பழமையான தமிழ் இலக்கியங்கள் வேதங்களை போற்றுகின்றன. வேதம் ப்ண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதை பார்த்தோம். 19 ஆம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு தனி அடையாளம் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் புகுத்திய ஆரிய-திராவிட இனவாதத்தை சில தமிழறிஞர்களும் ஆராயாமல் ஏற்றார்கள். இப்பெரியோரின் தமிழ் பற்று குறைத்து மதிப்பிட்த் தக்கதல்ல. ஆனால் இவர்களிடம் சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி உருவாகியிருந்தது. அது ஆரியர்களின் மொழி. இங்குள்ள பிராம்மணர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள்.
முதன் முதலாக திராவிட மொழிக்குடும்பம் தனித்தன்மை கொண்டது என்பதை சொன்னவர் எல்லிஸ்தான். அதை அவர் கண்டுபிடிக்க துணை நின்ற சக ஆராய்ச்சியாளர்களே பிராம்மணர்கள்தான். ஆனால் எல்லிஸிடம் இந்திய பண்பாடு குறித்த துவேஷம் எதுவும் இல்லை. பின்னாட்களில் இந்த மொழியியல் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்த கால்டுவெல் அதனை இனவாத கோட்பாடாக உருமாற்றினார். ஆனால் முன்னோடி ஆராய்ச்சியாளரான எல்லிஸுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர் அளிக்கவே இல்லை. இது குறித்து தென்னிந்திய சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் (SISHRI) அமைப்பின் ஆராய்ச்சியாளர்களான எஸ்.ராமச்சந்திரனும், அ.கணேசனும் கூறுவது முக்கியமானது:
திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.
இலக்கியன்: ஆனால் ’ஆரிய சதி’ என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இனவாத கோட்பாட்டுடன் மொழி குடும்ப கோட்பாட்டை விஷமத்தனமாக முடிச்சு போட்ட கால்டுவெலின் செயல் அபிராம்மண சமூக ஆர்வலர்களை கவர்ந்தது. இவர்கள் ஒன்றும் ஏழைகளுக்காக பாடுபடுவோர் அல்ல. மாறாக ஆதிக்க சாதியினர்தாம். என்றாலும் இவர்கள் இதை கொண்டு ஒரு சமூக-பண்பாட்டு கோட்பாட்டை உருவாக்க முயன்றனர். அதை அரசியல் தளத்திலும்கொண்டு வந்தனர். அதுதான் திராவிட இயக்கம். சாதி மோதல்கள் சமூக பிளவுகள் எந்த அளவு ஆழமாகின்றனவோ அந்த அளவு தனக்கு நல்லது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. எனவே ஒரு வலுவான தமிழ் அறிஞர்கள் கூட்டம் இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. அதே போல பிராம்மணர்களிலும் தங்களை ‘ஆரிய இனத்தவர்’ என்று சொல்லிக் கொண்டவர்கள் கணிசமாக இருந்தார்கள். இதர தமிழக மக்களைக் காட்டிலும் தாங்கள் பண்பாட்டிலும் இனரீதியாகவும் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் ஏதோ ஒரு வித்த்தில் வெள்ளைக்காரனுடன் இன உறவு உடையவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் அவர்களுக்கு பெருமை இருந்தது.
அரசு பணிகளில் அக்காலத்தில் பிராம்மண ஆதிக்கமும் இருந்தது. வேதம் வேத பாதுகாப்பு என்பதை எல்லாம் ஒதுக்கிவிட்டு அரசு பணிகளில் குமஸ்தாக்களாகவும் வழக்கறிஞர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அதே நேரத்தில் வேதங்களை பாதுகாக்க தமக்கு அளிக்கப்பட்ட சில சமுதாய மேன்மைகளையும் அப்படியே கடைபிடித்தார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு பிராம்மண வெறுப்பு தமிழ்நாடெங்கும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த சூழலில்தான் இந்துமதம் – வடமொழி எல்லாமே பிராம்மண சூழ்ச்சி என்கிற கால்டுவெல்லின் கோட்பாடு பற்றிக் கொண்டது. தமிழர்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும். குறிப்பாக சைவர்கள் இதில் தீவிரமாக குதித்தார்கள். பிராம்மணர்கள் தங்களுடையதாக எதை சொல்கிறார்களோ அவை அத்தனையையும் எதிர்ப்போம். அதெல்லாம் வந்தேறிகள் புகுத்தியதாக சொல்வோம்.
ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. சைவ திருமறைகளும் சரி, பழமையான தமிழ் இலக்கியங்களும் சரி நால்வேதங்களை புகழ்கின்றன. உதாரணமாக திருமூலர் திருமந்திரத்தில் “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத் தகும் அறமெல்லாம் உள” என்கிறார். சைவ சமயத்தின் மூவர் முதலிகளாக அறியப்படும் அப்பர் சுந்தரர் சம்பந்தர் ஆகியோரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் வேதத்தை போற்றி புகழ்கின்றனர். எந்த காலகட்டத்தைச் சார்ந்து நமக்கு தொன்மையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்துள்ளனவோ, அந்த கால கட்டத்திலேயே வேதம் தமிழர் பண்பாட்டில் ஒருங்கிணைந்த இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது.
இவையெல்லாம் பிராம்மண காழ்ப்பால் வேதத்தை தவிர்த்த தனித்தமிழ் சமயம் ஒன்று தமிழர்களுக்கு இருப்பதாக காட்ட எண்ணிய தமிழ் ஆர்வலர்களுக்கு பிரச்சனையாக இருந்தது. எனவே அவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டனர்: இங்கு வேதங்கள் என சொல்லப்படுபவை ருக் யஜுர் சாம அதர்வண வேதங்கள் அல்ல. அவை தமிழருக்கென உருவான தனிப்பெரும் நால் வேதங்கள். கடற்கோளால் அல்லது ஆரிய சூழ்ச்சியால் அவை அழிந்த பிறகு ஆரியர் தமது நால்வேதங்களை சூழ்ச்சியால் புகுத்திவிட்டனர். சைவ பெருமான்களும் தொல் தமிழிலக்கியங்களும் நான்கு வேதங்கள் என சொல்வது அவற்றையே அன்றி வடமொழி வேதங்களை அல்ல.
இதற்கெல்லாம் அவர்கள் என்ன ஆதாரங்களை முன்வைத்தார்கள்? அவை எத்தனை தூரம் உண்மை? என்பவற்றை அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.
இலக்கியன்: தமிழ் வேதம் – தொடர்ச்சி
தமிழர்களின் வேதங்கள் வேறு ஆரியர்களின் வேதங்கள் வேறு. தமிழர்களின் தொன்மையான நான்கு வேதங்களை கடல் கோள் அழித்துவிட்டது. இதையே ஆரியர்கள் கண்டு தங்களிடமும் நான்கு வேதங்கள் இருப்பதாக உருவாக்கிக் கொண்டனர். இதுதான் தமிழ் புத்தெழுச்சியாளர்கள் கூறியது. இதற்கு என்ன ஆதாரம்? அன்று இன்றளவுக்கு புவியியல் துறை வளரவில்லை. கடல் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு குறித்த ஐதீகம் தியஸோபிக்கல் சொஸைட்டி என்கிற பிரம்மஞான சபையினரால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை தமிழ் இனவாத கோட்பாடுகளுடன் கலந்து தமிழர் வாழ்ந்த லெமூரியாவாக குமரி கண்டமாக உருவெடுத்தது. கடல் கொண்ட குமரி கண்டத்தில் வாழ்ந்த நம் தொல்-தமிழ் மூதாதையர் உருவாக்கியதுதான் நான் ம்றைகள். இன்றைய வேதங்கள் அவைகளை நகலெடுத்து பார்ப்பனர்கள்/ஆரியர்கள் உருவாக்கியவை.
முக்கியமான தமிழ் அறிஞராக கருதப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை என்கிற கா.சு.பிள்ளை ’திருநான்மறை விளக்கம்’ எனும் கட்டுரையை 1920களில் வெளியிட்டார். அந்த கட்டுரையில் மேற்கூறிய கருத்துகளை பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ திருமுறைகளையும் திருக்குறளையும் ஆதாரமாகக் காட்டி நிறுவ முற்பட்டார். இவர்களின் முயற்சிகள் எவ்வாறு இருந்தன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை ஆறுமுகநாவலரின் தமயனாரும் தமிழ் சைவ அறிஞருமான கைலாச பிள்ளை அவர்கள் கூறுவதன் மூலம் கேட்போம்:
”திருக்குறளில் ‘ஆபயன் குன்றுமறு தொழிலோர் நூன் மறப்பர்’ என்று உள்ளபடியே பரிமேலழகர், மணக்குடவர் முதலிய உரையாசிரியர்களெல்லாம், ஆ என்பது பசு, அறுதொழிலோர் என்பது அந்தணர் என்றும் உரை எழுதியிருப்ப, இவர்கள் ஆம்பயன் ஆபயனாயிற்று என்றும், அறுதொழிலோர் என்பது அறி தொழிலோர் என இருக்கவேண்டும் என்றும் இப்படியே இன்னும் பலவாகத் தங்கள் மனம் போனபடி திருத்தங்கள் செய்து வருகிறார்கள்.”
அதாவது நம் தமிழ் ஆர்வலர்கள் வேதங்களை நிராகரித்து ஒரு தனிப்புனைவை உருவாக்க திருக்குறளையும் மாற்றத் துணிந்தனர். வேதங்களின் உண்மையான இயற்கை குறித்து கைலாச பிள்ளையவர்கள் சைவ நூல்களில் மட்டுமல்லாமல் வைணவ, சமண, பௌத்த இலக்கியங்களிலிருந்தும் ஆதாரங்கள் அளித்து நிறுவினார்:
இப்படி மணிமேகலை வரையாக இலக்கிய ஆதாரங்களுடன் இந்த ’தனித்தமிழ் வேத’ பிரச்சாரம் ஆதாரமற்றது என கைலாசபிள்ளை அவர்கள் நிறுவுகிறார். 1926 இல் ஆழமான சைவ அறிஞரான மா.சாம்பசிவபிள்ளை அவர்கள் கா.சு.பிள்ளையின் ’ஆராய்ச்சியை’ ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து ஒரு மறுப்பு நூலை வெளியிட்டார். இங்கு ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். கா.சு பிள்ளையின் தகப்பனார் சாம்பசிவபிள்ளையின் ஆப்த நண்பர். என்ற போதிலும் உண்மையின் முன் நடபு முக்கியமல்ல என முடிவெடுத்து களமிறங்கினார் சாம்பசிவ பிள்ளை. ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ எனும் பெயரில் அவரது நூல் வெளியானது.
இலக்கியன்: அந்த காலத்துக்கே உரிய மொழி நடையில் எழுதப்பட்ட இந்த நூல் அக்காலத்து தமிழறிஞர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது. இந்த நூலில் தமிழ் தாத்தா உ.வே.சாவும் அணிந்துரை தந்து ஆதரித்தார். கா.சு.பிள்ளையின் ‘ஆராய்ச்சி’யை கல் கல்லாக பெயர்த்து உடைத்தெறிந்தது இந்த நூல். இத்துடன் இந்த தவறான பிரச்சாரம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வளர்ந்து வந்த திராவிட இனவாத இயக்கம் கா.சு.பிள்ளை போன்றவர்களின் தவறான நிலைபாடுகளை பிரச்சாரம் செய்தன. ஊக்குவித்தன.
திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர் என்றே பேராசிரியர் சாமி.தியாகராசன் அவர்களை குறிப்பிட வேண்டும். திராவிட கோட்பாடுகளை ஏற்றவர். ஆனால் நல்ல தமிழ் அறிஞர். இவர் இந்த திருநான்மறை ஆராய்ச்சி நூலை படித்தார். இந்த நூல் அவரை மாற்றிவிட்டது. அது மட்டுமல்ல சைவ தமிழ் மரபுகளுக்கு ’தனித் தமிழ்’ என்கிற பெயரிலும் இனவாதக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் எவ்வித ஆபத்துகள் சூழ்ந்திருக்கின்றன என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்: ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்னும் நூல் காந்தியடிகளை எப்படி மடைமாற்றிக் கொண்டு சென்றதோ அதைப் போன்று திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் இந்த திப்பிய நூல் என்னை மடைமாற்றிவிட்டது’ என அவர் கூறுகிறார்.
என்றாலும் இனவாத வெறுப்பு பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்தன. இந்த பொய் பிரச்சாரங்கள் வேதங்களை மறுத்து தனித்தமிழ் மரபு என்பது போல ஒரு போலி முகமூடியை முன்னிறுத்தினாலும் அவை தமிழ் பண்பாட்டை கொண்டு செல்லும் இடம் அபாயகரமானதாக அமைந்தது. இதனை கைலாச பிள்ளை அவர்கள் 1926 இலேயே கோடிட்டும் காட்டிவிட்டார். இந்த ’தனித்தமிழ் மறை’ என்கிற போலி ஆராய்ச்சியின் விளைவை அவர் கூறுகிறார்:
இலக்கியன்: ”தமது பாண்டிநாடே ஆதிமனிதருக்கு உற்பத்தித்தானம் தமது நாட்டாரே ஆதி திராவிடர் என்று புகழுகிற சுப்பிரமணிய பிள்ளை அந்த வகையினாலே ஆரியர்களும் தங்கள் வமிசத்தவராயிருக்க, ஆரியரென்ற பெயரைச் சொன்னாலும் வெருளுவதற்கும் வெகுளுவதற்கும் காரணம் என்னோ? யெகோவா சிருட்டித்த ஆதாம் ஏவாளுடைய வமிசத்தாரே ஆரியரென்று அந்த யெகோவாவினுடைய சிருட்டியை இவர் ஸ்திரப்படுத்துகிறார்கள் போலும்.”
அன்றைய உண்மையான வெறுப்புணர்ச்சி இல்லாத தமிழ் அறிஞர்கள், இந்த ’தனித்தமிழ் மறை’ எனும் போலி ஆராய்ச்சிக்கு தங்கள் மறுப்பை, பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ வைணவ இலக்கியங்கள் அடிப்படையாகவே அளித்து வந்தனர். அவர்களுக்கு அன்று ஆரிய படையெடுப்பு-திராவிட இனவாதக் கோட்பாடுகளை எதிர்க்க புற-ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இன்று நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணு சார்ந்து இந்த ஆரிய படையெடுப்பு மற்றும் இனக்கோட்பாடுகளை நிராகரிக்க இயலும்.
தமிழ்நாட்டில் கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் சமூக-வரலாற்று ஆராய்ச்சியும் இந்த ’தனித்தமிழ் மறை’ என்பதை நிராகரித்துள்ளது. அதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
மேலதிக விவரங்களுக்கு:
மா.சாம்பசிவபிள்ளை, திருநான்மறை விளக்க ஆராய்ச்சி, (1926) இரண்டாம் பதிப்பு 2007: வெளியிட்டோர்: தெய்வச்சேக்கிழார் சைவ சித்தாந்த பாடசாலை, தஞ்சாவூர்: முது முனைவர்: தி.ந. இராமச்சந்திரன்.