இன்று நாம் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தும் “சாதி,” “தீண்டாமை” என்ற சொல் வழக்காறுகளும், “உயர்ந்த சாதி,” “தாழ்ந்த சாதி” என்ற கோட்பாடுகளும் தமிழ் இலக்கியத்தில் எப்போது நுழைந்தன என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் தொடக்கமாக, பண்டைத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கப் பாடல்களில், இந்த வழக்காறுகளும் கோட்பாடுகளும் காணப்படுகின்றனவா என்று பார்க்கத் தொடங்கினேன். அந்த முயற்சியில் எனக்குப் புரிந்த கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே. தனிப்பட்ட முறையில் யாரையும் சாடும் எண்ணம் இல்லை.
******
முதல் இலக்கணமாக நமக்குக் கிடைத்திருக்கும் தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தேன்.
0. உயிர் —> 1. அறிவு —> 2. சாதி —> 3. பிறப்பு —> 4. பெயர்
0. உயிர்
-------------
உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களே முதலில் இலக்கண ஆசிரியன் கண்களில் படுகின்றன. தொகையாக உள்ள அவற்றை அவன் படிப்படியாக வகுத்தும் விரித்தும் பார்க்கிறான்.
இந்தத் தொகை, வகை, விரி என்ற கோட்பாடுகளே பண்டைத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படை. உலகைப் பற்றிய தமிழனின் பார்வையும் இப்படியே அமைந்ததாகத் தோன்றுகிறது. தொகை, வகை, விரி …இவற்றை ஒட்டு மொத்தமாக, ஆங்கிலவழியில், categorization என்று கொள்ளும் கருத்தும் உண்டு.
நிற்க.
முதலில், உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களின் அறிவுநிலை (senses) இலக்கண ஆசிரியனுக்குத் தென்படுகிறது.
1. அறிவு
——————
உலகத்து உயிர்களின் அறிவுநிலைகளை ஒன்றறிவது, இரண்டறிவது, மூன்றறிவது, நான்கறிவது, ஐந்தறிவது, ஆறறிவது என்று நம் முன்னோர் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நெறி தொல்காப்பியருக்கு முன்பே இருந்தது என்பது தொல்காப்பியத்தின் மூலம் தெரிகிறது.
தொகையாக உள்ள உலகத்து உயிர்களை அறிவுநிலையில் வகைப்படுத்தித் தம் முன்னோர் சொன்னதைத் தொல்காப்பியரும் உரையாசிரியரும் சொல்கிறார்கள்.
புல், மரம் போன்றவை — ஓரறிவுயிர்
கிளைப் பிறப்பு — கொட்டி, தாமரை, கழுநீர் போன்றவை
நந்து, முரள் போன்றவை — ஈரறிவுயிர்
கிளைப் பிறப்பு — சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல் போன்றவை
சிதல், எறும்பு — மூவறிவுயிர்
கிளைப் பிறப்பு — அட்டை போன்றவை
நண்டு, தும்பி போன்றவை — நான்கறிவுயிர்
கிளைப் பிறப்பு — ஞிமிறு, சுரும்பு போன்றவை
மா, புள் — ஐயறிவுயிர்
கிளைப் பிறப்பு — பாம்பு, மீன், ஆமை போன்றவை
மக்கள் — ஆறறிவுயிர்
கிளைப் பிறப்பு — தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர், ஒரு சார் விலங்கு (கிளி, குரங்கு, யானை போன்றவை)
அறிவுநிலைப்படி வகைப்படுத்தப்பட்ட உயிர்களை மேலும் நுண்ணித்துப் பார்க்கிறான் இலக்கண ஆசிரியன். உயிர்களின் இயங்குதன்மையும் வாழும் இடமும் அவற்றைப் பிரிப்பதைக் காண்கிறான். அந்த அடிப்படையில் ஒவ்வொரு பிரிவையும் குறிக்கச் “சாதி” என்ற குறியீட்டை உருவாக்குகிறான். இந்த வகைக் குறியீடு —“சாதி”— ஆங்கில மொழியில் species என்று உணரப்படும்.
2. சாதி
————
*மக்கள் சாதி, *மா/விலங்குச் சாதி, “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகின்றன.
இந்தக் குறியீடுகளில், “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி,” “பறப்பவை, தவழ்பவை (‘ஊர்வன’)” என்ற குறியீடுகள் தொல்காப்பிய, சங்க இலக்கியத்தில் உண்டு. இதைப் பிற்காலத்திய திருத்தணிகைப் புராணத்திலும் காண்கிறோம்: மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் … என்று.
தொடக்கத்தில், *மக்கள் சாதி *மாச்சாதி/விலங்குச் சாதி என்ற அறிவு இல்லாமல் “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகியிருக்க முடியாது.
மக்கள், மா, பறவை, நீர்வாழ்வன … இப்படிப்பட்ட ஒவ்வொரு “சாதி"க்குள்ளும் பல வகை உயிர்களைக் காண்கிறான் இலக்கண ஆசிரியன். ஒரு குறிப்பிட்ட “சாதி” என்ற தொகைக்குள் காணும் பல உயிர்களை எப்படிப் பகுத்து அறிவது? அப்போதுதான் “பிறப்பு” என்ற குறியீடு உருவாகிறது.
3. பிறப்பு
——————
இலக்கிய இலக்கணங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் சொற்கள்: “நீர்வாழ்சாதி,” “பறவைச்சாதி"
“நீர்வாழ்சாதி”யை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “நீர்வாழ்சாதியும் அறுபிறப்பு என்பன சுறாவும், முதலையும், இடங்கரும், கராமும், வராலும், வாளையும் என இவை.” எனவே, “நீர்வாழ்சாதி”யுள் தோன்றும் உயிர்கள் சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்றும் இவை ஒவ்வொன்றும் ஒருவகைப் “பிறப்பு” என்றும் அறியப்பட்டதாகத் தெரிகிறது.
“பறவைச்சாதி" என்பதைச் சங்க இலக்கியப் பெரும்பாணாற்றுப்படையில் (229-230) பார்க்கிறோம்: “கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு-உடைத் திரள் தாள் … .”முற்றி விளைந்த செந்நெல்லின் குழல் போன்ற தாள் (அடிப்பகுதி, காம்பு) அந்த நெல்லை அரிகிறவரின் கையைக் குத்தும். அதுக்கு உவமை கொட்டுகிற தேனீ; அது “பறவைச்சாதி.”
மக்கட்சாதியை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.” நுண்ணித்துப் பார்க்கவும். இங்கே ‘குலம்’ என்பது ‘சாதி’ இல்லை! ‘குலம்' என்பது ‘சாதி’க்குள் அமையும் ஒருவகை அமைப்பு. இந்த எல்லாக் குலமும் மக்கட்சாதிக்குள் அடக்கம்!
4. பெயர்
——————
இந்த மக்கட்சாதிக்குள்ளும் இடம், செயல் போன்றவற்றால் பிறப்புகள் பலவகைப்படுகின்றன. அப்படி வேறுவகைப்படும் அவற்றைத் தனித்தனியே குறிக்கவேண்டுமானால் என்ன செய்யலாம்? அப்போதுதான் “பெயர்" என்ற குறியீடு உருவாகிறது.
மக்களை “உயர்திணை” என்றும் மக்கள் அல்லாதவற்றை “அஃறிணை” என்றும் பிரித்த இலக்கண ஆசிரியன் உலகில் காணும் பலவகைப்பட்ட உயர்திணைப் பெயர்களை வகுத்துச் சொல்கிறான்:
“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே”
அதாவது, மக்களின் பெயர்கள் மேற்சொன்ன பல வகையில் புழங்கும்.
உரையாசிரியர் தரும் எடுத்துக்காட்டு:
நிலப்பெயர்: அருவாளன், சோழியன் என்பன.
குடிப்பெயர்: மலையமான், சேரமான் என்பன.
குழுவின் பெயர்: அவையத்தார், அத்திகோசத்தார் என்பன.
வினைப்பெயர்: தச்சன், கொல்லன் என்பன.
உடைப்பெயர்: அம்பர் கிழான், பேரூர் கிழான் என்பன. வெற்பன், சேர்ப்பன் என்பனவும் அவை.
பண்புகொள் பெயர்: கரியான், செய்யான் என்பன.
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர்: தந்தையர், தாயர் என்பன.
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்: பெருங்காலர், பெருந்தோளர் என்பன.
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்: ஒருவர், இருவர், மூவர், முப்பத்து மூவர் என்பன.
‘இன்றிவர்’ என்பது ‘இத்துணையர்’ என்னும் பொருட்டுப்போலும்.
ஆகவே, மக்களாகப் பிறந்த எந்த உயிரையாவது சுட்டிக் கூறவேண்டுமானால் மேற்கொண்ட பெயர் வகைகள் உதவியிருக்கின்றன என்று தெரிகிறது.
இந்த நூற்பாவிலும் படிநிலை அணுகுமுறையைப் பாருங்கள். படிப்படியாக, பெரிய அமைப்பில் தொடங்கிச் சிறிய அமைப்புக்கு வருவதை: நிலம் என்பதே அடிப்படை, அதில் அமைவது குடி, குடியில் அமைவது குழு, குழுவில் அமைவது வினை … இப்படி!
இங்கே நமக்கு ஓர் ஐயம் தோன்றலாம். மக்களை வகைப்படுத்தும்போது ‘இந்த/அந்த வகை மக்கள்’ என்று குறிக்காமல் ஏன் ‘பெயர்' என்ற குறியீட்டை மேற்கொண்டார்?
இன்னொரு தொல்காப்பிய நூற்பா இதற்கு விடை தருகிறது.
“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே”
இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை:
“திணைநிலைப்பெயர் என்றதனான் அப்பெயருடையார் பிற நிலத்து இலர் என்று கொள்ளப்படும். … பெயர் என்றதனால் பெற்றதென்னை? மக்கள் என அமையாதோஎனின், மக்களாவார் புள்ளும் மாவும்போல வேறுபகுக்கப்படார், ஒரு நீர்மையராதலின். அவரை வேறுபடுக்குங்கால் திணைநிலைப்பெயரான் அல்லது வேறுபடுத்தல் அருமையின் பெயர் என்றார்.”
அதாவது, மக்களிடமிருந்து பறவைகளையும் விலங்குகளையும் வேறுபடுத்துவதுபோல் மக்களுக்குள் வேறுபடுத்த முடியாது. மக்களுக்குள் வேறுபாடு காட்டவேண்டுமானால், ‘திணைநிலை மக்கள்’ ‘வினைநிலை மக்கள்’ போன்ற குறியீடுகளால் வேறுபடுத்த முடியாது. ஏனென்றால் எல்லா மக்களும் ஒரே நீர்மை/தன்மை உடையவர்.
எவ்வளவு கூரிய, துல்லிய, நேரிய உரை! ‘மக்கட்சாதி’க்குள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வேறுபாடு காட்ட இயலாது என்பதைத் தலையில் அடித்து உணர்த்தியது போல அல்லவா இருக்கிறது, இந்த உரை!
மேலே சொல்லிய பெயர்வகைகளோடு … இயற்பெயர், சுட்டுப்பெயர், சிறப்பினால் ஆகிய பெயர் இன்ன பிற பெயர்களும் வழங்கியிருக்கின்றன.
இப்படிப் போகும் தொல்காப்பிய நூற்பாக்களும் உரைகளும் தெரிவிப்பது என்ன?
1. “சாதி” என்ற சொல் உலகத்தில் மொத்தமாகக் காணப்படும் உயிர்களை வகைப்படுத்திச் சொல்லும் சொல். ஆங்கிலத்தில் species என்ற சொல் தரும் பொருளை ஒத்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது மக்களை மட்டும் குறிக்கும் குறியீடு இல்லை.
1a. சாதிகளுள் உயர்வு/தாழ்வு சொல்லவேண்டுமானால்… ஒரு சாதியோடு இன்னொரு சாதியை ஒப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மக்கள் சாதியையும் பறவைச் சாதியையும் ஒப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதி எது தாழ்ந்த சாதி எது என்று சொல்லவேண்டும். ஆனால், அந்தந்தச் சாதியுள் காணும் பிறப்புகளை இது உயர்ந்த/தாழ்ந்த சாதி என்று சொல்லக்கூடாது. காட்டாக, முதலையை ‘உயர்ந்த சாதி’ என்றும் எறும்பை ‘இழிந்த சாதி’ என்றும் குறிப்பிடக்கூடாது.
வலியுறுத்தவேண்டி மீண்டும் சொல்கிறேன். “சாதி” வேறுபாடு காட்டவேண்டுமென்றால் … மக்கள் :: விலங்கு :: ஊர்வன :: பறப்பன :: நீரில் வாழ்வன :: பயிர்கள் … என்ற அடிப்படையில்தான் காட்டவேண்டும். இந்த வகைகளுக்குள் ‘சாதி' வேறுபாடு காட்டக்கூடாது! அதாவது, நீர்வாழ்சாதியான சுறா, முதலை, வரால், வாளை … இவற்றில் இது‘உயர்சாதி'‘இது தாழ்சாதி' என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவை எல்லாமே ஒரே சாதி: ‘நீர்வாழ் சாதி.” புரிகிறதா?
2. சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் "சாதி" என்பதும் "பிறப்பு" என்பதும் ஒரே பொருளைத் தரவில்லை. தொல்காப்பிய மரபியல் இதற்கு அடிப்படைச் சான்று. பிற இயல்களில் உள்ள நூற்பாக்களும் தொல்காப்பிய உரைகளும் இதை உறுதி செய்கின்றன.
2a. "பிறப்பு" என்பது "சாதி"யின் உட்பிரிவு என்று தெரிகிறது. எனவே “இழிசாதி" == “இழிபிறப்பு" (low caste, low birth) என்று சொல்வதெல்லாம் பொருளற்றது, பெரிய தவறும்கூட.
3. மக்கட்சாதியில் பிறந்த உயிர்களைக் குறிக்கும் பெயர்கள் அந்த உயிர்கள் வாழும் இடம், அவை செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தன. பிறப்பின் அடிப்படையில் அமைந்ததில்லை.
3a. எனவே "இழிபிறப்பாளன்" என்பது போன்ற சொற்கள் அவர்கள் பிறந்த மக்கட்"சாதி"யைக் குறித்து அமையவில்லை.
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:57:32 PM
சுருக்கமாகச் சொன்னால், உலகத்து உயிர்களை நீர்வாழ்சாதி, பறவைச்சாதி, மக்கள்சாதி … என்று பிரிக்கலாமேயன்றி இந்த உயிர்ச்சாதிஒவ்வொன்றுக்குள்ளும் ‘சாதிப் பிரிவினை’யைச் சங்கப்பாடல்கள் காட்டுவதாகச் சொல்லுவது கருத்துப்பிழை என்று தெரிந்தது.
பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மக்களுள் பிரிவுகள் பெயர் வகையில் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கின்றன, “சாதி” வகையில் இல்லவே இல்லை.
தமிழில் பெயர்ச்சொற்கள்
———————————
தமிழில் அடிச்சொல் (stem) அமைப்பு மிகவும் எளிமையானது; மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 தமிழ் எழுத்துக் கொண்டது. இங்கே ‘எழுத்து’ என்பது உயிரெழுத்து (‘அ’ போன்றவை), ஒற்றெழுத்து (‘ம்’ போன்றவை), உயிர்மெய்யெழுத்து (‘ளா’ போன்றவை) ஆகியவற்றைக் குறிக்கும். எடுத்துக்காட்டுச் சொற்களை மிக அழகாக யாப்பருங்கலக் காரிகை தருகிறது: ஆழி, வெள், வேல், வெறி, சுறா, நிறம், விளாம்.
சொல் உருவாக்கத்தின்போது, மேலே குறிப்பிட்ட அமைப்பில் உள்ள அடிச் சொற்களைத் தொடந்து சாரியை, வேற்றுமை உருபு, பெயர் விகுதி; காலம் குறிக்கும் இடைநிலை, வினை விகுதி… இன்ன பிற வந்து ஒரு சொல்லைஉருவாக்கும்.அப்போது குற்றியலுகரத்தில் முடியும் அடிச்சொற்களின் இறுதியில் உள்ள உகரம் மாய்ந்து கெடும். (விளக்கம் தேவையானால் கேட்கவும்!).
இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது: எந்தச் சொல்லாவது இரண்டு அடிச்சொற்களைக் கொண்டு அமையுமானால் அது முதல் கட்ட/நிலையைக் (primary formation) கடந்த இரண்டாம் கட்ட/நிலை உருவாக்கம் (secondary formation) என்று கொள்ளலாம். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு “இழிபிறப்பாளன்” என்ற சொல். ‘இழி’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள்; ‘பிறப்பு’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள். ‘இழி’ + ‘பிறப்பு’ என்ற இரண்டு அடிச்சொற்கள் சேர்ந்து ‘இழிபிறப்பு’ என்ற புதிய அடி (stem) உருவாகிறது. இந்த வகைக் கூட்டு உருவாக்கத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் ஒன்றாகப் பிறமொழிக் கருத்தைத் தமிழில் சொல்ல முயன்ற முயற்சியாகவும் இருக்கலாமோ?
சொல் உருவாக்கத்தின் அடிப்படையில் சங்கப்பாடல்களில் வழங்கும் பெயர்ச்சொற்களைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.
சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள்
—————————————————------
சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள் மிகவும் எளிமையான முறையில் உருவானவை. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அடிப்படையில் மக்களின் பெயர்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டு: வேலன் (‘வேலை உடையவன்’; பொருட்பெயர்), குடவர் (‘குட/மேற்குத் திசையில் வாழ்கிறவர்’; இடப்பெயர்), பகலோன் (‘பகல் நேரத்துக்குரியவன்’; காலப்பெயர்), முடவன் (‘முடங்கிய உறுப்பு உடையவன்’; சினைப்பெயர்), இனியன் (‘இனிய பண்பு உடையவன்’; பண்புப்பெயர்/குணப்பெயர்), தச்சன் (‘தச்சுத் தொழில் செய்பவன்’; தொழில் அடிப்படை)
துடியன் என்பவன் துடிப்பறையை இயக்கியவன்; பாணன் என்பவன் பாண் தொழிலைச் செய்தவன்; பறையன் என்பவன் பறையை முழக்கியவன்; கடம்பன் என்பவன் கடம்படுதலைச் (தெய்வத்துக்கோ மனிதர்களுக்கோ செய்யவேண்டிய கடமையைச்) செய்தவன்; கூத்தர் என்பவர் கூத்தாடும் தொழிலைச் செய்தவர்; அகவுநர் என்பவர் அகவுதல் என்னும் தொழிலைச் செய்தவர்; விறலி என்பவள் உள்ளத்து உணர்வுகள் உடலில் வெளிப்படும் வகையில் ஆடியவள்; உழவர் என்பவர் உழவுத்தொழிலைச் செய்தவர்; உமணர் என்பவர் உப்பு விற்றவர்; … இப்படி நூற்றுக்கணக்கான பெயர்களுக்கு விளக்கம் காணலாம்.
ஆனால் … சிலருடைய மேற்கத்தியப் பார்வை … இந்தப் பெயர்களால் குறிக்கப்படும் சிலரை (துடியன், கிணைஞன், பாணன், கடம்பன், … ) ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் அடைச்சொற்களாகவோ விளக்கச்சொற்களாகவோ (epithet) “புலையன்” என்ற சொல்லையும் “இழிபிறப்பாளன்” என்ற சொல்லையும் சுட்டுவது சரியா என்று நினைத்துப் பார்ப்பது நல்லது.
இந்தக் கோணத்தில் ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்களின் வழக்காற்றைப் பார்ப்போம்.
புலையனும் புலைத்தியும் …
————————————
‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் வழங்குகின்றன. இவை போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் — துடியன், பாணன், பறையன், கடம்பன், விறலி, பாடினி, அகவர், அறைநர், அரிநர், இடையர், ஏழையர், ஊமன், கூவுநர், பொருநர், கோடியர், … — சங்க இலக்கியத்தில் உண்டு.
சங்கப் பாடல்களில் இந்தச் சொற்களின் வழக்காற்றைப் பற்றிக் கல்வியுலகில் ஒரு சிலர் பரப்பிய கருத்துகள் தமிழகத்து மக்களின் ஒருமைக்கு வழிகோலுவனவாக இல்லை; மாறாக, ‘சாதி,’ ‘தீட்டு,’ ‘தீண்டாமை’ என்ற கருத்துப் பேய்களுக்குத் தீனியாகவே அமைகின்றன. அதுவும், இணையம் என்ற வசதி பேயாக மாறியபின் ஒருவரை ஒருவர் இழித்து எழுதவும் அந்தக் கருத்துகள் உதவுகின்றன. அதுதான் மிகப் பெரிய தவறு, கொடுமை.
இந்தக் காலத்தில் தமிழ் ஆய்வுக்குள் நுழைய விரும்பும் பலரும், அவர்கள் மரபுவழித் தமிழ் படித்தவர்களோ இல்லையோ, முதலில் அணுகுவது ஓர் அகராதியை. நாங்கள் படித்த பழைய காலத்தில் … வகுப்பில் ஆசியர்கள் சொன்னதும் அவர்கள் கற்பித்த இலக்கிய இலக்கணங்களுமே எங்களுக்குக் கலங்கரை விளக்கம்; அகராதியைத் தேடிப்போனதில்லை. அகராதியெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது.
நிற்க.
இந்த இணைய (internet) காலத்தில், ‘புலையன்’ என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கும் இணய ஆய்வாளர் (internet researchers) பலரும் முதலில் புரட்டுவது சில அகராதிகளையே. அதில் தவறில்லை. ஆனால்,அந்த அகராதிகள் எடுத்த எடுப்பிலேயே ‘புலையன் என்பவன் கீழ்மகன்’ என்று சொன்னதை வைத்துக்கொண்டு மேற்செலுத்தும் ஆய்வுகளை எவ்வளவிற்கு நம்ப முடியும்? நீங்களே நினைத்துப் பாருங்கள். அதோடு, இக்கால நிகழ்வின் வழியே பார்த்துப் பழங்கால இலக்கியங்களை அலசி ஆய்வு முடிவுகளை உருவாக்குவது நேரியதா?
**********
Winslow என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது:
புலை, [ pulai, ] s. Flesh, or fish, ஊன். 2. Stink, stench, நாற்றம். 3. Vice, evil, baseness, தீமை, as புல். 4. A lie, பொய். புலையுங்கொலையுங்களவுந்தவிர். Avoid flesh (or a lie) murder, and theft. (Avv.)
புலைச்சி--புலைமகள், s. A low caste woman. 2. See புலையன்.
புலைச்சேரி--புலைப்பாடி, s. A low caste village.
புலைஞர், s. [pl.] The base, as புலையர். (சது.)
புலைத்தனம், s. Barbarity, baseness, vileness, கொடுமை.
புலைத்தொழில், s. Vicious habits or practices, கொடுஞ்செய்கை.
புலைமகன்--புலையன், s. A very low caste man.
புலைமை, s. A vicious practice, as புலைத்தனம். 2. A vile or low condition,கீழ்மை.
புலையன், s. [pl.புலையர், fem.புலைச்சி.] A tribe of aborigines, inhabiting some mountains, as the Pulneys, ஓர்சாதியான். 2. A base or low caste person, கீழ்மகன்.
புலையாட, inf. To lead a vicious life.
புலையாட்டம்--புலையாட்டு, v. noun. Transitoriness, illusiveness, a false appearance. (Colloq.)
இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.
**********
(Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972.)
Fabricious என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது:
புலை [ pulai ] , s. same as புலால்; 2. baseness, wickedness, evil, தீமை; 3. a lie,பொய்.
புலையுங்கொலையுங்களவுந்தீர், avoid flesh (or a lie), murder and theft.
புலைஞர், same as புலையர்.
புலையன், (fem.புலைச்சி, pl.புலையர்) a man of a certain low mountain tribe; 2. a base or low-caste person.
புலையாட, to lead a vicious life.
புலையாட்டம், -யாட்டு(coll.) illusiveness, a false appearance.
புலோமசித்து [ pulōmacittu ] {*}, s. Indra, the conqueror of the Rakshasa புலோமன்.
புலோமசை [ pulōmacai ] {*}, s. Indrani, (the wife of Indra) as daughter of புலோமன்.
புலோமன் [ pulōmaṉ ] , s. the father of Indrani; 2. a Rakshasa.
எச்சிலார், low-caste people, இழிஞர்.
(Why did he understand/interpret the word எச்சிலார் as low-caste people, இழிஞர்?!!!).
[இதே அகரமுதலி ஆக்கிய பெருந்தகை Fabricious குறித்தது: கௌண்டர்(p. 321) [ kauṇṭar ] , (Kanarese)கவுண்டர், s. flesh-eaters, people of the lowest order,புலையர்; 2. a low caste named so, சண்டாளர்; 3. an honorific title of certain tribes.சௌனிகன்(p. 461) [ cauṉikaṉ ] {*}, s. a dealer in flesh; a meat seller; 2. one of low cast, புலைஞன்.]
இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.
**********
“புலை” என்ற சொல்லுக்குப் பொருள் தரும் சென்னைத் தமிழ் அகரமுதலி (Madras Tamil Lexicon) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கப் பாடல்களிலிருந்து ஒரு மேற்கோளும் காட்டவில்லை என்பது நோக்கற்குரியது.
இந்தப் பொருள் பரவாயில்லை. வேள்விச்சாலையில் பசுவைக் கொன்றதால் வடிந்த குருதியும் பிரித்தெடுத்த ஊனும் இருக்கும். ஆனால், அந்த வேள்விச்சாலை அந்தணர்களால் உண்டாக்கப் பெறுவது, புலையனால் இல்லை, அதைக் கட்டாயமாக நினைத்துப் பார்க்கவும். அல்லது புலையன் == அந்தணன் என்ற பொருளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இது சங்கப்பாடலில் இல்லை. பிறன் மனைவியைக் கவர்ந்த இராவணனின் செயல் குறிக்கப்பட்டதால் இங்கே ‘புலை’ என்பதுக்குப் ‘பரத்தமை’ என்ற பொருள் பொருந்தும் என்று தோன்றுகிறது.
இது சங்கப்பாடலில் இல்லை. பவுத்த நெறியில் ‘பஞ்ச சீலம்’ என்ற கோட்பாடு உண்டு. அதன்படி, ‘கள், களவு, காமம், கொலை, பொய்’ ஆகிய செயல்கள் ஐந்து வகைக் குற்றங்கள் என்று கொள்ளப்பட்டன. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்த எடுத்துக்காட்டில் உள்ள ‘புலை’ என்ற சொல்லுக்குப் ‘பொய்’ என்ற பொருள் ஏற்புடைத்தாகத் தெரிகிறது. சங்கப் பாடல்களில் களவு நட்பில் ஈடுபட்ட தலைவனும் பொய் சொல்லுகிறான் (குறுந்தொகை 25; அகநானூறு 256); அப்படியானால் அவனும் புலையன், இல்லையா?
இந்தப் பொருள் சரியாகப் படுகிறது. ஆனால், இங்கே ‘புலைமகன்’ என்று இகழப்படும் ஆபுத்திரனின் தாய் சாலியின் செயலே ‘புலை’ என்ற குறிப்பில் அடக்கம். சாலி தன் அந்தணக் கணவனை விடுத்து வேறொருவன் மூலம் பெற்ற மகனே ஆபுத்திரன். எனவே, சாலியின் செயலே இங்கே குறிப்பு. மணிமேகலைக் காப்பியத்தில் விளக்கம் காணலாம்.
எடுத்த எடுப்பிலேயே “புலை” என்பதுக்கு “Outcaste; கீழ்மகன்” என்று பொருள் சொன்னதைப் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அதுக்குச் சான்றாகச் சொன்ன ஆசாரக்கோவைப் பாடலையும் நாம் பார்க்க வேண்டும்.
இந்த “எச்சில்”என்ற சொல் அகரமுதலிகள் கையில் படாத பாடு பட்டிருக்கிறது!
மனிதரின் வாயில் ஊறும் உமிழ்நீரிலிருந்து … சிவனும் உமையும் புணர்ந்து உண்டாகிய கருவின் சிதைவுகள் வரை “எச்சில்” என்பதுக்குப் பொருள் இருக்கு!!!
8a. தமிழ் ஆர்வலர்கள் பரிபாடல் (#6) ஒன்றைக் கட்டாயமாகப் படித்துப் பார்க்கவேண்டும். முருகனுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே இழையும் வரலாறு சொல்லும் அருமையான பாடல் இது. இங்கே கார்த்திகேயன் என்பவன் உமை-சிவன் இருவரும் காலமல்லாத காலத்தில் கலந்த புணர்ச்சியில் உருவான “எச்சில்” (5:42). இந்தக் குறிப்பில் தவறில்லை.ஆனால் … இந்த “எச்சில்” என்ற சொல் பாவப்பட்ட “புலையன்” என்ற பிறவியை மட்டும் குறிப்பதாக எடுத்துகொண்டால் … அந்தக் கார்த்திகேயனும் புலையனே, இல்லையா???
8b. ஆசாரக்கோவையில் பல பாடல்களில் (5-7) “எச்சில்” என்பது பற்றிய குறிப்பு இருக்கிறது.
8biii. எச்சிலில் பல வகை உண்டாம். அதிலே, நான்கு வகை எச்சிலை மட்டும் சொல்கிறது ஆசாரக்கோவை. அவை: இயக்கம் இரண்டு (மலம் மூத்திரம் கழித்தல்), இணை விழைச்சு (sexual intercourse), வாயில் விழைச்சு (oral sex).
இதையெல்லாம் சொல்லிய ஆசாரக்கோவை (#8) ஓர் அறிவுரையும் தருகிறது: மேதைகளாக உருவாகிறவர்கள் இந்த நால்வகை எச்சிலையும் கடைப்பிடித்து, ஒன்றினையும் ஓத மாட்டார்களாம், ஒன்றினையும் பற்றிச் சொல்லமாட்டார்களாம். அதாவது … இந்த மாதிரி “நால்வகை எச்சிலும் உண்டான இடத்து ஒன்றும் படித்தல் ஆகாது, வாயால் ஒன்றையும் சொல்லல் ஆகாது, தூங்கல் ஆகாது.”
சரிதான்! ‘எச்சிலார்’ என்பவர் ஏற்கனவே எச்சில் பட்டவர்கள். ஆனால், அவர்கள் தம் எச்சிலோடு ‘புலை’யைப் பார்க்கக் கூடாது என்ற விதியின் அருமை பெருமை என்ன என்று எனக்குப் புரியவில்லையே!
9. Stench; தீநாற்றம்.
இந்தப் பொருளுக்கு அடிப்படை என்ன என்று விளங்கவில்லை. ‘புலை’ என்பது ‘தீநாற்றம் (stench)’ என்றால் … அதை ஒரு குறிப்பிட்ட மக்களோடு மட்டும் பொருத்திச் சொல்வது பொருத்தமா??? பிற மக்கள் தீநாற்றமே வெளிப்படுத்தாதவர்களா? உலக உயிர்கள் அனைத்துமே (மக்கள், விலங்கு, பயிர்) தீநாற்றம் வெளிப்படுத்தும் என்பதை அறியாதவருடன் உரையாடிப் பயனில்லை. அந்த வகையில் எல்லாருமே/எல்லாமுமே ‘புலையர்’களே. இந்தக் காரணத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களைப் பற்றி மட்டும் ‘புலையர்’ என்று சொல்வது அறிவுப் பிறழ்ச்சி, இல்லையா?
+++++++++++++++++++
சங்க இலக்கிய வழக்காற்றைப் பார்க்கும்போது இலக்கிய வழியில் தோன்றும் சில விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கல் கெழு குறும்பில் மறவர் தண்ணுமையின் பாணி எழுப்புகிறார்கள் (அகநானூறு 87:7-8)
பாணன் (அகநானூறு 106:12-13; நற்றிணை 310:9-10)
சிறு குடி மறவர் சேக்கோள் தண்ணுமை (அகநானூறு 297:16)
குறுகிய நீர்த்துறையில் செல்லுகிறவர்கள் தண்ணுமை முழக்குகிறார்கள். அவர்களின் பின்னே இயவரின் ஆம்பல் தீங்குழலொலி (ஐங்குறுநூறு 215:3)
ஏறுகோள் சாற்றுவார் தண்ணுமை முழக்கும் குறிப்பு (கலித்தொகை 102:35)
வேல் ஏந்தியவர்கள் காவல் காடுகளில் (மிளை) வந்து தண்ணுமை முழக்குகிறார்கள் (குறுந்தொகை 390:5),
ஒரு நற்றிணைப் பாடலில் (130:2) தண்ணுமை முழக்கியவர் யார் என்ற தெளிவில்லை. ஆனால், ஊரின் நடுவே தண்ணுமை முழக்கம் நிறைந்து ஒலிக்கவும் அந்த மூதூரின் மக்கள் செந்நீரில் செய்யும் பொதுவினைக்காக வந்து சேருகிறார்கள் என்று தெரிகிறது.
கருத்தில் கொள்ளவேண்டியது: துடி, தண்ணுமை போன்ற தோற்கருவிகள் பல தேவைகளுக்காக ஒலித்திருக்கின்றன. மக்கள் பலரும் கூடிச் செய்ய வேண்டிய செயல்களை அறிவித்தற்பொருட்டு இந்தக் கருவிகள் ஒலித்திருக்கின்றன. அதனால் இங்கே புலையனை மட்டும் ஒதுக்கிப் பார்க்கத் தேவையில்லை.
2. ‘புலையன்’ மட்டுமா ஈமச்சடங்கில் ஈடுபட்டான்? இல்லை.
ஈமச்சடங்கு அல்லது இறந்தவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்த சங்கப்பாடல் சான்று
இங்கே பொத்தியார் பாடலும் (புறநானூறு 222) நினைக்கத்தக்கது. தன்னுடன் உயிர்விடத் துணிந்த பொத்தியாரைத் தடுப்பதற்குக் கோப்பெருஞ்சோழன் சொன்னது: “புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா.” ஆகவே, ஈமக்கடன் செய்ய ஒரு புதல்வன் தேவை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பொத்தியார் புலையரா?
யாரோ ஒருவனை ‘இழிபிறப்பினோன்’ என்று குறித்துப் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல் (363:14) ஒன்று இருக்கிறது.
சில ஓலைச்சுவடிகளில் ‘இழிபிறப்பினோன்’ என்ற பாடம் இல்லை. உ.வே.சா அவர்களே தம் பதிப்பில் இதைச் சுட்டியுள்ளார். எனவே, இங்கே ஈமக்கடன் செய்பவன் ‘இழிபிறப்பினோன்’ என்று கொள்ள உறுதியில்லை.
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார்” என்று தொடங்கும் சங்கப்பாடலும் ஏதோ ஒருவகை ஈமச்சடங்கைத்தானே சொல்கிறது. அந்தச் சடங்கைச் செய்தவன் ‘புலையன்’ என்பவனா?
3. புலையன் என்பவன் பாணன் என்பவனுடன் இணைந்து திரிந்ததாகச் சொல்லும் கலித்தொகைப் பாடலே (85:22) புலையனும் பாணனும் ஒருவரல்லர் என்பதுக்குச் சான்று. அதாவது, பாணன் == புலையன் என்ற சமன்பாடு தவறு.
3a. “பாண் தலையிட்ட பல வல் புலையனை …” என்ற கலித்தொகை (#85) வரியில் உள்ள ‘தலையிட்ட’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். ‘தலையிட்ட’ என்றால் ‘முதலில் வைத்த’ என்பது பொருள். இந்த எளிய பொருளைத் தொல்காப்பிய நூற்பாக்களிலும் காணலாம் (எடுத்துக்காட்டு: புணரியல் 1, செய்யுளியல் 97). “பொழுது தலைவைத்த” என்று தொடங்கும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவும் (40) இதை உறுதிப்படுத்தும். இந்தக் கலித்தொகைப் பாடலில் தலைவியின் வீட்டுக்குள் பாணனை முதலில் நுழைய வைத்து அவன்பின்னே புலையன் வருகிறான் என்று எடுத்துக்கொள்வதே சரி.
3b. புறநானூற்றுப் பாடல் (289:8-10) வரிகள்: “கேட்டியோ வாழி, பாண, பாசறைப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.” இங்கே, ‘இழிசினனின் தண்ணுமைக் குரலைக் கேட்டாயோ’ என்று பாணனை வினவுகிறார் புலவர். இது பாணனும் இழிசினனும் ஒருவரல்லர் என்பதுக்கு இலக்கியச் சான்று, இல்லையா?
4. தலவனின் பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவிய புலையன் (கலித்தொகை 68:19; 85:22-25) ‘கீழ்மகன்’ என்றால் பரத்தமையில் ஈடுபட்ட ‘தலைவன்’ எந்த வகையில் மேம்பட்டவனோ?!! பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் == புலையன் என்ற சமன்பாடே சரி! இதை ஏன் அகரமுதலிகள் கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பு!!!
5. ‘புலையனை’ மீனோடு (with fish) தொடர்புபடுத்தும் சங்கப்பாடல் சான்றுகள் என் கண்ணுக்குத் தென்படவில்லை. கிடைத்தால் சொல்லவும், நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.
5a. கிடைத்திருக்கும் அகரமுதலிகள் ‘புலை,’ ‘புலால்,’ ‘புலவு’ என்ற சொற்களின் வழக்காற்றைக் குழப்பியிருப்பதுபோல் தெரிகிறது. புலை == புலவு/புலால் என்பது சரியான சமன்பாடில்லை என்று தோன்றுகிறது. தொடரும் ஆய்வில் தெளிவு கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.
6. ‘புலையன்’ என்பவன் ஊராருடைய ஆடைகளைத் துவைத்ததாக எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை. ஆகவே, ‘புலையன்’ == ‘வண்ணான்’ என்று சொல்ல முடியாது.
7. ‘புலையன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ‘இழிசினன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ஒரே மனிதன் அல்லன் என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (#287) சான்றாக அமைகிறது.
7a. ‘துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின!” என்று தொடங்குகிறது இந்தப் பாடல். இதில் “இழிசின” என்ற சொல்லுக்குப் பாட வேறுபாடாக “அறிசன” என்ற சொல்லையும் குறித்த உ.வே.சா “இழிசின” என்ற சொல்லையே தம் பதிப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தச் சொல்லையே எடுத்துக்கொண்டாலும், புலையனும் இழிசினன் என்று குறிக்கப்படுகிறவனும் வெவ்வேறு ஆட்கள் என்பது இந்தப் பாடலின் கடைசி வரியைப் படித்தால் தெளிவாகும்: “இம்பர் நின்றும் காண்டிரோ …” என்று புலையனையும் இழிசினனையும் தனித்தவராகக் காட்டும் பன்மை விளியைப் பார்க்கிறோம். இலக்கணம் இங்கே உதவுகிறது. அதோடு, புலையன் எறியும் துடியை இயக்க, கோல் என்பது தேவையா என்றும் நினைத்துப் பார்க்கவேண்டும். தண்ணுமையை முழக்கக் கோல் தேவை (நற்றிணை 130:2).
7b. “மடிவாய்த் தண்ணுமை இழிசினன்” என்று புறநானூற்றில் குறிக்கப்படுகிறவன் ‘புலையனா’ என்பது ஐயமே.
8. ‘புலையன்’ என்பவனையும் ‘ஊன்/இறைச்சி/மாமிசம்’ என்பதையும் தொடர்புபடுத்தி எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை.
8a. ஈமச் சடங்கு ஒன்றைப் பற்றிக் கூறும் புறநாற்றுப் பாடலிலும் (360) கள், புல், அவிழ், வல்சி என்ற பொருட்களே குறிக்கப்படுகின்றன; ஊனை/இறைச்சியை/மாமிசத்தைக் காணோம்.
புலைத்தி என்பவள் பற்றி …
——————————-
1. ‘புலைத்தி’ என்பவள் ஊரவரின் ஆடைகளைத் துவைப்பவளாகத் தெரிகிறாள் (கலித்தொகை 72). இங்கே, ‘ஊரவர்’ என்பவர் மருதநிலத்தவர் என்றும் பரத்தமையில் ஈடுபட்டவர் என்றும் பொருள் கொள்ளத் தடையிருக்கா? இல்லை.
1a. புலைத்திக்கும் குருதிக்கும், குறிப்பாகப் பெண்களின் மாதவிலக்குக் குருதிக்கும், எந்த வகைத் தொடர்பும் இருப்பதாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ஊரில் உள்ள மகளிருக்கு மாதம் ஒரு முறை உண்டாகும் குருதிப்போக்குக்கும் இவளுக்கும் தொழில் வகையில் தொடர்பில்லை. அதாவது, மகளிரின் குருதிக்கறை படிந்த ஆடையைத் துவைத்து இவளுக்குத் “தீட்டு” என்ற களங்கம் ஏற்பட்டதான குறிப்பு இல்லவே இல்லை. சங்கப்பாடல் சான்று கிடைத்தால் சொல்லுங்கள், நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுவேன்.
1b. மாறாக, (கேட்கத் தயக்கமாக இருந்தாலும் சொல்கிறேன்), புலைத்தியின் கைவிரல்கள் ‘பசை’யை நீக்குவதாகவும் அந்தப் பசை நீர்த்துறையில் வெளியேறியது மென்மையான மயிருடைய அன்னத்துக்கு உவமையாகவும் சொல்லப்படுகிறது (அகநானூறு 34:11; 387:5-7). ஆடையில் வெள்ளைப் பசை, அதைப் புலைத்தி தோய்த்துக் களைகிறாள். இது பெண்களின் மாத விலக்குக் குருதியா அல்லது வேறு எதுவுமா என்று நினைத்துப் பார்க்கவும். மாதவிலக்குக் குருதி ‘பசை’யாக உறையாது!
2. புலைத்தி என்பவளை வறுமையில் வாடியவளாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ‘பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி’ என்று அவளுடைய தோள்கள் ‘பெருந்தோள்’ என்று சுட்டப்படுகின்றன (அகநானூறு 34:11). அவளே “பெருங்கை தூவா வறன்-இல் புலைத்தி” (நற்றிணை 90) என்றும் குறிக்கப்படுகிறாள்.
3. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (259) வரும் ஒரு தொடர் “முருகு மெய்ப்பட்ட புலைத்தி.” இதன் விளக்கமும் குழப்பமானதே. புலைத்தி என்பவள் ‘கோயில் பூசாரி’ என்ற பொருள் குழப்பம் தருகிறது. 'கோயில் பூசாரி' என்ற அளவில் கோயிலில் புலைத்தி என்னென்ன செய்திருக்கிறாள் என்ற குறிப்பு ஒன்றுகூட இலக்கியத்தில் இல்லை. ஆடை துவைக்கும் பெண்ணுக்கும் கோயில் பூசைக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. ஆய்வாளரும் விளக்கம் சொல்லவில்லை. ‘காம உணர்வு உடலில் வெளிப்பட்ட’ நிலையில் துடித்துத் துள்ளிய புலைத்தி என்று சாதாரணமான பொருளைக் கொண்டாலே போதும் என்று தோன்றுகிறது. அதோடு, ‘… தாவுபு தெறிக்கும் மானே’ என்பதைச் சிலர் ‘… தெறிக்கும் ஆனே’ என்று கொண்டு ‘துள்ளும் பசு’ என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். அது சரியென்று தோன்றவில்லை. “தெறிக்கும்” என்ற வினை மான், மறிகளுக்கு உரியது, ஆவுக்கு/பசுவுக்கு இல்லை. மாற்றுச் சான்று கிடைத்தால் தெரிவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
++++++++++++
ஆக, ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்று சங்கப்பாடல்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில்) குறிக்கப்படும் ஆட்கள் பிற ஆட்களைப் போன்றவரே. அவர்களைக் 'களங்கம் உடையவர்கள்; தீட்டுடையவர்கள்' என்று சொல்வதெல்லாம் சங்கப்பாடல்களைப் பொருத்த அளவில் நேரியதில்லை என்பது என் கருத்து.
இன்றைக்கு, ‘புலையன்’ என்ற சொல்லைக் கேட்டவுடனே பலருக்கும் … ஆகா, “ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்” என்ற தேவாரப் பாட்டு வரியும், நந்தனார்,புலைச்சேரி, புலைப்பாடி பற்றிய சேக்கிழாரின் பெரிய புராணக் கதையும் முட்டிக்கொண்டு வந்து மனதில் நிற்கும். அவர்களுக்கு ஒரு சேதி: “சேரி” என்பது புலையருக்கு மட்டும் உரியதில்லை. பார்ப்பனருக்கும் உரியதே!!! இதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
இந்தப் பதிவில் "உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு" இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம்.
கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை.
++++++++++++++++
சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை + பத்துப்பாட்டு) காணும் “இழிபிறப்பாளன்,” “இழிபிறப்பினோன்,” “இழிசினன்” என்ற சொற்களை எடுத்துக் கொண்ட சிலர், இன்றைக்கு ‘இவன் தலித், அவன் தலித்; இந்தச் சாதி இந்த இழிந்த சாதிக்கு ஒரு சிறு படிதான் மேல்’ என்று பலபடியாகப் பட்டையடித்துப் பேசுவதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது மிகவும் குழப்பமும் வருத்தமும் அடைந்தேன். அப்போதுதான் … அட, சங்கப்பாடல்கள் இப்படியா பேசுகின்றன என்று தெரிந்துகொள்ளத் தொடங்கிய என் முயற்சியின் விளைவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
உயர்வு, இழிவு
———————-
‘எது உயர்ந்தது? எது இழிவானது?’ என்பது நல்ல கேள்வி. ஒரு குமுகத்தில் எல்லாரும் ஒத்துக்கொள்ள வேண்டிய அளவில் ஏதோ ஒரு வகைச் சமநிலைக் கோட்பாடு இல்லாமல் ‘இது உயர்ந்தது, இது இழிந்தது’ என்று எடையிடும் கருத்து உருவாகியிருக்க முடியாது, இல்லையா?
[We need an origin and steady state for drawing X and Y axis-based analysis.]
ஆனால், சங்கப் பாடல்களிலிருந்து அந்தச் சமநிலைக் கோட்பாடு (அப்படி ஒன்று இருந்திருந்தால்) எது என்றும் அது எப்போது உருவானது என்றும் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தெரிந்தால் நல்லது, சொல்லுங்கள்.
உயர்வு/இழிவு என்ற கருத்து பலவகையில் வெளிப்படுகிறது. பழைய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் பார்ப்போம்.
[இது “ஒடு” என்ற மூன்றாம் வேற்றுமை உருபின் பயன்பாடு குறித்தது. இந்தக் காலத்தில் இந்த வேற்றுமை உருபு ‘ஓடெ’ என்று பேச்சு வழக்கில் புழங்கும்.]
அதாவது, ஓர் அரசனும் சேவகனும் சேர்ந்து வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது “அரசனொடு வந்தார் சேவகர்” என்று சொல்ல வேண்டுமாம்; ஏனென்றால் இங்கே அரசனுக்குச் சேவகனைவிட உயர்ந்த நிலையாம். ஆனால், யாராவது “நாயொடு நம்பி வந்தான்” என்று சொன்னால் அங்கே அந்த நிலையில் நாய் சிறப்புடையதாகலின் அது சரியாம். நம்பிக்குத் துணையாக இருக்கும் நாய்க்கு நம்பியைவிடச் சிறப்பு. இது சரியான கணிப்பு.
ஆக, ‘செயல் திறமை’ என்பது இங்கே ‘உயர்வு’ என்பதை வரையறுக்கிறது என்று கொள்கிறேன். இது நல்ல கண்ணோட்டமாகத் தெரிகிறது.
1b. ஈகையால் உயர்வும் இழிவும்
இன்னொரு தொல்காப்பிய நூற்பாவின்படி, ஒருவர் தனக்கு வேண்டியதை இன்னொருவரிடம் கேட்கும்போது ஒப்பு/உயர்வு/இழிவு என்ற நிலை அடிப்படையாக அமைகிறது.
“ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே”
ஈ, தா, கொடு என்ற மூன்று சொற்களும் ஒருவரை இன்னொருவர் இரந்து கேட்கும்போது பயன்படுத்தும் சொற்கள்.
“அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.
தா என் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே.”
இங்கே பாருங்கள் … உயர்ந்தோன்,ஒப்போன்,இழிந்தோன் என்ற கோட்பாடுகளை. ஒருவரிடமிருந்து ஒருவருக்கு ஏதாவது தேவையானால் எப்படிக் கேட்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒத்த நிலையில் இருப்பவர்கள் “தா” என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: சோறு தா; ஆடை தா
கேட்பவர் இழிந்த நிலையில் இருந்தால் “ஈ” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: உடுக்கை ஈ; மருந்து ஈ
சொல்பவர் உயர்ந்த நிலையில் இருந்தால் “கொடு” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: இவற்கு ஊண் கொடு, ஆடை கொடு
இந்தக் கருத்தையே இலக்கியம் எப்படிச் சொல்லுகிறது என்று பார்ப்போம்.
1b.i.புறநானூறு 204:1-4
“ஈ-என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்-எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”
ஒருவரிடம் “ஈ” என்று கேட்பது இழிந்த செயல். இரக்கப்பட்டவன் அதுக்கு மறுமொழியாகக் ‘கொடுக்க மாட்டேன்’ என்று சொல்வது அதைவிட இழிந்தது.
‘இந்தா, இதை எடுத்துக்கொள்’ என்று கொடுப்பது உயர்ந்த செயல். அதுக்கு மறுமொழியாக ‘வேண்டாம், எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்வது அதைவிட உயர்ந்த செயல்.
1b.ii. பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றில் (52:23), ஊடல்கொண்ட தன் மனைவியின் கையில் இருந்த செங்குவளை மலரைச் சேர அரசன் ஒருவன் “ஈ” என்று அவளிடம் இரந்து கேட்கிறான்.
இங்கே, சேர அரசனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் உண்டான ஊடலில் அவள் நிலை உயர்ந்தது, அவன் நிலை தாழ்ந்தது, அதுவே குறிப்பு;சாதி, குலம், கோத்திரத்துக்கு இங்கே இடமில்லை.
1b.iii. புறத்திணையைப் பொருளாகக் கொண்ட பாடல்கள் வலியுறுத்தும் பண்புகளுள் ஒன்று ஈகை, அதாவது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கும் செயல்; இதுவே கொடை என்று புகழப்படுகிறது.
'உடையோர் கொடுப்பார்கள், இல்லோர் இரப்பார்கள்' என்ற செய்தி புதிதில்லை. புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று (38:14).
அதோடு, புலவர்கள் ஓர் அரசனுடைய பக்கத்தில் இருந்தாலும் பிற வள்ளல்களைத் தேடிச் செல்வார்களாம் (புறநானூறு 154:4-5).
ஆக, ஆற்றுப்படை இலக்கியங்களில் காணும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர்கள் மட்டும் பொருளுக்காக வள்ளல்களைத் தேடிப் போகவில்லை, *புலவர்களும்* போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே … கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர்கள் இழிந்த நிலையில் (‘இழிந்த சாதி’யினராக) இருந்தார்கள், புலவர்கள் உயர்ந்த நிலையில் (‘உயர்ந்த சாதி’யினராக) இருந்தார்கள் என்று கருதுவது நேரியதில்லை.
1c.வேள்வி செய்தது உயர்ந்ததாகக் கருதப்பட்டது.
‘உயர்ந்தோர் உவப்ப’ வேள்வி செய்த அரசனைப் புலவர் பாடுகிறார் ஒரு பதிற்றுப்பத்துப் பாடலில் (74:1-2).
பரிபாடல் 2:24-25
வடு-இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு-இல் கேள்வி-உள் நடு ஆகுதலும்
இந்த இரண்டு பாடல் வரிகளிலும் குறிக்கப்படும் “உயர்ந்தோர்” என்ற சொல் அவரவர் கண்ணோட்டத்துக்குத் தகுந்தபடிப் பொருள் தரும். வேள்வி செய்வது பார்ப்பானின் தொழில் ஆதலால் இங்கே “உயர்ந்தோர்” என்பது பார்ப்பானைக் குறிக்கும் என்று பொருள் கொள்வதில் தவறில்லை.
1d. நோன்பு என்பது உயர்வுக்கு அடையாளம்.
மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் பூம்புகாரில் உள்ள புத்த பீடிகையைத் தொழுது புத்த தேவனை வாழ்த்தும்போது, “உலக நோன்பின் உயர்ந்தோய்” என்று வாழ்த்துகிறாள் (மணிமேகலை 5:98). புத்த தேவன் வேள்வி செய்யும் பார்ப்பான் இல்லை!
1e. முயற்சியின் பெருமை உயர்வுக்கு அடையாளம்.
புறநானூறு 214 முழுப்பாடலையும் படித்துப் பயனடையலாம். குறைந்தது 6-7 வரிகளையாவது தெரிந்துகொள்ளலாம்:
“… உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு-ச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு”
இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது ஒன்று: “உயர்ந்திசினோர்” என்ற சொல்லாட்சி! இதன் பின்னணியில் “இழிசினன்” போன்ற சொற்களையும் ஆராய்ந்து பார்க்கலாம்.
புறநானூறு 214
————————
செய்குவம் கொல்லோ நல்வினை, எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு-ச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவார் ஆயினும் இமயத்து-க்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு-த்
தீது-இல் யாக்கையொடு மாயல் தவத்தலையே
1f. போரில் ஈடுபட்டது உயர்வு
பதிற்றுப்பத்து 11:10-11
… அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர் ஊக்கலை
இங்கே, பகைவரின் காவலை உடைத்த மன்னனின் ஊக்கம் புகழப்படுகிறது. அந்த முயற்சி “உயர் ஊக்கம்” என்ற சிறப்பைப் பெறுகிறது, இல்லையா.
அதோடு, தும்பைப் போரில் வீழ்ந்தவர்கள் எய்திய உலகம் “உயர்நிலை உலகம்” என்று குறிக்கப்பட்டது (பதிற்றுப்பத்து 52:9)
“குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பு என்பது ஒன்று உண்டு என்று கூறினார் ஆகலின்.”
இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது: “அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின்” என்ற கூற்று. அதாவது, ஒரு குலத்தின் பெயரைக் கொண்டு அந்தக் குலத்தில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவர்/இழிந்தவர் என்று முத்திரை குத்த முடியாது!
3. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சொல்லுவதின்படி, ‘இழிவு’ என்பது அழுகைச் சுவைக்கு ஓர் அடிப்படை. இங்கே உரையாசிரியர் சொல்லுவது: “இழிவு என்பது பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது.”
இன்னொரு நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை: “இழிக்கத்தக்கன பிறவும் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன.”
4. மொழி வழக்கிலும் ‘அழி/இழி’ என்ற கருத்து இருந்திருக்கிறது. “ஞ்” என்ற மெய்யொலி எந்தெந்த உயிரெழுத்தோடு இணைந்து ஒரு தமிழ்ச்சொல்லைத் தொடங்கலாம் என்று சொல்லும் தொல்காப்பிய நூற்பாவுக்கு உள்ள உரையில் “ஞழியிற்று” என்ற வழக்கைக் குறித்து அது “அழிவழக்கு” அல்லது “இழிவழக்கு” என்ற குறிப்பு உண்டு.
ஆக, இங்கே கருத்தில் கொள்ளவேண்டியது: செயல் திறமை, கொடை, வேள்வி, நோன்பு, போர்த்திறமை, கல்வி, செல்வம், எளிமை, நாற்றம், தோற்றம், மொழிப் பயன்பாடு போன்ற பண்புகளும் செயல்களும் ஒருவருக்கு “உயர்வு” அல்லது “இழிவு” என்ற நிலையைக் கொடுத்திருக்கின்றன.
உயர்பிறப்பு, இழிபிறப்பு
——————————
ஓர் உயிர் பிறக்கும்போதே அது ‘உயர்பிறப்பு’ அல்லது ‘இழிபிறப்பு’ என்று பச்சை குத்தின குறியீட்டைப் பெறுமா? அல்லது பிறந்தபின் வாழும் வகை முறையால் ‘உயர்பிறவி’ என்றோ ‘இழிபிறவி’ என்றோ குறிக்கப்படுமா? என்பது என் கேள்வி. இதுக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை; என்றாலும், கிடைத்த சங்க/சங்க மருவிய சான்றுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். முழுவதுமாக ஆய்ந்து சொல்ல இப்போதைக்கு இயலவில்லை. அதனால், சில அடிப்படைச் சான்றுகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
1. பிறப்புகளில் சிறப்பு/இழிபு என்பதுக்குச் செவ்வேள் பற்றிய பரிபாடல் 5:19-21 ஒரு கருத்தைத் தருகிறது.
“சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர் நின் வலத்தினதுவே”
பரிமேலழகர் உரை: “நின்னை ஒழிந்தார் நல்வினையால் சிறப்புடைய உயர்பிறப்பினர் ஆதலும் தீவினையால் இழிபிறப்பினர் ஆதலும் ஆகிய இது நின் ஆணைக்கண்ணது.”
ஆக, ‘நல்வினை, தீவினை என்பவை உயர்பிறப்புக்கும் இழிபிறப்புக்கும் காரணம்’ என்ற கருத்து நிலவியதுக்கு இந்தப் பரிபாடல் வரிகள் சான்று.
இங்கே சொல்லாட்சியைப் பாருங்கள்: ‘உயர்புஆகலும்,’ ‘இழிபு ஆகலும்.’
எந்த வகையான சமநிலைக் கோட்பாட்டிலிருந்து இந்த ‘உயர்பு’ நிலையும் ‘இழிபு’ நிலையும் ஆயின/உருவாயின? தெரிந்தால் தெளிவிக்கவும்.
2. சரி. ‘இழிபிறப்பாளன்’ என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அதுக்கு எதிராக ‘உயர்பிறப்பாளன்’ ஒருவனும் இருந்திருக்க வேண்டுமே.
இதோ, அவன் சிலப்பதிகாரத்தில் (15:48) இருக்கிறான். கோவலன் தொடர்பால் மாதவிக்கு மணிமேகலை பிறந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டுக் கோவலன் செய்த செம்பொன் தானத்தைப் பெற்றுக்கொள்ள வந்த ஒரு முதிய மறையோன் “உயர்பிறப்பாளன்” என்று குறிக்கப்படுகிறான்.
3. ஒழுக்கம் இல்லாதவர்களின் பிறப்பு ‘இழிந்த பிறப்பு’ ஆகிவிடும்.
குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்
குறள் 134:
மறப்பினும் ஓத்து-க் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
ஆக, “உயர்ந்தோன்” என்பவன் ‘பார்ப்பான்/மறையோன்’ என்றால், இதோ, இந்தக் குறட்பாக்கள் அவனை இழிந்த பிறப்பினனாகச் செய்யும் நிலைகளைச் சுட்டுகின்றன.
4. சிலப்பதிகாரத்தில் (10:241), கண்ணகியையும் கோவலனையும் பார்த்துக் கேலி செய்த வம்பர்கள் இருவரைக் கவுந்தியடிகள் சபிக்கிறார், கேலி செய்த வம்பர்கள் “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக”ப் போகக் கடவது என்று. அதைக் கேட்டும் கண்டும் நடுங்கிய கண்ணகி-கோவலருக்குக் கவுந்தியடிகள் சொல்லுவது: “அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்”
பாருங்கள், பிறந்துவிட்ட ஒரு பிறப்பில் சிலருடைய நிலைமை எப்படி மாறக்கூடும் என்று.
5. கலித்தொகையில், ஒரு குறளின் பிறப்பு ஒரு கூனின் பிறப்பைவிட இழிந்ததோ என்ற கேள்வி எழுகிறது (கலித்தொகை 94:27-28).
இந்தக் கலித்தொகை வரிகள் ஒருவரின் உடல் உறுப்பின் குறை ‘இழிந்த பிறப்பு’ எனக் கருதப்பட்டதுக்கு நல்ல சான்று.
இங்கே கருத்தில் கொள்ளவேண்டியது: ஒரு குறிப்பிட்ட நிலையிலிருந்து அதற்குக் கீழான நிலையை அடைந்தது ‘இழி’ந்ததாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. கலித்தொகையில் காணும் குறளனைவிடக் கூனியின் பிறப்பு இழிந்ததோ என்ற கேள்வியை நினைத்துப் பார்க்கவேண்டும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகளின் சாபத்தால் இரண்டு வம்பர்கள் நரிகளாக மாறினது ‘இழிந்த பிறப்பாக’க் குறிக்கப்பட்டது. இப்படி எந்தெந்தச் செயல்கள் ஒருவனை 'இழிந்த பிறப்பினன்' என்று கருதச் செய்தன என்று பார்ப்பது நல்லது. இயன்றவரை பார்ப்போம்.
இந்தப் பதிவில் இழிந்தோன், உயர்ந்தோன், இழிசினன், இழிபிறப்பாளன்பற்றிப் பார்ப்போம்.
கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை.
++++++++++++++++++++++++
இலக்கியத்தில்
——————
எனக்குப் புலப்பட்ட அளவில், சங்கப் பாடல்களில் ‘இழிந்தோன்’ என்ற சொல்லாட்சி இல்லை. இருந்தால் தெரிவிக்கவும், என் சேவியில் சேர்த்துக்கொள்வேன்.
‘இழி’ என்ற அடிச்சொல்லிலிருந்து கிளைத்துக் கிடைத்திருக்கும் சொற்களும் ’உயரமான ஒர் இடத்திலிருந்து (physical location) அந்த இடத்தை விட்டுக் கீழே இறங்கிய/வழிந்த நிலையையே சுட்டுகின்றன: இழிந்தனன் (அகநானூறு 66:13), இழிந்தாங்கு (அகநானூறு 197:12)
சங்க மருவிய இலக்கியமான மணிமேகலையிலும் அவ்வாறே: இழிந்தனன் (14:82) இழிந்தோன் (10:33; 14:83)
அதற்கு ஏற்பாக, ‘ஏறினன்’ (மணிமேகலை 14:83) என்ற சொல் தாழ இருந்த இடத்திலிருந்து உயரமான இடத்துக்குச் சென்ற நிலையையே குறிக்கிறது.
இந்தச் சங்க, சங்க மருவிய, பாடல்களில் பயிலும் சொல்லாட்சிகளில் சாதி, குலம், கோத்திரம் … போன்ற குறிப்புக்கு இடமேயில்லை.
இலக்கணத்தில்
———————
இலக்கணத்தில் சற்று வேறான நிலையைக் காண்கிறோம். அங்கே வருண அடிப்படையில் உருவான சொல்லாட்சி கிடைக்கிறது.
‘இழிந்தோன்’ (தொல்காப்பிய உரை)
‘இழிந்தாராவார்’ (தொல்காப்பிய உரை): “அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் அரசர்க்கு ஏனையிரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் வணிகர்க்கு வேளாண்குலத்தில் கொடுக்கப்பட்டாரும்.”
[அதாவது:
A, B, C, D என்பவை முறையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பவரைக் குறிப்பதாகக் கொள்வோம். இவர்களுள் அந்தணன் ஒருவன் அரசர் குலத்துப்பெண், வணிகக் குலத்துப் பெண், வேளாண் குலத்துப்பெண் இவர்களைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம். அரசன் ஒருவன் வணிகக் குலத்துப் பெண், வேளாண் குலத்துப்பெண் இவர்களைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம். வணிகன் ஒருவன் வேளாண் குலத்துப் பெண்ணைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம்.
இந்த இணைப்பில் பிறக்கும் பிள்ளைகள் ‘அநுலோமர்’ (A, B, C, D —> AB, AC, AD; BC, BD; CD) என்ற கருத்து கிடைக்கிறது. இது இன்னொரு நூற்பாவின் உரையிலும் விளக்கமாகக் கிடைக்கிறது. தேவையானால் பிறகு விளக்கம் சொல்வேன். ]
‘இழிந்தோர்’ என்ற சொல் இறையனார் களவியல் உரையில் வாணிகரையும்வேளாளரையும் குறிக்கிறது (சூத்திரம் 39, உரை)
அதே உரையில் காண்பது:
… உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும். … உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசருமேயாகலான் …
‘உயர்ந்தோர்’ பற்றிய இதேகருத்தை இறையனார் களவியலின் 38-ஆம் சூத்திரத்தின் உரையிலும் காணலாம்: “உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும். … உயர்ந்தோராவார் பார்ப்பாரும் அரசருமே …”
‘இழிந்தார்'என்ற சொல் பற்றி இறையனார் களவியலில் சூத்திரம் 39-க்குக் காணும் உரையில்:
"இழிந்தோர்க்கு உரிய என்பது என்பது வாணிகர்க்கும் வேளாளர்க்கும் கிழமையுடைய என்றவாறு. … ஒழிந்தார் என்பது பொருவிறப்பினோடு மாறுகொள்ளும் எனின், கொள்ளாது. இந்நூல் உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்றதாகலான் உலகியல் நோக்கிச் சாதிவகையான் இழிந்தார் எனப்பட்டது. ஒழிந்தனவற்றால் பொருவிறப்பு இருவர்க்கும் ஒக்கும் என்பது.
… உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும்.
… உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசருமேயாகலான் … "
எனக்குத் தெரிந்த அளவில், இங்கேதான் “சாதிவகையான் இழிந்தார்” என்ற கருத்து முதல் முறையாக வெளிப்படையாகிறது!
பிறகு இளம்பூரணர் உரையில் காண்பது: “தன்மை என்பது — சாதியியல்பு" என்றும், “பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்று இன்னோர் மாட்டு ஒருவரையொருவர் ஒவ்வாமல் கிடக்கும் இயல்பு" என்றும் காண்கிறோம்.
நன்னூலார் “சாதி" என்பதைக் “குணம்" என்று கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது! பெயர்ச்சொற்களின் வகைகளைக் குறிக்கும்போது “… … சாதி குடி சிறப்பு ஆதிப் பல் குணம்"என்று சொல்லி இவை ஆண் பெயர் உருவாக்கத்துக்கு அடிப்படை என்று சொல்கிறார்.
ஆக, இலக்கண நூல்களில் “சாதி" என்ற கருத்து எப்போது எப்படி உருவானது என்பதைப் பார்க்கிறோம்.
++++++
இழிசினன், இழிபிறப்பாளன்
———————————
“இழிசினன்” “இழிபிறப்பாளன்” என்ற சொற்களை அறிந்துகொள்ள முயல்வோம். இந்தச் சொற்களைப் பற்றிப் பலரும் அலசியிருக்கிறார்கள். எனக்குப் புலப்பட்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
இழிசினன்
—————
ஓலைச்சுவடிகளில் எப்படியிருக்கிறதோ இன்று நமக்குக் கிடைத்திருக்கும் வடிவம்: “இழிசினன்.”
இது ஒரு முக்கியமான கருத்தாகத் தெரிகிறது. ‘இழிசினர்க்குஉணவு கொடுப்பது கடன்’ என்று ஏன் சொல்லவேண்டும்?
துருவித் துருவிப் பார்த்தபோது நான் கண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
பழமொழி நானூறு என்ற சங்க மருவிய இலக்கியத்தில் காண்பது:
“கடிஞையில் கல் இடுவார் இல்.” கடிஞை என்பது பிச்சைப்பாத்திரம். இந்தப் பழமொழியின் பொருள் எனக்குப் பல நாள் புரியாமல் இருந்தது, பிறகு மணிமேகலையில் உதவி கிடைத்தது.
சிறுபஞ்சமூலத்தில் காணும் “இழிசினர்" [பாட வேறுபாடு: ‘இழியினர்’] என்ற சொல்லுக்கும் பழமொழி நானூற்றில் காணும் “கடிஞையில் கல் இடுவார் இல்” என்ற மொழிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிய மணிமேகலையில் காணும் ஆபுத்திரன் கதை உதவுகிறது.
சங்க மருவிய இலக்கியமான மணிமேகலையில் காண்பது:
வாரணாசியில் வாழ்ந்த சாலி என்ற ஒரு பார்ப்பினி (மறையோதும் ஒருத்தனின் மனைவி) இல்லற முறையிலிருந்து வழுவிக் கணவனல்லாத ஒருவனின் தொடர்பால் கருக்கொண்டதால் அடிக்குப் பயந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தென்னகக் குமரியை நோக்கி வந்த போது ஒரு தோட்டத்தில் பெற்றுக் கைவிடப்பட்ட குழந்தை ஆபுத்திரன். அந்த ஆபுத்திரன் ஒரு மறையோம்பாளரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டாலும், வேத நெறியை, குறிப்பாக வேள்வியை, மறுத்த போது அவனை வளர்த்தவர் அவனைக் கைவிட, ஊர் மக்கள் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில்உணவுக்கு மாறாகக் கல்லைப் போட்டார்கள்.
அதைக் கடிந்த பழமொழி நானூறு “கடிஞையில் கல் இடுவார் இல்” என்று குறிக்கிறது என்று எடுத்துக்கொள்கிறேன். [ஒருவேளை இது வைதிக/பவுத்த/சமணக் கொள்கைகளின் வேறுபாட்டைச் சுட்டலாம், தெரியவில்லை.]
இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது:
ஆபுத்திரன் ஒரு ‘புலைமகன்,’ அதாவது பரத்தமையில்பிறந்தவன். தாய் சாலி (ஒரு பார்ப்பினி) தன் இல்லற முறையிலிருந்து பிறழ்ந்து வேறொருவனுடன் கொண்ட தொடர்பால் பெற்ற பிள்ளை ஆபுத்திரன். அந்த ஆபுத்திரன் வேத நெறியை மறுத்தபோது அவனுக்கு ஊராரின் ஆதரவு கிடைக்கவில்லை.
ஆபுத்திரன் போன்றவரையே (அதாவது, பரத்தமையில் பிறந்தவர்களைச்) சங்க இலக்கியமும் சங்க மருவிய இலக்கியமும் “இழிசினர்" என்று குறித்திருக்கவேண்டும்.
பிற்காலத்தில் இலக்கண நூலில் “இழிசினர்" என்ற சொல் காணுகிறது.நன்னூல் நூற்பா 266-க்கு மயிலைநாதர் சொன்ன உரையிலிருந்து ‘சோற்றைச் சொன்றி என்று சொல்வது இழிசினர் வழக்கு' என்று தெரிந்துகொள்கிறோம்.
இங்கே எந்தச் ‘சாதி' பற்றிய குறிப்புமில்லை. தொழிலடிப்படையில் அமைந்த பெயர்களாகிய தச்சர், கொல்லர் ஆகியவை குறிக்கும் மக்கள் தங்களுக்குள்ளே புழங்கும் குழூஉக்குறிச் சொற்களைப் போலவே ‘சொன்றி' என்ற சொல்லையும் மயிலைநாதர் குறிக்கிறார்.
‘சொன்றி' என்ற சொல் சங்கப்பாடல்களில் பயிலுவது பலருக்கும் தெரியும்.
அந்தப் பாடல்களிலிருந்து தெரியவருவன:
1. சோறு என்பதும் சொன்றி என்பதும் வேறு வேறு.
2. ஊன் கலந்த சோறு சொன்றி.
3. இரப்பவர்க்கு ஈயப்பட்டது சொன்றி.
ஆகவே, ஊன் கலந்த சோறு உண்பவரும் இரப்பவரும் ஒரு காலத்தில் (மயிலநாதர் காலத்தில்?) ‘இழிசினர்' என்று கருதப்பட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது.
இழிபிறப்பாளன்
——————
இதுவும் ‘இழிசினன்' என்ற சொல்லைப் போன்று தெரிகிறது. ஒருவேளை செய்யுள் யாப்பு அமைப்புக்காக இழிசினன் என்ற சொல் இழிபிறப்பாளன் என்று உருவாகியிருக்கலாம். இழிசினன் — நிரை-நிரை; ‘இழிபிறப் பாளன்’ — நிரை-நிரை நேர்-நேர்.
அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் என்று அமைந்த குலங்களுள் ஒரே குலத்துப் பெண்ணும் ஆணும் கூடிப் பெறாத பிள்ளை ‘இழிபிறப்பாளன்.’ இதைத் தொல்காப்பிய நூற்பாக்கள் பலவற்றின் உரைகளிலிருந்து புரிந்துகொள்கிறேன்.
இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடுவோம்.
கொஞ்சம் நீளமான பதிவு, அதனால் இரண்டாகப் பிரித்து எழுத விருப்பம். படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை.
++++++++++++++++++++++++
‘தீண்டாமை’ என்றால் யாரோ ஒருவர் இன்னொருவர் மேல் ‘தீட்டு’ இருப்பதாகக் கற்பித்துக்கொண்டு அந்தத் ‘தீட்டுப்பட்டவர்'களைத் தீண்ட விரும்பாத நிலை என்று புரிந்துகொள்கிறேன்.
சங்க இலக்கியத்தில் 'தொடுதல்' என்பதும் 'தீண்டுதல்' என்பதும் வெவ்வேறு பொருளைத்தரும். முதலது ஆண்-பெண் உறவோடு (penetration) 'தோண்டுதல் (digging)' என்ற பொருளையும் தரும். காட்டு: 'பாசியற்றே பசலை ... தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே;' 'குளம் தொட்டு வளம் பெருக்கி ... .' முதலதை விளக்காமல் 'இடக்கரடக்கல்' என்று மறைத்துவிட்டார்கள். 'தீண்டுதல்' என்றால் ஒரு பொருளும் இன்னொரு பொருளும் இடைவெளியில்லாத அணுக்க நிலையில் அமைதல். இதையும் மனதில் கொள்ளவும்.
'தீட்டு' என்றால் என்ன என்று சங்கப்பாடல்களிலிருந்து அறிய முடியவில்லை.
இப்போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சங்கப்பாடல்களில் 'தீட்டு' என்ற கருத்து எங்கே வெளிப்படுகிறது என்றும் எனக்குப் புலப்படவில்லை.
இந்த நூற்றாண்டில் எனக்குத் தெரிந்த 'தீட்டு' என்ற கருத்தையோ ‘தீண்டாமை’ என்ற கருத்தையோ சங்கப் பாடல்களில் யான் காணவில்லை.
'தீட்டு' ‘தீண்டாமை’ பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவில் சங்க இலக்கியத்தில் விளக்கமோ சான்றோ ஏதேனும் அகப்பட்டால் குழப்பாமல் தெளிவாகச் சொல்லுங்கள். என் கருத்துச் சேவியில் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன்.
இக்கால வழக்குப்படித் "தீண்டாமை" என்பது மக்களைப் பற்றியது ஆதலால் ... மக்களின் பெருக்கம், மக்களின் தொழில்கள், மக்களின் இருப்பிடம், மக்களின் செல்வ வளம், ஆண்-பெண் உறவு, இரவலரும் புரவலரும் என்ற கோணங்களில் சங்கப் பாடல்களில் "தீண்டாமையை"த் தேட முயலுகிறேன்.
நிற்க.
1. மக்களின் அடிப்படைப் பிரிவுகளும் அவர் பெருகிப் பல்கியமையும்
சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை + பத்துப்பாட்டு) பொதுமக்களின் இயற்பெயர்கள் கிடைப்பது அரிது. மன்னர், அரசர், வள்ளல், புலவர் ஆகியோரின் பெயர்களோடு பெண்களின் பெயர்கள் சில (ஐயை, மருதி, வெள்ளிவீதி, ஆதிமந்தி … என) அரிதாகக் கிடைக்கின்றன. அந்தப் பெயர்களும் ஏதோ ஒரு வள்ளல்/மன்னன்/ஆடுவான் என்று பொது வாழ்வில் புகழ் பெற்ற ஓர் ஆடவனுடன் தொடர்பான பெண்களின் பெயர்களே.
அதைத் தவிர, மக்களைச் சுட்டும் பெயர்கள் எல்லாமே திணை, நிலம், குடி, கிழமை, தொழில், பண்பு … இன்ன பிறவற்றின் அடிப்படையில் உருவாகியதைக் காண்கிறோம். இதை முன்னொரு பதிவில் (http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html) பார்த்தோம்.
இந்தப் பெயர்களில் ‘தீண்டாமை’ என்ற கருத்து இழையோடக்கூட இல்லை. 'புலையன்' என்றால் தீண்டத்தகாதவன், 'பறையன்' என்றால் தீண்டத்தகாதவன் இன்ன பிற கருத்தெல்லாம் இலக்கியச் சான்று இல்லாமல் கற்பித்துக்கொள்ளப்பட்டவை. பிற மக்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பட்டம் கட்டி ஒதுக்கிய நிலையைச் சங்கப்பாடல்களில் காணேன்.
1a. தமிழகத்தில் மக்கள் பெருகிப் பல்கிய நிலையைப் பற்றிய கருத்து இலக்கணத்தில் கிடைக்கிறது.
தொல்காப்பிய உரையில்:
“…… கிழவனும் கிழத்தியும் …… பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மர் ஆவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மர் ஆவர். இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலர் ஆவர்.”
A, B, C, D — அந்தணர் (A), அரசர் (B), வணிகர் (C ), வினைஞர் (D) என்று வைத்துக்கொள்வோம்.
அநுலோமர் (6 வகை)
——————————
AB, AC, AD, BC, BD, CD
அந்தணர் குல ஆண் + அரசர் குலப் பெண் —> அநுலோமர் (AB)
அந்தணர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (AC)
அந்தணர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (AD)
அரசர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (BC)
அரசர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (BD)
வணிகர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (CD)
நில வகைப் பிரிவுகளின்படி மக்கள் வகை (10 x 4)
————————————————————
(அடிப்படை 4 குலம் + அநுலோமர் 6 வகை == 10 வகை) x குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்கள் (4) == 40 வகை
ஒவ்வொரு நிலத்திலும் உயிர்களின் பன்மை
—————————————————
40 x ஆயர் குலம்
40 x வேட்டுவர் குலம்
40 x குறவர் குலம்
40 x பரதவர் குலம்
*******************
இதையெல்லாம் இலக்கணத்தில் இவ்வளவு விளக்கமாகச் சொல்லக் காரணம் என்ன?
பெண்கொடுத்தல், பெண்கோடல் என்ற முறைகளில் தமிழக மரபும் வடக்கத்தி மரபும் வேறுபட்டிருக்கின்றன.
வடக்கத்தி முறை: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றுள் முதல் நான்கும் (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம்) பெண்ணைக் கொடுக்கும் முறை; இங்கே பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. பின்னவை மூன்றும் (அசுரம், இராக்கதம், பைசாசம்) பெண்ணைக் கொள்ளும் முறை. இங்கேயும் பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. ஏதோ ஒரு போட்டியில் வெற்றி பெற்றுப் பெண்ணை அடைதல், பெண்ணை வலிய எடுத்துச் செல்லுதல், பெண் அசந்து இருக்கும் நேரத்தில் அவளை வலியப் புணர்தல் போன்ற முறைகளே இவை. இடைப்பட்ட ஒன்று (காந்தருவம்) மட்டுமே பெண்ணுக்குத் தன் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்ததைத் தெரிவிக்கிறது.
தமிழக முறை: களவு, கற்பு. தன் துணையைத் தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை இருந்ததைக் களவு என்ற முறை சொன்னாலும், அந்தக் களவு கற்பில் முடிவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் உடன்போக்கு என்ற முறை அமைந்தது.
தமிழகத்துக் ‘களவு’ என்ற மணமுறை வடக்கத்திக் ‘காந்தருவம்’ என்பதற்கு ஈடானது என்று ஆரிய அரசன் பிரகத்தனுக்கு விளக்க முனைந்த இலக்கியம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு. எல்லாருக்கும் இந்தக் களவு-கற்பு முறையை இலக்கண நூல்களாகிய தொல்காப்பியமும் இறையனார் களவியலும் விளக்குகின்றன.
[குறிஞ்சிப்பாட்டைத் தனியாக அலச வேண்டும்.]
களவு என்ற ஒழுக்கத்தில் ஈடுபடத் தொடங்கும் பெண்ணும் ஆணும் எந்தெந்த வகைகளில் ‘ஒத்து’ இருப்பார்கள் என்று தொல்காப்பியர் சொல்கிற போது, அந்த ஆடவன் ‘மிக்கோன் ஆயினும்’ பரவாயில்லை என்றும் சொல்லிவிட்டார். அதைத் தொடர்ந்துதான் அநுலோமக் கருத்துவெளிவருகிறது.
“இழிந்தானொடு உயர்ந்தாட்கு உளதாகிய கூட்டம் இன்மை பெருவழக்கு ……“ என்பது உரை. அதாவது, தமிழகத்தில், உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி அவள் குலத்தைவிட இழிந்த குலத்தவனோடு கூடுவது அந்தக் காலத்தில் பரவலாக நடைபெறவில்லை என்று தெரிகிறது.
‘தீண்டாமை’ என்பது ஒரு தீவிரக் கோட்பாடாக இருந்திருந்தால்… மக்கள் பெருகிப் பல்கியதைக் குறித்த தொல்காப்பியரோ விளக்கம் சொன்ன உரையாசியரோ அந்த மக்களுள் இவர் இவர் இந்த இந்தக் காரணத்தால் 'ஒதுக்கப்பட்டவர்/‘தீண்டத்தகாதவர்’ என்று ஏன் குறிப்பிடவில்லை?
2. மக்களின் தொழில்கள்
இயற்கை தந்த நிலத்தோடும் நீரோடும் ஒட்டி நிலையாக வாழ்ந்து தொழில் செய்தவர்கள் நெய்தல்நில மக்களும் மருதநில மக்களுமே. இவர்கள் தொழில் செய்த இடங்களின் இயற்கை/செயற்கை மாற்றத்தால் நிலத்தின் கூறும் தொழிலின் நிலையும் மாறுபடும். மற்ற நிலத்து ஆயர், வேட்டுவர், குறவர் எல்லாருமே இடம் பெயர்ந்துகொண்டேயிருக்கவேண்டிய தேவை இருந்திருக்கும், இல்லையா?
இலக்கியத்தில்
-----------------------
வணிகம்:
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆகிய புலவர்களின் பெயர்கள் பலருக்கும் பழக்கமானவையே. மாசாத்துவான், மாநாய்கன், கோவலன், சாதுவன், சந்திரதத்தன் என்ற வணிகர்களின் பெயர்கள் சங்கமருவிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன. மணிமேகலையில் காணும் "கம்பளச்செட்டி" என்ற குறிப்பு கடல் கடந்து கம்பள வணிகம் செய்தவனைக் குறிக்கிறது.
வேளாண்மை:
வேள், வேளாண்மை, வேளாளர் (பரிபாடல்), … இன்ன பிற.
வேளாண்மைசெய்தன கண் (கலித்தொகை)
இதைத் தவிரப் பல்வேறு தொழில் செய்தவர்களைப் பற்றியும் ஏற்றுமதி/இறக்குமதி வணிகம், பண்டங்களுக்குக் கரிகாலனின் முத்திரை, சுங்கவரி, நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு), அல்லங்காடி (இரவு நேரக் கடைத்தெரு) இன்ன பிறவற்றைப் பற்றியும் மதுரைக்காஞ்சி (511-522), பட்டினப்பாலை (118-136) போன்ற இலக்கியங்களிலிருந்து அறியலாம்!
இலக்கணத்தில்
-----------------------
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது … ; வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் … (தொல்காப்பியம்)
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்காப்பியம்)
தொல்காப்பிய உரையில் காணுவது: உமண் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எயின் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, நம்பிப்பூ, நம்பிப்பேறு என வரும். எல்லாக் கொல்லரும் சேவகரும் தச்சரும் புலவரும் எனவும், எல்லா ஞாயிறும் நாயகரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். இவற்றோடு, கோலிகக் கருவி, வண்ணாரப் பெண்டிர், ஆசீவகப்பள்ளி என்ற குறிப்பும் கிடைக்கிறது.
இங்கே “உமண்” என்பது ‘கிளைப்பெயர்’ என்பதற்கு எடுத்துக்காட்டு. பிற பெயர்களை — எயின், எட்டி, கொல்லர், நாயகர், மணியகாரர், வணிகர், அரசர்… ஆகியவற்றை நீங்களே புரிந்துகொள்க.
இந்த வகைப் பிரிவுபட்ட உறைவிடங்கள் அவரவர் செய்த தொழில் அடிப்படையில் அமைந்தனவே தவிர, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற அடிப்படையில் அமையவில்லை.
இலக்கணத்தில்
———————
ஒவ்வொரு திணைக்கும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) உரிய ‘கருப்பொருள்’ என்று தொல்காப்பியம் (அகத்திணையியல் 20) குறிப்பவை: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பவை.
“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கரு என மொழிப”
இதைச் சற்றே விளக்கமாக முதலில் தெரிவிப்பது இறையனார் களவியல் உரை. இறையனார் களவியல் உரையில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள் பட்டியலைக் காண்கிறோம்.
இங்கே குறித்துக்கொள்ள வேண்டியவை இரண்டு:
1. தொல்காப்பிய நூற்பாவில் மக்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இறையனார் களவியல் உரை மக்களையும் சுட்டி, அதில் தலைமகன், தலமகள், மக்கள் என்ற பிரிவையும் குறிக்கிறது.
2. பறையடித்தவரும் யாழிசைத்த கலைஞரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் என்ற குறிப்பு எங்குமேயில்லை.எல்லா நிலத்திலும் அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பறை முழக்கம் செய்திருக்கிறார்கள், யாழிசைத்திருக்கிறார்கள். அந்தந்த நிலங்களில் பறை முழக்கம் செய்த எல்லாரும் பறையரே, யாழிசைத்த எல்லாரும் பாணரே, துணங்கை போன்ற கூத்தாடிய எல்லாரும் கூத்தரே. சேர மன்னன் ஒருவன் தன் போர் வெற்றிக்குப் பிறகு துணங்கைக் கூத்துக்குத் தலைக்கை தந்தான் என்று அவனுடைய மனைவி ஊடல் கொண்டமையை ஒரு புலவர் பாடுகிறார். (இதைப் பற்றிய என் பதிவை இங்கே பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2010/12/blog-post_31.html)
இலக்கியத்தில்
——————
பட்டினம், பாக்கம், சேரி, குடி, ஊர், தெரு, மறுகு, நகர், பாடி, இருக்கை, பதி, …என்று பல வகை இடங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ‘வீதி’ என்ற சொல் சிலப்பதிகார, மணிமேகலைக் காலத்திலிருந்து வழக்காறு பெறுகிறது; ஆனால், சங்கப் பாடல்களில் ஒரு பெண்ணின் பெயரில் (வெள்ளிவீதி) மட்டுமே 'வீதி' என்ற சொல் காண்கிறது.
இந்தச் சொற்களில் ஒவ்வொன்றும் சங்க இலக்கியங்களில் எவ்வாறு புழங்குகிறது என்று ஆய்வதே முறை. அதை ‘விரிக்கின் பெருகும்’ என்பதனால் அந்த வகை ஆய்வு இங்கே இல்லை.
பொதுவாகவும் சுருக்கமாகவும் சொன்னால் …
பட்டினம், பாக்கம் இரண்டும் நெய்தல் நிலத்து இடங்களாகவும் கடல் தொடர்பான வணிகம் நிகழ்ந்த இடங்களாகவும் தெரிகிறது.
ஊர், பதி என்பவை உள்நாட்டிலும் கடல் அல்லது நீர்ப்பரப்பு சூழந்ததுமான இடங்களிலும் இருந்தவை எனத் தெரிகிறது.
யானையும் தேரும் செல்லும் வழி தெரு; பாம்பும் தெருவில் வழங்கியிருக்கிறது (குறுந்தொகை).
வணிகமும் பிற செயல்களும் நிகழும் இடம் மறுகு.
ஊருக்குள்ளேயோ தொட்டடுத்தோ சேரி, குடி, நகர் என்பவை மக்கள் குழுக்களாக வாழும் இடமென்றும் தெரிகிறது. குடி என்பது குறிஞ்சி நிலத்திலும் இருந்திருக்கிறது.
இருக்கைஎன்பது ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டவர்களின் தற்காலிகமான (temporary) நிலை என்பது-போலத் தெரிகிறது. மன்னனோ, வள்ளலோ மக்களைப் பார்ப்பதற்கும் பரிசில் வழங்குவதற்கும் என்று அமர்ந்திருந்த நிலை, பிற்காலத்தில் ‘திருவோலக்கம்’ என்று குறிக்கப்பட்ட நிலை, போல இருந்திருக்கலாம்.
பாடி என்பது போர்க்காலத்தில் காட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய பரந்த இருப்பிடம் என்பது தெரிகிறது. இந்தப் ‘பாடி’ என்ற சொல்லுக்குப் ‘பாசறை’ என்று உரைகாரர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். முல்லைப்பாட்டு உரை காண்க. அதோடு, சென்னை அகரமுதலியின் பொருளும் காண்க.
[பாடி¹ pāṭi
, n. < படு-. [T. pāḍu, K. M. pāḍi.] 1. Town, city; நகரம். பாடிவிழாக்கோள்பன்முறையெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2. Hamlet; quarters; சேரி. (திவா.) 3. Pastoral village;முல்லைநிலத்தூர். (திவா.) 4. District; நாடு. (யாழ். அக.) 5. Seeபாடிவீடு. பாடிபெயர்ந்திட்டான்பல்வேலான் (பு. வெ. 3, 10). 6. Army, troop; சேனை. (திவா.) 7. Armour, coat of mail; கவசம். (அக. நி.) 8. Spy; உளவாளி. (W.)]
ஆனாலும் பாருங்கள், ‘பாடி’ என்ற சொல் ‘தீண்டாமை’ என்ற கோட்பாட்டைக் காட்டவில்லை! பெரியபுராண நந்தனின் புலைப்பாடிக்கு எப்போது ‘தீட்டு’ உண்டானதோ தெரியவில்லை!
நிற்க.
'சேரி' என்ற சொல்லுக்குச் சிறப்பிடம் கொடுத்து அதன் வழக்காற்றைப் பார்ப்போம், ஏனென்றால் அந்தச் சொல்தான் காலப்போக்கில் உருவான ‘தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டாமை’ என்ற கோட்பாடுகளைச் சங்க இலக்கியத்தில் புகுத்திக் காண்கிறவர்களுக்கு விருந்து!
சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயலுவோம்.
1. சேரி என்பது என்ன?
2. அது எங்கே அமைந்திருந்தது?
3. சேரியில் யார் வாழ்ந்தார்கள்? என்ன தொழில் செய்தார்கள்?
4. சேரியில் மக்களின் போக்குவரத்து எப்படிப்பட்டது?
5. சேரியில் வாழ்ந்தவர் வறுமையில் வாடினார்களா?
6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?
+++++++++++++++
சங்க இலக்கிய வழக்காறுகளில் சில இங்கே:
1. ‘சேரி’ என்பது என்ன? இதற்குக் குறைந்தது இரண்டு உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
நற்றிணைக்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சொன்னது: “பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.” நற்றிணை 77, 331 காண்க.
தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் சொன்னது: “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் ‘பார்ப்பனச்சேரி’ என்பது.”
ஆகா! இதுவே ‘சேரி’ என்பது இழிந்தோர்/தாழ்ந்தோர்/ஒதுக்கப்பட்டோர்/தீண்டத்தகாதவர் வாழுமிடம் என்ற கருத்தைச் சட்டென வெட்டுகிறது!
2. ‘சேரி’ என்பது எங்கே அமைந்திருந்தது? சில எடுத்துக்காட்டுகள்:
உறைக்கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை: 76)
புறஞ்சேரியிறுத்த காதை (சங்க மருவிய சிலப்பதிகாரக் காதை ஒன்றின் தலைப்பு)
தமர் தமர் அறியாச் சேரி (நற்றிணை 331:12) [பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி. அவரே ‘ஆங்கண்’ என்பதுக்கு ‘ஊர்’ என்று பொருள் கொண்டு, ‘ஊரிலுள்ள சேரியெனக் கூட்டுக’ என்கிறார்!] ஊரலஞ்சேரிச் சீறூர் (நற்றிணை 77:8) [பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.]
2a. முதலில் சங்க மருவிய சிலப்பதிகாரக் குறிப்பைத் தெளிவுபடுத்திவிடுவோம். காதையின் தலைப்பில் ‘புறஞ்சேரி’ என்று இருக்கிறதே தவிர, காப்பிய வரிகளில் இல்லை! காப்பிய வரிகளில் உள்ளது ‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ — “அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் புறஞ்சிறைப் பொழில் (13:195; 14-1); அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் (15:7-8). அறத்துறை மாக்கட்கல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது (15:107-108).
[‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ என்பவை அறம் செய்யும் அறவோர் நிறைந்த இடம் என்று தெரிகிறது.’ அது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழும் இடம் என்று சொல்லமுடியுமா?]
2b. “உறைக்கிணற்றுப் புறச்சேரி” என்ற பட்டினப்பாலை வரியைக் கொண்டு ‘சேரி என்பது ஊருக்குப் புறத்தே, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழ்ந்த இடம்’ என்று முடிவு கட்டுவது மிகப்பெரும் தவறு. “புறச்சேரி” என்பது சேரியின் இட அமைப்பைக் குறிப்பது உண்மை. ஆனால் அது மக்களின் தாழ்ச்சியையோ ஒதுக்கப்பட்டமையையோ தீண்டாமையையோ குறிக்கவில்லை.
[‘உறை’ என்பது சுட்ட களிமண்ணால் ஆன, தேவையான உயரமும் விட்டமும் கொண்ட வளையம். ’உறைக்கிணறு’ என்பது பல உறைகள் இறக்கப்பட்ட கிணறு. இது கரிகாலன் ஆண்ட காவிரிப்பூம்பட்டினத்தின் தொழில்நுட்பத்தைச் சுட்டும் மிகச் சிறந்த குறிப்பு. நெய்தல் நிலத்தில், பட்டினக்கரையில் குடிநீருக்காக உறையிட்டு அமைக்கப்பட்ட கிணறுகள் அன்றைக்கு இருந்தமைக்கு இது வலுவான சான்று. பிற நிலத்து மக்களுக்கு அருவி, ஆறு, சுனை, குளம் … போன்ற நீர்நிலைகள் இருக்க நெய்தல் நில மக்களுக்கு உப்பில்லாத குடிநீர் கிடைக்க இந்த உறைக்கிணறுகள் பயன்பட்டிருக்க வேண்டும். உறையின் களிமண் கடல்நீரை வடிகட்டும் கருவியாக அமைந்திருக்கும். இது கரிகாலனின் திறமையை எடுத்துச் சொல்லுகிறது. கல்லணை கட்டிய சோழத்திறமை அல்லவா!
இன்றைக்கும் சாயல்குடி என்ற ஊருக்கு அருகே ‘உறைக்கிணறு’ என்றஇடம் இருக்கிறது என்பதை இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளலாம். தினமலர்ச் செய்தியிதழ்ப் பதிவு ஜூன் 21, 2010. 20-ஆம் நூற்றாண்டில் நகர்களிலும் வீட்டிற்குள் கடின உறைகள் (cement/concrete rings) இறக்கி உறைக்கிணறு அமைத்தார்கள்.]
2c. “ஓரூர் வாழினும் சேரி வாரார்” என்ற குறுந்தொகை (231:1) வரி ஒரே ஊரில் தலைமகனும் தலைவியும் வாழ்ந்தாலும் அவன் அவளுடைய சேரிக்கு வருவதில்லை என்று சொல்கிறது. இது மருதநிலத்தில் ஊரும் சேரியும் ஒருங்கே இருந்தமைக்குச் சான்று.
2d. “மையீர் ஓதி மடவோய், யானும் நின் சேரியேனே, அயலிலாட்டியேன்” என்று மருதநிலத்தில் தலைவியிடம் பரத்தை சொல்கிறாள் (அகநானூறு 386:10-11). தலைவியும் பரத்தையும் ஒரே சேரியில் அண்டைவீட்டுக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!சேரியில் வாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்றால் அங்கேயிருந்த பெண்களுடன் உறவாடிய பரத்தனை என்ன வகையில் அடக்கலாம்???
ஆக, ‘சேரி’ என்பது தாழ்ந்தவருக்கு/ஒதுக்கப்பட்டவருக்கு/தீண்டத்தகாதவருக்கு என்று அமைந்த தனி இடம் என்ற கருத்து எவ்வளவு தவறு என்பது வெளிப்படை.
3. சேரியில் வாழ்ந்தவர் யார்? அவர்கள் என்ன தொழில் செய்தார்கள்?
மீன் சீவும் பாண்சேரியொடு, மருதம் சான்ற தண்பணை (மதுரைக்காஞ்சி: 269-270) [பொருள் வெளிப்படை.]
வாலிழை மகளிர் சேரி (நற்றிணை 380:5) [பின்னத்தூரார் உரை: தூய இழையணிந்த பரத்தையர் சேரி. அப்படி என்றால் வாலிழை மகளிர் எல்லாரும் பரத்தையரா? அகநானூற்றுப் பாடலில் (86:12) குறிக்கப்படும் “வாலிழை மகளிர்” பரத்தையரா? இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.]
பாடுவார் பாக்கம் கொண்டென, ஆடுவார் சேரி அடைந்தென (பரிபாடல் 7:31-32) [பாடுகிறவர்கள் வாழும் பாக்கத்தை வளைத்து, ஆடுகிறவர்கள் வாழும் குடியிருப்பை (வையைப் புனல் அடைந்தது).]
தொல்காப்பிய உரையில் உமண் சேரி, எயின் சேரி என்ற எடுத்துக்காட்டுகளைக் காண்கிறோம்.
இந்தச் சான்றுகளைப் பார்த்தால், மீன் பிடித்த பாணர், பரதவர், உமணர், எயினர், ஆடுகிறவர் (ஆண் + பெண்), கொல்லர் … இன்ன பிற மக்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அதோடு, முன்னர்க் குறிப்பிட்டவாறு “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது” என்ற தொல்காப்பிய உரையே போதும் — சேரிகளில் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கருத்தை மறுக்க.
4. சேரியில் மக்கள் போக்குவரத்து எப்படிப்பட்டது?
சேரியில் யார்யார் போய்வரலாம் என்ற கட்டுப்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. “தமர் தமர் அறியாச் சேரி” என்ற நற்றிணை (331:12) வரி அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போனார்கள் என்று குறிக்கிறது.
ஆனாலும், இங்கே கலித்தொகைப் பாடல் (65) ஒன்று சிந்திக்கத்தக்கது. சுருக்கமாகச் சொல்கிறேன்.
நல்ல இருட்டு நேரத்தில் தலைவன் வரவுக்காக ஒருத்தி காத்திருக்கிறாள். அப்போது அங்கே ஒரு "முடமுதிர் பார்ப்பான்" வருகிறான். தலைவியைப் பார்த்து ‘இந்த நேரத்தில் இங்கே நிற்கிற நீ யார்’ என்று அவளிடம் கேட்டுவிட்டுத் தம்பலம் கொடுக்கிறான். அவள் தான் ஒரு பிசாசு போல நடிக்கிறாள். பார்ப்பான் அஞ்சுகிறான். அவள் அவன்மேல் மணலை வாரித் தூவுகிறாள். அவன் பதறி அரற்றுகிறான். புலியைக் கொள்ளுவதற்கு என்று விரிக்கப்பட்ட வலையில் ஒரு குறுநரி சிக்கியது-போல இருந்தது அந்த அவலம்.
இந்த நிகழ்ச்சியை “எந்நாளும் தன் தொழில் அவ்வாறுதனிநிற்கும் மகளிரைக் கண்டால் தன் காமவேட்கையாலே மேல்விழுதலாகக் கொண்ட முதிய பார்ப்பானுடைய விரும்பு” என்று ‘உச்சிமேல் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் உரைக்கிறார்! இந்தக் கலித்தொகைப் பாட்டைப் புனைந்தவரும் புகழ்பெற்ற ஓர் அந்தணப் புலவரே — கபிலர்! [எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பான கங்காவின் மாமா ('சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற கதையில்) நினவுக்கு வருகிறது. சில பிறவிகள் காலந்தோறும் அப்படித்தான் இருக்கும்-போல!!]
இங்கே சிந்திக்கவேண்டியவை பல.
சேரி என்பது பரத்தையர் சேரியானால், ஒரு (முடமான கிழட்டுப்) பார்ப்பானுக்கு அங்கே என்ன வேலை, அதுவும் இருட்டு நேரத்தில்?
சேரி என்பது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் இருப்பிடமானால் அங்கே போய்விட்டுவரும் பார்ப்பான் அந்தத் தீட்டை எப்படிப் போக்கிக்கொள்வான்? அவனுடைய சாத்திரம் அவனுக்குக் கழுவாய் சொல்கிறதா?
‘சேரியில் தீட்டு’ என்று ஒருபக்கம் சாய்ந்த முடிவு ஏன்? அங்கே போன பார்ப்பானுக்குச் ‘சேரித்தீட்டு’ ஒட்டாதா??? கங்கையில் போய்க் குளித்துவிட்டா தன் வீட்டுக்குள் நுழைவான்?!
கள்ளமிலாச் சீதையையும் இறைப்பற்றில் தன்னை இழந்த நந்தனையும் தீயில் சுட்டுப் புடம் போட்ட இந்திய-தமிழகக் குமுகங்கள் கலித்தொகைப் பார்ப்பான் போன்றவர்களையும் பிற பரத்தனையும் பொசுக்கிப் புடம் போடாமல் மறுபடியும் தெருவில் உலவ விட்டது ஏன்?
5. சேரியில் வாழ்ந்தவர்கள் வறுமையில் வாடினார்களா? சேரிமக்கள் வறுமையில் வாடியதற்குச் சான்று இல்லை. [உங்களுக்குச் சான்று தென்பட்டால் தெரிவிக்கவும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.] அவரவர் தத்தம் தொழிலைச் செய்துகொண்டு மிகக் களிப்போடு வாழ்ந்தார்கள் என்றுதான் தெரிகிறது. சில எடுத்துக்காட்டு மட்டும் இங்கே:
மல்லலம் சேரி (நற்றிணை 249:9) [வளம் மிகுந்த குடியிருப்பு.]
சேரிக்கிழவன் மகளேன் யான் (கலித்தொகை 117:6)
[சேரியில் முதல் உரிமை படைத்தவனின் மகள் பெருமையாகத் தன்னைப் பற்றிச் சொல்லும் இடம் இது.]
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஒரு புலவர். இந்தப் புலவர் தாழ்ந்தவரா? ஒதுக்கப்பட்டவரா? தீண்டத்தகாதவரா?
6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?
கோழியும் பன்றியும் ஆடும் மீனும் இறைச்சியும் புலாலும் நிறைந்த காரணத்தால் சேரியில் வாழ்ந்தோர் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற முடிவுக்கு வரமுடியாது. அதே போல இறைச்சியும் நாயும் பன்றியும் காணாத இடத்தில் வாழ்ந்தவர் உயர்ந்தவர் என்றும் சொல்ல முடியாது. நாயும் பன்றியும் துன்னாத பதியில் வாழ்ந்த மறைகாப்பாளர் (பெரும்பாணாற்றுப்படை 297-301) மறைகளைக் காக்கவேண்டிச் செய்த வேள்வியில் பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியைப் புழங்கிய நிலையை எப்படிப் புரிந்துகொள்வது? மோரும், வெண்ணெயும், மாதுளையும், மாவடுவும் உண்ட காரணத்தினால் அவர்கள் உயர்ந்தவர்களாகிவிடுவார்களா?
இந்தச் சான்றுகளே போதும் … “சேரி என்றால் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் இருந்த இடம்” என்ற கருத்தை மறுக்க! என்ன சொல்கிறீர்கள்?
இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடியதன் பயனைப் பார்த்துக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்வோம்! **************** மக்களின் வளம்/வறுமை, இரவலர்-புரவலர் உறவு, ஆண்-பெண் உறவு ஆகிய நிலைகளிலும் நடைமுறைகளிலும் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கோட்பாட்டுக்குச் சங்கப் பாடல்களில் சான்று இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். 1. மக்களின் வளமும் வறுமையும்
————————————------
வளம்
—————
பொதுவாகப் பார்த்தால் மக்கள் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் அந்தந்த நிலத்துக்கேற்ற தொழிலைச் செய்துகொண்டு அந்தந்த நிலம் தந்த வளனை நுகர்ந்துகொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. கடுமையான வாழ்வாக இருக்கலாம், ஆனால் அது அவர்களுடைய மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை என்று தெரிகிறது.
மன்றுதொறும் குரவையும் சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டமுமாக விழாக்கொண்டார்கள் என்பதை மதுரைக்காஞ்சி வரிகள் (611-619) தெரிவிக்கின்றன.
குறிஞ்சி நிலத்தில், ஆநிரை கவர்ந்து வந்த வீரர்கள் கள்ளுண்டு களித்தாடும் தளர்ச்சியடையாத குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (140-146) காட்டுகிறது.
மக்கள் தேனையும் கிழங்கையும் கொடுத்து அதற்குப் பண்டமாற்றாக மீனும் கள்ளும் பெற்றுக் களிப்பதையும், கரும்பையும் அவலையும் கொடுத்துப் பண்டமாற்றாக மானின் தசையையும் கள்ளையும் கொண்டுபோவதையும் பற்றிப் படிக்கிறோம். பரதவர் குறிஞ்சி பாட, குறவர் நெய்தல் கண்ணி சூட, அகவர்கள் நீல நிற முல்லையைப் பல திணைகளிலும் விற்க, காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் தின்னவும் மனைக்கோழிகள் தினையைக் கவரவும் மலையில் வாழும் மந்தி நெய்தற்கழியிலே மூழ்க, கழியிலுள்ள நாரைகள் மலையிலே கிடக்க … என்று திணை வேறுபாடு இல்லாமல் பல உயிர்களும் நிலத்தின் வளத்தை நுகர்ந்து களித்ததைப் பொருநராற்றுப்படை காட்டுகிறது (பொருநராற்றுப்படை 210-226)
முத்தும் பவளமும் செழித்த இடங்களைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை (55-72) பெரும்பாணாற்றுப்படை (335-336) வரிகள் மூலம் அறிகிறோம். மகளிர் காலில் பொற்சிலம்பு அணிந்திருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (332) சுட்டுகிறது.
அதோடு, கீழ்க்காணும் பாடல் வரிகள் முத்தும் துகிரும் (பவளமும்) செழித்திருந்த நிலையைக் காட்டுகின்றன:
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் (மதுரைக்காஞ்சி)
கடல் பயந்த கதிர் முத்தமும் (புறநானூறு)
தென் பவ்வத்து முத்துப் பூண்டு (புறநானூறு) தெண்கடல் முத்தும் குணகடல் துகிரும் (பட்டினப்பாலை)
பொன்னை விரும்பாத மகளிர் **************************** கோவலர் குடியிருப்பில் பொன்னை விரும்பாத ஆய்மகளைப் பற்றிப் பெருமாணாற்றுப்படை சொல்கிறது (162-166). தன் சுற்றத்துக்கு மோர் கொடுத்தபின், நெய்யை விற்ற ஆய்மகள் நெய்க்கு விலையாகப் பசும்பொன்னை ஏற்காதவளாய் எருமைக்கன்று (நாகு, பெண் கன்று) பெற்றுக்கொள்வாளாம்!
பட்டினப்பாலையிலோ இன்னொரு வகையான காட்சி. வீட்டு முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் மீன் உணங்கலைக் கவர வந்த கோழிகளை விரட்ட அங்கே இருந்த மகளிர் தங்கள் காதுகளில் போட்டிருந்த கனங்குழையைக்கழட்டிஎறிவார்களாம்; அந்தக் குழைகள் அங்கே சிறுதேர் உருட்டும் சிறுவர்களின் பொற்றேரைத் தடுக்குமாம்!
வறுமை
-------------
நிலத்தோடு ஒட்டி வாழ்ந்த மக்களை இயற்கை தந்த செல்வச் செழிப்பு மகிழ்வித்துக்கொண்டிருக்க இசைக்கலைஞர் உள்ளிட்ட ஒரு கூட்டம் மட்டும் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நகர்ந்துகொண்டேயிருந்தது. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோர் உள்ளிட்டதே அந்தக் கூட்டம். இந்தக் கூட்டம் தொடக்கத்தில் எப்படி உருவானது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நிலத்திலும் பறைகொட்டலும் யாழிசைத்தலும் கூத்தும் நிகழ்ந்தமை தெரிகிறது. ஒருவேளை அவர்களில் சிலர் தத்தம் நிலத்தை விட்டு வேற்றுப் புலங்களில் நிகழ்ந்த விழாக்களில் தங்கள் கலைத்திறனைக் காட்டப் போயிருக்கலாம். இவர்களெல்லாம் தமக்கென நிலையான ஓரிடத்தில் இருந்து தம் அறிவும் திறமையும் மழுங்கிப்போகாமல் புலம்பெயர்ந்துகொண்டேயிருந்த நிலை தெரிகிறது. ஏன்? இசையும் பாடலும் கூத்தும் நாடகமும் செய்யுள் யாப்பும் இவர்களது கலைத்திறமையின் வெளிப்பாடு. அந்தக் கலைகளை விரும்பிப் போற்றுமிடம் விழாக்களும் அரசவையும் பொது மன்றமும் வள்ளல்களின் இருப்பிடமும். பிற இடங்களிலிருந்து வந்த கலைஞர்களும் இவர்களோடு இணைந்திருக்கலாம். எல்லாம் ஊகமே.
ஆரியப் பொருநன் (அகநானூறு 386)
ஆரியர் துவன்றிய் பேரிசை முள்ளூர் (நற்றிணை 170)
ஆரியர் கயிறு ஆடு பறையின் … (குறுந்தொகை 7:4)
சோற்றுக்காக மட்டுமே கலைஞர்கள் வாழவில்லை என்பதை எடுத்துக்காட்டப் பொருநராற்றுப்படை (1-3) நல்ல சான்று:
அறாஅயாணர்அகன்தலைப்பேர்ஊர்
சாறுகழிவழிநாள், சோறுநசைஉறாது
வேறுபுலம்முன்னியவிரகுஅறிபொருந!
ஓரிடத்தில் திருவிழா முடிந்தபின் அங்கே கிடைக்கும் சோற்றை விரும்பாத பொருநனும் அவன் கூட்டமும் வேற்றுப்புலத்தைத் தேடிப் போனார்கள் என்பது மிக மிக அருமையான குறிப்பு. சோறு கிடைத்தாலும் அதை விடுத்துக் கலையைச் சுவைத்துப் போற்றுகிறவர்களைத் தேடி இந்தக் கூட்டம் அலைந்திருக்கிறது என்பது வெளிப்படை!!
இப்படி இந்தக் கலைஞர்கள் (கூத்தர், பாணர், பொருநர், விறலியர் …) தம் கலைத்திறமையைப் போற்றிப் புரப்பவரை நாடிச் சென்றதனால் இவர்களைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று பட்டையடிப்பது நேரியதாகப்படவில்லை.
கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இசைக்கலைஞர் மட்டுமில்லை, புலவர்களும் வறுமையில் வாடியிருக்கிறார்கள் என்பதற்குச் சிறுபாணாற்றுப்படை (130-140), புறநானூறு (159, 160, 164) போன்றவை எடுத்துக்காட்டு. ஆக, இசைக்கலைஞர்களும் புலவர்களுமே தங்கள் வறுமை நிலை நீங்கவேண்டிப் புரவலர்களைத் தேடிச் சென்றனர் என்று தெரிகிறது.
இதிலே புலவர்கள் இரக்கும் முறைக்கும் பிற இசைக்கலைஞர் இரக்கும் முறைக்கும் வேறுபாட்டைக் காணலாம்.
இசைக்கலைஞர் தங்கள் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லிப் புலம்புவதில்லை. அவர்களைப் பார்த்தவுடனே அவர்களுடைய வறிய நிலையை அறிந்து வள்ளல் பரிசில் கொடுக்கும் நிலையைத்தான் காண்கிறோம். ஆனால், புலவர்கள் -- பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார் போன்றவர்கள் -- தங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லுவதும் பரிசில் வேண்டும் முறையும் மிகவும் இரங்கத்தக்கதாகத் (wretched and pitiful) தெரிகிறது.
வரிசையறிந்து கொடுக்கவேண்டும், காலம் தாழ்த்தாது கொடுக்க வேண்டும் ... என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. விருப்பம் இல்லாவிட்டால் வேறு புரவலரை நாடிச் சென்ற கதையையும் கேள்விப்படுகிறோம். இதைத்தான் ஔவையார் ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ (புறநானூறு 206:13) என்று குறிப்பிட்டார் போலும். பெருந்தலைச் சாத்தனார் (புறநானூறு 162:7), குமணனனுக்கே (தான் ஏறிவந்த?) யானையைப் பரிசிலாக எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்!
வேந்தர்கள், மன்னர்கள், வள்ளல்கள் என்று பெயர் பெற்றவர்கள் மட்டுமில்லை … பிற மக்களும் இரவலரைப் புரந்திருக்கிறார்கள். முதல் வகையினர் உணவோடு பொன்னும், பொருளும் கொடுத்தார்கள் என்றால் மற்றவர்கள் வயிற்றுக்குத் தேவையான உணவு கொடுத்துப் புரந்திருக்கிறார்கள். ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டுவது இதுவே.
முல்லை நிலத்தில் உழுதுண்பார் அளிக்கும் உணவு (191-196)
மருத நிலத்தில் வினைஞர் அளிக்கும் உணவு (254-256)
மருத நிலத்தில் கரும்பு அடும் ஆலைகளில் கரும்புச்சாறு கிடைத்தல் (261-262)
நெய்தல் நிலத்தில் வலைஞர் கிடியிருப்பில் கிடைக்கும் உணவு (275-282)
அந்தணர் உறைவிடங்களில் கிடைக்கும் உணவு (300-310)
பட்டினத்தில் கிடைக்கும் உணவு (339-345)
உழவரின் தனி மனையில் கிடைக்கும் உணவு (355-362)
இதையெல்லாம் தாண்டிச் சென்றால் இளந்திரையன் கொடுக்கும் பரிசிலோ மிகப் பெரிது (467-493). முதலில் இரவலர்களுடைய சிதறுபட்ட ஆடைகளை நீக்கி, ஆவிபோன்ற மென்மையான நூலாடை (கலிங்கம்) கொடுக்கிறான். பிறகு பெரிய கலத்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கொடுக்கிறான். பிறகு இரவலர் அணிவதற்காக பொற்றாமரை, பொன்மாலை, புரவு பூட்டிய தேர் இன்னவை கொடுக்கிறான்.
அதோடு, பெரும்பாணாற்றுப்படையில் (464-467) காணும் ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது. இளந்திரையன் பரிசில் கொடுத்தான் என்பதோடு இரவலனின் நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முன்னரே 'நிலையில்லாத உலகத்தில் ஈகைச் செயலால் புகழடைந்து என்றும் நிலைத்திருக்கக் கூடிய நிலைமையை எண்ணிப் பார்த்து'ப் பரிசில் கொடுத்தான் என்பதே அந்தக் குறிப்பு. புகழுக்கு மயங்காதார் யார்?!
நிற்க.
புரவலர்கள்/வள்ளல்கள் யாருமே இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று விலக்கியதாகத் தெரியவில்லை.
வறுமை நிலை என்பது இரவலருக்கு ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத நிலையைக் கொடுக்கவில்லை. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இரவலர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றால் அவர்களுக்குச் சோறும் பிற பொருள்களும் அளித்த வள்ளல்கள் அவர்களைக் கண்ணெடுத்தும் பாராமலோ தொலைவில் நிற்கவைத்தல்லவோ பரிசில் கொடுத்திருக்கவேண்டும்! அப்படித் தெரியவில்லையே!
இளந்திரையன் "முகன் அமர்ந்து ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி"னான் (பெரும்பாணாற்றுப்படை 491-493) என்றும், காலம் தாழ்த்தாமல் பரிசில் கொடுத்தான் (பெரும்பாணாற்றுப்படை 493) என்றும் அறிகிறோம்.
சிறுபாணாற்றுப்படை (203-261) வரிகள் நல்லியக்கோடன் என்ற வள்ளல் பரிசிலுக்காகத் தன்னை நாடி வந்தவர்களுக்கு எப்படிப் பரிசில் வழஙகினான் என்பதை விளக்குகின்றன.
நல்லியக்கோடனுடைய ஊர் “அந்தணர் அருகா அருங்கடி வியனகர் (187).” அவனுடைய வாயில் பொருநர்க்கானாலும் சரி, புலவர்க்கானாலும் சரி, அந்தணர்க்கானாலும் சரி … அடைக்கப்படாத வாயில் (203-206).
குறிப்பிடத்தக்க செய்திகள்:
சிறுபாணாற்றுப்படை 219-220: பன்மீன் நடுவண் பான்மதி போல இன்னகை ஆயமொடு இருந்தோன் குறுகி சிறுபாணாற்றுப்படை 244-245: பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
நல்லியக்கோடன் யார் யாருடைய பசித் துன்பத்தைப் போக்குகிறான்?
மதுரைக்காஞ்சியில், பாண்டியன் நெடுஞ்செழியனின் வள்ளண்மை தெரிகிறது. அவனுடைய வாயில் இன்னவருக்கு என்று வரையறை செய்யாதது.
மதுரைக்காஞ்சியில் (748-751) காண்பது:
பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
இங்கே குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. இரவலர் கூட்டம் பெரிது. அவர்களுக்குச் சொந்தம் பெரிது ("இருங்கிளை"). அந்தப் பெரிய கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டியே தேரும் களிறும் கொடுக்கப்பட்டன. விழாக்களில் பாட்டும் கூத்தும் நாடகமும் நிகழ்த்தி ஊரூராக வள்ளல்களைத் தேடிப்போகும் இரவலர் கூட்டத்துக்கு ஊர்தியாகத் தேரும் களிறும் உதவியிருக்குமே!
வள்ளல்களின் பரிசில் வயிற்றுக்குச் சோறும் வழிநடைக்கு உதவும் தேர், யானை போன்றவையும் கூத்துக்கும் நாடகத்துக்கும் அணிசெய்யப் பொற்றாமரையும் முத்து மாலைகளும்.
இங்கே நாம் குறித்துக்கொள்ளவேண்டியது ... இரவலரைப் பார்க்கவோ பக்கத்தில் வரச்செய்யவோ புரவலர்கள் தயங்கியதில்லை. எனவே வறுமை நிலையால் இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று சொல்வது மிகப் பெருந்தவறு.
3. ஆண்-பெண் உறவு
சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்-பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி.
ஏனென்றால், 'தீண்டுதல்' என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க.
வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில் அப்படிப்பட்ட ‘தீண்டாமை’ என்ற நிலை இல்லை என்று இதுவரை பார்த்த பாடல்களிலிருந்து தெரிகிறது. இறுதியாக, தனிப்பட்ட ஆண்-பெண் உறவில் இந்தத் ‘தீண்டாமை’க் கருத்து காணப்படுகிறதா என்று பார்ப்போம்.
ஒரு பெண்ணுக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது, ஆனால் அந்த முயற்சிக்குப் பல தடைகள் இருந்தமையைப் பெரும்பாலான சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.
குறிப்பாக, பெண்ணின் தாயரும் (செவிலி, நற்றாய்) தமரும் பெரிய தடை. ஏனென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் சில பாடல்கள் கோடி காட்டுகின்றன.
ஒரு நிலத்துப் பெண் இன்னொரு நிலத்து ஆடவனைத் துணையாகக் கொள்ளத் தடை இருந்திருப்பதை நற்றிணை 45 காட்டுகிறது.
‘இவளோ கடலில் புகுந்து மீன் பிடிக்கும் பரதவர் மகள். நீயோ கொடிகள் பறக்கும் மூதூரில் விரைந்து ஓடும் தேரையுடைய செல்வனின் அருமை மகன். கொழுப்புள்ள சுறாமீனை அறுத்துக் காயவைத்து அந்த உணங்கலைத் தின்ன வரும் பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? நாங்கள் புலவு நாறுகிறோம். போய்வா. எங்கள் வாழ்க்கை பெரிய நீர்ப்பரப்பாகிய கடலில் விளையும் பொருள்களை (மீன் போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்ட சிறு நல் வாழ்க்கை. உன்னுடன் ஒத்தது அன்று. எங்களுக்குள்ளேயே (எங்களுடன் இணையத் தக்க) செம்மலோர் இருக்கிறார்கள்.’
இந்தப் பெண்ணின் சொற்களில் தன் நெய்தல் நிலத்தவரைப் பற்றி எவ்வளவு பெருமிதம்!
இங்கே குறித்து நோக்கவும். ‘நீ தேரோட்டும் செல்வனாக இருந்தாலும் உன்னால் எங்களுக்கு என்ன பயன்?’ என்று கேட்கிறாள் தோழி. ‘நாங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள்’ என்று தங்களை இழித்துச் சிறுமைப்பட்டுக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் நிலத்தொழிலில் பெருமை கொள்கிறாள். ‘எங்கள் வாழ்க்கை நல்ல வாழ்க்கை’ என்று பெருமிதம் கொள்கிறாள். எங்களுக்குள்ளேயே செம்மல்கள் இருக்கிறார்கள் என்று பிற நிலத்தவனாகிய தலவனுக்குச் சுட்டுகிறாள். இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் … இங்கேதேவையில்லாத ‘தீண்டாமை’க் கருத்தைப் புகுத்துவது நேரியதில்லை.
குறிஞ்சி நிலத்தில் இன்னொரு வகை இறுக்கத்தைக் காண்கிறோம்.
கலித்தொகை 39 காட்டுவது. ஒரு குறவர் குடிப்பெண்ணும் கானக நாடனின் மகன் ஒருவனும் இணைந்த நிலையைக் காட்டுகிறது.
இந்தக் குறவர் குடிப்பெண் தன் தோழியரோடு மிக வேகமாகப் பாய்ந்து வரும் நீரில் புகுந்து நீராடும்போது கால் தளர்ந்துவிடவே நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுகிறாள். அந்நேரத்தில் அங்கே வந்த கானக நாடன் (தலைவன்) நீரில் குதித்து அவளை மார்புறத் தழுவிக்கொண்டு அவளைக் கரையேற்றுகிறான். அவளும் அவனும் மார்புறத் தழுவிய நிலை அவளுடைய கற்பு நிலையைக் குறிக்கிறது என்பது தோழியின் கருத்து. தாய்க்குச் செய்தியைத் தெரிவிக்கிறாள். தாயும் அவருடைய ஐயன்மாருக்குத் தெரிவிக்கிறாள். ஐயன்மாரோ வில்லை எடுப்போமா, அம்பை எடுப்போமா என்று நினைத்து, ஒரு பகல் முழுவதும் சினம் கொண்டு ஒருவழியாக ஆறுதல் அடைந்து, ‘இருவர்கண்ணும் குற்றம் இல்லை’ என்று தெளிவு கொண்டு அவர்களுடைய இணைப்புக்கு ஒப்புக்கொண்டார்கள்!
“இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை” என்று முடிகிறது இந்தப் பாட்டு.
இங்கே பெண்ணும் ஆணும் இணைவதற்குக் குலத்தாழ்ச்சியோ தீண்டாமையோ காரணமில்லை என்பது தெளிவு.
குறிஞ்சிப்பாட்டு (31-34) காட்டுவது சற்றே வேறுபட்ட நிலை.
களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் சோர்வு தாய்க்குக் கவலை. தோழி முன்வந்து என்ன நடந்தது என்று சொல்கிறாள்.
“வண்ணத்தையும் (‘வர்ணத்தையும்’? ‘குணத்தையும்’?) துணையையும் (சுற்றத்தையும்) பொருத்திப் பார்க்காமல் நாங்களாகத் துணிந்த இந்தப் பாதுகாப்புடைய அரிய செயலை [களவு முறையை] நடந்தது நடந்தபடிச் சொல்லுகிறேன், சினவாமல் கேள்”
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது “வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது” [வண்ணத்தையும் சுற்றத்தையும் பொருத்திப் பார்க்காமல்] நாங்களாகவே துணிந்து ஈடுபட்ட இந்தச் செயல்” என்பது. “பொருத்தம்” என்ற ஏதோ ஒன்றைக் கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது. ஆனால், அது எந்த வகையிலும் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் என்று எவரையும் சுட்டவில்லை.
கலித்தொகை (113: 7-10) ஆயர் குலத்துப்பெண் ஒருத்தி ஆயர் குலத்து ஆணை விரும்புதலைக் குறிக்கிறது.
தன்னைக் குறுக்கிட்ட தலைவனை ‘யார் நீ’ என்று கேட்கும் தலைவிக்கு அவன் சொல்கிறான்: “புல்லினத்து ஆயர் மகனேன்.”
அதைக் கேட்ட தலைவி சொல்கிறாள்: “ஒக்கும்; புல்லினத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு(ம்) நல்லினத்து ஆயர் எமர்.”
புல்லினம் என்பது ஆடுகளைக் குறிக்கும். குடம் சுட்டும் நல்லினம் என்பது பசுக்களைக் குறிக்கும்.
இங்கே ஆணும் பெண்ணும் இணைவதற்குத் தடையில்லை என்று தெரிகிறது.
இப்படி, ஐந்திணைகளில் பெண்ணும் ஆணும் இணைவதற்குத் தடையாக இருந்த நிலைகளைப் பற்றி அறிகிறோம். ஆனால், அவற்றில் எந்த நிலையுமே “தீண்டாமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமையவில்லை என்பது உறுதி.
களவு முறையில் செல்லாமல் வலிமையின் அல்லது வீரத்தின் அடிப்படையில் பெண்ணை எடுக்க வந்த நிலையை மறக்குடி மக்கள் எதிர்த்த நிலையை மிக அழகாகக் காட்டும் பாடல்கள் புறநானூற்றில்மகட்பாற்காஞ்சி என்ற திணையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன (புறநானூறு 336-339; 341-354). மகள்மறுத்தல் என்பது இந்தத் திணையின் ஒரு செயல்பாடு.
சுருக்கமாகச் சொன்னால், அரசனுக்குப் பெண்கொடுக்க மறுக்கும் மறக்குடி மக்களின் வீரத்தையும் பெருமிதத்தையும் காட்டும் பாடல்கள் மகட்பாற்காஞ்சிப் பாடல்கள். பெண்ணின் தந்தை பெண்ணைக் கொடுக்க மறுக்கிறான். அரசன் போர் தொடுக்கிறான். அந்தப் பெண்ணின் பொருட்டாக அவள் பிறந்த ஊருக்கே அழிவு ஏற்படுகிறது.
அரசனாக இருந்தாலும் சரி, உடனே காலில் விழுந்து பெண்ணைக் கொடுக்கும் வழக்கம் மறக்குடி மக்களிடம் இல்லை என்பதை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் தெளிவிபடுத்துகின்றன.
புறநானூறு 343:10-13 காட்டும் செய்தி குறிப்பிடத்தக்கது:
செங்குட்டுவனின் முசிறி போன்ற செழுமையான பொருளைப் பரிசமாகக் கொண்டுவந்து பணிவோடு கொடுத்தாலும் தனக்கு நேரானவன் அல்லன் என்றால் பெண் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தந்தைக்குத் தெரியும், அதனால் அவனும் தன் பெண்ணைக் கொடுக்கமாட்டான்! எவ்வளவு பெருமிதம், பாருங்கள். இதோடு வடக்கத்தி முறைகளான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ... என்ற மணமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பெண்ணுக்கு உரிமை எங்கே இருந்திருக்கிறது என்பது விளங்கும்!
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது … ஆணும் பெண்ணும் இணைவதுக்குத் தடையாக அவர்கள் வாழந்த நிலமோ வேறு ஏதோ அமைந்திருந்த நிலை தெரிகிறது. ஆனால், 'தீண்டாமை' என்ற ஒன்று குறுக்கிட்டதாகத் தெரியவில்லை.
*******************
சரி, எப்போதுதான் இந்தச் 'சாதி, தீண்டாமை' என்ற கோட்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்தன என்று தேடியபோது இரண்டு நல்ல சான்றுகள் கிடைத்தன: ஒன்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில், இன்னொன்று நம்மாழ்வார் ஈடு உரையில்.
சிலப்பதிகாரத்தில், மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலனின் முன் வந்த பொற்கொல்லனை 'விலங்கு நடைச் செலவின் ... கொல்லன்' என்று இளங்கோ குறிக்கிறார் (சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை:107-108).
மேற்காணும் உரையைப் பலமுறை படித்துப் புரிந்துகொள்ளுங்கள். 'குலம் தாங்கு சாதிகள்' என்ற குறிப்பு மிகவும் இன்றியமையாதது. வருண முறைக்கும் 'சாதி' என்பதுக்கும் உள்ள தொடர்பு விளங்கும். முடிவுரை ------- மேற்காட்டிய அடியார்க்கு நல்லார், உ.வே.சா, ஈடு உரைகளைத் தவிர, அவற்றுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் 'சாதி உயர்வு/தாழ்வு, ஒதுக்கப்பட்டவர், தீண்டாமை' போன்ற கோட்பாடுகளைக் காண என்னால் முடியவில்லை.
New Work On Sangam Poetry Challenges US Expert's Position On Tamil Society
It is the perfect academic storm; a battle of ideas waged by two scholars thousands of miles away from Tamil Nadu. And given the importance history and historical ideas play in Tamil society, those in the thick of it argue that the debate has far reaching consequences.
For decades, V S Rajam, a scholar from Tamil Nadu living in the US, has tangled with academicians such as George Hart, an American professor of Tamil and Sanskrit, who hold that the caste system existed, albeit in a less rigid and structured form, in ancient Tamil society .
With her recent book, “Caste, untouchability etc. in Sangam poems“, Rajam has sought to strike a blow at these notions, reviving a debate among literary and cultural enthusiasts. Dalit activist and former MLA D Ravikumar, who is her publisher, says Rajam's work should disabuse anyone of “wrong ideas“ that may have flowed from Hart's research.
In his influential 1987 paper, “Early evidence for caste in India“, Hart starts with the word “Pulaiyan“ and looks at its references in Sangam works. He argues that the works use the word as a term of abuse, for those eating meat, visiting prostitutes and other “lowly“ acts. He proceeds to point out various references in the literature to high and low social status as well as untouchability to paint a picture of an ancient Tamil society that was highly hierarchical. He says: “The social life of a person [in ancient Tamil society] seems to have been largely determined by the group to which he belonged, and it was not easy for someone to switch his group.“
Rajam, however, says in their quest to understand works in foreign languages, many western scholars start with a secondary source such as a dictionary or lexicon or what others have written about the same literature. She argues that those who wrote the lexicons and commentaries at a later date superimposed more recent ideas of caste to words drawn from the ancient world.
Rajam says that as a native speaker of Tamil and a grammarian and linguist her understanding is more authentic and she found no references to caste and untouchability in Sangam works. “The advantage for native speakers of Tamil engaged in scholarly research is their native intuition of understanding the language,“ she says.
Rajam also criticises Hart for relying on anthropological theories. “Anthropology is a fascinating field which gives a lot of room for imagination and speculation, and I am not comfortable with using such tools for serious research of grammar or literature,“ she says.
Hart, however, refused to be drawn into the recent contro versy though, according to him, “there is much that could be said regarding Rajam's claims.“ He says: “As you know, discussing caste in present-day TN is like walking through a minefield.“
Hart does not underesti mate the divisive passions that such discussions evoke. For the Dravidian movement, the idea of a pristine ancient Tamil world unadulterated by caste system or elaborate rituals provided intellectual heft to the political mobilization of OBCs against brahmins. Hart, despite his position that brahmins did contribute significantly toward codifying and making the caste system a religious idea, does dent that position somewhat.
But Ravikumar's objections are different. He holds that there is no anthropological basis to the caste system. In TN, inscriptions talk of untouchability only after 11th century AD, he says.
Quoting Ambedkar, Ravikumar says the Indian population is homogenous and defines caste as a group in which members marry within the group. There is no other defining feature of caste no race, ethnicity or even economic basis. “Such concepts as Hart's dangerous vs ordered power, and sacred vs profane are misleading. They would tell people that the caste system is ancient and deeply embedded, and cannot be overcome,“ he adds.
Email us your feedback with name and address to southpole.