New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூமி சாஸ்திரம்: கட்டமைப்பும், பிற்புலமும் அ. கணேசன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பூமி சாஸ்திரம்: கட்டமைப்பும், பிற்புலமும் அ. கணேசன்
Permalink  
 


பூமி சாஸ்திரம்: கட்டமைப்பும், பிற்புலமும்

Tamil Literature Ilakkiyam Papers

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவர் தொ. பரமசிவன் அவர்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட கருத்தாய்வுக் கட்டுரை.

தமிழ் நாட்டோடும், தமிழ் மொழியோடும் கிறித்தவம் கொண்ட தொடர்பு ஐந்து நூற்றாண்டு காலப் பழமையினையுடையது. இத்தொடர்பில் தமிழராகவே மாறிப்போன ஐரோப்பியக் கிறித்தவர்கள் பலருண்டு. வீரமாமுனிவர், பேராயர் கால்டுவெல், ஜி.யு. போப் என அவர்களில் சிலரே தமிழ் மக்களுக்கு பெரிதும் அறிமுகமாயுள்ளனர். சிர்திருத்தத் திருச்சபையினரில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களில் கால்டுவெல்லுக்கும், போப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர் இரேனியஸ் அடிகளார். எழுத்து மொழியோடு மக்களின் பேச்சு மொழியினையும் அதன் உயிர்ப்போடு விளங்கிக் கொண்ட ஆற்றல் மிக்கவர்.

முதல் அறிவியல் தமிழ் நூலான பூமி சாஸ்திரம், அவரது மிகச்சிறந்த படைப்பாகும். அத்துடன் அவர் எழுதிய தமிழ் இலக்கண நூலும் மொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் குறித்த ஆங்கில நூலும் தமிழ் மொழி ஆய்வாளர்களுக்கு இன்றும் வேண்டிய சில புதிய செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்விக்கு அவர் இட்ட அடித்தளம் வலிமையானது.

தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் நினைக்கப்படாமல் போய்விட்ட இப்பெருந்தமிழரை எம் தமிழியல் துறை நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தது. இரண்டாயிரமாவது ஆண்டில் பிப்ரவரி திங்கள் இரண்டாம் நாள், இரேனியஸ் அடிகளாரின் தமிழ்ப்பணி குறித்து ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அழைக்கப்பட்ட அறிஞர்கள் ஐவரும் மிகச்சிறப்பான முறையில் கட்டுரைகளை வாசித்தளித்தனர். அவர்களில் அ. கணேசன் தொகுத்தளித்த பூமி சாஸ்திரம்: கட்டமைப்பும் பிற்புலமும் என்ற கட்டுரை கூடல் வாசகர்களுக்காக இதோ...

தமிழ்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமென்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் தொடக்க காலமெனலாம். இக்காலத்தின் ஆட்சியமைப்புகளால் அல்லது மாற்றங்களால் படித்த மத்தியதர வர்க்கம் என்ற ஒரு சமூகப் பிரிவு புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது. மரபு வழிச் சாதிச் சமூகம் போலல்லாது எல்லாச் சாதியினரும் கலந்த ஓர் அமைப்பாக இது உருக்கொண்டது.

அச்சமூகத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கான சாதனங்களாகப் பத்திரிகைகள், நூல்கள் முதலியன தேவையாயின. அவற்றைப் பற்பலவாய்ப் பெருக்கிப் பரப்பிட அச்சு எந்திரம் இன்றியமையாத் தேவையாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஆங்கில அரசாங்கமும் கிறித்துவ மறை பரப்புநர்களும் அச்சு எந்திர வசதியினைப் பயன்படுத்தும் உரிமை இருந்தது. சாதிக்கட்டினை மீறி அனைவரும் கல்வி கற்கலாம் என்றும் உணர்வு தோன்றியது. இந்தியா முழுமைக்கும் கல்வியும், கற்பிக்கும் பள்ளிகளும் உடனடித் தேவையாயின. இச்சூழலில்தான் 1817இல் இரேனியஸ் பாளையங்கோட்டைக்கு வருகை தந்தார்.

தமிழ் நாட்டில் முந்தைய நிலை

19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அதற்கு முன்பும் இங்கே கல்விமுறையில்லையா? உண்டு. ஓதுதலும், ஓதுவித்தலுமாகிய பணிகளுக்குரியவர்கள் தாமே என்று கருதிக்கொண்ட பிராமணர்கள் தமது சமூகத்தினர் மட்டும் கற்றுக்கொள்ள வேதபாடசாலைகளை வைத்திருந்தனர். இசுலாமியர்கள் மிகுந்திருந்த பகுதிகளில் "மதரஸா" எனும் மார்க்கக் கல்விச்சாலைகள் அமைந்திருந்தன. ஆனால் பொதுக்கல்வி என்ற ஒன்று மட்டும் இல்லவே இல்லை. திண்ணைப் பள்ளிகளும், ஏட்டுப்படிப்பும், குருகுலக்கல்வியும் மேட்டுக்குடி மக்கட்குரியவாகக் கருதப்பட்டன. ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் திரளில் பெரும்பான்மையானவர்க்கு இவையும் எட்டாக்கனியாகவிருந்தன.

கிராமங்களில் நாட்டுப்புறக்கலை சார்ந்த வில்லுப்பாட்டு, ஏடுவாசிப்பு, கோயிலில் தலபுராணங்கூறல் போன்றவை வாய்மொழிக் கல்வியாய் செவிவாயாக, நெஞ்சுகளனாகப் பரவி நின்றன. மிகப் பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவு பெறாதவர்களாகவே இருந்தனர்.

இரேனியஸ் அடிகளாரின் நோக்கம்

கிறித்தவ சமயம் பரப்புவதை முதற்பணியாகக்கொண்ட இரேனியஸ், தமிழக மக்களின் மனவயலைப் பண்படுத்திட விழைந்தார். சைவ-வைணவ சமயங்களிலும் பிறவழிபாட்டு நெறிகளிலும் ஊன்றி விழுதுவிட்ட உள்ளத்தினராயிருக்கும் இம்மக்களுக்குக் கல்வியறிவோடு கிறித்தவ சமய அறிவையும் புகட்ட முனைந்தார். அப்பணிக்கு முதலில் தாம் நினைத்தவாறே இம்மக்களைப் புராணிக நம்பிக்கைகளிலிருந்து விடுபட வைக்கவேண்டும்மென்றுணர்ந்தார். ஆதலின் தமிழ்ச் சமயங்கள் கூறும் உலகம் என்பது பந்தம் - கட்டு - தளை - என்ற கருத்துக்களைப் போக்கவேண்டும் என்றெண்ணினார்.

கடவுள் உலகைப் படைத்ததோடு, உலகின் நுகர்ச்சிக்காக மனிதனையும் படைத்திருப்பதனால் இனிமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டும். மனிதன் தன் அறிவாற்றலால் பூமியைச் சொர்க்கமாக்கிட வல்லவன். உலகு கட்டில்லாதது, பந்தம் செய்யாதது, தளையற்றது என விளக்கிக் கூறிக் கிறித்துவ சமயத்தை நிலைநாட்டப் பெருமுயற்சி மேற்கொண்டார்.

பொதுக் கல்வியின் தோற்றம்

இரேனியஸ் சிர்திருத்த சபைக்காரர். நவீன கல்வி, விஞ்ஞான அறிவு ஆகியவற்றின் பிரதிநிதகளாக உருவானவர்கள் ஐரோப்பியச் சிர்திருத்த சபையினர். கத்தோலிக்கத்தில் துறவும், உலகமறுப்பும் ஆளுகை செலுத்தி வந்ததைச் சிர்திருத்த சபையினர் விமர்சிப்பார்கள். அடிகளார் தமது சபையின் கல்வி விஞ்ஞான அறிவை இங்கே பரப்ப முனைந்தபோது உயர்குல மக்கள், தாழ்குல மக்கள் என்ற சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது.

பொதுக்கல்வியில் பேரார்வம் கொண்டிருந்த இரேனியஸ் இந்து பிராமணியத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டியவரானார். இந்து பிராமணியத்தின் முக்கியப் பண்பு, அறிவை மக்களுக்கு அனுமதியாதிருப்பதுதான். தேடு கல்வியைத் தாராளமாக்கி அறிவைப் பெருக்குவது இந்துபிராமணியத்திற்கு எதிரான செயலாயிற்று. எனவே கல்வித்துறையைக் கைப்பற்ற வேண்டியது இரேனியசுக்குத் தலையாய பணியாயிற்று.

பொதுக்கல்வி என்பது இருவகையாக அமைகின்றது.

1. எல்லா மக்கட்குமான பொதுக்கல்வி

2. இறை-கோயில்-சமயம் சாராததான பொதுக்கல்வி.

இவற்றை ஏற்படுத்த வேண்டியவரானார் அவர். பாடசாலைகள் ஏற்படுத்தல், வேதாகமம் ஓதுதல், ஓதுவித்தல், அறிவியல் காட்டல், கிறித்துவம் பரப்பல் எனக் கல்லொன்று களியிரண்டாய் அறிவியலோடு தம் சமயமும் பரவ வேண்டுமென்ற அவர்தம் விழைவைப் பூமி சாஸ்திரம் தெற்றெனக் காட்டுகிறது.

பொருளியல் மேதை மார்க்ஸ் கூறுவது போல், முதலாளிகள், தொழில் சமூகம் பரவவேண்டுமென்று கருதுகிறபோதே மூலதனப் பரவலும் நிகழவேண்டுமென்று விழைவர். இரேனியசும், அப்படித்தான் அறிவியலோடு கிறித்தவமும் சேர்த்தே பரப்பிட எண்ணினார். அவர் தமிழகம் போந்த கடமையும் அதுவே. இரேனியஸ் அடிகள் சமயத்துறையில் பல திறப்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சமய எல்லைக்கு வெளியே உள்ள மக்களையும் பொதுக்கல்வியின் வளர்ச்சியினையும் மனத்தில் கொண்டு அவர் எழுதிய நூல் பூமி சாஸ்திரம்.

நூலின் முகப்புப்பக்கத்தில் நூலின் குறிக்கோள் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது: தமிழருக்கு அறிவுண்டாகும்படி. இந்நூல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்று, பொதுக்கல்விக்குரிய அனைத்துத் சமய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிறந்த புத்தறிவை ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததாகும். இனி, பூமி சாஸ்திரம் நூலின் புறக்கட்டமைப்பினை நோக்கலாம்.

பூமி சாஸ்திரத்தின் கட்டமைப்பு

ஒரு நூலின் கட்டமைப்பினை புறக்கட்டமைப்பு அகக்கட்டமைப்பு என இரண்டாகப் பிரித்துக்காண்பார்கள். பூமி சாஸ்திரத்தின் புறக்கட்டமைப்பை முதலில் காணலாம்.

முகவுரை நீங்கலாக 728 பக்கங்களைக் கொண்டது பூமிசாஸ்திரம்.

பூமியின் தன்மை பற்றி

முதலாவதாகக் கூறப்படும் செய்திகள் - பக்கங்கள் = 19
ஆசியாக்கண்டம் = 73
ஐரோப்பாக்கண்டம் = 442
ஆப்பிரிக்கா = 66
அமெரிக்கா பொது பக்கங்கள் = 10
வட அமெரிக்கா = 45
தென் அமெரிக்கா = 21
தென் சமுத்திரத்தீவுகள் = 10
முடிவுரை = 6
அட்டவணை = 34
பிழை திருத்தம் = 2
-------------------
ஆகமொத்தப் பக்கங்கள் = 728
-------------------

இந்தப் பூமியிலுள்ள சில தேசத்தார் இராசாக்களாலும், சில தேசத்தார் தங்களிலிருந்து எடுத்த சங்கத்தாராலும் சில தேசத்தார் அவ்விருவராலும் ஆளப்படுகிறார் - என்று கூறுகிறார் ஆசிரியர்.

இந்த 2000-ஆம் ஆண்டில் 600 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டுள்ள இந்தப் பூமியில் 1913 ஆம் ஆண்டில் 100 கோடிப் பேர் இருந்ததாகக் கணக்குக் காட்டுகிறார்.

கிறிஸ்தவர்கள் = 17 1/2 கோடிப்பேர்
யூதமார்க்கத்தார் = 1 கோடிப்பேர்
முகம்மது மார்க்கத்தார் = 16 கோடிப்பேர்
விக்கிரக ஆராதனைக்காரர் = 65 1/2 கோடிப்பேர்
--------------
ஆக = 100 கோடிப்பேர்
--------------

பூமி சாஸ்திரத்தில் நாடுகளின் எல்லைகள், மலைகள், நதிகள், பிரதேசங்கள், மக்களினங்கள், அவர்களில் உயர்ந்தோர், தாழ்ந்தோர், வரலாறு, அறிஞர், தலைவர், அரசர் போன்ற தகவல்களோடு அட்சரேகை, தீர்க்கரேகை, பருவ காலச் சூழல்களையும் சுட்டுகிறார் இரேனியஸ்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பூமி சாஸ்திரம்: கட்டமைப்பும், பிற்புலமும் அ. கணேசன்
Permalink  
 


மொழியும் நடையும்

இரேனியஸ் அடிகளார் தமிழ் நாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் கழித்து கி.பி 1825-இல் தமிழ்மொழி இலக்கணம் குறித்து நூலொன்றை எழுதியவர் 1832-இல் பூமி சாஸ்திரம் 728 பக்கங்களில் அச்சிடப்பட்டு முடிந்துள்ளது. எனவே உத்தேசமாக 1830-இல் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் நாட்டுக்கு வந்த 16 ஆண்டுகளில் அடிகளார் பெற்றுக்கொண்ட தமிழ்மொழிப் பயிற்சியும் தமிழிலக்கணப் பயிற்சியும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.

பிறமொழிப் பெயர்ச்சொற்ளைத் தமிழிலக்கண மரபுக்கேற்ப அவர் மாற்றியமைத்த முறைக்குச் சில எடுத்துக்காட்டுகள்

ரேனியஸ் - இரேனியஸ்
துருக்கி - துருக்கை
பிளேட்டோ - பிலாத்தோ
எகிப்து - எகிப்பத்து
தைமூர் - தீமூர்
பிரான்ஸ் - பிராஞ்சி

"ஜே" என்னும் ஆங்கில ஒலியினைத் தொடக்காலக் கிறித்துவ மறைபரப்புநர்கள் "ய" கரமாகவே ஒலித்தனர் (ஜான் - யோவான், ஜேக்கப் - யாக்கோபு), இரேனியஸ் அடிகளாரோ அத்துடன் தமிழிலக்கண மரபுக்கேற்ப இகரத்தை முன்னிறுத்தி எழுதுகிறார்.

ஜப்பான் - யப்பான் - இயப்பான்
ஜமுனா - யமுனை - இயமுனை

தாம் வாழ்ந்த ஊரில் பாய்கின்ற தாமிரவருணி என வழங்கப்பெறும் ஆற்றின் பெயரைத் தாம்பிரபன்னியாறு என்கிறார். இவ்வகையில் இவர் மனோன்மணியச் சுந்தரனாருக்கு முன்னோடி எனலாம்.

ஆற்றொழுக்கான அவரது உரைநடைக்கு இரு சான்றுகள்

மொஸ்காவு பட்டினம் முன்னே நகரியாயிருந்தது. மொஸ்காவு என்னும் ஆற்றினாலே அதற்குப் பேருண்டாயிற்று. அது மகா பெரியபட்டினம். 1802 - ஆம் வருசத்திலே பிராஞ்சி தேசத்து இராசனாகிய பொனப்பார்ட் என்பவன் அங்கே யுத்தம் பண்ணுகிறதுக்கு அநேக சேனைகளுடனே வந்தபொழுது ருசியர் அந்த சத்துருக்களுக்கு இடங்கொடாதபடிக்குத் தாங்களே யதை முழுவதும் சுட்டெரித்தார்கள்.

இனி நூலின் அகக்கட்டமைப்பினைப் பார்க்கலாம். நூலின் அகக்கட்டமைப்பு என்பது தன்னியல்பாக நிகழ்வதில்லை. நூலாசிரியரின் கருத்தியல் தளமும் சார்பு நிலையும் சேர்ந்து அதனை உருவாக்குகின்றது. அவ்வகையில் இரேனியஸ் ஒரு கிறித்தவராகவும் ஐரோப்பியராகவும் இருந்தார்.

உலகின் பல நாடுகளையும் அங்குள்ள மக்களையும் ஐரோப்பா அக்காலத்தில் எவ்வாறு நோக்கியது என்பதற்கு அந்த நூல் ஒரு சாட்சியாகும். தமிழ்நாடு, வடஇந்தியா, உலகின் பிற நாடுகள் கண்டங்கள் (ஆஸ்திரேலியா தவிர) ஆகியன பற்றிய கருத்துகளைக் கூறியவாறே நூலினை நடத்திச் செல்கிறார் அவர்.

இந்துமதப் பிடிப்பும் அசைப்பும்

இருபது ஆண்டுக்காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த அடிகளார் தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர். நாட்டுப்புற மக்களின் மரபுவழிப்பட்ட சமய உணர்வுகள் அழுத்தமானவை. அம்மக்கள் தத்தம் வாழ்விடங்களையே உலகென்று கருதுவோர். உழப்படும் நிலனும், வளந்தரு நீரும், அவ்வந் நிலத்துச் சிறு தெய்வங்களும், (இசக்கியம்மன், சுடலைமாடன் போல்வன) அவர்களால் உயிரினும் மேலாய்க் கருதப்பெறுபவை. எந்தையும் தாயும் அவர்தம் முன்னையரும் விழைந்து தொழுதவற்றை "யாமும் வழுத்துவோம்" என்னும் அற்றிடாப் பற்றுடையார். அம்மக்களின் புனித பூகோளவியலைச் (Sacred Geography) சற்றே அசைக்கவாவது செய்தால்தான் கிறித்தவ சமயத்தை ஊன்றி வைக்க இயலும் என்பதை நன்குணர்ந்த இரேனியஸ் அடிகள் உள்நாட்டுச் சமய நம்பிக்கைகளை அறிவியலில் சார்த்திக் காட்டிப் பகுத்தறிவை - சிர்திருத்த உணர்வை - ஊட்டிட முற்பட்டார். அதன் காரணமாகத்தான் பூமி சாஸ்திரத்தில்,

" .......... ஆகாச விரிவிலே இருக்கிற பூமி முதலானவைகள் யானைகளினாலாவது ஆதிசேடனாலாவது தாங்கப்படாததாய் இருந்தால் அந்தரத்திலே எப்படி நிற்குமென்றால் பராபரன் கொடுத்த முறைப்படி........ சின்னப் பொருளானது பெரிய பொருளாலே இழுத்துக் கொள்ளப்பட்டு விழாதபடி காக்கப்படுகின்றது. அப்படி இழுத்துக் கொள்கிற பலத்தினாலே சூரியனுக்கு மிகவும் சிறிதான பூமி முதலானவை தகுதியான நிலையில் நிற்குமட்டும் சூரியனாலே இழுத்துக் கொள்ளப்படுகின்றன......."

இந்தப்பூமி ஆதிசேடன் என்னும் பாம்பாலும் அட்டதிக்கஜங்கள் எனும் யானைகள் எட்டாலும் தாங்கப் பெறுவதாய்க் கூறும் இந்து மதப் புராணியத்தைச் சற்று அச்சத்தோடே ஆசிரியர் ஆட்டிப் பார்க்கின்ற நிலை இதில் தெரிகிறது.

ஆசியாக் கண்டம்

மற்ற கண்டங்களைப் பார்க்கிலும் ஆசியாக் கண்டம் மிகுந்த பொன், வெள்ளி, இரத்தினங்கள், சரக்குகள் முதலானவைகள் உள்ளது. அல்லாமலும் அதிலே பரமன் முதன்மையான மனிதரை உண்டாக்கினார்... உலக இரட்சகராசிய இயேசுகிறிஸ்து நாதர் பிறந்து, மனிதர்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்தார்..... ஆகையால் ஆசியாக் கண்டம் மிகவும் மேன்மையாயிருக்கின்றது என்கிறார்.

இந்து தேசம் பற்றிய வரலாற்றில்

நாம் மற்ற உலக சரித்திரத்தோடு ஒத்துப் பார்க்கிற பொழுது, இந்து தேச சரித்திரம் கட்டுக்கதையாகத் தோன்றுகிறது. அல்லாமலும் சமீப காலத்தைக் குறித்து ஒரு சரித்திரமும் இல்லை ஆனபடியினாலே முந்தின காலத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிற சரித்திரம் மிகவும் சந்தேகமுள்ளது என்கிறார் ஆசிரியர்.

"அந்த நதியின் சலம் மிகவும் பரிசுத்தமாய்ப் பாவங்களை நீக்குகிறதென்று இந்து தேசத்தார், புத்தியீனமாய் நினைத்து மிகுதியாய் அங்கே போய் ஸ்நானம் பண்ணுகிறார்கள்" என்கிறார்

இந்து தேச மக்களின் புனித நம்பிக்கையை மறுதலிக்கிறார்.

இந்து தேசத்துச் சத்தியவரதனே "nova" என்னும் மன்னன் என்று ஆசிரியர் கூறும் செய்தி விளக்கமாயில்லை.

பிராமணிய எதிர்ப்பைத் தெரிவிக்க ஆசிரியர், வடதிசையிலுள்ள கல்தேய நாட்லிருந்து இந்து தேசத்திற்கு வந்து... சோதிடக்கலையைப் பரப்பி, விக்கிரகாராதனையைச் சிறப்பாக்கி, பிரம்மா, விட்டு, உருத்திரன் என்பவர்களையும் அவர்களுடைய மனைவி பிள்ளை முதலானவர்களையும் குறித்துப் பற்பல கதைகளைக் கட்டிக் கொண்டு தங்களைப் பிராமணரென்றும், கர்த்தாக்களென்றும், தேசர்களென்றும் மேன்மைப்படுத்திக் குடிகளையும், இராசாக்களையும் தேவன்போல் ஆண்டுகொண்டு வந்தார்கள்" என்று சுட்டுகின்றார். பிராமணர்கள் இந்தியாவுக்கு வந்தேறு குடிகள் என்னும் கருத்தைப் பதிவு செய்த முதல் தமிழ் நூல் இதுவே ஆகவேண்டும்.

இசுலாமியச் சமய விமரிசனம்

அரபு நாட்டைப் பற்றிய விளக்கம் அளிக்கும் இரேனியஸ் அடிகள் இசுலாமிய சமயத்தாரை மிக வன்மையாக விமர்சிக்கிறார். அக்காலத்து வழக்கப்படி இசுலாம் என்ற சொல்லாட்சிக்குப் பதிலாக முகமது மார்க்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மெக்காவிலே பிறந்த முகமது நபியைக் குறித்து "கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் உண்டான வேதத்தை எடுத்துத் தன் இஷ்டப்படிக்கு அதிலிருந்து சரித்திரங்களை எடுத்துப்பல கட்டுக்கதைகளைக் கூட்டிக் கொறான் எனப்பட்ட வேதமுண்டாக்கினார் என்று கிறித்தவராகப் பேசும் இரேனியஸ், முன்பு அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்களாயிருந்தார்கள். பின்பு அவர்களும் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணிக் கொண்டிருந்த அநேக யூதர்களும் முகம்மது மார்க்கத்தரானார்கள்... என்று இசுலாமிய சமயத்தின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு, துருகூகைத் தேசத்து முகம்மது மார்க்கத்தார் அநேகம் ஸ்தீரிகளை மணப்பதையும், அச்சமய இராசாக்கள் அரெம் எனப்படும் அரண்மனையில் எண்ணற்ற பெண்டிரை அடைத்து வைத்திருந்ததையும் கூறுகிறார்.

கஜினி முகம்மது

கிஸ“சி தேசத்து இராசாவான முகமது என்பவனும், அவனுக்குப் பின் வந்த இராசாக்களும் இந்து தேசத்து ராசாக்களோடு யுத்தம் பண்ணிச் செயம் கொண்டு திரளான சனங்களை வெட்டி, அநேக நாடுகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு, கோயில்களில் உண்டான பொன், வெள்ளி சொரூபங்களையும், இரத்தினங்கள் முதலான அநேக திரவியங்களையும் கொள்ளையிட்டுக் கொண்டு போனார்கள் எனக் கஜினி முகம்மது அடித்த கொள்ளையைச் சுட்டுகிறார். திப்புசுல்தானைப் பற்றிப் பேசுகின்ற ஆசிரியர் அவன் அதிகபராக்கிரம சாலியாகி இங்கிலீசுக்காரர்களுக்கும் ஒல்லாண்டுக்காரருக்கும் அநேகம் தொந்தரவுகளைச் செய்தான் - என்கிறார்.

சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டைப் பற்றிப் பேசும் இடத்தில் சோக்கிர்த்தெஸ் என்று சாக்ரடீசைக் குறிப்பிடும் இரேனியஸ், அவரைப் சாதுர்யப் பேச்சுக்காரன், சன்மார்க்கன், ஞானி, என்றெல்லாம் புகழ்ந்த பின்பு அவன் சிவவாக்கியரைப் போல் அநேக தேவர்கள் உண்டென்பதைக் குறித்துப் பரிகாசம் பண்ணினான் என்கிறார். இரேனியஸ் வாழ்ந்த காலப் பகுதியில் பலதெய்வ வணக்கத்தை மறுப்பதற்குச் சித்தர்களின் பாடல்கள் பயன்பட்டன என்று தெரிகிறது.

வால்டேரும் ரூசோவும்

பிரான்சு முதலான தேசத்தார் மாத்திரம் கிறிஸ்துவின் ஒளியை எண்ணாமல் பாப்பு மதத்தின் (கத்தோலிக்க கிறித்தவ மதத்தின்) இருளில் கிடக்கின்றனர் என்கிறார் இரேனியஸ். சமுதாய ஒப்பந்தம் கண்ட ரூசோவும் புரட்சி வித்தூன்றிய வால்டேரையும்,

........ அதுவுமல்லாமற் பிராஞ்சி தேசத்திலே கெட்டிக்காரராகிய சில கல்விமான்கள் சத்திய சுவிசேசத்தின் தன்மையையறியாமற் பாப்புமார்க்கத்தின் வம்புகளை அரோசித்துக் கிறிஸ்துமார்க்கத்தை அசட்டை பண்ணி அவிசுவாசத்திற்கு இடங்கொடுத்தார்கள். 18-ஆம் நூற்றாண்டிலே வொல்த்தேர், தாலெம்பர்த்து, ரூசோ முதலானவர்கள் அப்படிப்பட்ட யோசனைகளைக் கொண்டு கிறிஸ்து மார்க்கம் வம்பானதென்றும் சுவிசேஷம் பொய்யானதென்றும் கிறிஸ்து நாதர் வஞ்சகனென்றும் சகலத்தையும் அறியும் படிக்கு நம்முடைய அறிவு போதுமென்றும்... இப்படிப்பட்ட பொல்லாத பேச்சுக்களை அலங்காரமாய் எழுதிப் பிரசித்தம் பண்ணினார்கள் என்று விளக்குகிறார் இரேனியஸ் கடிவாளமில்லாத குதிரைகளைப்போல் அதிகதுஷ்டர்கள் ஆனார்கள்....... என்று குறைகாண்கிறார்.

ருசிய தேசம்

இரேனியஸ் அடிகளாரின் அருளுள்ளத்தினை இத்தேசத்தின் வரலாற்றில் தொடக்கத்தில் காணலாம். பெற்றோராலும் மற்றோராலும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அவல நிலைகளைப் பலவிடங்களிலும் ஆசிரியர் கண்டிருக்கக்கூடும். ஆதலின் மொஸ்காவு பட்டணத்தை பற்றிப் பேசும்போது

....... திக்கற்ற குழந்தைகளை அடக்கிக் கொள்ளும் தருமவீடும் (அனாதை ஆசிரமம்) அந்நாளில் இருக்கின்றது என்ற செய்தியை தெரிவிக்கிறார். ஆப்பிரிக்காக் கண்டம் பற்றிய முகப்புரையில் இங்கே....... பொன்னும், யானையின் தந்தமும் மிகுதியாயிருக்கின்றன. குடிகள் அதிகபுத்தியும் அறிவும் சாக்கிரதையும் உள்ளவர்களாய் இருபார்களானால், அந்தப்பூமி மற்றப் பதார்த்தங்களையும் செழிப்பாய்ப் பிறக்கும்...... என்ற உலகளாவிய நலக்கருத்தை வெளியிடுகிறார்.

சினதேசம்

1913-ல் சினதேசத்தில் 39 கோடிப்பேர் இருந்திருக்கிறார்கள். விக்கிரக ஆராதனை செய்கிறார்கள். அவர்கள் பல தேவர்கள் மேல் பத்தியாயிருந்து பலப்பல மார்க்கமாய் நடக்கிறார்கள். அவர்கள் வீணான செய்கைகளை மிகவும் பற்றி வருகிறார்கள். மெய்யான தேவனை அறியாமலிருக்கிறார்கள் என்ற அளவில் நிறுத்தாமல், சினத் தேசத்தார் மிகவும் கபடமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் - என்றும் கூறுகிறார் ஆசிரியர்.

கன்பூசியஸ்

கொங்பூட்சி என்பவனிருந்தான். அவன் மிகவும் விவேகம் உடையவனாய் இந்து தேசத்தாருக்கு மனுவென்னும் மகாமுனி செய்தது போலச் சின தேசத்தார்க்கு நீதி சாஸ்திரத்தை உண்டு பண்ணினான் என்று கூறுவதிலிருந்து நீதி சாத்திரம் புகன்ற மனுவை; மகாமுனி என்று எப்படியோ ஒப்புக் கொள்கிறார் ரேனியஸ்.

திபேத்துத் தேசம்

திபேத்துக் குடிகள் சற்றே கறுப்பு வண்ணமுடையவர்கள். அவர்கள் மெய்யான தேவனையறியாமல், ஒரு மனிதனைப் பிரதான ஆசாரியனாய் வைத்து அவனைத் தேவன் என்றெண்ணி நமஸ்காரம் பண்ணுகிறார்கள். அந்தப் பிரதான ஆசாரியனுக்குத் தாலாயிலாமா என்று பெயரெனச் சொல்கிறார்.

ஆப்பிரிக்கக் கண்டம்

பூர்வீகக் குடிகள் பற்றிய விரிவான செய்திகள் இல்லை. ஆனால் ஐக்கிய அமெரிக்கத் தேசத்தில் பூர்வீகக் குடிகளாய் இருந்தவர்கள் துஷ்டர்களே என்றும் சுட்டுகிறார்.

கம்பெனி ஆட்சி

நாடுகொள்ளும் ஆசையால், குறுநில மன்னர்களையும் சிற்றரசர்களையும் ஏமாற்றி அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் செயலைப் பற்றி ஆசிரியர் கூறும்போது, இங்கிலீசுக்காரர், பொர்த்துக்கீசுக்காரர், பிரெஞ்சுக்காரர் போன்றோர் இங்கிருந்து கொண்டு, இராசாக்களுக்கிடையே (வரி செலுத்திக்கொண்டு வாழுமாறு) சமாதானம் செய்து வைத்தனர் என்று சமாதானம் சொல்கிறார்.

பிரிட்டிஷ் தீவுகள்

பற்றிப் பேசும் போதும் ஆசிரியர்,

அவர்கள் ஐரோப்பியர்கள் வணிகத்தில் கெட்டிக்காரர்கள், அறிவாளிகள், விஞ்ஞான அறிவுக்காரர்கள், விஸ்தாரமான தொழில்களைச் செய்கிறவர்கள். பார்லிமெண்ட் ஆளுகை முறையறிந்தவர்கள், நீதியமைப்புச் செய்கிறவர்கள் - என அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

ஐரோப்பிய மேலாண்மை வாதம்

பூமி சாஸ்திரத்தின் 728 பக்கங்களில் 442 பக்கங்கள் ஐரோப்பாக் கண்டத்தை வளைத்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு பக்கங்கள் அந்தக் கண்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

17 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை "இரட்சிப்பு" வழங்கும் கண்டமாய் ஐரோப்பாவும், இரட்சிப்புப் பெறுவனவாய் மற்றைய கண்டங்களும் இருப்பதாய்க் காட்டப்பெறுகிறது. ஐரோப்பாக்காரர்கள் - இங்கிலீசுக்காரர்கள் உலகத்திற்கு எசமானர்கள் என்ற கருத்து முயற்சிகளுக்குப் பூமி சாஸ்திரமும் அரண் செய்யும் கருவியோ என்ற ஐயம் வாசகர்க்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.

அன்றியும் இந்தச் சரித்திரங்களைப் பார்க்கிறபொழுது ஐரோப்பாக் கண்டம் சிறியதாயிருந்தும் அந்தக் கண்டத்தார் மற்ற யாவரிலும் அதிக புத்தியும் விவேகமும் வல்லமையுமுள்ளவர்களாய் உலகத்திற்கு எசமான்களாய் இருக்கிறார்களென்றும், அவர்களில் விசேஷமாய் இங்கிலீஸ்காரர் நுழையாத தேசமொன்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. அவர்களினம் அநேகத் தீமைகளைச் செய்கிறவர்களாயிருந்தும் அவர்கள் விரவேசிக்கிற தேசமேதோ அது அவர்களாலே பல நீதிகளையும் ஒழுங்குகளையும் யோக்கியத்தையும் மற்றும் அநேக நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுகின்றதென்கிறதற்குச் சந்தேகமில்லை. அந்த மேன்மை ஐரோப்பாக் கண்டத்தாருக்கு எப்படிக் கிடைத்தது. கிறிஸ்து மார்க்கத்தினாலே அன்றி வேறுவிதமாய் அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார் இரேனியஸ் அடிகளார்.

"ஓரியண்டலிசம்" என்ற நூல் எழுதிய எட்வர்டு சையது என்பார். ஐரோப்பாவை மையங்கொண்ட ஓர் அறிவு உலகை இயக்கி வருகிறது. பொதுக்கல்வியிலும் ஓர் அரசியல் புகுந்து ஆள்கிறது. இன்றும் கல்விச் சாலைகளில், ஓரியண்டலிசம் (கீழைத்தேயம் பற்றிய படிப்பு) என்ற துறை நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது என்கிறார்.

ஐரோப்பியர்கள் - இங்கிலீசுக்காரர்கள் - உலகத்திற்கு எசமானர்கள் என்பதும் பள்ளிக்கூடங்கள் சத்தியபோதனைச் சாலைககள் என்பதும் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதனை இலைமறை காயாகவும், ஊடுபாவாகவும் பூமி சாஸ்திரத்தில் காணலாம். பூமிக்கு ஐரோப்பிய நாடுகளால் தான் நல்வழி காட்ட முடியும் என்ற மேலாண்மை உணர்வு இரேனியஸ் அடிகளாருக்கு மட்டுமன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தது என்பதனை வரலாறு காட்டுகின்றது.

இரேனியஸ் இந்த நாட்டின் பழஞ்சமயவாதிகளின் எதிர்ப்பையும், தலைமைச் சபையின் எதிர்ப்பையும் ஒரு சேர எதிர்கொண்டவராய் இருந்தும், என் கடன் பணி செய்து கிடப்பதே, எனத் தொண்டாற்றினர்.

சமயப் பணி மட்டும் புரியாமல் சமூகப் பணி, பெண்கள் விடுதலைப் பணி, காலரா நோய்த்தடுப்பு கட்டுரை வழங்கிய எழுத்துப்பணி எனப் பன்முகப் பணிகளை அசுரவேகத்தில் அவர் ஆற்றிய முறை தலைமைக்கே வியப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும் தமது பூமி சாஸ்திரம் நூலின்வழி தமிழ்நாட்டின் பொதுக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு அவர் அடிக்கல் நாட்டிய பெருந்தகை என்பதே அனைவராலும் நினைக்கப்படுவதாகும்.

இரேனியஸ் அடிகளாரின் இந்திய வருகைக்கான காரணமும் நோக்கமும் கிறித்தவ மதத்தைப் பரப்பவேண்டும் என்பதே. ஆனால் ஐரோப்பியத் தொழிற்புரட்சியின் விளைவுகளும், அறிவொளிக் காலத்தின் பாதிப்பும் அவரது சிந்தனைகளை வெகுவாகப் பாதித்தன. தொழிற்புரட்சியின் பின்விளைவாக ஐரோப்பியர் பூமியின் கீழ்த்திசை நாடுகளைக் கண்டறிந்தது. ஐரோப்பியரின் அதிகாரத்தையும் அறிவுலகத்தையும் விரிவு செய்தது. கத்தோலிக்கத்தின் துறவு நெறிக்கும் உலக மறுப்புக்கும் எதிரான சிர்திருத்தச் சபையாரின் சிந்தனைகள் விரிவடைந்தன. குறிப்பாக பூமியின் பரப்பு, விரிவு, மக்கள் வகை, பூமிக்கும் பிறகோள்களுக்குமான தொடர்பு ஆகியவை குறித்த அறிவு விரிவு பெற்றது.

பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியரின் பயண அனுபவங்களும், தத்துவமும் அச்சியந்திரத்தின் வழியாக நூல்களாக வெளிப்பட்டன. அவ்வெளிப்பாடுகளில் ஒன்றான பூமி சாஸ்திரம் தமிழ்நாட்டுப் புதுக்கல்வியுலகில் முதல் கதிராகப் பாய்ந்தது எனில் மிகையாகாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard