சங்க காலம் / தேடல் – 1
காலத்தை வெட்டாதீர்
‘காலம்’ எனும் நீள் சரடில் ஒரு குறிப்பிட்ட அளவினைத் துண்டாக வெட்டியெடுத்து அது எந்தக்காலம் என்று கணிப்பது எளிதன்று. பொருத்தமில்லாதது. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட தூண்டுதல் ஏற்பட்டு அது துலங்கலாக மாறி பல்வேறு மாற்றத்துக்குட்பட்டு ஒருநிலைபெற்ற பெருநிலையைக் கண்டு, அது தோன்றுவதற்கும் தொய்வடைவதற்கும் இடைப்பட்ட காலத்தை அளந்து அதற்கு ஒரு பெயரிடுதல் எளிது. பொருத்தமானது.
பொது யுகத்துக்கு முன்பு (பொ.யு.மு) ஏதோ ஒரு நூற்றாண்டையும் பொது யுகத்தில் ஏதோ ஒரு நூற்றாண்டையும் குறித்துக் கொண்டு இக்காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவதைவிட, ஒரு சமூகம் இவ்வாறு தோன்றி, இவ்வாறு வளர்ந்து, இவ்வாறு நலிவுற்றது என்று குறித்துக்கொண்டு அச்சமூகம் தோற்றியது முதல் நலிவுற்றது வரையிலான காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவது சிறப்பு.
காலத்தை வெட்டாதீர். காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வைத் தனித்தெடுத்துக் காலத்தைக் கணிக்கவேண்டும். அது ஒன்றின் முழுமையாக இருக்கவேண்டும். ஒரு மனிதனின் ஆயுட்காலம் போலவோ (தனிமனித வரலாறு) அல்லது ஒரு சமூகத்தின் ஆயுட்காலம் போலவோ (சமூகத்தின் வரலாறு) அது முழுமையானதாக இருக்கவேண்டும். தலையும் வாலும் சிதைந்திருந்தாலும் (தோற்றமும் முடிவும் தெரியவில்லை என்றாலும் கூட) அதன் உடலின் நீளத்தைக் கொண்டு காலத்தைக் கணிக்கவேண்டும். தனிமனித வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு ஐந்தாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம். சமூகத்தின் வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு ஐம்பதாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம்.
தமிழரின் சங்ககாலம்
தமிழர் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, நலிவுற்ற காலத்தைச் ‘சங்ககாலம்’ எனலாம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்குமுன் ‘கூடிப்பேசி முடிவெடுத்தல்’ என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம்.
செய்யுளைப் புலவர்கள் கூடிப்பேசி ஒப்புக்கொள்வதைச் சங்க இலக்கியங்கள் ‘புணர்கூட்டு’ என்று சுட்டியுள்ளன. புணர்தல் என்றால் கூடுதல். புணர்கூட்டு என்பது ஒருங்கிணைதல், சங்கமித்தல் என்ற பொருள்படும்.
சங்கு என்ற சொல்லிலிருந்து சங்கம் என்ற சொல் பிறந்துள்ளது. சங்கிலிருந்து எழும் ஒலியைச் சங்குநாதம் என்று கூறுவதில்லை – சங்கநாதம் என்று கூறுகிறோம். க,த,ந,ப,ம போல ‘ச’ வும் மொழிமுதல் வரும் என்று தொல்காப்பியர் சுட்டியுள்ளார். ‘பெயல் ஊழி’யைச் சங்கம் ஆண்டு என்று சுட்டுவது உண்டு. இங்குச் சங்கம் என்பது மிகப்பெரும் ஓர் எண்ணைக் குறிக்கிறது.
‘சங்கம்’ என்ற சொல் அசைவன, சங்கு, ஒருவகை வாச்சியம், கணைக்கால், கூடுகை, கூட்டம், சங்கநிதி, சங்கவாத்தியம், சங்குவளையல், சபை, திரள், நெற்றி, மிகுதியைக் குறிக்கும் அளவுப்பெயர், தொகுதி, பெருங்கூட்டம் எனப் பல்வேறு பொருள்படும். ‘சங்கம்’ என்பது பல்வேறு பொருள்களில் ஆளப்பட்ட தமிழ்ச்சொல்.
காலப்போக்கில் இனக்குழுத்தன்மை மாறினாலும் தமிழர் கூட்டமாகவே வாழ்ந்தனர். தனித்து வாழ்தல் என்பது தமிழர் மரபன்று. அந்தக் கூட்டு வாழ்க்கையின் ஒட்டுமொத்த காலநிர்ணயமே சங்ககாலம். அது பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தைக் குறிக்கின்றது என்பதனைத் தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் பல்வேறு சான்றாதாரங்களோடு நிறுவியுள்ளார். அக்காலக் கட்டமே சங்ககாலம் என்பதற்கு அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் பல ஆதாரங்களாக அமைகின்றன. அவை மண்ணில் புதையுண்டு நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. அவை அகழ்வாய்வின் வழியாக மீட்டெடுக்கப்பட்டுவருகின்றன. அவை அதிரும் எண்ணற்ற எளிய கேள்விகளுக்கு உறுதியான மெளன விடைகளாக, சாட்சியங்களாக விளங்குகின்றன.
சாட்சி – 1
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர். அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.
சாட்சி – 2
பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.
சாட்சி – 3
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.
நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும் சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
சாட்சி – 4
இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.
மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.
சாட்சி – 5
தமிழர்கள் கடலோடிகளாகவும் வாழ்ந்தனர். கடல்வணிகத்தில் சிறந்திருந்தனர். ஏற்றுமதியும் இறக்குமதியும் இருந்தகாரணத்தால் கிரேக்கநாடு, ரோமானிய நாடு, எகிப்து நாடு, பாரசீகநாடு, அரேபியா நாடு எனப் பன்னாட்டு வணிகர்களின் பயன்பாட்டுப் பொருட்களும் நாணயங்களும் அணி, மணிகளும் சோழர், பாண்டியர், சேரர் துறைமுகப்பகுதிகளில் நடத்திய அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
தமிழரின் கடல்வாணிகம் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 56, பதிற்றுப்பத்து – 2, முல்லைப்பாட்டு – 61-62, நெடுநல்வாடை – 101, அகநானூறு – 149 ஆகிய செய்யுள் அடிகளில் படித்தறியமுடிகின்றது.
சாட்சி – 6
தமிழர்கள் குகைகள், சமணப்பாழிகள், பானை ஓடுகள், தாழிகள், மோதிரங்கள், முத்திரைகள், கல்லாயுதங்கள் ஆகியவற்றில் தங்கள் பெயரையோ, குறிப்புகளையோ அல்லது ஒரு சிறு செய்தியையோ தமிழி எழுத்துகளில் எழுதிவைத்துள்ளனர். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டும் அதற்கும் முன்புமாகும்.
கரூர் மாவட்டம் புகழூர் அருகேயுள்ள ஆறுநாட்டார்மலையில் பதிற்றுப்பத்தில் குறிப்படப்பட்டுள்ள சேர அரசமரபினரின் ஏழு, எட்டு, ஒன்பதாம் பத்துக்குரிய அரசர்களின் பெயர்கள் (செல்வக்கடுங்கோ வாழி ஆதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை) எழுதப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டின் காலத்தை நடன. காசிநாதன் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள அறச்சலூர் என்ற இடத்தில் உள்ள கற்குகையில் இசைக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு. இக்கல்வெட்டின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்று நடன. காசிநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், சங்ககாலத்தின் இறுதியில் தமிழர்கள் தமிழிசையில் தேர்ச்சிபெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
மதுரை மாவட்டம் மாங்குளம் (மீனாட்சிபுரம் அல்லது அரிட்டாபட்டி) அருகே உள்ள ஓவாமலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு கல்வெட்டுகளுள் ஒன்றில் நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த நெடுஞ்செழியன் சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறாத பழைய நெடுஞ்செழியன் என்று தெரியவருகின்றது. மற்ற கல்வெட்டுகளின் செய்தியிலிருந்து பாண்டிய அரசு மற்றும் வணிகர்களின் ஆதரவோடு சமண முனிவர்கள் தங்கள் பள்ளிகளை அமைத்துக் கொண்டமையை அறியமுடிகின்றது. இக்கல்வெட்டுக்களின் காலத்தைக் கா. இராஜன் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்து மலைக்குகையில் “அந்துவன்“ என்ற பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. ‘அந்துவன்’ என்பவர் திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பாடியதாக அகநானூறு – 59ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.
வணிக முத்திரைகளிலும் மோதிரங்களிலும் குறவன், தாயன், தித்தன், வேட்டுவன், குட்டுவன்கோதை, மாக்கோதை, பெருவழுதி, கொல் இரும்பொறை, சாத்தன் போன்ற பெயர்கள் தமிழி (சங்ககாலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதப் பயன்பட்ட எழுத்துகளைத் தமிழி என்று அழைப்பர்) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் மட்டும் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற 250-க்கும் மேற்பட்ட பானையோட்டுத் துண்டுகளுள் ஒன்றில் கண்ணன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பானையோட்டின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
இந்த ஆறு வகைப்பட்ட மௌனத் தொல்சாட்சியங்களின் வழியாகச் சங்ககாலத்தைப் பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று உறுதிபடுத்த முடிகின்றது. அக்காலகட்டத்தில் தமிழர்கள் கூட்டமாக வாழ்ந்ததையும் அவர்கள் எழுத்தறிவும் வணிகஅறிவும் இலக்கியப் புலமையும் இசைநுட்பமும் பெற்றுச் சிறந்திருந்தனர் என்பதனையும் அறியமுடிகின்றது. சமணர்களின் செல்வாக்கும் நிலவியதை உணரமுடிகின்றது.