“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 30-ஆம் பாகம்
[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]
அ.மார்க்ஸ் எழுதிய ‘அம்பேத்கர் வாழ்வில்’ என்ற புத்தகத்தில் ஒரு மெகாபுளுகை எழுதியிருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘அம்பேத்கர் முடிவை (மதமாற்ற முடிவை) இம்மூன்று மதங்களும் எவ்வாறு எதிர்கொண்டன என்பதும் முக்கியம். இஸ்லாம் ஒன்றே இரு கரங்களையும் நீட்டி அம்பேத்கரை வரவேற்றது. ஏற்கனவே சாதியத்திற்குப் பலியாகியிருந்த கிறிஸ்தவமும் சீக்கியமும் பெருந்திரளாக தலித்துகள் உள்ளே நுழைந்தால் அவை ஒரு தலித் மதமாக மாறிவிடுமோ என அஞ்சின’’
அ.மார்க்ஸ் கூறுவது எவ்வளவு புளுகுத்தன்மை வாய்ந்தது என்பதை இத்தொடரைப் படிக்கும் வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
1935 மதமாற்ற அறிவிப்புக்குப் பின், கிறிஸ்தவம், சீக்கியம், இஸ்லாம், பௌத்தம் கூட தங்கள் மதத்தில் சேர்ந்திடுமாறு கேட்டுக்கொண்டன. ஆனால் அ.மார்க்ஸோ இஸ்லாம் மட்டுமே தலித்துகளை வரவேற்றது என்ற பொய்யைக் கூறுகிறார். அ.மார்க்ஸ் இஸ்லாத்தை பரப்பும் மதபோதகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த காரணத்தால் அதை விட்டுவிட்டு மேலே செல்வோம்.
1935 மதமாற்ற அறிவிப்புக்குப் பின் பௌத்தர்களும் அவர்களுக்கே உரிய வழியில் அம்பேத்கரை அவர்கள்பால் இழுத்திட முயன்றனர். லோகநாத் பௌத்த மிஷன்-ஐ நிறுவிய இத்தாலிய பௌத்தத் துறவியான லோகநாதா (இயற்பெயர் ஸால்வடோர்) 1936 ஜூன் 10-ஆம் நாள் பம்பாய் தாதரில் இருந்த அம்பேத்கரின் இருப்பிடத்திற்கு வந்தார். பௌத்தத்தை ஏற்குமாறு அம்பேத்கரிடம் வேண்டினார். அம்பேத்கருடன் லோகநாதா பேசியபின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பௌத்த நெறி அம்பேத்கரின் உள்ளத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிகிறது. பௌத்த மதத்தில் சேருவது பற்றிக் கவனமுடன் ஆராய்வதாக அவர் வாக்களித்தார். ஆயினும் உறுதியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று சொன்னார்.
அம்பேத்கர், மதமாற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மதமாக அன்று பௌத்தத்தை நினைக்கவில்லை.
1940-க்குப் பிறகு அவர் சிந்தனையில் பௌத்தம் துளிர்விட ஆரம்பித்தது. 7-5-1941 அன்று புத்தர் பிறந்தநாள் தொடர்பாக அம்பேத்கர் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நால்வருணத்தை ஒழித்தேயாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
1943-இல் அம்பேத்கர் மகாஸ்தவீர் சந்தராமணியைக் குசிநராவில் சந்தித்தார். இப்பொழுது அம்பேத்கர் மனதில் பௌத்தம் மேலும் துளிர்விட்டு வளர்ந்துகொண்டிருந்தது.
1946-இல் தொடங்கிய கல்லூரிக்கு அம்பேத்கர் புத்தரின் பெயரை வைத்தார். ‘சித்தார்த்தா கல்லூரி’ பம்பாயில் செயல்படத் தொடங்கியது. பல ஆராய்ச்சிக்குப் பிறகு தீண்டப்படாதவர்கள் பௌத்தர்கள் என்ற கருத்து இப்பொழுது அவர் மனதில் ஆழமாக உருப்பெற்றது. மகாபோதி இதழில் ‘புத்தரும் பௌத்தத்தின் எதிர்காலமும்’, ‘இந்துப் பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்பன போன்ற பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.
மகாபோதி கழகத்தின் வெளியீடான மகாபோதி இதழில் மே 1950-இல் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும்’ என்ற கட்டுரை முக்கியமான கட்டுரை.
இந்தக் கட்டுரையில் புத்தர், இயேசு, முகம்மது நபி, கிருஷ்ணர் ஆகியோரின் ஆளுமைகளையும், தமது மதங்களைப் பிரசாரம் செய்வதில் அவர்கள் கடைபிடித்த நிலைகளையும் ஒப்பிட்டு விரிவாகவே அம்பேத்கர் அலசியுள்ளார்.
அந்தக் கட்டுரையில்,
“….. புத்தரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் முதலாவது அம்சம், அவருடைய தன்னல மறுப்புக் கொள்கையாகும். பைபிள் முழுவதிலும் இயேசு, தான் கடவுளின் மைந்தன் என்றும், தன்னைக் கடவுளின் மைந்தன் என்று அங்கீகரிக்காவிட்டால், கடவுளின் சாம்ராஜ்யத்தினுள் பிரவேசிக்க விரும்புபவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் வலியுறுத்துகிறார். முகம்மது நபி மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளார். இயேசுவைப் போன்றே அவரும் தான், இந்த உலகில் கடவுளின் தூதர் என்று உரிமை கொண்டாடினார்.
ஆனால் அவர், மேலும் அப்பால் சென்று தான் கடவுளின் கடைசித் தூதர் என்று வலியுறுத்தினார். அந்த அடிப்படையில் முக்தி அடைய விரும்புபவர்கள், தன்னைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமின்றி, தான் கடவுளின் கடைசித் தூதர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரகடனம் செய்தார். கிருஷ்ணர், இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் மேலும் அப்பால் சென்றார். அவர் கடவுளின் மைந்தன் என்றோ, அல்லது கடவுளின் தூதர் என்றோ இருப்பதோடு திருப்தியடைய மறுத்தார். கடவுளின் கடைசித் தூதர் என்பதோடு கூட அவர் திருப்தியடையவில்லை. தன்னையே கடவுள் என்று கூறிக்கொள்வதோடு கூட அவர் திருப்தியடையவில்லை. தான் பரமேஸ்வரன் என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தேவாதி தேவர் என்று அழைப்பது போன்று, தாம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் உரிமை கொண்டாடினார்.
ஆனால் புத்தர் ஒருபோதும் அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை. அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார். ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார். ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய நன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை. அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை.
ஒரு மார்க்கதாதாவுக்கும் ஒரு மோட்ச தாதாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை அவர் எடுத்துக்காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் கிருஷ்ணரும் மோட்ச தாதாக்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மார்க்க தாதாவின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்.
இந்த நான்கு சமய போதனையாளர்களிடையில் மற்றொரு வேறுபாடும் உண்டு. இயேசுவும் முகம்மது நபியும் தாங்கள் போதிப்பது கடவுளின் சொல் என்றும், எனவே கடவுளின் சொல் என்ற வகையில் தாங்கள் போதிப்பது பிழையாத் தன்மை உடையதென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டதென்றும் உரிமை கொண்டாடினர்.
கிருஷ்ணர் தனது சொந்த அனுமானத்தின்படி கடவுள்களுக்கெல்லாம் கடவுள்; எனவே, அவர் போதிப்பது கடவுளின் சொல் என்றும் கடவுளால் அருளப்பட்டது என்ற வகையிலும் அவை மூலமானதும் இறுதியானதுமாகும். எனவே, பிழையாத் தன்மை என்ற பிரச்சினை எழக்கூட இல்லை.
ஆனால் புத்தர், தான் போதிப்பது பிழையாத் தன்மை கொண்டது என்ற எத்தகைய உரிமையும் கொண்டாடவில்லை. தனது மகா பரிநிர்வாண சத்தா என்ற போதனையில் அவர், ஆனந்தாவிடம், தனது சமயம் பகுத்தறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டதென்றும், தன்னைப் பின்பற்றுபவர்கள் தனது போதனையை அவற்றைத் தான் கூறியதாலேயே பிழையற்றது என்றும் கட்டுப்படுத்துபவை என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாதென்றும் கூறினார்.
பகுத்தறிவையும் அனுபவத்தையும் அவை அடிப்படையாகக் கொண்டதால் அவை திருத்தப்படுவதற்கு முழு இடமுண்டு. அல்லது தனது போதனைகள் ஏதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திலும் குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் கைவிடப்படுவதற்கும் உரிமையுண்டு.
தனது சமயம், கடந்த காலத்தின் காலாவதியாகிப் போனவற்றினால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று அவர் விழைந்தார். அது என்றும் பசுமையாயிருக்க வேண்டுமென்றும் எல்லாக் காலங்களிலும் பயன்படக் கூடியதாயிருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார்.
அதனால்தான், அவர் குறிப்பிட்ட நிலைமையின் தேவைகளுக்கு ஏற்பத் தனது சமயம் துண்டாக்கப்படுவதற்கும் வெட்டிக் குறைக்கப்படுவதற்கும் தன்னைப் பின்பற்றுவோருக்குச் சுதந்திரம் அளித்தார். வேறு எந்த சமய போதனையாளரும் இத்தகைய துணிவைக் காட்டியதில்லை. பழுதுபார்க்கப்படுவதை அனுமதிப்பதற்கு அவர்கள் பயப்பட்டனர்.
பழுது பார்ப்பதற்கு அளிக்கும் உரிமை, தாங்கள் பேணி வளர்த்த கட்டுமானத்தை அழிப்பதற்குப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் அஞ்சினர். புத்தருக்கு அத்தகைய அச்சம் ஏதும் இருக்கவில்லை. தனது அடித்தளம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருந்தது. மிகவும் உக்கிரமான உருவ வழிபாட்டாளராலும்கூட தனது சமயத்தின் அடித்தளத்தை ஒழித்துவிட இயலாது என்று அவர் அறிந்திருந்தார்.
இதுதான் புத்தரின் தன்னிகரற்ற நிலையாகும்.’’
இப்படி அலசுகிற அம்பேத்கர் அந்தக் கட்டுரையின் கடைசியாக இப்படி முடிக்கிறார்..
“….. பலர் விஞ்ஞான ரீதியான விசாரணையின் செல்வாக்கின் பயனாக, மதம் தவறானது என்றும், அது கைவிடப்பட வேண்டும் என்றும், முடிவுக்கு வந்துள்ளனர். வேறுபலர், மார்க்சிய போதனையின் பயனாக, மதம் என்பது அபினி என்றும், அது ஏழை மக்களை பணக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படும்படித் தூண்டுகிறது என்றும், எனவே அது கைவிடப்பட வேண்டுமென்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.
காரணங்கள் எவையாக இருந்தபோதிலும், மதம் சம்பந்தமாக, விசாரணை செய்யும் மனதை மக்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மெய்யாகும். இந்த விஷயம் பற்றி சிந்திக்கும் துணிவு பெற்றுள்ளவர்களின் மனதில், மதம் அவசியம்தானா, அப்படியெனில் எந்த மதத்தைக் கடைபிடிப்பது நல்லது என்ற கேள்விகள் மேலோங்கியிருக்கின்றன, திடசித்தம் தேவைப்படும் காலம் வந்துவிட்டது.
புத்தசமயத்தைத் தழுவியுள்ள நாடுகள், புத்த சமயத்தைப் பரப்புவதற்கான மன உறுதியை வளர்த்துக் கொள்வார்களேயானால் புத்த சமயத்தைப் பரப்பும் பணி கடினமாக இருக்காது. ஒரு பௌத்தரின் கடமை ஒரு நல்ல பௌத்தராக இருப்பது மட்டுமின்றி பௌத்தத்தைப் பரப்புவதும் அவரது கடமையாகும். பௌத்தத்தைப் பரப்புவது மனித குலத்திற்கு சேவை செய்வதாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.’’
என்று எழுதினார்.
1950-இல் இலங்கையில் உள்ள கொழும்புவிற்குச் சென்றார். அங்குப் பௌத்த இளைஞர் சங்கத்தில் ‘இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் கருத்து செறிவுமிக்கதோர் உரையாற்றினார்.
1951 ஜூலை- அம்பேத்கர் பாரதியப் புத்த ஜன சங்கத்தை ஏற்படுத்தினார்.
1954 டிசம்பர் 4-ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். அவர் தமது சொற்பொழிவின் விரிவடைந்த பகுதியை இரண்டு பாகங்களில் நினைவுக்குறிப்பு வடிவத்தில் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார். நினைவுக்குறிப்பின் முதல் பாகத்தில் இந்தியாவில் பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்யும் வேலைத் திட்டம் அடங்கியிருந்தது. அதில் அம்பேத்கர் குறிப்பிடும் விஷயம் மிக முக்கியமானது.
….3) இந்து மதத்தைவிட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவ விரும்பும் பல பகுதியினர் இந்துக்களில் இருக்கின்றனர். தீண்டப்படாதவர்களையும் பின்தங்கிய வகுப்பினர்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். படிநிலை அடிப்படையில் அமைந்த ஏற்றத்தாழ்வு சித்தாந்தத்தை இந்துமதம் கடைபிடிப்பதால் இம்மதத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்களது அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்.
கிறித்துவ மதத்தைவிட பௌத்தத்தை அவர்கள் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
1. பௌத்தம் இந்தியாவுக்கு அந்நியமான ஒரு மதமல்ல.
2. பௌத்த மதத்தின் மிக முக்கியமான சித்தாந்தம் சமூக சமத்துவமாகும். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
3. பௌத்தம் பகுத்தறிவு சார்ந்த மதம்.’’
அடுத்து அம்பேத்கர் புத்தமத வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்குகிறார்:
….. 10. புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை. முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோகச் சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமண தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரசாரம் செய்தான், இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது க்ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின்மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’
என்றார்.
பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்தெடுத்தார். 24-5-1955-இல் தாம் பௌத்த மதத்தில் சேரப்போவதாக பம்பாயில் அறிவித்தார். டில்லியில் தெகு சாலையில் புத்தரின் சிலையை அம்பேத்கர் நிறுவினார்.
புதுடெல்லி மகாபோதி கழகத்தின் சார்பில் 1956 பிப்ரவரி 5-ஆம் தேதி புத்த விஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய சொற்பொழிவில்,
“கம்யூனிசத்திற்குப் பதிலளிக்க முடியாத எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது. கம்யூனிசத்துக்கு மாற்றாக இருக்கும் தகுதிபடைத்த ஒரே மதம் புத்தமதம்தான். எல்லா மதங்களையும் நம்புவதும் ஒவ்வொன்றிலுமிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்வதுமான போக்கு எனக்கு உடன்பாடானதல்ல. இத்தகைய போக்கை இந்தியாவில் நாம் காண்கிறோம். எவரும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதனைப் பின்பற்ற வேண்டும்.
….மறுபிறப்பில் எனக்கு முழுநம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை’’
என்று கூறினார்.
இலண்டன் பிரிட்டிஷ் வானொலி நிலையத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் அம்பேத்கரின் ஓர் உரை ஒலிபரப்பப்பட்டது. ‘பௌத்தத்தை நான் ஏன் விரும்புகின்றேன்? இன்றைய சூழ்நிலையில் அது உலகிற்கு எவ்வாறு பயனளிப்பதாய் விளங்குகிறது?’ என்ற தலைப்பில் அம்பேத்கர் பேச்சு அமைந்திருந்தது.
அம்பேத்கர் கூறுகிறார்:
‘‘…. வேறு எந்த மதமும் செய்யாத விதத்தில் புத்தமதம் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன.
புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை (மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையை வைப்பதையும் எதிர்ப்பதை) போதிக்கிறது.
அது கருணையை போதிக்கிறது.
அது சமதாவை (சமத்துவத்தை) போதிக்கிறது’’
அம்பேத்கர் எதற்கு பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். வேறு எந்த மதமும் (இந்து, கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம்) இந்த மூன்று கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பது அம்பேத்கரின் முடிவு.
பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்றுமொரு காரணம் அது பாரதப் பண்பாட்டில்- பாரத மண்ணில்- தோன்றிய மதம்.
அதை அம்பேத்கரே கூறுவதைக் கேட்போம். அம்பேத்கர் கூறுகிறார்:
“நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். நான் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தீண்டாமை ஒழிப்பு குறித்து உங்களுடைய கருத்துடன் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பினும் தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன்.
ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்.’’
ஆகவே அம்பேத்கர் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு பௌத்தம் பாரத மண்ணில் தோன்றிய – பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறு என்பதனால்தான்.
1955-1956 ஆண்டுகளில் அம்பேத்கர் பௌத்த மதத்தில் மாறுவது, பௌத்தம் பற்றி சொற்பொழிவாற்றுவது, பௌத்தத்தை பரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்திய புத்தமத சொசைட்டி அம்பேத்கரால் மே 4, 1955-இல் மும்பையில் கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. புத்தமதப் பிரசாரத்திற்காக இந்த சொசைட்டி அமைக்கப்பட்டதை பம்பாயில் நாரே பூங்காவில் மே 8, 1955-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முறைப்படி இதை அவர் அறிவித்தார்.
பிரபுத்தா பாரத் இதழில் 1956 ம 12-ஆம் தேதி ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2500-ஆவது புத்த ஜெயந்தியை இந்தியப் பௌத்தக் கழகத்தின் எல்லா கிளைகளும் கொண்டாட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் 1956 மே 24-ஆம் தேதி பம்பாய் நரே பூங்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 75000 பேர் கலந்துகொண்டனர். பம்பாய் மாகாணத்தின் முன்னாள் பிரதமர் திரு.பாலாசாகேப் கெர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, புத்தரின் வாழ்க்கையையும் அவரது தம்மத்தைப் பற்றியும் உரையாற்றினார்.
அவரது உரைக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் பேசும்போது, 1956 அக்டோபரில் பௌத்தத்தைத் தாம் தழுவப் போவதாக– அதாவது புத்தமதத்தில் சேரப் போவதாக அறிவித்தார்.