New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராம்மணர்கள்-சோழன் கடிதங்கள்-ஜெய மோகன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பிராம்மணர்கள்-சோழன் கடிதங்கள்-ஜெய மோகன்
Permalink  
 


திரு ஜெய மோகன்

ராஜ ராஜன் குறித்த கட்டுரை படித்த பின் எழுதுகிறேன். (தமிழ் ஹிந்து வில் பார்த்த சுட்டி) (http://www.jeyamohan.in/?p=8712 )

கவனத்தை ஈர்த்த விஷயம் பிராம்மணர்களும் அரசு நிர்வாகமும். கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்

பிராம்மணர்கள் = பூசகர்கள் என்ற ஒரு விஷயத்தை எடுக்கிறேன். பிராம்மணர்களில் முதல் வகை வைதீகம். இரண்டாம் வகை பௌராணிகம். (பாகவதம் போன்ற புராணங்களில் ஈடுபாடு கொண்டு அதன் படியே தங்கள் மதங்களை வகுத்துக் கொண்டவர்கள்) உ ம் ; தமிழ் ஸ்மார்த்தர்கள் பெரும்பாலோர், வைணவர், மாத்துவர், போன்றோர். மூன்றாவது சமய குருமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள். இவர்கள் தாந்திரீக சைவ மற்றும் வைணவ (சில சமயம் சாக்த ) பூசகர்கள். நான்காம் வகை வேதாந்திகள் . இவர்களில் துறவு பூணும் விஷயம் சாதாரணம். இந்த வேதாந்திகளே பரிவ்ராஜகர்களாய் சுற்றி தர்ம பிரச்சாரம் செய்தவர்கள். தாங்கள் கூறிய பூசகர் அடைமொழி மூன்றாமவர்களுக்குத்தான் பொருந்தும். இன்னும் ஐந்தாவத் பிரிவாயும், இந்த நான்கனுள் உட்பட்டதும் ஆக குருகுல ஆசிரியர் என்பவரையும் சேர்ப்பேன்.

தவிர சோதிட அறிவு குருகுலத்தில் பயிலும் எல்லாருக்கும் இருந்தது. விசேட அறிவு பிராம்மனர்களிடம் இருந்தது. கோசாம்பியின் வாதம் நிச்சயம் தவறு. அரசன் ஒரு ஊரை நிர்மாணம் செய்யுமுன் அங்கே குடியிருப்போர் அனைவரையும் தேர்வு செய்வான். வைதீகர், கோவில் சிவாசாரியார், குரு, மறவர், வேளார், வண்ணார், கொல்லர், தச்சர், நாவிதர், போன்றோர் அனைவரும் அதில் அடங்குவர். தேர்வு செய்யப்பட இடம் ஆகம விதிகளின் படி சோதனை செய்யப்படும். பிறகே குடியேற்றம் நடைபெறும். பிராம்மணர் மற்றும் முதலில் குடியேறுவது என்பது கற்பனை. ஹிமாலயன் அக்கடமி (http://www.himalayanacademy.com/resources/books/agamas/) தளத்தில் ஆகமங்களின் மூலமே உள்ளது.

என் கணிப்பில் பிராம்மணன் வெறும் மன்னனின் லாப நஷ்டக் கணக்குகளுக்காக ஏற்பட்டவன் அல்ல. அவன் உடல் பலம் மற்றும் பொருள் பலம் அற்ற அறிவுக் கூட்டத்தை சேர்ந்தவன். அறிவும் பொருள் ஆசையும் சேர்ந்தால் என்னவாகும் என்பதை ஆங்கிலேய ஆட்சியில் பிராம்மணன் பங்கேற்ற பிறகு நடந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதனாலேயே , முதல் ஏற்பாட்டின் படி சம்பாதிக்கவும் (சம்பாதிக்கப் படவும் ) கூடாதவன் அவன்.

வேதம் மருவிய காலத்தில் தான் பணம் பிராம்மனனைத் தீண்டியது. சில ஆயிரம் வருஷம் அது அவனுக்கு நன்மையைத் தந்தாலும், அது அவனுக்கு கடைசியில் அழிவையே தந்துள்ளது. வெறும் மத அறிவும், சோதிட அறிவும், சாஸ்திர அறிவும் தான் பிராம்மணனுக்கு சொந்தம் என்று கோசாம்பி கருதுவது சிறு பிள்ளைத் தனம். இன்று அரசன் இலாத போதும், கண்காணிப்புகள் இல்லாத போதும் நாலில் ஒரு பங்கு பிராம்மணர் சந்தியா வந்தனம் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஏதும் வெகுமதி கிடைப்பதில்லை. இதில் இருந்தே வேத ஏற்பாடு என்ன என்பது தெரியும். என்னைக் கேட்டால் சோதிடமும், புராணமும், பிற்காலத்திய இணைப்புகளான இசையும் , நாட்டியமும், பிராம்மணனுக்கு வீழ்ச்சியையே கொடுத்தன.

அவன் ஆசானாக, மத வழிகாட்டியாக, வேத விற்பன்னன் ஆக , வேள்வி புரிபவனாக இருந்த வரை மன்னர் அவனைப் பணிந்தனர். ஆகமங்கள் வந்த பிறகு ஒரு கூட்டம் அதன் வழி சென்று விட, வெறும் பூசகன் ஆனான் அவன். உண்மையான் வேதாந்திகள் இன்று ராமகிருஷ்ண மடத்தில் தான் உருவாகிறார்கள். மிகச்சிறு பிராம்மண பாரம்பரியங்களிலே மட்டும் வேதாந்த பயிற்சி உள்ளது. இந்த வீழ்ச்சியில் மொத்த சமுதாயத்திற்கும் பங்கு உண்டு. மாதம் மும்மாரிக்கு தவறாத வேள்விகளும், பெண்களின் கற்பும், மன்னனின் செங்கோலும் தான் வித்தாக சங்க காலம் முதலே கூறப்பட்டு வந்துள்ளது. வேள்வி இல்லாவிட்டாலும், குறைந்தது பிராம்மணனை சந்தி மட்டுமாவது செய்ய சமூகம் ஊக்குவிக்க வேண்டும்.காலம் போகிற போக்கில் இழுத்துக் கொண்டு போகப்பட்ட சமூகம் அல்ல நம்முடையது. எக்காலமும் நிமிர்ந்து நிற்கும் அறங்களைப் பற்றி நிற்பவர் நாம். சனநாயகமும், சோஷலிசமும், கம்ம்யூநிசமும் நாம் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. அவற்றுக்கும் கடமை சார்ந்த இந்திய சமூகக் கட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

வேங்கடசுப்பிரமணியன்

அன்புள்ள வேங்கடசுப்ரமனியன் அவர்கலுக்கு

கோஸாம்பி தன் ஆய்வுகளில் இந்தியா முழுமைக்குமாக ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கவே முயல்கிறார். பிராமணர்களை பூசகர்கள் என்னும்போது அவர் ஐரோப்பாவை முன்னுதாரணமாக கொண்ட சமூக முன்வரைவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கும் அப்படி ஒன்றை உருவாக்க முயல்கிறார். ஏனென்றால் மார்க்ஸியத்தின் ஆய்வுப்பொருளாக அமைந்தது ஐரோப்பிய சமூகமே.

ஐரோப்பிய சமூகம் ஆட்சியாளர், பூசகர், நிலவுடைமையாளர்,குடியானவர்கள், அடிமைகள் மற்றும் புறச்சமூகத்தார் என்ற ஐந்து படிகளால் ஆனது. இதே சமூகப்படிநிலை அமைப்பு ஏறத்தாழ எல்லா நிலவுடைமைச் சமூகங்களிலும் உண்டு என்பது ஒரு மார்க்ஸிய ஊகம். பூசகர்கள் அல்லது மதகுருக்களின் இடத்தில் இங்கே பிராமணர்களை வைத்துப்பார்ப்பது ஒரு மார்க்ஸிய அணுகுமுறை. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு குறைந்தபட்ச பொதுச்சித்திரத்தை அளிக்கவே கோஸாம்பி முயல்கிறார். அது உலகளாவியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை சமூகவியல் கோட்பாடாக கொள்ள முடியும். இது குறைத்து தொகுத்துப்பார்க்கும் பார்வை.

நீங்கள் அதில் இந்தியா சார்ந்த, தமிழகம் சார்ந்த நுட்பமான மேலதிக பிரிவினைகளையும் தகவல்களையும் சேர்க்கிறீர்கள். இது விரித்து தொகுத்துப்பார்க்கும் பார்வை. ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டபின்னரே அக்கோட்பாட்டைச் சார்ந்து இந்த விவாதத்தை உருவாக்க முடியும். உங்கள் கருத்துக்கள் எனக்கு புதியனவாக உள்ளன. சிந்தித்து விரிவாக்கவேண்டிய தரப்பாக உள்ளன

நன்றி

ஜெ

**

அன்புள்ள ஜெ,
தங்களின் “தஞ்சை தரிசனம் 3″ கட்டுரை படித்தேன். அதில் தாங்கள் தஞ்சையில் உள்ள சிவலிங்கம் மண் (அப்பு)-வால் ஆனதாக குறிபிட்டு இருந்தீர்கள்.
அதில் ஓர் சிறு திருத்தம். அப்பு என்பது மண்-ஐ குறிப்பது அல்ல. அப்பு என்பது நீரை குறிப்பது.

பொதுவாக சிவ பெருமான் ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவையின் உருவமாக இருப்பதாக நம்பிக்கை. அதிலும் குறிப்பாக இவை ஐந்துக்கும், ஐந்து திருத்தலங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன.
நீர் – திருவானைக்காவல், திருச்சி, நிலம் – காஞ்சீவரம், நெருப்பு – திருவண்ணாமலை, ஆகாயம் – சிதம்பரம், காற்று – காளஹஸ்தி.
இதில் நீரை குறிக்கும் திருவானைக்காவல் சிவ பெருமானே “அப்பு லிங்கம்” என்ற பெயர் கொண்டுள்ளார். அதுவே நான் பிறந்து, வளர்ந்த ஊர்.

இதோடு இந்த கடிதத்தை நிறுத்தி விடலாம் என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் திருவானைக்காவல் பற்றி ஓர்-இரு வரிகள் எழுதலாம் என்றும் தோணிற்று.

ஏனென்றால் எங்கள் ஊர் மற்றும் கோவிலுக்கு நிறைய பெருமைகள் என்றாலும் அவை வெளியே தெரிவதில்லை. இந்தக் கோவிலும் சோழர்களால் எழுப்பப்பற்றது. தமிழகத்தில் மிகச் சிறந்த சிற்பங்கள் நிறைந்த கோவில். இங்கு இருக்கும் குறவன் குறத்தி மண்டபம் சிற்பக்கலையின் அற்புத வெளிப்பாடு. இங்கு ஒரே கல்லில் யானையும் காளையும் கலந்த சிற்பம் ஒன்று இருக்கும். இரண்டும் நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போன்று இருக்கும். யானையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் தலை காளை போலவும், காளையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் யானை போலவும் தோன்றும். இதைப் போல் வேறு எங்கும் காணக் கிடைக்காது. அதே போல் கல்லால் ஆன சங்கிலிக் கோர்வை, 12 ராசிகளும் ஒரே கல்லில் சதுரமாக செதுக்கப்பட்டு இருப்பது போன்றவை எங்கள் ஊர் கோவிலின் தனிச் சிறப்பு.

அதே போல் இந்தக் கோவிலின் தலப் (அஜித் அல்ல) புராணத்தின் படி, ஒரு சிறு யானைக் கூட நுழைய முடியாத கற்பகிரகம் வேறு எங்கும் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. எனக்கு தெரிந்து இணையத்தில் கூட (நிறைய பேர் எழுதுவதால்) யாரும் எழுதுவது இல்லை. இதற்க்கு முக்கியமான காரணம் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கமும் திருவானைக்காவலும் இரட்டை கிராமங்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தின் பெருமை, புகழுக்கு முன்னால் திருவானைக்காவல் வெளியே தெரியாமல் போய்விட்டது. பரப்பளவில் தமிழகத்தின் மிகப்பெரும் சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

தங்களால் முடிந்தால் ஒரு முறை திருவானைக்காவல் சென்று வந்து எங்கள் ஊர் கோவிலின் சிற்பச் சிறப்புகளை எழுதுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
விஜய்வீரப்பன் சுவாமிநாதன்.

http://vijayveerappan.blogspot.com/

அன்புள்ள வீரப்பன்

நன்றி.

அப்பு என்பது நீர்தான். அது ஒரு பிழை. சமீபகாலமாக வரும் இத்தகைய கவனப்பிழைகள் என்னை கொஞ்சம் கவலைக்குள்ளாக்குகின்றன.

திருவானைக்காவலுக்கு இருமுறை வந்திருக்கிறேன். சாண்டில்யனின் பேரனான ஸ்ரீரங்கம் கண்ணன் நல்ல வாசகர். அவருடன் கடைசியாக வந்தேன். என்னை கவர்ந்த மாபெரும் ஆலயங்களில் ஒன்று

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களே!
‘ராஜராஜ சோழன்’ காலம் பொற்காலமா? என்ற உங்களது கேள்விக்கு அது ஒரு பொற்காலத்தின் துவக்கம் என்று சொல்லலாம். குலோத்துங்கன் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமைக்கு அப்போது மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்ததால் புலவர்களை அழைத்து இன்ப நூலாம் ‘சீவக சிந்தாமணி’யைப் படித்தனராம். அந்த நிலை மாற மன்னன் அமைச்சர் சேக்கிழாரை அழைத்து மக்கள் நீதி நூல்களைப் படிக்கவைக்க விரும்பியதன் விளைவு, சுந்தரமூர்த்தியின் அடிச்சுவட்டில், அவர் திருத்தொண்டர் திருத்தொகையில் கண்ட பெரியோர்களின் வரலாற்றை கற்பனை கலந்து வர்லாற்று நூலாக அவர் இயற்றினார் என்பது பேரா.அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் முடிவு.

ஆகவே மன்னன் ராஜராஜன் ஒரு பொற்காலத்துக்கு வித்திட்டான் என்ற அளவில் முதல் விடையை அளிக்கிறேன். அடுத்த‌து, அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் பிராம‌ண‌ர்க‌ள் அதிக‌ ச‌லுகைக‌ள் பெற்ற‌ன‌ரா என்ப‌து. இப்போது சாதிப்பிரிவினைக‌ளைப் பார்க்கும் க‌ண்ணோட்ட‌த்தில் அன்றைக்கு நில‌விய‌ சாதிப் பிரிவினைக‌ளைப் பார்க்க‌ முடியாது. தொழில் அடிப்ப‌டையில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ நில‌வி வ‌ன்த‌ சாதிப் பிரிவுக‌ள் உய‌ர்வு தாழ்வு என்ற‌ அடிப்ப‌டையில் ஏற்க‌ப்ப‌ட‌வில்லை. மாறாக‌ ச‌மூக‌த்தின் தொழில்க‌ளைப் ப‌ல‌ கூறுக‌ளாக‌ப் பிரித்துக் கொண்ட‌த‌ன் விளைவு, நாடு காக்க‌ தோள் வீர‌த்தை ந‌ம்பிய‌ ஒரு பிரிவு, வ‌யிற்றுக்குச் சோறிட‌ப் பொருட்க‌ளை விற்க‌ ஒரு பிரிவு, ம‌க்க‌ளுக்குத் தேவையான‌ அனைத்துப் ப‌ணிக‌ளையும் செய்ய‌ ஒரு பிரிவு, இப்ப‌டி அவ‌ர‌வ‌ர் த‌ங்க‌ள் ப‌ணிக‌ளை ஆற்றுகையில் அவ‌ர்க‌ளுக்குக் க‌ல்வியின் சார‌த்தைப் பிழின்து கொடுக்க‌வும், அனைத்துப் பிரிவின‌ர்க்கும் ந‌ல்வாழ்வுக்காக‌ யாக‌ங்க‌ள் முத‌லிய‌ன‌ செய்ய‌வும், இறைவ‌னைத் தொழுது ம‌க்க‌ள் ந‌ல் வாழ்வை வேண்ட‌வும், க‌ற்ற‌லும் க‌ற்பித்த‌லும் என‌ வாழ்ன்த‌ அந்த‌ண‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌க்கூடாது என்ற‌ த‌ர்ம‌ வாழ்வை வாழ்ந்த‌தால் அவ‌ர்க‌ளுக்குத் த‌ங்க‌ இட‌மும், உண‌வுக்கு ஆதார‌மும் த‌ந்து வ‌ர‌த் தொட‌ங்கிய‌ கால‌ம் சோழ‌ர் கால‌ம்.

இந்தப் பிரிவுகளுள் உயர்வு தாழ்வு கிடையாது. இருந்ததில்லை. இருந்ததாக பிரிட்டிஷாருக்கு முந்தைய இலக்கியம் எதனையாவது திராவிட இயக்கத்தார் காட்டமுடியுமா? ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் இருப‌த்தி நான்கு வ‌கையான‌ யாக‌ங்க‌ளைச் செய்து, தான‌ த‌ரும‌ங்க‌ளைச் செய்த‌ ஒரு அந்த‌ண‌ர் ப‌ற்றிக் கூற‌ப்ப‌டுகிற‌து. கோவூர் கிழார் பாடிய‌ அந்த‌ப் புற‌நானூற்றுப் பாட‌லில் பாட‌ல் த‌லைவ‌ன் பெய‌ர் “சோணாட்டுப் பார்ப்பான் க‌வுணிய‌ன் விண்ணந்தாய‌ன்” என‌ப்ப‌டுவோன். (இங்கு கவுணியன் என்பது கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவன் என்பது) ஆனால் பிரிட்டிஷ் ஆதிக்க‌ம் வ‌ன்த‌ பின் இங்குள்ள‌ பிரிவுக‌ளைப் பிரிவினைக‌ளாக‌ ஆக்கி அதில் ஆதாய‌ம் க‌ண்ட‌ன‌ர். இன்றைய‌ திராவிட‌ பார‌ம்ப‌ரிய‌த்தின‌ரின் க‌ண்ணோட்ட‌ம் வேறு. அன்றைய‌ வாழ்க்கை முறை, ம‌ன்ன‌ர்க‌ளின் க‌ண்ணோட்ட‌ம் இவை வேறு. இவைக‌ளைக் குழ‌ப்பிக் கொண்ட‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ வ‌க்கிர‌ம், தாழ்வு ம‌ன‌ப்பான்மையின் விளைவு ஜாதித் துவேஷ‌ம். தமிழகத்தில் ஜாதி வித்தியாசத்தை வைத்து அரசியல் எழுந்தது எப்போது. அதன் அடிப்படை, அதன் வளர்ச்சி, அதன் இன்றைய பலன் இவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனம் வேண்டும். நல்ல வரலாற்று ஆய்வு வேண்டும்.

எல்லாவற்றையும் காட்டிலும் இன்றைய அரசியலின் தாக்கம் இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இவை விவாதிக்கப்பட வேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் நிலவிய சூழலில் படித்தவர்கள், வாழ்ந்தவர்கள் பெரும்பாலோர் இந்த விவாதத்தில் நேர்மையாக நடந்து கொள்ள முடியுமென்று நான் எண்ணவில்லை. ஆரியம், திராவிட பேதம், தமிழன், தமிழரல்லாதோன் இப்படி எப்போதும் வேறுபாட்டின் மையத்தில் வாழ்ந்தவர்களால் நேர்மையாகச் சிந்திக்கமுடியாது. உங்கள் சிந்தனை எப்போதுமே மாறுபட்டிருப்பதை அறிவேன். எனவே உங்கள் மனநிலையை அறிய, இது குறித்து மேலும் எழுதுவேன். ந‌ன்றி.

த‌ங்க‌ள்,

த‌ஞ்சை வெ.கோபால‌ன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தீபாவளி யாருடையது?

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.

நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.

இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.

அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.

பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது

தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீய சக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.

தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு] சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது. என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே தேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையில் துல்லியமான இலக்கணம் உள்ளது. பௌத்தர்களின் இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.

அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன. இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.

பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.

உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.

ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.

இன்று, அதில் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாச்சியார் கூறும் திருமணச்சடங்கு

Nachiyar koorum Thirumasadangu - Tamil Literature Ilakkiyam Papers

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகியவற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர்தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்களில் நாட்டுப்புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற்றிய கருத்துக்களைப் பற்றியது இக்கட்டுரை.

பெரியாழ்வாருடைய வளர்ப்பு மகளான ஆண்டாள் அந்தணர் சமுதாயத்தில் வளர்ந்ததால் அவர் காலத்து நிலவிவந்த அந்தணர் சமுதாய திருமணச் சடங்குகளைத் தம் பாசுரங்களில் கூறுகின்றார். அவை இன்றும் தமிழர்தம் திருமணங்களில் பின்பற்றப்படுகின்றன.

மாப்பிள்ளை அழைப்பு:-

திருமணத்திற்கு முதல்நாள் நடைபெறும் இச்சடங்கிற்கு மணமகன் வெகுவிமரிசையாக அழைத்து வரப்படுவான். ஆயிரக்கணக்கான ஆனைகள் புடைசூழ தங்கக் குடங்களாகிய பூர்ணகும்பங்களில் மாவிலைக்கொத்தும் தேங்காயும் வைத்து மருமகப்பிள்ளையை எதிர்கொண்டு அழைத்து வந்தனர் இதை,

"வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணண் நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்" (பா.எண் 53)

என்று கூறகின்றார். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணத்தைப் பற்றித் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டபின், திருமணத்திற்கு முதல் நாள் அதை உறுதிப்படுத்த சுற்றம் அறிய "மணவோலை" எழுதிவாசிப்பர். இந்நாளில் இச்சடங்கை நிச்சயதார்த்தம் அல்லது பரிசம் போடுதல் என்பர். இந்நிகழ்ச்சியை,

"நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கழுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென் பான்ஓர்
காளைபுகுதக் கனாக் கண்டேன் தோழி நான்" (பா.எண்.54)

பாளையும், கமுகும் கட்டப்பெற்ற அழகிய பந்தல், அதில் அமர்ந்து திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.

கோடியுடுத்தல்:-

மணப்பெண்ணுக்குப் புதிய புடவையைப் பரிசாக மணமகன் வீட்டார் அளிப்பர். இப்புடவையை மணப்பெண் கட்டிக் கொள்வதற்கு மணமகனின் உடன்பிறந்த சகோதரி உதவுதலுண்டு. தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் அப்பெருமானுடைய சார்பில் இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்ததாகப் பாடுகின்றார். மணமகனின் சகோதரி துர்க்கை மணப்பெண்ணுக்கு புதுப்புடவை உடுத்தி, மலர்மாலை சூட்டுவதாக கூறுகின்றார். இதை,

"இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி யுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழி நான்" (பா.எண்-59)

வரவேற்பு:-

திருமண நாளில் மணமகள் இல்லத்தில் திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகன் நுழையுங்கால் வாழ்வரசிகள் குடத்துள் விளக்கை ஏற்றிய நிலையில், எதிர்கொண்டு வரவேற்கின்றனர்.

"கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள" (பா.எண்.57)

என்று ஆண்டாள் குறிப்பிடும் இச்சடங்கு இன்றும் வழக்கில் உள்ளது. விளக்கு, நீர் இவற்றின் மூலம் திருஷ்டி கழிப்பது என்கிற முறையில் தம்பதிகளின் வாழ்க்கையில் பால் பொங்கவும், சகல மங்கலங்களும் கங்கை போல் பெருகவும், இன்பமும் ஆனந்தமும் தீப ஜோதிபோல் பிரகாசிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இச்சுபச்சடங்கு.

கைத்தலம் பற்றல்:-

திருமணத்தின் முக்கியச் சடங்காக கைத்தலம் பற்றல் நடைபெறுகிறது. மணமகன், மனமகள் கைப்பற்றி தீ வலம் வருதல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்." (பா.எண்.58)

மத்தளம் கொட்டப்படுகிறது. அழகிய சங்கு முழங்குகிறது. வேதியர் தீ வளர்த்து அதில் "சமித்து" எனப்படும் குச்சிகளை வைத்து ஆகுதியை வளரச் செய்து, வேத மந்திரங்களை ஒலித்த வண்ணம் இருக்கின்றனர். அந்நிலையில் மணமகன் மணமகளுடைய கைத்தலம் பற்றுகிறான். கைத்தலம் பற்றிய நிலையில் தீயை மணமகன் வலம் வருகிறான். இனிநான் உன்னைக் கைவிட மாட்டேன். இது சத்தியம். என்னுடைய நிழல் போன்ற உன்னை நான் என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றுவேன் என்று உறுதி எடுக்கிறான். இத்தகைய தீ வலம் வருதல் சிலம்பிலும் காணலாம். இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

"காய்சினமா களிறன்னான் என்கைப் பற்றி
தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன்" (பா.எண். - 59)

என்று குறிப்பிடுகின்றார்.

அம்மி மிதித்தல்:-

திருமணத்தில் உள்ள மற்றொரு சடங்கு அம்மி மிதித்தல். மணமகன் மணமகளுடைய காலைப்பற்றி ஏழு அடிகள் வைத்து மணமகளுடைய காலை அம்மியின் மேல் வைக்கிறான், இதை

செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி (பா.எண்.60)

என்கிறார் ஆண்டாள்.

பொரி அடுதல்:-

மணமக்கள் இருவரும் அவியுணவாக நெற்பொரிகளை தீயில் இடுவர். மணமக்கள் ஒருவர் கைகளின் மீது மற்றொருவர் கைகளையும் இணைத்துக் கொண்டு இச்சடங்கை இயற்றுவர்.

"அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன்" (பா.எண்.61)

என்கிறார்.

வீதி வலம் வருதல்:-

நாச்சியார் காலத்தில் திருமணம் முடிந்த பின்பு மணமக்கள் இருவரையும் ஒருசேர அமரச்செய்து ஊர்வலமாக அழைத்துச்செல்வர் எனத் தெரிகிறது. குங்குமச் சாந்தும், சந்தனமும் உடலெங்கும் பூசப்பட்ட நிலையில், யானையின் மீது இருவரையும் ஒருசேர அமரச்செய்து வீதிவலம் வந்ததைப் பாடுகிறார் ஆண்டாள்.

குங்குமமப்பிக் குளிர்சார்ந்த மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்
ஆங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் (பா.எண்.1162)

இன்றும் கிராமபுறங்களில் இவ்வழக்கம் காணப்படுகிறது. குதிரை, யானை, போன்றவற்றில் இல்லை என்றாலும் ஒருசேர ஊர்வலமாக வருதல் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இன்றும் வடநாட்டில் திருமணத்திற்குப் பின்பு மணமக்கள் ஊர்வலமாகக் குதிரையின் மீதோ அல்லது வாகனத்திலோ அழைத்து வரப்படுவர்.

தமிழர் திருமணத்தோடு ஒத்துப்போதல்:-

ஆரிய மரபின்படி இன்றுவரை அந்தணர் சமுதாயத்தில் உள்ள திருமணச் சடங்குகளை ஒன்று விடாமல் தம்முடைய திருமொழியில் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அம்மி மிதித்தல், தீ வலம் வருதல் முதலிய சடங்குகளைக் குறிப்பிடும் ஆண்டாள் மங்கலவணி (தாலி) அணியப்படுதலைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

நம் பழம்பெறும் இலக்கியங்கள் திருமணத்தில் மணமகளுக்குத் தாலி அணிவிப்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் திருமணமான மகளிர் மங்கல அணியை, அணிந்திருந்தனர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் அமைகின்றன.

"ஈகை அரிய இழையணி மகளிரொடு" என்று புறநானூற்று பாடலில் மங்கலவணி குறிக்கப்படுகிறது.

"அகலுண் மங்கலவணி யெழுந்தது" (சிலம்பு - பா - 47) என்றும்,

வேதவிதிப்படி நடைபெறும் "இராமன்சிதை" திருமணத்திலும் தாலி கட்டப்படுவது கூறப் பெறவில்லை. ஆனால் சில இடங்களில் தாலி என்ற பொருள்பட "மங்கலநாண்" என்ற சொல் எடுத்தாளப்படுகிறது.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ
நிறையெடு மங்கல நாணோ.

என்னுமிடத்தில் மங்கல நாணைக் குறிப்பிடுகிறார்.

தாம் கண்ட கனவுத் திருமணத்தில் தாலி கட்டப்படுவது குறித்து ஆண்டாள் எதுவும் குறிக்காத காரணத்தால் தாலி பற்றிய சிந்தனையே அவருக்கும் இல்லை என முடிவு செய்தல் பொருத்தமற்றது.

"காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்"

என்று ஆய்ச்சேரி பெண்கள் மோர் கடையுங்கால் அணிந்திருந்த தாலியைப்பற்றி ஆண்டாள் குறிப்பிடுகின்றார். தம்முடைய கனவுத் திருமணத்தில் ஆரிய முறைப்படி மணம் நடந்ததைச் சொல்லும் அண்டாள். வேதங்களில் தாலி கட்டப்படும் சடங்கு குறிக்கப்படவில்லையென்பதால் அதைக் கூறாது விடுத்தார் எனலாம். அரியர் வழக்கத்தின்படி கைத்தலம் பற்றுதலே திருமணம் முழுமை பெற்றதைத் தெரிவிக்குமாதலால் ஆண்டாள் தம்முடைய பாசுரங்களில் கைத்தலம் பற்றலைக் கூறுகிறார் எனலாம். சங்க காலத்தில் "கைத்தலம் பற்றுதலே" மணம் முற்றுப் பெற்றதற்கு அடையாளமாகக் கருதப்பட்டது.

"நேரிறை முன்கை பற்றிநுமர்தர
நாடறி நன்மண மயர்கஞ் சின்னாள்
கலங்கல் ஓம்புமின் இழங்கிழை யீரென்" ( குறிஞ் - 231-233)

எனும் சங்கப்பாடல் "கைத்தலம் பற்றுதலையே நாடறி நன்மணம்" எனக்கொண்ட கொள்ளையைப் புலப்படுத்துகிறது.

பழந்தமிழரின் திருமணச் சடங்கில் முக்கிய கூறாகப் பெண்ணைக் கையால் பற்றித் தமர் தருதலே சிறப்பானதாகக் கருதப்பட்டது என்பதைச் சங்ககால திருமண நிகழ்ச்சியை விளக்கும் அகநானூற்று பாடலால் அறியலாம். அதே வழக்கம் ஆண்டாள் காலத்திலும் நீடித்திருக்கிறது என்பதைப் பாசுரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கிராமங்களில் பெண்ணின் திருமணத்தைப் பற்றிப் பேசுகையில் "யாராவது ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டா என் பொறுப்புக் கழியும்" என்று கையில் ஒப்படைத்தலைத் திருமணத்திற்கு உரியதாக்கிப் பேசுதலைக் கேட்கலாம். எனவே தாம் வாழ்ந்து வந்த தமிழ்ச் சமுதாயத்தின் திருமண வழக்கத்தைக் கூறித் திருமணம் நிறைவு பெற்றதை ஆண்டாள் கூறுவதால் அவர் தமிழர் திருமண முறையையே பெரிதும் வலியுறுத்தியுள்ளார் என்று கூறலாம்.

நன்றி: வேர்களைத் தேடி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard