New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்
Permalink  
 


http://www.vallamai.com/?p=440661. 

என்னதான் இருக்கிறது வேதத்தில்?

1.பாமரனின் சந்தேகம்

 

 

வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பினான் பாமரன் ஒருவன். பல வகையான ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டான். அவனுக்குத் தெளிவுக்குப் பதிலாகக் குழப்பமே ஏற்பட்டது. குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? கேட்ட செய்திகளுக்கிடையே முரண்பாடு இருந்தது தான்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு புறம் வேதாந்தக்காரர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் நடைபெற்றுவருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா?

 நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோநாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.

முத்தி என்பது எது?

வேதாந்தக்காரர்களிடையேயும் ஒற்றுமை இல்லை. காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு இல்லை, நீயும் கடவுள், நானும் கடவுள், அதை உணர்ந்து நம்மிடமுள்ள பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலப்பது தான் முக்தி, அதை உயிருள்ள போதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள்.

பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டு நீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெறும். இதுவே முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர்.

எல்லோருமே வேதத்தைத் தான் பிரமாணமாகக் காட்டுகிறார்கள்.

 முழு முதல் கடவுள் எது?

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே சென்றடையும் என்று சில சொற்பொழிவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில உபந்யாசகர்கள் பேசுவது வேறு வகையாக இருக்கிறது.

ஒருவர், “விஷ்ணுவே மேலான தெய்வம். சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி. அவருக்கு சுய சக்தி கிடையாது. அவருடைய சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார். அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.

மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டினார்.

            சிவனே மேலான தெய்வம் எனக் கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச் சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்றார்.

            ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் பேச்சுப் போட்டியில் எடுபடாமல் போயிற்று.

வழிபடுமுறை

பல வகையான வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம் முதலானவை செய்தால் தீராத வினைகள் தீரும் என்பர் சிலர். யாக யக்ஞம் செய்ய வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்பர் சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பர் சிலர். இவை எல்லாமே வேத சம்மதமானவை தானா?

 இறப்புக்குப் பின் என்ன?

இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான் நசிகேதன். அது தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்றான் யமன். அவன் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றும், யமன் பிரம்மத்தைப் பற்றி விவரமாக விளக்கி அதை அடையும் வழியைச் சொன்னானே தவிர, கடைசி வரை தன் வாயால் நசிகேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்.

மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம் செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின் பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன. அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து கொண்டிருப்பர்” என்று சில சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.

வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை அனுபவிக்கும்” என்கின்றனர்.

            இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.

பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்கிறது ஸத்யார்த்த ப்ரகாசம் என்ற புத்தகம். இதை எழுதியவர் பிற மதக்காரரோ அல்லது நாஸ்திகரோ அல்ல. வேதத்தை தெய்வ வாக்காக நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிபடக் கூறி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று முழங்கியவருமான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த ஸரஸ்வதி  தான் அவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

வேதத்தின் பெயரால் அவரவர் தத்தம் சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது பற்றி அவன் படித்திருக்கிறான். உதாரணமாக, ‘கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு  கடமை’ என்று ஒரு சாரார் வாதிட்ட காலத்தில் ராம் மோகன் ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில் உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.

காந்தி தீண்டாமையை எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர். காந்தி, ‘வேதத்தில் தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப் பதில் சொல்வார் இல்லை.

இந்த உபந்யாசகர் உண்மையில் வேதத்தில் உள்ளதைத் தான் கூறுகிறாரா அல்லது தன் கருத்தைச் சொல்லி விட்டு வேதம் என்ற பெயரால் பூச்சாண்டி காட்டுகிறாரா என்பது புரிவதில்லை.

எனவே, உண்மையில் வேதம் என்ன தான் கூறுகிறது என்று அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று பாமரன் விரும்பினான். அதன் விளைவு தான் வாரம் தோறும் வெளிவர இருக்கும் இந்தத் தொடர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்
Permalink  
 


2.

வேதக் கடல்

சு.கோதண்டராமன்

 

வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

untitled 2

            உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். மகாகவி பாரதி

எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

            சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

            அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

untitled 1

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே,வலிமை பெறுங்கள்.

தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

            யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

          யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

            எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

 படங்களுக்கு நன்றி:

http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

3.வேத மொழி

 

வியாசர்

பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே,ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. – பாரதி

 ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன. ஆனால்,இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. – பாரதி

          ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரம் கொண்டுவந்தனர்.  பாரதி.

ரிக் வேத மொழி பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும் கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில் இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

இத்தனைக்கும் மேல் பெரும் இடர்ப்பாடு என்னவென்றால் வேத ரிஷிகள் சில இடங்களில் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம்.

மிகுந்த வலிமையுடைய இந்திரனுக்கு பிரார்த்தனைகளை அனுப்புங்கள். பசுக்கள். இந்திரனுக்கு நிறைய தோத்திரங்களைச் செய்யுங்கள்.1

இந்த மந்திரத்தில் பசுக்கள் என்பது எந்த வாக்கியத்தோடும் ஒட்டாமல் நிற்கிறது. நம்முடைய பசுக்கள் செழிப்பதற்காக என்று சாயணர் விளக்கம் தருகிறார். பசுக்கள் தரும் பாலைக் கொண்டு என்றோ பசுக்களைப் பலியிட்டு என்றோ கூட விளக்க முடியும். மூன்றுமே ரிக் வேதத்தின் பிற பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துடன் ஒத்துப் போகின்றன. ரிஷியின் மனதில் இருந்த கருத்து எது என்பதை அறிய முடியவில்லை.

ரிஷிகள் கவிதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு உட்கார்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. அருள் நிலையில் அவர்கள் மனதில் தோன்றியவை. அதனால் அதில் இலக்கணத்தை எதிர்பார்க்க முடியாது.

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன்

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா,

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா அந்தக்

கிறுகிறுப்பில் உளறு மொழி பொறுப்பாயடா

என்று கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். தெய்வ ஆவேசத்தின் கிறுகிறுப்பில் பாடிய வேத ரிஷிகளின் மொழி, இலக்கணம் பற்றிக் கவலைப்படாத மொழியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு காரணமும் இருக்கலாம். காலப் போக்கில் மனப்பாடம் செய்தோரின் கவனக்குறைவு காரணமாக ஓரொரு எழுத்து மாறியிருக்கலாம். அது இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

இது ரிஷியின் இலக்கணப் பிழையா, அல்லது ஏடெழுதியவரின் கைப் பிழையா அல்லது மனப்பாடம் செய்தவரின் நினைவுப் பிழையா என்பது பற்றிக் கவலைப் படாமல் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாடத்தில் முடிந்த வரை பொருள் அறிய முயல்வோம்.

வேதத்தில் சில பாடல்கள் மிகச் சாதாரணமானவை. உதாரணமாக, ரிக் 5.27 என்ற சூக்தம் அக்னியைக் குறித்துப் பாடப்பட்டதாக அனுக்ரமணிகா (அட்டவணை) சொல்கிறது. பொருளைப் பார்த்தால்-த்ரயருணன் என்ற அரசன் எனக்கு ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் நூறு பொற்காசுகளும் இரண்டு குதிரைகளும் கொடுத்துள்ளான். ஏ அக்னியே, அவனுக்கு மகிழ்ச்சி கொடு என்று இவ்வாறு செல்கிறது.

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அரசனிடம் பரிசு பெற்றுப் புகழ்ந்து பாடியதாக அறிகிறோம். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்து சமயத்தின் ஆணி வேர் என்று சொல்லக் கூடிய ஆன்மிகக் கருத்து இதில் என்ன இருக்கிறது? புரவலரைப் போற்றும் இந்தப் பாடலுக்கு வேதம் என்ற பெரிய மரியாதை எதற்கு? என்று தோன்றுகிறது.

இலக்கணப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள் வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்.

          காலில்லாதவள் காலுள்ளவர்களுக்கு முன்னதாகப் போகிறாள். தலையை அசைய வைத்து,நாக்கைப் பேச வைத்து முப்பது அடிகள் பயணிக்கிறாள்.2  

இதற்கு சாயணர் அளிக்கும் விளக்கம்- சுயமான அசைவு இல்லாமல் சூரியனால் தள்ளப்பட்டு வருவதால் காலில்லாதவள் உஷா (வைகறைப் பொழுது). கால் உள்ள பிராணிகள் எழுந்து சஞ்சரிக்கும் முன்னர் அவள் புறப்பட்டு விடுகிறாள். சத்தமி்ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிப் பேச வைக்கிறாள்.

இது பொருத்தமாகத் தோன்றுகிறது என்றாலும் இது தான் ரிஷியின் மனதில் இருந்த எண்ணமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அசுவினி தேவர்களைக் குறித்துப் பாடப்பட்ட ரிக் இது.

          இந்தப் பிரார்த்தனை உசத்யனின் மகனாகிய என்னைக் காப்பாற்றட்டும். இந்த இரண்டு பறவைகளும் என்னைக் கறக்காமல் இருக்கட்டும். பத்துப் பத்தாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த விறகுகள் என்னை எரிக்காமல் இருக்கட்டும். உங்கள் இருவருடனும் கட்டப்பட்ட இது தானாகவே பூமியைத் தின்கிறது.3

அந்தப் பறவைகள் என்பது இரவும் பகலும். அவை ரிஷியின் சக்தியை வலுக்கட்டாயமாக உறிஞ்சிவிடுகின்றன. வயதான காலத்தில் ரிஷியின் குனிந்து நடக்கும் உடல் பூமியைத் தின்பதாக சாயணர் குறிப்பிடுகிறார். சாயணர் உரை இல்லாவிட்டால் விடுகதை போன்ற இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதில் வரும் விறகு எதைக் குறிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மற்றொரு மந்திரத்தின் மொழிபெயர்ப்பு இது.

          இன்றும் இல்லை, நாளையும் இல்லை, யாரறிவார் இந்த அற்புதத்தை? அடுத்தவர் மனமோ அலை பாய்கிறது. கற்றது யாவும் மறந்து போயின.4

இந்திரன் தனக்கு ஹவிர் பாகம் கிடைக்கவில்லை என்று வருந்தும் போது அகஸ்தியரிடம் இதைச் சொல்வதாகச் சாயணர் கூறுகிறார். இதற்கு முன் பின் உள்ள மந்திரங்களின் துணை கொண்டு பார்த்தாலும் இதற்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.

இது போன்ற ஆயிரக் கணக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.

இத்தகைய விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின் சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.

குறிப்புகள்

இரண்டாவது பத்தியில் கொடுக்கப்பட்ட எண்கள் முறையே ரிக் வேதம் மண்டலம்சூக்தம்,மந்திரத்தைக் குறிக்கும்.

1                      8.96.10. (back)

2                      6.59.6   (back)

3                      1.158.4 (back)

4                      1.170.1 (back)

படத்திற்கு நன்றி :

http://anmeegam.blogspot.in/2012/07/blog-post.html



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

4. வேத உரைகள்

 

 

சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும்,பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது. 

          எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது,யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள். -பாரதி 

சாயணாசாரியார் உரை

வேத ரிஷிகளின் அருள் மொழிகள் யாகங்களையே கருப்பொருளாக உடையன என்னும் கருத்து பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே தோன்றிவிட்டது. பிராமணங்கள் வெவ்வேறு வகையான யாகங்களைக் குறிப்பிடுகின்றன. வேதத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு அவை அளிக்கும் விளக்கம் யாகச் சார்புடையனவாகவே  இருக்கின்றன. இந்தப் போக்கை அப்பொழுதே சிலர் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களால் தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. எந்த விதமான யாகமும் வேண்டாம், பிரம்மத்தைப் பற்றிச் சிந்திப்பது தான் கடைத்தேறும் வழி என்றன உபநிடதங்கள்.

            ஆனால் உபநிடதக்காரர்கள் ஸம்ஹிதைகளை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கண்டு பிடித்து விளக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. வேதத்தின் பொதுவான கருத்து உருவமற்ற குணமற்ற பிரமம் தான் என்று விளக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர்.

            சாயணர், பிராமணங்களைப் பின்பற்றி, எல்லாவற்றையும் யாகக் கண் கொண்டே பார்க்கிறார். பொருள் தெளிவாகத் தெரியும் இடத்தில் கூடத் தேவை இல்லாமல் யாகக் கருத்தைப் புகுத்துகிறார். உதாரணமாக, 8.66.4 இல் “புதைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை இந்திரன் தன் பக்தர்களுக்குத் தருகிறான்” என்று வருகிறது. ‘யக்ஞத்தால் போற்றப்பட்டவுடன்’ என்று சாயணர் சேர்க்கிறார்.  அதே போல, 8.63.8 இல் “நீ என் ரதத்தின் சக்கரம் செல்லும் பாதையைக் காப்பாற்று” என்று வருகிறது. ‘நான் யக்ஞத்துக்குச் செல்லும்போது’ என்ற தொடரைச் சாயணர் சேர்க்கிறார்.

            சாயணருக்கு முன் ஸ்கந்த ஸ்வாமி, நாராயணர், உத்கீதர், மாதவ பட்டர், வேங்கட மாதவர், தானுஷ்க யஜ்வா, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வாசார்யர், ஆத்மானந்தர் ஆகியோர் ரிக் வேதத்துக்கு உரை எழுதியுள்ளனர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் ஒரே முழுமையான உரை சாயணருடையது தான். அவரது உரையை அடிப்படையாகக் கொண்டு தான் மேலை நாட்டவரும் தற்போதைய இந்திய வேத இயல் அறிஞர்களும் வேத ஆராய்ச்சியைத் துவக்கி புதிய பொருள் காண முயன்று வருகின்றனர்.ஸாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் ஸாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார் என்று பாரதி கூறுவது கவனிக்கத்தக்கது.

மாக்ஸ்முல்லர்

            மேலை நாட்டு வேத ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தக்கவர் மாக்ஸ்முல்லர். அவர் இந்தியாவிற்கு வந்ததில்லை.220px-Max_Muller ஆனால் அவருக்கு முன் பல ஜெர்மானியர்கள் எழுதிய, பதிப்பித்த புத்தகங்கள் மற்றும் இந்தியாவில் அவரது நண்பர்கள் மூலம் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து ரிக் வேதத்திற்கு ஒரு முழுமையான உரை எழுதினார். சாயணர் உரை எழுதிய ஏட்டுச் சுவடிகள் அவருக்குக் கிடைத்தவை 12. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன. (சாயணர் உரையிலேயே பல இடைச் செருகல்கள் புகுந்துள்ளன என்பது தெரிகிறது.) சிறு வேறுபாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வகைப்படுத்தியதில் அவை மூன்று பிரிவுகளில் அடங்கின. ஒன்றுக்கொன்று பெருத்த வேறுபாடு உடைய அவற்றில் எது உண்மையான பொருள் என்று கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமான வேலை. அதனால் அவருக்கு இந்த வேலையை முடிக்க 45 ஆண்டுகள் ஆயின.

வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த ஆராய்ச்சியிலேயே அவர் செலவழித்த பின்னரும் அவரால் வேதத்தின் மேலெழுந்தவாரியான பொருளைத் தான் அறிய முடிந்தது. எனவே அவர் வேதம் என்பது பல வகையான பழங்கால நம்பிக்கைகள் கொண்டதும் பல வேறு தெய்வங்களைப் போற்றுவதுமான நாகரிகமற்ற கூட்டத்தினரின் ஒரு நூல் என்று தான் கருதினார். மேலும், இந்தியாவில் புதிதாகக் குடியேறிய ஒரு கூட்டம் மாறுபட்ட சமய நம்பிக்கைகள் கொண்ட பழங்குடியினரின் எதிர்ப்பை எதிர் கொண்ட நிலையை அது குறிப்பிடுவதாகவே அவர் முடிவு கட்டினார். 

அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்த பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வேதத்தினுள் ஆழமாகச் செல்ல முடிந்தது. அவர்கள் வேதத்தின் உண்மையான கருத்தை அறிய  முயன்று வருகின்றனர். மாக்ஸ்முல்லரின் இனப் போராட்டக் கருத்தைப் பலரும் மறுத்துள்ளனர். ஆனாலும் இன்று வரை பாடப் புத்தகங்களில் மாக்ஸ்முல்லரின் கருத்தே நிலைபெற்றுள்ளது.

ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி

Dayanand_Swamiஇதற்கு எதிர் வினையாகக் கிளம்பியவர் ஆர்ய ஸமாஜ நிறுவனர் ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி. இந்தியரின் பல தெய்வக் கொள்கை, உருவ வழிபாடு, ஜாதி முறை இவற்றைக் கிருத்துவர்களும் இஸ்லாமியரும் குறை கூறியது அவருக்கு உகப்பாக இல்லை. இந்து சமயம் பல வேறு காலங்களில் பல வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“வேதம் அநாதியானது, இறைவனின் வாக்கு அது. அதில் இல்லாதது இல்லை. இன்று புதிதாக வந்திருக்கும் ஆகாய விமானம், தொலைபேசி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட எல்லாமே வேதத்தில் உண்டு. அஹிம்சைக் கொள்கை புத்த மதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல. அது இங்கிருந்து தான் புத்த மதத்திற்குப் போயிற்று. வேதத்தில் ஒரு தெய்வக் கொள்கை தான் இருக்கிறது, உருவ வழிபாடு இல்லை, ஜாதி முறைகள் இல்லை” என்று நிரூபிக்க விரும்பின அவர் வேதத்துக்குப் புதிய பொருள் கண்டார். வேதச் சொற்களின் வேரை ஆராய்ந்து சாயணரும் மாக்ஸ்முல்லரும் சொல்லாத புதிய பொருள் உரைத்தார். சில இடங்களில் அவர் சொல்வது பொருத்தமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அவர் வலிந்து பொருள் கொள்வது நன்கு வெளிப்படுகிறது.

உதாரணமாக, ரிக் 1.162 சூக்தம் முழுவதும் யாகத்தில் குதிரையைப் பலி இடுவது பற்றியது. பலியிடப்பட்ட குதிரை தேவ லோகம் செல்லும்போது, அதன் உடலின் எல்லாப் பகுதிகளும், பலியிடுவதற்கு முன் அதன் வாயில் வைக்கப்பட்ட புல் உள்பட, எல்லாம் கூடவே போகட்டும் என்று வேண்டப்படுகிறது. அதில் 9வது மந்திரத்தின் சாயணர் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

            குதிரையின் மாமிசத்தில் ஈக்கள் சாப்பிட்டது, வெட்டும் கத்தியிலும் தடவும் குச்சியிலும் ஒட்டிக் கொண்டிருப்பது, மாமிசத்தை எரிப்பவருடைய கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பது இவை எல்லாம், தேவர்களிடத்தில் நீ போய்ச் சேரும்போது, உன்னுடன் இருக்கட்டும்.

இதே மந்திரத்துக்கு தயானந்தர் அளிக்கும் விளக்கம் துளிக்கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. எந்த அகராதியிலும் இல்லாத புது அர்த்தத்தை எந்த நியாயமும் இன்றி அவர் ஏற்படுத்தியிருப்பதைக் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

            வேலைக்காரர்கள் குதிரையை துர்க்கந்தம் இல்லாததாக, ஈ இல்லாததாக வைத்திருக்க வேண்டும். தன் கையினாலும் கயிற்றினாலும் உயர்ந்த நியமத்துடன் தன் விருப்பம் போல் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் குதிரை நன்றாக வேலை செய்யும். 

க்ரவிஷ என்ற சொல்லுக்கு மாமிசம் என்பது தான் பொருள். அப்படித் தான் எல்லா இடங்களிலும் பொருள் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. தயானந்தர் அதற்கு விரைவாகச் செல்லும் என்று பொருள் தருகிறார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் க்ர என்றால் செல்வது என்று பொருள். அதிலிருந்து வருவதால் க்ரவிஷ என்பது விரைவாகச் செல்கின்ற எனப் பொருள்படும் என்று விளக்குகிறார். இத்தகைய சுற்றி வளைத்துப் பொருள் கொள்ளும் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

மேலை நாட்டவர் இந்து சமயத்தைப் பற்றிக் குறையாகக் கூறியவற்றை மறுப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் தயானந்தர்.  புலால் உண்ணாமைக் கொள்கையை இந்து சமயம் சமண புத்த சமயங்களிலிருந்து பெற்றது என்பதை ஒப்புக் கொள்ள அவர் விரும்பவில்லை.

எந்த சமயமும் தான் நிறுவப்பட்ட காலத்தில் இருந்தது போலவே இல்லாமல் காலப்போக்கில் தன்னைத் தானே திருத்திக் கொள்வது தான் வளர்ச்சியாகும். அது அந்த சமயத்தை வலுவாக்கும். தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளாத சமயம் அழி்ந்து விடும். வேதத்தில் கூறப்படாத எத்தனையோ விஷயங்கள் இன்றைய இந்து சமயத்தில் உள்ளன. அவை காலப் போக்கில் தேவைக்கேற்பச் செய்து கொள்ளப்பட்ட மாற்றங்கள். அவற்றை நீக்கி விட்டு வேத காலத்தில் இருந்த நிலைமைக்கே திரும்பிப் போக வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது.

தயானந்தரால் ஏற்பட்ட ஒரு நன்மை, வேதத்திற்கு அர்த்தம் பார்க்கக் கூடாது என்ற பயம் நீங்கி அதை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 5.அரவிந்தர் எழுதிய வேதத்தின் ரகசியம்

அரவிந்தர், வேதத்தின் ரகசியம் என்ற நூலில் வேதம் முழுவதும் மனவியல் குறியீடுகளைக் கொண்டது என்று சொல்லி அதற்கேற்ப சில மந்திரங்களை மொழி பெயர்த்துக் காட்டினார். அக்னி என்பது ஞான சக்தி, தெய்விகமான அறிவுத் துணிவு (illuminated divine will). இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி (pure illuminated intelligence). பசு என்பது ஞான ஒளி என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார். அவரது சீடர்கள் அவர் வழி நின்று ரிக் வேதம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். ஓரிரு மந்திரங்களில் அவரது குறியீடுகள் பொருத்தமாக உள்ளன என்பது உண்மை என்றாலும் எல்லா இடங்களிலும் அக் குறியீடுகள் பொருந்த வில்லை. மேலும் ஞான சக்தி, விஞ்ஞான சக்தி என்பவை பாமரர்களுக்குப் புரிவதில்லை.

சொற்களுக்குப் பொருள் காண்பதில் அபிதா (நேர்ப் பொருள்), லக்ஷணா (உருவகப் பொருள்) என இரு வகை உண்டு. ஒரு உதாரணம் பார்ப்போம்.

எங்கள் வீட்டு நாய் குரைப்பதே இல்லை. யாரேனும் வந்தால் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும். இந்த வாக்கியத்தில் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்த அந்த நாலு கால் பிராணியைத் தான் குறிக்கும். இது அபிதா-நேர்ப்பொருள்.

ஐயா, நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன். என்றும் உங்கள் காலடியில் நாயாக இருப்பேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு நேர்ப் பொருள் பொருந்தாது. இங்கு அதற்கு நன்றி உடையவன் என்பது பொருள். இது லக்ஷணா எனப்படும்.

லக்ஷணாவில் ஒரு சொல்லுக்கு ஒரு உருவகப் பொருள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்.

ஊரைச் சுற்றி வெள்ளம். வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நூறு பேர் ஒரு மேடான இடத்தில் கூடி நின்றனர். எல்லோருக்கும் பசி. உணவுக்கு வழி இல்லை. அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் வந்தது. இருபது உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவு தான். மனிதர்கள் நாய்கள் ஆயினர். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு தந்நலமே பெரிதாகக் கருதிச் சண்டை போடுபவர் என்று பொருள்.

வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய்விட்டார்கள். நான் தான் இங்கு நாயாககாவல் காத்துக் கொண்டிருக்கிறேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு காவல் காப்பவர் என்று பொருள்.

வேலை தேடி நாயாக அலைகிறான். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்குப் பயனின்றி அலைபவர் என்பது பொருள்.

இப்படி வேதத்திலும் ஒரு சொல்லுக்குப் பல உருவகப் பொருள்கள் உள்ளன. அரவிந்தரின் சீடர்களின் உரை இந்த வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும், அபிதாவாக வரும் இடங்களில் கூட, ஒரே உருவகப் பொருளைக் கூறுகிறது.

பசு என்பதற்கு ஒளிக் கிரணம் என்பது ஒரு உருவகப் பொருள். இந்த அரசன் எனக்கு 100 பசுக்களைக் கொடுத்தான் என்று வரும் இடத்தில் 100 ஒளிக் கிரணங்களைக் கொடுத்தான் என்று பொருள் சொல்வது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும்.

மேலும், லக்ஷணாவில் சொல்லுக்கும் உருவகப் பொருளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். அரவிந்தர் பசுவை ஞான ஒளி என்றும், நெய்யை அறிவுத் தெளிவு என்றும் பொருள் கொள்கிறார். எப்படித் தொடர்பு படுத்துகிறார் என்பது விளக்கப்படவில்லை.

******** ************************************ ******************************** *********

VedicAstrology

வேத மொழியோ வழக்கிழந்தது. இலக்கணமும் மாறுபடுகிறது. இடைச் செருகல்களும் பல உள்ளன. மந்திரங்களில் பல விடை தெரியாத புதிர்களாக உள்ளன. நமக்குக் கிடைக்கும் பழமையான ஒரே உரையோ ஒரு சார்பு உடையது. பிற்கால உரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. இவ்வாறு, வேதத்திற்குப் பொருள் பார்க்க முனையும் போது சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. இத்தனை காலம் இத்தனை பேர் முயன்று பார்த்து இயலாத காரியம் என்று கை விட்டு மூலத்தை மட்டும் அதன் ஒலி வடிவில் காப்பாற்றி வந்தால் போதும் என்று முடிவு கட்டி விட்ட நிலையில் பாமரன் மட்டும் என்ன சாதிக்க முடியும்?

எல்லா உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான் பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு, அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான் பாமரன்.

வேதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரதானமானதாக இருக்கும், மிகுதியாகப் பயன்படுத்தப்படும். சில இடங்களில் பொருள் மாறுபடும். பிரதானமான பொருளை விட்டு ஓரிடத்தில் சிறப்பான பொருள் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வழக்கமான பொருள் இந்த இடத்தில் பொருந்துமா? பொருந்தாது என்றால் வேறு எந்தப் பொருள் பொருந்தும்? அந்தப் புதுப் பொருளைப் பயன்படுத்த வேதத்தில் முன் உதாரணங்கள் உண்டா? என்பனவற்றை ஆராய வேண்டும். வேதச் சொல்லின் பல விதமான பொருள்கள் கூடியவரை வேதத்திலேயே தேடப்பட வேண்டும். பிற்கால நூல்களில் வழங்கும் பொருளை வேதத்தில் நுழைப்பது தவறு. இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான வழிமுறையே இந்நூலில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, அசுரர் என்ற சொல்லுக்குப் பல வகையான பொருள்கள் சாயணரால் தரப்பட்டுள்ளன. அவற்றில் வலிமையானவர் என்ற பொருள் பிரதானமானதாக இருக்கிறது. சாயணர் சில இடங்களில் ராட்சசர் என்றும் யாகங்களை அழிப்பவர் என்றும், சில இடங்களில் நேர் மாறாக, அசுரர்களை அழிப்பவர் என்றும் பொருள் கூறுகிறார். அந்த இடங்களிலும் வலிமையானவர் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் போது புதிய பொருள் காண அவசியமே இல்லை. தேவை இல்லாமல் யாகச் சார்பு திணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அசுரர் பற்றி எழுதப்பட்டுள்ள அத்தியாயத்தில் இதைக் காணலாம்.

இதுவரையில் நாம் பார்த்தது முன்னுரை தான். இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியம் தானா?

வேதத்தின் பேரளவையும், அதைப் படிப்பதில் உள்ள சங்கடங்களையும் எடுத்துக் காட்டி, இத்தனைக்கும் நடுவில், ஒருவன் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது மிக மிகச் சொற்பமானது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு வேதத்தில் இருப்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டக் கூடாது என்பதற்குத் தான் இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியமாயிற்று. வேதத்தில் என்ன இருக்கிறது என்ற விவரம் இனி வர இருக்கிறது. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வோம்.

படம் உதவி: www.hinduhistory.info – http://www.skjainastro.com/VedicAstrology.JPG



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 6. 

வேதத்தில் என்ன இல்லை?

 

 

 

vedas

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

 

வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

விநாயகர்

முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

அது எப்படி இல்லாமல் போகும்?

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம் 
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத 
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

சிவன்

வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

பிற தெய்வங்கள்

இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.

 

 

படம் உதவி:

http://www.allabouthinduism.info/tag/rig-veda/

http://www.allabouthinduism.info/wp-content/uploads/2013/07/veda.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

7. தேவர்கள் யார்?

 

தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.

ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.

தேவர்கள்

 

தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.

ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

தங்கம்
தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.

தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.

தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
தேவம் நரஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12

யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.

தேவ: வ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே

சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.

தேவிகள்
தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.

உறவு முறைகள்
தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.

உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால் உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.

கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.

வசிக்குமிடம்
தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.

உணவு
தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.

சோமபானம்
எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.

தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.

அமரர்கள்
தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.

பரஸ்பர சார்பு
தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.

பேச்சு
தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, நாடக பாணியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம். தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஒற்றுமை
தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.

பகை
மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.
இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

படம் உதவி: விக்கிபீடியா, http://ta.wikipedia.org/s/33z9



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

8. வசு ருத்ரர் ஆதித்யர்

வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தாரையும் சேர்த்துச் சொல்லும் ரிக் மந்திரங்கள் பல உண்டு. இவை தனித் தனிக் குழுக்கள் என்று அறியப்படுகிறது. இவற்றில் ஆதித்யர் என்ற குழுவில் வருபவர் யார் என்பது மட்டும் தெரிகிறது. வசுக்கள் யார் யார், ருத்ரர்கள் யார் யார் என்பதற்கான விளக்கம் ரிக் வேதத்தில் கிடைக்கவில்லை.

ellora shiva

வசு
வசு என்பதற்கு செல்வம் என்றும் வீடு என்றும் பொருள் உண்டு. ரிஷிகள் தேவர்களிடமிருந்து யாசிக்கும் பொருள்களில் வசுவும் ஒன்று. சாயணர் வசு என்ற அடைமொழிக்கு வீடுகள் கொடுப்பவர் என்று பொருள் தருகிறார். பொதுவாகப் பார்க்குமிடத்து, வசு என்ற சொல் செல்வம் என்ற பொருளிலும், செல்வம் தருபவர் என்ற பொருளிலும் வருவதைக் காண முடிகிறது. ரிக் வேதம் இந்திரனையும் அக்னியையும் மட்டும் வசு என்றும் வசுபதி என்றும் குறிப்பிடுகிறது. புராணங்களில் 8 வசுக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

ருத்ரர்
புராணங்களில் 11 ருத்ரர்கள் கூறப்படுகிறார்கள். ரிக் வேதத்தில் ஒரு ருத்ரன் தான் கூறப்படுகிறார். அவரும் இந்திரன், அக்னி, மித்ரன், வருணன் அளவுக்குச் சிறப்பிடம் பெறவில்லை. ருத்ரன் மருத்துகளின் தந்தையாகக் கூறப்படுகிறார். சில இடங்களில் மருத்துகளே ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் அக்னி தன் சிவந்த நிறத்தின் காரணமாகவும் வலிமையின் காரணமாகவும் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். அச்வின்களும் ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

யஜுர் வேதம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஆயிரக் கணக்கான ருத்ரர்களைப் பற்றிப் பேசுகிறது. யஜுர் வேதத்திற்குப் பிந்திய காலத்தில் ருத்ரன் சிவனாக உருமாற்றம் பெறுகிறார், முழு முதல் கடவுளாக வளர்ச்சி பெறுகிறார்.

சமீபத்தில் இறந்த மனிதர்கள் வசுவாகவும், முந்திய தலைமுறைப் பிதிரர்கள் ருத்ரராகவும், அதற்கும் முந்திய தலைமுறையினர் ஆதித்யராகவும் கருதப்படும் வழக்கம் தற்போது உள்ளது. ரிக் வேதத்தில் அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை.

ஆதித்யர்
சில தேவர்களுக்கு ஆதித்யர்கள் என்ற பெயர் உண்டு. அதிதியின் பிள்ளைகள் என்று பொருள். கச்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு மனைவியர் உண்டு. திதியின் மக்கள் தைத்யர் அல்லது ராட்சசர்கள். அதிதியின் மக்கள் ஆதித்யர்கள் என்ற தேவர்கள் என்பது புராணக் கதை. திதி, தைத்யர் என்ற சொற்களோ கச்யபர் பற்றிய குறிப்போ ரிக் வேதத்தில் இல்லை.

ஆதித்யர்கள் 12 பேர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் ரிக் வேதத்தில் ஆதித்யர்கள் 5 பேர் தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மித்ரன், வருணன், அர்யமான், பகன், அம்சன் ஆவர். அவர்களின் தாயாக அதிதி என்னும் பெண் தெய்வம் சொல்லப்பட்டிருக்கிறது. அதிதி என்ற சொல் பிரபஞ்சத்தைக் குறிப்பதாக 1.89.10 இல் சாயணர் கூறுகிறார். இந்தப் பொருள் எல்லா இடங்களிலும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் சாயணர் பிற இடங்களில் இது பூமியைக் குறிப்பதாகவும் தேவர்களின் தாயைக் குறிப்பதாகவும் பலவாறு கூறுகிறார்.

அதிதி என்பது எல்லையற்ற தன்மை என்று பொருள்படும். இந்த உலகம் பெரியது. இங்கிருந்து நம் கண்ணில் தெரியும் விண்வெளியில் எத்தனையோ சூரியன்கள் நட்சத்திர வடிவில் உள்ளன. நம் கண்ணுக்குத் தென்படாமல் கருவிகளால் மட்டும் அறியப் பட்டவையோ கோடி கோடி. கண்டுபிடிக்கப் படாதவையோ மனதால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. எண்ணில் அடங்காது, எல்லையற்றது. இந்த எல்லையற்ற தன்மையில் தேவர்கள் தோன்றுவதற்கு எல்லையற்ற வழிகளும் உள்ளன, எத்தனையோ தேவர்கள் நமக்கு முன்னே தோன்றியுள்ளனர். இனியும் எத்தனையோ தேவர்கள் தோன்றுவார்கள் என்பதை அறிவுறுத்தவே அவர்களை எல்லையற்ற தன்மையின் மக்களாகக் கூறப்பட்டிருக்கிறது.

 

படம் உதவி: http://www.sacred-texts.com/hin/iml/img/02600.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

9. எல்லாத் தேவர்களும் ஒன்றே

 

நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே   
-பாரதி

 

 

vaedam

ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

பூமியை நிலைநாட்டியது, ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது, சூரியனை உலாவ விட்டது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது முதலான சாதனைகளைச் செய்தவர்களாக வருணன், இந்திரன் இருவரும் போற்றப்படுகிறார்கள். பூமியை நிலை நிறுத்தின சிறப்பு ப்ருஹஸ்பதி, ரிபுக்கள் மற்றும் அக்னியின் பெயராலும் பேசப்படுகிறது.

விருத்திரனைக் கொன்றது இந்திரன் என்று பல இடங்களில் பேசப்பட்டாலும், விஷ்ணுவுக்கும் அதில் பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அக்னி விருத்திரனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

வலனைக் கொன்று பசுக்களை விடுவித்தார் என்ற சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது, இந்திரனுக்கும் சொல்லப்படுகிறது. அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது.

வாயுவின் குதிரைகளின் பெயர் நியுத். ஆனால் மருத்துகளுடைய குதிரைகளும், அக்னியின் குதிரைகளும், அஸ்வின்களின் குதிரைகளும் இந்திரனுடைய குதிரைகளும் நியுத்கள் என்று சில இடங்களில் கூறப்படுகின்றன.

வருணன் இந்திரனுக்குரிய அத்ரிவ (இடியை ஆயுதமாகக் கொண்டவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸஸ் ஸூனு (வலிமையின் மைந்தன்) என்ற பெயர் அக்னிக்கு உரியது. ஆனால் இரு இடங்களில் இந்திரனுக்கும் இது வழங்கப்படுகிறது.

ப்ரம்மணஸ்பதியைக் குறிப்பிடும் ப்ரம்மண: ராஜா (ஸ்தோத்திரங்களின் ராஜா) என்ற சொல்லால் இந்திரன் புகழப்படுகிறார். அது போல, அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

அக்னியும் சூரியனும் தனித் தனி தேவர்களாகப் பேசப்பட்டாலும் அக்னியைப் பற்றிப் பேசும்போது சூரியன் என்ற பெயரையும், சூரியனைப் பற்றிப் பேசும்போது அக்னி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

காலை நேரச் சூரியனின் பெயர் தான் ஸவிதா என்றாலும் இருவரும் தனித்தனியாகக் காட்டப்படுகிறார்கள். சூரியன் ஸவிதாவுக்கு சக்தி தருகிறார் என்கிறது ஒரு மந்திரம். [1]

அக்னியைப் போற்றும்போது, நீயே இந்திரன், நீயே வருணன் என்கிறார்கள். உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்ற முழு முதல் கடவுள் தகுதியும் அவருக்குக் கொடுக்கப் படுகிறது.  இதே போல, இந்திரனைப் போற்றும்போது, நீயே விஷ்ணு, நீயே அக்னி என்று பேசுகின்றனர். இவ்வாறு தேவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மறைகின்றன. 9.5 இல்  ஒரு சூக்தம் முழுவதும் இந்திரன், அக்னி, பாரதி, இலா, ஸரஸ்வதி முதலான பல தெய்வங்களுடன் சோமன் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். எனவே பெயர்கள் என்பது பெயரளவுக்குத் தான். இதை தெளிவாகவே சொல்கிறது கீழ்க் கண்ட மந்திரம்.

இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். [2]

தேவர்களுக்கெல்லாம் மேலான ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதைக் கீழே வரும் மந்திரங்கள் காட்டுகின்றன.

விண்ணையும் மண்ணையும் பரப்பியிருப்பதும், இரவு பகலை உண்டாக்குவதும், அசையும் பொருளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உறங்கச் செய்வதும், நதிகளைப் பாயச்செய்வதும், சூரியனை உதிக்கச் செய்வதுமான ஸத்யமான வார்த்தை என்னைக் காப்பாற்றட்டும். [3]

தேவர்கள் எந்த மூலப் பொருளைக் கொண்டு இந்த மண்ணையும் விண்ணையும் படைத்தார்கள்? இவை உறுதியாகவும் முதுமை அடையாததாகவும் உள்ளன. இவை பல காலை நேரங்களைப் பார்த்துள்ளன. [4]

அல்ல, அல்ல. இந்தத் தேவர்களுக்கெல்லாம் மேலான ஒன்று உள்ளது. அவனே மண்ணையும் விண்ணையும் தாங்குகிறான். [5]

நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன. [6]      

ரிஷிகளின் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில சாதாரண நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மற்றவை பேரருள் நிலையில் பாடப்பட்டவை. ரிஷிகள் காணும் பொருளை எல்லாம் தேவனாகக் காணும்போது அருள் நிலையில் உள்ளனர். அதிலேயே தோய்ந்து பேரருள் நிலைக்குச் செல்லும் போது  அவர்கள் அந்தத் தெய்வத்தையே முழு முதல் கடவுளாகக் காண்கிறார்கள். அதனால் எந்தத் தெய்வத்தைப் பாடினாலும் ‘அவர் பிறக்கும்போதே முதல்வர். இவரே உலகின் மறு உரு’ என்று போற்றுகின்றனர்.

அக்னியே, நான் எந்தத் தெய்வத்தை அழைத்தாலும், நீயே அனைத்துத் தேவர்களின் தன்மையையும் அடைகிறாய் என்ற ரிக் 1.69.6,  யார் என்னை எப்படி வழிபட்டாலும் நான் அவர்களுக்கு அவ்விதமே அருள் செய்கிறேன் என்ற பகவத் கீதை 4.11இன் அடிப்படையாக உள்ளது.

பரம்பொருளின் தன்மைகள் யாவை?

ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
1 கடந்த காலம் வருங்காலம் யாவற்றிலும் வியாபித்துக் காலம் கடந்து நிற்றல்,
2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

இந்தக் கடைசி வலிமைக்கு எடுத்துக் காட்டாக, முதியவன் இருக்க  இளைஞன் சாகிறான், நேற்று இருந்தார் இன்று இல்லை என்று ரிஷி கூறுகிறார்.  பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

பாரதியின் சொல்லும் வேதம் அன்றோ!

 

 

 

குறிப்புகள்:
1    7.45.2.
2    1.164.46
3    10.37.2.
4    10.31.7
5    10.31.8
6    10.82.3



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

10 மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

 

GANDHI

“…….the central idea of the Vedic Rishis was the transition of the human soul from a state of death to a state of immortality…..”
Aurobindo –The secret of the Vedas.

 

மனிதன் தேவன் ஆக முடியுமா? சாகா நிலை பெற முடியுமா? முடியும் என்கிறது வேதம். தேவர்களிலே சிலர் அந்தப் பெயருக்கு இயற்கையிலேயே தகுதி உடையவர்கள், அதாவது ஒளி உடையவர்கள். சூரியனும் அக்னியும் உஷஸும் மிக அதிகமான முறை தேவப் பட்டம் கொடுத்து அழைக்கப்படுவதை முன்னர் கண்டோம். மற்ற தேவர்கள் மனிதராக இருந்து தங்கள் செயலால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (ஒளியுடல் பெற்றவர்கள்) என்று கருத இடம் இருக்கிறது.

வேதத்தில் தேவர்கள் த்விஜன்மா (இரு பிறப்பாளர்) என்று சொல்லப்படுகிறார்கள்.[1] மனிதனாகப் பிறந்தது ஒரு முறை. தேவ நிலையை அடைவது இரண்டாவது பிறப்பு. இந்திரன் நர (மனிதன்/ தலைவன்), ந்ருதம (மனிதர்/தலைவர் களுக்குள் சிறந்தவன்) என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்படுகிறார். நர என்ற சொல்லுக்கு எல்லா இடங்களிலும் மனிதன் என்று பொருள் தரும் சாயணர், தேவர்களை நர என்று வேதம் குறிப்பிடும்போது, அதற்கு யாகத்தின் தலைவன் என்று குறிப்பிடுகிறார். அக்னியைப் பொறுத்தவரை இது பொருந்துகிறது. ஆனால் நர என்ற சொல்லை மற்ற தேவர்களுக்குப் பயன்படுத்தும்போது யாகத்தோடு தொடர்பு படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

அசுவினி தேவர்களும் மருத்துக்களும் நர என்ற சொல்லால் அடிக்கடி சுட்டப் படுகிறார்கள். மித்ரன் வருணனும் அவ்வாறே. இதிலிருந்து இவர்கள் எல்லோருமே மனிதனாக இருந்து தெய்வ நிலை பெற்றவர்கள் தாம் என்பது தெரிகிறது. இதற்கு மாறாக, ஸவிதாவுக்கு (சூரியனுக்கு) நர என்ற அடைமொழி கொடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தெய்வம் என்றால் எங்கோ ஆகாயத்தில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களும் மனிதராக இருந்தவர்கள் தாம் என்பதை நினைவூட்டி எல்லா மனிதரும் அந்த நிலையை அடைய முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் வேதம் அவர்களை நரர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

த்ரஸதஸ்யு என்பவர் வேத ரிஷிகளில் ஒருவர். அவர் தன்னை அர்த தேவன் (பாதி தேவன்) என்று சொல்லிக் கொள்கிறார். தேவ நிலையை அடைவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருந்ததை இது குறிப்பிடுகிறது.[2]

மற்றொரு ரிஷியான ஔலானர் என்பவர் தேவநிலையை அடையும் பாதையை அறிந்தவராக இருப்பதால் அவரை தேவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு அக்னி வேண்டப்படுகிறார்.[3]

மருத்துக்கள் மனிதர்களாக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்றால் அவர்களை வழிபடுபவர்களும் போற்றுதலுக்குரிய தெய்வமாகி இறவா நிலை அடையலாம் என்கிறது ஒரு ரிக்.[4]

பூஷனைப் பற்றிச் சொல்லும்போது அவர் மனிதர்களை விட மேலானவர், புகழில் தேவர்களுக்குச் சமமானவர் என்று சொல்லப்படுகிறார்.[5] அவரும் மனிதனாக இருந்து தேவ நிலையை அடைந்தவர் என்பதை அறிகிறோம்.

அங்கிரஸ் ரிஷியின் வம்சத்தவர் யக்ஞத்தாலும் கொடையாலும் அமரத்துவம் அடைந்த செய்தியை 10.62.1 குறிப்பிடுகிறது.

இதிலிருந்து எல்லா மனிதரும் முயற்சியின் மூலம் தேவ நிலையை அடைந்து அமரத்துவம் அல்லது சாகாநிலை அடைய முடியும் என்று வேதம் காட்டுகிறது. அவ்வாறு தேவ நிலையை அடைவது தான் மனித வாழ்வின் லட்சியம் என்பது உணர்த்தப்படுகிறது. மற்றவர் நலனுக்காகச் செயற்கரிய செய்து, புகழ் பெற்று, தேவர்களுக்குச் சமமாக ஹவிர் பாகம் பெறும் தகுதி பெற்ற ரிபு சகோதரர்களின் வரலாறு மூலம் உண்மையான தேவ நிலையை அடைவது எப்படி என்பதை வேதம் காட்டுகிறது.

ரிபு என்பவரும் அவரது இரு தம்பிகளும் சில அருஞ் சாதனைகள் செய்தனர். தேவர்களது ஒரு கிண்ணத்தை நான்கு கிண்ணங்களாக மாற்றித் தந்தது, இந்திரனுக்கு இரு குதிரைகளை உருவாக்கிக் கொடுத்தது, குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய ஒரு மூன்று சக்கர ரதத்தை அசுவினி தேவர்களுக்காகத் தங்கள் மனத் திறமையால் உருவாக்கியது, ஒரு தோலிலிருந்து ஒரு பசுவை உருவாக்கியது, தங்கள் பெற்றோர்களை மீண்டும் இளைஞர்களாக்கியது ஆகிய செயல்களுக்காக சவிதாவால் (சூரியனால்) அமரத்துவம் அளிக்கப்பட்டனர்.

இந்தக் கதைகளின் உண்மை என்னவாக இருக்கக் கூடும்? முன்னைவிட மெல்லிய, ஆனால் உறுதியான மண் கிண்ணம் செய்யும் முறையைக் கண்டு பிடித்த பொறியியல் வல்லுநர்கள் ரிபுக்கள். இவ்வாறு ஊகிக்க வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

ரிபுக்களில் ஒருவர் சொன்னார், “இந்த ஒரு கிண்ணத்தைக் கொண்டு (ஒரு கிண்ணம் செய்யும் மண்ணைக் கொண்டு) இரு கிண்ணங்கள் உருவாக்கலாம்.” அடுத்தவர் சொன்னார், “மூன்று உருவாக்கலாம்.” இன்னொருவர் சொன்னார், “நான்கு உருவாக்கலாம்.”[6]

ஒருவர் சொன்னார், “அக்னி நல்லது” என்று. இரண்டாமவர் சொன்னார், “மண் நல்லது” என்று. மூன்றாமவர் சொன்னார், “நீர் நல்லது” என்று.[7]

இதிலிருந்து நாம் ஊகிப்பது, வழமையிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய வகை மண்ணைப் புதிய விகிதத்தில் நீருடன் கலந்து மாறுபட்ட வெப்ப நிலையில் அதைச் சுடுவதன் மூலம் மெல்லியதாக இருப்பினும் உறுதியாகச் செய்ய முடியும் என்பதை அவர்கள் செய்து காண்பித்தனர்.

குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய மூன்று சக்கர ரதம் என்பது தற்காலத்திய ஆட்டோ போன்ற ஒன்றாக இருக்கலாம். அவர்கள் பொறியியலில் மட்டும் வல்லுநராக இல்லாமல் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கி இருக்கக் கூடும். தங்கள் திறமையால் தமது பெற்றோரை இளைஞராக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசுவை உயிர்ப்பித்து அதை முன்பு போல ஆக்கினர். இது போலவே மற்ற அருஞ்செயல்களும் இருக்கக் கூடும்.

தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் என்கிறது வேதம்.[8]

அமரத்துவம், மற்றவர் நலனுக்காக அவர்கள் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு.

அச்வின்களும் மனிதராக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்பது அவர்களைக் குறித்த ஒரு பிரார்த்தனையிலிருந்து தெரிகிறது. “கவிகளே, அழகிய பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் தேவர்களானதும் இந்திரனிடத்தில் இருப்பதும் பெரிய விஷயம். ரிபுக்களுடன் சேர்ந்து எங்கள் பிரார்த்தனையைச் செம்மை செய்து கொடுங்கள்.”[9] (அச்வின்கள் செய்த அருஞ்செயல்கள் பற்றி அச்வின்கள் என்ற தலைப்பில் காணலாம்.)

எனவே பிறர் நலனுக்காக அருஞ் செயல்கள் செய்தோரே தேவராக உயர்ந்துள்ளனர். இந்திரன் முதலானோர் செய்த அருஞ் செயல்கள் பற்றி வேதம் கூறுகிறது. அவர்கள் தேவர்களாக இருப்பதால் அருஞ் செயல்கள் செய்யவில்லை. அருஞ் செயல்கள் செய்ததால் தான் அவர்கள் தேவ நிலைக்கு உயர்ந்தார்கள். மதுரை வீரன் முதலானோரும், நாயன்மார் முதலானோரும் இந்த வழியிலேயே சென்று தெய்வ நிலையை அடைந்துள்ளனர்.

அருஞ்செயல்களால் அன்றி தேவநிலைக்கு உயர வேறு குறுக்கு வழிகள் இல்லை என்பதைக் கீழ்க்கண்ட மந்திரங்கள் விளக்குகின்றன.

“இது தான் பழமையான வழி. இந்த வழியாகத் தான் எல்லாத் தேவர்களும் பிறந்திருக்கிறார்கள். எவ்வளவு பலசாலியானாலும் இதன் மூலம் தான் ஒருவன் பிறக்க முடியும். ஆகவே அவன் வேறு வழியில் வர வேண்டாம். தாயைத் துன்புறுத்த வேண்டாம்.” [10]

“நான் இந்த வழியே வர மாட்டேன். இது கடினமாக உள்ளது. நான் பக்கவாட்டு வழியில் வருவேன். நான் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஒருவனுடன் போரிட வேண்டியிருக்கிறது, மற்றொருவனிடம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.” [11]

மந்திரத்தின் நேர்ப் பொருள் இது தான். இதை விளக்க சாயணர் எங்கிருந்தோ ஒரு கதையைக் கொண்டு வருகிறார். வாமதேவர் என்ற ரிஷி தன் தாய் வயிற்றில் இருக்கும்போது வழக்கமான வழியில் பிறக்காமல் பக்கவாட்டு வழியின் மூலமாகப் பிறக்க விரும்பினார். அது தான் இரண்டாவது மந்திரம். அவ்வாறு செய்வதால் தாய்க்குத் துன்பம் ஏற்படும் என்று இந்திரன் அவருக்கு அறிவுறுத்துவது தான் முதல் மந்திரம் என்று கூறுகிறது அக் கதை.

இந்தக் கதைக்கான ஆதாரம் ரிக் வேதத்தில் இல்லை. இது பிற்காலத்தில் ஏற்பட்டது. அந்தக் கதைக்கு ஏற்ப, மந்திரத்தின் பொருள் திரிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிகிறது. கதையை நீக்கிவிட்டு மந்திரத்தை மட்டும் ஆராய்ந்தால் அதனுடைய உண்மைப் பொருள் விளங்கும். மனிதனாகப் பிறந்தவன் அருஞ் செயல்கள் மூலம் தான் இரண்டாவது பிறப்பாகிய தேவ நிலையை அடைய முடியும் என்பது வாம தேவருக்குக் கஷ்டமாக உள்ளது. அவர் வேறு எளிய வழியில் தேவனாகப் பிறக்க விரும்புகிறார். அது இயற்கைக்கு மாறானது. இயற்கை அன்னைக்குத் துன்பம் தருவது என்று இந்திரன் அறிவுறுத்துகிறார்.

தேவ நிலையை அடைவது எளிதல்ல என்ற இக்கருத்தை அதே சூக்தத்தின் பின் பகுதியும், இந்திரன் போல ஒருவர் அரிதாகத் தான், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறக்கிறார் என்று விளக்குகிறது. இந்திரன் அமரத் தன்மையுள்ள வலிமையால் மனிதப் பிறப்பைக் கடந்து விட்டான். தேவன் ஆகி விட்டான். மனிதர்களுக்குள் சிறந்தவனாக வலிமை செல்வம் புகழோடு விளங்குகிறான்.[12]

இவ்வாறு அருஞ் செயல்கள் மூலம் தேவ நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வேதம் வழி காட்டியதனால் தான் இந்து சமயத்தில் தெய்வங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதிப்பட்டு வருகிறது. வேதத்தில் இல்லாத சிவன், திருமால், கணபதி, முருகன், ஐயப்பன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஏற்பட்டது இவ் வகையில் தான். இனியும் புதிய தெய்வங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இவை வேதத்தில் குறிப்பிடப் படாவிட்டாலும் வேதத்தின் அடிப்படைக்கு ஏற்புடையவையே. அதனால் தான் இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது.

உண்மையில் இன்று நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் கிராமத் தெய்வங்களில் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, மாசாணி அம்மன், திரௌபதி அம்மன், ரேணுகா தேவி முதலான பலர் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மானிடர்களே. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகிய மானிடர்கள் இன்று கோவில்களில் சிலை வடிவில் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துள்ளனர். காந்தியடிகளை மக்கள் மாந்தருக்குள் ஒரு தெய்வம் எனப் போற்றினார்கள். நாடெங்கிலும் அவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வாழ்ந்து மறைந்த காஞ்சி மாமுனிவர் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்டார். அவரது உருவப் படங்களும் சிலைகளும் இன்று சில இடங்களில் வணங்கப்படுகின்றன. காலப்போக்கில் காந்தியடிகளும் காஞ்சி முனிவரும் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டுப் பின்னர் பெருந் தெய்வங்களாக உயரக் கூடும்.

குறிப்புகள்:
1 6.50.2
2 4.42.8, 4.42.9
3 10.98.11
4 1.38.4
5 6.48.19
6 4.33.5
7 1.161.9
8 4-33-11
9 3.54.17
10 4.18.1
11 4.18.2
12 6.18.7

 

படம் உதவிக்கு நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=151543



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

11. மனிதன் சாகாமலிருக்கலாம்

 

 

4x5 original“சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.” – பாரதி

பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார்.

மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை.

தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.[1]

அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.

மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.[2]

இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.

ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம்.

நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.[3]
வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.[4]

வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில்“நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்” என்றும், மற்றொரு பாடலில், “நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க” என்றும் வேண்டுகிறார்.

அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.

வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.

அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.[5]
“ஆத்மா வை புத்ர நாமா அஸி” என்று சதபத பிராமணமும்[6] கூறுகிறது.

ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.

இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.

இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.

நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்?[ 7]

சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.

இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.

அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.[8]

வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.

நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா? படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

குறிப்புகள்:
1 –  8.31.9, 10.62.1
2 –  1,164.20, 1,164.30
3 –  2,33.2
4 –  5,63.2
5 –  5.4.10
6 –  சதபத பிராமணம்14.6.4.8.16
7 –  8,48.3
8 –  9,94.4

 

 

 

 

படம் உதவி: http://commons.wikimedia.org/wiki/File:Amitayus,_the_Buddha_of_Eternal_Life_ca_1625_LACMA.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

12. மரணத்திலிருந்து அம்ருதத்தை நோக்கி

 

vedic pic

சாதாரண மனிதனாக இருப்பவன் வேள்வி செய்யும் நரன் ஆக உயர்கிறான். மேலும் உயர்ந்து பிரார்த்தனைப் பாடல் இயற்றும் ரிஷி ஆகிறான். அடுத்த நிலையில் தன் அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கும் மகோனன் ஆகிறான். கடைசியாக சூரி எனப்படும் நிலையை அடைந்து மக்களுக்கு வழிகாட்டுகிறான். இதற்கு அடுத்த நிலையில் அவன் தேவன் ஆகிறான். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதன் தேவன் ஆகிறான்.   

 

 

வேதத்தில் ஐந்து வகை மனிதர் என்று பொருள்படும் பஞ்சஜநா:, பஞ்சக்ஷிதய:, பஞ்சக்ருஷ்டய: என்ற சொற்கள் அடிக்கடி காணப்படுகின்றன. (पञ्चजनाः, पञ्चकृष्टयः, पञ्चक्षितयः). இவை பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்ர சண்டாளர்களைக் குறிக்கும் என்று சாயணர் கூறுகிறார். இது ஏற்கக் கூடியதல்ல. ஏனெனில், ரிக் வேதத்தில் நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் பத்தாவது மண்டலத்தில் புருஷ சூக்தத்தில் ஆதி புருஷன் யாகம் செய்வதை வர்ணிக்கும் இடத்தில் விராட் புருஷனின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றியது முதலான விவரம் வருகிறது. ரிக் வேதம் முழுவதும் வேறு எங்கும் இது பற்றிய மேல் விவரம் கிடைக்கவில்லை. பத்தாவது மண்டலம் காலத்தால் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வர்ண முறை ஏற்பட்ட பிறகு இயற்றப்பட்டு இடைச்செருகலாகப் புகுத்தப்பட்ட பகுதி இது. அதனால் இதை ரிக் வேதத்தின் ஆதாரக் கருத்தாகக் கொள்வதற்கில்லை.

இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு, மேலும் ஒரு சான்று தரப்படுகிறது. சாயணர் குறிப்பிடும் சண்டாளர் என்ற சொல் ரிக் வேதம் முழுவதும் இல்லவே இல்லை.
ராட்சசர்/ தஸ்யு என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டவர்களே பிற்காலத்தில் சண்டாளர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்லக் கூடும். இதுவும் தவறு. ஏனெனில் ரிக் வேதம் ஐவகை மனிதர்களும் நன்றாக வாழ வேண்டுமென்று எல்லா இடங்களிலும் பிரார்த்திக்கிறது. ராட்சசர்களையும் தஸ்யுக்களையும் அழிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆக ராட்சசர்கள்/ தஸ்யுக்கள் இந்த ஐவகை மனிதர்களில் அடங்கியவர்கள் அல்லர்.

ப்ரம்ம என்ற சொல் எல்லா இடங்களிலும் மந்திரம் என்ற சொல்லில் தான் வருகிறது. ப்ராம்மண என்ற சொல்லும் மந்திரம் சொல்பவர் என்ற பொருளில் தான் வருகிறது.  க்ஷத்ர என்ற சொல் வீரம் என்ற பொருளில் வருகிறதே தவிர க்ஷத்ரிய ஜாதி அல்லது வர்ணம் என்ற கருத்தைக் காண முடியவில்லை. அரசரைக் குறிக்க ராஜன்ய என்று தான் கூறப்படுகிறது. வைசிய சூத்ரர்களைப் பற்றிய குறிப்பு இல்லவே இல்லை.

ரிக் வேதம் முழுவதும் ஆழ்ந்து கற்கும்போது ஆங்காங்கு கிடைக்கின்ற குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்ததில், மனிதன் தேவ நிலையை அடையும் வழியில் உள்ள படி நிலைகளே இந்த ஐவகை மனிதர் என்று கருத இடம் உள்ளது. அவர்கள் 1 மர்த்யர், 2 நரர், 3 ரிஷி, 4 மகோனர், 5 ஸூரி. அந்த ஐவகை மனிதர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1 – மர்த்யர்கள்
இதன் நேர்ப் பொருள் இறக்கக் கூடியவர் என்பது. எல்லா மனிதரும் சாகத்தானே போகிறார்கள். இதற்கு ஏன் சில மனிதரை மட்டும் சாகக் கூடியவர் என்று கூற வேண்டும்? இவர்கள் வாழ்க்கையின் உயரிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இவர்கள் ராட்சசர்களைப் போல நாத்திகரோ, யக்ஞங்களுக்கு இடையூறு செய்பவரோ அல்லர். இவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், யாகமும் செய்கிறார்கள்.

யக்ஞம் என்பது மேலோரைப் போற்றலும், கீழோரைக் காத்தலும் ஆகும் என்பதை வரவிருக்கும் தலைப்பு ஒன்றில்  விரிவாகப் பார்க்க இருக்கிறோம். மர்த்யர்கள் யக்ஞம் என்பதன் முழுப் பொருளையும் உணராமல் (மேலோரைப் போற்றுவதையும் கீழோரைக் காப்பதையும் செய்யாமல்) தன் சொந்த நலனுக்காக மட்டும் வேள்வி செய்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.

உண்பதிலும், உணவிற்காக உழைப்பதிலும், சின்னஞ் சிறு இன்பங்களை அனுபவிப்பதிலும், பிறருக்குத் துன்பம் தருவதிலும்[1], போரிடுவதிலும்[2] அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி ஒரு நாள் இறந்து போகிறார்கள். இவர்கள் இறப்பதற்கே பிறந்தவர்கள். அதனால் மர்த்யர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் பாரதியாரின் பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் வேடிக்கை மனிதன் போலவே இருக்கிறார்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து – நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதர் ……………….

 2 –  நரர்
நரர் என்ற சொல்லுக்குத் தலைவர் என்றும் மனிதர்  என்றும் பொருள். மர்த்யர்களை விட மேம்பட்ட இவர்கள் விழிப்புப் பெற்ற மனிதர்கள். மிருகங்களைப் போல, புழு பூச்சிகளைப் போல, சாவதற்கென்று பிறந்தவர்கள் அல்ல நாம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர்கள். இந்தப் படியைக் கடந்து தான் ஒருவன் மேல் நிலைக்குப் போக முடியும்.

இந்த நரர்கள் விழிப்புப் பெற்றார்களே அன்றி என்ன செய்தால் தேவ நிலையை அடையலாம் என்று அறியாதவர்கள். அதனால் தமக்கு மேல் நிலையில் உள்ள ரிஷிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னபடி யக்ஞம், பிரார்த்தனை, சோமம் வடித்தல் முதலானவை செய்கிறார்கள். இவர்களுக்கு காரு, வஹ்னி, வாகத, ஸபாத, ஆயு என்ற வேறு பெயர்களும் உண்டு.

3 – ரிஷி
இவர்கள் யாகம் செய்யும் நிலையிலிருந்து மேலே உயர்ந்தவர்கள். இவர்கள் தேவர்களைக் குறித்த பிரார்த்தனைப் பாடல்களை அறிந்தவர்கள். முன்னோர்களின் பாடல்கள் மட்டுமன்றி, புதிய பாடல்களையும் இயற்றுவார்கள். இவர்களுக்கு விப்ர, விப, கவி, வித்வான் என்ற வேறு பெயர்களும் உண்டு. “வஹ்னிகள் ருதத்தின் மகனை (அக்னியை) (ஹவிஸ் முதலான) காணிக்கைகளால் நிரப்பும்போது, விப்ரர்கள் ருதத்தைப் பிரார்த்தனைகளால் நிரப்புகிறார்கள்[3] என்பதிலிருந்து விப்ரர் எனப்பட்ட ரிஷிகள், வஹ்னி என்ற நரர் போல் வேள்வி செய்வதில்லை என்றும் அவர்கள் தோத்திரங்களைப் பாடி தேவர்களைத் துதிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். வேத மந்திரம் முழுவதும் இத்தகைய ரிஷிகள் இயற்றியவை தாம். தன்னை விடக் கீழ் நிலையில் உள்ள மர்த்யர், நரர் ஆகியோருக்காகவும், மேல் நிலையில் உள்ள மகோனர், சூரி ஆகியோருக்காகவும் சேர்த்து இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

4 – மகோனர்
இந்தச் சொல்லுக்கு செல்வம் மிக்கவர்கள் என்று பொருள். இவர்கள் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அந்தச் செல்வம் எத்தகையது என்பதை பின்னால் வரும் ஒரு பகுதியில் காணலாம். ஓரிடத்தில் மட்டும் இந்திரா, பிறருக்குக் கொடுக்காத மகோனரால் உனக்குத் துன்பம் நேராதிருப்பதாக[4] என்று வருகிறது. எனவே, வாரி வழங்காத மகோனரும் அபூர்வமாக ஓரிருவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இவர்கள் ரிஷியாக இருந்து உயர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனக்காகப் பிரார்த்தனை செய்வதில்லை. ஓரிரு இடங்களில் “மகோனராகிய எங்களுக்கு செல்வம் அருள்க” என்று பொருள் கொள்ளக் கூடிய மந்திரங்கள் உள்ளன. மற்ற இடங்களில், பிரார்த்தனை செய்யும் ரிஷிகள், “எங்களுக்கும் எங்கள் மகோனர்களுக்கும் உணவு, இருப்பிடம், மக்கட் பேறு, செல்வம், புகழ், பாதுகாப்பு, எதிரிகளை வெல்ல வலிமை முதலானவை கிடைக்க வேண்டுமென்று” தேவர்களை வேண்டுகிறார்கள். இவர்கள் ரிஷிகளால் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.

மகோனர்களைப் பற்றிய ஒரு மந்திரத்தில், இவர்கள் பல விதமான எண்ணங்களை உடையவர்கள். வாயிலே எப்பொழுதும் துதிகளைக் காக்கிறார்கள். ஒளியின் முன்னே தர்ப்பைகளைப் பரத்துகிறார்கள். தானே புகழ் அணிந்து கொள்கிறார்கள். மக்களுக்கு நிறைய தானம் செய்கிறார்கள். இவர்களுடைய தேர் தடைபடாமல் செல்லட்டும் என்று ரிஷி வேண்டுகிறார்.[5]

5 – ஸூரி
இவர்கள் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதவர்கள். தன்னிடமுள்ள செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்குபவர்கள். முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியவர்கள். இவர்களுக்கு செல்வம், உணவு மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் தான் வேண்ட வேண்டியிருக்கிறது. இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முந்திய படியில் உள்ளவர்கள். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு அக்னி மகிழ்ச்சி அளிப்பதாக வேதம் கூறுகிறது.[6] இவர்களும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்வோருக்கு செல்வத்தையும் புகழையும் கொடு,  சூரிகளுக்கு வஸுத்வனத்தையும் அம்ருதத்தையும் கொடு என்று ரிஷி வேண்டுகிறார்.[7] இதிலிருந்து சூரி நிலைக்கு அடுத்த நிலை வஸு என்ற தேவநிலை என்று தெரிகிறது.

இவர்கள் யக்ஞம் செய்வதாகக் கூறப்படவில்லை. ஆனால் யக்ஞத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறார்கள்.[8] இவர்கள் யந்தார (வழிகாட்டிகள்) என்று கூறப்படுவதால், இவர்கள் மற்ற மக்களுக்கு தேவர்களின் அருளைப் பெறுவதற்கான வழியாக வேள்வி முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் என அறிகிறோம். தேவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து அபகரித்த செல்வத்தை இவர்களுக்கு வழங்குகிறார்கள். அதை இவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். பிறருக்குக் கொடுக்காத சூரி எவரும் இல்லை.

இவர்கள் மகோனர்களை விட மேல் நிலையில் உள்ளவர்கள் என்பது எதனால் தெரிகிறது என்றால், எல்லா மந்திரங்களிலும் எங்கள் சூரிகளுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், நல்ல இருப்பிடம், மக்கட்பேறு, துன்பம் இல்லாத வாழ்வு முதலியவை கிடைக்க வேண்டுமென்று ரிஷிகள் வேண்டுகிறார்கள். சூரிகள் தங்களுக்காக எதையும் வேண்டுவதாக எந்த மந்திரமும் கூறவில்லை.

ருதத்தின் (தர்மத்தின்) படி நடந்து இவர்கள் மற்ற மக்களையும் நன்னெறிப் படுத்தும் வேலை இவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

மனிதன் எப்படி தேவ நிலையை அடைகிறான் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. ருதத்தைத் (தர்மத்தைத்) தாங்கிக் கொண்டு அதைப் போற்றுவதையே செல்வமாகக் கருதி, பல இடங்களிலும் தேடிக் கொண்டு, வேறு எதிலும் ஆசை வைக்காமல், தங்கள் வேலையைச் செய்துகொண்டு, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டு, தேவப் பிறப்பை நோக்கிச் செல்கிறார்கள். [9]

மர்த்யனாக இருப்பவன் இப்படி படிப்படியாக உயர்ந்து தேவ நிலையை அடையலாம். அப்பொழுது அவனுடைய உடல் மடிந்தாலும் அவனுடைய புகழ் மறையாது. அவன் தேவர்களோடு தேவர்களாகச் சேர்ந்து விடுவான். விண்ணில் ஒளியுள்ள உடல் பெற்று அமரனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

இந்த ஐந்தில் நரர், கவி, மகோனர், சூரி ஆகிய அடைமொழிகள் இந்திரன், மருத்துகள், அக்னி, அச்வின்கள், வருணன், சோமன், ரிபுக்கள் ஆகிய எல்லாத் தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவர்கள் எல்லாரும் இந்த நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

குறிப்புகள்:
1    1.27.3
2    1.27.7
3    8.6.2
4.    6.44.12
5     5.18.3-5
6     1.31.7
7     8.13.12
8     10.66.2
9    1.71.3

படம் உதவிக்கு நன்றி: http://swamiindology.blogspot.com/2013/10/mysterious-atharva-veda-part-2.html

http://cdn2-b.examiner.com/sites/default/files/styles/image_content_width/hash/7e/c6/7ec6f4beb41676c18c52e0c2c5e5ea62.jpg?itok=QP4ZC2sk



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

13. கற்பனை ரதம்

 

fire1

இந்தத் தொடர் சற்றேறக்குறைய 50 வாரங்களுக்கு வரும். சலிப்பைத் தவிர்ப்பதற்காக, இந்த வாரம் ஆராய்ச்சியிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கொஞ்சம் கற்பனையில் திளைப்போம். நம்முடைய கற்பனை ரதத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்று மனித நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்து வருவோம்.

இங்கே மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து சற்றும் வேறுபடாமல் இருக்கிறது. கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது தான் மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படி. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-

வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

fire2அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதருக்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. கிய்யா முய்யா என்று குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. வேத விருட்சத்தின் முதல் விதை அங்கே தூவப்பட்டது.

fire3காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான். (மின் வசதி ஏற்படாத காலத்தில் கிராமங்களில் ஒரு தென்னை மட்டையைச் சுருட்டிக் கட்டிக் கொளுத்திக் கொண்டு இரவில் பயணம் செய்வர். இதற்கு சுளுந்து என்று பெயர். இதை நான் கடைசியாகப் பார்த்தது 1960 இல்.)சருகுகளினிடையே கற்களை மோதித் தீ மூட்டுவது எளிதாக இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மூட்டிய தீயை அணையாமல் பாதுகாப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.

பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

தீ மூட்டத் தேவையான பெரிய காய்ந்த மரங்களைத் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வர பிற மனிதரின் உதவி தேவைப்பட்டது. அது வரை பால் உறவுக்காக மட்டுமே மற்றவரை நாடியவன் இன்று அதற்கு அப்பால் சென்று பல மனிதரிடமும் இணக்கமாக வாழத் தலைப்பட்டான். ஓரிடத்தில் தீ மூட்டி பல மனிதரும் பாதுகாப்பு கருதி அதற்குப் பின்னே சேர்ந்து இருக்கத் தொடங்கியதில் சமூக வாழ்க்கை துவங்கியது.

தங்குமிடத்தில் தங்களுக்கு முன்னே தீ வளர்த்தார்கள், எனவே ‘முன்னால் வைக்கப்படுபவன்’ என்ற பொருளில் அக்னிக்குப் ‘புரோ-ஹிதன்’ என்றும் பெயரிட்டார்கள். கூட்டத்தைச் சார்ந்தவர் வெளியில் சென்றிருந்தால் அவருக்குக் கூட்டம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அழைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். எனவே ‘அழைப்பவன்’   என்ற பொருளில் தீக்கு ‘ஹோதா’ என்றும்  பெயரிட்டார்கள்.

ஆபத்து வரும்போது ஒன்று கூடுவதும் அது நீங்கியபின் அடித்துக் கொள்வதும் மனித இயல்பு அல்லவா? அவ்வாறு நேரும்போது, மீண்டும் ஆபத்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தவறு செய்தவரைத் தண்டித்துத் திருத்த ஒரு தலைவன் ஏற்பட்டான். மனிதனின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

தீயின் உதவியால் தனக்கு வசதியான இடத்தில் காட்டை அழித்து விவசாயம் செய்தான். உலோகங்களை உருக்கி கருவிகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் செய்தான். பொருளாதாரம் என்றொரு புதிய அத்தியாயம் அவன் வாழ்வில் ஏற்பட்டது.

தத்தம் கூட்டத்திற்குள் அந்தந்தத் தலைவர்கள் அமைதி ஏற்படு்த்தினாலும் கூட்டங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. வலுத்தவன் வென்றான், தன் ஆட்சிப் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டான். தன் வலிமைக்கும் அறிவுக்கும் செல்வத்துக்கும் அக்னியே காரணம் என்று கருதி அதை நன்றியுடன் வழிபட்டான்.

விண்ணில் தோன்றும் சூரியனைப் பார்க்கிறான். வெப்பம், வெளிச்சம், வலிமை இவற்றில் அது தீயைப் போலவே உள்ளது. இதுவும் தீ தானோ?

மின்னல் மின்னுகிறது. கண நேரமே ஆனாலும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது, மரங்களைத் தீப்பற்றி எரிய வைக்கிறது. இதுவும் அக்னி தானோ?

கடலிலிருந்து அவ்வப்போது தீச்சுவாலைகள் கிளம்புகின்றன. நீருக்குள்ளும் அக்னி மறைந்து வாழ்கிறானோ?

மரங்கள் உரசுவதால் காட்டுத் தீ உண்டாகிறது. மரங்களினூடேயும் அவன் மறைந்து வாழ்கிறானோ?

தீயை மூட்டிவிட்டுக் கொஞ்சம் அசந்தால் அது அணைந்து விடலாம், வேறு எங்கேனும் பற்றிக் கொண்டு ஆபத்து விளைவிக்கலாம், தீ மேல் வைக்கப்பட்ட உணவு கருகிவிடலாம். தீ விஷயத்தில் மனிதன் எப்பொழுதும் விழிப்புடனும் செயல் துடிப்புடனும் இருப்பது அவசியமாகிறது. எனவே அக்னியை ‘செயலுக்குத் தூண்டுபவன்’ என்று பெயரிட்டான்.

வெளி உலகில் பல வகையான அக்னிகளைப் பார்த்த அவன் தன் உடலுக்குள்ளே உற்று நோக்குகிறான். பசி எப்படி எரிக்கிறது? எப்படி செயலுக்குத் தூண்டுகிறது? பசி இல்லாவிட்டால் செயல்களே நின்று விடுமே? இதுவும் அக்னி தானோ?

உயிருள்ள உடல்களில் எப்போதும் சூடு இருந்து கொண்டே இருக்கிறது. செத்த உடல் சில்லிட்டுப் போகிறது. குகைக்குள்ளே திருடன் போல உடலுக்குள்ளேயும் அக்னி ஒளிந்து வாழ்கிறானோ?

இனப் பெருக்க வேட்கை தோன்றிவிட்டால் அது எப்படி உடலையும் உள்ளத்தையும் எரிக்கிறது? ஆக, அதுவும் அக்னி தானோ?

ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தாகம் எப்படி எல்லாம் மனிதனை நிலை கொள்ள விடாமல் இயக்கி வைக்கிறது? அதுவும் அக்னி தான்.

இப்படியாக, மனிதனின் நாகரிக வளர்ச்சியின் வேகத்தை முடுக்கிவிட்ட அக்னியைப் புகழ்ந்து வேத ரிஷிகள் பாடிய பாடல்களைப் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் காண்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படங்கள் உதவிக்கு நன்றி:
www.smashinglists.com/top-ten-technology-advances-in-history/
www.youtube.com/watch?v=i1YmKImHZl8

http://www.dailymail.co.uk/news/article-2465933/Mans-greatest-invention-wheel-taming-twig-toothbrush-gave-longer-lives-invent-evolve.html



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

14. வேத ரிஷிகளின் கவிதைச் சிறப்பு 

 

அரவிந்த கோஷ் சொல்வதாகப் பாரதி கூறுகிறார், “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் இந்த அக்னி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக்கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

vedas_puranas

வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. சாதாரணமாக நாம் பார்ப்பது போல அல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள். எதையும் வியப்புடன் நோக்கும் குழந்தைப் பண்பை இழக்காமல் அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை உற்றுநோக்கினர்.

தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் குழந்தையாக இல்லாமல் கற்பனை வளம் மிக்க, தேர்ந்த புலவனின் திறமையைக் காட்டுகிறார்கள். குழந்தைத் தனத்தையும் புலமையையும் இணைத்து, எதையும் மறைபொருளாகவே தெரிவிக்கும் வேத மொழிநடைச் சிறப்பை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிக் வேதத்தில் அக்னி பற்றிப் பல இடங்களில் காணப்படும் புகழ் மொழிகளில் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

எரிபொருள் இருக்குமிடத்தில் அடுத்த அடுத்த இடங்களுக்கு அக்னி பரவிக்கொண்டே இருப்பதையும் எளிதில் நகர்ந்து, நெடுந்தூரம் செல்வதையும் “அவர் சுகமான ரதம் கொண்டவர்” (சுக தம ரத:)  என வர்ணிக்கின்றனர்.

மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நாம் விளக்கேற்றுகிறோம். இருள் நீங்குகிறது. இது நமக்குச் சர்வ சாதாரணமான விஷயம். ஆனால் ரிஷி இதைக் கவித்துவக் கண்ணால் பார்க்கிறார். “வலிமையான குதிரைகளுடன் உன் ஒளி வலையை வீசிக் கொண்டு இருளாகிய கரு நிறப் போர்வையைக் கிழித்துக் கொண்டு நீ முன்னேறுகிறாய். அந்த இருளை, மறையும் சூரியனின் கிரணங்கள் நீரில் ஆழ்த்துகின்றன” என்கிறார்.[1]

அக்னிக்கென்று நாம் ஹோம குண்டம், அடுப்பு போன்ற இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நாம் அமைக்காத இடங்களில் தீ பரவ நாம் விடுவதில்லை அல்லவா? இதனால் “தன் இருப்பிடத்திலேயே வளர்பவர் ” (ஸ்வே தமே வர்தமான: ) என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.

காற்று வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசும். நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். அது போல, அக்னி நகர்வதற்குக் குறிப்பிட்ட திசை உண்டா? இல்லை அல்லவா? இதை, “அவரது முகம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது, அவர் நான்கு கண் உடையவர்” (விச்வதோமுக:, சதுரக்ஷ: ) என்கிறார் ரிஷி.

தீ எரியும் அழகைக் கவி ரசிக்கிறார். ஜ்வாலைகள் நாக்குகளைப் போல் உள்ளன. அதனால் அக்னி ஸப்த ஜிஹ்வா – ஏழு நாக்குகள் உள்ளவர் – என்று கூறப்படுகிறார். அவை அவருடைய கேசம் போல் உள்ளன. அதனால் அக்னி ஒளியுள்ள கேசம் உடையவர் (சோசிஷ்கேச) என்று கூறப்படுகிறார். பார்ப்பதற்கு அழகானவர் (தர்சத) என்றும் புகழப்படுகிறார். நெய்யினால் அக்னி வளர்வதை நெய்யினால் மகிழ்பவர் என்று குறிப்பிடுகிறார். அவர் நெய் முதுகு உடையவர் (க்ருதப்ருஷ்ட) என்றும் சொல்லப்படுகிறார்.

“அக்னி பிறக்கும் போது வெள்ளையாகவும் வலுத்த பின்னர் சிவப்பாகவும் ஆகிறார்” (ச்வேதம் ஜஞானம், அருஷம் மஹித்வா) என்றும் “சிவப்புக் குதிரை கொண்டவர்” (ரோஹிதாச்வ) என்றும் ரசித்துப் போற்றுகிறார் ரிஷி.

அக்னி உள்ள இடத்தில் புகை இருக்கும். எனவே அவர் புகைக் கொடியார் (தூமகேது) எனப்படுகிறார். தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார்,“விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”[2]

அக்னியை பகலில் ஹோமம், சமையல் முதலானவற்றிற்காகவும் இரவில் வெளிச்சம் தருவதற்காகவும் மூட்டும் நிகழ்ச்சியைக் கவித்துவத்துடன் ரிஷி வர்ணிக்கிறார்,

“இந்த அக்னிக் குழந்தைக்கு இரவு என்னும் பெண்ணும் பகல் என்னும் பெண்ணும் மாறி மாறிப் பாலூட்டினர்.”[3]

பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதால் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மூட்டப்பட்டவுடன் தீயைக் காற்று அணைக்காமல் விரல்களால் மூடிக் காப்பாற்றும் நிகழ்ச்சியை முனிவர் வர்ணிக்கும் முறை அழகானது. “மணமாகாத பத்து சகோதரிகள் சேர்ந்து புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையைப் பற்றுகிறார்கள்.” என்கின்றனர்.[4]

அதே நிகழ்ச்சிக்கு இதோ இன்னொரு உவமை. வனத்தில் உள்ள இரு திருடர்கள் பல கயிறுகளால் வழிப்போக்கனைக் கட்டி நகர விடாமல் செய்வது போல இரு கைகளும் பத்து விரல்களால் தீயை அணையாமல் காக்கின்றன. [5]

 

 

குறிப்புகள்:
1    4.13.4.
2    10.79.4.
3    1,96.5.
4    3,29.13.
5    10.4.6.

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://www.hinduismnet.com/hinduism-vedas.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

15.அக்னியின் சிறப்புகள்

 

agni

 

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

 
அக்னியின் தோற்றம்
அக்னி எப்பொழுது தோன்றியவர்? யாருக்குத் தெரியும்? அவர் மிகப் பழமையானவர் என்பது மட்டும் தான் ரிஷிகளுக்குத் தெரிகிறது. அவர் எவ்வாறு தோன்றினார் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

“முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினார்”[1] எனப் பேசுகின்றனர்.

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். எனவே விண்ணும் மண்ணும் அவருடைய பெற்றோர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, விண்ணைத் தந்தையாகவும் மண்ணைத் தாயாகவும் சொல்வது வேத வழக்கம். இதற்கு மாறாக, இரண்டையும் சேர்த்து ரோதஸீ என்ற பெயரில் சொல்லும்போது இரு பெண்கள் என்று சொல்வதும் வேதத்தில் உண்டு. எனவே அக்னி இரண்டு தாய்களின் மகன் என்று சொல்லப்படுகிறார்.

இன்னொரு வகையிலும் அவருக்கு இந்தப் பெயர் பொருந்துகிறது. இரண்டு அரணிக் குச்சிகளால் அவர் உருவாக்கப்படுவதாலும் இரு தாய்மார்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மேலும், பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதாலும் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

பண்புச் சிறப்புகள் 
அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், கட்டுப்பாடானவர், புனிதமானவர். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவர்.

மாயா எனப்படும் அதிசய சக்தி, ஆச்சரியமான செயல் திறன், துணிச்சல், வேகம், வலிமை கொண்டவர். வ்ருஷபர் (காளை) என்றும் வலிமையின் மகன் எனப் பொருள் தரும் ஸஹஸஸ் ஸூனு, ஊர்ஜோ நபாத் ஆகிய அடைமொழிகளாலும் போற்றப்படுகிறார். போர்க்களங்களில் முதலில் நிற்பவர், விருத்திரனையும் 99 நகரங்களையும் அழித்தவர். ராட்சசர்களையும் பகைவர்களையும் அழிப்பவர், போட்டி இல்லாதவர்.

குழப்பமில்லாத தெளிந்த அறிவைச் செல்வமாகக் கொண்டவர், பிறக்கும்போதே எல்லாம் அறிந்தவர், உலகில் பிறந்துள்ள அனைத்தையும் அறிந்தவர் (ஜாதவேதஸ்), வருங்காலம் உணர்ந்தவர் (கவி), வித்வான், விப்ர (ரிஷி), கவிக்ரது, க்ரதுவித் (உலகைத் தூண்டுபவர்), அறிவைத் தூண்டுபவர் என்று போற்றப்படுகிறார். புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். இவருடைய திறமையால் கவிகள் பெருஞ் செயல்களைத் தனித்து நின்று செய்ய முடிகிறது.

மக்களின் தொண்டர்
பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவரே தலைவர். குறிப்பாக, தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவர். மக்களை ஒளியுள்ளவர்களாகவும் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களாகவும் ஆக்குகிறார்.

மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவரை நிலைநாட்டினார், மனிதர்க்கு ஏற்படும் துன்பங்களை, அது தேவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், மனிதரால் ஏற்பட்டதாக இருந்தாலும், போக்க வல்லவர். வணங்கினோரைக்  காப்பவர். தாமதமின்றி வரம் அருள்பவர். சுபங்களின் நாயகர். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகர்.

வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உணவு, ஆரோக்யம், புஷ்டி, வெல்ல முடியாத வலிமை, மகிழ்ச்சி, புத்திரர்கள், புகழ், அமரத்தன்மை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, போரில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை அவர் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறார்.

தலைமை
ரயி, வஸு ஆகிய உயர் செல்வத்திற்கும் அவரே அதிபதி. மானிடர் வாழும் நாட்டின் அரசர். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும், செடி கொடிகளுக்கும் அரசர். ஸம்ராட் (பேரரசன்) என்றும் அழைக்கப்படுகிறார். பல வீரர்களைப் பெற்றிருப்பவர். தேவர்களும் மனிதரும் அவர் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவரே விதிப்பவர்.

எளிமை
இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், காட்சிக்கு இனியர், மகிழ்ச்சியுடன் இருப்பவர், எல்லோராலும் விரும்பப்படுபவர். ரிஷி அக்னியிடம் உரிமையோடு கொஞ்சுகிறார், பாருங்கள்.

நான் உன் இடத்தில்- அக்னியாக- இருந்தால் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். செல்வத்தில் திளைக்கிறாயே, உன் அருளில் நாங்களும் பங்கு கொள்கிறோமே[2].

பிதிரரும் தீயும்
உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவர் அக்னி. பிரேதங்களை அவரிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே, பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க”[3] என்று வேண்டுகிறார். அவர் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

அக்னியும் யக்ஞமும் 
இவரே யாகத்தின் தலைவர். ஹோதா, அத்வர்யு முதலான 8 வகை யக்ஞ வேலைகளையும் செய்கிறார். குறிப்பாக, தேவர்களை அழைக்கும் ஹோதா என்ற பணியை மிகுதியாகச் செய்கிறார். ஹவிஸ்ஸாலும் ஸ்தோத்திரங்களாலும் செய்யப்படும் யக்ஞத்தால் வளர்பவர் அக்னி. மேதஸ் (கொழுப்பு), நெய் இவற்றால் மகிழ்கிறார். தேவர்களையும் மனிதர்களையும் தூண்டி புத்தியினால் யக்ஞத்தை நடத்தச் செய்கிறார். புரோகிதர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரே யக்ஞத்தின் கேது (அடையாளம்), யக்ஞஸ்ய வித்வான் (வேள்வியை நன்கு அறிந்தவர்).

அக்னியும் தேவர்களும்    
அக்னி இயற்கையிலேயே தேவன், அதாவது ஒளியுடன் கூடியவர். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறார். தேவர்களின் எதிரியான சம்பரனைக் கிழித்து, அவனது அரண்களை உடைத்தவர். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவரால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களின் நண்பன், தேவர்களின் தந்தை, தேவர்களின் மகன், தேவர்களின் கொடி.

அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருகிறார். தேவர்களோடு தர்ப்பையில் அமர்கிறார். வாயில் நெய்க் கரண்டி கொண்டவர் என்றும் தேவர்களின் நாக்கு என்றும் போற்றப்படுகிறார். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவர். தேவர்கள் அமரத்வம் அடைந்தது அக்னியால் தான்[4].

மக்களுக்காக, தேவர்களைப் பூஜிக்கிறார். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறார். தன் பக்தரைக் காக்கிறார். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறார்.

அக்னி ஸ்வர்த்ருச (ஸ்வர்க்கத்தைப் பார்ப்பவர்), திவ: கேது (ஸ்வர்க்கத்தின் அடையாளம்) என்று போற்றப்படுகிறார். விண்ணின் தலையில் இருப்பவர் (திவ: மூர்தா). உலகம் முழுமையும் பார்ப்பவர் விச்வசர்ஷணி. மர்த்யனாகப் பிறக்கும் மனிதன் நரன், ரிஷி, மகோனன் என்று படிப்படியாக உயர்ந்து சூரி ஆவதை முன்பு பார்த்தோம். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

சூரி நிலையிலிருந்து தேவ நிலைக்கு அழைத்துச் செல்வது அக்னி தான். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு மகிழ்ச்சி அளிக்கிறாய் என்கிறது ஒரு மந்திரம்[5].

ருதத்தின் நாயகன்
ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் உள்ள ஒரு தனி நியதி ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை, ருதத்தில் தோன்றியவர், ருதத்தின் மடியில் கிடப்பவர், அதிலிருந்து என்றும் தவறாதவர் என்று போற்றுகிறார்கள் ரிஷிகள். “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலை பெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்கிறது ஒரு மந்திரம். அக்னியின் குதிரைகள் ருதத்தின் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறது மற்றொன்று.

ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறார் அக்னி. தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறார். ருதப்படி (நியதிப்படி) ருதுக்களைக் (பருவகாலங்களை) காப்பார். ருதத்தைக் காக்க வரும்போது அவரே வருணனாகிறார். இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறார். அவர் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

நற்பண்புகள் பல கொண்டு, மக்களுக்குப் பல வகையிலும் உதவி புரிவதால் வழிபடத் தகுந்தவர். வழிபாட்டின் போது கூறப்படும் தோத்திரங்களை அக்னி விரும்பி ரசிக்கிறார். புகழுரைகள் அவரை வளர்க்கின்றன.

குறிப்புகள்:
1     10.45.1.
2    8.44.23, 8.44.24
3    10.16.1,4
4     5.3.4.
5     1.31.7.

படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

16.அக்னி – பல வகை

Agni
வேதத்தில் அக்னி என்பது பூமியில் நாம் மூட்டும் தீயை மட்டும் குறிப்பதல்ல. எதிர்க்க முடியாத வலிமை, இருளைத் துரத்தும் ஒளி, பகைவரை வாட்டும் வெப்பம், மனிதருக்கு உதவும் குணம், மனிதரைத் தூண்டும் திறன் உடைய எல்லாமே அக்னி தான்.

விண்ணில் உள்ள சூரியனும் அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னலும் கூட அக்னியாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. விண்ணில் சூரியனாகவும், அந்தரிக்ஷத்தில் மின்னலாகவும் பூமியில் தீயாகவும் இருப்பதால் த்ரிஷதஸ்த (மூவுலகிலும் இருப்பவர்) எனப்படுகிறார்.

மூன்று அக்னிகள் இருந்தன. அவற்றில் மனிதர் மகிழ்ச்சிக்காக ஒன்று மட்டும் பூமியில் வைக்கப்பட்டது. மற்ற இரண்டும் விண்ணில் வைக்கப்பட்டன[1] என்று வேதம் கூறுகிறது. அவை முறையே தீ, சூரியன், மின்னல் எனப் பொருள் கொள்கிறோம்.

கர்ப்பத்தில் இருந்தபோது தனூனபாத், பிறந்த பின் நராசம்ஸன், தாயின் மடியில் இருக்கும்போது மாதரிச்வான்  என்று அக்னியின் பெயர்கள் பலவாகும்.[2]

அக்னி ஒன்று தான். அது பல வகையாக மூட்டப்படுகிறது.[3] அக்னியின் பிறப்பிடங்களைப் பொறுத்து பத்து வகை உண்டு,[4] என்று வேதம் சொல்கிறது. அவற்றில்

1. விண்ணில் பிறந்த சூரியன்,

2. அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னல் இவற்றைப் பார்த்தோம்.

3. கடலுக்குள் மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் வடவாக்னி என்று சொல்லப்படும் எரிமலைகளும் நீரில் தோன்றிய அக்னியாகக் கொள்ளப்படுகிறது. நீருக்குள் வாழும் அக்னி நீரால் மட்டுமே சூழப்பட்டிருப்பதால் ஆடை இல்லாதவராகவும், நீரையே ஆடையாக அணிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.[5] தேவர்கள் உன்னை நீருக்குள் கண்டுபிடித்தார்கள், குகையினுள் சிங்கம் போல என்கிறது வேதம்.[6] அக்னியை நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்படுகிறது. நபாத் என்ற சொல் பேரன் என்றும் பொருள் படும். நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறது.[7] எனவே அவர் நீரின் பேரன்.

4. பாறையில் தோன்றும் தீ கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தீ மூட்டப்படுகிறது. எனவே அக்னி பாறையின் மகனாகக் கூறப்படுகிறார்.[8]

5. மரத்தில் தோன்றும் தீ மரங்கள் உரசுவதாலும் அக்னி பிறக்கிறது. மரமும் அக்னியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்”[9] என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.[10]

6. காட்டுத் தீ இவர் காடுகளை அழிக்கும்போது தேவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். காட்டில் ஓரிடத்தில் அக்னி பற்றினால் காடு முழுவதும் அழிகிறது. “ஒரு வருடத்தில் அங்கு புதிதாகத் தாவரங்கள் வளர்கின்றன.” “பழையன கழிந்து புதியன பிறக்கக் காரணமாயிருப்பது அக்னி.”[11]  காட்டில் தீப் பிடித்தால் அதன் வலிமையின் முன்னே எவரும் நிற்க முடியாது. எனவே அவர் காட்டின் தலைவன் எனவும் காட்டின் புதல்வன் எனவும் வர்ணிக்கப்படுகிறார். காட்டுத் தீயை ரிஷி வர்ணிக்கிறார்.

“காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த மரங்களில் பரவும் அக்னி வாளுக்குப் பதிலாக தன் நாக்குகளையே பயன்படுத்திப் பேரிரைச்சலோடு காளை போல் சீறிக் கொண்டு விரைகிறார். அவர் பாதை கறுப்பாக ஆகிவிடுகிறது.”[12]

“தேரில் பூட்டப்பட்ட உன் சிவப்புக் குதிரைகள் காற்றைப் போல் விரைந்து செல்வன, காட்டு மரங்களைப் புகையால் மூடுகிறது.”[13]

“காற்றினால் தூண்டப்பட்டுப் பல திசைகளிலும் பரவும் அக்னி கட்டுப்பாடற்றுப் பாம்பு போல் வளைந்து உலர்ந்த புற்களினூடே செல்கிறது.”[14 ]

“பூமித் தாயின் ஆடையை நக்கிக் கொண்டு அவர் வயல்களில் நீண்டும் அகன்றும் அலையும்போது மிருகங்கள் விரைந்தோடுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கறுப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறார்.”[15]

அக்னி ஒரு தத்துவம்

வேதத்தில் அக்னி என்பது நாம் வெளியில் காண்கின்ற ஒரு பொருளாக மட்டும் கருதப்படவில்லை. அது ஒரு தத்துவம். ஒளி, வெம்மை, எதிரியை அழிக்கும் திறன், நல்லோர்க்கு உதவும் மனம், இடைவிடாது செயல்பட ஊக்கப்படுத்தும் தன்மை இவை கொண்ட பொருள்கள் எல்லாம் அக்னியாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன.

இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது.

7. உயிர்த் தீ

வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து  நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும்  மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர். மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன் (விச்வாயு), இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

எல்லா உயிர்களிடத்தும் வாழ்பவர் என்றால், தாவரங்களிலும் அவர் உள்ளார் என்று ஆகிறது. நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறார். மனிதன் பல அக்னிகளால் மூட்டப்படுகிறான் என்பதிலிருந்து[16] மனிதருக்குள் இன்னும் வேறு வகையான அக்னிகள் இருப்பது அறியப்படுகிறது. கணவனையும் மனைவியையும் நீ ஒன்று பட்ட மனத்தினர் ஆக்கும்போது அவர்கள் உனக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என்பதிலும்[17] எங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக நெறிப்படுத்துகிறாய்[18] என்பதிலும் அவர் கருவறைக்குள் நுழைந்து உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்பதிலும்[19]  அக்னிக்குத் தனூக்ருத் (உடலை உருவாக்குபவர்) என்ற பெயர் அளிக்கப்படுவதிலிருந்தும் அக்னி என்பது காமத் தீயைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

8. பசித் தீ

வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறது. வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர். இது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படுகிறது. ஜடரேஷு ஜின்வதே என்று பசி வயிற்றினுள் இருந்து தூண்டுவதை ரிஷி போற்றுகிறார்.[20]

9. அறிவுத் தீ

அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவர், வீரச் செயல்களில் உதவுபவர், தூண் போல் தாங்குபவர் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவர் என்றும் போற்றப்படுகிறார். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவர் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறார். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவர் எனப் பெயர் பெறுகிறார். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) அக்னியே, உன்னிடமிருந்து தான் இலக்கியம், எண்ணங்கள், பிரார்த்தனைகள் தோன்றுகின்றன.[21] தவறான வழியில் செல்வோரைத் திருத்துபவர், சிலரைக் கொண்டு பலரை வீழ்த்துபவர் என்ற சிறப்புகள் அறிவாகிய அக்னிக்குப் பொருந்துபவை. அக்னியைத் தேவர்கள் முதல் மனிதனாகவும் மனித குலத்தின் தலைவனாகவும் நியமித்தனர். இளா என்ற பேச்சை மனிதக் குழந்தையின் ஆசிரியராக ஆக்கினர்  என்று கூறுமிடத்திலும் அது அறிவாகிய அக்னியையே குறிப்பிடுகிறது.

10. மனதின் ஊக்க சக்தி

இதுவும் அக்னியே. இந்த ஊக்க சக்தி தான் மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்துகிறது. தேவர்கள் அம்ருதத்வம் அடைவது அக்னியின் செயல் திறனால் தான் என்கிறார் ரிஷி.[22] அக்னி, அம்ருதத்தின் காப்பாளன் எனவும்[23] மனிதர்கள் தேவனாகப் பிறப்பதை அறிந்தவர் எனவும்[24] கூறப்படுகிறார்.

தேவர்கள் அக்னியை மனத்தால் தோற்றுவிப்பதாகவும் முனிவர்கள் அதை எண்ணத்தால் வளர்ப்பதாகவும் கூறுகிறது வேதம். யக்ஞங்களின் அடையாளமான அக்னி தன் அறிவினால் எல்லாவற்றையும் அறிகிறார். கடந்து செல்வது தான் இவருடைய நோக்கம்.[25]

“அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவர் என்றும் மற்ற அக்னிகள் இவருடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் சில எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

பல வகை அக்னிகளுக்கும் பிரதிநிதியாகத்தான் தீயில் நாம் நெய்யால் ஆகுதி செய்கிறோம்.[26]

குறிப்புகள்:

1     3.2.9.
2    3.29.11.
3    8.58.2
4    10.51.3
5    3.1.6.
6    3.9.4.
7    3.5.8.
8     2.1.1, 10.20.7
9    3.29.2.
10    1.70.2.
11    1.140.2.
12    1.58.4.
13    1.94.10.
14    1.141.77.
15    1.140.9.
16    6.11.6.
17    5.3.2.
18    5.28.3
19    1.149.2.
20    3.2.11.
21     4.11.3
22    6.7.4.
23    6.7.7.
24    7.2.10.
25    3.11.3.
26    7.8.1.

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

17.இந்திரன்
 

cambodia-indra

இந்திரன் தேவர்களில் முக்கியமானவர். முக்காலத்திலும் ஈடு இணையற்றவர். அவர் தன் செயல் திறமைகளால் தேவர்களுக்குப் பெருமை உண்டாகுமாறு செய்தார். இவர் மனிதனின் நண்பர். அவர்களைத் துன்பத்திலிருந்து விலக்கி அழைத்துச் செல்வதில் நாட்டம் உடையவர். மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி. வீரம் மிக்கவர். தன் வலிமையால் பல பகைவர்களை அழித்துத் தன் பக்தர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அவருடைய சிறப்புகளை ரிக் வேதம் எப்படிக் கூறுகிறது என்று பார்ப்போம்.  

வலிமை
எதிரிகளின் செல்வத்தைப் பறவை போல் கவரும் திறமை உள்ளவர் இந்திரன். மிக நிலைத்தவரையும் அசைத்து விடுபவர். எல்லா வீர்யமும் அவருள் அடக்கம். அவரது ஆயுதம் வஜ்ராயுதம். அதற்குத் தப்பின பகைவர் எவரும் இல்லை.

இந்திரனின் தேர் இரண்டு குதிரைகளால் இழுக்கப்படுவது. இவை வசோயுஜா  (சொல்லால் இயங்குவது) என்றும் ப்ரஹ்மயுஜா (மந்திரத்தால் இயங்குவது) என்றும் கூறப்பட்டுள்ளன.

இந்திரனால் வெல்லப்பட்ட பகைவர்கள்- வ்ருத்ரன், விச்வரூபன், அர்புதன், வலன், சம்பரன், ரௌஹிணன், நார்மரன், த்ருபீகன், உரணன், ஸ்வச்னன், சுஷ்ணன், பிப்ரு, நமூசி, ருத்ரிகா, வர்ச்சின், சுமுரி, துனி, க்ரிவி, குயவன், ஸண்டிகர்கள்.

இந்திரனால் உதவப்பட்ட நண்பர்கள்- த்ரிதா, அங்கிரஸ், தபீதி, துர்வீதி, வய்யன், ஏதஸன், குத்ஸ, ஆயு, அதிதிக்வா.

இந்திரன் இன்றி வெற்றி இல்லை என்பதால் போரில் இரு திறத்தாரும் இவரை உதவிக்கு அழைக்கின்றனர். மேலோரும், கீழோரும் அழைக்கின்றனர். ஒரே தேரில் பயணம் செய்யும் இருவர் இவரைத் தனித்தனியே அழைக்கின்றனர். பணிவுடன் வேண்டுவோருக்கு மட்டுமே அவர் உதவுவார். தன் வலிமையில் திமிர் கொண்டோருக்கு அவர் உதவுவதில்லை. பாவிகளையும் தேவர்களை வணங்காதவர்களையும் அழிக்கிறார்.

இந்திரனின் உணவும் பானமும்
தன் வலிமையால் பல செயற்கரும் செயல்களைச் செய்தவர், அதற்கேற்ற உணவு உண்பவராகவும் கூறப்படுகிறார். இந்திரனுக்காக பூஷனும் விஷ்ணுவும் 100 எருமைகளைச் சமைத்தனர் என்கிறது ஒரு மந்திரம்.[1]

சோமம் இந்திரனை மகிழ்விக்கிறது. அதனால் அவர் வளர்கிறார். சோமத்தினால் அவர் மகவான் (பெருஞ் செல்வர்) ஆனார்.[2]  அவர் பிறக்கும்போதே சோமத்தை அருந்தினார். சோமத்தை அருந்திய களிப்பில் அவர் செய்த அருஞ்செயல்கள் பல. அஹியைக் கொன்று நதிகளைப் பெருகச் செய்தது, மலைகளை உடைத்து வலனைக் கொன்றது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது, தபீதியை மீட்டது, ஆற்றைக் கடக்க முடியாமல் இருந்த தன் நண்பர் துர்வீதி மற்றும் வய்யனுக்காக, ஆற்றைத் தடைசெய்து அவர்கள் மறு கரைக்குச் சென்று செல்வம் அடைய உதவி செய்தது, பெண்கள் ஒளித்து வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தது, புறம் தள்ளப்பட்ட மனிதனை வெளிக் கொணர்ந்தது, குருடனைப் பார்க்க வைத்தது, காலில்லாதவனை நடக்க வைத்தது, சுமுரி, துனி ஆகிய தஸ்யுக்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திக் கொன்றது மற்றும் பல செயல்களை இந்திரன் சோமபானத்தின் களிப்பில் செய்தார்.

செல்வமும் கொடையும்
இந்திரன் செல்வத்தின் இருப்பிடம். செல்வத்தின் பாதைகளின் ஒன்று கூடும் இடம். அவருடைய ஆணையின் கீழ் குதிரைகள், தேர்கள், பசுக்கள், கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர் தன் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார். அவர் பெரும் கொடையாளி. இந்திரனை விட வலிமையானவர், பணக்காரர் பிறந்தது இல்லை.

யக்ஞம்
மற்ற தேவர்களைப் போல இந்திரனும் யக்ஞங்களைப் பாதுகாக்கிறார். யக்ஞத்தால் வலுப்பெறுகிறார். ஆகுதி செய்வோர், சோமம் பிழிவோர், தோத்திரம் சொல்வோர் என வேள்வியின் பல் வேறு பிரிவு வேலைகள் செய்வோரையும் செல்வர், வறியர் என்ற வேறுபாடு இல்லாமல் அவர் ஊக்குவிக்கிறார். பக்தி நெறி அறியாதவரையும் அவர் கை விடாமல் உணவு அளிக்கிறார்.

தலைவர்
நல்ல பாதையிலும் கடினமான பாதையிலும் முன்னே சென்று வழிகாட்டுவதால் பதிக்ருத் எனப்படுகிறார்.

அறிவாளி
அக்னியைப் போலவே இவரும் சிறந்த அறிவாளி. கவிகளுக்குள்ளே மேலான கவி எனப்படுகிறார். அக்னி ஜாதவேதஸ் (பிறந்தது எல்லாம் அறிந்தவர்) என்று கூறப்படுவது போல, இந்திரனும் விச்வானி விதுஷ (எல்லாம் அறிந்தவர்)  எனப்படுகிறார்.

மனிதனின் நண்பர்
இந்திரனைத் திருப்திப்படுத்த யக்ஞம், சோமம், ஹோத்ரம் (புகழ்ச்சி) என மூன்று வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றால் அவர் வலுப்பெறுகிறார்.  மகிழ்ச்சி அடைந்து தன் பக்தர்களுக்கு பெரும் செல்வம் தருகிறார். செல்வம் மட்டுமல்ல, பசுக்கள், மக்கட்பேறு, வீடு, நண்பர்கள், வலிமை, உதவி, பாதுகாப்பு ஆகியனவும் தருகிறார். அவரைக் குறித்து எத்தகைய சிறு தொண்டு ஆற்றினாலும் அவருடைய அருளைப் பெறலாம். புகழ்வோர்க்கு இவர் உதவுவதால் காருதாயர் எனப்படுகிறார்.   இவரைப் புகழ்வோர் வளர்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு உடைய இந்திரனைத் தனக்கே உரிமை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று ரிஷிகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறோம்.

பந்துக்கள் அற்றவர்களாகிய நாங்கள், பந்துக்கள் உள்ள உன்னோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறோம்.[3]  நீ சகோதரன் அற்றவன். என்னைச் சகோதரன் ஆக்கிக் கொள்.[4]  “நீ எங்களுடையவன். நாங்கள் உங்கள் பக்தர்கள். மற்ற பக்தர்களின் யக்ஞங்களுக்குப் போவதற்கு முன்னால் எங்கள் யக்ஞத்திற்கு வாருங்கள்” என்று ஒரு ரிஷி அழைக்கிறார்.[5] நூறு அல்லது ஆயிரம், பத்தாயிரம் பசுக்களைக் கொடுத்தாலும் இந்திரனை விற்க மாட்டேன் என்கிறார் மற்றொருவர்.[6 ]

மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி
பல எதிரிகளை அழித்து மனிதர்களைக் காத்தது இந்திரனுடைய சாதனைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனித குலத்தின் எதிரி யார்? தாஸர் என்றும் தஸ்யு என்றும் ஒரு கூட்டம் ரிக் வேதத்தில் பேசப்படுகிறது. அவர்கள் கறுப்பு நிறத்தவர்களாகவும் மூக்கு இல்லாதவர்களாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள். யக்ஞம் முதலான வழிபாடு செய்யாதவர்கள். மாயையில் வல்லவர்கள். இந்திரன் தானும் மாயையைக் கைக் கொண்டு அவர்களை அழித்தார். பலரைக் குகையில் அடைத்தார். தனக்குச் சாவு இல்லை என்று கருதிக் கொண்டிருந்த தாஸர்கள் அழிந்தனர்.

தேவர்களும் இந்திரனும்
அக்னி, விஷ்ணு, சோமன், வருணன், வாயு ஆகிய ஒவ்வொருவருடனும் சேர்த்துப் போற்றப்படுகிறார் இந்திரன்.  அப்பொழுது இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைகிறது.

இந்திரனை மழை தரும் பழமையான ஜோதி என்றும் அவர் மேலே பிரகாசிக்கும் போது மக்கள் பார்க்கிறார்கள் என்றும் போற்றி சூரியன் இந்திரன் வேறு வேறு அல்லர் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. [7]

சாதனைகளால் தேவ பதவி
இந்திரனின் சாதனைகளைப் பார்த்தோம். முன் அத்தியாயத்தில் கூறியபடி இந்திரன் மனிதனாக இருந்து தன் சாதனைகளால் தேவ பதவி அடைந்தவரா என்பதை ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவை அருஞ் செயல்கள் தாம் என்றாலும் ஒரு வலிமையான மனிதன் செய்யக் கூடியவை தாம். இந்த அருஞ் செயல்களைச் செய்ததால் தான் அவர் தேவ நிலையை அடைந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அவர் தன் சாதனைகளால் மானிடப் பிறவியைக் கடந்து அமர்த்யன் (இறவாதவன்) என்ற பெயரால் விளங்குகிறார்.

இந்திரனே பரம்பொருள்
இந்திரனின் பல்வேறு சாதனைகளைப் புகழ்ந்து கொண்டிருக்கும்போதே ரிஷிகள் பரவச நிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்திரனைப் பரம்பொருளாகக் கருதி அவரைச் சர்வ வல்லமை உள்ளவராக வர்ணிக்கின்றனர். இவருடைய வஜ்ரத்தின் ஓசையால் மண்ணும் விண்ணும் மலைகளும் பயப்படுகின்றன, வணங்குகின்றன. விண்ணும் மண்ணும் அவரை வெல்ல முடியாது. கடலோ மலைகளோ அவருடைய ரதத்தைத் தடுக்கா. அவர் தான் மண்ணையும் விண்ணையும் படைத்தார். அவற்றைத் தாங்குகிறார். அவரே சூரியனைத் தன் பாதையில் உலவ விட்டார். அவரே நதிகளைத் தன் பாதையில் ஓடவிட்டார். அவரே பசுக்களிடம் பாலை வைத்தார் என்று புகழ்கிறார்கள்.

இதே போல எல்லாத் தேவர்களும் பரம்பொருள் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்பதை முதலில் பார்த்தோம்.

 

குறிப்புகள்:
1    6.17.11.
2    6.43.4.
3    8.21.4.
4    8.21.13.
5    7.69.6
6    8.1.5.
7    8.6.30.

 

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி: https://i385.photobucket.com/albums/oo297/Vetty_Gurl/tracks-cambodia-indra.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

18.உஷஸ் – வைகறைப் பொழுது

 

உஷா
பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷிகள் ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார்கள்.

வைகறைப் பொழுதின் அழகை வர்ணிக்கும் மந்திரங்கள் பல உள்ளன. உதாரணத்துக்கு ஒன்று மட்டும் பார்ப்போம். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

வைகறைப் பொழுது ஆனந்தம் தருவது. அந்த ஆனந்தமே செல்வமாகக் கருதப்பட்டு ‘ரயி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நாம் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த செல்வம் கிடைப்பதால் இது நிரந்தர ரயி எனப்படுகிறது.

இது அழகானதும் கூட. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும், ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு ருதம் (இயற்கை நியதி) உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது. வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்கள் யாவரும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்?

ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் போது நம் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து வருகிறது அதனால் உஷஸ் மக்கள் ஆயுளைத் தேய்க்கிறாள் என்கிறார் ரிஷி. இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் அவர்.

இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

1    வந்தது வந்தது பேரொளி இன்று,
வானகமெங்கும் பரவியே நின்று.
ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு
அங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

2    வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்
இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.
இரவென ஒருத்தி பகலென ஒருத்தி
அமரத் தன்மை அடைந்த மகளிர்
ஒன்று போல் இருப்பர், நிறம் தான் வேறு
ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று
விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

3    மூலப் பரம்பொருள் ஏவியபடியே
முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்
இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி
மாறி மாறியே பயணம் செய்வர்.
நிறம் தான் வேறு, மனமோ ஒன்று.
அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்
தடுப்பதும் இல்லை, நிற்பதும் இல்லை.

4    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

5    சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை
பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்
இன்ன நலன்களை இனிதே நாடவும்
தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி
விழியிலார்க்கு விழிகள் அருளி
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

6    கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

7    விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்
நல்லுடை உடுத்த நளின மங்கையே,
புவியின் செல்வம் ஆளும் ராணியே,
மங்கலச் செல்வி, இன்று எம்மீது
உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

8    கடந்து சென்ற கணக்கிலா விடியல்
அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்
இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்
யாவற் றிற்கும் நீ வழி காட்டி.
உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.
இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

9    உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்
தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.
சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.
தேவ பூசனை செய்யும் உந்துதல்
உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?
இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?
கடந்து சென்ற நாட்களின் வழியில்
நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.
இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

11    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
எண்ணிலா விடியல் கண்டு களித்து
எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
புதிய மக்கள் நாளை வருவர்
விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை
நெடிய பகையினை நீளத் துரத்தினை
மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி
இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை
தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை
இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

13    தேவி உனது திருநிறை ஒளியை
பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.
இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்
மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்
இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்
கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்
செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்
கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்
உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை
வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்
கடந்து சென்ற விடியல் களிலே
கடைசியாய் வந்தது இன்றைய வைகறை
இனிவர விருக்கும் விடிவு களுக்கு
முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,
விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்.
பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்
இன்று எமது ஆயுளில் குறைந்தது ஒரு நாள்

17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து
உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்
போற்றும் புலவர்க் கருளுக உஷையே
குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து
காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை
வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்
பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

19    தேவர் தாயே, அதிதியின் வடிவே
வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!
யாவரும் போற்றும் இனிய நங்காய்,
உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை
உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு
உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்
மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்
விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

 

 

 

படம் உதவிக்கு நன்றி:   http://www.harekrsna.de/usha2.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

19.வருணன்

varuna
வருணன், மித்ரன், அர்யமான், பகன், அம்சன் என்ற  ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம் சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான மந்திரங்கள் இல்லை. மித்ரன் வருணன் அர்யமான் மூவரும் சேர்த்தே சில இடங்களில் போற்றப்படுகிறார்கள். பல இடங்களில் மித்ரனும் வருணனும் சேர்த்துப் பேசப்படுகிறார்கள். இவர்களிலும் வருணனே மிகுதியாகத் துதிக்கப்படுகிறார். மற்ற இருவரது தன்மைகள் சாதனைகள் வருணனின் தன்மைகள் சாதனைகளிலிருந்து வேறுபடாமல் உள்ளன. அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே தரப்படுகின்றன.

வலிமை மிக்கவராதலால் அசுரர் என்றும் அறிவு மிக்கவராதலால் கவிதமர் என்றும் அதிசய சக்திகள் பெற்றிருப்பதால் மாயாவான் என்றும் வருணன் கூறப்படுகிறார். ராஜா, சம்ராட் என்ற சிறப்பு ரிக் வேதத்தில் இவருக்குத் தான் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மித்ர வருணர்களும் நர என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களும் மனிதர்களாக, நீதி தவறாமல் ஆட்சி செய்த அரசர்களாக, இருந்து உயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆனால் வேதத்தில் கூறப்பட்ட இவர்களது சாதனைகள் முழுவதும் தெய்விகச் சாதனைகளாக உள்ளனவே அன்றி இந்திரனைப் போல மானிடச் சாதனைகள் எதுவும் இவர்கள் செய்ததாகக் கூறப்படவில்லை.

எல்லாத் தேவர்களும் ருதத்தை(தர்மத்தை)க் காப்பாற்றுவோராகக் கூறப்பட்டாலும் வருண மித்ரனுக்கு ருதத்தில் முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் ருதத்தின் தலைவர்கள். ருதத்தைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். ஒவ்வொரு அடியிலும் விரதத்தை அனுசரிக்கிறார்கள். இவர்களே பெரிய ருதம் ஆக இருக்கிறார்கள். இவர்கள் நிலையான தர்மங்களை மீறுவதில்லை. தர்மத்தாலும் மாயையாலும் விரதங்களைக் காக்கிறார்கள், ருதத்தால் ஆள்கிறார்கள்.

இயற்கை நியதியின் தலைவராக வருணன் செய்த செயல்களாவன- பலியிடப்பட்ட மிருகத்தின் தோலை விரிப்பது போல பூமியை விரித்தார். சூரியன் பூமியைச் சுற்றி வரச் செய்தார். அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு சூரியனைக் கொண்டு பூமியை அளக்கச் செய்கிறார். சூரியனை ரதம் போல விண்ணில் அமைத்தார். சூரியனுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தார். வருடம் மாதம் நாள் பகல் இரவு யக்ஞம் ரிக் இவற்றை ஏற்படுத்தினர்.

மரங்களின் மீது அந்தரிக்ஷத்தை விரித்தார். குதிரைகளிடம் வலிமையையும், மாடுகளிடம்  பாலையும், இதயத்தில் செயல் வேகத்தையும், நீரில் அக்னியையும், ஆகாயத்தில் சூரியனையும், மலை மீது சோமனையும் வைத்தார்.

மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவரால். வருணனின் ருதத்தின் படியே நதிகள் நிற்காமல், ஓய்வெடுக்காமல் ஓடுகின்றன. ஆற்று நீர் சமுத்ரத்தை நிரப்புவதில்லை. காரணம் இது அறிவுள்ள வருணனின் ஏற்பாடு.

ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது,   பூமியை அளந்தது, எல்லா உயிரினங்களையும் தலைவராக நின்று பரிபாலித்தது ஆகியவையும் வருணனின் சாதனைகளாகப் பேசப்படுகின்றன. விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தால் நிலைநாட்டப்பட்டவை. வருணன் தேவர்களுக்கும் பாதுகாவலர்.

பிரபஞ்சத்தைப் படைத்து அதில் ருதத்தை ஏற்படுத்திய வருணன் மனிதருக்கும் சில விரதங்கள் விதித்துள்ளார். வருணனின் விரதங்கள் மீறத் தகாதவை. உடல் முழுவதும் களிமண் பற்றுப் போட வேண்டிய நோய், துருத்தி போல் உடல் வீங்குவது, பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை, வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை இவை வருணனின் விரதங்களை மீறுவதால் உண்டாகும்.

மித்ர வருணர்கள் கண்களை விட நன்றாகப் பாதையை அறிந்தவர்கள். கண்ணை மூடிக் கொண்டும் அவர்களால் பார்க்க முடியும். அவர்களுக்குத் தெரியாமல் ஒருவன் தவறு செய்ய முடியாது.

ருதத்தை மீறியவர்களை, அதாவது பாவம் செய்தவர்களை வருணன் பாசம் என்னும் கயிற்றினால் கட்டுகிறார். அந்தக் கட்டிலிருந்து விடுவிக்கக் கூடியவர் அவரே. (பிற்காலத்தில் இந்தப் பாசம் யமனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது.) பாவங்களைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தண்டிக்கிறார்.

மற்றவர்கள் செய்த தவறுகளின் பலனை நாங்கள் அனுபவிக்காதிருப்போமாக[1], மூதாதையர் செய்த பழிக்கும் எங்கள் பழிக்கும் தண்டனை தராதே [2] என்று அவர் வேண்டப்படுகிறார்.

தண்டிப்பவராக இருந்தாலும் கருணையும் மிகக் கொண்டவர் வருணன். பாவிகளிடத்திலும் கருணை காட்டுபவர். வேண்டினால் மன்னிக்கிறார். நண்பர்களிடத்தும், உறவினர்களிடத்தும், அயலாரிடத்தும் செய்த பாவங்களைப் போக்குகிறார். வருணா, உன்னுடைய விரதத்தில் நாங்கள் பிறழாமல் இருப்போமாக என்ற பிரார்த்தனை அடிக்கடி வருணனிடம் வைக்கப்படுகிறது.

மித்ர வருணர்கள் அறிவற்றவனை அறிவாளி ஆக்குகின்றனர். அறிவுள்ளவனை விழிப்படையச் செய்கின்றனர். நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றனர்[3].

தெய்வங்களுக்குச் செய்த பாவங்களினாலும், அறியாமையால் உன் தர்மத்தை மீறினதாலும் நாங்கள் செய்த தவறுகளுக்காகக் கோபித்துக் கொள்ளாதே [4] என்ற இந்த மந்திரம் சந்தியா வந்தனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனே அபித்ரோஹம் மனுஷ்யாச்சராமஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மா நஸ் தஸ்மாதேனஸோ தேவ ரீரிஷ:   

என் உறவினர்கள் வறுமை அடையக் கூடாது. நாங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் வருணன் வேண்டப்படுகிறார். க்ஷேமத்திலும் யோகத்திலும் நலம் உண்டாகட்டும் என்றும் பிரார்த்திக்கப்படுகிறார்.

வருண மித்ரர்கள் துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.  உழைக்கத் தூண்டுகிறார்கள். அறியாதவர்களுக்கு அறிய வைக்கிறார்கள். அறிந்தவர்களைப் பாவங்களிலிருந்து நீக்கி நல்ல பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.

குறிப்புகள்:
1    2.28.9.
2    7.86.5.
3    7.60.6.
4    7.89.5.

 

 

படம் உதவிக்கு நன்றி: http://barbarapijan.com/bpa/Nakshatra/24shatataraka.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்
Permalink  
 


20. ஸவிதா

Savitr Vedic Deity

பரமாத்ம சைதந்யத்தின் மஹிமையையே பூர்வ யோகிகள் அனந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸூர்ய ஜ்யோதியாக வர்ணித்திருக்கிறார்கள். உபமித்திருக்கிறார்கள். எல்லாம் என்பது ஸர்வத்தின் பெயர். எல் என்பது தமிழில் ஸூர்யனுக்குப் பெயர்.  ஸர்வமென்ற மனக் கொள்கைக்குப் ப்ரதிநிதியாக நம்முடைய முன்னோர் ஸூர்யனை ஆராதனை செய்தது யுக்தமேயாகும். – பாரதி

 

எல்லோரும் தேவர்கள் எனப்பட்டாலும் சூரியனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. வானத்தில் பிரகாசமாக ஜ்வலிக்கும் சூரியன் மனிதனது கவனத்தைக் கவர்வதில் வியப்பு இல்லை. தினம் தோறும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அவன் கவனிக்கிறான். இரவில் உலகமே அசைவற்று உயிரற்றது போலக் கிடக்கிறது. காலையில் சூரியன் உதித்ததும் மனிதன் மட்டுமன்றி மிருகங்களும் பறவைகளும் கூட புத்துயிர் பெற்றது போல உற்சாகத்துடன் தத்தம் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் சூரியன் உயிர்ப்புத் தருபவர் என்ற பொருளில் ஸவிதா என்று அழைக்கப்படுகிறார்.

ஸவிதா என்ற பெயர் எங்கு வந்தாலும் அங்கு பெரும்பாலும் தேவ என்ற அடை மொழி கூடவே வரும்.“தேவோ வஸ் ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே” என்பது யஜுர் வேதத்தின் முதல் மந்திரத்தின் பகுதி. காயத்ரி மந்திரத்தில் “ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி” என்று வருகிறது. எனவே முதன்மையான தேவன் ஸவிதா தான். ஸவிதாவைப் போற்றும் இந்த மந்திரம் தான் இன்றளவும் வைதிக சம்பிரதாயத்தின் பிரதான மந்திரமாக உள்ளது.

ஸவிதா தேவர்களுக்கே செல்வத்தை அள்ளிக் கொடுப்பவர். அவருடைய விரதத்தை வருணன், மித்ரன், அர்யமா, ருத்ரன் ஆகிய எந்தத் தேவர்களும் மீறுவது இல்லை. ஏன், எதிரிகள் கூட, ஸவிதாவின் விரதத்துக்குக் கட்டுப்பட்டுத் தான் போக வேண்டும். தண்ணீரும் காற்றும் ஸவிதாவின் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகின்றன.

வெற்றி பெறும் நோக்கத்துடன் போர்க் களத்தில் நிற்கிறான் வீரன் ஒருவன். சூரியன் மறைந்ததும் அவன் வீடு நோக்கித் திரும்புகிறான். துணி நெய்து கொண்டிருக்கும் பெண், வேலைசெய்து கொண்டிருக்கும் தொழிலாளி எல்லோருமே சூரியன் மறைந்ததும் வேலையைப் பாதியில் விட்டு விட்டுப் போகிறார்கள். மறுநாள் சூரிய உதயம் ஆனதும் தங்கள் வேலையை மீண்டும் தொடங்குகிறார்கள். பறவைகள் மிருகங்கள் கூட தத்தம் இடத்தில் அடங்குமாறு செய்பவர் ஸவிதா.

நாங்கள் விரும்பியதும் நீ கொடுத்ததுமான செல்வங்கள் விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும்  எங்களை வந்து அடையட்டும் என்று வேண்டுகிறார் ரிஷி.

தோன்றும்போது ஸவிதா எனப்பட்டாலும் தோன்றி மேலே எழும்பும்போது அவருக்கு சூரியன் என்று பெயர். தர்மத்தைக் காப்பதால் அவர் மித்ரன் எனப்படுகிறார். தன் பயணங்களால் பூஷன் எனப்படுகிறார்[1]. சூரியன் ஏழு குதிரைகளால் அழைத்துச் செல்லப்படுபவராகவும், மனிதர்களின் நல்ல கெட்ட செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவராகவும், ருதத்தின் (தர்மத்தின்) அழகிய முகமாகவும் கூறப்படுகிறார். அவரே மித்ர வருணர்களின் மற்றும் அக்னியின் கண்[2 ].நிற்கும் அசையும் பொருள்களின் பாதுகாவலர்.

வஸுக்களைத் தூண்டுகிறார். ரயி எனப்படும் ஆனந்தமாகிய செல்வத்தைக் கொடுக்கிறார். அறிஞர் எனப் பொருள்படும் விப்ர, விபச்சித, வயுனாவித். கவி, ஆகிய அடைமொழிகளுக்கு உரியவர் ஸவிதா. மற்ற தேவர்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள். இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் மேகங்களுக்கு அப்பால் இடம் தந்ததும் இவரே. அவர்கள் எங்கு பறந்து சென்றாலும் ஸவிதாவிற்குக் கட்டுப்பட்டே நிற்கிறார்கள்[3]. நீரும் காற்றையும் இயக்குவது இவரே. ஸ்வதாவான் (தனித்து இயங்க வல்லவர்). இவர் பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றுவதைப் பூமியை அளந்தார் எனச் சொல்கிறது வேதம்.தேவர்களுக்கு அமரத்துவம் அளிப்பதும்  மானிடர்களுக்கு வாழ்வைத் தொடரச் செய்வதும் அவரே[4].

சுத்தனான சூரியனிடம் கட்டப்பட்ட மனம் நடுங்குவதில்லை[5].

குறிப்புகள்:

1     5.81.4
2    1.115.1
3    4.54.5
4    4.54.2
5    5.44.9

21.சோமம்

hindugod_soma

ரிக் வேதத்தில் சோமம், சுரா என்று இரு வகையான பானங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சுரா என்பது போதை தருவது. இது இகழப்பட்டுள்ளது.

சுராவினால் போதை அடைந்தவர்கள் போலச் சண்டையிடுகிறான் (8.2.12); சுரா பாவம் செய்யத் தூண்டுகிறது (7.86.6); சுரா அருந்தும் செல்வந்தனோடு இந்திரன் நட்புக் கொள்ளான்(8.21.14) – என்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

இதற்கு மாறாக, சோமம் விரிவாகப் புகழப்பட்டுள்ளது. ரிக் வேதம் 9வது மண்டலம் முழுவதும் (1017 பாடல்கள்) சோமத்தின் புகழ்ச்சி மட்டுமே. மற்ற தொகுதிகளிலும் சோமத்தைக் குறித்த புகழ்ச்சிகள் பல உள்ளன.

தேவர்கள் எல்லோரும், குறிப்பாக, இந்திரன், சோமத்தில் பிரியமுள்ளவராகக் கூறப்பட்டிருக்கிறார்கள். சோமத்தை அருந்தியதால் ஏற்பட்ட உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றதாகவும், பல அருஞ் செயல்களைச் செய்ததாகவும் வேதம் கூறுகிறது. வாயு தேவனுக்கு சோமத்தில் முதல் உரிமை உண்டு. காலை நேரத்து சவனத்தில் (பிழிதலில்) அச்வினி தேவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. தேவ நிலைக்கு உயர்ந்த மனிதர்களாகிய ரிபு சகோதரர்களுக்கும் மற்ற தேவர்களைப் போல சோமம் அளிக்கப்படுகிறது.

யக்ஞமும் சோமமும்
சோமம் என்பது வேள்வியின் ஒரு அத்யாவசியமான அங்கம். சோமம், ஸ்தோமம் (பிரார்த்தனை), நமஸ்காரம், புத்தி இவை அனைத்தும் சேர்ந்தால்தான் யக்ஞம் குறைவற்றதாக ஆகிறது. யக்ஞஸ்ரீ என்ற சிறப்பும் சோமத்துக்குக் கொடுக்கப்படுகிறது.

சோமனும் சந்திரனும்
சோமச் சாற்றுக்கு இந்து என்ற பெயரும் உண்டு. சோமன் என்பதும் இந்து என்ற சொல்லும் பல இடங்களில் சந்திரனைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. இந்து சோமனைத் தழுவுகிறது என்ற மந்திரம் (9.12.5.). இரண்டும் வேறு வேறானவை என்று காட்டினாலும் சில இடங்களில் சோம பானம் சந்திரன் இரண்டுக்கும் பொதுவான புகழ்ச்சியான மந்திரங்களும் உள்ளன.

somamசோமத் தாவரம்
சோமம் என்பது மலைப் பிரதேசங்களில் விளையும் ஒரு தாவரம், அதன் தண்டு சாறுள்ளது என்பது மட்டும்தான் ரிக் வேதத்திலிருந்து அறிய முடிகிறது. பாரசீக சமயத்தின் வேத நூலாகிய ஜெண்ட் அவஸ்தாவில் இது ஹோமா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன தாவரம், தற்காலத்தில் அதன் பெயர் என்ன என்பதை அறிய உலகளாவிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. சிலர் வடமேற்கு இந்திய மலைப்பகுதிகளில் விளையும் எபிட்ரா சினிகா (Ephedra sinica) என்ற கோரை போன்ற செடிதான் அது என்று கருதுகிறார்கள். ஆனால் அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

சாறு எடுத்தல்
அந்தத் தாவரத்தை வண்டியில் கொண்டுவந்து, இரு பாறைக் கற்களுக்கு இடையில் வைத்து சாறு வரும் வரை நசுக்கி, பசு அல்லது ஆட்டுத் தோலின் மீது பரப்பப்பட்ட ஆட்டு ரோமத்தால் ஆன ஒரு வடிகட்டியின் மீது வைத்துக் கைகளால் முறுக்கிப் பிழிகிறார்கள். (பிழியாத சோமத்தை விட பிழிந்த சோமம் மேலானது என்ற மந்திரத்திலிருந்து (6.41.4) அம்சு எனப் பெயரிடப்பட்ட அந்தத் தண்டுகளை அப்படியே சுவைப்பதும் வழக்கில் இருந்திருக்கக் கூடும் என்பதை அறிகிறோம்). பிற்காலத்தில் அதை மர உரலில் இட்டு உலக்கையால் நசுக்கிச் சாறு எடுப்பது வழக்கத்திற்கு வந்ததை முதல் மண்டலத்திலுள்ள ஒரு சூக்தம் கூறுகிறது. அது சுத்தம் செய்யப்பட்டு அடியில் உள்ள ஒரு மரப் பாத்திரத்தில் சேருகிறது. அதில் நீர், பால், தயிர் இவை கலக்கப்படுகின்றன. இது அருந்தத் தயாராக உள்ள பானம். சோமஸ்ய சமிதார (சோமத்தை எரிப்பவர்) என்ற சொல் இது நெருப்பின் மேல் வைத்துச் சூடாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதன் சுவை இனிப்பானது, தேன் போன்றது எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பழுப்பு நிறமானது என்றும் பச்சை நிறமானது என்றும் இருவகையாகவும் கூறப்பட்டுள்ளது. பால் முதலியன கலப்பதற்கு முன் பச்சையாகவும் கலந்த பின் பழுப்பு நிறமாகவும் இருந்திருக்கக் கூடும்.

தன்மைகள்
சோம பானம் போதை தருவதாகவோ, செயலற்று முடக்குவதாகவோ, கலாட்டா செய்யும் தன்மையை உண்டாக்குவதாகவோ, பழக்கத்தை நிலைநாட்டுவதாகவோ சொல்லப்படவில்லை. இது அமரத்துவமும் ஆனந்தமும் தரக் கூடியதாகக் கூறப்பட்டிருக்கிறது.

வேத ரிஷிகளின் பாடல்கள் அவர்கள் உலகில் ஒவ்வொரு பொருளையும் முதன் முதலாகப் பார்க்கும் குழந்தை போலக் கூர்ந்து கவனித்து அதன் அழகை ரசித்து அனுபவித்ததைக் காட்டுகின்றன. அக்னி எரியும் அழகை ரசித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், சோமச் சாறு ஓடி வருவதை ரசித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். கண்ணுக்குத் தெரியாத காற்றை ஒளி வடிவமாகக் காண்கிறார்கள் (காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்ததாகப் பாரதி கூறியது வேதத்தின் தாக்கம்தான்). அவர்களது தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பரந்ததாக உள்ள நிலையில் நானே இந்திரன், நானே வருணன், உலகைப் படைத்தது நானே என்று கூறி பரம்பொருளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள், நாங்கள் சோமத்தைக் குடித்து அமரராகிவிட்டோம் என்று கூறுவதன் மூலம், பாரதி கூறியது போல, வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இதெல்லாம் சாத்தியமானது சோம பானத்தின் தாக்கத்தால் என்றால், சோமம் என்பது மனதை விரிவுபடுத்தும் பொருள்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

மனதை விரிவுபடுத்தும் மருந்துகள் பற்றி விக்கிபீடியா கூறுவதைப் பார்ப்போம்.

முதலில் புலன்கள் தீவிரம் அடைகின்றன. சாதாரணமாகக் கவனத்தில் வராத விஷயங்கள் சிறப்பான கவனம் பெறுகின்றன. பழகின விஷயங்கள் கூட முதன் முதலாகப் பார்ப்பது போல ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் முக்கியத்துவம் உள்ளதாகவும் தோன்றுகின்றன. பொருளின் நிறம், வடிவம், அழகு, ஒலியின் இனிமை முதலியன மிகுதியான தெளிவுடன் தோன்றுகின்றன. ரசனை மிகுதிப்படுகிறது. உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட பெரிதாகத் தோன்றுகின்றன. காதால் பார்ப்பது, கண்ணால் கேட்பது முதலிய புலன் மாறிய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. காலம் மிக மெதுவாக ஊர்கிறது அல்லது அசைவற்று நின்று நிகழ்காலம் அமரத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது. தான் என்னும் உணர்வு அற்றுப் போகிறது. தனக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையே உள்ள தடுப்பு நீங்கி விடுகிறது.

சோமமும் அத்தகைய பொருளாக, மனதை விரிவுபடுத்தி, சாதாரண நிலையிலிருந்தும் உயர்த்தி, அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியதாக இருக்கக் கூடும்.

மன விரிவை தியானத்தின் மூலமும் அடைய முடியும் என்று யோக சாத்திரம் சொல்கிறது. ரிஷிகள் இதை தியானம், சோமம் இரண்டையும் பயன்படுத்தி அடைந்திருக்கலாம்.

அமரத்துவம்
வேதம் மூன்று வகையான அமரத்துவங்களைக் குறிப்பிடுகிறது என்று பார்த்தோம். சந்ததி பெருகுவதால் உணரப்படும் அமரத்துவம், பிறர் நலனுக்காக அருஞ்செயல்கள் செய்து புகழ் பெறுவதன் மூலம் கிடைக்கும் அமரத்துவம் என்ற இரண்டு தவிர சோம பானத்தினாலும் அமரத்துவம் அடையலாம். இதை அருந்திக் கால உணர்வு அற்றுப் போவதால் உணரப்படும் அமரத்துவம் தற்காலிகமானது.

சோமம் நிரந்தர அமரத்துவத்தையும் தரவல்லது. எப்படி எனில் அது அறிவையும் ஆற்றலையும் தூண்டுகிறது என வேதம் கூறுகிறது. இதை அருந்திய உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றார், பல அருஞ் செயல்களைச் செய்தார், புகழ் பெற்றார், அமரத்துவம் அடைந்தார்.

இவ்வாறு ஆற்றலையும் அறிவையும் பெருக்குவதன் மூலம் அருஞ்செயல்கள் செய்ய வைத்து நிரந்தர அமரத்துவத்துக்கும் வழி வகுக்கும் சோமத்தைப் பற்றி ரிஷிகள் மிகுதியாகப் பாடியது ஒன்றும் வியப்பில்லை.

நான்கு மன நிலைகள்
ரிஷிகளின் பாடல்கள் நான்கு வகை மன நிலைகளில் பாடப்பட்டதை வேதத்தை ஆழ்ந்து கற்பவர் உணர முடியும். முதல் நிலையில் அவர்கள் சாதாரணப் புலவர்களைப் போலப் பாடுகிறார்கள். உவமைகள், உருவகம், மிகைப்படுத்தல் முதலிய அணிகள் கொண்டதாக உள்ளன அப் பாடல்கள். தீனியை நோக்கி ஓடும் குதிரை போல காட்டில் தீ விரைந்து பரவுகிறது என்று கூறுவதும், சோமச் சாற்றில் நீர் கலக்கும் போது சோமம் நீராகிய ஆடை அணிந்திருப்பதாகக் கூறுவதும், அக்னியின் புகையாகிய கொடி வானுலகை எட்டுகிறது என்று கூறுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

அவர்கள் தியானத்தில் ஆழ்ந்ததாலோ அல்லது சோமத்தை அருந்தியதாலோ பரவச நிலை அடையும் போது பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதைத் தேவனாகக் கருதிப் பாடத் தொடங்குகின்றனர். அக்னியை, இந்திரனை, குதிரையை, நதிகளை, நீரை, மேகத்தை, ஏன், தவளையைக் கூடத் தேவ நிலைக்கு உயர்த்துகின்றனர். இது இரண்டாவது நிலை.

சோமத்தைத் தேவனாக ஆக்கிப் பாடும் பாடல்களில் விருத்திரனை அழித்தது முதலிய இந்திரனின் செயல்கள் சோம தேவன் பேரிலும் ஏற்றிக் கூறப்படுகின்றன. இந்திரனைப் போலவே சோம தேவனுக்கும் மருத்துகளைத் துணைவராகக் கொண்டவர், வலிமை மிக்கவர் என்ற அடைமொழிகள் உண்டு.

சோம தேவன் ருத்ரனுடன் சேர்ந்து மருந்துகளால் நோய் நீக்குகிறார். வருணனைப் போலவே அவரும் இயற்கை நியதியைக் கட்டிக் காக்கிறார். சூரியன் போல எல்லாரையும் பார்க்கிறார். அக்னியைப் போல அவரும் கவி (அறிவாளி), வேள்வியின் மையம் என வர்ணிக்கப்படுகிறார்.

பேச்சையும் புத்தியையும் தூண்டுகிறார், அவரால் பாதிக்கப்படாதார் இல்லை. போரில் வெல்ல முடியாதவர். இருளை நீக்குகிறார். செல்வம், வசதி முதலியன கொடுக்கிறார், பிரார்த்தனைகளுக்கு இரங்கி சிறப்புகளுக்குள் மேலான ரயி எனப்படும் செல்வம் கொடுக்கிறார், மந்திரங்களின் தலைவர் என்றும் மனத்தின் தலைவர் என்றும் போற்றப்படுகிறார்.

சோமனே பரம்பொருள்
மூன்றாவது கட்டமாகிய பேரருள் நிலையில் ரிஷிகளுக்கு எல்லாமே பரம்பொருளாகத் தெரிகிறது. தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. காக்கைச் சிறகினிலும், கேட்கும் ஒலிகளிலும், தீயில் கை வைத்த போதும் பாரதி இறை இன்பத்தை அனுபவிக்க முடிந்தது போல இவர்களும் சோமச் சாற்றில் பரம்பொருளைக் காண்கின்றனர்.

சோமன் உஷஸ் என்னும் வைகறைப் பொழுதைச் சூரியனுக்குத் துணையாக ஆக்கினார், சூரியனில் ஒளி வைத்தார், பூமியையும் விண்ணையும் நிலை நிறுத்தினார் என்று கூறுகின்றனர். மழை, மகப்பேறு, உணவு தருபவர் என்றும், ஆடை இல்லாதவர்க்கு ஆடை அளிப்பவர் என்றும், குருடனைப் பார்க்க வைக்கிறார், நொண்டியை நடக்க வைக்கிறார், பசுவினிடத்தில் பாலை வைத்தார், தேவர்களைப் பிறப்பித்தார் என்றும் அவர் கூறப்படுகிறார்.

தத்துவம்
சோமச் சாறு வடிகட்டப்படும்போது, அதில் ரிஷி ஒரு தத்துவத்தைக் காண்கிறார். ஆட்டு ரோமத்தால் வடிகட்டிய சோமம் ஆனந்தம் தருவது போல தர்மம் என்னும் வடிகட்டி மூலமாகப் புகுந்து வரும் நல்ல பேச்சு எல்லோருக்கும் ஆனந்தம் தரவல்லது என்கிறார்.

வருணனின் அற்புத சக்தியால் நாக்கின் நுனியில் தர்மத்தால் ஆகிய ஒரு வடிகட்டி அமைந்துள்ளது. அறிவாளிகள் அதை நெருங்கிப் பயன் அடைகின்றனர். முடியாதவர்கள் பள்ளத்தில் வீழ்கிறார்கள் (9.73.9).

ஒரு வகை தியானம்
சோமச் சாறு கைகளால் பிழியப்படுவதையும், அது ஆட்டு ரோம வடிகட்டி மூலம் பாத்திரத்தில் விழுவதையும், அப்போது சத்தம் ஏற்படுவதையும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள் ரிஷிகள். ஒரு எளிய செயல், இதில் வர்ணிப்பதற்கு என்ன இருக்கிறது, அவர்களைக் கவரும் அளவுக்கு அதில் என்னதான் இருந்திருக்கும் என நாம் வியக்கும் போது ஜப்பானியரின் சாஜி என்னும் தேநீர்ச் சடங்கு நினைவுக்கு வருகிறது.

இதில், விருந்தினருக்குத் தேநீர் அளிப்பதை, நான்கு மணி நேரம் ஆகும் ஒரு விரிவான சடங்காக்கி, ஒவ்வொரு அசைவுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் கவனம் செலுத்தி, அதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதைப் போல, சோமச் சடங்கும் மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யப்படும் ஒரு வகைத் தியான முறையாக இருந்திருக்கக் கூடும். சோமத் துளிகள் ஒவ்வொன்றிலும் பரம்பொருளைக் காண்பதால் அதை வர்ணிப்பதில் ரிஷிகளுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.

சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி
பரவச நிலையில் ஒவ்வொரு தேவனும் ரிஷிகளுக்குப் பரம்பொருளாகத் தெரிவது போல, சோமமும் பரம்பொருளாகத் தெரிகிறது. சோமம் என்பது ஒரு தாவரத்தைப் பிழிந்து வருவது என்று குடிக்கிறவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ரிஷிகள் எதைச் சோமம் என்று கருதுகிறார்களோ அதை யாரும் அறிய மாட்டார்கள் [7] என்கிறது வேதம். சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி. ஆனந்தம் என்பது பொருளைச் சார்ந்தது அல்ல. அது உள்ளத்திலிருந்து பீறிட்டு எழுவது. வெளியில் உள்ள பொருள் அதற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே. நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் பொருள்களைப் பார்த்துக் குழந்தை மகிழ்ச்சியால் மலர்கிறது. அது போல ரிஷிகள் ஆற்றையும், சூரியனையும், இரவையும், மரங்களையும் பார்த்தும், காற்றை ஸ்பரிசித்தும் ஆனந்தம் அடைகிறார்கள். விண்ணையும் மண்ணையும் படைத்த அவன், அளவிடமுடியாததாகவும் ஒழுங்குற அமைந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் நிற்பதாகவும் இவற்றைப் படைத்த அவன், நிச்சயமாக ஒரு திறமையான கலைஞன்தான்[8] என்று பரம்பொருளை வியக்கிறார்கள்.

எதையும் பார்த்து வியந்து ஆனந்தம் அடையும் இத்தகைய குழந்தை மனநிலையையே ஒரு கட்டத்தில் ரிஷிகள் சோமமாகக் காண்கிறார்கள்.



-- Edited by Admin on Tuesday 14th of April 2015 04:54:51 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்
Permalink  
 


22. மருத்துகளும் வாயுவும்

Vayu Deva
மருத்துகள்
மருத்துகள் என்பது ஒரு தெய்வக் கூட்டம். இதில் மொத்தம் 49 பேர் — ஏழு ஏழு பேர் கொண்ட ஏழு குழுக்கள்- இருப்பதாக ரிக் 5.52.17 கூறுகிறது. இவர்களது எண்ணிக்கை த்ரிஷஷ்டி என்று ரிக் 8.96.8 கூறுகிறது. இதன் நேர்ப் பொருள் 3X60=180 ஆனால் சாயணர் இதை 3+60= 63 என்று பொருள் கொள்கிறார். மொத்தத்தில் இவர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் என்பது அறியப்படுகிறது.

இவர்களது தந்தை ருத்ரன். தாயின் பெயர் ப்ருச்னி. இதற்குப் புள்ளிகள் கொண்டவள் என்று பொருள். இது ஒரு பசு என்று கூறும் குறிப்புகள் உள்ளன.

இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையர். இவர்களில் மூத்தவர் இளையவர் என்று எவரையும் கூற முடியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. இவர்கள் இளைஞர்கள், களைப்பு அறியாதவர்கள். ரிஷபம் போலக் கொம்புகளையும், சூரியன் போலக் கண்களையும், குதிரை போல அழகிய தோற்றத்தையும், மாப்பிள்ளை போலக் கம்பீரத்தையும் கொண்டவர்கள்.

இவர்கள் விண்ணில் வாழ்பவர்கள். இவர்களது வாகனம் கிலாஸ்ய, அதாவது, வெண்புள்ளிகள் கொண்ட மான். அது ப்ருஷத் அச்வா (புள்ளிகளுள்ள குதிரை) என்றும் அழைக்கப்படுகிறது.

காட்டைக் கலக்கி, மலையைப் பிளக்க வல்ல இவர்களின் உதவியோடுதான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நதிகளை விடுவித்தார். வலிமையானவர்களும் விரைந்து செல்பவர்களுமான இவர்களை மலைகளோ நதிகளோ தடுக்க முடியாது. விண்ணையும் மண்ணையும் நடுங்க வைப்பவர்கள்.மருத்துகளால் உதவப்பட்டோரை எவரும் வீழ்த்த முடியாது. இவர்கள் இந்திரனின் படை வீரர்கள். இந்திரனுக்கு அவருடைய அருஞ் செயல்களில் உதவியதால்தான் இவர்கள் யக்ஞியமான பெயர்களைப்  (தேவத் தன்மை) பெற்றார்கள் என்கிறது வேதம்.

உரத்த குரலில் பாடுபவர்கள், மழையின் சோதரர்கள், வர்ஷ நிர்ணிஜ (மழையை உடையாகத் தரித்தவர்கள்), மேகத்தை விடுவிக்கிறவர்கள், மறைந்த செல்வத்தை வெளிப்படுத்துபவர்கள், தெய்வீக செல்வத்தைக் கீழே இறக்கித் தருபவர்கள், மூவுலகிலும் நதிகளின் சுழல்களிலும் இருப்பவர்கள் என்று கூறப்படுவதிலிருந்து மருத்துகள் என்பது புயற் காற்றைக் குறிக்கும் என அறிகிறோம்.

புயற் காற்று கண்ணுக்குத் தெரியாது என்றாலும் இவர்கள் கண்ணுக்குத் தெரிகின்றவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தங்க ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள், தங்க ரதத்தில் செல்கிறார்கள், தங்க நகை அணிந்துள்ளார்கள். ஒளி உடை தரித்தவர்கள். இவர்கள் செல்லுமிடத்தில் எல்லாம் ஒரு ஒளி பின் தொடர்கிறது. மின்னலை ஆயுதமாக உடையவர்கள் என்ற வர்ணனைகள் அவர்கள் புகழ் ஒளி பெற்றவர்கள் என்பதையே குறிப்பிடுகிறது.

தெய்வ பூஜையில் ராட்சசர்களை அழைக்கும் மனிதர்களைச் சக்கரமில்லாத தேரில் வைத்துக் கீழே தள்ளுவது இவர்களது திறமை. இவர்கள் பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களிடம் வருகிறார்கள், அவர்கள் அளிக்கும் உணவை ஏற்று மகிழ்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக செல்வம், மக்கட்பேறு, உணவு, நீண்ட ஆயுள் முதலியன கொடுத்து அருள் புரிகிறார்கள். மக்களைக் காப்பாற்றுகிறார்கள். ஸுதானவ: (மிகுதியாகத் தானம் கொடுப்பவர்கள்) என்ற அடைமொழி இவர்களுக்குப் பல முறை அளிக்கப்படுகிறது.

எல்லாத் தேவர்களுக்கும் வழங்கப்படும் அடைமொழிகளான  கவி, அறிவாளி, நர, ருதாவ்ருத, ஸ்வதாவின் படி நடப்பவர்கள், சூரி என்பவை இவர்களுக்கும் கொடுக்கப்- பட்டுள்ளன.

வழிபாட்டுக்கு உரிய பெருமை உடையவர்கள் என்பதால் யஜத என்று சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்திரனையும் வருணனையும் வர்ணித்தது போல் இவர்களையும் சூரியன் பயணிக்க ஒரு ஒளிமயமான பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் என்று கூறி பரம்பொருளாகவே காண்கிறார்கள். 8.7.8

வாயு
மருத் என்பது மழை தரும் காற்றையும் வாயு என்பது சாதாரணக் காற்றையும் குறிப்பிடுகின்றன. மருத்துகள் பற்றி விரிவாகப் புகழும் வேதம் வாயுவுக்கு அவ்வளவு சிறப்பிடம் தரவில்லை.

மற்ற தேவர்களைப் போல வாயுவும் அசுரர், மயோபு மகிழ்ச்சி தருபவர், த்ரவிணோதா செல்வம் கொடுப்பவர், நரர் என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்-படுகிறார். வாயுவின் தனித்தன்மைகளாவன- இவர் ப்ருஷத் யோனி (பல நிறமுள்ள ஆகாயத்தில் தோன்றியவர்). பஞ்சஹோதா (ஐந்து வகையான வாயுக்களையும் அழைப்பவர்). அதூர்த்த பந்தா (தடைபடாத வழியை உடைவர்). சோமபானம் வடிக்கப்பட்டால் அதை முதலில் பருகும் உரிமை வாயுவுக்கே உள்ளது.

வாயு பூஷனுடன் சேர்ந்து பிரார்த்தனைகளைத் தூண்டுகிறார். இவருடைய குதிரைகளின் பெயர் நியுத். குளிர்ந்த இடத்திலிருந்து வெப்பமாக உள்ள இடத்தை நோக்கி வீசுவது வாயுவின் இயல்பு. அதை ரிஷி, வறுமை உள்ள இடத்துக்கு செல்வம் கொடுக்கப் போகிறார்  என்று வர்ணிக்கிறார்.

 

 

படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா – http://upload.wikimedia.org/wikipedia/commons/1/19/Vayu_Deva.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

23.அச்வின்கள்

Ashvin-Twins

அச்வின்கள் எனப்படுவோர் இருவர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயரோ தனித் தன்மையோ கிடையாது. ஒரு பறவையின் இரு இறக்கைகள் போல இருப்பவர்கள் என்று சொல்லப்படும் அவர்கள், எப்பொழுதும் சேர்த்தே பேசப்படுகிறார்கள். இவர்கள் வேறு வேறு வகையில் பிறந்தவர்கள் என்கிறது ரிக் (5.73.4). பிறந்தது வேறு வேறு வகையானாலும் செயல் திறமையினால் ஒன்றானவர்கள் என அறியலாம்.

இவர்கள் யார்? நிருக்தக்காரர் கூறுவது போல  விண்ணும் மண்ணுமா, இரவும் பகலுமா, சூரிய சந்திரர்களா, இதிஹாஸக் காரர்கள் கூறுவது போல, இரண்டு நேர்மையான இளவரசர்களா, சாயணர் சொல்வது போல இந்திரன் அக்னியா – ரிக் மந்திரங்களிலிருந்து இதை அறிய முடியவில்லை.

இவர்களுக்கு நாஸத்யா என்ற பெயரும் உண்டு. இதற்கு ந அஸத்யா என்று பிரித்து பொய்யில்லாதவர்கள் என்று ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாஸத்ய என்பது நாஸிகா ப்ரபவ- (மூக்கில் தோன்றியவர்கள்), அதாவது மூச்சுக் காற்று என்ற கருத்தும் உண்டு (8.5.23க்கு சாயணர் உரை).

அஹர்விதா (பகலை அறிந்தவர்கள்) என்று போற்றப்படும் இவர்களுடைய தேரில் சூர்யா (சூரியனின் மகள்) விரும்பி ஏறுகிறாள் என்றும், இவர்கள் உஷஸுடனும் சூர்யனுடனும் சேர்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுவதால் இவர்கள் ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது அறியப்படுகிறது.  இவர்களது செயல் திறமைகளைப் பார்த்தால் இதிகாசக்காரர்கள் சொல்வது போல, பரோபகார சிந்தையுள்ள, திறமையுள்ள இரு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.

மற்ற தேவர்களைப் போல அச்வின்களும் நரா (மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அச்வின்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதருடன் பழமையான தோழமை கொண்டவர்கள் என்றும் மனிதருடன் பொதுவான மூதாதையர் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மனிதராக இருந்து  தங்கள் அருஞ் செயல்களால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (4.44.2).

அச்வின்களின் சாதனைகள் பல. அவர்களால் உதவப்பட்டோரின் பட்டியல் நீளமானது, இது ஆங்காங்குப் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேவருக்கும் உதவி பெற்றோர் பட்டியல் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவில்லை.

Guru_Bhakat_Upamanyuமீட்பு – ரேபன் மற்றும் வந்தனன் ஆகியோரைக் கிணற்றிலிருந்து மீட்டனர். அத்ரி என்பவரைக் குகையிலிருந்து மீட்டனர், அவரது உடல் வெப்பத்தைக் குறைத்தனர். புஜ்யு என்பவரைக் கடலிலிருந்து மீட்டனர். விச்வகனுக்குக் காணாமல் போன மகன் விஷ்ணாபுவை மீட்டுக் கொடுத்தனர். வர்த்திக என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து மீட்டனர். ஜாஹுஷன் என்பவர் எதிரிகளிடம் சிக்கியபோது அவரைக் கடத்திக் கொண்டு வந்து மீட்டனர். ஆழத்தில் மூழ்க இருந்த அந்தகனைக் காப்பாற்றினர். த்ரிசோகன் என்பவரின் களவு போன மாடுகளை மீட்டுத் தந்தனர். குதிரையை இழந்த ப்ருதிக்கு அதை மீட்டுக் கொடுத்தனர்.

பொறியியல்- தாகத்தால் வருந்திய கோதமருக்குக் கிணறு ஒன்றைச் சீரமைத்துக் கொடுத்தனர். சரன் என்பவருடைய கிணற்றில் நீர் மட்டம் உயரச் செய்தனர்.  வணிகன் தீர்க்கச்ரவஸுக்கு இனிய நீர் கிடைக்கச் செய்தனர். வறண்ட ஆற்றில் மீண்டும் நீர் பெருகச் செய்தனர். சுசந்தி என்பவருக்கும் அத்ரிக்கும் வீடு அமைத்துக் கொடுத்தனர்.

மருத்துவம்- இவர்கள் சிறந்த மருத்துவர்கள். தண்ணீரிலும், செடிகளிலும், மரங்களிலும் உள்ள மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள், கர்ப்பத்தைத் தாங்குகிறார்கள் என்கிறது வேதம். கண்வருக்குக் கண் பார்வை தந்தனர். தந்தையால் கண் குருடாக்கப்பட்ட ரிஜ்ராச்வன் என்பவருக்குக் கண் பார்வை தந்தனர். ச்யாவன் என்பவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டார். இவர்கள் அவரை மீண்டும் நல்ல நிலைமைக்குக்  கொண்டு வந்தனர். கால் வெட்டுப்பட்ட விச்பலா என்ற பெண்ணுக்கு இரும்புக்கால் அமைத்துக் கொடுத்தனர்,  காலில்லாத பராவ்ரஜனை நடக்க வைத்தனர். ச்யவனரின் பழைய தோலைக் கவசம் போல் கழற்றிவிட்டுப் புதிய தோல் வளரச்செய்து, மீண்டும் இளமையாக்கினர். ருதுஸ்துபருக்கு சத்துணவு தந்தனர். மிகுதியாகக் குடித்த வம்ரனை அவனது நோயிலிருந்து மீட்டனர். தத்யங் என்பவருக்குக் குதிரைத் தலை அமைத்துக் கொடுத்து அவரிடமிருந்து த்வஷ்டாவின் வித்தையைக் கற்றனர்.

வத்ரிமதியின் கணவனுக்கு வைத்தியம் செய்து பிள்ளை பாக்கியம் ஏற்படுத்திக் கொடுத்தனர், ச்யாவன் என்பவருக்கு நோயை நீக்கி மனைவி கிடைக்கச் செய்தனர். கோஷா என்பவள் வயதாகியும், நோயின் காரணமாகத் திருமணம் ஆகாமல் தந்தை வீட்டில் இருந்த போது அவளது நோயை நீக்கி திருமணம் நடக்கச் செய்தனர். மனைவியை அடைந்த கலி என்பவர் இளமையாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்பட்டார்.

அச்வின்களின் மருத்துவம் மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் பயன்பட்டது. ஷயு என்பவரின் மரத்துப் போன பசு மீண்டும் பால் கொடுக்க வைத்தனர். தேனீக்கள் இனிய தேன் தரச் செய்தனர்,  இவை இவர்களது மருத்துவ சாதனைகள்.

பிற உதவிகள்- விமதன் என்பவர் புருமித்ரனின் மகளை மணந்து கொள்ள உதவினர். பேது என்பவருக்கு வெள்ளைக் குதிரை ஒன்றைத் தந்து அவர் வெற்றி பெற உதவினர். கக்ஷிவான் என்பவருக்காகத் தங்களது குதிரைக் குளம்பிலிருந்து 100 ஜாடி மது பெருகச் செய்தனர். வசன் என்பவர் தினமும் நிறைய செல்வம் பெற வழி செய்தனர். ஸுதாஸன், திவோதாஸன் என்போருக்கு செல்வ உதவி செய்தனர்.

போர்- சர்யாதன், புருகுத்ஸர், க்ருசானு, பத்தர்வா ஆகியோருக்குப் போர்க்களத்தில் வெற்றி பெற உதவினர்.

அத்ரிகு, பக்தன், பப்ரு, உபஸ்துத, கர்க்கந்து, குத்ஸர், ச்ருதர்யன், மேதாதிதி, வசன், தசவ்ரஜன், சிஞ்ஜாரன்,   துர்வீதி, தபீதி, த்வஸந்தி,  ப்ரியமேத, பரத்வாஜன், ப்ருச்னிகு, மந்தாதா, வய்யன், ச்யூமரச்மி என்போரும் இவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களில் அடங்குவர். இவை எத்தகைய உதவிகள் என்பது குறிப்பிடப்படவில்லை.

குதிரை இல்லாத தேர் ஓட்டினர். சூரியனை வலம்வந்தனர். பஞ்சம், நோய் இவற்றை நீக்கினர். மனுவுக்கு உணவு தந்தனர் (விவசாய முறையைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறார் சாயணர்). கிணறு தோண்டினர், மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில் மயோபூ, சம்பு என அழைக்கப்படுகிறார்கள். மாத்வீ (இனிமையானவர்கள்), புரணா (போஷிப்பவர்கள்), ஸுப்ரணீதி (நல்ல வழி காட்டுபவர்கள்) என்ற சிறப்புகளும் இவர்களுக்கு உண்டு.

பிரார்த்தனை செய்தால் இவர்கள் உதவிக்கு வருவார்கள். மனோ வேகத்தில் வருகிறார்கள் (மனோஜுவா). வேதம் இவர்களை விட இவர்களது ரதத்தைத்தான் வெகுவாகப் புகழ்கிறது. அது க்ருதவர்த்தனி (நீர் வழியிலும் போகக்கூடியது), ஹிரண்யவர்த்தனீ (ஒளியுள்ள பாதையை உடையது), மூன்று தூண், மூன்று சக்கரம் கொண்டது, முக்கோண வடிவம் உடையது. எளிதில் இயங்குவது. மனத்தினால் பூட்டப்படும் குதிரைகளைக் கொண்டது (மனோயுஜாச்வாஸா). இது ரிபுக்களால் உருவாக்கப்பட்டது.

மழையும் வலிமையும் ஒளியும் இவர்களது செல்வமாகக் கூறப்படுகிறது. அதை ஒட்டி இவர்களுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள்- வ்ருஷண்வஸு, வாஜினீவஸு, ஸூர்யாவஸு.

மற்ற தேவர்களுடன் இவர்களது உறவு சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்திரனோடு சவாரி செய்பவர்கள், வாயுவுடன் வாசம் செய்பவர்கள், ரிபுக்களுடனும் ஆதித்யர்களுடனும் மகிழ்பவர்கள், விஷ்ணுவுடன் பயணம் செய்பவர் என்று கூறப்படுகிறது. உஷாவுக்கு முன் வருபவர்கள் என்றும் சூரியனைத் தன் தேரில் சுமந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

தேவர்கள் தனி்த்தனியாகப் போற்றப்பட்டாலும் ரிஷிகளின் ஒரு மன நிலையில் இந்த வேறுபாடு மறைந்து போகிறது. அதன்படி அச்வின்களும் மருத்துகளைப் போல ருத்ரனின் மக்களாகக் கூறப்படுகிறார்கள்.

மற்ற தேவர்களைப் போல இவர்களும் ருதத்தை அனுசரிப்பவர்கள், ருதத்தைக் காப்பவர்கள். உஷஸைப் போல, இந்திரனைப் போல அச்வினின் குதிரைகளும் ருதத்தால் பூட்டப்பட்டவை. இவர்களும் வ்ருத்ரஹந்தமா (விருத்திரனைக் கொல்வதில் சிற்தவர்கள்).

எல்லா வேள்விகளிலும் அச்வின்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இவர்கள் காலையில் பிழிந்து எடுக்கப்படும் ஸோம பானத்திற்கு உரியவர்களாகக் கூறப்-படுகிறார்கள். வேறு எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4)  என்பது மற்ற தேவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு. அச்வின்கள் தாஸர்களின் உணவை அனுபவிக்கிறார்கள் (8.5.31) என்பதால் இவர்கள் எல்லோருக்கும் இனியவர்கள் என்பது தெரிகிறது.

 

 

 

 

 

 

படம் உதவி: http://totreat.blogspot.com/2012/10/ashvins-ayurveda-flying-doctor-family.html



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

24.யமனும் பித்ருக்களும்

 

Yama_deva

ரிக் வேதத்தின் முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் காலத்தால் பிற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாகப் படிப்பவர்களுக்கே தெரியும் அளவுக்கு இவ்விரு மண்டலங்களும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகளில் ஒன்று யமன் மற்றும் பித்ருக்கள் பற்றிய தகவல்கள்.

இரண்டு முதல் ஒன்பது வரையிலான பழைய மண்டலங்களில் ரிஷிகளின் கவிதைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. அவர்கள் வாழ்க்கையின் துன்பங்களைப் பிரச்சினையாகக் கருதவில்லை. இயற்கையைக் கண்டு வியந்தனர், குதூகலித்தனர். இவற்றையெல்லாம் படைத்த அவன் ஒரு திறமையான கலைஞனாகத்தான் இருக்க வேண்டும் என இறைவனைப் போற்றினர். இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழத் தேவையான பசுச் செல்வம், குதிரைகள், குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள் மற்றும் அமரத்துவம் பெறவேண்டும் என்று தேவர்களை வேண்டினர். ஆனால், மரணத்துக்குப் பின் என்ன என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லை.

முதலாவது பத்தாவது மண்டலங்களில் அவர்கள் இந்த உலகைத் தாண்டி, இந்த வாழ்க்கையைக் கடந்து பிறகு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினது தெரிகிறது.

யம என்ற சொல் பழைய மண்டலங்களிலும் காணப்படுகிறது. கட்டுப்படுத்து என்ற பொருளில் வினைச் சொல்லாக மட்டுமே அது வருகிறது. ஒரு தெய்வத்தின் பெயராக அது பயன்படுத்தப் படுவது முதலாவது பத்தாவது மண்டலங்களில் மட்டுமே.

உயிர் எங்கே போயிற்று?
தனது அன்பிற்குரியவர் இறக்கும் போது ரிஷி வருந்துகிறார். இவருடைய உயிர் எங்கே போயிற்று எனச் சிந்திக்கிறார். சூரியனிடம் போயிருக்குமா, காற்றில் கலந்திருக்குமா, தாவரங்களோடு ஐக்கியமாகி இருக்குமா எனப் பலவகையாக யோசிக்கிறார். அவர் பூமிக்குள் மறைந்து வாழ்கிறாரா, விண்ணில் உள்ள தெய்வங்களோடு சேர்ந்து வாழ்கிறாரா என நினைக்கிறார். உயிர் மீண்டும் அந்த உடம்பில் வந்து குடியேறும் என்று கூட எதிர்பார்க்கிறார்.

இயங்கிக் கொண்டிருந்த உடலின் இயக்கம் நின்று போனதுக்குக் காரணம் உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறிவிட்டதுதான் என நினைக்கிறார்கள். அந்த ஒன்று ஆத்மா என்றும் அஸு என்றும் மனஸ் எனவும் பல வகையாக அழைக்கப்பட்டது.

10.58 இல் ரிஷி சுருதபந்து இறந்தவரின் மனஸைக் கூவி அழைக்கிறார். யமனின் இடத்துக்குப் போயிருக்கிறாயா, பூமியின் நான்கு மூலைகளுக்கும் போய் விட்டாயா, பிரகாசிக்கின்ற வெளிச்சத்தில் மறைந்து விட்டாயா, அலைகடலில் அடங்கிவிட்டாயா, நீரில் நிலைத்து விட்டாயா, தாவரங்களில் தங்கி விட்டாயா, மலைகளின் உயரத்தில் மறைந்துவிட்டாயா, தொலைவில் சூரியனுக்கு அருகில் சென்று விட்டாயா? எங்கிருந்தாலும் இங்கே வா, வாழ்வதற்காக உன்னை நாங்கள் அழைக்கிறோம் என்று பாடுகிறார். முடிவாக, உன் மனஸ் எங்கள் அறிவுக்கெட்டாத இடத்தில், அசைகின்ற எல்லாவற்றிலும், கடந்த காலத்திலும், வருங்காலத்திலும்  அடங்கிவிட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்.

யமன்:
பலவாறாக யோசித்த பின், ஏதோ ஒரு தெய்வம் மரணத்துக்குப் பின் உயிரைப் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்று முடிவு கட்டுகிறார்கள். அந்தத் தெய்வம் எது என்று சிந்திக்கும் போது பூஷன், வாயு, சவிதா, ஸரஸ்வதி என்று பல பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வருகின்றன.

பூஷன் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அவர் எல்லாம் அறிந்தவர். அவர் உன்னைப் பித்ருக்களுடன் சேர்க்கட்டும் (10.17.3).

வாயு உன்னைக் காப்பாற்றட்டும். தொலைவிலுள்ள அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும். ஸவிதா உன்னைப் பிதிரர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும் (10.17.4).

பித்ருக்களுடன் ஒரே ரதத்தில் செல்கின்ற ஸரஸ்வதி இன்று நம்மிடையே வந்து மகிழட்டும், உணவு தரட்டும் (10.17.8).

இப்படிப் பல தேவர்களையும் பித்ருக்களின் பொறுப்பாளர்களாகப் பரிசீலித்த பின் இறுதியாக யமன்தான் அந்த வேலையைச் செய்பவர் என்று தீர்மானிக்கிறார்கள். நிர்ருதி, அஸுநீதி என்ற பெயர்களும் யமனுக்குச் சில இடங்களில் அளிக்கப்படுகின்றன.

வருணனின் பரிணாம வளர்ச்சிதான் யமன் என்று கருத இடம் உள்ளது. ஒரு மந்திரத்தில் யமன் வருணன் இருவரும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்கள்.

செல்லுங்கள், நமது முன்னோர்கள் எங்கே சென்றார்களோ, அங்கே செல்லுங்கள். அங்கே, யமன் வருணன் ஆகிய இரு ராஜாக்களும் மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணுங்கள் (10.14.7).

வருணனின் ஆயுதமாக இருந்த பாசம் பிற்காலத்தில் யமனுக்கு உரியதாக ஆயிற்று. வேதத்தில் வருணன் மானிடர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துபவராகவும்(கடிவாளம் போல மானிடர்களை இயக்குகிறார் 6.67.1), தவறுகளுக்குத் தண்டனை தருபவராகவும் கூறப்படுகிறார். யமன் என்ற சொல்லும் நெறிப்படுத்துபவர் என்ற அதே பொருள் உடையது.

யமன் உயிரைக் கவர்பவராக ரிக் சொல்லவில்லை, ஆனாலும் யமனுக்கும் நம் மரணத்துக்கும் ஏதோ தொடர்பு உள்து என்றும் உணர்கிறார்கள்.

அவர்தான் முதன் முதலாக, இறந்தவர் செல்வதற்கான ஓரிடத்தை ஏற்படுத்தினார் என்றும் அங்கு அவர் அங்கிரஸ்கள் என்ற பழமையான பித்ருக்களுடன் மகிழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யமன் விரும்பும் வரைதான் நாம் உயிர் வாழ முடியும். எனவே யமனுக்கு சோமமும் யக்ஞமும் அளித்து மகிழ்விக்கிறார்கள்.

யமனின் இருப்பிடம் செல்லும் வழியில் இரண்டு நாய்கள் இருப்பதாகவும் அவை அங்கு வாழ்வோரைக் காவல் காப்பதாகவும், புதிதாக இறந்தவர்களை அந்த நாயிடம் யமன் ஒப்படைப்பதாகவும்  சொல்லப்படுகிறது. அவை பெரும் பலம் உடையன, உயிர்களை வேட்டையாடுவதில் திருப்தி அடைவன, நீண்ட மூக்கு உடையன. அவை உயிர் வாழ்வோரைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

வேதகால ரிஷிகளுக்கு புறா ஒரு கெட்ட சகுனமாகத் தெரிகிறது. அது யமனின் தூதனாகப் பார்க்கப்படுகிறது.

பித்ருக்கள்:
பித்ருக்கள் என்போர் யார்? பழைய மண்டலங்களைப் பொறுத்தவரை, அங்கிரஸ், ப்ருகு, அதர்வான், மனு ஆகிய மனிதர் குல முன்னோடிகள்தான் பித்ருக்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவர்களில் மனுதான் மனித குலத்தின் முதல் தந்தை. அங்கிரஸ் என்பவர் மறைபொருளாக இருந்த ஞான ஒளியைக் கண்டறிந்தவர். ப்ருகு அக்னியைக் கண்டறிந்தவர். அதர்வான் தேவர்களுக்கு அக்னி மூலம் ஆகுதி அளித்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். இவர்கள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்களாயினர்.

வளர்ச்சியா, தேய்வா?
மற்ற மண்டலங்களில் நன்மை செய்வோர் மட்டுமே தேவர்களாகக் கருதி வணங்கப்படுகின்றனர். தேவர்களை மக்கள் அன்போடு நேசிக்கிறார்கள், வரச் சொல்லி அழைக்கிறார்கள். தீமை செய்பவர்கள் யாதுதானர், நிர்ருதி, ராட்சசர் என்று அழைக்கப்பட்டு இகழப்படுகிறார்கள். பத்தாவது மண்டலத்தில் நமக்கு மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யும் யமன் தேவனாகக் கருதப்படுகிறார். அவரிடம் பயந்து கொண்டு மரியாதை செய்கிறார்கள். இங்கே வராதே, குழந்தைகளைத் தொடாதே என்று அவர் வேண்டப்படுகிறார்.

முந்தின மண்டலங்களில், அமரத்துவத்தை அடைந்து தேவர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் மனித வாழ்வின் லட்சியம் என்பது பல வகையாலும் வற்புறுத்தப்-படுகிறது. சந்ததி விருத்தி மூலமும், சோம பானத்தை அருந்துவது மூலமும் அமரத்துவத்தை அடையலாம் என்றாலும் நிலையான அமரத்துவத்தை கடுமையான உழைப்பின் மூலம், சாதனைகள் மூலம்தான் அடைய முடியும் என்று சொல்லப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ரிபுக்களின் வரலாறு கூறப்பட்டது. அங்கிரஸ்கள் கூட உழைப்பாலும், நற்செயல்களாலும் பணி எனப்பட்ட பகைவர்களை வென்று இறையருளைப் பெற்றதாகவும் அமரத்துவம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பத்தாவது மண்டலத்தில், இறந்தவர் அனைவரும் ஒளி உடல் பெற்று  பித்ருக்களாகி விடுகிறார்கள், தேவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற கருத்து காணப்படுகிறது. ஒருவன் இறப்பதன் மூலமே பித்ரு ஆகி விடுகிறான், தேவர்களோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறான், சோம பானத்துக்கும் யக்ஞ ஆகுதிகளுக்கும் உரியவன் ஆகிவிடுகிறான் என்ற இக் கருத்து முந்திய காலத்தின் உயர்ந்த லட்சியத்தை நீர்க்கச் செய்தது போல உள்ளது.

யமன் பற்றியும் பித்ருக்கள் பற்றியுமான இக் கருத்துகள் வேத சமயத்தின்  மையக் கருத்தின் உற்சாகத்திற்கு முரணாக உள்ளன.

அதே நேரத்தில், சமய சிந்தனை வேறு ஒரு திசையில் வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். உயிர் போன உடலை எரித்த பின்னும் அதில் ஏதோ ஒன்று மீதம் இருக்கிறது, அது நிலையானது என்ற கருத்து புதிதாக ஏற்படுகிறது.

அக்னியே, அவனை எரித்த பின் அவனுடைய உடலில் மீதம் இருப்பது புதிய உடலையும் ஆயுளையும் பெற்று பித்ருக்களிடம் செல்லட்டும். (10.16.5)

எரித்த பின் என்ன மீதம் இருக்கும்? சாம்பல் இங்கேயேதான் இருக்கிறது, பித்ரு லோகத்திற்குச் செல்வதில்லை. தீயினால் பாதிக்கப்படாத ஒன்று உடலில் உயிர் போன பிறகும் இருக்கிறது என்ற இந்தக் கருத்து பிற்காலத்தில் வளர்ந்து, நீரால் நெருப்பால் பாதிக்கப்படாத, என்றும் நிலையாக உள்ள ஆத்மா என்று அழைக்கப்பட்டது. உபநிடதங்களின் ஆத்மா பற்றிய கருத்துகளுக்கு விதை இங்குதான் இருக்கிறது. (ஸம்ஹிதையில் ஆத்மா, அஸு, மனஸ் என்ற மூன்று சொற்களும் உயிரைக் குறிப்பன. உபநிடதங்களில் ஆத்மா என்பது உயிர் அல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாக உள்ளது.)

பித்ரு லோகம்:
பித்ரு லோகம் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உயரத்தில் உள்ள ஒரு இடம். அங்கு யமன்தான் முதன் முதலில் சென்றார். அங்கு அங்கிரஸ்களுடன் மகிழ்ந்து இருக்கிறார். மனிதர்களை அங்கு ஒன்று சேர்க்கிறார். அந்த இடத்திற்கு வழி காட்டி அழைத்துச் செல்கிறார். இறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து பித்ருக்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து வாழச் செய்கிறார். இறந்தவர் அந்த இடத்தை  அடையும் முன், ஒளிமயமான ஒரு புதிய சரீரத்தை அடைகிறார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

பித்ரு லோகத்தை அடைந்தவன் பித்ருவாகவே ஆகிவிடுகிறான். பித்ருக்கள் ஒளியில் வசிக்கிறார்கள். அவர்கள் உண்மை பேசுபவர்கள். தேவர்களுடன் பயணம் செய்பவர்கள். தேவர்களைப் போல தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோம பானம் செய்கிறார்கள். யக்ஞங்களை ஏற்று மகிழ்கிறார்கள்.  தேவர்களுக்கு உணவு எடுத்துச் செல்வது போல, அக்னி பித்ருக்களுக்கும் உணவு எடுத்துச் செல்கிறார். பித்ருக்கள் மக்களுக்கு சந்ததியும் செல்வமும் அருள வல்லவர்கள். தவறு செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள்.  வேண்டினால் மன்னிப்பார்கள். தேவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பித்ருக்கள் தேவர்களாவதில்லை. அவர்களின் இடத்துக்குச் செல்லும் பாதை தேவர்களின் பாதையிலிருந்து வேறானது என்று சொல்லப்படுகிறது(10.18.1). இவர்களோடு யமனும் நாம் அளிக்கும் ஹவிஸ்களை ஏற்றுக் கொள்கிறார்.

பூமியில் பிறந்த மனிதர்கள் அவரவரும் தங்கள் தங்கள் வழியில் செல்கின்றனர். எந்த வழியில் போனாலும் முடிவில் முன்னோர்கள் எங்கு சென்றார்களோ அங்குதான் அந்தப் பாதைகள் அழைத்துச் செல்கின்றன (10.14.2).

இந்த மேய்ச்சல் நிலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட முடியாதது என்கிறார் ரிஷி. அதாவது எல்லோரும் இந்த இடத்திற்கு உரிமை உடையவர்கள், எல்லோரும் அங்கு சென்றுதான் ஆகவேண்டும்.

கீழானவர்கள், மேலானவர்கள், இடைப்பட்டவர்கள் ஆகிய பித்ருக்கள் சோம பானத்துக்கு உரிமை உடைவர்கள். உயிர் நீத்தலை அடைந்த, மென்மையான, நேர்மையான அவர்கள் எங்கள் அழைப்புக்கு இணங்கி எங்களைக் காப்பாற்றட்டும் (10.15.1).

இறந்த உடல்களுக்கு ஸம்ஸ்காரம்:
உடல்களை எரிப்பது வழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். அந்த இடத்தில் மீண்டும் புல் முளைக்க வேண்டும் என்று அக்னியிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது (10.16.13).

இறந்த உடன் உடலை எரிக்காமல் ஓரிரு நாட்கள் திறந்த வெளியில் வைத்திருந்து பின்னர் எரிப்பதும் வழக்கில் இருந்திருக்கிறது. அதனால் நரி, கழுகு முதலியன வந்து உடலைச் சிதைப்பதும் நடந்திருப்பது அறியப்படுகிறது. மீண்டும் உயிர் வந்து உடலில் குடியேறும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

கறுப்புப் பறவையோ, எறும்போ, பாம்போ, நரியோ உடலில் என்ன காயம் ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விழுங்கும் அக்னி அதைச் சரி செய்யட்டும் (10.16.6).   

உடல் எரிக்கப்பட்டவுடன்,
கண்ணை சூரியன் எடுத்துக் கொள்கிறது, ஆத்மா காற்றால் எடுத்துச் செல்லப்பட்டு அதனதன் தர்மப்படி பூமிக்கோ ஆகாயத்துக்கோ, நீருக்கோ, தாவரங்களுக்கோ தன் எல்லா உறுப்புகளுடன் செல்கிறது (10.16.3).

இறந்த உடலைப் புதைப்பதும் சொல்லப்பட்டிருக்கிறது:
அக்னியில் இடப்பட்டாலும் இடப்படாவிட்டாலும் ஆகாயத்தின் மத்தியில் அவர்கள் மகிழட்டும். அவர்களுக்கான உடம்பும், செல்லும் பாதையும், அரசே, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்துங்கள் (10.15.14).

குழியில் உடலை வைத்தபின் அதன் மேல் மண்ணைத் தூவும்போது, இந்த மண் உடலைக் கனமாக அழுத்தாமல் குழந்தையை மூடும் தாயின் ஆடை போல மென்மையாக இருக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.

உடலை ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கல்லால் சுவர் போல் எழுப்பினார்கள். அதைத் தாண்டி யமன் வரக் கூடாது என்பது அவர்களது பிரார்த்தனை. அந்தச் சுவருக்கு வெளிப்புறம் இருப்பவர்கள் எந்தத் தீங்கும் வராமல்  நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

அந்த இடத்தில் நிற்காமல் சென்று விடுங்கள் என்று மக்கள் வேண்டப்படுகிறார்கள்.

இங்கிருந்து சென்று விடுங்கள். பல திசையிலும் பறந்து செல்லுங்கள். இது பித்ருக்கள் அவனுக்காக ஏற்படுத்திய இடம். யமன் அவனுக்காக நீரும் ஒளியும் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்.

இனிய உறவினனை இழந்த ஒருவனின் மன நிலையை அறிவிக்கும் கீழ்க்கண்ட மந்திரங்களைப் பாருங்கள்.

அக்னியே, அவனைச் சுட்டுவிடாதே. அவனுடைய உடம்பின் பாகங்களோ, தோலோ சிதறாமல் இருக்கட்டும். பக்குவப்படுத்தியபின் அவனைப் பித்ருக்களின் இடத்துக்குச் செல்லும் வழியில் அனுப்பி வைப்பாயாக (10.16.1).        

உன் உடலை அக்னி சுடாதிருக்கட்டும். நெய்யும் கொழுப்பும் உன் தேகத்தை மூடட்டும். உன்னைத் தாக்க வரும் அக்னியின் உக்ரம் உன்னைப் பாதிக்காது இருக்கட்டும் (10.16.7).

அக்னியே, உன் பங்குக்கான ஆட்டை உன் சுவாலைகள் எரிக்கட்டும். இந்த மனிதனை நல்ல செயல்கள் செய்தவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்க (10.16.4). மாமிசம் உண்ணும் அக்னி யமனுடைய உலகத்துக்குச் செல்லட்டும். தேவர்களுக்கு ஆகுதி அளிக்கும் இந்த அக்னி தன் வேலையைச் செய்யட்டும் (10.16.9).

விதவை ஆனவள் தவிர்த்த பிற பெண்கள் முதலில் வீட்டுக்குச் செல்லட்டும். அவர்கள் ஆடை ஆபரணங்களை அணிந்து துயரம் இல்லாமல் கணவனுடன் வாழட்டும் (10.18.7).

 இனி மேற்கொண்டு மரணம் ஏற்படாது, நாம் இனி சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாம். நீண்டகாலம் வாழலாம் என்று நம்புகிறார்கள், வேண்டுகிறார்கள் (10.18.3).



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

25.விஷ்ணுவும் ருத்ரனும்

 

sivavishnu

 

விஷ்ணு

 

vamanவேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.

விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.

இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.

மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)    

தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2)  விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.

விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.

எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.

 

ருத்ரன்

 

SHIVAரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.

ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.

மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.

மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.

அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.

எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.

ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின்  கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன.  பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

26.ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணஸ்பதியும்

Brihaspati

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பதே
ஆனச் ச்ருண்வன் ஊதிபிஸ் ஸீத ஸாதனம்.

இது விநாயகருக்கு உரியதாக தற்போது பயன்படுத்தப்படும் மந்திரம் (ரிக் 2.23.1.) இதில் கூறப்படும் பிரம்மணஸ்பதி யார், விநாயகரா அல்லது வேறு தெய்வமா?

இந்த சூக்தத்தில் 19 மந்திரங்கள் உள்ளன. அவற்றில் 13 ப்ருஹஸ்பதியைப் போற்றுகின்றன. இடை இடையே வரும் 6 பிரம்மணஸ்பதியைப் போற்றுகின்றன. இவர்கள் இருவரும் ஒன்றா, வேறு வேறா? வேறு வேறாயின் ஏன் ஒரே சூக்தத்தில் இவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும்?

ப்ருஹஸ்பதி என்ற சொல்லுக்கு பெரும் தலைவர் என்று பொருள். ப்ரம்மணஸ்பதி என்பது மந்திரத்தின் தலைவர் எனப் பொருள்படும்.

ரிக் வேதம் முழுவதும் பல வேறு இடங்களில் வரும் மந்திரங்களிலிருந்து இவர்களுடைய குணாதிசயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம். அறிவுள்ளவர், பகைவர்களை அழிப்பவர், பாவங்களைப் போக்குபவர், மக்களைக் காப்பவர், செல்வம் கொடுப்பவர் என்ற அடைமொழிகள் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இது எல்லாத் தேவர்களுக்கும் சொல்லப்படுவதுதான்.

தோத்திரங்களின் தலைவர் என்ற சிறப்பு இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம். ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணாம் ஜனிதா (ஸ்தோத்திரங்களின் தந்தை) எனப்படுகிறார். எனவே இருவரும் ஒன்று என்று ஆகிறது.

இந்தத் தெய்வம் இந்திரன்தான் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது. வலனைக் கொன்று பசுக்களை விடுவித்த சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது. வேறு ஒரு மந்திரத்தில் அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது. மேலும், வேறு ஒரு மந்திரத்தில், பூமியை நிலை நிறுத்தினார் என்ற இந்திரனின் சிறப்பு ப்ருஹஸ்பதியின் பெயரால் பேசப்படுகிறது.

ப்ரம்மண ராஜா (தோத்திரங்களின் ராஜா) என்ற பெயர் இந்திரனுக்குக் கொடுக்கப்படுகிறது. அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

எனவே ப்ருஹஸ்பதி என்பதும் பிரம்மணஸ்பதி என்பதும் இந்திரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்தான் என்று நாம் முடிவு கட்டும் வேளையில், ப்ருஹஸ்பதியும் இந்திரனும் இரு வேறு தெய்வங்கள் என்று கருதச் செய்யும் மந்திரமும் ஒன்று இருக்கிறது. ப்ருஹஸ்பதியும் இந்திரனும் ஆகிய நீங்கள் இருவரும் விண்ணின் செல்வத்திற்கும் மண்ணின் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறது ஒரு ரிக் (7.97.10).

அக்னிக்கே உரிய நீலப்ருஷ்ட (கரு நிற முதுகு உள்ளவர்) என்ற அடைமொழியால் ப்ருஹஸ்பதி அழைக்கப்படுகிறார்.

மொத்தத்தில் பெயர்கள் வேறு பட்டாலும், தனித் தனி தெய்வமாகப் போற்றப்பட்டாலும் எல்லாமே ஒன்றேயான ஸத்தான பரம்பொருளைத் தான் குறிக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன.

முதலில் குறிப்பிட்ட மந்திரத்தில் கணபதி (கூட்டத்தின் தலைவன்) என்ற சொல் இருப்பதால் அதை விநாயகருக்கு உரியதாகப் பிற்காலத்தில் ஆக்கினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

27.இதர தெய்வங்கள்

varuna
பிற்காலத்துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. அநந்த சக்தியை ஒரு ரிஷி பத்தினியாக்கிவிட்டார்கள். அதிதி என்பது எல்லையில்லாத பரமாத்ம சக்தி. – பாரதி
அதிதி:
அதிதி என்ற சொல் எல்லையற்றது என்று பொருள்படும். இது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிப்பது. பரம்பொருளின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. வேதத்தில் இது பல வகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தேவர்களின் தாயாகவும் சில இடங்களில் பூமியைக் குறிப்பதாகவும் அதிதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பூஷன்:
இவர் உண்மையில் தேவர் தானா அல்லது தேவப் பதவியை அடையும் நிலையில் உள்ள மனிதரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இவர் மனிதர்களை விட மேலானவராகவும், புகழில்  தேவர்களுக்குச் சமமானவராகவும் கூறப்படுகிறார்.(6.48.19) மற்ற தேவர்களைப் போல இவரும் ருதத்தை அனுசரிக்கிறார், ருதத்தின் ரதீ (தேரோட்டி) எனப்படுகிறார். ஸ்வதாவை அனுசரிக்கும் ஸ்வதாவா என்றும் போற்றப்படுகிறார். உணவு, பசுக்கள், குதிரைகள், ரயி என்னும் செல்வம் ஆகியன தருகிறார்.

சூரியனின் தூதராக வேலை செய்பவர் பூஷன். இவர் சூரியனின் ஒரு அம்சம் என்கின்றன புராணங்கள்.

செல்வத்தைக் காக்கிறார். களவு போன செல்வத்தை மீட்டுத் தருகிறார். கவிதையைத் தூண்டுகிறார். பாதைகளைக் காப்பவர். பணி எனப்படும் கஞ்சர்களின் இதயத்தில் நுழைந்து அதை மென்மையாக்கி  அவர்களைக் கொடையாளியாக மாற்றுகிறார். இவர் சோதிடம் சொல்பவர்களுக்குப் பிரியமான தெய்வம்.

இவரது வாகனம் ஆடு. இவருக்குப் பிடித்த உணவு யவை (பார்லி)யும் நெய்யும் சேர்ந்த கரம்பம்.

விண்ணும் மண்ணும்:
விண் ஒளியுடையது என்பதால் அதை த்யௌஸ் என்றும் அங்கு உலவும் ஒளிமயமான பொருள்களைத் தேவர்கள் (ஒளியுடையவர்கள்) என்றும் அழைத்தனர். விண்ணை அடைவதுதான், தானும் ஒரு தேவனாக ஆவதுதான் வாழ்வின் லட்சியம் என ரிஷிகள் நினைத்தனர்.

மண் மனிதரையும் பிற உயிர்களையும் தாங்குவது. உயிர் வாழத் தேவையான உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. இது மிக நீண்டது என்பதால் உர்வீ என்றும், மிக அகன்றது என்பதால் ப்ருத்வீ என்றும் அழைக்கப்பட்டது.

மழை பொழிந்து பயிர்கள் விளையக் காரணமாக இருப்பதால் விண்ணைத் தந்தை என்றும் உயிரினங்களை வளர்க்கும் பயிரினங்களை விளைவிப்பதால் மண்ணைத் தாய் என்றும் அழைத்தனர். விண்ணையும் மண்ணையும் சேர்த்து த்யாவா ப்ருத்வீ என்றும் ரோதஸீ என்ற பெயராலும் அழைத்து வேத ரிஷிகள் பல மந்திரங்களைப் பாடியுள்ளனர்.

ரோதஸீ உணவு தருகிறார்கள். தேவர்களைப் பெற்றுத் தந்தவர்கள் இவர்களே. அதனால் இவர்கள் தேவபுத்ரே எனப்படுகின்றனர். புகழ் உடையவர்கள். என்றும் குறைவு இல்லாதவர்கள் (அம்ருத்ரே), உயிர்களின் புகலிடம் (புவனானாம் அபிச்ரிய: ), நீர்வளம் உடையவர்கள் (க்ருதவதீ, பயஸ்வதீ, பூரிதாரா).

இவர்கள் வருணனின் தர்மத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மழை தருவது, ஒளி தருவது என விண்ணின் தர்மம் வேறு. மழையைப் பெற்று பயிர்களை விளைவிப்பது, உயிர்களைத் தாங்குவது என மண்ணின் தர்மம் வேறு. என்றாலும் இருவரும் இணைந்து செயல்படுவது ரிஷிகளுக்கு வியப்பை மூட்டும் ஒரு நிகழ்வு.

தர்மத்தை நிலைநாட்டும் தேவர்களைப் பிறப்பித்த இவர்களும் தர்மத்தை (ருதத்தை) அனுசரிப்பவர்கள் என்பதால் ருதத்தின் தாய்கள், ருதாவரீ, ருதஜாத ஸத்யே எனப்படுகின்றனர். உங்களுடைய ருதம் என்றும் ஸத்யமாக இருக்கட்டும் என்று வேண்டுகிறது ரிக் (3.54.3.)  இருவருமே இனிமை நிரம்பியவர்கள் என்பதால் ரிஷிகள் அவர்களை மதுச்சுதே, மதுதுகே, மதுவ்ரதே எனப் புகழ்கின்றனர்.

இவர்களை வேண்டினால் என்ன கிடைக்கும்? எல்லாத் தேவர்களிடமும் எவை வேண்டப்படுகின்றனவோ அந்த உணவு, புகழ், ஆயுள், மக்கட்பேறு, ரயி எனப்படும் ஆனந்தச் செல்வம் ஆகியவை கிடைக்கும்.

நீர்:
தெய்வம் நல்லதே செய்யும் என்பதும், நல்லது செய்யும் எல்லாமே தெய்வம் தான் என்பதும் வேதக் கொள்கை. அந்த அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் நீரைத் தெய்வமாக்கி நன்றியுடன் போற்றுகிறார்கள் ரிஷிகள்.

நீர் என்பதற்கான வேதச் சொல் ஆப:. இது எப்பொழுதும் பன்மையிலேயே பேசப்படும். நீர்த்துளிகள் என்று கொள்ளலாம். நீர் மனிதனை போர் நடக்கும்போதும் சமாதான காலத்திலும் காக்கிறது. மருத்துவர்களுக்குள்ளே சிறந்த இது தாய் போன்றது. நிற்கின்ற தாவரங்களுக்கும் நடக்கின்ற பிராணிகளுக்கும் இது தாயும் தந்தையுமாக உள்ளது. இது இந்திரனின் விரதங்களை மீறுவதில்லை. தன் போக்கில் ஓடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சூரியன் இதை ஆவியாக்குகிறார். இந்திரன் இது ஓடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறார்.

தண்ணீரின் வகைகளை வேதம் குறிப்பிடுகிறது. 1 விண்ணிலிருந்து பொழிவது, 2 நதிகளில் ஓடுவது, 3 வெட்டப்பட்ட கால்வாய்கள் மூலம் செல்வது, 4 பூமியிலிருந்து தானே பீறிட்டுக் கிளம்புவது என நான்கு வகை உண்டு.

நீரின் தலைவர் வருணன். வடவாக்னி என்ற வடிவத்தில் அக்னி நீருக்குள் நுழைந்து வாழ்கிறார்.

நீரைக் குறித்த ஒரு தோத்திரப் பகுதியின் மொழிபெயர்ப்பு இது (1.23.16 – 23). இதில் நீரின் நலம் செய்யும் தன்மையைத் தியானிக்கும் நிலையில் ரிஷி பரவச நிலை அடைந்து நீரைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவதை அறியலாம்.

யக்ஞம் செய்வோரின் பந்துக்களும் எங்களுடைய தாய்மார்களுமாகிய நீர் பசுவின் பாலை இனிமையாக்கிக் கொண்டு தன் வழியே செல்கிறது.

    சூரியன் அருகில் உள்ள நீரும் சூரியனோடு சேர்ந்துள்ள நீரும் எங்கள் வேள்விக்கு நலம் சேர்ப்பதாக.

    எங்கள் பசுக்கள் பருகும் நீரைப் போற்றுகிறேன். நீருக்கு ஹவிஸ் அளிக்கப்பட வேண்டும்.

    நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்கள் விரையட்டும்.

    நீரில் எல்லா மருந்துகளும் உள்ளன. உலகிற்கு நலம் செய்யும் அக்னியும் உள்ளது.

    நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காணுமாறு என் உடலில் எல்லா மருந்துகளையும் நிரப்புக.

    நீரே, என்னிடத்தில் என்ன குற்றம் இருந்தாலும், நான் என்ன துரோகம் செய்திருந்தாலும்,  என்ன பொய் சொல்லி இருந்தாலும் அவற்றை நீக்குக.

    நான் இன்று நீரில் நுழைந்துள்ளேன். நாங்கள் அதன் ரஸத்தோடு கலந்துள்ளோம். நீரிலுள்ள அக்னியே வா, என்னைத் திடப்படுத்து.

படம் உதவிக்கு நன்றி: http://www.cambodia-picturetour.com/banteay-srei-the-citadel-of-the-beauty/



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

28.குதிரையும் தெய்வமாகிறது

 

chariot-horse-british-museum-161

 

 

முதல் நிலையில், பெருஞ் செயல்களுக்குத் தேவையான சக்திகளும் தன்னலமில்லாத உழைப்பும் கொண்ட மனிதர் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அடுத்ததாக, நதி, சோமம், மேகம் போன்ற உயிரற்ற பொருட்களும் அவை மனிதர்க்கு உதவி செய்வதால் தேவத் தன்மை அளிக்கப்பட்டன. அவ்வாறே உதவியும் செய்து நல்வாழ்வுக்கு ஒரு உதாரணமாகவும் விளங்கும் மிருகமாகிய குதிரை தெய்வ நிலைக்கு உயர்ந்தது பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேதம் கூறும் சில அறிவுரைகள்:
1. உடலளவிலும் மனதளவிலும் எப்பொழுதும் வலிவுடையவனாக இரு.
2. இடையூறுகளைக் கண்டோ, எதிர்ப்புகளைக் கண்டோ அஞ்சாமல், அவற்றைத் தாண்டி இலக்கை அடையும் வரை போய்க்கொண்டே இரு.
3. சோம்பலைத் தவிர்.
4. செயல்பாட்டில் வேகம் காட்டு.
5. இடப்பட்ட கட்டுப்பாடுகளால் வேகம் குறையாதிரு. 
6. எஜமானனிடம் விசுவாசமாக இரு. எதிரிகள் கண்டு அஞ்சும்படியான நிலையில் இரு. 
7. நல்லோர் இணக்கம் நாடு. கீழோர் நட்பைத் தவிர்.

இவற்றைக் கடைப்பிடிப்பதால், மனிதர்க்குச் செல்வம், உணவு ஒளி சேருகிறது. துன்பங்களைக் கடக்கும் வலிமை கிடைக்கிறது என்று வேதம் கூறுகிறது.

இந்தப் பண்புகளைக் கொண்ட ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டால், நாம் அவற்றைப் பின்பற்றுவது எளிதாக இருக்கும் அல்லவா? அதற்காக வேதம் அடையாளம் காட்டுவது “ததிக்ரா” என்னும் குதிரையை.

உணவு தந்து உதவுபவை, தம்மையே உணவாகத் தருபவை, விவசாயத்தில் உதவுபவை, சுமை தூக்கி உதவுபவை என்று மனிதர்க்கு உதவும் மிருகங்கள் பல உண்டு. ஆனால் விவசாயத்திலும் உதவி, போர்க்களத்திலும் உதவி, தன் உயர் பண்புகள் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் மிருகம், சுமையைச் சுமந்து கொண்டே விரைந்து செல்லக் கூடிய மிருகம் ஒன்று உண்டென்றால் அது குதிரை மட்டும்தான். இது மனிதரின் நீண்ட நாள் நண்பன். இதன் பண்புகள் வியக்கத் தக்கன. ரிஷி வாமதேவ கௌதமர் அதை வியந்து பாடிய பாடல்களின் (ரிக் வேதம் 4 ஆம் மண்டலம், 38, 39, 40 வது சூக்தங்கள்) சுருக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

horseததிக்ரா எவ்வளவு அழகான பிராணி! அதன் மேனி பளபளக்கும் வண்ணமயமானது. அதனிடம் ஒரு ராஜ கம்பீரம் உள்ளது. அது நமக்குப் போர்க்களத்திலும் பயன்படுகிறது. விவசாயத்திலும் பயன்படுகிறது.
போர்க்களத்தில் அது அஞ்சுவதில்லை. வீரர்கள் உற்சாகத்தில் குதிப்பதைப் போல இதுவும் கால்களை உயரத் தூக்கி ஆரவாரிக்கிறது. அது ஓய்வை விரும்புவதில்லை. அதனால் சற்று நேரம் கூட சும்மா இருக்க முடியாது. அதைக் கட்டிப் போட்டு வைத்தால், கால்களால் புழுதியை வாரி தன் மேலேயே இறைத்துக் கொள்கிறது.
தன் எஜமானன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கிறது. ஆயிரம் பேர் உள்ள கூட்டமாக இருந்தாலும் ஒருவரும் அதைத் தடுக்க முடியாது. அதன் கனைப்பு இடி போல எதிரிகளுக்கு அச்சம் தருவதாக உள்ளது. போர்க் களத்திலிருந்து வெற்றியுடன் மற்றவர்கள் பின் தொடர அது திரும்பும்போது அதன் முகத்தில் தெரியும் கம்பீரமே தனி.
ரதத்தை விரைந்து இழுத்துச் செல்கிறது. வழி சந்து பொந்துகளாக இருந்தாலும், அவற்றினூடே புகுந்து புறப்பட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. சமவெளியில் சென்றால் கூட அது செல்லும் வேகத்தைப் பார்த்தால் மலைச் சரிவில் இறங்குவதைப் போலத் தோன்றுகிறது. அது வலிமை மிக்கது. அதன் வேகத்தைக் காற்றுக்கு ஒப்பிடலாமா? கழுகுக்கு ஒப்பிடலாமா?
கழுத்திலும், வாயிலும், பக்கங்களிலும் அதற்குப் பல கட்டுகளை இட்டாலும் அதன் வேகம் தடைபடுவதில்லை.
அது எப்பொழுதும் உயர்ந்தோருடனேயே பழகுகிறது. தாழ்ந்தோரை அது வெறுக்கிறது. அது தன் எஜமானரிடம் விசுவாசமாக உள்ளது.

குதிரையின் சிறப்புகளைப் பேசும் இதில் மனிதர்க்கு எங்கே அறிவுரை இருக்கிறது என்ற வினா எழலாம். மறை அல்லவா? மறைபொருளாக இருப்பது ஆழ்ந்து நோக்கினால்தான் புலப்படும்.

ததிக்ரா மனிதர்க்கு வழிகாட்டி. அதைப் போற்றுபவர்களின் பாவத்தைத் தேவர்கள் போக்குகிறார்கள், அது நம் சக்திக்கும் வலிமைக்கும் ஊற்று என்று மற்றோரிடத்தில் கூறுவதன் மூலம் அதன் சிறப்பியல்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திய வாமதேவர், துன்பங்களைத் தாண்டி எம்மை அழைத்துச் சென்றதற்காகத் ததிக்ராவை நான் தினந்தோறும் காலையில் போற்றுகிறேன் என்றும் பேசுகிறார்.

இவ்வாறு குதிரையின் சிறப்புகளைப் புகழ்ந்த அவர் போர்க்களத்திலும் வயல்களிலும் வெற்றி பெறுவதற்காகவும் பகைவர்களை வெல்வதற்காகவும் மனித குலத்துக்கு தேவர்கள் தந்த ஒரு நன்கொடை இது, இதற்காக நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்.

போர்க்களத்தில் குதிரையின் பயன்பாடு பற்றி நாம் நன்கு அறிவோம். வயல்களில் வெற்றி பெறுவதற்காக என்று கூறுவதிலிருந்து அவர் காலச் சூழ்நிலையில் குதிரை விவசாயத்துக்குப் பயன்பட்டிருப்பதை அறிகிறோம். போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்காக என்று கூறிவிட்டு, மீண்டும், பகைவர்களை வெல்வதற்கு என்று அவர் கூறியிருப்பது ஏன்? இது கூறியது கூறலாக உள்ளதே என்று நினைக்கிறோம்.

ஆழ்ந்து நோக்குகையில் நமது வாழ்வியல் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள நமது மனக் கேடுகளையே அவர் பகைவர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் என்பதை அறிகிறோம்.

வாமதேவரின் இந்த மூன்று சூக்தங்களின் மற்றொருசிறப்பு – வேதத்தில் குதிரையைக் குறிக்க வழக்கமாக அசுவ என்ற சொல்தான் பயன்படுகிறது. ஆனால் இந்த 21 பாடல்களில் மட்டும் ததிக்ரா, ததிக்ராவன் என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ததிக்ரா என்பது ஒரு தேவலோகக் குதிரையின் பெயர் என்ற தோற்றம் ஏற்படும்படியாகத்தான் அது பல இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது. ஆனால் யாஸ்கரின் நிகண்டிலும் மகீதரரின் யஜுர்வேத உரையிலும் ததிக்ரா என்பது ஒரு தனிப்பட்ட குதிரையின் பெயராக இல்லாமல், குதிரை என்ற இனத்தைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. சொல்லின் வேரை ஆராய்ந்தால் இவர்கள் கூற்று உண்மை என்பது தெரியும்.

ததி என்றால் தாங்குவது, க்ரம் என்றால் விரைந்து செல்வது. எனவே, சுமை தாங்கி விரைந்து செல்லக் கூடிய ஒரே உயிரினம் குதிரைதான் என்பதைச் சுட்டும் வகையில்தான் அதை, ததிக்ரா என்ற பெயரால் அழைப்பது தெரிகிறது. வாழ்க்கைச் சுமைகள் நமது வேகத்தைக் குறைக்கக் கூடாது என்பது இதன் உட்பொருள். தன் சிறப்புகளின் காரணமாகக் குதிரை தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி சந்தியா வந்தனத்தில் சொல்லும் மந்திரங்களில் ஒன்று இது. பாடப் பாட வாய் மணக்கும்படியான புகழ் கொண்ட ததிக்ரா என்ற வெற்றிகரமான குதிரையைப் போற்றுவோம். அது நமது ஆயுளை நீட்டிப்பதாக.

ததிக்ராவ்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத்.

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அல்லவா? குதிரையின் இத்தகைய உயர்நலங்களைப் பேசுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பது இதன் பொருள்:
ததிக்ரா சூக்தங்களின் கடைசி மந்திரம் ஆழ்ந்த தத்துவப் பொருள் உடையது.
அவனே ஒளியில் வாழும் சூரியன். ஆகாயத்தில் வாழும் வசு. வேள்விக் கூடத்தில் தேவர்களை அழைப்பவன். வீட்டின் விருந்தினன். அவன் மனிதரிடத்தில், உயர்ந்த இடத்தில், ருதத்தில், விண்ணில், வசிக்கிறான். அவன் நீரில் தோன்றியவன். பசுக்களில் தோன்றியவன். ருதத்தில் தோன்றியவன். மலையில் தோன்றியவன். அவனே ருதம்.

என்று கூறுவதன் மூலம், பல பெயரிட்டுப் பல தேவர்களை வணங்கினாலும் எல்லாம் ஒன்றே. என்றும் மாறாத, மானிடரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை நியதியே எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது என்கிறார். குதிரையினிடத்திலும் அதன் செயல்பாட்டைக் கண்டு வியந்து அதனைப் பரம்பொருளாகக் கருதிப் போற்றுகிறார் வாமதேவ கௌதமர் .

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோர் அனைவராலும் பின்பற்றத் தகுந்தவை ததிக்ராவின் உயர்பண்புகள்.

 

 

படம் உதவிக்கு நன்றி:

https://tamilandvedas.files.wordpress.com/2014/08/meso-chariot-horse-british-museum-161.jpg

http://namakirthan-therajamarga.blogspot.com/2008/10/purpose-reason-of-doing-ashwametha.html



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

  

29.அசுரர்கள்

 

asura

இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன், தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பார்த்திருக்கிறோம். தாரகாசுரன், சிங்க முகாசுரன், சூர பத்மன் முதலிய அசுரர்களை முருகன் கொன்றதைக் கந்த புராணம் விவரிக்கிறது.

அசுரர்கள் பட்டியலில் இந்திரன், அக்னி, வருணன், சூரியன் ஆகிய தேவர்களும் உண்டு என்பது தெரியுமா? ஆம், இவர்களையும் ரிக் வேதம் அசுரர் என்றே குறிப்பிடுகிறது. மேலும், த்யௌஸ் எனப்படும் ஆகாயம், மருத் எனப்படும் புயற்காற்று, வேள்வி நடத்துவோர், த்வஷ்டா என்னும் தேவத் தச்சர் இவர்களும் அசுரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அது மட்டுமல்ல, சூரியன் முதலானவற்றைப் படைத்த முழு முதற் கடவுளையே, பரம்பொருளையே வேதம் அசுரர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறது.

அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

ஆனால் உண்மை இதுதான். அசுரர் என்று ஒரு இனம் இல்லை. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரன் முதலான தேவர்களை அசுரா என்று வேதம் விளிக்கும் போது அது அவர்களது வலிமையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகத்தான் வருகிறது.

ஏதோ ஓரிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. ரிக் வேதத்தில் அஸுரர் என்ற சொல் வரும் 90 இடங்களிலும், அதிலிருந்து கிளைத்த அஸுர்ய போன்ற சொற்கள் வரும் 36 இடங்களிலும் இதே பொருள்தான். ரிக் 3.55 என்ற சூக்தத்தில் 22 மந்திரங்கள் உள்ளன. தேவர்களின் சிறப்புகளைப் போற்றும் இவை ஒவ்வொன்றும் “மஹத் தேவானாம் அசுரத்வம் ஏகம்” என்ற ஈற்றடியைக் கொண்டவை. இது “தேவர்களின் வலிமை பெரியது, தனித்துவம் வாய்ந்தது” என்று பொருள்படும்.

பொதுவாக, ஒரு சொல்லுக்கு முன்னால் ‘அ’ என்ற முன்னொட்டைச் சேர்த்து எதிர்ச் சொல் உருவாக்குவது வழக்கம். ஆனால் அசுரர் என்ற சொல் சுரர் என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.

தீயவர்களைக் குறிக்க, அசுர என்ற சொல் வேதத்தில் ஆளப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. தேவர்களின் எதிரிகளான விருகத்வரஸ், வர்ச்சின், பிப்ரு என்ற மூவருக்கு அசுரர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வலிமை கருதி அவ்வாறு அழைக்கப்படுகின்றனரே அன்றி அவர்களது இனத்தினாலோ குணத்தினாலோ அசுரர் என்ற பெயர் வரவில்லை.

இந்திரனும் அக்னியும் வலிமையான பகைவர்களை அழித்ததனால் அசுரக்ன- அசுரர்களை அழித்தவர்- என்ற பெயர் பெறுகிறார்கள். மற்றபடி எல்லா அசுரர்களும் தேவர்களின் பகைவர்கள் என்ற கருத்தை அங்கு காண முடியவில்லை.

வேதத்திற்கு உரை எழுதிய சாயணர் அசுரர் என்ற சொல்லுக்கு பெரும்பாலான இடங்களில் வலிமையானவர் என்ற பொருளைத் தருகிறார். சில இடங்களில் அதே சொல்லுக்கு, விரும்பத் தகாதவற்றை வெளியேற்றுபவர், எதிரிகளை அழிப்பவர், உயிர் கொடுப்பவர், மழை அனுப்புபவர், அசுரர்களை அழிப்பவர், உயிரும் உணர்வும் கொண்டவர், இருட்டை விரட்டி அடிப்பவர், ஊக்கம் தருபவர் என்று பல வகையாக விளக்கம் அளித்தாலும் அவை யாவும் வலிமையான என்ற பொருளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன. இந்த எல்லா இடங்களிலும் வலிமையான என்ற பொருள் மிகப் பொருத்தமாக இருக்கும்போது, சாயணர் ஏன் வலுக்கட்டாயமாக சொல்லின் உற்பத்தி வேரை மாற்றி விநோதப் பொருள் சொன்னார் என்பது புரியவில்லை.

அசுரரும் ராட்சசரும் ஒன்றா? அல்ல. இன்று அவை இரண்டும் ஒரு பொருட் சொற்களாக இருந்தாலும் வேதத்தைப் பொறுத்த வரை அவை வேறு வேறுதான். அரக்கர் என்று தமிழில் குறிப்பிடப்படும் தீய பண்புள்ளோர் வேதத்தில் ரக்ஷஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் வலிமை மிகுந்தவராக இருந்ததால் அசுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் ராட்சசர் எனப்பட்டனர். தன் வலிமையைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் அசுரர்களை தேவர் என்றும் பிறரைத் துன்புறுத்தும் அசுரர்களை ராட்சசர் என்றும் வேதம் அழைக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

30.ராட்சசர்கள்

rakshasha

 

 

மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை….. இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், மரணம் முதலிய அஸுர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்ற பயிரை அழிக்கின்றன.

- பாரதி

 

இன்றைய வழக்கில் அசுரர்களும் ராட்சசர்களும் ஒன்று. பாரதியும் அப்படித்தான் பயன்படுத்துகிறார். ஆனால் வேதம் அவ்வாறு கூறவில்லை, வலிமை உடைய எல்லாரும், தேவர்கள் உள்பட, அசுரர்கள் தான் என்று பார்த்தோம். தேவர்களின் பகைவர்கள் ராட்சசர்கள் என்றும் பார்த்தோம் (ரிக் வேதத்தில் ராக்ஷஸ் என்ற சொல் காணப்படவில்லை. ரக்ஷஸ் என்று தான் இருக்கிறது. தமிழ் வழக்கை ஒட்டி இங்கு ராட்சசர் என்று எழுதப்படுகிறது).

ராட்சசர்கள் என்பார் ஒரு தனி இனத்தவர் அல்ல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழும் ஒரு கூட்டத்தினர் அல்ல. அவர்கள் எங்கே வசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது. பூமி முழுவதும் அவர்கள் வியாபித்து இருப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் எத்திசையிலிருந்தும் வரலாம், எந்த நேரத்திலும் வரலாம், அருகிலிருந்தும் வரலாம், தொலைவிலிருந்தும் வரலாம். அவர்கள் நம்மிடையே கூட இருக்கலாம். ஆம், ஒரு மந்திரம் (10.87.10) மனிதர்களுக்கிடையில் உள்ள ராட்சசர்களைக் கண்டுபிடியுங்கள் என்று அக்னியை வேண்டுகிறது. ராட்சசர்களில் பெண்களும் உண்டு.

ராட்சசர்கள் எப்படிப்பட்டவர்கள்? யாகங்களுக்கும், ஹவிர்பாகங்களுக்கும், இடையூறு செய்பவர்கள், பிரார்த்தனையை வெறுப்பவர்கள். மூடர்களைக் கடவுளாக வணங்குவார்கள். அவர்கள் இருட்டை வளர்ப்பவர்கள், அறிவில்லாதவர்கள், தவறான அறிவு பெற்றவர்கள் என்றும் சூரிய உதயம், வைகறைப் பொழுதின் வருகை ஆகிய ஒளிகளால் அவர்கள் விரட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது அறியப்படுகிறது. அஞ்ஞானத்தின் விளைவான துயரத்தை வளர்க்கும் அவர்களை ஆனந்தத்தின் பிரதிநிதியான சோம பானம் நசுக்கும் பாறைக் கற்களின் ஓசை விரட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் பிறருக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் அத்ரின் (விழுங்குபவர்) என்றும் க்ரவ்யாத (மாமிசம் சாப்பிடுபவர்) என்றும் கூறப்படுவதிலிருந்து அவர்கள் உணவையே பெரிதாக நினைப்பவர்கள் என்றும் அதில் எந்தக் கட்டுப்பாடும் ஏற்காதவர்கள் என்றும் அறிகிறோம். பிறரை நிந்திப்பார்கள். திட்டுவார்கள். பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறுவார்கள். இரண்டு வகையாகப் பேசுவார்கள்.

அவர்கள் வலிமை மிக்கவர்கள். வலிமையில் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் மனிதரை அடக்கி ஆள்கிறார்கள். செல்வத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். மாயையில் வல்ல அவர்கள் தவறு செய்து விட்டு இரவோடு இரவாகப் பறவை போல் பறந்து விடுகிறார்கள்.

நோய், பிசாசு, பாம்பு, ஓநாய் போல அஞ்சத்தக்க அவர்களை நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும் என்கிறது வேதம் (7.38.7, 7.104.22).

அவர்கள் பாதை துன்பம் நிறைந்ததாக ஆக்க வேண்டும். அவர்கள் தங்கள் கெட்ட செயல்களின் விளைவைத் தாங்களே அனுபவிக்க வேண்டும், அவர்களும் பொய் சொல்லுபவர்களும் இந்திரனின் வலைக்குள் அகப்பட வேண்டும், ராட்சசரால் வெல்ல முடியாத வலிமையும், அவர்களால் பறித்துக் கொள்ளப்பட முடியாத செல்வமும் எங்களுக்கு வேண்டும் என்று வேதம் வேண்டுகிறது.

இந்த வருணனைகளைப் பார்க்கும்போது, ராட்சசர் என்பது ஒரு இனப் பெயர் போலத் தோற்றம் அளித்தாலும் ராட்சசர்கள் வாழும் இடம் எது என்று கூறமுடியாது, அவர்கள் அருகிலும் இருக்கலாம், தொலைவிலும் இருக்கலாம், நம்மிடையே கூட இருக்கலாம் என்று கூறப்படுவதாலும், எந்த ராட்சசரும் பெயர் சொல்லிச் சுட்டப்படாததிலிருந்தும் ராட்சசர் என்பது ஒரு மனித இனத்தைக் குறிப்பிடுவதாக ஏற்க முடியவில்லை.

அஞ்ஞானம், பொய், கோபம், பிறரைக் குறை கூறுதல், பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களைக் கொண்டவர்களே ராட்சசர் என உருவகப்படுத்தப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது.

எல்லார் மனதிலும் ராட்சசத் தனம் இருக்க வாய்ப்பு உண்டு. ராட்சசத் தனம் இல்லாத மனத்தோடு என் பிரார்த்தனையைக் கேட்பாயாக என்று அக்னி வேண்டப்படுவதிலிருந்து (2.10.5) ராட்சசர்களின் இருப்பிடம் மனம் தான் என்று தெரிகிறது.

எல்லாத் தேவர்களும் ராட்சசர்களை அழிக்க வல்லவர் என்றாலும் குறிப்பாக, இந்திரன், அக்னி, மருத்துகள், சோமன், பிருகஸ்பதி, பர்ஜன்ய, அச்வின்கள் ஆகியோர் ராட்சசர்களை எரித்து அழிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். மித்ர வருணர்களின் அருளால் மனிதன் ராட்சசரை ஒழிக்கும் வலிமை பெறுகிறான். வசிஷ்டரின் சூக்தம் ஒன்றின் முடிவில் (7.8.6) அவர் ராட்சசரை ஒழிக்கும் பிரார்த்தனை ஒன்று நான் இயற்றியிருக்கிறேன் என்கிறார். பிரார்த்தனையால் ஒழிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் ராட்சசர் என்பது தீய பண்புகளையே குறிக்கும் என அறிகிறோம்.

 

 

 

 
படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Fronton_Cambodge_Mus%C3%A9e_Guimet_9972.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

31.தஸ்யுக்கள்

 

rig veda enemy

 

ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத்தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.

யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.

ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

1. அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
2. க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்),
3. அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்),மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள் (8.14.14)
4. ஆரியர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர் (7.21.5, 10.99.3).  சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
5. தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸ (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.

1. நீண்ட மூக்கு உடைய ஆரியர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
2. ஆரியர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
3. யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
4. சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
5. இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆரியர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
6. தாசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆரியர்களுக்காக இந்திரன் விடுவித்தான் (5.30.5) என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போல) இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.

1. தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆரியர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
2. ஆரியர்களும் தாசர்களும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என்பதற்கு வேற்று மொழியாளர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை. ஆரியர்களும் தாசர்களும் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே மொழி வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
3. வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பதிலிருந்தும், தாசர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்(8.5.31) என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாசர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர் என்பது தெரிகிறது.
4. ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
5. ஆரியர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில் (8.46.32 ) வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத மற்றும் தருக்ஷ என்ற தாசர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆரியர்களும் தாசர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம் (8.51.9) கூறுகிறது. இதிலிருந்து ஆரியர்களும் தாசர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
6. வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து தஸ்யுவால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர் என்றும், தர்மத்தை மனதில் கொண்டு தஸ்யுவைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம். ரிக் வேதத்தில் கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு, அந்த மறைபொருளை அறிய முயல்வோம்- அடுத்த கட்டுரையில்.

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://www.harekrsna.com/sun/features/09-13/dasarajna5.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

32.தஸ்யு – மூன்று உருவகங்கள்

 

indra-on-elephant

 

தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?

தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.

ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

உருவகம் -2 நிலச்சரிவு
இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.

மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.

இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.

இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?

கோத்ரம்
மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).

மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.

வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.

உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.

கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.

பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.

வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.

அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.

விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.

அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.

தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).

அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).

சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).

பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.

இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

 

 

படம் உதவிக்கு நன்றி:
How Many People did Indra Kill?

http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

33.நீர், ஒளி, பசுக்கள்

BRAHMIN_VEDAS_by_VISHNU108

 

மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10) 
இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

 

படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

34.யக்ஞம் – உலகின் மையப் புள்ளி

yajna

 

 

தேவ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக ரிக் வேதத்தில் மிகுதியாகத் தென்படும் வார்த்தை யக்ஞம் என்பதாகும். வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றியது இது. யஜ் என்ற வினைச் சொல்லும் அதனிடத்தில் தோன்றிய யக்ஞம், யஜமான, யஜிஷ்ட, யக்ஞிய, யஜத்ர முதலான சொற்களும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யக்ஞம் என்றால் என்ன?
யக்ஞம் என்ற சொல்லுக்கு வழிபாடு என்பது பொருள். யாகசாலையில் அக்னியை மூட்டி சமித்தையும் நெய்யையும் இட்டு ஸ்வாஹா முதலான மந்திரங்களுடன் செய்யப்படும் வழிபாடு யக்ஞம் என்பதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞத்தில் முதலில் அக்னி அழைக்கப்பட்டு தோத்திரங்களால் மகிழ்விக்கப்படுகிறார். ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒரு உணவு அக்னியில் இடப்படுகிறது. அதைத் தேவர்களிடம் சேர்ப்பிக்கும்படி அவர் வேண்டிக் கொள்ளப்படுகிறார். ஹவிஸை எடுத்துக் கொண்டு அக்னி தேவலோகத்துக்குச் சென்று தேவர்களிடம் தந்து அவர்களைப் பூமிக்கு வருமாறு அழைக்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பூமிக்கு வருகிறார்கள். விதத என்று அழைக்கப்படும் யாக சாலையில் பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பாசனத்தின் மீது அமர்ந்து, அங்கு அளிக்கப்படும் சோம பானத்தைக் குடிக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பக்தர்களுக்குப் பல வகை வரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு அக்னி தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையில் தூதராகப் பணிபுரிவதாக வேதம் கூறுகிறது. ஹவிஸ் என்பது பொதுவாக, பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களைக் கொண்டதாகவும், சில சமயங்களில் மிருகங்களைக் கொண்டதாகவும் இருப்பது தெரிய வருகிறது.
யக்ஞம் வேத காலத்து வழிபாட்டு முறை. கோயில், சிலைகள், பூவினால் அர்ச்சனை செய்தல், அபிஷேகம், பிரதட்சிணம், ஹாரத்தி முதலான வேறு வகையான வழிபாட்டு முறைகள் ரிக் வேதத்தில் சொல்லப்படவில்லை.

யக்ஞத்தில் அக்னிக்குச் சிறப்பிடம்:
எல்லாத் தேவர்களுக்கும் அக்னி மூலமாகத்தான் ஹவிஸ் போய்ச் சேருகிறது. எனவே யக்ஞத்தில் அக்னிக்கு ஒரு சிறப்பிடமும் அதன் காரணமாகச் சில சிறப்புப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
யக்ஞத்தின் கேது (அடையாளம்),
யக்ஞத்தின் தேவன்,
யக்ஞபந்து,
யக்ஞ பிதா, யக்ஞ ப்ராவிதா- அபிசஸ்தி பாவா (காப்பாற்றுபவர்)
யக்ஞநீ- யக்ஞநேதா- யக்ஞபூர்வ்ய (தலைவர்),
புரோஹித (முன் நிலையில் வைக்கப்படுபவர்)
ரித்விக்- ஹோதா- யந்தா, யக்ஞ ஸாதக (நடத்துபவர்),
அத்வரஸ்ரீ (வேள்விச் செல்வம்),
ஹவ்ய வாட்- ரத்ய- யக்ஞ வாஹ (ஹவிஸைச் சுமந்து செல்பவர்),
யக்ஞ நாபி (மையம்),
ஸுக்ரது (நன்றாக யாகம் செய்பவர்),
யக்ஞ வித்வான் (யக்ஞங்களை நன்றாக அறிந்தவர்),
அத்வரேஷு ஈட்ய (யாகங்களில் போற்றப்படுபவர்)

அக்னி யக்ஞத்தைத் தூண்டுகிறார். அவர் தீமை செய்பவர்களையும் தீயன பேசுபவர்களையும் அழித்து பக்தர்களுக்கு யக்ஞத்தின் பாதையை எளிதாக ஆக்குகிறார். நற்செயல்கள் செய்வோர் வீட்டில் யக்ஞத்தை நிலை நிறுத்துகிறார். பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையில் போய் வருகிறார். ஹவிஸ்ஸை தேவர்களுக்கு அளித்து திருப்தி செய்விக்கிறார். யக்ஞம் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அக்னி தானே பொறுப்பேற்று யக்ஞத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறார். அவர் யக்ஞத்தின் வடிவம்.

எல்லாத் தேவர்களும் யக்ஞத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அதனால் மகிழ்விக்கப் படுகிறார்கள், வலுவூட்டப்படுகிறார்கள். அவர்கள் யக்ஞத்தைக் காக்கிறார்கள். யக்ஞம் செய்யும் யஜமானனுக்கு அவர்கள் நீண்ட ஆயுள், பாதுகாப்பு, பாவங்களிலிருந்து விடுதலை, செல்வம், புகழ், வலிமை, வெற்றி, சந்ததி, குதிரைகள், உணவு மற்றும் அக்னியின் சக்தி ஆகியவற்றை அளிக்கிறார்கள். பித்ருக்களும் யக்ஞங்களால் மகிழ்கிறார்கள்.

யக்ஞமும் யாகமும் :

யாகம் என்ற சொல்லும் யக்ஞம் என்ற பொருளிலேயே தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் இது ரிக் வேதத்தில் காணப்படவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்டது. யக்ஞம் என்ற சொல் ஆழமான பொருள் உடையது. பிற்காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. யாகம் என்ற சொல் அக்னி வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக நின்று விட்டது. தமிழில் வேள்வி என்பதும் இந்தத் தீ வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. யக்ஞத்தின் விரிவான பொருளைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

யக்ஞத்தின் துணை அங்கங்கள்- மனம் :
யக்ஞத்தில் ஹவிஸ்ஸை விட முக்கியமானது மனப்பாங்குதான். “என்னிடம் யக்ஞத்தில் சமர்ப்பிக்க நெய் இல்லை அதற்குத் தேவையான பசு இல்லை. சமித்து கொண்டு வருவோம் என்றால் அதை வெட்டி வருவதற்கான கோடரியும் இல்லை. கரையான் அரித்த சுள்ளிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும்தான் உள்ளன. இதையே நெய்யாக ஏற்றுக் கொள்க” என்று அக்னியை வேண்டுகிறார் ஒரு ரிஷி. (8.102.19, 8.102.21)

அக்னியில் நெய், ஹவிஸ் சேர்ப்பிப்பது நம் மனதில் இருக்கும் நன்றி மற்றும் பணிவின் அடையாளம். ஆனால் இவை மட்டும் போதாது.

தேவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம் மனதின் வணக்கத்தை உடலால் வெளிப்படுத்த வேண்டும்.

பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு உதவிகள் கோரியும் பிரார்த்தனை மந்திரங்களைக் கூறவேண்டும். இது வாக்கினால் செய்யப்படுவது. பிரார்த்தனை இல்லாத யக்ஞம் பலன் தருவதில்லை என்கிறது வேதம்.(10.105.8)

பிரார்த்தனையில் அர்க்க, உக்த, கிர, ப்ரஹ்ம, ஸ்தோமம் (अर्क, उक्थ, गिरः, ब्रह्म, स्तोम) என்ற ஐந்து வகை உண்டு. இவற்றின் தனித் தன்மை என்ன என்பது அறியப்பட முடியவில்லை. இது தவிர தீதி, தீ:, மன்ம, மதி, கான என்ற சொற்களும் (धीतिः, धीः, मन्म, मतिः, गानम्) பிரார்த்தனையையே குறிக்கின்றன.

செய்யும் யக்ஞத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யவேண்டும். இதற்கு புத்தியைப் பயன்படுத்தல் அவசியமாகிறது.

இவ்வாறு மனம், வாக்கு, உடல், புத்தி இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஸ்தோமம், நமஸ்காரம், ஹவிஸ், சோமம் எல்லாம் சேர்ந்த யக்ஞம்தான் அத்வரம், அதாவது, குறைவில்லாத, முழுமையான யக்ஞம் ஆகும்.

கீழ்க்கண்ட மந்திரங்கள் வெறும் ஆகுதி மட்டுமே முழுமையான யக்ஞம் ஆகாது, அது அத்வரமாக ஆவதற்கு, அதாவது குறை இல்லாமல் இருக்க அத்துடன் ஸ்தோமம், நமஸ்காரம், புத்தி, ஹவிஸ் சேரவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
சோமா, இந்த யக்ஞத்தையும் பிரார்த்தனை மந்திரங்களையும் ஏற்றுக்கொள்க. (1.91.10)
நாங்கள் இந்திரனை யக்ஞத்தைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும், ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம்.(10.24.2)
இந்த யக்ஞத்தில் நான் பூமியையும் ஆகாயத்தையும் நமஸ்காரத்தைக் கொண்டு போற்றுகிறேன்.(1.185.7) 
நாங்கள் பிரகஸ்பதிக்கு யக்ஞங்களைக் கொண்டும் நமஸ்காரங்களைக் கொண்டும் ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம். (4.50.6)
புரோகிதர்கள் அக்னியை யக்ஞத்தைக் கொண்டும் புத்தியைக் கொண்டும் வழிபடுகிறார்கள். (3.27.6)

யக்ஞத்தின் பொருள் விரிவடைதல் :
யக்ஞம் என்பது ஆகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதைக் கீழ்க் கண்ட மந்திரம் கூறுகிறது.
தேவர்கள் யக்ஞம் செய்கிறார்கள்.(10.90.15, 16)
தேவர்கள் அக்னிக்கு யக்ஞம் செய்கிறார்கள். (5.21.3)
அக்னி, மானிடர் சார்பில், தேவர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.15.12)
அக்னி மானிடர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.26.3)

தேவர்கள் நம்மைப் போல் யாக குண்டம் அமைத்து நெய், சமித், ஹவிஸ் இவற்றைக் கொண்டு ஆகுதி செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் வேதத்தில் இல்லை. எனவே மேற்கண்ட மந்திரத்தில், யக்ஞம் என்ற சொல் தீ மூட்டி ஹவிஸ்ஸைச் சமர்ப்பித்தல் என்ற பொருளில் அல்லாமல், வணங்குதல் அல்லது மரியாதை செய்தல் என்ற பொருள் உடையதாகக் காணப்படுகிறது. மற்ற தேவர்களும் அக்னியும் ஒருவர்க்கொருவர் உதவி செய்கிறார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் வணக்கம் செய்கிறார்கள் என்பதுதான் ஒருவர்க்கொருவர் யக்ஞம் செய்வதாகக் கூறப்படுகிறது.

போரில் வெற்றி பெற உதவும் ரதத்திற்கு யக்ஞம் செய்வதாகவும் ரதம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறும் மந்திரங்கள் உள்ளன.(6.47.27, 6.47.28)

போரில் வெற்றி பெற ரதம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை அந்த மனிதர் நன்றியுடன் நினைவு கூர்வதாகத் தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

எனவே உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதும், அவர்களை மேலானவர்களாகக் கருதி அவர்களிடம் பணிவுடன் இருப்பதும் யக்ஞம் என்பதன் விரிந்த பொருள்.

இது மேலும் விரிவடைந்ததைப் பின்னர் ருதமும் யக்ஞமும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

அத்வரம் என்ற சொல்லின் விரிந்த பொருள் :
அத்வரம் என்ற சொல்லின் பொருளும் மேலும் விரிவடைந்தது. அது பயணம் என்ற பொருள் தரும் அத்வ என்ற சொல்லிலிருந்து வந்தது, அது ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் என்று அரவிந்தர் சொல்வது சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. அக்னியே, நீ எங்கள் யக்ஞத்தினால் மகிழ்வாயாக, எங்கள் அத்வரத்தினால் மகிழ்வாயாக(4.9.7) என்பதிலிருந்து அத்வரம் என்பது யக்ஞம் அல்லாத வேறொன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்னியே, நீ எனக்கு அத்வரத்தில் வலிமையும், மக்கட்பேறும், பெரும் செல்வமும், மகிழ்ச்சியும், புகழும் தருவாயாக (3.16.6)  என்ற மந்திரத்தில் அத்வரம் என்பதற்கு வாழ்க்கை என்ற பொருள்தான் பொருத்தமாக உள்ளது.

அக்னியே, நீ யக்ஞங்களில் அமர்கிறாய். எங்கள் அத்வரங்களை நடத்துக. (1.14.11 )  இதில் யக்ஞம் என்பது முயற்சிகளையும் அத்வரம் என்பது வாழ்க்கையையும் குறிக்கும்.

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி: https://www.kksblog.com/2013/04/accepting-krsnas-plan/



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

35.யக்ஞத்தை விடமேலான வழிகள்

 

http://www.dreamstime.com/-image1626895

யக்ஞத்தை விட பிரார்த்தனை சிறந்தது:
மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை யக்ஞத்துடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள் (1.86.2) என்று சொல்லப் படுவதிலிருந்து யக்ஞம் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மந்திரங்கள் மட்டுமே கொண்டு வழிபடுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அறிய முடிகிறது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. அதே நேரத்தில் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தருவது என்பதால் யக்ஞம் என்பது வெளிப்புறச் சடங்கு மட்டுமே என்பதும் அதை விடப் பிரார்த்தனையே அதிகப் பலன் தருவது என்பதும் தெரிய வருகிறது.

அதே கருத்து வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது – இந்திரனை யக்ஞங்களால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் ஸ்தோமங்களால் அறிகிறார்கள் (1.131.2).

 

உழைப்பின் முக்கியத்துவம்:
யக்ஞமும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள் (1.142.2, 4.23.2, 6.3.2).

தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் (4.33.11) என்று கூறும் வேதம் வேள்வியோடு கூட முயற்சியும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

 

யக்ஞத்தை விட சமீ மேலானது:
ரிபு சகோதரர்களைப் பற்றி முன்னர் பார்த்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம். அவர்கள் ஒரு மண் கிண்ணத்தை நான்காக மாற்றினர். தங்கள் பெற்றோர்களை இளமையாக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசு மாட்டை உயிர்ப்பித்தனர். இந்திரனுடைய ரதத்திற்காக, வாய்ச் சொல்லைப் புரிந்து கொண்டு செயல்படவல்ல இரு குதிரைகளை உருவாக்கினர். அச்வின்களுக்காக மூன்று சக்கரம் உடைய, எளிதில் இயங்க வல்ல ஒரு ரதத்தை உருவாக்கினர்.

அவர்களுடைய செயல்கள் தீ வழிபாடு என்ற பெயருக்கு உரியவை அல்ல. வேதத்தில் அவை சமீ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் அருஞ் சாதனை என்று கூறலாம்.

யக்ஞத்தினால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபுக்கள் சமீ மூலமாக அடைந்தார்கள் என்கிறது வேதம் (1.20.2).

ஆழ்ந்து ஆராய்ந்தால் யக்ஞத்தை விட சமீ மேம்பட்ட பலனைத் தருவது என்பதை அறிய முடியும். யக்ஞம் மனிதனை ரிஷி நிலைக்குத் தான் உயர்த்தும். சமீயோ மனிதனைத் தேவநிலைக்கு உயர்த்தும். ஆம், ரிபுக்கள் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையும் அமரத்வமும் பெற்றனர்.

வணங்கினாலோ, சமீ செய்தாலோ, அல்லது மகம் (யாகம்) செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார் (8.75.14) என்று சொல்லப்படுவதிலிருந்து சமீயும், வணக்கமும் யாகத்தைப் போலவே பலன் தருபவை என்பது பெறப்படுகிறது.

இந்திரனுக்கே ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது போன்ற பல அருஞ் செயல்கள் செய்ததனால்தான் இந்திர பதவி கிடைத்தது என்கிறது ரிக் வேதம் (8.89.5, 8.89.6).

இவற்றிலிருந்து வேதம் யக்ஞத்தை மட்டுமே உயர்வாகப் பேசவில்லை, பிரார்த்தனைக்கும் உழைப்புக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிகிறோம்.

 

 

 

படம் உதவி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-gold-statue-indian-woman-praying-hands-image1626895



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

36.முரண்பாடான கருத்துகள்

 

Five_great_Yagnas

 

சென்ற பகுதிகளில் யக்ஞம் பற்றிக் கூறப்பட்டவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

தேவர்களைக் குறித்து அக்னியில் ஆகுதி செய்வது தான் யக்ஞம். இதனால் தேவர்கள் மகிழ்கிறார்கள். இது உணவு, சந்ததி, ஆயுள் முதலான எல்லா நலன்களையும் தரும். இதுவே உலகின் மையப்புள்ளி. யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆகுதி மட்டுமே யக்ஞம் ஆகாது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. ஆனால் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும் என்ற கூறப்படுவதைப் பார்த்தோம்.

இதற்கு மாறாக, வெறும் தோத்திரங்கள் பலன் தரா, ஹவிஸும் அவசியம் என்றும் கூறுகிறது வேதம். (8.9.6)

யக்ஞம் செய்தால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்கவும் வேண்டும். பிறர் நலனுக்காகச் செய்யப்படும் அருஞ்செயலான சமீகள் யக்ஞத்தை விட மேலானவை. யக்ஞம் செய்யாதவருக்கும், சமீகள் தேவ பதவியைக்கூடப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

இப்படி ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் காணப்படுவதால் குழப்பமே ஏற்படும். வேதத்தில் ஏன் இப்படிக் குழப்பம்? அதனுடைய உண்மையான நிலை என்ன? தீ மூட்டி வழிபாடு செய்வதா, வேண்டாமா? ஆராய்வோம்.

வேதத்தில் இருவகையான எண்ண ஓட்டங்கள் காணப்படுவது உண்மை. சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மந்திரங்களும் உள்ளன. சடங்கை விட பக்தி மனோபாவம், உழைப்பு இவைதான் முக்கியம் என்று கூறும் மந்திரங்களும் உள்ளன.

வெவ்வேறு ரிஷிகள் வெவ்வேறு விதமாகப் பேசினால் இது அந்தந்த ரிஷியின் கருத்து என்று விட்டுவிடலாம். ஒரே ரிஷியின் பெயரால் வழங்கும் சூக்தத்திலேயே இருவகைக் கருத்துகளும் வரும்போது அதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.

வேதம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ரிஷிகளால் இயற்றப்பட்டது, வியாசரால் தொகுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

வேத இலக்கியத்தின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்திலும் அதன் ஆறாவது மண்டலம் மிகப் பழமையானது. இந்த ஆறாவது மண்டலம் இயற்றப்படுவதற்கு முன்பும் மக்கள் இருந்தார்கள். நாகரிகம் இருந்தது. மொழி இருந்தது. அதற்கு ஒரு இலக்கணம் இருந்தது. இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். யாப்பிலக்கணமும் இருந்தது. சந்தஸ்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

இவ்வளவு வளர்ச்சி பெற்ற மக்களிடம் கடவுள் பற்றிய ஏதோ ஒரு கோட்பாடும் இருந்திருக்க வேண்டும். அக்னியையும் இந்திரனையும் வேத ரிஷிகள் புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. முன்பே அந்தத் தேவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கான ஏதோ ஒரு வழிபாட்டு முறையும் இருந்திருக்கிறது.

வேத ரிஷிகள் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ரிஷிகளின் வாக்கில் “நாம் ஒரு புதிய பிரார்த்தனை படைப்போம்” என்ற கருத்து அடிக்கடி காணப்படுகிறது. (6.17.13, 6.18.15) அப்படிப் புதிய பிரார்த்தனை புதிய கருத்துகளுடன் படைக்கும்போது அவர்கள் பழைய கருத்துகளுடன் மோதவில்லை, தவறு என்று ஒதுக்கவில்லை. நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறாமல், ஒரே உண்மையைப் பலர் பலவிதமாகக் காண முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு பழைய கருத்துகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரே மந்திரம் வெவ்வேறு ரிஷிகளின் பெயரால் வழங்கப்படுகிறது. (உ-ம் 1.23.20 – 10.72.2)இதிலிருந்து பழைய ரிஷிகளின் மந்திரங்கள் பிற்காலத்தவரால் தங்கள் புதிய படைப்புகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

ஒன்று உள்ளது. அதைப் பலரும் பல விதமாகப் போற்றுகிறார்கள் என்பது அவர்கள் கொள்கை. (1.164.46) எனவே பழைய கருத்துகளை அலட்சியம் செய்யாமல் அதையும் சேர்த்துக் கொண்டு புதியதும் படைக்கிறார்கள். இதுதான் இந்த இரு வகையான வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணம்.

தீ மூட்டி வழிபடுவது பழைய வழக்கமாக இருக்கக் கூடும். புதிய ரிஷிகள் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கூடத் தங்கள் கருத்துகளையும் சொல்கிறார்கள். யக்ஞத்தை விட சமீ மேலானது, யக்ஞம் மட்டும் போதாது, உழைக்கவும் வேண்டும், ஆகுதி மட்டுமே யக்ஞத்தை முழுமை ஆக்காது, பிரார்த்தனையும் நமஸ்காரமும் புத்தியும் அவசியம் என்று வருபவை தாம் அந்தப் புதிய கருத்துகள்.

புதிய கருத்துகளைத் தனி அத்தியாயமாகப் பிரித்து வைக்காமல் ஒரே சூக்தத்திலேயே முந்திய ரிஷிகள் செய்த பழைய பாடல்களையும் போற்றுகிறார்கள், புதிய கருத்துகளையும் சொல்கிறார்கள். பிறருடன் முரண்படாமல் தன் கருத்தைக் கூறும் இந்த முறை ரிக் வேதத்தின் சிறப்பு.

இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? எப்பொழுதும் எந்தப் புதிய கருத்துக்கும் வரவேற்பு இருப்பதும் எதிர்ப்பு இருப்பதும் இயற்கை. அது போல, ரிக் வேத ரிஷிகளின் இந்தப் புதுமைகளைச் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். சிலர் புறக்கணித்துப் பழைய முறைகளையே அனுசரித்து இருக்கக் கூடும். அவரவர் இஷ்டம் போல் வழிபடலாம் என்ற சுதந்திரம் இருந்ததால் இந்த இரு சாராரிடையே பிணக்குகள் பிளவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அதே வேதத்தைப் பின்பற்றி வந்தனர்.

நாளடைவில் பழைய சடங்குக் கட்சியினரின் கை ஓங்கியிருக்க வேண்டும். அவர்கள் ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை வேள்விக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கு மாற்றிக் கொண்டனர். அதில் வேள்வியை வலியுறுத்தும் பல புதிய மந்திரங்களையும் சேர்த்துக் கொண்டனர். தங்கள் சந்ததியினருக்கு அதை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இந்தப் புதிய தொகுப்பு யஜுர் வேதம் (வேள்விக்கான வேதம்) என்று பெயரிடப்பட்டது.

யஜுர்வேதத்தில் பிரார்த்தனையை விட, மனோபாவத்தை விட அக்னியில் செய்யப்படும் ஆகுதிச் சடங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக குண்டம் எப்படி அமைய வேண்டும், எத்தனை செங்கற்கள் அடுக்கப்பட வேண்டும், ஹவிஸ்ஸாக என்னென்ன பொருள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்பொழுது என்ன மந்திரம் சொல்லப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களே மிகுதியாகக் கொண்டது யஜுர்வேதம். பிராமண இலக்கியங்களில் இது மேலும் விரிவடைந்தது. இவை வேத மந்திரங்களின் பொருளை யாகத்திற்குப் பயன்படும் வகையில் விளக்கின.

யாகங்கள் மிகுதியாகப் பெருகியதால் இவை சாமானிய மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக ஆயின. அந்நிலையில் தான் யாக முறைகளைக் கண்டிக்கும் புத்த சமண சமயங்கள் தோன்றின. யாகங்களுக்குப் புதிய தத்துவ விளக்கம் தந்து அவற்றை மறைமுகமாக எதிர்க்கும் உபநிடதங்கள் தோன்றின.

இந்திரனைத் துதிக்கும்போது நீயே முதல் தெய்வம் என்று கூறுவதும் அவ்வாறே அக்னியைப் போற்றும்போது நீயே பரம்பொருள் என்று பேசுவதும் முரண்பாடு போல நமக்குத் தோன்றும். ஆனால் அவை முரண்பாடு அல்ல, எப்பெயரிட்டு அழைத்தாலும் தெய்வம் ஒன்று என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்டது என்பதை முன்பு பார்த்தோம்.

அதே போல யக்ஞம் செய்து வழிபடுவதும் யக்ஞம் செய்யாமல் வழிபடுவதும் இரண்டுமே ஒன்றுதான். வழிபாடு தான் முக்கியமே தவிர, முறை முக்கியம் அல்ல என்பதே வேதத்தின் கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோதண்ட ராமன்
Permalink  
 


 37.யக்ஞமும் உயிர்ப்பலியும்

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற அஹிம்ஸைக் கொள்கை புத்த ஜைன மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. இதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. தன் தவறைத் திருத்திக் கொள்ளாத சமயம், பிறரிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ளாத சமயம் அழிந்து விடும். வைதிக சமயம் காலப் போக்கில் பல நல்ல விஷயங்களை மற்றவர்களிடமிருந்து ஏற்றுக் கொண்டதால்தான் இன்றளவும் உயிரோடு இருக்கிறது.

மனிதன் இயற்கையில் சர்வ பட்சிணி. காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அவன் பழங்கள், கிழங்குகளை உண்பதோடு, சாதுவான மிருகங்களையும் கொன்று உண்டுதான் உயிர் வாழ்ந்தான். நாகரிக வளர்ச்சி பெற்று விவசாயம் செய்யும் காலத்தில் அவனுக்கு குதிரை, மாடு, ஆடு முதலிய கால்நடைகளால் பயிர் அழிவு ஏற்பட்ட போது இந்தக் கால்நடைகளைக் கொல்வது பயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுத் தேவையை நிறைவு செய்யவும் அவசியமாக இருந்தது. அவன் இறை வழிபாடு செய்யத் தொடங்கிய போது தான் உண்டதையே தன் தெய்வத்துக்கும் படைத்தான்.

இத்தகைய காலத்தில்தான் வேதம் உருவாயிற்று. குதிரைகளையும் ஆட்டையும் வேள்வியில் பலி இடுவது பற்றிய மந்திரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ரிக் வேதத்தில் உள்ளன. (1.162, 3, 21)

பழைய காலத்தில் பசுக்களும் காளைகளும் பலி கொடுக்கப்பட்டிருப்பது அக்னிக்கு வழங்கப்படும் உக்ஷான்ன (காளையை உண்பவர்), வசான்ன (மலட்டுப் பசுக்களை உண்பவர்) என்ற பெயர்களிலிருந்து தெரிகிறது. (8.43.11) பசுவைக் கத்தியால் வெட்டுவது போல என்று உவமை வருகிறது. பசுத் தோலைத் தான் வில்லுக்கு நாணாகவும், உட்காருவதற்கு ஆசனமாகவும், சோம பானம் வடிகட்ட அடித்தளமாகவும் பயன்படுத்தினர். பசுவே, உன் உடம்புதான் எனக்கு மருந்து என்கிறது ஒரு மந்திரம். (10.100.10)  இதிலிருந்து பசுக் கொலை சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்பதை அறியலாம்.

பசுவைக் குறிப்பிடும்போது 20 இடங்களில் அக்ன்யா என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். (4.1.6, 1.30.19) அக்ன்யா என்றால் கொல்லத் தகாதது என்று பொருள். பசு என்று சொல்லாமல் கொல்லத் தகாத மிருகம் என்று அழைப்பதற்குக் காரணம் என்ன?

காளைகளும் மலட்டுப் பசுக்களும் மட்டுமே கொல்லத் தக்கவை. பால் தரும் பசுக்கள் கொல்லத் தகாதவை என்ற கருத்து ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கியபின் பசுவின் பொருளாதார மதிப்பை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
விவசாயத்துக்குக் குதிரைகளைப் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. காளைகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இன விருத்திக்கு மட்டுமே காளைகள் தேவைப்பட்டிருந்தன. அதற்கு மந்தைக்கு ஒன்று போதுமே, மற்றவை பயனற்ற சுமை தானே என்ற நிலை நிலவி இருக்க வேண்டும்.

விவசாயம் செய்த பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தேவையற்ற மலட்டுப் பசுக்களையும் காளைகளையும் கொல்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அதனால் அவர்களது உணவுத் தேவையும் நிறைவு பெற்றது. இச்செயலில் அகிம்சை, கருணை என்ற கோட்பாடுகள் குறுக்கிடவில்லை.

அதற்கும் பிந்திய காலத்தில், மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த பின் அவற்றைக் கொல்வதற்கு எதிரான இயக்கம் தோன்றி இருக்க வேண்டும். இருப்பினும் சமயச் சடங்குகளை உடனடியாக மாற்றுவது என்பது எக்காலத்திலும் கடினமான செயல் தான். எனவே யாகங்களில் மட்டும் மிருகங்களைக் கொல்வது தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும்.

புத்த ஜைன மதங்கள் அகிம்சைக் கொள்கையைப் பரப்பியபோது வேத சமயம் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்காது. ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். நாளடைவில் அது வேத சமயத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வேதக் கருத்துக்கு மாறான கருத்தை வேத சமயம் எப்படி ஏற்றுக் கொண்டது?

உண்மை என்னவென்றால் அகிம்சை வேத சமயத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்து அல்ல. வேதத்தில் பல இடங்களில் சம் த்விபதே சம் சதுஷ்பதே என்ற வாசகம் காணப்படுகிறது. இரண்டு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கு நலம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்த மந்திரத்தின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தவர்கள் அகிம்சையை ஏற்றுக் கொண்டிருப்பர்.

மேலும், வேதத்தில் பெரிதும் வலியுறுத்தப்படும் ருதம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் படிக்க இருக்கிறோம். ருதம் என்பது சார்ந்தாரைக் காத்தலைக் குறிக்கும். எனவே நம்மைச் சார்ந்து வாழும் மிருகங்களைக் காப்பாற்றுவது முக்கியமான தர்மமாகக் கருதப்பட்டது.

வண்டி இழுக்கும் நல்ல குதிரை- நெல்லு
வயலில் உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா – பாரதி

இவ்விரு கருத்துகளின் விரிவாக்கம் தான் அகிம்சைக் கொள்கை. வேதத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுக் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த இதை விளக்கிச் சொன்னார்கள் புத்தரும் மகாவீரரும். ஒரு வகையில் அவர்களும் வேத ரிஷிகளுக்கு நிகரானவர்கள்தான். அவர்கள் தங்கள் கருத்தைப் பாலி மொழியில் சொல்லாமல் வேத மொழியில் சொல்லியிருந்தால் அவையும் வேதத்தில் சேர்க்கப் பட்டிருக்கும்.

வீரர்கள் பல நிறமுள்ள காளையைச் சமைத்தனர். அவை முற்கால தர்மமாக இருந்தன (1.164.43) என்று கூறப்படுவதும், வேள்வி செய்யும் மனிதனுடைய பசுக்கள் பயமின்றி மேய்ச்சல் தரையில் சஞ்சரிக்கட்டும், யக்ஞ பலி பீடங்களுக்கு அவை போகாமல் இருக்கட்டும் (6.28.4)  என்ற பிரார்த்தனையும் மிருக பலிக்கு எதிரான எண்ண அலை உருவாகி வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். வேறு சில மந்திரங்களில் பசுவைக் கொல்லாதீர்கள் என்ற வேண்டுகோள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (8.101.15, 16)

இந்த மந்திரங்கள் புத்த ஜைன மதங்களுக்கு முந்திய காலத்ததாகவும் இருக்கலாம். பிற்காலத்தில் எழுதப்பட்டு வேதத்தில் நுழைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

மிருக பலி பற்றிய குறிப்புகள் குறைவாகவும் ஒரு சில சூக்தங்களில் மட்டும் குவிந்ததாகவும் உள்ளன. தானிய ஹவிஸ் பற்றிய குறிப்புகள் மிகுதியாகவும், பரவலாகவும் இருப்பதிலிருந்து பலியிடுவது வர வரக் குறைந்து கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்க இடம் தருகிறது.



-- Edited by Admin on Tuesday 14th of April 2015 05:11:19 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 38.ருதம் என்பது என்ன?

மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் மூன்றாவதான ‘ருதம்’ என்ற சொல், ரிக் வேதத்தில் 600 தடவைகளுக்கு மேல் வருகிறது.
அகராதியில் ஸத்யம், ருதம் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது. ஸத்யமும் ருதமும் ஒன்றா என்றால் இல்லை.

பரிஷேசன மந்திரம் “ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன்” என்கிறது. வேத இலக்கியத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது.

ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி 
ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம் 
ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம

ருதத்தை அனுசரித்து, அங்கிரஸ்கள் ஸத்யத்தை அடைந்தனர். (5.45.7)
மருத்துகள் ருதம் வழியாக ஸத்யத்தை அடைகின்றனர். (7.56.12)
கடும் தவத்தின் விளைவாக ருதமும் ஸத்யமும் தோன்றின. (10.190.1)
மேற் கண்ட மந்திரங்களிலிருந்தும் ருதமும் ஸத்யமும் வேறு வேறு

பொருள் கொண்டவை என்பதும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட இரட்டைகள் என்பதும் தெரிகிறது.
ருதம் என்பதன் அடிப்படைப் பொருள் இயற்கை நியதி என்பது. அதைத் தெரிந்து கொள்ள அச் சொல் பயன்படும் எல்லா இடங்களையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்ததால் கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

ரிஷிகளுக்கு வியப்பை ஊட்டிய மூன்று விஷயங்கள் ருதம் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

ஆறுகள்

ஆறுகள் ஆண்டாண்டு காலமாக இடைவிடாமல் குறிப்பிட்ட திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் திசை மாறி, அதாவது கீழிருந்து மேலாக, ஓடுவதில்லை. தன்னிடமுள்ள நீரைக் கடலில் சேர்ப்பதால் அவை வற்றுவதில்லை. எவ்வளவு நீர் வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அது தன் நீரை ஆவியாக்கிக் கொடுத்து விடுகிறது. ஆவியாவதால் கடல் வற்றுவது இல்லை. புதிய புதிய மேகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் தன்னிடமுள்ள நீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

இது ருதத்தின் வேலை என்று ரிஷிகள் நினைக்கிறார்கள். அதனால் ஆறுகளை ருதாவரி என்று அழைக்கிறார்கள். ஆறுகள் கொண்டு வரும் நீரையும் அதற்குக் காரணமான மழையையும் மேகத்தையும் ருதம் என்றே அழைக்கின்றனர்.

ஆறுகள் தங்கள் வெள்ளப் பெருக்கில் ருதத்தைக் கொண்டு வருகின்றன. (1.105.12)

“மேகம் எப்பொழுதும் தாவரங்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. அதனிடத்தில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றின் உயிரும் இருக்கிறது. அதுதான் ருதம். (7.101.6)

ருதத்தின் காரணமாக தெய்விக ஆறுகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. (4,3.12)

சவிதாவிற்காகவோ இந்திரனுக்காகவோ ஆறுகள் நிற்பதில்லை. அவை ஓடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?(2.30.1)

ஆறுகள் வருணனின் ருதத்தால் ஓடுகின்றன. அவை நிற்பதில்லை, ஓய்வெடுப்பதில்லை. (2.28.4)

ஆறுகள் எவ்வளவு வெள்ளம் கொண்டு வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதற்குக் காரணமான சிறந்த அறிவுடைய அந்தத் தேவனின் மாயா சக்தியை ஒருவரும் தடுக்க முடிந்ததில்லை. (5.85.6)

இடையறாத இயக்கமும், அதில் காணப்படும் ஒழுங்கு முறையும், தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையும் ருதத்தின் பண்புகள் ஆகும்.

சூரியன்