முன்குறிப்பு:
இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை அண்மையில் ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.
சமஸ்கிருதம் தமிழோடு எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருப்பதாக நினைக்கும் ஒரு போக்கு நவீனக் காலத் தமிழர்களிடையே இருக்கிறது. இரண்டு மொழிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போல வளர்த்தெடுக்கப் படுவதையும் பார்க்கிறேன். தமிழைக் கணிணியில் எழுதப் பயன்படும் ஒருங்குகுறி அமைப்புகளை (யுனிகோட்) உருவாக்கும் போதும் அந்த மனநிலை வெளிப்பட்டதைப் பார்த்துத் தான் நான் அப்படிச் சொல்கிறேன். தமிழில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துக்களுக்காகவும் யுனிகோட் குறிகளை உருவாக்கலாம் என்றவுடன் அதை எதிர்க்கக் கிளம்பி விட்டனர். தமிழுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அந்தக் குறிகளைச் சேர்க்கக் கூடாது என வாதிடுகின்றனர். என்னைக் கேட்டால் கிரந்த எழுத்துக்கள் என்பன தமிழர்களுக்குரியது; அதனைச் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுத்த முடியும் என்றால் தமிழர்கள் அதற்கு அனுமதித்து வளம்பெறச் செய்ய வேண்டும் என்பேன். சமஸ்கிருதத்தை எழுதுவதற்கென்று கிரந்த எழுத்துக்கள் இருக்க, இப்போதெல்லாம் சமஸ்கிருதப் படைப்புகள் தேவநாகரி வடிவில் தான் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுவதை ஒரு துயரமான நிகழ்வாகவே கருதுகிறேன். அதன் மூலம் அதன் நீண்ட வரலாறு அழிந்து போகும் வாய்ப்புகளே அதிகம். கிரந்த வரிவடிவில் எழுதுவது தமிழர்களின் ஆகப் பழைய மரபு. அதனை வட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகப் பார்ப்பது மிகவும் தவறான –நியாயமற்ற- ஒரு போக்காகும்
கிறிஸ்து பிறப்பிற்கு முந்திய ஆயிரம் ஆண்டுகளில் பொல்லாக் சொல்வதுபோல ” சமஸ்கிருதம் வளர்ச்சி அடைந்த மொழி” யாக இருந்தது. அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் இருந்த பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் அவர் வளர்ச்சி அடைந்த மொழி எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அதை விடவும் கூடுதல் தளங்களில் சமஸ்கிருதம் இருந்தது. காஷ்மீர் முதல் இந்தோனேஷியா, கம்போடியா வரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருந்த போதிலும் சமஸ்கிருதம் அங்கெல்லாம் முக்கியமான தொடர்பு மொழியாக இருந்தது. அம்மொழியை இந்துக்களை விடவும் பௌத்தர்களே அதிகம் பயன்படுத்தினர். ஒருவர் புத்தமதம் மற்றும் அதன் கொள்கைகள் பற்றிப் படிக்க விரும்பினால் கட்டாயம் சமஸ்கிருதம் படித்தாக வேண்டும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின் அகலமும் வீச்சும்- இலக்கியம், இலக்கியக் கொள்கைகள், பௌத்தத் தத்துவம், அளவையியல், உடற் காட்சித் திளைப்பியல், இசை, நடனம், மருத்துவம், வானியல், கணிதம், வேதங்கள் என- நீளமானது. சமஸ்கிருதம் பிராமண மேலாண்மையை உறுதி செய்த மொழி மட்டுமே என ஒருவர் நினைப்பது ஆகப் பெரும் தவறு. பிராமணர்களைக் கேலிக்குரியவர்களாகச் சித்திரித்த படைப்புகளும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. சமஸ்கிருதமொழி என்பது ஒரு பெருங்கடல், அதில் எழுதப்பட்டுள்ள அனைத்துவகை எழுத்துகளையும் கற்றுத் துறைபோகியவராக ஒருவர் முயற்சிப்பது இயலாத ஒன்று. ஏனெனில் சமஸ்கிருதத்தில் கற்கக் கற்க வளர்ந்து கொண்டே இருக்கும். அதல்லாமல் இந்துக்களிலேயும் கூட சமஸ்கிருதத்தில் எழுதியவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள் அல்ல. அதில் காவியங்களை எழுதியவர்களில் சூதர்களும் மகதர்களும் உண்டு. சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ள நாடகங்கள் பிராமணரல்லாத பலரும் சமஸ்கிருதத்தில் விற்பன்னர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஒருவரால் தான் சமஸ்கிருதம் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வளத்தைச் சேர்த்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரைக் கன்னடத்திலும் தெலுங்கிலும் பெரிய அளவில் எதுவும் எழுதப்படவில்லை. கன்னடத்தில் இருந்த வாகனா போன்றன மிகக் குறைவானவை; விதிவிலக்குகள். அதேநேரத்தில் இவ்விரண்டு மொழிகளுமே பேச்சு மொழியாகப் பரந்து பட்ட இடங்களில் இருந்தன என்பதையும் மறந்து விடக் கூடாது. அவ்விரு மொழிகளும் தங்கள் மொழியில் இலக்கிய வளத்தை உருவாக்க நினைத்தபோது ஏறத்தாழ சமஸ்கிருதத்திலிருந்துதான் எல்லாவற்றையும் கடன் பெற்று உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தன. அதே நேரத்தில் அந்த மொழிகளில் இருந்த .பேச்சு வழக்கில் இருந்து எதனையும் உள் வாங்கிக் கொள்ளவே இல்லை பேச்சுமொழி இலக்கியங்கள் அவற்றில் தாக்கம் செய்யவே இல்லை என்பதை நாம் காணமுடியும். சமஸ்கிருதத்தைப் போலச் செய்வதன் வழியாகவே புலவர்கள் தகுதி பெற்றனர். ஒரு தெலுங்குக் கவி தனது மொழியில் தானே எழுதிய ஒரு பிரதியைச் சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற பிரதியின் தெலுங்கு வடிவம் எனச் சொல்லிக் கொள்வதையே விரும்பினார். அதனை சமஸ்கிருத வேதத்தோடு தொடர்பு படுத்துவதற்காக அனுவேதம் எனச் சொல்லிக் கொண்டதையும் பார்க்கிறோம். .
சரி இப்போது தமிழுக்கு வருவோம். அது சமஸ்கிருத இலக்கிய உத்திகள், வடிவங்கள் வந்து சேர்வதற்கு முன்பே விரிவான இலக்கியங்களைக் கொண்டிருந்தது. தமிழில் எழுதப்பட்டுள்ள தொடக்க கால இலக்கியங்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை அனைத்தும் அந்தந்தப் பகுதியின் வாய்மொழி இலக்கியத்திலிருந்து உருவானவை. இந்த உருவாக்கத்திற்குத் தமிழ் மொழி பேசப்படும் இன்றைய பகுதிகள் மட்டுமல்லாமல் வட இந்தியாவின் பகுதிகளும் பங்களிப்புச் செய்திருக்கும் என்றே தோன்றுகிறது. உலக இலக்கியங்கள் பலவற்றையும் பார்க்கும்போது தமிழின் சங்க இலக்கியம் மிகுந்த மதிப்புடையதாகவும் பாதுகாக்கப்பட வேண்டியனவாகவும் இருக்கின்றன எனச் சொல்வேன். ஏனென்றால் அவை பழங்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காட்டுவதோடு சமஸ்கிருத மூலங்களால் சிதைக்கப்படாத. பனுவல்களாக இருக்கின்றன.. அந்தக் காலகட்டத்தில் இருந்த எந்தப் பண்பாட்டோடும் இலக்கியப் போக்கோடும் ஒத்தத் தன்மையுடையனவாக இல்லை. தனக்கெனத் தனித்துவம் கொண்ட மரபாக இருக்கிறது. இந்துக்கள் எழுதியனவாக இருந்தாலும் சரி, பௌத்தர்கள் எழுதியனவாக இருந்தாலும் சரி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட எல்லாம் ஒருவித மேட்டிமைத் தனத்தோடு– வட்டார மக்களின் பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து விலகிய தன்மையுடன் தான் இருக்கின்றன. ஆனால் தமிழ் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. தமிழின் சங்கக் கவிதைகளை வாசிக்கும் ஒருவர் தமிழ் மொழி பேசும் மக்களின் பல்வேறு பட்ட பிரிவுகளோடும், அவர்களின் வாழ்க்கை முறைகளோடும், நில வெளியோடும் அவை தொடர்பு கொண்டனவாக இருந்தன என்பதை அறிய முடியும். ஏனென்றால் தமிழ், சமஸ்கிருதத்தின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதாக இருந்தது. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மொழியின் கூறுகளான எழுத்து வடிவம், உச்சரிப்பு முறை ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டிருந்ததோடு தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மலையாளம் போன்றவை தனி வரிவடிவம் கொண்டனவாக இருந்தாலும் உச்சரிப்பில் சமஸ்கிருதத் தன்மையை உள்வாங்கியனவாக இருந்தன. எடுத்துக்காட்டாக பு என்பதை புஹ் எனச் சொல்வதைக் குறிப்பிடலாம்.,
சமஸ்கிருதம் எப்படிப்பட்ட மொழியாக இருந்தது என்பதை என் மனக்கண்ணால் காண்கிறேன். அது தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்த பண்பாடு மற்றும் தொழில் நுட்ப அறிவை உள்வாங்கிப் பதுக்கி வைத்திருக்கும் குளம் போன்றது எனக் கணிக்கிறேன். தனித்துவமான மேட்டிமைவாதக் கருத்தியல்கள் உருவாகப் பலவிதமான கற்பனைகளை உள்வாங்கியிருக்கிறது அம்மொழிக்கு. ஏராளமான பௌத்த இலக்கியங்கள் கொடுத்ததைப் போல மலையாளத்தோடு கலந்து உருவான மணிப்பிரவாளமும் கொடுத்துள்ளது. சமஸ்கிருதத்தோடு மலையாளம் –தமிழ் கலந்து உருவான மணிப்பிரவாளம் மூலம் வளர்ந்த இலக்கணத்தை நாம் பல வழிகளில் அறியலாம். தென்னாசிய மொழிகள் பலவும் அவ்வப்பகுதியில் இருந்த பேச்சு மொழியுடன் சமஸ்கிருதம் கலந்ததால் உருவாகி நிலைத்திருப்பவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தியைப் பொறுத்தவரையில் இது முழுமையான உண்மை. சமஸ்கிருதம் பேச்சுமொழியாக இல்லாமல் போனதால் அதன் நவீன வடிவமாக ஹிந்தி நிலைபெற்று விட்டது.
தமிழ் மொழி தனக்கான வரி வடிவத்தையும் எழுத்துமுறையும் ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொண்டதால் சமஸ்கிருதத்தின் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துத் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டது. பெரும்பாலான சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் துல்லியமாக எழுத முடியாது. ரிஷபம் என்பதை இடபம்என்று எழுதுவதை எடுத்து காட்டாகச் சொல்வேன். சமஸ்கிருதச் சொற்களை ஒதுக்கி வைத்துத் தூய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவதையே தமிழர்கள் விரும்புகிறார்கல் என்றாலும், தமிழ் மொழியில் சமஸ்கிருதச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. அதைப் போலச் சமஸ்கிருதத்திலும் ஏராளமான திராவிடமொழிச் சொற்கள் கலந்துள்ளன என்பதும் உண்மைதான். ரிக் வேதத்தின் துதிப்பாடல்களைப் படித்துப் பார்த்தால் அவற்றின் பல சொற்கள் நவீனத் தமிழில் புழக்கத்தில் இருப்பதை உணர முடியும். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் தமிழர்கள் இந்தியை விடவும் சமஸ்கிருதச் சொற்களை அதிகம் பயன் படுத்துகிறார்கள்(புஸ்தகம் பயன்பாட்டில் இருக்கிற்து; இந்தியின் கிபாப் இல்லை) ஆனால் இந்தி, தெலுகு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளி போன்ற மற்ற இந்திய மொழிகளில் சமஸ்கிருதப் பயன்பாடு அதிகப் படியான ஒலிப்பு நிலையை அல்லது தொனியை உருவாக்கி உள்ளது. ஆனால் தமிழில் அப்படி உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் அன்றாடம் பயன்படும் ஒருவிதப் பேச்சு மொழித் தன்மையைப் பெற்று விட்டன. சிநேகஹிதன், சுத்தம், சத்தம், வர்ஷம் போன்ற சொற்கள் தமிழில் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றிற்கீடான தூய திராவிட சொற்களான நண்பன், தூய்மை, ஒலி, ஆண்டுபோன்றனவும் நடைமுறைப் பயன்பாட்டில் இருக்கின்றன. அவையே தமிழுக்கு நளினத்தை அளிக்கின்றன. பேச்சு மொழியின் நளினத்தைக் கெடுக்காத தூய தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில் சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கக் கூடாது; பயன்படுத்த வேண்டும். இங்கே சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்தியதைப் போலவே ஆங்கிலத்தின் பயன்பாட்டையும் தள்ளிவிடக் கூடாது என்றே சொல்வேன். தமிழை வளப்படுத்த ஆங்கிலமும் தேவை. முக்கியமான செய்திகளை- தகவல்களை- பதிவு செய்யத் தேவையான தூய தமிழ்ச் சொற்களால் முடியவில்லை என்றால் அதன் அருகிலேயே ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்துவது தமிழின் நளினத்தைக் கெடுக்காது என்றே நினைக்கிறேன். முடிவாக நாம் இப்படிச் சொல்லலாம். தமிழின் தனித்த அடையாளம் என்பது முதன்மையானது. முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் சொல்லும்போது நளினமாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். செந்தமிழ் என்பது இதயமும் ஆன்மாவும் போன்றது . அதேநேரத்தில் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் அதன் வலிமையை உறுதி செய்யும் கவசம் போலப் பயன்படக்கூடியன. பயன்படுத்தலாம்
சமஸ்கிருதத்தால் மட்டுமல்ல ஆங்கிலத்தால் கூடத் தமிழுக்கு ஆபத்தில்லை என்பதே என் கருத்து. அப்படியொரு ஆபத்து எப்போதும் இருந்ததுமில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் தன் தனி அடையாளத்தையும் பண்புகளையும் தொடக்கத்திலிருந்து இன்று வரை பாதுகாத்து வரும் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழ் மீது தமிழர்கள் வைத்திருக்கும் மதிப்பும், காதலும் உண்மையானது. எனவே தொடர்ச்சியறுபடாமல் அவர்கள் பாதுகாக்க முனைவார்கள். அதே நேரத்தில் சமஸ்கிருதத்திற்கு அத்தகைய மதிப்பும் காதலும் கொண்ட கூட்டம் இல்லை என்பதை நானே உணர்கிறேன். சமஸ்கிருதத்தைக் கற்கும் திறமான அறிஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இல்லை. மிகக் குறைவு. சமஸ்கிருதமொழியில் கலந்து விட்ட ஹிந்தி மற்றும் மலையாளச் சொற்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அம்மொழி செத்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதனால் தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பண்பாட்டு வரலாற்றை அறிய முடியாமல் போகும் ஆபத்தும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி கண்டுகொள்ளப்படாத மொழியாகிய சமஸ்கிருதத்தால் தமிழுக்கு ஆபத்து என தமிழர்கள் நினைப்பது நகைப்புக்குரியது. ஏனென்றால் தமிழ் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழும், சமஸ்கிருதமும். இந்தியாவில் –தென் ஆசியாவில் இருக்கும் செவ்வியல் மொழிகள். அதன் பாரம்பரியம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதே முக்கியமான தேவை. அதனால் இவ்விரு மொழிகளையும் வளர்த்தெடுக்கத் தேவையான செயல்பாடுகளில் ஈடுபடும் போது முரண்பாடுகளோ, ஒன்று இன்னொன்றை அழித்து விடும் என்பதான அச்ச மனப்பான்மையோ கொள்ளத் தேவையில்லை.
நன்றி: நிறப்பிரிகை வலைப்பூவின் ஆசிரியர் ரவிக்குமாருக்கு
http://ramasamywritings.blogspot.in/2012/09/blog-post_27.html