New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறித்தவ தசரா;கடிதங்கள்


Guru

Status: Offline
Posts: 24624
Date:
கிறித்தவ தசரா;கடிதங்கள்
Permalink  
 


அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு கேரளத்தில் வேரூன்றியிருக்கும் ஒரு பண்பாட்டு அம்சம்,எழுத்தறிவித்தல், மத எல்லைகளை தாண்டி விரிவது ஒரு நல்ல விஷயமாகவே பட்டது.

நல்ல விஷயம் தான்..  ஆனால் அதற்கு கிறிஸ்தவ சாயம் பூசி, இல்லாத ஒரு கிறிஸ்துவ கதையை வேண்டுமென்றே உருவாக்கி ஏன்செய்யவேண்டும்? அது தான் கேள்வி. . இந்துக்களில் கூட சிலர் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள், ஆனால் தாங்கள்  மதரீதியான குற்றவுணர்ச்சி இல்லாமல் உணர வேண்டும்  என்ற  குறுகிய காரணத்திற்காக  இப்படிக் கதைகளை உருவாக்கி விட்டுக் கொண்டாடுவதில்லை என்பதைப் பாருங்கள் – இத்தனைக்கும்  இந்து கலாசாரத்தில் இவற்றை உருவாக்குவது மிகமிக எளிது.  ’கிறிஸ்து பிறந்த நாளாகவே இருக்கட்டும்,  ஐராப்பிய சாண்டா கிளாஸே மான் தேரில் வந்து பரிசு கொட்டுக்கட்டும்.. அதை நான் அப்படியே கொண்டாடுவதால் என்ன குடிமுழுகிவிடும்?’  என்று தான் ஒரு சராசரி இந்து கேட்பான்.  சீன உணவை சாப்பிடுவதாலேயே தான் சீனனாகி விடுவதில்லை என்று அவனுக்குத் தெரியும்.

இந்த வித்தியாசம் எதை உணர்த்துகிறது?

இந்து மனதில் அடிப்படையிலேயே மற்ற மதங்களை, அவற்றின் கலாசாரங்களை unconditional ஆக மதிக்கும் பண்பு உள்ளது. அதனால் இந்த திருட்டு/திரிபு வேலைகளுக்கு அவசியம் இல்லை.

ஆனால் அடிப்படையில்,  கிறிஸ்தவ மனதில் இந்து மதம் கீழானது, அதன் கலாசரம், பண்டிகைகள், படிமங்கள், தொன்மம் எல்லாம் பொய்யானவை, மரியாதைக்குரியவை அல்ல என்ற  கசப்பு உறைந்து இருக்கிறது – இது கிறிஸ்தவ மதம் உருவாக்கி வளர்த்து விட்டது.  அதனால்,  இந்து கலாசாரத்தின் ஒரு நல்ல அம்சத்தை அவர்கள் கடைப் பிடிக்கவேண்டுமால் கூட,  அதை வெட்கமில்லாமல் திருடி, கிறிஸ்துவ சாயம் பூசி மட்டுமே கொண்டாடியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இல்லையா?  தங்கள் மதம் பற்றிய பாதுகாப்பின்மை,  மூடிய எண்ணம் தான் அவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது..

கேரளத்தில்,  எழுத்தாளர்கள், இலக்கியகர்த்தாகக்ள், கலைஞர்கள் கையால் குழந்தைக்கு வித்யாரம்பம் செய்ய வேண்டும் என்ற கலாசாரம் வெகுவாகப் பரவி வருகிறது.   எம்.டி.வாசுதேவன் நாயர் சொந்த ஊரில் விஜ்யதசமி நாளில் இதற்காகவே பெரும் கூட்டம் கூடுமாம்.   இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்..

நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸில்  டிபி ராஜீவன் இது பற்றி எழுதியிருக்கிறார் -

http://www.expressbuzz.com/edition/story.aspx?title=sishyas%20teach%20the%20guru%20about%20hope&artid=5sFmf0d/w08=&type=

When the Malayala Manorama asked me to be one of the gurus for their vidyarambham this year, I was hesitant to take it upon myself. ……. What blessing must I give the toddlers after making them write ‘Hari Sree’? ….. I asked the child his or her name, I was surprised to hear a Hindu name, then a Christian and the other a Muslim name. Religious, communal and class consciousness didn’t prevent parents from bringing their children to be initiated into the world of knowledge.

இதில் எல்லா மதக் குழந்தைகளும்  வந்திருக்கிறார்கள். எல்லாரும்  ’ஹரிஸ்ரீ’ எழுதித் தான் தொடங்கியிருக்கிறார்கள்..  மத சுவர்களை மீறி ஞானத்தைப் போற்றும்  இந்த மாதிரி நிகழ்ச்சியை வேண்டுமானால் பாராட்டலாம்..

ஆனால்,  வித்யாரம்பம் என்ற புனிதத்தை காப்பியடிக்கும்  கிறிஸ்தவ மதவெறி சடங்கு  கண்டனத்திற்குரியது என்பதே என் எண்ணம்.  நீங்கள் பாராட்டியதற்கு சொல்லும் நியாயம் ஏற்கத் தக்கதாக இல்லை.

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

 

 

அன்புள்ள ஜடாயு,

நீங்கள் முன் வைப்பது கொஞ்சம் பதற்றம் கொண்ட, ஒற்றைவேகம் கொன்ட, ஒரு தேசிய உருவகம். மன்னிக்கவும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு சமூக மக்கள் மதவழிபாட்டு முறைகளுக்கு அப்பால் பண்பாட்டு ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஒரே திரள்தான் என உணரச்செய்யும் எதுவும் அவர்களுக்கு நலன்செய்யும், அவரக்ள் சேர்ந்து வாழ உதவும் என்பதே என் எண்ணம். சேர்ந்து வாழ்வதே முதல் நோக்கம் என்றால் ந்ன் சொல்வது எளிதில் புரியும். அடையாளத்தூய்மையை தக்கவைத்தால்போதும் சேர்ந்துவாழ்வது முக்கியமில்லை என்றால் இது புரியாது. எளிமையான இரு நிலைபாடுகள் மட்டுமே
ஜெ

 

அன்பின் ஜெ.மோ,

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?

இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது குறித்து நான் எழுதியிருப்பதைப் பாருங்கள்,  அதில் அடையாளத் தூய்மை பற்றிய கருத்தாக்கம் எங்கே உள்ளது?

நான் கிறிஸ்தவர்கள் வித்யாரம்பம் கொண்டாட வேண்டாம் என்றும் கூறவில்லையே… அதற்கு ஒரு கிறிஸ்தவக் கதையைக் கண்டுடித்து, திரித்து  பிரசாரம் செய்வதைத் தானே கண்டித்தேன் – இது போன்ற சின்னக் கட்டுக் கதைகள் பின்னர் பூதாகாரம் எடுத்து  புனித தோமையர் விவகாரம் போன்று ஆகிவிடும் சாத்தியம் உள்ளது – அதனாலேயே அதனை எதிர்க்கிறேன்.

அந்த எக்ஸ்பிரஸ் கட்டுரையைப் பாருங்கள், அதில் எல்லா மத மக்களும் ஒன்று கூடி விஜயதசமியை அதன் இயல்பைத் திரிக்காமல் கொண்டாடியிருக்கிறார்களே..  ”பண்பாட்டு ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஒரே திரள்தான் என உணரச்செய்ய” உகந்த வழி அதுதான் இல்லையா?

அன்புடன்,
ஜடாயு

 

 __________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

அன்பின் ஜெயமோகன்,

தாங்கள் அண்மையில் எழுதியிருந்த விஜயதசமி-எழுத்து கூதாஸா கண்டேன். சமண-பௌத்த-வேத மரபுகளின் சடங்கு-சம்பிரதாய-தெய்வ கொடுக்கல் வாங்கல்களையும் கிறிஸ்தவ நிறுவனம் நடத்தும் பாரத சடங்குகளின் கிறிஸ்தவமயமாக்கலையும் ஒன்றாக கருத முடியாது என்பதுதான் உண்மை.

 

 

இதில் இரண்டு வேறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. ஆங்காங்கே சைவ-சமண, சமண-பௌத்த , சைவ-வைணவ மோதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், சமண மற்றும் பௌத்தத்தின் சில மிக உன்னதமான உச்சங்கள் வைதீக மரபு அரசர்களால் உருவாக்கப்பட்டவை. எல்லோரா குடைவரைகோவில்கள், அஜந்தா, நாலந்தா பல்கலைக்கழகம் என. ஏனெனில் இவற்றுக்கிடையே ஒருவித மரபார்ந்த ஒற்றுமை இருந்தது. எனவே இந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிர்த்தன்மை இருந்தது. அது நிறுவன ரீதியாக மேலிருந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டு மக்கள் மீது பிரச்சார உக்தியாக திணிக்கப்படவில்லை. (அத்தகைய போக்குகள் இருந்திருக்கலாம் ஆனால் அது மையத்தன்மை கொண்டவை அல்ல)

 

 

ஆனால் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை இறையியலும் நிறுவன இயற்கையும் இத்தகைய உள்ளார்ந்த பரிணாமத்தை -மக்கள் பண்பாட்டு பரிமாண வளர்ச்சியிலும் சரி, தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சியிலும் சரி- எடுத்துக்கொள்ளும் தன்மைக்கு புறம்பானவை. புகழ் பெற்ற சயின்ஸ் இதழில் லின் வைட் (ஜூனியர்) என்பவர் எழுதிய “நமது சூழலியல் பிரச்சனைகளின் வரலாற்று வேர்” எனும் கட்டுரையில் கிறிஸ்தவம் பாகனிய சடங்குகளை உள்ளிழுத்த போது நிகழ்ந்த ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிப்பிடுகிறார். பாகனிய தெய்வங்கள் தன்னளவில் முழுமை பெற்று விளங்கின. ஆனால் கிறிஸ்தவத்துக்குள் உள்ளிழுத்துக்கொள்ளப்படும் போது அவை தன் முழுமைத்தன்மையை இழந்து வானில் உறையும் தந்தை தெய்வத்துக்கு கீழே இருக்கும் சிறு இறைத்தூதராகவோ புனிதராகவோ மாற்றப்பட்டன.

 

 

நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்ச்சிகளில் இதே கீழ்மைப்படுத்தும் தன்மை மிக தெளிவாகக் காட்டப்படுகிறது. நமது மரபில் முழுமையான பிரம்மத்துக்கு வடிவு கொடுக்கப்பட்ட பெண் தெய்வங்களுக்கு இணையாக வைக்கப்படுவது புனித செபாஸ்டியனும் புனித பவுலும். மகாசிவராத்திரிக்கு வக்கீஸ் கூமந்தலா சொன்ன விளக்கம் தெய்வநாயகத்துக்கே மயிர் கூச்செறிய செய்யும். இந்த பண்பாட்டு-அபகரிப்புக்கு இரண்டு பயன்கள் இருக்கின்றன. இது நம் பண்பாட்டிலிருந்து அதன் செழுமையிலிருந்து அன்னியப்பட்டதாக உணரும் கிறிஸ்தவர்களுக்கு வடிகாலாக இருக்கும். (ஆனால் கத்தோலிக்க சபை அந்த அன்னியப்படுதலைக் குறித்து பெரிதாக கவலைப்பட்டதில்லை.) இரண்டாவதாக நம் பண்பாட்டின் அம்சங்களை கிறிஸ்தவத்திலிருந்து வந்ததாக பிரச்சாரம் செய்யும் பெரும் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.

 

 

அண்மைக்காலமாக மிக அதிக அளவில் விற்கப்படும் கிறிஸ்தவ பிரச்சார இலக்கியங்களில் வேதங்கள் உபநிடதங்களில் ஏசுவை கண்டுபிடிக்கும் முயற்சி கன ஜோராக நடைபெற்று வருகிறது. உதாரணமாக 2002 முதல் 2009 க்குள் 1,40,000 பிரதிகள் விற்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார இலக்கியத்திலிருந்து ஒரு பகுதியை தருகிறேன்:
எந்த தெய்வம் மனிதனுடைய பாவங்களைப் போக்கும்படியாக தன்னை இரத்தபலியாக கொடுத்தது என அவர் வேதங்களை தேடி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த போது சாம வேதத்தில் காணப்பட்ட ஒருமந்திரம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது – லிவ்ஹ்யா கோப்தாராம் மஹக்யவ்வத்தினாகொரியன்த்தி ஹவ்யாயான பரியதாசீன்‘ அதாவது அவதாரம் எடுக்கப் போகிறவர் ஒரு கன்னியின்வயிற்றில் பசுத்தொட்டிலில் பிறப்பார் என சாமவேதம் சாட்சி சொல்கிறது.”

 

இந்த ரீதியாக 108 பக்கங்கள் செல்கிறது இந்த பிரச்சார புத்தகம். இந்த பிரச்சார ஒளிநாடா 76,000 பிரதிகள் விற்பனையாகிறது. மகாசிவராத்திரி மிஸிகாராத்திரி யாக்குவது இதே ஏமாற்றுவேலையின் மற்றொரு பகுதிதானே. இனி எப்படி மிஸிகாராத்திரி மகாசிவராத்திரியாக இந்த அஞ்ஞானிகளால் மாற்றப்பட்டது என்பதில் ஆரிய-பார்ப்பன தந்திரம் தானே சைத்தானாகக் காட்டப்படும்? பெப்ஸி கோலா விற்பனைக்கு பரதநாட்டியத்தை பயன்படுத்துவதின் theological equivalents தான் இந்த பண்பாட்டு அபகரிப்புகள். ஒரு இறையியல் ஏகாதிபத்திய உக்தி,

 

 

இந்த உண்மையை உணர மிக எளிய வழி உண்மையான ஆன்மிக இணைப்பை குறித்து பேசுபவர்களை இதே சர்ச் என்ன செய்கிறது என பார்ப்பதுதான். ஆண்டனி டி மெல்லாவுக்கு நிகழ்ந்தது தெரிந்ததது தானே. ஆனால் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களிலிருந்தே வெளியேற்றப்பட்டு சிவன் கோவில் முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு வீழ்ந்து கிடந்த கத்தோலிக்க இறையியலாளர்கள் குறித்து அதிகமாக வெளியே தெரியாது. ஆனால் இவர்கள் நம் நினைவு கூர்தலுக்கும் உண்மையான ஆன்மிக உறவாடல்களுக்கும் உரியவர்கள். என்றாலும் இவர்கள் பேசப்பட மாட்டார்கள். வர்க்கீஸ் கூமந்தல்லாக்களே நம் ஊடக ஒளி வட்டங்கள் சோபிக்க நம் முன் நிறுத்தப்படுவார்கள்.

அரவிந்தன் நீலகண்டன்

 

 

அரவிந்தன்,

இந்த விஷயத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களை நான் திட்டவட்டமாக ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

1, இன்று பல்வேறு திரிப்புகளுடன் சொல்லப்படும் மதமாற்ற பிரச்சாரத்துடன் சிரியன் கிறித்தவர்களை தொடர்புபடுத்த முடியாது. அவர்களுக்கு அந்த திடாம் ஏதும் இல்லை.

2. அவர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்தியப் பண்பாட்டு மனநிலைகளை தங்கள் மத நம்பிக்கைக்குள் கொன்டுவந்தாகவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. குத்துவிளக்கு வரை அவ்வாறு உள்ளே சென்றதுதான்.

3. எத ஒரு மதமும் அதன் நம்பிக்கைக் கட்டுமானத்தின் உள்ளே நின்றபடித்தான் புதிய விஷயங்களை எடுத்துக்கொள்ளும். அந்த கட்டுமானத்தை அது உதறவேண்டும் என்றால் அது தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்றே பொருள்.

4. சிரியன் கிறித்தவர்களில் இந்து பேரறிஞர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம் புறக்கணிக்கப்படவோ அழியவோ இல்லை. தங்கள் மதத்துக்குள்தான் வசதியாக வாழ்ந்தார்கள்.

5. இவாறு உருவாகும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை தொடர்ந்தே ஒரு பொதுவான தளம் உருவாக முடியும். ஐயத்தின் கசப்பின் ஆரம்பத்தை இதற்குக் கொடுப்பது ஆரோக்கியமல்ல.

ஜெ

 

அன்பின் ஜெயமோகன்,

சிரியன் கிறிஸ்தவர்கள் குறித்து நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினர் மலங்கரை கத்தோலிக்கர்களாக கத்தோலிக்க சர்ச் உள்ளிழுத்துக்கொண்டது. இது கத்தோலிக்க சர்ச்சின் ஒரு பகுதியே ஆகும். சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் ஐரோப்பிய நிறுவன கிறிஸ்தவத்துக்குமான மோதல்கள், விட்டுக்கொடுத்தல்கள் ஆகியவையும் சில நேரங்களில் கத்தோலிக்க சர்ச்சை விட மேலதிகமாகவே சென்று தாமஸ்-திராவிட கிறிஸ்தவத்தை பிரச்சாரம் செய்வதும் நடந்து வருகின்றன.

 

ஒரு உதாரணமாக இன்றைக்கு மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களில் அங்கு வழக்கமாக இருக்கும் சிலுவை எடுக்கப்பட்டு சென்னை பரங்கிமலையில் உள்ள தாமஸ் சிலுவை வைக்கப்படுகிறது.

 

 

சென்னையில் மலங்கரை சிரியன் கிறிஸ்தவர்கள் தாமஸின் உடல் மற்றும் தாமஸ் சர்ச்சை தங்களிடம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கலாம் என்கிற பிரச்சனை எழுந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் யார் மிக அதிகமாக மிக தீவிரமாக தாமஸ் கதையாடலை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதில் போட்டியும் எழலாம்.

 

நீங்கள் ஜான் சாமுவேலின் மாநாட்டு கட்டுரை சுருக்கங்களிலேயே பல சிரியன் கிறிஸ்தவர்களை காணலாம். கத்தோலிக்க சர்ச்சுடனான மோதலில் தங்களது பழமையைக் காட்ட ஒரு முயற்சியாக தாமஸ் கதையை சிரியன் கிறிஸ்தவர்கள் கையிலெடுத்தார்கள். இதனை கத்தோலிக்க சர்ச் கபளீகரம் செய்து அதனை ஒரு மதமாற்ற யுக்தியாக கையிலெடுத்துவிட்டது.

 

 

இந்நிலையில் மகாசிவராத்திரி என்பது மெஸியா ராத்திரிதான் என்று சொல்லும் ஆட்கள் விஜயதசமியை பவுலுக்கும் செபாஸ்டியனுக்கும் தொடர்பு படுத்ம் போது ஐயப்படாமல் இருப்பது எப்படி என்று நீங்களே சொல்லுங்கள், அதே நேரத்தில் குருட்டாம் போக்காக கிறிஸ்தவம் என்பதற்காகவே அதை எதிர்க்கவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்
அநீ

 

 

அன்புள்ள அரவிந்தன்,

இன்று கேரளத்திலும் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்குள் உருவாகி வரும் இந்திய நிராகரிப்புத் தீவிரப்போக்குகள் — உதாரணமாக பெந்தேகொஸ்தே சபை போன்றவை -  அம்மக்களை வாசலை உள்ளிருந்து சாத்திக்கொள்ளக்கூடியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட வஹாபிகள் இஸ்லாமியர்களை மாற்றுவதுபோலத்தான் இதுவும். அந்த போக்குக்கான மார்று என்பதே கிறித்தம மையவழிபாட்டையும் நம்பிக்கையும் மாற்றிக்கொள்ளாமல் பண்பாட்டு உள்வாங்கல்களாக நிகழும் இம்மாதிரியான போக்குகள். இவை பிறமதத்தினரிடம் தங்களை தக்கவைத்துக்கொண்டே ஒத்துப்போவதற்கான ஒரு வெளியை கிறித்தவர்களுக்கு அளிக்கின்றன. உரையாடலுக்கு இடமளிக்கின்றன. சூ·பிசம் இஸ்லாமுக்கு அலிப்பதும் இதையே.

இதற்கும் தீவிர கிறித்தவ வெறிக்கும் இடையே உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லை என்றால் அது வருத்தத்துக்குரியதே. உரையாடவருகிறாய் என்றால் முதலில் உன்னுடைய மதநம்பிக்கையை விட்டுவிட்டு வா என்பது ஒரு வகை ஆதிக்கப்போக்கு. கிறித்தவம் மட்டுமல்ல இன்றுள்ள சமணமும் பௌத்தமும் சீக்கியமதமும் கூட இவ்வாறுதான் உரையாடல்வெளியை உருவாக்கிக் கொள்கின்றன. உதாரணமாக பௌத்த மதத்தில் சிவனும் விஷ்ணுவும் புத்தரின் பரிவாரதேவதைகள்தான்.

கசப்புகள் இருபக்கமும் தாழிட்டுக்கொள்வதில்தான் சென்று முடியும். அதன் இழப்பு இந்த தேசத்துக்கே

ஜெ

 

அன்பின் ஜெயமோகன்,கேரளா உண்மையிலேயே விசித்திர பூமிதான்:
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-5117548,prtpage-1.cms

 

அநீ

 

அன்பின் ஜெயமோகன்,

நீங்கள் கூறிய விஷயங்களைக் குறித்து சிந்திக்கிறேன். சிவனும் விஷ்ணுவும் பரிவாரத்தேவதைகளாக்கப்பட்டதும் புத்தர் சமணத்தெய்வங்களும் ஹிந்து மரபுக்குள் ஈர்க்கப்பட்டதும் குறித்து கூறினீர்கள். உண்மைதான். இன்று அவை சமநிலை அடைந்துவிட்ட நிலையிலிருந்து நாம் பேசுகிறோம். ஆனால் இப்படி ஒன்றையொன்று மட்டம் தட்டும் நிலையில் விவாதமல்ல மோதல்களே ஏற்பட்டன.

 

இன்றைக்கும் சிவன் விஷ்ணுவின் உடலின் ஒரு பகுதி என்று சொல்லும் வைணவர்களையும் விஷ்ணுவை கீழான நிலையில் உள்ள சிறு தெய்வமாக காணும் சைவர்களையும் நாம் காண்கிறோம். அந்த நிலையை கடந்து வந்துள்ளோம். கிறிஸ்தவமும் இதை செய்துள்ளது. இன்னமும் கொடூரமாக. பாகன் தெய்வங்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாம் இதைச் செய்துள்ளது. மத்திய ஆசியாவில் பல பௌத்த பீடங்கள் சூஃபி தர்காக்களாக மாற்றப்பட்டன.

 

ஆனால் இன்றைக்கும் இதுதான் உரையாடலுக்கான வெளியா? ஏசுவை நாயன்மார்களில் ஒருவராக நாம் வைத்துக்கொள்ளலாமா? அல்லது சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் செயிண்ட் பவுலுக்கும் செயிண்ட் செபாஸ்டியனுக்குமான அந்தஸ்து கொடுத்து அவர்கள் வைத்துக்கொள்ளலாமா? ஒரு சிவன் கோவிலில் ஏசுவை நாயன்மார்களில் ஒருவராக நிறுத்தி வைத்தால் அது மத உரையாடலுக்கு வழி வகுக்குமா அல்லது மதக்கலவரங்களுக்கா?

 

அல்லது ஞான கிறிஸ்தவ கோவில் (Gnostic Temple of Jesus) என்று இந்துக்களில் ஒரு சாரார் கட்டி அதில் மகதலேன் அம்பா -சமேத-நாசரேதீசன் என கழுதை வாகனராக ஏசுவை பிரதிஷ்டை செய்தால் மெசையாராத்திரி-மகாசிவராத்திரி ஆனதைக் காட்டிலும் வரலாற்று யதார்த்தம் கொண்டதாகக் கூட இருக்கும். ஆனால் அது உரையாடலுக்கான வெளியை உருவாக்கும் என நினைக்கிறீர்களா? வேறுவிதமான உரையாடலுக்கு நாம் இன்னும் வளரவேயில்லையா?

 

 

ஆண்டனி டி மெல்லாவை நினைவுகூரவும்.. நிறைந்த சிரிப்பும் ஞானமும் கொண்ட எளிமையான அந்த ஏசுசபை பாதிரியார் இறுதி வரையில் எத்தனையோ துன்பங்களுக்கு அப்பாலும் சபையிலிருந்து விலகவில்லை. இறுதிவரை கிறிஸ்தவ அடிப்படைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்தாம்.

 

ஏன் லாரி பேக்கர் இந்திய பாரம்பரிய கட்டுமானத்தை மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆலயங்களையே கட்டவில்லையா? அவரை நாம் போற்றி கொண்டாடவில்லையா? “நீங்கள் உங்கள் க்வாக்கர் நம்பிக்கைகளை விட்டால்தான் இந்திய பாரம்பரிய கட்டிடக்கலைகளை பயன்படுத்தலாம்” என்று எவரும் சொல்லவில்லையே…அவரை நாம் அனைத்து இந்தியர்களுக்கும் உதாரணமாக அல்லவா காண்கிறோம்.

 

ஜோசப் கர்னீலியஸ் குமாரப்பா கிறிஸ்தவத்தை கைவிட்டால்தான் காந்தியத்தை ஏற்கமுடியும் என எவரும் சொல்லவில்லையே. அவரை கிராம முன்னேற்றத்துக்கான மிகச்சிறந்த முன்னோடியாக

பேசுவார்கள்.

 

ஆனால் அவர்களையெல்லாம் மறுதலித்த அல்லது முன்னிறுத்தாத ஒரு நிறுவன மதம் பழைய பரிவார தேவதையாக்கும் செயல்முறை மூலம் மத நல்லிணக்கத்தையும் மத உரையாடலுக்கான வழியையும் வைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை இன்றைக்கு கடுமையான இந்திய எதிர்ப்புடன் வளர்ந்து வரும் பெந்தகோஸ்தே அலையில் இத்தகைய பண்பாட்டு முயற்சிகள் நல்லவை என சொல்கிறீர்கள். இருக்கலாம்.

 

அண்மையில் தசாவதாரம் என ஒரு கார்ட்டுன் படம் வெளியிடப்பட்டது அதில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக காட்டியதை நியோ பௌத்த அமைப்புகள் எதிர்த்தன. அதற்காக அந்த படத்தை தயாரித்தவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். அகிம்சை சக்கரவர்த்தி அசோகர் ஜைனருக்கு பணிவிடை செய்பவராக புத்தரை காட்டியதற்காக ஜைன துறவிகளின் தலைக்கு இத்தனை பணம் என தலைவாங்கிய வரலாற்றை பெருமையுடன் தெரிவிக்கும் திவ்யவதனா எனும் பழமையான பௌத்த பௌராணீக நூல்.

 

நாம் இந்த இறையியல்-அரசியல் சித்து விளையாட்டுக்களை தாண்டிய ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்துவது அல்லவா நல்லது? அதற்கான இயல்பான இத்தகைய பின்விளைவுகளை உள்ளடக்காத வெளி கிறிஸ்தவ இறையியலில் இல்லை என நினைக்கிறீர்களா? நான் அவ்வாறு கருதவில்லை. அல்லது பொதுப்புலத்தில் இதுதான் இந்திய மறுப்பு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திலிருந்து சிரியன் கிறிஸ்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நல்ல உபாயம் மேலும் நல்ல முதல்படி என நினைக்கிறீர்களா? இருக்கலாம்.

 

இறுதியாக என்னுடைய கருத்துகள் வெறுப்பையோ நம்பிக்கையின்மையையோ அடிப்படையாக முன்வைக்கவில்லை. நேர்மையான உரையாடலையும் பண்பாட்டு பகிர்வையுமே கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்நோக்குகிறது என்கிற குறைந்தபட்ச நம்பிக்கை சலுகையை எனக்கு வழங்குவீர்கள் என கருதுகிறேன். இவை என்னுடைய அச்சங்கள், ஐயங்கள்…இன்றைய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ள நியாயமான எச்சரிக்கை உணர்வே என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 

 

அரவிந்தன் நீலகண்டன்

*****

மதிப்பிற்குரிய ஜெ,

 
அமாவாசை உபவாச ஜெபக்கூட்டங்கள் அனுசரிக்கப் படுவதும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 
அன்போடு
 
ராஜசுந்தரராஜன்

அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்

எதையாவது செய்து எல்லாரும் ஒரு கும்பல்தான் என்று உணர்ந்து சண்டைபோடாமல் இருந்தால் சரி
ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் கட்டுரைகளில் பலசமயம் மிஷனரிகள் மீது நியயமற்ற கசப்பை வெளிப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுவதுண்டு.

ஆனால் இந்த ‘நகைச்சுவையை’ வாசித்த பிற்பாடு நான் சொல்லிழந்து போய்விட்டேன். எங்கள் பிஷப்புகளுக்கும் பாதிரிமார்களுக்கும் வரலாற்றுணர்வே இல்லாமல் போய்விட்டனவா என்ன? 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்தேன். மயிலை ஆர்ச் பிஷப் அருளப்பா காலத்தில் ஒரு மோசடிக்காரர் அறிஞராக வேடம் போட்டுப்போய் திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று நிருபிப்பதாகச் சொல்லி பெரும் பணாம் பெற்றுச்சென்றார்

இவ்வாறு தங்களை வேடிக்கைக்கு ஆளாக்குவதன் மூலம் கிறித்தவ மதத்தலைவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள்?

jas diaz
அன்புள்ள jas diaz,

1. நான் மிஷனரிகள் மீது கசப்பு ஏதும் கொண்டவனல்ல. நான் எழுதும் எந்த ஒரு வரலாற்றுச் சித்திரத்திலும் அவர்களின் ஆரம்பகாலப்பெரும்பணியை பாராட்டுடன் குறிப்பிடாமல் மேலே சென்றதே இல்லை. ஒரு சிறு குறிப்பில்கூட.தாவர்கள் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் ஆற்றிய சேவைகள், இங்கே சமூகப்படிநிலைகளில் கீழே கிடந்த மக்களை அவர்கள் கைகொடுத்து ஏற்றிய விதம் இரண்டும் வரலாற்றின் பொன்னேடுகள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனால் மறுபக்கம் அவர்கள் இங்குள்ள பண்பாட்டையும் வரலாற்றையும் தங்கள் இனமேட்டிமைவாதம் மற்றும் மதவாத நோக்கிலேயே எழுதினார்கள். அவற்றை நம் வரலாற்றாய்வுக்கான நேரடியான ஆதாரங்களாகக் கொள்ளக் கூடாது, இதுவே நான் சொல்வது.

இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. கிறித்தவத்தன்மை கொண்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ , பிரேஸில் போன்ற நாடுகளில்கூட மிஷனரிகளின் எதிர்மறைக்கூறுகள் பலமடங்கு அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நான் ஆஸ்திரேலியா அமெரிக்கா இருநாடுகளிலும் செய்த பயணங்களில் அங்கே உள்ள பழங்குடிப் பண்பாடு குறித்த எந்த ஒரு ஆவணப்பதிவிலும், அருங்காட்சியகத்தில் உள்ள சிறிய குறிப்புகளில்கூட, அம்மக்களைப் பற்றி மிஷனரிகள் செய்த பதிவுகளில் உள்ள முன்நோக்கம் மற்றும் இழிவுபடுத்தும் தன்மையை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு மாற்றாக உண்மையை குறித்து வைத்திருப்பதைக் கண்டேன்.  சில அருங்காட்சியகங்களில் ஓர் எச்சரிக்கை போல மிஷனரிகளின் கண்ணோட்டத்தில் உள்ள பிழைகளை தனியாகவே எழுதி வைத்திருக்கிறார்கள். பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் நாம் மிஷனரிகளை அவர்களின் சேவையைக் கொண்டே பார்க்கிறோம். நன்றி என்ற அம்சமே மேலோங்கி இருக்கிறது. அது இந்தியப் பண்பாட்டுக்கு உகந்ததுமாகும். ஆனால் வரலாற்றை ஆராயும்போது அது மேலோங்கியிருக்கக் கூடாது. அங்கே உண்மைக்கான தேட்டமே மேலோங்கியிருக்க வேண்டும். இதுவே என் தரப்பு.இது என் தரப்பு மட்டுமல்ல. விவேகானந்தர், காந்தி, எம்.என்.ராய், அம்பேத்கார், நேரு அனைவருமே இந்நிலைபாட்டையே எடுத்திருக்கிறார்கள். விரிவாக எழுதியும் இருக்கிறார்கள்.

 

2. சிரியன் கிறித்தவர்கள் மிஷனரிகள் அல்ல. அவர்கள் ஆயிரம் வருடப்பண்பாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஒரு கிறித்தவ மரபினர். அவர்கள் நெடுங்காலமாக இந்தியப் பண்பாட்டுக்கூறுகளை உள்ளிழுத்துக்கொண்டு, அதேசமயம் தங்கள் மத அடையாளத்தை இழக்காமல், இங்கே வாழ்கிறார்கள். இந்த இயல்பு காரணமாகத்தான் அவர்களுக்கும் பிறருக்கும் இடையே மனக்கசப்புகளோ மோதல்களோ இன்றுவரை உருவானதில்லை.

3. கிறித்தவ மதப்பரப்பு நோக்கத்துடன் செய்யப்படும் மோசடிகளை இதனுடன் சம்பந்தப்படுத்தலாகாது. அருளப்பா அவர்களின் முயற்சியைப் பற்றிச் சொன்னீர்கள். இப்போது அதே மயிலை சாந்தோம் சபை தெய்வநாயகம் என்பவரின் முயற்சியுடன் மேலும் விரிவான மோசடிகளை அரங்கேற்றி வருவது உங்களுக்கும் தெரிந்திருக்கும்

இணைப்பு

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்
ஜெ__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 

ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

அன்பின் சிறில் அலெக்ஸ்,

தங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். ஆண்டனி டி மெல்லாவை நீங்கள் இறையியல் கல்லூரியில் படித்ததையும் நான் அறிவேன். போனதடவை சந்தித்த போது நீங்கள்தான் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?  [ கிறித்துவம், இந்து மரபு]இறுதியாக கத்தோலிக்க சபை ஒரு ஒற்றைப் பாறாங்கல் அல்ல என்பதையும் அறிவேன். ஒரு பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெரும் மானுட அமைப்பும் ஒற்றைப் பாறாங்கல்லாக நூற்றாண்டுகளுக்கு செயல்பட முடியாது. ஆனால் எந்த அமைப்பிலும் காலங்களூடாக ஒரு மைய நீரோட்டமும் எதிர் நீரோட்டங்களும் இருக்கின்றன. இதில் ஆண்டனி டிமெல்லாவின் திசை எது என்பது முக்கியமான ஒன்று.

 

கிறிஸ்தவத்தை அதன் மேம்போக்கான சடங்குகளுக்கு இந்திய சூழல் பெயர்களை அளிப்பதும், அதன் உள்ளார்ந்த ஆன்மிகக்குறியீட்டை அழித்து அங்கே கிறிஸ்தவ இறையியலை புகுத்துவதும் உரையாடல் அல்ல என நான் நினைக்கிறேன். இதைத்தானே பௌத்தம் ஹிந்து மதக் கடவுளருக்கு தெற்காசிய தேசங்களில் செய்தது, இதைத்தானே சைவ-வைணவ வைதீகங்கள் பௌத்த சமண தெய்வங்களுக்கு செய்தன எனும் வாதம் எத்தனை சரியானது? முதலாவதாக இந்த இரண்டு இயக்கங்களின் இணைத்தன்மைகளுக்கும் கேள்விக்குரியன. இரண்டாவதாக இது ஒன்றையொன்று செரித்து வளர்தலே அன்றி உரையாடல் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த இயங்குமுறைதான் நம் இன்றைய உரையாடலுக்கும் வரைத்திட்டமாக இருக்குமென்றால் அது சரியானதல்ல.

எனவேதான் நான் ஆண்டனி டி மெல்லாவை முன்வைக்கிறேன்.

எப்படி ஒரு மதத்தின் ஆன்மிகத்தேடலாளன் தன் முகத்தையும் தான் பிறந்த மதத்தையும் இழக்காமலே பிற மதத்தின் சிறந்த அமசங்களை தன் ஆன்மிகத்தேடலுக்கு உள்வாங்க முடியும் என அவர் காட்டுகிறார். இதுதான் நாம் வந்தடைந்துள்ள இந்தியப்பண்பாட்டின் அடிநாதமாகவும் விளங்குகிறது என நான் கருதுகிறேன். ஒரு கிறிஸ்தவர் இந்தியப்பண்பாட்டு அம்சங்களை தமது வழிபாட்டில் பயன்படுத்த விளைந்தால் அதனை தடுக்க எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடுக்க நினைப்பது ஒரு கீழ்மையான எண்ணமும் கூட.

 

ஆனால் கத்தோலிக்க சபை “பெரிய நாயகி” எனும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் அம்பாளின் பெயரை திருவிதாங்கூரில் கன்னிமேரிக்கு வைக்கும் போது அது எவ்வளவு மடத்தனமாக இருக்கிரது. ஒன்று: பெரியநாயகி என்பது இறைவனின் சக்தி அம்சம். ஆனால் மேரி கிறிஸ்தவ இறையியலில் இறைவனின் சக்தி அல்ல. நாயகி அல்ல. இறைவனுக்கு கீழான நிலையில் இருக்கும் புனிதர்கள் எனும் அடுக்கில் உள்ளவள். இத்தகைய பெயர் வைத்தல்கள் ஏறக்குறைய பெப்ஸி-கோக் கம்பெனிகளின் பிராந்திய பண்பாட்டு விளம்பரங்களிலிருந்து வேறானவை அல்ல. இதைத்தான் பண்பாட்டு திருட்டு என்று சொல்லுவேன்.

 

மாடனுக்கு சக்கரைப் பொங்கல் படைப்பதற்கும் பாகன் கூறுகளை கிறித்தவம் உள்ளிழுத்தமைக்கும் என்ன வேறுபாடு என கேட்கிறீர்கள். நிச்சயமாக ஆழமான வேறுபாடுகள் இருக்கின்றன. சுடலை மாடன் சுடலைமாடனாக இருந்தபடியே பிரபஞ்சமெங்கும் வியாபிக்கும் பிரம்மத்தின் அம்சமாக திகழ முடியும். பாகனியத்திலிருந்து உள் வாங்கப்பட்ட கடவுளர் கிறிஸ்தவத்தில் அதிகப்படியாக புனிதர்களாக மட்டுமே இருக்க முடியும். இந்த முக்கியமான வேறுபாட்டை சுட்டிக்காட்டவே லின் வைட் ஜூனியரின் பிரசித்தி பெற்ற கட்டுரையைக் குறிப்பிட்டேன். ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல்களை மீறிய ஆன்மிக மரபுகளிடையிலான உரையாடலே மதங்கள் கடந்த மானுடம் தழுவிய பன்மை அழிப்பில்லாத ஆன்மிகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும். இத்தகைய உரையாடலையே சுவாமி விவேகானந்தரும் காந்தியும் முன்வைத்தனர். ஆண்டனி டி மெல்லாவையும் குமரப்பாவையும் இதே மரபின் நீட்சியாகவே நான் காண்கிறேன்.

நான் ஏன் ஆண்டனி டி மெல்லாவை முன்வைக்கிறேன் என்று வினவும் நீங்களே அதற்கான பதிலையும் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள்: “கிறீத்துவர்கள் எடுத்தாள வேன்டியது இந்தியாவின் சடங்குகளை அல்ல. (அதைச் செய்வதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை) மாறாக அதன் பின்னிருக்கும் தத்துவ தரிசனங்களையே.” இதைவிட அழகாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இந்த விஷயத்தை நான் சொல்லியிருக்க முடியாது. நன்றி. ஆண்டனி டி மெல்லாவைப் பொறுத்தவரையில் நிச்சயமாக அவரை என்னைவிட நன்றாக நீங்கள் அறிவீர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தபோதிலும் அவரை வாசித்ததில் நான் அடைந்த சில புரிதல்களை முன்வைக்கிறேன்.

ஒன்று அவரது பிரசித்தி பெற்ற அவரது புகழுக்கு காரணமாகியிருந்த “Sadhana a way to God” இந்நூலின் முன்னுரையில் அவர் ஹிந்து துறவியையும் அவரது மூச்சுப்பயிற்சிக்கான தத்துவத்தையும் கூறி ” the exercises I propose in this book are very much in line with the approach of that Hindu guru whom I have never met or hear of since” என்கிறார். எந்த ஒரு புத்த துறவி குறித்தும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அது முக்கியமானதுமல்ல. ஹிந்து துறவிக்கு பதிலாக அந்த இடத்தில் விபாசனா முறையை கற்றுக்கொடுத்த ஒரு பௌத்த துறவி இருந்திருந்தாலும் அது அந்நூலின் உள்ளீட்டுக்கும் மத எல்லைகளை கடந்து அது முன்வைக்கும் ஆன்மிகத்துக்கும் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தியிருக்காது.

இரண்டு. நான் ஆண்டனி டிமெல்லாவை “வேத சாட்சியாக” அழைக்கவில்லை. இன்னும் சொன்னால் ஜெயமோகனின் அதே இணைய பக்கத்தில் அவர் இறுதி வரை தனது சபைக்குள்ளேயேதான் இருந்தார் என்பதை தெரிவித்திருக்கிறேன். அதே பக்கத்தில் சிறிது கீழே பார்த்தால் அந்த பக்கத்தில் எனது இறுதி கடிதத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்: “ஆண்டனி டி மெல்லாவை நினைவுகூரவும்.. நிறைந்த சிரிப்பும் ஞானமும் கொண்ட எளிமையான அந்த ஏசுசபை பாதிரியார் இறுதி வரையில் எத்தனையோ துன்பங்களுக்கு அப்பாலும் சபையிலிருந்து விலகவில்லை. இறுதிவரை கிறிஸ்தவ அடிப்படைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்தாம்.”

மூன்று ஆம் சிறில் அலெக்ஸ், இன்றைய போப்பாக திகழும் கார்டினல் ராட்சிங்கர் அன்றைய போப்பான போப் இரண்டாம் ஜான் பால் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் 1998 இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் “With the present Notification, in order to protect the good of the Christian faithful, this Congregation declares that the above-mentioned positions are incompatible with the Catholic faith and can cause grave harm.” என்றுதான் குறிப்பிட்டாரே ஒழிய “முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒரு பாகனிய, சாத்தானிய படைப்பாக” அவற்றை குறிப்பிடவில்லை. மேலே கூறிய வாசகங்களை சிறிதே வாசித்து பாருங்கள். “கத்தோலிக்க விசுவாசத்தின் நன்மைக்காக” “கத்தோலிக்க விசுவாசத்துடன் ஒத்துப் போகாததும் பெரும் தீங்கை உருவாக்கும் தன்மை கொண்டதுமாகத்தான்” டி மெல்லாவின் படைப்புகள் குறித்த அறிக்கை இன்றைக்கும் வத்திகானின் அதிகார பூர்வ அறிவிப்பாக இருக்கிறதே அன்றி “பாகனிய சைத்தானிய படைப்பாக” அவை சொல்லப்படவில்லை. ஏனெனில் நாம் வாழும் நூற்றாண்டுக்கு ஏற்ற பதங்களைத்தான் கத்தோலிக்க சபை பயன்படுத்த முடியுமல்லவா? “சைத்தானிய” என்று சொல்ல முடியாது “நன்மையை பாதுகாக்க” “பெரும் தீங்கை உருவாக்கக் கூடிய” என்றுதான் சொல்ல முடியும். காலத்தின் கட்டாயம். ஆனால் சிறில், நிச்சயமாக நீங்கள் மென்மைப்படுத்தி சொல்லியிருப்பது போல “கத்தோலிக்க நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது” (beyond Catholic faith) என சொல்லவில்லை. இன்றைக்கும் அந்த முழு அறிக்கையும் வத்திகான் இணையதளத்தில் உள்ளது: நீங்களே சென்று வாசித்துக்கொள்ளலாம்: (http://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_19980624_demello_en.html)

நான்கு: இது கத்தோலிக்க சபையின் உள் நிகழும் ஒரு முக்கியமான முரணியக்கத்தைக் காட்டுகிறது. கிறிஸ்தவ மதத்தில் நிகழும் விஷயங்களை அவதானித்து வரும் ஒரு ஹிந்து என்கிற முறையில் எனக்கு இந்த விஷயம் முக்கியமானது. போப் இரண்டாம் ஜான் பால் மிக அதிகமான அளவில் புனிதப்பட்டங்களை கொடுத்தவர் அல்லது அதற்கு முந்தைய நிலைக்கு கத்தோலிக்க முக்கியஸ்தர்களை உயர்த்தியவர் என்றே பலரும் அவரை அறிவார்கள். ஆனால் அவரும் அன்று அவருக்கு முக்கிய வலது கையாக திகழ்ந்த கார்டினல் ராட்ஸிங்கரும் மிக அதிக அளவில் கத்தோலிக்க இறையியலாளர்களை குறிப்பாக சமயப்பன்மை பிறசமயங்களுடன் உரையாடல் என செயல்பட்ட பலரை கண்டனம், சபை நீக்கம், அல்லது நூல்களை விலக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தினார்கள் என்பது மிகவும் வெளியில் தெரியாத விஷயம். இவ்விரு பெருந்தகைகளின் தலைமையின் கீழ் Congregation for the Doctrine of the Faith எனும் பழமையான அமைப்பு புத்துயிர் பெற்றது. Jacques Poheir, Hans Kung, Charles Curran, திஸா பாலசூரியா, எனும் வரிசையில் இறந்த பின் தோண்டியெடுத்து தடைப்படுத்தப்பட்டவராக ஆண்டனி டி மெல்லா. இதில் Hans Kung குறித்து தனியாக குறிப்பிடவேண்டும். சமயங்களிக்கிடையேயான உரையாடலை மிகவும் முக்கியமாக வலியுறுத்தியவர் அவர். Congregation for the Doctrine of the Faith என நவீனப்பெயர் சூட்டப்ப்படும் முன்னால் இந்த அமைப்புக்கு ஒரு பெயர் இருந்தது. என்ன தெரியுமா? Supreme Sacred Congregation of the Roman and Universal Inquisition. :)

ஐந்து: நான் எழுதியது: “ஆண்டனி டி மெல்லாவுக்கு நிகழ்ந்தது தெரிந்ததது தானே. ஆனால் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களிலிருந்தே வெளியேற்றப்பட்டு சிவன் கோவில் முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு வீழ்ந்து கிடந்த கத்தோலிக்க இறையியலாளர்கள் குறித்து அதிகமாக வெளியே தெரியாது.” உத்தரகாசியில் சிவன் கோவில் முன்னால் மாரடைப்பால் வீழ்ந்து பிறகு பத்து மாதங்களுக்கும் குறைவாக ஜீவித்திருந்த அந்த துறவியின் பெயர் Henri le Saux என்கிற அபிஷிக்த்தானந்தா. இந்திய மதங்களின் வெளி அமைப்புகளை கிறிஸ்தவமயமாக்க பூரண கிறிஸ்தவ நம்பிக்கையுடனும் ஹிந்து தத்துவங்கள் குறைபாடுடைய கிறிஸ்துவில் மட்டுமே பூரணமடையக்கூடியவை எனும் நிச்சயத்துடனும் களம் இறங்கியவர் அவர். பல ஹிந்து புனித இடங்களில் எவரும் அறியாமல் ஹிந்து துறவி வேடம் பூண்டு சென்று “ஹோலி மாஸ்” நடத்தியவர். ஒரு கிறிஸ்தவ ரமணரை உருவாக்கும் புராஜெக்ட் கூட கைவசம் இருக்கிறது. ஆனால் அவரை அறியாமலே அவர் அத்வைத அனுபவத்துக்காக ஏங்க ஆரம்பிக்கிறார். தம் வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை சென்றடைகிறார்: “முடிவில்லாத அந்த ஒன்றை ஒரே ஒரு ஒற்றை வெளிப்படுத்துதலில் நாம் அடக்கிக்கொள்ள முடியுமா?” இறுதியாக அவரால் அடக்க முடியாத ஒரு விஷயம் அவரிலிருந்து வெளிவருகிறது “எவன் தன் சுயானுபவத்தில் ஆத்மாவை அனுபவிக்கிறானோ அவனுக்கு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையோ, சபையோ, பிரார்த்தனையோ தேவையில்லை.” சுத்த அத்வைத நிலையை அடையத் தடையாக அமையும் நாமரூபங்களில் அவர் சர்ச்சையும் ஏசுவையும் கூட சேர்க்க தயங்கவில்லை. ஆனால் இறுதி வரை அவர் கிறிஸ்தவ சபையின் சடங்குகளை கைவிடவில்லை. அவரது அத்வைத அனுபவத்தை சீதாராம் கோயல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பரிதாபத்துக்குரிய சுய ஏமாற்று என்று கூட சொல்லியிருக்கிறார். சுவாமி சிதானந்தர் அவரது அத்வைத அனுபவம் உண்மையான அனுபவமே என்கிறார். ஆனால் இன்றைய திருச்சி சாந்திவனத்தில் அபிஷிக்த்தானந்தா அல்ல, எவ்வித ஆன்மிக நாட்டமும் இல்லாமல் முழுக்க முழுக்க கிறிஸ்தவ-மற்றும் மேற்கத்திய உயர்வு மனப்பான்மையுடன் செயல்பட்டவரும் ஓரளவு அவருடன் மோதியவருமான மறைந்த  Bede Griffiths தான் முக்கிய ஆளுமையாக மதிக்கப்படுகிறார்.

அடிப்படையில் நம் எண்ணங்களில் நேர் எதிரான கருத்தாக்கங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன்

 

 __________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 

அன்புள்ள அரவிந்தன்,
நான் எழுதிய முதல் கடிதத்தில் சொன்ன சிலவற்றையே மீண்டும் கோடிட்டு காட்ட வேண்டியதுள்ளது என நினைக்கிறேன்.

1. கத்தோலிக்க திருச்சபை கலாச்சாரமயமாக்கலின் எதிரி அல்ல. ஆனால் கலாச்சாரமயமாக்கலோ அல்லது கத்தோலிக்கத்தின் பெயரில் நடத்தப்படும் வேறெந்தவொரு ஆன்மீக முயற்சியுமோ இயேசுவின் போதனைகளுக்கோ அல்லது திருச்சபையின் நம்பிக்கைகளுக்கோ பாதகமானதாக விளங்குமானால் அதை திருச்சபை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளாது.
உங்களின் முக்கிய உதாரணமான டி மெலோவுக்குச் செல்வோம். நீங்கள் அனுப்பியிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும். குறிப்பாக அந்த முதல் பத்தியை.

His works, which almost always take the form of brief stories, contain some valid elements of oriental wisdom.  These can be helpful in achieving self-mastery, in breaking the bonds and feelings that keep us from being free, and in approaching with serenity the various vicissitudes of life.  Especially in his early writings, Father de Mello, while revealing the influence of Buddhist and Taoist spiritual currents, remained within the lines of Christian spirituality.  In these books, he treats the different kinds of prayer: petition, intercession and praise, as well as contemplation of the mysteries of the life of Christ, etc.

”டிமெலோவின் எழுத்து ‘கிழக்கின் ஞானத்தின் சில நியாமனான கூறுகளைக் கொண்டுள்ளது’ அவை சுய மேம்பாட்டையும், விடுதலையுணர்வையும், சமநிலையுடன் வாழ்வின் பல்வேறு சவால்களையும் சந்திக்கும் திறனையும் தரக்கூடியவை.”
இப்படிச் சொல்லும் ஒரு கடிதம் பிற ஞானங்களை ஏற்றுக் கொள்ளாததும் inquisitionக்கு இணையானதுமாய் உங்களால் வர்ணிக்கப்படுவது நியாயமானதல்ல. தாவோயிசத்தின், பௌத்தத்தின் உட்கூறுகளை கிறீத்துவ நம்பிக்கையின் எல்லைக்குள் பொருத்திக் கொள்வதை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. அது வரவேற்கப்படுகிறது. டி மெலோ பல இடங்களில் எல்லைகளை விட்டு விலகித்தான் செல்கிறார். இவை அந்தக் கடிதத்திலேயே பட்டியலிடப்படுகின்றன.
நீங்கள் அந்தக் கடிதத்தில் இல்லாத வார்த்தைகளை அதில் நுழைக்கப் பார்க்கிறீர்கள். அந்தக் கடிதத்திலுள்ளவை இந்த நூற்றாண்டுகளுக்கான வார்த்தைகள்தாம் . பழைய நூற்றாண்டுகளின் வார்த்தைகளைக் கொண்டு அதை மீள்வாசிப்பது சரியானதுதானா? அதுதான் உரையாடலுக்கு களமமைக்குமா? நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப பழைய நூற்றாண்டு விஷயங்களை இன்குயிசிஷன், பாகனீய அழிப்பு எனக் கையாளுகிறீர்கள் ஆனால் நான் அதே கூறுகளை இந்து மதத்தில் சுட்டிக்காட்டும்போது நீங்கள் அதெல்லாம் பழசு என்கிறீர்கள்.
தன் நம்பிக்கைக்கு பாதகமான, நம்பிக்கையை விட்டு விலகி மற்றொரு புதிய நம்பிக்கையாகவே நிற்கும் இன்னொரு நம்பிக்கையை கத்தோலிக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியதே இல்லை. எந்த மதமும் அப்படி ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை.

2. ஆந்தனி டி மெலோ உயிரோடிருக்கையில் அவர் துன்புறுத்தப்படப்பட்டார் என்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. அவரின் இறப்புக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே டிமெலோவின் ஆன்மிகம் குறித்த நீங்கள் குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டி மெலோ உயிரோடிருந்தவரை ஒரு மாபெரும் ‘கத்தோலிக்க’ ஞானியாக கொண்டாடப்பட்டார். இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் , ஸ்பெயினிலும்கூட..

3. போன கடிதத்தில் நான் குறிப்பிட்ட ஒன்றை முழுமையாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இலங்கைப் பாதிரியார் கலாச்சாரப்படுத்தலுக்கு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தார் என்றேனே அவர் கிறீத்துவ மதிப்பீடுகளில் நம் மக்களை வளர்ப்பதில் நாம் முழுக்கவனமும் செலுத்தவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். கிறீத்துவம் ஒன்றும் வறண்ட உயிரற்ற ஆன்மிகமல்ல முதலில் நம் மக்கள் அதையே உணர்ந்து கொள்ளாத போது வேறெந்த கலாச்சாரத்தை அவர்களுக்கு உணர்த்துவது? என்பது அவரின் பக்கம்.

உங்களின் தற்போதைய கடிததுக்கு வருவோம்
”கிறிஸ்தவத்தை அதன் மேம்போக்கான சடங்குகளுக்கு இந்திய சூழல் பெயர்களை அளிப்பதும், அதன் உள்ளார்ந்த ஆன்மிகக்குறியீட்டை அழித்து அங்கே கிறிஸ்தவ இறையியலை புகுத்துவதும் உரையாடல் அல்ல என நான் நினைக்கிறேன்.”
”ஒரு கிறிஸ்தவர் இந்தியப்பண்பாட்டு அம்சங்களை தமது வழிபாட்டில் பயன்படுத்த விளைந்தால் அதனை தடுக்க எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடுக்க நினைப்பது ஒரு கீழ்மையான எண்ணமும் கூட.”

எந்த ஒரு மதச் சடங்கின் பின்னாலும் இரு ஓட்டங்கள் இருக்கின்றன. ஒன்று வேதாந்தம் இன்னொன்று தத்துவம். வேதாந்தம் கடவுளை, கடவுளரை, கட்வுள் நம்பிக்கையை அந்தச் சடங்கோடு சம்பந்தப்படுத்துகிறது. தத்துவம் மனிதனை , மனிதத்தை, மரபை கலாச்சாரத்தை அந்தச் சடங்கோடு தொடர்புபடுத்துகிறது.

சரஸ்வதி பூஜையை எடுத்துக்கொள்வோம். அதன் இறையியலில் சரஸ்வதி கல்வியே தெய்வ வடிவானவளாக நிற்கிறாள். அதன் தத்துவம் கல்வி மனிதனுக்கு வழிபடத் தகுந்த அளவுக்கு முக்கியமானது என உணரச் செய்வது. தீபாவளியை எடுத்துக்கொள்வோம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் மறைவுக்காக, இராமன் வெற்றியுடன் திரும்பியமைக்காக, மகாவீரர் ஞானம் பெற்ற தினமாக சீக்கியர்களுக்கு ஒரு காரணம், நேபாளில் பௌத்தர்கள் கூட தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்த மாபெரும் இந்திய கலாச்சார நிகழ்வுக்குப் பின்னணியில் பல இறையியல்கள் உள்ளன ஆனால் அங்கே இருப்பது ஒரே மானுட தத்துவம்தான்… அது தர்மத்தின் வெற்றியை, ஞானத்தின் வெற்றியை, இருளின் மீது ஒளி கொண்ட வெற்றியை கொண்டாடுகிறது. இந்த தத்துவ தரிசனங்களையே கிறீத்துவர்கள் எடுத்தாள வேண்டும் என்கிறேன். இதற்கு யாரும் மறுப்பு சொல்லவே முடியாது.நீங்களே சொல்வதுபோல இதை மறுப்பது கீழான எண்ணமும்கூட
தீபாவளி என்பது இயேசு லூசிபரை வென்ற நாள் என கத்தோலிக்க திருச்சபை கொண்டாடலாம். ஆனால் அதைத்தான் இந்தியாவில் தீபாவளி எனக் கொண்டாடிவருகிறார்கள் எனச் சொல்லுமேயானால் அது மிக மிக தவறானது.தற்போதைய சிரியன் கிறீத்துவர் விவகாரத்தில் கிறீத்துவச் சடங்குமுறைதான் இந்துக்களால் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது எனக் கூறியிருப்பது ஆதாரமற்றது, கண்டிக்கத்தக்கது.

பெரியவர்களை மதிப்பது நமது கலாச்சாரத்தின் முக்கியக் கூறு. ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன்பு இந்துக்கள் பெரியவர்களின் ஆசியை நாடுகிறார்கள். இது செயல்படுத்தப்படும் விதம் பல்வேறாக உள்ளது. பிராமணர்கள் சாஷ்டாங்கமாக விழுகிறார்கள். கிறீத்துவர்கள் முழங்காலிட்டு நிற்க பெரியவர்கள் வந்து அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமிடுகிறார்கள். அடிப்படை மானுட சிந்தனை, தத்துவம் ஒரேமாதிர்யாயிருக்க அதன் செயல்படுத்தும் வடிவங்கள் மாறியிருப்பதைக் காணலாம்.
இது போன்ற கலாச்சாரமயமாக்கலை கத்தோலிக்க கிறீத்துவர்கள் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள். பல பிரிவினை சகோதர கிறீத்துவர்களும்(ப்ராட்டஸ்டான்ட்) இதை வன்மையாக எதிர்க்கிறார்கள், ஏன் பல கத்தோலிக்கர்களுமே சில பழக்கங்களை பின்பற்றுவதை எதிர்க்கிறார்கள். இவை இன்றோ நேற்றோ ஏதோ ஒரு சாமியாரின் இராக்கனவில் உதித்துவந்த மதமாற்ற யுக்திகள் அல்ல. பல காலங்களாய் நம் இந்திய கலாச்சாரத்தின் விழுமியங்களாக நம் மக்களின் வாழ்கைமுறையில் ஒட்டி வந்தவைதான். தட்டிப்பறிக்கவும் விட்டுக்கொடுக்கவும் இது யார்  வீட்டு சொத்தொன்றும் அல்லவே?

புது வருடத்தன்று நள்ளிரவில் கோவிலுக்கு செல்வது எனக்குத் தெரிந்தமட்டும் ஒரு கிறீத்துவப் பழக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது சென்னையில் மட்டுமேனும் இந்துக்குகள் பலரும் நள்ளிரவு கோவிலுக்குச் செல்கிறார்கள். இல்லை இல்லை இது கிறீத்துவ கலாச்சாரத்தை hijack செய்யும் வேலை என யாரும் கூறிவிட முடியாது.
இந்துக்களும் கிறீஸ்துமஸ் கொண்டாடுகின்றனர் என்பதை பலமுறை உயர்வாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல விஷயம்தான். ஆனால் அப்படி கிறீஸ்துமஸ் கொண்டாடும் இந்து தான் வணங்கும் பல்லாயிரம் தெய்வங்களில் ஒன்றாகத்தான் இயேசுவைக் காண்கிறானேயன்றி அவன் இஸ்ரேயலின் மரபில் வந்து உலகையே இரட்சிக்க வந்த மெசியா இயேசுவின் பிறப்பைத்தான் கொண்டாடுகிறான் என்று சொல்லிவிட முடியுமா. அதில் அவன் காணும் இறையியல் ஒரு கிறீத்துவன் கானும் இறையியலை விட முற்றிலும் வேறானது.

பெரிய நாயகி என்பது ஒரு காரணப் பெயர். அது உணர்த்துவது பெண்ணின் கடவுள் வடிவமென்று எதைவைத்துச் சொல்வது? மரியாள் வெறும் புனிதை மட்டுமல்ல அவளுக்கு கத்தோலிக்க கிறீத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் ஒன்று உள்ளது. அவள் ‘மீட்பின் வரலாற்றின் நாயகியே’ அவளுக்கு ஆயிரம் பெயர்கள் உள்ளன. பெரிய நாயகின் என்பது மிகச்சாதாரண பெயர். Queen of love, Queen of mercy, Queen of peace, Queen of angels, Queen of patriarchs and prophets, Queen of apostles and martyrs, Queen of confessors and virgins, Queen of all saints, Queen conceived without original sin, Queen assumed into heaven, Queen of all the earth, Queen of heaven, Queen of the universe. இன்னும் எத்தனையோ பெயர்கள், ப்ராட்டஸ்டண்டுகள் வெறுத்தோடுமளவுக்கு மரியாளுக்கு கத்தோலிக்க கிறீத்துவ இறையியலில் இடமுள்ளது என்றால் ‘பெரிய நாயகி’ எனும் பெயர் எம்மாத்திரம்?.
கலாச்சாரம் எடுத்தாளப்படும்போது அதன் பழைய வடிவிலேயே, அப்படியே எடுத்தாளப்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது தேவையில்லை என்பதற்கு இந்து மதமே மாபெரும் சான்று. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை வியந்தேற்றும் நீங்கள் அதை மாற்று மதத்தினர் உட்கொண்டு கையாளும்போது சந்தேகத்தோடே அணுகுகிறீர்கள். அதை தாராளமனதுடனும் பெருந்தன்மையுடனும் அணுகிவிடவில்லை என்பதே உண்மை. அதுவே சரியானதும்கூட. இல்லையென்றால் தெய்வநாயகம்போன்றோர்களை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம். இந்த வருடம் முதல் திருப்பதியில் கிறீஸ்துமசுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுமானால் நானும் அதை சந்தேகத்தோடுதான் பார்ப்பேன்.
’பெரிய நாயகி’ பெயர்சூட்டுதலை கத்தோலிக்க திருச்சபை மதம்மாற்றும் ஒரு மோசடி நோக்கில் செய்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளுக்கு சேலை கட்டுவது கொடிமரங்களைச் சுற்றிவருவது, முழங்காலில் சுற்றிவருவது, சபரி மலைக்கு செல்வது போலவே வேளாங்கண்ணிக்கு மாலையிடுவது, உப்பு மிளகு தருவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கலாச்சார உள்வாங்கல்கள் பொதுமக்களால் தாமாகவே உருவாக்கப்படுகின்றன நடைபெறுகின்றன. முன்பே குறிப்பிட்டதைப்போல கிறீத்துவ நம்பிக்கைகளின் எல்லைகளுக்குள் இவை நின்றுவிட்டால் போதுமானது அதை யாரும் எதிர்ப்பதில்லை. அப்படித்தான் உருவாகின்றன இவற்றில் பலவும்.

சுடலை மாடன்  இன்னும் தெய்வம்தானே என்கிறீர்கள். உண்மைதான். நல்லதுதான். மாடன் வலுவான உதாரணம் இல்லைதான். ஜெயமோகனின் மாடன் மோட்சத்தைவைத்தே அந்த உதாரணத்தை கையெடுத்தேன். ஆனால் விஷ்ணுபுரத்தில் இந்து மதம் எப்படி சிறுதெய்வங்களை நேரடியாக பழங்குடியினரின் பெருந்தெய்வங்களாகவே மாற்றியது என்பதைச் சொல்லியிருக்கிறார் ஜெ. என்னோடுடனான தனிப்பட்ட உரையாடலிலும் அவர் அப்படி குறிப்பிட்டது நினைவில் உள்ளது. ஒரே கடவுளுக்கு இத்தனை வடிவமும் கதைகளும் வரலாறும் உருவானது இத்தகைய உள்வாங்கலால்தான் நடந்திருக்க இயலுமில்லையா? அந்த பழங்குடி தெய்வங்கள் யாரென்றே இன்று தெரியாமல் போனதில்லையா? ஆக மாடன் தற்போதைக்கு தப்பித்தார் எனக் கொள்ளலாமா?

சொன்னதையே திரும்பத் திரும்பா சொல்வதுபோலத் தோற்றமளிக்கிறது… இருப்பினும்..

  1. தனது நம்பிக்கை வட்டத்துக்குள் நடக்கும் எந்தவொரு கலாச்சாரமயமாக்கலையும் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பதில்லை. சொல்லப்போனால் அதை தேடிச் சென்று உள்வாங்குகிறது. இது மதமாற்ற நோக்கில் என நீங்கள் நம்புகிறீர்கள் இது கலாச்சார நோக்கில் என்று நான் நினைக்கிறேன். நம் இருவருக்குள்ளும் இந்த அடிப்படை வித்தியாசம் இருப்பதால்தான் இந்த உரையாடலே என நினைக்கிறேன்.
  2. 2. மதச்சடங்குகளுக்குள் இரு வேறு ஓட்டங்கள் உள்ளன ஒன்று மதம் சார்ந்தது, இறை சார்ந்தது இன்னொன்று மானுடம் சார்ந்தது. இந்த மானுடம் சார்ந்த தத்துவ தரிசனத்தையே நான் கலாச்சாரம் என்கிறேன். மற்றவை யாவும் குறியீடுகளேயன்றி வேறில்லை. இந்த மானுட தத்துவ தரிசனத்தைக் காட்டும் வேறொரு குரியீட்டை உருவாக்க யாருக்கும் தடை இல்லை. இந்துமதமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தீபாவளிக்கு சாமி கும்பிட வேண்டும் என நம்பிக்கை இருக்கிறாதென்றால் அவரவர் அவரவர் சாமியைத்தான் கும்பிடுகிறார்கள். தீபாவளிக்க்கு கடவுளை வழிபட வேண்டும் என்பது ஒரு மானுட தரிசனம். ஐயப்பனையோ, முருகனையோ, வினாயகரையோ சிவனையோ கிருஷ்ணனையோ வழிபடுதல் வெவ்வேறு குறியீடுகள். இதில்  என்னது மட்டுமே உயர்ந்ததென்றோ, முதன்மையானதென்றோ மற்றவை இழிவானதென்றோ கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
  3. 3. கலாச்சாரமயமாக்கலை திருச்சபை ஒரு தந்திரச் செயலாக நடத்திவருகிறது என நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் அது இயல்பான ஒன்றாய் அனுமதிக்கப்படுகிறது எனச் சொல்கிறேன்.

நான் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வ குரல் அல்ல. இங்கே நான் முன்வைக்கும் எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே என்பதை தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.

உரையாடலுக்கான களாம் மதங்களுக்கிடையே தேவையில்லை என நினைக்கிறேன். மானுடர்கள் உரையாடினால் போதுமானது. மதங்களின் உரையாடல் ஒரு பொய்யான தளத்திலேயே நடைபெற இயலும். மதங்கள் ஒன்றை ஒன்று சகித்துக் கொள்ளலாமே அன்றி நம்பிக்கை என வந்தபின்பு மதித்து வரவெற்று உரையாட அங்கே ஒன்றுமேயில்லை. நாம் தொடர்ந்து உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.

அன்புடன்
சிறில்

அன்பின் சிறில் அலெக்ஸ்,

முதலில் பெரியநாயகி விஷயத்தை முடித்துவிடுகிறேன். நாயகி என்பது மணப்பெண் என பொருள் படும். இறைவனின் மணவாட்டியாக மேரியை கத்தோலிக்க மரபு முன்வைப்பதில்லை. தமிழ்நாட்டில் முக்கிய தலங்களான திருவண்ணாமலை (தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில்), தஞ்சாவூர் (புராதனவனேஸ்வரர் கோவில்), பழனி (உபகோவில்), சீர்காழி (தோணியப்பரர் இங்கே பெரியநாயகி சமேதராக காட்சி அளிக்கிறார்) காஞ்சி, திருஆப்பாடி(பால் உகந்த ஈஸ்வரர், பெரியநாயகி) ஆகிய இடங்களில் சிவனின் துணைவியாக காலங்காலமாக தமிழர்கள் பெரியநாயகியை வழிபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இப்பெயரை கத்தோலிக்க தாய் புனிதருக்கு பயன்படுத்துவது எத்தனை அபத்தமானது என்பது தெரிந்திருக்கும் என நம்புகிறேன். கத்தோலிக்க மக்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு பண்பாட்டு பிரக்ஞை இல்லாதவர்கள் என நான் கருதவில்லை. இதி கீழிருந்து பரிணமித்து எழும் மக்கள் பண்பாட்டு இயக்கமும் இல்லை. திருவிதாங்கோட்டிலோ அல்லது புளியாள் கிராமத்திலோ மேரிக்கு பெரியநாயகி என அபத்தமாக பெயர் சூட்டியது மக்களாக இருக்கமுடியாது அரைகுறையாக inculturation குறித்து படித்து அதனை பயன்படுத்த துடித்த இறையியல் போதகர்களாகவும் அருளப்பா போன்ற பிஷப்புகளுமாகவே இருக்கவேண்டும்.

 

சபையை இறைவனின் மணவாட்டியாக முன்வைப்பதும் கூட ஒரு ஆணிய பக்தி மார்க்க மரபுகள் சார்ந்த அடங்கி நடக்கும் மணவாட்டியாகத்தான் என்பதை இங்கே நினைவுப்படுத்தலாம் (வைணவத்திலும் சில சைவ பக்தி நிலைகளிலும் போல) ஆனால் சிவ-சக்தி மண உறவு அதனைக்காட்டிலும் தொன்மையான ஆதாரமான ஒரு ஆண்-பெண் உறவினைக் காட்டுவதாகும். அதற்கு கிறிஸ்தவ இறையியலில் இன்றைய தேதியில் இடம் இருக்கிறதா அல்லது விவிலிய பெண்ணியத்தில் இடம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியதே ஆகும்.  “இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை” என்று சொல்லும் நிலைக்கு மேற்கத்திய இறையியல் வளர இன்னும் சில நூற்றாண்டுகளாவது பிடிக்கும். அதற்கு பல டி மெல்லாக்கள் கண்டனங்கள் பெற வேண்டி இருக்கும்.

இரண்டாவதாக மேரி – “சிறு தெய்வங்கள்” இத்யாதி குறித்து. முதலில் இந்த “சிறுதெய்வங்கள்” என்ற கோட்பாடே தவறானதென கருதுகிறேன். வட்டாரத் தெய்வங்கள் என்பது சரியாக இருக்குமென நினைக்கிறேன். அடுத்து இந்த வட்டார தெய்வங்கள் வழிபாட்டுடனான உறவாடுதலானது இந்து பண்பாட்டில் கிறிஸ்தவ இறையியலைக் காட்டிலும் அதிக நெகிழ்ச்சியும் குறைவான அல்லது முழுமையாக இல்லாத வன்முறையைக் கொண்டதாக அமைந்துள்ளது என்பதையும் காண்கிறேன். ஏனெனில் இந்திய பெண் தெய்வங்கள் ஏறக்குறைய அனைத்து அதீத மானுட உணர்ச்சிகளையும் முன்வைத்து அதி-மானுட அல்லது இறை நிலையை அடைகிறார்கள்.

 

ஆனால் மேரியை பொறுத்தவரையில் அவர் மூலம் கத்தோலிக்கச்சபை முன்வைப்பது ஒரே ஒரு உணர்ச்சியையே அது கீழ்படிதல். யூத ஏவாளின் கிளர்ச்சிக்கு எதிர்மறையாக கச்சிதமாக வைக்கப்படும் ஒரு பெண் பிம்பம் மேரி. நீங்களே இதை சொல்லியிருக்கிறீர்கள். பூமி சார்ந்த ஆன்மிகத்தின் குறியீடான சர்ப்பத்தின் ஏவலால ஏவாளின் கிளர்ச்சியால் அடங்கமறுத்தமையால் ஏற்படும் ஆதிபாவத்துக்கு கழுவாயாக ஒரு யூத கன்னிப்பெண் “இதோ உம் அடிமை” என வான் உறையும் ஆண் தெய்வத்தின் ஆண் குழந்தைக்காக ஆண் தேவதூதன் முன் மண்டியிடும் பிம்பம். ஆனால் இந்த பிம்பத்தினை முன்வைத்து செயல்படுத்தப்படும் கத்தோலிக்க இறையியலில் மேரி பெரும்பாலும் சகித்துக்கொள்ளப்படும் பெண் புனிதராகவே இருக்கிறார்.

 

மேரி என்றாலே வெறுத்தோடுவதற்கு நீங்கள் புரோட்டஸ்டண்டுகள் வரை செல்லவேண்டாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் ஒரு இறையியலாளர் அடித்த ஜோக் இது: “யூத ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது ஏசுவை காணவில்லை என்றவுடன் அவரது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்” என்று அவர் கேட்டாராம். அதற்கு ஒரு கிராமத்து மாணவன்  எழுந்து சொன்னானாம், “அய்யா அவர்கள் அரோக்கியமாதா கெபியில் விளக்கேற்றி ஏசு கிடைக்க பிரார்த்தனை செய்தார்கள்” என்று. இந்த அளவு நம் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்” என்றார். கடவுளை விட நம்மக்கள் பக்தனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

 

இதே விஷயத்தை இன்னொரு விதமாக இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லுகிறார்: “கடவுளான இராமருக்கு கடலை கடக்க பாலம் தேவைப்பட்டது. ஆனால் அவரது பக்தரான அனுமானுக்கு இராமநாமத்தை சொல்லியபடியே கடக்க முடிந்தது.” கடவுளை என்கிற external reality ஐ விட பக்தி அல்லது பக்தியின் குறியீடாக விளங்கும் மானுடத்தின் internal reality க்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் இந்திய மனதின் போக்கு கத்தோலிக்கத்துக்கு பிரச்சனையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாரத பிரக்ஞையில் இந்த tension ராம-ஆஞ்சநேய யுத்தம் என்கிற கதையாடலாக மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதையாடல்கள் நாட்டார் வழக்கு ஏசு கதைகள் ஐரோப்பாவில் இருக்கின்றன என நான் அறிவேன்.

 

உதாரணமாக இத்தாலிய நாட்டுப்புற கதையான ஏசுவுக்கு உணவளித்த ஒரு சூதாடியின் கதை. ஆனால் அவற்றுக்கு என்றைக்குமே சபை அங்கீகாரம் கிடைக்காது விளிம்பு நிலைகளில் மட்டுமே வழங்கப்பட்டு அழியும் யாராவது அதீத ஆர்வம் கொண்டு அதை பதிவு செய்து வைத்தால் ஏதாவது ஒரு இடத்தில் பதிவாகி காத்திருக்கும். இங்கு அவ்வாறல்ல. இதைத்தான் கத்தோலிக்கம் உள்வாங்க வேண்டும் என நான் கருதுகிறேன். (அப்படி கருத நான் யாரென கேட்கலாம். நானே அதைக் கேட்டுக்கொள்ளவும் செய்கிறேன்.)

மூன்றாவதாக ஆண்டனி டி மெல்லா தனது வாழ்க்கை காலத்தில் நிறுவன சபையால் கஷ்டப்பட்டாரா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. அவரது சாதனா நிலையம் பூனாவிலின் முக்கிய இறையியல் கல்லூரியிலிருந்து மற்றொரு நகருக்கு மாற்றப்பட்டதும், அவரது கல்லறையிலிருந்து பெயர்பலகை அகற்றப்பட்டதுமெல்லாம் நிர்வாக குளறுபடிகள் அல்லது நமது அரசியல்வாதிகள் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து சொல்வது போல “வழக்கமான நிர்வாக செயல்பாடுகள்” என்பதாகவே இருக்கும் என நம்பவே ஆசைப்படுகிறேன்..

 

மற்றபடி நீங்கள் டி மெல்லாவின் மறைவுக்கு பின்னர் அவரை கண்டனம் செய்யும் அறிக்கையின் தொடக்க நல் வார்த்தைகளை வைத்து அக்கடிதத்தை எடை போடுவது சரியல்ல என நினைக்கிறேன். பொதுவாகவே ‘பெரிய மனிதர்கள்’ யாரையாவது வேலையை விட்டு நீக்கும் முன்னால் அல்லது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் “நீங்க நல்லவருதான்…நீங்க நல்லது நினைச்சுதான் செஞ்சிருப்பீங்கன்னு தெரியும்…. ஆனால்….”  எனவே அந்த கடிதம் முழுவதையும் படியுங்கள் போக போக அதில் ஏறும் கடுமையையும் இறுதியில் அது கொடுக்கும் தீர்ப்பையும் பாருங்கள்…

 

” a progressive distancing from the essential contents of the Christian faith” என்பது மிகவும் மென்மையாக ஆரம்பிக்கும் கண்டனம் பிறகு இப்படி போகிறது, “This radical apophaticism leads even to a denial that the Bible contains valid statements about God.  The words of Scripture are indications which serve only to lead a person to silence.  In other passages, the judgment on sacred religious texts, not excluding the Bible, becomes even more severe: they are said to prevent people from following their own common sense and cause them to become obtuse and cruel.  Religions, including Christianity, are one of the major obstacles to the discovery of truth.”

 

பிறகு இப்படி முடிகிறது, “With the present Notification, in order to protect the good of the Christian faithful, this Congregation declares that the above-mentioned positions are incompatible with the Catholic faith and can cause grave harm.” மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள Congregation for the doctrione of the faith உள்ளபடியே 1907 க்கு முன்னால் Congregation for Universal Inquisition என்றுதான் அழைக்கப்பட்டது (இதனை கத்தோலிக்க இணையதளங்களிலேயே நீங்கள் உறுதி செய்துக்கொள்ளலாம்: http://www.catholic-hierarchy.org/diocese/dxcdf.html)

இறுதியாக நம்பிக்கைகளை சகித்துக்கொள்ளத்தான் முடியுமா சிறில்? அவை நம்பிக்கைகளாகவும்தான் இருக்க வேண்டுமா? ஒரு சிறிய உண்மைக்கு எதிரானது ஒரு பொய்யாக இருக்க முடியும் ஆனால் ஒரு பெரிய உண்மைக்கு எதிர்ப்பதம் மற்றொரு பெரிய உண்மை என்றார் நெய்ல்ஸ் போர் நுண்ணலகு இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனம் குறித்து பேசும்[போது. இன்றைக்கு இறை நம்பிக்கைகளை தாண்டி தத்துவதரிசனங்களோடு பேசும் தன்மை நம் மதங்கள் அனைத்துக்கும் வந்துவிட்டன என நான் கருதுகிறேன்.

 

ஜேகே யோ ஓஷோவோ அல்லது டி மெல்லாவோ நாம் மதம் உதிர்ந்த ஆன்மிகத்தை பகிர்ந்து கொள்ள முடியும்தான். துரதிர்ஷ்டவசமாக சில குறுகிய மனமும் அதிகார பசியும் கொண்டவர்களால் நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்தான். கத்தோலிக்க இன்க்விசிஷனோ அல்லது மனு ஸ்மிருதியோ அல்லது கல்லாலடிக்கும் ஷரியத்தோ மீண்டும் எழுந்து வராமல் இருக்க அந்த விழிப்புணர்வு அவசியம்தான். ஆனால் அவற்றை மீறி சகிப்புத்தன்மை அல்ல பரஸ்பர மரியாதையை நாம் நம் கொண்டிருக்கும் பன்மை தரிசனங்களின் மீது காட்டமுடியும்.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

அன்புள்ள அரவிந்தன்,
உங்களுக்கு கிறீத்துவ இறையியல் உவப்பானதாயில்லை. அது தட்டையானதாகவும், பெண்ணை அடிமை செய்வதாயும், பன்முகத்தன்மையே இல்லாததாயும் தெரிகிறது. மரியாளை விண்ணரசியாகக் கொண்டாடுகிறார்கள் எனச் சொன்னாலும் அவள் பெண்னின் கீழ்படிதலைத்தான் முன்வைக்கிறாள் என்கிறீர்கள். அவள் கீழ்படிந்தது கடவுளுக்குத்தான் கணவனுக்கல்ல என நான் சொன்னால் உடனே 'ஆண்' கடவுளுக்குத்தான் எனச் சொல்வீர்கள். அதற்கு சாதகமானதொரு இந்து மரபை எடுத்துக் காட்டுவீர்கள். பெண்ணை தெய்வத்துக்கெல்லாம் தாயெனப் பாடும் ஒரு பாடலை சுட்டிக் காண்பிப்பீர்கள் பெண்ணை அடிமை எனச் சொல்லும் வேத வரியையொன்றை நான் சுட்டிக்காட்டினால் இன்னொரு விளக்கம் தருவீர்கள்.

முன்பு நான் 'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்' சிவனை வணங்காதவர்களை நிந்திக்கிறதே எனச் சொன்னதற்கு அது பக்தியின் வெளிப்பாடு என்றீர்கள் ஆனால் இன்று இன்னொரு செய்யுளை எடுத்துக்கொண்டு அது இந்து இறையியல் என்கிறீர்கள். இதை மறுக்கும் இன்னொரு செய்யுளை, சிவனே எல்லாவற்றிற்கும் தலையாயவன் என்கிற இறையியலை இந்துமதத்தில் நிச்சயம் காண இயலும். இவை வெறும் முரணியக்கங்களல்ல ஒரு காலத்தில் முரட்டு இயக்கங்களாயும் இருந்திருக்கின்றன. இன்றும் இந்த முரணியக்கங்கள் தங்களை இந்து எனும் குடையின் கீழ் கொண்டு இயங்குகின்றனவேயன்றி அவற்றினூடாக நீங்கள் கிறீத்துவத்தோடு நடத்த விரும்புகிற 'உரையாடல்' நடந்து கொண்டிருக்கிறதா, சாத்தியமா தெரியவில்லை. அந்த முரட்டு வரலாற்றை வெளியில் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்று உண்டு. உங்கள் தரப்பு எப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு திருச்சபையின் பணியாட்கள் மீதும் நல்ல மதிப்பு இல்லை. இதனால் அவர்களை எப்போதும் சதிகாரர்களாகவும் மதமாற்றுபவர்களாகவும் காண்பீர்கள். அவர்கள் எந்த நூற்றாண்டின் வார்த்தைகளைச் சொன்னாலும் கறுத்த காலங்களுடனேயே ஒப்பிடுவீர்கள். அதற்கான நியாயங்களை உங்களுக்கு கற்பித்துள்ளீர்கள்.

இவற்றையெல்லாம் தாண்டியும் உரையாடலை நிகழ்த்தலாம் என்கிறீர்கள்.

முதலில் பெரிய நாயகி என்பது பெண்ணின் தெய்வ வடிவம் ஆகவே மேரிக்குப் பொருந்தாது என்றீர்கள். இப்போது அது மணவாட்டியை குறிக்கிறது அதனால் பொருந்தாது என்கிறீர்கள்.

இந்து இறையியல் என ஒரு ஒற்றைப் பரிமான இறையியல் ஒன்று இல்லை. இந்து இறையியலில் இருப்பது நெகிழ்தன்மையல்ல. அது பன்முகத்தன்மை மட்டுமே. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என நினைக்கிறேன். ஒரு ஒற்றைப் பரிமண இறையியல் நெகிழ்ந்து தருமேயானால் அதை நெகிழ்தன்மையுடையது எனலாம். இந்த பன்முகத்தரப்பைக் கொண்டு அதன் பன்முக ஆதாரங்களிலிருந்து நல்லவற்றை மட்டும் பிரித்தெடுத்து ஒற்றைப்பரிமாணத்தில் மட்டுமே இயங்குவதாய்  நீங்கள் நம்பும் ஒரு இறையியலை பல்வேறு குறைகளை குறிப்பிட்டு குறைத்துப் பேசுவது எளிதல்லவா?

நாம் ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் நம் நம்பிக்கைகள் வெவ்வேறானவை. அதைத் தாண்டிச் சென்ரு விவாதிப்பது கடினம். எனவேதான் நாம் நம்பிக்கை சார்ந்த உரையாடல்களை தவிர்ப்பதே நல்லது என நம்புகிறேன்.

ஆனால் என் தரப்பு ஜெயமோகனின் தரப்பை ஒத்துச் செல்கிறது, அதுவே இந்த மண்ணின் மரபானதொரு தரப்பு என நம்புகிறேன் . அது யார் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அது அமைதியின் வழியாக, மக்களின் நலன் பேணும் வழியாக இருந்தாலே போதும் என நினைக்கிறது. அந்த மரபு ஒன்றே பல தெய்வங்களை வழிபடுபவர்களையும் சகோதரர்களாக்குகிறது.

அந்த மரபினூடேயே கிறீத்துவம் 'அதிக வன்முறையின்றி' இந்த மண்ணில் காலூன்றியிருக்கும். அந்த மரபை நோக்கிச் செல்லும் கிறீத்துவ இணைப்பு முயற்சிகளை நான் வரவேற்கிறேன். அவை அதிகம் நிகழ வேண்டும் என நினைக்கிறேன். அந்த முயற்சிகள் நல்லெண்ணங்களோடு நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன். அப்படி நல்லெண்ணமற்ற எந்த முயற்சியையும் உங்களோடு சேர்ந்து எதிர்க்கிறேன்.

 

சிறில்

 

 

 

அன்புள்ள சிறில், அரவிந்தன்,

 

உங்களுடைய இவ்விவாதத்தில் நான் சொல்லவேண்டியதை முன்னரே சொல்லிவிட்டிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். இங்கே மதங்கள் இருக்கின்றன, கோடிக்கணக்கானபேர் அவற்றை நம்புகிறார்கள். அவற்றையே தங்கள் வாழ்க்கையின் சாரமாகவும் சுய அடையாளமாகவும் கருதுகிறார்கள். இந்நிலையில் கேள்வி யார் இங்கே இருப்பது அல்லது யார் மேலே இருப்பது என்பதல்ல. அது சாத்தியமே அல்ல. அது வன்முறை, அவ்வன்முறையை நினைப்பவர்களுக்கும் அழிவைத் தரக்கூடியது.

 

ஆகவே இங்கே உள்ள கேள்வி அத்தனை சுய அடையாள உருவாக்கம், அமைப்புசார்ந்த இறுக்கம், கொள்கைகள் சார்ந்த பிடிவாதம், பிறனுருவாக்கம், அதன் விளைவான ஐயம் ஆகியவற்றுக்கு அப்பால் ஏதாவது உரையாடல் சாத்தியமா என்பதே.  ஆகவே எந்தவகையான உரையாடலும் நல்லதே. அது ஓர் பரஸ்பர புரிதலை உருவாக்குகிறது

 

உரையாடலுக்கு இன்னின்ன நிபந்தனைகள் உண்டு என்று சொல்வது முரட்டுத்தனமான பிடிவாதத்தையும் ஐயத்தையுமே காட்டுகிறது

.ஒருமதம், அதன் உறுதியான நம்பிக்கைக் கட்டமைப்பையும் தொன்மச்சங்கிலியையும் மீறி, அல்லது உதறி,  உரையாடலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதையே முரட்டுத்தனம் என்கிறேன். எந்த ஒரு புதிய விஷயத்தையும் தன்னுடைய தொன்மச்சங்கிலிக்குள் இணைத்துக்கொள்வதென்பது எந்த மதமும் செய்வதே. தன் மதத்தின் இறுக்கத்தை நெகிழ்த்தி  பிற மதம் ஒன்றின் நம்பிக்கைகளை, தொன்மங்களை,ஆசாரங்களை ஆராய ஒரு மதம் முயல்வதேகூட ஒரு பெரிய விஷயமாக மாறிவிட்டிருக்கிறது இன்று.

 

இருபது நூற்றாண்டுகளுக்கு முன் புத்தஜாதகக் கதைகள் உருவானபோது புத்தரின் அவதாரங்களாக ராமனும் கிருஷ்ணனும் உள்ளிழுக்கப்பட்டார்கள். ஆனால் அச்செயல்மூலமே வேதமரபை எதிர்த்த பௌத்தம் வேதமரபின் தத்துவ உச்சமாக இருந்த வேதாந்தத்துடன் ஓர் உரையாடலுக்கு முன்வந்தது. அதன் விளைவாகவே அதற்குள் யோகாசார பௌத்த மரபுகள் உருவாயின. பின்னர் அந்த யோகாசார ஞானமரபை தான் எடுத்துக்கொண்டு சங்கரர் வேதாந்தத்தை அத்வைதமாக ஆக்கினார்.

 

புத்த ஜாதகக் கதைகளை பௌத்தர்களில் தேரவாதிகள் 'மலம்' என்று நிராகரித்தனர். சங்கரரை வைதிகர்கள் 'மாறுவேட பௌத்தன்' என்று நிராகரித்தனர். மதத்தின் இறுக்கமான அமைப்புக்குள் நிற்பவர்களின் எதிர்வினை எப்போதுமே அப்படிப்பட்டதுதான்.

 

சைவமோ வைணவமோ எல்லாக்காலத்திலும் நெகிழ்தன்மை கொண்டவையாக இருந்ததில்லை. அவற்றின் அமைப்பும்  மிக இறுக்கமாகவே இருந்தது. 'பரசமய கோளரி' என்றுதான் சம்பந்தர் போற்றப்பட்டார். எவையெல்லாம் புறச்சமயம் என்று பட்டியலிட்டு அவற்றை ஒதுக்கி தங்களை 'பாதுகாத்துக்கொள்ளவே' சைவம் முயன்றது. வைணவமும் அப்படித்தான்

 

இன்றுக்கூட சைவ வைணவ மதங்களின் மையத்தில் ஒரு பகுதி அதே இறுக்கத்துடன்தான் இருக்கிறார்கள். உதாரணமாக நெல்லை ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை எழுதிய கட்டுரைகளைக் காணலாம். அது சைவ அடிப்படைவாதம். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் போன்ற இதழ்களைப் பார்த்தால் வைணவ அடிப்படைவாதத்தைக் காணலாம்.

 

பதிமூன்றாம் நூற்றாண்டில் நாயக்கர்களின் காலகட்டத்தில்தான் சைவ வைணவ உரையாடல் நாம் இன்று காணும் அளவில் ஆரம்பமாகியது. சைவக்கோயிலில் வைணவத்தையும் வைணவக்கோயிலில் சைவத்தையும் அவர்கள்தான் குடியிருத்தினார்கள். மத உரையாடலை அவர்கள் அதிகாரம் மூலம் கட்டாயப்படுத்தினார்கள். அப்போதுகூட அது எளிதாக நிகழவில்லை.

 

உதாரணமாக சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும் பிரம்மாவும் சென்றார்கள், இருவராலும் காணமுடியவில்லை, விஷ்ணு தோற்றுப்போய் திரும்பிவந்தார் என்ற சைவக்கதை [திருவண்ணாமலைபுராணம்] வைணவர்களுக்கு எப்படி ஏற்புடையதாக இருந்திருக்கும்? பெரும்பாலான வைணவக் கதைகளில் அசுரர்களை அழிக்க முடியாமல் சிவபெருமான் ஓடிவந்து விஷ்ணுவிடம் முறையிடுகிறார். சைவர்கள் எப்படி அதை ஏற்பார்கள்?

 

ஆனால் காலப்போக்கில் உரையாடல் சாத்தியமாகியது. இன்றும் சைவமும் வைணவமும் இரண்டாகவே உள்ளன என்றாலும் கசப்புகள் இல்லை. இப்படித்தான் உரையாடல் நடக்க முடியும். அந்த உரையாடலை வைணவச்சதி என்றே ஈசுவரமூர்த்திப்பிள்ளை சொல்கிறார். சைவச்சதி என்றே பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கராச்சாரியார் சொல்கிறார். ஆனால் அதையும் மீறி உரையாடல் நடந்தது.

வரலாற்றின்  தருணங்களும் வாய்ப்புகளும் எப்படியோ அதைச்சார்ந்தே உரையாடல் நடக்க முடியும். இப்படித்தான் உரையாடல் நடக்க வேண்டும், இதுதான் உரையாடல், பிற எதையுமே நிராகரிப்பேன் என்பதும் முரட்டுத்தனமே. அரவிந்தனின் மனநிலையை நான் முழுமையாகவே நிராகரிக்கிறேன். அது அவரது அச்சங்கள், மனச்சிக்கல்களை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கிறது. மறுபக்கம் தன் கட்டமை ப்பில் எந்த மார்றத்துக்கும் தயாராக இல்லாமல் பிறரது நம்பிக்கை தொன்மம் வரலாறு ஆகியவற்றை ‘திருத்த’ முயலும் போக்கை ஆக்ரமிப்பாக மட்டுமே பார்க்கிறேன். இதுவே என் நிலைபாடு.

 

அந்த சாத்தியத்தின் மீதான நம்பிக்கையை மட்டுமே நான் என் எழுத்துக்கள் வழியாக முன்வைக்கிறேன்

 

ஜெ__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 அன்பின் ஜெயமோகன்,

என்னை நீங்கள் நிராகரிப்பதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் என் தரப்பினை தெளிவாக்க விரும்புகிறேன். நான் இந்த விவாத இழை முழுக்க உரையாடலுக்கு எவ்வித முன் நிபந்தனையும் வைக்கவில்லை.

எனக்கு நீங்கள் எதை உரையாடல் என சொல்கிறீர்கள் என்பது குழப்பமாக இருக்கிறது. உதாரணமாக திருவண்ணாமலை புராணமோ அல்லது சிவனை விஷ்ணு பக்தராக காட்டும் வைணவக் கதைகளோ பாடல்களோ சைவ-வைணவ உரையாடலின் ஒரு பகுதியாக இருந்திருக்க முடியாதல்லவா? இன்றைய சைவ-வைணவ சமரசத்தன்மையை உருவாக்கிய தளம் எது? “அரியும் சிவனும் ஒண்ணு” என்பது போன்ற வழக்கு மொழிகளை ஏற்படுத்தியது எது? அது அதிகாரம் சார்ந்த ஒன்றாக இருந்திருக்க முடியாதல்லவா?

 

அந்த புள்ளியிலிருந்தே ஹிந்து-கிறிஸ்தவ உரையாடல் நடைபெறுவது நல்லதென நினைக்கிறேன். சாந்தி வனத்தில் ஹிந்து கத்தோலிக்க உரையாடலை மிகக் கவனமாக பல பத்தாண்டுகள் அவதானித்த Wayne Teasdale எனும் கத்தோலிக்க இறையியலாளர் கூறுவதை பாருங்கள்:

Jim. What about the Hindu side of the Christian-Hindu dialogue. How interested are Hindus in this dialogue?

Wayne. We have had so much frustration with Hindus. They are not committed to dialogue. Some are fascinated with it, but they always see it in the Hindu context that Hinduism embraces everything. Hinduism can hi-jack Christianity and obliterate differences.

Jim. Do you think a genuine Indian Catholic Church is going to develop?

Wayne. Yes, I think so. I think it is happening. The Catholic Church in India has a siege mentality against Hinduism, and is conservative. Christianity in its traditional form is European. It is not universal in its expression. Only 2% of Asia is Christian. The institutional form of Christianity is unintelligible to the oriental mind. There has to be this inculturation process which has to happen. That is my hope and my expectation.

என் தரப்பு எளிமையானது. போலி வரலாற்றுருவாக்கங்கள் இல்லாமல் மதங்கள் கடந்த ஆன்மிக வெளியிலிருந்தே உரையாடல்களை உருவாக்க முடியும். போலி வரலாற்றுருவாக்கங்களும், பண்பாட்டு அபகரிப்புகளும் மனக்கசப்பையும் ஐய உணர்வையுமே உருவாக்கும். அவை உரையாடல்கள் அல்ல. அவை உரையாடலுக்கான வெளியையும் உருவாக்குவதில்லை. இவ்வாறு கூறுவது முன்நிபந்தனையோ முரட்டுத்தனமோ அல்ல.

அரவிந்தன் நீலகண்டன்__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

கிறித்துவம், இந்து மரபு

அன்புள்ள ஜெயமோகன்,
கேரள சிரியன் கிறித்துவர்கள் திடீரென மிசிகா ராத்திரி கொண்டாட ஆரம்பித்துள்ளதை [கிறித்தவ தசரா;கடிதங்கள் ] நீங்கள் வரவேற்றிருப்பது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. தெய்வநாயகத்தைப் போன்றதொரு மோசடியாகத்தான் நான் இதைக் காண்கிறேன். இந்திய கலாச்சார கூறுகள் பலவற்றையும் திருச்சபை எடுத்தாண்டிருக்கிறது. ஆர்வத்துடன் மக்களின் கலாச்சார விகிதிங்களை கூர்ந்து கவனித்தும் அவற்றை உரிய வகையில் உட்கொண்டும் திருச்சபை புதிய ஆன்மிக வடிவங்களை மக்களின் தேவைக்கேற்ப அடைகிறது.

ஆனால் பாரம்பரியமாக இந்திய மரபில் இருந்துவரும் கல்விக்கான உயர் மதிப்பும் அதன் வெளிப்பாடான பக்தி முயற்சிகளும் கிறித்துவ முறைகளிலிருந்துதான் பிறந்து வந்தன என்பது சற்றும் உண்மையில்லாத ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதில் ஜடாயு மற்றும் நண்பர் அநீயின் கருத்துக்களில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.

கலாச்சாரத்தை கையாளும் விதம் குறித்து திருச்சபைக்குள் நான்கு முக்கிய இயக்கங்கள் இருப்பதைக் காண இயலும். ஒன்று கலாச்சாரப்படுத்தலை ஆதரிக்கும் பாதிரியார்கள், அடுத்து அதை ஆதரிக்கும் பொதுமக்கள், இதன் எதிர் தரப்ப்பான பாதிர்யார்கள், பொதுமக்கள். சென்னை பங்கு ஒன்றில் பொங்கலுக்கு சிறப்பு பூஜை செய்த பாதிரியாரை பொதுமக்கள் அடித்து விரட்டிய கதையும் உண்டு. அதே சமயம் ஆயுத பூஜைக்கு சாமியாரை கூப்பிட்டு கடையை மந்திரிக்கும் பழக்கும்டையவர்களும் உண்டு.

இந்திய கலாச்சாரம் இன்றைக்கு சிலருக்கு குத்தகை விடப்பட்டுள்ள தோற்றம் இருப்பதாலேயே திருச்சபையை கலாச்சாரப் படுத்தும் விஷயத்தில் பல குழப்பங்களும் இருப்பதாக நான் காண்கிறேன். ஆனால் இந்திய முறையில் சர்ச்சில் பூசை செய்வது இந்திய திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. மலர், தீபம் தூபம் என கலாச்சார மனத்துடன் வழிபாடுகள் நடைபெறுவது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கேரள புனிதருக்கு பட்டம் தரும் விழாவில் ரோமில் இந்திய முறை வழிபாடுகள் நடந்தன என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடை அணிகலன்கள் துவங்கி திருமணச் சடங்குகள் வரையிலும் சர்ச்சுக்கு வெளியே நடக்கும் எந்த கலாச்சார நிகழ்வுகலையும் திருச்சபை கட்டுப்படுத்த முயன்றதாக எனக்குத் தெரிந்து இல்லை(சாதிக் கொடுமைகள் உட்பட). இந்த நான்கு குழுக்களுக்குமிடையிலான முரணியக்கத்தின் மத்தியில் திருச்சபையின் கலாச்சாரப்படுத்துதல் தொடர்ந்து நடந்துகொண்டும் குறைந்து கொண்டும் இருக்கிறது.

இதனிடையில் ஆன்ந்தனி டி மெலோவை தன்பக்க ‘வேத சாட்சியாக்கும்’ அநீ  [ கிறித்தவ விஜயதசமி ]என்ன சொல்ல வருகிறார் என முழுமையாகத் தெரியவில்லை. ஆந்தனி டி மெலோ திருச்சபையை கலாச்சாரப் படுத்த முயன்றவரல்ல. அவர் எந்த ஒரு ‘இந்து மத’ பக்தி முயற்சியையும் கிறித்துவத்தில் நுழைக்கவில்லை. தனக்கென சாதனா எனும்  தியான வடிவத்தை உருவாக்கினார். அதை பிரபலப்படுத்தினார். ஆந்தனி டி மெலோவின் முக்கிய தாக்கம் பௌத்தமே. புத்தரே அவரின் புத்தகங்களின் அதிகம் வெளிப்படும் ஆளுமை. அவரின் ஆன்மகுரு ஒரு பௌத்தர். இயேசுவை புத்தனாகவே காண்கிறார். எப்படி பௌத்தம் பக்தி மார்கத்தில் சென்று ‘சீரழிந்ததோ’ (degenerated) அதேபோலவே அவர் கிறித்துவத்தைக் கண்டார். இயேசுவின் கடவுள் தரிசனம் திருச்சபையில் சென்று சீரழிந்ததாகக் காண்கிறார் டி மெலோ.

‘ஆந்தனி டி மெலோவுக்கு நேர்ந்தது தெரியும்தானே எனச் சொல்லி உடனேயே சிவன் கோவில் முன் விழுந்து இறந்த கத்தோலிக்கரைக் குறித்துச் சொல்வதனால் ஒரு குழப்பம். ஆந்தனி டி மெலோ 1987ல் நியுயார்க் நகரில் இறந்தார். அவரது புத்தகங்களை ஆராய்ந்த (1998ல்) கத்தோலிக்க திருச்சபை அவற்றை தற்காலிகமாக தடை செய்தது. ‘கத்தோலிக்க நம்பிக்கைகளை விட்டு படிப்படியாக விலகிச் செல்வதனால்..’ என தடைக்கான காரனம் சொல்லப்பட்டுல்ளது. நான் இதில் மிக முக்கியமாகக் காண்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ஆந்தனி கடைசி வரைக்கும் ஒரு இயேசு சபை பாதிரியாராகத்தான் வாழ்ந்தார். மறைந்தார். இரண்டாவதாக திருச்சபை அவரின் புத்தகங்களை கத்தோலிக்க நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது எனச் சொல்லியதேயன்றி அதை முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒரு பாகனிய, சாத்தானிய படைப்பாக முத்திரை குத்திவிடவுமில்லை. இன்றும் அவரின் புத்தகங்கள் கத்தோலிக்க, கிறீத்துவ மையங்களில் வாங்கக் கிடைக்கின்றன. ‘இவை கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைகளை ஒட்டியவை அல்ல’ எனும் எச்சரிக்கையோடு.(‘The books of Father Anthony de Mello were written in a multi-religious context to help the followers of other religionsagnostics and atheists in their spiritual search, and they were not intended by the author as manuals of instruction of the Catholic faithful in Christian doctrine or dogma.’)  நான் அந்தோனி டி மெலோவை படிக்க ஆரம்பித்தது செமினரியில் என்றால் அநீ நம்புவாரா எனத் தெரியவில்லை.

ஆந்தனி டி மெலோ மதம் ஒரு வழிகாட்டி மட்டுமே என்றார். கடவுள் அனுபவம் தனிமனிதனது என்றார். வழிகாட்டிப்பலகையை பிடித்துக்கொண்டு இலக்கை அடைந்துவிட்டேன் எனக் குதிக்காதே என்கிறார். ஞானி நிலவைக் காண்பிக்கிறான் முட்டாள் விரலை மட்டுமே பார்க்கிறான் என்றார். திருச்சட்டங்களைக் கொண்டு மெசியாவையே கொன்றுவிட்கிறார்கள் என்று சொல்கிறார். இவையெல்லாம் திருச்சபையின் ஆன்மிகப்பணியை, பாத்திரத்தை(Role),  கணிசமாகக் குறைத்து விடுவதை திருச்சபை நிச்சயம் உணர்ந்திருக்கும். இதுவே ஆந்தனி டி மெலோ விலக்கப்பட முக்கியமான காரணமாய் நான் காண்கிறேன். டி மெலோ இதை பெரிதும் விரும்பியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. திருச்சபையின் பின்னால் சென்று தன் தெரிவுகளை அடகு வைத்திருப்பாரென்றால் அவர் சொல்லும் ஒன்றிலும் அர்தமில்லை.

கத்தோலிக்கம் மட்டுமல்ல இந்து மதம் கூட சிறு மதங்களை உள்வாங்கி பிர்மாண்டமானதுதான். உங்கள் விஷ்ணுபுரத்தில் இதை முன்வைத்துள்ளீர்கள் என்று நியாபகம். ‘மாடனுக்கு சர்க்கரை பொங்கல் படைப்பதுவும்’ பாகன் அடையாளங்களை உள்வாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? வரலாற்றில் கிறித்துவம் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தரப்புக்கள் கலாச்சாரக் கலாச்சாரக் கொலைகள் புரிந்துள்ளன இந்து பக்தி இயக்கம் உட்பட. சமணம் இந்துமதத்தை அழித்தது என்றால், மீண்டெழுந்த பக்த்தி இயக்கம் சமணத்தை அழித்தது எனலாமே? அவற்றை அப்படிக் காண வேண்டியதும் இல்லை. அவை மானுடத்தின் வளர்சிதை மாற்றங்கள்தான். கிறித்துவம் தன் அரசியல் பலத்தை பயன்படுத்தியது உண்மையே. இதுவும் இந்தியாவிலும் நடைபெற்றிருக்கும் என்பதே எனதெண்ணம். (எனக்கு இது குறித்து தெரிந்த வரலாறு தசாவதாரம் படத்திலிருந்துதான் எனப்தை தாழ்மையுடன் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்)

கலாச்சாரப்படுத்துதல் குறித்த ஆய்வு புத்தகம் ஒன்று மறைந்த போப்புக்கு ஆசியாவிலிருந்து அனுப்பப்பட்டது. சீனா வட, தென் இந்தியா, இலங்கை என ஆசிய நாடுகளின் கலாச்சாரங்களை திருச்சபை எடுத்தாள்வது குறித்தான ஆய்வு அது. அதை பிழைதிருத்தும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒருவர் ஜென் முறைகளை உள்வாங்குவது குறித்து, இன்னொருவர் சில இந்திய கலாச்சார பழக்கங்களைக் குறித்து என கட்டுரைகள் அதில் இருந்தன. ஆனால் என் செவிட்டில் அறைந்தது இலங்கை பாதிரியார் எழுதியிருந்த கட்டுரைதான்.
அவர் அதில் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். ஏன் நாம் இந்த கலாச்சாரப்படுத்தலை செய்ய வேண்டும் அதனால் சடங்கலை மேன்மைப்படுத்த முடியுமேயன்றி வேறென்ன  பலன்? இருக்கும் சடங்குகளால் என்ன நேர்ந்திருக்கிறது? சர்ச்சில் முதியவர்களுக்கு எழுந்து இடம் கொடுக்கும் பண்போ, அல்லது சர்ச்சில் கூடுபவர்களுக்கிடையே நட்புணர்வோ, அல்லது முகம் தெரியாதவருக்கு நட்போ, வியாபாரத்தில் நேர்மையோ, சாதி பாகுபாடில்லாமல் பழகுவதோ போன்ற அடிப்படை மனிதப்பண்புகளை வளர்ப்பதை நாம் முன்னெடுக்க வேண்டுமேயன்றி வெறுமனே கலாச்சாரப் பழக்கங்களையல்ல என அந்த ஆய்வையே மறுதலித்து எழுதியிருந்தார் அவர். கிட்டத்தட்ட டி மெலோவின் குரல். இத்தகையதொரு திருச்சபையைத்தான் அவர் கனவுகாண்கிறார். ஆனால் அது மிகவும் கடினமானதொரு விஷயம் அப்படி ஒரு மதம் நீடித்து நிற்பதும் பரவலாகுவதும் இயலாத காரியம். அடிப்படையில் இந்துமதம் அப்படி இருந்தது என்றும் பின்னர் அது பக்தி மார்க்கமானபின்னரே நீடித்து நிலைத்து பரந்துபட்டது என்றும் நீங்கள் சொன்னது நியாபகம்.

திருச்சபை இரண்டாம் வட்டிக்கான் மூலம் தன் கதவுகளை சாதாரணர்களுக்குத் திறந்துவிட்டது. ஆனால் அதற்கும் பல காலம் முன்னரே பல சாமியார்களும் அந்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பலரையும் திருச்சபை கண்டித்திருக்கும், தடை செய்திருக்கும். ஆனால் இறுதியில் அது அதிகாரபூர்வமாக ஒன்றுகூடி விவாதித்து கிட்டத்தட்ட ஒரு புதிய திருச்சபையை உருவாக்கியது. அந்த நம்பிக்கை எனக்கு கத்தோலிக்க திருச்சபை மீது எப்போதும் உண்டு.

கிறீத்துவர்கள் எடுத்தாள வேன்டியது இந்தியாவின் சடங்குகளை அல்ல. (அதைச் செய்வதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை) மாறாக அதன் பின்னிருக்கும் தத்துவ தரிசனங்களையே.

 


Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com

 

அன்புள்ள சிறில்,

உங்கள் கருத்துக்களை நான் முழுக்க முழுக்க ஏற்கிறேன். அவற்றின் சாராம்சம் நான் சொல்ல விரும்பும் விஷயங்களைப்போலவே இருக்கிறது. சடங்குகளுக்கும் ஆன்மீகமான மலர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிறித்துவ ஆன்மீகம் என்பது தன்னை இன்மைவரை தாழ்த்திக்கொள்ளும் எளிமை, இறைச்சமர்ப்பணம், எளியோர் சேவை ஆகிய மூன்றிலேயே இருக்கிறது. இவற்றில் முதல் இரண்டும் மிக அந்தரங்கமானவை. மூன்றாவதை திறம்படச்செய்வதற்கு அமைப்பு தேவை என்ற அளவிலேயே சபை கூட தேவையாகிறது. ஆகவே கிறித்தவ ஆன்மீகத்துக்கும் சடங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது முரண்பாடுள்ளதே, எந்தச்சடங்கும்.

கிறித்தவ ஆன்மீகம் இந்தியாவின் சமண,பௌத்த பாரம்பரியத்துடனும் பக்தி இயக்கப் பாரம்பரியத்துடனும் ஆக்கபூர்வமான ஓர் உரையாடலை மேற்கொள்ள முடியும். அப்படி செய்த ஒருவராகவே நான் ஜோச·ப் டி மெல்லோவை பார்க்கிறேன். அதிகம்பேருக்குத்தெரியாத மேலும் பலர் உள்ளனர். மறைந்த ஜோச·ப் புலிக்குந்நேல் [மலையாள எழுத்தாளர் ஸகரியாவின் மாமா] அவர்களில் ஒருவர்.

சடங்குகளை நான் வரவேற்பது அவை அன்றாட வாழ்க்கையின் தளத்தில், சாமானிய மக்களின் தளத்தில், குறியீட்டுரீதியாக சில விளைவுகளை உருவாக்குகின்றன என்பதனாலேயே. இன்று கிறித்தவம் என்பதை இந்திய மையஓட்டத்தில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தும் பெந்தேகொஸ்தே போன்ற இயக்கங்கள் மிக வலுவடைந்துவரும் சூழலில் இத்தகைய செயல்பாடுகள் பொதுவான பண்பாட்டுடனான ஓர் உணர்வுரீதியான உறவை உருவாக்குகின்றன. காரணம் அவை குறியீட்டு ரீதியானவை.

அவற்றுக்கும் தெய்வ நாயகத்துக்கும் உள்ள வேறுபாடு, ஏற்கனவே நான் சொன்னதுதான். தெய்வநாயகம் அவர் சொல்வதை அவரது விசுவாசிகளுக்குள் இறங்கிச் சொல்பவரல்ல. அதன் மூலம் தன் மதத்தை அவர் இந்தியத்தன்மை கொண்டதாக மாற்றவே இல்லை. அதை ‘தூய்மையாக’ வைத்திருக்க விரும்பும் ஒரு சீர்திருத்த கிறித்தவர் அவர். அவரது தேவாலயத்தில் அவர் சொல்லும் ‘தாமஸ் கிறித்தவ’ மதங்களின் நூல்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் இருந்து செய்யுட்களை சொல்லி வழிபடவேண்டும் என்று ஓர் இயக்கத்தை அவர் ஆரம்பிக்கலாமே. முடியுமா?

அவர் அந்தத் திரிபை இந்துக்களிடம் வந்து சொல்கிறார். இதன்மூலம் இந்துக்களின் மதங்களையும், தமிழ்ப்பண்பாட்டையும் சிறுமைப்படுத்துகிறார். சிந்திக்க தெரியாத கூட்டம் என்றும் கிறித்தவம் இல்லையேல் இவர்களிடம் எதுவுமே இருக்கமுடியாது என்றும் நம்மிடம் சொல்கிறார். வரலாற்றை அழிக்கிறார். அது ஒரு மதமாற்ற மோசடியன்றி வேறல்ல

மாறாக சிரியன் கிறித்தவர்கள் இங்கே தங்கள் வழிபாட்டை மாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் சொந்த விளக்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏற்கனவே அவர்களிடம் இதைப்போல உருவம் மாற்றப்பட்ட எத்தனையோ இந்தியச் சடங்குகள் உள்ளன. அவர்களுக்கென தனியான குத்துவிளக்குகூட உள்ளது. இந்த சடங்குமாற்றத்தால் என்ன நடக்கிறது என்பதற்கு அவர்களின் வரலாறே உதாரணம். அவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பத்து நூற்றாண்டுகளில் எப்போதுமே மதப்பூசல் உருவானதில்லை. மோசடி மதமாற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதும் இல்லை.

அவர்களின் நெகிழ்தன்மை காரணமாகவே இந்துக்களின் நூல்களைக் கற்பதற்கும் அவர்களுக்குத் தடை இருந்ததில்லை. வெட்டம் மாணி ,ராவ்பகதூர் செறியான் போன்ற இந்துப்பேரறிஞர்கள் அவர்களில் உருவானார்கள். இந்த உள்வாங்கல் காரணமாக கலை, இலக்கியம், வரலாறு போன்ற துறைகளில் அவர்களால் பெரும் சாதனைகளை படைக்க முடிந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டில் சிரியன் கிறித்தவர்கள் அல்லாத கிறித்தவர்களின் பங்களிப்பு என்பது அனேகமாக பூஜ்யம் என்பதை பலர் அறிவதில்லை.  விதிவிலக்காக இருப்பவர்கள் மிகச்சில கத்தோலிக்கர்கள் மட்டுமே — தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் போல.
என் என்றால் பிற கிறித்தவர்கள் தங்கள் கிறித்தவ நம்பிக்கை காரணமாக தங்களை துண்டித்துக்கொள்வதனால் பொதுப்பண்பாட்டைப்பற்றியும் வரலாற்றைப்பற்றியும் அவர்களின் அறிதல் பரிதாபகரமானதாக இருக்கிறது ஒரு தமிழர் கிறித்தவர் என்பதனால் கம்பனையும் ஆண்டாளையும் வாசிக்கும் மனநிலை அமைவதில்லை, புதுமைப்பித்தனின் கயிற்றரவு அல்லது கபாடபுரத்தை அவரால் வாசித்துணர  முடியவில்லை என்றால் தமிழிலக்கியத்துடன் அவரது உறவு என்னவாக இருக்கும்? இன்றைய கிறித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.

1991ல் பேராசிரியர் ஜேசுதாசன் மார்த்தாண்டம் கிறித்த தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் இசைநிகழ்ச்சிக்கு வீணை கொண்டு சென்றபோது பெரிய பிரச்சினை ஆகியிருக்கிறது என்று அவர் என்னிடம் சொன்னார். கித்தார், பியானோ, கீபோர்டு போன்றவையே கிறித்தவ வாத்தியங்கள், வீணை இந்து வாத்தியம் என்று அவர்கள் சொன்னார்கள் என்று சிரித்தார். இன்றும் இங்குள்ள சீர்திருத்த கிறித்தவ சபைகளில் இது சாத்தியமே இல்லை. பேராசிரியர் முறைப்படி தமிழிசை கற்றவர், கம்பனில் தோய்ந்தவர். அவருடைய ஞானத்துக்கு தேவாலயத்தில் இடமில்லை. இவ்வாறுதான் இன்றைய கிறித்தவம் உருக்கொள்கிறது.

அந்த சுய விலக்கத்துக்கு எதிரான எதுவும் வரவேற்கத்தக்கதே. ஆனால் அது அவர்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும், தங்களை அப்படியே இறுக்கிக் கொண்டு பிறர் வரலாற்றை திரிக்க முயலும் மோசடிக்கும் இதற்கும் தொடர்பில்லை.

ஜெ__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 

கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

 

எனது வலைப்பூவில் கிறிஸ்தவ, யூத மதங்களை விமர்சிக்கும் கட்டுரைகளை அதிகம் எழுதுவதாக சில நண்பர்கள் என் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சில விஷமிகள் இதனை "கிறிஸ்தவ/யூத எதிர்ப்பாக" திரிபு படுத்த பார்க்கின்றனர். இது அவர்களது குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது. இதே போன்ற குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய, இந்து, (தலாய்லாமா) பௌத்த ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தும் எழுந்துள்ளன. பல முனைகளில் பிரிந்திருக்கும் அனைத்து மதவாதிகளும் சந்திக்கும் புள்ளியும் அது தான். 

மதச்சார்பின்மையை பற்றிய அவர்களின் புரிதலை "எம்மமதமும் சம்மதம்" என்ற சொற்பதத்திற்குள் அடக்கி விடலாம். "எல்லா மதத்திற்கும் சமமான ஜனநாயகம்" என்று இதற்கு பொழிப்புரை எழுதலாம். "மதம் ஒருவரின் அந்தரங்க விடயம்." என்ற அரச நிர்ணய சட்டத்தை நடைமுறைப் படுத்த கிளம்பினால் தான் பிரச்சினை கிளம்புகின்றது. இந்தியாவிலோ, இலங்கையிலோ அரசும் மதமும் இன்னமும் தனித்தனியாக பிரிக்கப்படவில்லை. இதனால் இணையம் என்ற பொதுத்தளத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பதிவர்கள் மீது சேறு பூசப்படுகின்றது. மதக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் இல்லை. 

இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என புரிந்து கொள்ளும், மேற்குலகில் வாழும் மக்கள், தம்மை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள், தம்மை "எந்த மதத்தையும் சாராதவர்" (Agnostic) என்றே அழைத்துக் கொள்வார்கள். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தால் கிறிஸ்தவன் தானே, என்று கொடுக்கும் விளக்கம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. (அந்த விளக்கத்தின் படி பார்த்தால் இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல.) கிறிஸ்தவம் ஒரு உலகமயமாக்கப்பட்ட மதமாகி விட்டது. வறிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் செல்வந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மதத்திற்கும், வர்க்கத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்க இந்த ஒரு உதாரணம் போதும். 

மேற்குலக மதச்சார்பற்ற நாடுகளில், மதம் குறித்து எத்தகைய கருத்தையும் முன்வைக்கலாம். ஒருவர் எந்த மதத்தையும், கடவுளையும் பற்றி விரும்பிய படி கிண்டல் செய்யலாம், பரிகசிக்கலாம், கேலிச்சித்திரம் வரையலாம். அந்த உரிமையை அரசும், நீதிமன்றமும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஏதாவது ஒரு மதத்தை விமர்சித்ததற்காக "மத எதிர்ப்பாளன்" முத்திரை குத்த முடியாது. விமர்சகரை பாதுகாக்கும் சட்டம், முத்திரை குத்தியவரை ஆபத்தான பேர்வழியாக கருதுகின்றது. இவை "பரம்பரை கிறிஸ்தவ நாடுகள்" என்பதால், இங்கெல்லாம் கிறிஸ்தவ மதத்தை பற்றி அதிக விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை. அதனை இங்கே யாரும் கிறிஸ்தவ எதிர்ப்பு என்று பாமரத்தனமாக புரிந்து கொள்வதில்லை. "பாப்பரசர் ஒரு மாபியா கிரிமினல்" என்று கூறும் கத்தோலிக்கர்களை இங்கே காணலாம். உண்மையிலேயே வத்திக்கானுக்கும், மாபியாவுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்த நூல்கள் பல வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில், ஐரோப்பா முழுவதும், கத்தோலிக்க மதம் மட்டுமே, ஒரேயொரு மதமாக ஆதிக்கம் செலுத்தியது. கத்தோலிக்க கிறிஸ்தவ சபை மக்களை சுரண்டி வாழும் ஒட்டுண்ணி நிறுவனமாகவே அவர்களுக்கு தெரிந்தது. கிராமத்தில் இருக்கும் சிறிய தேவாலயத்தின் பாதிரி கூட வரி வசூல் செய்யும் "கலக்டர்" போல நடந்து கொண்டார். ஒரு தேவாலயத்தின் உறுப்பினர் கொடுக்கும் பங்குப் பணம், ஒரு சாதாரண பக்தன் கொடுக்கும் காணிக்கை அல்ல. அதற்கும் மேலே. பாதிரிகள் அந்தப் பணத்தை வசூல் செய்து, பிராந்திய பிஷப்புக்கு அனுப்புவதும், அவர் அதை வத்திக்கானுக்கு அனுப்புவதும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைக்கும் கத்தோலிக்க திருச்சபை ஒரு சர்வதேச நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று பெருகி வரும் புரட்டஸ்தாந்து, பெந்தேகொஸ்தே சபைகளின் வியாபாரப் போட்டி வேறு. 

ஐரோப்பாவில் இன்றைக்கும் கிறிஸ்தவர்களாக மத நம்பிக்கையுடன் வாழும் பலர் தேவாலயங்களுக்கு செல்வதில்லை. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மக்களின் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும், தேவாலயம் மக்களை கட்டுப்படுத்தும் அதிகார மையமாக இருந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேவாலயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாதாமாதம் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட வேண்டும். (குறைந்தது மொத்த வருமானத்தில் 10 %) அப்படி தனது பங்கை செலுத்தாதவர் கிறிஸ்தவனாக கருதப்பட மாட்டார். (தேவாலயம் அவரை கிறிஸ்தவன் அல்ல என்று பிரகடனம் செய்யும்). "ப்பூ... இதிலென்ன இருக்கிறது. நானும் தான் அடிக்கடி சர்ச்சுக்கு போவதில்லை. பணம் ஒன்றும் கொடுப்பதில்லை. என்னை யாரும் கிறிஸ்தவன் இல்லை என்று சொல்வதில்லையே..." என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஐயா, உங்களுடைய நிலைமை வேறு. அன்று ஐரோப்பிய மக்களின் நிலைமை வேறு. "கிறிஸ்தவன் இல்லை" என்று அறிவிப்பது, நமது காலத்தில் அரசாங்கம் ஒருவரது குடியுரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. அந்த நபரின் வாழ்வுரிமையே பறிக்கப்படுகின்றது. 

தேவாலயம் எந்த அளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. (எனக்கு தெரிந்த, சிறிய தேவாலயம் ஒன்றின் கணக்கு வழக்குகளை பார்க்கும் நண்பர் ஒருவர், மாதம் 20000 யூரோ வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார்.) நிலப்பிரபுத்துவ காலத்தில், தேவாலயத்திற்கு என்று ஏக்கர் கணக்கில் நிலங்கள் சொந்தமாக இருக்கும். அவற்றில் விவசாயிகள் குடிமை வேலை செய்ய வேண்டும். (ஆண்டவன் பெயரில் அடிமை உழைப்பு). இதைத் தவிர தேவாலய கட்டிட தொழிலாளர்கள், சாமிப்படம் பொறித்த கண்ணாடிகள் செய்து கொடுப்பவர்கள், சிற்பக் கலைஞர்கள் கூலி கேட்டால், ஆண்டவனுக்கு செய்யும் கடமையாக கருதிக் கொள்ளுமாறு கூறி விடுவார்கள். கிறிஸ்தவ நிறுவனம் மெழுகுதிரி உற்பத்தி போன்ற பல தொழிற்துறைகளில் ஏகபோகம் கொண்டாடியது. சுருக்கமாக சொன்னால், மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை ஒரு தேசங்கடந்த பன்னாட்டு வர்த்தக கழகமாக இயங்கி வந்தது. 

மதகுருக்களும், நிலப்பிரபுக்களும் சேர்ந்தே ஆட்சி நடத்தினார்கள். நிலப்பிரபுக்கள் செய்த அக்கிரமங்களை மதகுருக்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல மதகுருக்கள் செய்த துஷ்பிரயோகங்களை நிலப்பிரபுக்கள் கண்டுகொள்ளவில்லை. அப்படித் தான் கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பாதிரிகளின் காம இச்சைக்கு அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கத்தோலிக்க நண்பர்கள் நியாயம் கற்பிப்பது போல போல "ஒரு சில கெட்ட பாதிரிகளின் செயல்" அல்ல. (பிடிபட்ட பின் தானே கள்வன்?) ஒரு இரகசிய நிறுவனம் இதையெல்லாம் தானே வெளிவிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 20 ம் நூற்றாண்டிலும் வத்திகான் இரகசியங்களை வெளியே சொன்னவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தார்கள். அது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. 

தேவாலய நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். "மதத்தில் இருந்து வெளியேற்றுவது" என்றால் எத்தகைய தீய விளைவுகள் ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில், பஞ்சாயத்து கூடி ஊருக்கு உள்ளே வரக்கூடாது என்று தண்டனை கொடுப்பார்களே, அது போன்றது. தேவாலய உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களுடன் ஊர் மக்கள், உறவினர்கள் தொடர்பு வைக்க மாட்டார்கள். பட்டினி கிடந்தாலும் யாரும் உணவு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே இரந்துண்ணும் பிச்சைக்காரர்களாக வாழ வேண்டும். இத்தகைய நடைமுறை 19 ம் நூற்றாண்டில் கூட சில இடங்களில் தொடர்ந்தது.

கத்தோலிக்க மதம் அதிகாரம் செலுத்திய நாடுகளில் எல்லாம் கைதிகளை சித்திரவதை செய்வது, சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. உங்களது கற்பனைக்கு எட்டாத வழிகளில் எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. கசாப்புக் கடையில் செய்வது போல தோலை உரித்து எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஆன்மிகம் போதிக்கும் மதத் தலைவர்கள் சித்திரவதையை பார்த்து ரசிப்பார்கள். (அவர்கள் தானே விசாரணை அதிகாரிகள் ) அந்தக் காலத்தில் சித்திரவதை செய்ய பயன்பட்ட உபகரணங்களை இன்றைக்கும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் காணலாம்.

எப்படியானவர்களை சித்திரவதை செய்தார்கள்? கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையுமா? இல்லை சாதாரண அப்பாவி மக்களை. மத நிறுவனத்திற்குள் நடந்த முறைகேடுகளை எடுத்துச் சொன்னவர்கள். தேவாலயத்தில் போதிக்கப்படும் கருத்துகளை விமர்சித்தவர்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பியவர்கள். மதத் தலைவர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியவர்கள். மதகுருக்களின் (பாலியல்) துஷ்பிரயோகங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மூலிகைகளைப் பயன்படுத்தும் இயற்கை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் கூட கொல்லப்பட்டார்கள். (ஏனென்றால் அவர்கள் சூனியம் செய்பவர்களாம்.) கொடுமைக்குள்ளான அப்பாவிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

மக்களும் எத்தனை காலத்துக்கு தான் கிறிஸ்தவ மதம் செய்த கொடுமைகளை பொறுத்துக் கொள்வார்கள்? மக்கள் விரோத மத நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக பொங்கி எழ மாட்டார்களா? பிரெஞ்சுப்புரட்சி வெடித்த பொழுது அரச குடும்பம் மட்டும் தாக்கப் படவில்லை. எத்தனையோ தேவாலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் முன் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். அன்று அந்த மக்களுக்கு, கிறிஸ்தவ மத நிறுவனம் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்க வேண்டும் என்று உணர முடிகின்றதா? இங்கே இந்த உண்மைகளை எழுதும் என்னை "கிறிஸ்தவ மத எதிர்ப்பாளன்" என்று தூற்றுவீர்கள் என்றால், நீங்கள் கொடுமைக்காரர்களின் பாவகாரியங்களுக்கு துணை போகின்றீர்கள் என்று அர்த்தம்.

எமது நாடுகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் எல்லாம் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்தியவை. அதனால் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகள் என்றென்றும் அறிவியலில் சிறந்து விளங்கியதாக கருதுவது தவறு. கிறிஸ்தவ மதம் ஒரு நாளும் அறிவியலை வளர்க்கவில்லை. தீராத தலைவலி என்று வைத்தியரிடம் போனால், அவர் தலையில் ஓட்டை போட்டு அசுத்த ஆவியை வெளியேற்றுவார். இது உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டிய உதாரணம். பூமி உருண்டை என்று சொன்னதற்காக கலீலியோவுக்கு தண்டனை கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இன்று நீங்கள் கற்கும் அறிவியல் பாடங்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய மூல நூல்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. 

நூலகங்களில் கிறிஸ்தவ மதத்தை ஆய்வு செய்யும் ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. பல நூல்களில் பைபிளுக்கு அப்பால் கிறிஸ்தவ மத வரலாறு குறித்து ஆராய்ந்துள்ளன. ("பைபிளில் இவ்வாறு எழுதியுள்ளது ....." என்றெல்லாம் சொல்லி விட்டால் அது விஞ்ஞான விளக்கம் ஆகி விடாது.) எனது கட்டுரைகளின் உசாத்துணையாக அவற்றை பல இடங்களில் குறிப்பிட்டுளேன். அவையெல்லாம் ஆயிரம் ஆண்டு கால கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட அறிஞர்களால் எழுதப்பட்டவை. (அதே போல யூதர்கள் சம்பந்தமான தகவல்களை யூத ஆய்வாளர்களே எழுதியுள்ளனர்.) இவற்றை எனது கட்டுரைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என்னில் மட்டும் குற்றம் காண விளையும் நண்பர்களின் உள் நோக்கம் என்ன? அவர்கள் யாரும் எனது கட்டுரைகளில் எழுதியுள்ளவை தவறானது என்று நிரூபிக்கவில்லை. மதவாதிகளின் வழக்கமான பாணியிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுகின்றனர். விமர்சிப்பவர் மீது முத்திரை குத்துவது, மிரட்டுவது அல்லது தூற்றுவது. மதம் ஆட்சி செய்த காலங்களில் அது தானே நடந்தது.

பிரான்ஸில் கத்தோலிக்க மதத்தை சீர்திருத்தி, அடக்குமுறை செய்யும் அதிகார வர்க்கத்தை ஒழித்து, சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்தியவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஓடுகாலிகள், துரோகிகள் என்ற அர்த்தம் வரும் வண்ணம் "ஹெரதிக்" என்ற பட்டம் சூட்டி, அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். "அன்னை மரியாள் எனக்கு காட்சி தந்தாள்" என்று சொன்னதற்காக 16 வயது இளம் பெண்ணை கத்தோலிக்க மதகுருக்கள் சித்திரவதை செய்து கொன்றார்கள். ஏனென்றால் தங்கள் கண்ணுக்கு புலப்படாத கடவுள் எப்படி சாதாரண பட்டிக்கட்டுப் பெண்ணுக்கு தெரியவரும், என்ற வெறும் "ஈகோ" பிரச்சினை. (ஆமாம், இல்லாத கடவுளைக் கண்டேன் என்று சொன்னால் நம்புவார்களா?) அதுவும் எப்படிக் கொன்றார்கள்? உயிரோடு நெருப்பு மூட்டிக் கொன்றார்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கொன்று குவித்த மக்களின் தொகையை கணக்கிட்டால் கோடிக்கணக்கை தாண்டும். அதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது? கத்தோலிக்க மதம் செய்த கொலைகளுக்காக 2000 ம் ஆண்டு பாப்பரசர் மன்னிப்புக் கேட்டார். கத்தோலிக்க மதவெறிக் கொலைஞர்களால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆன்மா ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான் பரிசுத்தமானது. ஆனால் கொடூரமான கொலைகாரர்கள் எவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாற்றில் எங்கேயும் எழுதப்படவில்லை.

நான் கடந்த இருபது வருடங்களாக 100 % கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்தவ மதம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதி. இந்த நாட்டவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறி போன்றவற்றில் கிறிஸ்தவ மதம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். கிறிஸ்தவ மதம் குறித்த அறிவு சிறிதளவேனும் இல்லாமல் பல சொற்களின், சொற்பதங்களின் அர்த்தங்களை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உள்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாது. மக்களின் மனோபாவம் கூட கிறிஸ்தவ சிந்தனையின் படி மாறியுள்ளது. இதிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லத் தான் மீள முடியும். (இன்றைய சராசரி ஐரோப்பியன் தன்னை மதச்சாற்பற்றவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.)

இந்தியாவிலும், இலங்கையிலும் வரலாற்றுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் குறுகிய வட்டத்திற்குள் வாழும் சிலர் என்னோடு விதண்டாவாதம் செய்ய விளைகின்றனர். கடந்த காலம் பற்றி அறிந்திராதவர்களுக்கு நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வரலாறு ஒரு முக்கிய பாடம். வரலாற்றுப் பாடத்தில் சித்தியடையாத ஒரு மாணவன் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் குறைந்தது இரண்டு அத்தியாயங்கள் ஆவது கிறிஸ்தவ மதம் குறித்து இருக்காதா? இரண்டாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவ மதத்தை ஒதுக்கி விட்டு வரலாற்றுப் பாடம் நடத்த முடியுமா? நண்பர்களே ஒரு கணம் சிந்திப்பீர்.

யூத மதமும் ஐரோப்பிய வரலாற்றில் தவிர்க்கவியலாத பகுதி தான். ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவதாக யூத மதமே இருந்தது. நீண்ட காலமாக கிறிஸ்தவ மதத்தால் அடக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் யூதர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியில் யூதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 20 நூற்றாண்டில் இஸ்ரேலை ஸ்தாபித்தவர்கள் ஐரோப்பாவில் இருந்து சென்ற யூதர்கள் தான். அதனால் ஐரோப்பாவில் யூத மதம் குறித்த தகவல்கள் அதிகமாக கிடைப்பதில் வியப்பில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய யூதர்களின் வரலாற்றை ஆவணப் படுத்தி வைத்திருக்கும் மியூசியம் ஒன்றுள்ளது. அப்படி இருக்கையில் யூதர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூற முடியுமா? அதே நேரம் தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே யூதர்கள் குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகளை நானும் மறுபதிப்பு செய்ய முடியாது.

நண்பர்களே! ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருபதாண்டு கால வாழ்பனுபவம், எத்தனை பாடங்களை எனக்கு கற்பித்திருக்கும்? குறிப்பிட்ட கால உயர்தர பாடசாலைக் கல்வியை இங்கே தான் பெற்றேன். அதிலே தவிர்க்கவியலாத கிறிஸ்தவ வரலாற்றை படிக்காமல் கல்வியை பூர்த்தி செய்திருக்க முடியாது. அதைவிட நாள் தோறும் ஊடகங்கள் கிறிஸ்தவ மதம் குறித்து புதிது புதிதாக எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கின்றன.இன்றைய ஐரோப்பியர்கள் மதச்சார்பற்ற சமுதாயமாக மாறி விட்டதால், கிறிஸ்தவ மதத்தின் குறைகளை எடுத்துக் கூறும் செய்திகளும் அதிகம் வருகின்றன. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் தவிர வேறு யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

இந்த நாடுகளில் பொது இடங்களில் மதச்சார்பற்ற கொள்கை கடைப்பிடிக்கப் படா விட்டால், அது குறித்து முறைப்பாடுகள் வந்து குவியும். ஆம்ஸ்டர்டாம் நகரில் பேரூந்து வண்டியோட்டும் (எகிப்தை சேர்ந்த) கிறிஸ்தவ சாரதி சிலுவை மாலை அணிந்து வேலைக்கு வருவதை நிர்வாகம் கண்டித்தது. அவர் அதற்கெதிராக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பு சொன்ன நீதிபதியோ, "பொதுப் போக்குவரத்து துறையை சேர்ந்த ஊழியர் மதச் சின்னம் அணிவது கூடாது" என்று தடை விதித்தார். இத்தாலி பாடசாலைகளில் சிலுவைகளும், இயேசு படங்களும் வைத்திருப்பதற்கு எதிராக சில பெற்றோர் முறைப்பாடு செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். இது இப்படியிருக்க மதச்சார்பற்ற நாடென்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் பேரூந்து வண்டிகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் சாமிப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் இன்று தேவாலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பல தேவாலயங்கள் பராமரிக்கப்படாமல் மூடப் பட்டு கிடக்கின்றன. நான் வாழும் ஆம்ஸ்டர்டாம் நகர மத்தியில் உள்ள தேவாலயங்கள் அருங்காகாட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. எனது வீட்டின் அருகில் உள்ள தேவாலயம் ஒன்று வழக்கறிஞர்களின் அலுவலகமாக செயற்படுகின்றது. லண்டன் மாநகரில் சில தேவாலயங்களை இஸ்லாமியரும், இந்துக்களும் வாங்கி தமது வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர். வெள்ளையின ஐரோப்பியரை விட, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களே இன்று தேவாலயங்களுக்கு அதிகம் செல்கின்றனர். இதனால் கிறிஸ்தவ சபைகளும் அவர்களை குறி வைத்தே பிரச்சாரம் செய்கின்றன. வீடு தேடி வந்து "எங்களுடைய சபைக்கு வாருங்கள், பைபிள் படியுங்கள்." என்று கூப்பிடுவார்கள். நான் அவதானித்த வரையில் அவர்கள் வெள்ளையர்களை அதிகம் நாடுவதில்லை. காரணம் அங்கே போனால் என்ன மரியாதை கிடைக்கும் என்று அவர்களுக்கே தெரியும்.

இருபதாண்டு காலம் கிறிஸ்தவ/யூத சமூக அமைப்பினுள் வாழும் நான், அந்த மதங்களைப் பற்றி அதிகம் எழுதுவது தானே முறை? எனக்கு அதிகம் தெரிந்த ஒன்றைப் பற்றி தானே நான் எழுத முடியும்? நான் வாழும் சுற்றாடலில் நடப்பதை அறிவிப்பது தானே ஒரு பதிவரின் கடமை? இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கார்ல் மார்க்ஸ், பகுனின், போன்ற தத்துவவியலாளர்கள் கிறிஸ்தவ மதத்தை கற்ற பின்னர் தான் அந்த மதத்தை கேள்விக்குட்படுத்தினர். பைபிளை மட்டும் படித்து விட்டு, கிறிஸ்தவ மதத்தை புரிந்து கொள்ள முடியாது. அடுத்த தடவை கிறிஸ்தவ இறையியல் குறித்து நான் படித்த ஐம்பதுக்கும் குறையாத நூல்களின் பட்டியலை தருகிறேன். நான் ஏட்டுப் படிப்புடன் மட்டும் நின்று விடவில்லை. நான் விஜயம் செய்த கிறிஸ்தவ மதம் சம்பந்தமான அருங்காட்சியங்களின் விபரங்களை தருகிறேன். பைபிளில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப்பயணியாக சென்றிருக்கிறேன். 

நண்பர்களே! நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவராக இருந்தால், முதலில் அந்த மதத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். மதங்களின் வரலாறு முழுவதையும் சீர் தூக்கிப் பார்த்தால், அவை மக்களுக்கு செய்த தீமைகளே அதிகமாக இருக்கும். எப்போதும் தமது மதத்தை பற்றி நல்ல அம்சங்களை மட்டுமே மதவாதிகளும் பிரச்சாரம் செய்வது, அவர்களை கடவுளிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றது. ஆன்மீகவாதிகளிடம் கடவுள் யார் என்று தத்துவ விளக்கம் கேட்டால், அது தான் உண்மை என்பார்கள். இங்கேயுள்ள மதவாதிகள் உண்மையைப் பார்த்து கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்கிறார்கள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard