மதமாற்றமே குறிக்கோள்
உலகெங்கும் தங்கள் மதத்தைப் பரப்பி தங்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே கிறுஸ்துவர்களின் தலையாய குறிக்கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த போப் ஜான் பால் நம் மண்ணில் நின்றுகொண்டே நம் பூமியை கிறுஸ்துவ பூமியாக மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். பின்னர் அமெரிக்காவில் வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிபர் ஜார்ஜ் புஷ் “ஜோஷுவா ப்ராஜக்ட்” மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாத்திகனின் அபிமான புத்ரியான திருமதி சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு நம் நாட்டில் மதமாற்றங்கள் பெருமளவில் நடைபெறத் துவங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக ஆந்திரத்திலும் தமிழகத்திலும் கிறுஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்வதோடு மட்டுமில்லாமல், மிஷனரிகள் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் விட்டு வைப்பதில்லை. பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்கள், வெள்ளித் திரை / சின்னத் திரை உலகத்தில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மதமாற்றும் நோக்கத்துடன் அணுகுகிறார்கள். இது தொடர்பான ஒரு சமீபத்திய சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவு.
பிராம்மணர்களை மதமாற்றும் முயற்சி
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே அட்வெண்ட் சர்ச் ஒன்று இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் சிறிய பிரார்த்தனை கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று பிரம்மாண்ட தேவாலயமாக எழுப்பப் பட்டிருக்கிறது. ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியன்று இதன் மதில்சுவர் மேல் கண்ணைக் கவரும் விதத்தில் ஒரு விளம்பரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகாலஷேபம் சனிக்கிழமை 8-ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும், அனுமதி இலவசம்” என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. இவ்விளம்பரத்தைப் பார்த்த திருவான்மியூர் வாழும் இந்துக்களில் சிலர் அதிர்ந்து போயினர்.
தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்”என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன் தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள் தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் காணார்கள்!
ஆனாலும் பிராம்மணர்கள் என்ற சமூகத்தினரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்த ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற அமைப்பின் பெயர் அதிர்ச்சியைத் தந்தது உண்மை. அமைப்பு புதியதாக இருந்தாலும், அதனை ஆரம்பித்து செயல்படுத்தும் “சாது செல்லப்பா” என்னும் மதப்பிரசாரகர் “அறுவடை” செய்வதில் பெயர் போனவர்தான். திருவான்மியூர் நிகழ்வுகளைப் பார்ப்ப்தற்கு முன்னால் இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.