகின்றது. இக்காலக் கட்டத்திற்குப்பின் தான் அங்கு தர்ம சாஸ்திரங்களும், அர்த்த சாஸ்திரம், மனுஸ்மிதி போன்ற பிற சட்ட நூல்களும் எழுதப்பட்டன. ஆனால் இவ்வெழுதப்பட்ட சட்டங்களுக்கும் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக ரோமிலா தாப்பர் கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கி.மு. 600க்குப்பின் தோன்றிய திரிந்த பண்பாட்டினராகிய வடஇந்திய அரசவம்சத்தினரால் பண்டைய மரபுகள் முழுவதையும் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதே இதற்குக் காரணமாகும்.

சட்டங்களை எழுதிவைத்துக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வளர்ந்த பண்பாட்டு நிலையிலும், அறங்களை மரபாகக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் எளிய பண்பாட்டு நிலையிலும் உள்ளன என்கிற தவறான கருத்தோட்டம் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றது. சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் எழுதப்படாத சட்டங்களை மரபுசார் சட்டங்கள் என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். மரபுசார் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயங்களுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ சமுதாய ஒழுங்கு கட்டிக்காக்கப்படுவதாகப் பண்பாட்டு மானுடவியலாளர் கருதுவது கவனத்திற்குரியது.

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுசார் சட்டங்கள் சமகாலத்தில் வடஇந்திய சமூகத்தினரால் எழுத்தில் கொண்டு வரப்பட்டு ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டச் சட்டங்களை விட சிக்கல்கள் நிறைந்ததாகவும், செவ்வியல் தன்மை கொண்டதாகவும் இருந்ததை மேற்கொண்டு விவாதிக்க போகும் தலைப்புகளில் காணலாம்.

brahaspathy@sishri.org __________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

 1. மணவினைச் சடங்குகள் வட மரபு - தமிழ் மரபு ஒரு ஒப்பீடு


பண்பாடு கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு வளர்ச்சிய அடையும்போது குடும்பம் கீழான வடிவிலிருந்து மேலான வடிவிற்குப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். குடும்பத்தின் ஒவ்வொரு வடிவத்திலும் மணவினைச் சடங்குகள் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் மணவினைச் சடங்குகளைக் கொண்டு அச்சமூகத்தின் பண்பாட்டுப் படிநிலைகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

சங்க கால தமிழர் மற்றும் சம காலத்திய வட ஆரியச் சமூகங்களின் மணவினைச் சடங்குகளை ஒப்பீடு செய்து ஆராய்வதன் வாயிலாக இவற்றில் எது மூலப் பண்பாடு என்பதையும் எது திரிந்த பண்பாடு என்பதையும் அடையாளம் காண இங்கு முயற்சிக்கப்படுகிறது.

அ) மறையோர் தேயத்து மணவினை முறைகள் (கரணங்கள்)

கீழ்க்கண்ட எண்வகைக் கரணங்களை (மண முறைகளை) மனு தர்மம் கூறுகிறது.

1. பிரம்ம: வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது பிரம்ம விவாகம்.

2. தைவதம் (தெய்வ மணம்): யக்ஞத் தீயின் முன்னிருந்து யாகம் நடத்தி வைக்கும் புரோகிதனுக்கு அலங்காரத்துடன் தனது பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்.

3. ஆரிஷம்: தான் செய்யவேண்டிய யாகாதி தர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ரிஷபம், ஒரு பசு அல்லது இரண்டு ரிஷபம், இரண்டு பசு இவைகளைப் பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்து கொடுப்பதை ஆரிஷ விவாகமென்பர்.

4. பிரஜாபத்யம்: பிரம்மச்சாரியை அழைத்துப் பூசித்துப் பெண்ணைத் தரும்போது நீவிர் இருவருமாய் அறங்களைப் புரிந்து வாழ்வீராக என்று வாழ்த்திக் கொடுத்தல் பிரஜாபத்யம்.

5. ஆசுரம்: பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி மணப்பது ஆசுரம் எனப்படும்.

6. காந்தருவம்: ஆண்-பெண் இருவரும் தம்மில் மனம் கலந்து தாங்களாகவே கூடிச் சுகித்தல் காந்தருவம்.

7. இராக்ஷசம்: அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்ஷசம்.

8. பைசாசம்: தூக்கத்திலும், குடிபோதையிலும், பித்தங்கொண்டும் இருக்கும் பெண்ணைக் கலப்பது மிகவும் தாழ்ந்த பைசாச மணமாகும்.

மேலே விவரித்த மணமுறைகளில் பிராமணனுக்குப் பிரம்ம முதல் காந்தருவம் வரையான ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையான நான்கும், ஏனையோருக்கு ஆசுரம், காந்தருவம், பைசாசம் ஆகிய மூன்றும் ஏற்புடையது. எனினும், இவற்றில் பிராமணனுக்கு பிரம்ம முதல் பிரஜாபத்யம் வரையான நான்கும், க்ஷத்ரியனுக்கு இராக்ஷசமும், மற்ற இரு வருணத்தவர்க்கு ஆசுரமும் சிறந்த மணமுறை என மனு தர்மம் கூறுகிறது.

ஆ) தமிழர் மரபு

தமிழ் மரபு மணமுறைகளைக் கற்பியல், களவியல் என இரண்டாகப் பகுக்கிறது. கற்பு நெறியில் அமைந்த மணவினைகள் (கரணங்கள்) மட்டுமே மேலோர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
 (தொல்: பொருள்: கற்பியல் 140)

தமிழ் மரபுப் படி வேளாளர்க்குரிய மணமுறையில் இருபாலரின் பெற்றோர்களின் சம்மதம் தேவைப்படுவதை மேற்கண்ட தொல்காப்பியச் சூத்திரம் தெளிவாக்குகிறது. மறையோர் தேயத்து மணமுறைகளில் காந்தருவம் தவிர்த்த பிற ஏழும் கைக்கிளை, பெருந்திணைப் பாற்பட்டவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

“முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல்: கற்பியல் 102)

“பின்னர் நான்கும் பெருந்திணைப் பெறுமே” (தொல்: கற்பியல் 103)

இச்சூத்திரங்களுக்கு உரைகூறும் இளம்பூரணர், ‘எண் வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய ஆசுரம் முதல் மூன்றும் (ஆசுரம், இராக்ஷசம், பைசாசம்) கைக்கிளைப் பாற்படும் என்றும் பிரமம் முதலிய நான்கும் (பிரமம், தைவதம், ஆரிஷம், பிரஜாபத்யம்) பெருந்திணைப் பாற்படும்' என்கிறார். நச்சினார்க்கினியரும் இதை உறுதி செய்கிறார். ஒரு தலைக் காமத்தை கைக்கிளையாகவும் பொருந்தாக் காமத்தைப் பெருந்திணையாகவும் தமிழ் மரபு இலக்கணப்படுத்தியுள்ளது.

காந்தருவம் ஒன்றே கைக்கிளை, பெருந்திணைப் பாற்படாத வடஇந்திய மணமுறையாகும். இம்மணமுறையில் தலைவனும் தலைவியும் ஒத்த மனத்தினராகக் கரணத்திற்கு முன் புணர்வர். இதனைத் தமிழ் மரபு களவிற் புணர்ச்சி எனக் கூறும்.

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், காதற் பரத்தையர் களவிற்குரியர் எனக் குறிப்பிடுகிறது. அதாவது வடமரபு கூறும் காந்தருவத்தை களவு எனக் கூறி அதனைப் பரத்தையருக்கே உரியதாக வரையறுத்துள்ளது.

மேலும்,

“களவின் வழிவந்த கற்பும் பொற்பமை
களவின் வழிவராக் கற்புமென் றாங்கு
முற்படக் கிளர்ந்த கற்பிரு வகைத்தே”


எனக் களவின் வழிவந்த கற்பு உண்டெனவும் அகப்பொருள் விளக்கம் கூறுகிறது. களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சி எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதற்கு இந்நூல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மையான”


களவுப் புணர்ச்சிக்குப் பின், தலைமகன், தலைமகளை தன் ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சம்மதத்துடன் மண வாழ்க்கையை மேற்கொள்வது களவின் வழிவந்த கற்பு மணமாகும்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கும் வள்ளிக்கும் நடந்த திருமணம் களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சிக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். சோழ அரசனுக்கும் நாக கன்னியான பீலிவளைக்கும் இடையிலான களவுப் புணர்ச்சி கரணத்தில் முடியாததனால் களவாகவே நின்றுவிடுகிறது. இவர்களுக்குப் பிறந்த மகன் திரையன் என்று அழைக்கப்படாமல் இளந்திரையன் என்றே அழைக்கப்படுகிறான். பெரும்பாணாற்றுப்படை, இளந்திரையனை ‘முந்நீர் வண்ணன் பிறங்கடை' என்று குறிப்பிடுகிறது.

முந்நீர் வண்ணனாகியச் சோழனின் பிறங்கடை மரபில் இளந்திரையன் உதித்துள்ளான் என்பது இதன் பொருளாகும். தமிழ் மரபுப் படி கரணத்தில் முடியாத காந்தருவம், பெருந்திணையாகவே கருதப்படும். இதன் மூலம் மறையோர் தேயத்து மன்றல் (மணங்கள்) எட்டுமே தமிழ் மரபுப்படி கீழோருக்குரிய கைக்கிளைப் பெருந்திணையின் பாற்படுவதை அறியலாம்.

தமிழ் மரபைக் கீழானதாக வரையறுப்பதன் மூலம் வட இந்திய மரபு கீழானதாகிவிடாது. இதற்கு நேர்மாறாக வட இந்திய மரபு தமிழ் மரபைச் சித்தரிக்கலாம். எனினும் இவற்றில் வளர்ந்த உடைமைச் சமூகத்திற்கானக் கரணங்கள் எவை என்பதையும் ஆராயவேண்டும்.

தமிழ் மரபு அங்கீகரித்துள்ள கற்பு நெறியில் அமைந்த மேலோருக்குரிய மணமுறையில் இரு பாலரின் பெற்றோரின் இசைவும் வேண்டப்படுகிறது. இம்மணமுறை நன்கு பக்குவப்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கே உரியது. பண்டைக் காலத்தில் வலுவான அரசர்கள் தனக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களிடமும் நட்பு அரசர்களிடமும் மகற்கொடை பெற்று அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது வழக்கம். சுமேரியாவில் தோன்றிய இம்மரபு உலகம் முழுவதும் பரவியிருந்தது. மகற்கொடை மறுத்த (தலைவனின்) அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்வது ராக்க்ஷசம் என்றும், அரச வருணத்தினருக்கு இம்மணமுறையே சிறந்ததென்றும் வட இந்திய தர்மங்கள் கூறுகின்றன. வடஇந்திய புராணங்களிலும் வரலாற்றுக் காலத்திலும் பல மன்னர்கள் வேற்று அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மணம் முடித்ததைக் காணமுடிகிறது. உலகின் பெரும்பாலான (அனேகமாக அனைத்து) அரச குலத்தினரும் இத்தகைய ராக்க்ஷச மணத்தை அங்கீகரிக்கவே செய்கின்றனர். உண்மையில், பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்திற்கு இம்மணமுறை பொருந்தாத ஒன்றாகும்.

நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்தில் பெண் குடும்பத்தின் உடமையாகிறாள். தன்னை, பெற்றோரின் (குடும்பத்தின்) உடமையாக நினைத்து வாழும் மகளை கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்ளும் ராக்க்ஷச மணம் குடும்ப உறவுகளில் அராஜகத்தைத் தோற்றுவித்து விடுகின்றது. இம்மணமுறையை ஆதரிக்கும் வட இந்திய மற்றும் ஐரோப்பிய அரச குலத்தவரிடையே, அரசன் ராணிகளை நம்புவதில்லை.

ராணிகள் அடிக்கடியும் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு விடுகின்றனர். ராணிகளிடம், அரசன் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்த சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது.

"அரசிகளாலோ அல்லது அரசிகளின் அறையில் நிகழும் நிகழ்வுகளாலோ, அரசர்கள் கொல்லப்பட்டதற்கு உதாரணங்கள் உண்டு. பத்ரசேனன் என்கிற மன்னன் அரசியின் அறையில் மறைந்திருந்த தனது சொந்த சகோதரனால் சொல்லப்பட்டான். அதே போல் க்ருஷா என்பவன் அரசியின் படுக்கைக்கடியில் மறைந்திருந்த தனது மகனால் கொல்லப்பட்டான். சில அரசிகள் விஷம் கலந்த உணவுகள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களால் அரசனைக் கொல்வார்கள். எனவே அரசன் எப்போதும் கவனமாயிருந்து இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதான பணிப்பெண் மூலம் அரசியின் அறையில் எவ்வித அபாயமும் இல்லை என்று அறிந்த பிறகே அரசன் அங்கு செல்லலாம். தலையை மழித்தத் துறவிகள், கண்கட்டி வித்தைக்காரர்கள், மந்திரவாதிகள் அல்லது வெளியிலிருந்து வரும் பெண்களை அரசி சந்திப்பதைத் தடுக்கலாம்....... அரசியின் சேவகர்களை 80 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணோ சோதனை செய்யலாம்".

இவ்வாறு தன் மனைவிகளிடமே அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை வடஇந்திய அரச குலத்தவருக்கு இருந்துள்ளது. ஐரோப்பிய வரலாற்றிலும் கூட அரசனைக் கொன்ற ராணிகளையும், மகன்களால் கொல்லப்பட்ட அரசர்களையும், ராணிகளையும் பிள்ளைகளையும் கொன்ற அரசர்களையும் அதிகமாகவே காணலாம்.

தமிழக வேந்தர் குடியினருக்கோ இத்தகைய சிக்கல்கள் ஒருபோதும் தோன்றியதில்லை. வேந்தர்கள் மகற்கொடை மறுத்த தலைவர்களின் ஊரை அழித்து, அவர் மகளிரைக் கைப்பற்றி, ‘கொண்டி மகளிராக்கி' விடுவரேயன்றி, மணம் புரிவதில்லை. இக்கொண்டி மகளிர் மூலம் ஏவல் மரபினராகிய வேளாளரின் கீழ்ப் பிரிவு தோன்றிவிடுகின்றது. இம்மரபு, பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கான சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு போரிட்டு, கைக்கொண்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கி சிக்கல்களுக்கு உள்ளாவது பண்படாத சமூகங்களிலேயே நிகழும். ஐரோப்பிய அரசர்களும் இவ்வாறு கைக்கொள்ளப்பட்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கும் மரபைக் கொண்டிருந்தனர். அங்கும் அரசனுக்கு எதிராக ராணிகள் நடத்திய சூழ்ச்சிகளுக்குப் பெரும் பட்டியலே உள்ளது. கொண்டி மகளிரை வெள்ளாட்டிகளாக்கும் (ஏவல் மரபினராக்கும்) மரபை தமிழ் வேந்தர் குடியினர் மிக உறுதியாகக் கடைப்பிடித்தனர். நிலபிரபுத்துவச் சமூக அமைப்பின் நீண்ட நெடிய வரலாற்றில் ஆரம்பக்கட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலமே இத்தகைய சிறப்பான மரபுகள் தமிழ் வேந்தர் குடியினரால் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை உய்த்துணர வேண்டும்.

மேலே விவாதித்தவற்றிலிருந்து வட இந்தியச் சமூகம் மணவினைச் சடங்குகளை எட்டு வகையாக வகைப்படுத்தியிருந்தாலும், உள்ளடக்கத்தில் அதிகம் வளர்ச்சியடையாத எளிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. தமிழ் வேந்தர்குடியினரோ, மகற்கொடைக்குரிய மரபினர் கொடுப்பக் கொள்வதே சிறந்தது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். இன்றைய சூழலில் இக்கொள்கை மிகவும் எளிமையான, இயல்பான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் மிகவும் பண்பட்டவைகளாகக் கருதப்படும் பண்டைய வடஇந்திய மற்றும் ஐரோப்பிய சமூகங்களால் இம்மரபை எளிதில் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

2. தமிழர் மரபில் கற்பு நெறி

கற்பில் சிறந்த மகளிரை தமிழர், பத்தினிப்பெண்டிர் எனக் கூறுவர். பத்தினிப்பெண்டிரின் பண்புகளை தமிழ் இலக்கியங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

“அச்சமும், நாணும், மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”
 (தொல்: பொருள்: 86)

என தொல்காப்பியர், அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றையும் பெண்களின் அணிகலன்களாகக் கூறுகின்றார்.

“உயிரினும் சிறந்தன்று நாணே, நாணிணும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்த தன்றெனத்
தொல்லோர் கிளவிப்புள்ளிய நெஞ்சமொடு”
 (தொல்: பொருள்: 111)

நாணுதல், பெண்களுக்கு உயிரைவிடச் சிறந்தது எனக் கூறும் தொல்காப்பியர், அதனினும் சிறந்தது கற்பு எனக்கூறுகிறார். ஐரோப்பியப் பண்பாடுகள் அனைத்தும் திரிந்த பண்பாடுகளே. கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதற்காக அச்சமூகங்கள் பெண்களுக்கு அல்குல்பூட்டு போடுவது போன்ற கடுமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தன. இத்தகைய வழக்கத்தை திருக்குறள் தெளிவாக நிராகரிக்கிறது.

“சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை”
 (குறள்: 57)

மகளிரை சிறைவைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இதன் பொருளாகும். தமிழ்ப் பெண்களுக்கு கற்பு நெறியில் ஒழுகுவதற்கு ஐரோப்பியரைப் போன்று சிறைவைப்பு தேவைப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி”
(மணிமேகலை: காதை 18: வரி 100-102)
__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை. இத்தகைய மகளிர்க்குக் கணவனே உயிர் போன்றவன் என குறுந்தொகை கூறும்.

“வினையே ஆடவர்க் குயிரே
மனையுறை மகளிர்க்கு அவரே உயிர்”
 (குறுந்தொகை -135)

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொள்ளும் பத்தினிப் பெண்டிர் பெய்யென கூறினால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை”
 (குறள்: 5)

மணிமேகலையும், மழை பெய்விக்கும் கற்புடைப் பெண்டிர் பற்றி குறிப்பிடுகின்றது.

“வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையன்”
 (மணிமேகலை: காதை16: வரி 77-78)

கற்புடைய பெண்டிர் பற்றிய சிறப்புகளைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றிக்கூறும் அளவிற்கு பிற பண்டைய இலக்கியங்களில் காணமுடிவதில்லை. பண்டைய அரேபியர், பெண்களைச் சிறை வைத்து, முக்காடிட்டு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் கற்புநெறியில் ஒழுகச் செய்வர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய அரேபிய பெண்களின் நிலை பற்றி கவிஞர் பாப்ரியா கூறுவது கவனத்துக்குரியது.

‘தந்தையின் மறுதார மனைவி அவன் இறந்தபின் மகனுக்கு உரியவள். மகன் விருப்பமிருந்தால் அவளை மணம் செய்யலாம். அல்லது தனது விருப்பப்படி வேறு யாரையோ அவள் மணம் புரிய வற்புறுத்தலாம்' என்கிறார்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கணவன் இறந்த பின் பத்தினிப் பெண்டிர் செய்யும் செயல்களை மணிமேகலை பின்வருமாறு விவரிக்கின்றது.

“காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊது உலைக் குருவின் உயர்த்து அகத்து அடங்காது
இன் னுயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்,
நளிஎரி புகார் ஆயின், அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்”
 (மணிமேகலை: காதை 2: வரி 42 - 48)

இதன் பொருள், பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இறந்துவிடுவர்; சொல்லன் உலையிலே நெருப்பை மூட்ட ஊதுகின்ற துருத்தியைப் போல அனல் கக்கும் பெருமூச்சு விடுவர்; உயிர், உடம்பினுள் அடங்கி நிற்காது; அந்த முதல் மூச்சிலேயே தமது உயிரைத் துறப்பர்.

கணவர் இறந்ததைக் கேட்டவுடன் இவ்வாறு உயிர் விடாதவர்கள் தீ மூட்டுவர்; அந்தத் தீ நன்றாக எரியும் போது குளிர்ந்த பொய்கையில் குளிப்பதற்குப் புதுவதுபோல் அத்தீயிலே புகுந்து உயிர் விடுவர்.

இப்படித் தீக்குளித்து உயிர் துறக்காதவர்கள் கைம்மை நோன்பு கைக்கொள்ளுவார்கள்; இறந்தபின் கணவன் அடைந்திருக்கும் உலகிலே சென்று அவனுடன் உறையக் கருதியே அந்த நோன்பை மேற்கொண்டு உயிர் வாழ்வார்கள்.

பண்டைய தமிழ்ச் சமூகம், பத்தினிப் பெண்டிரை இவ்வாறு மூன்று தகுதி நிலைகளாகப் பிரித்துக் காட்டுகிறது. முதல் தகுதி நிலைக்கு உதாரணமாக, தவறு செய்யாத கோவலனுக்குத் தவறுதலாகத் தண்டனைக் கொடுத்ததை உணர்ந்து, தன் கணவன் உயிர் விட்டதை அறிந்த அந்நொடியிலேயே பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியின் உயிரும் பிரிந்து விடுவதைக் கூறலாம்.

பூதப்பாண்டியன் இறந்தபின் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வதை புறநாநூறு 246 ஆம் பாடல் விளக்குகின்றது. ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் தீப்பாய்ந்து மாண்டதை புறநாநூறு 240, 241 ஆகிய பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவை இரண்டாம் நிலை பத்தினிப் பெண்டிருக்கான வரலாற்று சான்றுகளாகும்.

தலைவன் இறந்தபின் அவனுடைய மனைவியர் கூந்தல் கொய்து (மொட்டையிட்டு) கைம்மை நோன்பு மேற்கொண்டதை புறநாநூறு 25வது பாடல் கூறுகின்றது.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கற்புநெறி என்பது கருத்தியல் தளத்தில், மக்களின் மனதிலேயே மிக ஆழப் பதிந்திருந்ததை நாம் அறியமுடிகிறது. மாறாக, சிறை வைத்து கற்பு நெறியைக் காக்க முயன்ற அரேபியரிடம், ஆணின் தனி உடமையை நிச்சயித்துக் கொள்வதற்கான பொருளியல் தளத்தில் வைத்தே கற்பு நெறி எண்ணப்பட்டது. கருத்தியல் தளத்திற்குள் அது செல்லாததால் கணவன் இறந்தபின் மறுமணம் அனுமதிக்கப்பட்டது. தென் ஈரான், தென் அரேபியா ஆகிய பகுதிகள் சங்ககால வேந்தர் குடியினரின் பூர்வீக பூமியாகும். பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த அரேபியர், அப்பகுதியில் பூர்விகமாக வாழ்ந்து வந்த தொல் தமிழரின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டினைத் தமதாக்கிக் கொண்டபொழுது கற்பு நெறியைத் திரிந்த வடிவில் மேற்கொள்ளத் தொடங்கினர். அரேபியப் பெண்களின் முக்காடிடும் வழக்கம், பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத்தான் காணாமலும் வாழ்ந்ந்த தமிழ்ச் சமூகப் பத்தினிப் பெண்டிர் பின்பற்றிய மூல மரபின் திரிந்த வடிவமாகும்.

சங்க இலக்கியங்களில் மடலூர்தல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் தன் காதலை வெளிப்படுத்த தலைவன் தலைவியினது உருவத்தைக் கிழியில் எழுதிப் பிடித்துக் கொண்டு, ஓரம் செதுக்காத பனை மடலால் (கருக்கு மட்டை) குதிரை வடிவம் செய்து, அதில் ஏறி, எருக்க மாலை முதலியவற்றை அணிந்து, ஊரார் பழி கூறும்படி தெருவில் செல்வது கூறப்படும். தலைவனின் இச்செயல், “புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறன் ஆகிய பெருந்திணைக்கும்” உரித்ததாயிற்று என்கிறது தொல்காப்பியம் (தொல் : பொருள் : 54). எனவே பொதுவாக, தலை மக்களுக்கு இது உகந்த செயல் அல்ல. மடலூர்தல் நாணங்கெட்ட செயலாகையால் பெண் பாலார்க்கு அனுமதி இல்லை என்பதை தொல்காப்பியம் தெளிவுபடுத்துகின்றது.

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான”.


இக்கருத்தை வலியுறுத்துகின்ற வள்ளுவர்

“கடலென்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்”
 (குறள்: 1137)

என்பதுடன் ஆண்கள் மடலேறுவதையே கூட நாணம் துறந்த செயலாகவே சித்திரிக்கின்றார்.

“நாணொடு நல்லான்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல்”
 (குறள்: 1133)

“காமக் கரும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை”
 (குறள்: 1134)

மடலூர்வது, ஆடவர்க்கேகூட நாணங்கெட்ட செயலாகத் தமிழ் மரபு போதிக்கிறது. மடலூர்தலை ஒத்த ஒரு வசியச் சடங்கு வட நெறியிலும் இருப்பதை பேரா. வையாபுரி பிள்ளை (இலக்கிய உதயம்-நான்காம் தொகுதி) விளக்குகிறார்.

ஒருவன், ஒரு பெண்ணினுடைய காதலைப் பெற வேண்டும் என்று இச்சித்தால், அவள் உருவத்தைக் களிமண்ணினால் செய்து, சணல் நாரினால் அமைத்த நாணோடு கூடிய வில்லைத் தாங்கி, அதன் அம்பின் நுணியில் முள்ளைச் செருகி, ஆந்தையின் சிறகை அம்புச் சிறகு ஆக்கி, கருங்காலினால் அம்பின் தண்டினை அமைத்துக் கொள்வான். உருவத்தின் இருதய ஸ்தானத்தை இவ்வம்பினால் குத்திக் குத்திக் குத்தித் துளையொன்று உண்டு பண்ணுவான். அது காதல் கடவுளாகிய காமனுடைய அம்பினால், தனது காதலியின் இதயத்தைத் துளைப்பதான பாவனையாகும். இங்ஙனம் துளைத்துக் கொண்டு அதர்வவேதத்தின் மூன்றாம் மண்டலம், 25வது சூக்தத்தை ஒதுவான்.

மேற்சொன்ன வசியச் சடங்கினை பெண்பாலரும் மேற்கொண்டுள்ளதை அதர்வ வேதத்தில் காணமுடிகின்றது. இச்சடங்கினை கையாளும் தலைவி, தலைவன் உருவத்தை கிழியில் எழுதி, அதன் இதயத்தின் மீது கொழுந்து விட்டெரியும் அம்பு நுணியை எறிந்து அதர்வ வேதம், ஆறாம் மண்டலம், 130, 138 வது சூக்தங்களை ஒதுவாள் என்று கூறப்படுகின்றது.

பெண்பாலருக்கும் அனுமதிக்கப்பட்ட இவ்வசிய நெறியையே வடநெறியிலமைந்த மடலூர்தலாகப் பெரிய திருமடல் குறிப்பிடுவதாக பேரா. வையுரிப்பிள்ளை கருதுவது ஏற்புடையதே.

“மன்னும் வழிமுறையே நிற்றும் நாம், மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாம் தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்.”
 (பெரிய திருமடல்: 38-40)

தன்னை, பெண்ணாகப் பாவித்துக் கொண்ட திருமங்கையாழ்வார், திருமால் மேல் தனக்குள்ள காதலை வெளிப்படுத்த மடலேறவும் தாம் தயாராக உள்ளதாகவும், தமிழ் மரபில் பெண் மடலூர்வது இல்லையென்பதால், வடநெறிப்படி ஒழுக இப்பாடலின் மூலம் அனுமதி வேண்டுகிறார். வட ஆரியச் சமூகத்தில் தலைமக்களில் பெண்பாலரும்கூட நாணுதல் குறைபாடுடையவராக விளங்கினர் போலும்.

சங்ககால வாழ்வியலில், அடியோரும், வினைவலரும் நாணுதல் குறைபாடுடையோராதலால் அகத்திணைக்குரியோர் அல்ல என்றும், அகப்புறத்திணைகளாகிய கைக்கிளை, பெருந்திணைக்குரியோர் என்பார் இளம்பூரணர். வட ஆரியச் சமூகத்துக்குரியதான மணவினைச் சடங்குகள் எட்டும் கைக்கிளைப் பெருந்திணை பாற்படுவது ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.

அச்சமும், நாணும், மடனும் பெண்களுக்குரிய செவ்வியல் பண்புகளாக நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவ சமூக அமைப்பிலேயே காணமுடியும். இப்பண்புகளில் சங்ககால தமிழ்ப் பெண்டிர் சிறப்புடன் விளங்கியதை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. வட ஆரிய சமூகத்திலோ என்றுமே இப்பண்புகள் சிறப்பாக வளர்ந்ததில்லை. அவர்கள் தொடர்பான புராணங்களில் கூட இப்பண்புக் குறைபாட்டினைக் காணமுடிகிறது.

மகாபாரதக் கதையில், சந்தனு மகாராஜா மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணை மணக்கின்றார். மச்சகந்தி திருமணத்திற்கு முன்பே பராசரர் என்ற முனிவருடன் களவில் கூடி வியாசரைப் பெற்றெடுக்கிறாள். சந்தனுவின் பேரன்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும் கூட தங்கள் தந்தைக்குப் பிறக்கவில்லை. பாட்டியாகிய மச்சகந்தியின் மகன் வியாசருக்கும், தங்கள் தாய்க்குமான ஒரு சடங்குப் புணர்ச்சியின் மூலம் பிறக்கின்றனர். பாண்டு புத்திரர்கள் கூட உண்மையில் குந்தி புத்திரர்களேயன்றி பாண்டு புத்திரர் அல்ல. திருமணத்திற்கு முன் களவுப் புணர்ச்சி மூலம் கர்ணனை குந்தி பெற்றெடுக்கிறாள். திருமணத்திற்குப் பின்பும், கணவன் அல்லாத பிறருடன் கூடி பஞ்ச பாண்டவர்களையும் பெற்றெடுக்கின்றாள். திருமணத்திற்கு பின் பிற ஆடவருடன் கூடுவதைத் தமிழ் நெறியில் களவுப் புணர்ச்சியாகக் கூட கூற முடியாது. வடமொழிச் சொல்லான சோரம் போகுதல் என்று இதனைக் குறிப்பிடலாம். தமிழ் நெறியோ, காந்தருவத்தையே களவாகக் கூறுகின்றது. வடநெறியில் காந்தருவம் சிறப்பான மணவினை முறையாகும். திருமணத்திற்குப் பின் பிற ஆடவருடன் கூடுவதைத்தான் களவு (சோரம்) என வடவர் கொள்கின்றனர். இவ்வகையில் வட ஆரியர் சமூகம் கற்பு நெறியில் தமிழரை விட குறைபாடு உள்ள சமூகமாகவே காட்சியளிக்கின்றது.

கடவுளர்களிடம் குந்தி சோரம் போனதைக் குறை கூறமுடியாது எனக் கூறவும் வழியில்லை. ஏனென்றால், தமிழ்ச் சமூகம், கணவனைத் தவிர பிற தெய்வங்களைப் பத்தினிப் பெண்டிர் தொழுவது கூட இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. எவ்வாறாகினும், இதிகாசங்கள் கூறும் மரபுகளைக் கொண்டு வடவர் பண்பாட்டை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது என்று சிலர் கூறமுற்படலாம். சங்க காலத்தின் சம காலத்தில் பாடப்பட்ட அகப்பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்று பிராகிருத மொழியில் ‘கதா சப்த சதி' என்ற பெயரில் உள்ளது. அதில் உள்ள பாடல்கள் தமிழ் அகப்பாடல் மரபை ஓரளவு ஒத்துள்ளதைக் காணலாம். தலைமக்கள், பிறன்மனை நோக்குதல் போன்ற நாணுதல் குறைபாடான செயல்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த விவரிப்புகள் அப்பாடல்களில் நிறைந்துள்ளதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து வடவர் சமூகம், எக்காலக் கட்டத்திலும் சங்க கால தமிழ்ச் சமூகத்தைப் போன்ற முதிர்ச்சியடைந்த நிலவுடைமைச் சமூகத்தின் பண்புகளைக் கொண்டிருந்ததில்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

முனைவர் கைலாசபதி, சங்க இலக்கியப் பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் தொடர்புபடுத்துவார். கிரேக்க வீரயுகப் பாடல்கள், உயர்குடி வீரர்கள் பிறன் மனைவி மீது கள்ளக் காதல் கொள்வதை விவரிப்பதை சிறப்பான அகப்பாடல் மரபாகக் கொண்டுள்ளன. அச்சமூகத்தின் உண்டாட்டுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மது அருந்திக் கூத்தாடுவர். தமிழ்ச் சமூகத்தில் சங்ககால உண்டாட்டுகளில் பெண்பாலர் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியருடைய பொதுப்பண்பே, பெண்கள் சுதந்திரமாக இருப்பதுதான்; எனவே இப்பண்பைக் கொண்டு அவர்களின் பண்பாட்டை கீழானதாக மதிப்பிட முடியாது என்று சிலர் வாதம் செய்யலாம். அவ்வாறாயின் மனித சமூகத்தின் பண்பாட்டு மானிடவியல் கோட்பாடுகள் ஐரோப்பியருக்குப் பொருந்தாது எனக் கொள்ளலாமா? வளர்ந்த அரசியல் பண்பாட்டு நிலையிலும், நாணுதல் குறைபாடுள்ள ஐரோப்பியரை, ஹோமோ சேபியன்களுக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு இனம் என வரையறை செய்தால்தான் இவ்வாறு இரு அளவு கோல்களைப் பயன்படுத்த முடியும். மனிதகுலம் முழுவதுமே ஹோமோ சேபியன் என்ற ஒரே இனம்தாம் என்பது தெளிவாக நிரூபணமான ஒன்று. எனவே, பண்பாட்டு வளர்ச்சியைப் பொருத்தமட்டில் தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஒரே அளவுகோலைத்தான் பயன்படுத்தவேண்டும்.

அச்சம், நாணம், மடம் இம்மூன்றும் ஒரு சமூகத்தின் பெண்களிடம் அமையும் பொழுது, கற்பு நெறி கருத்தியல் தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. ரிக்வேத ஆரியர் உட்பட்ட ஐரோப்பிய இனக்குழுக்கள் தொல் தமிழர் வாழ்ந்த மேற்காசியப் பகுதிகளுக்குள் குடியேறி அப்பூர்வ குடிமக்களின் வளர்ந்த பண்பாடுகளை தமதாக்கிக் கொண்டனர். இந்த இயக்கப்போக்கில் அங்கு திரிந்த பண்பாடுகள் தோன்றி விட்டன. கிரேக்கரும் இவ்வாறு திரிந்த பாட்டினர்தான். கடுமையான சட்டங்கள் இயற்றி, கெடுபிடிகளை மேற்கொண்ட போதிலும் அச்சமூகத்தினரிடையே கற்பு நெறி கருத்தியல் தளத்திற்குச் செல்லவில்லை. அதன் வெளிப்பாடாகவே அச்சமூகங்களின் இலக்கியங்களில் நாணுதல் குறைபாடுள்ள தலைமக்களைக் காணமுடிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க நம் ஆய்வாளர்கள், மூலச்சிறப்பு மிக்க தமிழ் இலக்கிய, இலக்கண, அரசியல் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ரிக்வேத ஆரியர், கிரேக்கர் போன்றோரின் இலக்கியங்களைத் துணைக் கொள்கின்றனர். இச்செயல், திரிந்த பாலைக் கொண்டு பாலின் தன்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு ஒப்பானது. திரிந்த பாலில், தூய பாலின் பண்புகள் சிலவற்றை அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணலாம். அதுபோலவே தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் அறக் கோட்பாடுகளில் சிலவற்றை கிரேக்க, ரிக்வேத ஆரியர் இலக்கியங்களில் காணமுடிகிறது.

brahaspathy@sishri.org __________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

தமிழ்ச் சமூகமும் புராண மரபும்:

நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்ட தமிழ்ச் சமூகத்திற்கென்று தனியாக புராண மரபு இல்லை என்பது மிகப் பெரும் குறையாகப் பார்க்கப்படுகின்றது. புராணங்களின் தோற்றத்திற்கான காரணிகளை ஆராய்வதன் மூலம், புராண மரபு இல்லாமைகூட தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்பம்சம் எனக் கூற முடிகின்றது.

வரலாற்று நினைவுகள்தான், வழக்காறுகளாகிப் பின்னர் சில புனைவுகளுடன் புராணங்களாகின்றன. தொடர்ச்சியான வரலாறு கொண்ட எந்த சமூகத்திலும், புராணங்கள் தோன்றுவதற்கான அடிப்படை இல்லை. வரலாற்று தொடர்ச்சி கொண்ட சமூகங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வழக்காறாக கூறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சமூகம் வேறு சமூகத்திடம் அரசியல் மேலாண்மையை இழந்து கீழ்நிலைக்குச் சென்றபொழுது வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்து விடுகின்றது. இக்கட்டத்தில் முதல் சமூகத்தில் வழங்கப்பட்ட வழக்காறுகள் புராணங்களாக மாறுகின்றன. 

சுமேரியப் புராணங்களே உலகில் முதலில் தோன்றின. மேற்காசியாவில் கி.மு. 5500 முதல் கி.மு.4300 வரை நிலவிய உபெய்து பண்பாட்டு சமமூகத்தின் முக்கிய நிகழ்வுகள், அச்சமூகத்தில் வழக்காறாகக் கூறப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்த ஊருக் காலக் கட்டத்தில் அரசியல் அதிகாரத்தில், புதிய சமூகத்தினர் பங்கு பெறுகின்றனர். இக்கட்டத்தில் உபெய்து காலத்திய வழக்காறுகள், ஊருக் சமூகத்தின் புராணங்களாகின்றன. உபெய்து பண்பாட்டினரின் தலைமக்களின், குலமுன்னோர்கள் ஊருக்காலத்திய கடவுளர்களாகின்றனர். இதேபோல் பெருவெள்ள அழிவுக்குப் பின், செமைட்டுகள் அதிகளவில் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற்ற சூழலில், ஊருக் பண்பாட்டு வழக்காறுகள், புதிய சமூகத்தின் புராணங்களாகின.

சுமேரிய ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ள அழிவிலிருந்து தப்பிய அரசனை சுமேரிய புராணங்கள் சியுகத்து என அழைக்கின்றன. ஊருக் நகர அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கில்கமேஷ் தொடர்பான கதையில் அவனுடைய குல முன்னோனாக சியுகத்து கூறப்படுகின்றான். பெருவெள்ள அழிவினைத் தொடர்ந்து தோன்றிய ஆரம்பக்கட்ட வம்சாவழி அரசுகளின் காலத்தில் சியுகத்துவின் கதை வரலாற்றுக் கதையாக வழக்காறுகளில் நிலவியுள்ளது. சோழரின் குல முன்னோர்களான சிபி சக்கரவர்த்தி மற்றும் மனுநீதிச் சோழன் ஆகியோரின் கதைகள், வரலாற்றுக் கதைகளாக சங்ககாலத்தில் கூறப்பட்டதுபோல், சியுசுத்துவின் கதையும், சுமேரியாவில் வழங்கப்பட்டது எனலாம். கி.மு. 2350க்குப் பின் செமைட்டுகளின் அக்காடியன், அசிரியன் மற்றும் பாபிலோனிய அரசுகள் தோன்றி அரசியல் மாற்றம் முழுவதுமாக நிகழ்ந்தபின்னர், இக்கதை புராணத்தன்மையை பெறுகின்றது. பின்னர் தோன்றிய புராணம் சியுசுத்துவை உத்னபிஸ்தம் என பெயர் மாற்றம் செய்து விட்டது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய புராணங்களின் தோற்றம், இக்கருதுகோளை மேலும் தெளிவாக்குவதாக உள்ளது. இவ்விரு காப்பியங்களும், வாய்மொழி புலவர்களால் பாடப்பட்டு வந்த கதைகளை தொகுத்து உருவாக்கப்பட்டதாக, இன்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புராண கால ஆரியர் வட இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை, அச்சமூகத்தின் வழக்காறுகளாக இராமாயணம் தொடர்பான கதைகளும், மகாபாரதப் போர் தொடர்பான கதைகளும் வாய்மொழிப் புலவர்களால் பாடப்பட்டு வந்தன. புராண கால ஆரியர் சமூகத்தவர்களான பரீட்சித்து மகாராஜா, ஜனமேஜயனம் போன்றோர் ஆட்சியிலிருந்தவரை, இப்பாடல்கள் வழக்காறகவே பாடப்பட்டன. கி.மு.400க்குப் பின், புராண கால ஆரியர் தொடர்பான அரசவம்சங்கள் அரசியய் அதிகாரத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டனர். அதன்பின் இக்கதைப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால், அக்கதைகள் புராணத் தன்மையை அடைந்துவிட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய சமூகங்களின் வழக்காறுகளே இவ்வாறு புராணங்களாகின்றன. சமூகம் ஒரே ஒரு அரசியல் மாற்றத்தை மட்டும் சந்தித்த சூழலில் வழக்காறுகள் புராணங்களாக மாறும்பொழுது, அவற்றில் சிறிது வரலாற்றுத் தன்மையும் நீடித்து விடுகின்றன. இராமாயணம், மகாபாரதம், மற்றும் சியுசுத்து தொடர்பான புராணக் கதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பல அரசியல் மாற்றங்களை கடந்து வந்த வரலாற்றுக் கதைகள், வரலாற்றுத் தன்மையை பெருமளவு இழந்து, முழுக்க புராணத் தன்மையை அடைகின்றன. வியாசரால் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படும் 18 புராணங்களும் இவ்வாறு வரலாற்றுத் தன்மையை இழந்த புராணங்களாகும். எனினும், இப்புராணங்களிலும் சில தொல் பழங்காலத்திய வரலாற்றுச் செய்தி இழையோடியிருப்பதை அடையாளம் காணலாம்.

சங்ககால தமிழ்ச் சமூகத்தில் வேந்தர், வேளிர் குடியினர் தலைமக்களாயிருந்தனர். தமிழ் மரபு இவ்வரச குடியினர் குல முன்னோராக இந்திரன், வருணன், திருமால், முருகன் ஆகிய கடவுள்களை கூறுகின்றது. இக்கடவுள்களில், இந்திரன் தலைமைப் பதவியைக் குறித்து நிற்கின்றது. பிற மூன்று கடவுள்களும், தமிழக அரச குடியினரின் குல முன்னோராவார். இக்கடவுளர்களின் தோற்றக் காலத்திலிருந்து வேந்தர், வேளிர் குடியினர் தொடரச்சியாக அரசியல் அதிகாரத்தை கைவிடாமல் வந்துள்ளனர் எனத் தெரிகின்றது. இப்பின்னணியில்தான் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ச்சியான புராண மரபுகள் தோன்றாமல் போய்விட்டது. வட இந்திய புராணங்கள் கூறும் பல கடவுள்கள் தமிழ்ச்சமுகம் தொடர்புடையனவாதலால், அப்புராணக் கதைகள் தேவையான இடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன.

சோம சுந்தரேஸ்வரனை முதல் பாண்டியனாகக் கொண்ட பாண்டிய அரசகுலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு வேறு சான்று தேவையில்லை. சோழருக்கும் நீண்ட, நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி இருந்ததாலேயே மனுநீதிச் சோழனும், சிபிச் சக்கரவர்த்தியும் கடவுள்களாக மாறாமல் வரலாற்று நாயகர்களாக காட்சியளிக்கின்றனர். தமிழ் வேந்தர் குடியின் இவ்வரலாற்றுத் தொடர்ச்சி, பண்டைய சுமேரியா மற்றும் ஏலமைட் வரை செல்வதைத் தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன.

குல முன்னோர்களை கடவுள்களாக்கிய மரபு கி.பி 5500 - கி.மு 4300ல் நிலவிய உபெய்து பண்பாட்டிலேயே தோன்றி விட்டது. பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் வாழ்ந்து வந்த இனக்குழுக்களிடையே, ஆவியுலகக் கோட்பாடு பரவியிருந்தது. ஆவியுலக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மந்திரச் சடங்குகள் வளர்ந்தன. இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக முன்னோர் வழிபாடு தோன்றியது. உபெய்து பண்பாட்டில் ஒவ்வொரு நகர மாந்தரும் ஒரு இனக்குழுவை சேர்ந்தவராக வாழ்ந்தனர். உபெய்துகளின் கல்லறைப் பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமையைக் கொண்டு, அங்கு ஒரு வகையான சமத்துவம் நிலவியதாக வரலாற்றிஞர் கூறுவதைக் கொண்டு இவ்வாறு கருத முடிகின்றது. ஒவ்வொரு நகர மாந்தரும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இத்தகைய சமத்துவத்தை காண முடிகின்றது. இந்நகர மாந்தரின் குலமுன்னோனை, அந்நகரங்களின் காவல் தெய்வமாக வழிபட்டனர். நகர தலைவர்கள் செய்த வீர தீர செயல்களெல்லாம், குல முன்னோன் தெய்வத்தின் மேல் ஏற்றி வழக்காறாகக் கூறப்பட்டது.__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

உதாரணமாக, விருஷ்ணிகளின் தலைவன் கண்ணன் தொடர்பான புராணக் கதைகள், பல காலக்கட்டங்களில் விருஷ்ணி தலைவர்கள் மேற்கொண்ட வீர தீர செயல்களின் தொகுப்பாகும். ஆயர்பாடி கண்ணனும் மகாபாரதக் கண்ணனும், வெவ்வேறு நபர்கள் என வரலாற்றறிஞர் சுவீரா, ஜெயஸ்வால் கருதுவது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. குல முன்னோன் தெய்வமாகிய கண்ணன் மேல், விருஷ்ணிகளின் தலைவர்கள் பல்வேறு காலக் கட்டங்களில் செய்த வீரதீர செயல்கள் ஏற்றிக்கூறப்பட்டதாலேயே, கண்ணன் சுவாரஸ்யமான கடவுளாகிவிட்டான். இதுபோல்தான் உபெய்துகளின், நகர அரசர்களின் வீரதீர செயல்கள் அவர்களின் குல முன்னோரான காவல் தெய்வத்தின் மேல் ஏற்றி வழக்காறுகள் தோன்றின.

உபெய்து காலம் வரை நகரக் குடிகள் ஒரே இனக்குழுவை சேர்ந்தவையாக இருந்தன. நகரைச் சார்ந்து வாழ்ந்த திணைக் குடிகள் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்ததுடன் தனி தெய்வ வழிபாட்டையும் கொண்டிருந்தனர். கி.மு. 4300 - கி.மு 3200 வரை நிலவிய ஊருக் பண்பாட்டில், ஒரே அரசியல் அமைப்பிற்குள் பல குடிகள் வாழத் தலைப்பட்டனர். இக்காலக்கட்டத்தில் உபெய்து காலத்திய வழக்காறுகள் புராணங்களாக மாறியிருந்தன. நகர சமூகத்தின் தலைமக்களின் குலமுன்னோன், அனைத்து சமூகத்திற்குமான கடவுளாக மாறினான். ஊருக் பண்பாட்டு தலை மக்களுக்கு (ஆட்சி குடிகள்), அக்கடவுள்கள் குலமுன்னோராயினும், பிற குடிகளுக்கு மேலுலகக் கடவுளாகச் சித்தரிக்கப்பட்டன. இவ்வியக்கப் போக்கில் முன்னோர் வழிபாடு கடவுள் வழிபாடாக மாறியது.

ஊருக் பண்பாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் வழிபடப்பட்டன. ஊருக் பண்பாட்டைத் தொடர்ந்த ஊர் வம்சாவழி அரசுகளின் காலத்தில், சில தெய்வங்கள் நகர எல்லைகளைத் தாண்டி அனைத்து இனக்குழுக்களும் வழிபடக் கூடிய பெருந் தெய்வங்களாகவும், மற்றவை சிறுதெய்வங்களாகவும் மாறியிருந்தன. இக்காலத்தில், அரசியல் மேலாண்மையைக் கொண்டிருந்த நகர ஆட்சி குடிகளின் குல முன்னோன் தெய்வங்கள் பெருந் தெய்வங்களாகவும், பிற குடிகளின் தெய்வங்கள் சிறு தெய்வங்களாகவும் மாறியிருந்தன போலும்.

அரசியல் அதிகாரத்தை இழக்காமல் தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டிருந்ததாலேயே, சங்க கால தமிழ்ச் சமூகத்தில் தலை மக்களின் குலமுன்னோர்களாக தமிழரின் பெருந்தெய்வங்கள் காட்சியளிக்கின்றன. நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் ஐந்து நில தலைமக்கள் பட்டியலில், அந்நில தெய்வங்களை முதலில் குறிப்பிடுவதை, இம்மரபை உணர்த்துவதாக உள்ளது.

குறிஞ்சி: விறற் சேய் (முருகன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன்
முல்லை: நெடுமால், குறும்பொறை நாடன், தோன்றல்
மருதம்: இந்திரன், ஊரன், பைந்தார் மகிழ்னன்
நெய்தல்: வருணன், சேர்ப்பன், விரிதிரைப்புலம்பன்
பாலை: கன்னி, (குமரி), விடலை, காளை, மீளி

சேந்தன் திவாகரம், அரசருக்குரிய பெயர்களையே இறைவனுக்குரிய பெயர் பட்டியலில் கூறியிருப்பதும் இக்கருத்திற்கும் வலு சேர்க்கின்றது.

இறைவன் பெயர்: நாதன், நாயகன், அதிபன், காந்தன்

(திவாகரம்-175) பதி, கோன், ஈசன், செம்மல், இறைவன், தலைவன், மன்னவன் பிரானே, கொழுநன், அரசன், ஆதி எனப் பதினைந்தும் உரைசெய் எப்பொருட்டும் இறைவன் மேற்றே.

அரசன் பெயர்: புரவலன், கொற்றவன், பொருமான், காவலன், அரசன், ஏந்தல், கோவே, குரிசில், (திவாகரம் - 178) தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன், நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன், இறைவன், அண்ணல் எனப் பதினெட்டும் அரசர் தொல் பெயர் ஆகும் என்ப.

திவாகரத்தில் அரசன் பெயர் தொகுதியில் இடம் பெறாமல், இறைவன் பெயரில் இடம் பெற்றுள்ள நாதன், அதிபன், பிரான், கொழுநன் போன்ற பெயர்களும் இலக்கியங்களில் அரசருக்கு வழங்கி வருவதைக் காணலாம். அரசன் குடிமக்களிடம் வாங்கும் வரியை 'இறை' என அழைப்பதும் பொருத்தப்பாடாகவே உள்ளது.

மிகவும் பிற்காலத்திய, ஊத்துமலை பாளையப்பட்டு வம்சாவழி வரலாற்று ஆவணம் கூறும் செய்தி இம்மரபை தெளிவான நிறுவுவதாக உள்ளது.

குறுநில மன்னர் அந்தஸ்தில் இருந்த கொண்டையன்கோட்டை மறவரின் தலைவனிடம், மகட்கொடை கேட்டு பிற்கால பாண்டியமன்னன் ஒருவன் தூது அனுப்புகிறான். அதற்கு மறுமொழி கூறுமிடத்து, ராஜகுலத்துக்கு நாங்கள் மகட்கொடை கொடுக்க முடியாது என்றும், ராஜகுலமானது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும் கூறி, புராணகால அரசர்களின் செயல்களை மேற்கோள் காட்டுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டு கர்ப்பிணியான தன் மனைவி சீதையை சந்தேகப்பட்டுக் காட்டுக்கு அனுப்பிய ராமனையும், ராஜகுலவர் நிறைந்த அரசவையில் தன் மனைவியின் துகில் உரியப்படுவதைத் தடுக்க முடியாமல் நின்ற பாண்டவர்களையும் குறை கூறுகின்றனர். வள்ளி தங்களுடைய வேட்டுவ குலத்தின் வளர்ப்பு மகள் என்பதாலேயே முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தாகவும் கூறுகின்றனர்.

ராமன், பாண்டவர்கள் போன்ற அவதார புருஷர்களை ராஜகுலமாக கூறிவிட்டு, முருகனை தமிழக ராஜ குலத்தவனாக கூறியது, குறிஞ்சி நில தலைமக்களின் குலமுன்னோனாக முருகனைக் கருதியதாலேயே ஆகும். முருகனையும், முல்லை நில தலைமகன் திருமாலையும் 'வேள்' என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவது இங்கு பொருந்துவதாக உள்ளது. அரசகுலத்தவரின் குல முன்னோரை, அனைத்து குடிகளும் பெருந்ததெய்வங்களாக ஏற்று வழிபட்ட மரபு மேற்காசியாவில் தோன்றி வளர்ந்ததாகும். தமிழரின் பெருந் தெய்வங்களான வருணன், இந்திரன், திருமால், முருகன், சோமசுந்தரேஸ்வரன் (சந்திரன்), கன்னி போன்ற தெய்வங்கள் மேற்காசியாவில் தோன்றியவை என்பதை நிறுவ முடியும். (இதனைத் தனிக் கட்டுரையில் காணலாம்).

உலகின் பிற அரசகுலத்தவருக்கு கடவுளர்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகும். தமிழக வேந்தர் குடியின் குலமுன்னோர்களான இந்திரன், வருணன் போன்ற கடவுளர்கள் ரிக்வேத ஆரியருக்கு தேவலோகக் கடவுளாகக் காட்சியளிப்பதாக தர்மனந்த கோசாம்பி குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கது. பெரும்பான்மையான ஆரிய மொழி பேசும் இனக்குழுக்களும், யூதர்களும் உட்பட்ட செமைட்டுகளும், மேற்காசிய அரசியல் சூழலில் தமிழர் தொடர்பான சமூகங்களின் அடியோராகவும், வேளாண் வாயிலாகவும் வாழ்ந்து, பின்னர் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சியால் தனி ஆட்சிக்குடிகளாக பரிணமித்ததை தெளிவாக நிறுவ முடியும். (தனிக் கட்டுரையில் காணலாம்)

யூதர்களின் 'பிதா' முகமதியர்களின் 'அல்லா' ஸ்காண்டினேவியரின் 'ஓடின்', பாரசீக ஆரியரின் 'அகுர மஸ்தா' போன்ற முழு முதல் கடவுள்கள் எல்லாம், தொடர்புடைய சமூகத்தினருக்கு மேல் உலகக் கடவுளாகவே காட்சியளிக்கின்றனர். இவ்வனைத்து கடவுள்களுமே, வருணனின் பல்வேறு முந்திய வடிவங்களாகும். சுமேரியருக்கு, அனைத்து கலைகளையும் நெடுங்கணக்கையும் கற்றுக் கொடுத்த 'ஒன்ணெஸ்' என்ற தெய்வம் சுமேரியரிடையே, யா (Ea) என்றும், என்கி(Enki) என்றும் இரு தெய்வாளாகப் பிரிந்து வளர்ந்தது. பண்டைய மேற்காசியாவின் ஹரியன் என்ற இனக்குழு அறிஞர்கள், அங்கு பிற்காலத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பிய இனக்குழுவினருக்காக, சுமேரியபுராணங்களை, இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து கொடுத்தாக வரலாற்றுக்குறிப்பு உள்ளது.

ஹரியன் இனக்குழுவினர் பேசிய மொழிகளுள், மிட்டானி மொழியும் ஒன்று. இம்மொழி தொல்தமிழுடனும் (திராவிடம்), பின்னோ-உராலியன் மொழிகளுடனும் மிக நெருங்கிய மொழியாகும். மிட்டானி அரசுக்குள், இந்தோ ஐரோப்பியர் பெருமளவில் குடியேறி வழுவான நிலையை அடைந்தசூழலில், அம்மொழி மணிபிரவாள நடையைப்போன்று இந்தோ ஐரோப்பிய மொழிகளின் சொற்களை பெருவாரியாக ஏற்றுத்திரிந்திருந்தது. (பிராகிருத மொழித்தோற்றத்திற்கான வேர்). இவ்வாறு திரிந்த மிட்டானி மொழியிலேயே, முதன்முதலில் (கி.மு. 1350) வருணன், இந்திரன் என்ற பெயர்களில் தெய்வங்கள் குறிப்பிடப்பட்டன. ஹரியன் அறிஞர்கள், 'யா' என்ற தெய்வத்தை, இந்தோ ஐரோப்பியருக்கான வருணன் என பெயர் மாற்றினர் போலும்.

ரிக்வேத ஆரியரின் சமஸ்கிருத மொழியைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சுமேரிய மொழிப்புலமை வேண்டும் என தர்மானந்த கோசாம்பி கூறுவார். ரிக்வேதத்தில் காணப்படும் பல மரபுகள், சுமேரியரிடமிருந்து பெறப்பட்டவை என்பது அவர் வாதம். தொல்தமிழர் மற்றும் ஊரார்டியன் இனக்குழுக்களின் கலப்பால் உருவானதே, சுமேரிய நாகரிகமாகும். சங்ககாலத் தமிழரின் இலக்கிய, இலக்கண மரபுகளையும், அறக்கோட்பாடுகளையும், சமயத்தையும் மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சுமேரிய, ஏலமைட் போன்ற மேற்காசிய மொழிகளின் இலக்கியங்களை நன்கு ஆய்ந்தால் பயனுள்ளதாக அமையும். இப்பண்டைய மொழிகளின் இலக்கியங்களை ஆய்வதன் மூலம், தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சியும் தெளிவாக நிரூபணம் ஆகும்.

brahaspathy@sishri.org __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard