நான் சில சமயம் தமிழ்ப் பேராசிரியர்களைச் சந்திப்பது உண்டு. நானே தொழில் ரீதியாகத் தமிழ்ப்பேராசிரியன். நான் தமிழ்ப் பேராசிரியர்களைச் சந்திப்பது அப்படியென்ன பெரிய 'நியூஸ்' என்று கேட்பீர்கள்.
ஒரு வகையில் நியூஸ்தான். சொல்கிறேன். கேளுங்கள்.
நான் சுமார் 38 ஆண்டுகளாகத் தமிழகத்துக்கு வெளியில் - குறிப்பாக கர்னாடகத்தில்- வாழ்ந்துவிட்ட தமிழ்ப் பேராசிரியன். எல்லாத் தமிழ்ப் பேராசிரியர்களும் பழைய இலக்கியம் பற்றிப் பேசினால் நான் தற்கால இலக்கியம் பற்றிப் பேசுகிறவன். பல வேளைகளில் நான் மதிக்கிற தமிழ்ப் பேராசிரியர்களே கூட 'உங்கள் ஈடுபாடு வேறு' என்று என்னை ஒதுக்கி வைத்ததைக் கவனித்திருக்கிறேன். என்னை ஓர் ஆந்திர நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராய் ஆகும்படி தமிழரல்லாத துணைவேந்தர் ஒருவர் அழைத்தார். அப்போது நான் இரண்டு கருத்தரங்குகளை நடத்தினேன். ஒன்று புதுக்கவிதையில் பெண்கவிஞர்கள் பற்றியது. இன்னொன்று, அனைத்துலகக் கருத்தரங்கு. ரஷ்யாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், ஸெர்பியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் அறிஞர்கள் வந்து கலந்துகொண்ட சங்க இலக்கியம் பற்றிய கருத்தரங்கம். நான் தற்கால இலக்கியத்தைச் சார்ந்தவன், சங்க இலக்கியத்தைச் சார்ந்தவன் அல்லன் என்பதைத் தமிழ்ப்பேராசிரியர்கள் சுட்ட மறக்கவில்லை.
ஞானரதம் என்று ஒரு பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அது க. நா. சு. சிறப்பிதழை ஒருகாலத்தில் வெளியிட்டது. அந்தச் சிறப்பிதழின் அட்டையில் அதன் ஆசிரியர் எழுதியிருந்த வாசகம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் என் நினைவை விட்டு நீங்கவில்லை. 'தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழுக்குச் செய்த பாவம் ஏழேழு ஜென்மங்களுக்கும் போகாது.' இந்த அர்த்தத்தில் அந்த வாசகம் அமைந்திருந்தது. என் புத்தியும் ஆன்மாவும் இத்தனை ஆண்டுகளாக அங்கீகரித்த வாசகம் இது.
அப்படியென்றால் க. நா. சு. எதிர்பார்க்கும் தமிழ்ப் பேராசிரியனாக இருக்க வேண்டுமென்று என் உள் உணர்வு என்னைத் தயார் படுத்தியிருக்கும்போலும்.
நான் சங்க இலக்கியத்தை மிகமிக உயர்வாக மதிக்கிறேன். என் புதுக்கவிதை பற்றிய அறிவுக்குப் பின் சங்கஇலக்கியத்தின் விளக்கமுற்றதும் விளக்க முறாததுமான உணர்வு கண்டிப்பாக இருக்கிறது என்று கருதுகிறேன்.
நான் கன்னடத்தில், சங்க இலக்கியத்தின் அடிப்படைகளைப் பற்றி 'தமிழ்க்கவிதையியல்' என்னும் பொருளில் ஒரு நூல் எழுதினேன். அப்போதுதான் உலகில் எங்குமே இம்மாதியானதொரு கவிதைக் கோட்பாடு இல்லை என்று அறிந்தேன். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ள கவிதைக்கோட்பாடு, சமஸ்கிருதத்தில் உள்ள கவிதைக்கோட்பாடுகளான தொனி, ரீதி, ஒளச்சத்தியா, வக்ரோக்தி, சுபாவோக்தி, ரசம், போன்றவைகளால் பாதிப்புப்பெற்ற கோட்பாடுகள் என்பது தெரிந்தவுடன் பூக்களை வைத்து கவிதையை அறியும் கோட்பாடுய ஒன்று உலகில் எங்கேயும் இல்லை என்று அறிந்தேன். சமீபத்தில் கன்னடத்தில் ஒரு நூல் பற்றி அறிஞர்கள் மத்தியில் பரப்பரப்பாகப் பேசப்படுகிறது. "சங்கம் தமிழகம்- கன்னட நாடு, மொழி" என்பது நூலின் பெயர். அதன் ஆசிரியர் பேராசிரியர் ஷெட்டர் என்பவர். கேம்ப்பிரிட்ஜில் பட்டம் பெற்ற கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட வரலாற்றுத் துறை பேராசிரியர். இண்டியன் கௌன்ஸில் ஃபார் ஷிஸ்டாரிக்கல் ரிசெர்ச் (ICHR)சின் தலைவராக இருந்தவர். இத்தகைய வரயவரலாற்றுப் புலமை கொண்ட பேராசிரியர் ஷெட்டர் நான் சொல்வது போலவே சங்க இலக்கியக் கவிதைக்கோட்பாடுபோல் புதுமையான ஒரு கோட்பாடு எங்கும் இல்லை என்று ஒரு மாதத்துக்குமுன் ஒரு கருத்தரங்கில் சொன்னபோது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமலிருந்தது.
முதலிலேயே சொன்னதுபோல் உள்ளதையும் இல்லாததையும் தமிழ்ப்பெருமை என்று பீற்றிக்கொண்டு அலைகிற தமிழ்ப்பேராசிரியன் அல்ல நான். சொல்லப்போனால் தமிழைக் குறைத்து மதிப்பிடக்கூடிய அறுபதுகள், எழுபதுகளின் இடதுசாரி மரபை ஏற்றுக்கொண்டவன் நான். அதுபோலவே அக்கால கட்ட 'தமிழ்ப்பெருமையை' கட்டுடைப்புச் செய்து மகிழ்ந்துள்ளவன்.
மொத்தத்தில் தமிழ்பற்றிய போலிப்புகழ்ச்சியும் விபரம் தெரியாத வெறுப்பும் தமிழுக்குப் பாதகமாகத்தான் போயுள்ளன. இவ்விரண்டு போக்குக்கும் நடுவில் ஒரு நடுநிலைப் பார்வை தமிழுக்கு உருவாகாததுதான் தமிழுக்கான துரதிருஷ்டம்.
இந்தப் பின்னணியில் சங்க இலக்கியம் சார்ந்து சில செய்திகளைச் சொல்ல வேண்டும்.
பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது.
அதாவது நான் சொல்ல வருவது சங்க இலக்கியம்தான் திராவிடச் சிந்தனையின் மூல ஊற்று. இதனை ஒரு Public Paradigm ஆக மாற்றியதுதான் பாரதிதாசனின் பண்பாட்டுக் கொடுப்பினையும் அரசியல் கொடுப்பினையும் ஆகும். இந்திய அரசியலுக்கு லோகியா ஒரு பண்பாட்டுப் பூச்சைக் கொடுக்க வந்தார். அதற்கும் முதலில் காந்தி. பின்பு திராவிடச்சிந்தனை மூலம் அந்தப்பண்பாட்டு அம்சத்தை வழங்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து பண்பாட்டுச் சாய்வற்ற தூய அரசியல் அதிகாரம் சார்ந்ததால் இந்தியாவையும் தமிழகத்தையும் ஒரு பேய்க்காற்று மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பிராந்திய அரசியல் கட்சியும் தோற்றுப் போகும்போது பண்பாட்டு அரசியலும் தோற்றுப்போகிறது என்று பொருள். திராவிடச்சிந்தனையை ஒரு அரசியலாக மாற்றியதில்தான் திரு. சி. என். அண்ணாதுரைக்கும், திரு. கருணாநிதிக்கும் பங்கு. இவ்விருவரின் தமிழக-இந்திய அரசியல் கொடுப்பினை என்பது இருவரும் இந்திய அரசியல் அரங்கில் ஒரு மாற்றை-காந்தி போல், அம்பேத்கார் போல், லோகியா போல் - பண்பாட்டு அரசியலைக் கொண்டு வர முயன்றதில்தான்.
பாரதிதாசன் இந்தச் சங்க இலக்கிய வேரைக்கொண்டு வரமுயன்றதில்தான் கவிதை எழுத மறந்து போனார் என்ற கூற்றில் நிறைய நியாயங்கள் உண்டு. குறிஞ்சித்திட்டையும், கண்ணகி புரட்சிக் காப்பியம் போன்ற நூல்களையெல்லாம் யாரவாது ஞாபகம் இன்னும் வைத்திருந்தால் அந்த நூல்களில் ஏன் பாரதிதாசனின் கவிதையாற்றல் அவரது முதல் இரண்டு தொகுப்புகள் போல்- மங்கிப்போகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? சி.சு. செல்லப்பா என்ற மாபெரும் இலக்கிய ஆளுமை தன்னை பாரதியின் 'காற்று' பற்றிய வசன கவிதையின் புதுக்கவிதைத் தொடர்ச்சியாகக் கூறி இனங்கண்ட போது மொத்த நூறுவருடத்தையும் (இருபதாம் நூற்றாண்டை) புது விளக்கம் ஒன்றில் இணைக்கிறார் என்பது இப்போதாவது விளங்க வேண்டும். திரைப்பட மாயையை விட்டுத் திராவிடப் பரம்பரை விடுபடாவிட்டால் சி. சு. செ.யின் கூர்த்த மதியின்முன் தோற்று மண்டியிட வேண்டியதுதான். பாரதிதாசனின் திராவிட மரபா, பாரதியின் வேதகால சமஸ்கிருத மரபா என்றால் சி. சு. செ. எந்தப் பக்கத்தை வலியுறுத்துகிறார் என்று புரிகிறதல்லவா?
இந்தத் திராவிடச் சிந்தனையை மொழியியல் ரீதியாக வலியுறுத்தி உலகின் கவனத்தைப் பெற்றவர் கால்டுவெல். சமீபத்தில், மூலநூலில் தலித்தினரைப் பற்றிக் கால்டுவெல் எழுதிய சிந்தனைகளை, கவிதாசரண் வெளிப்படுத்தியுள்ள செயல் ஒன்று நடைபெற்றுள்ளது. இது முக்கியமான ஒரு பாலிசி. இன்றுவரை கால்டுவெல் கண்டுபிடிப்புகளையும் சங்க இலக்கியத்தையும் பற்றிய ஒப்பீட்டை தமிழ்ச்சிந்தனை உலகம் தொடங்கவில்லை. இது தொடர்பாக கால்டுவெல்லுக்குப் பிறகு எமனோ, பர்ரோ என்ற இரு வெளிநாட்டு அறிஞர்களின் 'திராவிட வேர்ச்சொல் அகராதி' மிக முக்கியமான அகில உலகச்சிந்தனைக் கொடையாகும். திராவிடச்சிந்தனையின் இன்னொரு பெரும் மரபு சங்க இலக்கியம். கால்ட்வெல் முடிவுறாத ஆய்வாய் ஆல்டெய்க் குடும்பத்தைச் சார்ந்தது திராவிட மொழிகள் என்கிறார்.
அகில உலகில் எங்கும் சங்க இலக்கியம்போல் ஒரு இலக்கியம் இல்லை என்று நாம் மட்டுமல்ல அதைப்பற்றி ஓரளவு தெரிந்த எல்லோரும் சொல்லிவிட்டார்கள். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்கூடச் சொல்லிவிட்டார்கள். முன்னாள் சமஸ்கிருதப் பேராசிரியர் (மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்) சுந்திரமூர்த்திகூட சங்க இலக்கியத்தின் அடிப்படையில் அமைந்த ஐந்திணைக்கோட்பாடு போன்றன சமஸ்கிருதத்தில் இல்லை என்று சொல்லி ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார். ஆனால் தமிழகப் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் இந்தப் பெருமையை நிலைநாட்டும்படியாக இல்லை. அதிகமான ஆய்வுகள் ஒரு பட்டம் வாங்குவதற்கான சடங்காக நடைபெறுகின்றன.
சமீபத்தில் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வில் ஒரு புது நிலைமை உருவாகியுள்ளது. ஐராவதம் மகாதேவன் என்ற முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி (முன்னாள் தினமணி ஆசிரியரும் கூட) கண்டுபிடித்த தமிழ் பிராமி எழுத்துகளில் சங்க காலப் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு புரட்சி எனலாம். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்செழியன் போன்றவர்கள் சட்டசபையில் கண்டித்த அதே ஐராவதம் மகாதேவனின் தயவில் சங்க இலக்கியம் பொய்யாய் எழுதப்பட்டதல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. ஹாலந்திலிருந்து வந்துள்ள Kaavya in South Indiaஎன்ற நூலில் ஹெர்மன் டிக்கன் என்பவர் புறநானூற்றுப் பாடல்கள் எல்லாம் பிற்காலத்துப்புலவர் ஒருவர் பழைய நடையில் எழுதிய வரலாற்று ஆதாரமற்ற நூல் என்ற கருத்தை மறுக்க மிகப்பெரிய ஆதாரம் ஐராவதம் மகாதேவனால் தரப்பட்டுள்ளது. இதுபோல் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் சங்ககால சமூகத்தை விளக்கக்கூடிய உண்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு கருத்தையும் இந்த இடத்தில் கூறவேண்டும். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்கான அடிப்படை உண்மை அதில் சங்க இலக்கியம் இருக்கிறது என்பதற்காக. கன்னட மொழியிலும் தெலுங்கிலும் சங்க இலக்கியம் போன்றதொரு கவிதைத் தொகுப்பு பிற எந்த மொழியின் பாதிப்புமில்லாமல் இல்லை. அவ்விரு மொழியும் செம்மொழி அந்தஸ்தைப் பெறாததற்கான காரணம் இதுதான். இந்த இரு மொழிகளிலும் சங்க இலக்கியத்தின் பொருட்படுத்தத்தக்க ஒரு மொழிபெயர்ப்புகூட இல்லை. இவர்களுக்கு உண்மையில் தமிழிலக்கியத்தின் அடிப்படையையும் தொன்மையையும் அறிய வாய்ப்பில்லை.
எனவே இன்று தமிழில் பேனா பிடிக்கும் ஒருவன் ஏதோ ஒரு வகையில் சங்க இலக்கிய ஓர்மையைத் தனது மூளைச் செல்களில் இருந்து கழற்றி வைத்துவிட்டு எழுத முடியாது.
சங்க இலக்கியம் தமிழர்களுக்கும் அவர்களோடு ஒட்டிப் பிறந்த உறவுள்ள திராவிடமொழிகளுக்கும் ஒரு தொழில் வடிவத்தை நங்கூரம் போல் பாய்ச்சிக்கொண்டு வேர் உள்ளவர்களாய் வாழ உதவுகிறது.
ஜார்ஜ் ஹார்ட் என்ற பெயரில் ஒரு அமெரிக்கப் பேராசிரியர் கலிபோர்னியா ஃபெர்க்ளி பல்கலைக் கழகத்தில் தமிழ் போதிக்கிறார். அவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்: தமிழுக்கு சங்க இலக்கியம் போன்ற சுயஇலக்கிய மரபும் இன்னொரு மொழியான சமஸ்கிருத மரபும் அதன் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து அதற்கொரு பெரிய பாரம்பரியத்தைக் கொடுத்துள்ளன என்று. எனவே இங்கு ஓர் சர்ச்சை உருவாகிறது. சங்கமரபு போலவே சமஸ்கிருத மரபும் இன்றைய தமிழ்மரபென்று. அப்படியென்றால் பாரதி காலத்தில் மறந்திருந்த மரபைப் பாரதிதாசன் உயிர்ப்பித்தார் என்று கூறலாமா?