திருநாவுக்கரசர் காட்டும் திருஞானசம்பந்தர் அற்புதங்கள் பொ. கருப்புசாமி
பன்னிரு திருமுறையில் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியவை. திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த நாயன்மார்களுள் பதினேழு பேரையும், தம்காலத்தில் வாழ்ந்தவர்களான திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள் ஆகியோரையும் சேர்த்து ஒன்பது நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணலாம். திருஞானசம்பந்தர் வரலாறு மிகப் பெரியதாகும். ‘பிள்ளைபாதி புராணம்பாதி” என்பதற்கேற்ப சேக்கிழார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து ஐந்து பாடல்களில் ஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடுகிறார். திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரத்தில் ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் 'ஆயிரம் பொன் பெற்றது” 'கதவு அடைக்கப் பாடியதும்” ஆகிய இரண்டு நிகழ்வுகளை மட்டும் தம்முடைய தேவாரத்தில் இரண்டு பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள்
திருஞானசம்பந்தர் சீர்காழிப்பதியில் அவதரித்தவர். சீர்காழிக்கு பன்னிரண்டு பெயர்கள் உள்ளதாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பல்வேறு தலங்களையும் பாடிச் செல்லும் போது அற்புதங்களை நிகழ்த்துகிறார்.
பொற்றாளம் பெறுதல் - திருக்கோலக்கா முத்துசிவிகை பெறுதல் - திருநெல்வாயில் அறத்துறை முயலகன் நோயைப் போக்குதல் - திருப்பாச்சிலாச்சிரமம் வணிகனை உயிர்ப்பித்தல் - திருமருகல் பொற்காசு பெறுதல் - திருவீழிமிழலை
இவற்றில் ஆயிரம் பொன் பெறுதலையும், கதவு அடைக்கப் பெறுதல் போன்ற இரண்டு நிகழ்வுகளையும் திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆயிரம் பொன் பெறுதல்
சிவ வழிபாட்டில் தலயாத்திரை சென்று வழிபடுவது பெரும் சிறப்பினைத் தரும். அதன் அடிப்படையில் திருஞானசம்பந்தர் மூன்று வயது முதல் ஐந்து வயது வரை தந்தை தோளிலும், ஐந்து வயது முதல் பதினாறு வயது வரை முத்து சிவிகையிலும் யாத்திரை சென்று வழிபட்டார். திருஞானசம்பந்தர் தம்முடைய ஐந்தாவது யாத்திரையில்தான் திருவாவடுதுறையில் ஆயிரம் பொன் பெறுவதாகும். திருவாவடுதுறை காவிரிக்குத் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற நூற்று இருபத்து ஏழு சிவப்பதிகளுள் ஒன்றாகும். இவ்வூரில்தான் திருமூலர் திருமந்திரம் இயற்றியுள்ளார். திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவரும் இவ்வூரில் வாழ்ந்தவர்.
திருஞானசம்பந்தரின் ஐந்தாம் யாத்திரை திருத்தோணிபுரத்தில் இருந்து புறப்பட்டு திருபுள்ளிருக்குவேர், திருப்பாச்சிலாச்சிரமம், திருக்கொடிமாடச்செங்குன்றூர், திருப்பாண்டிக் கொடுமுடி, திருவலஞ்சுழி முதலிய தலங்களை வணங்கிப் பதிகம் பாடி திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.
'நம் மனத் துயர் நீக்க வந்து அருளிய செம்மலர் திருஆவடுதுறையினைச் சேர்ந்தார்” - திருத்தொண்டர் புராணம் 2320
என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரத்தில், திருஞானசம்பந்தர் ஆயிரம் பொன் பெற்ற செய்தியை
என்று ஒரு பாடலில் பதிவு செய்துள்ளார். சேக்கிழார் தம்முடைய திருத்தொண்டர் புராணத்தில் ஆயிரம் பொன் பெற்ற செய்தியை பதிமூன்று பாடல்களில் பாடியுள்ளார்.
'பொருட்காகச் செய்யாதவையெல்லாம் உலகம் செய்யுமென்பார். வாங்கும் வலியரை மெலியராக்கவும். மெலியரை வலியராக்கவும் வன்மையரெனும் கொடுப்பராயின் அவரை மென்மையராக்கும் பிறராற் போற்றப்படப் பண்ணவும் வல்லது பொருளாதலின் அது கொடுப்பாரடி வாங்குவார்க்கு மலரடி” ஆகும் என்று நயத்தோடு விளங்குகிறார் சு.மாணிக்கவாசகனார்.
கதவு அடைக்கப்பாடியது
திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் செந்தமிழ்பாடி கதவு அடைக்கச் செய்ததை திருநாவுக்கரசர் திருவாய்மூர்ப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள சிவப்பதிகளுள் ஒன்றான திருமறைக்காடு ஏழுவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இவ்வூரில் உள்ள திருவிளக்கு அணி மிகவும் சிறப்புடையது. 'திருமறைக்காடு விளக்கு அழகு” என்பது பழமொழி. இங்குள்ள திருவிளக்கினை அறியாது தூண்டிய எலி சிவபுண்ணியத்தால் மறுபிறப்பில் மாவலி வேந்தனாய் பிறந்து இவ்வுலகை ஆண்டது. வேதங்கள் வழிபட்டு திருக்காப்பிட்டிருந்த கோயிற் கதவைத் திருநாவுக்கரசர் பதிகம் பாடித் திறந்தார். பிறகு சம்பந்தர் பதிகம் பாடி அடைப்பித்தார்.
திருநாவுக்கரசர் பத்துப் பாடல்கள் பாடக் கதவு திறந்தது. சம்பந்தர் ஒரு பாடல் பாட கதவு அடைத்தது இச்செய்தியை நாவுக்கரசர், என்னைவிட செந்தமிழ் உறைப்புப்பாடி கதவை அடைக்கச் செய்தார் என்று இரண்டாம் அடியில் காண்பித்துள்ளார்.
நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் சம்பந்தரின் அற்புதங்களைப் பாடியுள்ளார். திருவாவடுதுறையில் பொற்கிழி பெற்றதை
'திருவாவடுதுறையில் செம்பொற் கிழி ஒன்று அருளாளே பெற்றருளும் ஐயன்” - பதினொன்றாம் திருமுறை
என்றும் மறைக்கதவும் அடைத்ததை
'மாடத் தொளிரும் மறைக்காட்டிறை கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையார்” - பதினொன்றாம் திருமுறை
என்றும், நிகழ்வுகளைக் கூறியுள்ளார். ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை பதினொன்றாம் திருமுறையில் முப்பத்து ஒன்பதாவது பிரபந்தமாக அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் தம்முடைய அவதாரத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இதில் திருவாவடுதுறையில் ஆயிரம் பொன்னைப் பெற்றதும் திருமறைக்காட்டில் கதவு அடைக்கப் பாடியதும் என்ற இரண்டு நிகழ்வுகளை மட்டும் திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.