New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும் -BR. மகாதேவன்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும் -BR. மகாதேவன்
Permalink  
 


 மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 1

இந்தியாவில் கல்வி என்பது பிரிட்டிஷாரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகளால்.

இதுதான் இந்தியக் கல்வி பற்றிப் பெரும்பாலானோருடைய மனதில் கல்வெட்டுபோல் அழுத்தமாகப் பதிந்திருக்கும் வாசகங்கள். ஒரு பொய்யானது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தால் காலப்போக்கில் அது உண்மையாகிவிடும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.

கொஞ்சம் தாராள மனம் கொண்டவர்கள் இந்தியாவில் கல்வி பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால், அது பிராமண, சத்ரிய, வைசிய சாதிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. அதிலும் பிராமணர்கள் மட்டுமே கல்வியின் முழுப் பயனையும் அனுபவித்து வந்திருந்தார்கள் என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்ட 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலைமை அதுதான் என்றாலும் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் அதை கண்டனத்துக்குரியதாகச் சொல்வார்கள். (ஆனால், உண்மையில், இந்தியாவில் அதற்கு முன்பு கல்வி, அனைவருக்கும் தரப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்). அந்த 17-18-ம் நூற்றாண்டுவரை இந்தியா உலகப் பொருளாதார வல்லரசாக இருந்துவந்திருக்கிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இருந்திருக்கிறது. தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. இலக்கியம், ஓவியம், இசை, கட்டடக்கலை போன்றவற்றில் உச்சத்தை எட்டியிருக்கிறது.

ஆனால், அந்த இந்தியாவானது கல்வி அறிவு இல்லாத தேசம். சாதி வெறிபிடித்த தேசம். பெண்ணடிமை நிறைந்த பகுதி. கணவன் இறந்ததும் மனைவியும் உடன் கட்டை ஏறிவிடுவார்கள். இந்தியா காட்டுமிராண்டிகள் வாழும் தேசம். யானை, பாம்பு, குரங்குகள் நிறைந்த நாடு. கிட்டத்தட்ட இந்தியாவை ஓர் விசித்திர பொருட்காட்சி சாலையாக, சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் போக்குதான் மேற்கத்தியர்களுக்கு இருந்தது. அப்படியான ஓர் இந்தியாவைத்தான் அவர்கள் விரும்பினார்கள். எனவே, அதையே அவர்கள் கண்டடையவும் செய்தார்கள். ஆனால், உண்மையான இந்தியா என்பது முற்றிலும் வேறானதாக இருந்தது.

உடன்கட்டை ஏறுதல் தவறான நடைமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரிட்டிஷார் சொன்னதுபோல் அது அவ்வளவு அதிகமாகவோ நாடு முழுவதுமோ இருந்ததில்லை. அது இந்திய நாடு முழுவதும் இருப்பதாகவும், இந்து மதம் அதை நிர்பந்திப்பதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. ‘சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்து ஹிந்துக்களும் (எந்தப் படிநிலையில் இருப்பவராக இருந்தாலும்) உடன்கட்டை ஏறுவதைப் புனிதமானது என்றே எண்ணுகிறார்கள்’ என்பதுதான் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்க அரசாணை பிறப்பித்த வில்லியம் பென்டின்க் பிரபுவின் கண்டுபிடிப்பாக இருந்தது. அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் தரவில்லை. அவருடைய இந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், உடன்கட்டை ஏறுவதை உயர்வாக எண்ணும் மனோபாவம் இருந்தது என்பதுதான் தெரியவருகிறதே தவிர அதையேதான் அனைவரும் பின்பற்றினார்கள் என்று அல்ல. நாம் உயர்வாக நினைக்கும் அனைத்தையும் செய்வதில்லையே! அப்போதைய ஆவணங்களிலும் உடன்கட்டை ஏறுதல் மிகக் குறைவாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் இருக்கின்றன.

உடன்கட்டை ஏறும் வழக்கம் சில வகுப்பினரிடையே, அதுவும் சில குடும்பங்களில் மட்டுமே இருந்திருக்கிறது. வட மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு இடங்களில் இந்த வழக்கம் வெகு சொற்பமே. 1815-1828 இடையேயான பதின்மூன்று ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட உடன்கட்டை ஏறல்களில் 63 சதவிகிதம், கல்கத்தாவைச் சுற்றி நடந்திருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால் அந்தப் பகுதி அப்போது ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது. 63% என்றதும் ஏதோ பெரிய அளவு என்றுதான் தோன்றும். ஆனால், 1824ல் பிரிட்டிஷார்களாலேயே தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வங்காள மாநிலத்தில் விதவைகளான 250,000 பெண்களில், சிதையில் ஏறியவர்களின் எண்ணிக்கை 600 தான். அதாவது 0.2 சதம் தான்.

வாரணாசி பற்றிய புள்ளிவிவரங்கள் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தரும். 1820க்கும் 1828க்கும் இடையேயுள்ள ஒன்பது ஆண்டுகளில், 125 பேர்தான் உடன்கட்டை ஏறினார்கள். ‘உடன்கட்டை ஏறுவது மதரீதியான கட்டாய வழக்கமாக இருந்திருக்கவில்லை; இந்தியா முழுதிலும் அது நடைமுறையில் இருந்திருக்கவும் இல்லை’ என்று வாரணாசியின் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இவைதான் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மைகள். ஆனால், ஹிந்துக்களின் வாழ்க்கை நெறியைப் பழிக்கவும் தங்களுடைய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கும் ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தைப் பெரிதுபடுத்திவிட்டார்கள். உடன்கட்டை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்ததும், மத போதகர் வில்லியம் கேரி, ‘…கடந்த இருபது நூற்றாண்டுகளில் முதன்முறையாக, இரத்தம் கலக்காமல் கங்கை கடலைச் சென்றடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.

இந்த சொற்ப எண்ணிக்கை என்பது மட்டுமல்லாமல் உடன்கட்டை ஏறுதல் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட விஷயம். அதை ஆணாதிக்கம் என்று மட்டுமே பார்ப்பது மிகவும் பிழையான பார்வை.

எதிரி மன்னனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட போரில் கொல்லப்பட்டுவிட்ட கணவனுடன் சேர்ந்து தீயில் இறங்குவது மேல் என்று நினைத்த ராணிகள் உண்டு. சுமங்கலிகளுக்குக் கிடைக்காத பாக்கியமாகப் பெண்கள் பெருமிதமாக நினைத்ததுண்டு என்று கி.ராஜநாராயணன் தன் கோபல்ல கிராமத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அனுமரணம் என்ற பெயரில் பழங்காலத்தில் ஒருவர் இறந்ததும் அவருடைய மனைவி மட்டுமல்லாமல், அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த உறவினர்கள், நண்பர்கள், பணியாட்கள் என பலரும் உடன்கட்டை ஏறியிருக்கிறர்கள். இன்றும்கூட கொள்கைக்காகவும் தலைவருக்காகவும் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. அரசியல்வாதிகளின் சுயரூபங்களும் பச்சோந்தித்தனங்களும் வெகுவாக அம்பலமாகிவிட்ட நிலையிலும் விசுவாசமான அப்பாவித் தொண்டர்கள் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் நிதானமாக ஆராய வேண்டிய ஒன்று. ஆனால், கலகம் செய்பவர்களையும் அடங்க மறுப்பவர்களையும் விட்ச் ஹண்டிங் என்ற பெயரில் தீயில் தள்ளி எரித்த பின்னணியில் இருந்து வந்த பிரிட்டிஷாருக்கு உடன்கட்டை ஏறுதல் ஒரு ஆணாதிக்கச் செயலாக மட்டுமே பட்டதில் வியப்பில்லை. ‘காட்டுமிராண்டிகளை ரட்சிக்க’ அவர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக அதை பூதாகரப்படுத்தினார்கள். அதுவே இன்று உண்மையாக நம்பப்பட்டுவருகிறது.

இதேபோலத்தான் கொள்ளைக்காரர்களைப் பற்றி (Thug) காலனி ஆட்சியால் பெரிதுபடுத்தியும் திரித்தும் கூறப்பட்டது. இந்தக் கொள்ளைக்காரர்கள் சாதாரணமான திருடர்கள்தான். ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்டதில் பத்து சதவிகிதம்கூட அவர்கள் கொடூரமானவர்கள் அல்ல. வட இந்தியாவில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்தான் அவர்கள் இருந்தனர் (சம்பல் கொள்ளைக்காரர்களைப் போல). அவர்கள் பெரிய சமூக விரோதிகள் எனப் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டதால், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, முழு இந்திய மக்களுமே அந்தக் கொடிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று எண்ணத் தோன்றும். அவர்களது ரகசியமான, கொலைகார நடவடிக்கைகளைப் பற்றி நாடகங்களும் நாவல்களும் உருவாக்கப்பட்டன. ‘தக்’ என்னும் வார்த்தையையும் ஆங்கில அகராதியில் சேர்த்துக்கொண்டனர்.

விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, இந்தியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பிறந்ததும் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவார்களாமே என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இந்தியா குறித்த பிழையான சித்திரம் எப்படி இத்தனை காலம் நிலைபெற்று வந்திருக்கிறது என்பதற்கான விடை தெரியவேண்டுமானால், இந்தியாவின் வரலாறாக நாம் படித்துவருவது யார் எழுதிய வரலாறை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டாலே போதும். கடந்த காலத்தைத் தெரிந்துகொள்வதன் நோக்கம் நிகழ்காலத்தை சீரமைத்து, வரும் காலத்தை வளமாக்குவதுதான். நேற்றைய இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்பது இன்றைய இந்தியாவை மேம்படுத்த உதவுமென்றால் அந்தவகை புரிதலையே ஏற்றுக்கொள்ளவேண்டும். நேற்றைய இந்தியா மிகவும் தவறானது என்ற பார்வை ஒருவேளை நாளைய இந்தியாவை மேம்படுத்த உதவும் என்றால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இரண்டின் நோக்கமும் நாளைய இந்தியாவை வளப்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.

ஆக்குதல் அதுவே நோக்கம். அழித்தல் அல்ல; சீரமைத்தல் அதுவே இலக்கு. சீர் குலைத்தல் அல்ல. இதுதான் வரலாறு எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவின் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

0

வரலாறு என்பதை, நடந்ததை நடந்த விதத்திலேயே பதிவு செய்யும் ஆவணம் என்று ஒரு வசதிக்காக வரையறுக்கலாம். அதன் அடிப்படையில் பார்க்கும்போது திருநெல்வேலியின் வரலாறு என்ற நூலை எழுதிய பிஷப் கால்ட்வெல் சொன்னதுபோல் இந்தியர்களுக்கு சரித்திர பிரக்ஞை மிகவும் குறைவுதான். பழங்கால மன்னர்களைப் பற்றி புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களை வரலாற்று ஆதாரமாகக் கொண்டால் தொலைந்தோம்! கிட்டத்தட்ட அந்தப் பெயரில் ஒருவர் வாழ்ந்தார் என்பதை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். மற்றவை கலை அழகு, கற்பனை.

உலகில் பழங்காலத்தில் எழுதப்பட்ட எல்லா சமூக வரலாறுகளிலும் இப்படியான கற்பனை கலந்துதான் இருந்திருக்கிறது. எனவே, நமது வரலாற்று அணுகுமுறையைப் பற்றி விமரரிசிக்கும்போது அதே காலகட்டத்தில் உலகில் பிற பகுதிகளில் நிலைமை எப்படி இருந்தது என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் நம்மைப் பற்றி நாம் எழுதியதில் சுய பெருமிதம் கலந்து இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, நமது வரலாறு அந்தவகையில் அந்நியர்களின் வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால், அந்நியர்கள் எழுதும் விஞ்ஞானபூர்வ வரலாறும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தகுந்ததல்ல.  ஏனென்றால், அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் அவர்களுடைய அரசியல் நலனே வெளிப்படையாகவோ மறைவாகவோ பொதிந்து காணப்படும். ஆனால், நாம் அந்தத் தவறைத்தான் செய்கிறோம்.

வரலாற்று நதி மீது நாம் பிரிட்டிஷாரின் படகைக் கொண்டு பயணம் செய்கிறோம். அது, நதியின் கரையில் இருக்கும் சொற்ப பாழ் நிலங்களையும் முள்ளும் புதரும் நிறைந்த சதுப்பு நிலங்களையும் மட்டுமே வெகு அருகில் கொண்டு சென்று காட்டும். நதிக்கரையோர நந்தவனங்களையும் தோப்புகளையும் வயல்வெளிகளையும் வெகு தூரக்காட்சிகளாக இருண்ட பின்னணியில் காட்டிவிட்டுச் சென்றுவிடும். அவர்கள் நம் கையில் தரும் தொலைநோக்குக் கருவியும் விசித்திரமான ஒன்று. நாயை ஓநாயாகக் காட்டும் தன்மைகொண்டது.

நம் முன்னே இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒன்று சுய பெருமிதமும் கற்பனையும் கலந்தது. இன்னொன்று அரசியல் உள்நோக்கம் மிகுந்தது. உண்மை என்பது இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. அந்நியர்களில் அரசியல் நோக்கம் இல்லாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் நம்மவர்களில் மிகைப்படுத்தாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் பார்த்து இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாகப் போக வாய்ப்புக் கிடைக்கும்.

0

இது பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நம் மனதில் தோன்றவேண்டியவர்களில் முக்கியமானவர் தரம்பால். காந்தியவாதியான தரம்பால், ஒரு வித்தியாசமான கலவையிலானவர். இந்தியா மீது பெருமிதம் கொண்ட நபர். அதே நேரம் ஆங்கிலேயரைப் போல் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை முன்வைத்துப் பேசக்கூடியவர்.

இந்தியாவில் பழங்காலத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதை மிக அழுத்தமாக, மிக விரிவாக பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களைக் கொண்டு இவர் விவரித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, அவர் முன்வைத்திருக்கும் தரவுகளில் பெரும்பான்மை மதராஸ் பிரஸிடென்ஸியைச் சார்ந்தவை. இருந்தும் அந்த ஆவணங்கள் போதிய கவனத்தை இந்தியாவில், ஏன் தமிழகத்தில் கூடப் பெறவில்லை. அதற்கான காரணம் மிகவும் எளிமையானது.

முதலாவதாக அந்த ஆவணங்கள் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது பிரிட்டனில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிடச் சிறப்பானதாக இந்தியாவில் இருந்திருக்கிறது என்று சொல்கிறது.

இரண்டாவதாக, அந்தக் கல்வி பெற்றவர்களில் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்று சொல்கிறது.

பொய்களால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த உண்மையை தரிசிக்க நீங்கள் தயாரா? தரம்பாலின் வழிகாட்டலில் இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அலசுவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும் -BR. மகாதேவன்
Permalink  
 


அழகிய மரம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 2

தொடரைத்தொடர்வதற்கு முன் சில விளக்கங்கள்.

நமது கடந்த காலம் பற்றிய சரியான மதிப்பீடு நம்மிடம் இல்லை. இதுதான் இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நான் சொல்லவருவது. இரண்டாம் பாகத்தில் நம் இன்றைய வரலாறு எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பது பற்றி எழுதவிருக்கிறேன்.

நேற்று அந்நியர்களால் நம் வரலாறு திரிக்கப்பட்டது. இன்று நம் வரலாறு (அதாவது இன்றைய நிகழ்காலம்) அந்நியர்களின் மறைமுக அடிவருடிகளால் பாழடிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தொடரில் இந்த இரண்டையும் முடிந்தவரை விரிவாகப் பேச விரும்புகிறேன். அந்தவகையில் தொடரின் தலைப்பு உண்மையில் மறைக்கப்பட்ட (படும்) இந்தியா என்று இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் காட்டும் இந்தியா அல்ல உண்மை இந்தியா என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதையும் இந்தத் தொடரில் பேச விரும்புகிறேன். எனவே, இது கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசும் தொடர் அல்ல. நிகழ்காலத்தோடு தொடர்புடையதும் கூட.

முதல் பாகத்தில் நம் பாரம்பரியக் கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் எழுதவிருக்கிறேன். காந்தி நம் கல்வி முறையை பிரிட்டிஷார் சீரழித்ததாகச் சொன்னது, பிரிட்டிஷ் தரப்பில் இருந்து அதற்கு எழுந்த எதிர்ப்புகள், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் அதற்குத் தந்த பதில், பிரிட்டிஷாரின் ஆவணத்தின்படி இந்தியாவில் கல்வி பிரிட்டிஷாருக்கு முன் எப்படி இருந்தது, பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது பிரிட்டனில் கல்வி எப்படி இருந்தது என்பவை கல்வி பற்றிய பகுதியில் இடம்பெறும். அதன் இறுதியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமா… அனைவருக்கும் கல்வியின் பயன் கிடைக்க வேண்டுமா எது நம் இலக்காக இருக்க வேண்டும்? மேல்சாதியினருக்கு ஆர்வத்துடன் சேவகம் செய்யும் தலித் மருத்துவரை உருவாக்குவதா? தலித்களுக்குச் சென்று சேவை செய்ய முன்வரும் மேல் சாதி மருத்துவரை உருவாக்குவதா? எது நம் கல்வியின் இலக்காக இருக்க வேண்டும், கல்விக்கும் வளமான வாழ்க்கைக்குமான தொடர்பு பற்றிய நம் புரிதல் எவ்வளவு சரி? கல்வி என்பதன் மூலம் உண்மையில் எதைச் சொல்கிறோம் என்பவை இடம்பெறும்.

அதன் பிறகு பாரதப் பொருளாதாரம் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் எப்படி இருந்தது என்ற பகுதி. அடுத்ததாக தொழில்நுட்பத்தில் அறிவியல் துறைகளில் என்னென்ன சாதனைகள் நம்மால் செய்யப்பட்டிருந்தன என்ற பகுதி இடம்பெறும். கடைசியாக சாதிய அமைப்பு பற்றிய நம் புரிதல் எந்த அளவுக்கு சரி என்பது இடம்பெறும். இப்போதைக்கு இந்தத் தொடரின் முதல் பாகத்தை இப்படியான நான்கு பெரிய விஷயங்களில் நமது கடந்த கால சாதனைகள் என்ன… அவை எப்படியெல்லாம் நன் நினைவின் அடுக்குகளில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதத் தீர்மானித்திருக்கிறேன்.

கூட்டு விவாதம் என்ற வகையிலேயே இதை முன்னெடுத்துச் செல்லவிரும்புகிறேன். கூடுமானவரை அந்தந்த வாரத்தில் கட்டுரையில் பேசப்படும் விஷயம் சார்ந்தே உரையாடல்கள் இருந்தால் உபயோகமாக இருக்கும். வேறு ஏதாவது புதிய விஷயம் பற்றிப் பேசவிரும்பினால் தெரியப்படுத்துங்கள். அதையும் கவனத்தில் கொள்கிறேன்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் ஒரு இந்துத்துவவாதி. இந்தியர்களின் நலனைக் குறிக்கோளாகக்கொண்ட இந்துத்துவவாதி.

அந்தவகையில் இந்து அடிப்படைவாதத்தையும் நான் இந்திய விரோத சக்தியாகவே பார்க்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் காரணம் காட்டி இந்து அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதைக் கண்டிக்கவே செய்கிறேன். அது அளவில் குறைவுதான் என்றாலும் அதுவே எனக்கு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது.
அனைத்து மதங்களில் இருக்கும் அடிப்படைவாத சக்திகளை அனைத்து மதங்களில் இருக்கும் நல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைத்து எதிர்க்கும் அரசியலையே என்னுடையதாக முன்வைக்கிறேன். இது ஒன்றும் என்னுடைய புதிய கண்டுபிடிப்பல்ல. காந்தி காட்டிய வழிதான். உலகுக்கு அஹிம்சையையும் நல்லிணக்கத்தையும் பரிசாகக் கொடுத்துவிட்டு நாம் நமக்குள் சண்டையிட்டு மடிவதில் எனக்கு உடன்பாடில்லை.

0

இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் ஆவணங்களில் எப்படியும் அவர்களுடைய அரசியல் நோக்கம் பொதிந்திருக்கும் என்று சொல்லிவிட்டு அதையே ஆதாரமாகக் கொடுப்பது ஏன்? பிரிட்டிஷார்கள் எழுதிய ஆவணங்களை இரண்டு வகையாகப் பார்க்கவேண்டும். அவர்கள் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக எழுதியவை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பதிவு செய்தவை. இந்த இரண்டுமே அவர்களுடைய நோக்கங்களில் இருந்த வேறுபாட்டின் காரணமாக அதற்கான மரியாதையோடு அணுகப்படவேண்டியவை.

பொதுவாகவே, இந்தியாவின் வரலாறு என்பது பெரும்பாலும் இங்கு பயணம் மேற்கொண்ட அந்நியர்களால் எழுதப்பட்டவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். பிரிட்டிஷாருக்கு முன்னால் கிரேக்க, சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகளை வைத்துதான் தட்சசீலா, நாலந்தா பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இஸ்லாமியர்களால் எழுதப்பட்ட வரலாறும் கிடைத்திருக்கிறது. ஐரோப்பியர்களின் வருகை 15-16-ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்திய வாழ்க்கை முறை, தத்துவங்கள், கலைகள், கல்வி என நம் வாழ்வின் பன்முக அம்சங்கள் குறித்த எந்தவித புரிதலும் இல்லாதவர்கள் அவர்கள். முற்றிலும் அந்நியமான தேசத்தில் இருந்து வந்து தங்களுடைய முன்முடிவுகள், புரிதலுக்கு ஏற்ப நம்மைப் பற்றி எழுதி வைத்தார்கள்.

வர்த்தக நோக்குடன் இங்கு கால் பதித்த பிரிட்டிஷார், முதலில் இந்தியாவின் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினார்கள். அதற்காக மிகவும் விரிவாக களப்பணிகள் செய்து தகவல்கள் சேகரித்திருக்கிறார்கள். இந்தியாவின் தொழில்நுட்பம், விவசாயம், கலைகள், கல்வி என எல்லாவற்றின்மீதும் ஒருவித மரியாதை அப்போது அவர்களுக்கு இருந்தது. மத மாற்ற நோக்கமும் கூடவே கலந்துதான் இருந்தது. வரும் வழியில் கடலில் இருந்த நண்டைக்கூட சிலுவை நண்டு என்று மதம் மாற்றிதான் வந்திருக்கிறார்கள். என்றாலும் அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரமான செயல்கள் அவர்கள் மனத்தில் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருந்தன. ஒட்டுமொத்தமாக ஒரு நாகரிகத்தை, கலாசாரத்தை அழித்துவிடும்போது அந்த மக்கள் காலகாலமாகச் சேர்த்துவைத்த அறிவும் அவர்களோடு அழிந்துவிடுகிறது என்ற உண்மை அப்போது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மெக்கனாக்கி போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்திய எடின்பர்க் என்லைட்மெண்ட் எனப்படும் அந்த அறிவியக்கம் இந்தியா விஷயத்தில் கொஞ்சம் இதமாக நடந்துகொள்ள வைத்திருந்தது.

உண்மையில் இந்தியாவில் என்னென்ன இருக்கின்றன என்பதை முழுவதுமாகப் பதிவு செய்யவேண்டும். அவற்றில் இருந்து எதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. எங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. என்றாலும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து விஷயங்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பிவந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியாவைப் பற்றி பதிவு செய்தவற்றை ஓரளவுக்கு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். இத்தகைய தகவல்களிலும் அவர்களுடைய ரத்தத்தில் ஊறிய இன மேட்டிமை மனோபாவம் கலந்திருக்கும். என்றாலும் இவை ஓரளவுக்கு இந்தியாவின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுபவை.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முந்தைய அணுகுமுறைக்கும் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகான அணுகுமுறைக்குமான வித்தியாசத்தை வில்லியம் பென்டின்க் பிரபுவின் (Lord William Bentinck) வாசகங்கள் தெளிவாக நமக்கு விளக்கும். 1813-ல் உடன்கட்டை ஏறலை சட்டபூர்வமாக அங்கீகரித்து பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. இந்திய பாரம்பரியத்திலேயே உடன்கட்டை ஏறலுக்கு முதன் முதலாக சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டது அப்போதுதான். இந்து மத சாஸ்திரங்களில் அதற்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை என்று ராஜா ராம் மோகன்ராய் உட்பட பலரும் எத்தனையோ முறை எடுத்துச் சொன்ன பிறகும் பிரிட்டிஷ் அரசு அந்த செயலுக்கு சட்ட அங்கீகாரம் தந்தது. அதன் பிறகு 1829-ல் அதை ரத்து செய்து முற்போக்கானவர்களாகக் காட்டிக் கொள்ளவும் செய்தது. அந்தச் சட்டத்தைப் பிறப்பித்த வில்லியம் பெண்டின்க் பிரபு சொன்னதன் சாராம்சம்: இதுவரை நமக்கு பலம் குறைவாக இருந்தது. பல விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது நமக்கு போதிய அதிகாரம் கைக்கு வந்துவிட்டிருக்கிறது. எனவே, இனி மேல் நாம் இதை வெளிப்படையாகத் தடுக்கலாம்.

இந்த அணுகுமுறைதான் இந்திய நிலைமை பற்றி எழுதிய ஆரம்ப ஆவணங்களில் சாதகமான முறையில் தென்படுகிறது. அதில் இருந்துதான் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் பொருளாதார வல்லரசாக பாரதம் இருந்திருக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது. அதை பிரிட்டிஷார் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் மாற்றிக்கொண்டு இந்தியர்களும் நாய்களும் இங்கு நுழையக்கூடாது என்று கர்ஜிக்கும் அளவுக்குச் சென்றார்கள்.

உலகப் பொருளாதாரத்தில் நாடுகளின் பங்களிப்பு (பொதுயுகம் : 0 வாக்கில்)

நாடுகள் / பகுதிகள்  – சதவிகிதம்

மொத்த மேற்கு ஐரோப்பா –  10.8
கிழக்கு ஐரோப்பா –  1.9
முன்னாள் சோவியத் ரஷ்யா- 1.5
மொத்த மேற்கத்திய கிளைநாடுகள் – 0.5
மொத்த லத்தீன் அமெரிக்கா – 2.2
ஜப்பான் – 1.2
சீனா – 26.2
இந்தியா – 32.9
பிற ஆசிய நாடுகள் – 16.1
ஜப்பான் தவிர்த்த மொத்த ஆசியா – 75.1
ஆப்பிரிக்கா –  6.8

ஆதாரம் : ஆங்கஸ் மேடிசன், ஐரோப்பிய பொருளாதார வரலாற்று நிபுணர்

உலக உற்பத்தித் துறையில் நாடுகளின் பங்கு – 1750-ல்

நாடு – சதவிகிதம்

ஐரோப்பா முழுவதும் – 23.2
பிரிட்டன் – 1.9
ஹாஸ்பர்க் பேரரசு – 2.9
பிரான்ஸ் – 4.0
இத்தாலிய அரசுகள் – 2.4
ரஷ்யா – 5.0
அமெரிக்கா – 0.1
ஜப்பான் – 3.8
சீனா – 32.8
இந்தியா – 24.5

ஆதாரம்: யேல் பல்கலை பேராசிரியரும் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியருமான பால் கென்னடி

அப்படியாக பிரிட்டிஷாரின் ஆவணங்களில் இருந்து இரண்டு வகையான இந்தியா பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால், நம்மைப் பற்றி மோசமாக அவர்கள் எழுதிவைத்த காலகட்டத்து வரலாறையே அவர்கள் வெளிச்சத்துக்கொண்டு வந்து நம்மை மூளைச் சலவை செய்துவிட்டார்கள். நம்மைப் பற்றிய உண்மையான வரலாறை லண்டனின் பிரமாண்ட நூலகங்களின் மூடிய அறைகளுக்குள் போட்டுப் பூட்டிவிட்டார்கள். நாமும் நம்முடைய உண்மையான கடந்த காலத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், அவர்கள் நம்மைப் பற்றித் தீட்டிய பிழையான சித்திரத்தையே சுமந்துகொண்டிருக்கிறோம்.

நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி காலகட்டத்தில் உலகின் பிற இடங்களில் மக்கள் திரள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தார்களோ அதைவிட மேலான ஒரு வாழ்க்கையையே இந்தியர்களாகிய நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம்.  ஆனால், தொழில் புரட்சி ஏற்பட்டு, காலனிய ஆதிக்கம் ஏற்பட்டு முதலாளித்துவ சமுதாயம் உருவான பிறகு நாம் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறோம்.  ஐரோப்பியர்கள் தங்களுடைய நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி காலகட்டத்தின் அனைத்து எதிர்மறையான அம்சங்களையும் வெகு எளிதில் பின்னுக்குத் தள்ளிவிட்டு நவீன உலகத்துக்குள் மிகவும் நல்லவர்கள் போல் காலடி எடுத்துவைத்து நுழைந்திருக்கிறார்கள். மனித சமூகப் பரிணாம வளர்ச்சியில் மன்னராட்சி காலம் என்பது அதன் குறைகளோடும் நிறைகளோடும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய காலகட்டம். ஒருவகையில் அது தவிர்க்க முடியாத காலகட்டம். ஐரோப்பியர்கள் தங்களுடைய கடந்தகாலத்தை அப்படியான புரிதலோடுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித மலத்தை மனிதனே அள்ளியதில் ஆரம்பித்து கல்வியானது மேட்டுக்குடிகளுக்கு மட்டுமேயாக இருந்ததுவரை அவர்களும் வழக்கமான வழியில்தான் பயணித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால், பிற பகுதிகளை வென்று அடிமைப்படுத்தியதும் காலனிய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் கடந்த காலத்தை இழிவானதாக, காட்டுமிராண்டித்தனமானதாகச் சித்திரித்து ஒட்டுமொத்தமாகத் திரித்துவிட்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த உலகம் முழுவதையும் தன் காலடியில் கொண்டுவரும் நோக்கில் அரசியல் ரவுடிகளாக, அராஜகவாதிகளாக வலம் வந்தவர்கள் தங்கள் கடந்தகாலம் குறித்து துளிகூட குற்றவுணர்ச்சி கொள்வதில்லை. ஆனால், அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவர்களுடைய கடந்த காலம் காலில் கட்டப்பட்ட பெரும் பாறாங்கல்லாக ஒவ்வொரு நகர்வையும் சீர்குலைக்கும் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவும் நவீன காலகட்டத்துக்குள் மிகவும் இயல்பாகவே நுழைந்திருந்தால்அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாத நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி கால அம்சங்கள் தென்னை மரத்தின் மடல் உதிர்வதுபோல் மிக இயல்பாகவே உதிர்ந்திருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக, நமது கடந்த காலத்தைப் பழிப்பதும் மேற்கத்தியமயமாக்கத்துக்கு ஆளாவதும்தான் நமது நவீன முகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒருவர் முற்போக்கானவர் என்றால் அவர் நம் பாரம்பரியத்தைப் பழிக்க வேண்டும். பாரம்பரியத்தைப் புகழ்கிறார் என்றால் அவர் பிற்போக்கானவர் என்ற எளிய சூத்திரம் மிக அழுத்தமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்குமான காரணம் நம் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமலும் உலக வரலாற்றோடு அதைப் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளாமலும் இருப்பதுதான்.

இந்தியா தன்னுடைய இந்தியத்தன்மையை இழந்தால்தான் நாகரிகமயமாக முடியும் என்பதுதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் நோக்கம். ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா நூலை எழுதிய ஜான் ஸ்டூவர்ட் மில்-க்கு பயன்பாடுதான் அனைத்து செயல்களின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. வில்பர்ஃபோர்சைப் பொறுத்தவரை அவர் விரும்பும் வகையிலான கிறிஸ்தவம்தான் இந்தியாவை ரட்சிக்கும் என்று நம்பினார் (இயேசுவையே சர்ச்சுக்கு ஏற்ப மதம் மாற்றியவர்கள் அவர்கள். வேறு எப்படி சிந்திக்க முடியும் அவர்களால்?). மெக்காலேயைப் பொறுத்தவரை இந்தியா ஆங்கிலமயமானால்தான் உருப்படும் என்று நம்பினார். கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரை மேற்கத்தியமயமாவதுதான் இந்திய மீட்சிக்கான ஒரே வழி. ஆக, இந்தியாவை இன்றும் வழி நடத்திச் செல்லும் கோட்பாடுகளாக இவையே வெவ்வேறு வடிவங்களில் நீடித்துவருகின்றன.

ஐரோப்பிய மேலாதிக்க மனோபாவத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த உலகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்தது. அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் அடைந்த இழப்பை ஒப்பிடும்போது இந்தியாவின் இழப்பு குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

அமெரிக்காவின் பூர்வகுடிகள் கிட்டத்தட்ட முற்றாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். கலை, பண்பாட்டு இழப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்கள் திரளும்அழிக்கப்பட்டது. பொது யுகம் 1500 வாக்கில் இருந்த அமெரிக்க பூர்வகுடிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. 19-ம் நூற்றாண்டு வாக்கில் அந்த மக்கள் தொகை சில மில்லியன்களாகக் குறைந்திருந்தது.

இந்தியாவிலும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கொடூர ஒடுக்குமுறைகள் தடம் பதித்திருந்தன. 19-ம் நூற்றாண்டு வாக்கில் இது தொடர்பான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.  கார்ல் மார்க்ஸ் இந்தியாவில் இங்கிலாந்து செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் பற்றி 1853-ல் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார் : இங்கிலாந்துக்கு இரண்டு முக்கிய லட்சியங்கள் இருக்கின்றன. ஒன்று, மேற்கத்திய பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் ஆக்க வேலை. இன்னொன்று, பழங்கால ஆசிய சமுதாயத்தைச் சீர் குலைக்கும் அழிப்பு வேலை.

இப்படியான பிரமாண்ட சதித் திட்டத்துக்கு எதிராக இந்தியாவில் இருந்து உருவான குரல்தான் காந்தியின் குரல். அதைத்தான் வட்ட மேஜை மாநாட்டுக்கு லண்டனுக்குப் போயிருந்தபோது அங்கிருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் 1930-ல் நடைபெற்ற கருத்தரங்கில் காந்தி ஒலித்தார். அதில், கல்வியில் இந்தியா பின்தங்கிப் போனதற்கு பிரிட்டிஷாரின் ஆட்சிதான் காரணம் என்று சொன்னார்.

இன்று இந்தியா எந்த அளவுக்கு கல்வி அறிவு குறைந்ததாக இருக்கிறதோ அதுபோல் 50-100 வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் நிர்வாக இயந்திரமானது, இந்தியாவில் நிலவிய பாரம்பரிய கல்வி மற்றும் பிற வழிமுறைகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. மண்ணைத் தோண்டி வேர்களை ஆராயத் தொடங்கினார்கள். அதன் பிறகு அதை அப்படியே திறந்த நிலையிலேயே போட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரமானது மெள்ள மட்கி அழிந்துவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 பிரிட்டன் வருகைக்கு முந்தைய கல்வி நிலை

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் – 3

லண்டனில் 1931-ல் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸ், சாட்டம் ஹவுஸில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் காந்தியடிகள் உரையாற்றினார். அதில், இந்து, முஸ்லிம், சீக்கியப் பிரச்னை பற்றிப் பேசினார். தீண்டாமை பற்றிப் பேசினார். மோசமாகிக் கொண்டே போகும் இந்தியாவின் ஏழைமை பற்றிப் பேசினார். இந்திய மக்கள் தொகையில் 85% பேர் வசிக்கும் கிராமங்களின் நிலை பற்றிப் பேசினார். பிரச்னைகளைப் பட்டியலிட்டதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ‘ஆக்கபூர்வமாக நாம் செயல்படவேண்டியிருப்பதோடு சிலவற்றை அழிக்கவும் வேண்டியிருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது ராணுவ, அரசு நிர்வாகச் செலவுகள். என்னிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால் இந்த செலவுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிடுவேன்’ என்று கூறினார். அரசு நிர்வாகச் செலவு என்று எதைச் சொன்னார் தெரியுமா… பிரிட்டனில் பிரதமருக்கு அப்போது தரப்பட்ட சம்பளம் சராசரி மனிதருக்குக் கிடைத்ததைவிட ஐம்பது மடங்கு அதிகமாக இருந்தது. இந்தியாவிலோ வைஸ்ராயின் சம்பளம் இந்திய சராசரிக் குடிமகனைவிட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருந்தது!

அந்த உரையில்தான் இந்தியாவின் கல்வி தொடர்பான தன் மனப்பதிவையும் காந்தியடிகள் தெரிவித்தார். காந்தியடிகளிடம் புள்ளிவிவரங்கள் இருந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பாரம்பரியக் கல்வி பற்றியும் அது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் அழிக்கப்பட்டது பற்றியும் இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் அவருக்குத் தெரியவந்திருந்தது.

பிரிட்டிஷாரின் தரப்பில் இருந்து காந்தியடிகள் சொன்ன கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் Auxiliary Committee of the Indian Statutory Commission-ன் சார்மன் பிலிப் ஹார்டாக் (Philip Hartog) அவர்களில் மிக முக்கியமானவர். 1918-ல் இருந்து 1930 வரையில் பிரிட்டிஷ் அரசு நியமித்த பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராகவும் பிலிப் இருந்திருக்கிறார். அந்த மாநாட்டிலேயே காந்தியடிகளைக் கேள்வி கேட்ட அவர் காந்தியுடன் மிகவும் விரிவாக கடிதப் போக்குவரத்தும் மேற்கொண்டார். காந்தியிடம் தன் கூற்றை நியாயப்படுத்தும்படியான ஆதாரங்களைக் கேட்டார்.

காந்தி சுதந்தரப் போராட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாலும் அடுத்த பல ஆண்டுகளை சிறையில் கழிக்க நேர்ந்ததாலும் அந்த ஆவணங்களைச் சேகரிப்பது சிரமமானதாக இருந்ததாலும் காந்தியால் கடைசிவரை தன் கூற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தியடிகள் கல்வி தொடர்பாகச் சொன்ன விஷயங்கள் இரண்டு. இந்தியாவில் பாரம்பரியக் கல்வி சிறப்பாக இருந்தது என்பது முதலாவது விஷயம். அதை பிலிப் கேள்விகேட்கவில்லை. ஏனென்றால், அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தன. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு இந்திய பாரம்பரியக் கல்வி எனும் அழகிய மரம் அழிந்துவிட்டது என்ற காந்தியின் இரண்டாவது வாக்கியத்தைத்தான் பிலிப் மறுத்தார். அதற்கான ஆதாரங்களைத்தான் அவர் கேட்டார்.
யங் இந்தியா-வில் பஞ்சாபின் கல்வி நிலை பற்றிய பஞ்சாப் அரசாங்க அறிக்கைகளில் இருந்து இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று காந்தி பதில் சொன்னார். பஞ்சாபின் நிலையை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையையும் சொல்லிவிடமுடியுமா? காஷ்மிரிலும் ஹைதராபாத்திலும் பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகளைவிட கல்வி குறைவாக இருப்பதன் காரணம் என்ன என்று ஹார்டாக் கேட்டார்.

 

காஷ்மிரில் கல்வி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு அங்கு இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று காந்தி யூகமாக ஒரு பதில் சொன்னார். அப்படியானால், ஹைதராபாத்தில் இந்துக்கள்தானே அதிகம். அங்கு ஏன் கல்வி விகிதம் குறைவாக இருக்கிறது என்று மடக்கினார் ஹார்டாக்.

தான் சொன்ன பதில் ஒரு யூகம் தானே தவிர இது பற்றி தெளிவான விரிவான பதிலை உங்களுக்கு நிச்சயம் சொல்கிறேன். பிரிட்டிஷாரால் இந்திய பாரம்பரியக்கல்வி சீரழிந்தது என்ற என் கூற்று ஒருவேளை தவறாக இருக்குமானால், அந்தச் செய்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைத்ததோ அதைவிடப் பெரியதொரு சபையில் என் மன்னிப்பைக் கேட்கிறேன் என்று காந்தி உறுதி அளித்தார். அதேநேரம் என் கருத்தை மறுக்கும்வகையில் உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை எனக்கு அறியத் தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, ஹார்டாக் புள்ளிவிவரத்தை அளித்தார். 1929-ல் பிலிப் ஹார்டாக் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சேர்மனாக இருந்தபோது சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை காந்திக்கு அனுப்பிவைத்தார்.

இந்தியாவில் கல்வி பெற்றவர்களின் சதவிகிதம் 1911-ல் 12%. 1881-ல் அது 8%தான். 12 % என்பது பெரிய அளவு இல்லைதான். என்றாலும் எட்டு சதவிகிதத்தைவிட அதிகம்தானே. பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியாவில் கல்வி குறையவில்லை. அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது என்று ஹார்டாக் சொன்னார்.

உண்மையில் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்துவிட்டுத்தான் ஆங்கிலக் கல்வி புகுத்தப்பட்டது என்ற வகையில் இது உண்மையில் வளர்ச்சியே அல்ல என்பது வேறு விஷயம். ஆனால், காந்தி தனது நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளாலும் சிறையில் அடைக்கப்பட்டதாலும் ஹார்டாகுக்கு பதில் அளிக்க முடியவில்லை. தனது சீடர் மகாதேவ் தேசாயிடம் யங் இந்தியா- இதழில் வெளியான பஞ்சாப் கல்வி அறிக்கை பற்றி ஹார்டாகுக்கு அனுப்பித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தவுலத் ராம் குப்தா எழுதிய தி டிக்ளைன் ஆஃப் மாஸ் எஜுகேஷன் இன் இந்தியா என்ற கட்டுரையை ஹார்டாகுக்கு அனுப்பிவைத்தார்.

அந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள்:பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் நமது கல்வியின் தரம், பள்ளிகளின் எண்ணிக்கை, அறிஞர்களின் என்ணிக்கை அதிகரித்ததாகப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மையல்ல. உண்மையில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கல்வியின் வீச்சு குறுகியது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் இருந்துவந்த கல்வி மிகவும் பாரம்பரியமானது, மதம் சம்பந்தப்பட்டது என்பது பிரிட்டிஷாருக்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் இருந்த மசூதிகள், கோயில்களில் எதிலும்  பள்ளி இணைக்கப்படாமல் இருந்திருக்கவில்லை. கல்வி அளிப்பதும் பெறுவதும் மதம் சார்ந்த ஒரு கட்டாயமான கடமையாகவே இருந்தது. உயர் சாதியினர் மிகுதியாக இருந்த பகுதிகளில் சமஸ்கிருதத்தில் இலக்கணம், தர்க்கம், தத்துவம், சட்டம் போன்றவை கற்றுத்தரப்பட்டன. கீழ் சாதியினர் இருந்த பகுதிகளில் கல்வியானது சிறு வணிகர்கள், நில உடமையாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பூசாரி இருந்தார். அந்தப் பகுதி மக்களுக்குக் கல்வி தரும் பொறுப்பு அவருடையதாக இருந்தது.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை கல்வியானது மசூதிகள் மூலமாகவும் அறிஞர்கள் மூலமாகவும் தரப்பட்டன. இஸ்லாமிய பள்ளிகளில் இலக்கணம், தர்க்கம், இலக்கியம், நீதி, விஞ்ஞானம் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அரசுகள் நிதி உதவி செய்தன. அல்லது செல்வந்தர்கள் நன்கொடைகள் தந்தனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க  ஒவ்வொரு கிராமத்திலும் நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 1835 வாக்கில் டபிள்யூ ஆடம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பிரிட்டிஷ் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சாட்லர் கமிஷன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் நோக்கம் வெகு தெளிவாக இருந்தது. மேல்தட்டு மக்கள் மத்தியில் மேற்கத்திய கலாசாரத்தையும் கல்வியையும் திணித்தால் அது அப்படியே கீழ்த்தட்டு மக்களுக்கு இறங்கிச் செல்லும் என்று தீர்மானித்திருந்தனர். எனவே, அதுவரை பாரம்பரியக் கல்விக்கூடங்களுக்கு தரப்பட்டுவந்த அனைத்து நிதி ஆதாரங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு புதிய மேல் நிலைக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வித்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்த சங்கரன் நாயர் தனது புகழ் பெற்ற அறிக்கையில் பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தங்கள் இந்தியப் பாரம்பரியக் கல்வியை எப்படியெல்லாம் பாதித்தன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சர் பட்டம் பெற்ற அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தன் கருத்தைப் பதிவு செய்தது என்பது உண்மையில் மிகவும் அரிதாக நடந்த விஷயம். பெரும்பாலும் பிரிட்டிஷார் தமக்கு செல்லப் பிள்ளைகள் யார் என்று பார்த்துத்தான் தட்டிக்கொடுப்பார்கள். சங்கரன் நாயர் அவர்களில் முக்கியமான விதிவிலக்காக இருந்தார்.

பிரிட்டிஷ் அரசு மேல்நிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டாவதாக கல்வியின் கட்டணத்தை வெகுவாக அதிகரித்தது. இதனால், முன்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்துவந்த கல்வியானது நின்றுபோனது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் ஏழைகள் படிக்க முடியாமல் போனது குறித்து கேள்விகள் எழுப்பபட்டபோது அவ்வகையான (பிரிட்டிஷார் தரும்) கல்வியைப் பெற ஏழைகளுக்கு எந்த அவசியமும் இல்லை என்ற விட்டேத்தியான பதிலே கிடைத்தது. இப்படியாக கல்வியானது செல்வந்தர்களுக்கு மட்டுமேயானதாக பிரிட்டிஷாரால் ஆக்கப்பட்டது. உயர் சாதியினருக்கும் குமாஸ்தா பணிக்குத் தேவையான கல்வி மட்டுமே தரப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷார் தெளிவாகவே இருந்தனர்.

இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷாருக்கும் அவர்களுடைய வழிகாட்டிகளுமான கிறிஸ்தவ மத போதகர்களுக்கும் இந்து மதத்தின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. அவர்கள் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் சாதியினருக்கும் பேருதவி புரிந்ததாக நம்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பிரிட்டிஷார் அந்தப் பிரிவினரே அதிக அளவில் கல்வி பெறும் வகையில் வழி செய்திருக்க வேண்டும். தங்களுடைய அரசியல் கோட்பாடுகளுக்கு இணங்க பிராமணரல்லாதாருக்குத்தான் முழுக்க முழுக்க கல்வியைத் தந்திருக்கவேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. இங்குதான் அவர்களுடைய தந்திரம் உச்சத்தை எட்டுகிறது. அவர்கள் தலையையும் உடம்பையும் ஒன்றுக்கொன்று எதிராகத் திருப்ப நினைத்தார்கள். தாங்கள் இந்தியாவை விட்டுப் போன பிறகும் இந்தியர்கள் தமக்குள் சண்டையிட்டு வரவேண்டுமென்றால் இப்படியான திருகல் அவசியம் என்று நினைத்தனர். அதையே நடைமுறைப்படுத்தவும் செய்தனர்.

அப்படியாக அடிப்படைக் கல்வியானது அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது; அதி உயர் கல்வியானது மேல்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது. உயர் கல்வி, ப்ரொஃபஷனல் கல்விகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்பக் கல்விகள் போன்றவை எல்லாம் பிரிட்டிஷாரின் தொழிற்சாலைகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும் உயர் பதவிகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளை நியமிக்கும் வகையிலுமே அமைக்கப்பட்டன.

இந்தியாவின் கல்வி பற்றிய வரலாறை எழுதுவது தொடர்பாக சங்கரன் நாயர் சொன்னதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: வேட்டையாடியவர் வரைந்த சித்திரத்தை வைத்தே வேட்டை பற்றி நாம் இதுவரை புரிந்துகொண்டுவந்திருக்கிறோம். வேட்டையாடப்பட்ட மிருகம் ஓவியராக இருந்து வரைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதுதான் வேட்டை பற்றிய உண்மைநிலையை நாம் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

அழிக்கவில்லை, புறக்கணித்தார்கள்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 4

பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி மிகவும் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் மகாராஜா ரஞ்சித் சிங் மேற்கொண்ட விசேஷ முயற்சிகள்தான். History of Indigenous Education in the Punjab என்ற புத்தகம் டாக்டர் லெயிட்னரால் (Gottlieb William Leitner) எழுதப்பட்டிருந்தது. லாகூரில் இருந்த ஓரியண்டல் கல்லூரி, அரசு கல்லூரி ஆகியவற்றின் பிரின்சிபாலாக இருந்தவர் இவர். டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் ஆகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார்.

அவர் தன்னுடைய நூலில் வேதனையுடன் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

‘பஞ்சாபின் உண்மையான பாரம்பரிய கல்வி கழுத்து நெரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. அதை ஆரோக்கியமான முறையில் மறுமலர்ச்சி அடையச் செய்யவும் வளர்த்தெடுக்கவும் இருந்த வாய்ப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அல்லது திரிக்கப்பட்டன. தனி நபர்களை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. இது நம் (பிரிட்டிஷ் அரசின்) நிர்வாகத்தின் ஒட்டு மொத்த தோல்வியையே காட்டுகிறது.’

இந்த வாக்கியங்கள் பிரிட்டிஷ் அரசின் பிழையான செயல்பாடுகளுக்கு அழுத்தமான ஆதாரமாக விளங்குகின்றன. பிரிட்டிஷாரின் கைக்கு பஞ்சாப் வருவதற்கு முன்பாக அங்கு கல்வி எப்படி இருந்தது என்பது பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.

‘பஞ்சாப் ஒரு அருமையான பிரதேசம். சட்லெஜ், யமுனை நதிகள் பாய்வதால் மட்டுமல்ல. இந்த ஒட்டுமொத்த பிராந்தியமுமே அற்புதமான நினைவுகளைக் கொண்டிருக்கிறது. அதன் கலாசார வரலாறு பல்வேறு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. திறமையான நிர்வாகம், தலைமைக்குக் கீழ்படியும் விசுவாசம் இவற்றுக்கெல்லாம் பஞ்சாபுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே கிடையாது. இவை எல்லாவற்றையும்விட கல்வி கற்பதற்கு இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஆர்வமும் மதிப்பும் அபாரமானது. அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது. ஒரு பூசாரி என்பவர் ஒரு பேராசிரியராகவும் கவிஞராகவும் இருந்திருக்கிறார். கல்வி என்பது சமூக, மத, தொழில் சார் கடமையாக இருந்திருக்கிறது.’

பஞ்சாப்தான் இந்தியாவிலே கடைசியாக பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பகுதி. ஔரங்கசீபுக்குப் பின்னால் வந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சீக்கியர்கள் வலுப்பெற்றிருந்தனர். முழுவதுமாக பிரிட்டிஷாரின் வசம் பஞ்சாப் வருவதற்கு முன்புவரை சீக்கீயர்களின் நிர்வாகத்தின் கீழே பஞ்சாப் இருந்தது. அவர்கள் தங்களுடைய பாரம்பரிய வழிமுறைகள் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள். எனவே, கல்வியைப் பழைய முறைப்படியே தொடர்ந்து நிர்வகித்துவந்தனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கு என்று கணிசமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. வாத்தியார் காணி, காவல்காரன் காணி போன்றவை இல்லாத கிராமமே கிடையாது. கல்வி இலவசமாகவோ, மிக சொற்பமான கட்டணம் பெறப்பட்டோ தரப்பட்டது. இந்த ஆரம்ப நிலைப் பள்ளிகள் நீங்கலாக ஏராளமான கல்லூரிகளும் இருந்தன. மெய்யியல், வானவியல், கணிதம், இலக்கணம், தத்துவம் மற்றும் பல விஷயங்கள் கற்றுத்தரப்பட்டன.

Philip Hartog

சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியும் தரப்பட்டது. ஒவ்வொரு மாணவரின் திறமைக்கு ஏற்பவும் அவர் என்ன தொழிலை உத்தேசித்துப் படிக்கிறார் என்பதற்கு ஏற்பவும் ஆசிரியர்கள் கல்வி அளித்தனர்.
இந்த விஷயங்களை பிலிப் ஹெர்டாகுக்கு தேசாய் அனுப்பி வைத்தார். ஆனால், ஹெர்டாகுக்கு இவை திருப்தியைத் தரவில்லை. இதில் அவர் விரும்பும் வகையிலான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. எனவே காந்தியை 1931 டிசம்பர் 2 அன்று சந்தித்தபோது தன் தரப்பு வாதங்களை மேலும் வலுவாக முன்வைத்தார். இந்த பஞ்சாப் பற்றிய அறிக்கையை வைத்துத்தானா அந்த அதிரடி முடிவுகளை அறிவித்தீர்கள் என்று காந்தியை மடக்கினார்.

டாக்டர் லெயிட்னர் பஞ்சாப் பற்றி எழுதிய அறிக்கை1882-ல் எடுக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை சுமார் 21 கோடி. அது 1931 வாக்கில் 27 கோடியாக உயர்ந்திருக்கிறது. சுமார் 30 சதவிகித உயர்வு. அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்விகற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கல்வி குறைந்தது என்று சொல்லவே முடியாது என்று வாதிட்டார்.

இந்தியப் பாரம்பரியக் கல்வியை பிரிட்டிஷார் நேரடியாக அழிக்கவில்லை. அதை அவர்கள் புறக்கணித்தார்கள். அதனால் அது அழிய நேர்ந்துவிட்டது என்று காந்தி தன் வாக்கியத்தைச் சிறிது மாற்றிக்கொண்டார். அந்தக் கல்வி முறையில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நல்லதாக எதுவும் இருந்திருக்கவில்லை. எனவே, பிரிட்டிஷார் அதை இயற்கை மரணத்தைத் தழுவும்படி விட்டுவிட்டார்கள் என்று ஹெர்டாக் சொன்னார். இஸ்லாமிய மத நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த கல்வியானது இஸ்லாமியர்களுக்கு பெரும் பின்னடைவைத்தான் தந்துள்ளது. நாட்டின் பிற பல பகுதிகளில் நடந்துவந்த பள்ளிகளின் நிலைமையும்இதுவேதான் என்று சொன்னார்.

தேவனின் மகிமையையோ விஞ்ஞானத்தின் பெருமையையோ போதிக்காத கல்வி இயற்கையான மரணத்தைத் தழுவ வேண்டிய ஒன்றாக பிரிட்டிஷாருக்குத் தோன்றியதில் வியப்பேதும் இல்லையே.

ஒருவகையில் ஹெர்டாக் சொன்னது சரிதான். பிரிட்டிஷார் இந்தியப் பாரம்பரிய மரத்தை கோடாலியால் வெட்டிப் பிளக்கவில்லை. ஆனால், அந்த மரத்துக்கு நீர் வரும் கால்வாயை அடைத்துவிட்டார்கள். அந்த மரம் வாடிவிட்டது. அதற்கு மாற்றாக ஆங்கிலக் கல்வி தரும் வேறு ஏராளமான முட்செடிகளை நட்டு வளர்த்தார்கள்.

இந்திய இலக்கியங்கள் எதையுமே படிக்காமலேயே அவை அனைத்தும் குப்பை என்ற தீர்மானத்துக்கு வந்த மெக்காலேயிடம்தான் நம் கல்வியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

தாஜ்மகாலை வெறும் பளிங்குக் கற்களை பிரமாண்டமாக அடுக்கிவைக்கப்பட்ட குவியல் என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை காட்டுமிராண்டித்தனமான கட்டுமானம் என்றும் சொன்ன லுட்யென்ஸ் (Edwin Lutvens) வசம்தான் நம் தலைநகரை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா கேட் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையை ஒரு வழியாக எடுத்த பின்னரும் 5000 ஆண்டுகளுக்கும் அதிகமான கலாசார பாரம்பரியமுள்ள சுதந்தர இந்தியாவால், அந்த இடத்தில் வேறொரு சிலையை வைக்கமுடியவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலையையோ, நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சிலையையோ வைத்திருக்கலாம். பன்மைத்தன்மை மிகுந்த தேசத்துக்குப் பொதுவானதொரு சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் சிலையை அங்கே வைத்திருக்கலாம். அல்லது சாரநாத்தில் உள்ள அசோகர் தூண் போன்ற ஒரு சின்னத்தையாவது அங்கே வைத்திருக்கலாம். ஆனால், அந்த மண்டபம் இன்றும் காலியாகத்தான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியக் கல்வியின் கண்ணி அறுபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் இப்படியான அவலம் நமக்கு நேர்ந்திருக்காது.

ஹெர்டாக் காந்தியுடன் வேறு பல விஷயங்களும் பேசினார். ஆரம்பக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்; இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சொன்னார். சாட்லர் கமிஷனின் உறுப்பினராக இருந்தபோது அவர்கள் பல்கலைக்கழக உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொன்னபோது ஹெர்டாக் அதை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தர எவ்வளவு செலவாகும். அதன் மூலம் எத்தனை பேருக்கு கல்வி கிடைக்கும்… எத்தனை வருடங்களில் அதை செய்து முடிக்க முடியும் என்ற புள்ளிவிவரங்களை விரிவாகப் பட்டியலிட்டார். அது மட்டும் போதுமா… அடிப்படைக் கல்விக்குப் பிறகு நடுநிலைக் கல்வி தருவது தொடர்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று காந்தி கேட்டபோது அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்பதே ஹெர்டாகின் பதிலாக இருந்தது. ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டே செல்வதைவிட நூறு மரங்கள் நட்டாலும் தொடர்ந்து பராமரித்து அதைப் பெரிய மரமாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது காந்தியின் சிந்தனையாக இருந்தது.

பெண்களுக்கான கல்வியின் வீச்சு அதிகரிக்க வேண்டும் என்று ஹெர்டாக் சொன்னபோது, நிச்சயமாக அதைச் செய்யத்தான் வேண்டும். அதே நேரம் பெண்களை நல்ல தாயாக ஆக்குவதற்கும் அந்தக் கல்வி பயிற்றுவிப்பதாக இருக்கவேண்டும் என்று சொன்னார். சுருக்கமாகச் சொல்வதானால், காந்தியின் கல்வித் திட்டம் என்பது நல்ல மதிப்பீடுகள் சார்ந்ததாக இருந்தது. தனி நபர் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே சிறந்தது என்பதாக இருந்தது.

ஹெர்டாக் கடைசியாக ஒரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார். கல்வி தொடர்பான ஒரு பிரச்னைக்கு இந்தியா இன்னும் தீர்வு காணவில்லை. ஒரு விவசாயியை கிளார்க்காக ஆக்குவதற்குப் பதிலாக மேலும் சிறந்த விவசாயியாக ஆக்கும் வகையிலான கல்வி முறையை அது கண்டடையவில்லை.

தேர்ந்தெடுப்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமென்றால் எல்லாரும் ஒரே தேர்வைத்தான் எழுத வேண்டும். இந்த மரத்தில் ஏறுங்கள் பார்க்கலாம்.

அவர் சொன்னவையே இன்றும் நம் பிரச்னைகளுக்கெல்லாம் ஆதார காரணமாக இருந்துவருவதை ஒருவர் பார்க்க முடியும். நினைத்துப் பாருங்கள்… செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவரை பாட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக ஆக்கியிருக்கலாம். மாடு மேய்த்தவரை அமுல் இந்தியாவின் தலைவராக ஆக்கியிருக்கலாம். சேற்றில் இறங்கி உழுத விவசாயியை விவசாயப் பல்கலையின் பேராசிரியராக, பிரின்சிபாலாக உயரச் செய்திருக்கலாம். அது மிகவும் இயல்பான, எளிய, சண்டை சச்சரவுகள் இல்லாத வளர்ச்சியாக இருந்திருக்கும். அந்ததந்தப் பிரிவினர் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் உயர்ந்திருப்பார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. அனைவருமே அரசுப் பணிகளின் குறுகலான வாசல் வழி நுழைவதில்தான் முட்டி மோதினார்கள். அல்லது மோதவைக்கப்பட்டார்கள். அதன் விலையை நாம் கொடுத்துவருகிறோம். இனியும் கொடுப்போம்.

காந்தி – ஹெர்டாக் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிய வருகிறது. காந்தியிடம் தன் கூற்றை பலப்படுத்துவதற்கான புள்ளிவிவரங்கள் போதுமான அளவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், விஷயம் என்னவென்றால் அது புள்ளிவிவரத்தால் அளவிட முடிந்த ஒன்றும் அல்ல.

மேலும் காந்தியிடம் அப்போது அந்தப் புள்ளி விவரங்கள் இருந்திருக்கவில்லையே தவிர அவை இல்லாமலேயே போயிருக்கவில்லை. இந்தியாவில் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தியப் பாரம்பரியக் கல்வி ஒரு அழகிய மரமாகத்தான் இருந்தது என்ற கூற்றுக்கு ஆதாரமாக லண்டன் நூலகத்தின் மூடப்பட்ட அறைகளில் தெளிவான, விரிவான புள்ளிவிவரங்கள் மண்ணில் புதைந்த விதை போல் தூங்கிக் கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி போல் தரம்பால் வந்து தொட்டு எழுப்பும்வரை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

‘2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை!’

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 5

இந்திய வரலாற்றாய்வில் தரம்பால் ஈடுபாடு கொண்டது மிகவும் தற்செயலாக நடந்த ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றாலும் அடிப்படையில் லட்சிய கிராம (ஆஸ்ரம) வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1948 வாக்கில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் Kibbutzim பாணியில் வாழ்வதைக் கேள்விப்பட்டு அங்கு போய்ப் பார்த்தார். ஆனால், அது இந்திய சூழலுக்கு ஒத்துவராது என்று அவர் மனதுக்குப் பட்டது. ரிஷிகேஷில் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கூட்டுப் பண்ணை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அனைத்து குடும்பத்தினருக்கும் சம அளவிலான நிலம் என அது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருந்தது. ஆனால், அவர்களுக்கிடையே ஒருவித ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை.

அதன் பிறகு வேறு பல விஷயங்களில் ஈடுபட்டவர் 1960-ல் ஒரு ரயில் பயணம் மேற்கொண்டார். அது அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் மிகையில்லை. அதை அவருடைய வார்த்தையிலேயே பார்ப்போம்:

1960 வாக்கில் குவாலியரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஆறு-ஏழு மணி நேரப் பயணம். அந்தப் பயணத்தில் ஒரு சிலரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு ஒருவகையில் எனக்கு இந்தியாவைப் பற்றிய அதாவது, உண்மையான இந்தியாவைப் பற்றிய ஒரு பக்கத்தைத் திறந்து காட்டியது.

ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருந்தும் தங்களை ஒடுக்கிக் கொண்டு சிலர் எனக்கு உட்கார இடம் ஏற்படுத்தித் தந்தனர். அங்குதான் அவர்களைச் சந்தித்தேன். சுமார் 12 பேர் அந்தக்குழுவில் இருந்தனர். மூன்று நான்கு பெண்கள். ஏழெட்டு ஆண்கள்.

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.

ராமேஸ்வரத்துக்கும் வேறு சில இடங்களுக்கும் புனித யாத்திரை முடித்துவிட்டு வருகிறோம் என்றார்கள்.

சுமார் மூன்று மாதமாக அந்தப் பயணத்தில் இருக்கிறார்கள். இப்போது ஹரித்துவார் போய்க்கொண்டிருந்தார்கள். லக்னோவுக்கு வடக்கே இருக்கும் கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் நிறைய துணி மூட்டைகள் இருந்தன. சில மண் பானைகளும் கைவசம் வைத்திருந்தார்கள். அந்த பானையில் என்ன இருக்கின்றன என்று கேட்டேன்.

நெய், கோதுமை மாவு, சர்க்கரை என தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்தே எடுத்து வந்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பற்றி அந்தப் பெண்களுக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால், யாராவது உணவுப் பொதிகளைக் காலால் மிதித்துவிட்டால் மிகவும் வருந்தினார்கள்.

நீங்கள் எல்லாரும் ஒரே ஜாதியினர்தானே என்று கேட்டேன்.

இல்லை.

இல்லையா… நம்பவே முடியவில்லையே.

யாத்திரையில் ஜாதி கிடையாது. அதிலும் புனித யாத்திரையில் ஜாதி கிடையவே கிடையாது என்றனர்.

எனக்கு அது தெரியாது. அப்போது எனக்கு 38 வயதாகியிருந்தது. இந்தியாவில் இருக்கும் பிறரைப் போலவே எனக்கும் விவசாயிகள், கைவினை கலைஞர்கள், பிற கிராமத்துவாசிகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் சென்னைக்குச் சென்றீர்களா?

ஆமாம்.

பம்பாய் சென்றீர்களா?

ஆமாம். அந்த இடங்களைக் கடந்துதான் வந்தோம்.

அங்கு என்னென்ன பார்த்தீர்கள்?

எதுவுமில்லை. எங்களுக்கு நேரமில்லை.

நவீன இந்தியாவின் பல இடங்களின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். எல்லா இடங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள். எதையும் இறங்கிப் பார்த்திருக்கவில்லை. அவர்களுடைய பயணத்தில் புனித ஷேத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இப்போது டெல்லி போகிறீர்கள் அல்லவா?

ஆமாம்.

அங்கு இறங்கி சுற்றிப் பார்ப்பீர்களா?

மாட்டோம். டில்லியில் இறங்கி ரயில் மாற வேண்டியிருக்கிறது. நாங்கள் ஹரிதுவார் போகிறோம்.

சுதந்தர இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அதை இறங்கி பார்க்கமாட்டீர்களா?

மாட்டோம். எங்களுக்கு அதற்கு நேரமில்லை. ஹரித்துவார் போகவேண்டும். அதன் பிறகு வீடு திரும்ப வேண்டும்.

சுமார் ஐந்தாறு மணி நேரம் நாங்கள் பேசினோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நாம் எந்த இந்தியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நேருவும் இன்ன பிற தலைவர்களும் நவீன கோயில்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள் என இந்த நவீன இந்தியாவை யாருக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறோம்? புனித யாத்திரைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பாரம்பரிய மனிதர்களுக்கு இந்த நவீன இந்தியாவில் எந்த அக்கறையும் இல்லை. ஆனால், அவர்கள்தான் இந்த இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள். நேருவை விட என்னையும் உங்களையும் விட அதிக பிரதிநிதித்துவம் கொண்டவர்கள்.

இந்தப் பயணம் தரம்பாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் புதிய தலைவர்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி அவரை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. இந்தியா என்றைக்குமே இப்படித்தான் இருந்ததா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது.

பீஸ் பிஸ்வ மற்றும் சாசனா என்ற கிராம சபைகள் நிர்வாகத்திலும் செயல் திறனிலும் துடிப்புடன் இருந்ததை அவர் பார்த்திருந்தார். இந்திய கலாசாரத்தை எது இப்படி ஜீவனுடன் இயங்க வைத்துவருகிறது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. இந்த கிராமப்புற சமுதாயங்கள் செயல்படும் விதத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டால் நவீன உலகில் நாம் எதிர்கொண்டுவரும் பல பிரச்னைகளை எளிதில் தீர்த்து நாம் மறுமலர்ச்சி அடைந்துவிட முடியும் என்று நம்பினார்.

அந்தத் தேடல்தான் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் இந்தியா எப்படி இருந்தது என்ற கேள்வியில் அவரை நிறுத்தியது. அந்தப் பணியை எப்படி ஆரம்பிப்பது என்று அவருக்கு முதலில் எதுவும் புரிந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆவணங்களினூடான தன் மாபெரும் பயணத்தின் சிறு காலடியை எடுத்து வைத்தபோது அதன் முக்கியத்துவம் அவருக்குப் புரிந்திருக்கவே இல்லைதான். இந்தியா பற்றி அதுவரை அவர் படித்தும் கேட்டும் வந்தவையெல்லாம் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இருந்திருக்கவில்லை.

ஆனால், பொய்யின் சருகுகள் மலை போல் குவிந்திருந்தாலும் உண்மையின் சிறு தீப்பொறி போதுமே அதை எரித்துச் சாம்பலாக்கிவிட. தரம்பால் வசமோ சூரியனைப் போல் பிரகாசமான ஜோதி கிடைத்தது. அது இந்தியாவின் கடந்த காலத்தைப் பொன்னிற ஒளியில் காட்டியது.

1964 வாக்கில் தரம்பாலுக்கு பழங்கால ஆவணங்கள் பற்றியும் அறிக்கைகள் பற்றியும் சாதாரண மனிதருக்குத் தெரிந்த அளவுக்குத்தான் தெரிந்திருந்தது. முதன் முதலாக பிரிட்டிஷ் ஆவணங்களை அவர் பார்த்தது சென்னையில்தான். டச்சு, போர்ச்சுகீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், பிற ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் என 16-ம் நூற்றாண்டில் இருந்து இந்தியா வந்த பலரும் தங்கள் ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். ஆனால், அவை அளவில் குறைவுதான். பிரிட்டிஷாரின் ஆவணங்கள்தான் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம்.

அவை மூன்று வகைப்பட்டவையாக இருந்தன. முதலாவதாக, இந்திய நிலப்பகுதி, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், சமூக வாழ்க்கை, திருவிழாக்கள், கலாசார வாழ்க்கை, கல்வி முதலான இங்கு இருக்கும் அமைப்புகள், விவசாய வழிமுறைகள், தொழில்கள், இந்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவை பற்றிய குறிப்புகள்.

இரண்டாவதாக, 1748-ல் ஆற்காட்டைக் கைப்பற்றியதில் ஆரம்பித்து 1947 வரையான பிரிட்டிஷ் இந்திய போராட்டங்கள், பிரிட்டிஷார் உருவாக்கிய அமைப்புகள், செயல்பாடுகள் பற்றிய ஆவணங்கள்.

மூன்றாவதாக, இந்தியாவை ஆள்வது தொடர்பாக பிரிட்டனில் நடைபெற்று வந்த கூட்டங்கள், தீர்மானங்கள், திட்டங்கள் இவற்றின் ஆவணங்கள்.

இதில் இந்தியாவின் கல்வி பற்றிய ஆவணங்களைப் படித்த தரம்பால் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்துபோனார். ஏனென்றால், கடந்த நூறாண்டுகளாக சொல்லப்பட்டு வந்த விஷயங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு சித்திரத்தை அவர் அங்கு கண்டார். இந்துக்களில் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி தரப்பட்டது. இஸ்லாமியர்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது என்பதுதான் பொதுவாகப் பரப்பட்டுள்ள பொய். உண்மையில் மதராஸ் பிரஸிடென்ஸியில் அதாவது தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் சூத்திரர்கள் என்றும் அவர்களுக்குக் கீழானவர்கள் என்றும் சொல்லப்படும் பிரிவினர்தான் அன்றைய பள்ளிகளில் பெரும்பான்மையாகக் கல்வி கற்றிருக்கிறார்கள். 1822-25-ல் பிரிட்டிஷாரால் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்த உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

1820-களில் பிரிட்டிஷ் வருவாய் ஆணையமானது கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஆய்வில் என்னென்ன தகவல்கள் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், அங்கு பயிலும் ஆண்-பெண் மாணவர்கள் எண்ணிக்கை இவற்றை தொகுத்துத் தரும்படி கேட்டிருந்தது. மாணவர்கள் பிரிவில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பிற சாதியினர் என தனித்தனியாகக் குறிப்பிடும்படிக் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்படி 21 மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் சேகரித்த புள்ளிவிவரங்களை அனுப்பிவைத்தனர்.

கல்வி கற்ற மாணவர்களில் பிராமணர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் 13%, சென்னையில் 23% இருந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 3%க்கும் குறைவுதான். சேலத்தில் 10% தான். ஆனால், பள்ளியில் பயின்ற சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் சதவிகிதம் சேலத்தில் 70% ஆகவும் தென் ஆற்காடு, திருநெல்வேலியில் 84% அதிகமாகவும் இருந்திருக்கிறது.

கேரளாவில் பள்ளியில் பயின்ற பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 20%க்கும் குறைவுதான். இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 27%. சூத்திரர்களும் பிற சாதியினரும் சுமார் 53% இருந்திருக்கிறார்கள்.

கர்நாடகத்தின் பெல்லாரியில் பிராமண-வைசிய மாணவர்களின் எண்ணிக்கை 33%. சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் எண்ணிக்கை 63% . ஒரிய மொழி பேசப்படும் பகுதியிலும் நிலைமைஇதுதான். பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 35.6%. பிற சாதியினரின் எண்ணிக்கை 63.5%.

தெலுங்கு பேசும் பகுதியில்தான் பிராமணர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. கடப்பாவில் 24%. விசாகப்பட்டிணத்தில் 46%. வைசியர்களின் எண்ணிக்கை கடப்பாவில் 29%. விசாகப்பட்டிணத்தில் 10.5%. சூத்திரர்களும் பிற சாதியினரும் கடப்பா, விசாகப்பட்டிணத்தில் சுமார் 41 % இருந்திருக்கிறார்கள்.

2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை என்ற அசட்டு வாதத்தில் ஆரம்பித்து இணையதளங்களில் எங்களை வசைபாடுபவர்கள் இப்போது கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்திருப்பதுகூட எங்களால்தான் சாத்தியமானது என அரைவேக்காட்டு முழக்கங்கள் வரை ஓங்கி ஒலிக்கும் நம் சூழலில் தரம்பாலை இந்துத்துவ முத்திரை குத்தி ஒதுக்குவது எளிதாகவே இருக்கும். ஆனால், அவர் சொல்லும் உண்மைகள் அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்தவை அல்ல. இயேசுவைத்தான் சிலுவையில் அறைந்து கொல்ல முடியும். அவருடைய வார்த்தைகளை அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பிராமணர்கள் மட்டும்தான் படித்தார்களா?

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 6

தரம் பால் தொகுத்துத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களில் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள், பள்ளியில் சேர்க்கப்படும் வயது, எத்தனை வருடம் கல்வி கற்றனர், உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை எனப் பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தரம்பால் அந்தத் தகவல்களைச் சேகரித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம்தான் அவற்றைச் சேகரித்திருந்தன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாரசீகம் என அவரவர் தாய்மொழிகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. ஆங்கிலம்கூட சில பள்ளிகளில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. பள்ளியில் சேர்க்கும் வயதானது மாவட்டத்துக்கு மாவட்டம் சிறிய வேறுபாடுகளுடன் இருந்திருக்கிறது. ராஜமுந்திரி பகுதியைப் பொறுத்தவரையில் ஐந்து வயது, ஐந்தாம் மாதம், ஐந்தாம் நாள் என்பது பள்ளியில் சேர்ப்பதற்கு சுப தினமாகக் கருதப்பட்டிருக்கிறது. கடப்பாவைப் பொறுத்தவரை பிராமணச் சிறுவர்கள் ஐந்திலிருந்து ஆறு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்துவிட்டிருந்தனர். சூத்திரர் வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் ஆறிலிருந்து எட்டு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களில் ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் வரை கல்வி ஆண்டு இருந்திருக்கிறது. மதராஸ் கவர்னர் இது தொடர்பாகச் சொல்கிறார்: மாணவர்கள் பதிமூன்று வயதை அடைவதற்கு முன்பாகவே பல்வெறு கல்வித்துறைகளில் கணிசமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துவிடுகிறார்கள்.

பள்ளியானது அதிகாலையில் ஆறுமணிக்கே ஆரம்பித்ததாகத் தெரியவருகிறது. இரண்டு இடைவேளைகள், மதிய உணவு இடைவேளை என இருந்திருக்கின்றன. சில இடங்களில் மாலை சூரியன் மறைவது வரைகூட வகுப்புகள் நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. எழுதவும் படிக்கவும் முக்கியமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது. கணிதமும் முக்கியப் பாடமாக இருந்திருக்கிறது. பால ராமாயணத்தில் ஆரம்பித்து பாகவதம், கஜேந்திரமோட்சம், குசேல புராணம் என பெரிதும் புராணப் பாடங்களே மிகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, வேத வேதாந்த விசாரங்களின் சாராம்சமானது கதை வடிவில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அங்கு போதிக்கப்பட்டிருக்கின்றன. இவையே நாடகமாக, தெருக்கூத்துகளாக, பொம்மலாட்டமாக, தோல்பாவைக் கூத்தாக பல்வேறு வடிவங்களில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்று சேரும் வகையில் தரப்பட்டிருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் வேதங்கள், வான சாஸ்திரம்,கணித சாஸ்திரம்,தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், தத்துவ விசாரம், மருத்துவம் என பல துறைகள் இருந்திருக்கின்றன. வேதங்கள், தத்துவ விசாரங்கள், நீதி சாஸ்திரம் போன்றவற்றைப் பெரிதும் பிராமணர்கள் மட்டுமே கற்றிருக்கிறார்கள். வான சாஸ்திரம், மருத்துவம் போன்றவற்றை அனைத்து சாதியினரும் கற்றிருக்கிறார்கள். கேரளாவைப் பொறுத்தவரையில் வான சாஸ்திரம் படித்த மொத்தம் 808 பேரில் 78 பேர் மட்டுமே பிராமணர்கள். மருத்துவம் படித்த 194 பேரில் 31 பேர் மட்டுமே பிராமணர்கள். மதராஸைப் பொறுத்தவரையில் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றவற்றை பல்வேறு சாதியினர் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் மருத்துவர்களின் பார்வையில் மதராஸைச் சேர்ந்த சிகை அலங்காரத்தொழிலில் ஈடுபட்ட பிரிவினரே அறுவை சிகிச்சையில் நிபுணர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகம் யாரால், எப்படி உருவாக்கப்பட்டது, உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்ன போன்ற கேள்விகளால் தூண்டப்பட்ட பிரிவினர் அது சார்ந்த பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கையே மாயை என்று கூறும் அளவுக்கு அது தத்துவார்த்த அம்சங்களைக் கொண்டதாக இருந்திருக்கிறது. அதே நேரம் இந்த உலக வாழ்க்கையை கொண்டாட்டமாக, கேளிக்கையாக பார்க்கும் பார்வையும் இருந்திருக்கிறது. லவுகீகத் தேவைகளே பிரதானம் என்று நினைத்த பிரிவினர் அது சார்ந்த கல்வியைத் தேடிப் பெற்றிருக்கின்றனர். பர வித்யா, அபர வித்யா என கல்வியானது இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. உயர் கல்வியானது வாழ்க்கைப் பார்வை சார்ந்து பெறப்பட்டிருக்கிறது.

பிராமணச் சிறுவர்களின் கல்வியைப் பற்றி கூடுதலாக பிரிட்டிஷ் ஆவணங்களில் இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது. கடப்பா, குண்டூர் பகுதிகளில் ஏழை பிராமணச் சிறுவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 முதல் 100 மைல் தொலைவில் இருக்கும் பள்ளிகளில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். வீடு திரும்ப பல வருடங்கள் ஆகும். சில நேரங்களில் கல்வி கற்ற கிராமத்திலேயே கூட தங்கிவிடுவதும் உண்டு. எந்த கிராமத்தில் தங்கி இருக்கிறார்களோ அந்த கிராமத்தினரே அந்தச் சிறுவர்களுக்கு தினமும் உணவுகொடுத்து பராமரித்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு பிராமணர் வீட்டின் முன்னாலும் சென்று யாசகம் பெற்றே உணவுத்தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இது தவிர வீடுகளில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிகின்றன. பெற்றோர், உறவினர்கள் அல்லது தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்தும் பலர் கல்வி கற்றிருக்கிறார்கள். கேரளத்தில் இது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த உயர் கல்வி இப்படிப் பெறப்பட்டிருக்கிறது. இப்படியான மருத்துவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்திருக்கிறார்கள். நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், மெய்யியல், கவிதை, இலக்கியம் போன்றவையும் நிறுவனம் சாராமல் பரவலாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. மதராஸிலும் தனிப்பட்ட முறையில் கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்திருக்கிறது. சூத்திரர்களில் 28.7%, இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சாதியினரில் 13% அப்படியான கல்வி பெற்றிருக்கிறார்கள்.

பள்ளிகளில் கல்வி கற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், மலபாரிலும் விசாகபட்டணத்தில் ஜெய்ப்பூர் ஜமீனிலும் மட்டும் பெண்கள் கணிசமான அளவில் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதிகளில் இந்த ஒற்றுமை இருந்தது எப்படி என்பது ஆய்வுக்குரியது.

பள்ளிகள் களி மண்ணால் கட்டப்பட்டு கூரை வேய்ந்ததாக இருந்திருக்கின்றன. ஓரிரு அறைகளில் ஆரம்பித்து 11 அறைகள் வரை கொண்டதாக இருந்திருக்கின்றன. வீடுகளில் திண்ணைகளில் அமர்ந்தும் கல்வி கற்றிருக்கிறார்கள்.

ஆரம்பக் கல்வியானது நான்கு கட்டமாகக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. முதலில் அகர வரிசை எழுத்துகளை மணலில் சிறிய குச்சியால் எழுதிப் படித்திருக்கிறார்கள். இரண்டாவது கட்டமாக பனை ஓலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கணிதத்தைப் பொறுத்தவரை 100 வரை எழுதிப் படித்திருக்கிறார்கள். நிலங்களின் அளவு தொடர்பான விஷயங்களும் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இதன் அடுத்த கட்டத்தில் வாழை இலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். அதில் கூட்டல், கழித்தல் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. நான்காவது கட்டத்தில் காகிதத்தில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் ராமாயணம் போன்ற காவியங்களை எழுதிப் படிக்கத் கற்றுக் கொள்வார்கள். கடிதங்கள், மனுக்கள் எழுதுதல், கணக்கு வழக்குகள் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.

சமூகத்தின் அனைத்து பிரிவில் இருந்தும் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். இரு பிறப்பாளர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் பிற 30 வகை ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். சந்தால் வகுப்பைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கைப் பார்த்தால் பிஹார் பகுதியில் பிராமண, காய்ஸ்த சாதியைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 15-16%கூடத் தாண்டவில்லை. பர்த்வான் மாவட்டத்தில் வைசியர்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட இணையாக, சந்தால் எனும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்தில் 13 கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளும் இருந்திருக்கின்றன. ஆனால், அங்கு படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கை வெறும் 86 தான். ஆனால், சுதேசிப் பள்ளிகளில் படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கையோ 674.

போக்குவரத்து வசதிகளும் அச்சு ஊடகமும் பெரிதாக இருந்திருக்காத ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி இவ்வளவு விரிவாகவும் அனைத்து சாதியினரை உள்ளடக்கியதாகவும் இருந்தது மிகவும் ஆச்சரியமானதுதான். இந்தத் தரவுகளைச் சேகரித்த பிரிட்டிஷாருக்கு யதார்த்த நிலை இப்படி இருந்ததைப் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. கிறிஸ்தவ ரட்சிப்பும் ஐரோப்பிய அரசாட்சியும் இல்லாமலேயே உலகில் நல்ல விஷயங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்கள் அப்படி நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், அந்த 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிரிட்டனும் ஐரோப்பிய தேசங்களும் இந்தியாவை ஒப்பிடும்போது கல்வியிலும் பல மடங்கு பின் தங்கியதாகத்தான் இருந்திருக்கின்றன. அங்கு அதுவரை சமுகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இருந்த கல்வி என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிள் வகுப்புகளில் சொல்லித்தரப்பட்ட வேதாகமக் கல்வியாக மட்டுமே இருந்தது.
இன்று அவர்கள் வாழ்வின் பல தளங்களில் நாம் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த முன்னேற்றம் என்பது நேர்மையான வழியில் பெறப்பட்டதல்ல. தன்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஒருவருடைய காலை உடைத்துப் போட்டுவிட்டு ஓடிப் பெற்ற வெற்றி.

இன்று நாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், நாம் முடமாகவே பிறந்தவர்கள் அல்ல. முடமாக்கப்பட்டவர்கள். அதையும் மீறி நாம் சாதிக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பது வேறு விஷயம். என்றாலும் காலத்தைத் திருப்பி வைக்கும் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், இந்தியாவில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியனை அப்படியே அவன் வந்த கப்பலிலேயே திருப்பி அனுப்புவதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் செயல்.

மிகவும் சிறிய செயல்தான். ஆனால், அதைச் செய்யாததால் நமக்கு ஏற்பட்டதோ பேரிழப்பு.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 7

இந்தியாவில் கல்வி இப்படி அனைத்து சாதியினரையும் உள்ளடக்கியதாக இருந்த காலகட்டத்தில் பிரிட்டனில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் பார்ப்பது அவசியம்.

ஃபிரான்சிஸ் பேகன், ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் என பல மேதைகள் உருவாகியிருந்தார்கள் என்றாலும் 18-ம் நூற்றாண்டு வரை கல்வியானது மேட்டுக்குடியினருக்கு மட்டுமானதாகவே இருந்தது (விதிவிலக்குகள் நீங்கலாக). இந்த நிலைமையானது புராட்டஸ்டண்ட் இயக்கம் வலுப்பெற ஆரம்பித்ததும் மேலும் இறுக்கமடைந்தது. 16-ம் நூற்றாண்டு நடுவில் இதற்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டது. ஆங்கில பைபிளானது தேவாலயங்களில் படிக்கப்படக்கூடாது. தனிப்பட்ட முறையிலான படிப்பு என்பது அரச பரம்பரை, பிரபுக் குடும்பங்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு மட்டுமே தரப்படவேண்டும். கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் போன்ற சேவைப் பணியாளர்களுக்கு அது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபடவேண்டும். கைவினைக் கலைஞர்களின் மகன் அந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும். மேட்டுக்குடியினரின் மகன் நிர்வாகம், சட்டம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற எல்லா தேசங்களையும் போலவே நமக்கும் விவசாயிகளின் தேவை இருக்கவே செய்கிறது. எனவே, சமூகத்தின் எல்லா பிரிவினரும் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று எட்டாம் ஹென்றி 1542-43-ல் வெளியிட்ட அரசாணை தெரிவிப்பதாக, ஏ.ஈ.டோப்ஸ் எழுதிய எஜுகேஷன் அண்ட் சோஷியல் மூவ்மெண்ட்ஸ் 1700-1850 எனும் நூல் தெரிவிக்கிறது.

17-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து சாதாரண மக்களுக்கான சாரிட்டி பள்ளிகள் (Charity School) மெதுவாக வர ஆரம்பித்தன. இந்தப் பள்ளிகளின் முக்கிய நோக்கம், உடலுழைப்புப் பணியாளர்களின் மதம் சம்பந்தமான அறிவைக் கொஞ்சம்போல மேம்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் நடக்கும் வேதாகம வாசிப்புக்கு உகந்தவர்களாக ஆக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால், இந்த சாரிட்டி பள்ளி இயக்கமானது ஆரம்பகட்ட உற்சாகத்துக்குப் பிறகு மெள்ள தேக்கமடைந்துவிட்டது. 1780 வாக்கில் சண்டே ஸ்கூல் மூவ்மெண்ட் (Sunday School movement) என்பது ஆரம்பித்தது. அனைவருக்கும் கல்வி என்பது இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் மிஷனரி நோக்கிலான கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையும் பைபிள் வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் முத்திரை வாக்கியமே. ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் நிரம்பிவழிய வேண்டும் என்ற முக்கியமான லட்சியமானது இந்தவகைப் பள்ளிகளை நாடு முழுவதும் ஆரம்பிக்க வைத்தது. சில காலம் கழித்து, தினசரி (பகல் நேரப்) பள்ளிகள் (Day School) மீது கவனம் விழ ஆரம்பித்தது. அதன் பிறகு கல்வி முன்பைவிட வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இருந்தும் 1834-ல் நகரப் பள்ளிகளில் மத போதனை, எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுதல், அடிப்படை கணிதம் ஆகியவை மட்டுமே கற்றுத் தரப்பட்டிருந்தது. ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் தீய விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் எழுதக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

தினசரி பள்ளி இயக்கமானது 1802-ல் இயற்றப்பட்ட பீல் சட்டத்தின் மூலம் முடுக்கிவிடப்பட்டது. இதன்படி, சிறுவர்களை வேலைக்கு நியமிக்கும் எஜமானர்கள், அந்தச் சிறுவர்களுக்கு ஏழுவருட பணிக் காலத்தில் முதல் நான்கு வருடங்களுக்கு எழுத, படிக்கவும் கணிதமும் கற்றுத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் மத வகுப்பு நடக்கும்போது அந்தச் சிறுவர்கள் அதில் பங்குபெறவைக்கவேண்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால், இந்த சட்டம் அவ்வளவாக அமலாகவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் ஆசிரியர் ஒருவரின் முறையான கண்காணிப்பு மூலமான கல்வியானது (ஜோசஃப் லன்காஸ்டர், ஆண்ட்ரூ பெல் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. இது இந்திய கல்வி முறையில் இருந்து கடன் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது) நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 1792-ல் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது. 1818-ல் அது 6,74,883 ஆக அதிகரித்தது. 1851-ல் 21,44,377 ஆனது. 1801 இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் மற்றும் பொது பள்ளிகள் 3363. படிப்படியாக அதிகரித்து 1851-ல் 46,114 ஆக உயர்ந்தது.

ஆரம்பத்தில் கல்வி போதனையானது மிகவும் சுமாராகவே இருந்திருக்கிறது. ஜோசஃப் லன்காஸ்டர் இது பற்றிச் சொல்லும்போது, ஆசிரியர்கள் அறியாமை நிறைந்தவர்களாக இருந்ததோடு பள்ளிக்கு குடித்துவிட்டு வருபவர்களாகவும் இருந்தனர் என்கிறார். எத்தனை வருடம் கல்வி கற்றனர் என்பது பற்றியும் டேப்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தாராள மனதுடன் பார்த்தால் மாணவர்கள் படிக்கும் வருடங்களின் எண்ணிக்கை 1835-ல் ஒரு வருடமாக இருந்தது 1851-ல் இரண்டு வருடமாக அதிகரித்திருக்கிறது!

18-ம் நூற்றாண்டில் பொதுப் பள்ளிகளின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. உதாரணமாக 1797 ஜனவரியில் ஸ்க்ரூஸ்பரி (Shrewsbury) பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? சுமார் 3 அல்லது நான்கு! சில பல கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை 20 ஆக பின்னர் உயர்ந்ததாம். ஈடன் பள்ளி (Eton) போன்ற இடங்களில் எழுத்துப் பயிற்சியும் கணிதமும் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. ஆங்கில, லத்தீன் புத்தகங்கள் கற்றுத் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் வகுப்பில் புராதன புவியியல், அல்ஜீப்ரா போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளியில் தொடர்ந்து படித்தவர்கள் யூக்ளிட் ஜ்யோமிதி பற்றி ஓரளவுக்குப் படித்தனர். ஆனால், 1851 வரை கணிதம் பள்ளிப் பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக ஆகியிருக்கவில்லை. அப்போதும் கூட கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாத நிலையே இருந்திருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் நாலந்தா, தட்சசீலத்தில் இருந்தவற்றைப்போல் முக்கியமானதாகவே இருந்திருக்கின்றன. இந்தியாவுக்கு குறிப்பாக 1773க்குப் பிறகு வந்த மேற்கத்திய பயணிகள், அறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் இந்தப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாகவே இருந்தனர். ஆனால், 1800 வரையில் அடிப்படைக் கல்வி என்பதே பொது மக்கள் அளவில் வெகு குறைவாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் அந்த நேரத்தில் தரப்பட்ட கல்வியும், அந்தக் கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அனைத்து பிரிவினரும் கல்வி பெற முடிந்திருக்கிறது. கற்றுத் தரப்பட்ட பாடங்களும், கல்வி பெற்ற வருடங்களும் அதிகமாகவே இருந்திருக்கின்றன. கலை இலக்கியங்களில் படைக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் மட்டுமல்லாமல் அடிப்படைப் பொதுக் கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்தக் கல்வி முறையைத்தான் மிகவும் பின்தங்கியதாக பின்னால் வந்த பிரிட்டிஷார் சொன்னார்கள்.

தங்கத்தைப் பார்த்து பித்தளை கேலி செய்ததைப் போல். ஆனால், இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டதால், நம் மனங்களில் தங்கத்தின் மதிப்பு தெரியாமலேயே போய்விட்டிருக்கிறது. பித்தளையின் பின்னால் பித்துப் பிடித்தபடி இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 ‘மனித மலத்தை மனிதனே அள்ளும் தேசம்!’

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 8

கடந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட மேலான நிலையில் இந்தியாவில் கல்வியும் தொழில்நுட்பமும் இருந்திருக்கிறது என்று சொல்லும்போது அதை மறுதலிப்பவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், என்னதான் உயர்வாக இருந்திருந்தாலும் மனித மலத்தை மனிதரையே அள்ள வைத்த (வைக்கும்) தேசம்தானே என்பதுதான். பெரியாரியவாதியாக இருந்தால் பிராமணர்கள்தான் அதற்குக் காரணம் என்றும் அம்பேத்காரியவாதியாக இருந்தால் சாதி இந்துதான் அதற்குக் காரணம் என்றும் இருக்கும் இடத்துக்கு ஏற்பத் தங்கள் வாதத்தை முன்வைப்பார்கள்.

மலத்தை அள்ளியவர்கள் தங்கள் தொழிலில் இருந்த இழிவை அகற்ற என்ன முயற்சிகள் எடுத்தார்கள்? நாலைந்து பன்றிகளைக் கயிற்றில் கட்டி வந்து சுத்தம் செய்ய வைத்திருக்கலாமே? சிந்து – சரஸ்வதி நாகரிக காலத்திலேயே கழிப்பறையில் இருந்து கழிவு நீர் ஓடை வழியாகச் சென்று ஒரு கால்வாய்வழியாக ஊருக்கு ஒதுக்குப் புறத்துக்குக் கொண்டுசெல்லும் வசதி இருந்ததே… அது பின்னர் எப்படி மறைந்து, மறந்து போனது? இது போன்ற என்ற எளிய கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தாலும் எண்ணற்ற விடை தெரியாத கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

அத்தகைய இழிநிலையை முக்கிய காரணமாக முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தலித் விடுதலைப் போராட்டத்தினால் மலம் அள்ளும் தொழிலில் என்ன மாற்றம் வந்துவிட்டிருக்கிறது? வலிமை வாய்ந்த தலித் தலைவர் இருக்கும் உத்தரப் பிரதேசத்திலும் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை இன்றும் நடக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீட்டில் எத்தனை தோட்டி வர்க்கத்தினர் பயன் பெற்று மேலே வந்திருக்கிறார்கள்? தலித் என்ற அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சாதியினர் அனைவருமே இதை ஒரு தலித் பிரச்னையாகப் பார்க்கிறார்களா? பல்வேறு வேலைகளுக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையிலும் ஒருவர் அந்த வேலையைச் செய்வதன் காரணம் என்ன?

மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது பெருமளவுக்கு முடிவுக்கு வந்ததற்கு ஃபிளஷ் அவுட் டாய்லெட் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுதானே காரணம். எதிர்ப்பு அரசியலை முன்வைத்துப் போராடியவர்கள் அதில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லையே? மேலும் சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பை அள்ளுதல் என அந்த அவலத்துக்கு இணையானவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் சளைக்கவில்லை என்பது வேறு விஷயம். எந்தவித தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் அவர்களை விடுவித்திருக்கவில்லையே.

உண்மையில் ஆலய நுழைவுப் போராட்டத்தைவிட இந்த அவலத்தை நீக்குவதற்கான போராட்டம்தானே காந்தியாலும் பெரியாராலும் முதலில் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? இன்றும் கூட போலியோ இல்லாத தேசம் என்பதற்குத் தருவதைவிட நூறு மடங்கு அதிக கவனத்தை இந்த விஷயத்துக்குத்தானே தரவேண்டும்? ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் மீண்டும் பிரிட்டிஷாரின் காலத்துக்குத்தான் போயாக வேண்டும்.

அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனித மலத்தை மனிதரே அள்ளுவது என்பது இந்தியாவில் அதுவும் இந்து சமூகத்தில் மட்டுமே இருந்த அவலம் அல்ல. பிரிட்டனில் நைட் சாயில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மலத்தை அங்கும் மனிதர்கள் வெறும் கைகளால்தான் சுத்தம் செய்திருக்கிறார்கள். மேட்டுக்குடியினர் அதிகமான குளிரில் வெளியில் செல்வதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதை எடுத்துச் செல்வதற்கு மக்களில் இருந்து ஒரு பிரிவினரைத்தான் நியமித்திருக்கிறார்கள். குலத்தொழிலாகவே அது தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. டிரம்களிலும் வாளிகளிலும் எடுத்துச் சென்ற மலத்தை வைத்து உரம் தயாரித்திருக்கிறார்கள்.

ஜப்பானில் மேட்டுக்குடியினரின் மலத்தில் புரதச் சத்து அதிகம் இருக்கும் என்பதால் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்துக்கு அதிக கிராக்கி இருந்திருக்கிறது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் மனிதர்கள்தான் அந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். உலகின் வேறு எந்த நாட்டிலும் அந்தப்பணியில் ஈடுபட்டவர்கள், மன்னராகவோ, நிலப்பிரபுவாகவோ, பாதிரியாராகவோ, மவுல்வியாகவோ ஆனதாக பெரிதாக எந்த ஆவணமும் இல்லை. இந்தியாவில் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது என்பது பிரிட்டிஷார் காலத்தில்தான் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டு அரசுத்தொழிலாக அங்கீகாரம் பெற்று நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முன்புவரை திறந்த வெளிகளில் மலம் கழிப்பதுதான் பரவலாக இருந்துவந்திருக்கிறது.

ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த அவலம் இன்று முற்றிலும் ஒழிந்துவிட்டிருக்கிறது. அல்லது இந்தியாவைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியா இன்றும் ஒப்பீட்டளவில் இந்த அவலத்தைத் துடைப்பதில் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், நவீன யுகத்துக்குள் நாம் காலடி எடுத்துவைத்த விதத்தில்தான் அதற்கான விடை இருக்கிறது. அந்த, முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டிருக்கிறது.

இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய நவீன கல்வியானது நமது கடந்த காலத்தை இருண்ட காலமாகவே சித்திரித்தது. அந்தக் கல்வியில் முதலும் முடிவுமாக நமக்குச் சொல்லித்தரப்பட்டது என்னவென்றால், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், இழிவானவர்கள் என்பதுதான். அதனால் இந்திய அறிவுத் துறையானது அதன் பாரம்பரிய விஷயங்களில் இருந்து இயல்பாக அடுத்த கட்டத்துக்கு வளராமல் நம் கடந்த காலத்தை முற்றாக ஒதுக்கியது. தேவையற்ற அதீத குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்தது.

ஒரு வசதிக்காக இந்தியர்களை பிராமணர்கள், அ-பிராமணர்கள் என்று பிரித்துக்கொள்ளலாம். பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து பிராமணர்களில் பெரும்பாலானோர் மிகுந்த பதற்றத்துடன் தமது வேர்களில் இருந்து தம்மை முற்றாகத் துண்டித்துக்கொண்டு ‘நவீனமயமானார்கள்’. கம்பனையும் காளிதாசனையும் படிக்காமல் ஷேக்ஸ்பியரையும் பைரனையும் கரைத்துக் குடித்தனர். சமஸ்கிருதத்தைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலத்துக்குத் தாவினர். இசை, கட்டடக்கலை, மருத்துவம், விவசாயம் என எந்தத் துறையை எடுத்தாலும் நமது கடந்த காலச் சாதனைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு மேற்கத்திய நகல்களாக ஆனார்கள்.

அ-பிராமணர்களில் பெரும்பாலானவர்களோ இந்தியாவின் கடந்த காலத்தை பிராமண ஆதிக்கம் நிறைந்த ஒன்றாகப் பார்த்து அதை முற்றாக நிராகரித்தனர். சாதி, பெண்கள் நடத்தப்பட்டவிதம்  போன்றவற்றில் உலகம் என்ன நிலையில் இருந்தது… இந்தியா என்ன நிலையில் இருந்தது… இந்தியாவில் இருந்த நிலைக்கு உண்மையில் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு சாதிதான் காரணமா என்ற எந்த கேள்விக்கும் நியாயமான பதிலைத் தேட முயற்சி செய்யாமல் வெறுப்பு அரசியலில் இறங்கினர். இந்தியாவின் சமூக, அரசியல் தளத்தை அந்த மனோபாவமே முழுவதும் ஆக்கிரமித்தது. அப்படியாக இரண்டு க்ரீமீ லேயரும் இந்தியாவின் கடந்த காலத்தைப் பழிப்பதையே தமது அறிவுசார் செயல்பாடாக எடுத்துக்கொண்டன. இதனால், இந்தியாவின் நிகழ்கால விஷயங்களில், இந்திய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு யாருமே இல்லாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

சுதந்தரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் மலம் அள்ளும் தொழிலையும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலையும் நவீனப்படுத்த எந்தவொரு முயற்சியும் இந்த இரு தரப்பினரால் எடுக்கப்பட்டிருக்கவே இல்லை (Sulabh கழிப்பறைகள் போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக). ஆண்டுக்கு 300 நாள்கள் வெய்யில் பொரிந்து தள்ளுமொரு நாட்டில் அதில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு பதிலாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நலனுக்கு உகந்த திட்டங்களில் சொந்த மக்களைப் பணயம் வைக்கும் நிலைக்குப் போய்விட்டிருக்கிறது. நேற்று காலனி ஆதிக்கத்தின் இசைக்கு ஏற்ப ஆடினார்கள். இன்று உலகமயமாக்கலின் இசைக்கு ஏற்பக் கூத்தாடுகிறார்கள்.

உண்மையில் மேற்கத்திய கல்வியானது ஒருவகையில் நமது கடந்த கால பிழைகளை எல்லாம் களைந்து நம்மை மேம்படுத்த உதவியிருக்கவேண்டும். ஆனால், அப்படியும் நடக்கவில்லை. அதாவது, நமது கடந்த காலத்தின் நல்ல அம்சங்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷ் சமூகத்தின் நல்ல அம்சங்களும் நமக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. இந்தப் பிறழ்வே நம் இன்றைய பிரச்னைகளுக்கு முக்கியகாரணமாக இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் கடந்த காலமும் நிகழ்காலமும் இந்த அளவுக்கு ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டிருப்பதாக இல்லை.

பிரிட்டனில் கடந்த காலத்தில் மலம் மனிதர்களால் அள்ளப்பட்டதை தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பப் பின்னடைவாகவே பார்த்திருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை நோக்கி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நகர்ந்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில், அந்தச் செயலானது இந்தியாவுக்கு மட்டுமே உரிய அவமானமாக முத்திரை குத்தப்பட்டது. ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்றுக்கொண்டு சோர்ந்து முடங்கியது. உலர் கழிபறைக்கு மாற்றாக நீர்-கழிப்பறை 1596-ல் பிரிட்டனில் ஜான் ஹேரிங்டனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆகும் செலவும் அதிகம் இல்லை. இருந்தும், அதன் பிறகு 182 ஆண்டுகள் வரை அது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறாமல்தான் இருந்திருக்கிறது. மனித இனம் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது பல புரியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாமே “ஆதிக்க சக்தி’யின் சதியாகவே இருப்பதில்லை.

இன்று, பிராமண அறிவுவர்க்கம் உலகமயமாக்கல் பேருந்தின் படிக்கட்டில் தொற்றிக்கொள்ளவாவது இடம் கிடைத்துவிடாதா என்று விழுந்தடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அ-பிராமண அறிவு வர்க்கம் மாய எதிரியை உருவாக்கி அட்டைக்கத்தியைச் சுழற்றிப் போராடி வருகிறது. நேற்று காலனி ஆதிக்க சக்திகளின் இடத்தை இன்றைய உலகமயமாக்கல் சக்திகள் பிடித்துவிட்டிருக்கின்றன. இரண்டிலும் பாதிக்கப்படுவதென்னவோ பாவப்பட்ட நாம்தான். என்று இந்தியாவின் கடந்த காலம் குறித்த பிழையான எண்ணங்களை மாற்றிக் கொண்டு உண்மையான எதிரியைப் புரிந்துகொண்டு பிராமண, அ-பிராமண வர்க்கங்கள் கை கோக்கிறதோ அன்றுதான் நமக்கு விடிவு பிறக்கும். இல்லையென்றால், யது வம்சத்துக்கு நேர்ந்ததே நமக்கும் நேர்ந்துவிடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மரபணுவில் புகுந்த வைரஸ்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 9

இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் சுதந்தரம் என்ற ஒன்று கிடைத்ததாகப் பொதுவாக நம்பப்படுகிறது. இந்த 65 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை ஒற்றை ராஜ குடும்பமே ஆட்சி செய்து வந்திருக்கிறது (வருகிறது) என்றாலும் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்று நடப்பதாகத்தான் நம்பப்படுகிறது. இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் நம்பப்படும் தேசத்தில் இருந்த விஷயங்கள் இல்லாததாகத்தானே நம்பப்பட முடியும். அப்படி நம்பப்படுவதால்தான் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதுதானே வேதனையான உண்மை.

மேற்குலகம்தான் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் உயர்ந்தது என்பது ஏற்றுக்கொள்ளவைக்கப்பட்ட சித்தாந்தமாக இன்று இருக்கிறது. இந்திய தாகத்துக்கு இளநீரையும் மோரையும்விட சாக்கடைத் தண்ணீர் நிறத்திலான பெப்ஸியும் கொக்ககோலாவும்தான் உகந்தது என்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆண்டில் 300 நாட்கள் சூரியன் சுட்டெரிக்கும் தேசத்துக்கு மேற்குலகம் ஒதுக்கித் தள்ளிய அபாயகரமான அணு மின்சாரம்தான் சிறந்தது என்று பெரும்பாலான இந்திய அறிவுஜீவி மற்றும் விஞ்ஞானி வர்க்கம் கிளிப்பிள்ளைபோல் கத்திக்கொண்டுவருகிறது. முன்னோர்களைப் பழிக்கும் சமூகம் வாரிசுகளைக் காவு கொடுப்பதில்தான் போய்முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நம் தேசம் ஆகிக் கொண்டிருக்கிறது.

கடந்த காலத்தில் நாம் யாராக இருந்தோம் என்பது நமக்குத் தெரியாமல் போனதால் வந்த விளைவுதான் இது. காலனிய ஆதிக்கம் என்பது வெறும் பவுதிக தளத்தில் மட்டுமே நடந்த ஒன்றல்ல. அது மக்களின் மனங்களையும் சேர்த்தேதான் அடிமைப்படுத்துகிறது. ஆதிக்கவாதிகள் போன பிறகும் அவர்களுடைய ஆட்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இறகுகள் வெட்டப்பட்ட கிளியானது கூண்டைத் திறந்துவிட்டாலும் பறந்து செல்லாமல், சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் பழைய இடத்துக்குத் திரும்புவதுபோல் நாமும் சுதந்தரம் கிடைத்த பிறகும் எஜமான விசுவாசத்துடனே இன்றும் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். நேற்று காலனிய சக்திகள் நம்மை அடிமைப்படுத்தின. இன்று உலகமயமாக்கல் சக்திகள் நம்மை ஆட்சி செய்துவருகின்றன. இத்தகைய ஆட்சிகளின் வலிமை என்பது நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைப்பதிலும் அப்படி கண்களை இழந்து அவர்கள் தரும் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுதான் உலகைப் பார்ப்பதற்கான சிறந்த வழி என நம்பவைப்பதிலும்தான் இருக்கிறது.

கடந்த காலத்தைப் பழிப்பது என்பது கடந்த காலத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்யப்படும் ஒன்றாக இல்லாமல், அதுதான் முற்போக்கு என்ற பேதைமையில் முன்னெடுக்கப்படுகிறது. இன்று இந்தியாவின் மிக உயர்ந்த கல்வியைப் பெறும் வர்க்கமானது ஒன்று மேற்குலகைத் தேடி ஓடும் ஒன்றாக இருக்கிறது. அல்லது மேற்குலகின் நலனை இங்கிருந்தபடியே நிறைவேற்றித் தரும் ஒன்றாக இருந்துவருகிறது. படைப்பூக்கம் என்பதோ நமது தேவைகள் சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதோ அறவே இல்லாமல், மேற்கின் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு நடப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக இருந்துவருகிறது. மேற்கின் ஆராதகர்களாக இருக்கும் அந்த இந்தியக் குழுவானது, அவர்களிடமிருந்து தேச பக்தியைக் கற்றுக்கொண்டு சொந்த தேசத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக இந்திய முகத்தை மறைத்து, மேற்கத்திய முகமூடியை அணிந்துகொண்டு பரிதாபத்துக்குரிய கோமாளியாக உலக அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
உலகமயமாக்கல் என்பது ஒவ்வொரு தேசமும் பரஸ்பர நலன் பெறும் வகையிலான பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக ‘வளர்ந்த’ நாடுகள் வளரும் நாடுகளைக் கபளீகரம் செய்யும் ஒன்றாக ஆகிவருகிறது. அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம், நீர் தேங்காத சாலைகள், பேரிடர் மேலாண்மை, கழிவுப் பொருள் மேலாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என இன்று இந்தியாவுக்கு அந்நிய முதலீடும் தலையீடும் தேவைப்படும் எத்தனையோ துறைகள் இருக்க நமக்கு சற்றும் தேவைப்படாத துறைகளில் அந்நிய நிதி அபரிமிதமாகக் கொட்டப்படுகிறது.

எங்கோ கடலில் பெட்ரோல் ஆலை வெடித்து நூற்றுக்கணக்கில் பறவைகளும் மீன்களும் இறந்து போனதற்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்கும் சாமர்த்தியசாலிகள், ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் மடிந்து போன சம்பவத்தில் நிறுவனத்தை வேறு பெயரில் மாற்றிக் கொண்டு சட்டத்தின் இடுக்குகளினூடாக உடலைக் குறுக்கிக்கொண்டு செல்வதை வர்த்தக நிபுணத்துவமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை, விபத்து ஏற்பட்டால் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே எழுதி வாங்கிக் கொள்ளும் ஒரு நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கத்தான் எவ்வளவு பெரிய அறிவிஜீவிக் குழு. மரபணுவிலேயே வைரஸ் புகுந்துவிட்டதென்றால் நோயை எப்படி ஒழிக்க முடியும்?
சுயமாகச் சிந்தித்து வந்த காலத்தில் தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது என்ற உண்மையானது இன்று யாரும் கேட்க விரும்பாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இந்திய தொழில்மயநீக்கமும் பிரிட்டனின் தொழில்மயமாக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒன்றுதான் என்று பண்டிட் மதன்மோகன் மாளவியா சொன்ன வார்த்தைகள் மிகவும் துல்லியமாக அந்த சரித்திர சோகத்தை சொல்லிவிட்டிருக்கிறது.

மேற்கத்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்தியாவில் முடுக்கிவிடுவதற்காக 1916-18-ல் அமைக்கப்பட்ட இந்திய தொழில்துறை கமிஷனில் இந்திய தரப்பு அங்கத்தினராக இருந்த மாளவியா, கப்பல் கட்டுதல், இரும்பு உருக்குதல், நெசவு, விவசாயம் என பல்வேறு துறைகளில் கணிசமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இந்தியாவின் தொழில் பாரம்பரியத்தை ஒரேயடியாக நிராகரிப்பதை எதிர்த்து தன் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பி.என். பாஸு இந்தியாவின் தொழில்துறை பின்னடைவு பற்றிக் கருத்துக் கூறுகையில், இந்தியாவுக்கு நடைமுறை சார்ந்து சிந்திக்கும் மனிதர்கள் தேவைப்பட்ட போது ஆங்கிலோ சாக்ஸன் இலக்கணத்தை மனனம் செய்து ஒப்பிக்கும் பண்டிதர்களை பிரிட்டிஷார் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கல்வி உருவாக்கியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விஷ்வகர்மா மஹாஜன் குழுவின் செயலாளர் மேற்கத்திய பாணி தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் இந்தியாவில் கண்மூடித்தனமாகத் திணிப்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கைவினைக் கலைஞர்களின் சமூகமானது இந்தக் கல்வியால் எந்தப் பயனும் பெறப்போவதில்லை. இந்திய பாரம்பரியத் தொழில் துறையில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அறிவிஜீவி வர்க்கமானது நம் சமூகத்துக்குப் பெரும் கேட்டையே விளைவித்து வருகிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அந்த கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளித்த ஒரு ஆங்கிலேயர், இந்திய சாதி அமைப்பானது தொழில் மயமாக்கத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றியிருக்க முடியும். ஒவ்வொரு சாதியும் ஒரு தொழிற்சங்கம் போலச் செயல்பட்டிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப்போய்விட்டது. ஒவ்வொரு சாதியும் கல்வி அமைப்பின் ஒரு அலகாகக் கருதப்பட்டிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மையானது இன்று ஏதோ இட்டுக் கட்டிச் சொல்லும் ஒன்றாக நம்மாலேயே பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. ஆனால், 16-18 நூற்றாண்டுகளில் இந்தியாவில் இருந்த ஐரோப்பிய விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு இந்தியா வேறொன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும், காட்டிய அக்கறையும், கடனாகப் பெற்றுச் சென்றவையும் ஏராளம். நன்றியோடு அவர்கள் அப்போது பதிந்து வைத்திருக்கும் ஆவணங்கள், காதுள்ளவர்கள் கேட்கவும் கண்ணுள்ளவர்கள் பார்க்கவும் ஏற்ற வகையில் மூடப்பட்ட அறைகளில் இன்றும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் தயாரிக்கும் முறை, எஃகு தயாரிப்பு முறை, கட்டடங்கள் கட்டும் முறை, அதற்குப் பயன்படுத்திய பொருட்கள், தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் செய்யப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி என இந்தியா தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் ஆவணங்களில் உள்ள வார்த்தைகளின் வழியாக வரையப்படும் இந்தியாவின் சித்திரமானது பேரழகுடன் திகழ்கிறது. அதைப் படிக்கும்போது, சூரியனே ஆனாலும் அதைப் பார்த்தபடி நிற்பவருக்குத்தான் வெளிச்சம் கிடைக்கும். எதிர் திசையைப் பார்ப்பவருக்கு இருண்ட நிழல்தான் தெரியும் என்பது உறுதிப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 தடுக்கப்பட்ட அறிவு

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 10

பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன் வைத்தியன்.

கோவாவில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் இருந்த சுமார் 750 வகைத் தாவரங்களைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் அதில் இடம்பெற்றிருந்தன. இந்தியத் தாவரங்களைப் பற்றிய தகவல் திரட்டுக்கு இந்தியர்கள் உதவி செய்ததில் பெருமைப்பட ஒன்றும் இல்லைதான். ஆனால், இந்தியாவில் அப்படியான பகுப்பு முறை முன்னரே இருந்ததால்தான் அந்தப் பணியை எளிதில் முடிக்க முடிந்தது. ஆயுர்வேதத்திலும் அதற்கு முன்பாகப் பின்பற்றப்பட்ட மருத்துவ முறையிலும் ஏராளமான மூலிகைகளைப் பற்றிய குறிப்புகளும் அவற்றின் குணங்களும் மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தன.

அதுபோல், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்துமே மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, கலப்பை. மண்ணைக் கிளறி விதைப்பது உலகில் எல்லா சமூகங்களிலும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயம்தான். ஆனால், இந்திய கலப்பை போன்ற செயல் திறம் மிகுந்த ஒரு கருவி உலகில் வேறு எங்கும் இருந்திருக்கவில்லை. இந்தியாவில் அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து அந்த காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்த மருந்துகளைவிட செயல்திறம் மிகுந்ததாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தடுப்பு மருந்தைவிட இந்திய பாரம்பரியத் தடுப்பு மருந்து அதிக நோய்ப் பாதுகாப்பைத் தந்திருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பு உயர் தரமானதாக இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 10,000 இரும்பு உலைகள் இருந்ததாகவும் ஒரு உலையில் வாரத்துக்கு அரை டன் இரும்பு உருக்கித் தயாரிக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 35-40 வாரங்கள் இயங்கியதாக வைத்துக்கொண்டால் ஆண்டொன்றுக்கு ஓர் உலை மூலம் சுமார் 20 டன் இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கும். உலகின் வேறு எந்தப் பகுதியை விடவும் இது அதிகமான அளவுதான். அதோடு அந்த இரும்பின் தரமானது ஸ்வீடனின் மிகச் சிறந்த இரும்பைவிடவும் சிறப்பாக இருந்ததாக அயர்ன் வொர்க்ஸ் இன் ராமநாயக்க(ன்)பேட்டை என்ற தலைப்பில் 1795-ல் எழுதிய கட்டுரையில் டாக்டர் பெஞ்சமின் ஹைன் குறிப்பிட்டிருக்கிறார்.

இவை எல்லாவற்றையும்விட மருத்துவத்தில் இந்தியா எட்டியிருந்த உயரம்தான் பிரிட்டிஷாரை மலைக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி இன்று உலகில் வெகுவாக முன்னேறி இருக்கும் மருத்துவப் பிரிவு. அதன் வேர்கள் இந்தியாவில்தான் இருந்திருக்கிறது என்பது அன்றைய பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல இன்றைய இந்தியர்களுக்குக்கூட நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கும். ஐரோப்பியர்கள் நீராவியில் இருந்து ரயில் எஞ்சினைக் கண்டுபிடித்தார்கள். நாம் இட்லி சுட்டோம் என்று நம்மை நாமே கேலிச் சித்திரமாக ஆக்கிக் கொள்வதில்தான் நமக்கு மிகவும் பெருமிதம்.

இந்தியாவின் கடந்த காலம் பிற நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என்ற உண்மையை இந்தியர்களே மறுப்பதற்கான காரணம் வெகு எளிது. இந்தியாவின் கடந்த காலத்தை வைதிக-பிராமண ஆதிக்கம் மிகுந்த காலமாக அடையாளப்படுத்தியே அவர்களுடைய அரசியல் ஆசான்கள் வகுப்பு எடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் சிறப்பு என்று எதையாவது சொன்னால் அது பிராமணர்களைப் புகழ்ந்ததாக ஆகிவிடும். பிராமணர்களை தீமையின் பேருருவமாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். இதற்கு எந்தவித ஆதாரங்களும் தேவையில்லை. அது அப்படித்தான் என்று அடித்துச் சொன்னாலே போதும் என்ற எளிய சூத்திரத்தால் முடுக்கிவிடப்பட்டுதான் இன்றைய இந்திய சிந்தனை நதி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எல்லா இடங்களையும் போலவே இங்கும் வேலைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன; அகமண முறை நிலவியிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பிராமணர்களின் கண்டுபிடிப்பாக சொல்லப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றன. மனு ஸ்மிருதி என்பது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் இந்த அளவுக்கான முக்கியத்துவத்தையே பெற்றது. அவர்களால்தான் அது தொகுக்கவும்பட்டது. அதில் என்னென்ன இடைச்செருகல் என எந்த ஆய்வும் எங்கும் செய்யப்பட்டதே இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ‘பிற்படுத்தப்பட்ட சாதிகளையும்’, ‘தாழ்த்தப்பட்ட சாதிகளையும்’ அங்கமாகக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள்தான் கடந்த ஐம்பது ஆண்டுக்கு முன்புவரை நீதிமன்றமாக இருந்துவந்திருக்கின்றன. இன்றும் தமக்குள்ளாகவே பேசித் தீர்த்துக் கொள்ளும் பஞ்சாயத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்றும் மனித மலத்தை மனிதரே அள்ளுகிறாரா… மனுதான் காரணம். தலித்கள் பிற்படுத்தப்பட்டவர்களால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறார்களா… ஆரிய, பிராமணர்கள்தான் காரணம் என கிளிப் பிள்ளைகள்கூட சொல்லக் கூசும் அளவுக்கு விஷயத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள மறுத்து மட்டையடி அடிப்பதே இங்கு போராளிக்குணமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் புகழ்ந்தால் பிராமணர்களைப் புகழ்ந்ததாகிவிடும். பிராமணர்களைப் பழிக்க வேண்டுமா… இந்தியாவின் கடந்த காலத்தைப் பழித்தால் போதும் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்தியாவின் பல்வேறு சாதிக் குழுக்களில் பிராமணர்களும் ஒரு பிரிவினர். ஒவ்வொரு சாதியினரும் தத்தமது தொழில்களை எந்த அளவுக்கு மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களோ அதைவிடக் கூடுதலாக பிராமணர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொண்டதன் மூலம் சமூக மேலாண்மையை அடைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கீகாரத்தோடு அவர்கள் தங்கள் நிலையைத் தக்கவைத்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் இந்தியாவின் கட்டடக்கலையில் ஆரம்பித்து மருத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என ஏராளமானவற்றில் பிராமணர்களுக்கு இணையாக பிற சாதியினரும் கணிசமாக பங்களித்திருக்கிறார்கள். இந்தியா என்பது வெறும் பிராமண பூமி மட்டுமே அல்ல. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் மருத்துவத் தொழில் நுட்பமானது எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களால் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும். மண் பானை, செங்கற்கள் செய்யும் குயவர்கள்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

திப்பு சுல்தானுடனான போரில் பிரிட்டிஷாரின் படையில் இருந்த ஒருவருடைய மூக்கு அறுபட்டுவிட்டது. ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் காளை வண்டியின் ஓட்டுநராக இருந்த அவர் பல மாதங்கள் சிதைந்த மூக்குடனே வசித்து வந்திருக்கிறார். அவருக்கு மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த குமார் என்ற ஒருவர் செயற்கை முறையில் மூக்கை ஒட்ட வைத்திருக்கிறார். அந்த அறுவை சிகிச்சையை அருகில் இருந்து பார்த்த பிரிட்டிஷ் மருத்துவர்கள் தாமஸ் க்ருஸ், ஜேம்ஸ் ஃபிண்ட்லே விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். உடைந்த சிலை அல்லது பானையின் பாகத்தை களி மண் பூசி ஒட்ட வைப்பதுபோல் வெகு அழகாக அவர்கள் ஒட்ட வைத்திருக்கிறார்கள். இந்தப் பாணியைப் பின்பற்றித்தான் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என்று உலகம் இன்று கொண்டாடும் ஜே.சி.கார்ப்யூ (J.C. Carpue, FRS) தன் முதல் அறுவை சிகிச்சையை 1815-ல் பிரிட்டனில் செய்திருக்கிறார்.

மூக்குக்குத் தேவையான தோல் மற்றும் சதைப்பகுதியை நெற்றியில் இருந்து குயவர்கள் எடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு என மருத்துவ உலகம் இன்றும் கொண்டாடுகிறது. பொதுவாக சதை அதிகமாக இருக்கும் கால் அல்லது பிற பகுதியில் இருந்து எடுப்பதுதான் எளிது என்று தோன்றும். அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஷ்ருதர் கூட கன்னத்தில் இருந்து தோலை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறார். ஆனால், மூக்குக்குத் தேவையான தோலை நெற்றிப் பகுதியில் இருந்து எடுப்பதில் நிறத்தில் ஆரம்பித்து பல ஆதாயங்கள்  இருப்பதை இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கண்டடைந்திருக்கிறது. அதுவோ இந்தியாவில் மிகவும் சர்வ சாதாரணமான பிரிவைச் சேர்ந்தவர்களால் எளிதில் கண்டடையப்பட்டிருக்கிறது.

முதலில் அடிபட்ட மூக்கின் மேல் மெழுகால் ஆன மூக்கு ஒன்றை ஒட்ட வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அதன் விளிம்புகளை நெற்றி வரை பூசி மொழுகியிருக்கிறார்கள். பிறகு நெற்றியில் இருந்து தோலைப் பிய்த்து எடுக்காமல் கீழே இழுத்துக் கொண்டு வந்து மூக்கின் நடுவே சுவாசத்துக்கு மட்டும் இடைவெளி இருக்கும் வகையில் மூக்கின் மேலே பொருத்தியிருக்கிறார்கள். புதிய தோலானது பழைய தோலுடன் நன்கு ஒட்டும் வகையில் ஐந்தாறு இடங்களில் டெரா ஜபானிகா எனப்படும் பிசின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மருந்துகளும் போடப்படவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அந்த பிசின் நீக்கப்பட்டு நெய் தடவிய துணி போர்த்தப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து நீட்டிக் கொண்டிருக்கும் தோல் பகுதிகள் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாறு நாட்கள் நோயாளி படுத்த படுக்கையாகவே வைக்கப்படுகிறார். அதன் பிறகு, மூக்கில் துவாரம் சரியாக இருப்பதற்காக துணிச் சுருள்கள் வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் நெற்றியில் இருந்த தழும்பு காலப்போக்கில் மறைந்துபோய்விடுவதாகவும் ஜே.சி.கார்ப்யூ வியந்து பாராட்டியிருக்கிறார்.

நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாத பலசாலி ஒருவனை அவனுடைய எதிரிகள் வீழ்த்திய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன உடம்புக்கு முடியவில்லையா, மிகவும் சோர்வாக இருக்கிறீர்களே, முன்பு போல் கம்பீரம் இல்லையே என்று சொல்லிச் சொல்லியே அவனை உளவியல் ரீதியில் கலக்கமடைய வைத்து அதன் மூலம் அவனை நோய்க்குள் தள்ளிவிட்டார்களாம். இந்தியா அப்படியான ஒரு நிலையில்தான் இப்போது இருக்கிறது. செவி வழிச் செய்திகளாக, பாடல்களாக தலை முறை தலைமுறையாகக் கடந்து வந்திருக்கும் ஒரு அறிவானது அடுத்த தலைமுறைக்குப் போக முடியாதபடி தடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டிருக்கிறது



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 11

Icepits near Allahabad. Drawing by Fanny Parks c. 1830

இந்தியாவில் பிரிட்டிஷார் சற்றும் எதிர்பார்த்திராத இன்னொரு விஷயமும் நடந்துவந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் நிறைந்த நம் தேசத்தில் செயற்கை முறையில் ஐஸ் தயாரிக்கப்பட்டு வந்ததைப் பார்த்ததும் அவர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. அவர்கள் இமயமலை வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கவில்லை. எனவே, இந்தியாவில் பனிக்கட்டியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பனிக்கட்டி நிறைந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஐரோப்பியர்களுக்கு செயற்கையாக அதை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவில் அப்போது பனிக்கட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து சர் ராபர்ட் பார்க்கர் (எஃப்.ஆர்.எஸ்) (1775) மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

கட்டுரையை ஆரம்பிக்கும்போதே, அவர் ஆய்வு மேற்கொண்ட அலகாபாத், கல்கத்தா பகுதிகளில் எங்கும் தெருவிலோ சமவெளிகளிலோ பனிக்கட்டிகளே கிடையாது. வெப்பமானியும் உறை நிலை வெப்பத்தை ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை என்றுதான் ஆரம்பிக்கிறார். இயற்கை பனிக்கட்டி என்பது கிடையாது; இந்தப் பகுதியில் செயற்கையாகவேதான் பனிக்கட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே அவர் அப்படியான குறிப்புடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். டிசம்பரில் இருந்து பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பெருமளவுக்கு ஐஸ்கட்டி உற்பத்தி செய்யப்பட்டதை நேரில் பார்த்து எழுதியிருக்கிறார். வேறு சிலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் இதுதொடர்பாக வெறும் மேலோட்டமான தகவல்களே எங்கும் அதிகம் இருப்பதால் விரிவாக எழுத முடிவெடுத்ததாகச் சொல்கிறார். அவர் சொல்வதன் சாராம்சம் இது.

மிகப் பெரிய திறந்த வெளியில் 30 அடி சதுரத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு பாத்திபோல் மூன்று நான்கு குழிகள் வெட்டப்பட்டன. எட்டு அங்குல அளவுக்கு கரும்பு அல்லது மக்காச்சோளத் தட்டைகொண்டு நிரப்பப்பட்டன. இந்தப் படுகை மேலே உறைய வைக்க வேண்டிய நீரானது சிறு சிறு பானைகளில் ஊற்றப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. இந்த நீரானது கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும். இப்படி மாலை நேரத்தில் வைக்கப்படும் நீரானது சூரியன் உதிப்பதற்கு முன்பாக சேகரிக்கப்படும். எந்த அளவுக்கு பனிக்கட்டியாக ஆகியிருக்கிறதோ அது அப்படியே கூடைகளில் சேகரிக்கப்பட்டு வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு 14-15 அடிக்குக் குழி தோண்டப்பட்டிருக்கும். அந்தக் குழியில் முதலில் வைக்கோல் போடப்பட்டிருக்கும். அதன் பிறகு கரடு முரடான போர்வை போன்ற ஒன்று போடப்படுகிறது. இந்தக் குழிக்குள் கூடை வைக்கப்பட்டு குழியின் மேல் பகுதி மீண்டும் காற்றுப் புகாதபடி வைக்கோல் போட்டு மூடப்படும். இந்தக் குழிகளுக்கு மேலே பந்தல் போல் கூரை வேயப்பட்டிருக்கும்.

கரும்பு அல்லது சோளத்தட்டைகளின் ஸ்பாஞ்ச் போன்ற தன்மை பானைகளுக்குக் கீழே குளிர்ந்த காற்று சென்று வர வழிசெய்கின்றன. பானையில் இருக்கும் சிறு துவாரங்கள் குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வழி செய்து தருகின்றன. சம தளத்தில் இருந்து ஒரு அடி கீழே இவை வைக்கப்பட்டிருப்பதால் சம தளக் காற்றினால் எந்த அதிர்வுக்கும் ஆளாகாமல் இருக்க வழி செய்கிறது. இவை எல்லாமே மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே கண்டடையப்பட்டிருக்க வேண்டும்.

இந்த ஐஸ் உற்பத்தியில் பின்பற்றப்பட்டிருக்கும் விஞ்ஞானம் மிகவும் எளியது. பிற பொருட்களில் இருந்து வெப்பம் வந்து சேர முடியாதபடி நீர், திறந்த வெளியில் வைக்கப்பட்டால் சுற்றுப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு சில டிகிரிகள் அதிகமாக இருக்கும்போதே நீரானது பூஜ்ஜியத்தை எட்டிவிடும். இந்தப் பனிக்கட்டியானது பெருமளவுக்குச் சேகரிக்கப்பட்டு முறையாக மூடிவைக்கப்பட்டால் உறை நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.

சர்பத்கள் அல்லது உறைய வைக்கப்படவேண்டிய திரவங்களானது ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றப்பட்டு ஐஸ்கட்டிகள், வெடியுப்பு, சாதா உப்பு போன்றவை இருக்கும் பெரிய பாத்திரத்தினுள் வைக்கப்படும். கிண்ணத்துக்குள் வைக்கப்படும் திரவமானது ஐஸ்க்ரீம் போல வெகு அருமையாக உறைந்துவிடும். ஐரோப்பாவில் நாம் எந்த அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறோமோ அதே அளவுக்கு இந்திய ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றன.

இந்த வழிமுறையானது இந்தியர்கள் தாமாகவே கண்டுபிடித்ததுதான். பனை ஓலை விசிறியில் ஆரம்பித்து வெட்டி வேர் தட்டிகள் வரை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியக் குடிசைகள் என்பவை வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும். மழைக்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் சக்திகொண்டவை. இன்றைய கான்க்ரீட் வீடுகளோ சுண்ணாம்புக் காளவாய்போல் தகித்துவருகின்றன. இந்த நவீன மனிதன்தான் நேற்றைய மனிதனைப் பார்த்து தொழில்நுட்பத்தில் நீ பின்தங்கியவன் என்று சொல்கிறான்.

காகிதத்தைக் கண்டுபிடித்தது சீனர்கள்தான் என்றாலும் இந்தியாவிலும் அது உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய காகிதத்தை இந்திய பேப்பர் என்றே அழைத்திருக்கிறார்கள். சீனாவுடனும் அவர்களுக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்றபோதிலும் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய தரமான காகிதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  பிற தேசத்துக் கண்டுபிடிப்பையும் தனது திறமையைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் திறமை நம்மிடம் இருந்தது  புலனாகிறது. இது ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இருந்து வந்ததன் அடையாளம்.

இந்தியா மிகவும் சிறந்து விளங்கிய இன்னொரு துறை விவசாயம். ஊடுபயிரில் ஆரம்பித்து இயற்கை வழியில் உரங்களை உற்பத்தி செய்வது வரை எத்தனையோ விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட காலகட்டத்தில் ஒரு சமூகம் அந்தத்துறையில் சிறந்து விளங்குவது இயல்புதான். என்றாலும் நீர்பாசனத்தில் நாம் அடைந்த உச்சம் வேறு எந்த நாடும் நினைத்தே பார்த்திருக்க முடியாதது. வற்றாத நதிகள் எதுவும் இல்லாத தமிழகத்தில் ஏரிப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கின்றன (வரும் அத்தியாயங்களில் இது பற்றி விரிவாகப் பார்ப்போம்).

மனிதர்கள், குறிப்பாக இந்தியர்கள் தமது சுற்றுச்சூழல், வாழ்க்கைத் தேவைகள், அனுபவங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். எப்போதுமே மனித வாழ்க்கையின் இலக்கு என்பது சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரும் தமது சந்தோஷத்துக்கு ஒவ்வொரு வழியைத்தேடிக் கண்டைவதுண்டு. அனைவருக்கும் பொதுவான ஒன்றை முன்வைத்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை மதிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவே போய் முடியும்.

துணிகளை வெளுக்கும் தொழில் ஈடுபட்டவர்கள் அதற்கான வேதிப் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கூடவே சுமைகளைச் சுமந்து செல்ல கழுதைகளை வளர்ப்பு மிருகங்களாக்கிக் கொண்டார்கள். விவசாயிகள் கலப்பை போன்றவற்றைக் கண்டுபிடித்ததோடு காளை மாட்டைக் கொண்டு உழவுத் தொழிலைச் செய்துகொண்டார்கள். உடல் வலு குறைவென்பதால் உடல் உழைப்பில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட பிராமணர்கள், மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். அதனால் தத்துவார்த்த, இருத்தியல் சிக்கல்களை நோக்கி அவர்களுடைய நகர்வு அமைந்தது. உடல் உழைப்பில் ஈடுபட்டுவந்த பிரிவினர் வேத வேதாந்தங்களைப் படிக்க முடியவில்லையே என்று மூலையில் சோர்ந்துபோய் உட்காராமல் தமது வேலை சார்ந்த தொழில்நுட்பங்களை வெகு நேர்த்தியாகக் கண்டடைந்துவந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்த அறிவானது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்பட்டு தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. அப்படியாகக் கடந்த கால இந்திய சமூகத்தில் (உலகின் பிற சமூகங்களைப் போல) வேலைகளை மாற்றிக்கொள்ளத்தான் வழி இருந்திருக்கவில்லையே தவிர, ஒவ்வொருவரும் தமது வேலையைச் செழுமைப்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை.

நவீன காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் இருந்த இத்தகைய அறிவானது பொதுத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அது சார்ந்து சிந்தித்து ஒவ்வொரு தொழிலையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேற்குலகில் இந்த நவீன யுகச் செயல்பாடுகள் அவர்களுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மிக இயல்பாக நடந்தேறி இருக்கிறது. இந்தியாவிலோ அது நேர்மாறாக ஆகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது அனுபவம் சார்ந்து கற்று உருவாக்கியிருந்த தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறைகளும் ஒற்றை வரியில் நிராகரிக்கப்பட்டன. ஒருவேளை இந்திய பாரம்பரிய அறிவானது அதன் இயல்பான போக்கிலேயே வளரவிடப்பட்டிருந்தால் மேற்குலகின் பேராசை பிடித்த முன்னேற்றத்துக்குப் பதிலாக இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு வளர்ச்சியை நாம் அடைந்திருக்கமுடியும். ஒருவேளை பிரிட்டிஷார்கள் தமது ஆதிக்க மனோபாவத்தை விட்டொழித்து உலகின் பல பகுதிகளில் இருந்த அறிவைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தால் உலகமே மிகவும் நிதானமான வளர்ச்சியை நோக்கிப் போயிருக்கும்.

ஜே.சி.குமரப்பா ஐந்துவகை பொருளாதாரம் பற்றிச் சொன்னார். சிங்கம் புலி போல் பிறரை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் வேட்டைப் பொருளாதாரம் ஒரு முனையில் இருக்கிறது. இதற்கு நேர் எதிர்முனையில் தாயன்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காமல், குறைந்த தேவைகளுடன் தியாக மனப்பான்மையுடன் திகழும் சேவைப் பொருளாதாரம் இருக்கிறது. மேற்குலகம் வேட்டைப் பொருளாதார மனநிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா சேவைப் பொருளாதார மனநிலையை கொண்டது. குமரப்பா பொருளாதாரத்துக்குச் சொன்னதை அதற்கு அடிப்படையான தொழில்நுட்பத்துக்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். இன்றைய மேற்கத்திய தொழில்நுட்பத்தின் மூலம் மனித குலம் அனுபவித்துவரும் வளர்ச்சியானது அபாயகரமானது. நிலைமை கைமீறிப் போவதற்கு முன் அதை உணர்ந்துகொள்வதுதான் நமக்கு நன்மை தரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 12

பிரிட்டிஷாரின் ஆட்சி இந்தியர்களின் நலனைத்தான் கருத்தில் கொண்டிருந்தது என்றும் சொல்வார்கள். ஏகாதிபத்தியம்தான் என்றாலும் அது நல்லெண்ணம் கொண்டதாகவே இருந்திருக்கிறது. தவறுகள் என்று ஏதேனும் நடந்திருந்தால், அது கிழக்கிந்திய கம்பெனியினர் நிர்வாகம் செய்தபோது நடந்திருக்கலாம். வர்த்தக நோக்கம் கொண்ட அவர்கள் தமது நிர்வாகப் பயிற்சியின்மை காரணமாக ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம். அவையும் கண்காணிக்கப்படாமல் இருந்திருக்கவில்லை. கிழக்கிந்திய கம்பெனியினர் தவறுகள் செய்தபோதெல்லாம் நீதியிலும் நேர்மையிலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிற்க வைத்து கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியினரின் செயல்பாடுகள் கைமீறிப் போவதாகத் தெரிந்ததும் மாண்புமிகு அரசியார் இந்தியாவை தன்னுடைய நேரடிக் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்து சட்ட ஒழுங்கையும் நீதி நெறியையும் நிலைநாட்டிவிட்டார்.

இந்தக் கதைதான் பல வரலாற்று நூல்களிலும் இடம்பெறவும் செய்திருக்கிறது. ஆனால், தரம்பால் பிரிட்டிஷாரின் ஆவணங்களைப் படித்துப் பார்த்தபோது உண்மை நிலை வேறாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

1600 வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி 1748 வரை வர்த்தகச் செயல்பாடுகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது. கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைகளையும் வணிகப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளையும் தேவையான ராணுவ முகாம்களையும் அமைத்து வந்திருக்கிறது. 1748-க்குப் பிறகு இந்தியாவைக் கைப்பற்றி அதன் அரசாங்க விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தது. 1858 வரை அதனுடைய நிர்வாகமே இருந்துவந்திருக்கிறது. சிப்பாய் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின் மீது பிரிட்டிஷாருக்கு மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. இதனால், மேதகு ராணியார் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் என்ற பிரிட்டிஷ் அரசவைப் பிரதிநிதியின் நேரடி பொறுப்பின் கீழ் இந்தியாவைக் கொண்டுவந்தார். அவருடைய ஆட்சியே 1947 வரை நீடித்தது.

1600-ல் இருந்து 1858 வரை கிழக்கிந்திய கம்பெனிதான் நிர்வாகம் செய்துவந்தது என்றாலும் அது ஒருபோதும் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அந்த வர்த்தக நிறுவனத்துக்கு பிரிட்டிஷ் கடற்படை, ராணுவம் ஆகியவற்றின் முழு ஆதரவு இருந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசவை கஜானாவில் லட்சக்கணக்கில் பணத்தைக் கொண்டுகொட்டியிருக்கிறது. பிரிட்டனின் நலனுக்காக குறைந்த வட்டியில் பெருமளவிலான தொகையைக் கடனாகவும் தந்திருக்கிறது. அவ்வப்போது பிரிட்டிஷ் அரசவையிடம் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல விஷயங்களை கிழக்கிந்திய கம்பெனி கடற்படைத் தலைவர்களின் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றன. அவர்கள் பிரிட்டிஷ் அரசர் அல்லது அரசவையிடம் இருந்து நேரடியாக உத்தரவுகளைப் பெற்று செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார்கள். இப்படியாக பிரிட்டிஷ் அரசு கொடுத்த உத்தரவுகளும், வழிகாட்டுதல்களும் பிரிட்டிஷார் ஆவணங்களில் மிகத் தெளிவாகவே இடம்பெற்றிருக்கின்றன.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தளபதி கன்னோஜி ஆங்க்ரேயை பிரிட்டிஷ் அரசு தனது அரச விரிவாக்கத்துக்குப் பெரிய தடையாகப் பார்த்திருக்கிறது. அவரை அகற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுபோல் திப்பு சுல்தானில் ஆரம்பித்து கட்டபொம்மன்வரை எத்தனையோ பேரை தங்களுடைய ஆதிக்க விரிவாக்கத்துக்குத் தடையாகப் பார்த்து கொன்று குவித்திருக்கிறார்கள்.

1750க்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசின் உத்தரவுகள் பல வழிகளில் ஊடுருவ ஆரம்பித்திருக்கின்றன. 1757-ல் வங்காளத்தைக் கைப்பற்றிய பிறகு, ராபர்ட் கிளைவ், இந்தியா  பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் ஆளப்படவேண்டும். கம்பெனிகளால் நிர்வகிக்க முடியாது என்று பிரிட்டிஷ் அரசுக்கு  கடிதம் எழுதினார். இதுபோன்ற பல ஆலோசனைகள் வந்து சேரவே, 1773-ல் ஓர் சட்டம் கொண்டுவரப்படது. அதன்படி கவர்னர் ஜெனரலும் அவருக்குக் கீழ் ஒரு குழுவும் நிர்மாணிக்கப்பட்டன. அதன் பிறகு 1784-ல் இந்திய விவகரங்களைக் கவனித்துக்கொள்ள கமிஷனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தலைவரும் ஆறு உறுப்பினர்களும் கொண்ட அந்தக் குழுவில் பிரிட்டிஷ் பிரதமரும் ஓர் அங்கத்தினராக இருந்தார். அந்தக் குழுவினர்தான் இந்தியாவை முழுவதுமாக ஆண்டார்கள். அவர்கள் எடுத்த தீர்மானங்களே, கிழக்கிந்திய கம்பெனியால் ஒரு கமாவோ புள்ளியையோ மாற்றப்படாமல் பிரிட்டிஷ் அரசபைக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

இந்தியாவின் தட்பவெப்பநிலை, மக்கள் தொகைப் பெருக்கம் என பல காரணங்களால் பிரிட்டிஷாரும் பிற ஐரோப்பியர்களும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குடியேறவேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அவர்களுடைய ஒரே நோக்கம், இந்தியாவின் செல்வத்தை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே. அதுவும் இஸ்லாமியர்களைப் போல் குதிரைகளில் புழுதி பறக்க வாளைச் சுழட்டியபடி வந்து கோயில்களை இடித்துத் தள்ளி தங்கத்தையும் வைரத்தையும் மூட்டைகளில் கட்டிக்கொண்டு செல்வதாக இருக்கக்கூடாது. நாகரிகமாக, நாசூக்காக, நீதியின்பாற்பட்டுக் கொள்ளையடிக்கவேண்டும் என்பதே பிரிட்டிஷாரின் கொள்கை. எடின்பரோ பேராசிரியர் ஆடம் ஃபெர்குசன் இந்தக் கோட்பாட்டை வெகு தெளிவாக 1780-லேயே முன்வைத்திருக்கிறார். நவீன சமூகவியலின் தந்தையாக மதிக்கப்படும் இவர் இந்தியாவை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

நமது நோக்கம் இந்தியாவில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை ஐரோப்பாவுக்குக் கொண்டுவருவதுதான். இதை பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளால் நேரடியாகச் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு சட்ட திட்டங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் கட்டுப்படவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு நேரடியாக நிர்வாகம் செய்தால் அநியாய வரியை விதிக்க முடியாது. அடக்குமுறையில் ஈடுபட முடியாது. எனவே, கிழக்கிந்திய கம்பெனி போன்றவற்றிடமே பொறுப்பை விட்டுவிடவேண்டும். அவர்களால்தான் பிரிட்டிஷ் அரசின் சட்ட திட்டங்களைத் தேவைப்படும்போது மீற முடியும். ஆனால், அவர்களை முழுச் சுதந்தரம் கொடுத்து அப்படியே விட்டுவிடவும்கூடாது. அரசு நியமிக்கும் ஒரு உயர் மட்டக்குழு அவர்களைக் கண்காணித்துவரவேண்டும்.

ஃபெர்குசன் சொன்னபடியேதான் 1784-ல் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள ஒரு குழு அமைக்கவும்பட்டது. இது போதாதென்று, இந்தக் குழுவின் தலைவருக்கும் இந்தியாவுக்கான பிரிட்டனின் கவர்னர் ஜெனரலுக்கும் இடையில் நேரடித் தகவல் பரிமாற்றத்துக்கும் வழி செய்யப்பட்டது. அப்படியாக 1858-ல் மேதகு அரசியார் ஆட்சிப் பொறுப்பை நேரடியாக எடுத்துக்கொண்டது என்பது அதற்கு முன்பு வரை இருந்த ஒரு நடைமுறையை வெளிப்படையாக அங்கீகரிக்கும் செயல் மட்டுமே. ஆரம்பத்தில் இருந்தே பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில்தான் எல்லாமே நடந்தேறியிருக்கின்றன. இதில் தவறு செய்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளை கூப்பிட்டு விசாரணை செய்ததெல்லாம் ஒப்புக்குச் செய்யப்பட்ட கண்துடைப்புகள் மட்டுமே. தன்னால் நேரடியாக வன்முறையில் ஈடுபட முடியாதபோது தன்னுடைய ஆதரவு உள்ளவர்களைக்கொண்டு அதைச் செய்துகொள்ளும் தந்திரம்தான் இது. நாயைக் கட்டிப் போட்டு அடிப்பது என்று முடிவெடுத்தால் முதலில் அதற்கு ‘வெறி பிடித்திருக்கிறது’ என்று நிரூபித்துவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற கோணத்தில்தான் நீதியையும் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

இந்திய வான சாஸ்திரம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 13

18ம் நூற்றாண்டு பெனாரஸ் ஆய்வுக்கூடம்

ஐரோப்பிய மையவாத சிந்தனைய இந்த உலகுக்குச் செய்திருக்கும்/செய்துவரும் நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம். இந்த உண்மை செவி இருப்பவர்களுக்குக் கேட்கும்வகையிலும் கண் இருப்பவர்களுக்குப் பார்க்கும் வகையிலும்தான் இருந்துவருகிறது. இந்தியா போன்ற மையம் அழிக்கப்பட்ட சமுதாயம் இருந்த பகுதியில் கருவிகளும் பணிமனைகளும் பிரமாண்டமாக இருக்கவேண்டிய தேவை இருக்கவில்லை.  எஃகு உலை, கலப்பை என சிறியதும் எளியதுமான தொழில் கருவிகள் இந்திய சமூக நலன் சார்ந்தும் தேவை சார்ந்தும் உருவான பண்பட்ட வடிவங்கள். ஆனால், அவை தொழில்நுட்பத்தின் ஆரம்பநிலைக் கருவிகளாக ஐரோப்பியரால் பார்க்கப்பட்டது.

ஐரோப்பியர்களிலும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் அதைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிச்சலும் வால்டேர் போன்றவர்களுக்கு இருக்கத்தான் செய்தது.  ‘சட்ட திட்டங்களுக்கும் விஞ்ஞான சாதனைகளுக்கும் பெரும் புகழ் வாய்ந்த இந்தியா’ என்று சொன்ன அவர், ‘இந்தியர்கள் மட்டும் நமக்கும் தார்தாரியர்களுக்கும் தெரியவராமல் இருந்திருந்தால், இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இருந்திருப்பார்கள்’ என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்.  ஆனால், அத்தகையோரின் குரல் மிகவும் சன்னமாகவே ஒலித்தது.

குளிர் பிரதேசத்தில் இருந்து வந்த ஐரோப்பியர்களில் பெரும்பான்மையினர் வெயில் மிகுந்த பகுதியில் குறைந்த ஆடைகளுடன் இருந்தவர்களை காட்டுமிராண்டிகளாகவும் வறியவர்களாகவும்தான் பார்த்தனர். இந்தியர்களைப் பற்றிய முதல் மனப்பதிவே பாவப்பட்டவர்கள் என்பதாகத்தான் இருந்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு ஏற்ப இந்தியாவின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் அத்தகைய கண் கொண்டே பார்த்தனர். அதில் அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஆனால், அதை நம்மவர்கள் ஏற்றுக் கொண்டதுதான் நம் பெரும்பாலான பின்னடைவுகளுக்குக் காரணமாக இன்றும் இருந்துவருகிறது.

கோயம்புத்தூரை தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் மும்பையை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் சொல்கிறோம். ஆலப்புழையை கீழை நாட்டின் வெனீஸ் என்றும் புதுச்சேரியை இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என்றும் சொல்வதில் பெருமை அடைகிறோம். இவற்றையாவது ஓரளவுக்குப் பொறுத்துக் கொள்ளலாம். காளிதாஸரை இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்றும் தாகூரை இந்தியாவில் ஷெல்லி என்றும் மகா சாணக்கியரை கேவலம் இந்திய மாக்கியவெல்லி என்றும் அழைக்கும் கொடூரத்தை என்னவென்று சொல்வது? ஏன் நம் மனதின் காந்த ஊசி எப்போதும் மேற்கு நோக்கியே இருக்கிறது.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை நம் தசாவதாரம் கோடிட்டுக் காட்டுவதை நம்மால் ஏன் புரிந்துகொள்ளமுடிவதில்லை. ஒளியின் வேகமானது ரிக்வேதத்தின் சயானரின் உரையில் மிகத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் ஏன் தெரிந்துகொள்ளவில்லை? பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 என்ற கணிப்பானது பூமியின் வயதுடன் கிட்டத்தட்டப் பொருந்திப் போவதென்பது வெறும் தற்செயல் நிகழ்வாக மட்டுமே இருக்க முடியுமா?

ஆரியப் படையெடுப்பு பற்றி நம் பண்டைய இலக்கியங்களில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படும் மக்களின் படைப்புகளில்கூட அப்படியான படையெடுப்பு பற்றியோ தென் புல நகர்வு பற்றியோ எதுவும் இல்லை. இருந்தும் நம் ஐரோப்பிய எஜமானர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதால் அதுதான் இன்றும் நம் வரலாற்று புத்தகங்களில் கல்வெட்டுபோல் அச்சடிக்கப்பட்டுள்ளன (உண்மையான ஆரியர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஐரோப்பியர் இந்திய ‘மேட்டுக்குடி’யினரைத் தமது சகோதரர்களாக எண்ணியும் தமது ஊடுருவலை இரண்டாம் வருகையாகவும் கருதித்தான் அந்த கோட்பாட்டைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்பதும் வேறு விஷயம்). ஆரிய படையெடுப்பு நடந்திருக்கவில்லை என்பது ஏராளமான அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நிரூபணமான பிறகும் ஹரப்பா முத்திரைகளில் குதிரை இல்லை என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்று ‘நிரூபிக்கப்பட்டு’வருகிறது.

ஹரப்பா முத்திரைகளில் பசுவின் உருவம் கூடத்தான் இல்லை. ஒட்டகத்தின் உருவம் கூடத்தான் இல்லை. போதாதகுறையாக ஒற்றைக் கொம்புடன் ஒரு விசித்திர மிருகம் ஒன்று முத்திரையில் இடம்பெற்றிருக்கிறது. அப்படி ஒரு உயிரினம் உண்மையில் இருந்திருக்கவே இல்லை. எல்லா மிருகங்களையும் அடையாளப்படுத்த ஹரப்பா முத்திரைகள் என்பது அன்றைய உயிரினங்களின் தொகுப்பா என்ன? இருந்தும் இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படாமல், முன்முடிவுகளுக்கு ஏற்ப ஆதாரங்களை வளைக்கும் அறிவுச் செயல்பாடுதான் இன்றும் தீவிரமாக நடந்துவருகிறது.

நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதைத்தான் நம் மனம் தேடிக் கண்டடைகிறது. இத்தகைய உண்மைகள் அரசியல் பலத்துடன் வேண்டுமானால், சிறிது காலத்துக்கு நிலைநிறுத்தப்படலாம். ஆனால், இந்நிலை தொடராது. இப்போதே, ஆரியப் படையெடுப்பு என்று சொன்னவர்கள் ஆரிய இடப்பெயர்வு என்று இறங்கி வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் இவை அனைத்தும் உரிய இடத்துக்கு பெருக்கித் தள்ளப்படும் என்பது உறுதி.

பண்டைய இந்தியா சிறந்து விளங்கிய இன்னொரு துறை வான சாஸ்திரம். சூரிய சந்திரனின் நகர்வுகள், கிரகணங்கள் போன்றவற்றைத் துல்லியமாகக் கணிப்பதில் ஆரம்பித்து எந்தவித நவீன கருவிகளும் இல்லாமல் பல கிரகங்களுக்கான துணைக்கோள்களைச் சுட்டிக் காட்டியிருப்பதுவரை இந்திய வான சாஸ்திர அறிவு அந்தத் துறை சார்ந்தவர்களிடையே பெரு மதிப்பைப் பெற்றிருக்கிறது. சனி கிரஹத்தின் பிரதான ஏழு துணைக் கிரஹங்கள் என்பது சனியின் ஏழு கைகளாகவும் வியாழன் கிரகத்துக்கு நான்கு துணைக்கிரஹங்கள் என்பது வியாழனைச் சுற்றி ஆடும் நான்கு பெண்களாகவும் நம் குறியீட்டு மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன. மேற்குலகில் தொலைநோக்குக் கருவிகள் உருவாக்கப்பட்ட பிறகு அதாவது 1789-ல்தான் சனி கிரஹத்துக்கு ஏழு பிரதான துணைக்கிரஹங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்திய வான சாஸ்திரத்தில் அது வெகு காலத்துக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறியீட்டு மொழி பற்றி இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கர்னல் டி.டி.பியர்ஸ் (Col. T.D. Pearse), லண்டனின் ராயல் சொசைட்டியின் செயலாளருக்கு 1783-ல் எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். சூரியனுடைய நகர்வுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் எப்படி உங்களுக்குக் கிடைத்தது என்று ஒரு பிராமணரிடம் கேட்டிருக்கிறார். அவர் எனது முன்னோரில் ஒருவருக்கு சூரிய பகவானால் தரப்பட்டது. அவர் 60 வருடங்கள் சூரியனையே தியானம் செய்து தவம் செய்து வந்தார். அதனால் சூரிய பகவான் மகிழ்ந்து தன்னைப் பற்றிய விவரங்களைத் தந்தார். அதை என் முன்னோர் ஓலைச்சுவடியில் எழுதிவைத்தார் என்று சொல்லியிருக்கிறார்.

அறுபது வருடங்கள் சூரியனையே தொடர்ந்து அவதானித்து சூரியனின் நகர்வுகளைப் பதிவு செய்து ஆராய்ச்சி செய்து வந்ததன் பேரில் இந்தத் தகவல்கள் கிடைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று அந்த ஐரோப்பியர் சொல்லியிருக்கிறார். இருக்கலாம் என்று அந்த பிராமணர் சொல்லியிருக்கிறார். இருக்கலாம் அல்ல; அப்படித்தான் இருக்கும் என்பதுதானே இன்றைய நவீன மனதுக்குப் புரியவரும் உண்மை. ஆக, தவம், தியானம், என்பதெல்லாம் ஒருமுகப்பட்ட ஆராய்ச்சி, தேடல் என்று எடுத்துக்கொண்டால் இந்திய ரிஷிகள் எல்லாம் அன்றைய விஞ்ஞானிகள் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் முன்னோரின் கலைச்சொற்கள் வித்தியாசமானவை. காலகாலமாகக் கைமாற்றித் தரப்பட்டுவந்திருக்கும் அந்த சூசக மொழியில் ஏராளமான உண்மைகள் நாம் புரிந்துகொள்வதற்காக இன்றும் காத்திருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கற்பனையும் கற்பிதங்களும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 14

பாரம்பரியப் பெருமை என்று பேச ஆரம்பித்ததும் மேற்கத்தியர்களுக்குக் குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு உடம்பில் ஒரு இனம் புரியாத அதிர்ச்சி உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால்வரை ஊடுருவும். அது மிகவும் நியாயமான விஷயம்தான். உலகின் மிக உயர்ந்த புத்திசாலிகளும் மிக மோசமான குற்றவாளிகளும் ஒன்று சேர்ந்து மிக சமீபத்தில் உருவாக்கிய புதிய உலகம் அல்லவா!

பெருமளவுக்கு பனியால் மூடப்பட்டு மந்தமான வாழ்க்கை வாழ்ந்துவந்த மேற்கத்தியர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் உணர்வுதான் அது. ஆனால், கும்பகர்ணனைப்போல் பெரும் தூக்கம் துங்கியபடி மனித குல பரிணாம வளர்ச்சியில் பின்தங்கி இருந்தவர்கள் முழித்துக்கொண்டதும் தன் பெருத்த உடலைத் தூக்கியபடி உலகம் அதிர எட்டுவைத்து நடக்க ஆரம்பித்துவிட்டனர் (கும்பகர்ணன் என்ற இந்திய உதாரணத்தை நெருடலாகப் பார்க்கும் நவீன மனத்தினர் ராட்சஸ எந்திரமாக அதை உருவகித்துக்கொள்ளலாம்). மேற்குலகின் இத்தகைய நகர்வானது ராட்சஸ ரோடு ரோலர் தன் வழியில் குறுக்கிடும் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடுவதைப்போல் உருண்டு சென்ற இடங்களில் இருந்தவற்றையெல்லாம் நசுக்கி ’சமதளம்’ ஆக்கிவிட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்னேற்றமாகத் தென்படும் இந்த சமப்படுத்தலுக்குக் கீழே புதையுண்டு கிடப்பவை கொஞ்ச நஞ்சமல்ல.

ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவும் ஆக்கிரமித்த ஐரோப்பிய சக்திகள் அப்படியான பேரழிவைத்தான் உருவாக்கியிருக்கின்றன. ஆனால், அவற்றின் கொடூரமான தாக்குதலில் இருந்து ஓரளவுக்கு தப்பிப் பிழைத்த தேசமாக இந்தியாவைத்தான் சொல்லவேண்டும். ஐரோப்பிய வருகையால் நாம் இழந்தது ஏராளம் என்றாலும் நாம் ஒரேயடியாக அழிக்கப்பட்டுவிடவில்லை. ஆப்பிரிக்க, அமெரிக்க பழங்குடிகளைப் போல் நாம் பின்தங்கிய சமூகமாக இருந்திருக்கவில்லை. எனவேதான் நமக்கு உரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் மேற்குலகம் தரவில்லை என்றாலும் நமக்கான உள்ளார்ந்த வலுவுடன் நம்மை ஒன்றுகூட்டி எழுந்து நிற்க முடிந்திருக்கிறது.

ஆனால், நமது மீளுருவாக்கத்தில் மிகப் பெரிய பங்கை நம்மை அடக்கியாண்டவர்களேதான் ஆற்றியிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய நகைமுரணே. இதை இன்னொருகோணத்தில் பார்த்தால், வேதனை தரும் ஒன்றுதான். நமது சாதனைகளாக நாம் நமது ஆவணங்கள், ஆதாரங்களை எடுத்துவைத்துப் பேசினால், அவற்றை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவதுதான் நடக்கிறது. அப்படியாக, நமது பெருமையைப் புரியவைப்பதற்கும் நம்மை அழித்தவர்களின் வாக்குமூலங்களே தேவைப்படுகிறது. இது வேதனையான நகைமுரணே.

மதம் மாறியவர்களின் மனநிலை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். சாதியைப் போலவே பிறப்பின் அடிப்படையில் மதத்தை இயல்பாகப் பெறும் ஒருவரைவிட பிற காரணங்களால் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்பவர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சற்று அதிகமாகவே செயல்படுவார்கள். கிழக்கத்தியராகப் பிறந்து மேற்கத்திய சிந்தனையை வரித்துக்கொண்ட சிலரும் அப்படியான மனநிலையிலேயே செயல்படுகிறார்கள்.

மேலைநாட்டினரே ஒத்துக்கொண்ட கீழைத்தேயப் பெருமைகளைக்கூட மறுதலித்துப் பேசுவதில் இன்பம் காண்பவர்களாக இருந்துவருகிறார்கள். அது நம்முடைய உண்மை நிலையைப் புரியவைக்க மேற்கத்தியர்களின் வார்த்தைகளைத் துணைக்கு அழைத்துக்கொள்ள வேண்டியிருப்பதைவிட வேதனை தருவதாக இருக்கிறது.

நம்மிடம் எல்லாம் இருந்தன என்று சொல்வது தவறுதான். ஆனால், நம்மிடம் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதைவிட அது அவ்வளவு பெரிய தவறு இல்லை. கடந்தகாலத்தில் குறிப்பாக பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக நம்மிடம் இவையெல்லாம் இருந்திருக்கின்றன என்று சொல்வதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்தியா ஒரு உயிர்த்துடிப்பான சமூகமாக பல்வேறு அறிவுத்துறைகளில் சுய சிந்தனையுடன் செயல்பட்டுவந்திருக்கிறது என்ற உண்மையைப் புரியவைக்க வேண்டும் என்பதுதான்.

ராமாயண, மகாபாரத காவியங்களில் சொல்லப்பட்டிருக்கும் விமானங்கள், வானில் இருந்து தாக்கும் ஆயுதங்கள், கிட்டத்தட்ட அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான இழப்பைப் பற்றிய வருணனைகள் இவையெல்லாம் இன்றும் பொருட்படுத்தி ஆய்வுசெய்யப்பட்டுவருபவையாகவே இருக்கின்றன.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்பாளருமான ஓப்பர் ஹைமெர், ‘அணு இயற்பியலில் இன்று செய்யப்பட்டுவரும் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்காதவை என்றோ முற்றிலும் புதியவை என்றோ சொல்லிவிடமுடியாது. நமது பாரம்பரியத்தில் கூட அந்த முயற்சிகள் முன்பே நடந்துவந்திருக்கின்றன. மேலும் இந்து, பவுத்த சிந்தனைகளில் மிக முக்கியமான சாதனைகள் வெகு பழங்காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன இயற்பியல் சாதனைகள் என்பவை ஒருவகையில் அந்தப் பழம் பெரும் ஞானத்தின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவமே’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அணு வெடிப்பின் போது வெளிப்படும் அபரிமிதமான ஒளியை வருணிக்க ‘கோடி சூரியப் பிரகாசம்’ என்ற சமஸ்கிருத பதத்தைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால், அப்படியான புராணங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை வெறும் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளுவதுதான் பகுத்தறிவாக நம்பப்படுகிறது.

இப்படியானவர்களுக்கு பதில் சொல்லும்முகமாகத்தான் தரம்பால் இந்திய பெருமைகளாகத் தான் பட்டியலிடும் விஷயங்களுக்கு வலுவான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்த ஆதாரங்கள்தான் அவரை அந்தப் பெருமிதத்தை அடைய வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

தரம்பால் தான் சேகரித்த பிரிட்டிஷ் ஆவணங்களில் இந்திய வான சாஸ்திரம் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். சர் ராபர்ட் பார்க்கர் பனாரஸில் 1772-ல் தான் பார்த்த கோளரங்கங்கள் பற்றி எழுதிய அறிக்கையை விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு இருக்கும் யந்திரங்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்டதாக பார்க்கர் தெரிவித்திருக்கிறார்.

கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த அந்த கோளரங்கத்தில் ஏராளமான கருவிகள் மிகவும் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இருந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தன. ஒருசில கருவிகள் 20 அடி உயரம் கொண்டதாக இருந்தன. அளவுகள், அலகுகள் எல்லாம் மிகத் துல்லியமாக அதில் பொறிக்கப்பட்டிருந்தன. இரு நூறு வருடங்களுக்கு முந்தையவையாகச் சொல்லப்படும் அந்த கருவிகளைப் பார்த்தால் ஒரு நவீன விஞ்ஞானி (கலைஞன்) மூலம் உருவாக்கப்பட்டதுபோல் செய்நேர்த்தி மிகுந்தவையாக இருக்கின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மிகவும் துல்லியமாகவும் இருக்கின்றன.

மணித்துளிகளைக் கணக்கிடுதல், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வைக் கணித்தல், சூரிய சந்திரனின் நகர்வைக் கணித்தல் என பல்வேறு விஷயங்களுக்கு பெரிதும் உபயோகமாக இது இருந்திருக்கிறது. எந்தவித கண்ணாடிகளும் (தொலைநோக்கிக் கருவி) இல்லாமலே மிகத்தெளிவாக வானில் இருப்பவற்றைப் பார்க்க முடியும் அளவுக்கு இந்தப் பகுதியில் வானமானது இரவில் ஒரு பொட்டு மேகம் கூட இல்லாமல் வெகு சுத்தமாக இருக்கிறது. இங்கு இரவில் இருந்து பார்க்கும் ஒருவருக்கே நான் சொல்லவருவது புரியும்.

பழங்கால இந்தியர்களுக்கு (பிராமணர்களுக்கு) வான சாஸ்திரம் பற்றி சுயமாகவே தெரிந்திருக்குமா? பாரசீகர்களின் தொடர்பினால்தான் இவை தெரியவந்திருக்குமா என்ற சந்தேகம் எழுப்பப்டுவதுண்டு. ஆனால், இந்த சந்தேகம் தேவையற்றது. ஏனென்றால், எனக்கு இந்த தகவல்களை எடுத்துச் சொன்ன பிராமணர்கள் இவற்றைத் தங்களுடைய முன்னோர்களால் கைமாற்றித் தந்ததாகச் சொன்ன சமஸ்கிருத நூல்களில் இருந்து படித்துக் காட்டினார்கள். பருவநிலைகள் பற்றிய கணிப்பில் ஆரம்பித்து கிரகணங்கள் போன்ற நிகழ்வுகள் வரை அனைத்தைப் பற்றியும் மன்னர்களுக்கு இந்த யந்திரங்களைப் பார்த்துத்தான் தெரிவித்துவந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், ஹான் கால் (எஃப்.ஆர்.எஸ்.) ஒருவிஷயம் குறிப்பிட்டிருக்கிறார். ஒருநாள் அவர் தன் மெத்தையில் படுத்திருந்தபோது மேல் கூரையில் கிரகங்களின் படம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்தாராம். அதுபோன்ற வரைபடங்கள் கோயில்கள், குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபம், கோபுர உள் பகுதி என பல இடங்களில் பார்த்திருக்கிறார். இந்த இடங்கள் எல்லாம் பிராமணர்கள் வசிக்கும், வழிபடும் இடங்கள். மிகவும் பழமை வாய்ந்தவை. இப்படியான ஒரு இடத்தில் வேறு சமூகத்தில் இருந்து கிடைத்தவற்றை நிச்சயம் பொறித்திருக்கமாட்டார்கள். தங்களுடைய மதம் சார்ந்த பழக்கவழக்கங்களில் எந்தவித மாற்றத்துக்கும் இந்து மதம் இடம் கொடுக்காது. எனவே, இவை பிராமணர்களின் கண்டுபிடிப்புகள்தான் என்பதற்கு இதைத்தவிர வேறு ஆதாரம் தேவையில்லை என்று பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

வான சாஸ்திர மேதை பாஸ்கராச்சாரியர்தான் பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்த முதல் விஞ்ஞானி. அவருடைய கணக்குகளின்படி பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 365.2588 நாட்கள். இன்றைய நவீன விஞ்ஞானத்தின்படி அது 365.2563.

பாஸ்கர ஆச்சாரியர் கணிதத்துறையிலும் பல சாதனைகள் செய்திருக்கிறார். அந்தத்துறையில் நாம் செய்திருக்கும் சாதனைகளை வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

பாதியில் முறிந்த பாரம்பரியம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 15

பாஸ்கர ஆச்சாரியர்

கணிதத்துறையில் இந்தியர்கள் செய்திருக்கும் சாதனை கணிசமானது. ஒன்று முதல் பத்து எண்கள் கொண்ட தசம வகைப்பாடு முதன் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அராபியர்கள் மூலமாக அது ஐரோப்பியர்களுக்கு அறிமுகமானதால் அதை அவர்கள் அராபிய எண்கள் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அராபியர்கள் அந்த எண் வரிசையை இந்திய எண்கள் என்றே அழைக்கிறார்கள். கற்றறிந்தவர்களின் கணிதச் சொல்லாடலில் அது இந்தோ அராபிய எண்கள் என்றே சொல்லப்படுகின்றன.

 

தேவநாகரி

இந்தோ –அராபிய எண்கள்

சமஸ்கிருதபெயர்

பிற மொழிகளில் காணப்படும் சமஸ்கிருத சாயல்

0

சூன்ய (शून्य)

சிஃப்ர் sifr (Arabic)

1

ஏக  (एक)

ஏகட் echad (Hebrew)

2

த்வி (द्वि)

த்வ dva (Russian)

3

த்ரி (त्रि)

த்ரே tre (Italian)

4

சதுர் (चतुर्)

கதர் katër (Albanian)

5

பஞ்ச (पञ्च)

பென்கி penki (Lithuanian)

6

சஷ் (षष्)

செஷ் seis (Spanish)

7

சப்த (सप्त)

சப்தே şapte (Romanian)

8

அஷ்ட (अष्ट)

அஷ்டோனி astoņi (Latvian)

9

நவ (नव)

நொவே nove (Italian)

போதாயனர், பிங்களர், ஆரியப்பட்டர், பாஸ்கர ஆச்சாரியர் (முதலாமவர், இரண்டாமவர்) என மிக நீண்ட நெடிய கணித மேதைகளின் பாரம்பரியம் மிகப் பெரிய கணித சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளன. பூஜ்ஜியம், எதிர்மறை எண்கள், முடிவிலி, பை – யின் துல்லியமான மதிப்பு (3.14), திரிகோணமிதி, அல்ஜீப்ரா சமன்பாடுகள், பித்தகோரஸ் சூத்திரம், நான்மடிச் சமன்பாடு, வகைகெழு என கணித வரலாற்றின் விதைகள் பெரும்பாலானவை இந்திய மண்ணில் இருந்துதான் முளைத்தெழுந்துள்ளன.

நியூட்டன் கண்டுபிடித்த புவீஈர்ப்புவிசை பற்றிய குறிப்புகள் அவருக்கு வெகு காலத்துக்கு முன்பே இந்திய ஆக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பிரம்மகுப்தர், நீரானது பாயும் தன்மை கொண்டதுபோல் பூமியானது தன்னை நோக்கிப் பொருட்களை இழுக்கும் சக்திகொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். பாஸ்கராச்சாரியரோ, வானில் இருக்கும் திடமான பொருட்களை பூமி தன்னுடைய உள்ளார்ந்த வலுவினால் தன்னை நோக்கி இழுப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கணிதச் செயல்பாடுகளின் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால், அது சரஸ்வதி-சிந்து சமவெளி காலகட்டத்திலேயே வடிவம் பெற ஆரம்பித்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் நீள, அகல, உயர விகிதம் 4:2:1. செங்கல்லின் மிகச் சிறந்த விகிதாசாரம் அதுவே என்பதை இன்றைய நவீன உலகமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று பயன்படுத்தப்பட்ட எடைக்கற்கள் மிகத் துல்லியமான அளவுகளில், வடிவங்களில் இருந்திருக்கின்றன.

ஆறு பக்கங்களுடைய சதுர வடிவிலோ உருண்டை வடிவிலோ தயாரிக்கப்பட்ட இந்த எடைக்கற்கள் ஒரு கிராமுக்கும் குறைவான அலகில் இருந்து தொடங்கி பத்து கிலோவுக்கும் மேலாகச் செல்கின்றன. 0.825, 1.705, 3.41, 6.82, 13.64, 27.28, 54.56 என 1,2,4,8,16,32,64 என்ற மடங்கில் இவை துல்லியமாக அதிகரித்துச் செல்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் உருவாக்கத்தில் நிச்சயம் கணித சிந்தனைகள் செயல்பட்டிருக்கும் என்பது தெரியவருகிறது.

கிணறுகள் கட்டும்போது உட்புறமாகச் சரிந்து விழுவதைத் தடுக்கும் நோக்கில் புதுவடிவிலான செங்கற்களை குறிப்பிட்ட கோணத்தில் அடுக்கிவைத்திருக்கிறார்கள். உளி வடிவிலான (சரிவகம்) செங்கற்கள் கிணறுகளின் உள்பாகங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகுதான் ரோமாபுரியில் இப்படியான நோக்கில் மரத்தாலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்போதும் உட்பக்கமிருந்த மண்ணின் அழுத்தத்தால் அந்த மரத்தடுப்புகள் விரைவிலேயே உடைந்துபோயிருக்கின்றன. இதைப் பார்க்கும்போது சரஸ்வதி-சிந்து பகுதியில் பின்பற்றப்பட்ட கணிதவிதியின் நடைமுறைப்பயன்பாடானது யதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

Number : The Language of Science என்ற புகழ் வாய்ந்த நூலை எழுதிய Tobias Dantzig அந்த நூலில் சொல்லும் ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது.

மனித இனம் ஆரம்பகட்டத்தில் மிக மெதுவான முன்னேற்றமே அடைந்து வந்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது கணிதத்துறையில் இந்தியர்கள் (இந்து) செய்திருக்கும் சாதனை உலகை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தக் கணித அறிவுதான் நமது கட்டடக்கலையின் செழுமைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. வான சாஸ்திரத்தின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. அந்த பாரம்பரியம் நவீன காலத்திலும் ராமானுஜம் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் முந்தைய சாதனைகளை ஒப்பிடும்போது இன்று நாம் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டிருப்பதுபோல்தான் தோன்றுகிறது. இஸ்லாமியப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட துறைகளில் அதுவும் ஒன்று. அதோடு, அவர்களால் மேலைநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதால் இஸ்லாமிய ஞானமாகவே அவை கருதப்படும் துர்பாக்கியமும் நேர்ந்திருக்கிறது. எனினும் எந்தவொரு அறிவின் வேரையும் தேடிப் பயணிக்கும் மனங்களுக்குக் கிடைக்கும் வகையில் அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றாக இன்றும் சிறைப்பட்டுக் கிடக்கின்றன இந்திய ஞானங்கள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பானது இந்திய சமூகத்தால் ஓரளவுக்கு நேர்மறையாக உள்வாங்கப்பட்டுவிட்டிருக்கிறது. இரண்டு சமூகங்களும் ஆரம்பகட்ட மோதலுக்குப் பிறகு பரஸ்பர புரிதல் மூலம், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இணைந்து அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றன.

ஆனால், ஐரோப்பிய – பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பானது அப்படியான மாறுதலுக்கு உள்ளாகியிருக்கவில்லை. ஏனென்றால், ஐரோப்பியர்களுக்கு இந்திய சமூகத்துடன் கலப்பது எப்போதுமே நோக்கமாக இருந்திருக்கவில்லை. தங்களுடைய மேட்டிமை திமிரினால் இந்திய சமூகத்தை முற்றிலும் கீழானதாகக் கருதி அதிலிருந்து விலகியே இருந்தார்கள். இதனால், இரு சமூகத்தின் நல்ல அம்சங்கள் கலந்து புதிய சமூகம் உருவாவதற்குப் பதிலாக ஒரு வல்லாதிக்க சமூகமும் அதன் மோசமான நகலாக இன்னொரு சமூகமும் உருவாகிவிட்டன.  பிரிட்டிஷார் இந்திய சமூகத்தைச் சிதைக்க கையாண்ட இன்னொரு முக்கியமான வழி அதன் பொருளாதாரத்தை நசியச் செய்ததுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பொருளாதாரம், மதம், அரசியல்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 16

பிரிட்டிஷார் இந்தியாவுக்கு முதலில் வர்த்தகம் செய்யும் நோக்கில்தான் வந்தார்கள். அவர்களுடைய வர்த்தகக் கொள்கை என்பது அக்கம் பக்கத்தில் இருப்பவனைச் சுரண்டிக் கொழு என்பதுதான். வட அமெரிக்காவிலும் கனடாவிலும் காலனிகள் அமைத்தனர். கரீபியன் தீவுகளைக் காலனியாக்கினர். அப்படியாக 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன பிரிட்டிஷ் பேரரசு மெள்ள உருப்பெற்றது.

இந்தியாவின் செல்வச் செழிப்பைப் பல காலமாக அறிந்திருந்த ஐரோப்பியர்கள் அதற்கு முன்பிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகியோர் இந்தியாவைத் தேடித்தான் தங்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். கொலம்பஸ் அமெரிக்காவில் போய் இறங்கினார். காற்று வாஸ்கோடகாமாவையும் வேறு எங்காவது வழிநடத்திச் சென்றிருக்கலாம். ஆனால் அது நேராக அவரை கேரளக்கரையில் காலூன்றச் செய்தது. அதன் பின் நடந்தவை துரதிர்ஷ்டமான சரித்திரம்.

பிரிட்டிஷார் 1700-1950க்கு இடைப்பட்ட 250 ஆண்டுகளுக்குள் ஒரு பொருளாதார வல்லரசை ஒரேயடியாக முடக்கிப் போட்டுவிட்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு இருந்த இந்தியப் பொருளாதாரத்தின் 83% அழிக்கப்பட்டுவிட்டது.

இதை அவர்கள் எப்படி செய்து முடித்தார்கள்? விஷயம் மிகவும் எளியதுதான். இந்தியப் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கான வரியை உயர்த்தினார்கள். பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியைக் கணிசமாகக் குறைத்தார்கள். இந்தியாவில் இருந்து மூலப் பொருட்களை அடிமாட்டு விலையில் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். அவற்றை வைத்து உற்பத்தி செய்த பொருட்களை இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்து அதிக விலையில் விற்றார்கள். இதன் விளைவாக இந்தியாவின் முந்தைய ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த இரட்டை தாக்குதலால் இந்திய தொழில்கள் மூச்சுத்திணறி உயிரை விட நேர்ந்தது.

ரொமேஷ் சந்தர் தத் இந்தியப் பொருளாதாரத்தின் வரலாறு என்ற நூலில் இவைபற்றி விரிவாக விவரித்திருக்கிறார்.

இந்தியாவில் அதிக வரி விதித்ததன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து பிரிட்டிஷாரின் ராணுவத்தை முதலில் பலப்படுத்தியிருக்கின்றனர். அந்நாட்டு பங்குதாரர்களுக்கு மிக அதிக லாபத்தை அள்ளித்தந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசிடம் இருந்து வாங்கிய கடனுக்கு வட்டியாகத் தந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 3,20,00,000 பவுண்ட்கள் (இன்றைய மதிப்பில் பல நூறு ஆயிரம் கோடிகள்) இப்படியாக இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவை சீர்குலைப்பதற்காக ஓபியம் வர்த்தகத்தில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டது. அதிலும் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு இந்தியாவின் புனித நகரமான காசியில் ஓபியம் பெருமளவில் வளர்த்து வந்திருக்கிறார்கள். ஒரே அம்பில் இரண்டு பறவைகள்.

அடுத்ததாக உப்பு.  உப்பு இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் ஒன்றாகிவிட்டிருக்கிறது. எனவே, அது சார்ந்து அன்று நிலவிய நெருக்கடிகளை நமக்குப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், 200 வருடங்களுக்கு முன்னால் உப்பு மிகவும் அரிதான, மிகவும் தேவையானதாக இருந்திருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மட்டுமே பெருமளவில் உற்பத்தியாகும் உப்புக்கு உள்நாட்டில் மிகப்பெரிய கிராக்கி இருந்திருக்கிறது. முழுவதும் தன்னிறைவு பெற்ற இந்திய கிராமங்களுக்கு வெளியில் இருந்து தேவைப்பட்ட ஒன்றாக உப்பு இருந்திருக்கிறது. உப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பது பிரிட்டிஷாருக்கு நன்கு புரிந்திருந்தது. எனவே, அதன் உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மிக அதிக வரியை விதித்து சுரண்ட ஆரம்பித்தனர். உப்பு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சீனப் பெருஞ்சுவரைப் போல் ஒரு மிகப் பெரிய முள்வேலியை உருவாக்கினர். அது உண்மையில் பாரத மாதாவின் மார்பில் கத்தியால் ஆழமாகக் குத்திக் கிழித்ததொரு காயம்தான் (இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஜெயமோகனின் இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்).

அப்படியானதொரு வேலி அமைத்து பெரும் சுரண்டலைச் செய்ததுபற்றி நம்மில் பலருக்கும் தெரியாது என்பது மிகப் பெரிய சோகமே. இந்திய வரலாற்றியல் என்பது எந்த அளவுக்கு மேற்கத்திய சார்புடன் இருக்கிறது என்பதற்கான மிகப் பெரிய ஆதாரம் அதுவே.

சர்க்கரை, ரம், புகையிலை, காபி, தேயிலை என அனைத்துப் பொருள்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் வரி அதிகம் விதிக்கப்பட்டது. அதாவது இந்தியா எந்தெந்தப் பொருள்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்ததோ அவையெல்லாம் அதிக வரியின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன.

இதில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது ஜவுளித்துறைதான். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பபட்ட பருத்தி, கம்பளி, பட்டாடைகளுக்கு வெறும் 3.5 சதவிகித வரிதான் விதிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பருத்தி ஆடைகளுக்கு 10 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இந்திய பட்டாடைகளுக்கு 20 சதவிகித வரியும் இந்திய கம்பளிப் பொருட்களுக்கு 30 சதவிகித வரியும் விதிக்கப்பட்டன. இதனால் நாளடைவில் இந்திய ஜவுளி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து கச்சா பருத்தியின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. 1813-ல் 93,68,000 lbs ஆக இருந்த ஏற்றுமதி 1838-ல் 4,83,29,660 lbs ஆக அதிகரித்தது. உலகில் பெரும் செல்வாக்கு மிகுந்த ஆடைகளை உற்பத்தி செய்த தேர்ந்த கலைஞர்களின் கை விரல்கள் வெட்டப்பட்டன. புராணகால ஏகலைவனைப் பற்றி நாம் எவ்வளவோ பேசிக் கேட்டிருக்கிறோம். இங்கு ஒரு சமூகமே, தலைமுறையே விரல்கள் வெட்டப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொருளாதார தாக்குதல்கள் எல்லாவற்றிலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய அடித்தட்டு மக்கள்தான். அதாவது தலித் என்று இன்று வரையறை செய்யப்படுபவர்கள்தான். உப்பின் மீதான வரி கூட்டப்பட்டபோதும், மோசமான நிர்வாகத்தினால் பஞ்சங்கள் வந்தபோதும் அவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பிரிட்டிஷார் வந்ததால்தான் தலித்துகளுக்கு விடுதலை கிடைத்ததாக ஒரு பிழையான பிரசாரம் வெகுவாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷாருக்கு இருக்கும் இன்னொரு சாதகம் என்னவென்றால், அவர்கள் செய்யும் எல்லா அராஜகச் செயல்களும் தனிப்பட்டவையாக அல்லது அதிகபட்சம் அவர்களுடைய நாட்டோடு தொடர்புடையதாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. அவர்களுடைய மதமான கிறிஸ்தவத்துடன் ஒருபோதும் இணைக்கப்படுவதில்லை. ஆனால், அவர்களுடைய வெள்ளை மேட்டிமைத்தனத்துக்கு இணையாக கிறிஸ்தவ திமிரும் அடியாழத்தில் ஒளிந்தேதான் இருக்கிறது.

இந்து செய்யும் எல்லாச் செயல்களுமே இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்றவையாக (அப்படி இல்லாத நிலையிலும்) விமர்சிக்கப்படும். ஏதாவது ஒரு படைப்பில் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றிருக்கும் ஒன்றை எடுத்துவந்து அதற்கான ஆதாரமாக முன்வைக்கப்படும். அதற்கு மாற்றாக எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் அவை கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பிழையான செயல்களுக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் விவரிக்கப்படும்.

இந்திய ஊடகங்களிலும் கிறிஸ்தவர் என்றால் வெண்ணுடை தரித்து சேவை செய்யும் கன்யா ஸ்த்ரீயின் பிம்பமே முன்வைக்கப்படும். பாதிரியார்கள் எல்லாரும் அநாதை இல்லம் மட்டுமே நடத்தும் கருணாமூர்த்திகளாகவே சித்திரிக்கப்படுவார்கள். ஆக, கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் மதத்தில் இருந்து பிரிக்கப்பட்டும் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்கள் எல்லாம் மதத்தோடு பிணைக்கப்பட்டும்தான் உலகில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மிக அருமையான மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டெஜி இது.

கிறிஸ்தவத்தின் சமத்துவம்/சகோதரத்துவம் பற்றி இங்கு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். அதுபோல் மிக மோசமான கருத்தாக்கம் உலகில் எங்குமே கிடையாது. அது உண்மையில் சமத்துவமே கிடையாது. உண்மையில் சமத்துவ நோக்கு என்றால் உலகில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் சமூகத்தையும் அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையையும் மதிப்பீடுகளையும் அங்கீகரித்து, புரிந்துகொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த தத்துவம். ஆனால், கிறிஸ்தவமோ நீங்கள் கிறிஸ்தவராக மாறினால்தான் உங்களை சமமாக நடத்தும். அப்படி மாறிய பிறகும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளும் மறைமுகமாக நீடித்துக்கொண்டுதான் இருக்கும் என்றாலும் ஒப்பீட்டளவிலான ஒரு சமத்துவம் தரப்படும். ஆனால், அது உங்களுடைய சுயத்தையும் உங்கள் முன்னோர்களின் பாரம்பரியச் செல்வத்தையும் நீங்கள் தூக்கி எறிந்துவிட்டு கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகளை உங்கள் மீது திணித்துக்கொண்டால்தான் தரப்படும்.

ஒரு தலித்தை அவருடைய மாடனோடும் இசக்கியோடும் மாரியாத்தாவோடும் காளியாத்தாவோடும் அது ஏற்றுக்கொள்ளாது. அவர்களுடைய பாரம்பரிய அம்சங்கள் அனைத்தையும் மேல் சாதிகளின் அதாவது இந்து மதத்தின் திணிப்பாகக் கருதி அவற்றைத் தூக்கி எறியச் சொல்லும். அதன் பிறகே தன்னுடைய சொற்ப சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பிய்த்துக்கொடுக்கும். (அந்நிய நாட்டுக்) கிறிஸ்தவர்களே நீங்கள் உதவ முன்வருவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்துவின் ஆன்ம பலத்தைச் சிதைக்காமல் அதைச் செய்யுங்கள் என்று விவேகானந்தர் இதைத்தான் சொன்னார்.

இந்து மதம் அதைத்தான் செய்தும்வருகிறது. ஒவ்வொரு சாதியின் வாழ்க்கைப் பார்வையையும் சடங்குகளையும் அது உள்வாங்கிக் கொண்டுதான் ஒரு மதமாக பரிணமித்திருக்கிறது. நாக வழிபாடு, மரங்களை வழிபடுவதல், புனித நீராடல், மூத்தோர் வழிபாடு எனப் பழங்குடிகளின் பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றும் சிற்சில மாற்றங்களுடன் நீடித்து வருகின்றன. பழங்குடிகள் போர்க்கருவிகளை பூஜித்து வழிபட்டதுதான் இன்று பணி இடத்தையும் பணிக் கருவிகளையும் வழிபடும் சரஸ்வதிபூஜையாக பரிணமித்திருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் படிநிலையில் மேலேற மேலேற அவர்களுடைய சிறு தெய்வங்கள் பெருந்தெய்வத்தின் அவதாரமாகவும் மகனாகவும் மகளாகவும் இணைக்கப்பட்டு அதற்கான கதைகள் புனையப்பட்டு மைய நதியில் கிளை நதிகள் கலப்பதுபோல் இயல்பாக கலக்கின்றன. மைய நதியில் கலந்த பிறகும் கிளை நதியின் அம்சங்கள் நீடிக்கவே செய்யும். ஒருபோதும் எந்தக் கிளை நதியின் மூல ஆதாரங்களும் அழித்தொழிக்கப்படாது. ஆணும் பெண்ணும் கலந்து இன்னொரு ஆணோ பெண்ணோ முழுக்க முழுக்க அவர்களுடைய அம்சங்களையே கொண்டு பிறப்பதுபோல் சிறு தெய்வ பெருந்தெய்வ கலப்பில் இரண்டின் நல்ல அம்சங்களும் கலந்துதான் புதியதொன்று பிறக்கிறது. ஒன்றை மற்றொன்று முற்றாக அழித்துக் கொண்டுவரப்படும் ”சமத்துவம்’ இந்து மதத்தில் கிடையாது.

பலி ஏற்க மறுக்கும் பெருந்தெய்வத்துக்கு திரைச்சீலையிட்டு பொங்கல் படையல் செய்வதும் அதே திரைச்சீலையிட்டபடியே சற்று தள்ளி பலி கொடுக்கப்படுவதும் தொடரத்தான் செய்கின்றன. புலால் மறுப்பை கறாராக முன்வைத்த பவுத்தத்தைவிட இந்த விஷயத்தில் சிறு தெய்வ வழிபாட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு மரியாதை கொடுக்கும் வைதீக/பிராமணமதமே இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்வது அதனுடைய நெகிழ்ச்சியான தன்மையால்தான். இப்படி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பாரம்பரிய அம்சத்துக்கு மதிப்புக் கொடுப்பதைத்தான் அம்பேத்கர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நேர்மையின்மை என்றும் சமயப் பணியை விபச்சாரமாக்குதல் என்றும் சொல்கிறார். அந்த இந்து மதத்தை விட்டொழியுங்கள் என்கிறார். மக்களோ இந்து மதத்தின் அந்த அம்சத்தை அப்படி நினைக்கவில்லை. எனவேதான் அவர் பவுத்தத்துக்கு மாற அறைகூவல் விடுத்தபோது அவர்கள் அதைப் பரிசீலித்திருக்கவில்லை. விடுதலையை கூறுகட்டிக் கூவிக் கூவி வழங்கும் கிறிஸ்தவத்துக்கு செவிசாய்க்கவில்லை.

நமது போராளிப் பெருமகன்களும் நவீன மருத்துவ அறிவு வளர்ந்திருக்காத காலகட்டத்தில் விபூதி பூசி, மந்திரித்து, விரதம் இருக்கச் சொல்லிய நம் பாரம்பரிய நம்பிக்கையை எள்ளி நகையாடுகிறார்கள். முடவனை நடக்கவைக்கிறேன் என்றும் குருடனைப் பார்க்க வைக்கிறேன் என்றும் இன்றும் பித்தலாட்டங்களில் ஈடுபடுபவர்களை செல்லங் கொஞ்சுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்கள் இந்துக்கள். கிறிஸ்தவத்தை அதன் 20 சதவிகித நன்மையாலும் இந்து மதத்தை அதன் 20 சதவிகித தீமையாலும் மட்டுமே அடையாளம் காணும் போக்குதான் இன்று நிலவுகிறது. அதுதான் முற்போக்கு என்றும் பகுத்தறிவு என்றும் விடுதலைச் செயல்பாடு என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், என்ன… மக்கள் புத்திசாலிகள். தங்களுக்கு நன்மை தருவது எது என்பது அவர்களுக்குத் தெரியும். பூசாரிகள் குறுக்கே நின்றாலும் தெய்வத்துடன் பேச அவர்களுக்குத் தெரியும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

எளிதில் கடக்க முடியாத கடந்தகாலம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 17

பிரிட்டிஷாரின் வருகை பலமுனைத் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்திய நவீனத் தொழில்கள், உள்நோக்கம் கொண்ட அரசியல் முடிவுகள், சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அணுகுமுறை, கலாசாரக் குறுக்கீடு, சமூக அமைப்பை நுனிப்புல் மேய்ந்து ‘தீர்வு’களை முன்வைத்தது என எல்லாமே ஆயிரம் கரங்கள் கொண்ட, ஆயிரத்திலும் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்ட, அரக்கனின் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. குடியேற்ற நாடுகளுக்கு உலகை ஆளப்பிறந்தவர்களின் அன்புப் பரிசாக அதுவே எல்லா இடங்களிலும் இருந்தும் வந்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் அழிந்துவிட்டன. அல்லது அழிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. புதிய தொழில்களும் தேவையான அளவுக்கு வளரவில்லை. இதனால், விவசாயம் மீதான சார்பு பெருமளவுக்கு அதிகரித்தது. சுமார் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் அதையும் விட்டுவைக்கவில்லை. கொழுத்த ஆடுகளை வெட்டு என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறை.

பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை பெரும் சரிவைச் சந்தித்தது. உணவுப் பயிர்களுக்குப் பதிலாக பணப்பயிர்களை நடும்படி விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். உற்பத்தித்திறனும் வெகுவாகக் குறைந்தது. உதாரணமாக செங்கப்பட்டுப் பகுதியில் 1788 வாக்கில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் விளைச்சல் இருந்துவந்தது. ஒரு தலைமுறைக்குள் அது வெறும் 0.63 டன் ஆகக் குறைந்துவிட்டது.

அதோடு, விவசாயத்துக்கான வரியும் கண்மூடித்தனமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸில் முதன்முறையாக விதித்த நிலவரி நில உற்பத்தியில் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. காலப்போக்கில் இது தாறுமாறாக அதிகரிக்கவும் செய்தது.

இங்கிலாந்தில் நிலவரி ஐந்து முதல் 20 சதவிகிதமாக இருந்தது. 1793-க்கும் 1822-க்கும் இடையில் வங்காளத்தில் 90%மாகவும் வட இந்தியாவில் 80%க்கு மேலாகவும் இருந்தது.

வங்காளத்தின் கடைசி முகலாய ஆட்சியாளர் 1764-ல் 8,17,833 பவுண்ட் தொகையை நிலவருவாயாக ஈட்டினார். அதே பகுதியில் அடுத்த முப்பது வருடங்களுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 26,80,000 பவுண்ட் தொகையை அதாவது மூன்று மடங்கு அதிகமான வரியை வசூலித்தனர்.

அதிக வரி விதிப்பால் மூன்றில் ஒரு பங்கு நிலம் விவசாயத்தில் இருந்து முடங்கிப்போனது. வங்காளத்தில் ஏற்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் ஏராளமானவர்கள் மடிந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் கம்பெனியின் இயக்குநர் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்து விளைச்சல் குறைந்த பிறகும் 1768-ஐ விட 1771-ல் வரி வருவாய் அதிகமாக இருந்திருக்கிறது. அதற்கு தாங்கள் வரி வசூலிப்பதில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் வகுக்கப்பட்ட வர்த்தகக் கொள்கை முழுக்க முழுக்க அவர்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது. 1815-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 1,00,000 பவுண்டாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 26,300 பவுண்டாக இருந்தது.  ஆனால், 1832-ல் இறக்குமதி 4,00,000 பவுண்ட்களைத் தாண்டியது. இதனால், இந்திய உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. 1813-ல் கல்கத்தா துறைமுகத்தில் இருந்து பிரிட்டனுக்கு 20,00,000 பவுண்ட் பருத்தி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த நிலைமை தலைகீழாக மாறி 1830-ல் பிரிட்டனில் இருந்து அதே அளவு ஜவுளிப் பொருட்கள் கல்கத்தாவுக்கு பிரிட்டனின் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இந்திய-பிரிட்டிஷ் வர்த்தகம் மட்டுமல்லாமல் இந்தியா பிறநாடுகளுடன் செய்துவந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. 1800-க்கும் பிறகு அமெரிக்கா, டென்மார்க், போர்ர்சுகல், அரபு நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.

இந்தியாவின் நிகர வருவாயில் பாதிக்கு மேல் பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டன. கோஹினூர் வைரம் மட்டுமல்லாமல் வேறு பல விலை மதிப்பில்லா கற்களும் கொண்டுசெல்லப்பட்டன. மொகலாய சக்ரவர்த்திக்குச் சொந்தமான கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுத்த 410 காரட் எடையுள்ள ஒரு வைரத்தை அப்போது சென்னையின் கவர்னராக இருந்த தாமஸ் பிட் வாங்கிக்கொண்டார். அவர் அதை சொந்தமாக்கிக்கொண்டதால் அதன் பிறகு அது பிட் வைரம் என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்திலேயே 1,25,000 பவுண்டுக்கு மதிப்பிடப்பட்டது.

இந்தியாவில் கொள்ளையடித்ததை எல்லாம் இங்கிலாந்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரவேண்டி, தன் சொத்துகளையெல்லாம் வைரங்களாக மாற்றினார் ராபர்ட் கிளைவ். இதுபோல விலையுயர்ந்த கற்களையெல்லாம் எடுத்துச் சென்றதாலும், இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை பிரிட்டனுக்கு எடுத்துச் சென்று, அவற்றிலிருந்து பொருள்களைத் தயாரித்து, இந்தியாவில் அதிக விலைக்கு விற்று சுதேசி தொழிற்சாலைகளை அழித்ததாலும் 1747ல் இருந்து 1947க்குள் பிரிட்டனின் தனி நபர் வருமானம் 347 விழுக்காடு அதிகரித்தது. அதே காலத்தில், இந்தியாவின் தனி நபர் வருமானம் கேவலம் 14 விழுக்காடுதான் அதிகரித்தது.

வருடா வருடம் இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் பவுண்டுக்கு அதிகமான தொகை பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தத்தொகை கிழக்கிந்திய கம்பெனி இருந்தவரை அதன் லாபமாக அதன் பங்குதாரர்களுக்குச் சென்றது. அதன் பிறகு பிரிட்டிஷ் அரச நிர்வாகம், அதிகாரிகள், ராணுவ படைக்கான செலவு, தொழில் புரட்சிக்கான மூலதனம் என பலவகைகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்தச் சுரண்டல்கள் பிரிட்டிஷ் மக்களுக்கே பெரும் அவமானமாகப்பட்டதால்தான் சரித்திர சின்னங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தரும் பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைக் கட்டடத்தையோ ராபர் கிளைவ் போன்றவர்களின் மாளிகைகளையோ தங்களுடைய பெருமைக்குரிய சின்னங்களாக மதித்துப் போற்றுவதில்லை. அடியாழத்தில் தாம் செய்த கொடூரச்செயல்களின் அடையாளமாகவே அவை தோன்றுவதால் ஒருவித விலகலையே கடைப்பிடித்துவருகின்றனர். நவீன உலகில் ஒப்பீட்டளவில் மேலான ஜனநாயகச் சிந்தனைகளுடன் வாழ்ந்துவரும் அவர்களுக்கு அந்தக் கடந்த காலம் தவிர்த்திருக்க வேண்டிய பெரும் பிழையாக, ஒரு கொடுங்கனவாகவே தோன்றுகிறது போலும். நம்மவர்களுக்குத்தான் அது இன்னும் வேண்டிய அளவுக்கு உரைத்திருக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

சட்டப்பூர்வமான சுரண்டல்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 18

பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டலானது மூன்று கட்டமாக நடந்தேறியது. 1757-1813 வரையிலான முதல் கட்டத்தில் வர்த்தக செயல்பாடுகளே நேரடிக் கொள்ளையடிப்பாக நடந்தன. அதில் இந்தியாவின் வருவாயின் உபரியைக் கொண்டு இந்திய உற்பத்திப் பொருட்களை வாங்கி அவை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1813-1858 வரையிலான இரண்டாவது கட்டத்தில் சுதந்தர வர்த்தக நாடாக இருந்த இந்தியா கச்சாப்பொருள் மையமாகவும் பிரிட்டிஷ் பொருட்களுக்கான சந்தையாகவும் ஆக்கப்பட்டது. 1858-க்குப் பிந்தைய மூன்றாவது கட்டத்தில் பொருளாதார ஏகாதிபத்தியம் அமலாக்கப்பட்டது. வங்கிகள், அயல் நாட்டு வர்த்தகம், நிர்வாக அமைப்புகள் அனைத்தையும் பிரிட்டிஷ் முதலீடுகளே கட்டுப்படுத்தின.

1765-ல் வங்காளம், பிஹார், ஒரிஸ்ஸா பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்திய கம்பெனிக்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் முன்னால் ஒரே ஒரு குறிக்கோள்தான் இருந்தது. வருவாயை எப்படி அதிகப்படுத்துவது?

விவசாய வரிதான் அதற்கான எளிய வழி என்று முடிவு செய்யப்பட்டது. விவசாய நாட்டில் வேறு எது வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுக்க முடியும்? எனவே, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்தார்கள். பல ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஒரு தேசம் கேவலம் இரண்டாந்தர ராணுவ கிளார்க்குகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் ரெவின்யூ ஃபார்மிங் என்ற ஒரு வழிமுறையை அமல்படுத்தினார். இந்த வழிமுறையில் வரி வசூலிக்கும் உரிமையை ஏலத்தில் விடுவார்கள். ஏலத்தில் எடுப்பவர்கள் குறிப்பிட்ட தொகையை கம்பெனிக்குக் கொடுத்துவிடவேண்டும். தங்கள் சாமர்த்தியம்போல் வரியை வசூலித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதனால், காரன் வாலிஸ் பிரபு வேறொரு திட்டத்தை 1793-ல் கொண்டுவந்தார். பெர்மனெண்ட் செட்டில்மெண்ட் என்ற அந்த திட்டத்தின்படி முன்பு வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள் அந்த நிலங்களின் உரிமையாளர்களாக ஜமீந்தார்களாக ஆக்கப்பட்டனர். கம்பெனிக்குத் தரவேண்டிய வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஜமீந்தார்களால் அந்த வரியைச் செலுத்த முடியாமல் போனால், நில உரிமை அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு வேறொருவருக்குத் தரப்படும். இந்த சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசு இதியாவில் அதற்கு முன்புவரை இருந்திராத ஒரு புதிய பெரு நிலக்கிழார் பிரிவை உருவாக்கியது. இப்படியான வழிமுறை மூலம் கம்பெனிக்கு ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் வரியை தனித்தனியாக வசூலிக்க வேண்டிய சுமை இல்லாமல் போனது. சொற்ப அளவிலான ஜமீந்தார்களிடமிருந்து நேரடியாக வரியை வசூலிப்பது எளிதாக இருந்தது. அதோடு ஒரு வலிமை வாய்ந்த ஒரு பிரிவை தனது விசுவாசிகளாக உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது.

அதற்கு முன்னால் வரை ஏகதேசம் உழுதவர்களுக்கே நிலம் சொந்தமானதாக இருந்துவந்திருக்கிறது. கிராம பஞ்சாயத்து சபைக்குத்தான் வரிகள் தரப்பட்டன. அவையும் ஏரி குளங்களை உருவாக்குதல், பராமரித்தல் என முழுக்க முழுக்க அந்தந்த கிராம நிர்வாகத்துக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்திய நிர்வாக அமைப்பு என்பது பெரிதும் கிராமப்புற நிர்வாக மையமாகவே இருந்திருக்கின்றன. இந்தக் குட்டிக் குடியரசுகளின் அமைப்பைத்தான் காந்தியடிகள் கிராம சுயராஜ்ஜியம் என்று சொன்னார்.

ஒவ்வொரு கிராம மக்களும் தமக்குத் தேவையானதை தமது கிராமத்திலேயே உருவாக்கிக்கொண்டு அனைவருக்கும் பலன் தரும் வகையில் பகிர்ந்துகொண்டு தன்னிறைவுடன் சுயசார்புடன் வாழ வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. காந்தி புதிதாகக் கண்டு சொன்ன வழிமுறை அல்ல. அது பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியாவில் நிலவிய அமைப்புதான். அந்த முந்தைய அமைப்பில் சாதி சார்ந்து இருந்த ஏற்றத் தாழ்வை நவீன உலகுக்கு ஏற்ப சீரமைக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் கூடுதல் பங்களிப்பாக இருந்தது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் கணக்குப்பிள்ளை, காவல்காரர், புரோகிதர், கொல்லர், தச்சர், நாசுவர், குயவர் போன்ற பலர் இருந்தனர். விவசாயத்தில் ஈடுபட்ட பிரிவினரைச் சார்ந்தே அனைவரும் இயங்கினர். ஒரு உடம்பில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணியைச் செய்வதுபோல் சமூகத்தின் இயக்கத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒவ்வொரு பணியைச் செய்து வந்தனர். கிராமத்துக்கான வருவாய் சேகரிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எந்த மன்னர் ஆண்டாலும், எந்த ஆக்கிரமிப்பாளர் ஊடுருவினாலும் இந்த கிராம அலகுகள் பெருமளவுக்குக் கவலையின்றி அனைத்துக்கும் ஈடுகொடுத்தே வந்திருந்தன.

நெருக்கடி நேரங்களில் மக்கள் கோட்டைகளுக்குள் அடைந்துகொள்வார்கள். பகைவர்களின் படை புழுதியைக் கிளப்பியபடி கடந்து செல்லும். கிராம மக்கள் தமது கால்நடைகளை கோட்டைக்குள் அடைத்துப் பாதுகாத்துக் கொள்வார்கள். எதிரியை அப்படியே கடந்து செல்ல அனுமதித்துவிடுவார்கள். எதிரி தாக்க முற்பட்டால் ஒரளவுக்கு போராடிப் பார்ப்பார்கள். எதிரியின் வலிமை அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கிராமங்கள், மலை அல்லது காடுகளுக்குத் தப்பித்துச் சென்றுவிடுவார்கள். புயல் கரையைக் கடந்ததும் மீண்டும் பழைய கிராமத்துக்குத் திரும்பிவிடுவார்கள். சில நேரங்களில் ஊர் திரும்ப பல வருடங்கள் கூட ஆகும். பல தலைமுறைகள் கூட கழிந்துவிடலாம். ஆனால், நிலைமை சுமுகமானதும் அடுத்த தலைமுறை ஊர் திரும்பிவிடும். மகன்கள் தந்தையின் இடத்தைப் பிடிப்பார்கள். அதே வீடு, அதே நிலம் வாரிசுகள் வசம் ஒப்படைக்கப்படும். இந்தியாவின் ஒற்றுமைக்கு வேறு எந்த அம்சத்தைவிடவும் கிராமங்களின் இந்த அமைப்பே பெரும் பங்காற்றியிருக்கிறது.

பிரிட்டிஷாரால் ஜமீந்தார் முறை அமலாக்கப்பட்டதும் இந்தப் பழைய சமன்பாடுகள் சீர்குலைந்தன. நில உடமை ஓரிடத்தில் குவிக்கப்பட்டது. முன்பு நிலத்தின் உரிமையாளராக இருந்தவர்கள் குத்தகைதாரராகவும், கூலிகளாகவும் கீழிறக்கப்பட்டனர்.

பிரிட்டிஷார் வரி வசூலிக்க ரயத்வாரி எனும் இன்னொரு வழியையும் பின்பற்றினர். இதன்படி வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக வசூலிக்கப்பட்டது. ஜமீந்தார்களுக்கு பதிலாக விவசாயியே நில உரிமையாளராக இதில் இருந்தார். ஆனால், விதிக்கப்பட்ட வரியோ மிக மிக அதிகமாக இருந்தது. அதைச் சமாளிக்கப் பலர் விவசாயத்தில் இருந்தே விலகி ஓட வேண்டிவந்தது. வேறு சிலரோ அதிக வரியைக் கொடுப்பதற்காக பணப்பயிர்களை பயிரிட ஆரம்பித்தனர். அது வரிச்சுமையில் இருந்து ஓரளவுக்கு பாதுகாப்பு அளித்தது. ஆனால், பஞ்ச காலங்களில் உணவுப் பயிர்கள் போதுமான இருப்பு இல்லாமல் கொத்துகொத்தாக மக்கள் மடிய அதுவே காரணமாக ஆனது. பிரிட்டிஷாரின் இத்தகைய வரி விதிப்பு முறைகள் பாரம்பரிய இந்திய விவசாயத்தை கழுத்தை நெரித்துக் கொன்றன. ஜமீந்தார்களையும் லேவாதேவிகளையும் உருவாக்கி முன்னால் இருந்த சமநிலையை கலைத்துப் போட்டன.

இத்தகைய செயல்களால் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் அபரிமிதமாகப் பெருக ஆரம்பித்ததும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கண்களில் ஏகாதிபத்திய நெருப்பைப் பற்ற வைத்தன. ஏற்கெனவே, தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய பொருளாதார கோட்பாடுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. கம்பெனிகளின் ஏகாதிபத்தியம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு ”சுதந்தர வர்த்தகம்’ நடக்க அரசு வழி வகுக்க வேண்டும் என்ற கொள்கை உருவானது. கம்பெனியின் மீதான கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் பல நிர்வாகிகள் ”துர் நடத்தை’ காரணமாக விசாரிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ”சுதந்தர வர்த்தக’த்தின் ஊதுகுழல்களாக இருந்தவர்கள் 1813-ல் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தனர். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் அனுபவித்துவந்த ஏகபோக அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பிரிட்டிஷார் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள இன்னொரு திருப்பணியையும் செய்தனர். தேசம் முழுவதையும் ரயில் பாதைகளால் இணைத்தனர். வருவாய்க்கான எந்தவொரு மூலத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்தனர். ரயில்தடங்கள் எல்லாம் ஏற்றுமதிக்குத் தோதாக துறைமுக நகரங்களுடன் இணைக்கப்பட்டன. ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டு செல்லவேண்டும் என்பதும் ரயில்பாதை அமைத்தததற்கான காரணங்களில் ஒன்று. ஆனால், இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த நற்காரியங்களில் ஒன்றாக, இந்தியாவை நவீன யுகத்துக்குள் கொண்டுவர மாண்புமிகு ராணியார் கனிவுடன் மேற்கொண்ட சாதனையாக வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அவர்கள் செய்த எந்த காரியமும் இந்திய நலனுக்காகச் செய்யப்பட்டதில்லை. பிரிட்டிஷாரால் இந்தியாவுக்குக் கிடத்தவை என்று எதையும் சொல்ல முடியாது. பிரிட்டிஷாரை மீறிக் கிடைத்தவை என்றுதான் அவற்றைச் சொல்லவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 தீதும் நன்றும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 19

பாரம்பரியக் கல்வியைச் சீரழித்தது, பொருளாதாரத்தைக் குலைத்தது, அரசியல் அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது என பிரிட்டிஷார் இந்தியாவில் நிகழ்த்திய அழித்தொழிப்புகளில் மிகவும் மோசமானது எதுவென்றால், இந்திய சமூக வாழ்க்கை முறை குறித்து அவர்கள் நம் மனங்களில் விதைத்த விஷ விதைதான். நவீன வாழ்க்கை முறையினால் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், மதிப்பீடுகள் இவற்றை மையமாகக் கொண்டு கடந்த காலத்தை ஒப்பிட்டு நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்ள அதுவே காரணமாக இருந்துவருகிறது. ஒரு பழங்குடி சமூகத்தைப் பார்த்து உங்கள் வீடுகள் எல்லாம் குடிசைகளாக இருக்கின்றனவே… சாலை வசதியே இல்லையே… மின்சாரமே இல்லையே… முழு ஆடை அணியவில்லையே… அழுக்காக இருக்கிறீர்களே… உங்களுக்கு கடவுளின் (?) கருணை கிடைக்கவில்லையே என்றெல்லாம் போலியாகப் பரிதாபப்பட்டு அவர்களை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் அவர்களை கலாசார வரைபடத்தில் இருந்து முற்றாக அழித்தொழித்ததுபோல்தான் இந்திய வாழ்க்கை முறைக்கு எதிராகவும்பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இந்திய வாழ்க்கையின் ஆதார அம்சமான சாதி என்பது உலகின் மிக மோசமான வாழ்க்கை முறை என்று ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு இன்று ஏறக்குறைய சூரியன் உதிப்பது கிழக்கில் என்பதுபோல் நிலைநிறுத்தவும்பட்டுவிட்டது. சாதி அமைப்புக்கு மாற்றாக இந்தியாவில் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாகவும் ஏராளமானவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் என்றாலும் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் இந்திய மனங்களில் அது ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கம் மிகவும் அதிகம்.

ஒரு வகுப்பில் படித்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த பாடத்தை படிக்கும் வழிமுறைக்கு மாறாக, முதலில் படித்த பாடத்தை மறந்துவிட்டுத்தான் அடுத்த பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற புதிய வழிமுறையை அது அமல்படுத்தியது. பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒன்றாம் வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, நீ எனக்கு வெறும் அ, ஆ, மட்டுமே சொல்லிக் கொடுத்து என்னை முடக்கிவிட்டாய் என்று சொல்வதுபோல் நம் முன்னோர்களை நாம் விமர்சிப்பவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம்.

இந்திய சாதி முறையைப் பற்றி யாரைக் கேட்டாலும் சொல்லும் பதில்: அது மனிதத் தன்மையற்றது. இழிவானது. இந்து மதத்தின் களங்கம் என்பதுதான். சாதி அமைப்பில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கடை, இடை நிலை சாதியினர் மட்டுமல்ல… அதனால் ஆதாயம் மட்டுமே பெற்றதாகச் சொல்லப்படும் மேல் சாதியினரில் பலர்கூட அந்த விமர்சனத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு உள்ளுக்குள் குற்ற உணர்ச்சியுடன்தான் இருந்துவருகிறார்கள். இந்து சமூகத்தின் மீது வெறுப்பு கொண்டவர்கள் மட்டுமல்ல, அதன் கடந்த கால அம்சங்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நபர்களும் கூட, சாதி ஒரு பிழையான அமைப்பு என்றே சொல்லியிருக்கிறார்கள். இன்றும் சொல்லிவருகிறார்கள். இனி வரும் காலங்களிலும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் தங்கள் அனுபவம், அறிவு, சிந்தனை ஆகியவை சார்ந்து பின்பற்றி வந்திருக்கும் சாதி அமைப்பு உண்மையிலேயே அப்படி விமர்சிக்கத் தகுந்ததுதானா… அந்த அளவுக்கு அது கொடூரமான அமைப்பாக இருந்தால் இத்தனை காலம் எப்படி நிலைபெற்று வந்திருக்கிறது… அவாள்லாம் கெட்டவா… இவாள்லாம் பாவப்பட்டவா என்பதைத் தாண்டி வேறு எந்தக் காரணமும் இருந்திருக்கவே முடியாதா… இந்தியாவில் சாதி அமைப்பு இருந்த காலகட்டத்தில் உலகில் வேறு என்னவகையான அமைப்புகள் இருந்தன… அவை சாதி அமைப்பைவிட எந்த அளவுக்கு மேம்பட்டவையாக இருந்தன… என்ற கேள்விகள் கேட்கப்பட்ட பிறகுதான் சாதி மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படவேண்டும்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். இன்று சமத்துவ சிந்தனைகள் பரவலாக பலம் பெறத் தொடங்கியிருக்கும் நிலையில் அதை நூறு சதவிகிதம் வரவேற்கவே செய்கிறேன். அனைவருக்கும் சம வசதி வாய்ப்புகள் தர வேண்டும்… வேலைகளை அவரவர் திறமைக்கு ஏற்ப செய்யும் சுதந்தரம் இருக்க வேண்டும்… ஆட்கள் அதிகமாகவும் சமூக அந்தஸ்து உள்ள வேலைகள் குறைவாகவும் இருக்கும்பட்சத்தில் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய தேர்ந்தெடுத்தல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த கால வாழ்க்கையின் படி நிலைகள் அப்படியே தொடரவேண்டும் என்று நான் துளியும் விரும்பவில்லை. ஆனால், நான் சொல்லும் ஒரே ஒரு விஷயம்: சமத்துவத்தை ஒரே நாளில் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

ஒரு நிறுவனத்தில் மேல் நிலையில் இருப்பவருக்கு 5 ரூபாய் சம்பளம். இடைநிலையில் இருப்பவருக்கு 2 ரூபாய் சம்பளம்… கடைநிலையில் இருப்பவருக்கு ஒரு ரூபாய் சம்பளம் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையே பல வருடங்கள் நீடிக்கிறது. இப்போது, அனைவருக்கும் சமமான சம்பளம் தரவேண்டும் என்றால், அடுத்த நாளே அனைவருக்கும் 5 ரூபாய் சம்பளம் என்று சட்டம் கொண்டுவந்துவிடக்கூடாது. முதல் சம்பள உயர்வில் மேல் நிலையில் இருப்பவரின் சம்பளத்தை 10 ஆகவும் இடைநிலையில் இருப்பவரின் சம்பளத்தை 6 ஆகவும் கடைநிலையில் இருப்பவரின் சம்பளத்தை 4 ஆகவும் உயர்த்த வேண்டும். அடுத்த கட்டமாக மேல் நிலையில் இருப்பவரின் சம்பளத்தை 15 ஆகவும் இடைநிலையில் இருப்பவரின் சம்பளத்தை 12 ஆகவும் கடைநிலையில் இருப்பவரின் சம்பளத்தை 10 ஆகவும் அதிகரிக்கவேண்டும். அதன் அடுத்த கட்டமாகத்தான் அனைவருடைய சம்பளத்தையும் 25 ஆக ஆக்கவேண்டும். அதாவது, இடைவெளியை மெள்ள மெள்ளத்தான் குறைக்கவேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே கடைநிலையில் இருக்கும் சிலருக்கும் நடுநிலையில் இருக்கும் சிலருக்கும் மேல்நிலையில் இருக்கும் சிலருக்கும் ஒரே சம்பளம் என்பதை நிச்சயித்தால் பிரச்னை பெரிதாகத்தான் செய்யும். இதுதான் இதுவரையிலான நம்முடைய நகர்வு நமக்கு அறியத் தந்திருக்கும் பாடம். ஏனென்றால் ஏற்றத் தாழ்வு என்பது ஒரே நாளில் உருவாகியிருக்கவில்லை. எனவே, அதை இல்லாமல் ஆக்குவதும் ஒரே நாளில் முடியாது. படிப்படியாக ஏற்றப்பட்ட சுமையை படிப்படியாகத்தான் இறக்கமுடியும். இறக்க வேண்டும்.
அல்லது பதவிகளை சம்பந்தப்பட்ட வேலைக்கான திறமையை மட்டும் சோதித்துப் பார்த்தோ சாதி அடிப்படையிலோ தந்ததற்குப் பதிலாக சம்பந்தப்பட்டவரின் பொது நல சேவை மனப்பான்மையை அடிப்படையாக வைத்து அந்தப் பணியைத் தந்திருக்க வேண்டும்.

உதாரணமாக, வாழ்நாள் முழுவதும் தலித், பழங்குடிகள் மத்தியில் பணிபுரிய விருப்பமுடைய மருத்துவருக்கு முன்னுரிமை தரவேண்டும். குறைந்த கட்டணத்தை வசூலிப்பேன் என்று சொல்பவருக்கு அடுத்த முன்னுரிமை தரவேண்டும். அப்படியாக கல்வி அனைவருக்கும் கிடைப்பதைவிட கல்வியின் பலன் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும். இதுதான் நம் வழிமுறையாக இருந்திருக்க வேண்டும்.

இதை நான் தனியாக யோசித்துச் சொல்லவில்லை. சமத்துவத்தை சட்டத்தின் மூலம் எடுத்த எடுப்பில் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன பிழையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். இதைவிட வேறு நல்ல வழிகள் உங்களிடம் இருந்தால் அதைச் சொல்லலாம். விஷயம், சமத்துவத்தை அதிக இழப்பு இல்லாமல் அமல்படுத்துவது எப்படி என்பதுதானே தவிர வேறு ஒன்றுமில்லை.
கடந்த காலத்தைப் பழிக்காமலேயே எதிர்காலத்தை வளமாக உருவாக்கிக்கொள்ள நான் முன்வரும்போதுதான் இது சாத்தியமாகும். சமத்துவ உலகை இயல்பான, எளிமையான, நிதானமான முறையில் உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அது முடியும் என்பதைவிட அதுதான் நியாயம்.

சாதி மோசமானது என்ற கருத்தானது பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்தே இந்திய மனத்தில் இந்த அளவுக்கு ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னால் நடந்த சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த சமத்துவம் என்பது பெரிதும் ஆன்மிக அளவிலானதே. அம்பேத்கர் சொல்வதுபோல், இறைவன் முன் அனைவரும் சமம் என்பதே அவர்கள் சொன்னது. செய்யும் தொழிலே தெய்வம்… எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை சிறப்பாகச் செய்தால் இறைவனைஅடையலாம் என்பவைதான் அந்தக் காலகட்டத்தின் அடிப்படையான பார்வையாக இருந்திருக்கிறது. பல்வேறு பழங்குடிகளின் பாரம்பரிய அம்சங்கள் அனைத்தையும் அழித்து ஆக்டோபஸ் போல் ஒற்றைப்படைத்தன்மையுடன் வளர்ந்த மதத்தின் புத்திரர்கள்தான், எந்த அடையாளத்தையும் அழிக்காமல் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் ஒத்திசைவுடன் வாழ்ந்த சாதியின் புத்திரர்களை இழிவானவர்கள் என்று முதலில் முத்திரைக் குத்தினார்கள். அதை அவர்களைவிட நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

சாதியின் கொடுமைகளாகப் பட்டியல் போட்டு பண்ணிப் பண்ணிச் சொல்லப்படும் ஒடுக்குமுறைகளைப் படிக்கும்போது இதெல்லாம் ஏன் சகித்துக்கொண்டார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்துக்களில் மேல் சாதியினர் அவ்வளவு கொடுங்கோலர்களாக இருந்திருந்தனர் என்று சொல்வதன் மூலம் ஒருவர், இடை, கடை சாதியினர் அவ்வளவு புழுக்களாக இருந்ததாக பழிக்கத்தான் செய்கிறார். அது நிச்சயம் உண்மை அல்ல. நாங்கள் வேதனையுடன் இருந்ததாகச் சொல்லி எங்களை இழிவுபடுத்தாதே என்றுதான் இடை, கடை சாதி என்று சொல்லப்படுவதில் கடந்தகாலத்தில் பிறந்தவர் உயிர் பெற்று வந்தால் சொல்வார்.
ஆரியர்களின் சதி, சாதி இந்துக்களின் சதி, பிராமணர்களின் சதி, இந்தியாவின் சாபக்கேடு, பழங்குடி மனோபாவ வாழ்க்கை முறை என்றெல்லாம் சாதி தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பார்வைகளில் பெரும்பாலானவை அதைக் கடுமையாக விமர்சிக்கவே செய்கின்றன. ஆனால், சாதி பற்றி இன்னொரு பிரதான பார்வையும் இருக்கிறது. யாராலும் பெரிதும் மதிக்கப்படாத அந்தப் பார்வைக்கு உரிய முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும். ஏனென்றால், அது அந்த சாதி அமைப்பில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர்களின் பார்வை. அவர்களின் பார்வையும் சாதி எதிர்ப்புப் போராளிகளின் பார்வையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருப்பதோடு முற்றிலும் எதிராகவும் இருக்கின்றன. சாதியைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான எளிய, உறுதியான நிரூபணம் இதுவே.

தாழ்ந்த சாதி மக்களிடம் எவையெல்லாம் இல்லையோ… அவர்களுக்கு எவையெல்லாம் மறுக்கப்பட்டிருந்ததோ அவற்றை அடிப்படையாக வைத்து அவர்கள் மிக வேதனையான, இழிவான வாழ்க்கையை வாழ்ந்ததாக சாதியை எதிர்க்கும் போராளிகள் சொல்கிறார்கள். அதே நேரம் அந்த வேதனையை அனுபவித்ததாகச் சொல்லப்படும் மக்களோ தங்களிடம் இல்லாததை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்காமல் இருப்பதை வைத்து ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு மரமானது தனக்கு நடக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் வேரைஆழமாகச் செலுத்தி கிளைகளை அகலப் பரப்பி வாழ்வதுபோல் தமக்கான ஒரு வாழ்க்கை முறையை தமக்கான வெளிகளில் தமது சாதக அம்சங்களை வைத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒடுக்குமுறை என்று சொல்லப்படும் விஷயங்களை தங்களுடைய கோணத்தில் வேறுவிதமாகப் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால், தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவே அவர்கள் நினைத்திருக்கவில்லை. எல்லாருடைய வாழ்க்கையைப் போல் தங்களுடைய வாழ்க்கையும் ஒன்று… எல்லா வேலையைப் போல் தாங்கள் செய்வதும் ஒன்று என்ற எண்ணத்துடன் தங்களுக்கான வெளியை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய வேதனைகளாகச் சொல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களின் கற்பனையே தவிர உண்மை அல்ல. குகைக்குள் வாழ்பவருக்கு மலையின் கனம் தெரியாது.
ஒரு உடம்பில் இருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலைச் செய்வதுபோல் இந்திய சாதிய சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒரு வேலையைச் செய்து வந்திருக்கிறார்கள். பிறப்பின் அடிப்படையில் வேலைகளை நிர்ணயித்தது தவறு என்பதுதான் இந்து சமூகம் மீது வைக்கப்படும் ஆகப் பெரிய குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான ஒரு சமூக அமைப்பாகத்தான் ஒட்டுமொத்த மனித இனமும் இயங்கி வந்திருக்கிறது. அது மனித பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத காலகட்டம்.

பிறப்பின் அடிப்படையில் வேலையைத் தீர்மானித்தது என்பது உண்மையில் அனுபவத்துக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டைச் சார்ந்த விஷயம். விவசாயியின் மகனுக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத் தொழில் பரிச்சயமாகியிருக்கும். இளைஞராக அவர் ஆகும்போது சமூகத்தில் இருக்கும் பிற எந்த பிரிவைச் சேர்ந்தவர்களைவிடவும் அவருக்கு விவசாய வேலைகளின் நுணுக்கங்கள் கூடுதலாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரே அந்தப் பணிக்கு பொருத்தமானவர். எல்லாரும் எல்லாத் தொழிலையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு உருவாகியிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் அனுபவத்துக்கு இருக்கும் மரியாதை குறையவே இல்லை.

அதோடு, நேற்றைய உலகில் கல்வியும், போக்குவரத்து வசதிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்றோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருந்திருக்கின்றன. எனவேதான் பிறப்பின் அடிப்படையில் வேலைகள் நிர்ணயிக்கபட்டன. ஆனால், அது இன்று பெரும் தீங்காக இன்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அரச வேலையைப் போல், புரோகித வேலையைப் போல், வணிக வேலையைப்போல் சூத்திரர்களின் வேலையும் செல்வம் கொழிக்கும் ஒன்றாகவும் லகுவானதாகவும் இருந்திருந்தால் பிறப்பின் அடிப்படையில் வேலைகளைச் செய்ய நேர்ந்தது குறித்து எந்தப் புகாரும் இருந்திருக்காது.

பிறப்பின் அடிப்படையில் வேலை நிர்ணயிக்கப்பட்டதை நாம் இன்னொரு கோணத்திலும் பார்க்கவேண்டும். ஏனென்றால் அதுதான் உயர் சாதியினரின் தொழிலில் செய் நேர்த்தியைக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால், கடினமான வேலைச் செய்தவர்களுடைய குழந்தைகளுக்கும் அதே கடினமான வேலையைச் செய்ய வேண்டிவந்துவிட்டது. எனவே, இது மோசமான அமைப்பு என்று சொல்கிறார்கள். வேறு வேலைகளைச் செய்யத்தான் தடை இருந்ததே தவிர செய்து வந்த வேலையை மேம்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. அதை ஏன் செய்யவில்லை?

பனை மரம் ஏறியவர் எதற்காக வயிற்றை எக்கி, உடம்பை வருத்தி மேலே ஏறினார். மிக உயரமான மர ஏணி அல்லது நூலேணியைப் பயன்படுத்தியிருந்தால் மிக எளிதில் ஏறியிருக்க முடியும். அது அவரால் எளிதில் செய்துகொள்ள முடிந்த ஒன்றுதான். அதை அவர் செய்திருக்காத நிலையில் அது தொடர்பான வேதனைக்கு அவரும்தான் காரணம். மலம் அள்ளியவர் அந்தத் தொழிலை எவ்வளவோ மேலானதாக ஆக்கியிருக்க முடியும். உலர் கழிப்பறைகளில் நீரை ஊற்றிக் கழுவிவிட்டு அந்த கழிவு நீரை வாய்க்கால் வழியாக கொண்டு சென்று ஏதாவது வயலிலோ, உரக்கிடங்கிலோ சேகரமாகச் செய்திருக்கலாம். கழிப்பறையில் ஒரு மூலையில் சிறிய மண் பானையில் நீரை ஊற்றி அதில் நறுமண மலர்களை மிதக்கச் செய்திருக்கலாம். மலர் சரங்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கலாம். தினமும் மலக்கூடையை சுமந்து வந்ததற்குப் பதிலாக மலர் கூடையைச் சுமந்துவருபவராக அவர் இருந்திருக்கலாம். அழகிய சுடு மண் விளக்குகளை கழிப்பறையில் ஒரு ஓரத்தில் நிறுத்தியிருக்கலாம். இன்றைய உலகில் பீங்கான், மார்பிள்கள், பளபளக்கும் உலோகங்கள் கொண்டு வீட்டின் வரவேற்பறையை அலங்கரிப்பதுபோல் கழிப்பறையை பிரமாதமாக வடிவமைக்கிறார்கள். இதை அன்றைய பொருட்களைக் கொண்டு அழகாக எளிதில் வடிவமைத்திருக்கலாம். இதையெல்லாம் யாரும் தடுக்கவில்லை. பிறர் படிக்க முடியாதபடி வேத புத்தகங்களில் இதையெல்லாம் ஒளித்துவைக்கவும் இல்லை. இவை ஏன் செய்யப்படவில்லையென்பதை கொஞ்சம் நிதானமாக நமது முற்போக்கு முகமூடிகளைக் கழற்றிவைத்துவிட்டு யோசித்துப் பார்க்கவேண்டும்.

சாதிய வாழ்க்கை முறையை மாற்றவேண்டும் என்று இந்தியாவுக்குள் இருந்தும் எத்தனையோ தலைவர்கள் தங்களுடைய புரிதலுக்கு ஏற்பப் போராடியிருக்கிறார்கள். எத்தனையோ இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அந்நிய நாடுகளில் இருந்தும் எத்தனையோ சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களோடு இயங்கி வந்திருக்கின்றன. இருந்தும் சாதி என்ற அமைப்பால் மிகவும் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பிரிவினர்கூட அதை விட்டுவிடத் தயாராக இல்லை. புதிய மதத்தைத் தழுவியவர்களும் அங்குபோன பிறகும் அந்த சாதி உணர்விலிருந்து வெளியே வந்திருக்கவில்லை. ஏனென்றால், அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல. வெறும் பழக்கத்தின் அடிப்படையில் அவர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவும் இல்லை. அது அவர்களாலேயே உருவாக்கப்பட்டது. அவர்களே அதை வளர்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உகந்த ஒன்றாகவும் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினரில் இருந்து சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்வந்தவர்களில் ஒரு பிரிவினர் பிராமணர்களே எல்லா கெடுதல்களுக்கும் காரணம் என்று மிகுந்த குதூகலகத்துடன் தங்கள் போராட்டப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், தமது சுய சாதியினரிடமும் சக பயணிகளாக வரும் சாதிகளிடமும் அந்த சாதி உணர்வு பிராமணர்களைவிட அதிக அளவுக்கு இருக்கிறது என்பது காலப்போக்கில் துலக்கமாகத் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் அவர்கள் தமது போராட்டத்தை சுய விமர்சனத்துடன் மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால், புறக்காரணிகளினால் அப்படியான ஒரு நியாயமான முடிவை அவர்கள் எடுப்பதற்கான சூழல் இன்றுவரை உருவாகவில்லை. அரசியல் சாதுரியம், அரசியல் தேவை என்ற போர்வையில் சுய சாதி வெறியை மூடி மறைத்துக்கொண்டு போலி முற்போக்குப் போர்வையில் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள். மொதல்ல அவாளை தீத்துக் கட்டுவோம்… நம்ம பிரச்னையை அப்பறம் பாத்துப்போம் என்ற பொய்யான சமாதானத்தைச் சொல்லிக்கொண்டு சாவி கொடுக்கப்பட்ட பொம்மைபோல் பழக்கமான கோஷங்களை முழங்கிக் கொண்டுவருகிறார்கள்.

இதனால்தான் மானுட விடுதலைக்கான முழக்கமாக, மனித குலத்தின் புதிய உலகுக்கான அறைகூவலாக உண்மையின் பரந்து விரிந்த சிறகுகளை அசைத்தபடி நேர்மையின் சூரிய ஒளியில் மின்னியபடி விடுதலையின் வானில் கறுப்பர்களின் போராட்டத்தைப்போல் பறக்க முடியாமல், அரசியல் சமத்கார நீரில் நனைந்த சிறகுகளுடன் வெறுப்பின் கற்களைச் சுமந்தபடி தரையோடு தரையாக தட்டுத் தடுமாறி விழும் பறவையாகவே சாதி எதிர்ப்புப் போராட்டம் ஆகிவிட்டிருக்கிறது.

அதோடு, நடைமுறையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டமும்மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். சாதி சார்ந்த போராட்டத்தை ஒருவர் கூர்ந்து கவனித்தால், அது கடைநிலை சாதியினருக்கு எதிராக இடைநிலை சாதியினரைக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அது உண்மையில் சாதி எதிர்ப்புப் போராளிகளின் தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது. அதையும் பார்ப்பன சதியாகப் பார்ப்பது சாதி பிரச்னையைத் தீர்க்க ஒருபோதும் உதவாது.
இந்த உலகில் நிற/இன வெறி மிகப் பெரிய ஒடுக்குமுறையாக இருந்திருக்கிறது. மத துவேஷம் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்திருக்கிறது. தேசிய மோதல்கள் பெரும் இழப்பைக் கொண்டுவந்திருக்கின்றன. வர்க்கப் போராட்டம் பெரும் ரத்த ஆறைப் பெருக்கெடுக்க வைத்திருக்கிறது. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் உலகின் பல பகுதிகளில் மிக வீரியமாக நடந்து பெரும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சாதி சார்ந்த நம் தேசத்தில் அப்படியான எந்த பெரிய வன்முறைப் போராட்டமும் நடக்காமலேயே நவீன மதிப்பீடுகள் அங்கீகாரம் பெற ஆரம்பித்துள்ளன. வைக்கத்தில் ஒரே ஒரு கோயிலின் கதவுகள் ஓங்கித் தட்டப்பட்டன. ஒட்டு மொத்த இந்தியக் கோவில்களின் கதவுகளும் சட்டென்று திறந்துவிட்டன. சமத்துவ சமூகத்தின் உருவாக்கம் பரஸ்பர புரிதல் மூலம் சாத்தியம் என்பதற்கான எளிய நிரூபணம் இதுவே.

‘பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஒரு பஞ்சாயத்து தலைவராக தலித் செயல்பட முடியவில்லை… சாதியின் கொடூரத்தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்… இந்த அராஜகத்தை வன்முறை மூலமே எதிர்கொள்ளமுடியும்’ என்று சொல்லும் நபர்கள் கே.ஆர்.நாராயணனில் இருந்து மாயாவதி வரை இந்தியாவில் உயர்ந்த நிலையை எட்டியிருப்பதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும். கண்டதேவியில் தலித்கள் வடம் தொட்டுத் தேரிழுக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் அதே தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் அதைவிடப் பெரிய தேர்களை இழுக்க தலித்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே தங்கள் போர்ப் பறைகளை முழக்க வேண்டும்.

கண்டதேவியில் தலித்கள் தேர் இழுக்கவேண்டும்… பாப்பாபட்டியில் தலித் தலைவர் சுத்நதரமாகச் செயல்படவேண்டும் என்பதில் 100 சதவிகிதம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் சாமர்த்தியமே இருக்கிறது. சாதி இந்துக்கள் எங்கள் எதிரிகள் என்று கட்டமைப்பது என்பது கால்களை உடம்புக்கு எதிராக நிறுத்துவது போன்ற ஒரு செயலே. இதற்கான முக்கியமான காரணம் நிற வெறிபோல், இன வெறிபோல் கொடூரமானதாக ஒருபோதும் இருந்திராத இந்திய சாதிய வாழ்க்கையை மேற்கத்திய கண்ணாடி அணிந்து பார்க்க ஆரம்பித்ததுதான்.

இந்தியாவில் அதுதான் செயலூக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அம்பேத்கர் அதைத்தான் சொன்னார். பெரியார் அதைவிட மோசமாக விஷயத்தைச் சிக்கலாக்கினார். இது பத்தினி வசிக்கும் வீடு என்று ஒருவன் தன் வீட்டில் எழுதி மாட்டினால் மற்றவர்கள் எல்லாரும் வேசிகள் என்றுதானே அர்த்தம் என்று அவர் கேட்டதுதான் அவருடைய இயக்கத்தின் அடிநாதம். தந்தை பெரியார் என்று சொல்லிக்கொள்கிறீர்களே அப்படியானால், மற்றவர்கள் எல்லாம் மலடுகள் என்றா அர்த்தம் என்று கேட்பது எப்படி முட்டாள்த்தனமானதோ அது போன்றதுதான் அவருடைய வாதம். ஆனால், அதுதான் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. ஜாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்ளவிடாமல் தடுத்ததுதான் ஆகப் பெரிய சாதனையாகச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கும் ஓர் இயக்கம் அது.

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி ஏற்பட்டதையும் நவீன யுகம் தோன்றியதையும் ஒட்டி மக்களுக்கு இயல்பாகக் கிடைத்த எதையும் தாண்டி திராவிட இயக்கத்தால் எதுவும் சாதிக்கப்பட்டிருக்கவில்லை. 2000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த சூத்திர சாதியினரை அதிகாரத்தின் மேலடுக்குக் கொண்டுவந்தது திராவிட இயக்கம்தான் என்று சொல்லப்படுவதுண்டு. அது உண்மை என்று எடுத்துக் கொண்டால், இரண்டே தலைமுறைகளில் அதிகாரம் கைக்கு வந்த அந்த இடைநிலை சாதியினர் கடைநிலை சாதியினர் மீது தொடுத்துவரும் வன்முறைகளையும் அதற்கு அவர்களுடைய எதிர்வினைகளையும் பார்க்கும்போது, 2000 ஆண்டுகள் இந்த இருபிரிவினருக்கு இடையில் இருந்த பகையை மட்டுப்படுத்தி ஒரு சுமுகமான சூழலைத்தான் ‘பிராமண மதம்’ (துவிஜர்களின் மதம்) நிலை நிறுத்திவந்திருக்கிறது என்றுதான் தோன்றும். ஆனால், ஆழமான புரிதலும் சமத்துவ உணர்வும் உடைய ஒருவர் நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது. சமத்துவம் என்ற வழிமுறை அமலாக்கம் பெற்றதில் இருந்த பிழைகளினால் படிநிலையில் அடுத்தடுத்த இடங்களில் இருந்த மக்கள் எதிரிகளாக ஆகிவிட்டனர். இது மிகவும் துரதிஷ்டமான நிலை என்றுதான் சொல்வார்கள்.

இதுவரையிலும் சாதிப் பிரச்னையை முற்போக்கு போராளிகளின் பார்வையில் மட்டுமே பார்த்துவந்திருக்கிறோம். முதல் முறையாக, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவர்களின் கோணத்தில் பார்க்க முயற்சி செய்வோம். எந்த ஆதிக்க சாதியை கொடூரமாகச் சித்திரித்து வந்திருக்கிறோமோ அதைச் சேர்ந்தவரை, புள்ளை பெத்து பேர் கூட வைக்கலாம். அந்த அளவுக்கு நல்லவரு என்று பாதிக்கப்பட்டதாகச் சொல்பவர்கள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்போம். களவாண்டா என்ன… கோயிலுக்கு ரெணு வடலு போடச் சொல்லப்போறாய்ங்க… போட்டுட்டுப் போறது என்று சொல்பவர்களுக்கு அருகில் சென்று பேசிப் பார்ப்போம்.

தீண்டாமை, கோயிலுக்குள் அனுமதிக்காமை, கலப்புத் திருமணத்துக்குத் தடை, சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாமை, பொது குளத்தில் நீர் அள்ளத் தடை, நிலங்கள் சொந்தமாக இல்லாமல் இருந்தது, விசேஷ நாட்களில் மட்டுமே நெல்லுச்சோறு, சம்பளமே கிடையாது, மிகவும் கடினமான, கேவலமான வேலைகள் என சொல்லப்படும் அனைத்தையும் இடை, கடைநிலை சாதியினர் எப்படிப் பார்த்தனர் என்பதை அவர்களுடைய இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்போம். மீண்டும் இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லவிரும்புகிறேன். சாதி அமைப்பு இத்தனை காலம் நீடித்து வந்திருப்பதையும் இப்போதும் அது வலுப்பெற்று வருவதையும் பார்த்துவிட்டு அதற்கு எது காரணம் என்பதைக் காண விரும்பியே இவற்றிச் சொல்கிறேன். என் இலக்கும் சமத்துவக் கோயில்தான். அதற்கான திராவிட, பகுத்தறிவு, முற்போக்கு, சாதியப் போராளிகளின் பாதையைத்தான் மறுதலிக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

சாதி கெட்டதா?

photo998மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 20

சாதி, மதங்களின் தோற்றுவாய் குறித்து சுருக்கமாக முதலில் பார்ப்போம். தாவரங்கள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என பரிணாம வளர்ச்சியில் தோன்றிய உயிரினங்களின் வரிசையில் கடைசியாக உருவான இனம்தான் மனித இனம். நான்கு கால்கள் கொண்ட விலங்கில் இருந்து முன்னங்கால்கள் கைகளாக மாறியதால், மாறுபட்ட உயிரினமாக மனித இனம் உருவாகியுள்ளது. கைகள் முளைத்ததால் உணவுச் சேகரிப்பும் பிற வேலைகளும் எளிதானது. நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. அதனால் மூளையை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து மாபெரும் தனி உயிரினமாக மனித இனம் வளர்ந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் பழங்குடிகளாக, நாடோடிகளாக வேட்டையாடியும் மீன் பிடித்தும் பழங்களைச் சேகரித்தும் வாழ்ந்தது. அதன் பிறகு விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டு ஓரிடத்தில் வாழ ஆரம்பித்தது. மனித இனத்தின் வரலாறே விவசாயச் சமூகத்துக்கும் பிற சமூகத்துக்கும் இடையிலான முரணியக்கம் என்று கூடச் சொல்லலாம்.

இடப்பெயர்ச்சி தொடர்பான தடைகள் பெரிதாக இருந்ததால் ஆரம்பகால அடையாளப்படுத்தல்கள் குறுகிய வட்டங்களைச் சார்ந்ததாகவே இருந்தன. இந்தக் காலகட்டம் பல நூறு வருடங்கள் நீடித்தது. ஒரு குறிப்பிட்ட பழங்குடியினமாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு தமக்குரிய அனுபவங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப கடவுள்கள், சடங்குகள், வாழ்க்கைப் பார்வைகள் ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தது.

இதன் பிறகு மனித இனம், இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தது: மதம் என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு… சாதி என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு என வாழ ஆரம்பித்தது. அதில் சாதி மிகவும் இழிவானது என்று மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ ஆரம்பித்த மேற்குலகம் உரத்த குரலில் சொல்லி, அதை சாதிய அமைப்பில் வாழும் நம்மவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டிருக்கின்றனர். இடை, கடை சாதியினர் மிகவும் வேதனை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் அவர்களுடைய அனைத்து வேதனைகளுக்கும் மேல் சாதியினர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன?

சாதிய வாழ்க்கை முறை அந்த அளவுக்கு இழிவானதுதானா என்பதை முதலில் பார்ப்போம்.
சாதி அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில் இந்தியா அனைத்துக் கலைகளிலும் சிறந்ததாக இருந்திருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. தத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளில் உலகுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. தேவையான தளங்களில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அருமையாக இருந்திருக்கின்றன. மையம் அழிக்கப்பட்டு, அதிகாரப் பரவலாக்கம் மிகுந்த ஆட்சி அமைப்பாக இருந்திருக்கிறது. விவசாயம் போன்ற அடிப்படைத் தொழில்களில் முன்னேறிய நிலையில் இருந்திருக்கிறது. பிற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக இருந்திருக்கிறது. ஏற்றுமதியிலும் மிகுதியாக ஈடுபட்டிருக்கிறது. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் வெவ்வேறு உறுப்புகள் வெவ்வேறு பணிகளைச் செய்வதுபோல், சமூகத்தின் பல்வேறு குழுக்கள் மிகுந்த ஒத்திசைவுடன் பணிபுரிந்து வந்திருக்கின்றன.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் வரை உலகிலேயே அனைத்துத் துறைகளிலும் இந்தியா உச்சத்தில் இருந்திருக்கிறது. இது பிரிட்டிஷாரின் ஆவணங்களிலிருந்தே ஊர்ஜிதமாகியிருக்கும் நிலையில் சாதி அமைப்பு ஒரு சாபக்கேடாக இருந்திருக்க முடியுமா?
சாதிக்கும் மதத்துக்கும் இடையில் இருக்கும் பொதுவான அம்சங்களையும் வித்தியாசங்களையும் முதலில் பார்ப்போம். அதற்கு முன்பாக இன்னொரு விஷயம்.
தொழில் புரட்சி ஏற்பட்டு, பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி, கடந்த கால இந்திய சாதி வாழ்க்கை மிகவும் இழிவானது என்று அவர்கள் பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த பிறகு நடந்த சம்பவங்களை நாம் வேறு வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டும். அதுவரையில் மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் அதே ஏற்றத் தாழ்வுகள்தான் இருந்து வந்திருக்கின்றன. என்றாலும் சாதிய வாழ்க்கை மட்டுமே இழிவானது என்று சொல்லி அவர்கள் செய்த திரிபுகளை அடியொற்றி நம்மவர்கள் நடந்த பாதையில் காணப்படும் சீர்கேடுகளுக்கு நம் முன்னோர்களின் அமைப்பு எந்தவகையிலும் காரணமல்ல.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல் சாதி எதிர்ப்பு இயக்கமானது சாதிய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சிக்கலாகி பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருந்துவருகிறது. இந்தக் காலகட்டத்தை அதற்கான அளவுகோலுடன்தான் பார்க்கவேண்டும். அதற்கு, தொழில் புரட்சிக்கு முந்திய உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால்தான், பிந்தைய பிரச்னைகளுக்கான காரணமும் அதை எப்படிக் களைய வேண்டுமென்ற தீர்வும் புரியவரும்.

மனித இனம் கண்டடைந்த சமூக அமைப்புகளான சாதி, மதம் இரண்டுமே அடிப்படையில் குழு மனப்பான்மை கொண்டவைதான். ஆனால், மதம் பல்வேறு சாதிகளின் தனி அடையாளங்களை அழித்து, பொது அடையாளத்தின் கீழ் வலுக்கட்டாயமாக அணி திரட்டி உருவான சமூக அமைப்பு. இந்திய சாதி அமைப்பு என்பது பல்வேறு சாதிகள் (பழங்குடி இனங்கள்) தங்கள் அடையாளத்தைக் கைவிடாமல், ஒரு தொகுப்பாகக் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு.

சாதி அமைப்பின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையாக எடுத்துப் பார்ப்போம். சாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. அதை மாற்றிக் கொள்ளவோ விலகிச் செல்லவோ எந்த வழியும் கிடையாது.

மதமும் பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவருக்கு வந்து சேர்கிறது. என்றாலும் விருப்பத்தின்படி மதத்தை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு. இது ஒரு கோட்பாட்டு அளவிலான சுதந்தரம்தானே தவிர ஒரு மதத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை நடைமுறையில் எப்போதும் மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது.
அதோடு ஒரு மதத்துக்குள் புதிதாக ஒருவரைச் சேர்த்துக் கொள்ளும்போது, அவருடைய முன்னோர்கள் காலகாலமாகக் கைமாற்றித் தந்த அனைத்தையும் அவர் தூக்கி எறிந்தால்தான் அந்த மதம் அவரைச் சேர்த்துக் கொள்ளும். அந்தவகையில் எல்லாரையும் அணைத்துக் கொள்வது ஒரு போலியான பாவனையாக மட்டுமே மதங்களில் இருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டால்தானே எனக்கு சம மரியாதை தருவதாக ஆகும். நான் உன்னைப் போல் மாறிய பிறகுதான் என்னை நீ சமமாக நடத்துவாய் என்றால் உனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவதற்காகக் காட்டும் சொற்ப சலுகைதான் நீ தரும் சகோதரத்துவமும் சமத்துவமும். அதுவும் முழுமையானது அல்ல என்ற நிலையில் ஒருவருக்கு அதன் மூலம் கிடைக்கும் நன்மையைவிட இழப்பே அதிகம்.
சாதியில் மேல் கீழ் படி நிலைகள் இறுக்கமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கலப்பு என்பது சாத்தியமே இல்லை.

மதத்துக்குள்ளும் படிநிலைகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டவையே. மேற்கத்திய ராஜா தன் மகளை மரம் வெட்டுபவருக்குத் திருமணம் செய்து கொடுத்ததாகவோ மேற்கத்திய புரோகிதர் தன் மகனுக்கு விவசாயி மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகவோ அங்கும் சரித்திரம் இல்லை. உலகில் மதம் சார்ந்த வாழ்க்கை முறை இருந்த இடத்திலும் மேல் கீழ் நகர்வுகள் வெகு வெகு சொற்பமே. ஆனனப்பட்ட ‘மக்களின் இளவரசி’ டயானாவுக்கு நேர்ந்தகதி ஊருக்கே தெரிந்த ஒன்றுதானே. ராஜ வம்ச ரத்தம் ஓடாத அந்த தேவதையின் வாழ்க்கை கொடுங்காற்றில் சிக்கிய மெழுகுச் சுடராக அல்லவா அணைந்துவிட்டிருக்கிறது.
சாதி அமைப்பில் சகோதரத்துவம் இல்லை.

மதத்துக்குள் சாதியை விட சகோதரத்துவம் கொஞ்சம் போல அதிகம்தான். ஆனால், பிற மதத்தினர் மீது அவை காட்டிய வெறுப்பு, சாதிகளுக்கு இடையே இருந்த வெறுப்பைவிட நூறு மடங்கு அதிகம். அந்தவகையில் சாதி ஒரு சிலந்தி போன்றது. மதம் ஆக்டோபஸ் போன்றது. எனவே, இந்திய சாதி மீதான விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவரின் நேர்மையை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இந்த உலகில் ஏற்படுத்தி இருக்கும் அழிவைக் குறித்து என்ன சொல்கிறார் என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், நாயைப் பார்த்ததும் கல்லெடுத்து எறிபவர், ரத்தம் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டபடி இருக்கும் ஓநாயைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால், அவரை நல் மேய்ப்பனாக ஒருபோதும் மதிக்கமுடியாது. ஓநாயின் கைக்கூலியாகத்தானே அவரைச் சொல்ல முடியும்.
சாதிய அமைப்பில் வேலையானது பிறப்போடு பிணைக்கப்பட்டிருக்கிறது.

மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் இதே நிலைதான் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை இருந்து வந்திருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிது புதிதாக பல்வேறு வேலைகள் முளைக்க ஆரம்பித்தன. உற்பத்தி பெருகியது. புதிய சந்தைகள் தேடிக் கண்டடையப்பட்டன. அனைவருக்கும் கல்வி தருவதற்கான தேவை எழுந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கல்வியைப் பலருக்கும் கற்றுத் தர வழி பிறந்தது. போக்குவரத்து எளிதானதால் உலகின் எந்த மூலைக்கும் போய்வருவது எளிதானது.

இவையெல்லாம் வேலை வாய்ப்புகளை அதிகரித்தன. எனவே, பெற்றோர் பார்த்த வேலையையே குழந்தைகளும் செய்ய வேண்டியிருந்த நிலை மெள்ள மாற ஆரம்பித்தது. இந்தத் தொழில் வளர்ச்சி இந்தியாவுக்கு சிறிது பிந்தியே வந்து சேர்ந்தது. இந்தியாவில் தொழிலும் விஞ்ஞானமும் அதற்கு முன்பே சிறந்த நிலையில்தான் இருந்தன. என்றாலும் தொழில் புரட்சியின் வெற்றி மிகப் பெரிய பாய்ச்சலாக இருந்தது. அதை வைத்து உலக அரங்கில் முன்னிலை பெறத் தொடங்கிய மேற்கத்திய உலகத்தினர் தாங்கள் சென்ற நாடுகளில் இருந்த அமைப்புகள் அனைத்தையும் தங்களுடைய குறுகலான இன, மத வெறி கொண்ட கண்களுடனே பார்த்தனர். குடியேற்ற நாடுகளில் இருந்த சமூக, அரசியல், பொருளாதார, ஆன்மிக அமைப்புகளை இழிவானது என்று முத்திரை குத்தினர். சாதி அமைப்பு அவர்களுக்கான துருப்புச்சீட்டாக ஆனது. ஒருவர் செய்யும் வேலையைப் பிறப்போடு பிணைத்திருக்கும் சாதி அமைப்பை மிகப் பெரிய கொடூரமான அமைப்பாக பிரசாரம் செய்தனர்.

சாதி அமைப்பில் கல்வியானது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிகளுக்கு உள்ளாக மட்டுமே இருந்தது. அதுதான் எல்லா நசிவுகளுக்கும் காரணம் என்று ஒரு வாதம் சொல்லப்படுவதுண்டு. விஷயம் என்னவென்றால், அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு தொழில் புரட்சி ஏற்பட்டு பலருக்கும் கல்வி கற்றுத் தர வாய்ப்பு உருவான பிறகுதான் மத ஆதிக்கம் நிலவிய பகுதிகளிலும் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்தது. அதுவரை கல்வியானது அங்கும் முதல் மூன்று வகுப்பினருக்கு உள்ளேயே இருந்துவந்திருக்கிறது. அதை ஒப்பிடும் போது இந்தியாவில் அனைத்து சாதியினருக்கும் கல்வி தரப்பட்டுத்தான் வந்திருக்கிறது.
ஆக, சாதி அமைப்பின் குறைகளாகச் சொல்லப்பட்ட அனைத்துமே மத ஆதிக்கம் செலுத்திய பகுதிகளிலும் இருக்கவே செய்திருக்கிறது. அந்தவகையில் அப்போதைய வாழ்க்கை முறையை மனித பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு கட்டமாகவே பார்த்திருக்க வேண்டும். ஆனால், சாதியை விட மதமே உயர்வானது என்ற ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், உலகெங்கும் ரத்த ஆறைப் பெருகெடுத்த ஓட வைத்த மதம் உயர்ந்ததென்று சொல்வதில் சாதி வழியில் வந்தவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

சாதி மிகப்பெரிய சாதகமான அம்சமென்னவென்றால் அது அதிகாரக் குவிப்புக்கு எதிரானது.
மதம் அதிகாரத்தை பூதாகாரமாகத் தொகுத்து பெரிதாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், மதத்தினால் இந்த உலகுக்கு எந்த அளவுக்கு நன்மை விளைந்திருக்கிறதோ அதை விடத் தீமையே அதிகமாக விளைந்திருக்கிறது. ‘வரையக்கூடாத’ ஒரு கார்ட்டூன் வரையப்பட்டதென்றால் உலகம் முழுவதும் ஒரு ஊழிப் பேரலை கிளம்பி அழிவின் கோர நடனத்தை ஆடியே அடங்கும். சற்று உயரமான இரண்டு கட்டடங்கள் வீழ்த்தப்பட்டால் ஒரு நாடே மயானமாக்கப்படும். ஆனால், சாதி எழுப்பும் வன்முறைக் குமிழ்களின் எல்லை மிகவும் குறுகியது. அது ஒருபோதும் பேரழிவை உருவாக்காது. மதம் சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக்கு எதிரான சாதி ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கேளாத செவிகள், பாராத விழிகள்

seditionமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 21

கடந்த கால சாதிய வாழ்க்கை குறித்து பெரும்பாலானவர்களால் தீட்டப்படும் பொதுவான சித்திரம் ஒன்று இருக்கிறது. அதில் இருண்ட ஓர் அறையில், எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாத வகையில் சிறிதளவே வெளிச்சம் இருக்கும். ஒரு நடுத்தரவயது ஆண்மகன் ஒட்டிப் போன வயிறு, இடுங்கின விழிகள், சுருக்கம் விழுந்த நெற்றி என்ற தோற்றத்தில் இருப்பார். கோமணம் மட்டுமே அணிந்திருப்பார். அவருடைய தோளில் ஒரு பறை தொங்கிக் கொண்டிருக்கும். இடுப்புக் கயிற்றில் பறையை அடிப்பதற்கான குச்சிகள் செருகப்பட்டிருக்கும். அந்த ஆண் மகனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் கிட்டத்தட்ட சம வயது கொண்டவர் நின்று கொண்டிருப்பார். புடவையை மட்டுமே உடுத்தியிருப்பார். ரவிக்கை கிடையாது. தோளில் ஒரு கள்ளு கலயம் இருக்கும். இடுப்பில் ஒரு குழந்தை. வயிற்றில் ஒன்று. காலடியில் இரண்டு மூன்று குழந்தைகள் இருப்பார்கள். இந்த குடும்பத்தினரின் கையில் வயதுக்குத் தகுந்த பிச்சைப் பாத்திரங்கள் இருக்கும். இருண்ட அவர்களுடைய வீட்டில் நான்கு ஜன்னல்கள் இருக்கும்.

தலித் குடும்பத்தினர் மிகவும் சோகமாக முதல் ஜன்னலுக்கு அருகில் போய் நிற்பார்கள். அந்த ஜன்னலில் தெரியும் காட்சி ஏக களேபரமாக இருக்கும். அங்கு ஒரு குடும்பம் யாகம் செய்து கொண்டிருக்கும். நடுநாயகமாக இருப்பவர் பஞ்சகச்சம் அணிந்திருப்பார். தோளில் ஒரு துண்டைப் போர்த்தியிருப்பார். எல்லாம் பட்டில் நெய்தவையே. கைகளில் நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், தங்க காப்பு, காதில் கடுக்கன் அணிந்திருப்பார். வெண் புரி நூல் அணிந்திருப்பார். யாகம் செய்விப்பவர்களும் கிட்டத்தட்ட இது போன்ற தோற்றத்திலேயே இருப்பார்கள். யாகம் செய்பவரின் மனைவி மடிசார் கட்டிக்கொண்டு கையில் வெள்ளி பஞ்ச பாத்திரத்துடன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பார். வெள்ளை உடை அணிந்த ஒன்றிரண்டு பெண்கள் தலையை முக்காடிட்டுக் கொண்டு தூணுக்குப் பின்னால் ஒரு ஓரமாக உட்கார்ந்திருப்பார்கள். குழந்தைகள் குறுக்கும் மறுக்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். ஒரு இளம் பெண் வெள்ளிக் கிண்ணத்தில் சாதமும் பருப்பும் போட்டு அதில் நெய் கலந்து எடுத்துக் கொள்வார். ஓடி விளையாடும் சிறுவர்களுக்கு ஊட்டுவதற்குப் போவார். குழந்தைகளோ இங்குமிங்கும் ஓடி பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும்.

ஜன்னலுக்கு வெளியில் இருந்தபடி தலித் குடும்பத்தினர் கோரஸாக ஐய்யா… அம்மா… என்று குரல் எழுப்புவார்கள். யாகம் செய்பவர் சட்டென்று திரும்பிப் பார்ப்பார். அகத்தின் கோபம் முகத்தில் தெரியும். முறைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நெய்யை எடுத்து யாக குண்டத்தில் விடுவார். தீ கொழுந்துவிட்டு எரியும். சிறிது நேரம் கழித்து மீண்டும் கோரஸ் கேட்கும். இந்தமுறை யாகம் செய்பவர் திரும்பிப் பார்க்காமலேயே முறைப்பார். அவருடைய கண்களில் தீப் பிழம்பின் சுவாலை நாகம் போல் நெளியும். தாடையை இறுக்கி பல்லைக் கடிப்பார். பிறகு, தன் யாகத்தைத் தொடர்வார். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஜன்னலில் குரல் கேட்கும். யாகம் செய்பவருக்குக் கோபம் உச்சிக்கு ஏறும். மூக்கு நுனி சிவக்கும். கண்களை இறுக மூடிக் கொண்டு கோபப் பெருமூச்சுவிடுவார். தூணோரம் உட்கார்ந்திருந்த விதவைப் பெண்களில் ஒருவர் பதறியபடி ஓடி வந்து, போ… போ… என்று தலித் குடும்பத்தை விரட்டி ஜன்னலைச் சாத்துவார்.

கொஞ்சம் போல இருந்த வெளிச்சம் மேலும் கொஞ்சமாகக் குறையும். தலித் குடும்பம் அடுத்ததாக இன்னொரு ஜன்னலுக்குப் போகும். அங்கு ராஜ போகத்துடன் ஒருவர் மஞ்சத்தில் சயனித்திருப்பார். அவரைச் சுற்றிலும் இளம் பெண்கள் கைகளில் திராட்சை ரசக் கிண்ணங்களுடன்  இளகிய ஆடைகளுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பார்கள். சற்று தள்ளி திரைச்சிலை மூடப்பட்ட பகுதிக்கு வெளியே இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தபடி இருப்பார்கள். தலித் குடும்பத்தினர் அந்த ஜன்னலில் நின்றபடி ஏக்கத்துடன் பார்ப்பார்கள். அங்கிருப்பவர்களும் அவர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களின் யாசகக் குரல் அங்கிருப்பவர்ளையும் கோபப்பட வைக்கும். கையில் ஈட்டி வைத்திருக்கும் காவலர்கள் விரைந்து வந்து ஈட்டியின் முனை மழுங்கிய பாகத்தால் ஜன்னல் வழியாக தலித் குடும்பத்தை இடித்து விரட்டி கதவை ஓங்கிச் சாத்துவார்கள்.

தலித் குடும்பம் அடுத்த ஜன்னலுக்கு நகரும். அங்கிருப்பவர்களும் செல்வச் செழிப்பில் திளைப்பவர்களாகவே இருப்பார்கள். தலை வாழை இலைபோட்டு பெரும் பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும். இலையே தெரியாத அளவுக்கு பதார்த்தங்களின் அணி வகுப்பு. பெருத்த வயிறுடன் இடுப்பு வேட்டியை லேசாக நெகிழ்த்திக் கொண்டு வெளுத்துக் கட்டுவார்கள். தலித் குடும்பத்தின் யாசகக் குரல் பந்தியின் களேபரத்துக்கு நடுவே யார் காதிலும் விழாது. சாப்பிட்டு முடித்தவர்கள் தாம்பூலம் தரித்துக் கொண்டு பானை வயிறைத் தடவியபடியே ஜன்னலைக் கடக்கையில் வெளியில் பரிதாபமாக நிற்கும் தலித் குடும்பத்தைப் பார்ப்பார்கள். துளியும் கூசாமல் வெற்றிலைச் சாறை “புளிச்’என்று துப்புவார்கள். தலித் குடும்பத்தின் மீது ரத்த அபிஷேகம் போல் வெற்றிலைத் துப்பல் வழியும். துப்பியவர்கள் எதுவும் நடக்காததுபோல், தங்கள் போக்கில் போவார்கள்.

பசியும், அவமானமும் பிடித்துத் தள்ள தலித் குடும்பம் கடைசி ஜன்னலுக்கு அருகில் போகும். அங்கு இருப்பவர்கள் விவசாய வேலைகளில் மும்மரமாக இருப்பார்கள். கட்டுக் கட்டாக அறுவடை செய்து தலையில் சுமந்து களத்து மேட்டுக்குச் கொண்டு செல்வார்கள். யானையை கட்டி போரடிப்பார்கள். காற்று வீசும் திசையை அவதானித்தபடி பொலி தூற்றுவார்கள். அங்கிருந்து கிளம்பி வரும் நெல் தூசி, தலித் குடும்பத்தினரின் கண்ணில் பட்டு முள்ளாய்க் குத்தும். அந்த ஜன்னலின் கதவும் முகத்துக்கு நேராக ஓங்கி சாத்தப்படவே, தலித் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருண்ட வீட்டின் நடுவில் பெரும் சோகத்துடன் நான்கு ஜன்னல்களையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள்.

பெரும்பாலான நபர்கள் இந்திய சாதி அமைப்பின் கடந்த காலம் குறித்து எடுக்கும் ஆவணப்படம் இப்படியாகத்தான் இருக்கும். கிணற்றடியில் மாடுகளுக்கு நீர் ஊற்றப்படும் கல் தொட்டிக்கு அருகில் பாத்திரம் பண்டங்களுடன் ஓரமாகக் கைகட்டி நிற்பது, மரத்தடியில் உடம்பெல்லாம் சாட்டை விளார்களுடன் துவண்டு கிடப்பது, சாணிப்பாலை வாந்தி எடுத்து அதிலேயே நினைவிழந்து விழுந்து கிடப்பது, எரவானத்தில் செருகியிருக்கும் நெளிந்த பித்தளைத் தட்டை எடுத்துக் கொண்டு, ஆண்டை வீட்டுப் பெண்கள் கொடுக்கும் எஞ்சிய உணவை தொழுவத்தில் குத்த வைத்து சாப்பிடுவது, சாணியைக் கரைத்து அதில் இருக்கும் நெல் மணிகளைக் கழுவி பாத்திரத்தில் போட்டுக் கொள்வது, டீக்கடைகளில் பெஞ்சுகள் காலியாக இருக்க வெளியில் குப்பை மேட்டுக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்து டீ குடிப்பது என்பது போலப் பல காட்சிகளும் இடையிடையே இடம்பெறும்.

ஆனால், இந்தச் சித்திரம் முழுமையானது அல்ல. அந்த வீட்டுக்கு மொத்தம் நான்கு ஜன்னல்கள் என்பது உண்மைதான். ஆனால், அதே வீட்டுக்கு வேறு மூன்று வாசல்களும் உண்டு. கதவே இல்லாத அந்த வாசல்களில் ஒன்றின் வழியே பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் ஒரு கடல் தென்படும். அதில் தோணியைப் பலர் கூடித் தள்ளியபடி இருப்பார்கள். அலையில் படகு மிதக்க ஆரம்பித்ததும் லாகவமாக அவர்கள் அதில் துள்ளி ஏறிக் கொள்வார்கள். அதே கடலில் பாய்மரக் கப்பல்களும் பயணித்துக் கொண்டிருக்கும். கரையில் ஏராளம் மீன்கள் காய வைக்கப்பட்டிருக்கும். இடம் மாற்றி இடம் மாற்றி தவிக்கும் காகங்களுக்கு ஓரிரு கருவாடுகளைப் போட்டபடியே சிலர் மீன்களைக் காவல் காப்பார்கள். சிலர் அறுந்த வலையின் கண்ணிகளை தைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் கடலுக்கு வேலி கிடையாது.

தலித்களின் வீட்டின் இன்னொரு கதவின் வழியே பார்த்தால், பிரமாண்டமாகச் செழித்து வளர்ந்த காடு தென்படும். கேட்பாரற்று விளைந்து கிடக்கும் காய்களும் கனிகளும். வேட்டைக்கான மிருகங்கள் ஏராளம் அங்கிருக்கும். இத்தனைக்கும் தலித்கள் நாய்களைக் கயிற்றிக் கட்டிக் கொண்டு, வில், அம்பு, துப்பாக்கி சகிதம் அவ்வப்போது இந்தக் காட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்திருப்பார்கள். காடு அவர்கள் அனைவரையும் வைத்துப் போஷிக்கும் வளம் பெற்றதாகவே இருக்கும். இந்தக் காட்டுக்குக் கதவுகள் கிடையாது.
மூன்றாவதாக இருந்த வாசலின் வழியே பார்த்தால் செழித்துக் கிடக்கும் நெடிதுயர்ந்த மலை தென்படும். அங்கும் சிலர் வசித்து வருவார்கள். தேன், கிழங்குகள், விலங்குகள் என வேண்டியதைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் சொந்தமில்லாத நிலத்தில் ராஜாக்கள் போல் வசித்து வருவார்கள். பெரு மழைக் காலங்களில் குகைகளுக்கு அவர்கள் பதுங்கிக் கொள்வார்கள். இரவுகளில் வேட்டையில் ஈடுபடுவார்கள். சரிவான மலையிலும் பாத்தி கட்டி, பயிர் வளர்த்து வாழ்ந்துவருவார்கள். இந்த மலைக்கும் கதவுகள் கிடையாது.

தலித்களுக்கு நான்கு ஜன்னல்களில் கிடைத்த அனுபவமாகச் சொல்லப்படுவது உண்மையாக இருந்ததென்றால், மூன்று வாசல் வழியாக எளிதில் என்றோ வெளியேறிப் போயிருப்பார்கள். அப்படிப் போகவில்லை என்பதிலிருந்து அவர்களுடைய வேதனையாக முன்வைக்கப்படுபவையும் பிறருடைய ஒடுக்குமுறையாகச் சொல்லப்படுபவையும் உண்மை அல்ல என்பதுதான் தெரியவருகிறது.

பொதுவாகவே, எந்தவொரு விஷயத்தை அரசியல் உள்நோக்குடன் அணுகுபவர்கள் எல்லாரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போன்றவர்கள்தான். அதன் அடிப்படையில் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்பதை நமது 200 ஆண்டுகால வரலாறு நமக்கு தணிந்த குரலில் அழுத்தமாகச் சொல்லிவருகிறது. கேட்பதற்குத்தான் நாம் தயாராக இல்லை. அதோடு நிறுத்தாமல், பொய்யான ஒரு சித்திரத்தை வரைந்துவைத்துக்கொண்டு அதை மட்டுமே பார்த்தும் வருகிறோம்.

நாம் அடைந்து கிடக்கும் சிறையில் இருந்து நாம் வெளியேறுவது எளிதுதான். ஏனென்றால் சாவி நம் இடுப்பில்தான் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 சூத்திரர்களும் தலித்களும்

220px-Young_Ambedkarமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 22

கடந்த காலத்தில் வயலும் வயல் சார்ந்த பகுதியில் மட்டும்தான் சாதி ஆதிக்கம் மிகுதியாக இருந்திருக்கிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகள், மலையும் மலை சார்ந்த பகுதிகள், காடும் காடு சார்ந்த பகுதிகள் ஆகியவை சாதி அமைப்பின் பிரதான ஆதிக்க சக்திகளான பிராமணர்கள், மன்னர்கள், வைசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விலகி நின்ற பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் சாதி அமைப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தலித்களுக்கு ஒருவகையில் நேச சக்திகளே. நாடோடிகள் என்ற பிரிவினரும் அவர்களுக்கு நண்பர்களே. சாதி அமைப்பு கொடூரமானதாக இருந்திருந்தால் தங்களுடைய விடுதலையை இந்த நேச சக்திகளுடன் இணைந்து தாழ்த்தப்பட்டவர்கள் எளிதில் வென்றெடுத்திருப்பார்கள். புறமண முறை, சமபந்தி போஜனம், வேலைகளைப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளாமல் இருப்பது என பல வழிகளில் தலித்களும் அவர்களுடைய நேச சக்திகளும் கடந்த காலத்தில் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.

கடந்த 200 ஆண்டுகளாக சாதி விடுதலையை முன்னெடுத்து வரும் போராளிகள்கூட மேல் சாதிகளைப் பகைத்துக்கொண்டு சமத்துவச் செயல்பாடுகளை முன்னெடுத்ததற்கு பதிலாக, முதல் கட்டமாக தங்களுக்குக் கீழான அல்லது இணையான மக்களுடன் வலுவான கூட்டமைப்பை உருவாக்கியிருந்தால் அவர்களால் வெகு எளிதில் மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்க முடியும். அது நிச்சயமாக மேல் சாதியினரையும் கொஞ்சம் கலங்க வைத்திருக்கும். எதிரி பலசாலியாக இருந்தால் சமரசத் தீர்வுகளை நோக்கி நகர்வதுதான் மனித இயல்பு. அப்படியான ஒரு கூட்டிணைவு உருவாகவில்லை. இவையெல்லாம் சாதி அமைப்பில் கடந்த காலத்தில் தலித்களுக்கான வாழும் வெளி இருந்திருக்கிறது என்பதையும் மேல் சாதியினருடனான போராட்டமாக முன்னெடுத்த சாதிய விடுதலை முயற்சிகள் பெரும் பின்னடைவையே உருவாக்கியிருக்கிறது என்பதையும்தான் காட்டுகின்றன (அல்லது அதிகம் இழந்து கொஞ்சம் பெற்றிருக்கும் நிலை).

துரதிஷ்டவசமாக அம்பேத்கர், பெரியார் என இந்தியாவில் உருவான இரண்டு பெரும் சாதி எதிர்ப்புப் போராளிகளும் சாதி அமைப்பைப் பற்றிய முழுமையான, சுயமான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. பிரித்தாளுதல் என்ற பிரிட்டிஷாரின் செயல்திட்டத்தைத் தங்கள் புரிதலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்து மதத்தை அழிக்க வேண்டிய ஒன்றாக மட்டுமே பார்த்தார்கள். காலத்துக்கு ஏற்ப சீர்திருத்த வேண்டும் என்றோ முடியும் என்றோ நினைத்திருக்கவே இல்லை. அம்பேத்கர் தமது சாதியினரைத் தனியாகவும் மேல் சாதியினரைச் சாதி இந்து என்றும் மனதுக்குள் தெளிவாகப் பிரித்துவைத்துக் கொண்ட பிறகுதான் சாதி தொடர்பான தனது ஆய்வுகளையே ஆரம்பிக்கிறார்.

ஒரு தலித் ஏன் இந்து அல்ல என்பதற்கு பிராமண மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதது, மாட்டுக்கறி சாப்பிட்டது என வலிந்து பல காரணங்களை உருவாக்குகிறார். தாய்த் தெய்வ வழிபாட்டை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான அம்மன்களை வழிபடுதல், புற்று, மரங்கள் என இயற்கை வழிபாட்டில் ஈடுபடுதல், முன்னோர் நினைவாக வழிபாடுகள் செய்தல் என இந்து சமய வழிபாடுகளின் ஆதார அமசங்களைக் கொண்ட தலித்கள் இந்துக்கள் அல்ல என்று புது கோட்பாட்டை முன்வைக்கிறார். தீண்டப்படாதவர் என்று அவர் இழுத்துக் கட்டி உருவாக்குபவர்களுக்குள்ளும் எத்தனையோ உள் முரண்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் புறமொதுக்கிவிடுகிறார்.

தீண்டாமையை மிகப் பெரிய அடையாளமாக முன்வைக்கிறார். ஆனால், உண்மையில் அந்தத் தீண்டாமை இந்துக்களின் ஒட்டுமொத்த சாதிகளிலும் உப ஜாதிகளிலும் இருந்த ஒன்றுதான். அளவும் வெளிப்படும்விதமும்தான் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்குமே தவிர அது தலித் என்ற பிரிவினர் மீதுமட்டுமே குவிந்த ஒன்று அல்ல. ஒரு விஷயம் ஒரு பிரிவினருக்கு மட்டுமே எதிராக இருக்கும்போதுதான் அதை அவர்கள் மீதான ஒடுக்குமுறையாகச் சொல்லமுடியும். அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் என்றால் அதை வேறு கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.

இந்து என்றால் யார் என்ற கேள்விக்கு மிக எளிய பதில் சாதி உணர்வு உடையவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்பதுதான். இந்த சாதி உணர்வானது மேல் சாதியினர் மட்டுமல்ல. கீழ் சாதியினரிடமும்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களிடம்தான் அதிகமாக இருக்கிறது. உண்மையில் சாதிய மனோபாவம் என்பது பழங்குடி வேர்களில் இருந்து முளைத்து எழுந்த ஒன்று. அந்த வகையில் தலித்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று சொல்லவேண்டும். ஆதி இந்து என்று அவர்களைத்தான் சொல்லமுடியும். அம்பேத்கரோ வெகு எளிதாக அவர்களை இந்து அல்ல என்று பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றும் கருவியாக தன்னை வடிவமைத்துக்கொள்கிறார்.

மனு தர்ம சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்கள்தான் உண்டு. ஐந்தாவதாக எதுவும் இல்லை என்று சொல்வதை விசித்திரமாக விளக்குகிறார். அதாவது, ஐந்தாவது வர்ணத்தாரை மனிதர்களாகவே மதிக்கவில்லை. எனவே, அவர்களை நால் வருணத்துக்குள் இடம்பெற வைக்கவில்லை என்று சொல்கிறார். துவிஜர்களான முதல் மூவர்ணத்தினருக்கு சேவை செய்பவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் சொல்லப்பட்டிருக்கையில் தனியாக ஒரு பிரிவை தனது அரசியல் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறார். இடைநிலை சாதி – கடைநிலை சாதி மோதல் என்பது இயல்பானதல்ல. திராவிட ஆரிய பிரிவினையைப் போல் பொய்யான கோட்பாடாக முதலில் உருவாக்கப்பட்டு அதை நியாயப்படுத்தும் வகையிலான சம்பவங்கள் உருவாக்கி எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆரிய திராவிட பிரிவினை விஷயத்தில் அம்பேத்கர் உண்மைத்தரவுகளை அலசி ஆராய்ந்து ஆரியப் படையெடுப்பு என்பது முற்றிலும் பிழையான வாதம் என்ற முடிவையே அடைந்திருக்கிறார். அந்தவகையில் ஐரோப்பியர் விரித்த அந்த வலையில் அவர் சிக்கவில்லை. ஆனால், சாதி விஷயத்தில் மாட்டிக்கொண்டுவிட்டார். சுருக்கமாகச் சொல்வதானால், சூத்திர தலித் இடைவெளியானது கடந்த 200 ஆண்டுகளில் சமத்துவத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயன்றதால் உருவானது.

உண்மையில், பழங்குடி சமூகத்தின் அடுத்த படியான நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையானது ஆரம்பகட்ட மோதல்களுக்குப் பிறகு ஒரு சுமுகமான நிலையை எட்டிவிட்டிருந்தது. சாதிப் படிநிலை சார்ந்த இந்து பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் என எல்லாம் உருவாகி நிலைபெற்றிருந்தது. படிநிலை அடுக்கில் தனக்கு மேலே இருப்பவர்கள் மீது ஆத்மார்த்தமான விசுவாசமும் மரியாதையும் இருந்துவந்திருந்தது. இந்த அமைப்பில் மேல், கீழ் என இருபிரிவினரும் தமக்கான வெளிகளை உருவாக்கிக் கொண்டு வாழ ஆரம்பித்திருந்தனர். சமத்துவம் இல்லாதபோதிலும் சந்தோஷம் இருக்கத்தான் செய்தது.

எந்தவித அரசியல் சூத்திரங்களுக்கும் பொழிப்புரை எழுதாமல் கிராமப்புற சாதிய வாழ்க்கையை அதன் இயல்புத்தன்மையோடு எழுதியவர்களின் படைப்புகளில் இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். அப்படியாக, பரஸ்பர புரிதலுடன் அந்த வாழ்க்கை பல நூறு ஆண்டுகள் வாழப்பட்டிருக்கிறது. இன்றைய சமத்துவ மதிப்பீடுகளுக்கு உகந்ததாக அது இல்லாமல் இருக்கலாம். அது நம்முடைய பிரச்னைதான்.

தொழில் புரட்சியை ஒட்டி முதலாளித்துவ சமூகம் உருவானது. மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. அதோடு இயற்கையைச் சூறையாடும் திறமை நவீன விஞ்ஞானத்தால் வெகுவாக அதிகரித்துவிட்டதால் புதிய சமூக உருவாக்கம் என்பது அங்கு எந்தவிதப் பெரிய உராய்வும் இல்லாமல் உருவாகிவிட்டது. நூறு ஏக்கர் நிலமும் பத்து அடிமைகளையும் வைத்திருந்த ஒரு வெள்ளை நிலப்பிரபுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தைச் சுரண்ட வழிபிறந்ததால் பத்து அடிமைகளை சுதந்தரமானவர்களாக ஆக்க அவருக்கு எளிதில் முடிந்தது. இதனால், மேற்குலகில் இருந்த வர்க்க ஏற்றத் தாழ்வு காலப்போக்கில் குறைந்தது. “சமத்துவ’ சமுதாயம் மலர்ந்தது. நேர்மாறாக, இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்.

இயற்கை வளங்களோ குறைவு. அதை பயன்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்திறமையும் குறைவு. எனவே, நேற்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சமன்பாடுகளை நவீன முதலாளித்துவ சமுதாயத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டது. “சமத்துவம்’ எளிதில் சாத்தியமாகியிருக்கவில்லை. போதுமான வளங்கள் இல்லாததுதான் பிரச்னையே தவிர மையம் அழிக்கப்பட்ட சாதிய வாழ்க்கை இன்றைய இந்தியப் பின்னடைவுக்குக் காரணமல்ல.

உண்மையில் யார் யாருடைய நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்கள்தான் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். அதுகூட மேலோட்டமானதுதான் என்பது வேறு விஷயம். ஆனால், பிறருக்கு கிடைப்பதை வன்முறை வழியில் தட்டிப் பறிக்க அவர்கள் முயற்சி செய்யாதவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய தேவைகளும் ஆசைகளும் எளிதில் நிறைவேறுகின்றன என்பதால்தான். எனவே, அப்படியான வசதி வாய்ப்புகள் இல்லாத ஒருவர் சமத்துவத்தை ஏற்க மறுக்கும்போது அவரை கொடூரமானவராக முத்திரை குத்துவதற்குப் பதிலாக அவருக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கித் தருவதுதான் தீர்வாக இருக்க முடியும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் கெட்ட குணங்களும் கொண்டவர்கள்தானே.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மேல் சாதியினரின் சம்மதத்துடன் கீழ் சாதியினரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்து சமூகத்தை மறுமலர்ச்சி அடைய வைத்ததாக ஆகியிருக்கும். இந்து சமயம் தன்னை புதுப்பித்துக் கொள்வது அம்பேத்கருக்கும் அவரைப் பின்னின்று இயக்கிய பிரிட்டிஷாருக்கும் நோக்கமாக இருந்திருக்கவில்லை. அம்பேத்கர் வெகு எளிதாக மேல் சாதியினர் அனைவரையும் சாதி இந்து என்ற சிமிழுக்குள் அடைத்துவிடுகிறார். அதாவது பிராமணர்களும் பிராமண மதிப்பீடுகளைக் கொண்ட இடைநிலை சாதியினரும் அனைவருமே தலித்களுக்கு எதிரானவர்கள் என்று அடையாளப்படுத்திவிடுகிறார்.

தமிழகத்தில் பெரியாரோ இன்னொருபடி மேலாகப் போய், பிராமணர்களை மட்டும் தனிமைப்படுத்தினார். விஷயம் மிகவும் எளியது. பெரியார் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பிராமணர்களை மட்டும் எதிரியாகக் கட்டமைத்தார். அம்பேத்கர் தலித் என்பதால் தலித் அல்லாத மேல் சாதியினரை ஒரே சிமிழில் அடைத்தார். ஒருவேளை தலித்துக்குக் கீழான சாதியில் இருந்து வேறொரு போராளித் தலைவர் தோன்றியிருந்தால் அவர் தலித்களையும் சாதி இந்துவாக முத்திரை குத்திவிட்டிருப்பார். இடுப்பைத் தலை அழுத்துவதாகச் சொன்னால், காலை இடுப்பு அழுத்துவதாகவும் ஒருவர் சொல்லலாம்தானே. இன்னும் கூட பாதம், கால் தன்னை மிதிப்பதாகக் கூடச் சொல்லலாம். ஓருடம்பின் உறுப்புகளில் ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு நம் இன்றைய நிலையே நல்ல எடுத்துக்காட்டு.

அம்பேத்கர் தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் என்ற தலைப்பில் ஏராளமாக எழுதியிருக்கிறார். தலித்கள் சாதி இந்துக்களுக்கு சமமாக உயர நினைத்தபோது என்னெவெல்லாம் வழிகளில் அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என பல்வேறு பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களின் அடிப்படையில் தன்னுடைய தரப்பை முன்வைத்திருக்கிறார்.
பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் சமத்துவத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றதால் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் எல்லாமே அம்பேத்கருக்குத் தன்னுடைய கோட்பாட்டை நிறுவிக்கொள்வதற்குக் கிடைத்த சமகால ஆதாரங்களாக ஆகின. உண்மையில் அந்த நிகழ்வுகளில் இருந்து அவர் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. கோட்பாட்டை உருவாக்கி விட்டு அதன் பிறகு ஆதாரங்களைக் கோக்கத் தொடங்கினார்.
தலித்களுக்கும் அவர்களுக்குக் கீழே இருந்த சாதியினருக்கும் இடையிலான சமத்துவத்தை முன்வைத்து ஒரு போராட்டம் கூட அவரால் முன்னெடுக்கப்பட்டிருக்கவிலை. தலித்களின் கோயில்களுக்குள் நாடோடிகளை அனுமதித்ததாகவோ தலித்களில் கீழ் நிலையில் இருப்பவர்களுடன் பிற தலித்கள் சமபந்தி உணவு உண்டதாகவோ எந்த செயல்பாடும் அவரால் பெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேல் சாதியினருடன் வலுக்கட்டாயமாக சமத்துவத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் மேல்சாதியினரை வன்முறையை நோக்கித் தள்ளியதில் மட்டுமே முடிந்திருக்கிறது.
சமத்துவத்தை சட்டத்தின் மூலமாக வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயன்றதற்கு முன்பாக மேல் சாதியினரின் மத்தியில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கத் தேவையான விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை ஓரிரு தலைமுறைகள் வலுவாக முன்னெடுத்திருக்கவேண்டும். எதனால், உங்களை மேலானவர்கள் என்று சொல்கிறீர்கள்? சம வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் தரப்பட்டால் கீழ்சாதி என்று நீங்கள் சொல்பவர்களும் உங்களுக்கு நிகராக, ஏன் உங்களைவிட மேலாக செயல்பட முடிந்தவர்கள்தான். எனவே, வீரமாக, நேர்மையான போட்டிக்குத் தயாராகுங்கள் என்று அவர்களை நிதானமாக ஆற்றுப்படுத்தியிருக்கவேண்டும். உரிமைகளை ஒவ்வொன்றாக, வென்றெடுத்திருக்கவேண்டும்.

சூத்திரர்களில் ஒரு பிரிவினரை அதாவது படிநிலையில் கொஞ்சம் கீழே இருப்பவர்களை இன்னொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்தியதன் மூலம் சாதி உறவுகள் சிக்கலாக்கத்தான் பட்டிருக்கின்றன (ஒருவேளை எதிர்மறை உதாரணங்களை மட்டுமே பார்ப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ).

சாதி விடுதலைப் போராட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ பிரிட்டிஷாரின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றவர்களுக்கு மாற்றாக இன்னொருவரும் செயல்படத்தான் செய்தார். ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் ஆன்மாவாகச் செயல்பட்ட அவருடைய நேசக்கரங்கள் இன்றும் எதிர்க்கரம் இன்றி அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் விஷயத்திலும் அவர் அதையேதான் கடைப்பிடித்தார். இன்றும் இஸ்லாமிய தேசமான பாகிஸ்தானில் முஸ்லீம்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியைவிட பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவில் முஸ்லீம்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிக மிக அதிகமே. ஆனால், இஸ்லாமியர்களின் தலைவரான ஜின்னாவோ அந்த நேசக்கரத்தை எட்டி உதைத்தார்.
தலித்களின் விஷயத்திலும் காந்தி மிதமான போக்கையே முன்வைத்தார். சிறுபான்மையின் நலன் என்பது பெரும்பான்மையுன் புரிதலில்தான் இருக்கிறது என்ற நடைமுறை உண்மை அவருக்குப் புரிந்திருந்தது. மேலும் தவறு செய்தவர்களே பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அவருக்கு இருந்தது. அம்பேத்கரின் அனல் கக்கும் வார்த்தைகளைக் கேட்டு சாதி இந்துக்களுக்கு எதிராகக் களம் இறங்கியவர்களைவிட காந்தியின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு சேரிகளுக்குச் சேவை செய்யப் புறப்பட்டுச் சென்ற மேல் சாதியினரின் எண்ணிக்கை வெகு அதிகம். ஆனால், ஜின்னாவைப் போலவே அம்பேத்கரும் காந்தியின் நல்லெண்ண முயற்சிகளைப் புறங்கையால் தள்ளினார்.

உண்மையில் சாதிய மோதல்கள் இப்படி மோசமானதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அதாவது, தீண்டப்படாதவர்கள் என்றொரு பிரிவு உருவாக்கப்பட்டு அது சார்ந்து ஒரு அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட அதேநேரம், நவீன அரசின் அதிகாரமோ மேல்சாதியினரிடம் தரப்பட்டது. உண்மையில் அதுதான் இந்திய சாதிய வாழ்க்கையின் பெரும் சாபமாக ஆகிவிட்டது. ஒரு பிரிவினரை வீர வசனங்கள் பேசி களத்துக்கு வரவைத்துவிட்டு இன்னொரு பிரிவினரின் கைகளில் ஆயுதத்தைக் கொடுத்த அபத்தம் நடந்தேறியிருக்கிறது.

இன்று நடக்கும் சாதி சார்ந்த வன்முறைகளைப் பார்க்கும் ஒரு அம்பேத் காரியவாதிக்கு கோட்பாட்டளவில் பெரிதாக வருத்தம் எதுவும் இருக்காது. அதாவது தலித்கள் பாதிக்கப்பட்டவர்கள்; சாதி இந்துக்கள் கொடூரமானவர்கள் என்ற அவருடைய ஏற்கெனவே இறுகி இருக்கும் கோட்பாட்டுக்குக் கூடுதல் தரவுகளாக மட்டுமே இந்த நிகழ்வுகள் அமையும். பெரியாரியவாதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இடைநிலை சாதியின் வன்முறையை கள்ள மவுனத்தின் மூலம் கடந்து செல்லவும் மாய எதிரியாக மனுவை முன்னிறுத்தி வெட்ட வெளியில் அம்புகளை எய்யவும் நன்கு பழக்கப்பட்டவர்கள் அவர்கள். எனவே, இன்றைய வன்முறைகளை அவர்களாலும் எளிதில் கடந்துபோய்விட முடியும்.

ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவருக்கு இந்த நிகழ்வுகள் பெரும் வேதனையையே தரும். ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு எதிராக மோதும் அவலம் அது. ஒன்றாக மேய்ந்து கொண்டிருந்த நான்கு எருதுகளை சிங்கம் தனித்தனியாகப் பிரித்துக் கொன்ற கதை நினைவுக்கு வருகிறதா? பெஸ்கி பாதிரியார் குழந்தைகளுக்குச் சொன்ன கதை அல்ல அது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தீண்டலும் தீண்டாமையும்

caste3மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 23

கடந்த கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கடந்தகால மனிதராகவேண்டும். மின்சாரம் இருந்திராத காலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இன்றைய மின்சாரம் உங்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் அனைத்து அனுபவங்களையும் முற்றாகத் துடைத்துவிட்டு வேறொரு நபராக ஆகவேண்டும். இல்லையென்றால், மின்சாரம் இல்லாத காலகட்டத்து மனிதர்கள் நிரந்தரமாக சோக இருளில் மூழ்கிக் கிடந்ததாகத்தான் உங்களுக்குத் தோன்றும். அவர்களோ இரவென்றால் இருட்டாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்லியபடி வாழ்க்கையை அமோகமாக வாழ்ந்துவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து போலியாகப் பரிதாபப்பட்டு, ‘மின்சாரத்தைக் கண்டுபிடிக்கவிடாதவர்கள்’ பற்றிய முழக்கங்களை உருவாக்கிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். உண்மையோ இருளில் இருக்கும் கரிய நிறக் கற்சிலைபோல் மவுனமாக உங்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துக்கொண்டிருக்கும்.

கடந்த காலத்தில் ஒருவருக்கு, குறிப்பாகக் கடைநிலை சாதியினருக்கு மறுக்கப்பட்டவையாகச் சொல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவையாக இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். அல்லது, அவை வேறு வழியில் ஈடுசெய்ய முடிந்தாகவே இருக்கும். உதாரணமாக, பெருந்தெய்வக் கோயிலுக்குள் ஒரு தலித்தை நுழைய அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துக்கொள்வோம். அவருக்கு அவருடைய குலதெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வம்தான் முக்கியம். பெருந்தெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வத்தைத் தொழவிடவில்லை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்னையே அல்ல. உண்மையில் பெருந்தெய்வக் கோயிலுக்கு நான் ஏன் செல்லவேண்டும் என்பதுதான் அவருடைய கேள்வியாக இருந்திருக்கும். அந்தக் கோயிலின் பிரமாண்டத்தில் ஆரம்பித்து அங்கு மேற்கொள்ளப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே அவரைப் பொறுத்தவரையில் தேவையற்றவையே.

அவருடைய தெய்வ நம்பிக்கை என்பது அவருடைய முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கைமாற்றித் தரப்பட்ட ஒன்று. அது அவருடைய அடையாளமாக, பெருமித அம்சமாக இருக்கக்கூடியது. அவர் அவருடைய குல தெய்வத்தை அவருக்கு உகந்த ஒரு நாளில் தொழும் சுதந்தரம் பெற்றவர். சாமியாடி, குறிசொல்லி அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது பூசாரி அங்கு இருப்பார் என்றாலும் அவர் மிகவும் அனுசரணையானவர். ஒரு தலித் தனக்குப் பிடிக்கும் சுருட்டும் சாராயமும் ஆட்டுக்கறியும்தான் தனது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எளிய முறையில் நம்பும்போது அதை அந்த பூசாரி மறுக்கவேமாட்டார். எனவே அந்தக் கோயிலில் இருக்கும் தெய்வத்துடன்தான் ஒரு தலித்துக்கு நெருக்கம் இருக்கும். அவர் தினமும் மூன்று நான்கு தடவை தீபாராதனையும் ஏராளமான அபிஷேகமும் மந்திரங்களும் பூவும் பொட்டும் பொங்கலும் புளியோதரையுமாக இருக்கும் ஒரு பெருந்தெய்வக் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்பதை மிகவும் இயல்பான, நியாயமான விஷயமாகவே பார்த்திருப்பார். அங்கு சமத்துவ மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோல்தான் பல விஷயங்கள் அவர்களால் பார்க்கப்பட்டிருக்கும் (இது நிச்சயமாக என் விருப்பமோ முடிவோ அல்ல. அந்த வாழ்க்கை அவர்களால் பல நூறு ஆண்டுகளாக அமைதியாக வாழப்பட்டிருக்கிறது. எனவே, அதை அவர்கள் என்ன கோணத்தில் எடுத்துக்கொண்டிருப்பார்கள்? வெறும் மேல் சாதியின் அடக்குமுறைமட்டுமே காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்வியின் அடிப்படையில்தான் சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்).

தீண்டாமை மிகவும் கொடூரமான செயல் என்று இன்றைய நவீன மனம் சொல்கிறது. கூடவே, மேல் சாதியினரின் (பிராமணர்களின்) ஒடுக்குமுறையாக அராஜகமாக, சக மனித வெறுப்பாக அது முன்வைக்கப்படுகிறது. ஆனால், அது பல அடுக்குகளைக் கொண்டது. முதலில் தீண்டாமை என்பது தீட்டு என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. கடந்தகாலத்தில் பிராமணர்களின் வீடுகளில் மாத மலர்ச்சி நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதமானது அச்சு அசலாக தீண்டாமைக்கு சமமாகவே இருக்கும். அந்தப் பெண்கள் வீட்டுக்குள் நுழையக்கூடாது. யாரையும் தொடக்கூடாது. நல்ல காரியங்கள் செய்யும் பிறர் கண்ணில் படவே கூடாது. அவர்கள் தொட்ட பொருளை நீர் ஊற்றித்தான் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகு எஞ்சும் உணவுதான் தரப்படும். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு பிறகு வேறு யாராலும் சாப்பிடப்படாது. இந்த இடத்தில் செயல்படுவது அந்தப் பெண்ணின் மீதான வெறுப்பு அல்ல; மாதவிடாய் மீதான ஒவ்வாமையே. இந்தத் தீட்டுதான் தீண்டாமையாக மாறுகிறது. பிராமணர்கள் தவிர பிற சாதியினர் மாத மலர்ச்சி நாட்களில் பெண்களை இந்த அளவுக்கு விலக்கிவைப்பது கிடையாது.

எனவே, பிற சாதியினர் அந்த விஷயத்தில் கறைபடிந்தவர்களாக அதாவது தீட்டானவர்களாகக் கருதப்பட்டனர். அதனால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் விலகி நின்றனர். பிற சாதியினரும் தீண்டாமையை அனுசரித்திருக்கிறார்கள். இங்கெல்லாம் செயல்பட்டது சக மனித வெறுப்பு அல்ல. தீட்டு தொடர்பான மன விலக்கமே. இந்த உணர்வுக்கு பிற சாதியினரின் அங்கீகாரமும் அனுமதியும் இருந்தது. அதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். ஆம்… நாமெல்லாம் சுத்தபத்தமா இருக்கமாட்டோம். எனவே, ஒரு பிராமணர் நம்மிடம் இருந்து விலகி நிற்பது சரியே என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. அந்தவகையில் அது ஒருபோதும் சக மனித வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவான வழிமுறை அல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அளவில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தனர். தீட்டு காலத்தில் பெண்கள் விதை நெல்லைத் தொடக்கூடாது, மங்கல காரியங்களின் முன் நிற்கக்கூடாது என அவர்களும் விலக்கைக் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் பிராமணர்கள் அளவுக்கு தீவிரமாக கடைப்பிடிக்கமுடியவில்லையே என்ற எண்ணம்தான் அவர்கள் மனத்தில் இருந்ததே தவிர விலக்கி வைத்ததை அராஜகமாகப் பார்க்கவே இல்லை.

தீட்டு தொடர்பான ஒவ்வாமை எப்படித் தோன்றியது என்பதைப் பார்ப்பது அவசியம். பெண்களுக்கு இயற்கை தந்த ஒரு விஷயம் அது. தாய்மை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. எந்தவகையிலும் அது இழிவானதாகவோ விலக்கப்படவேண்டியதாகவோ பார்க்கப்படவேண்டிய ஒன்றே அல்ல. ஆணும் பெண்ணும் சமமாக இருந்த ஆதிகாலத்தில் அது இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. பழங்குடி சமயங்களில் பெண்கள் பூசாரியாக இருந்ததைக்கூடப் பார்க்க முடியும். ஆனால், அது பெண்ணுக்கேயான விஷயமாக இருந்ததால் பெண்ணைத் தனக்கு அடுத்தபடியாகக் கீழிறக்க ஆண்களுக்கு அது வழிவகுத்துவிட்டது. உண்மையில் இனப்பெருக்கம், உற்பத்தி ஆகியவற்றோடு தொடர்புடையதால் அது உயர்வாகப் பார்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிப் பார்க்கப்பட்டு பெண் தெய்வமாக ஆக்கப்பட்டதும் நடந்தது. என்றாலும் அன்றாடச் செயல்பாடுகளில் ஆரம்பித்து போர், வேட்டை என்பது போன்ற உடல் வலு அதிகம் தேவைப்பட்ட செயல்கள் வரை இயற்கை தந்த விஷயமானது பெண்ணை மெள்ளப் பின்தங்க வைத்தது. தாய்மை உணர்வுகள் இயல்பாகவும் செயற்கையாகவும் மிகைப்படுத்தப்பட்டு பெண் இரண்டாம்பட்சமாக ஆக்கப்பட்டாள். இந்தக் காலகட்டத்தில்தான் தீட்டு சார்ந்த ஒவ்வாமை ஆரம்பித்திருக்கும்.

இங்கும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு பெண்களின் பரிபூரண சம்மதம் இருந்திருக்கிறது. இன்றும் சபரி மலைக்குப் பெண்கள் போகக்கூடாதா என்ற பெண்ணிய கோஷத்தை பெண்ணியவாதிகள் அல்லாத பெண்களிடம் போய்க் கேட்டால் அவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பகவதி அம்மனில் இருந்து எத்தனையோ தெய்வங்களைத் தொழ அனுமதிக்கப்பட்டிருக்கிறதே… அவர்களை முதலில் தொழுது முடி. அதன் பிறகு ஐய்யப்பனைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லிவிடுவார்கள். சபரிமலைக்கு மாத மலர்ச்சிப் பருவத்தில் இருக்கும் பெண்கள் போகக்கூடாது என்பது எந்தவகையிலும் ஒடுக்குமுறையாகப் பெண்களால் பார்க்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

இப்போது இந்த விஷயத்தின் இன்னொரு கோணத்தைப் பார்க்கலாம். மேல் சாதிக்காரரால் தொடப்படாததனால் கீழ் சாதிக்காரர் எதை இழந்துவிட்டார்… அவரைத் தொடுவதால் பெரிதாக எதை அடைந்துவிடப்போகிறார்? என்னைத் தொடாதே என்று சொல்லும் ஒருவரைப் பார்த்து உன்னைத் தொட்டு எனக்கு என்ன ஆகப்போகிறது என்ற கேள்வியை கேட்க முடியாமல் எது தடுத்திருக்கும்? பிராமண மதிப்பீடுகளையும் தலித் மதிப்பீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பல விஷயங்களில் தலித்கள் மேலானவர்களாக இருப்பது தெரியும். விதவை மறுமணம், பாலியல் சுதந்தரம், மது, மாமிசம் என கேளிக்கைகளில் ஈடுபடுதல் என பல விஷயங்களில் தலித்களின் வாழ்க்கை உயர்வானதே. மறு உலக வாழ்க்கை என்ற கற்பனையின் பெயரில் கைக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை வீணடிக்கவில்லை. இதை அவர்கள் மிகவும் பிரக்ஞைபூர்வமாகவேதான் பின்பற்றியிருக்கிறார்கள். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட ஓர் சமுதாயத்தில் பசுவுக்கும் காளைக்கும் இருக்கும் முக்கியத்துவம் தெரிந்தநிலையில் அதை உணவாகக் கொள்பவர்களுக்கு என்ன சமூக அந்தஸ்து கிடைக்கும் என்பது தெரிந்தேதான் அவர்கள் அதைக் கைக்கொண்டிருக்கிறார்கள். கொன்னாப் பாவம் தின்னாப் போகும்… செரிக்கும் உணவைத் தின்னு என்பது அவர்களுடைய வாழ்க்கைப் பார்வை. அவர்களிடம்போய் மேல் சாதியினர் உங்களை மதிக்கவில்லையே என்று சொன்னால், காரஞ்சாரமாக இருக்கும் மாட்டுக்கறியை வாயில் போட்டு மென்று, இரண்டு மிடறு கள்ளைக் குடித்துவிட்டு, போடா நீயும் உன் …….மரியாதையும் என்றுதான் சொல்லியிருப்பார்.

பார்ப்பானின் கொடூரம் (?) தெரியவேண்டுமானால் பறையனாக இருந்து பார் என்று சொல்வார்கள். பறையரின் சந்தோஷம் தெரியவேண்டுமானாலும் பறையராக இருந்தால்தான் புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மனு ஸ்மிருதியும் கிராமப் பஞ்சாயத்துகளும்

Understanding Manu Smriti Agniveerமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 24

இந்து சாதி சமூகம் ஒரு மரத்தைப் போன்றது. அதில் கடைநிலை சாதிகள் வேர்களைப் போன்றவை. இடைநிலை சாதிகள் தண்டு மற்றும் கிளைகளைப் போன்றவை. மேல் சாதிகள் பூவையும் காயையும் கனியையும் போன்றவை. வேர் உரிஞ்சும் நீரானது தண்டாலும் கிளைகளாலும் உள்வாங்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளுக்குச் சென்று சேர்ந்து பூவாக, பிஞ்சாக, காயாக, கனியாக, விதையாக உருமாறுகின்றன. ஒரு மரத்தின் ஆதார அம்சமான விதையில் பொதியப்பட்டிருக்கும் மரபணுவானது ஒட்டுமொத்த மரத்தின் உருவாக்கமாகவே இருக்கும். இந்து சாதி சமூகத்தில் மேல் சாதியினரால் முன்மொழியப்பட்ட மதிப்பீடுகள் அனைத்துக்கும் ஆதாரமும் அங்கீகாரமும் இடை, கடை நிலை சாதிகளில் இருந்து கிடைத்தவையே. அந்தவகையில் இந்து- சாதி அமைப்பின் நன்மை தீமைக்கான முழுப் பொறுப்பும் மூன்று பிரிவினருக்கும் உண்டு என்பதுதான் உண்மை.

ஒரு அமைப்பில் கடைநிலையில் இருப்பவர்கள் சில தவறுகள் செய்பவர்களாக இருக்கலாம். ஆனால், அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு அடையாளத்தை/அரசை உருவாக்கி வழிநடத்துபவர்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் அந்த அமைப்பு அல்லது அரசு எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் அதன் நிர்வாக வழிமுறை எப்படிப்பட்டது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

சாதி அமைப்பைப் பொறுத்தவரையில் அது மையம் அழிக்கப்பட்ட அமைப்பு. இந்தியாவை எடுத்துக்கொண்டால் பிரிட்டிஷார் வருகைக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துகளே அதிகாரம் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. அதிகபட்சம் அவற்றின் எல்லை என்பது பத்து இருபது கிலோமீட்டருக்குள் முடிந்துவிடும். சேர சோழ பாண்டியர்கள் என தமிழகத்திலும் தென்னிந்திய வட இந்தியாவை ஒருங்கிணைத்தும் பேரரசுகள் இருந்திருக்கின்றன என்றாலும் பெரிதும் கிராம பஞ்சாயத்துகளே செயல் ஊக்கம் மிகுந்த நிர்வாக அலகுகளாக இருந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தமக்கான தனிவிதிகளோடு இயங்கி வந்திருக்கின்றன. இந்து மதம் அவற்றை இணைக்கும் மையச் சரடு என்றாலும் அது பெரிதும் விலகி நின்று வழிகாட்டும் ஓர் அமைப்பாகவே இருந்திருக்கிறது.

கிறிஸ்தவ, இஸ்லாம்போல் இறுக்கமான விதிகள் இங்கு கிடையாது. அவற்றிலெல்லாம், ஒருவர் வாழும் நிலப்பரப்பு எத்தகையதாக இருந்தாலும் உடலும் தலையும் மூடிய கறுப்பு நிற ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு காலத்தில் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் அதுதான் உலகம் முழுவதும் எந்த மறு கேள்வியும் இன்றி அமல்படுத்தப்படும். ஓய்வு நாள் ஜெபக்கூட்டத்தில் இத்தனையாவது மணித்துளியில் இந்த ஸ்தோத்திரம்தான் பாடப்படவேண்டும்… இந்தப் பிரசங்கம் தான் செய்யப்படவேண்டும் என்று மேலிடம் தீர்மானித்து அச்சிட்டுக் கொடுத்துவிட்டால் அதைத்தான் இம்மி பிசகாமல் பின்பற்றியாகவேண்டும்.

இந்து சாதி அமைப்புக்கு அப்படியான எந்தவிதக் கெடுபிடிகளும் கிடையாது. சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் அந்நாட்களில் காவி, அல்லது கறுப்பு வேட்டி சட்டைதான் அணிய வேண்டும் என்று “மேலிடம்’ ஒரு விதியைக் கொண்டுவந்தால், பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கழுத்தில் காவி அல்லது கறுப்பு துண்டு கட்டிக் கொண்டால் போதும் என்று துணை விதியைக் “கீழிடம்’ எழுதிச் சேர்த்துக் கொள்ளும். இப்படியான நெகிழ்வான தன்மையை வேறு எந்த மதத்திலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இது, இந்து மதத்துக்கே உரிய குணம். அதனால்தான் இந்திய முஸ்லீம்களும் இந்திய கிறிஸ்தவர்களும் கூட தர்கா வழிபாடு, பூவும் பொட்டும் அணிந்து கொள்ளுதல் என சிற்சில உடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை இந்துவாக இருந்தவர்கள்தானே . இந்து-சாதி அமைப்பின் இந்த அம்சம்தான் அதை ஓர் சுதந்தர, ஆன்மிக அமைப்பாக வார்த்தெடுத்திருக்கிறது. எனவே, மக்கள் திரள் மீது அதன் தாக்கம் அந்த அளவில்தான் கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்.

கடந்தகால இந்திய வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் ‘அனைத்து தீங்குகளுக்கும் மனுஸ்மிருதிதான் காரணம்’ என்ற பிள்ளையார் சுழியுடன்தான் தங்கள் உரைகளை ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் பிரிட்டிஷார் வந்ததற்குப் பிறகுதான் மனு ஸ்மிருதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் வந்து சேர்ந்திருக்கிறது. பைபிள் மற்றும் சர்ச் நடைமுறைகளுக்கு நன்கு பழகிய அவர்கள் உலகின் பிற பகுதிகளிலும் அப்படியான ஒரு மத நிர்வாக அமைப்பே இருக்கும் என்றுதான் நம்பினார்கள். அதோடு, பிறரைப் பிரித்து அழிக்கும் நோக்கமும் இருந்ததால் மனுஸ்மிருதியை அதற்கேற்ப வடிவமைத்தார்கள். உண்மையில் அதன் வீச்சு அன்றும் இன்றும் என்றும் மிகவும் குறைவானதே.

பெரும்பாலும் இந்திய கிராமங்கள் தத்தமது பஞ்சாயத்து விதிமுறைகளோடுதான் செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் இடை, கடை நிலை சாதிகளால் நிர்வகிக்கப்பட்டவையே. அவர்கள் மனு ஸ்மிருதியைப் படித்தவர்கள் அல்ல. அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் அவர்களுடைய முன்னோர்களின் வழிமுறையை அடியொற்றி வந்தவை. நூறு தோப்புக்கரணம் போடவேண்டும்… விசேஷ நாளில் 108 குடம் நீர் இறைத்துத் தரவேண்டும் என எத்தனையோ தீர்ப்புகள் தரப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டிருக்கின்றன.

சோ.தர்மனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. திருமண விழாவில் பலர் கூடியிருக்கும்போது ஒரு குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி திருடு போய்விடும். யார் எடுத்தார்கள் என்பதை யார் மனமும் புண்படாமல் அந்த ஊர் நாட்டாமை வெகு அழகாகக் கண்டுபிடிப்பார். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சாணி உருண்டை கொடுக்கப்படும். திருடியவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்த சாணி உருண்டைக்குள் சங்கிலியை வைத்துவிடுங்கள் என்று நாட்டாமை எச்சரிக்கை செய்வார். அனைத்து வீட்டுக்காரர்களும் அந்த சாணி உருண்டையை ஊரின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அண்டா ஒன்றில் வந்து போடுவார்கள். அந்த சாணி உருண்டையை கரைத்துப் பார்ப்பார்கள். அடியில் தங்கச் சங்கிலி மின்னிக் கொண்டிருக்கும். சங்கிலியை எடுத்தவர் மனம் மாறி சாணி உருண்டைக்குள் அதை வைத்துவிட்டிருப்பார்.

கிராமப் பஞ்சாயத்துகளில் இப்படியான எத்தனையோ தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும். மனு ஸ்ருதியில் இதற்குச் சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்புக்கும் நடைமுறையில் இருந்த இந்தத் தீர்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனிக்கவேண்டும். அதோடு, பஞ்சாயத்து என்பது முன்பின் தெரியாத நபர்களைக் கொண்டது அல்ல. வாதியும் பிரதிவாதியும் கிராமத்து மக்கள் அனைவருக்கும் நேர் பரிச்சயமாகத் தெரிந்தவராகவே இருப்பார்கள். இன்றைய நீதிமன்றம் போல் முற்றிலும் அந்நியமான நபர்களால் நடத்தப்படுபவை அல்ல. இப்படியான அந்நியத்தன்மை வழக்கை அதன் சாதக பாதகங்களைப் பாரபட்சமின்றி அலசிப் பார்க்க உதவும் என்பது உண்மைதான். ஆனால், நேற்றைய பஞ்சாயத்துகளில் வாதி, பிரதிவாதிகளுடன் நீதிபதிகளுக்கு இருந்த நட்புறவானது தண்டனையை மிதமாக்கவும் செய்திருக்கும்.

அதோடு பெரும்பாலும் தனி நபர் விசாரணைகளாக அவை இருந்திருக்காது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவருடைய சாதியினர் பக்கபலமாக நின்று வாதாடியிருப்பார்கள். நாட்டாமைக்கும் ஆலோசனை சொல்ல ஒரு ஜூரி குழு இருந்திருக்கும். அதேநேரம் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தண்டனைகள்அந்தந்த கிராமத்தின் தனிப்பட்ட தீர்ப்புகளாக இருந்திருக்கின்றனவே தவிர ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதாகச் சொல்லப்படும் மனு ஸ்மிருதியின்படி வழங்கப்பட்டவை அல்ல.

அதோடு மனுஸ்மிருதியானது மேற்கத்தியர்களால் தொகுக்கப்பட்டுத்தான் இன்று நம் கைகளை வந்தடைந்திருக்கின்றன. அது எப்படித் தொகுக்கப்பட்டது… எவையெல்லாம் இடைச்செருகல்கள்… எவையெல்லாம் திரிக்கப்பட்டிருக்கின்றன என்று எந்தவித ஆராய்ச்சியும் செய்யப்பட்டிருக்கவில்லை. அதில் இருப்பவையே உண்மையானவை என்று எடுத்துக்கொள்ளப்பட்டுத்தான் எல்லா அரசியல் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்னும் சொல்லப்போனால், அதில் இல்லாதவைகூட இருப்பதாகச் சொல்லப்பட்டுத்தான் பல அரசியல் பேரியக்கங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

பிரம்மனின் தலையில் இருந்து பிராமணனும் தோளில் இருந்து சத்திரியனும் தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் தோன்றியதாகச் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகம் ஒரு கவித்துவ குறியீட்டு வருணனை. இங்கு சமூகமானது ஒரு மனிதராக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. கால் என்பது மனிதரைத் தாங்கி நிற்கும் ஆதார உறுப்பு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ‘காலில் இருந்து பிறந்தான் என்று சொல்லி இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று மிகவும் தவறான விளக்கம் தரப்பட்டுவிட்டிருக்கிறது. நாவன்மை மிக்கவருக்கு நாவில் சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள் என்று அழகுறச் சொல்வதை, சரஸ்வதி மல ஜலம் கழிப்பது எங்கே என்று கேட்கும் அதி புத்திசாலிகளுக்கு எதைத்தான் சொல்லிப் புரியவைக்க முடியும்?

‘வேதத்தை ஓதும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும்படி மனுஸ்மிருதி சொல்கிறது’ என்பது மிகப் பெரிய ஒடுக்குமுறையாக முன்வைக்கப்படுகிறது. அது இடைச்செருகலா… உண்மையான விதிமுறையா என்பது தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சூத்திரர்களில் யாராவது வேதத்தைச் சொல்லவோ கேட்கவோ முற்பட்டு அதுபோல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சான்றுகளும் இல்லை. அதோடு வேதம் என்பது மிகவும் அடிப்படையான, எல்லாரும் சொல்லியே ஆகவேண்டிய ஒன்றல்ல. அதாவது, அதைக் கற்காமலும் சொல்லாமலும் இருப்பதால் ஒருவர் எதையும் இழப்பதில்லை. தேவையில்லாத ஒன்று மறுக்கப்படுவதில் பெரிய வலி இருக்க வாய்ப்பில்லை.

ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் நீதி போதனை, இலக்கியச் சுவை, பாடல், நடனம், நாடகம், ஓவியம் என அனைத்து வகைகளிலும் அது அனைத்து சாதியினருக்கும் கைக்கு எட்டியதாகவே இருந்திருக்கின்றன. அந்த இரு பெரும் காவியங்களை எழுதியவர்கள் சூத்திரர்களுக்கும் கீழ் நிலை என்று சொல்லப்படும் வேடர் குல, மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டது என்ற எளிய உண்மை சாதி எதிர்ப்புப் போராளிகளின் அனைத்து அவதூறுகளையும் எதிர்த்து நிற்கும் வலிமைகொண்டதாகவே இருக்கிறது.
பெயர்களைப் பொறுத்தவரையில் மனு ஸ்மிருதியில் பிராமணர்களின் பெயர் எப்படி இருக்கவேண்டும், சூத்திரர்களின் பெயர் எப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டிக் குறிப்பு தரப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நேரங்களில் தங்கள் குல தெய்வத்தின் பெயரையும் தாத்தா, பாட்டிகளின் பெயரையும் தான் சூட்டிவந்திருக்கிறார்கள். இழிவைச் சுட்டும் பட்டப்பெயர்களில் பெரும்பாலானவை சொந்த சாதியினரால் சூட்டி அழைக்கப்பட்டவையே.

தலித்துகளின் வீடுகள் தென் திசையைப் பார்த்தபடிதான் இருக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் அமங்கலமான திசை என்று அம்பேத்கர் ஓரிடத்தில் சொல்கிறார். விஷயம் என்னவென்றால், கோயிலை மையமாகக் கொண்ட ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் வீடுகள் இடவலமாக அதாவது வடக்கு, தெற்கு திசையைப் பார்த்தபடிதான் அமைந்திருக்கும்.

பாலியல் விஷயங்கள், மது, மாமிசம் உட்கொள்ளுதல் போன்றவற்றில் மனு ஸ்ருதியோ இன்ன பிற நூல்களோ சொன்ன எதையும் யாரும் பொருட்படுத்தியிருக்கவே இல்லை. அப்படியாக நன்னூல்களின் தாக்கம் என்பது மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.
கடந்த கால சாதிய வாழ்க்கையின் அனைத்து பின்னடைவுகளுக்கும் மனு ஸ்மிருதியும் மேல் சாதியும்தான் காரணம் என்று சொல்வது முழுக்க முழுக்க பிரிட்டிஷாரின் இந்தியாவை இழிவாகப் பார்க்கும் ஒரு பிரிவினரை அடியொற்றி உருவான சிந்தனைப் போக்கே. அந்த பிரிட்டிஷாரின் அராஜகத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால், அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை நம் போராளி வர்க்கமும் சுவீகரித்துக் கொண்டதுதான் பெரிய துரதிஷ்டம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஆணாதிக்கமும் பெண்ணுரிமையும்

8185828679மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 25

‘ஆணாதிக்கக் கருத்துகளும் வர்ண (சாதி) ஆதிக்கக் கருத்துகளும் கொண்டது’ என்பதுதான் மனு ஸ்மிருதி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க மனோபாவமும் சாதி அல்லது வர்க்கம் சார்ந்த ஏற்றத்தாழ்வும் எல்லா சமூகங்களிலும் இயல்பாக இருந்த ஒன்றுதான். பழங்குடி சமூகங்கள் மொழி, தேசம், இனம், மதம் என எந்த அடையாளத்தின் கீழ் அணிவகுத்த போதிலும் இந்த உணர்வுகளே எல்லா சமூகங்களிலும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. இந்து சாதிய வாழ்க்கையைப் பார்த்த மேற்கத்தியர்கள் இங்கு நிலவும் ஆணாதிக்க, சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பிற இடங்களில் நிலவும் அத்தகைய மனோபாவத்தோடு பொருத்திப் பார்த்து ‘மனித இயல்பு இப்படியாகத்தான் இருக்கிறது. நவீன உலகுக்குள் நுழையும்போது இவற்றில் பெரும்பாலானவை காலத்துக்கு ஏற்ப மாறும்’ என்ற புரிதலுடன் அணுகியிருந்தால் இந்து சாதிய வாழ்க்கைபற்றிய அவர்களுடைய மதிப்பீடுகள் வேறாக இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் இந்தியாவில் இருந்து தோன்றிய அரசியல், சமூக சிந்தனையாளர்களாவது இந்து சாதிய வாழ்க்கையை மனித குலத்தின் பிற சமூக வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நியாயமான முடிவை எடுத்திருந்தால் இந்து சாதிய வாழ்க்கை இந்த அளவுக்கு இழிவானதாக அவர்களுக்குத் தோன்றியிருக்காது. ஆனால், துரதிஷ்டவசமாக சாதிய வாழ்க்கை குறித்த அப்படியான ஒரு மதிப்பீடு உருவாகியிருக்கவில்லை.

மேற்கத்தியர்கள் இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க, சாதிய உணர்வுகளை இந்து உயர் வர்க்கத்தினரின் சதியாகக் காட்ட விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு ‘வேத புத்தகம்’ தேவையாக இருந்தது. அப்படியான ஒன்றாக மனு ஸ்மிருதியை உருவாக்கி எடுத்தார்கள். மனு ஸ்மிருதி மூலம் கிடைத்த மத (?) அங்கீகாரமே பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட அனைத்து தீங்குகளுக்கும் தார்மிக வலுவைத் தந்ததாக அவர்கள் புதிய கண்டுபிடிப்பை முன்வைத்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை அவர்கள் பார்த்திருந்ததால், இந்தியாவிலும் அப்படியான ஒரு பெரிய மத அமைப்பு இருந்திருக்கவேண்டும்; அதுதான் இவை அனைத்தையும் செய்திருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினார்கள். அப்படியாக, இந்து மதம் என்று ஒற்றைப்படையான மதத்தையும் மனு ஸ்மிருதியை அதன் மூல நூலாகவும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டார்கள். அதை வழிமொழிந்தபடி நம் தேசத்தில் பலர் முளைத்தெழுந்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் அம்பேத்கர். அவரைப் பொறுத்தவரை இந்திய வரலாறென்பது பெருமளவுக்கு பவுத்த – பிராமணப் போராட்டமே. இஸ்லாமியர்களால் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டதைவிட அதிக அழிவு பவுத்த இந்தியாவுக்கு பிராமணர்களால் வந்தது என்று கூறுகிறார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் பவுத்தம் அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் இருவரையும் பிராமண மதம், மனு ஸ்மிருதியை உருவாக்கிக் கட்டம் கட்டித் தாக்கியதாகச் சொல்கிறார் (மது, மாமிசத்தை அறவே விலக்கச் சொன்ன பவுத்தம் சூத்திரர்களுக்கு எந்த அளவுக்கு உவப்பாக இருந்திருக்கும் என்பதும், துறவை லட்சியமாக வைத்த பவுத்தம் பெண்களுக்கு என்ன விடுதலையைத் த்ந்திருக்கும் என்பதும் அம்பேத்காருக்கு மட்டுமே தெரிந்த உண்மை).

அப்படியாக உலகின் பிற இடங்களில் இயல்பாக இருந்த ஒரு விஷயம் இந்தியாவில் இருந்ததற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவின் சதிதான் காரணம் என்ற புதிய கோட்பாடு வெகு உற்சாகமாக உருவாக்கப்பட்டது. இது உண்மையாக இருந்திருக்குமென்றால், பெண்களும் சூத்திரர்களும் கைகோத்திருந்தால் இருவருமே ‘விடுதலை’ அடைந்திருக்க முடியும். எண்ணிக்கையில் அவர்களே மிகவும் அதிகம். ஆனால், அப்படியான ஒன்று நடக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தம்முடைய நிலையை நம் இன்றைய முற்போக்காளர்கள் சொல்வதுபோல் வேதனை நிறைந்ததாக நினைத்திருக்கவில்லை. சிறையில் இருந்தால்தானே விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.

சொத்துரிமை இல்லை; விரும்பிய வேலையைச் செய்யும் சுதந்தரம் இல்லை; சமையல், குழந்தை பராமரிப்பு என வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்ந்துவிட்டது; விரும்பிய ஆணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை; கணவன் இறந்தால் மறுமணம் செய்துகொள்ள வழியில்லை… என பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பல விஷயங்களை மனு ஸ்மிருதியைக் காரணம் காட்டிப் பட்டியலிடுவார்கள். இவை எந்த அளவுக்கு உண்மை என்பதையும் மனு ஸ்மிருதி எப்படியான தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் பார்ப்போம்.

முதலாவதாக, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான ஒடுக்குமுறைகள் இரு பிறப்பாளர்களுக்கு அதாவது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டவையே. சூத்திரர் பிரிவில் வரும் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்தரமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதாவது, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பவற்றுக்கு உட்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விவாகரத்து, பல புருஷ விவாகம் போன்றவற்றில் ஆரம்பித்து சதி கொடுமையில் ஈடுபடுத்தப்படாததுவரை சூத்திர ஜாதிப் பெண்கள் மேலான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொழில் சார்ந்து வெளியில் செல்வது சகஜமாக இருந்திருக்கிறது. விவசாயத்தில் ஆரம்பித்து சலவைத் தொழில், மண் பாண்டங்கள் செய்தல் எனப் பெரும்பாலான தொழில்களில் சூத்திர ஜாதிப் பெண்கள் ஆணுக்கு சமமாகப் பங்கெடுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுமணம் செய்துவைக்கவில்லை என்பது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது பிராமண ஜாதியில் மட்டுமே அதிகமாக இருந்திருக்கிறது. அவர்களிலும் திருமணம் செய்து கொண்டவர்களில் இளம் வயதில் கணவனை இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து பத்து சதவிகிதம் இருக்கலாம். பிராமணர்களின் எண்ணிக்கையே ஒட்டு மொத்த பெண்களின் விகிதத்தில் மூன்றுக்கு அதிகம் இருக்காது. அந்த மூன்று சதவிகிதத்தில் வெறும் பத்து சதவிகிதம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் விகிதத்தை எடுத்துப் பார்க்கும்போது மிக மிகக் குறைவாகவே இருக்கும். மறுமண மறுப்பு மிகவும் கொடூரமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், புறக்கணிக்கத் தகுந்த அளவிலான பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒன்றாக பூதாகரமாக்கியதில் எந்த நியாயமும் இல்லை.

மேலும், இளம் பெண்ணுடைய கணவன் இறந்துவிடுவதால் ஒரு பிராமணக் குடும்பத்தில் மறுமணமே செய்துவைக்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் சூத்திர ஜாதியைச் சேர்ந்த ஒருவரிடம் நீங்கள் என்னை மணந்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தால் வைதவ்ய சோகத்தில் இருந்து அவர் எளிதில் வெளியேறியிருக்க முடியும். சூத்திரர் குலமும் அடைக்கலம் கேட்டு வந்த பெண்ணைத் தன் தலைக்கு மேல் வைத்து தாங்கியிருக்கும். பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூத்திரரும் தன்னம்பிக்கை அதிகம் பெற்று சுய மரியாதை மிகுந்தவராக வெகு எளிதில் மேல் நிலை அடைந்திருக்க முடியும். பிராமண எதிர்ப்பெல்லாம் சூத்திரர்களின் வலிமைக்கு முன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே, இங்கும் சிறையின் சாவி அடைபட்டுக் கிடந்தவரின் இடுப்பில்தான் இருந்திருக்கிறது.

பெண்களுக்கு இறை வழிபாட்டுச் சடங்குகளில் கணிசமான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. வேதம், காயத்ரி மந்திரம் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பிற வழிபாடு சார்ந்த ஸ்லோகங்கள், பாடல்கள் கற்றுக்கொள்ள பிராமணப் பெண்களுக்கு எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. தாய்த்தெய்வ வழிபாட்டில் முளைப்பாரி எடுப்பதில் ஆரம்பித்து, பால் குடம், தீ மிதித்தல் என அனைத்திலும் பெண்களுக்கு சிறப்பான இடம் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதோடு இல்லறத்தில் இருக்கும் எந்தவொரு ஆணும் தன் மனைவி இல்லாமல் எந்தவொரு சடங்கையும் செய்ய அனுமதி கிடையாது. மனு ஸ்மிருதி பெண்களை எதிலும் ஒதுக்கவில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது திருமணச் செலவுகளோடு, வரதட்சணை, சீர் வரிசை என கணிசமான தொகை பெண்ணுக்குத் தந்து அனுப்பப்படும். அது கணவன் கைக்குத்தான் போகிறது என்றாலும் தந்தையைப் பொறுத்தவரையில் அவர் தன் மகளுக்கு சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து அனுப்பத்தான் செய்கிறார். நகையாகத் தரப்படுவதை அந்தப் பெண்தான் அணிந்துகொள்கிறாள். நிலமாகவோ பணமாகவோ பிற வழிகளில் வந்து சேர்வதையும் அவள் அனுபவிக்கத்தான் செய்கிறாள். எனவே, சொத்தில் உரிமையே இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது.

இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை உரிமைகள் என நவீன உலகைச் சேர்ந்த நாமாக ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்வதைவிட மனித இனம் தனது இயல்பான நகர்வில் எதைக் கண்டடைந்திருக்கிறதோ அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். நடந்து செல்லும்போது வழியில் ஒரு மேடு இருந்தால் அதில் ஏறிக் கடப்பது ஒருவகை. அதைச் சுற்றி வளைந்து செல்வது இன்னொருவகை. இரண்டில் எது சரி என்பது ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த இயல்பு சார்ந்தது. முதலாவதுதான் சரி… இரண்டாவது தவறு என்று சொல்வது எப்போதும் சரியாக இருப்பதில்லை. இயற்கையில் ஒருவித சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக, சில உயிரினங்கள் தாவர உண்ணிகளாகவும் சில மாமிச உண்ணிகளாகவும் இருப்பதுபோல் சமூகச் செயல்பாடுகளில் ஆண்கள் வீட்டுக்கு வெளியிலான வேலைகளையும் பெண்கள் வீட்டுக்குள்ளான வேலைகளையும் பிரித்துக்கொண்டு செய்து வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் எளிதான வேலையே தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் அது அவர்களுக்குக் கிடைத்த வரம்தான்.

அடிப்படையில் சமையல் தொழிலும் ஒருவகையான கலையே. அதிலும் சுவையான உணவின் மூலம் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தரமுடியக்கூடிய சந்தோஷமானது வேறு எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் மன நிறைவுக்கும் பெருமிதத்துக்கும் சற்றும் குறையாததுதான். எனவே, சமையல், குடும்பப் பராமரிப்பு போன்ற பணிகள் பெண் மீது திணிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியானவையே. எந்தவொரு செயலையும் செய்வதா… வேண்டாமா என்று தேர்ந்தெடுப்பதற்கான சுதந்தரம் ஒருவருக்கு இருக்கவேண்டுமென்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், சுதந்தரம் இல்லை என்பதனாலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று நமக்குப் பெரும் சுமையாகிவிடுவதுமில்லை.

நமது உடல் நம்முடைய விருப்பத்தைக் கேட்டுத் தரப்பட்ட ஒன்றல்ல. நம்மில் சிலருக்குச் சிறகுகள் வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு நீரில் மூழ்கி வாழ ஆசை இருக்கலாம். மனித உடலில் கூட உயரமாக இருக்கவேண்டும். அழகாக இருக்கவேண்டும். ஆரிய நிறமாக, திராவிட நிறமாக இருக்கவேண்டும் என்று பல ஆசைகள் இருக்கக்கூடும். ஆனால், மனித உடலானது நம் விருப்பத்தின்படித் தேர்ந்தெடுக்க முடிந்த ஒன்றல்ல. அப்படியிருந்தும் நம்மீது திணிக்கப்படும் உடலை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லையா? இயற்கை நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடத்தைப் பயன்படுத்தி சமூக விதிமுறைகளையும் ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அவருக்கு வேதனை நிரம்பியதாகத்தான் இருந்தாகவேண்டுமா என்ன? இருப்பதை வைத்து வாழத் தெரிந்தவருக்கு இல்லாதது குறித்த ஏக்கம் இருக்காது.
மனு ஸ்மிருதியின் தாக்கம் பற்றிப் பேசும்போது இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பெண் சிசு கொலை என்ற கொடூரச் செயல் நடைபெற்றுவந்திருக்கிறது.

பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே கொன்றுவிடவேண்டுமென்று மனு ஸ்மிருதியில் எந்த இடத்திலும் சொல்லியிருக்கவில்லை. மனு ஸ்மிருதியில் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தியிருப்பதால்தான் தமிழகக் கிராமப்புறங்களில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் ஊற்றியும் நெல் மணியைக் கொடுத்தும் கொன்றதெல்லாம் ஒரு பெண்தான். பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்களிடமிருந்து குழந்தை இல்லாத தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்திருந்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்ந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் சாதியினரில் குறிப்பாக பிராமணர்களில் இது இல்லை என்பதால், பிரிட்டிஷ் மற்றும் அவர்களுடைய தாக்கத்தால் முற்போக்கு வாசகங்களை முழங்கியவர்களுடைய கடைக்கண் பார்வை இந்தத் தீய செயலின் மீது விழவே இல்லை.

பெண் குழந்தையைப் பிறந்த உடன் கொல்லும் ஒரு சமூக வழக்கமும் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஒரு புத்தகமும் நம்முன் இருக்கிறது. பெண்களின் பரிதாபமான நிலைதான் நமது விமர்சனத்தின் அடிப்படைக் காரணம் என்றால், நிச்சயம் பெண் சிசு கொலைதான் அதிதீவிரத்துடன் எதிர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தியப் பொதுபுத்தியில் அது தொடர்பான எந்தவொரு பெரிய சலனத்தையும் பிரிட்டிஷ் காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் நாம் பார்க்கவே முடிவதில்லை. ஆனால், மனு ஸ்மிருதியை எரிக்க இந்தியாவில் எந்த மூலைக்குப் போனாலும் ஒரு ரெடிமேட் கும்பல் தயாராகவே இருக்கிறது. பிராமண ஜாதி தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு செழுமை அடையப் பாடுபடும் முற்போக்காளர்கள் பிற ஜாதியினரை மேம்படுத்துவதிலும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது.

பெண் குழந்தையைப் பிறந்த உடனே கொல்லும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும் ‘திராவிட’ சமூகம், பெண்களைக் கல்வி கற்க விடாமல் தடுக்க மட்டும் ‘ஆரிய’ ஸ்மிருதி ஒன்றின் அங்கீகாரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்குமா? இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி மனு ஸ்மிருதி ஏன் இங்கு அமலாகவில்லை? (மனு ஸ்மிருதியின் விதிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது மிகையாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுபவர்கள் அதைவிடக் கொடிய ஒரு விஷயத்தை கண்டும் காணாததுபோல் தாண்டிச் செல்வதில் இருக்கும் அரசியலை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை இங்கு குறிப்பிடுகிறேன்).

பெண்களை ஆண்கள் நடத்தும் விதத்தைப்பற்றிச் சொல்லும்போது அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அடிமையை நடத்துவதற்கும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கான முடிவுகளைத் தானே எடுப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அடிமையை நடத்தும் விதத்தில் அடிமைக்கு துன்பம் விளைவிக்கும் தன்மையே அதிகமாக இருக்கும். பெண்களை ஆண்கள் நடத்திய விதத்தில் அப்படியான விளைவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். சர்வாதிகாரத்துக்கும் நல்லெண்ண சர்வாதிகாரத்துக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவைத் தானாகவே எடுக்கும் தந்தை தனது அனுபவத்தின் அடிப்படையிலும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் புரிதல் உள்ளவர் என்ற வகையிலும் பொறுப்பின் அடிப்படையிலும்தான் அதைச் செய்கிறார். இங்கே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், தந்தை மூலம் அமைத்துத் தரப்படும் வாழ்க்கையானது அப்படியொன்றும் வாழ முடியாததாக இருப்பதில்லை.

மணமகனின் பொருளாதார நிலையில் ஆரம்பித்து அவனுடைய குண நலன்களை அலசி ஆராய்ந்துதான் திருமணம் செய்துவைக்கிறார். அவருடைய கணிப்புகள் பொய்யாக வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் நல்லெண்ணத்தில்தான் அதைச் செய்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் வரத்தேவையே இல்லை. எனவேதான் கடந்த காலத்தில் பெண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய பெண்ணிய அளவுகோலைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை அளந்து பார்த்தால், அது நரகம்போல் தோன்றக்கூடும். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அது வேறுவிதமாகத்தான் இருந்திருக்கும்.
மேலும், பெண்ணின் சம்மதத்தைக் கேட்காமல் திருமணம் தீர்மானிக்கப்பட்டதைப்போலவே ஆணின் விருப்பத்தையும் நேற்று யாரும் கேட்டிருக்கவில்லை. குடும்பத்தலைவர் தன் குழந்தைகளுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து செய்து தரத் தெரிந்தவர் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் அனைவருக்கும் இருந்தது. எனவே, ”சுதந்தரம்’ என்பது பெண்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டிருக்கவில்லை.

வீட்டு வேலை தவிர பிற வேலைகளைச் செய்ய அனுமதி கிடைத்திருக்கவில்லை என்பது பெரிய குறையே அல்ல. ஏனென்றால் நேற்றைய உலகில் அனைவருமே தமக்கென நிச்சயிக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். இன்றைப்போல் விதவிதமான வேலைகள் இருந்திராத அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்குமே இருந்திருக்கவில்லை. ஒரு உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்துவருவதுபோல் சமூகத்தின் ஒவ்வொரு வேலைகளை ஒவ்வொரு பிரிவினர் செய்துவந்திருக்கிறார்கள். எனவே, வீடு என்பது சிறையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெளியில் இருந்து பாதுகாப்பு தரும் இடமும்கூட. வீட்டுக்குள் செய்துவரும் வேலைகள் உங்களுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தரும்பட்சத்தில் அல்லது உங்கள் மனத்தை வீட்டு வேலைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முடிந்தபட்சத்தில் ஒருவர் தன் வாழ் நாளின் பெரும்பாலான காலத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் கழித்துவிடுவதில் எந்தப் பெரிய வேதனையும் இருந்திருக்க முடியாது.

பெண்ணுரிமை பேசும் அனைவரும் தமது பாட்டிகள் கொள்ளுபாட்டிகளிடம் ஒரு சில மணி நேரங்களைக் கழித்தால் பல உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். அந்த வாழ்க்கையில் அவர்களுக்கான பல சந்தோஷத் தருணங்கள் இருந்திருக்கின்றன. பெண்கள் தமக்கு இருக்கும் இயல்பான வசீகரம், அன்பு, பொறுமை, தியாக குணம், தாய்மை, சில நேரங்களில் பெண்ணாதிக்கம் இவற்றின் மூலம் குடும்பத்தில் பெற முடிந்த மதிப்பும் மரியாதையும் எந்த ஸ்மிருதியாலும் மறுக்கப்படமுடியாததுதான். மகளாக இருந்தபோது தந்தையாலும், மனைவியாக இருந்தபோது கணவராலும், தாயாக இருக்கும்போது மகனாலும் பாதுகாக்கப்படும் ஒரு பெண் சுதந்தரத்தை இழந்திருக்கக்கூடும். ஆனால், சந்தோஷத்தை இழந்ததாக நிச்சயம் சொல்ல முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்த கால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். இதில் தன்னைப் பாதிக்கப்பட்டவராகச் சொல்வதெல்லாம் மிகவும் அதீதமானது. உண்மையில் அந்த வாழ்க்கைக்கு அவர்கள் எளிதில் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே பறந்து திரிவதற்கான இறகுகள் உண்டு என்றாலும் எல்லாப் பறவைகளுமே கூட்டைச் சுற்றிய பகுதிகளுக்குள்ளாகவே தம்முடைய பறத்தலை நிறுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எந்தப் புற நிர்பந்தமும் இருப்பதுமில்லை.

இன்று இந்து/இந்திய சமூகம் பெண்களுக்கு பல தளங்களில் சம வாய்ப்புகளைத் தந்துவருகிறது. பெரிய போராட்டம் எதுவும் தேவைப்படாமலே இன்று பல கதவுகள் எளிதில் அகலத் திறந்திருக்கின்றன. நேற்றைய பெண்களிடமும் அந்த சமத்துவக் கோரிக்கை இருந்திருக்கவில்லை. எனவே, தட்டாத கதவு திறக்கப்படாததில் பெரிய வலி இருந்திருக்க முடியாது. தன்னைவிட வலிமையானவராகத் தான் கருதும் ஒருவருக்கு அடுத்தபடியில் இருக்க சம்மதிப்பது ஒருவர் மிகவும் இயல்பாகச் செய்யும் செயலே. அங்கு மேலே இருப்பவர் மீது மதிப்பும் மரியாதையும் விசுவாசமும் இருந்தாலே போதும். அடக்குமுறை தேவையே இல்லை. சார்ந்திருக்கும் வாழ்க்கையிலும் சந்தோஷம் உண்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 3% நன்னீர்… 97% உவர் நீர்

மறைக்கப்பட்ட இந்தியா/ அத்தியாயம் 26

7325544672_7afdaa2e0e_zபெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் பெரும்பாலானவை தாசிகளுக்கு எதிராகக் குடும்பப் பெண்கள் உருவாக்கிக் கொண்டவையே. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்றைய பெண்ணியவாதிகள் பெண்களின் ஒடுக்குமுறைகளாகச் சொல்லும் விஷயங்களில் பெரும்பாலானவை (உடல் தெரியும்படி ஆடை அணியக்கூடாது, இரவில் தலை வாரிக் கொள்ளக் கூடாது, அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும், வாசலில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்பன போன்றவை) தாசிகளின் வழிமுறைகளாக இருப்பதைப் பார்க்க முடியும். அந்த ’ஒடுக்குமுறைகள்’ எல்லாம் அன்றைய குடும்பப் பெண்கள், தாசிகளுக்கு எதிரான வழிமுறைகளாக விரும்பி ஏற்றுக்கொண்டவையே.

சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது என்று சொல்லப்படுவதை இன்றைய பெண்கள் சுதந்தர மறுப்பாகப் பார்க்கக்கூடும். அன்றைய பெண்கள், “நானென்ன தாசியா… ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரி சிரிக்க’ என்றுதான் கேட்டிருப்பார்கள். பெந்தகோஸ்தே போல் பூவும் பொட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது… வெள்ளை உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கெடுபிடிகளோ உடல் முழுவதையும் கறுப்பு ஆடையால் மூடிக்கொள்ள வேண்டும் என்ற ஒடுக்குமுறையோ நிச்சயம் இருந்திருக்கவில்லை. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் இன்று ஒடுக்குமுறையாகப் பார்க்கப்படுபவற்றில் பல அன்றைய பெண்கள் தங்கள் கழுத்தில் பெருமிதத்துடன் அணிந்துகொண்ட தங்கச் சங்கிலிகளாகவே இருந்திருக்கும், கழுத்தை நெரிப்பவையாக அல்ல.

சூத்திரர்களுடைய வாழ்க்கை தொடர்பாகச் சொல்லப்படும் பெரும்பாலான ஒடுக்குமுறைகளும் இப்படியானவையே. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூத்திரர்களிடம் நிலம் இருந்திருக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுவதுண்டு. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் என்ற இரண்டு பிரிவுகளை உள்ளடக்கிய சூத்திரர்களில் பலரிடம் நிலம் இருந்ததற்குப் பல சரித்திரச் சான்றுகள் இருந்தபோதிலும் அவர்களிடம் நிலம் இல்லை என்பதுதான் பொதுவாக நம்பப்படும் அல்லது நம்ப விரும்பப்படும் உண்மையாக இருக்கிறது. பிரிட்டிஷார் எழுதி வைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய காலகட்டத்தில் பெரும்பாலான அரசர்களாக சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள். மனு ஸ்மிருதியில் சூத்திரர் அரசாளும் நாட்டில் பிராமணர் இருக்கக்கூடாது என்று எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் முழுக்க முழுக்க நேர்மாறாகவே இருந்திருக்கிறது.

DSCN3290உணவு தொடர்பாகச் சொல்லும்போது சூத்திரர்களுக்கு நெல்லுச் சோறு என்பதைப் பெரிதும் விசேஷ நாட்களில் மட்டும்தான் கண்ணால் பார்க்க முடியும் என்று அதைப் பெரிய வறுமையின் அடையாளமாகச் சொல்வார்கள். விஷயம் என்னவென்றால், நன்செய், புன்செய் பயிர் வகைகளில் கம்பு, சோளம், தினை, சாமை முதலான பெரும்பாலான உணவுப் பயிர்கள் எல்லாமே முழுக்க முழுக்க சூத்திரர்களின் உபயோகத்தில் இருந்தவையே. அந்த தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் முடிந்தது. அந்த உணவுகள் சுவையிலும் சத்திலும் நன்செய் பயிர்களைவிட பல மடங்கு உயர்வானவை. இன்றைய மருத்துவ உலகம் அரிசியை மிகவும் அபாயமான உணவாகவே முன்வைக்கிறது. கேப்பை மிகவும் சத்தானது. இன்றைய ஹார்லிக்ஸ், போர்ன்விட்டாவைவிடவும் கேப்பையில் உருவாக்கப்படும் பானங்கள் சத்தானவை என்று இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. பழைய சோற்றில் நொதித்தல் வினை நடப்பதன் மூலம் சூடாகச் சாப்பிடும் உணவை விட அதிக சத்துகள் உருவாவதாக இன்றைய மருத்துவ உலகம் தெரிவித்திருக்கிறது. இன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலங்காரத் தட்டுகளில் பரிமாறப்படும் காளான்கள், நண்டு வகைகள் எல்லாம் தலித்கள் காலகாலமாக இலவசமாக உண்டுவந்தவையே. அசைவ உணவு என்ற பிரிவு முழுக்க முழுக்க சூத்திரர்களின் கோட்டையாகவே இருந்திருக்கிறது.

சூத்திரர்கள் உண்டுவந்த கீரைகளில் இல்லாத சத்துக்களே இல்லை. மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரையில் ஆரம்பித்து அரைக்கீரை, சிறு கீரை வரை ஏராளமான கீரைவகைகள் பெரிதும் சூத்திரர்களின் கைக்கு எட்டியவையாகவே இருந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த பெரிய விவசாய நிலமும் தேவையே இல்லை. வேலியோரங்களிலும் வீட்டைச் சுற்றிய சிறு சிறு இடங்களிலும் வளர்க்க முடிந்தவையே. பூமிக்குக் கீழே விளையும் கிழங்குவகைகள் முழுக்க முழுக்க கடின உழைப்பில் ஈடுபட்டுவந்த சாதியினரின் பயன்பாட்டிலேயே இருந்திருக்கின்றன. பிராமணர்களால் கிழங்குவகைகள் விலக்கப்பட்டதற்கான காரணம் அவற்றைச் செரிக்க கடின உழைப்பு தேவைப்படும் என்பதுதான். அவை முழுக்க முழுக்க சூத்திர்களின் உணவாகவே இருந்திருக்கின்றன.

img_2092cபிராமணர்களின் விஸ்தாரமான உணவு வகைகளைப் பார்க்கும்போது வெறும் செல்வச் செழிப்பை மட்டுமே அது காட்டவில்லை. உடல் உழைப்பு குறைவாக இருந்ததால், உணவு ருசிக்காமல் இருந்திருக்கிறது. எனவேதான் வலுக்கட்டாயமாக உணவை ருசிப்படுத்திக் கொள்வதற்காக எதையெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். உண்மையில் சுவை என்பது ஆறேதான். ஒரு மடப்பள்ளியில் இடுப்பு வேட்டியை நெகிழ்த்திக் கொண்டு இலையின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை பதார்த்தங்களை அடுக்கி வைத்து முழங்கை வரை நக்கியபடி பிராமணர்கள் சாப்பிட்ட சாப்பாடு அவர்களுக்கு என்ன சந்தோஷத்தைத் தந்திருக்குமோ அதே சந்தோஷம் களத்து மேட்டில் மரத்தடியில் துவையலையும் பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் உப்புக் கல்லுடன் கடித்துக் கஞ்சி குடித்த சூத்திரருக்கும் கிடைத்திருக்கும். அதிலும் பிராமணர்கள் போஜனப் பிரியர்கள் என்பது உண்மைதான் என்றாலும் பிராமணர்களின் விருந்துச் சாப்பாடு பற்றி மிகையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. வெறும் இரசத்துடன் உப்பு நார்த்தங்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கழித்த நாட்களே அதிகமாக இருக்கும்.

ஒரு மனிதர் உட்கொள்ளும் உணவைப் பற்றிப் பேசும்போது அதில் எத்தனை சதவிகிதம் சக்தியாக மாறுகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் உண்ணும் உணவில் 80 சதவிகிதத்துக்கு மேல் சக்தியாக மாற்றப்படும். உடல் உழைப்பு குறைந்தவர்களின் உணவானது சுமார் 40-50 சதவிகிதம் மட்டுமே சத்தாக உடலில் சேரும். புத்த பிட்சுகளின் உடலானது ஒரு நேர உணவில் இருந்தே ஒரு நாள் முழுவதும் தாங்கும் சக்தியை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்குமாம். அவரைப் பார்த்து நாளொன்றுக்கு ஒரு நேரம் தான் சாப்பிடுகிறார். ஐய்யோ பாவம் என்று சொன்னால் அதுபோல் பிழை வேறெதுவும் இருக்காது. உடல் உழைப்பில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உணவு போதுமானதாக இருந்ததா என்பதை அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்பதையும் மையமாக வைத்தும் பார்க்க வேண்டும்.

பிராமணர்கள் எத்தனை வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் இன்னும் சொல்லப்போனால் அதை விடக்கூடுதலாகவே சூத்திரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஏழெட்டு குழந்தைகள் பிறந்து அதில் இரண்டு மூன்று இறந்துவிடும் என்பது எல்லா சாதியிலும் நிகழ்ந்த ஒரு விஷயமே.

நன்செய் பயிர்களிலும்கூட சூத்திரர்களுக்கு சொந்தமாக நன்செய் நிலங்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் பலர் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஊடு பயிராகத் தங்களுக்கு தேவையான தானியங்களை விளைவித்திருக்கிறார்கள். நெல் அறுவடையான பிறகு உளுந்து போன்ற தானியங்களைப் பயிரேற்றி, தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எங்களுக்கு நிலமே இல்லை என்ற வாக்கியத்தில் இருக்கும் வேதனைக்கும் இவற்றுக்கும் இடையில் ஏராளமான இடைவெளி உண்டு. விவசாயக் கூலித் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால்கூட அவர்களுக்குக் கிடைக்கும் கூலியானது அடுத்த அறுவடை வரையான வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற்குப் போதுமானதாகவே இருந்தது.

f64d2838-cf3a-455c-985a-644f6b0e74ff_S_secvpfபெரும்பாலான முற்போக்காளர்கள் கடந்த கால விவசாயக் கூலியைப் பற்றிச் சொல்லும்போது ஒரு எஜமானரின் வயலில் பணிபுரிவதால் கிடைக்கும் தொகையை மட்டுமே சொல்லிக்காட்டுவார்கள். உண்மையில் ஐம்பது – நூறு ஏக்கர் நிலத்தைச் சுற்றிய பகுதியில் வசிப்பவர்கள் அனைத்து எஜமானர்களின் வயல்களில் நடக்கும் அறுவடையிலும் பங்கெடுப்பார்கள். அந்த நிலத்தில் விளையும் ஒட்டு மொத்த தானியங்களிலும் குறிப்பிட்ட அளவு கூலியாகக் கிடைக்கும். இது ஒருவகையில் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்வதைப் போன்றது. அதோடு சம்பளத்தை முன் பணமாகப் பெறுவதுபோல் அவ்வபோது தேவைப்படும் தானியங்களைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஆண்டு முழுவதும் உழைத்தாலும் எந்த சம்பளமும் கிடைக்காது என்றுதான் போராளிகள் சொல்லிவருகிறார்கள்.

ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து பேர் வேலை செய்கிறார்கள். பத்து மூட்டை நெல் விளைகிறது என்றால் ஆளுக்கு ஒரு மூட்டை தரவேண்டும் என்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், ஒருவர் ஐந்து மூட்டையைத் தானே எடுத்துக்கொள்கிறார். எஞ்சிய 9 பேருக்கு வெறும் ஐந்து மூட்டை மட்டுமே கிடைக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது அநீதியாகவே தோன்றும். ஆனால், அந்த ஒன்பது பேருக்கு அது போதுமானதாக இருக்குமென்றால் அதில் பெரிய தவறு இல்லை. வேறு பல இடங்களில் பணி செய்து அவர்களுக்கு மேலும் நெல் கிடைக்குமென்றால் அந்த கூலி அமைப்பு மிகவும் நியாயமானதுதான் (கலைஞர் டி.வி. நாளொன்றுக்கு ஒரு கோடி சம்பாதிக்கக்கூடும். ஆனால், பணியாளருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் தருமென்றால் அந்த ஆயிரம் ரூபாயில் அவரால் ஒரு குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்ளமுடியுமென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை அல்லவா).

முழு நேர விவசாயத் தொழிலாளியாக இருக்காத சலவைத் தொழிலாளி, குயவர், சிகை அலங்காரத் தொழிலாளி போன்ற பிற அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த அனைத்து நில உடமையாளர்களிடமிருந்து வருடந்தோறும் போதுமான அளவு நெல்லும் பிற தானியங்களும் கிடைக்கத்தான் செய்தன.

இவை தவிர வேட்டை, மீன் பிடித்தல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஏராளமான வழிகள் இருந்தன. அதிலும் ஓய்வு நேரம் மிகுதியாக இருந்த கடந்த கால வாழ்க்கையில் வேட்டையும் மீன் பிடித்தலும் பிரதான உப தொழில்களாக இருந்திருக்கின்றன. சூரிய ஒளியில் காய வைத்து உணவைப் பதப்படுத்தி வைப்பதில் கடந்த காலத்து மனிதர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். ஓரிடத்தில் நில்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கீதாரிகள் கூட போகுமிடமெல்லாம் இருக்கும் பாறைகளில் மாமிசத் துண்டுகளைக் காய வைத்தும் கிடை போடும் இடங்களுக்கு அருகில் கத்தரி, மிளகாய் போன்ற சிறு சிறு செடிகளை வளர்த்தும் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் விவசாய வேலைகள் மிகவும் ஆற அமரச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இன்றுபோல் வியாபார வழித்தடங்களும் பிற வாகன வசதிகளும் அதிகம் இருந்திருக்கவில்லை. எனவே, ஒரு மாவட்டத்தில் உற்பத்தியாவதில் கணிசமான பங்கு அந்த மாவட்ட மக்களாலேயே பயன்படுத்தப்பட்டன. பணி நேரம் என்பது பெரிதும் அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து பத்து மணியோடு முடிந்துவிடும். பிரிட்டிஷ் ஆட்சியை ஒட்டி ஜமீந்தார்களின் உருவாக்கம் நடைபெற்ற பிறகுதான் பணி நேரம் அதிகரித்தது. அதிலும் தொழிற்சாலைகள் உருவான பிறகுதான் காலை முதல் மாலை வரை வேலை என்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை வெய்யில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டுக்குள் அல்லது மரத்தடிகளில் ஓய்வாக பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தைக் கழிப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் வேலை இருக்காது. பெரிதும் அறுவடைக்காலத்தில் மட்டுமே கடுமையான வேலைகள் இருக்கும். எஞ்சிய நேரங்களில் எல்லாருமே அவரவர்க்குப் பிடித்தமான செயல்களில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அம்பேத்கார் போன்றவர்கள் தலித்களைப் பற்றிச் சொல்லும்போது ஆறு கோடிபேரும் இரவானால் தட்டேந்தியபடி தெருத்தெருவாகப் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும் மாட்டுச் சாணத்தில் செமிக்காமல் இருக்கும் நெல்லைக் கழுவி எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும்தான் சொல்கிறார்கள். நிலங்கள் எல்லாம் மேல் சாதியினரிடம் இருந்ததால் இந்தியாவில் பஞ்சங்கள் ஏற்பட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிட்டிஷாரின் ஏற்றுமதிக் கொள்கைகளினாலும் பணப்பயிர் விவசாயத்தாலும்தான் இந்திய மக்கள் பஞ்சத்தில் இறக்க நேரிட்டது… அதிலும் மக்கள் தாற்காலிகமாக கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து சென்றதைத்தான் இறந்து போனதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்பவர்கள் மிகவும் குறைவே.

கடந்த காலத்தில் இரு பிறப்பாளர்கள், குறிப்பாக, பிராமணர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவும் பிறர் நரகத்தில் வாழ்ந்ததாகவும்தான் பெரும்பாலான அரசியல் ஆசான்கள் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். வேறென்ன… இந்தப் பூவுலகில் 3% தானே நன்னீர். 97% உவர் நீரால்தானே சூழப்பட்டிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 வேள்வித் தீயும் வீட்டை எரிக்கும் தீயும்

imagesமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 27

சாதி எதிர்ப்பை மையமாகக்கொண்டு செயல்பட்ட ஆரம்பகாலத் தலைவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே அதை முன்னெடுத்திருக்கிறார்கள். அம்பேத்கர் போன்று விரிவான ஆய்வுப் பின்புலத்துடன் செயல்பட்டவராகட்டும்… பெரியார் போன்று அது இல்லாமல் செயல்பட்டவராகட்டும்… அதீத உணர்ச்சி என்பதே அடிநாதமாக இருந்திருக்கிறது.

உலகின் பிற பகுதிகளைப் போலவே நிறை குறைகளோடு இருந்த இந்திய சமூகத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி அமலுக்கு வந்ததும் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து, சமூகம் அடுத்தகட்டத்துக்கு அதிக உரசல்கள் இல்லாமல் நகர்ந்துவிடும்; மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கட்டமைப்பது இடைவெளியை அதிகரிக்கவே செய்யும்; இந்திய சமூகத்தின் முழு பரிமாணத்தைப் புரிந்துகொண்டு எடுக்கப்படும் சீர்திருத்த முயற்சிகள் குறைந்தபட்ச போராட்டத்தைத் தொடர்ந்து எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்; ஒரு தாய் உரிய வலிகளைக் கடந்து குழந்தையை சுகமாகப் பிரசவித்துவிடுவதுபோல் இந்திய சமூகமும் தனக்கான நவீன யுகத்தைப் பிறப்பித்துக்கொண்டுவிடும் என்ற தெளிவோ, நம்பிக்கையோ, தொலைநோக்குப் பார்வையோ அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. வயிற்றைக் கிழித்து எடுத்தால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் இன்றைய மருத்துவர்களைப் போலவே அந்த சமூக சீர்திருத்தத் தலைவர்களும் எண்ணினார்கள். அதோடு நிற்காமல் வயிற்றைக் கிழித்துப் பிறக்க வைத்த குழந்தையையும் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயையும் கவனிக்காமல் விட்டுவிடும் அபாயமும் நடந்தேறியிருக்கிறது. அப்படியாக கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றுமே ஒரு சேர முடக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலத்தை மிகையாகப் பழித்தால்தான் நிகழ்காலத்தில் சலுகைகளை அதிகமாகப் பெற முடியும் என்று நினைத்தனரா… வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் இருந்த குற்ற உணர்ச்சி அப்படி மிகைப்படுத்தச் சொன்னதா… அல்லது தவறான தகவல்கள் அல்லது சிந்தனைகளால் அப்படியான முடிவை எடுத்தனரா… தெரியவில்லை. ஒவ்வொரு பிரிவினரும் தம்மை அதிக அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டனர். இந்து சமூகம் ஒரு பொதுச் சமூகமே அல்ல. தனித்தனி சாதிகளின் கலப்படமே என்று சொன்ன அம்பேத்கர், தலித் என்ற சாதியைக் கட்டமைக்க மிகவும் செயற்கையான ஒரு பொது அம்சத்தை உருவாக்கிக் கொண்டார். அப்படியே சாதி இந்துக்கள் என்ற ஒரு பிரிவை வலுக்கட்டாயமாக எதிரியாகக் கட்டமைக்கவும் செய்தார். பார்ப்பனர்கள் உங்களை வைப்பாட்டியின் புத்திரர்களாகச் சொல்கிறார்கள்… சூத்திரர்களே ரத்தம் கொதிக்கவில்லையா… என்பதுதான் தமிழக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் முத்திரை வாக்கியம். அப்படி ஒரு பொய்யான கோஷத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்த விடுதலை இயக்கம் தமிழகத்தின் பெரும் துரதிஷ்டமாக, கொடுங்கனவாக, கரிய நிழலாக இன்றும் பின்தொடர்ந்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பங்கீடு அமலானதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இயல்பாகக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள் எல்லாமே தங்களுடைய எதிர்ப்பரசியலால் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளாகப் பிரசாரம் செய்து மகிழ்ந்துகொள்கிறார்கள்.

பிற மாநிலங்களில் சாதிப் பெயர் பின்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது; தமிழகத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை… இது எங்கள் சாதனை என்பதில் ஆரம்பித்து அதேரகத்தில் ஏராளமானவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அவர்களுடைய கூற்றுகள் உண்மை என்று வைத்துக்கொண்டால், ஐம்பதே ஆண்டுகள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்த பிற்படுத்தப்பட்டவர்கள், சோ கால்டு 2000 ஆண்டு ஆதிக்க சக்திகளைவிட தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்மத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது இந்தப் போராளிகள் சமூகத்தைப் பின்னோக்கித்தான் கொண்டுசென்றிருக்கிறார்கள் என்றே அர்த்தமாகும். இதற்கும் மனு&கோவே காரணம் என சாதிப் போராளிகளிடம் ரெடிமேட் பதில் கைவசம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை நாம் பரிவோடு புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

கீறல் விழுந்த ரெக்கார்டுகளால் ஒரே வரியைத்தானே பாடமுடியும். ஆனால், இன்றைய வன்முறை நிகழ்வுகளைக் குறைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தாகவேண்டும். அதற்குக் கடந்த காலம் பற்றிய சாதியப் போராளிகளின் முன்தீர்மானங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். பிரிட்டிஷ் காலகட்டத்துக்கு முந்தைய இந்தியாவையும் அதற்குப் பிந்தைய இந்தியாவையும் தனித்தனி மதிப்பீடுகள் கொண்டு ஆராய வேண்டும். வெறுப்பின் விதைகளைத் தூவிவிட்டு வன்முறை முளைக்கிறதே என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. காலமெல்லாம் முட்களை விதைத்துவிட்டு நிலத்தைப் பழித்தபடித் திரிவதில் எந்தப் பொருளும் இல்லை. பாரதம் வளமான மண். ஒரு முட் செடியை விதைத்தால் ஒரு முட்காடை விளைவிக்கும். இங்கோ பாத்தி மேல் பாத்தி கட்டி தோட்டம் தோட்டமாக விதைக்கப்பட்டுவருகின்றன முட்செடிகள்.

கடந்த கால இந்திய சமூகம் பெண்களையும் சூத்திரர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தியதாகச் சொல்கிறோமே… அந்தக் கொடுமைகளை அவர்கள் ஏன் சகித்துக் கொண்டார்கள். அல்லது கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படும் உயர் சாதியினர் மீது அவர்கள் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே அது எப்படி என்ற கேள்விகள் போராளிகள் மனதில் எப்போதாவது எழும். உயர்சாதியினரின் சதி, அடக்குமுறை, தந்திரம் என பல ரெடிமேட் பதில்கள் அவர்கள் கைவசம் இருக்கும் என்றாலும் அந்தப் பதில் தவறாக இருக்குமோ என்ற எண்ணம் சில நேரங்களில் லேசாகத் தலைதூக்கும், சுவரில் முளைக்கும் ஆலமரத்தின் விதைபோல. அப்படியே வளரவிட்டால் அது கட்டடத்தையே தகர்த்துவிடும் என்பதால் உடனே அதைக் கிள்ளி எறிந்துவிடுவார்கள். உண்மையில் அந்தக் கேள்வி அப்படி எளிதில் புறக்கணிக்க வேண்டிய ஒன்றல்ல. கடந்த கால மக்கள் தங்கள் வாழ்க்கை மூலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் வரைபடக்குறிப்பு அது. அதைப் பின்பற்றிச் சென்றால் நாம் சென்று சேரும் உலகம் இன்று போராளிகளால் முன்வைக்கப்படும் உலகுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

வேதனை நிறைந்த வாழ்க்கையை 2000 (?!) ஆண்டுகளாக, பெருந்திரளான, உடல் வலிமை மிகுந்த ஒரு சமூகம் ஏன், எதற்காக ஒப்புக்கொண்டு வாழ்ந்தது என்ற கேள்விக்கு சாதியப் போராளிகள் சொல்லும் பதில்: கர்மவினை, விதி, மறு பிறப்பு என பிராமணர்கள் உருவாக்கிய மாயவலையில் மற்றவர்கள் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதுதான். ஆனால், அந்த அம்சங்களை நம்பும் கடந்த கால மனிதரை அழைத்துக்கேட்டால், அவற்றுக்கான வேறு பதில்களைச் சொல்வார். அதை நாம் பொருட்படுத்திக் கேட்பது அவசியம். வேறெதுவும் இல்லையென்றாலும் அவர் நம்பி வாழ்ந்த வாழ்க்கை அல்லவா அது.

விதி, கர்ம வினை, மறு பிறப்பு போன்றவை எப்படி உருவாகின… சமூகத்தில் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்ப்போம். இதற்குக் கொஞ்சம் பின்னால் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்த விலங்கில் இருந்து முன்னங்கால்கள் இரண்டும் கைகளானதும் புதியதொரு உயிரினமாக மனிதன் கிளை பிரிந்துவிடுகிறான். அதைத் தொடர்ந்து அவனுடைய மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. இயற்கை நிகழ்வுகளில் சிலவற்றை வென்றெடுக்கிறான். சிலவற்றுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறான். இவையெல்லாம் விலங்குகளுக்குக் கனவிலும் கைவராதவை.

அந்த மனிதன் இயற்கையின் பல்வேறு புதிர்களுக்கு ”விடை’ காண முற்படுகிறான். இந்த உலகில் வாழும் எந்த உயிரினமும் எங்கிருந்து பிறந்தோம், எங்கே போகிறோம், ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏன் நடக்கின்றன என்பது போன்ற கேள்விகளால் துரத்தப்படுவதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே இந்தக் கேள்விகள் எழுகின்றன. மனித இனத்தின் ஒவ்வொரு பிரிவும் தாம் வாழ்ந்த இடத்துக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப ஒவ்வொரு பதிலைக் கண்டடைந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் இயற்கையின் ஏராளமான நிகழ்வுகள் அன்றைய மனிதருக்கு புரியாததாகவே இருந்திருக்கின்றன. ஏன் மழை பெய்கிறது, ஏன் இரவு வருகிறது என்பதில் ஆரம்பித்து இந்த உலகில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகள் மனித எதிர்பார்ப்புகளுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்திருக்கின்றன. நம்மையும் இந்த உலகில் வாழும் உயிர்களையும் ஒருவன் படைத்திருக்கிறான். அவனுடைய விருப்பத்துக்கு ஏற்பவே எல்லாம் நடக்கின்றன என்பது மனிதனின் ஆதி நம்பிக்கைகளில் முக்கியமானது.

அந்த இறைவன் நல்லவன் என்று நம்பினால்தான் இந்த உலகில் மனித இனத்தால் நிம்மதியாக வாழ முடியும். ஏனென்றால், அப்போது அவன் பரிணாம வளர்ச்சியின் குழந்தை நிலையில் இருக்கிறான். கிட்டத்தட்ட தாயையும் தந்தையையும்போல் அந்த இறைவனை நினைக்கிறான். இதன் நீட்சியாக நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். தீயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறான். இறைவனுக்கு பிரியமானதைச் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும். செய்யத் தவறினால் தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறான். தனக்கு எது பிடிக்குமோ அதுவேதான் தான் வணங்கும் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று ஒரு குழந்தைபோல் நம்புகிறான்.

இதுவரையில் உலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்த இடங்கள் அனைத்திலுமே இந்த சிந்தனைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த இடத்தில் மனித இனம் இன்னொரு பெரிய பிரச்னையை எதிர்கொள்கிறது. நல்லது செய்தவருக்கும் தீங்கு நேர்கிறது. கெடுதல் செய்தவனும் சந்தோஷமாக வாழ்கிறான். ஒரு தவறும் செய்யாத பச்சிளம் குழந்தை இறந்துபோகிறது… சாவு வரவேண்டியவருக்கு வராமல் நீடிக்கிறது… இவற்றை மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இறைவன் கருணை வடிவானவன்… கண்டிப்பு மிகுந்தவன் என்ற முந்தைய கோட்பாடு இங்கு அடிபடுகிறது.

இந்த இடத்தில் உலக நிகழ்வுகளைப் பகுத்தறிந்து வாழ்க்கை என்பது இப்படியாகத்தான் இருக்கும். இறைவன் என்றெல்லாம் ஒருவர் கிடையாது. நல்லது செய்பவருக்கு நன்மையும் நடக்கலாம். கெடுதலும் நடக்கலாம்… கெடுதல் செய்பவருக்கு கெட்டதும் நடக்கலாம். நல்லதும் நடக்கலாம். நட்டு நீரூற்றியவன் தொட்டாலும் முள் குத்தவே செய்யும். வெட்டி எறிந்தவன் எடுத்து முகர்ந்தாலும் மல்லிகை மணம் தரவே செய்யும். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வதே நல்லது என்ற உண்மையின் பிரமாண்ட கதவுகள் மெள்ள இருளில் இருந்து முளைத்து வருகின்றன. அந்தக் கதவுகளைத் திறந்துகொண்டு சென்றால் அவன் வேறொரு புதிய உலகைச் சென்றடைய முடியும். ஆனால், அந்தக் கதவை மனிதன் திறக்கத் தயங்குகிறான். ஏனென்றால், அது கடவுள் இல்லாத உலகம். காலுக்குக் கீழே இருக்கும் பழைய நிலம் சட்டென்று இல்லாமல் ஆகி புதிய உலகுக்குள் பாயவேண்டிய நெருக்கடியை அவன் உணர்கிறான்.

இந்த இடத்தில்தான் மனித மனம் இன்னொரு சிந்தனையை முன்வைக்கிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது பிறப்பிலிருந்து ஆரம்பித்து மரணத்தோடு முடிவதில்லை. அது ஒரு தொடர் சங்கிலி போன்றது. முந்தைய பிறப்பில் செய்த நல்லது கெட்டதற்கு ஏற்ப இந்த பிறப்பு அமைகிறது. இந்தப் பிறப்பில் செய்பவற்றுக்கு ஏற்ப அடுத்த பிறப்பு அமைகிறது. கடவுள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி வைத்து உரியதை உரிய நேரத்தில் தருகிறார் என்று புதிதாக ஒன்றைக் கண்டடைகிறது.

இந்த சிந்தனை மனிதனுக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தருகிறது. கடவுள் யாரையும் வெறுமனே தண்டிக்கவில்லை. யாருக்கும் எந்த சலுகையையும் காரணம் இல்லாமல் வழங்கிவிடவில்லை என்று மனம் தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது. இது அடிபடையில் இரண்டு வகையில் நன்மை தருகிறது. முதலாவதாக இதில் அவன் கடவுளைக் கைவிட வேண்டிய தேவை எழவில்லை. இன்னொன்று இந்த உலக நிகழ்வுகளை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர அது உதவுகிறது.

சூழலை மாற்றி அமைக்க முற்படுவது எவ்வளவு இயல்பான குணமோ அதுபோல் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் இயல்பான இன்னொரு குணமே. அடித்தட்டில் இருந்தவர்கள் தங்கள் நிலையை மாற்றி அமைக்க முயற்சி செய்யாமல் அந்த அமைப்புக்குள் வாழ்தலுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டதற்கும் கர்ம வினைக்கோட்பாட்டுக்குமான தொடர்பு மிகவும் மெல்லியதுதான். தாழ்ந்த சாதிக்காரர், தான் அந்த சாதியில் பிறந்ததைத் தன்னுடைய விதி என்றோ முற்பிறவியில் செய்த தீமையின் பலன் என்றோ மறு பிறப்பில் சொர்க்கம் கிடைப்பதற்கான முன்னேற்பாடு என்றோ நினைத்து முடங்கியிருக்கவில்லை. தன்னுடைய ஜாதி குறித்தும் தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் குறித்தும் பெருமிதம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். உண்மையில் அவர் அந்த வாழ்க்கைக்குள் தனக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். இயற்கை நிகழ்வுகளை மட்டுமே அவர் விதியின் விளைவுகளாக எடுத்துக்கொண்டிருக்கிறார். கர்ம வினைக் கோட்பாடுகளை அங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கருத்தாக்கங்களும் பாவ புண்ணியம் பற்றிய சிந்தனைகளும் வலியவர்களை ஒழுங்குபடுத்தும் பணியைத்தான் அதிகமும் செய்திருக்கின்றன. ஒட்டுமொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று ரத்தவெறியுடன் அலைந்த மதங்கள் கர்மவினைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. கர்மவினைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட மதம் இந்த உலகைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர ஒரு குறுவாளைக்கூட உயர்த்தியிருக்கவில்லை. பாரதம் அசோகனைத்தான் உருவாக்கியிருக்கிறது. செங்கிஸ்கானையோ. நெப்போலியனையோ ஹிட்லரையோ அல்ல.

அரச ஆதிக்க விரிவாக்கம் என்பது போர்களின் மூலமாக அல்லாமல் சாத்விகமான முறையில் நடந்தேற இந்த அம்சமே காரணமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் தோன்றி இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா என ஆசியா முழுவதும் பரவிய புத்தமதம் வாளால் தன் எல்லையை விரிவுபடுத்தியிருக்கவில்லை. ஒவ்வொரு தேசத்தின் தத்துவ அறிவுப்புலங்களில் வாத பிரதிவாதங்கள் நிகழ்த்தியும் அந்தந்த தேசத்து மன்னரைப் புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வைத்தும்தான் அது பரவியது. இத்தகையதோர் அணுகுமுறைக்கு மறு பிறப்பு நம்பிக்கையும் கர்ம வினைக் கோட்பாடும் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது. உலக வரலாறு மிக மெல்லிய குரலில் துரத்துக் கடலோசைபோல் இந்த உண்மையை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கர்மவினை, மறு பிறப்பு போன்றவை இப்படியாகத்தான் செயல்பட்டிருக்கின்றன. இது உச்சியில் குடுமியும் மார்பில் பூணூலும் கொண்ட பிராமணர்கள் பாதாள குகையில் தீப்பந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து தீட்டிய ரகசிய சதித் திட்டம் அல்ல. இந்திய மனித மனம் வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்த்து உருவாக்கிய தர்க்கபூர்வமான உயரிய கோட்பாடு அது. சமண மதத்திலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டவிஷயம்தான். இவ்வளவு ஏன்… வள்ளுவரும் ஊழ் வலியை விடப் பெரியது எது என்றுதான் கேட்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றுதான் சொல்கிறார். இவர்கள் எல்லாரும் சொன்ன ஒரு விஷயம் எப்படித் தவறானதாக இருக்க முடியும்?

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், புலால் உண்ணக்கூடாது… மது அருந்தக் கூடாது… என்று சொல்லும் பிராமணரை விமர்சிப்பார்களாம். ஆனால், அதையே சொல்லும் வள்ளுவரையும் புத்தரையும் கொண்டாடுவார்களாம். பெண்களை ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்கச் சொல்கிறார் என்று மனுவைத் திட்டுவார்களாம். அதையே வள்ளுவர் சொல்லும்போது அவரைப் போற்றுவார்களாம். ஆனால், எளிய மனிதர்கள் நேர்மையானவர்கள். இந்த அசட்டு முற்போக்குத்தனம் அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் மேலே சொன்ன மதிப்பீடுகளை முறையாகப் பின்பற்றிய பிராமணர்களை கடந்த காலத்தில் அனைத்துத் தரப்பினரும் மதித்துப் போற்றிவந்திருக்கிறார்கள். முற்பிறவி, கர்மவினை என்பதை சதித்திட்டத்தின் அங்கமாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையின் வழுக்கல் நிறைந்த பகுதிகளைக் கடக்கப் பயன்பட்ட ஊன்றுகோலாகவே ஒழுக்கமுடையாரின் அந்த வாய்ச்சொற்களைக் கருதி வந்திருக்கிறார்கள்.

jogi women meetingஅகால மரணம், நோய்கள் போன்றவையெல்லாம் ஏழை பணக்காரன், உயர்சாதி, தாழ்ந்த சாதி என்றெல்லாம் பார்த்துவருவதில்லை. மேலோட்டமான வித்தியாசங்கள் நீங்கலாக வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்கள் இரு தரப்புக்கும் பொதுவானவையே. பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் ஒரு தாயிடம் “அந்தக் குழந்தையின் கர்மவினைகள் தீர்ந்துவிட்டன. அதைத் தெய்வம் தன் அருகில் அழைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்ல ஒரு பிராமணன் தேவைப்பட்டான். மருத்துவ அறிவு வளர்ந்திருக்காத காலகட்டத்தில், வாழ்க்கை நிகழ்வுகளை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் வலிமை இல்லாத ஒருவருக்கு அந்த வார்த்தைகள் தந்த மன நிறைவை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

இந்த உயரிய கோட்பாடுகளை லவுகீக ஆதாயங்களுக்காகவும் சமூக அநீதிகளுக்கு ஆதாரமாகவும் பயன்படுத்தும் ஒருவன் கண்டிக்கத் தக்கவனே… வீட்டைக் கொளுத்தும் தீயைக் கட்டாயம் அணைக்க வேண்டும். வேள்வித் தீயைக் கொழுந்துவிட்டு எரியத்தான் செய்ய வேண்டும். ஆனால், திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்ததும் அரோகரான்னு கன்னத்துல போட்டுக்கிறியே… வீடு தீப்பிடிச்சு எரிஞ்சா ஏண்டா லபோ திபோனு கத்தற..? என்பதுதான் நம் தமிழக பகுத்தறிவின் தர்க்க லட்சணம். டாக்டர் ஆப்பரேஷனுக்கு வயித்துல கத்தியை வைக்கும்போது மட்டும் பேசாம இருக்கியே… திருடன் வயித்தைக் கிழிச்சா ஏண்டா கத்தற..? என்று கேட்பது போன்ற அபத்தம் இது. தெய்வ நம்பிக்கை எப்படிப் பலரால் பகுத்தாராயாமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதுபோலவேதான் நாத்திகமும் இங்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தமிழகம் கொடுத்துவரும் விலை கொஞ்சநஞ்சமல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 வர்ணத்துக்குத் திரும்புவோம்

5-Ambedkar Jiமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28

இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம் என்பதே. இந்த சாதி அமைப்புக்கு இந்து மதத்தின் முழு அங்கீகாரம் இருக்கிறது எனவே, சாதி அழிய வேண்டுமானால், இந்து மதம் அழிய வேண்டும் என்பதுதான் இவர்களுடைய இலக்கு. இந்து மதத்தின் பழங்கால நூல்களில் சாதி என்ற வார்த்தையே இல்லை என்பதும் அவை சொல்வதெல்லாம் வர்ண அடிப்படையிலான சமூகக் கட்டுமானம்தான் என்பதும் சொல்லிக் காட்டப்பட்டால், அந்த வர்ணமும் சேர்ந்தே அழிய வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தரப்படவேண்டும்; அதன் மூலம் அவர் பெறும் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவருடைய வேலையும் இடமும் தீர்மானிக்கப்படவேண்டும் என இன்றைய நவீன சமூகம் எதைச் சொல்கிறதோ அதையேதான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைக்கிறது என்றாலும் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் சாதி எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு சமூக நல்லிணக்கமோ மேம்பாடோ அல்ல என்பதையே உறுதிப்படுத்திவருகிறார்கள்.

வர்ணத்துக்கும் சாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல், நால் வகை வருணங்களை நானே சிருஷ்டித்தேன், குணங்கள், கர்மங்களின் அடிப்படையில். இதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆதாரம். இதில் முதல் வாக்கியத்தை மட்டுமே வைத்துக் கொண்டுதான் அனைத்து திரிபு வேலைகளும் நடந்துவருகின்றன. ‘கருணாநிதி ஒரு முட்டாள் என்று சொல்வது தவறு’ என்று ஒரு வாக்கியம் எழுதப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் மூன்று வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டால் எப்படிப் பிழையாக இருக்குமோ அது போன்றதுதான் கீதையில் கிருஷ்ணர் சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலும் கீழும் குதிப்பதும்.

வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொரு மனிதருடைய குணமே அவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக அதை மாற்றியது. வர்ணம் சாதியாக மாறியது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

வர்ணாஸ்ரம தர்மத்தில் முதலில் ஒவ்வொரு மனிதருடைய வர்ணமும் சப்தரிஷிகள், மனு என்ற குழுவினரால் தீர்மானிக்கப்பட்டன. அதாவது, சமூகத்துக்கு எத்தனை சத்ரியர்கள் தேவை, எத்தனை வைசியர்கள் தேவை, எத்தனை பிராமணர்கள் தேவை எத்தனை சூத்திரர்கள் தேவை என்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் நபர்களைப் பிரித்து வகைப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தமக்கு என்ன வர்ணம் தரப்பட்டதோ அதற்குரிய பணியைச் செய்து வந்தார்கள். இன்று ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதுபோல் அன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடந்தது. யார்யாரெல்லாம் தங்கள் வர்ணத்தின் பணியைச் சிறப்பாகச் செய்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதே வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திறமையாகச் செயல்படாதவர்கள் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டனர். ஒரு வர்ணத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்களும்கூட வேறு வர்ணத்துக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டனர். சூத்திரராக இருந்த ஒருவர் பிராமணராகவோ வைசியராகவோ சத்ரியராகவோ ஆக முடிந்தது. பிராமணர்களில் இருந்து சிலர் சூத்திரர்களாக ஆக்கவும் பட்டிருக்கிறார்கள். இப்படி வர்ணங்களை மாற்றிக் கொண்டதற்கு ஏராள உதாரணங்கள் பழங்கால நூல்களில் காணப்படுகின்றன. வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்பநிலை என்பது இதுதான். இப்படிப் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்திருக்கிறது.

இந்த அனுபவங்களில் இருந்து வேறு சில படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வருடம் ஒரு வர்ணத்தில் இருந்தவர் வேறொன்றுக்கு மாற்றப்பட்டதால் அவருடைய சமூகப் பங்களிப்பு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டிருக்கிறது. தனிநபர் என்ற வகையில் அவருக்கும் அது எந்த நலனையும் செய்திருக்கவில்லை. விவசாயத்துறையில் நான்கு வருடம் இருந்த ஒருவர் புரோகிதத்துறைக்கு மாற்றப்பட்டபோது அவரால் புரோகிதத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. விவசாயத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. இதனால், ஒவ்வொருவருடைய வர்ணத்தையும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவதை மறுபரிசீலனை செய்தார்கள்.

இது இன்றைய சூழலில் நமக்கும் நன்கு புரிந்துகொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். பத்திரிகைத் துறையில் நான்கு வருடம் பணி புரிந்த ஒருவரை அதற்கு அடுத்த நான்கு வருடத்துக்கு வங்கித் துறைக்கு மாற்றினால் அவரால் இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாமல் போக வாய்ப்பு உண்டு அல்லவா. கிணற்றுக்குக் குழி வெட்டுவதானால், ஒரே இடத்தில் தொடர்ந்து வெட்டினால்தானே நீர் கிடைக்கும். ஓரிடத்தில் நான்கு அடி இன்னொரு இடத்தில் நான்கு அடி என்று வெட்டினால் நீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு துறையில் நான்கு வருடங்கள் பணி புரிவதால் கிடைக்கும் திறமையும் அனுபவ அறிவும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதானே. புதிய துறைக்கு மாற்றினால் அதைக் கற்றுக் கொள்ள சில மாதங்கள் ஆகும். அதுவரை பல தவறுகள் நடக்கும். தட்டுத்தடுமாறி விஷயங்களைக் கற்றுத்தேர்ந்து வரும் நிலையில் வேறொரு துறைக்கு மாற்றுவது மீண்டும் குழப்பத்தையே தானே கொண்டுவரும். எனவேதான், நான்கு வருடத்துக்கு ஒரு வர்ணம் என்ற முறையை மாற்றி ஒரு ஆயுள் முழுமைக்கும் ஒரு வர்ணம் என்று கொண்டுவந்தார்கள். இன்று 60 வயது வரை ஒரே துறையில் வேலை என்று சொல்கிறோமே அதுபோல். இந்த முறை நல்ல பலனைத் தந்தது. ஒவ்வொருவருடைய அனுபவ அறிவும் முழுவதும் சமூகத்துக்குப் பயன்பட்டது. தனி நபரின் நலனுக்கும் அது பெரிதும் உபயோகமாக இருந்தது. அப்படியாக ஒரு வர்ணம் (வேலை) என்பது ஒரு ஆயுள் முழுமைக்குமாக ஒருவருக்கு வந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தந்தை என்ன வர்ணமோ அதுதான் அவருடைய வாரிசுகளுக்கும் என்று தீர்மானமாகியிருக்கவில்லை. ஒருவர் ஆயுள் முழுவதும் புரோகிதராக இருந்திருக்கலாம். அவருடைய மகன் புரோகிதத்துறைக்கான திறமையோ ஆர்வமோ இல்லாதவராக இருந்தால் அவர் சூத்திரராகவோ வைசியராகவோ ஆக இடம் இருந்தது. ஒரு சூத்திரரின் மகன் சத்திரியராகவோ பிராமணராகவே ஆக முடிந்தது. இந்த அமைப்பு பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இந்த அமைப்பில் இன்னொரு குறை இருந்தது. ஒவ்வொருவருடைய வர்ணம் என்பது சப்த ரிஷிக்கள் என்ற குழுவினரால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. அதாவது, சூத்திர வர்ணத்துக்கான மனோபாவம் கொண்ட ஒருவரை பிராமணராகத் தவறாக தீர்மானித்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்துக்கு முழு வலிமையுடன் பங்களிக்க முடியாமல் போடுவிடும். தனிநபர் என்ற அளவிலும் அவருக்கு அந்தத் தீர்மானம் பெரும் தீங்கையே விளைவித்திருக்கும். இதைக் களைவதற்காக இன்னொரு வழிமுறையை அந்த சமூகத்தினர் கண்டடைந்தனர். அதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு. கல்வியின் அடிப்படையில் வேலைகள் (வர்ணம்) தீர்மானமாக வேண்டும் என்ற இன்றைய அதி நவீன சமூகங்கள் முன்வைக்கும் அதே வழிமுறையைத்தான் அன்று நம் முன்னோர்கள் அதில் அமல்படுத்தினார்கள்.

அதாவது, ஒவ்வொரு மனிதரும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டு 12 வருடங்களுக்கு நான்கு வர்ணங்களிலும் முறையான பயிற்சி பெறவேண்டும். 12 வருட முடிவில் எந்த வர்ணத்தின் குணாம்சங்கள் ஒருவரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவர் அந்த வர்ணத்தினராக வேண்டும். இப்படியான தேர்வு அனைவருக்கும் உகந்ததாகவும் சமூக மேம்பாட்டுக்கு கூடுதல் பலனளிப்பதாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மிகவும் நியாயமானதாக இருந்தது. இதுவே வர்ணாஸ்ரமத்தின் உண்மையான வடிவம்.

காலப்போக்கில் இந்த அமைப்பு வேறு வடிவை அடைய ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான அம்சம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதுதான் வர்ணத்தை சாதியாக மாற்றியது.

ஒவ்வொரு மனிதருடைய ஆளுமையையும் மூன்று விஷயங்கள் பாதிக்கும். முதலாவதாக, ஒருவருடைய மரபணுக்கள். நிறத்தில் ஆரம்பித்து உடல் உயரம், வலு, பருமன் என அனைத்தும் இந்த மரபணுவால்தான் தீர்மானமாகும்.

இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அம்சங்கள். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். மாபெரும் கலைஞர்கள் உருவாவதெல்லாம் இந்தத் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையின் விளைவாகத்தான். இதை திட்டமிட்டு ஒருவரால் உருவாக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இப்படியாக ஒரு மனிதருடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பிறப்பு, வளர்ப்பு, உள்ளார்ந்த திறமை என மூன்று விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

இதில் முதல் இரண்டு அம்சங்களை மீறி வேறொரு வாழ்க்கைப் பார்வையையோ திறமையையோ ஒருவர் பெறுவது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. அது ஒருவகையில் விதி விலக்குதான். சமூகத்தை முன்னகர்த்திச் செல்வது இத்தகைய விதிவிலக்குகள்தான் என்பது உண்மையே. என்றாலும் சமூகங்கள் அமைக்கப்படுவது விதிகளின்படித்தான். விதிவிலக்குகளின் படி அல்ல. மக்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பு, வளர்ப்பு என்ற இரண்டின் செல்வாக்குக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, தனது பெற்றோர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதையே விரும்பி, திறமையாகச் செய்பவர்களாக இருப்பார்கள். வர்ணம் காலப்போக்கில் சாதியாக அதாவது பிறப்பின் அடிப்படையில் வேலைகளையும் அதன் மூலம் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியதற்கு மனிதர்களின் இந்த இரண்டு அம்சங்களே காரணம். அவரையை நட்டால் அவரைதான் முளைக்கும். துவரை முளைக்காது என்பது மிகவும் எளிய, எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். அதன் அடிப்படையில் பிராமணரின் மகன் பிராமணரானதையும் சூத்திரரின் மகன் சூத்திரரானதையும் நம் கடந்த கால சமூகம் மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அம்பேகர், வர்ணம் சாதியாக மாறியதை சதித் திட்டத்தின் அங்கமாகச் சொல்கிறார். அதாவது பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் உயர்வானவை. அந்த வர்ணங்களில் இருந்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் இருந்தன. நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தன. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் அதை விட்டுக்கொடுக்க, குறிப்பாக, சூத்திரர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. எனவே, வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொருவருடைய குணத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானமாவதை அவர்கள் மாற்றி அமைத்தனர். குரு குலப் பயிற்சிக்குப் பிறகு ஒருவருடைய வர்ணம் தீர்மானமாகும் முறையை மாற்றி ஒவ்வொரு குழந்தையின் அப்பாவே தன் வர்ணத்தைக் குழந்தைக்கு கை மாற்றித் தருவதாக ஆக்கினார்கள். இதன்படி பிராமணரின் மகன் குருவிடம் கல்வி கற்று அதன் பிறகு பிராமணராக ஆவதற்குப் பதிலாக பிராமணருக்குப் பிறந்ததன் மூலமே பிராமணராக ஆகிவிட்டார். இதுதான் சூத்திரரை சூத்திரராகவே இருக்கும்படிச் செய்துவிட்டது என்று அவர் சொல்கிறார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பிறப்பதன் மூலமே மகனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக மதிக்கப்பட்டுவிடமுடியுமா என்ற வாதத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து தீர்மானமாவதைக் கேள்விக்குட்படுத்துவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை இங்கு கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பிறப்பின் மூலம் கிடைத்த முன்னுரிமை என்பது ஒரு பள்ளியில் எளிதில் அனுமதி கிடைப்பதற்குச் சமமானது மட்டுமே. அந்தப் பள்ளியில் கடினமாக உழைத்து, ஒழுங்காகப் படித்து முடித்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதலிடம் தரப்பட்டது. ஒரு மன்னரின் குழந்தை உரிய காலத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல், தேரோட்டுதல் போன்றவற்றில் ஆரம்பித்து ராஜாங்க விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டே அரசர் பதவிக்கு வந்து சேர்கிறார். ஒரு பிராமணரின் குழந்தை உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்து, மது மாமிசத்தில் இருந்து விலகி நின்று, பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்ததன் மூலமே சமூக அந்தஸ்தை வென்றெடுக்கிறார். தன் தந்தை பிராமணராக இருந்ததன் மூலம் அவருக்குக் கிடைப்பது ஒரு எளிய முன்னுரிமை மட்டுமே. எஞ்சிய சாதனைகளை அவர் சுயமாகச் செய்துதான் அந்த மரியாதைப் பெறுகிறார். இது எப்படி என்றால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கடினமாக உழைத்து தானும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது.

சாதியப் போராளிகளுக்குப் புரியும்படிச் சொல்வதானால், பெரியாரின் சீடரும் அண்ணாவின் தம்பியும் பகுத்தறிவுப் பகலவனும் தமிழினத் தலைவரும் தலித் சம்பந்தியும் கூடவே கம்யூனிஸ்டுமான திருக்குவளை மு. கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்தின் மூலம் பதவிக்கு பின்வாசல் வழி வந்தவரால் நடத்தப்படும் தொலைக்காட்சியில்  திமுக ரவுடிக்கூட்டத் தலைவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட மதுரையின் கட்டை பஞ்சாயத்து மன்னரான மு.க. அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது போல் அல்ல இது. பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே தந்தை வாடியதுபோல் மிசா காலகட்டத்தில் சிறையில் வாடி, கட்சித் தொண்டனாக இருந்து இளைஞர் அணித் தலைவராகி, எம்.எல்.ஏவாகி., மேயராகி, துணை முதல்வராகி இன்று அடுத்த முதல்வராக ஆவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போலவேதான் அன்றைய பெரும்பாலான மன்னர்களும் வைசியர்களும் பிராமணர்களும் உரிய படிநிலைகளைக் கடந்தே அந்தந்த வர்ணத்தின் தொழிலைச் செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். யாரும் வெறும் பிறப்பை மட்டுமே வைத்து உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துவிடவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் வர்ணத்தின் அடிப்படையிலான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களாக எந்த சூத்திரர் பிரிவை அம்பேத்கர் சொல்கிறாரோ சாதிக் கட்டமைப்பில் அதே சூத்திரர்களை (பிற்பட்ட சாதியினர்) சாதி இந்துவாக கட்டம்கட்டித் தாக்கவும் செய்கிறார். அப்படியானால், அவர்கள் யார்.. நல்லவர்களா… கெட்டவர்களா..? பாதிக்கப்பட்டவர்களா… பாதிப்பை ஏற்படுத்தியவர்களா?

அம்பேதகர் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகப் பட்டியலிடுபவற்றில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலாவதாக, அவர் பட்டியலிடுபவை, ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர் அங்கு சிகிச்சை பெறும் அனைவருடைய நோய்களையும் ஒரே ஒரு நபருக்கு நேர்ந்ததாகச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற வகைக்குள் நில உடமையாளரான தலித், குத்தகைதாரரான தலித், விவசாயக் கூலியான தலித், சிகை அலங்காரம் செய்யும் தலித், ஆடு மாடு மேய்க்கும் தலித், வெட்டியானாக இருக்கும் தலித், மலம் அள்ளும் தலித், துணி வெளுக்கும் தலித் என எத்தனையோ பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் அனுபவங்களும் ஒவ்வொருவிதமானவை. அதிலும்கூட மன்னர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தலித்தின் வாழ்க்கை வேறானது. நிலப்பிரபுக்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் நபர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் சிகை அலங்காரம் செய்பவர்களின் வாழ்க்கை வேறானது. இவர்கள் அனைவருமே கூட சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வரமாட்டார்கள். இங்கு வர்க்கமும் சேர்ந்து செயல்படும்.

இந்த தலித் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவருமே தமக்கான தெய்வ வழிபாட்டுமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்திலும் வித்தியாசமானவர்கள். மேல்சாதியினருடனான இவர்கள் அனைவருடைய பரிமாற்றமும் வேறுபட்டவை. மன்னருக்கு சேவகம் செய்த தலித் பிரிவினர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டு அவர்கள் நில உடமையாளராகவே இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் குத்தகைதாரராக தலித்கள் இருந்திருக்கிறார்கள். அது அரை உடமையாளருக்கு சமமான நிலை. விளைச்சலில் கணிசமான பங்கை குத்தகைதாரர் எடுத்துக்கொள்ள வழி உண்டு. ஊடு பயிராக நடப்படுபவையும் நன் செய் நீங்கலாக நடப்படும் பயிர்களும் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை நில உடமையாளரும் சேர்ந்தேதான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த தலித்கள் பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானவர்கள். அம்பேகர் கண்ணில் இப்படியான ஒருவர்கூட பட்டிருக்கவில்லை.

கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொள்ளவேண்டும்; இடுப்பில் விளக்கமாறைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் தலித்களில் ஐந்து சதவிகித மக்களுக்குக் கூட விதிக்கப்பட்டிருக்காத ஒரு வழிமுறை. துணி வெளுப்பவர்கள் இரவு நேரத்தில் உணவை யாசகம் கேட்டுச் செல்வார்கள். பிற பல தலித்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். மலம் அள்ளுதல் ஒரே ஒரு பிரிவு தலித்கள் மட்டுமே செய்யும் பணி. பிற தலித்கள் யாரும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தச் செயல்களுக்கான காரணங்களையும் இதில் இருந்து தப்ப என்னென்ன வழிகள் இருந்தன என்பதையும் பற்றியெல்லாம் எதுவுமே அம்பேத்கர் சொன்னது கிடையாது. மேலும் தலித்களுக்கு இருந்த சாதகமான விஷயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அனைத்து இழிநிலைகளையும் ஒரே ஒரு தலித் என்ற பிரிவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லும்போது மிகப் பெரிய அநீதி நடந்ததுபோல் தென்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தின் மீது சாதி இந்துக்கள் மீதும் கட்டுக்கடங்காத வெறுப்பையும் கோபத்தையும் அம்பேத்கர் கட்டமைத்துக்கொள்கிறார். இது அடிப்படையிலேயே தவறு.

இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில்  ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே. ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமம் என்பது உண்மைதான். சம வாய்ப்பும் சம வசதிகளும் அனைவருக்கும் தரப்படவேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், பழைய வாழ்க்கை முறையில் அந்த சமத்துவம் குறித்த கருத்துகள் இரு தரப்பிலுமே இருந்திருக்கவில்லை. வர்ணாஸ்ரம காலகட்டத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் சம வாய்ப்பு என்பது புதிய சிந்தனையே. ஆனால், பல நூறு ஆண்டுகளாக சிலரை மேலானவர்களாக மதித்து வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் நாங்கள் உங்களுக்குச் சமமே என்று கோஷங்கள் இடுவது நடைமுறையைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையே. எளிய மக்களைப் பகடைக்காயாகவைத்து நடத்தப்படும் இதுபோன்ற அரசியல் கலகங்கள் ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டவை அல்ல. எதிர் தரப்பில் இருக்கும் மேல் சாதியினரை எதிரிகளாகவே ஆக்கும் குயுக்தி அரசியல்தான் இது.

வர்ணாஸ்ரம/சாதிய கட்டமைப்பைப் பற்றி விமர்சிக்கும்போது அம்பேத்கர் வெகு சாமர்த்தியமாக, கடினமான இழிவான வேலைகளை தலித்கள் செய்ய நேர்ந்தது குறித்து பெரிதாக எதுவும் சொல்லாமல் இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். ஏனென்றால், என்னதான் ஒரு சமூகத்தின் அறிவு வர்க்கத்துக்குத்தான் அனைத்து மக்களின் நலனுக்காக சிந்திக்கும் பொறுப்பு உண்டு என்று சொன்னாலும் கடினமான கேவலமான வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் அதை மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்ற உண்மை அவருக்குத் தெரியும். எனவேதான் அது பற்றி அதிகம் அவர் பேசுவது இல்லை. சாதி அடுக்கில் தலித்கள் மேலேற முற்பட்டபோது சாதி இந்துக்கள் எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையே அவர் தன் வாதங்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்கிறார். தேர்ந்த வக்கீல் அல்லவா..? உண்மையைவிட வாதத் திறமைதானே வெல்லும் என்பது அவருக்குத் தெரியுமே.

இதனால்தான் தலித்களுக்குள்ளும் சாதி வெறி இருக்கிறதே என்ற உண்மையைச் சொல்பவர்களை விஷமிகள் என்று அம்பேத்கர் சொல்கிறார். தன் தரப்பு மக்களிடம் இருக்கும் குறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நடத்தும் பண்பு மனித குலத்துக்கு இயல்பாகக் கைகூடும் ஒன்றாகவோ நீடித்து நிற்கும் ஒன்றாகவோ இல்லை. விழிப்பு உணர்வு பெற்ற ஒரு சிலர்தான் இதை மக்கள் மத்தியில் விதைத்து நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மைகளைப் புரிந்துகொண்டிருப்பார். இந்து சமூகத்தை அதன் மூலம் ஒரு மறுமலர்ச்சிக்கு அவர் கொண்டு சென்றிருக்க முடியும். காந்தி அதைத்தான் செய்தார். ஆனால், அம்பேத்காருக்கோ இந்து தன் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் உத்தரவை தன்னுடைய கண்டுபிடிப்பாகவும் உரிமைப்போராட்டத்தின் முதல் முழக்கமாகவும் வைத்துக்கொண்டு சுய சிந்தனையாளர்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தக் காரணத்தினால்தான் வர்ணாஸ்ரமத்தையும் அவர் அழிய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு வர்ணம் என்பது சாதியைவிடப் பல மடங்கு உயர்ந்தது என்பது தெரியும். அதை அவரே விரிவாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். நவீன உலகம் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது வர்ணாஸ்ரம தர்மமே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. அதாவது, பிரிட்டிஷாருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. தொட்டியில் வாழும் தங்க மீனுக்குக் கடலின் அருமை எப்படித் தெரியும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

காந்தியை கோட்சே கொல்லவில்லை

mahatma-gandhi-origional-wallpaper-1-8மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29

உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடி ஆட்சி அமைத்தபோது பாட்டாளிகளின் மதிப்பீடுகள்தான் புதிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தன (அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சர்வாதிகாரத்தன்மை தனியாகப் பேசப்படவேண்டிய ஒன்று). அடிமை முறைக்கு எதிரான போராட்டமாக நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த அரசு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.

ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒரு விபரீதமான விசித்திரம் நடைபெற்றது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால், அவர்களை விரட்டியடித்துவிட்டு நாமே பிரிட்டிஷாராகிவிட்டோம் (அதுவும் அரைகுறையாக). அதாவது, பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நம்மிடம் இருந்தவர்களில், யார் கூடுதல் பிரிட்டிஷ் அடிமை மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் ஆட்சியை அமைக்கும் பொறுப்பையும் அரசியல் சாசனத்தை எழுதும் பொறுப்பையும் கொடுத்தோம். பிரிடிட்ஷாருக்கு எதிராக எந்த காந்தியின் வழியில் போராடினோமோ அவருடைய மதிப்பீடுகளை முற்றாக ஒதுக்கித் தள்ளினோம். எஜமானர் மாறிவிட்டார். ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், நோயாளிதான் இறந்துவிட்டார்.

சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்று காந்தி ஒரு கனவை முன்வைத்திருந்தார். கிராம ஸ்வராஜ்ஜியம் என்று அவர் அதை எளிய வார்த்தைகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.

“இந்தியாவின் அதிகாரமையமாக டெல்லியோ பம்பாயோ கல்கத்தாவோ இருக்காது. அதிகாரமானது லட்சக்கணக்கான அதன் கிராமங்களிடம் இருக்கும். மக்கள் தன்னர்வத்துடன் ஒன்றுகூடிச் செயல்படுவார்கள். நாஜிக்களின் ஜெர்மனியைப் போலவோ கம்யூனிஸ்ட்டுகளின் ரஷ்யாவைப்போலவோ சர்வாதிகாரத்தால் அந்தக் கூட்டுறவு பெறப்பட்டிருக்காது.

ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்கு. அதாவது ஒவ்வொரு கிராமத்தினரும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த கிராமப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாவட்ட நிர்வாகிகள் மாநிலப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாநிலப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் அனைவருக்குமான தலைமை நிர்வாகியாக இருப்பார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறமை கொண்டதாக இருக்கும். அதேநேரம் தேவையான பிற விஷயங்களில் பிற கிராமங்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். உணவு, உடை ஆகியவற்றைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இருக்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மன மகிழ் நிகழ்வுகளுக்கும் விளையாட்டுக்கும் தேவையான இடங்கள் இருக்கும். அதற்கும் மேலாக நிலம் இருந்தால் அங்கு கஞ்சா, புகையிலை போன்றவை அல்லாமல் பிற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும். கிராமத்தின் சார்பில் ஒரு பொது கலையரங்கம் இருக்கும். பள்ளிக்கூடம் இருக்கும். பொது நலக்கூடம் இருக்கும். சுத்தமான குடிநீர் வசதி இருக்கும். நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் இருக்கும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி தரப்படும். முடிந்தவரை எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவாகச் செய்யப்படும். இன்று தீண்டாமையின் அடிப்படையில் சாதிகள் மேல் கீழ் என படிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுபோல் இருக்காது. அங்கு போராடும் வழி முறை என்பது சத்யாகிரக, ஒத்துழையாமை இயக்க வடிவில் அகிம்சை முறையிலேயே இருக்கும்.’

காந்தியின் இந்த கிராம ராஜ்ஜியம் என்பது அப்படியொன்றும் முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல. காலகாலமாகவே இந்தியாவில் இருந்துவந்த கிராம நிர்வாக வழிமுறைதான். அதில் புதிய அறமாக சாதி சார்ந்த சமத்துவத்தை காந்தி அழுத்தமாக முன்வைத்திருந்தார். குழந்தை ஒன்று இளைஞராவது என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்த கைகளும் கால்களும் பலம் பெற்று வளர்வதுதானே. நேற்றில் கால் ஊன்றி நாளையை எட்டிப் பிடிக்கும் ஒன்றாகத்தானே எந்தவொன்றின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசித்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தியாவின் கடந்த கால வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களிடம்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாதியை இந்தியாவின் சாபமாகப் பார்த்தார்கள். கிராமத்தை அதன் கோட்டையாகப் பார்த்தார்கள்.

மனிதர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. எளிய மக்களின் பல ஆண்டுகால நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவாக உருவானவை. ஆனால், ஆதிக்க சக்திகள் எளிய மக்களின் அந்த நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த அதிகாரத்தை அவர்கள் கைகளில் இருந்து பறிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனென்றால் அந்த மதிப்பீடுகளுக்கு சாதகமான ஒரு பங்களிப்பும் உண்டு.

உதாரணமாக சாதி என்பதை எடுத்துக்கொண்டால், பிற சாதியினரிடம் விலகலை ஏற்படுத்தும் அதே நேரத்தில்  குறிப்பிட்ட சாதியினருக்குள் நட்பையும் ஸ்நேகத்தையும் அது உருவாக்கவும் செய்கிறது.  மனிதன் அடிப்படையில் சுய நலம் மிகுந்த ஒரு விலங்குதான். அப்படிப்பட்டவன் சக மனிதர்களுடன் நட்புறவு கொள்ள குலம், சாதி என்ற மனோபாவம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்தவகையில் சாதிக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு உண்டு. எனவே, சாதி மதிப்பீடுகள் முழுவதுமே தவறு என்று சொல்லி அவற்றின் அடிப்படையில் உருவான அமைப்புகளை அழிக்க முற்படுவது சரியாக இருக்காது. இதனால்தான் எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் பல போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் அவர்களைச் சுரண்டும் சக்திகளுக்கு பெரும் ஆதரவும் கிடைத்துவருகிறது.

ஒரு மனிதன் தன் கைகளால் கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கைகள் இருக்கும்வரை மனிதர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள். எனவே, அந்தக் கைகளை வெட்டி எறிய வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது சாதி இருக்கும்வரை ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் இருக்கும் என்று சொல்வது. உண்மையில் கைகளைக் கொண்டு ஒருவன் கொலை செய்யாமல் தடுக்க என்ன வழி உண்டோ, நல்ல செயல்களைச் செய்யவைக்க என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும். அந்தவகையில் சாதி, மதம், தெய்வ நம்பிக்கை போன்ற அமைப்புகளை அவற்றின் தீய அம்சங்களை அகற்றிச் சீர்திருத்தத்தான் ஒருவர் முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் அடிப்படையில் அவை ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. மனிதர்களின் அதி இயல்பானவை.

காந்திக்கு இந்தப் புரிதல் இருந்தது. எனவேதான் சாதி சார்ந்த கெட்ட குணங்களை விட்டொழித்துவிட்டு சேரிகளுக்குச் சென்று பிராயச்சித்தம் செய்யுங்கள் என்று ஆக்கபூர்வமாகத்தான் அறைகூவல்விடுத்தார். அம்பேத்காரியவாதிகள், பெரியாரியர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் சாதி மீது வெறுப்புடன் விமர்சனம் வைத்தனரேதவிர தமக்குக் கீழான சாதியினர் மீதான அடக்குமுறையை அப்படி ஒன்றும் விட்டொழித்திருக்கவில்லை. முதலில் பிராமண-பனியாவை ஒழிப்போம். அதன் பிறகு நம் பிரச்னையைப் பார்ப்போம் என்றுதான் சிந்தித்தார்கள். அது எவ்வளவு பிழையான சிந்தனை என்பதை காலம் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த சாதி வெறியை விட்டொழிக்கச் சொன்ன காந்தியின் அணுகுமுறை துலக்கம் பெறுகிறது. காந்தியின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மேல் சாதியினர் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதியினருக்கு சேவை செய்ய முன்வந்ததன் மூலம் சாதி வெறியை விட்டொழிப்பது எளிதுதான் என்பதையே உணரவைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் வெளிப்படையாக அதைச் சொல்லும் தைரியமும் உள்ளவர்களைத் தலைவர்களாகப் பெறும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றத்தின் பாதையில் செல்லமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவுக்கு அப்படியான கொடுப்பினை இருந்திருக்கவில்லை. அடிமை இந்தியாவை விழித்தெழ வைக்க ஒரு காந்தி இருந்தார். ஆனால், சுதந்தர இந்தியாவை வழி நடத்த நேருவும் அம்பேத்கரும்தான் நமக்குக் கிடைத்தார்கள்.

சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு முன்வைத்த அரசியல் சாசன முன்வரைவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிராமம் என்ற ஒற்றை வார்த்தைகூட இருந்திருக்கவில்லை (கிராம அலகுகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெயரளவில் சேர்க்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது).

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் நவ சிற்பிகளில் முதன்மையானவர்களாக இருந்த நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இந்திய கிராமம் பற்றி பிரிட்டிஷாரைவிடப் பெரிய வெறுப்பே இருந்தது. அவர்கள் பிறப்பால் நிறத்தால் இந்தியர்களாக இருந்தார்கள். சிந்தையாலும் செயலாலும் பிரிட்டிஷரின் தாசர்களாக, சொன்னதைச் செய்துமுடிக்கும் குமஸ்தாவர்க்கத்தின் தலைமைப் பணியாளர்களாக இருந்தனர்.

நேரு கிராமங்களை அறிவுபூர்வமாகவும் கலாசாரபூர்வமாகவும் பின்தங்கிய இடமாகக் கருதினார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் குறுகிய ம்னோபாவம் கொண்டவர்கள். எனவே, உண்மையற்றவர்களாகவும் வன்முறையாளர்களாகத்தான் இருப்பர்கள் என்று கருதினார். கிராமங்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கும் தைரியத்தில் இந்த அபாரமான கண்டுபிடிப்பை வெளிப்படையாக, தைரியமாக, கூச்சமில்லாமல் முன்வைத்தார். இயற்கை வளங்கள் அதிகமாகவும் மக்கள்தொகை குறைவாகவும் இருந்த மேற்குலகுக்கு தொழில்மயமாதல் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், புலியைப் பார்த்து யானையும் சூடு போட்டுக்கொள்வதுபோல் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவுக்கும் அதையே முன்வைத்தார். அவர் விரும்பிய நவீன கோயில்களைக் கொண்ட ஓர் இந்தியா உருவாகவேண்டுமென்றால் அதற்கு மையப்படுத்தப்பட்ட வலுவான ஓர் அரசுதான் தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அது எந்த அளவுக்கு மேற்குலகின் நகலாக ஆகிறதோ அதில்தான் இருக்கிறது என்று கருதினார். எனவே, அவருடைய உலகில் கிராமங்களுக்கு இடமே இல்லை என்பதில் ஆச்சரியமே இல்லை.

நவீன இந்தியாவின் இன்னொரு சிற்பியான அம்பேத்கரின் உலகிலும் கிராமங்களுக்கு இடமில்லை. அவர் கிராமங்களை சாதிவெறியின் அடையாளமாகக் கண்டார். சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வு மறைய வேண்டுமானால், கிராமங்கள் அழியவேண்டும் என்று நம்பினார். அவருடைய தீர்மானம் ஒருவகையில் சரியானதுதான். ஏனென்றால், அனைத்து கிராமங்களுமே அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் அதிகாரமையமாகவே இருந்தன. எனவே, சமத்துவமான சமூகம் உருவாகவேண்டுமென்றால் கிராமப்புற நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டாகவேண்டிய தேவை இருந்தது.

ஆனால், இவர்கள் இருவருமே கிராமத்தை வலுவிலக்கச் செய்ததன் மூலம் நகரத்தை வலுவானதாக ஆக்கிவிட்டார்கள். நாய்க்கு பதிலாக ஓநாயைக் காவலுக்குக் கொண்டுவந்து வைத்ததைப் போன்ற ஒரு செயல் இது.

இந்தியாவுக்குத் தேவையான தொழில் வளர்ச்சி என்பது மேற்குலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது வெறும் அலங்கார வாக்கியம் அல்ல. இன்றும் பெருமளவிலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். விவசாயம்தான் இந்தியாவின் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதென்றால், விளைநிலங்களின் பரப்பை அதிகரித்தல், ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குதல், உற்பத்தி அளவைப் பெருக்குதல், கடின வேலைகளை எளிமைப்படுத்துதல், உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல், நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் என நடந்தேறியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இந்தியத் தொழில் வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நேருவோ, மேற்குலகுக்கு நன்மை தரும் முறையில் இந்தியாவைத் தகவமைப்பதையே தன் பொருளாதார லட்சியமாக முன்வைத்தார். அடுத்துவந்த அரசுகள், இந்தியாவின் கனிம வளங்களில் ஆரம்பித்து உழைப்பு சக்திவரை அனைத்தையும் சூறையாடிக்கொள்ள பன்னாட்டு முதலைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவைத்துவிட்டிருக்கிறது. சுதேசி இயக்கம் என்பது இன்று அனைத்துத் தளங்களிலும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நேரு இதை விரும்பியிருக்கமாட்டார். ஆனால், அவர் ஆரம்பித்துவைத்த தொழில்மயமாக்கம் இதைத்தான் சாத்தியப்படுத்தும் என்பது காந்திக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் அவர் பலமுறை நேருவை அவருடைய மேற்கத்திய மோகம் குறித்து எச்சரித்திருக்கிறார். ஆனால், காந்தியின் கிராம ராஜ்ஜியம் ஒரு கற்பனைக் கனவு என்று எள்ளி நகையாடினார் நேரு.

காந்தி தன் கிராம ராஜ்ஜியத்தின் ஆதார அம்சத்தை ராம ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்திருந்தார். அம்பேத்கருக்கு கிராம ராஜ்ஜியத்தை எதிர்க்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ‘தவம் செய்யும் சூத்திரனின் தலையைக் கொய்வதுதான் ராம ராஜ்ஜியம்’ – இதுதான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மேதைகளின் போராளிகளின் ஏகோபித்த கண்டுபிடிப்பு.

உத்தர ராமாயணத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருந்தது? அது பிற்சேர்க்கையா, இடைச்செருகலா? சரீரத்துடன் மேலுலகம் செல்ல விரும்பித்தான் சம்புகன் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே… துவிஜர்களை எதிர்த்துப் போராடியதாகவா சொல்லப்பட்டிருக்கிறது. உன்னோடு ஐவரானோம் என்று வேடனை ஆரத் தழுவிய ராமன், பழங்குடிக் கிழவி கடித்துக் கொடுத்த பழத்தை ருசித்து உண்ட ராமன், இன்று போய் நாளை வா என்று பகைவனுக்கும் அருளிய ராமன், சிற்றன்னை சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நாட்டைத் துறந்து சென்ற ராமன்… இந்த ராமன்கள்தானே எளிய மக்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் ராமன். இந்திய மக்கள் தங்கள் சாதி உணர்வுக்கு ராமனையா முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள்? வேண்டுமானால், இன்றைய பெண்ணிய அளவுகோல்களை வைத்து ராமனை ஆணாதிக்கவாதி என வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர சாதி வெறிக்கு ராமனை முன்வைப்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. ஆனால், அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் வரை அனைவரும் ராமராஜ்ஜியம் என்றால் அது சாதி வெறி பிடித்தது என்ற முடிவுக்கு சம்புகவதம் என்ற ஒற்றைக் கதையை முன்வைத்து வந்துவிட்டிருக்கிறார்கள்.

எனவேதான் அம்பேத்கர் கிராமங்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகவே முடியும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட வலுவான அரசாங்கமே தேவை என்று நினைத்தார். ஆனால், எண்ணிக்கை பலமே அரச அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலமைப்பில் (விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு மாற்றாக) அதே சாதி இந்துக்களே மிகப் பெரிய அதிகார மையமாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரை கலகம் செய்யச் சொல்லிவிட்டு, கம்பைப் பிற்படுத்தப்பட்ட சாதியிடம் கொடுத்துவிட்டார். கிராமப்புற அலகாக இருந்த வரையில் ஆதிக்க சாதிகளுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. இன்றோ அவை பூதாகாரமாகப் பெருகிவிட்டிருக்கின்றன.

உண்மையில் பழங்கால கிராமங்களில் இருந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை நீக்க என்ன செய்திருக்கவேண்டும். உதாரணமாக, ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து சாதி வெறி மிகுந்ததாக இருக்கிறது என்றால் அதை மாற்ற என்ன செய்திருக்கவேண்டும். வாதிக்கும் பிரதிவாதிக்கும் நாற்காலியைக் கொண்டுவந்து போடு என்பதில் இருந்து ஆரம்பித்திருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும்வரை எல்லாரும் நிரபராதிகளே. அவர்களை நிறக வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கிராமத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை பிரதிநிதிகள் நீதி வழங்கும் குழுவில் இருக்கவேண்டும். என்ன தவறுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தீர்மானித்து வடிவமைத்துக் கொடுக்கவேண்டும். அதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நீதிபதிகளுக்கு உண்டு என நீதி அமைப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாயத்து ஆலமரத்தை அடியோடு பிடுங்கி எறிவதுதான் சாதி வெறியை ஒழிக்க ஒரே வழி என்று அம்பேத்கர் நினைத்தார். கிராமங்களை அரசியல் சாசனச் சட்டத்தில் செல்லாக்காசாக ஆக்கினார். ஆனால், அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துவருகிறோம். ஒருவேளை ஒவ்வொரு கிராம சபைக்கும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அதிகாரம் தரப்பட்டிருந்தால், விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது. ஏரிகள் தூர்ந்துபோயிருக்காது. கிணறுகள் மண்ணிட்டு மூடப்பட்டிருக்காது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டிருக்காது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய நிர்வாக முறை அமலாகியிருந்தால் மேற்கத்திய அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் புலம்பும் நிலை வந்திருக்காது.

இன்றைய நம் அரசின் ராணுவ பலமும் காவல்துறை பலமும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டிருக்கிறது. இன்று நம் ஊழல் மிகுந்த தலைவர்களைச் சரிக்கட்டுவதன் மூலம் தேச விரோத சக்திகள் ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாடிவிட முடிகிறது. அதிகாரக் குவிப்பு நமக்கு எந்த நன்மையையும் இதுவரை செய்திருக்கவில்லை. அல்லது அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மையைவிட தீமையே அதிகம். காந்தி இதையெல்லாம் முன்பே யூகித்துவிட்டிருந்தார். அதனால்தான் மையப்படுத்தப்பட்ட அரசை  ஆதிமுதல் அந்தம்வரை எதிர்த்தார். கிராமங்களின் குடியரசு ஒன்றை முன்வைத்தார். அதை மறுதலித்ததன் மூலம் நேருவும் அம்பேத்கரும்தான் காந்தியைக் கொன்றிருக்கிறார்கள். கோட்சே அல்ல.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard