New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்
Permalink  
 


 காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்

[இந்தக் கட்டுரை, புத்தகக் கண்காட்சி வெளியீடாக, தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடவிருக்கும், “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள் ” என்ற புத்தகத்தில் இடம்பெற்றது.]

கி.பி. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி – புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் சான்றோர் சாதிக் கிறிஸ்தவர்கள் ஆங்கிலக் கல்விமூலம் அரசின் அதிகார அமைப்புகளில் இடம் பெறுவதிலும் ஏற்படத் தொடங்கிய மாற்றம், சென்ற அத்தியாயத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டது. திராவிடம் என்ற மொழி சார்ந்த அரசியல் அடையாளத்தின் பிதாமகனாகக் கருதத்தக்க கால்டுவெல் பற்றியும் காலனியாதிக்க மேலாண்மையில் அவரது பங்கு பற்றியும் இப்போது ஆராய்வோம். திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் எல்லைப் பகுதியாகிய நாஞ்சில் நாட்டைத் தொட்டடுத்து அமைந்துள்ள நெல்லைச் சீமையில் 1841ஆம் ஆண்டு தொடங்கி பிஷப் ராபர்ட் கால்டுவெல் சான்றோர் சமூகத்தவரிடையே செய்துவந்த மதமாற்றப் பணியின் விளைவாகத் திருவிதாங்கோடு சமஸ்தானப் பகுதியில் ஏற்பட்ட சமூகவியல் தாக்கங்கள் குறிப்பிடத்தக்கனவே. ஆயினும், அவை பற்றி நாம் பரிசீலிப்பதற்கு முன்னர் 19ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு பத்தாண்டுகளில் (1801-1840) சென்னையிலிருந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி அலுவலர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட காலனியாதிக்கக் கல்விக் கொள்கையில் ஏற்பட்டுவந்த மாற்றங்களுக்குப் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமய நம்பிக்கைகளும் சமயப் பரப்பல் செயல் திட்டங்களும் எந்த அளவுக்கு உந்து சக்தியாக இருந்தன என்பதைப் பரிசீலிப்பது அவசியம். அந்தப் பின்புலத்தில் பார்த்தால்தான் கால்டுவெல்லின் பங்களிப்பு குறித்த சித்திரம் முழுமையடையும்.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) (1777-1819), 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைக் கலெக்டராகவும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அதிகாரக் குழுவின் மூத்த உறுப்பினராகவும் விளங்கியவர் ஆவார். சென்னைக் கல்விச் சங்கத்தைத் (Madras Literacy Society) தோற்றுவித்தவரும் இவரே. இந்திய நாட்டின், குறிப்பாகத் தென்னிந்தியாவின் இலக்கிய, இலக்கண மரபுகள் குறித்தும் சமய நம்பிக்கைகள் குறித்தும் மரியாதையுடன் கூடிய புரிதல் உடையவர் இவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாம் சார்ந்திருந்த கிறிஸ்தவ மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு இவருக்கு இருந்ததில்லை. இவரை நாத்திகர் என்றே ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களுடன் பரிச்சயம் மட்டுமின்றித் தமிழில் மரபுக் கவிதை இயற்றும் அளவுக்கு வல்லமையும் இவர் பெற்றிருந்தார். சென்னையில் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக (27 நட்சத்திரங்களோடும் தொடர்புபடுத்தும் விதத்தில்) 27 கிணறுகள் வெட்டுவித்து அச்செய்தியைச் செய்யுள் வடிவில் கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளார்.

சயங்கொண்ட தொண்டிய சாணுறு{[1]} நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குட கடலளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டாரகாரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய்
“இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு”
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வருடம்
1740 மேற் செல்லா நின்ற
இங்கிலிசு வருடம் 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருடத்துக்கு மேற் செல்லா நின்ற
பஹுதான்ய வருடத்தில் வார திதி
நக்ஷத்திர யோக கரணம் பார்த்து
சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு
துரவு கண்டு புண்ணியாஹவாசநம்
பண்ணுவித்தேன்
1818

இவ்வாறு இந்தியச் சமய மரபுகள் மீதும் தமிழ் மறை என்று குறிப்பிடத்தக்க திருக்குறள்மீதும், பிற தமிழ் இலக்கியங்கள் மீதும் எல்லிஸ் கொண்டிருந்த மரியாதை அவருடைய நிர்வாக நடவடிக்கைகளிலும் பிரதிபலித்து வந்துள்ளது. எல்லிஸ் இயற்றிய தரவு கொச்சகப் கலிப்பாக்களின் இறுதியில் ‘நமச்சிவாய’ என்ற சொல் அமைந்துள்ளது என்பதால் அவர் சைவ சமயத்தில் சேர்ந்துவிட்டார் என்றும் பேசப்பட்டதுண்டு.{[2]}

எல்லிஸுக்குத் தமிழ் கற்பித்த இராமச்சந்திர கவிராயர் என்பவர் (சத்திரிய ராஜு இனத்தவர்) சென்னை கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவர்களுள் ஒருவராவார். அவர் 1824ஆம் ஆண்டில் அரச குல பஞ்சரத்னம் என்ற பெயரில் ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார். அவர் அரசகுலம் என்று குறிப்பிடுவது கிராமணி குலத்தவராகிய சான்றோர்களையே.{[3]} இராமச்சந்திர கவிராயரிடம் எல்லிஸ் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். எனவே, இராமச்சந்திரக் கவிராயர் மூலமாகச் சான்றோர் குலத்தவர் வரலாறு குறித்து அவர் தெளிவாக அறிந்திருந்தார் என ஊகிக்க வலிமையான காரணங்கள் உள்ளன. ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு என்று எல்லிஸ் பயன்படுத்தியுள்ள வழக்காறு தெளிவான வரலாற்று உண்மையின் அடிப்படையில் அமைந்ததாகும். சென்னை நகரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் சான்றோர் குலக் கிராமணிகள் பெரும் நிலவுடைமையாளர்களாக (மிராசுதார்களாக) இருந்த நிலைமை கலெக்டராக இருந்த எல்லிசால் பதிவு செய்யப்பட்டுள்ளது.{[4]}

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.{[5]} திராவிட மொழிகள் பற்றி முதல் முதலாக மொழியியல் கண்ணோட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தவர் எல்லிஸே என்பதோடு, ஆரிய-திராவிட இனவாதக் கண்ணோட்டத்தில் அவரது ஆய்வு அமையவில்லை என்ற உண்மையையும் நாம் உணர்ந்து கொண்டால் எல்லிஸ் பற்றி இவ்வளவு விரிவாக இங்குக் குறிப்பிடுவதன் பொருத்தம் விளங்கும்.

1819ஆம் ஆண்டில் (ஐயத்துக்கு இடமளிக்கும் வகையில்) எல்லிஸ் அகால மரணமடைந்தார். எல்லிஸை ஒத்த வேறோர் அலுவலர் இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த காலின் மெக்கன்ஸி ஆவார். 1821ஆம் ஆண்டு கல்கத்தாவில் மரணமடைந்த காலின் மெக்கன்ஸி ஏராளமான தமிழ்க் கல்வெட்டுப் பிரதிகள், பாளையப்பட்டு வம்சாவளி போன்ற வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தவர் ஆவார். இந்திய வரலாற்றினைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் முதன்மையான அங்கங்களாக இருந்தபோதிலும் எல்லிஸ், மெக்கன்ஸி போன்றோருக்குக் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த இந்திய மக்களின் நலன்கள்பால் அக்கறை இருந்தது. மட்டுமின்றி, உள்நாட்டு இலக்கிய மரபுகள், வரலாறுகள், மருத்துவ முறைகள் போன்ற பலவற்றைக் குறித்தும் அனுதாபத்தோடு கூடிய புரிதல் இருந்தது. ஆனால், இத்தகைய புரிந்துணர்வு ஆளப்படும் அநாகரிக இந்தியர்கள்பால் காட்டப்படுதல் தேவையற்றது எனக் கல்கத்தாவிலிருந்த கிழக்கிந்தியக் கும்பினி இயக்குநர் குழு கருதிற்று. எனவே, பாரம்பரிய இந்தியக் கல்வி முறையை ஒழித்துவிட்டு, பைபிள் கல்வியுடன்கூடிய ஆங்கிலக் கல்வி முறையை இந்திய நாடு முழுவதிலும் அமல்படுத்தக் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகக் குழு ஆயத்தமானது.

1832இல் தாமஸ் பேபிங்டன் மெக்காலே இந்திய நாட்டுக் கல்விமான்களையும், அதிகார வர்க்கத்தாரையும் கருப்புத்தோல் ஆங்கிலேயர்களாகவும், பிற இந்திய மக்களை அடிமைகளாகவும் குமாஸ்தாக்களாகவும் உருவாக்குவதற்குரிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அவர் தமது கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது இந்தக் கல்வி முறை இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் ஒரு ஹிந்துவோ ஒரு முஸல்மானோ இருக்கமாட்டான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் என்பது நாம் கவனத்தில் இருத்த வேண்டிய உண்மையாகும். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் இத்தகைய நடவடிக்கைகள் என்ற பின்னணியில்தான், லண்டன் மிஷன் புராடெஸ்டெண்ட் சமயப் பரப்பல் நடவடிக்கைகளையும் நாம் நோக்கிட வேண்டும். இதற்குச் சமகாலத்தில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் (1832இலிருந்து) கிறிஸ்தவ மதத்தின் உயர்வு குறித்து முதன்மையளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்ற உண்மையும் வரலாற்று ஆய்வாளர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.{[6]}

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் (கி.பி. 1814-1891), லண்டன் மிஷன் சொசைட்டி பிரச்சாரக் குழுவின் சார்பில் இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். இந்தியாவில், குறிப்பாக – திராவிட தேசத்தில் தமது சமயப் பணியை மேற்கொள்ளும் செயல் திட்டத்துடன்தான் லண்டன் மிஷன் இவரை மொழியியல் கற்கச் செய்தது. 1838ஆம் ஆண்டில், தம் 24ஆவது வயதில் லண்டன் மிஷன் சொசைட்டியின் சார்பில் பணியாற்றுவதற்காகச் சென்னை வந்து சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் சென்னையிலிருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு தீவிரமான செயல்திட்டத்துடன் 1840ஆம் ஆண்டுவரை சென்னையில் தங்கித் தமிழ் கற்றார்.

தொடக்கத்தில் “இங்கிலீஷ் சர்ச்” எனப்பட்ட லண்டன் மிஷன் திருச்சபையின் பாதிரியாராகத் தம் பணியைத் தொடங்கிய கால்டுவெல் தமது பணியைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு எல்.எம்.எஸ். ஸைவிட எஸ்.பி.ஜி. (Society for the propagation of the Gospel)யே பொருத்தமான திருச்சபை என்றும், தென் திருவிதாங்கோட்டைவிடத் திருநெல்வேலிச் சீமையின் எளிமையான குணநலன்களுடைய சான்றார் சாதிக் கிராம மக்களை எளிதில் தம்மால் வசப்படுத்தி மதம் மாற்றிவிட முடியும் என்றும் தீர்மானித்து நெல்லைச் சீமைக்கு வந்து சேர்ந்தார்.{[7]} அவர் தம் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்த இடையன்குடி என்ற சிற்றூர் நாகர்கோயில் நகரிலிருந்து சற்றொப்ப 60 கிமீ தொலைவில் உள்ள ஊராகும்.

நாகர்கோயில் நகரில் மிகுந்த முனைப்புடன் புராடெஸ்டெண்ட் சமயப் பரப்புதல் பணியினை மேற்கொண்டிருந்த தம்முடைய முன்னோடிகளுடன் கால்டுவெல் நெருங்கிய தொடர்பு கொண்டார். 1843ஆம் ஆண்டில் நாகர்கோயில் நகரில் செமினரி (வேதாகமக் கல்வி நிலையம்) தொடங்கிய ரெவரண்ட் சார்லஸ் மால்ட் என்ற லண்டன் மிஷன் சமயப் பரப்புநருடன் மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1844 மார்ச் 20ஆம் தேதி நாகர்கோயில் நகரிலுள்ள கல்லுக்கோயில் எனும் ஹோம் சர்ச்சில் வைத்துச் சார்லஸ் மால்டின் மகள் எலிஸாவைக் கால்டுவெல் மணம் புரிந்தார். கால்டுவெல்லுக்கும் நாகர்கோயில் நகருக்கும் இத்தகைய நெருக்கமான தொடர்பு இருந்தது என்ற செய்தி தோள் சீலைக் கலகம் தொடர்பான ஆய்வு நூல்களில் பதிவு செய்யப்படவில்லை{[8]}. கால்டுவெல்லுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் இடையே நிலவிய நெருக்கமான தொடர்புகள் குறித்த வேறு சில செய்திகள் பின்னர் சுட்டிக் காட்டப்படும்.

கால்டுவெல், தம்முடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றிய ஆய்வு (1856ஆம் ஆண்டு) சென்னையில் பதிப்பிக்கப்பட்டது,{[9]} கொற்கைக்கு அருகில் அமைந்துள்ள பழையகாயலில் நிகழ்த்திய அகழாய்வு போன்ற ஆய்வுகளின் அடிப்படையில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் செல்வாக்குடனும் திகழ்ந்தவர் என்பதால் 1857ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதோடு, இந்தியத் தலைநகரான கல்கத்தாவிலிருந்து செயல்பட்ட Royal Asiatic Societyயின் உறுப்பினராகவும் நியமனம் பெற்றார். கால்டுவெல்லின் செல்வாக்கு, ஆய்வு என்ற மட்டத்தையும் சமயப் பரப்புதல் என்ற வட்டத்தையும் தாண்டி ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்ற அளவுக்கு வலிமையான வீச்சுடன் விளங்கிற்று. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக்களில் பல்கலைக்கழக வேந்தரான (Chancellor) சென்னை ராஜதானி கவர்னரின் உரைகளில் கால்டுவெல்லின் கருத்துகள் இடம்பெறலாயின.{[10]}

1820ஆம் ஆண்டில் நாகர்கோயில் நகரின் சிவில் நீதிபதியாக ஓராண்டு காலம் பதவி வகித்த ரெவரண்டு சார்லஸ் மீடுவின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் பற்றிச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அந்நிகழ்வின் மூலம் உரிய பாடம் கற்றுக்கொண்டதால் தனது முகம் சமயச் சார்பற்றது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்த ஆங்கிலேய ஆளும் வர்க்கம், தனது செயல்திட்டத்தை நிறைவேற்றிட லண்டன் மிஷன் சொசைட்டியின் பாதிரிமார்கள் ஆங்கிலக் கல்வி கற்பிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது. இந்தப் பின்னணியை மனதில் கொண்டு பார்த்தால் புராடெஸ்டெண்ட் மிஷனரிமார்களின் பணிகள், – குறிப்பாகக் கால்டுவெல்லின் பங்களிப்பு – எந்த அளவிற்கு ஆங்கிலேய ஆளும் வர்க்கத்தின் நோக்கத்திற்கு உகந்த வகையில் அமைந்தன என்பதும், எவ்வாறு ஆங்கிலேயர்களின் நோக்கம் எவ்விதப் பக்கவிளைவும் இன்றி நிறைவேறியது என்பதும் விளங்கும்.

1849ஆம் ஆண்டில் திருநெல்வேலி சாணார்கள் (The Tinnevelly Shanars: A Sketch of their religion and their moral condition and characteristics as a caste) என்ற ஆங்கிலப் பிரசுரத்தை ராபர்ட் கால்டுவெல் சென்னையிலிருந்து கிழக்கிந்தியக் கும்பினி அரசு ஆதரவில் வெளியிட்டார். இப்பிரசுரம் முழுமையான நூலாக 1850ஆம் ஆண்டு லண்டனில் Society for the propagation of Christian knowledge நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும், மந்த புத்திக்காரர்கள் என்றும் கால்டுவெல் இந்நூலில் எழுதியுள்ளார். மேற்குறித்த நூலில் பக்கம் 5இல் இடம்பெறும் ஒரு குறிப்பு எம்மால் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்படுகிறது.

“தாழ்ந்த கீழ்ச்சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்கமுடியும். இவர்கள் ஏழைகளே. ஆயினும், ஓட்டாண்டிகள் அல்லர். எழுத்தறிவு இல்லாத மூர்க்கர்கள்; ஆயினும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து பல மடங்கு உயர்ந்தவர்கள்.”

1857ஆம் ஆண்டில் லண்டனில் வெளியிடப்பட்ட Lectures on the Tinnevelli Mission என்ற நூலின் பக்கம் 44-45இல் இதே கருத்தைக் கால்டுவெல் தெரிவித்துள்ளார். மேலும், பிற சூத்திரச் சாதியினர் இந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது போலச் சாணார்கள் அனுமதிக்கப்படுவதில்லை; சாணார் பெண்கள் இடுப்புக்குமேல் உடையணிவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.{[11]} இத்தகைய பொய்மையும், இழிவுபடுத்தும் நோக்கமும் நிறைந்த ஐரோப்பிய மையவாதப் பார்வை என்பது கால்டுவெல்லுக்கு முன்னர் இப்பகுதி மக்களைப் பற்றி ஆய்வு செய்த கிழக்கிந்தியக் கும்பினி அதிகாரிகளிடம் இருந்ததில்லை என்பதை நாம் வெளிப்படையாக புரிந்துகொள்ள முடியும்.

கால்டுவெல் இவ்வாறு சான்றோர் சமூகத்தவரைப் பற்றி எழுதியது அவருடைய அறியாமையை அல்லது அப்பாவித்தனத்தைக் காட்டுவதாக சிலர் வாதிக்கக்கூடும். ஆனால், ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுவதன் மூலம் இவ்வாதம் தவறு என எளிதில் விளக்கிவிட முடியும். கால்டுவெல் தாம் குடியேறிய இடையன்குடி ஊரினை இவ்வூருக்கு அருகிலுள்ள குட்டம் என்ற சிற்றூரில் வாழ்ந்த மார்த்தாண்ட நாடாக்கள் எனப்படும் சான்றோர் குல நிலைமைக்காரர் பிரிவு நிலக்கிழாரிடமிருந்து 99 வருடக் குத்தகைக்குப் பெற்றார். இப்பகுதியில் குடியிருந்த அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களுமே குட்டம் மார்த்தாண்ட நாடாக்களுக்கு ஆண்டுதோறும் குடியிருப்புவரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர். 99 வருடக் குத்தகை எடுத்தவர்கள்கூடக் குடியிருப்பு வரி செலுத்துவதிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டிருந்தனரே தவிர அவர்கள் குடும்பத்து மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளுக்கு வரிகட்டியாக வேண்டும்.

கால்டுவெல் தாம் குத்தகைக்கு எடுத்த பகுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பனையேறிச் சான்றார் போன்ற சான்றோர் சமூகத்தின் கீழ் அடுக்குகளைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார். தேவாலயம், தேவாலயத்தோடு சேர்ந்த பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் கட்டினார். இந்நிலையில் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பங்களில் நடக்கும் மங்கல அமங்கல நிகழ்ச்சிகளுக்கான வரியினைக் குட்டம் மார்த்தாண்ட நாடாக்கள் கட்டாயமாக வசூலிக்க முயன்றனர். தாம் 99 ஆண்டு நிலவரியைக் குத்தகையாகக் கொடுத்துவிட்டதால் மேற்கொண்டு வரி எதுவும் தம் ஊரில் குடியிருக்கும் மக்கள் கொடுக்கமாட்டார்கள் என்று கால்டுவெல் கூறினார். குடியிருப்பு வரி செலுத்துவதிலிருந்துதான் விலக்களிக்கப்பட்டுள்ளதே தவிர, அரசு இறை அல்லது ஜோடி வரி (quit rent) வசூலிக்கும் உரிமையைத் தங்கள் வசமே வைத்திருப்பதாகவும், அதுதான் தம்மையொத்த நிலைமைக்கார நாடார்கள் வழக்கம் என்றும் குட்டம் நாடாக்கள் குறிப்பிட்டனர்.

குட்டத்தைச் சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப்பற்று, செட்டியாபற்று, தண்டுபற்று, காயாமொழி போன்ற ஐம்பதற்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களெல்லாம் தம் குடிகள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர். எனவே, இத்தகைய பிரச்சினைகளைத் தொடக்கத்திலேயே சந்தித்த கால்டுவெல்லுக்கு நிலைமைக்காரச் சான்றோர்களின் அரச பாரம்பரியம் பற்றி ஏதும் தெரியாது என்று சொன்னால் அது முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். அந்தத் திருப்பணியைத்தான் கால்டுவெல் திறம்படச் செய்ய முயன்றுள்ளார்.

கால்டுவெல்லுடன் தொடர்புடையவரும் சிறந்த தமிழறிஞரும், இச்சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள நிலைமைக்காரச் சான்றோர் ஊராகிய வாழையடியைப் பூர்விகமாகக் கொண்டவருமான சற்குணம் வின்ஃப்ரட் ஐயர் என்ற (சான்றோர் குல) புராடெஸ்டெண்ட் பாதிரியார் (கி.பி. 1810-1879), “சான்றோர் குல மரபு காத்தல்” என்ற நூலை எழுதிச் சமகாலத்திலேயே சான்றோர் குலத்தவர் சத்திரியர்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை வெளியிட்டார். எனவே, சான்றோர் சமூகத்தவரைப் பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ளாமல் கால்டுவெல் தம்முடைய நூலை எழுதிவிட்டார் என்ற வாதம் எந்த வகையிலும் பொருத்தமற்றதாகும்.

கால்டுவெல்லின் இத்தகைய பொய்யான இனவரைவு என்பது மூன்றுவித உள்நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது. முதலாவது, திருநெல்வேலிச் சாணார் பற்றிய மேற்குறித்த ஆங்கில நூல், கிழக்கிந்தியக் கும்பினியின் கல்விக் கொள்கைக்கு உகந்த வகையில், இந்தியாவிலுள்ள பல்வேறு சாதியினர் குறித்த எதிர்கால வரைவுகளுக்கு முன்மாதிரியான இனவரைவு நூல் எனக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கமாகும். இரண்டாவதாக, புராடெஸ்டெண்ட் பாதிரிமார்கள், அநாகரிக ஆதிவாசிகள் மத்தியில் சமயப் பணிபுரிய வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்தையும் அனுதாப உணர்வையும் இங்கிலாந்தில் வாழும் கிறிஸ்தவப் பொதுமக்களிடம் உருவாக்கிக் காட்டுமிராண்டி இந்தியர்களிடையே பணிபுரிகிற இத்தகைய தியாக மனப்பான்மையும், தொண்டுணர்வும் நிரம்பிய ஐரோப்பியப் பாதிரிமார்களுக்குப் பொருளுதவி செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கமாகும். மூன்றாவதாக, கிறிஸ்தவ சமயத்தில் சேராமல் இந்து சமயத்திலேயே நீடித்து நின்ற சான்றோர் சமூகத்தவர் மத்தியில் தங்களை இத்தகைய நிலையில் வைத்திருப்பது இந்து சமயமே என்ற குரோதத்தையும், தங்கள் குலப் பாரம்பரியம் குறித்த இழிவுணர்வையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமாகும்.

முதலிரு நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேறின. மூன்றாவது நோக்கம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. சான்றோர் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்த சில பிரிவினர்களே இந்தப் பிரச்சாரத்துக்குப் பலியானார்கள். கால்டுவெல்லின் எழுத்து சான்றோர் சமூகத்தின் இடை மட்டத்திலும் உயர் மட்டத்திலும் இருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்திற்று. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியிருந்த நாசரேத் மிஷனுக்கு உட்பட்ட சான்றோர் சமூகத்தவரிடையிலேயே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்
Permalink  
 


1849ஆம் ஆண்டில் நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் மூக்குப்பேரி என்ற ஊரிலிருந்த அருமைநாயகம் நாடார் என்கிற சட்டாம்பிள்ளை ஐயா சென்னைக்கு வந்திருந்தபோது கால்டுவெல்லின் இந்நூலைப் படிக்க நேர்ந்ததால் மிகுந்த மனக் கொந்தளிப்பு அடைந்தார். ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழ்ந்த புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச் சட்டாம்பிள்ளை ஐயா உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.{[12]}

சட்டாம்பிள்ளை ஐயாவின் குடும்பப் பின்னணியைப் பற்றிய ஒரு செய்தியை இங்குக் குறிப்பிடுவது அவசியமாகும். கிபி 1642ஆம் ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்துவந்த வலங்கை உய்யக்கொண்டார்கள் திருமலைநாயக்கரின் பிரதானி வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் குடிகளுடன் சேர்த்துக் கொற்கைக் காணியாளரான நற்குடி வேளாளர்கள் வசம் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்து சென்றனர்.{[13]} அவ்வாறு குடிபெயர்ந்து சென்றவர்கள் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர் என்றும் அவர்களின் வம்சத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின்,{[14]} அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர் என்றும் அவ்வம்சத்தைச் சேர்ந்தவரே சட்டாம்பிள்ளை ஐயா என்றும் சில குறிப்புகள் மூலம் தெரியவருகின்றன.{[15]}

சட்டாம்பிள்ளை ஐயா சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில் (திருமறைப்பள்ளி அல்லது இறையியல் பள்ளி) ஜி.யு. போப் முதலானோரிடம் கல்வி கற்றவராவார். உபதேசியார் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத் தேர்ந்தவர். கிறிஸ்தவராக மதம் மாறிய உள்நாட்டு மக்களுள் நல்ல கல்வித் தேர்ச்சி மிகுந்தவர் என்ற தகுதியையும் சட்டாம்பிள்ளை ஐயா அடைந்திருந்தார்.{[16]} தம் போன்ற சான்றோர் குல உயர் பிரிவுகளைச் சேர்ந்த பலரிடமும் கால்டுவெல்லின் மேற்படி நூலின் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியும், வேறு வகையிலும் பிரச்சாரம் செய்த சட்டாம்பிள்ளை ஐயா சான்றோர் சமூகத்தவர் பலர் மத்தியில் ஒரு கொந்தளிப்பினை உருவாக்கினார். கால்டுவெல்லின் இந்நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத சான்றோர் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார்.

இதன் விளைவாக 1857ஆம் ஆண்டில் Hindu Church of Jesus (இந்து ஏகரட்சகர் சபை) அல்லது “நாட்டார் வேதம்” (Native Church) என்ற தனிப்பிரிவே இவ்வூரை மையமாக வைத்து உருவாயிற்று. பிரகாசபுரம் மூக்குப்பேரியைச் சுற்றியுள்ள உய்யாங்குடி, குளத்துக்குடி, சாலைப்புதூர், வாழையடி, பாட்டக்கரை, வகுத்தான்குப்பம் முதலிய ஊர்களைச் சேர்ந்த சான்றோர் குலக் கிறிஸ்தவர் அனைவரும் “நாட்டார் வேதம்” எனப்பட்ட இச்சபையில் இணைந்தனர். சாயர்புரத்திலிருந்த ஜி.யு. போப் இக்காலகட்டத்தில் சான்றோர் சமூகம் பற்றிய புரிந்துணர்வு உடையவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாயர்புரம் பள்ளியின் நிர்வாகியான கெய்மார் என்பவர் சட்டாம்பிள்ளை ஐயாவின் சுயேச்சையான போக்கினாலும் தமது சாதிப் பாரம்பரியத்தின்பால் அவர் கொண்டிருந்த பெருமித உணர்வுடன்கூடிய நடவடிக்கைகளாலும் வெறுப்புற்று அவருக்கு எதிரான நிலையை மேற்கொண்டார். 1849இல் மூக்குப்பேரி உபதேசியாரான சாமியடியான் என்பவரையும் சட்டாம்பிள்ளை ஐயாவையும் கெய்மார் எஸ்.பி.ஜி. திருச்சபையை விட்டு நீக்கினார். ஜி.யு. போப் இவர்கள்பால் அனுதாபம் காட்டியதை விரும்பாத கால்டுவெல் போப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகளைத் தூண்டினார். அவற்றின் விளைவாக, எஸ்.பி.ஜி. திருச்சபை ஜி.யு. போப்பை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பிற்று.{[17]}

சான்றோர் குலத்தவர் பற்றிய கால்டுவெல்லின் அவதூறுகள் தளர்ச்சியின்றித் தொடர்ந்து நடந்துவந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த சான்றோர் குலத்தவர் சிலரும் சட்டாம்பிள்ளை ஐயாவுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கினர். 1855ஆம் ஆண்டில் நாசரேத்தையடுத்த பிரகாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்த மதுரநாயகம் என்ற முக்கந்தர் பிரிவுச் சான்றோர் நெல்லை மாவட்டத்தின் வட பகுதியில் சர்ச் மிஷனரி சொசைட்டி பிரச்சாரக் குழிவின் சார்பில் தாமஸ் கஜெடன் ராக்லாண்டு என்ற மிஷனரியுடன் இரண்டு மாதங்கள் தம்முடைய சொந்தச் செலவில் ஊழியம் புரிந்துவந்தார். இவரைப் பற்றி ராக்லாண்டு மக்களின் மரியாதைக்குரியவர் என்றும், அமைதியானவர்; திறமையானவர்; சிந்தனையாற்றலும் பிரச்சாரத் திறமையும் உடையவர் என்றும் புகழ்ந்து எழுதியுள்ளார்.{[18]} மதுரநாயகமும் விரைவில் சி.எம்.சி. திருச்சபையிலிருந்து விலகிச் சட்டாம்பிள்ளை ஐயாவின் நாட்டார் வேதத்தில் இணைந்தார்.

குலப் பெருமிதமும் ஐரோப்பிய உயர்வு மனப்பான்மைக்கு எதிரான தன்மான உணர்ச்சியும் மிகுந்த இத்தகைய கிறிஸ்தவச் சான்றோர்கள் ஐரோப்பிய மிஷனரிமார்களின் அடாவடி நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுச் சுயேச்சையாகச் செயல்படத் தொடங்கினர். இதனால் இவர்களின் மீது ஆத்திரம் கொண்ட கால்டுவெல் முதலானோர் குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொண்டு இவர்களை மிரட்ட முயன்றனர். பகைமை முற்றி முதிர்ந்ததன் விளைவாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சான்றோர் சமூகத்தவருள் பெரும்பாலானோர் கால்டுவெல்லை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இவர்களுள் சிலர் கால்டுவெல்லின் வக்கிரச் செயல்களையும் அடாவடிகளையும் பற்றி இங்கிலாந்துக்கே புகார் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக, 1883ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி, ஒய். ஞானமுத்து நாடார் என்பவர் கால்டுவெல்லின் நூலினை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் இங்கிலாந்துப் பிரதமர் ரைட் ஆனரபிள் டபிள்யூ.பி. கிளாட்ஸ்டோனுக்கு மனு ஒன்றை அனுப்ப நேர்ந்தது.{[19]} இவர் சட்டாம்பிள்ளை ஐயாவின் நாட்டார் வேதத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய எதிர்நடவடிக்கைகளுக்குப் பின்னரும் கால்டுவெல் தம்முடைய செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாததால் தன்மான உணர்ச்சி மிக்க சான்றோர் குலத்தவர்கள் மத வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்தனர். கால்டுவெல்லுக்கு எதிரான பகிரங்கமான கொலை முயற்சிகளும் நடந்தேறத் தொடங்கின. அம்முயற்சிகள் வெற்றிபெறவில்லையாயினும், உயிருக்கு அஞ்சிக் கால்டுவெல் நெல்லைச் சீமையை விட்டுக் கோடைக்கானலுக்குக் குடிபெயர நேர்ந்தது.

தோள்சீலைக் கலகத்துடன் நேரடியாக இந்நிகழ்வுகள் தொடர்புடையவை அல்ல. ஆனால், சான்றோர் சமுகம் தொடர்பான சமூகவியல் நிகழ்வுகள் என்ற சங்கிலித் தொடரில் கால்டுவெல் முதன்மையான ஒரு கண்ணியாக இருந்துள்ளார் என்ற உண்மையை நிலைநாட்டுவதற்காகவே இவ்விவரங்களைக் குறிப்பிட நேர்ந்தது.

ராபர்ட் கால்டுவெல்லின் திருப்பணிகள் முழு வீச்சில் தொடங்கிய அதே காலகட்டத்தில் லண்டன் மிஷனைச் சேர்ந்த ஸாஃப்டர் (Schafter) போன்ற பல மிஷனரிமார்களின் மதமாற்றப் பணி நெல்லைச் சீமையில் நடந்து வந்தது. நெல்லைச் சீமையிலுள்ள ஆலங்குளம் சரகத்துக்குட்பட்ட ஆவுடைநாடானூர் (தற்போது ஆவுடையானூர் என அழைக்கப்படுகிறது), கடையம், லட்சுமிபுரம் ஆகிய ஊர்களை மையமாகக் கொண்டு புராடெஸ்டெண்ட் மிஷனரிமார்களின் மதமாற்றப் பணிக்கு எதிராக விபூதி சங்கம் என்ற ஓர் இயக்கம் செயல்பட்டுவந்தது. இந்து சமயத்திலேயே நீடித்த சான்றோர் சமூகத்தவர் மத்தியில் விபூதி சங்கத்திற்கு நல்ல செல்வாக்கு இருந்தது. லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அழகப்ப நாடான் என்பவரின் தலைமையில் விபூதி சங்கம் செயல்பட்டதாகப் புராடெஸ்டெண்ட் மிஷனரிமார் எழுதி வைத்துள்ளனர்.

ஆவுடைநாடானூரின் மிராசுதாராக இருந்த சாணார் குலத்தவர் ஒருவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் வருவாய்த்துறை, நீதித்துறை ஆகியவற்றில் பணியாளராக இருந்த தம்முடைய கையாள்கள் துணையுடன் சமூகத்தில் அதிகாரம் செலுத்தி வந்தாரென்றும் தமது ஊரின் சுற்றுவட்டாரத்திலுள்ள சுமார் ஆயிரம் பேரையாவது சேர்த்துக்கொண்டு, மிஷனரிமார்களுக்கு எதிரான செயல்களில் அவர்களை ஈடுபடுத்தி வழிநடத்திச் செல்லும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்றும் மிஷனரிமார்கள் இவரைப்பற்றி எழுதிவைத்துள்ளனர். லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அழகப்பநாடான் தலைமையில் 3000 பேர் கொண்ட குழுவினர் ஒன்று திரண்டு அப்பகுதிகளிலுள்ள மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வீடுகளுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவ்வீட்டிலுள்ளவர்கள் நெற்றியில் விபூதியைப் பூசிவந்தனர் என்றும், அவ்வாறு பூசிக்கொள்ள மறுப்பவர்களைக் கடுமையாகத் தாக்கிவந்தனர் என்றும், ரெவரண்டு ஸாஃப்டர் நெல்லை மாவட்டக் கலெக்டரை நேரில் சந்தித்து இத்தகைய செயல்கள் குறித்துப் புகார் கூறிப் பலரைக் கைது செய்ய வைத்தார் என்றும் மிஷனரிமார் குறிப்பிட்டுள்ளனர்.

விபூதி சங்கத் தலைவர் அழகப்பநாடான், மாவட்டக் கலெக்டர் மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகச் சென்னைக்குச் சென்று தலைமறைவாகச் சில நாள்கள் இருந்தார். ஆனால், விரைவில் கைதுசெய்யப்பட்டு நெல்லைக்குக் கொண்டுவரப்பட்டார். விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரும் குற்றம் புரிந்ததற்கான சரியான சாட்சிகள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அழகப்பநாடானுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கிறிஸ்தவர்கள் அஞ்சினர் என்றும், கடையத்தைச் சேர்ந்த பிராம்மணர்கள் விபூதி சங்கத்தினர் தொடர்பான வழக்குச் செலவுக்குப் பண உதவி செய்வதாகவும், அதற்குப் பணம் திரட்டுவதற்காக அந்தப் பகுதி மக்களிடம் வரி வசூலித்தார்களென்றும் வதந்திகள் நிலவினவென்றும், ஆனால் இவ்வதந்திகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் மிஷனரிமார் எழுதிவைத்துள்ளனர்.{[20]}

1846ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் எல்லைப் பகுதியான நெல்லைச் சீமையில் சான்றோர் சமூகத்தவர் வாழ்க்கை முறையும், சமூக அந்தஸ்தும் சுய கெளரவத்துடன் கூடியவையாக இருந்து வந்தன என்பதையும், தாம் சார்ந்திருந்த சமயம் குறித்த இழிவுணர்ச்சி ஏதுமின்றி, சமூகத் தலைமைக்குரிய பெருமித உணர்வுடனே சான்றோர் சமூகத்தவர் இயங்கி வந்ததையும் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார்களின் சொற்களிலிருந்தே வெளிப்படுத்துவதற்காகத்தான் இவற்றைக் குறிப்பிட நேர்ந்தது. இத்தகைய சமூக நிலவரங்களைப் பொருத்தவரை திருவிதாங்கோடு அரசாட்சிப் பகுதி மட்டும், இவற்றின் பாதிப்பின்றி ஒரு தீவு போன்று நீடித்து வந்தது எனக் கருதிட இயலாது.

நெல்லைச் சீமையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சான்றோர் குலத்தவர் தேவாலய வழிபாட்டு நடவடிக்கைகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு வழிபாட்டிலும் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, அவர்களின் பெயர் முதலிய விவரங்கள், அவர்கள் பைபிள் குறித்த முந்தைய பாடங்களை ஒழுங்காக ஒப்பிக்கிறார்களா என்பது போன்ற குறிப்புகளை ஒழுங்குறப் பராமரித்து வந்தது ஆகிய விவரங்களை மிஷனரிமார்கள் வியப்புடன் எழுதி வைத்துள்ளனர்.{[21]} இத்தகைய ஒழுங்குமுறை புராடெஸ்டெண்ட் சமயம் அறிமுகமாவதற்கு முன்னரே சான்றோர் சமூகத்தவர் குறிப்பிடத்தக்க கல்வியறிவு மற்றும் கற்பிக்கும் அனுபவம் பெற்றிருந்ததை உணர்த்துகிறது. மேற்குறித்த விவரங்களுடன் சான்றோர் குலத்தைச் சேர்ந்த ஆடவரும் பெண்டிரும் தம்முடைய பாரம்பரியமான உடையுடுத்தும் மரபுகளை எத்தகைய ஒழுங்கு முறையுடன் பேணிவந்தனர் என்பதையும் அம்மிஷனரிமார்கள் குறித்து வைத்துள்ளனர்.{[22]}

இக்குறிப்பு, தென் திருவிதாங்கோடு பிரதேசத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த, அதாவது இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் நிலவி வந்த வழக்கத்துடன் எவ்வாறு பொருந்துகின்றது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஓர் ஆவணக் குறிப்புள்ளது. தென் திருவிதாங்கோடுப் பகுதி லண்டன் மிஷனைச் சேர்ந்த மிஷனரிமார் ஆறு பேர் (ஜேம்ஸ் ரஸ்ஸல், ஜான் ஆப்ஸ், ஜான் காக்ஸ், எபனேசர் லூவஸ், ஃபிரடெரிக் பெயிலிஸ், ஜான் ஜோல் டென்னிஸ்) திருவிதாங்கோடு அரசருக்கு ரெஸிடெண்ட் லெஃப்டினண்ட் ஜெனரல் டபிள்யூ கல்லன் மூலமாக 1859 பிப்ரவரி 7ஆம் தேதி மனு ஒன்றினைச் சமர்ப்பித்த செய்தி சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனுவின் பிரதி ஒன்று “மார்ச் 12ஆம் தேதி வரை திருவிதாங்கோடு அரசரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்ற குறிப்புடன் மார்ச் 17ஆம் தேதியன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலர் டி. பைகிராஃப்ட் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அம்மனுவின் எட்டாம் பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“இங்கெல்லாம் பரவலாகத் தவறான ஒரு கருத்து அடிக்கடி வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அஞ்ஞானிகளின்{[23]} சமய நெறியைப் பின்பற்றுகிற பெண்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகிற பெண்கள்தாம் மேலாடை உடுத்தக் கற்பித்தனர் என்ற கூற்று தவறு என்பது மேன்மை தங்கிய மஹாராஜா அவர்களுக்கு தற்போது மனதில் பட்டிருக்கும். ஏனெனில், இந்த தேசத்தில்{[24]} புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயம் அறிமுகமாவதற்கு முன்னரிருந்தே பணவசதி படைத்த சாணார் சாதிக் குடும்பப் பெண்டிர் பலர் மேலாடை உடுத்தி வந்துள்ளனர். மேலும், அஞ்ஞானிகளின் சமய நெறியைப் பின்பற்றுகின்ற சாணார் சமூகக் குடும்பப் பெண்டிர் நூற்றுக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் வருடத்தில் பாதி நாள்களைத் திருநெல்வேலிப் பகுதியில் கழிப்பர். அங்கெல்லாம் எவ்வித இடையூறுமின்றி மேலாடை உடுத்த அவர்கள் அனுமதிக்கப்பட்டே வருகின்றனர். வருடத்தில் மீதி நாள்களைக் கழிப்பதற்குத் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளுக்குத் திரும்பி வந்த பின்னர், அதே பாணியில் அவர்கள் தொடர்ந்து உடையணிந்து வருகின்றனர். மேலும், இப்பெண்டிரின் குடும்பங்கள் அங்குமிங்குமாய்ப் பரவிக்கிடக்கும், எண்ணற்ற சிற்றூர்களில் வசிக்கின்ற இதே சமூகத்தைச் சேர்ந்த பிற பெண்டிரும் இப்பணக்காரச் சான்றோர் சமூகப் பெண்டிரை முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் படிப்படியாக இதே போல உடையுடுத்தப் பழகிவிட்டனர். இப்பிரதேசத்தில் காலப்போக்கில் இவ்வாறு உடையுடுத்துவது ஒரு விதிவிலக்கு என்று கூறமுடியாதபடி விதியாகவே ஆகிவிட்டது. மேலாடை உடுத்தும் வழக்கத்தை அஞ்ஞானிகளின் சமய மார்க்கத்தைப் பின்பற்றும் சாணார் சமூகப் பெண்டிர், தாமாகவே கடைபிடித்து வருகிறார்களே தவிர இவ்வழக்கம் கிறிஸ்தவராக மாறிவிட்ட இதே சமூகப் பெண்டிர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதன்று.”

இம்மனுவின் ஏழாம் பத்தியில், “இந்த தேசத்தின் சட்டங்களுக்கு முரணான வகையில் உடையுடுத்த வேண்டாம் என்றே எங்களிடம் ஆலோசனை கேட்போர்க்கெல்லாம் நாங்கள் அறிவுரை கூறிவருகிறோம்” என்றும் மிஷனரிமார் குறிப்பிட்டுள்ளனர். மேற்குறித்த மனுவில் இடம்பெற்றுள்ள வாசகங்களைப் படிக்கும்போதே தோள்சீலைப் பிரச்சினை குறித்த உண்மை நிலை நமக்குத் தெளிவாகத் தெரியவரும். லண்டன் மிஷனைச் சேர்ந்த சமயப் பரப்புநர்கள் இவ்வாறு உண்மையைப் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? “இந்தியக் காட்டுமிராண்டி”களிடையே நாகரிகத்தையும், சட்டம் ஒழுங்கையும் கற்பிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாக எண்ணியும் எழுதியும் வந்த வெள்ளையர்கள், குறிப்பாகப் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிவந்த ஆங்கிலேயர்கள் இத்தகைய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருக்கிறார்கள் என்றால், புராடெஸ்டெண்ட் சமயத்திற்கு மதம் மாறிய மக்களுள் பெரும்பான்மையினர் சான்றோர் குலத்தவராக இருந்ததாலும் (அவ்வாறு மதம் மாறிய சான்றோர் குலத்தவர்கள் சான்றோர் குலத்தின் கீழ்மட்ட அடுக்குகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும்) அவர்களிடையே எஞ்சியிருந்த குலப் பெருமித உணர்வு இந்த உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியதாலுமேதான். வரலாற்று முக்கியத்துவமுடைய இத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் லண்டன் மிஷனரிமார்களிடமிருந்து வெளிப்படுவதற்கான உடனடிக் காரணம் வேறொன்றும் உண்டு. அதனை அடுத்த அத்தியாயத்தில் பரிசீலிப்போம்.

நாம் முன்னரே பரிசீலித்தது போல, ஐயா வைகுண்டர் சான்றோர் சமூகத்தவரின் குலப் பெருமித உணர்வை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். அதனால்தான், அவர் மீது லண்டன் மிஷன் சமயப் பரப்புநர்கள் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டிருந்தார்கள். இவ்வாறு சான்றோர் சமூகத்தவரின் அனைத்து மட்டங்களிலும் தம்முடைய பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்த நிலை புராடெஸ்டெண்ட் சமயப் பரப்புநர்களிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திற்று.

கிறிஸ்தவ சமயம், குறிப்பாகப் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயம் இந்து மதத்தின் சாதி அமைப்பு முறையால் வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையே வசீகரித்தது என்று பரவலாகக் கருதப்படும் மாயைக்கு மாறான ஓர் ஆதாரமாக நெல்லைச் சீமை நாசரேத் பிரகாசபுரத்தில் சட்டாம்பிள்ளை ஐயாவால் தனித்துப் பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட “ஹிண்டு சர்ச் ஆஃப் ஜீஸஸ்” என்ற அமைப்பு இருந்தது என்பதைக் கண்டோம். இவ்வாறெல்லாம் இருந்தும் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றிய கவலை ஏதுமின்றி, 1877ஆம் ஆண்டில் திருநெல்வேலியின் பிஷப்பாகப் பதவி உயர்வு பெற்றுப் பட்டம் சூட்டப்பெற்ற கால்டுவெல், மந்தை மந்தையாக அப்பகுதி மக்களை மதம் மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

1880ஆம் ஆண்டில் திருநெல்வேலி மிஷன் தோற்றுவிக்கப்பட்ட நூறாவது ஆண்டுவிழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கால்டுவெல் பின்வருமாறு முழங்கினார்: “வெறும் 90 பேராக இருந்த கிறிஸ்துவர்கள், இந்த 100 ஆண்டுகளில் 50203 பேராக வளர்ந்துள்ளோம். இதே வேகத்துடன் பணியாற்றினால் 1980க்குள் நெல்லை மாவட்டம் முழுமையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடும்.”{[25]} கால்டுவெல் குறிப்பிட்டுள்ள வேறொரு புள்ளிவிவரத்தையும் இத்துடன் சேர்த்துப் படித்தால்தான் புராடெஸ்டெண்ட் மதமாற்றம் குறித்த முழுமையான பரிமாணம் புலப்படும்: “இந்தியாவிலுள்ள அனைத்துச் சாதிகளிலும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய நபர்களின் எண்ணிக்கையைச் சாதிவாரியாகக் கணக்கிட்டால் சாணார் சாதிக் கிறிஸ்துவர்களே அதிகம் உள்ளனர்.”{[26]}

1881ஆம் ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் சான்றோர் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவரால் கால்டுவெல்லுக்குக் கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம் ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல் இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சான்றோர் சமூகத்தவரின் உயர் அடுக்கினரான நிலைமைக்கார நாடார்கள் பற்றித் தமக்கு மிகத் தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றும், அவர்கள் பெரும் நிலப் பிரபுக்களாகவும், ஜோடி வரி வசூலிக்கின்ற அந்தஸ்து மிக்க சாதியினராகவும் இருக்கின்ற உண்மையைத் தாம் உணர்ந்ததாகவும் கால்டுவெல் எழுதியுள்ளார். 1841இல் இடையன்குடியில் குடியேறியபோதே குட்டம் மார்த்தாண்ட நாடாக்கள் ஜோடி வரி வசூலிக்க முயன்றபோது அதற்கு மறுப்புத் தெரிவித்த கால்டுவெல்லுக்குச் சான்றோர் குலத்தவரின் குலப் பெருமித உணர்வைப் புரிந்து கொள்வதற்கு அரை நூற்றாண்டுக் காலம் பிடித்திருக்கிறது என்பது பெரும் விந்தையே. உண்மை என்னவென்றால், கால்டுவெல்லின் பொருளாதார நலன்களும் இன, மத ஆதிக்க உணர்வுகளும் இவ்வுண்மைகளை ஏற்றுக்கொண்டு எழுதுவதற்குத் தடையாக இருந்துள்ளன என்பதேயாகும்.

கால்டுவெல்லின் மாமனார் (மனைவி எலிஸாவின் தந்தையார்) சார்ல்ஸ் மால்ட் 1832ஆம் ஆண்டிலேயே வலைப்பின்னல் துணி (லேஸ்) தைக்கும் கலையை நாகர்கோவில் நகரில் அறிமுகப்படுத்தியதோடு தையல் கல்விக்கூடமும் தொடங்கினார். கச்சுக்கு மாற்றாகக் கைவைத்த ரவிக்கை என்பதை இவர்தாம் அறிமுகப்படுத்தியவர் என்று மிஷனரிமார் பெருமிதத்துடன் எழுதி வைத்துள்ளனர். ஆனால், உண்மை நிலை அதுவன்று என்பதும் நம்மால் முன்னரே விளக்கப்பட்டது. ரவிக்கை தைக்கும் முறையில் தையல் இயந்திரத்தின் அறிமுகம், விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் ரவிக்கைகளைத் தைக்கின்ற தொழில்நுட்பம் போன்றவற்றை இந்தியாவின் தென்கோடியிலுள்ள ஒரு சமஸ்தானத்தில் அறிமுகம் செய்தவர் என்ற பெருமையை வேண்டுமானால் சார்ல்ஸ் மால்டுக்கு வழங்கலாமே தவிர ரவிக்கையை அறிமுகம் செய்தவர் என்று குறிப்பிடுவது உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட வரலாற்றுப் பிழையாகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற் புரட்சியின் விளைவாக இந்தியப் பருத்தி போன்ற வேளாண் விளைபொருள்களை இங்கிலாந்துக்கு மூட்டை மூட்டையாகக் கொணர்ந்து அங்கு நூலாக நூற்றுத் துணியாக நெய்து மீண்டும் இந்தியாவுக்குக் கப்பல் மூலம் கொணர்ந்து பெருத்த லாபத்திற்குக் கிழக்கிந்தியக் கும்பினி விற்றுவந்தது. இத்தகைய துணிகளை விரைந்து தைத்து ஆடைகளாக உருவாக்குவதற்குத் தையல் இயந்திரங்களையும் இறக்குமதி செய்தது. தையல் கலையைக் கற்பிக்கும் தொழிற்கூடங்களையும் லண்டன் மிஷனரிமார் போன்ற மதபோதகர்கள் மூலம் நிறுவிற்று. கால்டுவெல்லின் மனைவியான எலிஸா லேஸ் துணி தைக்கும் தொழிற்கூடத்தை இடையன்குடியில் நிறுவிப் பலருக்கு அத்தொழிலைக் கற்பித்தார். இவரது தகப்பனாரான சார்ல்ஸ் மால்ட் 1818இல் லண்டன் மிஷனைச் சேர்ந்த மிஷனரியும் நாகர்கோயில் நகர சிவில் நீதிபதியுமான சார்ல்ஸ் மீடின் சகோதரி மார்த்தாவை மணந்திருந்தார். சார்ல்ஸ் மீடு இங்கிலாந்தின் காஸ்போர்ட் அகாடமியில் அச்சுத் தொழிலும் இவரது மைத்துனர் சார்ல்ஸ் மால்ட் அதே அகாடமியில் தையல் தொழிலும் கற்றிருந்தனர். இத்தகைய பொருளாதார, தொழில், வணிக நலன்களும் அந்நலன்கள் குறித்த உறவுகளும் இம்மூவரிடையே நீடித்து வந்தன.

1855ஆம் ஆண்டுக்குப் பிறகு கால்டுவெல்லின் மாமனார் சார்ல்ஸ் மால்ட் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று 1858இல் அங்கு மரணமடைந்தார். சார்ல்ஸ் மீடு 1851ஆம் ஆண்டில் வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ உபதேசியார் ஒருவரின் மகளான லோயிஸ் விதுல்ப் என்ற பெண்மணியை (அவரது இரண்டாம் மனைவியும் மரணமடைந்ததால்) மூன்றாம் தாரமாக மணம் புரிந்ததன் விளைவாகக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக அதே ஆண்டில் திருவனந்தபுரத்திற்குச் சென்றுவிட்டார். இருப்பினும், 1873ஆம் ஆண்டுவரை அவருக்கும் கால்டுவெல்லுக்கும் தொடர்பு நீடித்து வந்துள்ளது. இத்தகைய தொடர்புகளின் விளைவாகக் கி.பி. 1865ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு அரசிடமிருந்து அசும்பு மலை என்ற மலைப் பகுதியையே குத்தகைக்கு எடுத்துக் காஃபி எஸ்டேட் ஒன்றை உருவாக்கினார் கால்டுவெல்.{[27]} அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் உள்ள மலைத் தொடர்கள், வனப் பகுதிகள் பல பிராந்தன் சாணான் போன்ற சான்றோர் குலத்தவருக்கு உரியனவாக இருந்துள்ளன. அவற்றையெல்லாம் தங்கள் சொத்தாக்கிக்கொண்டு, சான்றோர் சமூகத்தவரின் பாரம்பரியப் பெருமிதத்தைக் குலைக்கும்வண்ணம் வரலாற்றைத் திரித்து எழுதிய கால்டுவெல் போன்றவர்களுக்கு அவற்றைத் தாரை வார்த்தது ஆங்கிலேயக் காலனியாதிக்கம். திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் அரசியல் வரலாற்றிலும் சமூக வரலாற்றிலும் கி.பி. 1818 தொடங்கி, 1859ஆம் ஆண்டு வரை நிலவிய அமைதியின்மைக்கான பின்னணி என்ன, வரலாற்று நிகழ்வுகளின் போக்கினை இயக்கிய சூட்சுமக்கரங்களின் சொந்தக்காரர்கள் யார் யார் என்பன போன்ற விவரங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்காகவே மேற்குறித்தவற்றை விவாதிப்பது தேவையாயிற்று.

அடிக்குறிப்புகள்

{#[1]#} சாணாறு என்பது போல எழுதப்பட்டுள்ளது. தொண்டை நாடு சான்றோருடைத்து என்ற பழமொழியின் அடிப்படையில் “ஜெயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டைச் சான்றோர் நாடு” எனக் குறிப்பிடவந்த எல்லிஸ் அதன் சுருங்கிய வடிவமாகிய அல்லது மக்களின் பேச்சு வழக்காகிய “ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு” என்ற வடிவத்தை ஆசிரியப்பாவின் சீர்வரையறைக்கு இணங்கப் பயன்படுத்தியுள்ளார். அதனைக் கல்வெட்டில் பொறிக்கும்போது பொறித்தவரின் கவனக்குறைவால் அல்லது புரிதல் இன்மையால் சாணாறு அல்லது சாணுறு என்பது போலப் பொறித்துள்ளனர் போலும். இதே பாடலில் பிரிட்டானிக், ஸ்காட்டிஷ், ஸ்பானிஷ் என்ற மூன்று நாட்டு இனங்களையும் குறிப்பிடுவதற்கு பிரிதன்னிய, சுகோத்திய, ஸ்பானிய என்ற வடிவங்களை எல்லிஸ் பயன்படுத்தியுள்ளார். இது கல்லில் பொறிக்கப்படும்போது பிரிதன்னிய, சுகோத்திய, விபானிய எனத் தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இது மேற்குறித்த தவறான பொறிப்புடன் ஒப்பிடத்தக்கது.

{#[2]#} ப. 106, கிறிஸ்துவமும் தமிழும், மயிலை. சீனி. வேங்கடசாமி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1980.

{#[3]#} பின்னிணைப்பு, சான்றோர் வரலாறு, கி.மு.ம. மரிய அந்தோணி நாடார், பூம்புகார் பதிப்பகம், சென்னை-600108, 1996.

{#[4]#} Peasant Naboly: Agrarian Radicalism in late 18th century – Tamil Country – Chitra Sivakumar and S.S. Sivakumar, Hindustan Publishing Corporation, New Delhi – 5, 1993.

{#[5]#} பக். 148, திராவிடச் சான்று, தாமஸ் டிரவுட்மன், தமிழில்: இராம. சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்-629001, 2007.

{#[6]#} பக். 22-23, வட திருநெல்வேலியின் ஆங்கிலிகன் திருச்சபை வரலாறு (1854-1877), பாகம் 1, எஃப். ஜான் தனசேகரன், Ragland Memorial Church (CSI), சிவகாசி, 1996.

{#[7]#} p. 69, Reminiscences of Bishop Caldwell, edited by J.L. Wyatt, Addis & Co., Madaras, 1894. (Quoted in p. 41, Robert Caldwell – a scholar missionary in colonial South India, Y. Vincent Kumaradoss, ISPCK, Kashmere Gate, New Delhi – 110006, 2008.)

{#[8]#} கால்டுவெல்லுக்கு நாகர்கோவில் நகருக்கும் இருந்த தொடர்பு பற்றிய ஒரு தவறான குறிப்பு சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. “1877இல் நாகர்கோவில் திருமறைப் பள்ளியின் ஆசிரியர் குழுவில் டாக்டர் கால்டுவெல் சில மாதங்கள் ஆற்றிய பணி மிகவும் சிறப்புடையதாகும் என்றும் அன்னாரின் கல்விப்பணி அப்பள்ளியின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தகும் என்றும் நாகர்கோவில் திருச்சபை வரலாறு தெரிவிக்கின்றது” என டாக்டர் எஸ். பத்மநாபன் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டுவரும் ஆய்வுக் களஞ்சியம் ஜுலை 2000 மாத இதழில் எழுதியுள்ளார். 1877இல் நாகர்கோவில் செமினரியில் (திருமறைப்பள்ளியில்) சில மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர் நார்பர்ட் கால்டுவெல் என்ற இளைஞர் ஆவார். இவர் கிளாஸ்கோவிலிருந்த Free Church Training Collegeஇல் கல்வி கற்றவர். பார்க்க: p. 126, Conversion and social equality in India, Dick Kooiman.

{#[9]#} இந்நூலுக்காகவே கால்டுவெல் கல்வி கற்ற கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிற்று என்பது குறிப்பிடத்தக்கது.

{#[10]#} “பண்டைத் தமிழரின் சமூக அமைப்பு குறித்த ஆய்வுகள்”, சுவீரா ஜெயஸ்வால் (மொழிபெயர்ப்பு), ஆய்வு வட்டக் கட்டுரைகள், தொகுதி 3, சென்னை ஆய்வு வட்டம், வடபழனி.

{#[11]#} p. 14, Temple Entry Movement and the Sivakasi Riots, Dr. B. Sobhanan, Raj Publications, Madurai – 625021, 1985.

{#[12]#} பக். 121, கிருஸ்துவமும் தமிழ்சூழலும், ஆ. சிவசுப்பிரமணியன், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை-606601, ஆகஸ்டு 2007.

{#[13]#} பக். 11, வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும், எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 2004.

{#[14]#} தஞ்சை மாவட்டத்திலிருந்து குடியேற்றப்பட்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஊரே நாசரேத் ஆகும். பார்க்க: Tanjore Gazetteer, Fr. Hemingway, 1906.

{#[15]#} பக். 189, சான்றோர் வரலாறு, கி.மு.ம. மரிய அந்தோணி நாடார், பூம்புகார் பதிப்பகம், சென்னை-600108, 1996.

{#[16]#} பக். 118, சான்றோர் வரலாறு, கி.மு.ம. மரிய அந்தோணி நாடார், பூம்புகார் பதிப்பகம், சென்னை-600108, 1996.

{#[17]#} ஆர்மீனிய மெதாடிஸ்ட் (புராட்டெஸ்டெண்ட்) திருச்சபை எனப்பட்ட வெஸ்லேயன் மிஷன் சார்பாக இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட ஜார்ஜ் யுக்ளோவ் போப் (கி.பி. 1820-1903) இராமானுஜ கவிராயரிடம் தமிழ் கற்றவராவார். இவரும் சிலைவழிபாட்டுக்கும் இந்து சமய நம்பிக்கைகளுக்கும் எதிரான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவரே. ஆயினும் திருவாசகம் போன்ற சைவ சமய பக்தி இலக்கியங்களின்மீது மரியாதையும் ஈடுபாடும் கொண்டவர் என்பது தமிழுலகம் அறிந்த செய்தியாகும். ஜி.யூ. போப் பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: p. 57, Contribution of European Scholars to Tamil, Dr. K. Meenakshi Sundaram, University of Madras, 1974.

{#[18]#} பக். 76, வட திருநெல்வேலியின் ஆங்கிலிகன் திருச்சபை வரலாறு (1854-1877), பாகம் 1, எஃப். ஜான் தனசேகரன், பதிப்பு: Ragland Memorial Church (CSI), சிவகாசி, 1996.

{#[19]#} pp. A63-64, The History of the Nadars, Unpublished Ph.D. Thesis, Prof. C. Sarada Devi, (Head of the Department of History, V.V. Vanniaperumal College for Women, Virudhunagar,) Madurai Kamaraj University, 1985.

{#[20]#} A Memoir of the Rev. Thomas Gajetan Ragland, B.D., Chapter VI, Edited by Rev. Thomas Thomason Perowne, B.D., Seeley, Jackson and Halliday, Fleet Street, London, 1861.

{#[21]#} ibid

{#[22]#} இந்நூலின் “உடை உடுத்தும் முறைகளும் வேணாட்டு வாழ்வியலும்” அத்தியாயத்தில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

{#[23]#} Heathen என்பது செமித்திய (யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய) மதங்களைப் பின்பற்றாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இழிவுக் குறிப்புடன் கூடிய சொல்லாகும். மெய்யறிவு பெறாதவர்கள், அதாவது அஞ்ஞானிகள் என்பது இதன் பொருள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கவே இங்கு இச்சொல் மிஷனரிமார்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

{#[24]#} This country என்ற தொடர் “இந்த தேசத்தில்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது திருவிதாங்கோடு சமஸ்தானப் பகுதியைக் குறிக்கும்.

{#[25]#} p. 366, Tnly District Gazetteer, Vol I, Editor: K.S.K. Velmani, Tamil Nadu State Archives, 2002.

{#[26]#}p. 415,Samuel Mateer, Native Life in Travancore, மேற்கோள்: p. 36, Sri Vaikunda Swamigal and the struggle for Social equality in South India, Dr. R. Ponnu, Ram Publishers, Madurai-625006, 2000.

{#[27]#} அசும்பு என்றால் வற்றாத நீரூறும் இடம் எனப்பொருள். குமரி மாவட்டத்தில் நீர்வளம் மிகுந்த மலைகளுள் இதுவும் ஒன்றாகும். அசும்பு மலையில்தான் புகழ்பெற்ற ‘உலக்கை அருவி’ உள்ளது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard