பத்து நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் ‘சம்ஸ்கிருதம் அழிந்துவிட்டது’ என குதூகலிப்பதை வாசிக்கிறேன். சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது. இன்னும் ஒரு தலைமுறையில் அது இருக்குமா என்பதே ஐயத்துக்குரியது. அதைப்பற்றியும் எவராவது கவலைகொண்டால் நல்லது.
இன்றைய போக்கில் போனால் நாளை தமிழ் வெறும் பேச்சுமொழியாக மட்டுமே சுருங்கிவிட வாய்ப்பதிகம். காரணம் இன்று தமிழ்தெரிந்தவர்கள் குறைந்து வருகிறார்கள். தமிழறிஞர்கள் அறவே அழியும் நிலையில் உள்ளனர். கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மாணவர்களைக் கண்டால் பரிதாபம் எழுகிறது. தமிழ் பேராசிரியர்களோ குமட்டலை உருவாக்குகிறார்கள்
நம் நிலை என்ன என்று காட்ட யாராவது வந்து பொட்டில் அறையவேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு சுட்டி.
‘Most Indian universities do not focus on training and grooming of young scholars in this field.” The Department of Tamil from Kerala University is an exception, and most scholars for NETamil have been recruited from there’ என்கிறார்
செம்மொழியான தமிழை மூச்சடக்கிக் கூவிக் கொண்டாடும் தமிழகத்தில் இந்த வரியின் உண்மையான பொருளை எவரேனும் உணர்கிறார்களா?
இந்த இழிவு ஏன் என்பதற்கு கீழே நெடுஞ்செழியன் என்ற ஆசாமி போட்டிருக்கும் பின்னூட்டமே சான்று. TN govt is run by outsiders. All the political parties in Tamil Nadu are other state people என காரணம் சொல்கிறார்!
நான் ஊழல் செய்ய, நான் முட்டாளாக இருக்க, என் வீட்டில் குப்பை குவிந்திருக்க என் மொழியும் பண்பாடும் அழிகையில் நான் ஊழலில் திளைத்து சும்மா இருக்க அண்டைவீட்டானே காரணம் என்ற மனநிலை. அண்டை வீட்டில் என் வீட்டை விட என் மொழி வாழ்வதற்கு வேண்டுமென்றால் நானே காரணம் என்பேன்!
அனேகமாக உலகில் வேறெங்கும் இப்படி ஒரு மோனநிலையைக் காணமுடியாது என்று படுகிறது
தமிழறிஞர்களுக்கும் தமிழுக்கும் செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் ஒரு சின்ன அளவு த்ரீ ஜி என்று தோன்றுகிறது. ஒரு கலைச்சொல்லாக டமில்-ஜி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதை தூற்றுவது எனக்கொண்டிருப்பது ஒரு நோக்கமாகவும், அத்தகைய தூற்றல் தமிழ் மொழிக்கு சேர்க்கும் பெருமையாக எண்ணுவதும் இம்மடலின் நோக்கம் எனத்தோன்றுகிறது. இரண்டுமே தவறானது.
சமஸ்கிருதம் முற்காலத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஒருவாறு ஒத்துக்கொள்ளும் ஒருவர் இப்போது பார்ப்பனர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால் அது பார்ப்பன மொழியாகிவிட்டது என்கிறார். அது மொழியின் தவறு இல்லை அல்லவா?. ஒரு மொழியை ஒரு மதத்தை ஒரு சாதியை சார்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அவற்றை அச்சாதியினருக்கே உரிமையாக்கிவிடுவது ஏமாளித்தனம் இல்லையா?
மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என எப்படி. சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக விரும்பும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.
கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அர்ச்சகரின் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் இருப்பதையே வேண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலோர் தமிழ் கற்றவர்கள்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் திளைப்பவர்கள் (தமிழ் விரோதிகள் அல்ல). இவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதம் பயன்படும் மொழியாகவே உள்ளது. இந்துமதத் தத்துவங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் கணிசமானவர்கள் அனத்து சாதியினரிலும் உள்ளனர். அவர்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் திருக்குரான் அதற்கான மொழியில் ஒலிப்பதைப்போல் இந்தியா முழுவதும் கோயில்களில் சமஸ்கிருதம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதத்தை செத்த மொழி என அனைவர் சார்பிலும் கூறுவேன் என்பது வெற்று அகம்பாவம் மட்டுமே.
செத்த மொழியென்பதற்கான வரையறை என்ன? மனிதர்களின் பேச்சுவழக்கில் இல்லாதது அதன் வரையறை என்பதாக யார் முடிவெடுத்தது?. சில நாட்டில் பல தலைமுறையாய் வாழும் தமிழர்கள் இடத்தில் தமிழ் பேச்சுமொழியாக இல்லை. அதற்காக தமிழை அவர்களைப்பொருத்தவரை ’அவ்வாறு’ கூறமுடியுமா?
என் தமிழ்மொழியின் பெருமையை மற்றொரு மொழியை தாழ்த்துவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் எனக்கூறுவது என் தமிழை பழிப்பதாக கருதுகிறேன். அவ்வாறு பழிப்பவர்கள் தமிழின் பெருமையை அறியாதவர்கள். அவர்களால் என்றுமே தமிழுக்கு நன்மை விளையப்போவதில்லை.
ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள்? அது பார்ப்பனர்களை உயர்த்தி மற்றசாதியினரை தாழ்த்தும் சில வாசகங்களை கொண்ட நூல்களை கொண்டிருக்கிறது என்பதாலா? அவ்வாறிருந்தால்கூட அதற்காக ஒரு முழு மொழியையும் வெறுத்துவிட வேண்டுமா?
அறிவியலை எடுத்துக்கொண்டால் விமானம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆய்வு அனைத்தும் ஆதிக்க வெறியர்கள் போருக்காக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே (இவற்றில் முக்கியமான ஆய்வுகள் ஹிட்லரின் ஜெர்மனியில் நடத்தப்பட்டவை) அவற்றில் தீங்கானவற்றை விலக்கி நல்லனவற்றை பயன்படுத்துவது தவறானதில்லை எனும்போது சமஸ்கிருதத்தில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை தவிர்த்துவிடுவதில் என்ன தவறிருக்கிறது?
சமஸ்கிருதம் மொழியின் பலநூல்கள் எழுதப்பட தமிழகத்தை சேர்ந்தவர்கள் காரணமாய் இருந்திருக்கின்றனர். பலர் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். சமஸ்கிருதத்தை பழிப்பது அவர்களையெல்லாம் பழிப்பதாகும்.
பழிப்பதும் தூற்றுவதும் எதிர்மறை கண்ணோட்டமாகும். அவற்றால் எவ்விதப்பயனும் விளையப்போவதில்லை.
ஆரம்பத்தில் இந்துஞானமரபின் இணைப்பு மொழி என்ற நிலையில் சம்ஸ்கிருதம் முன்வைக்கப்பட்டது. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் அதை முன்வைத்தன. பின்னர் காங்கிரஸ் உருவாகி பெருமளவு மக்களை உள்ளே கொண்டுவந்து மக்களியக்கமாக சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டபோது பெருவாரியான மக்களின் மொழியான இந்தி பொதுமொழியாக முன்வைக்கப்பட்டது.
ஆனால் மிகமிகத் தொன்மையான காலம் முதலே இந்த மண்ணில் ஒரு பண்பாட்டுத் தேசிய உருவகம் இருந்திருக்கிறது. அதன் தேசிய நில எல்லைகள், அதன் அடையாளங்கள், அதன் தனித்துவம் எல்லாமே குறைந்தது மூவாயிரம் வருடங்களாக துல்லியமாக வகுக்கப்பட்டிருந்தன. அந்த பண்பாட்டுத் தேசியத்தில் இருந்து அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு நவீன அரசியல்-பொருளியல் தேசியத்தை உருவாக்குவது குறித்து நாம் சிந்தனை செய்திருக்க வேண்டும்.
ஆனால் அது நிகழவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் அப்போது அந்த வகையான சிந்தனைகளுக்குள் சென்றவர்கள் ஆங்கிலம் மூலம் ஐரோப்பாவை அறிமுகம் செய்துகொண்டு அங்கே உருவாகி வந்த தேசிய- சுதந்திரவாத கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான். ஆகவே அவர்களுக்கு ஐரோப்பா முன்னுதாரணமாக அமைந்தது.
நம்முடைய இந்துத்துவர்களுக்குக் கூட ஐரோப்பாவில் உருவாகிவந்த ஒற்றைப்படையான தேசிய அடையாளம் கொண்ட நவீன அரசுகளே முன்னுதாரணமாக இன்றும் உள்ளன என்பதை காணலாம். பன்மைத்தன்மையின் பெருக்கத்தால் உருவான இந்திய தேசியத்தை அவர்கள் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.
நம்முடைய பண்பாட்டு தேசியம் என்பது மையத்தில் ஒரு லட்சியத்தின் அடிப்படையில் ஒரு ஒற்றுமையை முன்வைப்பதாகவும் அடித்தளத்தில் அனைத்து வகையான பிரிவுகளையும் அனுமதிப்பதாகவுமே இருந்துள்ளது. ஒவ்வொரு கூறும் இன்னொன்றுடன் மோதி விவாதித்து வளரும் ஒரு களமாகவே இருந்திருக்கிறது. எந்த ஒரு உட்கூறும் அதன் தனித்தன்மையை இழந்து மையத்தில் கலந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை
அந்த ஆதார இயல்பையே நம் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தவிர எந்த ஒரு மையவாத நோக்கும் இந்த மாபெரும் தேசத்தில் முரண்பாடுகளை , கசப்புகளை பெருக்கும். மோதல்களையும் அழிவுகளையும் உருவாக்கும்.
இந்த கோணத்தில்தான் நான் மொழி மையவாதத்தையும் அதன் எதிர் விளைவான மொழிக்காழ்ப்புகளையும் காண்கிறேன்.
சம்ஸ்கிருதம் என்பது இந்நிலத்தில் வாழ்ந்திருந்த பல்லாயிரம் தொல்குடிகளில் ஒன்றின் மொழியாக ஏதோ காலத்தில் இருந்திருக்கிறது. அது சாதகமான வரலாற்றுக்காரணங்களால் ஒப்புநோக்க வளர்ச்சி அடைந்தது. அதற்கான காரனங்களில் முக்கியமானது அது நில-நீர்வளம் மிக்க பகுதிகளில் இருந்தது என்பதே. அம்மக்கள் அதிகமாக பயணம் செய்பவர்களாக இருந்தார்கள் என்பதே. அதாவது இப்போது எப்படி ஆங்கிலம் இயல்பாக ஓர் உலகமொழியாக, சர்வதேச இணைப்பு மொழியாக பரிணாமம் கொண்டதோ அவ்வாறு.
இந்திய நிலப்பகுதியில் இருந்த பிற மொழிகள் சம்ஸ்கிருதத்தை ஒட்டி வளர்ச்சி பெற்றன. சம்ஸ்கிருதம் அந்த மொழிகள் அனைத்துக்கும் பொதுவான இணைப்பாக அமைந்தது. அந்தமொழிகளில் இருந்து சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கு வந்தன. சம்ஸ்கிருதம் வழியாக அவை பிற மொழிகளுக்குச் சென்றன. எல்லா மொழிகளும் வளர்ச்சி அடைந்தன. அவற்றை சம்ஸ்கிருத அபப்பிரஹ்ம்ஸ மொழிகள் என்று சொல்கிறார்கள்.
இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துடன் ஆழமான பிரிக்க முடியாத உறவு உண்டு. அம்மொழிகளின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே சம்ஸ்கிருத உறவு இருந்திருக்கிறது. அந்த உறவின் விகிதாச்சாரம் மட்டுமே மாறுபடுகிறது.
அதேபோல சம்ஸ்கிருதத்தில் இந்த அத்தனை மொழிகளும் புகுந்துள்ளன. தமிழ் சம்ஸ்கிருதத்தில் ஆழமான பாதிப்பு செலுத்திய மொழி. சம்ச்கிருத அறிஞர்கள் பல சொற்களை தென்னக பிறப்பு [தட்சிணஜன்யம்] கொண்டவை என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சிறு இனக்குழுவின் பேச்சு மொழியாக இருந்த சம்ஸ்கிருதம் இந்தியா முழுமைக்குமான இணைப்பு மொழியாக உருமாறியபோது அந்த தேவைக்காக அது செம்மை செய்து சீர்படுத்தப்பட்டது. அந்த வடிவமே இப்போது நாம் அறியும் சம்ஸ்கிருதம்–செம்மை செய்யப்பட்ட மொழி. அது அதற்குப்பின் எப்போதுமே அறிவார்ந்த விவாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதற்கான இலக்கணங்களும் வழக்காறுகளும் மட்டுமே அதில் உருவாயின.
எந்த மக்கள் அந்த மொழியை அன்றாடப்பேச்சுமொழியாகக் கொண்டிருந்தார்களோ அந்த மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருமாற்றம் அடைந்து மறைந்து விட்டனர். அவர்கள் பேசிய மூலமொழி ஒரு அபப்பிரஹ்ம்ச வடிவமாக இருந்து பின்னர் இந்தி போன்றவற்றுக்கு வழிவிட்டிருக்கலாம்
இன்றைய சம்ஸ்கிருதம் மிக விரிவான ஒரு தத்துவ, இலக்கிய செயல்பாடு மூலம் உருவம்பெற்ற ஒரு அறிவார்ந்த மொழி. இந்து ஞானமரபின் எல்லா பிரிவுகளுக்கும் அதுவே அறிவார்ந்த மொழி. பிற்கால பௌத்தம் சமணம் ஆகியவற்றுக்கும் அதுவே மொழி. அவற்றுக்கு இடையேயான விவாதங்கள் எல்லாம் நடந்த மொழி. ஆகவே அது இந்திய சிந்தனை மரபை நிகழ்த்திய, இன்றும் தன்னுள் வைத்திருக்கிற மொழி.
இன்று சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன? சம்ஸ்கிருதம் இன்று ஓர் இணைப்பு மொழி அல்ல. நான் சில வைதிக சபைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இயல்பாகவே ஆங்கிலம்தான் இணைப்பு மொழி. சென்ற காலத்தில் தமிழர்களும் கன்னடர்களும் வங்கத்தினரும் காந்தாரத்தினரும் சேர்ந்தமர்ந்து பேசும் சபைக்கு சம்ஸ்கிருதம் மொழியாக இருந்திருக்கலாம். இன்று ஜெர்மானியரும் அமெரிக்கரும் இந்தியரும் அமரும் சபைக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதே இயல்பானது.
கடந்த நூறு வருடங்களில் இந்திய ஞான மரபின் எல்லா நூல்களும் ஆங்கிலத்தில் ஆக்கம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த நூறுவருடத்தில் இந்திய ஞானமரபை ஒட்டி எழுதிய எல்லாருமே ஆங்கிலத்தையே தங்கள் ஊடகமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நேற்று சம்ஸ்கிருதம் வகித்த பங்கை இன்று ஆங்கிலம் அகிக்கிறது
ஆனால் சம்ஸ்கிருதத்தில்தான் இந்த மரபின் இறந்த காலம் உள்ளது. ஆகவே ஒருபோதும் சம்ஸ்கிருதம் அழிந்து படாது. ஒருபோதும் அது தன் முக்கியத்துவத்தை இழக்கவும் இழக்காது. மூலநூல்கள் உள்ள மொழி என்ற வகையில் எப்போதுமே அது இருந்துகொண்டிருக்கும். அந்நூல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள அது இன்றியமையாதது. மாக்ஸ்முல்லருக்கும், ஜெக்கோபிக்கும், ஷெர்பாட்ஸ்கிக்கும், அம்பேத்கருக்கும் டி.டி.கோசாம்பிக்கும் அது வரலாற்று,பண்பாட்டு ஆய்வுக்கு உதவியது. இன்றும் ஆய்வாளர்களுக்கு உதவுகிறது.
ஆய்வாளர் நடுவே எப்போதுமே சம்ஸ்கிருதம் வாழும். நேற்று அது ஓர் அறிவுத்தள மொழி. இன்றும் நாளையும் அது அறிவுத்தள மொழியாகவே இருக்கும். அதன் சொல்வளம் மூவாயிரம் வருட தத்துவ இலக்கிய நூல்களால் உருவாக்கப்பட்டது. இன்று ஆங்கிலத்தில் அச்சொற்களை அப்படியே பயன்படுத்தித்தான் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தளத்தில் இருந்தே இந்தி என்னும் பிரச்சினைக்கு வருகிறேன். இந்திய ஒருமைப்பாடு என்ற அம்சத்தை ஏற்கனவே இருந்த ஒன்று என்ற கோணத்தில் பார்க்காமல் புதிதாக உருவாக்க வேண்டிய ஒன்று என்ற கோணத்தில் பார்த்தவர்கள் தான் மையமொழி தேவை என்று சொல்ல முற்பட்டார்கள்.
ஏற்கனவே இருந்த வழிமுறை என்ன? மையத்தில் அறிவார்ந்த விவாதத்துக்காக ஒரு வளமான தொடர்புமொழி. அடிப்படைத்தளங்களில் முடிவிலாத பன்மைத்தன்மை. பலமுகப்பட்ட பலதிசைப்பட்ட வளர்ச்சி. அதையே நம் முன்னுதாரணமாகக் கொண்டால் நமக்குத்தேவை ஒரு ஒற்றைமொழிக் கோட்பாடல்ல. தொடர்புமொழிக்கோட்பாடு.
அதற்கு நமக்கு தேவை ஒரு அறிவார்ந்த மொழி. இந்தி அந்த இடத்தை வகிக்க முடியவில்லை. அந்த இடம் பல்வேறு நுட்பமான வரலாற்றுக்காரனங்களால் காலப்போக்கில் உருவாகி வருவது. உருவாக்கப்படும் ஒன்று அல்ல. அந்த தொடர்பு மொழியில் இலக்கியவளம் மிகுந்திருக்க வேண்டும். சொல்வளம் மிகுந்திருக்க வேண்டும். அந்த வளங்கள் இடைவெளியில்லாத உரையாடல் மூலம் பல்வேறு மொழிகளில் இருந்து இலக்கியங்களையும் சொற்களையும் உள்ளிழுத்துக்கொள்வதன் வழியாகவே உருவாகி வரும். ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் அப்படி உருவாகி வந்தவை.
சம்ஸ்கிருதம் பலநூறு மொழிகளின் ஞானத்தையும் சொற்களையும் தனக்குள் ஏற்றுக்கொண்டே அந்த தொடர்புமொழித்தன்மையை அடைந்தது என நாம் அறிவோம். அந்த இயல்பு இந்தியில் அறவே இல்லை. இன்றும் அது கொஞ்சம்கூட வளராத ஒரு மொழி. அதில் முக்கியமான சம்ஸ்கிருத நூல்கள் கூட மொழியாக்கம் செய்யப்படவில்லை. அதில் இன்னமும் உலக இலக்கியத்தின், அறிவியலின் எளிய பங்களிப்பு கூட இல்லை. அந்த மொழி ஒருபோதும் உக்கிரமாக உருவாகிவரும் இந்திய அறிவியக்கத்தின் மொழியாக அமைய முடியாது. இந்தியாவின் நவீன தொடர்பு மொழியாக அது அமைய முடியாது
அப்படி இருந்தும் இந்தி ஏன் தொடர்புமொழியாக முன்வைக்கப்படுகிறது? அதிகபேர் அதைப் பேசுகிறார்கள் என்பது ஒரு காரணம். ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளுக்கு பதிலாக ஒரு தேசி மொழி இணைப்பு மொழியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் இன்னொரு காரணம். இரண்டுமே இன்று பொருந்தா வாதங்கள்.
அதிகம் பேர் பேசுவதனால் ஒரு மொழி பொதுமொழியாக இருக்க முடியாது. அது மொழிச்சிறுபான்மையினர் மீதான பண்பாட்டு வன்முறையாக ஆகிவிடவே வாய்ப்பதிகம். மேலும் நாம் பேசுவது இணைப்புக்கான மொழியை. இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி தேசி மொழியாக இருக்கவேண்டும் என்பது ஒருவகை குறுக்கல் வாதமே. நான் இந்தியா என்பது இந்திய நிலப்பகுதிக்கும் வெளியே பரந்து கிடக்கும் ஒரு வெளி என்றே நினைக்கிறேன்
ஆகவே ஆங்கிலம் இந்தியாவின் அறிவார்ந்த இணைப்பு மொழியாக, நேற்று சம்ஸ்கிருதம் வகித்த இடத்தை வகிப்பதாக, இருப்பதே இயல்பானது. சம்ஸ்கிருதத்தில் ஸ்வயமேவ மிருகேத்ரதா என்ற சொலவடை ஒன்றுண்டு. சிம்மம் அதன் இயல்பான வல்லமையால் மிருகராஜன் ஆகிறது. மொழிகளும் அப்படியே. ஆங்கிலம் அப்படி ஆன மொழி. அது இந்தியாவை இணைக்கிறது, இந்தியாவை உலகுடன் இணைக்கிறது
காந்தியும் நேருவும் அம்பேத்காரும் முழுஇந்தியாவுடனும் பேசியது ஆங்கிலம் மூலமே. இன்றும் இந்தியா ஆங்கிலம் மூலமே இணைக்கப்பட்டிருக்கிறது. இந்து ஞான நூல்கள் இந்திய வரலாற்றுப் பண்பாட்டு நூல்கள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளன. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் பேசினார், நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் பேசியது ஆங்கிலத்தில். அது ஓர் இயல்பான மாறுதல்
இன்று பிழைப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலம் அறிவியலின்,நவீன சிந்தனைகளின் மொழி. அதில் உள்ள தேர்ச்சியினாலேயே வடக்கை இன்று தெற்கு வென்றிருக்கிறது. எப்படியும் நாம் ஆங்கிலம் கற்றாகவேண்டும். அதாவது ஆங்கிலம் இன்று இரு பணியையும் ஆற்றுகிறது. ஒரு இந்தியப்பண்பாட்டு இணைப்பு மொழியாக அது இயங்குகிறது. உலகத்துடன் நம்மை இணைக்கக் கூடிய தொழில்நுட்ப மொழியாகவும் அது இருக்கிறது. இந்த பணிகளை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஆங்கிலத்துக்கு மாற்றாக நாம் ஏன் வெறும் தேசிய வெறி ஒன்றின் காரணமாகவே இந்தியை முன்வைக்க வேண்டும்?
மேலும் நடைமுறைச் சிக்கல்கள். எப்படியும் நாம் ஆங்கிலம் கற்றாக வேண்டும். மும்மொழிக்கொள்கை வந்தால் இந்திபேசுபவர் இருமொழி கற்க தெற்கே மும்மொழி கற்க வேண்டியிருக்கும். அது சமமற்ற போட்டியை உருவாக்கும்.
பேச்சில் இந்தி இல்லாமலிருக்கையில் இந்தியை பாடமாகக் கற்பது போன்ற வீண் ஏதுமில்லை. எனக்கு தெரிந்த ஏராளமானவர்கள் பத்துவருடம் வரை பள்ளியில் இந்தி கற்றவர்கள். ஆனால் இந்தியில் நான்கு சொல் பேசமுடியாது. பேசினால் புரியும் அவ்வளவுதான்.
அதேசமயம் தேவை ஏற்படும்போது மிக விரைவாகவே நம் மக்கள் இந்தி கற்றுக்கொள்கிறார்கள். ராணுவத்துக்குப் போகும் நம் இளைஞர்கள் அடுத்த விடுமுறையில் இந்தி பேசுபவர்களாக வருகிறார்கள். இந்தி கற்பதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது ஒரு மாயை. இன்று வாய்ப்புகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வடக்கே அல்ல. கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் இன்று இந்தியாவெங்கும் வெற்றிகரமாக வணிகமும் தொழிலும் செய்கிறார்கள். அவர்கள் இந்தி கற்றுக்கொண்டு சென்றவர்கள் அல்ல. அடித்தள மக்களாகச் சென்றவர்களே.
ஆகவே இன்று இந்தியை ஓர் இந்தியப்பொதுமொழியாக பரப்பவும் திணிக்கவும் எந்த தேவையும் இல்லை. மையத்தின் இணைப்புமொழியாக -அறிவுத்தள மொழியாக- ஆங்கிலம் இருப்பதே வசதியானது. பாரபட்சமற்றது. இந்தி உட்பட பிற மொழிகள் எல்லாமே முழுமையான வளர்ச்சி பெறும் சூழல் உருவாக்கப்படவேண்டும். சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளை அந்த மொழி சார்ந்த தேவை கொண்டவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
மொழியால் இந்தியா ஒருமைப்படவேண்டும். நம் வாழ்வு வளப்பட வேண்டும். ஆதிக்கம் மூலமும் அதற்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மூலமும் நாம் பிளவுபட்டு அழியலாகாது.
பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.
தமிழில் எப்போது நமக்கு எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போதே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கையும் அறிகிறோம். இந்தியாவில் தமிழல்லாத எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கால் இன்றைய வடிவம் பெற்றவைதான். சம்ஸ்கிருதமில்லாமல் செயல்பட முடியாதவையும்கூட. அந்த செல்வாக்கால் அவை அடிமைப்படவோ அழியவோ இல்லை, மாறாக வளமும் வளர்ச்சியுமே பெற்றுள்ளன. பிரம்மாண்டமான ஒரு செவ்வியல் மரபையும் மாபெரும் சொற்களஞ்சியத்தையும் அவை சம்ஸ்கிருதம் வழியாகப் பெற்றன.
இந்த செல்வாக்கு என்பது ஓர் உரையாடலின் விளைவே. சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்தியமொழிகள் பெற்றுக்கொண்டவை அனைத்துமே பிற வட்டாரமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டவைதான். சம்ஸ்கிருதத்துக்கு சொற்களை, இலக்கியத்தைக் கொடுக்காத எந்த மொழியும் நம்மிடம் இல்லை. சம்ஸ்கிருதம் வழியாக இந்திய வட்டாரமொழிகள் ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்தன என்பதே உண்மை
இதை இங்கே வந்த ஆங்கிலேய சிந்தனையாளர்கள் ஒரு ஆதிக்கம் என்று கதை விட்டு அதை நம்பும் [ அல்லது நம்பி வாழும் ] அறிவுஜீவிப்பட்டாளம் ஒன்றையும் உருவாக்கி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அசல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த எளிமைப்படுத்தலை நிராகரிக்கிறார்கள்.
பலமொழிகள் புழங்கும் எந்த ஒரு சமூகச் சூழலிலும் பல்வேறு வரலாற்றுக்காரணங்களால் ஏதாவது ஒருமொழி இணைப்பு மொழியாக மெல்லமெல்ல உருவாகிறது. பெரும்பாலும் பிறமொழிகளில் இருந்து சொற்களை எடுத்துக்கொண்டு வளர்வதற்குரிய விரிவான இலக்கண அமைப்பை உருவாக்கிக் கொண்ட மொழிகளே அவ்வாறு ஆகின்றன. அல்லது அதிகமாக இடப்பெயர்ச்சி செய்யும் மக்களின் மொழிகள்.
உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நேபாள மொழி பொதுவான இணைப்பு மொழியாக ஆகியிருப்பதை அங்கே சென்றபோது காணமுடிந்தது. நேபாள மொழியில் பழங்குடிமொழியின் சொற்கள் கலந்து அது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முக்கியமான காரணம் நேபாள வணிகர்களே வடகிழக்கு மாநிலத்தின் மலைக்கிராமங்கள் தோறும் செல்லும் வணிகர்கள் என்பதுதான்.
இவ்வாறு உருவாகும் இணைப்புமொழி ஆரம்பத்தில் அவை ஒரு இனம் அல்லது நிலத்தின் மொழியாக இருக்கும். ஆனால் வளர்ச்சிப்போக்கில் அவை அந்த அடையாளங்களையும் எல்லைகளையும் மீறி விரிந்துவிடும். எந்தக் குழுவுக்கும் இடத்துக்கும் உரிமை கொண்டாட முடியாததாக ஆகிவிடும். அதன் மொழிக்களஞ்சியமே பலநூறு மொழிகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் உலகமொழியாக ஆனது அவ்வாறுதான்.
சம்ஸ்கிருதமும் அப்படிப்பட்ட மொழி. அதன் நெகிழ்வான இலக்கண அமைப்பு ஏராளமான பிற சொற்களை மட்டுமல்ல பிறமொழி வழக்குகளைக்கூட எடுத்துக்கொள்ளக்கூடியது. இரண்டாயிரம் வருடங்களாக சம்ஸ்கிருதம் எந்த இனத்துக்கும் நிலத்துக்கும் உரிய மொழி அல்ல. புராதன வேத மொழியில் இருந்து வளர்ந்து விரிந்து எல்லா இந்திய மொழிகளையும் இணைப்பதாக ஆகியது. பிறமொழிகளுடன் உரையாடி அது வளர்ந்தது. அது பிறமொழிகளைப் பாதித்து புதிய மொழிகளை உருவாக்கியது.
இன்றைய சம்ஸ்கிருதம் வழிபாட்டுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் மட்டும் உரிய மொழியாகக் கட்டமைக்கப்பட்டது. செம்மையாக செய்யப்பட்டது என்பதே சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் .
இந்துமதமும் சம்ஸ்கிருதமும் இணையாகவே வளர்ந்தவை. இந்துமதம் என்பது ஒரு மாபெரும் தொகுப்புமதம். அதன் தொகுப்புமொழியாக சம்ஸ்கிருதம் உருவெடுத்தது. நாமறியும் வரலாற்றுக்காலகட்டத்துக்கு முன்னரே இது நிகழ்ந்துவிட்டது. இந்து ஞானமரபின் எல்லாப் பிரிவுக்கும் சம்ஸ்கிருதமே மூலநூல் மொழி. ஆத்திகக் கொள்கைகளுக்கும் சரி நாத்திகக் கொள்கைகளுக்கும் சரி.
இவ்வாறு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருப்பதனால்தான் அது இந்து வழிபாடுகளுக்குரிய தனி மொழியாக ஆகியது. எல்லா மதங்களும் அவ்வாறு பொது வழிபாட்டுமொழி கொண்டவையே. உலகமெங்கும் அரபி மொழிதான் இஸ்லாமின் வழிபாட்டு மொழி. லத்தீன்தான் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி.
ஏனென்றால் மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல. ஆந்திரத்து பக்தர் கன்யாகுமரியில் வழிபடவேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபடவேண்டும். ஆகவேதான் ஒரு பொது வழிபாட்டுமொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது. அதை ஓர் ஆதிக்கம் என்றல்ல ஒரு மகத்தான தொகுப்புமுறை என்றே நான் நினைக்கிறேன்.
அந்தத் தொகுப்பு வன்முறைமூலம் நிலைநாட்டப்பட்டதல்ல. பற்பல நூற்றாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த நீடித்த அறிவார்ந்த விவாதம் மூலம் உருவானது. அது ஒருவழிப்பாதை அல்ல. கொண்டும் கொடுத்தும் உருவான உரையாடல். அந்த உரையாடல் மூலம்தான் இந்து மதத்தின் இன்றைய பன்மைத்தன்மை உருவானது. எதையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை உருவானது.
அந்த உரையாடலும் தொகுப்பும் நிகழ்ந்தமையால்தான் இத்தனை ஆயிரம் இனக்குழுக்களும் இவ்வளவு மொழிகளும் கொண்ட இந்த மாபெரும் நிலப்பரப்பு உலகின் பல நாடுகளில் இன்றும் நிகழ்ந்துவரும் மாபெரும் இனமோதல்கள் நிகழாது ஒரு பண்பாட்டுத்தேசியமாக இருந்தது, அரசியல் தேசியமாக நீடிக்கிறது.
இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது.
சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது.
பெரும்பாலான கேரள பகவதி கோயில்களில் இந்த சம்ஸ்கிருதமயமாக்கல் அரைநூற்றாண்டில் நிகழ்ந்தது. தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன. இந்து மதம் தன்னைத் தொகுத்துக்கொண்டு விரிவடையும் வழிமுறை இதுதான்.
அதாவது ஒரு நாட்டார் தெய்வம் ஒரு குலக்குழுவுக்குள் ஓர் மொழிச்சூழலுக்குள் ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் வழிபடப்படும்போது அதற்கு வட்டார மொழி போதுமானதாக உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள அனைத்து இந்துக்களும் வழிபடும் தெய்வமாக ஆகும்போது அது சம்ஸ்கிருதம் என்ற பொதுமொழியை வழிபாட்டுமொழியாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.
மேலும் அத்தகைய முயற்சிகள் எல்லாமே ஏதோ வழியில் இந்துமதம் என்ற உலகளாவிய போக்கை உடைத்து அழிக்கும் நோக்கமுள்ளவையாக உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்தப் பொதுப்போக்கிலிருந்து ஒரு வட்டார, இனம்சார்ந்த தனிப்போக்கை வெட்டிக்கொள்வதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அதற்குப்பின்னால் உள்ள நோக்கம் என்பது ஆன்மீகமோ வழிபாடோ அல்ல, அரசியல் மட்டுமே.
மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா மதக்கருத்துகளுக்கும் தமிழிலும் கன்னடத்திலும் துளுவிலும் எல்லாம் மொழியாக்க வடிவம் இருக்கும். தமிழில் இல்லாத எதுவும் சம்ஸ்கிருதத்தில் இல்லை.
நாலாயிர திவ்யப் பிரபந்தமும், தேவார திருவாசகமும் எல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு இணையான வழிபாட்டு நூல்களாகவே சைவ வைணவ மதங்களால் தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன, பாடப்படுகின்றன. ’கோயிலுக்குள் தமிழ் இல்லை’ என்பதைப்போல அபத்தமான அப்பட்டமான பொய் வேறு இல்லை. கோயிலுக்குள் செல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொய்யைக் கோயிலுக்குச் செல்பவர்கள் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் எல்லா ஆலயங்களிலும் தமிழ்த் தோத்திரங்களும் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழே அறியாத ஆந்திரக் கோயில்களில் திருப்பாவை பாடப்படுகிறது.
அதாவது வழிபாட்டுமுறையின் மையம் இந்திய அளவில், உலக அளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறைத்தேவைக்காக மட்டுமே கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருக்கலாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாலி தீவிலும் கலிஃபோர்னியாவிலும் ஒரு இந்து சக இந்துக்களுடன் இணைந்து வழிபட வழிசெய்வது அந்தப் பொது அம்சமே. காசியில் போஜ்புரியில் சிவபெருமானைத் துதிப்பதில்லை, சம்ஸ்கிருதத்தில்தான். ஆனால் அங்கே நாம் ’பொன்னார்மேனியனே’ என்று பாட எந்தத் தடையும் இல்லை.
அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல. சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.
தமிழ் சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ, சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை. இன்று ஆங்கிலத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். உலக மொழிகளில் இருந்து நமக்கு வருவதெல்லாம் ஆங்கிலம் வழியாகவே. ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை.
இந்து தெய்வங்களைப்பற்றி , தத்துவங்களைப்பற்றி இன்று அதிகமாக எழுதப்படுவது ஆங்கிலத்திலேயே. காரணம் அதுவே இன்றைய இணைப்பு மொழி. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் அதிகமாக எழுதினார். அவரது மாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஆங்கிலத்தையே ஊடகமாகக் கொண்டார்கள். இந்து வழிபாட்டுக்குரிய மொழியாக சம்ஸ்கிருதமும் இந்து தத்துவசிந்தனைக்குரிய மொழியாக ஆங்கிலமும் இன்று திகழ்கிறது.இதுவும் இயல்பானதே என்றுதான் நினைக்கிறேன்
மஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.
கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.
சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நான் சொல்கிற இந்தக் கருத்துகளை மறுத்துச் சொல்கிற தெளிவு யாருக்காவது உண்டா? உண்டு என்றால் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.(http://www.thamilworld.com/forum/index.php?showtopic=595)
ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது.
ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான் ஃபாஸிஸம் என்கிறோம்
இவ்வறு வெறுப்பை உருவாக்கும்போது நாம் எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம்.
தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.
அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.
ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்ச்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது
இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.
இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.
இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது. தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.
இந்த வீழ்ழ்சியில் இருந்து தமிழை மீட்டது தமிழிய இயக்கம்தான். தமிழிய இயக்கம் என்று நாம் இன்று சொல்வது பலதளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த அறிவியக்கத்தைத்தான். கடந்த இருநூறு வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆகப்பெரிய அறிவியக்கம் என்பது தமிழிய இயக்கமே. தமிழின் தொல்நூல்களை பதிப்பித்தல் , அவற்றை ஆராய்ந்து தமிழின் தொல்மரபை நிலைநாட்டல், தமிழின் தனித்துவத்தை மறுபடியும் கண்டடைந்து நிலைநாட்டுதல் ஆகியவை ஒரு தளத்தில் நிகழ்ந்தன. இந்த இயக்கத்தை நாம் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறோம்.
இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிஓம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.
இந்த தமிழிய இயக்கத்தில் பிராமணர்களின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல் தமிழ் நூல்கள் அழிந்திருக்கும். அவரது மாணவர்களான அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர், பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில் பெரும் பணியாற்றியவர்கள்.
தமிழிய இயக்கம் தமிழை மீட்டமைக்கும் வேகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானதாக ஆனது. நடைமுறையில் அதில் பிராமண எதிர்ப்பும் கலந்து கொண்டது. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன.
பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதைப்போல அவர்கள் அந்த அதிகாரத்தை பிறர் எய்த அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக முதல் கசப்பும் எதிர்ப்பும் கேரளத்தில் , இன்னும் சொல்லப்போனால் நாயர் சாதியில்தான், உருவாகியது. காரணம் கிறித்தவ இயக்கத்தின் கல்விப்பணியை பயன்படுத்திக்கொண்டு கல்விகற்று வந்த நாயர்கள் அரச பதவிகளை நாடி பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.
ஆரம்பகாலத்தில் இவ்வாறு பிராமணர்களால் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று வட்டார அரசுகளை அமைக்கும் வாய்ப்பை வழங்கியபோது அந்த அமைப்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியாக ஆகியது. இந்த அமைப்புக்கும் தமிழிய இயக்கத்துக்கும் கொள்கை அளவில் எந்தத்தொடர்பும்பு இல்லை. ஆனால் இதன் ஆதரவாளர்களாக தமிழியக்கத்தினர் பலர் இருந்தார்கள்.
இக்காலத்தில் கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பெரிதாகப் பேசப்பட்டது. தென்னக மொழிகளை ஆராய்ந்த பிஷப் கால்டுவெல் அவற்றுக்கு ஒரு பொது இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். தென்னகத்தைக் குறிக்க நம் சிற்ப- தாந்த்ரீக மரபில் பயன்படுத்தப்பட்ட திராவிட என்ற சொல்லை அவற்றைக் குறிக்க பயன்படுத்தினார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது
இவ்வாறு திராவிட இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது பிராமண வெறுப்பே. இந்திய மக்களை திராவிடர் ஆரியர் எனப்பிரித்து திராவிடர் என்போர் தென்னகத்து பிராமணரல்லாதோர் என வகுத்து அவர்கள் தனி இனம் தனி நாடு என்று வாதிட ஆரம்பித்தார்கள். இக்காலகட்டத்தில் திராவிட இனம் என்பதை வரையறை செய்வதற்கான அறிவார்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை. ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு உடனடியாக அவை கோட்பாடுகளாக ஏற்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது திராவிட இயக்கங்கள் திராவிடக்கருத்தியலை கைவிட்டன. அதற்கும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திராவிட என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது. ஏனென்றால் திராவிடக்கருத்தாக்கம் கர்நாடகம் ஆந்திரா கேரளத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.
அக்காலத்தில் இந்தியாவெங்கும் உருவாகி வலுவடைந்த பிராமணமைய வாதம் தன்னை சம்ஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பண்பாடென்பது பிராமணப் பண்பாடாக முன்வைக்கப்பட்டது. அது சம்ஸ்கிருதத்தால் மட்டுமே அமைந்தது என வாதிடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியால் புதுப்பணபலம் பெற்ற பிராமண சாதியின் ஒரு ஆதிக்க தந்திரம் அது.
அதற்கு எதிராக பிராமணரல்லாத சாதியினர் உருவாக்கிய பல கோட்பாடுகளை உருவாக்கினர். உதாரணமாக வேதங்களின் காலத்தை பிராமணர்கள் பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றபோது தமிழிய இயக்கத்தினர் கடல்மூழ்கிய குமரிநில நீட்சியை ஒரு பெரும் கண்டமாக உருவகித்து அதுவே பிரம்மசமாஜத்தினர் சொல்லிய லெமூரியா என வாதிட்டு ஆதாரமேதும் இல்லாமலேயே அதை நம்பவும் ஆரம்பித்தார்கள்
இவ்வாறு நம் சூழலில் புழங்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஆதிக்க நோக்குடன் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்கு எதிரான கருத்து அதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்டது. இன்று ஒரு அறிவார்ந்த ஆய்வாளர் நடுநிலையான ஆய்வுகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால் ஒரு அபாயம் உள்ளது. கருத்துநிலைபாட்டின் இரு தரப்புமே அவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள். ஒன்று அவர் தமிழியராக இருக்க வேண்டும். அல்லது அவர் பிராமணியராக இருக்க வேண்டும். இரண்டுமே துறை வெற்றிகளை அளிக்கக் கூடியவை. நடுநிலையாளருக்கு இன்று தமிழ்ச் சூழலில் ஆளிருப்பதில்லை. ஆகவே மிகக் குறைவாகவே நடுநிலைக் குரல்கள் ஒலிக்கின்றன
திராவிட இயக்கம் பிரபல அரசியலியக்கமாக ஆகியது. முதலில் பிராமணரல்லாத உயரசாதியினரின் குரலாக ஆரம்பித்தது பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக ஆகியது. இந்த பரிணாமத்தில் அது தமிழிய இயக்கம் உருவாக்கிய மனநிலைகளையும் கோஷங்களையும் பெரிது படுத்தி வெகுஜன நம்பிக்கைகளாக ஆக்கியது. தமிழிய இயக்கம் ஓர் அறிவார்ந்த இயக்கம். அதில் ஆய்வும் உண்டு, வெறுப்பின் அம்சமும் உண்டு. திராவிட இயக்கம் அதில் வெறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டது.
பொருட்படுத்தும்படியான தமிழாய்வுகள் எதையுமே திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. தமிழின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எந்த பங்களிப்பையும் அது ஆற்றவும் இல்லை. இது வரலாறு. ஏனெனில் அது பரப்பு இயக்கம், அறிவியக்கம் அல்ல. இன்று திராவிட இயக்கம் தன் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதெல்லாமே தமிழிய இயக்கத்தின் பங்களிப்புகளையே. அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட அல்ல.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அந்தக்கால கட்டாயங்களினால் உருவான கருத்துக்கள் பின்னர் வெகுஜனப்படுத்தப்பட்டு எளிய கோஷங்களாக மாறி நம் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை எதிரொலிப்பவர்கள் அவற்றை நிறுவப்பட்ட உண்மைகளாகவே எண்ணுகிறார்கள். மத நம்பிக்கை போல ஆவேசமாக முன்வைக்கிறார்கள். ஆராயவோ விவாதிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. எதிர் தரப்பை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். கருத்துக்கள் சார்ந்து முன்வைப்பதெல்லாமே மிகையுணர்சிக்களைத்தான். ஆகவே ஒரு விவாதமே சாத்தியமில்லாமல் போகிறது
இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது
சம்ஸ்கிருதம் சார்ந்து நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. 1. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். 2. அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
3. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட 4. அதைஇப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள். 5. சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.
இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன
1. சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
2. சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்குமுன்னுரிமை உள்ளமொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே
இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சம்ஸ்மிருதம் தமிழுக்குக் கடன்பட்டது.
பத்ரி சேஷாத்ரி பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் விதம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது என்றார்கள். முக்கியமான சில எதிர்வினைகளை மட்டும் தேர்ந்து அளிக்கும்படி சொன்னேன். தொலைபேசியில் நான் சொன்ன கருத்துக்களை எழுதியே ஆகவேண்டும் என்று அரங்கசாமி சொன்னார்.அனேகமாக அனைவரும் எதிர்வினை ஆற்றிவிட்டமையால் என் கருத்தை எழுதலாமென்று தோன்றியது.
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ஏற்கனவே வேறு சொற்களில் அசோகமித்திரனால் சொல்லப்பட்டதுதான். வெவ்வேறு பிராமணர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்பிராமணர்களின் ஆதங்கம் அது என்று சொல்லலாம். அதை நான்கு கருத்துக்களாகச் சுருக்கலாம்.
1. தமிழ்பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்லமெல்ல விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
2. தமிழ்பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்
3. தமிழ்பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
4 . இந்நிலைகாரணமாக தமிழ்பிராமணர்கள் மெல்லமெல்ல தமிழகத்தைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
எதிர்வினைகளைப்பற்றி..
இதைப்பற்றி வந்த எதிர்வினைகளே பெரும்பாலும் பிராமணர்களக் கீழ்த்தரமாக வசைபாடி, அவதூறு செய்து அவமதிப்பவைதான். பத்ரி சேஷாத்ரி சொன்னவற்றுக்கு ஆதாரங்களைத்தான் எழுத்தில் அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றுகூட அறியாத மூர்க்கமே அவற்றில் வெளிப்பட்டது.
இன்னொருவகை எதிர்வினை, பிராமணர்களிடமிருந்து வந்தது. தங்களை முற்போக்குப் பிராமணர்கள் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையின் வெளிப்பாடுகள் அவை. எவ்வகையிலும் சமநிலை அற்றவை.அந்தக்குரல் எப்போது பிராமணக் காழ்ப்பு இங்கே எழுந்ததோ அன்றுமுதல் இங்கே இருந்துகொண்டிருக்கிறது. அந்தக்குரல் உடனே கவனிக்கப்படும் என்பதும், அதைச் சொன்னவர் தற்காலிகமான பாராட்டுகளுக்கு பாத்திரமாவார் என்றும் சொல்பவர்கள் அறிவார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு கருத்தில் எப்போதேனும் அந்தப்பிராமணர்கள் அவர்களின் ஆதரவாளர்களான அந்த இடைநிலைச்சாதி சாதிவெறியர்களுடன் மாறுபடுவார்கள் என்றால் ‘என்ன இருந்தாலும் நீ பாப்பான், நீ அப்டித்தானே சொல்லுவே’ என்ற வசையே அவர்களுக்கும் கிடைக்கும். காலமெல்லாம் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்த ஞாநி கருணாநிதியின் முதுமையைச் சுட்டிக்காட்டிவிட்டார் என்பதற்காக அவரை பார்ப்பனன் என வசைபாடி ஏழெட்டு கட்டுரைகளை அவரது நண்பர்களே எழுதியிருந்தனை நினைவுகூர்கிறேன்
இந்த எதிர்வினைகளின் அரசியலில் நான் கூர்ந்து நோக்கியது தலித்துக்களின் குரலை. எனக்கு ஒரு குரல்கூட கண்ணுக்குப்படவில்லை. யோசித்துப்பார்க்கிறேன். சென்ற சில ஆண்டுகளாக எனக்கு மிக நெருக்கமாக உள்ள தீவிர தலித் செயல்பாட்டாளர்களான நண்பர்கள் எவரேனும் இந்த வகையான காழ்ப்பைக் கக்கும் சொற்களைச் சொல்வார்களா என? வே.அலெக்ஸ் போன்ற ஒருவர் பிராமணர்களை அல்ல எந்த ஒரு மக்கள்திரளையும் பற்றி வெறுப்புடன் ஒரு சொல் சொல்லிவிடுவாரா? பாரிசெழியனால் சொல்லமுடியுமா?
நான் கேட்டதே இல்லை. ஒருமுறைகூட. தனிப்பேச்சுகளில்கூட. மாறாக ஸ்டாலின் ராஜாங்கம் ஒருமுறை சொன்னார். ‘சாதிக்காழ்ப்பு என்றால் என்ன என்று எங்களுக்குத் தெரியும். அதனால் எந்த ஒரு சாதியையும் வெறுப்பின் குரலால் அடையாளப்படுத்த எங்களால் முடியாது’ அன்று ஏற்பட்ட மகத்தான மனநெகிழ்ச்சியை இன்று நினைவுகூர்கிறேன்.
பகுதி 1. பத்ரி சேஷாத்ரிக்கு பதில்
என் அனுபவத்தைக்கொண்டு, நேரடியாக மேலே சொல்லப்பட்ட நான்கு கருத்துக்களையும் பரிசீலிக்க விழைகிறேன்.இதில் மடக்கி மடக்கி விவாதம் செய்பவர்களிடம் சொல்ல எனக்கு ஏதுமில்லை. வெறுப்பரசியல் செய்வதைப்போல எளியது ஏதுமில்லை. எந்தத் தரப்பையும் எடுத்துக்கொண்டு புள்ளிவிவரங்களை அள்ளிவைத்து மணிக்கணக்காக வாதிடலாம்.வெறுப்பு அளிக்கும் வேகம் மட்டும் இருந்தால்போதும்
நான் சொல்வது நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவை. எழுத்தாளன் என்பவன் ஒருவகையில் அனைவரும் உள்ளூர அறிந்தவற்றை மீண்டும் சொல்பவனே. அதற்காக சமூகத்தின் ஆழ்மனத்துக்குள் செல்பவன் அவன். நான் சொல்வனவற்றை மனசாட்சியை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும் எவரும் அறிய முடியும். இலக்கியவாதியின் உண்மையான வாசகர்கள் அவர்களே.
அதற்கு அப்பால் ஒன்றுண்டு. இன்று இந்தவிஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக்காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது
ஆம், எவர் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் இதை மறைக்க முடியாது. இது இங்கே ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். இதை மறுப்பவர்களின் மனசாட்சியுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கும். என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை
பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பது ஒருவகையில் உண்மை. ஆனால் அது வேறுவழியில்லாமல் காலமாற்றத்தில் நிகழக்கூடியது. தவிர்க்கமுடியாதது. வளர்ச்சியின் ஒரு பகுதி அது. ஆகவே அறச்சார்பு கொண்டது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபின் ஆற்றப்பட்ட உரைகளில் ஒன்றில் நேரு இதைச் சொல்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டம் பெரும்பாலும் உயர்சாதியினரால் நடத்தப்பட்டது. ஏனென்றால் அன்று அவர்களே கல்விகற்றவர்கள். ஆனால் சுதந்திரத்துக்குபின் வந்த ஜனநாயக அரசியல் பெரும்பான்மையினராக உள்ள கீழ்ப்படிநிலைச் சாதிகளுக்கே சாதகமானதாக இருக்கும். அதுவே ஜனநாயகத்தின் வழிமுறை. ஆகவே உயர்சாதியினர் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டும் என்றார் நேரு
நேற்றைய நிலப்பிரபுத்துவச் சாதியமைப்பில் உயர்சாதியினராக இருந்த மூன்றுதரப்பினரே அதிகாரத்தை வகித்தனர். புரோகிதச் சாதியினர் [பிராமணர்] நிலவுடைமைச் சாதியினர் [வேளாளர், முதலியார்] வணிகச் சாதியினர் [செட்டியார்]
ஜனநாயகம் வந்தபோது இந்த உயர்சாதிகளின் அதிகாரம் மெல்லமெல்ல இல்லாமலாகியது. சென்ற அரைநூற்றாண்டில் நாம் காணும் படிப்படியான சமூகமாற்றம் என்பது முதல்படிநிலையில் இருந்த இச்சாதிகளின் சரிவே.
இன்று வேளாண்மைநிலம் பெரும்பாலும் வேளாளர், முதலியார்களின் கையை விட்டுச் சென்றுவிட்டது. நாட்டின் நில உச்சவரம்புச்சட்டத்தால் அவர்களின் நில உரிமை பறிக்கப்பட்டது. முழுக்கமுழுக்க செட்டியார்களிடமிருந்த தொழில்களில் பெரும்பாலானவை இன்று இடைநிலைச்சாதிகளிடம் சென்றுவிட்டிருக்கின்றன.
இதேபோன்ற ஒரு வீழ்ச்சியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டது. இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. இந்தியாமுழுக்க நிகழ்ந்தது, நிகழ்ந்து வருவது. தென்மாநிலங்களில் கேரளம், தமிழகம்,கர்நாடகம் ஆகியவை இந்த வேகம் கூடுதலாக உள்ளது.
முதல்படிநிலைச் சாதிகளில் பிராமணர்களின் நிலஉரிமை என்பது கொஞ்சம் மாறுபட்டது. அது கைவச உரிமை அல்ல, வரியில் ஒரு பங்கைக் கொள்ளும் உரிமை மட்டுமே.சோழர்களின் ஆட்சியில் அவ்வுரிமை அளிக்கப்பட்டது. பின்னர் நாயக்கர் ஆட்சியில் அவை மேலும் உறுதி செய்யப்பட்டன.
மன்னராட்சி மறைந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்ததுமே அந்த வரி அவர்களுக்கு வராமலாகியது. அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசில் பணியில் சேர்ந்து அவ்வீழ்ச்சியை எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு நெடுங்காலமாக கல்விகற்றுவந்த ஒரு குலமரபிருந்தமையால் அதற்கேற்ற மனநிலையும் குடும்பச்சூழலும் இருந்தது.
ஆங்கில ஆட்சிக்காலத்தில் பிராமணர் வகித்த பதவிகள் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வருவதற்கு முன்னரே குறையத்தொடங்கின. 1920களிலேயே அரசுப்பதவிகளில் கல்விகற்று மேலே வந்த பிற சாதிகள் உரிமைகோரிப் பெறத் தொடங்கின.
தென்னகத்தில் பிராமண வெறுப்பின் விதை இந்தப் போட்டி வழியாகவே உருவாகியது. உருவாக்கியவர்கள் பிராமணர்களிடம் அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட நாயர்கள். முக்கியமாக திருவிதாங்கூரில் இது ஆரம்பித்தது. சுவதேசாபிமானி ராமகிருஷ்ணபிள்ளை என்பவர் இதன் கருத்தியல் முதல்வர்.
இவரிடமிருந்து இக்கருத்துக்கள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் பகுதியாக இருந்த வடகேரளத்துக்குச் சென்றன. அங்கிருந்து சென்னைக்கு வந்தன. ஆரம்பகால பிராமண வெறுப்பு அரசியலை முன்வைத்தவர்கள் டி.எம்.நாயர் போன்ற மலையாளிகள். பிராமணரல்லாதோர் இயக்கம் பின்னர் தெலுங்கர்களைச் சேர்த்துக்கொண்டு வளர்ந்தது. திராவிட இயக்கமாக மாறியது
அத்துடன் கிராமங்களில் கிராமகணக்குப்பிள்ளையாக பிராமணர்கள் வகித்த பாரம்பரியப் பதவிகள் இந்தியா முழுக்க அவர்களிடமிருந்து காங்கிரஸ் அரசுகளாலேயே பறிக்கப்பட்டன. கிராம ஆசிரியர்களாக அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தை நிறுத்தலாக்கியவர் ராஜாஜி. நவீனக் கல்விமுறையைக் கொண்டுவருவதற்காக அவர் இதைச்செய்தார்.
அதன்பின் இந்தியா முழுக்க கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தங்கள் பிராமணர்களின் நிலவுரிமையை இல்லாமலாக்கின. தமிழகத்தில் அதைக்கொண்டுவர வாதிட்டவர் ராஜாஜிதான்.1962ல் காமராஜ் ஆட்சிக்காலத்தில் அது சட்டமாகியது. அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் சுதந்திரத்துக்கு முன்னும்பின்னும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவை. தேசிய அளவில் நடைமுறைக்கு வந்தவை
ஆகவே பிராமணர்கள் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள், பிராமணர்களை திராவிடக்கட்சிகள் ஒடுக்கி அதிகாரமற்றவர்களாக ஆக்கின என்பது ஒரு மனப்பிரமை மட்டுமே. உயர்படிநிலைகளில் இருந்த சாதிகளில் எண்ணிக்கைபலம் அற்ற அத்தனை சாதிகளுமே இந்தியாவில் ஜனநாயகம் வந்தபோது அதிகாரத்தை இழந்தன. அது ஜனநாயகத்தின் இயல்பான போக்கு.
சுதந்திரத்துக்குப்பின் கல்வி பரவலானபோது அந்தப்போக்கு மேலும் விரைவுகொண்டது. இதில் எண்ணிக்கைபலம் கொண்ட ஆதிக்கசாதிகள் மட்டும் தாக்குப்பிடித்து நீடித்தன. கேரளத்தில் நாயர்களும் சிரியன் கிறித்தவர்களும் உதாரணம்.
ஆனால் இவ்வாறு அதிகாரமிழந்த உயர்சாதிகளிலேயே கூட பிராமணர்கள் பிறரை விட ஒரு படிமேல் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் முன்னரே சென்னை போன்ற நகரங்களில் குடியேறி, அரசுடன் ஒத்துழைத்து தொழில்களில் காலூன்றிவிட்டமையால் பிராமணர்களுக்குரிய பெருந்தொழில் நிறுவனங்கள் இங்கே இருந்தன. தனியார்துறைகளில் வேலைவாய்ப்புகள் இருந்தன. உதாரணமாக, டிவிஎஸ் போன்ற ஒரு குழுமம் பிராமணர்களுக்கு உள்ளது. வேளாளர்களுக்கோ முதலியார்களுக்கோ அப்படி எந்த அடிப்படையும் இல்லை
அத்துடன் கல்விகற்று மேலே செல்லும் துடிப்பை குடும்பச்சூழலில் இருந்தே பெற்றுக்கொண்டமை காரணமாக சிலகுறிப்பிட்ட தொழில்களில் பிராமணர்கள் நீடிக்கவும் முடிந்துள்ளது. ஆடிட்டர்கள் போல.
ஆனால் கண்டிப்பாக அவர்களின் வேலைவாய்ப்புகளும் அரசுசார் அதிகாரமும் குறைந்துகொண்டேதான் செல்கின்றன. அதை அவர்கள் கணிப்பொறித்துறை போன்றவற்றில் புகுந்து அடைந்த வெற்றி மூலம் ஈடுகட்டிவருகிறார்கள். இந்த மாற்றத்தை நான் ஒரு ஜனநாயக பூர்வமான மாற்றமாகவே எண்ணுகிறேன். அதை ஒரு கல்விகற்ற, வரலாற்றுணர்வுகொண்ட பிராமணர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பிற உயர்சாதியினரும்தான்.
இரண்டு: பிராமணர்களின் மீதான சமூக அவமதிப்பு
தமிழ் பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்களா? ஆம். நான் ஓர் அரசுத்துறையில் இருபதாண்டுக்காலம் பணியாற்றியவன். பல துறைகளில் பல அதிகாரிகளிடம் நேரடியான பழக்கமும் அலுவலகங்களில் அனுபவமும் கொண்டவன். மேலும் கேரளப் பணிசூழலில் இருந்து தமிழகத்துக்கு வந்தமையால் சற்று விலகி நின்று நோக்கும் பார்வையையும் அடைந்தவன். ஆகவே என் அவதானிப்பு இதுவே.
தமிழக அலுவலகச் சூழலில் தலித்துக்களும் பிராமணர்களும்தான் சாதிரீதியாக அவமதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள். நான் தமிழகம் வந்த புதிதில் ஓரு தமிழக அரசு உயரதிகாரியுடன் அவரது அறையில் பேசிக்கொண்டிருந்தேன். இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்பதனால் நெருக்கம். ஒரு பிராமண துணையதிகாரி வந்து விடுப்பு விண்ணப்பக்கடிதங்களை அவர் முன் வைத்தார். அனைத்திலும் அவர் குறிப்பு எழுதியிருந்தார்.
“ஏய்யா, நீதானே சாங்ஷனிங் அதிகாரி? எங்கிட்ட கொண்டுட்டு வந்து ஏன் தாலிய அறுக்கிறே?’ என்று இவர் எரிந்து விழுந்தார். பிராமண அதிகார் பேசாமல் நின்றார். “நான் எதுக்குய்யா இதையெல்லாம் பாக்கணும்?’ என்றார் மீண்டும். அவர் பேசாமல் நிற்கவே “கொண்டுட்டு போ” என்று கூச்சலிட்டார்.
அவர் மெல்லியகுரலில் “நீங்க பாத்தா நல்லாருக்கும் சார்” என்றார். அது இவரை கொஞ்சம் குளிரச்செய்தது “ஒரு முடிவையும் எடுக்காதே. பயம்” என்றபின் அதிகாரி என்னை நோக்கி “பாப்பாரப்புத்தி எப்டி வேலைசெய்யுது பாருங்க” என்றார்
நான் பின்னர் வெளியே வந்தபோது அந்த பிராமண அதிகாரி என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ரப்பர் வாசித்திருந்தார். “சார் நான்தான் சாங்ஷனிங் ஆபீசர். ஆனா நான் முடிவெடுத்தா அத்தனை பேரும் பாப்பாரத்தாயளின்னு திட்டுவானுக. இப்ப இவர் ஒருத்தர் வாயத்தானே கேட்டாகணும். அதும் ரூமுக்குள்ள… பரவால்ல” என்றார் சிரித்தபடி
அன்று அடைந்த அதிர்ச்சி நான் விருப்ப ஓய்வுபெறும் வரை நீடித்தது. அரசலுவலகங்களில் பிராமண ஊழியர் ஒருவர் எப்படியும் வாரத்துக்கு ஒருமுறை நேரடியாகவே சாதி குறித்த வசையை எதிர்கொள்ள வேண்டும். நக்கல்கள், கிண்டல்கள், நட்பு பாவனையில் சொல்லப்படும் இடக்குகள் வந்துகொண்டே இருக்கும்.
பிராமணர்களைப் பற்றி நம் இடைநிலைச் சாதியின் பொதுப்புத்தி ஒன்றுண்டு. ஈ.வெ.ரா அவர்களால் அது ஒரு கொள்கையாகவே நிலைநாட்டப்பட்டது. பிராமணர்கள் என்றால் நயவஞ்சகம் செய்பவர்கள், பிறரைப்பற்றி தங்களுக்குள் இழித்துப் பேசிக்கொள்பவர்கள், மேட்டிமை நோக்குள்ளவர்கள், சுயநலவாதிகள் என்ற பேச்சை மீளமீளச் சொல்லிக்கொண்டிருப்பதை இருபதாண்டுக்காலம் கேட்டிருக்கிறேன்.
ஆனால் கணிசமானவர்களின் வாழ்க்கையில் பிராமணர்கள் பேருதவிசெய்திருப்பார்கள். நீண்டகால நட்பு பேணியிருப்பார்கள். இக்கட்டான தருணங்களில் இவர்கள் சென்று நிற்கும் இடமும் ஒரு பிராமணனின் வீடாகவே இருக்கும்.அத்தனைக்கும் அப்பால் பிராமணர் “பாப்பாரப்புத்தியக் காட்டிட்டீயே” என்ற வசையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
1991ல் அருண்மொழி தன் வீட்டை விட்டு தருமபுரிக்கு என்னைத் தேடி வந்தபோது அவளை உடனே கூட்டிச்சென்று தன் இல்லத்தில் வைத்திருந்தவன் என் நண்பன் ரமேஷ். அவன் அக்காவின் பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டுதான் அருண்மொழி என்னை திருமணம் செய்துகொண்டாள். அவர்கள் வீட்டில்தான் எங்கள் முதலிரவு. ஒரு வேளை பெரும் அடிதடியாக முடிந்திருக்கக் கூடும். போலீஸ் கேஸ் ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அதை யோசிக்கவில்லை.
ஆனால் அன்று அங்கிருந்த அத்தனை வன்னியரும் யோசித்தார்கள். அத்தனை நாயுடுக்களும் யோசித்தார்கள். எந்த வீட்டுக்கும் நான் சென்றிருக்க முடியாது. அதைப்பற்றி அப்போதே வெளிப்படையாக தொழிற்சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறோம். “அவங்க வீட்டு பொம்புளைங்களுக்கு ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு சார். அவங்க கொஞ்சம் போல்டாவும் இருப்பாங்க. நம்ம வீட்டுல பயந்து சாவாங்க” என்றுதான் அனைவரும் சொன்னார்கள். அது உண்மைதான், தமிழகத்தில் மற்றசாதிகளில் முற்போக்கெல்லாம் தெருவிலும் திண்ணையிலும்தான். [ஃபேஸ்புக்கில்?] வீட்டுக்குள் பெண்கள் முழுக்கமுழுக்க பழைமைவாதிகள்.தலைமுறை தலைமுறையாக.
அரசு அலுவலகங்களில் தலித்துக்கள் கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு எண்ணிக்கைபலம் உண்டு. சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆகவே நேரடியாக அவமதிப்பு சாத்தியமல்ல. அவமதிப்பு எங்கு நிகழுமென்றால் பொதுவாகப் பேசும்போது வாய்தவறி சிலர் சாதிசார்ந்த வசைகளை அல்லது சாதிவெறிக் கருத்துக்களை சொல்லிவிடுவார்கள். உடனிருக்கும் தலித் நண்பர் அவமதிக்கப்படுவார்.
இடைநிலைச் சாதியினர் நிறைந்த அறைக்குள் தலித் சாதியினர் எவரும் இல்லை என்ற உறுதி ஏற்பட்டதும் அப்பட்டமான சாதிவெறிப்பேச்சுக்கள் கிளம்பும். தலித் என்பவன் நேர்மையற்றவன், சுத்தமற்றவன், ஒழுக்கம் அற்றவன், அவன் பெண்கள் எவனுடனும் செல்பவர்கள் இதுதான் தலித் பற்றிய இடைநிலைச்சாதியின் மனப்படிமம். சென்ற இருபதாண்டுக்காலத்தில் நான்கண்ட மூன்று தலைமுறை இடைநிலைச் சாதியினரிடம் எந்த மனநிலை மாற்றமும் இல்லை.
ஆனால் அடிக்கடி பெரியார் பிறந்த மண் என்ற பிலாக்காணம் வேறு. நண்பர்களே ஈரோட்டில்தான் இன்றும் தனிக்குவளை முறை இருக்கிறது. பெரியார் பிறக்காத, நம்பூதிரி பிறந்த கேரளத்தில் அதைக்கேட்டால் அதிர்ந்து கைநடுங்கிவிடுவார்கள். இந்த பாவனைகளைப்பற்றி இனிமேலென்றாலும் மனசாட்சி உடைய சிலராவது உடைத்து பேசிக்கொள்ளவேண்டாமா?
அலுலகங்களில்வேலைச்செய்ய்ம் தலித் சாதியினர் அவமதிப்புக்குள்ளாவது அவர்களின் வீட்டு திருமணங்கள் மற்றும் இல்லவிழாக்களுக்கு பிறர் செல்லாமல் புறக்கணிக்கும்போது என்பதை கண்டிருக்கிறேன். ஒருமுறை முந்நூறு பேர் வருவார்கள் என எதிர்பார்த்து ஒருவர் ஏற்பாடுகள் செய்திருக்க தொழிற்சங்க நண்பகள் முப்பதேபேர் போனோம். அவரது சுண்டிச் சுருங்கிய முகம் இன்றும் நினைவில் எரிகிறது
ஆனால் பிராமணர்கள் நேரடியாகவே வசைபாடப்படுவார்கள். அதிகாரிகள் என்றால் இன்னமும் வசைபாடப்படுவார்கள். அந்தவசைகளை அவர்கள் எதிர்கொள்ளும் முறை பரிதாபகரமானது. பெரும்பாலும் அதை ஒருவகை வேடிக்கையாக மாற்றிக்கொண்டு கடந்துசெல்வார்கள். அல்லது போலி மேட்டிமைத்தனம் ஒன்றைக் காட்டி பேசாமல் செல்வார்கள்.
தங்களை தூய வைதிகர்களாக ஆக்கிக்கொண்டு பட்டையும் கொட்டையுமாக வந்து முழுமையாக ஒதுங்கியே இருப்பது பிராமணர்களின் ஒரு தற்காப்பு முறை. அவர்கள் டேபிளில் ஓரமாக அமர்ந்து சாப்பிடும்போது “அய்யரே, இது என்ன போனமாசத்து ஊளைச்சாம்பாரா?”என்ற நக்கல் எழும். தலைகுனிந்து சாப்பிட்டால் தப்பிக்கலாம்
அல்லது அதிதீவிர எதிர்நிலை. தொழிற்சங்கத்தில் சேர்ந்து கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது. பீஃப் பொரியல் சாப்பிடுவது. ஆரம்பகால கம்யூனிஸ்டு பிராமணர்கள் அதை ஆத்மார்த்தமாகவே செய்தார்கள். பெரியாருக்கே திராவிடவெறியைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பது வரைச் செல்லும்போது கொஞ்சம் போலித்தனம் சேர்ந்துகொள்ளும். இன்று இணையத்தில் எழுதும் ஞாநி போன்ற பிராமணப் பெரியாரிஸ்டுகளை எல்லா அலுவலகங்களிலும் காணலாம்.
இடதுசாரித் தொழிற்சங்கங்கள் 90கள் வரை பெரும்பாலும் சாதிய அடிப்படை அற்றவை. ஆகவே அங்கே மேலே சொன்ன முற்போக்குப் பிராமணகள் செயல்பட முடிந்தது. அவர்களின் ஈடிணையற்ற உழைப்பு இல்லையேல் தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கமே இல்லை. பெரும்பாலான தொழிற்சங்கங்களைக் கட்டி எழுப்பியவர்களில் பிராமணர்கள் முதன்மையாக இருப்பார்கள்.
ஆனால் 90களில் மெல்லமெல்ல இடதுசாரித் தொழிற்சங்கங்களும் சாதியவாதத்துக்குள் வந்தன. அந்தந்தப் பகுதியின் எண்ணிக்கை பலமுள்ள இடைநிலைச்சாதியினரே தலைமைக்கு வரமுடியுமென்ற நிலை வந்தது. பிராமணர்கள் ஒதுக்கப்பட்டனர். பலர் ‘ உன் பாப்பாரவேல இங்க வேண்டாம் கேட்டியா?’ என்ற சொல்லைக்கேட்டு கண்ணீருடன் விலகிச் சென்றனர்
ஆச்சரியமென்னவென்றால் சிலர் நேராக முதல் அடையாளத்துக்கே சென்றதுதான். தர்மபுரியில் நானறிந்த தோழர் பாலசுப்ரமணியன் வீட்டிலேயே கோயிலைக் கட்டி விபூதியும் காதில்பூவுமாக அலுவலகம் வரத் தொடங்கினார்!
இதேநிலைதான் நம்முடைய பொதுவான அமைப்புகள் அனைத்திலும். கல்விநிலையங்களில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கையில் பிராமணர்களை அவமதிப்பதை அனைவரும் ஒரு பெருங்கலையாகவே செய்தோம். நான் மீனை கொண்டுசென்று அவர்களின் சாப்பாட்டில் போடுவேன். ‘டேய் ஊளைச்சாம்பார்’ என்று எந்தப் பேருந்திலும் உரக்கக் கூவுவேன்.
இன்று அதற்காகக் கூசுகிறேன். ஆனால் அன்று அது சரியானது என எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே இன்று இணையத்தில் பிராமண வெறுப்பைக் கக்கும் பையன்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் இச்சூழலின் உருவாக்கங்கள். சுயமாகச் சிந்திக்கும் வாசிப்போ, அகம் விரியும் பண்பாட்டுக்கல்வியோ, உலகப்புரிதலோ அற்றவர்கள். அவ்வகையில் பரிதாபத்துக்குரியவர்கள்.
பிராமணர்கள் சந்திக்கும் அவமதிப்பு அலுவலகங்கள், கல்விநிலையங்களில் மட்டும் அல்ல. சமூகதளத்தில் கூடத்தான். சென்னை தவிர பிறநகரங்களில் இருந்து அவர்கள் மெல்லமெல்ல பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.என் நண்பனும் எழுத்தாளனுமான யுவன் சந்திரசேகர் 1990ல் கோயில்பட்டியில் இருந்த அவனே கட்டிய புதிய வீட்டை நஷ்டத்துக்கு விற்றுவிட்டு சென்னைக்குச் சென்றதைக் கண்டதும் இந்த வினாவை நான் அடைந்தேன்.இது ஏன் நிகழ்கிறது?
பின்னர் வெவ்வேறு தளங்களில் இதை கவனித்திருக்கிறேன். பிராமணர்கள் தமிழகத்தின் சிறிய ஊர்களில் வாழமுடியாது, இதுவே உண்மை. அவர்களின் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவார்கள். பிராமணர்களிடம் பேசும்போதே மெல்லிய கிண்டலுடன் அவர்களின் பெண்களைப்பற்றி குறிப்பிடுபவர்களை நான் கண்டிருக்கிறேன். தமிழகத்தின் தெருக்களில் பிராமணப்பெண் என்று அறியப்பட்ட ஒரு பெண் அவமதிப்பைச் சந்தித்துக்கொண்டுதான் நடமாட முடியும். இந்நிலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை.
தூத்துக்குடியில் இருந்த ஒரு பிராமண நண்பனிடம் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு இதைப்பற்றிப் பேசியபோது அவனது மனைவி அலுவலகம் செல்லும்போது அடையும் அவமதிப்பைப் பற்றிச் சொன்னான். அது அவனது கற்பனையே என நான் வாதிட்டேன். பந்தயம் வைத்துக்கொண்டேன். அவள் அலுவலகம் செல்லும்போது நான் கூடவே விலகிச் சென்றேன். நம்ப முடியவில்லை. இரண்டுகிலோமீட்டர் நடந்துசெல்லும் வழியில் மூன்றுபேர் அவளை ‘லட்டு’ என்று கூப்பிட்டு சீட்டியடித்தார்கள். வேறெந்த சாதிப்பெண்ணை அப்படிச் சொல்லியிருந்தாலும் செவிள் பிய்ந்திருக்கும்.
இப்போது என் மகள் பிளஸ்டூ படிக்கச் செல்லும்போது பிராமணநண்பர் ஒருவர் வந்து அவரது மகளை என் மகளுடன் எப்போதுமே இருக்கும்படி அனுமதிக்க முடியுமா என்று கோரினார். ”இவ நாயர் பொண்ணு. கூடவே ஒரு முஸ்லீம் பொண்ணும் நாடார் பொண்ணும் போகுது. அவங்களை பசங்க ஒண்ணும் சொல்லமாட்டாஙக. இவ மட்டும்போனா கிண்டல் பண்றா. நீங்க சொன்னா அவா இவளைச் சேத்துக்கிடுவா’என்றார்.
நான் சைதன்யாவிடம் சொன்னேன் “போப்பா. சரியான பயந்தாங்குளி அவ. போர்” என்றாள். நான் தமிழகத்தின் பெரியாரிய ஞானமரபை அவளுக்கு விரிவாகச் சொன்னேன். இந்தச் சமூகத்தின் இரு பெரும் பலியாடுகளில் ஒன்று பிராமணச் சமூகம் என்றேன். எந்நிலையிலும் தலித்துக்களிடம் இச்சமூகம் நடந்துகொள்வதை ஆதரிக்கலாகாது, அவர்களை அவமதிக்கும் ஒரு சொல் பிறக்கும் இடத்தில் கணநேரமும் இருக்கக் கூடாது என அவளிடம் சொல்லியிருந்தேன். அதையே இங்கும் கடைப்பிடிக்கவேண்டும் என்றேன். அவள் கண்களில் நீர் நிறைந்ததைக் கண்டேன்
மூன்று: பிராமணர்கள் வெளியேறுகிறார்களா?
ஆம், உண்மை. நானறிந்தே நாகர்கோயிலில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டது. கணிசமான குடியிருப்புகள் இன்றில்லை. இன்று என் வீட்டருகே இருக்கும் அக்ரஹாரம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டு பாழடைந்து வருகிறது. அவர்களில் இளையதலைமுறை இங்கு இருப்பதில்லை. இதேதான் என் மனைவியின் ஊரான தஞ்சையில்.
ஏன் தொடர்ந்து வெளியேறுகிறார்கள்? தமிழகத்தில் சென்னை [ஓரளவு திருச்சி] தவிர பிற இடங்களில் அவர்கள் எவ்வகையிலும் பாதுகாப்பற்றவர்களே. அவர்களின் நிலம் பறிக்கப்பட்டால், அவர்கள் தாக்கப்பட்டால் காவல்நிலையங்களுக்குச் செல்லமுடியாது. ஏனென்றால் ஓர் அரசியல்வாதியின் துணையின்றி இன்று எவரும் காவல் நிலையம் செல்லமுடியாது என்பதே நடைமுறை யதார்த்தம். அரசியல்என்பது முழுக்கமுழுக்க சாதிசார்ந்தது. பிராமணர்களுக்கு உதவ அவர்களுக்கான அரசியல்வாதி எவரும் தமிழக அரசியலில் இல்லை. தமிழகத்தில் சென்னைக்கு வெளியே பஞ்சாயத்து மெம்பராகக்கூட பிராமணர்கள் இல்லை
கோயில்பட்டி அருகே ஒரு பிராமண நண்பருக்கு காவல்நிலையம் செல்லவேண்டிய சிக்கல் வந்தபோது குலசேகரத்தில் இருந்து அவரது நண்பரான என் அண்ணா கிளம்பிச்செல்லவேண்டியிருந்ததை நினைவு கூர்கிறேன். நாடறிந்த ஒரு பிராமணரின் [நீங்களெல்லாம் அறிந்தவர்தான்] நிலம் மிகக்குறைந்த விலைக்கு அவரிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டபோது அவர் ஒன்றுமே செய்யமுடியாமல் கையறுநிலையில் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் முதலீடு செய்த மொத்தப்பணத்தையும் ஒருவர் ஏமாற்றிவிட்டு சவால் விட்டபோது அவர் தனிமையில் என்னிடம் குமுறியிருக்கிறார்.
இன்று தமிழகத்தில் சமூக வாழ்க்கை என்பது சாதி சார்ந்தது. சாதி சார்ந்தே நீதி. பிராமணர்கள் எண்ணிக்கையற்றவர்களாக இருக்கையில் நிர்க்கதியாக நிற்கிறார்கள். அவர்களை அவமதிப்பது சிறந்த சமூகசேவை என நம்பும் ஒரு சமூகம் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பத்ரி சேஷாத்ரி சொல்வது உண்மைதான்.
நான்கு : பிராமணர்களின் பண்பாட்டு அடையாளம்
பத்ரியின் கட்டுரையின் கடைசி வினா, பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைக்க விரும்புவதைப்பற்றியது. அதை பிராமண மேட்டிமைத்தனமாக முத்திரை குத்தி உடனடியாக எகிறிக்குதிக்கிறார்கள்.
இன்று, கவுண்டர், தேவர், நாடார் அத்தனைபேரும் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மைகள் சிலவற்றை அழியாமல் பேணிக்கொள்ள முயல்வதைக் காணலாம். வேறெந்த காலத்தை விடவும் குலதெய்வ வழிபாடுகளும் குலச்சடங்குமுறைகளும் இன்று புத்துயிர் கொள்கின்றன
காரணம் உலகமயமாக்கல். அது வேர்களற்றவர்களாக தங்களை ஆக்கிவிடும் என்ற அச்சம். இது உலகமெங்கும் உள்ள அச்சம். நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றம். உலகக்குடிமகனாக அடையாளமற்றவனாக ஆகிவிடவேண்டும் என்ற கனவு நவீனத்துவ காலகட்டத்திற்குரியது என்றால் அடையாளங்கள் கொண்ட , ஒரு குறிப்பிட்ட நுண்பண்பாட்டின் பகுதியாக ஆகிவிடவேண்டும் என்பது பின்நவீனத்துவ காலகட்டத்திற்குரிய மனநிலை எனலாம்.
அதில் பிராமணர்கள் மட்டும் ஈடுபடக்கூடாது என்று சொல்வது அராஜகம். பிராமணர்களுக்கு அவர்களுக்கே உரிய பண்பாடு ஒன்று உள்ளது என அவர்கள் உணர்ந்தால் அதை அவர்கள் பேணுவதில் என்ன பிழை? அது பிறரை பாதிக்காதவரை அதில் தவறே இல்லை.
உண்மையில் இன்று இடைநிலைச்சாதியினரின் இறுதிச்சடங்குகள், குலதெய்வப்பூசைகள், நீத்தார் சடங்குகள் போன்றவையே அடுத்தகட்டச் சாதிகளை அவமதிப்பவையாக உள்ளன. அவை மாற்றியமைக்கப்படவேண்டும். ஆனால் பெரியார் பிறந்த புனித மண்ணில் அதைப்பற்றி ஒரு இடைநிலைச்சாதி மனிதாபிமானியும் பேசப்போவதில்லை. தலித் நண்பர்கள் குமுறுவதையே காண்கிறேன்
ஆனால் பிராமணர்கள் வரலட்சுமி பூசை கொண்டாடினால் அதை அவமதிக்கலாம். வீட்டுக்குள் ராமநவமி கொண்டாடினால் கேலிச்செய்யலாம். இதுவே இங்குள்ள மனநிலை
1997 என நினைக்கிறேன். நான் தியாகராஜ உத்சவத்துக்காக திருவையாறு சென்றிருந்தேன். பெரும்பாலும் பிராமணர்கள் பங்குகொள்ளும் விழாவாக அது இருந்தது அப்போது. அங்கே தியாகராஜரின் பாடல்கள் மட்டுமே பாடப்படும். அவர் தெலுங்கில் மட்டுமே பாடியவர். அங்கே ம.க.இ.கவினர் வந்து “தமிழில் பாடு இல்லையேல் ஓடு’ என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
அன்றைய நிகழ்ச்சியை அவர்கள் சிதைத்தனர். அதிகபட்சம் முப்பதுபேர். போலீஸ் அவர்களை அழைத்து கொண்டு வெளியே விடும். உடனே வேறுவழியாக திரும்பி வந்தார்கள். அங்கிருந்த ஐந்தாயிரம் பேரும் பொறுமையாகக் காத்திருந்தனர். சிலர் கண்ணீர்விட்டனர்.
அதேநாளில் அன்று கன்னட வொக்கலிக மாநாடு கோவையில் நடந்தது. தேவேகௌடாவும் சரோஜாதேவியும் கலந்துகொண்டார்கள் என்று நினைவு. ஒரு ம.க.இ.கவினர் அங்கே செல்லவில்லை. ஏனென்று அவ்வியக்க நண்பரிடம் கேட்டேன். ‘அந்த அளவுக்கு எங்களுக்கு நம்பர் இல்ல தோழர்’ என்றார்
ஈரமண்ணை தோண்டும் எளிய அரசியல் மட்டும்தான் இது. எவ்வகையான உண்மையான சமூக மாற்றத்தையும் இது உருவாக்கப் போவதில்லை. தன் சாதியை பண்பாட்டு ரீதியாக மேலும் மேலும் தொகுத்துக்கொண்டே செல்பவர்கள் பிராமணச் சாதியின் பண்பாட்டு அடையாளங்களை மட்டும் ஆதிக்கச்சின்னங்கள் என்று காண்பதைப்போல கீழ்மை பிறிதில்லை. ’
ஆக, பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை நான்கு கருத்துக்களாகச் சுருக்கலாம் என்றால் அதில் முதல் கருத்தைத் தவிர அனைத்துமே நான் முழுமையாக உடன்படுபவை. ஒரு பிராமணர் தமிழகத்தில் அவர் அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு துரத்தப்படுவதாக உணர்வது அப்பட்டமான நடைமுறை உண்மை.
2. தமிழகப் பிராமண எதிர்ப்பரசியலின் அரசியல் பண்பாட்டுப் பின்னணி
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை மற்றும் அதற்கு எதிரான விவாதங்களின் பின்னணியில் தமிழகத்தின் பிராமண எதிர்ப்பின் பண்பாடு மற்றும் அரசியல் பின்னணியை சுருக்கமாக விளக்கலாமென எண்ணுகிறேன். ஒரே கட்டுரையில் இவை இருப்பது புதியவாசகர்களுக்கு உதவும்.
ஏனென்றால் கணிசமானவர்களுக்கு இவை ஏதும் தெரியாது. வெறுப்பரசியலை கக்குபவர்கள் எழுதும் எளிய ஃபேஸ்புக் குறிப்புகள் வழியாகவே அவர்கள் கருத்துக்களைக் கற்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நீண்ட கட்டுரையை வாசிக்கப்போவதில்லை என நான் அறிவேன். பத்துபக்கம் பொறுமையாக வாசிக்கக் கூடிய எவரும் அந்த வகையான கீழ்மை நிறைந்த வெறுப்புகளை கக்க மாட்டார்கள். இதை வாசிப்பவர்கள் அவர்களுக்கு எங்கேனும் பதில் சொல்ல இது உதவலாம்
ஒன்று: பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி
இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது? அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன?
சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் xவடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போராடி தோற்றபடியே இருந்தனர்
உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள் ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் இருக்காது
தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும் அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர். வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த பிராமணர்களுக்கும் வெள்ளையரின் நிலக்கிழார்களாக இருந்த வடுகர்களுக்கும் இடையே போட்டியும் கசப்பும் இருந்தது. ஈவேரா அவரது கட்டுரை ஒன்றில் காவலதிகாரியாக ‘நிமிர்வும் மிடுக்கும் கொண்ட’ நாயிடுவுக்குப் பதிலாக ’மீசையில்லாத பார்ப்பனன்’ வரும் நிலையை வெள்ளையன் உருவாக்கிவிட்டதை எண்ணி வருந்தி எழுதியிருக்கிறார். இதுதான் அக்காலத்தின் முக்கியமான முரண்.
இதில் மெல்லமெல்ல பிராமணர் கை ஓங்கி வந்தது. மறுபக்கம் ஜமீன்தாரிமுறை ஒழிப்பால் தெலுங்கர்களின் ஆதிக்கம் சரிந்தது. சுதந்திரப்போராட்டம் வந்தபோது பிராமணர் மேலும் அதிகாரம் பெற்றனர்.
அதற்கு எதிரான வடுகர்களின் கசப்பே திராவிட இயக்கம். அக்கசப்பை அவர்களிடம் பெருக்கி இயக்கம் கண்டவர்கள் மலபார் நாயர்கள். திராவிடர் என்ற சொல்லை ஈவேரா எடுத்துக்கொண்டது தெலுங்கர்களை உள்ளடக்கும்பொருட்டே. ஏனென்றால் அதற்கு முன்னரே தமிழர் என்ற சொல்லையே மிகப்பரவலாக அன்றைய தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் கையாண்டு வந்தது
வரதராஜுலு நாயிடு தலைமையில் ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள்கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது.
இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு
சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு ‘லீனா தெலுங்கரா” என்றேன். “இல்லைசார் தலித் என்றார்கள்” என்றார்.
‘அது அவர் உருவாக்கும் பிம்பம். தலித் இத்தனை பிராமண வெறுப்பைக் கக்கமாட்டார். கண்டிப்பாக இந்தம்மா தெலுங்குதான்’ என்றேன். அவர் அரைமணிநேரத்தில் கூப்பிட்டு “எப்டிசார் சொன்னீங்க? உண்மைதான்’ என்றார். ”தமிழகத்தின் பிராமணக்காழ்ப்பு அரசியலின் பின்புலத்தை அறிந்தால் இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை” என்றேன்.
இந்த அதிகார அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக தலித்துக்கள் இன்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த அரசியலை அவர்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிராமண வெறுப்பின் பண்பாட்டுப் பின்னணி
இந்தியாவில் பிராமண மறுப்ப்பு என்றும் இருக்கும். அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில் இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பது இயல்பானதே
பிராமணிய மதிப்பீடுகளை நிராகரிக்காமல் சென்ற நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை நாம் கடக்க முடியாது. கொள்கைத்தளத்தில் இது மிக இன்றியமையாதது. மிகத்தீவிரமாக, ஈவேராவை விட பலமடங்கு முழுமையுடன் அதைச் செய்தவர் நாராயணகுரு. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் அவ்வகையில் பிராமண எதிர்ப்பாளர்களே.
ஆனால் பிராமண எதிர்ப்பு வேறு பிராமணக் காழ்ப்பு வேறு. பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர்களால் முன்வைக்கப்பட்ட சென்றகால நிலப்பிரபுத்துவ யுக மதிப்பீடுகளை தர்க்கபூர்வமாக மறுத்து உடைப்பது. அவர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளைக் கடப்பது. அவர்களின் மனநிலைகளை நிராகரிப்பது. அதை மிகத்தீவிரமாக நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களில் காணலாம். என் முன்னுதாரணம் இந்த மரபே
பண்டித அயோத்திதாசரின் எழுத்துக்களில் உள்ளதும் பிராமண நிராகரிப்பே. இருவகையில் அது அவருக்கு முக்கியம். பிராமணர்களுக்கு நேர் எதிரான முனையில் நின்ற சாதி அவருடையது என்பதனால். அக்காலகட்டத்தைய சாதிய மதிப்பீடுகளை நிலைநிறுத்தியவர்கள் பிராமணர்கள் என்பதனால்.அம்பேத்கரின் பிராமண எதிர்ப்பும் அத்தகையதே
பிராமணக் காழ்ப்பு என்பது அது அல்ல.அது கண்மூடித்தனமான வசைபாடல். அவமதித்தல். சிறுமை செய்தல். அதற்கு வரலாற்றுணர்வோ வாசிப்போ சிந்தனையோ தேவையில்லை. .ஈவேரா முன்வைத்தது அதைத்தான். அதன் முதன்மை நோக்கம் தன் சொந்த சாதிப்பற்றை மறைப்பதுதான். நேற்றைய சாதியமைப்பில் நடுப்பகுதியில் இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிராமணனை கூண்டில் ஏற்றி தப்பிப்பது மட்டும்தான்.
இந்து மெய்ஞான மரபுக்குள்ளேயே பிராமண எதிர்ப்பு என்றும் இருந்தது. பிராமணர்கள் வைதிகமரபின் குரல்களாகவே பெரும்பாலும் ஒலித்தனர். அவைதிக மரபுகள் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டன. அது முற்றிலும் வேறு ஒரு தளம்
இன்றைய நிலையில் சாதிப்பற்று பற்றிய குற்றச்சாட்டுகளை பிராமணர்கள் மேல் சுமத்துபவர்கள் முதலில் தங்கள் சொந்தச் சாதிப்பற்றை அறிக்கையிடவேண்டும். சாதிக்கு எதிரான எந்தக் கலகமும் சொந்தச் சாதியின் சாதிவெறிக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.
இத்தனை சாதி எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கும் தமிழ்ச்சூழலில் இடைநிலைச்சாதியில் இருந்து அச்சாதியை விமர்சனம் செய்து ஒரு குரல் எழுவதை நம்மால் காணமுடிவதில்லை. ராஜாஜியை கிழித்து தோரணம் கட்டலாம். முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஒரு விமர்சனத்தை தமிழகத்தில் எழுதிவிடமுடியாது. இதுவே இங்குள்ள சாதி எதிர்ப்பின் உண்மையான நிலை
பாலைவன மக்கள் ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில் ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிடித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல் ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின் அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில் விடுவார்கள். அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள் ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்கள்
சாதிவெறியில் ஊறிய தமிழகம் அப்படிக் கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள். அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள்
மூன்று, பிராமண வெறுப்பு உருவாக்கும் இழப்பு
ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். ‘எனக்குச் சாதியில் நம்பிக்கை இல்லை, சாதிப்புத்தியில் நம்பிக்கை உண்டு’ என்று. சீண்டும் முறையில் அவர் அதைச் சொன்னாலும் யோசிக்கவேண்டிய ஓர் அம்சம் அதிலுண்டு
சாதி ஒழிக என்று நாத்தெறிக்க கோஷமிட்டு சாதிக்குள் சென்று ஒடுங்கும் கும்பலிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது. ஆனால் கொஞ்சமேனும் சமூகவியல் கோணத்தில் சமநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு இதைப் புரிந்துகொள்வதில் தடையிருக்காது
சாதியமைப்பு என்பது ஒருவகை உற்பத்தியமைப்பாக பல்லாயிரம் ஆண்டு இங்கே நீடித்த ஒன்று. அதன் விலக்குகள் ஏற்றத்தாழ்வுகளை ஒட்டி கீழ்மையான பல மனநிலைகளை அது உருவாக்கியிருக்கிறது. அதை வென்று மீண்டுதான் இந்தத் தலைமுறையில் நாம் நவீன மனிதனாக முடியும்
ஆனால் கூடவே அது பல சாதகமான அம்சங்களையும் உருவாக்கியிருக்கிறது. தொழில், வணிகம் ஆகியவற்றுக்குரிய மனநிலைகளை உருவாக்கி அதை குடும்பப்ப்பண்பாடாக மாற்றி நிலைநிறுத்துவதைச் சொல்லலாம். செட்டியாரோ,நாடாரோ, மரைக்காயரோ செய்யும் வணிகத்தை தேவரோ, வெள்ளாளரோ செய்ய முடிவதில்லை. ஆசாரிகள் இன்றும் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இத்திறன்கள் நவீன வாழ்க்கையிலும் பயனுள்ளவையே.
அத்தகைய சில பண்புகள் பிராமணர்களிடம் உண்டு. நீங்கள் தெருவில் நின்றுபேசும் அரசியல் விடலை அல்ல என்றால், ஏதேனும் துறையில் நிர்வாகவியல் பழக்கம் உடையவர் என்றால் நான் சொல்வதை புரிந்துகொள்வீர்கள். அதைப் பயன்படுத்தியும் கொள்வீர்கள்.
பிராமணர்களின் அந்தத் தனிப்பண்புகளே அவர்களை இன்றும் தேவையானவர்களாக ஆக்குகின்றன. நான் மூன்று பண்புநிலைகளைச் சொல்வேன். ஒன்று, கல்விமேல் அவர்களுக்கிருக்கும் ஈடுபாடும் அதற்குரிய மனநிலையும். இரண்டு, வன்முறையற்ற தன்மை. மூன்று, அடிப்படைக் குடிமைப்பயிற்சி
நீண்டகாலமாகவே கல்வியை தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் என்பதனால் பிராமணர்களுக்குக் கல்விகற்பதில் ஊக்கம் உள்ளது. அவர்களின் குடும்பச்சூழல் அதற்குச் சாதகமானதாக உள்ளது. கற்பதையும் கற்பிப்பதையும் அவர்கள் தங்களுக்குரிய தொழிலாக கொண்டிருந்தமையால் உருவான இயல்பான மனநிலை இது
இந்தக்காரணத்தால் பிராமணர்கள் இயல்பாகவே மிகச்சிறந்த ஆசிரியர்கள் என்பதைக் காணலாம். சென்றதலைமுறை வரை நம் ஆசிரியர்களில் கணிசமானவர்கள் பிராமணர்களாக இருந்தனர். எந்தச் சாதியினராக இருந்தாலும் சென்றதலைமுறையினரின் உள்ளங்களில் மகத்தான பிராமண ஆசிரியர்களின் நினைவுகள் இருப்பதைக் காணலாம். .
சமீபத்தில் ஊட்டி கருத்தரங்கில் நாஞ்சில்நாடன் அவரது கம்பராமாயணக் கல்வி பற்றிச் சொல்லும்போது கைகூப்பி கண்ணீருடன் அவருக்கு கம்பராமாயணம் பயிற்றுவித்த ரா.அ.பத்மநாபன் அவர்களை நினைவுகூர்ந்தார். அந்த மனநிலையை மீண்டும் மீண்டும் காண்கிறேன்.
மோசமான பிராமண ஆசிரியர் விதிவிலக்கே. ஏனென்றால் இளமையிலேயே அந்தத் தொழிலில் பெருவிருப்பம் ஏற்படும்படியாக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு நிறைவை அளிக்கிறது. வணிகப்பின்புலம் அல்லது வேளாண்மைப்பின்புலம் கொண்ட ஒருவர் அவரது தனிப்பட்ட குணநலனால் அந்த விருப்பை அடைந்தால்தான் உண்டு.
பிராமணர்கள் இன்று கல்வித்துறையில் இருந்து விலகிவிட்டனர். முக்கியமான காரணம், நம் கல்விநிலையங்களில் அவர்கள் இன்று பணியாற்ற முடியாது. அந்நிறுவனங்களின் ஊழியர் நடுவே தனிமைப்படுத்தப்பட்டு அவமதிப்புக்கு உள்ளாவார்கள். மாணவர்கள் நடுவே சமூகத்திலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் பிராமணக்காழ்ப்பு வேரூன்றியிருப்பதனால் வகுப்புகளில் ஆசிரியருக்கான மதிப்பை பிராமணர்கள் இன்று பெறமுடியாது
இது நம் சமூகம் நெடுங்காலமாக உருவாக்கி எடுத்த ஓர் அமைப்பின் பயனை நாம் வேண்டுமென்றே இழப்பதாகும். உண்மையிலேயே அவர்கள் விலகியதன் இழப்பு நம் கல்வியமைப்பில் இன்று உள்ளது என்றே நினைக்கிறேன்.
நம் கிராமங்களில் நெடுங்காலமாக பிராமணர்கள் ஒரு சமரசப்படுத்தும் புள்ளியாக இருந்துள்ளனர். கிராமங்களின் உயவுப்பொருளே அவர்கள்தான் என்று ஒருமுறை கந்தர்வன் சொன்னதை நினைவுறுகிறேன். இன்றுகூட பெருநிறுவனங்களில் அவர்களே சமரசத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் உரியவர்கள். எந்த அமைப்பிலும் பிராமணர்கள் ஒரு முக்கியமான பங்கு வகிக்க முடியும்.
இயல்பாக அவர்கள் வணிகர்கள் அல்ல. போராடும் குணமுடையவர்கள் அல்ல. துணிந்து முடிவெடுக்கமாட்டார்கள். ஆகவே நிறுவனங்களில் அவர்கள் தலைமைப்பொறுப்பை வகிப்பது இயல்பாக நிகழாது. ஆனால் அவர்கள் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள். மிகச்சிறந்த ஆலோசனையாளர்கள்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதிகளிடம், குறிப்பாக ஆதிக்க சாதிகளிடம் உள்ள வழக்கம் சட்டென்று எகிறிப்பேசிவிடுவது. [ வாழ்நாள் முழுக்க அதைக் களைய போராடிவருபவன் நான்] பிராமணர்களிடம் அவ்வழக்கமே அனேகமாக இல்லை என்பதைக் காணலாம். அவர்களின் வன்முறையற்ற தன்மை அவர்களுக்கு அளிக்கும் சிறப்பியல்பு இது. இதனாலேயே அவர்கள் மிகச்சிறந்த சமரசக்காரர்களாக விளங்குகிறார்கள்
பிராமணர்களில் பலர் அவர்கள் மட்டுமே இந்தியப்பண்பாட்டை உருவாக்கியவர்கள், அதன் சாதனைகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அது முற்றிலும் அபத்தமானது. இந்தியமெய்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவு. இந்தியக் கலைகளில் அவர்களின் பங்களிப்பு ஒப்புநோக்க மேலும் குறைவே. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு மிகக்குறைவான இடமே உள்ளது. தத்துவத்தில்தான் அவர்களின் பங்களிப்பு அதிகம்.அவர்கள் இந்தியாவின் முதன்மைக் கல்வியாளர் சமூகமாக இருந்தார்கள் என்பதன் விளைவு இது.
அடிப்படையில் பிராமணர்களுடையது தொகுக்கும் புத்தி. ஆகவே இலக்கண ஆசிரியர்களாகவே சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். aggressiveness எனப்படும் அகவேகம் இல்லாத காரணத்தால் முதன்மைப் பெரும்படைப்புகளை எழுத அவர்களால் சாதாரணமாக முடிந்ததில்லை. அவற்றை போர்ச்சாதிகளும் அடித்தளச் சாதிகளுமே சாதித்தன. வான்மீகியும், வியாசனும், குணாத்யனும், பாசனும், கம்பனும் காளிதாசனும், இளங்கொவும், வள்ளுவனும் பிறரே
இதை ஏன் சொல்லவருகிறேன் என்றால் பிராமணர்களின் பங்களிப்பு என்று சொன்னதுமே ஒரு பெரும் கும்பல் கிளம்பி “அப்படின்னா மத்தவனெல்லாம் முட்டாளா?” என்ற கேள்வியை எழுப்புவதே வழக்கமாக உள்ளது. பிராமணர்கள் இந்திய ஞான மரபின், கலைமரபின்,அறிவியல் மரபின் மையப்ப்பங்களிப்பாளர்கள் அல்ல. அவர்கள் அதை தொகுத்தவர்கள், கற்பித்தவர்கள், பேணுபவர்கள். அந்தப்பங்களிப்பு மிகமுக்கியமானது.
பிராமணக்காழ்ப்பு காரணமாக நம் சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியின் பங்களிப்பை நாம் புறக்கணிக்கிறோம். அவர்கள் இங்கிருந்து சென்று வெளிநாடுகளில் குடியேறுவதென்பது நம் சமூகத்திற்குப் பேரிழப்பே. இருபது வருடங்களில் இங்குள்ள ஆசாரிகள் அனைவரும் அமெரிக்கா சென்றுவிட்டார்கள் என்றால் அடுத்த இருபதாண்டுக்கால்த்தில் அதன் விளைவுகளை நாம் பொருளியல் தளத்திலேயே காண்போம். அதைப்போலத்தான் இதுவும்
நான்கு: பிராமணர்களும் சாதிமுறையும்
இந்த வெறுப்பை பிராமணர்கள் மேல் பிறர் மேல் காட்ட என்ன காரணம் சொல்லப்படுகிறது? அவர்கள் சாதிமேட்டிமை கொண்டவர்கள். சாதிமுறையின் லாபங்களை அனுபவித்தவர்கள்.சாதியை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அவமதிப்பது ‘சாமிக்கு நேத்திக்கடன்’. [ராமசாமியும் சாமியே]
சாதியைப்பற்றி அம்பேத்கர் முதல் கோசாம்பி வரை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர். இன்று பக்கம் பக்கமாக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கின்றன.சாதியை பிராமணன் உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச் சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான் என்பதுபோன்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்படி ஒருவர் சொல்கிறார் என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம் மட்டுமே
சாதிமுறை இங்கிருந்த பழங்குடிச் சமூக அமைப்பில் இருந்து மெல்லமெல்ல உருவாகி வந்தது. சாதிகள் என்பவை பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பு. ஆகவே தான் ஒவ்வொரு சாதியும் உபசாதிகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்துகொண்டே செல்கிறது. இச்சாதிபேதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம் கட்டிஎழுப்பப்பட்டது. அந்தச் சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது
அந்த நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின் லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்றாகவேண்டும்.
ஆனால் அவர்கள் மட்டும்தான் அதற்குப் பொறுப்பா என்ன? இங்கே நாடாண்டவர்கள், நிலத்தை உரிமைகொண்டவர்கள், வணிகம் செய்து பொருள்குவித்தவர்கள் எவ்வகையிலும்பொறுப்பில்லையா? அவர்களெல்லாம் பிராமணர்களை கைகாட்டி தப்பித்துக்கொள்லலாமா?
இங்குள்ள சாதிமுறை நேற்றைய சமூகப் – பொருளியல் அமைப்பின் உருவாக்கம். இன்று அது சமூக ரீதியாக்ப் பொருளிழந்துவிட்டது.அதன் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றுக்கு மட்டுமே இன்று ஏதேனும் மதிப்பு உள்ளது. அது நேற்றைய யதார்த்தம். நேற்றை இன்று சுமந்தலையவேண்டியதில்லை. நவீன மனிதன் அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தாகவேண்டும். அந்த மனநிலைகளை ஒவ்வொருவரும் உதறியாகவேண்டும்
அந்த அமைப்பு கொடுமைகளுக்காக நாம் இன்று குற்றவுணர்வு கொண்டாகவேண்டும். எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களைவிடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாகவேண்டிய குற்றவுணர்ச்சி இது. இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மனநிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும்.
இதை சிலநாட்கள் முன் எழுதியபோது எனக்கு வந்த கடிதங்கள் என்னை பிராமணன் என வசைபாடின. அதாவது இங்குள்ள பிராமணரல்லாத உயர்சாதிகள் இடைநிலைச் சாதிகள் எவ்வகையிலும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையத் தயாராக இல்லை. அப்பொறுப்பை ஏற்க அவர்களுக்கு மனமில்லை.
ஏனென்றால் உள்ளூர அவர்கள் அச்சாதிய மனநிலைகளை தக்கவைக்க விழைகிறார்கள். தன் மண்ணில் இன்னமும் இரட்டைக்குவளை இருப்பதை கண்டு கண்மூடிக்கொள்ளும் கவுண்டரும் நாயக்கரும் நாயிடுவும் ‘பெரியார் மண்ணுடா!’ என்று சொல்லி பிராமணன் மேல் பாய்வதைப்போல பச்சை அயோக்கியத்தனம் வேறில்லை. அதைத்தான் காண்கிறோம்.
‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா’ என்று ஒருவர் கேட்டிருந்தார். ”இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை’ என்று நான் பதில் சொன்னேன்.
பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது. நான் கண்ட பிராமணர்களில் பாதிப்பேர் ஓட்டல்களில் இரவுபகலாக சமையல்வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல்கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான். ஆனால் வியர்த்து ஒழுக வெலைசெய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை.
பிராமணக் காழ்ப்பை சாதிய எதிர்ப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துவது இங்குள்ள இடைநிலைச்சாதியின் சாதிவெறியர்கள் கொள்ளும் ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. ஒவ்வொருவருக்கு உள்ளூர உண்மை தெரியும்.
என் வெள்ளையானை நாவல் வெளிவந்தபோது அதில் தலித்துக்கள் மேல் காழ்ப்பு கொண்ட பிராமணர் ஒருவர் கதாபாத்திரமாக வருவதைக் க்ண்டு கொதித்துப்போய் பிராமணர்கள் எழுதியிருந்தனர். அந்நாவல் முன்வைக்கும் அடிப்படை அறத்தை அவர்கள் உணரத் தயாராக இல்லை. பிராமணர்கள் சென்ற நூற்றாண்டில் தலித்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்கள் என்ற எளிய வரலாற்றைக்கூட அவர்களின் சாதிப்பற்று மறைத்தது
ஆனால் அது இயல்பானதுதான். அந்நாவலில் சென்னையின் தெலுங்கு மக்களின் சாதிவெறி சுட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதைவிட அதிகமாகவே தெலுங்கு நண்பர்கள் சினம் கொண்டார்கள். நட்பைக்கூட சிலர் முறித்துக்கொண்டார்கள். இங்குள்ள ஒவ்வொரு சாதியும் அதைத்தான் செய்கின்றன.
சற்றேனும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தவர்கள் உண்மையில் பிராமணர்களே. பிராமண சாதியின் சாதியமனநிலைகளில் இருந்து வெளிவருவதற்கான உண்மையான முயற்சியை எடுத்தவர்கள் அவர்கள். இங்குள்ள இடதுசாரி அமைப்புகளெல்லாமே அவர்களை அடித்தளமாகக் கொண்டவைதான். பிராமணவெறுப்பைக் கக்கும் மா.லெ இயக்கங்கள்கூட
ஆனால் சென்ற சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் பிராமணர்களின் மனநிலை மாறியிருக்கிறது. அவர்கள் சென்றகாலத்தில் சாதியத்தை நிலைநிறுத்தியமைக்குப் பொறுப்பேற்று வெட்கும் நிலையில் இன்றில்லை. ஏனென்றால் அதேயளவு பொறுப்பேற்கவேண்டிய பிறசாதியினர் எல்லாம் சாதிப்பெருமை பேசி ‘ஆண்டபரம்பரைடா!’ என்று மார்தட்டி அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொத்தச் சாதிமுறைக்கும் பிராமணர்களை பொறுப்பாக்கி ஒவ்வொரு நாளும் வசைபாடுகிறார்கள். மண்ணில் இருந்து துரத்துகிறார்கள்
இன்று பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்களாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கியதன் குற்றவுணர்ச்சி மறைந்து ஒடுக்கப்படுவதன் ஆற்றாமையும் சினமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. சவால்விடுவதுபோல சாதிச்சங்கங்களை அமைக்கிறார்கள். ‘பிராமண சங்க அடலேறே’ என்று ஒருவருக்கு வினைல் போர்டு வைத்திருப்பதை பார்வதிபுரத்தில் பார்த்தேன்
இங்கு நிகழும் கீழ்த்தரமான வெறுப்பரசியல் அவர்களை எதிர்ப்பரசியலுக்குக் கொண்டுசெல்கிறது. மெல்லமெல்ல அவர்களையும் வெறுப்பால் நிறைக்கிறது.
முடிவாக….
பேரா ராஜ் கௌதமனின் சுயசரிதை நாவலான காலச்சுமை [சிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம்பகுதி] ஒரு முக்கியமான நிகழவை ஆவணப்படுத்துகிறது. அவரது மகள் கௌரி பிளஸ் டூவில் மாநில அளவில் வெற்றிபெறுகிறாள். அவரது கல்லூரியிலும் அவர் வாழும் தெருவிலும் வாழும் இடைநிலைச்சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட அவ்வெற்றியை அறிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் தலித். அவரை அறிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் அதைப்பற்றி அவரே பேசும்போதுகூட இயல்பாகத் தவிர்த்துச்செல்கிறார்கள்
ஆனால் அவரை அறிந்திராத பிராமணர்கள் அவர் இல்லம் தேடி வருகிறார்கள். அவளைக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகளும் பரிசுகளும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். இதை எழுதிச்செல்லும் ராஜ் கௌதமன் அவர்களின் அந்த மகிழ்ச்சி தனிமனிதர்கள் சார்ந்தது அல்ல, கல்வி மீதான அவர்களின் வழிபாட்டுமனநிலையைச் சார்ந்தது என்கிறார்
ஒருவேளை தமிழகத்திற்கு பிராமணர்கள் அளிக்கும் முதன்மையான கொடையே அதுதான். கல்விமேல், கலைகள் மேல் அவர்களிடமிருக்கும் பற்றே அவர்களை இச்சமூகத்திற்குத் தேவையானவர்களாக ஆக்குகிறது. அவர்களிடமிருந்த பண்பாடும் கலைகளும் மட்டுமே சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் அழியாமல் நீடித்தன என்பதை நினைவுறுங்கள். பாட்டோ பரதமோ அவர்களே அதைப் பேணிக்கொண்டிருக்கிறார்கள்.
சைவசித்தாந்தம் அறிந்த வேளாளர்கள் இன்று எத்தனைபேர்? திருமுறைகளில் விற்பன்னர்களான ஓதுவார்கள் எங்கே? ஆனால் பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பண்பாடுகள் இன்றும் நீடிக்கின்றன.அவர்கள்தான் நாம் போற்றும் தமிழ்ச்செவ்வியலையே நமக்கு மீட்டளித்த முன்னோடிகள். நாம் பேசும் தமிழ்வரலாற்றை ஆய்வுசெய்து வகுத்தளித்தவர்கள்.அவர்களின் அறிவுக்கொடை இல்லாத ஒரு துறைகூட இன்றில்லை.
பிராமணவெறுப்பு அனைத்துவகையிலும் இச்சமூகத்திற்குத் தீங்கானது என்றே நினைக்கிறேன். இன்று, நம் சமூகம் நேற்றுவரை அவர்களுக்கு அளித்த முதன்மை இடத்தை அளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் எவரும் கீழல்ல என்றால் எவரும் மேலல்ல என்பதும் உண்மையே. அவர்களை வழிபடவேண்டியதில்லை. கொண்டாடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை வெறுத்து அவமதித்துத் துரத்துவதும் வேண்டியதில்லை
இந்தியச் சமூகத்தின் ஆதிக்கக்கருத்தியல் என்பது நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல உருவாகி வந்தது. அது சாதியம் சார்ந்தது. அதை எதிர்ப்பது என்பது நவீன சமூகம் நோக்கிய வளர்ச்சியில் இன்றியமையாதது. அதை நிலைநாட்டிய பிராமணர்களை, பிராமணிய சிந்தனைகளை எதிர்ப்பதும் இயல்பானதே. ஆனால் அதை காழ்ப்பின்றி முற்றிலும் அறிவுத்தளத்தில் நிகழ்த்த முடியும் வெல்லமுடியும் என்பதையே நாராயணகுருவின் இயக்கம் காட்டுகிறது
தமிழர்நாகரீகம் என்கிறோம். பண்பாடு என்கிறோம். நாம் ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுப்பின் கீழ்மை நம் பண்பாட்டின் மாபெரும் இழுக்குகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும். நவீன மனிதன் ஒருநிலையிலும் ஒரு மக்கள்திரளை ஒட்டுமொத்தமாக வெறுக்கமாட்டான். ஒருவரையும் அவர்களின் அடையாளம் காரணமாக வெறுக்கமாட்டான். கீழ்த்தர இனவெறி, சாதிவெறிதான் இது. இதையே முற்போக்கு என்று எண்ணிக்கொள்ள நம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள்
பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.
வெறுப்பை அன்றி எதையுமே உணரமுடியாத மனங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும் கொண்டவர்களை நோக்கியே பேசுகிறேன். இக்கீழ்மையை விட்டுவெளியேறாதவரை நாம் நாகரீக மனிதர்களே அல்ல.
இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும்.
சிங்காரவேலு அவர்களின் நடத்தை புரிந்துகொள்ளத்தக்கதே. அது முதலியார்கள், வேளாளர், செட்டியார்களின் அன்றைய மனநிலை.அந்த மனநிலை அதே அளவுக்குக் கேரள நாயர்களிடமும் இருந்தது, என் குடும்பத்திலும்.
காரணம் அவர்கள் நிலப்பிரபுத்துவ சாதி. ஒரு காலகட்டம் வரை பிராமணர்கள் சில பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் இந்த பிராமணரல்லா உயர்ச்சாதிளின் ஆதிக்கத்துக்குக் கீழேதான் இருந்தார்கள். அறிவார்ந்த , மதம் சார்ந்த ஓர் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தாலும் நேரடியான நில, பொருளியல் அதிகாரம் இவர்களிடமே இருந்தது
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பிராமணர் இவர்களுக்கு மேலே சென்று அதிகாரத்தைக் கையாள்பவர்களாக ஆனார்கள். கணிசமான பிராமணர்கள் அக்ரஹாரத்தின் கொடுமையான வறுமையில் இருந்து ஆங்கிலக் கல்வி மூலம் மேலே சென்றிருப்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டால் அறியலாம்.
ஆனால் நிலப்பிரபுத்துவசாதிகள் நிலத்தை நிரந்தரச் சொத்து என நினைத்தன. வேலைசெய்வதைக் கௌரவப்பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டன. ஆனால் உருவாகிவந்த முதலாளித்துவ அமைப்பு அளித்த வாய்ப்புகள் காரணமாகக் குறைந்த கூலிக்கு அடிமைச்சாதியினரின் உடலுழைப்பு கிடைப்பது தடைப்பட்டதனால் வேளாண்மை நஷ்டமாக ஆரம்பித்தது. இது,நிலப்பிரபுத்துவ சாதிகளை பொருளியல் ரீதியாக கீழே தள்ளியது. இவ்வீழ்ச்சி ஒரு ஐம்பது வருடங்களில் நடந்திருப்பதைக் கணிசமான வேளாள-முதலியார் குடும்பங்களில் காணலாம். என் குடும்பமே ஒரு அரிய ஆவணம்.
கூடவே இரு உலகப்போர்களில் பிரிட்டன் விதித்த கடுமையான வரிகளும் அவர்களை அழித்தன. அந்த வரிகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதனால் கசப்பு இன்னும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகப் பிராமணர்களின் எழுச்சி இச்சாதியினரை எரிச்சலூட்டியது. தமிழகத்திலும் கேரளத்திலும் உருவான பிராமணவெறுப்பின் ஊற்றுமுகம் இதுவே. பின்னர் வரலாற்றிலும் அதற்கான காரணங்களைத் தோண்டி கண்டுபிடித்தார்கள்.
இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாத உயர்சாதியினரின் வெறுப்பு உருவம் கொண்டு நாற்பதுகளில் உச்சம்கொண்டிருப்பதை காணலாம். இந்தபரிணாமத்தின் தொடக்கம் நிகழ்ந்தது சிங்காரவேலரின் காலகட்டதில் என்றால் உச்சம் நிகழ்ந்தது ஈவேராவின் காலகட்டத்தில். ஒரே சரடின் இருநுனிகள் அவர்கள். சிங்காரவேலரும் ஈவேராவும் மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்படுவதைப்பற்றித்தான் குமுறியிருக்கிறார்கள்.
மறுபக்கம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதியதாக மேலெழுந்து வந்த பிராமணர்கள் தங்களைத் தனிமையாகவும் மேலானவர்க்கமாகவும் காட்டிக்கொள்ளவும் முயன்றனர். தங்களைத் தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு சம்ஸ்கிருதப் பண்பாட்டைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்வது அவர்களின் மோஸ்தராகியது. அதற்கேற்ப அக்காலகட்டத்தில் இந்தியவியல் சம்ஸ்கிருதத்தின் தொன்மையையும் சம்ஸ்கிருத நூல்களின் தத்துவ, இலக்கிய ஆழத்தையும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தபடி இருந்தது. ஆங்கிலம் வழியாக அவற்றை மேலோட்டமாக அறிந்த பிராமணர்கள் அம்மரபை அவர்களுடையதெனச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்.
அத்துடன் அன்றைய சமூகச்சூழலில் பதவியையும் செல்வத்தையும் அடைந்த படித்த பிராமணர்களில் கணிசமானவர்கள் மிகமிகப்பிற்போக்கான சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தக்கூடியவர்களாக, பிறசாதியினரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களாக, அதற்கு முடிந்தவரை தடைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள். அக்கால சுதேசமித்திரன் போன்ற இதழ்களைக் கண்டாலே இதை உணரலாம். இன்று அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டும் கருத்துவெளிப்பாடுகளைக் கொண்ட கடிதங்கள் அவை.
இன்று இத்தனை முன்னேற்றத்துக்குப் பின்னரும்கூட ஒரு சாராரில் அந்த மேட்டிமைநோக்கும் காழ்ப்பும் நீடிப்பதை உங்கள் தமிழ்ஹிந்து இணைய இதழின் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தொடர்ந்து காணத்தானே செய்கிறோம். படித்த, இலக்கியம் எழுதும் இளைஞர்களில்கூட ஒருசாராரிடம் அந்த மனநிலை வலுவாக நீடிப்பதை நான் காண்கிறேன்.
தமிழக முற்போக்குசிந்தனைகளில் பிராமணர்களின் இடம் முக்கியமானது. ஆனால் அவாறு உருவாகிவந்த முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களுக்கு முதல்பெரும் தடையாக இருந்தவர்கள் இந்தப் பிற்போக்கு பிராமணச்சமூகத்தினரே. அன்று பொதுவெளிக்குக் கல்வி,வணிகம் மூலம் எழுந்து வந்த எல்லா சாதியினரும் பிராமணர்களின் நேரடி அடக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். அதற்கான கசப்புகள் அவர்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தன.
ஆகவே பிராமண வெறுப்புடன் தங்கள் இடத்தைத் தேடிய வேளாளர்களும் முதலியார்களும் செட்டியார்களும் ஒரு தமிழ்த்தொன்மையைக் கட்டமைத்தனர். சைவ மீட்பு இயக்கம் உருவானது. அது சம்ஸ்கிருத சார்பற்ற தூய தென்னக மதம் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. அது பிஷப் கால்டுவெல் உருவாக்கிய ஆரிய-திராவிட இனவாதக் கொள்கையுடன் முடிச்சிடப்பட்டது. அதற்கு,இந்தியவியல் கண்டுவெளியிட்ட நூல்களும் ஏடுகளில் இருந்து அச்சிலேற்றப்பட்ட நூல்களும் உதவின.
[ஆச்சாரிய டி டி கோஸாம்பி ]
இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன. அதற்கான பின்னணியையே மேலே சொன்னேன்.ஒருபக்கம் அவரது பின்னணி மறுபக்கம் அன்றைய பிராமணர்களின் மனநிலை
எல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்,அன்று உருவாகிவந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் கையகப்படுத்தி,அவற்றையும் தங்கள் பழமைவாத நோக்குகளாலும் குறுகிய இனக்குழு அரசியலாலும் நிரப்பினர் என்பதே உண்மை. தமிழக காங்கிரஸ், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை, ஆரியசமாஜம் ஆகியவற்றின் வரலாற்றில் பிராமணர்களின் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்திருப்பதை காணலாம். முதலில் இலட்சிவாதிகளான அர்ப்பணிப்புள்ள பிராமணர்களே உள்ளே வந்து அவ்வியக்கத்தின் முன்னோடிகளாகிறார்கள். ஆனால் அவர்களை முன்னால் நிறுத்திக் குறுகிய சாதியவாதிகள் பின்னர் அவ்வியக்கத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என்பது நடைமுறை உண்மை
சிங்காரவேலருக்கு அவரது சாதிச்சூழல் சார்ந்தும், அன்றைய சமூக அதிகாரப்போட்டி சார்ந்தும் பிராமணர் மேல் கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். அத்துடன் அன்று சிறிய அளவில் உருவாகி வந்த நவபௌத்த இயக்கங்களையும் பிராமணர்கள் கைப்பற்றித் தங்கள் குறுங்குழு அரசியலுக்குள் தேக்கிவிடுவார்களோ என அவர் அஞ்சியிருக்கலாம். கோஸாம்பியை அவர் ஐயப்பட்டது அதனால்தான் என நான் நினைக்கிறேன்.
கோஸாம்பி நவபௌத்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வருத்தமானதே. ஆனால் தமிழக ராமகிருஷ்ண இயக்கத்தின் உச்சகட்ட ஆளுமையான சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண மடத்தில் நீடிக்க முடியாமல் பிராமண அரசியலால் வெளியேற்றப்பட்டார் என்ற வரலாற்று உண்மையையும் நாம் பார்க்கவேண்டும். நித்ய சைதன்ய யதி தானும் பிராமண நிர்வாக அமைப்பால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.
சித்பவானந்தர்
ஆக, இந்த விஷயத்தை அக்காலகட்டத்தின் சமூக அதிகாரத்துக்கான போட்டியின் ஒரு விளைவாகவே காணவேண்டும். சிங்காரவேலரைத் தமிழக பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் முன்னோடியாகச் சொல்லலாம்.பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதியினரின் ஒருங்கிணைவு பிராமணரல்லாதோர் இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என பல வடிவங்களைப் பெற்றது. அது முதலியார்களும் நாயர்களும் நாயுடுகளும் சேர்ந்து உருவாக்கிய சுயமேம்பாட்டு இயக்கமே. பின்னர் அது சுயமரியாதை இயக்கமாகவும் திராவிட இயக்கமாகவும் பரிணாமம் கொண்டது.
திராவிட இயக்கம் ஓர் உத்தியாகப் பிற்படுத்தப்பட்டோர் அரசியலைக் கையில் எடுத்தது. அதன் சைவ- உயர்சாதி அரசியல் கோட்பாட்டைத் தக்கவைத்தபடியே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்குள் சென்று இன்றைய வடிவை அடைந்தது.
கேரளத்தில் இருந்த பிராமண வெறுப்பு,மன்னத்து பத்மநாபன் போன்ற காந்திய சீர்திருத்தவாதி சாதிச்சீர்திருத்தத்தில் ஈடுபட்டு நாயர் சாதி பொருளியல் வெற்றியை அடைந்ததும் காணாமலாகியது. நாராயணகுரு மூலம் ஈழவ சாதி பொருளியல் வெற்றியும் சமூக வெற்றியும் அடைந்தபோது முழுமையாக மறைந்தது.அதுவே இயல்பான போக்காக இருக்கவேண்டும். தமிழகத்தில் அந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட திராவிட இயக்கம் அதை ஒரு வசதியான கருத்தியலாக நீட்டித்துக்கொண்டிருக்கிறது.
இன்று அந்தக்கருத்தியல்,பிராமணர்களைப் பொது எதிரியாகக் கட்டமைத்துக் காட்டி தலித்துக்களைத் தங்களுக்குக் கீழே வைத்துக்கொள்ளப் பிற்படுத்தப்பட்டோர் செய்யும் ஓர் உத்தியாகச் செயல்பட்டுவருகிறது. அந்தத் தேவை இருக்கும் வரை அது நீடிக்கும். இன்னொருபக்கம் அதையே காரணமாகக் காட்டித் தங்களை ‘அவமதிக்கப்பட்டோர்’ என்று சித்தரித்துக்கொண்டு பிராமணர்களில் ஒருசாரார் தங்கள் பழமைவாத வெறுப்புமனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் அது காரணமாகிறது.
வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, காழ்ப்புகளும் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாமல், நிதானமாகப் பார்க்கவேண்டிய ஒரு தளம் இது.
நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.
பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.
ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்ச்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது
இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.
இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.
இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.
ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்ச்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது
இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.
இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.
இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது
சம்ஸ்கிருதம் சார்ந்து நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. 1. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். 2. அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
3. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட 4. அதைஇப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள். 5. சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.
இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன
1. சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
2. சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்குமுன்னுரிமை உள்ளமொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே
இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சம்ஸ்மிருதம் தமிழுக்குக் கடன்பட்டது.
நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் முன்னுரிமை உள்ளது.தெய்வத்திற்கு அடுத்தபடியாக (ஏன் சில சமயங்களில் மேலாகவே ) போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் அந்தணர்களே அல்ல என்பது தாங்களும் அறிந்ததே.இந்தக்கால சூழ்நிலையில், தாங்கள் தான் பெரிய அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு இந்து மதத்தை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில்,நீங்கள் ஒருவர் மட்டும் தனி ஆளாக நின்று விளக்கம் அளிப்பதற்கு உங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்றி கூறுகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி என்றும்.
https://www.jeyamohan.in/22674#.WyiBxVUzZdg
சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நான் சொல்கிற இந்தக் கருத்துகளை மறுத்துச் சொல்கிற தெளிவு யாருக்காவது உண்டா? உண்டு என்றால் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.(http://www.thamilworld.com/forum/index.php?showtopic=595)
சம்ஸ்கிருதம் பற்பல நூற்றாண்டுகளாக எவராலும் பேசபப்டவில்லை. எப்போதும் அது அறிவுத்துறைக்குள்ள இணைப்புமொழியாகவே இருந்து வந்துள்ளது. அதன் பெயரே அதைத்தான் சுட்டுகிறது. அதாவது அது சம்ஸ்கிருதமாக உருவானபோது எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் உள்ளது. இதில் சாவு எங்கே வந்தது?
செத்தமொழி (dead language) என்றால் என்ன? அழிந்த அல்லது காணாமல் போன மொழி (extinct language) என்றால் என்ன? என்று தனித்தனியாக வரையறை சொல்கிறார்கள். செத்தமொழி என்றால் என்ன என்று விளக்கும்போது, அவர்கள் இலத்தீனோடு, சமசுகிருதத்தையும் எடுத்துக்காட்டாகக் காண்பிக்கின்றனர். அழிந்தமொழிக்கு, நிறைய பழங்காலத்து மொழிகளைக் காண்பிக்கின்றனர். (எ-டு ஆங்கிலோ நார்மன்)
செத்தமொழி இன்றும் எந்த வகையிலாவது இருக்கும். ஆனால், அழிந்த மொழி இருக்காது.
பேச்சுமொழியாக இருந்தால்தான் செத்தமொழியா இல்லையா எனச்சொல்வோம் என்றும், உரையாடலுக்குகந்த மொழியாக இல்லாமல், எழுதுவதற்குமட்டும் இருந்தால்தான், செத்தமொழியா இல்லையா என்று சொல்வோம் என்றும் மொழியிய்லாளர்கள் தங்களுக்குள் சட்டம் போடவில்லை. எனவே, சமசுகிருதம் செத்தமொழியா இல்லையா எனத் தாராளமாக ஆராயலாம்.
இவர்களெல்லாரும், திராவிடயிய்லாளரோ, தமிழ்ப்பார்ப்பனருக்கு எதிரிகளோ இல்லை. இவர்கள் கல்வியியலாளர்கள். இவர்களின் defintions உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாறுபட்ட கருத்து இருப்பினும் அவற்றை வேண்டாமென கல்வியாளர்கள் ஒதுக்குவதில்லை. இருப்பதாகத் தெரியவில்லை.
இதுதான் நான் சொல்வது.
இதற்குப் பதிலாக ‘அறிஞர்கள்’ சொல்கிறார்கள் என்கிறீர்கள். இந்த அறிஞர்கள் எதற்கெல்லாம் கட்டுபப்ட்டவர்கள் என்னென்ன நோக்கங்கள் கொண்டவர்கள் என்று நான் அறிவேன். உங்கள் ‘அறிஞர்’ கோஷத்துக்கு ஒரே பதிலைத்தான் நான் சொல்ல வேண்டும், அன்புள்ள கரிக்குளம் நீங்கள் ஓர் அறிஞரிடம்தான் பேசிக்கொன்டிருக்கிறீர்கள்