"யூதர்களும், கிறிஸ்தவர்களும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நண்பர்களாக வாழ்ந்து வருவது போலவும், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மட்டுமே பரம்பரைப் பகை நிலவியது போலவும்," நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு தெரியாத உண்மைக் கதை இது. மதவெறியர்கள் பல உண்மைகளை மறைத்தும், திரிபுபடுத்தியும் பிரச்சாரம் செய்து வருவதால், இந்தக் கதையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுக் கிடந்தது. சவூதி அரேபியாவில், யூதர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட, இருபதாயிரம் கிறிஸ்தவர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? ஒரு காலத்தில், சவூதி அரேபியாவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பதையே அறியாத பலர் உண்டு.
இன்று, நூறு வீதம் முஸ்லிம் மக்கட்தொகை கொண்ட நாடான சவூதி அரேபியாவில், ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் (Wikipedia: கி.பி. 5 ம் நூற்றாண்டு), அரபு மொழி பேசும் இனக்குழு ஒன்று, கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்து இருந்தது. சர்வதேச வாணிபம் காரணமாக, நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது. அன்று, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த கிறிஸ்தவ சாம்ராஜ்யங்களுடன், இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தது. அதன் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்கள், அந்த நாட்டின் மீது படையெடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தார்கள். சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இனவழிப்புகுள்ளான சம்பவம், திருக் குர்ஆனில் கண்டிக்கப் பட்டுள்ளது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலக நாடுகளின் வரைபடம் வேறு மாதிரி இருந்தது. அன்றிருந்த நாடுகள் பல இன்று இல்லை. இன்றிருக்கும் நாடுகள் அன்று இருக்கவில்லை. அரேபியா தீபகற்பத்தின், மேற்குப் பகுதியும், தென் கிழக்குப் பகுதியும் மட்டுமே நாகரீகமடைந்த சமுதாயங்களைக் கொண்டிருந்தன. மேற்கில் பாலஸ்தீனப் பகுதி நாகரீகம் குறித்து, உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இன்று யேமன் என்ற தேசமாகவுள்ள, தென் கிழக்கு அரேபியாவின் நாகரீகம் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. விவிலிய நூலில், சாலமன் மன்னனின் காதலியான ஷீபா (அல்லது சபா) எனும் அரசி பற்றிய கதை வருகின்றது. கருநிற அழகியான ஷீபா இராணி ஆட்சி செய்த நாடு, இன்றைய யேமனில் இருந்துள்ளது. அந்த ராஜ்ஜியம் அழிந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹிம்யாரித் (Himyarite) ராஜ்ஜியம் தோன்றியது.
ஹிம்யாரித் ராஜ்ஜியம், ஷீபாவின் நாட்டையும் கைப்பற்றி விரிவடைந்து கொண்டு சென்றது. இன்றைய யேமன் நாட்டின் பெரும்பகுதி, ஹிம்யாரித் ராஜ்யத்திற்குள் அடங்கியது. ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலானசர்வதேச வர்த்தகம் காரணமாக, பலமான நாடாக விளங்கியது. ஹிம்யாரித் ராஜ்யத்தின் பிரஜைகளும் அரபு அல்லது அது போன்ற மொழியைப் பேசி வந்தனர். ஹிம்யாரித் அரச பரம்பரையில் கடைசி மன்னன் யூசுப் அசார் து நவாஸ் (Yusuf As'ar Dhu Nuwas), யூத மதத்தை தழுவிக் கொண்டான். மன்னன் எவ்வழி, அதுபோல மக்களும் அவ்வழியே யூதர்களாக மாறினார்கள். "யூதர்கள் ஒரே மரபணு கொண்ட ஓரின மக்கள்" என்ற கட்டுக்கதை, இன்றைக்கும் படித்தவர்களால் கூட நம்பப் படுகின்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைப் போன்று, யூத மதமும் பிறரை மத மாற்றம் செய்து சேர்த்துக் கொண்ட உண்மையை மறைக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாலஸ்தீனத்தில் நிறுவன மயபட்ட மதமாக திகழ்ந்த யூத மதம், பல மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது, எத்தியோப்பியா வரை பரவியது.