கொழும்பு நகரிற்கு வடக்கே, விமானநிலையம் போகும் வழியில் அமைந்துள்ளது வத்தளை. அது கொழும்பு மாநகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. கொழும்பில் வீடு வாங்குவதோ, அன்றில் வாடகைக்கு எடுப்பதோ அதிக செலவு பிடிக்கும் விடயம். அதற்குப் பதிலாக வத்தளையில் பெரிய வீடு கட்டுவதற்கு போதுமான இடம் மலிவாகக் கிடைக்கும்.
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் வத்தளையில் வந்து குடியேறி விட்டார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் வசதியான வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இதனால் வத்தளை பிரதேசத்தின் சனத்தொகை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. கடந்த இருபாண்டுகளில் புதிதாக வந்து குடியேறிய தமிழர்களை விட, குறைந்தது நூறு வருடங்களாக வாழும் தமிழ்க் குடும்பங்களும் உண்டு. "வத்தளையின் பூர்வகுடிகளான" இவர்களில் ஒரு பகுதியினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்று கூறத் தயங்குவார்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தம்மை "கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
லண்டனிலும், கொழும்பிலும் "கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்த தமிழர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடல், "வழக்கமான" தமிழர்களுடன் உரையாடுவதைப் போன்று அமைந்திருக்கவில்லை. லண்டனில் வதியும் கிறிஸ்தவ இனத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஏதாவதொரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக, அவர்களது இருப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். "இலங்கை சிங்களவர்களுக்கான நாடாகி விட்டது. அதிலும் பௌத்த சிங்களவர்கள் மட்டுமே அங்கே வாழலாம்...." இவ்வாறு சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். பௌத்த-சிங்கள பேரினவாதத்தை கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் யாரும் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பது வியப்பை அளித்தது. சிங்கள அரசை எதிரியாக பார்த்தார்கள், அதே நேரம் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் யாரும் பிரிவினையை ஆதரிக்கவில்லை.
பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும், புலிகளையும் ஏற்காத, இந்த வகை தமிழர்களின் அரசியல் பின்னணி என்ன? கொழும்பில் வத்தளையில் இன்னமும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ தமிழர்களிடம் அதற்கு விளக்கம் கிடைத்தது. "முதன்முதலாக 83 கலவரத்தின் போது எமது வீடும் எரிக்கப்பட்டது... வத்தளையில் கிறிஸ்தவ குடியிருப்புகளை காடையர்கள் தாக்க மாட்டார்கள் என்று நம்பியிருந்தோம்.... ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என்று ஒரு போதும் காட்டிக் கொண்டதில்லை..." அவர்களுடன் உரையாடிய பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.